Search the Community
Showing results for tags 'கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை'.
-
ஊரில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும்,…..நெடுந்தீவின் அடிப்படை அடையாளங்கள் இன்னும் மாறாது அப்படியேயிருந்தன ! கற்களால் அடுக்குப்பட்ட பயிர் வேலிகள், எவரோ தாட்டு விட்டுப் கிழங்கு பிடுங்க மறந்து போன பனம் பாத்திகளிலிருந்து முளைத்த பனங்கூடல்கள், மாட்டு வண்டித் தடங்கள் என்பன இன்னும் இருந்தன! முள்ளிவாய்க்காலில் மரணித்துப் போனவர்களில், விகிதாசார அடிப்படையில் பார்த்தால், நெடுந்தீவு தான் அதிக விலை கொடுத்தாக இருக்கும் என்பது சந்திரனின் அனுமானமாக இருந்தது! ஸ்ரீ மாவோ அம்மையார் கொண்டு வந்த மரவள்ளி வளர்க்கும் திட்டத்தினாலும் , முத்தையன்கட்டுப் பிரதேசத்தில் இலவசக் காணி பகிர்ந்தளிப்புத் திட்டத்தினாலும் கவரப்பட்டு அங்கு சென்றவர்களில் பலரும் , அவர்களது சந்ததியினரில் சிலரும் அவர்களுக்குள் அடங்குவர்! குறிப்பாக, இசைப்பிரியா போன்றவர்களின் இழப்பு அவனை மிகவும் பாதித்திருந்தது! தம்பி, இஞ்சையோ நிக்கிறியள் என்று கேட்ட படியே, குறிகாட்டுவானில் வள்ளத்துக்கு வரும்படி கூப்பிட்ட அந்தப் பெரியவர் அருகில் வந்தார்! வந்தவர், எங்க தங்கப் போறீங்கள் தம்பி என்று கேட்டார் ! மகா வித்தியாலயத்துக்குப் பக்கத்தில , எங்கையாவது ஒரு ஹோட்டல்ல நிக்கலாம் எண்டு யோசிக்கிறன்! தம்பி, இப்ப வெளிநாட்டுக் காசு புழக்கத்துக்கு வந்த பிறகு எல்லாம் அவையின்ர ஹோட்டல்களாய்த் தான் இருக்குது! தம்பிக்குக் கனநாள் நிக்கிற பிளானோ? அந்தப் பெரியவரது பேச்சின் சாராம்சம் அவனுக்குள் ஓடி வெளிப்பதற்கு அவனுக்குக் கொஞ்சக் கால அவகாசம் தேவைப் பட்டது! அவையின்ர என்றால்…...ம்ம்ம்….இன்னும் நெடுந்தீவு மாறவேயில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்! அது சரி…..இவருக்கு எப்படித் தெரிந்தது , நான் அவையின்ர ஆக்களில் ஒருவன் இல்லையென்று…! அவன் யோசிக்கும் போதே பெரியவர் தொடர்ந்தார்! தம்பி, நெழுவினிப் பிள்ளையார் கோவிலடிக்குப் பக்கத்தில ஒரு வீடு இருக்குது! வீட்டுக்காரர் எல்லாரும் வெளிநாட்டிலை தான் இருக்கினம்! இப்ப வீடு சும்மாதான் கிடக்குது! உங்களுக்கு விருப்பமெண்டால் தாராளமாக அங்கு நிற்கலாம்! வேணுமெண்டால் என்னிட்ட ஒரு மோட்டச் சைக்கிளும் இருக்குது! உங்களுக்குத் தேவையான இடத்தில நான் கொண்டுபோய் இறக்கி விடுவன் என்றும் கூறினார்! சரி பெரியவர், எவ்வளவு காசு எண்டும் பேசுவமே என்று சந்திரன் சொல்லவும், என்னடா தம்பி….மீன் கரைஞ்சா எங்க போகப்போகுது….