Everything posted by அபிராம்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் பத்து புதுக்குடியிருப்பு - ஒட்டிசுட்டான் வீதி அதில் ஒரு நூற்றைம்பது மீற்றரில் சிங்கள ராணுவத்தை மறித்து வைத்திருந்தார்கள் புலிகள் . இண்டைக்கு பிடித்துவிடுவோம். நாளைக்கு பிடித்துவிடுவோம் என்று வாய் கூசாமல் சொல்லி சொல்லி ராணுவ பேச்சாளனின் வார்த்தைகள், பொய்யாகி போய் இரண்டு வாரங்கள். கடுமையான சண்டை. நெருப்பு சுவர்களாக புலிகள். சுடுகாடாக புதுக்குடியிருப்பு. புதுக்குடியிருப்பு.... அது ஒரு அழகான நகரம். பரந்தனையும் முல்லைத்தீவையும் ஒட்டிசுட்டானையும் இரணைப்பாலையும் இணைக்கும் நாச்சந்தி. கடைதொகுதிகளும், கதிரவன், மதி தேநீர்க்கடைகளில் ஒலிக்கும் புரட்சி பாடல்களும், அழகாக அடுக்கிவைக்கபடிருக்கும் மண்ணெண்ணெய் போத்தில்களும், மாவீரர் மண்டபம் அதை ஒட்டி நிற்கும் பெரிய நிழல் தரு மரம், பாண்டியன் உணவகம், பேரூந்து நிலையம் அதற்கு முன்னால் அழகான புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயம் எல்லாம் அந்த நகருக்கு மிடுக்கை கொடுத்திருந்தன. மக்கள் நெரிசலை கட்டுப்படுத்த எப்போதுமே அந்த நகரின் சந்தியில் காவல் துறையினர் காத்திருப்பர். இன்று ... கட்டடங்கள் தொடர்ச்சியான கொத்து குண்டுகளாலும், இடைவிடாத கிபிர் தாக்குதல்களாலும் அழிதொழிக்கபடிருந்தன. நாச்சந்தி எது என்று தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இந்த மூலையில் இருந்து பார்த்தால் அந்த மூலை தெரியுமளவுக்கு தரைமட்டமாகபடிருந்தது. அழகான அந்த நகரம் அலங்கோலமாக.. இருந்தும் புலிகளின் அந்த மனித வேலி, ராணுவ அரக்கனை உள்ளே விடாமல் தடுத்து வைத்துகொண்டிருந்தது. மக்கள் புகலிடம் தேடி இரணைபாலை, புதுமாத்தளன், ஆனந்தபுரம், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் நோக்கி போய்விட்டார்கள். காகங்களும் நாய்களும் மட்டுமே நகருக்கு சொந்தம் கொண்டாடின. ராணிமைந்தன் அந்த புலிகளின் மனித வேலியின் ஒரு பகுதிக்கு (கொம்பனிக்கு) பொறுப்பாக இருந்தான். அவனது தீரமிகு சண்டைகள் அவனை அந்த நிலைக்கு கொண்டுவந்திருந்தது. எதிரின் கனரக ஆயுதங்களுக்கும், கொத்து குண்டுகளுக்கும், விமான குண்டுவீச்சுகளுக்கும் நடுவில் சாதாரண ஆயுதங்களையும் மனவலிமையையும் வைத்து போராட போராளிகள் பழகிவிட்டார்கள். அன்று அதிகாலை சேகர் அண்ணா, ராணிமைந்தனின் அரணுக்கு வந்திருந்தார். அவனது கடந்த கால செயற்பாட்டுகளை பாராட்டிய அவர், புலிகளின் செய்மதி தொலைதொடர்பு மையத்தில் ஒரு கருவியினை பழுதுபார்க்க அவனை அழைத்து செல்ல வந்திருந்தார். புலிகள் அப்படிதான். நேற்றுவரை ஆயுதத்துடன் எதிரியுடன் போராடுவார்கள் , திடீர் என்று களம் மாறி இலத்திரனியல் கருவிகளுடன் போராடுவார்கள். அவர்களின் சிந்தனை மாறுதிறன் அந்நியன் படத்தை தான் நினைவூட்டும். அதற்கு ராணிமைந்தனும் விதி விலக்கல்ல. தனது கள பொறுப்புகளை துணை பகுதிப் பொறுப்பாளனிடம் ஒப்படைத்துவிட்டு சேகர் அண்ணாவுடன் புறப்பட தயாரானான். ஆனந்தபுரத்தின் மைய்யபகுதியில் அமைந்திருந்தது அந்த செய்மதி தொடர்பு மையம். புலிகளின், மக்களின் பெரும்பாலான வெளிநாட்டு தொடர்புகள் அந்த மையதினூடாகவே நெறிபடுத்தபட்டன. நன்றாக உருமறைக்கபட்டு மரங்களூடு செய்மதி கட்டுப்பாட்டு அலைகளை பெறுவதற்காக, மிகவும் சிரமபட்டு ஒழுங்கமைதிருந்தார்கள். வன்னி மக்களின் வெளிநாடுக்கான தொடர்பு, பண பரிமாற்றங்கள் (உண்டியல்) எல்லாமே சேகர் அண்ணாவின் கட்டுப்பாடில் இயங்கும் சர்வதேச தொலைதொடர்பு பிரிவினாலே நடாத்தபட்டன. மொத்தத்தில் சேகர் அண்ணா, வன்னிமக்களுக்கு ஒரு கண்காணா தெய்வமாக விளங்கினார் என்று சொன்னால் மிகையாகாது. என் காதுபடவே மக்கள் பேசியதை கேட்டிருக்கிறேன். "இவ்வளவு செல்லடிகள், குண்டு வீச்சுகளுக்கு மத்தியும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தங்கள் உறவுகளுடன் பேசி,பண பரிமாறல்களை செய்யவைக்கிற அந்த புண்ணியவான் நல்லா இருக்கோணும் " என்று சேகர் அண்ணாவை தெரியாத சனம் கூட பேசி இருக்கு. ஒரு செய்மதி அலைவாங்கியில் (Receiver ) பிரச்சனை. நாங்கள் இனி புதிதாக வெளிநாட்டில் கொள்வனவு செய்தாலும் கூட நாங்கள் எல்லாம் செத்தாப்பிறகு தான் வந்து சேரும். பழைய பழுதாகிப்போன அலைவாங்கியில் இருந்து ஏதாவது பகுதிகளை (Parts ) எடுத்து ஒட்டி செய்யவேண்டும்.நிறைய கணித சமன்பாடுகள். நிறைய இலத்திரனியல் நுண்ணறிவுகள் வேண்டும். வெளிநாடுகளில் கூட இப்படி செய்திருக்கவே மாட்டார்கள், ஆனால் புலிகள் செய்திருந்தார்கள். அவர்களின் ஆராய்ச்சி திறனுக்கு இரண்டு மூன்று கலாநிதி பட்டங்கள் கூட கொடுக்கலாம். ஆனால் அதை செய்பவர்கள் அடுத்த சண்டையில் சிலவேளைகளில் மக்களுக்காக வீரச்சாவு அடைந்துவிடுவார்கள். அதோடு அவர்களின் திறனும் வீரச்சாவு அடைந்துவிடும். புலிகளின் திறன் கண்டு, செய்மதி அலைவரிசை வழங்குனரே மெச்சியிருகிறான். சண்டை முடிந்ததும் தங்கள் நாட்டுக்கு வந்து தங்கள் கூட பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு கூட விடுதிருகிறான். அந்த முகாமுக்கு அருகில் இருந்த பயிற்சி முகாமில் ஆலோசனை வழங்கும் வேலையும் சேகர் அண்ணாவுக்கு இருந்தது. தன்னை அந்த பயிற்சி முகாமில் இறக்கிவிட்டு என்னை தொடர்பு மையத்துக்கு போக சொன்னார் சேகர் அண்ணா. பயிற்சி முகாம்கள் பொதுவாக மக்கள் வாழ்விடங்கள் குறைந்த காட்டுபகுதியில் தான் வைத்திருப்பது வழக்கம். ஆனாலும் எதிரி எங்களை ஒரு குறுகிய நிலபரப்பில் ஒடுக்கி இருந்தமையால், எங்கள் பயிற்சி முகாம்கள் மக்கள் வாழ்விடங்களை அண்டித்தான் அமைக்க வேண்டிய சூழ்நிலை. இருந்தும் நாங்கள் மக்களை விமான தாக்குதல் இலக்கு, செல் இலக்கு குறித்து எச்சரித்து அந்த இடங்களில் இருந்து தள்ளி வாழும்படி கேட்டுகொள்வோம்.ஆனால் மக்களும் தான் எங்கு போவார்கள். அவ்வளவு மக்களையும் தாங்க கூடிய நிலமாக இடமாக அந்த இடங்கள் இருக்கவில்லை. அவர்களும் எங்கள் முகாம்களுக்கு அருகிலேயே வாழ்ந்தும் பழகிவிட்டார்கள். நான் சேகர் அண்ணாவை அந்த பயிற்சி முகாமில் விட போகும்போது, காலையில் பின்களபணிக்கு ஆண்களை அனுப்பிவிட்டு (அன்றைக்கு இருந்த ஒரே வருவாய் தரும் தொழில்) வாசலில் காத்திருந்தார்கள் பெரும்பாலான பெண்கள். பின்களபணி மரம் தறித்தல், பதுங்குகுழி அமைத்தல், அரண் அமைத்தல் என்று வேறு வேறு பணிகள். எதிரியில் எல்லை கோட்டை வைத்து தான் சம்பளபட்டியல். எல்லைகோட்டில் இருந்து இருநூறு மீற்றருக்குள் ஒரு சம்பளம், இருநூறு மீற்றர் தொடக்கம் ஐநூறு மீற்றர் வரை ஒரு சம்பளம், அதற்கு அப்பால் ஒரு சம்பளம் என்று மாறிக்கொண்டே போகும். உங்களுக்கு புரியுதோ இல்லையோ உயிரின் விலை அது. ஆண்களுக்கும் வேற வழி இல்லை. புலம்பெயர் தொடர்பில்லாத மக்கள் தான் வன்னியில் பெரும்பாலானவர்கள். வயல்களையும் கடலையும் நம்பி வாழ்ந்தவர்கள். பிச்சை எடுத்து பழக்கமில்லாதவர்கள். தன்மானம் காப்பவர்கள்.உதவி நிறுவனங்கள் கூட அங்கெ இல்லை. உயிரை மூலதனமாக்கி உழைத்தார்கள். இது உங்களால் முடியுமா உறவுகளே.. இண்டைக்கு திரும்ப வந்து அம்மாவின், மனைவியின், குழந்தையின் முகத்தை பார்ப்போமா என்று கூட தெரியாமல் வேலைக்கு போக உங்களால் முடியுமா.? அவர்கள் போனார்கள், எல்லாம் கால் வயிற்று கஞ்சிக்காக. அவர்கள் வரும்வரை, அந்த பெண்கள், அம்மாக்கள், சகோதரிகள், மனைவிகள் வாசலில் காத்திருந்தார்கள். பசியால் அழுதுகொண்டிருந்த பிள்ளைகளுக்கு மாவை தண்ணியில் கரைத்து கொடுத்து கொண்டிருந்தார்கள். எங்களின் சீருடைகளையும் ஆயுதங்களையும் பார்த்து முகங்களில் புன்னைகை தவள விடை கொடுத்தார்கள்.