Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

This event began 04/21/23 and repeats every year forever

 

ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்த நாள் இன்று - சிறப்பு காணொளி

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் ஆனது, இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்க்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

 

URK1NpgmlrnaJDpYuVsr.jpg

 

 

35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது, பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

n4PNMVJCgInqE37be1Nz.jpg

 

குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள், தாளையடி முகாம் மீதிருந்து வரக்கூடிய எதிரியின் தாக்குதல்களை எதிர்நோக்கியவாறு, குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் கடல்வழியாகப் பயணித்தனர்.

குடாரப்பு தரையிறக்கச் சமர் ஈழப்போராட்ட வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய இராணுவத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது.

சவால்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கெரிலாப் போராளிகளுக்கான பொதுவிதி. ஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்கு முனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டியடித்து மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது.

 

SAi4COVuxG6qYJ6TwFcV.jpg

 

மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது. 26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள்.

வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகப்பலமான கடற்கரையை மேவிச்சென்று, குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வினியோகப்பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம்.

 

தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படையணி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி சகலவழிகளிலும் முயல்வான். கடலில் முழுக் கடற்படைப் பலத்தோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் டாங்கிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.

மிக ஆபத்தான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகணிகள் ஆழக்கடல் சென்று இரண்டுமணிநேரப் பயணத்தில் தரையிறங்க வேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடும்சண்டை மூண்டது. இரவு 8.30 இற்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறாப் பீரங்கிப் படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது.

தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் தாக்குதற் படகுகள் சண்டை செய்தன. கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன.

முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு விநியோகப் படகுகளும் வெற்றிகரமாக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர்.

அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றி பதினொரு ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்திருந்தனர். தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் பிரிகேடியர் பால்ராச் அவர்கள் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைத் தளபதிகளாக சோதியா படையணித் தளபதி துர்க்கா, மாலதி படையணித் தளபதி விதுஷா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி (பின்னர் பிறிதொரு நேரத்தில் இரணைமடு குளத்தில் குளிக்கும் போது நீரில் முழ்கி சாவடைந்த) லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமை தாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர்.

 

cCvQEpB77KV4vhAafmZT.jpg

 

 

புலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு, தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில், தற்கொலைக்கு ஒப்பானதுதான்.

வன்னித் தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு விநியோகத்தைக்கூடச் செய்யமுடியாத நிலை. கடலில் மிகக் கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை எதிரி அறிந்தபோது முதலில் திகைத்தாலும், ஆனால் அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதிரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான்.

புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான போர்த் தளபதிகள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான்.

வெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்புவரை அரசபடையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே கடல்வழியான தொடர்ச்சியான விநியோகம் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக விநியோகத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது.

இத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு விநியோகத்தை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன.

 

WiVhBp2NXiP5jhiISdMQ.jpg

 

 

இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாளையடி உட்பட்ட மிகப்பலமான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக் கொண்டனர் புலிகள். அதுவரை சரியான விநியோகமில்லாது, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக் கொண்டது.

அணிகள் சீராக்கப்பட்டு (மீளொழுங்கு படுத்தப்பட்டு), தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினான். கவசவாகனங்கள், ஆட்லெறிகள், கனரகப் படைக்கலங்கள் என்று சகலதும் பயன்படுத்தினான். மிகமிக மூர்க்கமாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான்.

கவசப்படைக்குரிய பல கவசவாகனங்கள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான ஆட்லறிச் சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவாகனங்கள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒரு தென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத் தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு (34) நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராச்சின் தலைமையிலான புலியணியினர்.

(வரலாற்றுப் புகழ்வாய்ந்த மாமுனைத் தரையிரக்கத்தில் நீருக்குள்ளால் 120 மி.மீ. கனரகப் பீரங்கியை இழுத்துச்சென்றனர் பெண்புலிகள்)

தரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டபோது, அது தோல்வியில் முடிவடைந்தது.

பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிக இலகுவாக, மிகக் குறைந்த இழப்புடன் ஆனையிறவுப் பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது.