ஆணத்துக்கை தானே கிடக்கப் போகுது! நீங்களாய்ப் பாத்துத் தாறதைத் தாங்கோவன் எண்டு சொல்லவும் சந்திரனுக்கு கொஞ்சம் உதறலெடுக்கத் தொடங்கியது! ஒரு வேளை பெரியவர் தன்னைப் பற்றி ஏதாவது மணந்து கிணந்து இருப்பாரோ? இருந்தாலும் குறுக்கால வந்த தெய்வத்தையும் திருப்பி அனுப்ப மனம் வரவில்லை! பெரியவரே, நான் நீங்கள் சொல்லுற இடத்தில நிக்கிறன்! ஆனால் ஒரு கொண்டிசன்! எனக்கு உங்கட பழைய சைக்கிள் ஏதாவது இருந்தால் அதைத் தந்தால் போதும்! சாப்பாட்டுக்கு கிட்டடியில கடையள் ஏதாவது இருக்கும் தானே...என்று கேட்கவும்….என்ன தம்பி நீர், நாங்கள் என்னத்துக்கு இருக்கிறம்? நீர் என்ன விருப்பம் எண்டு சொல்லும் , நான் செய்விச்சுத் தாறன் எண்டு சொல்ல சந்திரனும் சம்மதித்தான்! இருந்தாலும் , பெரியவரை ஒரு முறை ரெஸ்ற் பண்ணிப் பார்க்கவேணும் என்று நினைத்தவனாக, ஐயா….ஒருக்கால் ஈச்சங்காட்டுப் பக்கம் போகவேணும், கொண்டு போய் விடுவீங்களோ எண்டு கேட்கவும் , பெரியவர் திடுக்கிட்டவர் போலச் சந்திரனைப் பார்த்தார்! தம்பிக்கு இடங்கள் தெரியுமோ என்று மிகவும் ஆச்சரியமாகக் கேட்கவும்….இவனுக்கு கொஞ்சம் மனதில் நிம்மதி வந்தது! இல்லை ஐயா, எனது நண்பனொருவன் தன்னுடைய பழைய வீடடைப் பார்த்து வரும்படி சொல்லியிருந்தான்! ஈச்சங்காட்டில எவடம்? விளாத்தி மரத்துக்கு கிட்டவாக! சரி, எதுக்கும் இதை வைச்சிருங்கோ எண்டு சொல்லி கொஞ்சக் காசை அவரிடம் கொடுக்க, அவர் என்ன தம்பி இப்பவே எண்டு சொல்லிக் சிரிக்கப் பெரியவருக்கு கடவாய்ப்பற்கள் ஒன்று கூட இல்லை என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது! உடனேயே அங்கே நின்ற பெடியன் ஒருவனைக் கூப்பிட்டுத் தம்பி இந்த ஐயாவைக் கொண்டு போய் ஈச்சங்காட்டிலே இறக்கி விடு என்று கூற…..அவனும் பின்னால் திரும்பிப் பார்த்து விட்டுத் தான் தான் அந்த ஐயா என்று உறுதி படுத்திய பின்னர் மோட்டார் சைக்கிளில் லாவகமாக ஏறி அமர்ந்து கொண்டான்! ஈச்சங்காட்டில் ஒரு ஈச்ச மரங்களையும் இப்போது காணவில்லை! விளாத்தி மரத்தடியில் வீடு இருந்த இடம் வெறிச்சோடிப்போய்க் கிடந்தது! அந்த விளாத்தி மரம் மட்டும் இன்னும் அப்படியே நின்றது! தனது மூதாதைகளின் மூச்சுக்காற்றை இந்த மரமும் சுவாசித்திருக்கும் என்ற நினைவே...அவனுக்கு இதமாக இருந்தது! இங்கு தான் இந்தக் கதையின் கதாநாயகியை அடிக்கடி சந்திரன் இரகசியமாகச் சந்திப்பதுண்டு! இவன் கதைகள் சொல்லும்போது விழிகளை அகல விரித்தபடியே...அவள் கேட்டுக் கொண்டிருப்பாள்! இந்த விளாம்பழங்களை யானை எப்படிச் சாப்பிடும் எண்டு உனக்குத் தெரியுமா? இல்லை என்று அவள் தலையாட்ட ‘ஒரு சின்ன ஓட்டை மட்டும் போட்டுவிட்டு, அதன் உள்ளடையை அப்படியே உறிஞ்சி எடுத்து விடும்! அப்போ விதைகளை என்ன செய்யும்? அதை அப்படியே பழத்துக்குள் விட்டு விடும்! அவள் , அது உனக்கெப்படித் தெரியும்? சாப்பிட்ட பழத்தை யானை ஒருமுறை குலுக்கிப் பார்க்கும்! அப்போது அருகில் நிற்பவர்களுக்குக் கிலுக்கட்டி கிலுக்குவது போல ஒரு சத்தம் கேட்கும்! இதிலிருந்து உனக்கு என்ன தெரிகின்றது? அவளின் பதில் உடனடியாகவே வந்தது! யானை தனது அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு….விதைகளைச் சாப்பிடாமல் அப்படியே விட்டு விடுகிறது…! அடுத்து வரும் மழைக்கு விளாம்பழத்தின் கோது உடைய விளாத்தி மரங்கள் முளைக்கும்! இப்படியான பதில்கள் தான்...சந்திரனுக்கு அவளிடம் ஒரு விதமான ஈர்ப்பை உருவாக்கியிருக்க வேண்டும்! அவளை முதலில் சந்தித்த சம்பவம் இன்னும் தெளிவாகவே அவனது நினைவில் இருந்தது! வீட்டில் விருந்தினர்கள் வந்திறங்கியிருந்தார்கள்! பொழுது பின்னேரமாகி விட்டிருந்தது! சந்திரனின் தாயார் சந்திரனிடம் கொஞ்சம் காசைக் கொடுத்துத் தம்பி, கடற்கரைக்குப் போய் மீன் ஏதாவது வாங்கிக் கொண்டு வா என்று கூற….அம்மா உங்களுக்கென்ன விசரே, இந்த நேரத்தில கடற்கரையிலே ஒரு வள்ளமும் வராது என்று பின்னடிக்க அம்மாவும், ஆராவது வீச்சு வலைக்காரர் நிப்பாங்கள், போய்ப்பார் என்று சொல்லத் தயக்கத்துடன் கடலுக்குப் போனவனுக்கு ஆச்சரியமாக இருந்தது! அவன் அம்மா சொன்ன மாதிரியே ஒரு வீச்சு வலைக்காரன் நின்று கொண்டிருந்தான்! அவனது இடுப்பில் தொங்கிய பறியும் காற்றில் அசையவில்லை! ம்ம்ம்...பறிக்குள்ள என்னவோ பாரமான சாமான் என்னவோ கிடக்குது! பிரச்சனை என்னவென்றால், அவன் கரைக்கு வரும் வரை பார்த்துக் கொண்டிருந்தால், கரையில் கன சனம் நிண்டு...மீனுக்கு விலையைக் கூட்டிப் போடும்! கடல் கொஞ்சம் வத்தாக இருந்ததால்...மீன் காரனிடம் நடந்தே போக முடிவு செய்தான்! மீன் காரனுக்கு கிட்டப் போனதும் அவனது அதிஸ்ட்டத்தை நினைத்து...தனது முதுகில் தட்டித் தன்னைத் தானே பாராட்டியும் கொண்டான்! ஆம், அந்த மீன் பறிக்குள் ஒரு பால் சுறாவும் இருந்தது! பால் சுறா, அதுவும் ஆண் சுறா எல்லாருக்கும் பிடிக்குமென அவனுக்குத் தெரியும்! பின்னேரமானதால் ….குழல் புட்டும் அவித்து சுறா வறையும் வைக்க அந்த மாதிரி இருக்கும்! விலையும் சரியாக இருக்கவே...வாலைப் பிடித்த படி...அந்தப் பால் சுறாவைத்...தண்ணீருக்குள் விட்ட படி இழுத்துக் கொண்டு கரைக்கு நடந்து வந்தான்! அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன! ,முதலாவது சுறா பழுது படாமல் இருக்கும்! இரண்டாவது…..தமிழர்களுக்கே ,,தனித்துவமான குணமான...ஆற்றையும் கண்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கமும் தான்! கரைக்கு ஒரு இருபதடி தூரம் கூட இருக்காது! ‘கிளிக்’ என்றொரு சத்தம் கேட்டது! தண்ணீரில் ஒரு வட்டம் போட்டுவிட்டுப் பால் சுறா, அவைனப் பார்த்துக் கண்ணை ஒரு முறை அடித்து நன்றி சொல்லி விட்டுப் போயே விட்டது! இப்போது அவனிடம் காசுமில்லை! கறிக்குச் சுறாவுமில்லை! கண்ணீரும் கட்டுப்படுத்த முடியாமல்…...வரத் தொடங்கியது! அப்போது ‘கிளுக்” என்று யாரோ கரையில் நின்று சிரிப்பதும் தெளிவாகச் சந்திரனுக்குக் கேட்டது! அடுத்த பகுதியில் தொடரும்….!