மனசுக்குள்ளே எங்களுக்கான மதிப்பு இன்னும் இருக்கு என்று காட்டும் புன்னைகைகள் அவை. சேகர் அண்ணாவை, பயிற்சி முகாமில் இறக்கிவிட்டு விடைபெறும்போது, "ராணி திருத்தி முடிய தொடர்பெடு, நான் அல்பா 1 அலைபேசி எண்ணில் தான் நிற்பேன். மறந்து போய் விட்டுவிட்டு போயிடாதே" என்றார் சேகர் அண்ணா. இன்னும் சில கணங்களில் எந்த அலைவரிசையிலும் தொடர்பே எடுக்கமுடியாத இடத்துக்கு, எங்களையும் எங்கள் மக்களையும் தவிக்க விட்டு போக போவது தெரியாமல் ... (தொடரும்) பாகம் பதினொன்று இங்கே அழுத்துங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு என் இனிய உள்ளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் ஒன்பது வாசலை தாண்டி வந்து விட்டோம். வீதியோரம் இருந்த ஈருளியை நிமிர்த்தி சூப்பி போத்தலுக்குள் இருந்த பெற்றோலை கொஞ்சம் குழாயினுள் ஊற்றி, வாயை வைத்து ஊதினார் ரமணன் அண்ணா. மிதியை இரண்டு மூன்று தடவை உதைத்தும் இயங்கவில்லை. மீண்டும் ஒருமுறை குழாயினுள் வாயை வைத்து ஊதினார். ஊ..ஊ..ஊ... கூவிக்கொண்டு வரும் சத்தம் மட்டும் தான் கேட்டது என்னை விழுந்து படுக்க சொல்லி உதைந்துவிட்டு, அப்படியே குனிந்துவிட்டார் ரமணன் அண்ணா. டொமம்ம்ம்ம் ...டொம்ம்மம்ம்மார்... எங்களுக்குக்கு மிக அருகிலேயே வெடித்தன. காதை செவிடாக்கும் சத்தங்கள். இரும்பு துண்டுகளும் பிளாஸ்டிக் துண்டுகளும் சிதறிப்பறந்தன. நாங்கள் போய்வந்த வீடுக்குள் இருந்து புகை மண்டலம் மேலெழுந்தது. அம்மா..யாரவது காப்பாத்துங்க...என்ற கூக்குரல் விட்டு விட்டு கேட்டு கொண்டிருந்தது. அந்த குரல் வந்த வீட்டை நோக்கி ஓடிய என்னை, பிடித்து இழுத்து மீண்டும் படுக்க சொன்னார் ரமணன் அண்ணா. அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை என்றாலும், ஒரு நிமிடதிலையே எனக்கு புரிந்துவிட்டது. ஆம்.. எங்கே காயபட்டவர்களை காப்பாத்த யாரும் வருவாங்களோ என்று, சிங்கள கொலைவெறி ராணுவம், மீண்டும் அதே இடத்துக்கு ஐந்துக்கும் மேற்பட்ட செல்களை ஏவினார்கள். மீண்டும் பெரும் இடிச்சத்தங்கள்.. கூக்குரல் அடங்கி முனகல்களாயின.. இரண்டு நிமிட இடைவேளைக்கு பிறகு நாங்கள் இருவரும் அந்த வீட்டை நோக்கி ஓடினோம். இரத்தமும் சதைகளும்..ஆடை துண்டுகளும்..கைகள் கால்கள் வேறு வேறாக..தலைமுடிகள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தன. சற்று முன்னர் பார்த்த அந்த அழகான குடும்பம் அங்கெ இல்லை. ஐயா இருந்த பிளாஸ்டிக் கதிரை மட்டும் அல்ல..ஐயாவும் உருத்தெரியாமல் சிதறியிருந்தார். அவர் இருந்த இடத்தில் ஒரு கந்தக நெடியுடன் கருமையான குழி மட்டும் தான் இருந்தது. அவர்கள் சமைத்த குழம்புடன், அவர்களின் இரத்தமும் கலந்து அங்கெ வடிந்து ஓடிக்கொண்டிருந்தது. தம்பீ....மிகவும் மெல்லிதாக அந்த முனகல் கேட்டது. ஓடிப்போனேன்..மரங்களுக்கும் உடைந்த சீட்டுகளுக்கும் நடுவில் அந்த அம்மா.ஒரு கால் சிதறி போய் முழங்காலுக்கு கீழே ஒன்றுமில்லை. "தம்பி என்னை காப்பாத்துங்க.." மரங்களை தூக்கி அவவை வெளியிலே எடுத்தோம். நான் தூக்கி கொண்டு ஓடிவர, ரமணன் அண்ணா ஈருளியை கஷ்டபட்டு உதைத்து கொண்டிருந்தார். எங்கள் அவசரம் அதுக்கு கூட புரியாமல் இருந்தது. அம்மாவின் கால்களில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. என் மேலங்கியை கழட்டி அதை சுத்தி கட்டினேன். அதற்கிடையில் புகையை கக்கியபடி ஈருளி இயங்க தொடங்கியது. அந்த அம்மாவை நடுவிலே கிடத்தி நான் பின்னால் அமர்ந்தவாறு அவவை விழுந்து விடாமல் பிடிக்க, ரமணன் அண்ணா அந்த மழையால் சேறாகி வழுக்கும் வீதியில் தான்னால் இயன்ற அளவுக்கு வேகமாக ஓடினார். ஈருளியும் எங்கள் அவசரத்தை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. குளத்தடியால் சுத்திவாறது என்றால் அதிக நேரம் எடுக்கும் என்று, ஒரு குறுக்கு வழியால் வந்தோம். அங்கேயும் எங்களுக்கு விதி காத்திருந்தது. வெள்ளம் இருந்த அந்த பள்ளத்தில், வேகமாக வந்த நாங்கள் தாண்டிடலாம் என்று நினைத்த போது, ஈருளி சறுக்கி நான், அந்த அம்மா, ரமணன் அண்ணா மூவருமே வெள்ளத்தில் விழுந்தோம். எழும்பிய ரமணன் அண்ணா, ஈருளியை உதைத்து இயங்க வைக்க முயன்று கொண்டிருந்தார். அம்மாவின் கால்களில் இருந்து குருதி வெள்ளத்துடன் கலந்து கொண்டிருந்தது. எனக்கோ என்ன செய்வது என்றே தோன்றவில்லை. என்னை பெத்த அம்மாவே என் கைகளில் இருபதாகவே உணர்ந்தேன். அண்ணே ..நீங்கள் இயக்கி கொண்டு வாருங்கள் நான் கொண்டு ஓடுறேன் என்று அம்மாவை தூக்கி கொண்டு, என்னால் இயன்றவரை ஓடினேன். தம்பி என்னை எப்படியும் காப்பாத்துப்பா..எனக்கு ரொம்ப வலிக்குதுப்பா ..என்று முனகி கொண்டிருந்தார். என்னுடைய அம்மாவே என்னை பார்த்து கெஞ்சுவது மாதிரியே இருந்தது. அம்மா ஒண்டுக்கும் யோசிகாதீங்கள். உங்கள் மகன் நான் இருக்கிறேன் உங்களை எப்படியும் காப்பாத்துவேன். என்னால் இந்த வாய் ஆறுதலை தவிர எதையுமே செய்ய கூடிய நிலையில் நான் இல்லை. ஓடினேன் ..ஓடினேன்..என்னால் முடியும் வரை ஓடினேன் ..யாரையும் கூட அந்த தெருவிலே காணவில்லை. ஒரு இருநூறு மீற்றர் ஓடி இருப்பேன். இப்போ முனகல் சத்தம் கேட்கவில்லை. அந்த தெருவிலே அப்படியே உட்கார்ந்து, அந்த அம்மாவை என் மடியிலே கிடத்தி, மூச்சுக்கு பக்கத்தில் கையை வைச்சு பார்த்தேன். எதுவுமே இல்லை. கையை பிடித்து பார்த்தேன் நாடித்துடிப்பும் இல்லை. கத்தி அழவேணும் போல இருந்திச்சு. அம்மா.. அம்மா.. என்று வாய் ஓயாமல் கூப்பிடும் எனக்கு கூட, சொல்லாமல் செத்து போனாவே, என்று கத்தி அழணும் போல இருந்திச்சு.. கொஞ்ச நேரத்துக்கு முதல் "தம்பி, தேடிப்பாருங்கள் நிச்சயமா கிடைப்பா. அப்படி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நானும் உன் அம்மா மாதிரி தான்.. போகும் போது வாருங்கள் சமைச்சு வைக்கிறேன் " என்று சொன்ன அம்மா, இப்போ உயிரோட இல்லை. என்னை பெத்த அம்மாவின் கையால் சாப்பிடும் பாக்கியம் தான் எனக்கு இல்லை என்றால், இந்த அம்மா கையால் கூட சாப்பிடாமல் பண்ணிய விதியை என்ன செய்வது. என் கோபம் எல்லாம் அந்த சிங்கள இன வெறியன் மேல் திரும்பியது. இந்த அம்மா அவனுக்கு என்ன பாவம் பண்ணினா ..? சொல்லுங்கள் உறவுகளே..எதுக்காக எங்களுக்கு மட்டும் இந்த நிலை.இந்த கட்டத்தில் நான் என்ன முடிவு எடுக்க வேண்டும். சொல்லுங்கள் வாய் விட்டு சொல்லுங்கள். இந்த நிலையில் நீங்கள் இருந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள். அதை தான் நானும் எடுத்தேன். இது தப்பா ..?? நான் செய்கிறது தவறா ..?? என்னையும் கொச்சை படுத்தி தான் பேச போறீங்களா..?? எனக்கும் வாழ தெரியாது..யதார்த்தம் புரியாது என்று தான் பேச போறீங்களா ..?? பேசுங்கள் ..நன்றாக பேசுங்கள் ..எனக்கு எந்த கவலையுமே இல்லை. ஒரு மனுசனா ஒருத்தனுக்கு என்ன கோபம் வருமோ அது தான் எனக்கும் வருகிறது. ஒரு மகனாக அந்த அம்மாவுக்கு என்ன செய்யணுமோ அதை தான் நான் செய்ய போறேன். ரமணன் அண்ணா, வேகமாக ஓடிவந்தார் ஈருளியுடன். ராணி ஏறுடா, அந்த அம்மாவை தூக்குடா என்று கத்தினார். இல்லை அண்ணா, அம்மா செத்துட்டா.. நாங்கள் போவம் அண்ணா. இனி எனக்கு என்னுடைய அம்மாவும் வேண்டாம். சண்டையை முடிச்சு, எதிரியை எங்கட எல்லையில் இருந்து கலைச்சிட்டு வந்து பார்கிறேன். இது தான் நான் இந்த அம்மாவுக்கு செய்யும் கடன் அண்ணா. இந்த அம்மாவின் கதி இனி எந்த அம்மாவுக்கும் வரகூடாது அண்ணா..கடைசி மட்டும் வாழவேண்டும் என்று எவ்வளவு ஆசைப்பட்டா அண்ணா . கண்கள் கலங்கின. நாங்கள் போவம் அண்ணா .. தூரத்தில் புள்ளியாக நம் அம்மாவின் உடல்.. நடுத்தெருவில் அனாதையாக .... (தொடரும்) பாகம் பத்து இங்கே அழுத்துங்கள்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் எட்டு விடியற்காலையே சேகர் அண்ணா அந்த மருத்துவபாசறைக்கு வந்திருந்தார். ராணிமைந்தனின் உடல்நிலையை அன்போடு விசாரித்துவிட்டு, " தம்பி உங்களுக்கு, இப்போதைய கள நிலைமை விளங்கும் தானே..