ஒழுங்குமுறைப் படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி, அனைவரும் தங்கள் தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய ஆட்லறிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத அவசரத்தில் விட்டுட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு – கிளாலி கடற்கரைப் பாதை வழியாக ஓடித்தப்பினர்.

முடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி – கண்டிவீதியில் முகமாலை வரை – கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடிநாதமாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான்.

சிங்களப்படை அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய கனவிலும் முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து இராணும் மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால், புலிகள் மிக வெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி, ஒரு மாதத்துக்கும் மேலாக எதிரியின் மிகக் கடுமையான எதிர்த் தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு, இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர்.

கரும்புலி அணியினரால் தகர்க்கப்பட்ட ஆட்டிலெறிகள்

பளை ஆட்டிலெறித் தளத்தைத் தகர்ப்பதற்கு 26.03.2000 அன்று இரவு விடுதலைப் புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளவர்கள். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் இரகசியமாக நகர்ந்துகொண்டிருந்தார்கள்.

அப்போது, ஆனையிறவுத் தளம் எதிரியின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப் புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன. குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய ஆட்டிலெறித் தளத்தை அழிப்பதுதான்.

பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை ஆட்டிலெறித் தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்த நேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொரு பேர் இருந்தார்கள்.

குறிப்பிட்ட ஆட்டிலெறித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் அந்த அணியை வழிநடத்திய வர்மனும் ஏற்கனவே வேவுபார்க்கச் சென்றவர்களுள் ஒருவனாவான். எனவே, அந்த அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த அவனால் முடிந்தது.

ஆட்டிலெறித் தளத்தின் சுற்றுக் காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழைய வேண்டியதுதான். இந்த நிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர் தூரத்தில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான்.

தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாயினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்தாள். சண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுகிறது. மின்னல் வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத் தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. ஆட்டிலெறித் தளத்தைப் பாதுகாத்து நின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் சண்டை தொடங்கிய மறு நிமிடமே ஓட்டமெடுத்துவிட்டனர். ஆட்டிலெறித் தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து.

ஆட்டிலெறிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு ஆட்டிலெறிகள் இருந்தன. ஓடிய எதிரி பலத்தைத் திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கியழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும், போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக் கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து, பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி ஆட்டிலெறிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள்.

இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு ஆட்டிலெறிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். ஆட்டிலெறிகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது.

அவ் ஆட்டிலெறிகள் முற்றாக அழிக்கப்பட்டன. அதன்மூலம், தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது. தளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் இரகசியமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாகத் தளம் திரும்பினர்.

பளை ஆட்டிலெறித் தள அழிப்பு, ஆனையிறவு மீட்புப் போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு, உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அவகாசம் தேவைப்பட்டது.

இந்த தாக்குதலின் பின்னணி குடாரப்புத் தரையிறக்கத்துக்கானது

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகள்.

குடாரப்புத் தரையிறக்க மோதல்

குடாரப்பு பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் கொண்ட இலங்கை இராணுவத்தினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர்.

கண்டி வீதியில் நிலை கொள்ளல்

குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக் கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பளை ஆட்டிலெறித் தள உள்நுழைவு

கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்டிலெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி அணியினர் அங்கு அமைத்திருந்த 11 ஆட்டிலெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர்.

தமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு

வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.

இலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.

பால்ராச் உயிருடன் பிடிபட்ட செய்தி

இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

உடுத்துறை வழியான தரைவழி விநியோகம்

வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத் தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர். இத்தாவிலில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க எட்டிற்கும் மேற்பட்ட தடவைகள் இலங்கை இராணுவத்தினரால் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தாவிலில் தரையிறங்கி நிலைகொண்ட புலிகள் அணியினரை முறியடிக்க முடியாத நிலைக்கு இலங்கைப் படையினர் தள்ளப்பட்டனர். இதனால், ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ஆம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி தனது பதவியிலிருந்து விலக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை

இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது.

 

-இது, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமராய்வுப் பிரிவால் தொகுக்கப்பட்ட பதிவு ஆகும்


User Feedback

Recommended Comments

There are no comments to display.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.