-
காலம் தான் எவ்வளவு விரைவாக ஒடி விடுகின்றது....? இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை...! அந்த நாட்களில் எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன? மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம் சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன் உள்ளூர் மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும்! ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள்! அரை வாசி வள்ளங்கள் கடலில் நங்கூரமிட்டிருக்க, மிச்சக் கட்டு மரங்கள் கரைகளில் கிடந்தது வெயில் காயும்! கிடுகு பின்னுபவனிலிருந்து...கள்ளிறக்குபவன் வரைக்கும் முகமெல்லாம் புன்னகை நிறைந்திருக்கும்! சுருக்கமாகச் சொல்லப் போனால்....அந்தக் காலப் பகுதியில் புங்குடுதீவின் பொருளாதாரம்....அதி உச்சத்துக்கு உயர்ந்து போயிருக்கும்! சந்திரனின் மனதிலிருந்து ஒரு பெரு மூச்சு அதிக வெப்பத்தைச் சுமந்தபடி வெளியில் போனது! நீண்ட நாட்களின் பின்னர் நெடுந்தீவு போகும் வள்ளத்திற்காகக் குறிகாட்டுவான் கரையில் அவன் காத்திருக்கிறான்! இராஜேஸ்வரி, சில்வர் ஸ்பிறெ, அலை அரசி, குமுதினி, எலாறா என்று வள்ளங்களின் பெயர்கள் நினைவில் வந்து போயின! குமுதினியின் நினைவு வந்த போது...கண்களில் இரண்டு துளிகள் கண்ணீர்த் துளிகள் தோன்றிக் கீழே விழுவதா என்று யோசித்தன!! அவனுக்குச் சிறுவயதில் படிப்பித்த அந்த ஆசிரியையின் முகமும் ஒரு கணம் தோன்றி மறைந்தது! தம்பி...என்ன கனவு கொண்டிருக்கிறீரோ என்று ஒரு பெரியவரின் குரல் அவனை இவ்வுலகத்துக்குக் கொண்டு வந்தது! வள்ளம் வெளிக்கிடப் போகுது...கெதியா ஓடி வாரும்! அந்தக் காலத்தில்...வள்ளத்தின் கொண்டக்ரரிலிருந்து வள்ளத்தின் ஓட்டுனர் வரை, எல்லாரது பெயரும் அவனுக்கு அத்து படி..! இப்போது அவனை ஒருவருக்கும் தெரியாது..! ஆரோ வெளிநாட்டுக்காரர் போல கிடக்குது என்று யாரோ ஒருவர் சொல்லுவது கேட்டது! சில வருடங்கள் அவனை ஒரு வெளிநாட்டுக் காரனாக்கி விட்டதை நினைக்கக் காலம் எவ்வளவு வலிமையானது என தனக்குள் நினத்துக் கொண்டான்! வள்ளம் புறப்பட்ட போது ...தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக...தனது கறுப்புக் கண்ணாடியை ஒரு முறை துடைத்து விட்டுப் போட்டுக் கொண்டான்! நயினாதீவு நாக பூஷணி அம்மனின் கோபுரம் கிட்டக் கிட்ட நகர்ந்து வந்தது! அம்மன் கோபுரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்...இடையில் நகர்ந்து போய் விட்ட வருடங்களை நினைத்துக் கொள்வான்! ஒவ்வொரு தடவையும்...அந்தக் கோபுரம் உரு மாறிக் கொண்டேயிருக்கும்! நயினாதீவு மக்களின் பொருளாதர நிலையையும். அவர்கள் அப்போதைய மனோ நிலையையும் அந்தக் கோபுரம் பிரதி பலிப்பதாக, அவன் நினைத்துக் கொள்வதுண்டு! தேர்த் திருவிழா பார்க்க வந்து அனியாயமாகக் கடலில் சங்கமித்த அந்த இருபத்தியொரு பேரும் ஒரு முறை வந்து நினைவில் போனார்கள்! வள்ளம் எழாத்துப் பிரிவைத் தாண்டும் போது..தாலாட்டும் அந்தத் தாலாட்டு அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான ஒன்று! இன்றும் அப்படித் தான்! ஒரு மெல்லிய தூக்கம் கூட அப்போது எட்டிப்பார்த்த்து! கண்களை மூடிய படியே சிந்தனையில் மெதுவாக மூழ்கத் தொடங்கினான்! கொஞ்சம் தங்களைச் சிலாகித்துக் கொண்ட ஊரவர்கள் சிலர், வள்ளத்தின் மேல் தளத்திலிருந்து '304' விளையாடத் தொடங்க, அவர்களுக்கிடையே கதையும் களை கட்டத் தொடங்கியது! முதலாமவர் ...