உங்கட தேவை அங்கெ உடனடியாக தேவைபடுகிறது. ஒரு நாள் விடுமுறையை குறைத்துகொண்டு இண்டைக்கு பின்னேரமே களத்துக்கு போடாப்பா " என்றார். சேகர் அண்ணாவை காணும் போது இருந்த மகிழ்ச்சி இப்போ ராணிமைந்தனின் முகத்தில் இல்லை. வேறு வழி இல்லாமல், கடவுளையும் திட்டி கொண்டு "சரி அண்ணே " என்றான். சேகர் அண்ணா, "சரிடாப்பா அப்ப நான் வாறன்" என்று புறப்படும் போது. " அண்ணே ஒரு நிமிஷம்", ராணிமைந்தன் கொஞ்சம் உரத்து கூப்பிட்டான். "அண்ணே நான் இயக்கத்துக்கு வந்ததுக்கு ஒரு நாள் கூட எங்கட அம்மாவை பார்க்கவில்லை, இப்போ எங்கே இடம்பெயர்ந்து இருகினமோ தெரியாது. இண்டைக்கு ஒரு நாள் அனுமதி தருவீங்களா அம்மாவை தேடி பார்க்க" கொஞ்ச நேரம் யோசிச்ச சேகர் அண்ணா, "சரி நான் புதுக்குடியிருப்பு சர்வதேச தொலைதொடர்பு நிலையம் போறேன். என் கூட வா. அங்கெ ரமணனுடன் சேர்த்து விடுகிறேன். அவனுடன் போய் தேடிப்பார். அது சரி அவை இருக்கிற இடம் உனக்கு தெரியுமா ?" "இல்லை அண்ணா, ஆனால் எங்கட சித்தப்பா உடையார்கட்டிலே ஒரு கடை வைச்சிருக்கிறார் அங்கெ போய் கேட்டால் தெரியும் அண்ணே" என்றான் முகத்தில் ஒரு மகிழ்ச்சியுடன். "சரி வெளிக்கிடு" என்னுடன் என்றார் சேகர் அண்ணா அவருக்கே உரித்தான புன்னைகையுடன். நானும் ரமணன் அண்ணாவும் உடையார்கட்டை அடையும்போது காலை பதினோரு மணி இருக்கும். தெருவெங்கும் மக்கள் முகங்களிலே பீதியுடன், அடுத்த நிலை தெரியாது அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். உழவு இயந்திரங்களிலும், லான்ட் மாஸ்டர்களிலும் எந்த இடம் பாதுகாப்பானது என்று தெரியாமல் பரபரப்பாக மாறி மாறி ஓடி கொண்டிருந்தார்கள். அதில் தலைகீழாக தொங்கும் கோழிகளின் நிலையும் எம் மக்களின் நிலையும் ஒன்று போல தோன்றியது எனக்கு. இவற்றுக்கு மத்தியிலும், அம்மாவை பார்க்க போகிறேன் என்ற சந்தோசம் என் முகத்திலே தாண்டவமாடியது. சனம் எல்லாம் என்னை வித்தியாசமாக பார்ப்பது போலவே எனக்கு தோன்றியது. ரமணன் அண்ணா தனது மூடி தலைகவசத்தை அணிந்து ஈருளியை ஓட்டும் வேகமே தனி, அவரை கட்டி அணைத்து என் மகிழ்ச்சியை சொன்னபோது, "யோசிக்காதே எப்படியும் உன் அம்மாவை கண்டு பிடித்திடலாம்" என்று ஆறுதல் வார்த்தை சொன்னார். நான் அவருக்கு சண்டையில் நடந்ததையும் என் பயத்தையும் மறைக்காமல் சொன்னபோது, "சரி ஒண்டு செய்வம், உன்னுடைய அம்மாவை கண்டு பிடிச்சால், உன்னை அவர்களிடம் விட்டுவிட்டு, நான் தனிய திரும்ப போகிறேன். எனக்கு என்ன தண்டனை வழங்கினாலும் பரவாயில்லை" என்றார். ரமணன் அண்ணா, சேகர் அண்ணாவுக்கு அடுத்த நிலை தளபதி. நடிகர் மதன்பாபு போல சிரிக்க தொடங்கினால் குலுங்க குலுங்க சிரிப்பார். மனசிலே எதையுமே வைச்சிருகாதவர். அவரை பார்த்தல் ஏதோ வெளிநாட்டு மாப்பிளை போல தான் இருப்பார். அவரின் இந்த உருவம், கொழும்பிலே மறைமுக வேலைகளுக்கு பெரிதும் உதவியதாக அடிகடி கூறுவார். கொழும்பிலே வேலை செய்யும்போது அங்கேயே ஒரு பெண்ணை காதலிச்சு, அவரை சமாதான காலத்தில் கைபிடித்து, இப்போ ஒரு குட்டி ரமணனுக்கு அப்பா. அவர் அடிகடி என்னிடம் கூறும் வசனம் ஒன்று. "டேய் ராணி, நீயும் எனக்கு ஒரு தம்பி மாதிரி தான்" என்று. அதை இன்றைக்கு உண்மையாகவே மெய்பித்து இருக்கிறார். நல்லவேளையாக சித்தப்பா கடையிலையே இருந்தார். "தம்பி, உங்கட அம்மா ஆட்கள், பிரமந்தனாறு பள்ளிகூடத்துக்கு கிட்டவா தான் இருக்கிறதாக ஒரு முறை தெருவிலே கண்டபோது சொன்னா..ஆனால் இண்டைக்கு அந்த இடத்து ஆட்கள் எல்லாம் எழும்பி இஞ்சாலை போகுதுகள். ஒரே செல்லடியாம்..எதுக்கும் அங்கனேக்கை போய் கேட்டு பார்" என்று ஒரு ஆறுதல் குறிப்பு தந்தார். கணநேரம் கூட தாமதிக்காது நாங்கள் தேராவில்லை அடைஞ்ச போது, எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். கடந்த வாரமாக பெய்த கடும் மழையாலே தேராவில் குளம் நிரம்பி, விசுவமடுவுகான தொடர்பு பாதை துண்டிக்கபடிருந்தது. ஒரு மாற்று வழிப்பாதை மண்ணால் அமைக்கபட்டிருந்தது . அது சேறும் சகதியுமாக, இடம்பெயர்ந்து வரும் மக்களை தாங்க கூடிய வல்லமை அற்றதாகவே இருந்தது. அங்கால பக்கம் இருந்து வந்த ஒருவர் சொன்னார். தம்பி இதை கடக்க மட்டும் இரண்டு மணித்தியாலம் எண்டாலும் தேவை என்று. அது எவ்வளவு பெரிய உண்மை என்று அதை கடக்கும் போது உணர்ந்து கொண்டோம். அது ஒரு ஒருவழிப்பாதை. காட்டை வெட்டி அமைத்திருந்தார்கள் . ஒரு முன்னால் போகும் வாகனம் புதைஞ்சாலோ அல்லது பழுதுபட்டாலோ பின்னால் வரும் வாகனம் அனைத்தும் மணிகணக்கில் காத்திருக்க வேண்டி இருந்தது. நாங்கள் ஈருளி என்றமையால் காட்டுக்காலே வெட்டி வெட்டி போய் சேர்ந்தோம். இயற்கை கூட எங்கள் மக்களை வதைத்து கொண்டிருந்தது. அந்த சன நெரிசலுக்குள்ளும் இராணுவம் தன்னுடைய நரவேட்டையை விடவே இல்லை. எறிகணைகளை மக்கள் நெரிசலுக்குள் ஏவி கொண்டே இருந்தது.காயபட்டவர்களை உடையார்கட்டு மருத்தவமனைக்கு கொண்டுவருவதற்கு கூட வேற வழி இருக்கவில்லை. மக்களின் ஓலங்களும், காயபட்டவர்களை முன்னகர்த்த காவல்துறையினரின் கட்டளைகளும் தான் மாறி மாறி ஒலித்து கொண்டிருந்தன. ஒருவாறு கண்ணகிபுரம் வந்து, அதனூடு பிரமந்தனாறு போகும்போது வழி நெடுகிலும் மக்கள் எங்களை எச்சரித்தனர். "தம்பிமார் அங்காலே போகாதீங்க. அவன் கண்டபாடுக்கு செல்லடிச்சு கொண்டிருக்கிறான். அங்காலே இருக்கிற ஆக்கள் கூட எல்லாம் எழும்பி வந்து கொண்டிருக்குதுகள்" என்று எங்கள் மேலிருந்த அக்கறையை ,பாசத்தை சொற்களில் காட்டினார்கள். அண்ணே, இண்டைக்கு மட்டும் தான் இருக்கு. எப்படி எண்டாலும் ஒருக்கா அங்கெ போய் அம்மா இருக்கிறாவா என்று பார்த்திட்டு போவோம்" என்று நான் சொல்ல, "தம்பி நீ சொன்னாலும் சொல்லவிடாலும் நான் போய் உங்கட அம்மாவை உனக்கு காட்டாமல் போக போறதில்லை என்ற முடிவோட தான் வந்திருக்கிறேன்" என்று ரமணன் அண்ணா தன் பாசத்தை வெளிபடுத்தினார் வார்த்தைகளாக. நாங்கள் அந்த பள்ளிகூடத்தடியை அடைந்தபோது பிற்பகல் இரண்டு மணிக்கு மேலே இருக்கும். மக்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது அந்த ஊர். மக்கள் வாழ்ந்துவிட்டு சென்றதுகான அடையாளங்கள் மட்டுமே எஞ்சி இருந்தது. கடும் செல்லடி கேட்டுகொண்டே இருந்தது. எங்களுக்கு பழகி போனதால் சட்டை செய்யாமல், அந்த பள்ளிகூட சுற்றயலை வலம் வந்து கொண்டிருந்தோம். செல் சத்தம் கொஞ்சம் குறையும் போது, அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள், அகபட்ட தங்கள் பொருட்களை எடுத்து கொண்டு ஓடி கொண்டிருந்தார்கள்.நாங்கள் விசாரிக்க கூட நின்று பதில் சொல்லும் நிலையில் மக்கள் இல்லை. எனது அம்மா கனவு கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து கொண்டிருந்தது மேலழுந்த செல் புகை போல. எங்களை போலவே,வீதிகளிலே மக்களை தேடி அலைந்தன அவர்களின் வீட்டு வளர்ப்பு நாய்கள். போக்கிடம் தெரியாமல், யாரிடம் கேட்பது என்று கூட தெரியாமல், அவைகளின் முகத்தில் எங்களை விட கலவரம் கொஞ்சம் அதிகமாகவே தெரிந்தன. இவை எல்லாம் ஏன் எங்களுக்கு நடக்கவேண்டும். நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்று எங்களை பார்த்து கேட்பது போல இருந்தது. தூரத்தில் ஒரு வீட்டில் இருந்து சமையல் புகை வந்து கொண்டிருந்தது. அது என் கனவில் ஒரு பாலை வார்த்தது போல இருந்தது. அந்த வீடுக்கு வெளியிலே ஈருளியை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றோம். ஒரு ஐயா பிளாஸ்டிக் கதிரையில் இருந்து பழைய பேப்பரை படித்து கொண்டிருந்தார், உள்ளே நாப்பது வயசு மதிக்கத்தக்க இரண்டு அம்மாக்கள் இருந்து சமைச்சு கொண்டிருந்தார்கள். அவர்கள் கூட எங்கோ புறப்படுவதற்காக எல்லா சாமான்களையும் கட்டி வைத்துவிட்டு சமைச்சு கொண்டிருந்தார்கள். "ஐயா, இங்கே வட்டக்கச்சி ஆட்கள் ஆரும் பக்கத்திலே இருந்தவையோ?" "தம்பி, இப்போ இரண்டு நாளைக்கு முதல் இந்த