Search the Community
Showing results for tags 'கற்றலிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கும் செல்வராசா செவ்வானம்'.
-
Published By: VISHNU 21 JUN, 2023 | 10:22 PM (நெவில் அன்தனி) இந்த மாணவி கொட்டிலில் வாழ்ந்துவருபவர். வீட்டுப் பாடங்களை, மீட்டல்களை வீதி விளக்கு வெளிச்சத்திலேயே நிறைவேற்றிவருகிறார். அல்லது வீட்டில் விளக்கு வெளிச்சத்தில் கற்றுவருறார். இத்தனை குறைகளுக்கு மத்தியிலும் கல்வியில் சிறந்து விளங்கும் இவர் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறையில் தங்கப் பதுமையாக வலம்வருகிறார். அண்மைக்காலமாக ஐபிஎல்லில் அசத்தியவர்கள் சிலரைப்பற்றி உள்நாட்டு ஊடகங்கள் கட்டுரைகளை வெளியிட்டுவந்த நிலையில், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து விளையாட்டுத்துறையில் அசத்திவரும் நம் நாட்டின் அதுவும் நம் இனத்தவரின் சோகக் கதையை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது பொருத்தம் என 'வீரகேசரி' ஒன்லைன்' கருதுகிறது. பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த செல்வராசா செவ்வானம் என்ற அந்த மாணவி கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் தட்டெறிதலில் தங்கப் பதக்கத்தையும் சம்மட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று வரலாறு படைத்துள்ளார். தியகம விளையாட்டரங்கில் நடைபெற்ற 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதலில் 29.46 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அத்துடன் நின்றுவிடாமல் இரண்டு தினங்கள் கழித்து சம்மட்டி எறிதல் போட்டியில் அவர் 30.76 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெள்ளிப்பதக்கத்தை வென்றெடுத்தார். தந்தையினால் கைவிடப்பட்ட போதிலும் தாயார் எஸ். உஷாநந்தினி மற்றும் நெருங்கிய உறவினர்களின் அரவணைப்பில் கல்வியிலும் விளையாட்டுத்துறையிலும் செவ்வானம் பிரகாசித்து வருகின்றமை பாராட்டத்தக்கது. செவ்வானத்தின் பெற்றோரின் சொந்த இடம் பலாலி. அங்கு அரச காணியில் வாழ்ந்துவந்த அவர்கள் யுத்தம் காரணமாக 1990இல் பொலிகண்டிக்கு இடம்பெயர்ந்தனர். பொலிகண்டியில் செவ்வானமும் அவரது இளைய சகோததரரும் பிறந்த பின்னர் பெற்றோரும் பிள்ளைகளும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் கொட்டிலில் வாழ்ந்துவந்தனர். 2007இல் பிறந்த செவ்வாணத்திற்கு 3 வயதாக இருந்தபோது அவரது தந்தை அவர்களை விட்டு சென்றதாக தயார் கவலையுடன் தெரிவித்தார். தந்தை கைவிட்ட போதிலும் கடந்த 13 வருடங்களாக வலை தெரிக்கும் தொழிலில் ஈடுபட்டு தனது அம்மா தனக்கும் இளைய சகோதரனுக்கும் குறைவைக்காமல் அன்புடனும் பரிவுடனும் வாழ வைப்பதாக செவ்வானம் கண்ணீர் சிந்தியவாறு குறிப்பிட்டார். 'வலைதெரிக்கும் தொழில்மூலம் எனக்கு மாதாந்தம் 10,000 ரூபா அல்லது 15,000 ரூபா வருமானமாக கிடைக்கிறது. இதனைக் கொண்டே நானும் எனது இரண்டு பிள்ளைகளும் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். இப்போதுதான் சமுர்தி கொடுப்பனவு கிடைக்கிறது. ஆனால், இவை அனைத்தும் எமக்கு போதவில்லை. என்ன செய்ய, பிள்ளைகளுக்காக வாழ்ந்துதானே ஆகவேண்டும்' என செவ்வானத்தின் தாயார் கவலைதோய்ந்த முகத்துடன் தெரிவித்தார். கொட்டில் வாழ்க்கை 'கொட்டிலில் வாழ்ந்துவரும் எங்களுக்கு மின்சாரம் உட்பட எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. நான், இரவு வேளையில் வீதி விளக்கு வெளிச்சத்திலேயே பாடங்களை கற்று வருகின்றேன். வீட்டுப் பாடங்களையும் பூர்த்திசெய்கின்றேன். எனது அம்மா என்னோடு பக்கத்தில் அமர்ந்தவாறு எனக்கு பாதுகாப்பாக இருப்பார். எனது மாமாவும் அம்மம்மாவும் எங்களுக்கு உறுதுணையாக இருந்துவருவது எங்களுக்கு ஆறுதலைத் தருகிறது' என 16 வயதான செவ்வானம் குறிப்பிட்டார். விளையாட்டுத்துறை விளையாட்டுத்துறையில் எப்போது ஈடுபடத் தொடங்கினீர்கள் எனக் கேட்டபோது, 'நான் 8ஆம் வகுப்பில் கற்றுக்கொண்டிருந்தபோது விளையாட்டுத்துறையில் ஈடுபட ஆரம்பித்தேன். பாடசாலை மட்டத்தில் ஓட்டப் போட்டிகள், உயரம் பாய்தல், நீளம் பாய்தல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றிவந்தேன். தேவாலயம் ஒன்றினால் நடத்தப்பட்ட வீதி ஓட்டப் போட்டி ஒன்றில் முதலிடத்தைப் பெற்று கிண்ணத்தை வென்றபோது நான் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். 