இந்த வள்ளங்களுக்கு ஏன் இந்த அறுவாங்கள் பொம்பிளையளின்ர பேரை மட்டும் வைச்சுத் துலைக்கிறாங்க்ளோ தெரியாது! இரண்டாமவர்.... அதுக்கு இப்ப என்ன பிரச்சனை...சூறாவளியளுக்கும் தானே...அவையளின்ர பேரை வைக்கிறாங்கள்! முதலாமவர்.....அது பரவாயில்லை...வள்ளங்களுக்குப் பொம்பிளைப் பெயர் இனிமேல் வைக்கக் கூடாது எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும்! இரண்டாமவர்....உம்மட மனுசி உம்மை விட்டிட்டு ஓடிப் போனத்துக்காக இப்பிடியே..! முதலாமவர்.. உனக்கு விசயம் விளங்கேல்லைப் போல கிடக்கு...நீ எப்பவுமே ரியூப் லயிற் தானே! இந்தப் பேருகளை வைக்கிறதால மாததத்திலை இரண்டு மூண்டு நாளைக்கு வள்ளம் ஓடாமையெல்லோ கிடக்குது! வள்ளத்தில் உள்ளேயிருந்த பலர் சிரித்தார்கள்....சில பெண் பயணிகள் மெதுவாக நெளிந்தார்கள். அவர்களில் ஒருவர்...அப்புமாரே...கதையை மாத்துங்கோ....உங்கட எலாறா மட்டும் பெரிசாக் கிழிச்சு விட்டுதாக்கும்! இந்தக் கதைகள் பொழுது போவதற்காகவே கதைக்கப் படுகின்றன என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், சில வேளைகளில்....அடிபிடியிலும் முடிந்த நாட் களும் இல்லாமல் இல்லை! இடையில் கொஞ்சம் அவன் அயர்ந்து போயிருக்க வேண்டும்! தூரத்தில்...பனை மரங்கள் பச்சை வரிசையாகத் தெரியத் தொடங்கி விட்டன! ஊரைக் கண்ட புழுகத்தில்...கறுப்புக் கண்ணாடியைக் கொஞ்சம் கழற்றினான்! அப்போது ஒரு இளம் பெண் சந்திரனைப் பார்த்துச் சிரிக்க...அவனும் மரியாதைக்காகப் பதிலுக்குச் சிரித்து வைத்தான்! இப்போதெல்லாம் அவனுக்குள், அவனையறியாமலே ஒரு விதமான பயம் வந்து குந்திக் கொண்டது! அவனது சாதகக் குறிப்பை எழுதிய பண்டிதர் ஒருவர்....சாதகன் பிறக்கும் போது கன்னி ஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெற்று நின்ற காரணத்தால்...சாதகன் குளிர்ந்த கண்களை உடையவனாகவும், பர தார மனம் கொண்டவனாகவும் இருப்பான் என்று எழுதியிருந்தார்! பர தார மனம் என்பதன் பொருள் அவனுக்கு விளங்கா விட்டாலும், ஏதோ பாரதூரமான வார்த்தை என்ற அளவில் அவனுக்குப் புரிந்திருந்தது! சாதகங்களை அவன் நம்புவதில்லை எனினும்....மனதில் ஒரு விதமான பயம் நிரந்தரமாகவே குடி கொண்டு விட்டது! தனது உணர்ச்சிகளை வெளியே காட்டாது மறைக்கும் எண்ணத்துடன்...கறுத்தக் கண்ணாடியை எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டான்! மாவலி இறங்கு துறையில், கால் வைத்தவுடன்...உடம்பெல்லாம் ஒரு விதமான புத்துணர்ச்சி ஒன்று தோன்றியது போல இருந்தது! அருகிலிருந்த குமுதினிப் படகில் இறந்தவர்களின் நினைவுக் கல்லைக் கண்டதும்...அந்த உணர்ச்சி வந்த மாதிரியே போயும் விட்டது..! அதிலிருந்த பெயர்களை ஒரு முறை வாசித்துப் பார்த்தான்! பல பெயர்கள் மிகவும் பரிச்சயமாக இருந்தன! அந்த ஆசிரியை, மீண்டுமொரு முறை நினைவில் வந்து போனார்! சங்கக்கடைக்குப் பக்கத்திலிருந்த பொன்னம்மா ஆச்சியின் கடையை இப்போது காணவேயில்லை! அந்த நாட்களில் பணம் எதுவும் வாங்காமலே, யானை மார்க் ஒரேன்ஜ் பார்லியை அந்த ஆச்சி அன்புடன் உடைத்துத் தரும்போது, வள்ளத்தில் வந்த களைப்பு உடனேயே பறந்து போய் விடுவது நினைவுக்கு வந்தது! அடுத்த பகுதியில் முடியும்…!