பள்ளிகூடத்தை சுத்தி நிறைய வட்டக்கச்சி ஆட்கள் தான் இருந்தவை. அவன் நேற்றில் இருந்து தொடர்ச்சியாக செல் அடிச்சு கொண்டிருக்கிறான். சனம் எல்லாம் இங்கை இருந்து உடையார்கட்டு, மயில்வாகனபுரம் பக்கம் போகுதுகள். கொஞ்ச சனம் திரும்ப வந்து விட்ட சாமான்களை எடுத்து கொண்டு போகுதுகள்" என்றார். என் நம்பிக்கை முற்றாக உடைஞ்சு போச்சு. என் முகத்தில் தெரிஞ்ச மாற்றத்தை பார்த்தோ என்னவோ உள்ளே இருந்து வந்த அம்மா கேட்டார். " யாரை தேடுறீங்க தம்பி" "அம்மா!.. நான் என் அம்மாவை தேடுறேன். எனக்கு இயக்கத்திலே இண்டைக்கு மட்டும் தான் லீவு விட்டிருகிறாங்கள். இண்டைகிடையில் பார்க்காவிட்டால் இனி எப்போ பார்க்கமுடியுமோ " என்று என் இயலாமையை சொன்னேன். "தம்பி, தேடிப்பாருங்கள் நிச்சயமா கிடைப்பா. அப்படி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நானும் உன் அம்மா மாதிரி தான்.. போகும் போது வாருங்கள் சமைச்சு வைக்கிறேன் " என்றார் அந்த அம்மா தாய்மைக்கே உரிய பாணியில். எனக்கு என் அம்மாவே நேரிலே வந்து கேட்பது போல தான் இருந்தது. " சரி அம்மா போகும்போது வாறோம்" என்று சொல்லிவிட்டு புறப்பட்டோம். இந்த அம்மாவை கூட இன்னும் கண நேரத்தில் பிரியபோவது தெரியாமல்... (தொடரும்) பாகம் ஒன்பது இங்கே அழுத்துங்கள்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் ஏழு சூரியகாட்டின் எல்லையோரம் அது. வற்றாபளை சந்தியில் இருந்து முன்னேறிவந்த ராணுவத்தை தடுத்து நிறுத்த புலிகளால் அமைக்கபடிருந்த காவலரண்கள் அவை. நந்திகடலோரம் மாலை மயங்கும் அந்தி அழகை கூட ரசிக்க மனமில்லாமல் காவலிருந்தார்கள் அவர்கள். முன்னால் நீண்ட புலிகளின் விமானபடை ஓடுபாதை. அதற்கு அப்பால் இருந்த காட்டுக்குள் அரக்கர்கள் கூட்டமா படையெடுத்து வந்து நிலையெடுத்து இருக்கிறது. நான்கு நாட்களாக அந்த அரக்கர் படை எடுத்த முயற்சிகள் எல்லாம் இவர்களின் தீரமான சண்டைகளால் முறியடிக்கபட்ட கோபத்தில் , கடுமையாக திட்டம் தீட்டி கொண்டிருந்தது எதிரிப்படை. புதுக்குடியிருப்பின் முக்கியத்துவம் கருதி, எதிரிக்கு விட்டு கொடுக்காமல் களமாட, முக்கிய பணிகளில் இருந்த போராளிகள் கூட குறுகிய பயிற்சியுடன் களமிறக்கபடிருந்தார்கள். இவர்களுக்கு வலதுபுறம் நிதிதுறையும், இடதுபுறம் கடற்புலிகளும் களமாடி கொண்டிருந்தார்கள். ஐம்பது மீற்றருக்கு ஒரு அரண் இருந்தாலும் இரண்டுக்கு ஒரு அரணில் தான் போராளிகள் இருந்தார்கள், மற்றவை எல்லாம் டம்மியாகத்தான் (போலியான) இருந்தன. அவ்வளவு ஆட்பற்றாக்குறை. பளை, கிளிநொச்சி முதல் அம்பகாமம், விசுவமடு,உடையார்கட்டின் மேற்குபுறம், தேவிபுரம், ஒட்டிசுட்டான், சூரியகாடு, வட்டக்கண்டல் என நீண்டு இருந்த அவ்வளவு எல்லை கூட்டிலும் ஆட்களை நிறுத்த புலிகளும் என்ன தான் செய்வார்கள். அந்த முறியடிப்புக்காக அழைக்கப்பட்ட வீரர்களில் ஒருவனாக ராணிமைந்தன் நிலை நிறுத்தபடிருந்தான். பேனை பிடித்த கை முதன் முதலாக தானியக்க ஆயுதத்துடன். பதினைந்து நாட்கள் தான் பயிற்சி கொடுத்திருப்பார்கள். இன்னுமே சரியான குறி வைப்பதில் சிரமம், ஆயுத துப்பரவாக்களில் சிரமம், இப்படியான கள அனுபவம் கொஞ்சம் கூட இல்லாமல் ராணிமைந்தன் கொஞ்சம் சிரமபட்டுதான் போனான். ஒரு அரணில் இரண்டு பெண் போராளிகளுக்கு ஒரு ஆண் போராளி என்ற ரீதியில் இவர்களது பிரிவில் விடபட்டிருந்தார்கள். அங்கு சந்தித்தவள் தான் கலையரசி. அரணுக்கு காவலுக்கு வந்த முதல் நாளே ராணிமைந்தனுக்கு அவளின் தங்கையை ஞாபகபடுத்தும் உருவமாக திகழ்ந்தவள் கலையரசி. அவளுக்கும் இவன் ஒரு உடன்பிறவா சகோதரனாகவே தோன்றினான். அவர்களிடையே அப்படி ஒரு பாசபிணைப்பு. வரும் வழங்கல்களை, மீள் உருவாக்கம் செய்து ருசியாக்குவதில் கலையரசிக்கு நிகர் யாரும் இல்லை. பழைய இடியப்பம், பழைய சோறு, கருவாடு, முறுக்கு துண்டுகள் என இவளின் மீள் உருவாக்க உணவுகளின் ருசிக்கு ராணிமைந்தனும் ஒரு அடிமை. வீட்டை பற்றி நினைக்க எதிரி அவகாசம் கொடுக்காவிட்டாலும், அவனுக்கு வரும் வீட்டு நினைப்பை ஆற்றுப்படுத்தவல்ல ஆளுமை கலையரசிக்கு இருந்தது. அன்றும் அப்படி தான். முதல் நாள் இரவு சாப்பிட்ட மீள் உருவாக்க வழங்கலின் கோளாறு காரணமாக, ராணிமைந்தனுக்கு வயிறு அவ்வளவு சரி இல்லை. அடிக்கடி வயிற்றாலை போக தொடங்கியது, எதிரி எதற்குமே அவகாசம் கொடுக்காமல், அவனிடம் இருக்கும் அவ்வளவு ஆயுதங்களையும் பயன்படுத்தி கொண்டிருந்தான். இவர்களின் அரணை தகர்க்க மட்டுமே, இரண்டு ஆர்.பி.ஜி, இரண்டு பி.கே, ஒரு சின்னைப்பர், மற்றும் ஏ.கே யுடன் நான்கு பேர் கொண்ட எதிரி அணி, இடைவிடாது தாக்கி கொண்டிருந்தது. பறந்து வரும் சன்னங்கள், அருகில் பெண்களின் நிலை, இவற்றுக்கு நடுவில், வயிற்று கோளாறு ராணிமைந்தனை படாத பாடுபடுத்தியது. ஏன்ரா இயக்கத்துக்கு வந்தோம் என்று இருந்தது அவனுக்கு, மக்களாவது மண்ணாகட்டியாவது. வீட்டு நினைப்பு வேற. கிளிநொச்சியை இராணுவம் பிடிச்சு வட்டக்கச்சி வரை வந்திடானாம் என்ற செய்தி வேற இடியாக இருந்தது. இனி சண்டை பிடிச்சு என்னத்தை செய்யுறது என்ற நினைப்பு வேற. ஓடிவிடலாம் முடிவெடுத்தான் ராணிமைந்தன். அலைபேசியில், பின்னணி நிலையில் இருந்த கொம்பனி தலைவருக்கு தொடர்பெடுத்தான். "கிலோ மக், கிலோ மக், அல்பா சேரா" "சொல்லுங்க அல்பா சேரா" " எனக்கு வயிற்று சிக்கல் , உடம்பிலே ஆயுதம் தூக்கி சண்டை பிடிக்க கூட வலு இல்லை, என்னை பின்னுக்கு எடுக்க முடியுமா" "விளங்குது அல்பா சேரா, இண்டைக்கு கஷ்டம், ஆளை மாத்தி விடனும் இரவு மட்டும் தாக்கு பிடியுங்கள், நாளைக்கு மாத்திறம்" "நன்றி கிலோ மக் " "நன்றி அவுட்" இரவுக்கு எப்படிதான் தாக்கு பிடிக்கபோறேனோ என்று தலை வெடிக்க யோசித்தான் ராணிமைந்தன். கலையரசி தான் ஆறுதலாக இருந்தாள். " ராணி அண்ணா, ஒன்றுக்கும் யோசிக்காதேங்கோ, நாளைக்கு எப்படியும் உங்களை மாத்தி பின்னுக்கு விடுவினம்" . "கலை சொல்லுறேன் என்று குறை நினைக்காதே. இந்த முறை பின்னுக்கு போனால் மெடிக்சிலே விட்டால், நான் நூறு மீற்றர்.( ஓடப்போறேன் என்றதுக்கு போராளிகள் மத்தியில் இருந்த பரி பாசை அது ). எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்கு" "ஒரு மனுஷனுக்கு ஏலாமல் வரும்போது தான் பாசங்களின் நினைப்பு கூட வரும். எனகேண்டால் இந்த சண்டையில நாங்கள் வெல்லுவம் என்ற நம்பிக்கை இல்லை. அம்மாக்கள் எங்கே இடம்பெயர்ந்து இருகினமோ தெரியலை. அவையோட போய் இருக்க போறேன்." "இவ்வளவு உன்னோட பழகிட்டு உனக்கு சொல்லாமல் போக கூடாது என்று தான் உனக்கு சொல்லுறேன். யாருக்கும் சொல்லி போடாதே" "நிச்சயமா அண்ணா சொல்ல மாட்டேன். அம்மாவை கண்டால் நானும் கேட்டேன் என்று சொல்லு. உனக்கு இங்கயும் ஒரு தங்கச்சி இருக்கிறா என்று சொல்லு". அன்று இரவு முழுவதும், புலிகள் வந்து விடுவார்களோ என்ற பயத்தில் சுட்டுகொண்டிருந்த இராணுவ சன்னங்களின் வெடியோசை, நாளை அம்மாவை காண போகிறேன் என்ற சந்தோசத்துக்கு கேட்டதாகவே தோன்றியது ராணிமைந்தனுக்கு. எப்படா விடியும் என்றிருந்தது ராணிமைந்தனுக்கு. உடுப்புகள், நாளேடுகள் அடுக்கிவைத்து விட்டு காத்திருந்தவனை எழுப்பியது எதிரியின் சன்னங்கள் தான். இண்டைக்கு அம்மாவை பார்க்க போறேன் என்று அவனுக்கும் தெரிஞ்சிட்டு போல. காலை பாதினொரு மணிக்கு தான் மாற்று ஆளணி வந்து சேர்ந்தது. ராணிமைந்தன் மாற்றபட்டு பின்களத்துக்கு வரவழைக்கபட்டான். கலையரசியை பிரிந்தது என்னவோ போலிருந்தது ராணிக்கு. இனி எப்போ பார்க்க போறேனோ..? என்ற கவலை மனசை வாட்டினாலும் அம்மாவை பார்க்க போறேன் என்ற சந்தோசம் எல்லாவற்றையும் வென்றது. பின்களத்தில் இருந்து மருத்துவ ஓய்விற்காக மூன்று நாட்கள் மெடிக்ஸ் அனுப்பபட்டான் ராணிமைந்தன். எப்படியாவது அங்கிருந்து ஓடி அம்மாவிடம் போய்விட வேண்டும். இதை தவிர அவனிடம் வேற எந்த