கறுப்பு ஜூலை.
ஆதிக்க நெருப்பு தின்ற
அன்றாட ஏழைகளின் இறப்பிற்கு சாட்சி நின்ற
நாள்காட்டியின் சாபமிந்த
மறக்கமுடியா – கருப்பு ஜூலை!
மனிதக் – கருப்பு மனத்தின்
கொலைவெறி முற்றி
முற்றும்; முடியாதோரையே அழித்த
வரலாற்றுக் கொடுமை – கருப்பு ஜூலை!
சுயநல வெறி சிகப்பாய் ஓடி
தாமிரபரணியின் உடம்பெல்லாம்
பிணங்களாய் மிதந்து –
மனிதமின்மையை மனிதனே நிரூபித்த;
கறுத்த பேரவலம் – கருப்பு ஜூலை!
காக்கிச் சட்டையில் போதையுற்று
கொலைகளில் மெடல் அணியத் துடித்து
கொண்று குவித்த உடல்களின் மீதேறி
வெற்றி கூப்பாடு போட்ட பாதக வீரர்களின்
நினைவொழியா – சோகப் பதிவு; கருப்பு ஜூலை!
மாஞ்சோலைக்கு நீதி கேட்டு போய்
மரணத்தை மீதப் படுத்திக் கொண்ட
பாட்டாளிகளின் கதறல்களையும்
நிர்வாணமாய் சரிந்த உடற்கட்டைகளையும்
ஊரெல்லாம் செய்தியாக்கிய – அசிங்கமிந்த – கருப்பு ஜூலை!
பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே
அடக்கிக் கொண்டிருந்த வன்மம் வெடித்து,
உலகின் காதுகளில் –
அதர்மத்தின் கொடையாளர்களாய்
தமிழனை; தமிழனே பதிந்துக் கொண்ட
சீர்கேடிந்த; கருப்பு ஜூலை!
தமிழன் தன் வரலாற்றில்
செம்மொழியை கொண்டதாகவும்
அந்நியரை வென்றதாகவும்
எண்ணியதை எல்லாம் பெற்றதாகவும்
உலகத்தை தன் உள்ளங்கையில் அடக்கிக் கொண்டதாகவும்
எதை வேண்டுமோ எழுதிக் கொள்ளளாம்;
எதை சாதிப்பினும் –
இரக்கம் ஒழித்த இந்த கருப்பு ஜூலை மட்டும்
கருப்பாகவே பதிவு செய்யப் பட்டிருக்கும்
தமிழனின் கால ஏட்டில்!!