-
காசும் போச்சுது….கையிலையிருந்த சுறாவும் போச்சுது…! கண்களில் கண்ணீர் முட்டிய படியே...கரையிலிருந்து சிரிப்பு வந்த திசையை நோக்கிச் சந்திரன் திரும்பவே ...அந்தச் சிரிப்புக்குரியவள் அங்கே நின்று கொண்டிருந்தாள்! மீனவர்களுக்கேயுரிய கொஞ்சம் பரட்டையான தலை மயிர்! நீல நிறம் கொஞ்சம் கலந்த கண்கள்! வெளிர் நிறம்! அந்தக் கண்களில் ஒரு குறும்பு..! வீட்டை விருந்தாளிகள் வந்திருக்கினம் போல கிடக்குது! வெறும் கையோட போகப் போறீங்களோ? விருந்தினர் வீட்டுக்கு வந்தது அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று சந்திரன் ஆச்சரியப்பட வேண்டியே இருக்கவில்லை! நெடுந்தீவில் அந்தக் காலத்திலிருந்தது ஒரேயொரு இ.போ.ச பஸ் மட்டும் தான், மாவலித் துறைமுகத்திலிருந்து குருக்கள் மடம் வரைக்கும் ஓடுவதுண்டு! யாராவது தூரத்தில் ஓடி வருவதைக் கண்டால், அவர் பஸ்ஸுக்கு வரும் வரைக்கும் அந்த பஸ் காத்திருக்கும்! அதே போலவே குறிகாட்டுவான் போகும் வள்ளமும் பஸ்ஸைக் காணும் வரை காத்திருக்கும்! அதனால் ஊருக்குப் புதிதாக யார் வந்தாலும் அது ஊருக்கே தெரிந்து விடுவதில் ஆச்சரியம் எதுவும் இருப்பதில்லை! சரி...இப்ப என்ன செய்யப் போறீங்கள் என்று கூறியவள் கடலுக்குள் மெல்ல இறங்கினாள்! தண்ணீர் இடுப்பளவில் வரும் வரைக்கும் நடந்து போனவள்...திடீரெனத் தண்ணீருக்குள் புதைந்து போனாள்! செத்தல் தேங்காய்கள் இரண்டைக் கட்டிக்கொண்டு கரையில் நீந்துவதுடன் அவனது நீந்தல் அறிவு மட்டுப் பட்டிருந்தது! கண்களை அகல விரித்த படி ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில்...அவள் மீண்டும் தண்ணீருக்கு மேலே வருவது தெரிந்தது! பின்னர் நடந்து கரைக்கு வந்தவளின் கைகளில் ஒரு பெரிய கயல் மீன் இருந்தது! கயல் மீனின் பிடரிப்பக்கம் கறுப்பாக இருக்குமென்ற வரையில்..அவனுக்குத் தெரிந்திருந்தது! எதுவும் பேசாமலே...கண்களில் மட்டும் நன்றியைக் காட்டிய படியே மீனை வாங்கிக் கொண்டாள்! கோடாலியைத் தொலைத்து விட்டுக் கவலையுடன் குளத்துக் கரையில் குந்திக்கு கொண்டிருந்த குடியானவன் முன்பு தோன்றிய தேவதையின் கதையின் நினைவு வந்தது! எவரோ போட்டு வைத்த களங்கண்டிப் பட்டியிலிருந்து...அந்த மீனை அவள் கள்ளமாகக் களட்டிக் கொண்டு வந்திருக்கிறாள் என்று அப்போது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! அதன் பின்னர் அவளைக் காணும் போதெல்லாம் ...அவனுக்குள் ஒரு எதிர்பாராத உணர்வு ஒன்று தோன்றுவது உண்டு! எல்லோரும் அவளைப் பிலோ என்று கூப்பிடுவதால்..அவனும் அவ்வாறே அவளைக் கூப்பிடுவான்! அடிக்கடி ‘பிலோவைக் ’ காணும் சந்தர்ப்பங்களை வேண்டுமென்றே அவன் உருவாக்கிக் கொள்வான்! அப்படியான சந்திப்பு ஒன்றின் போது உனது கண்கள் ஏன் நீலமாக இருக்கின்றன எனச் சந்திரன் கேட்கவே, உண்மையிலேயே நீங்கள் ஒரு அப்பாவி தான் என்று கூறியவள் ஒரு நாட்டுப் பாடலொன்றைப் பதிலாகத் தந்தாள்! என்ன பிடிக்கிறாய் அந்தோனி எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே பொத்திப் பொத்திப் புடி அந்தோனி பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே அப்போது அவனுக்கு...