எண்ணமுமே இல்லை. மூன்றாம் நாளே ஓட வேண்டும். திட்டமிட்டான் ராணிமைந்தன். அடுத்தநாள் அவன் திட்டத்தில் இடி விழப்போவது தெரியாமல் அன்று இரவு நிம்மதியாக படுத்துறங்கினான். வெடிச்சத்தம் கேட்காத அந்த இரவு. மறுநாள் ராணிமைந்தன் கனவில் இடிவிழபோகும் அந்த இரவு. மெல்ல கரைந்து கொண்டிருந்தது. (தொடரும்) பாகம் எட்டு இங்கே அழுத்துங்கள்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் ஆறு மன்னார் எல்லை களம் பெரிய பண்டிவிரிச்சான் வரை வந்திருந்தது. உக்கிரமான சண்டைக்களம் அது. காடு சார்ந்த பிரதேசத்தில் முன்னேறிவரும் ராணுவத்தை புலிகளின் படையணி வழிமறித்து கடுமையாக சண்டை பிடித்து கொண்டிருந்தது. தளபதி பானுவின் நெறிப்படுத்தலில் தீரமாக போராடின புலிகள் அணிகள். நாயகனுக்கு நேரடி சண்டையில் அனுபவம் குறைவு. பல்குழல் எறிகணைகள் என்றால் குலப்பன் நடுங்கும். பானு அண்ணாவிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு மாதிரி, எல்லை கோட்டுக்கு பின்னால் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைக்கபடிருந்த குட்டிசிறி மோட்டார் மகளிர் அணியின் ,ஒரு ஐந்து இஞ்சி மோட்டாருக்கு, காவல் பணியில் சேர்ந்து கொண்டான். கடுமையாக சீறி பாய்ந்து கொண்டிருந்தன மோட்டார்கள். பெண்களும் சளைக்காமல் சொல்லும் குறிக்கு மோட்டார்களை ஏவி கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை ஆழ ஊடுருவும் இராணுவ அணி தாக்கலாம் என்று காவல் பணியில் நாயகனும் மூன்று தோழர்களும் இருந்தார்கள். திடீர் என்று ஒரு சலசலப்புடன், சன்னங்கள் சீறி வரத்தொடங்கின. ஆமாம், ஒரு பத்து பேர் கொண்ட ராணுவ அணி அவர்களின் நிலையை தாக்க தொடங்கியது. நிலை தடுமாறிய அவர்கள் அப்படியே போட்டது போட்டபடி பின்வாங்கி ஓட தொடங்கினார்கள். நாயகனுக்கு தலை கால் புரியவில்லை. மற்றவர்களுக்கு அந்த காடு பரிச்சயமானபடியால் பின்னணி நிலை நோக்கி ஓட தொடங்கினார்கள். யாருமே அற்ற நிலையில் நாயகன் மட்டும் மோட்டரை ஒட்டி இருந்த ஒரு மரத்துக்கு பின்னால், கடவுளை வேண்டியபடி ஒளிந்து கொண்டான். இராணுவம் மோட்டரை நெருங்கியபடி இருந்தது. நாயகனுக்கு மிக அருகிலையே சிங்கள குரல்கள் ஒலிக்க தொடங்கின. இனி மறைந்தும் சாவுதான் என்று எண்ணிய நாயகன், மரத்திலிருந்து வெளிப்பட்டு சரமாரியாக சுட தொடங்கினான். திடீரென தொடங்கிய இந்த எதிர்பாராத தாக்குதலில் ராணுவம் திகைத்தது. புலிகளின் வழமையான தந்திரோபாயமாக (உள்ளே வரவிட்டு தாக்கும்) கருதி பின்வாங்கி ஓடினர். மகிழ்ச்சியுடன் நாயகன் துரத்தி துரத்தி சுட்டான். அவர்களது அச்சுறுத்தல் நீங்கியபிறகு போக இடம் தெரியாமல், மோட்டாருக்கு அமைக்கபட்ட குழியினுள் வந்து உட்கார்ந்து கொண்டான். அதே நேரம், மோட்டரை விட்டு பின்வாங்கிய போராளிகளுக்கு, அவர்களின் குழு பொறுபாளரிடமிருந்து கடுமையான உத்தரவு பிறப்பிக்கபட்டது. ஆயுததுக்காக உயிரையே கொடுப்பது தான் புலிப்படை. எப்பாடு பட்டாலும் சரி, மோட்டரை இராணுவத்திடம் பிடிபடவிடக்கூடாது என்று கடுமையான கட்டளை. அவர்கள் மோட்டர் இருந்த இடத்தை அடைந்த போது வெற்றி பெருமிதத்தில் நாயகன் தனியனாக நின்றான். அவனுக்கு உள்ளுக்குளே இருந்த பயம் அவனுக்கு மட்டும் தான் தெரியும்.(இப்போ உங்களுக்கும் தெரியும்) அன்றைக்கு ஏறியது நாயகனுக்கு காத்து. அந்த சம்பவம் பானு அண்ணாவரை போய், தலைவர் வரை போய்விட்டது. "தனியாளாக மோட்டரை காத்தவனை நான் பார்க்கணும்" என்றார் தலைவர். பிறகு என்ன ஆளையே பிடிக்கமுடியவில்லை. சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை நாயகனுக்கு. முகாமுக்கு வந்து சேகர் அண்ணாவுக்கு தான் முதன் முதலில் சொன்னான். "சேகர் அண்ணா நான் அண்ணையை பார்க்க போறேன். வர சொல்லி இருக்கிறார்" என்றான் வாயெல்லாம் பல்லாக. எல்லாம் உங்களால வந்தது அண்ணா, நீங்க மட்டும் என்னை சண்டைக்கு அனுப்பி இருக்காவிட்டால் நான் அண்ணையை பார்த்திருக்க முடியுமோ தெரியாது என்று சேகர் அண்ணைக்கு ஐஸ் வைச்சான். இரண்டு ஒரு நாளில் அண்ணையை பார்த்து அவருடன் புகைப்படம் எடுத்துகொண்டு மீண்டும் முகாம் வந்தான். அண்ணையுடன் சாப்பிட்டது, படம் எடுத்தது என்று எல்லாருக்கும் இரவு இரவாக வகுப்பெடுத்தான். உற்ற நண்பன் ராணிமைந்தனும் அவன் மகிழ்ச்சியில் பங்கெடுத்தான். "மச்சான் அண்ணையிடம் என்னடா கேட்டணீ" என்றான் ராணிமைந்தன் ஆவலுடன். "அது ஒண்டும் இல்லை மச்சான். அண்ணே எங்களுக்கு தமிழீழம் கிடைச்சால், நீங்க தானே ஜனாதிபதி, என்னை உங்கட கால்நடை அமைச்சராக போடுவீங்களோ என்று கேட்டேன் மச்சான்" என்றான் குறும்பாக நாயகன். "அதுக்கு அண்ணை சிரிச்சு போட்டு உனக்கு இப்பவும் கோழி வளர்கிற எண்ணம் தான் என்றார் நக்கலாக. அந்தாளுக்கு நான் கோழி வளர்த்ததில் இருந்து எல்லாம் தெரியும் மச்சான்" என்றான் பெருமையாக. "வேற என்ன மச்சான் சொன்னவர்" "உங்கட சண்டையை பற்றி சொன்னவங்கள். அது மாதிரி எண்டைக்கும் மண்ணிலையும், எங்கட மக்களை காக்கிற ஆயுதத்திளையும் பற்று வைச்சிருக்கணும் என்றும் சொன்னார்" "அது மட்டும் இல்லை மச்சான். எனக்கு அண்ணையை சந்திச்ச பிறகு மனசிலே ஒரு தைரியமும், மக்களை காக்கணும் என்ற உத்வேகமும் வந்திருக்கு மச்சான். அவனை ஒருக்காலும் உள்ளே வர விடக்கூடாது" என்று சொன்னவன் தான் நாயகன். அண்ணையின் சந்திப்பு முடிந்து ஐந்தாம் நாள். பண்டிவிரிச்சானில் முன்னேறிவந்த ராணுவத்துடன் தீரமாக சண்டையிட்டு கப்டன் நாயகனாக..ராணிமைந்தனின் அறையில் படமாக.. நீங்காத அந்த உயிர் நண்பனின் நினைவுகள்.... உண்மையிலேயே பெயருக்கு ஏற்ற நாயகனாக, ராணிமைந்தனின் மனசில் மட்டுமல்ல.. உங்கள் மனசிலும் என்றும் வாழ்வான். (தொடரும்) பாகம் ஏழு இங்கே அழுத்துங்கள்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் ஐந்து நாயகன்... ராணிமைந்தனுக்கு இயக்கத்தில் இருந்த ஆறுதலும் அரவணைப்பும் பொழுதுபோக்கும் அவன் தான். பெயர் மட்டும் தான் நாயகன். தோற்றத்திலும் செயற்பாட்டிலும் ஒரு நகைச்சுவை நடிகனுக்கு ஒப்பானவன்.இயக்கத்தில் இப்படி விசித்திரமாகவும் பெயர்கள் அமைவதுண்டு. குள்ளமான உயரத்தை கொண்டவனுக்கு நெடியவன், சண்டைக்கே போக பயப்டுபவனுக்கு போர்பிரியன், வார்த்தையிலே என்றைக்குமே அன்பை காட்டாதவனுக்கு அன்பரசன், முப்பது வயசுக்கு மேல் இருப்பவனுக்கு இளையவன், முகத்திலே சிரிப்பே இல்லாதவனுக்கு இனியவன், நீந்த தெரியாதவனுக்கு கடலரசன், வழுக்கையாக தலை இருப்பவனுக்கு முடியரசன்... இப்படி அடுக்கி கொண்டே போகலாம். ராணிமைந்தனுக்கு தொழிநுட்ப உதவியாளனாக நாயகன் இணைக்கப்படத்தில் இருந்தே இருவருக்கும் இடையில் ஒரு இனம்புரியாத பிணைப்பு. நாயகனின் நகைச்சுவை பேச்சும், குறும்பு செயல்களும் , ராணிமைந்தனுக்கு வீட்டு நினைப்பை கொஞ்சம் தூரவைக்கும். நாயகனின் குறும்புகள், இந்த தலைப்பிலேயே ஒரு தனி தொடர்கதை எழுதலாம். அந்த அளவுக்கு அவனின் குழப்படி பட்டியலும் அதற்கான சேகர் அண்ணாவின் தண்டனை பட்டியலும் நீண்டு கொண்டே போகும். இருந்தாலும் உங்களுக்கும் சிலது தெரிந்தே ஆகவேண்டும். பொருளாதார தடைகள், போரின் தீவிரம் காரணமாக போராளிகளுக்கு வழங்கப்படும் வழங்கல்களின் அளவுகள் குறைந்து கொண்டே போயின. ஐந்து பேருக்கு ஒரு பற்பசை,பாதி சவர்க்காரம், பால்மா இல்லாத தேநீர், குளிர்களி (ஐஸ்கிரீம்), சொக்கிலேட் போன்றவை எல்லாம் கண்ணாலும் காணமுடியாது. இருந்தாலும் முகாம்களுக்கு, தங்களுக்கு தேவையான சிறு பொருட்களை வாங்குவதற்காக, சிறு பயிர்செய்கையோ(கத்தரி, வெண்டி,தக்காளி..) அல்லது கோழி வளர்ப்போ மேற்கொள்ள கூடிய அதிகாரம் வழங்கபட்டிருந்தது. சேகர் அண்ணா, கோழி வளர்ப்பு பணியை நாயகனிடம் கொடுத்திருந்தார். அவனும் அதை நன்றாக தான் செய்து வந்தான். அவனது புண்ணியத்திலே எல்லாருக்கும் நாளுக்கு ஒரு முட்டை, வாரந்தோறும் ஒருமுறை குளிர்களி, பிஸ்கட் என்று நல்லாத்தான் போய் கொண்டிருந்தது. அதிகாலையிலே சரக்கட்டுடன், சைக்கிளில் இரண்டு பக்கமும் சேவல்களை கட்டி தொங்க போட்டு கொண்டு நாயகன் சந்தைக்கு போகும் பாணியை யாராலும் மிஞ்ச முடியாது. சந்தையிலிருந்து திரும்பும் போது கையிலே பொருட்களையும் வாயிலே புன்னைகையும் வைத்தே சொல்லமுடியும் அவனிடம் அம்பிட்ட ஏமாளிகள் எத்தனை பேர் என்று. இப்படி போன அவனது வியாபாரத்திலும் இடிவிழுந்தது. அவன் வளர்த்த கோழிகளுக்கு வந்தது தூங்கும் வியாதி. ஒரே நாளில் தூங்கி செத்தது ஆறு கோழி. சேகர் அண்ணா பார்த்துவிட்டு செத்த கோழிகளை வெட்டி தாக்க சொல்லிட்டு போய்விட்டார்.