'நான் எறிதல் போட்டிகளில் 2022இல் பங்குபற்ற ஆரம்பித்தேன். சக மாணவிகள் எறிதல் போட்டி பயிற்சிகளில் ஈடுபட்டத்தைப் பார்த்தபோது அதில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இயல்பாகவே என்னில் எழுந்தது. காலை வேளைகளில் எனது பாடசாலையில் ஆசிரியர் நிதர்சனிடமும் மாலை வேளைகளில் ஹாட்லி கல்லூரியில் பயிற்றுநர் வி. ஹரிஹரனிடமும் பயிற்சிபெற்றுவருகிறேன். அவர்களிடம் பெற்ற பயிற்சிகளே கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் என்னை தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வெல்லவைத்தது. ஒரு வருடத்திற்கு முன்னர் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தேன்' என்றார். சிங்கள மாணவியின் தயாள குணம் தியகமவில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் சம்மட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற செவ்வாணத்திற்கு அதே போட்டியில் 7ஆம் இடத்தைப் பெற்ற சிங்கள மாணவி ஒருவர் தனது புத்தம்புதிய சம்மட்டியை அன்பளிப்பாக செவ்வானத்திற்கு வழங்கியிருந்தார். அது குறித்து அவரிடம் கேட்டபோது, 'அந்த நிகழ்வு என்னை ஆச்சரியப்படவைத்தது என்பதைவிட அந்த மாணவியின் செயல் அன்பு, பரிவு, சகோதரத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகவும் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியாகவும் இருந்தது என்று கூறினால் மிகையாகாது. அந்த உதவியை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்' என்றார். செவ்வானம் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மட்டி எறிதல் போட்டியில் 7ஆம் இடத்தைப் பெற்ற கொட்டாவை வடக்கு தர்மபால மகா வித்தியாலய மாணவி சானுமி டில்தினி பெரேரா என்பவரே அவரது புத்தம் புதிய சம்மட்டியை செவ்வானத்திற்கு அன்பளிப்பு செய்தார். துண்டுக் கம்பிகளைப் பிணைத்து செய்யப்பட்ட சம்மட்டியைக் கொண்டே செவ்வானம் (30.76 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். ஆனால், சானுமி புதிய சம்மட்டியைக் கொண்டு 21.33 தூரத்தையே பதி|வுசெய்தார். இந்தப் போட்டி முடிந்தவுடன் தனது புதிய சம்மட்டியை செவ்வானத்திற்கு அன்பளிப்பு செய்ய விரும்புவதாக தனது தந்தையாரிடம் சானுமி கூறியபோது அவர், 'மகளே உன் விருப்பப்படி செய். உனக்கு புதிய சம்மட்டி ஒன்றை வாங்கித் தருகிறேன்' என்றாராம். அந்தத் தந்தை தெரிவித்த இன்னும் ஒரு விடயம் வடக்கு, கிழக்கில் உள்ளவர்களை நெகிழவைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 'வடக்கு, கிழக்கில் எறிதல் போட்டி நிகழ்ச்சிகளில் சாதிக்க வல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுத்தால் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பதக்கங்கள் கிடைக்கும்' என அந்தத் தந்தை குறிப்பிட்டிருந்தார். சானுமியினதும் அவரது தந்தையினதும் தயாள குணம் செவ்வானத்தின் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற உணர்வை வசதிபடைத்த தமிழர்கள் மத்தியில் தூண்டும் என 'வீரகேசரி ஒன்லைன்' நம்புகிறது. இதேவேளை, எதிர்கால இலட்சியம் குறித்து செவ்வானத்திடம் கேட்டபோது, 'கல்வியிலும் விளையாட்டுத்துறையிலும் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெறவேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு மாணவர்களை நற்பிரஜைகளாக உருவாக்க வேண்டும் என்பதே எனது இலட்சியம்' என பதிலளித்தார். இறுதியாக செவ்வானத்திடம் எதிர்காலத்தில் உயரிய நிலையை அடைய என்ன தேவைகளை எதிர்பார்க்கிறீர்கள்? எனக் கேட்டபோது, 'உண்ண உணவு, உறங்க உறைவிடம் இவைதான் கொட்டிலில் வாழ்ந்துவரும் எங்களின் முக்கிய தேவைகளாக இருக்கிறது. சுகாதார மற்றும் மின்சார வசதிகளுடன் எங்களுக்கு என்று ஒரு வீட்டை பரோபகாரிகள் அன்பளிப்பு செய்ய முன்வந்தால் வாழ்நாள் முழுவதும் நன்றியுடையவர்களாக இருப்போம்' எனக் குறிப்பிட்டார். செவ்வானத்தின் குடும்பத்திற்கு இந்தப் பேருதவியை செய்ய யார் முன் வருவார்? புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களே, கொஞ்சம் கருணை காட்டுங்களே! https://www.virakesari.lk/article/158267