அந்தப் பாடலின் கருத்துப் புரியவேயில்லை! அது புரியும் காலத்தில் அவள் அருகில் இருக்கவில்லை!! ஒரு நாள் அருகிலிருந்த தேவாலயத்தில் அவள் பிரார்த்தனையில் இருந்தாள்! சந்திரனும் கண்களை மூடிப் பிரார்த்தித்தான்! தேவாலயங்களில் எப்போதுமே ஒரு அமைதி குடி கொண்டபடி இருப்பதால், அது ஒரு பொதுவான சந்திப்பிடமாக அமைந்தது! கடவுளிடம் என்ன வேண்டிக்கொண்டாய் என அவள் கேட்டாள்! வலசைப் பறவைகளைப் போல எனக்கு இறக்கைகள் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்! நீ என்ன கேட்டாய்? மீனைப் போல...பூவல்கள் வேண்டுமென்று கேட்டிருப்பாய் என்றான்! இல்லையே...நீ நல்லாயிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்! நீ நல்லாயிருந்தால் தானே...நான் நல்லாயிருக்க முடியும் என்று அவள் கூறிய போது தான் அவர்களது நட்பு எவ்வளவு தூரம் ஆழமாகி விட்டது என்று அவனுக்குப் புரிந்தது! அதெல்லாம் சரி….எதற்காக வலசைப் பறவைகளைப் போல நீ வலசை போக வேண்டும்? அந்தப் பறவைகள் வாழுகின்ற இடத்தில்...இரவுகள் மிகவும் நீளமானவை! பகல் பொழுதுகள் மிகவும் குறைந்தவை! பனிக்காலம் அதிகம்! கோடை காலம் குறைவு! அதனால் அவை வலசை போக வேண்டியது காலத்தின் கட்டாயம்! வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் பறவைகள்…..தென்னிந்தியாவின் வேடந்தாங்கல் சரணாலயம் நிரம்பிய பின்னர்...அவற்றின் கண்களில் அடுத்த தெரிவு நெடுந்தீவு தான்! அதனால் அங்கு வாழும் மக்களின் பேச்சு வழக்கில்..வலசை போகும் பறவைகள் உதாரணமாக அடிக்கடி வருவதுண்டு! தம்பி...தோசைக்குப் போட்டிருக்கிறன்...கொண்டு வரட்டே? அந்தப் பெரியவரின் குரல் அவனது சிந்தனையை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தது! சரி...ஐயா ..என்று கூறியவன் பிலோமினா அன்று கூறியது எவ்வளவு உண்மை என்று சிந்தித்தான்! நான் எதற்காக வெளி நாடு போனேன்? இன்று வரையில் அந்தக் கேள்விக்கான பதில் அவனுக்கு கிடைக்கவேயில்லை! எல்லோரும் போகின்றார்களே என்ற ஒரு மந்தை மனநிலையில் தான் சந்திரன் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்! தோசையைக் சாப்பிட்டு விட்டுச் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கியவன் கொஞ்ச நேரம் காற்றை நன்றாக உள்ளிளுத்து..வெளியே விட்ட படியே சைக்கிளை மிதித்தான்! நீண்ட நாட்களாக ஓடாததால்...கிட்டத் தட்ட ஒரு நீராவி எஞ்சினைப் போலவே, அவனது மூச்சுச் சத்தம் அவனுக்குக் கேட்டது! கொஞ்சம் களைத்துப் போனவன் கண்களில் ஒரு பெட்டிக்கடை தெரிந்தது! சைக்கிளை நிறுத்தி விட்டுக் கடையில் நின்ற சிறுமியிடம் ஒரு சோடா வாங்கிக் குடித்தவன் சிறுமியிடம் காசைக் கொடுக்கக் காசை வாங்கிய சிறுமி மெத்தப் பெரிய உபகாரம் என்றாள்! வெள்ளைக்காரர் கடைகளில் காசு கொடுக்கும் போது அனேகமாகத் தாங்க் யூ என்று சொல்லுவார்கள்! அதைத் தான் அந்தச் சிறுமியும் சொல்லுகின்றாள்! இந்த வழக்கம் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்திலும் இருந்திருக்குமா? இப்போதெல்லாம் சாமான் ஏதாவது வாங்கினால், ஒரு இடமும் நன்றி கூடச் சொல்வதில்லையே! தொலைந்து போகின்ற நல்ல பழக்கங்களில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான் என நினைத்துக் கொண்டான்! எங்கேயோ நிறையக் கிளைகள் விட்ட பனை மரம் ஒன்று நின்றது நினைவிலிருந்தது!! இப்போது