நாயகன் கிடங்கு வெட்டியதை எல்லோரும்பார்த்தோம். எல்லாரும் அவரவர் வேலைக்கு போய்விட்டோம். மாலை நேரம் கை நிறைய குளிர்களியுடன் வந்தான் நாயகன். எல்லாரும் ஆளாளுக்கு அடிபட்டு வேண்டி சாப்பிட்டு ஏப்பம் விட்டிட்டு கேட்டோம். "எதுடா காசு" "நான் செத்த கோழிகளை வித்திட்டேன் மச்சான்" "எப்படியடா" "எல்லாத்தையும் உரிச்சு சிறகுகளை மட்டும் தாட்டுவிட்டு. கோழிகளை கொண்டுபோய் பக்கத்து வீடுகளிலே வித்தேன்" என்றான் நாயகன். "சனம் வாங்கிச்சா ?" இது நாங்கள். "அது விக்கிறமாதிரி வித்தா சனம் வாங்கும்" "என்ன சொல்லி வித்தணீ" "எங்கட முகாமுக்கு தலைவர் வாறது என்று சொன்னவர். நாங்கள் கோழி எல்லாம் உரிச்சு சாப்பாடுக்கு ரெடிப்பண்ண, கடைசி நேரத்திலே தலைவர் வரமுடியாமல் போச்சு. இந்த கோழிகளை என்ன செய்கிறது என்று தெரியலை. அது தான் நம்பிக்கையான ஆட்களிடம் தான் இதை சொல்லி விக்க முடியும். அது தான் உங்களை தேடிவந்தேன்.ஒருத்தருக்கும் சொல்லிபோடாதீங்கள் என்று நாலு வீடுக்கும் ஒரே மாதிரி சொல்லி வித்தாச்சு" என்றான் நாயகன் கூலாக.. இது சேகர் அண்ணாவுக்கு தெரிந்து ஒரு வார சமையல் தண்டனையை வாங்கி கட்டி கொண்டான் நாயகன். அடுத்த சம்பவம் சேகர் அண்ணாவுக்கு மேலும் கோபத்தை உண்டாக்கியது. முகாமில் ஒரு சந்திப்புக்காக இருபத்தைந்து கதிரைகள் தேவைப்பட்டன. எங்களிடம் இருந்ததோ ஆறு கதிரைகள் தான். கதிரை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு நாயகனிடம் விடபட்டது. ஒவ்வொரு வீட்டிலும் போய் இரண்டு இரண்டு கதிரையாக இருபது கதிரை சேர்க்கவேண்டும். நாயகனின் குறும்பு மூளை வேலை செய்தது. இருபது கதிரையுடன் நின்றான். சந்திப்பும் இனிதே முடிந்தது. எங்கள் எல்லாருக்கும் ஒரு சந்தேகம். என்ன இருபது கதிரையும் ஒரே மாதிரி இருக்கு என்று. நாயகன் ஏதோ சொல்லி சமாளித்துவிட்டான். ஆனால் உண்மையில் நாயகன் எங்கட முகாமுக்கு பக்கத்தில் இருந்த தேநீர் கடைக்கு சென்று, அதன் உரிமையாளரிடம்" எங்கட முகாமுக்கு தலைவர் வாறார், சந்திப்புக்கு இருபது கதிரை தேவை எல்லாரிடமும் கேட்கமுடியாது அண்ணே. இரகசிய பிரச்சனை. உங்களிலே வைச்சிருக்கிற நம்பிக்கை விசுவாசத்தில தான் வந்தனான்" என்று அவிச்சு, அந்தாள் கடையையும் பூட்டிவிட்டு கதிரைகளை கொடுத்திருந்தார். இது சேகர் அண்ணாவுக்கு தெரியவர, நாயகன் தலைவரை வைத்து பண்ணிய குறும்பால் கோபமடைந்து, நாயகனுக்கு தண்டனையாக மன்னார் எல்லைக்கு ஒரு மாதம் சண்டைக்கு போக சொல்லிவிட்டார். உண்மையிலையே சண்டைக்கு போறதெண்டால் நாயகனுக்கு உள்ளூர பயம் தான். ஆனால் அந்த மன்னார் எல்லையில் நடந்த சண்டை அவன் தலைவிதியையே மாற்றியது. (தொடரும்) பாகம் ஆறு இங்கே அழுத்துங்கள்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் நான்கு "ஐயா! இந்த கத்தரிக்காய் என்ன விலை.?" "கால் கிலோ நாற்பத்தைந்து ரூபாய் அம்மா.." என்று சொல்லிவிட்டு அடுத்த வாடிக்கையாளருக்கு தக்காளிபழம் நிறுத்து கொண்டிருந்தார் அந்த மரக்கறி வர்த்தகர். "ஒரு கால் கிலோ போடுங்கையா.." அவர் அதை நிறுத்துகொண்டே "வேற ஏதாவது.." என்று கேட்டபோது தான் ராணியம்மா அவர்களை பார்த்தார். "ஓம் அவர்களே தான்.." என்று மனசுக்குள்ளே சொல்லிகொண்டு "ஐயா இந்த மரக்கறி கூடையை கொஞ்சம் பார்த்துகொள்ளுங்கள் நான் இப்பவே வந்திடுவன் " என்று சொல்லிவிட்டு ஐயாவின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அவர்களை நோக்கி வேகமாக நடக்க தொடங்கினார். "தம்பி நீங்க தானே அண்டைக்கு வீட்டுக்கு வந்து நேசனை கூட்டி கொண்டு போனீர்கள்..." சிறு ஐயத்துடன் தான் ராணியம்மா கேட்டார். "ஓம் அம்மா.. அவர் எங்களுடன் தான் இருக்கிறார். உங்கட பெயரை தான் தனக்கும் வைச்சிருக்கிறார். ராணிமைந்தன் என்று" ராணியம்மாவுக்கு கண்கள் கலங்கின. ஒருகையால் துடைத்துக்கொண்டே "தம்பி கேட்கிறேன் என்று குறை நினைக்காதீங்க..மற்ற பிள்ளைகள் எல்லாம் இயக்கத்துக்கு போய் ஒன்று இரண்டு மாதங்களிலேயே பெற்றோருக்கு காட்டினார்கள். நேசன் போய் ஐந்து மாதங்கள் ஒரு நாள் கூட அவனை காட்டலை. என் மகனுக்கு ஏதாவது காயம்.. கீயம்..." மனசிலே இருந்த வலிகள் வார்த்தைகளாக.. "அப்படி ஒன்றும் இல்லையம்மா. அவர் சண்டைக்கே போகவில்லை. ஒரு முக்கியமான வேலையாக இருப்பதால் அதை விட்டு வரமுடியாமல் உள்ளது. இன்னும் கொஞ்ச நாளில் உங்களை வந்து பார்ப்பார்". "எப்போ தம்பி .?" இந்த கேள்விக்கு அவர்களுக்கு என்ன. அந்த ஆண்டவனுக்கே பதில் தெரியாது. "கூடிய சீக்கிரம் அம்மா. அந்த வேலை முடிஞ்சதும் வருவார்". "சரி தம்பி. நீங்கள் அவனை கண்டால் அம்மா ரொம்பவும் விசாரித்ததாக சொல்லுங்க. கிழமைக்கு ஒருக்கா எண்ணெய் தேச்சு குளிக்க சொல்லுங்க. நல்லா சாப்பிட சொல்லுங்க. கவனமாக இருக்க சொல்லுங்க. தங்களை பற்றி கவலை படவேண்டாம் என்று சொல்லுங்க.. தங்கச்சிமார் நல்லா படிக்கினம் என்று சொல்லுங்க ... " என்று அடுக்கி கொண்டே போனார். "ஓம் அம்மா.. நிச்சயமாக சொல்லுறம்" என்று அவர்கள் புறப்படும் போது.. "தம்பிமார் ..எனக்கு ஒரு உதவி செய்வீங்களா.. நாளைக்கு மதியம் போல ஒருக்கா வீட்டுக்கு வருவீங்களா" "அம்மா நாளைக்கு பெரும்பாலும் இஞ்சாலை பக்கம் தான் வேலை. நிச்சயமாக வருவோம்" என்று சொல்லிட்டு போய்விட்டார்கள். வீட்டுக்கு வந்த ராணியம்மவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. நேசனின் சிறுவயசு படத்தை கொஞ்சியபடியே சொன்னாள் "என் பிள்ளை என் பிள்ளை தான்" என்று கண்களில் நீர்வர ஆனந்தமாக சொன்னாள். தங்கைகள் சுபாவுக்கு மதிக்கும் என்னவென்றே புரியவில்லை. "அம்மா.. என்னம்மா நடந்தது அண்ணாவை பார்த்தியா" "இல்லையடி.. அண்ணாவை கூட்டி கொண்டு போனவர்களை பார்த்தேன். அவன் என் பெயரைத்தான் தனக்கு வைச்சிருக்கிறான். என் பிள்ளை என்னை மறக்கவே இல்லை." "சரி மச மச என்று நிக்காமல் அண்ணாவுக்கு கடிதம் எழுதுங்கோ.. நாளைக்கு அவர்கள் வருவார்கள் அவர்களிடம் கொடுத்துவிடலாம்" என்று பிள்ளைகளை துரத்தினாள். தானும் கடிதம் எழுத தொடங்கினாள். அன்புள்ள தம்பி, நாங்கள் நலம். தம்பி.. வட்டக்கச்சி முருகன் துணையால் நீயும் நலமாக இருப்பாய். தம்பி உன்னை கூட்டி சென்றவர்களை இன்று சந்தையில் பார்த்தேன். அவர்களிடம் கொடுக்க தான் இந்த கடிதம் எழுதுகிறேன். தம்பி..ஒவ்வொரு நாளும் உன் நினைப்பு தான். எந்த நாளும் நான் சாப்பிட ஒரு வாயை வைக்கும்போது... நீ சாப்பிடியா..உனக்கு நல்ல சாப்பாடு கிடைச்சுதா என்ற எண்ணமே என்னை சாப்பிட விடாது தம்பி. எங்க வீட்டு நாய் கூட நீ இல்லாமல் சாப்பிடுது இல்லை..நாங்க மட்டும் எப்படி தம்பி...?? நீ எத்தனை நாள் என்னிடம் கேட்டிருப்பாய் எனக்கு ஊட்டிவிடம்மா என்று. நானும் நீ வளர்ந்திட்டாய் என்று தட்டிகழிப்பேன் .. இப்போ தோணுதையா..உன்னை பக்கத்தில் வைச்சு ஊட்டிவிடணும் போல..எப்போ அப்பா இந்த அம்மாவை பார்க்க வருவாய். தம்பி..தங்கச்சிகள் எல்லாம் நல்ல படிக்குதுகள். தங்களுக்காக தான் அண்ணன் இயக்கத்துக்கு போனான் என்று உணர்ந்து படிக்குதுகள். அப்பா வயலுக்கு போய்ட்டார். வந்ததும் சொல்லுறன். அவரும் உனக்கு கடிதம் எழுதணும் என்று சொன்னவர். தம்பி..