அதனைக் காணவில்லை! மகா வித்தியாலயத்தை அண்மித்ததும் அவனது பழைய நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தன! பிலோமினாவின் வீட்டை அண்மிக்கும் போது, முன்பு கிடுகுகளினால் மேயப் பட்டிருந்த அந்த வீடு, இப்போது ஒரு சின்ன ஒட்டு வீடாக மாறியிருந்ததைக் கண்டு அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! விறாந்தையில் ஒரு வயசானவர் ஒருவர், சாய் மனைக்கதிரையில் சாய்ந்த படியே, வீரகேசரி வாசித்துக் கொண்டிருந்தார்! தூரத்தில் வரும்போதே அவரை அடையாளம் கண்டு கொண்டவன், சைக்கிளைக் கொண்டு போய்ப் பகிர் வேலியில் சாத்தி வைத்தான்! கண்ணாடியைக் கழட்டியவர் தலையை நிமிர்த்திச் சந்திரனைப் பார்த்தார்! ஆச்சரியத்துடன், தம்பி இண்டைக்குக் காலமையிலையிருந்து இந்தக் காகம் விடாமல் கத்திய படியேயிருந்தது! இண்டைக்கு யாரோ வரப் போகினம் எண்டு எனக்கு அப்பவே தெரியும் என்றவர் தனது இரு கரங்களாலும் அவனைக் கட்டிப் பிடித்துத் தழுவினார்! மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக அவர் காணப்பட்டார்! சந்திரனும் தான் கொண்டு வந்த சூட் ஒன்றை அவரிடம் கொடுக்கத் தம்பி...இதைப் போட்டுக் கொண்டு நான் எங்க போறது என்று ஆதங்கப் பட்டார்! ஏன், ஞாயிற்றுக் கிழமைகளில் சேர்ச்சுக்குப் போறதில்லையோ எண்டு கேட்க...அதெல்லாம் முந்திப் போல இல்லை மகன் என்று கூறினார்! அவர் எப்போதுமே சந்திரனை மகன் என்று தான் அழைப்பார்! இப்ப கடலுக்குப் போறதில்லையோ என்று சந்திரன் கேட்க ' இல்லையப்பன், கண்டறியாத சரள வாதம் ஒரு காலில வந்த பிறகு தண்ணிக்குள்ள கன நேரம் நிக்கேலாது! வலது கால் விரல்களில மரத்துப் போன மாதிரி ஒரு விதமான உணர்ச்சியும் இருக்காது! அந்தக் காலத்தில்..அவர் திருக்கைகளைக் கருவாட்டுக்காகக் கீறி எறியும் அழகு இப்போதும் கண் முன்னே தெரிந்தது! பருந்துகள் வானத்தில் வட்டமிட்ட படி...கடலுக்குள் வீசியெறியப் படும் திருக்கைக் குடல்களைத் தூக்கிக் கொண்டு போவதற்காக வட்டம் போட்டுப் போட்டுக் கீழே இறங்கி வருவது, ஒரு சர்வதேச விமான நிலையத்தில் அடிக்கடி விமானங்கள் வந்திறங்குவது போலவே இருப்பதால், சந்திரனும், பிலோமினாவும் அதை எப்போதும் ரசிப்பது உண்டு! அத்துடன் அவளைத் தான் கருவாட்டுக்குக் காவலாக விட்டுப் போவதால் கிடைக்கும் தனிமையையும் சந்திரன் விரும்புவதுண்டு! அங்கு வரும் மீனவர்களின் வலைகளில் சில வேளைகளில் பெரிய சிங்கி றால்கள் சிக்குவதுண்டு! அவ்வாறு கிடைப்பவகளில் பெரிதானவைகளைத் தெரிந்து பிலோவின் அப்பா அவனிடம் கொடுப்பதுமுண்டு! இதை யாழ்ப்பாணம் கொண்டு போனால் நிறையக் காசு வருமே என்று சந்திரன் சில தடவைகளில் அவரிடம் சொல்லும் போது,மகன் இதை யாழ்ப்பாணம் கொண்டு போற காசு இதன் விலையை விடக் கூடவாக இருக்கும் என்று கூறுவதுண்டு! எதுவோ ஒரு பெரிய பொருளாதாரத் தத்துவம் ஒன்றைக் கூறி விட்டது போல, அவரது முகத்தில் ஒரு சிரிப்பொன்று எப்போதும் வந்து போகும்! கருவாடு காய விடும் போது...கொஞ்சம் வெயில் ஏறியதும், கடற்கரை கொஞ்சம் வெறுமையாகத் தொடங்கும்! காய்கின்ற கருவாடுகளை காவலுக்கு நிற்கும் நாய்கள் பார்த்துக் கொள்ள சந்திரனும், பிலோமினாவும் எதிர்பார்க்கும் தனிமை கொஞ்சம் கிடைக்கும்! இன்னும் வரும்....!