உனக்கு நிறைய எழுதணும் என்று யோசிச்சு வைச்சேன். இப்போ கண்ணீர் மட்டும் தான் வருகுது எழுத்து வருகுதில்ல. குறை நினைக்காதே இந்த அம்மா உன்னை எண்டைக்கும் நினைச்சு கொண்டுதான் இருப்பா. கவனமாக இருந்து கொள். பதில் போடு. பொறுப்பாளரிடம் கேட்டு வீட்டுக்கு ஒருக்கா வந்திட்டு போ. அன்புடன், அம்மா. குறிப்பு : தம்பி இந்த கடிதத்துடன் உனக்கு பிடிச்ச பத்து கோழிக்கறி சாப்பாடு பொதிகள் கொடுத்துவிடுறேன்.. நீயும் சாப்பிட்டு மற்ற பிள்ளைகளுக்கும் கொடுத்துவிடு. "பாவம் அவர்கள் எல்லாம் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு எத்தனை நாளோ. அவங்கள் அம்மாவும் என்னை போல தானே கவலைபடுவாங்க. ஒரு அம்மாவின் வலி இன்னொரு அம்மாவுக்கு தானே தெரியும் " என்று மனசிலே சொல்லிக்கொண்டு ராணியம்மா நாளைக்கு சமைபதற்கான ஆயத்தங்களில் ஈடுபட தொடங்கினார். மறுநாள் காலையிலையே எழும்பி தன் மகனுக்காகவும், மகன்களுக்காவும் தன் பாசம் எல்லாம் கொட்டி சமைக்க தொடங்கினாள். மதியமளவில் எல்லாவற்றையும் பொதிகளாக கட்டி, குடும்பத்தின் கடிதங்களுடன் வாசலில் காத்திருந்தாள் ராணியம்மா... அவர்களுக்காக. அந்த விழிகளில் இருந்த தேடலும் ஏக்கமும் வார்த்தைகளால் வடிக்க கூடியவை அல்ல. ஒரு நிமிஷம்.....ஒரே ஒரு நிமிஷம்..நீங்கள் அந்த ராணியம்மாவாக இருந்து பாருங்கள். உங்களுக்கு புரிகிறதா அந்த ஏக்கம்.. ராணியம்மா காத்திருக்கிறாள்.........................! அவர்கள் வரவில்லை.. வரவேயில்லை.. இனி வரபோவதும் இல்லை.. ஆம்..நேற்று மாலை ஒரு பணிக்காக மல்லாவி போய்வந்தபோது, ஆழ ஊடுருவும் படையினர் நடாத்திய கிளைமோர் தாக்குதலில் அவர்கள் வீரச்சாவு என்று, ராணியம்மாவுக்கு உங்களில் யாராவது சொல்லிவிடுவீங்களா..? (காத்திருப்பு தொடரும்) பாகம் ஐந்து இங்கே அழுத்துங்கள்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் மூன்று நேசனை அழைத்து சென்ற அந்த போராளிகள், அவனை தங்கள் பொறுப்பாளரிடம் ஒப்படைத்தனர். "அண்ணே, இந்த தம்பியின் அம்மாவே போராடத்தில் இணைய அனுப்பி வைத்தவ.." என்று சொல்ல "சரி நான் பார்த்துகொள்கிறேன் என்று சொன்னார்" பொறுப்பாளர் சேகர். சேகர் , இயக்கத்தின் தொலைதொடர்புக்கு பொறுப்பானவர். இயக்கத்தின் மீதும் தலைவர் மீதும் தீராத பற்றும் பாசமும் கொண்டவர். ஜெயசுக்குறு காலத்தில் அவருடன் பணியாற்றி வீரச்சாவடைந்த தளபதியின் பேரையே தனது ஒரே மகனுக்கு வைத்த ஒரு ஆழமான போராளி. இவை எல்லாவருக்கும் மேலாக ஒவ்வொருநாளும் காலையில் அவரது அறையில் இருக்கும் அனைத்து மாவீரர்களின் படங்களுக்கும் பூ வைக்காமல் எந்த காரியத்தையும் தொடங்குவதில்லை.வெள்ளிகிழமை தோறும் துயிலும் இல்லம் போய், மாவீரரை வணங்கி, விரதமிருந்து தான் கடமையாற்றும் ஒரு உன்னத போராளி. என்றுமே சிரித்த முகமும், மிடுக்கான பார்வையும் அவரை ஒரு ஆளுமை மிக்க போராளியாக, தளபதியாக நேசனுக்கு காட்டியது. "தம்பி உங்கட பெயர் என்ன ? " அன்பாக கேட்டார் தளபதி சேகர். "நேசன்.." அடக்கமாக பதில் சொன்னான். "உமக்கு இயக்கத்தில் என்ன செய்ய விருப்பம்.?" "அண்ணே.. ஏதாவது தொழில்நுட்ப துறையில் சாதிக்கணும் என்று ஆசை " "சரி நான் இப்பொது ஒரு முக்கிய சந்திப்புக்காக போறேன். அங்கே எனக்கு பொறுப்பானவரை சந்திப்பேன். அவருடன் பேசி முடிவெடுத்துவிட்டு உமக்கு சொல்லுறேன். அது மட்டும் உந்த இருக்கையில் இரும்" என்று சொல்லிவிட்டு உந்துருளியில் வெளியில் சென்றுவிட்டார் தளபதி சேகர். அவரது அறையில் அடுக்கி வைக்கப்படிருந்த புத்தகங்களில், பாலா அண்ணா எழுதிய "விடுதலை வேட்கையை" எடுத்து புரட்ட தொடங்கினான் நேசன். மனசிலே அம்மா, தங்கைகளின் எண்ணங்கள் வாட்ட தொடங்கின. நேரம் போனது தெரியவில்லை. உந்துருளியின் சத்தம் கேட்டு நிமிர்ந்த போது, சிரித்தபடியே வந்தார் தளபதி சேகர். "தம்பி உம்மை எங்கட பிரிவிலையே இணைக்க சொல்லிவிட்டார். நீர் எங்களுடனே பணி செய்யமுடியும். உமக்கு தொலைதொடர்பு துறையில் பணியாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லைதானே" என்ற போது மகிழ்வுடன் தலையாட்டினான் நேசன். "தம்பி. இந்த பிரிவு மிகவும் ரகசியமானது. இங்கு நடக்கும் எந்த வேலை திட்டமும் வெளியிலே யாருக்கும் எக்காரணம் கொண்டும் தெரிய கூடாது. இந்த ரகசியங்கள் நாங்கள் சாகும்போது எங்களுடன் சாக வேண்டியவை புரிந்ததா..??. எங்கட இயக்கம் இண்டைக்கு இந்தளவுக்கு வளர்ந்திருக்கு என்றால் அதுக்கு இரகசிய காப்பு தான் முக்கியம் என்றதை எப்பவும் மனசிலே வைச்சிருக்க வேணும். சரியா " "ஓம் அண்ணே". "சரி தம்பி. உமக்கு ஒரு இயக்க பெயர் தமிழில் வைக்க வேண்டும். உமக்கு ஏதாவது பெயர் விருப்பமா ?" "ராணி மைந்தன்" என்றான் நேசன். "ஏன் தம்பி இந்த பெயரில் ஆரும் உங்கட உறவினர்கள் வீரச்சாவா ?" "இல்லை அண்ணா. எங்கள் அம்மாவின் பெயர் ராணி". ராணி மைந்தனுக்கு அந்த வேலை மிகவும் பழகிபோனது. தன்னுடைய அறிவுத்திறமையை வைத்து மேலும் மேலும் அந்த தொடர்பாடல் துறையை விருத்தி செய்தான். தளபதி சேகருக்கும், ராணி மைந்தனை மிகவும் பிடித்து போனது. சில சந்தர்ப்பங்களில் அனைவராலும் கைவிடபட்ட உபகரணங்களை கூட ராணி மைந்தன் தன்னுடைய திறமையால் திருத்திஅமைத்தான். அந்த வன்னி நிலபரப்பில் மக்களுக்கு தொலைதொடர்பு சேவையை வழங்குவதில் ராணி மைந்தனின் பங்கு அளப்பரியதாக இருந்தது. ராணி மைந்தனின் தேவையை உணர்ந்து அவனது அடிப்படை பயிற்சி தள்ளி போய்கொண்டிருந்தது. ஏனையவர்கள் அடிப்படை பயிற்சியை முடித்து பெற்றோர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தும், ராணி மைந்தனுக்கு அவனது வேலை ரகசியம் காரணமாக பெற்றோரை சந்திக்கும் வாய்ப்பை இழந்திருந்தான். ஒவ்வொரு நாளும் தனது நாட்குறிப்பில் அம்மா, அப்பா, தங்கைகளை பற்றி தான் என்ன நினைச்சேன் என்று எழுதிவருவான். சந்திக்கும் நாளில் கூட பேச நிறைய நேரம் கிடைக்காது என்பதால், இந்த நாட்குறிப்பை அவர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்று நிறையவே எழுதுவான். அன்று அவனுக்கு தெரியாது. இந்த நாட்குறிப்பை என்றைக்குமே அவர்கள் பார்க்க போவதில்லை என்று. (தொடரும்) பாகம் நான்கு இங்கே அழுத்துங்கள்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் இரண்டு வணக்கம்.. நான்தாங்க நேசன் பேசுறேன்.. என்ன அப்படி பார்க்கிறீங்கள்.. சென்ற பாக கதையின் நாயகன் தாங்க.. சரி இப்போ சொல்ல வந்த விடயத்துக்கு வாறன். என்னை கூட்டி கொண்டு போகும் இந்த இரண்டு அண்ணைமாரையும் எனக்கு ஒரு வாரத்துக்கு முதல் தான் தெரியும். எப்படியும் பொறியியல் கல்லூரிக்கு போய்விட வேண்டும் என்று உறுதியோட, வட்டக்கச்சியில் இருந்து கிளிநொச்சிக்கு தனியார் வகுப்புக்காக வரும்போது கோவிந்தன் கடை சந்தியடியில் மறித்து .."தம்பி உங்களோட கொஞ்ச நேரம் பேசவேணும் நேரம் இருக்குமா" என்று கேட்ட போது தான் நான் அவர்களை முதன் முதலில் பார்த்தேன். என்ன.. என்னை விட நாலு அல்லது ஐந்து வயசுதான் கூட இருக்கும். சிரித்தபடி தான் கேட்டார்கள். எனக்கும் வகுப்புக்கு கொஞ்சம் நேரம் இருந்ததால் அவர்களுடன் பேச ஒத்துக்கொண்டேன். "தம்பி உங்களுக்கு தெரியாதது ஒண்டும் இல்லை. இராணுவம் மன்னார் பக்கத்தால உடைச்சு கொண்டு உள்ளே வந்து கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட எழுபது கிலோ மீட்டருக்கு மேல முன்னணி காவலரண்கள்..ஐம்பது மீட்டருக்கு ஒரு காவலரண், காவலரணுக்கு மூன்று பேர், மூன்று கடமை நேரம் என்று பார்த்தாலும் தம்பி..எத்தனை பேர் வேணும் என்று நீங்களே கணக்கு பண்ணி பாருங்க தம்பி." அந்த அண்ணா சொல்லி கொண்டே போனார். "அண்ணே நீங்கள் சொல்லுறது விளங்குது அண்ணே ..வீட்டிலேயே இரண்டு தங்கச்சி, ஏலாத அப்பா அம்மா, எல்லாரையும் நான் தான் அண்ணே பார்க்க வேணும். நான் படிச்சு பொறியிலாலராக வந்தால் தான் எதுவுமே செய்யமுடியும் அண்ணா. நான் வேணும் என்றால் படிச்சு முடிச்ச பிறகு ஏதாவது உதவி செய்யட்டுமா அண்ணா" என்று கேட்டேன். "தம்பி நீங்கள் படிச்சால் எங்கட நாட்டுக்கு தான் பெருமை தம்பி.. ஆனால் போற போக்கை பார்த்தால் நீங்கள் படிச்சு சோதனை எழுத முதலே உங்கட வீட்டு வாசலில் வந்து இராணுவம் நிப்பான் தம்பி. நானும் பொறியியாலனாக வரவேண்டும் என்று தான் படிச்சேன். இன்றைய நிலைமை அப்படி தம்பி... இல்லை என்றால் உங்களை படிக்க விட்டு நாங்களே சண்டை பிடிச்சிருப்போம்." "தம்பி உங்களுக்கே தெரியும். ஜெயசுக்குறு காலத்திலும் சரி, யாழ்பாண சண்டையிலும் சரி, மாணவர்களை சுழற்சி முறையில் தான் களபணிக்கு கேட்டோமே தவிர முழுமையாக கேட்கவில்லை. இன்றைய நிலைமையை உணர்ந்து தான் உங்களிடம் கெஞ்சி கொண்டிருக்கிறோம்" என்று நியாயம் சொன்னார் அந்த அண்ணா. அவர்கள் சொல்லுவது நியாமாகபட்டாலும் வீட்டு நிலைமையை யோசித்து, இவர்களை வெட்டிவிட வேண்டும் என்று மனசிலே நினைத்து, " அண்ணே வகுப்பு நேரமாச்சு..நான் போகவேணும். வீட்டை போய் யோசிச்சு பார்கிறேன். விரும்பினால் எங்கே வந்து சேரவேண்டும்" என்று நயமாக கேட்டு அவர்களின் முகாம் முகவரியை தெரிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். மாலையில் வீட்டுக்கு வந்ததில் இருந்து அவர்கள் சொன்னது தான் காதில் ஓடி கொண்டிருந்தது. நான் படிக்க வேண்டும் என்றதுக்காக யாரோ அண்ணாமார் அக்காமார் இரவிரவாக கண்விழித்து காவலரணில் கடமை இருப்பது எனக்கு என்னவோ செய்தது. அவர்களுக்கும் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் தானே. அவர்களுக்கும் தம்பிமார் தங்கச்சிமார் இருந்திருபினம் தானே. அவர்களுக்கும் ஏலாத அம்மா அப்பா இருந்திருபினம் தானே. எங்களுக்காக எங்கட அடுத்த தலைமுறைக்காக அவர்கள் சிலுவை சுமக்க.. நாங்கள் அவர்களுக்கு என்ன நன்றி கடன்.. எப்போது செய்ய போகிறோம் இப்போ செய்யாமல்..ஆயிரம் கேள்விகள் ..அன்று என்னை தூங்கவே விடவில்லை. நான் தூங்கும் போது விடிந்திருந்தது வானம் மட்டும் இல்லை என் மனசும் தான். காலையில் ஒரு முடிவோட அம்மாவிடம் வகுப்பு என்று பொய் சொல்லிவிட்டு அவர்களின் முகாமுக்கு போனேன். நேற்று என்னுடன் பேசிய அண்ணா முகாமின் முற்றத்தை கூட்டி கொண்டிருந்தார். என்னை கண்டது அருகில் வந்து "என்ன தம்பி ..முகத்தில் ஒரு மாற்றம் தெரிகிறது" என்று மனசை அறிந்து பேசினார். "அண்ணா ..யோசிச்சு பார்த்தேன் உங்களுடன் சேருவது என்று முடிவு எடுத்துவிட்டேன். என்னால் என் அம்மாவிடம் நேரடியாக கேட்கவும் முடியாது. அவ தாங்கமாட்டா..சொல்லாமல் ஓடி வரவும் எனக்கு பிடிக்கவில்லை ..நீங்க தான் வந்து அம்மாவிடம் பேசவேண்டும்" என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு திரும்பி எதுவுமே நடக்காதது மாதிரி புத்தகத்தை எடுத்து வழமைக்கு மாறாக படிப்பது போல பாசாங்கு காட்ட தொடங்கினேன். நான் கஷ்டபட்டு படிக்கிறேன் என்று நினைத்து ,அம்மா விரததோடையும் தேநீர் ஊற்றிவந்து கொடுத்துவிட்டு ,தலையை தடவி நல்லா படியடா என்று சொல்லிவிட்டு போகும்போது எனக்கு உள்ளுக்குள்ளே அழுகை தான் வந்தது. எனக்கென்ன.. என்னுடைய நிலைமையில் நீங்கள் இருந்திருந்தால் உங்களுக்கும் வந்திருக்கும் தானே.?? அன்று மாலையே அவர்கள் வந்தார்கள். அதுக்கு அப்புறம் நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே. நான் செய்தது நியாயம் தானே உறவுகளே..?? இப்போ அந்த அண்ணைமாருடன் உங்கள் விடிவுக்காக போகிறேன்.நாளை நிச்சயம் விடியும் என்ற நம்பிக்கையுடன் போகிறேன். எனக்கு தெரியும் நீங்கள் எனக்காக மனசுக்குள்ளே பிரார்த்திப்பீர்கள் என்று..ஒண்டுக்கும் யோசிக்காதீங்க நாங்கள் எங்கள் உயிரை கொடுத்தாவது உங்களுக்கு விடிவு பெற்று தருவோம். என்ன.. என்ர அம்மா மாதிரி அழுது கொண்டிருகிறீங்கள்.. அழாதீங்க.. நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக. போய்வரட்டுமா என் உடன்பிறப்புகளே..! பாகம் மூன்று இங்கே அழுத்துங்கள் (விடியல் தொடரும்)
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் ஒன்று சஷ்டியை நோக்க சரவணபவனார்.. சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்.. கந்த சஷ்டி கவசத்தை இருந்த சூரிய மின்கலத்தில் ஓடவிட்டபடி ராணி அம்மா, மகன் நேசனை தட்டி எழுப்பினாள். இன்று தான் அவன் அந்த வீட்டில் தூங்கும் கடைசி நாள் என்று கூட தெரியாமல். "தம்பி இண்டைக்கு பாரணை.. அவர்கள் வருவார்கள். நீ நேரத்துக்கு எழும்பி சாப்பிட்டுவிட்டு ஆயத்தமாக இரு". ராணி அம்மாவின் குரல் நேசனுக்கு விட்டு விட்டு தான் கேட்டது. இருந்தாலும் அவர்கள் வருவார்கள் என்பது அவனை முழிக்க வைத்துவிட்டது. யார் அவர்கள்..?? காலத்தின் தேவை கருதியும் தாய் மண்ணை காக்க வேண்டிய கட்டாயத்தின் நிமித்தமும், நாட்டுக்காக வீட்டுக்கு ஒருவரை இணைத்து கொண்டிருந்த காலம் அது. சென்ற வாரம் அவர்கள் வந்திருந்த போது.. "தம்பிமார்..எனக்கு தெரியும் எண்ட பிள்ளை கட்டாயம் இந்த நாட்டுக்காக போராட வேண்டும் என்று. என்றாலும் இப்போ கந்த சஷ்டி. ஒருவாரம் கழிச்சு வாரீங்களா பாரணை முடிச்சு அனுப்பி வைக்கிறேன்" என்றாள் அந்த வீரதாய். அதற்கு மதிப்பளித்து தான் இன்று அவர்கள் வாறதாக இருக்கிறார்கள். இரவு முழுவதும் வீட்டில் ஒரே அழுகை. அவனது இரு தங்கைகளும், "அண்ணா உனக்காக நாங்கள் போகிறோம் நீதான் ஒரே ஆம்பிளை அம்மா அப்பாவை நீதான் பார்க்கணும்" என்றும் அண்ணாவோ, "இல்லை தங்கச்சிகளே சண்டை என்கிறது அவ்வளவு சுலபம் இல்லை, உங்களை அங்கே கஷ்டப்படவிட்டிட்டு நான் இங்கே சந்தோசமாக இருக்க முடியாது" என்று மாறி மாறி பாசமழைகளும் அழுகைகளும் தான் மிச்சம். ராணி அம்மாவுக்கோ இனி மகனுக்கு நல்ல சாப்பாடுகள் கிடைக்குமோ... ச்சே இந்த கந்த சஷ்டியாலே மகனுக்கு பிடிச்ச எந்த மச்ச கறிகளையும் சமைச்சு கொடுக்காமல் அனுபிறோமே என்ற கவலை. காலையில் அவர்கள் வந்திருந்தார்கள். "தம்பிமாரே இருங்கள் அவன் வெளிகிடுறான்.. நீங்கள் சாப்பிடுறீங்களா ?" என்று அன்பாக கேட்டாள் அந்த அம்மா. கொடிய போருக்கு அழைத்து செல்ல வந்திருக்கும் அவர்களையும் அன்பாக உபசரிக்கும் அந்த தமிழ் தாயின் அன்பு யாருக்கு தான் வரும். அந்த அம்மாவின் அன்புக்காக அவர்கள் சாப்பிட்டார்கள். அவன் அம்மா அப்பா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டான் ..தங்கச்சிமாரை கட்டி அணைத்து அறிவுரைகள் கூறிக்கொண்டான். அவன் போக போவது தெரியாமல் வாலை ஆட்டி கொண்டிருந்த நாயை கூட ஒரு முறை கொஞ்சி கொண்டான். "தம்பி கவனமாக இருந்து கொள். ஒழுங்காக சாப்பிடு..உனக்காக தான் நாங்கள் இங்கே உயிரோட இருக்கிறம் என்றதை எப்பவும் மறக்காதே"..என்று தாயும் தந்தையும் மாறி மாறி கட்டி அணைத்து அழுதபடியே வழி அனுப்ப அவன் அவர்களோடு புறப்பட்டான் மீளாத பயணத்துக்காக. வாசல் வரை நடக்கும் போது அவர்களிடம் அம்மா கேட்டாள்." தம்பீ..நான் கேட்க கூடாது தான் இருந்தாலும் பெத்த மனசு தம்பி ... தம்பி இவன் வீட்டிலேயே செல்லமாக வளர்ந்த பிள்ளை ..ஒரே ஆம்பிளை பிள்ளை ..இவன் வளர்ந்து தான் ஏலாத எங்களையும் தங்கச்சிமாரையும் பார்ப்பான் என்று பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை ..சண்டைக்கு அனுப்பாமல் பார்பீங்களா..??" அந்த அம்மா தந்த சோறு இன்னும் வயிற்றுக்குள் தான் இருந்தது அவர்களுக்கு. இந்த கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் அவர்கள் பட்ட தவிப்பை உணர்ந்த அம்மா.. "பரவாயில்லை தம்பி ..போயிட்டுவங்கோ" என்று அனுப்பி வைத்தாள். அவன் வளர்த்த நாயில் இருந்து அந்த வீட்டில் இருந்த அனைத்து ஜீவராசிகளுமே படலை மட்டும் வந்திருந்தன..திரும்பி வராத அவனை வழியனுப்ப.. (தொடரும்) பாகம் இரண்டு இங்கே அழுத்துங்கள்