Search the Community
Showing results for tags 'கிரிசாந்த்'.
-
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல் March 9, 2024 12:49 am ஒரு ஊரில், தனியார் கல்வி நிலையமொன்றில் கற்பித்துக் கொண்டிருந்த பொழுது, அங்குள்ள மாணவர்களுடன் சமூகப்பிரச்சினைகளைப் பற்றி மாதமொரு தடவையாவது உரையாடல்களைச் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். சாதி, இனம், பாலியல் துஷ்பிரயோகங்கள், மாணவர் உரிமைகள், பெண்களின் உரிமைகள், குயர் உரிமைகள் என்று பல கருக்களையும் மாதமொருமுறை உரையாடுவோம். நான் எனது பார்வைகளைச் சொன்ன பின்னர், மாணவர்கள் தங்கள் தரப்பிலிருந்து கேள்விகளையும் அனுபவங்களையும் முன் வைப்பார்கள். ஒரு நாள், ஒரு மாணவன் பெண்களின் ஆடை தொடர்பில் சிக்கல்கள் இருக்கிறது, அவர்களது ஆடையால் ஆண்களின் பாலியல் உணர்ச்சி தூண்டப்படுகிறது என்ற கருத்தை உரையாடல் ஒன்றில் முன்வைத்தார். மாணவிகள் கால் முதல் தலைமுடியின் நுனி வரை பற்றியெரியும் கோபங் கொண்டு அம்மாணவனைத் தனிப்படத் தாக்கத் தொடங்கினர். நீ தான் அப்பிடி நினைக்கிறாய், மற்றவர்கள் அப்படி நினைப்பதில்லை என்று சொன்னார்கள். ஏனைய ஆண் மாணவர்கள் மெளனம் காத்தார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாகச், சொல்லுங்கள் என்று ஆண்களைக் கேட்டேன். அவர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் பார்வைகளைச் சொல்லத் தொடங்க மாணவிகள் எதிர்நிலைக்குச் சென்று கடுமையாக எதிர்வினையாற்றினர். மாணவிகளிடம் நீங்கள் இவ்விதம் பேசினால் அவர்கள் தங்கள் தரப்பில் உள்ள குறைகளை மறைத்துக் கொண்டு தொடர்ந்தும் அத்தகைய மனநிலைகளிலேயே இருப்பார்கள். அது உங்களுக்கு வேண்டுமா? அல்லது அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வேண்டுமா? என்ற கேள்வியினால் அமைதியாகி ஆண்கள் சொல்வதைக் கேட்டார்கள். ஆண்கள் தமது பொதுப்புத்திப் பார்வைகளைச் சொல்லி முடித்ததும் பெண்களிடம் பெரிய சோர்வு உண்டாகியது. கோபம் அடங்கி சலிப்பு மேலிட்டது. பின்னர் ஒவ்வொருவராகக் கேள்வியுடன் எழுந்தார்கள். சிலர் அழுதனர். அந்த உரையாடல் மூன்று நாட்கள் நீண்டது. இறுதியில் ஆண்களில் பெரும்பான்மையான மாணவர்கள், பெண்களின் உடையில் இல்லை தங்களின் பார்வையில் தான் பிரச்சினை இருக்கிறது என்று ஒத்துக்கொண்டு, வெளிப்படுத்தி, தம்மைச் சீர்படுத்தத் தொடங்கினர். எனது பணியென்பது, இதனைப் பாதுகாப்பாகவும் தனித்தாக்குதலாகவும் கதாப்பாத்திரப் படுகொலையாகவும் மாறாமல் காப்பதே. முதல் நாள் நிகழ்ந்த கடுமையான வாக்குவாதங்களின் பின்னர் இரண்டாவது நாள், காலை ஆறு மணி வகுப்பிற்கு, அனைவரும் நேரம் பிந்தாமல் வந்து சேர்ந்தனர். அனைவரையும் எழுந்து நின்று கண்களை மூடச் சொல்லி, வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட நான்கு சிறுமிகளிற்கு நேர்ந்த கொடூரங்களைச் சொன்னேன், அவர்களுக்கான மெளன அஞ்சலியுடன் உரையாடலைத் தொடங்கினேன். மாணவர்கள் தம்முன் நிகழ்ந்த அந்தக் கொடூரங்களைச் சில கணங்கள் நினைத்த பின் அவர்களின் உரையாடலில் பொறுப்புணர்வு கூடியிருந்தது. ஆறு வயதுச் சிறுமியை வன்புணரும் போது அவரணிந்திருந்தது ஒரு பாடசாலை உடை. கழுத்தில் டையினால் நெருக்கிக் கொல்லப்பட்டார். ஆடை என்னவாகியது என்ற கேள்வியுடன் உரையாடல் தொடங்கியது. பின்னர் அடுத்த நாள் உரையாடல்களுடன் அவர்களுக்குள் இருந்த சந்தேகங்கள் முன்முடிவுகள் ஓரளவு தீர்ந்து சமநிலையை, ஒரு புதிய நியாயத்தை அவர்களாகவே கண்டடைந்தார்கள். இதற்கான வெளியை உருவாக்குவதே முக்கியமானது. பெண்கள் ஆண்களை அறிய வேண்டும். ஆண்களும் பெண்களை எதிர் கொள்ள வேண்டும். நியாயங்கள் சந்தேகங்கள் பகிரப்பட வேண்டும். அதிலிருந்து அவர்கள் கேள்விகளற்று ஆக வேண்டும். ஒரு தியானம் நிகழ்வது போல. ஆரம்பத்தில் எழும் மனக்கூச்சல்கள் அடங்கி, தன்னை அறிவதன் தொடக்கம் நிகழ வேண்டும். * சில மாதங்கள் கழித்து ஒரு மாணவன் ‘சேர், ஒரு பிரச்சினை’ என்று வந்தார். தங்களது நண்பர்களில் ஒருவருடன் தமது பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்தார் என்று சொன்னார். நான் அந்த பாதிக்கப்பட்ட மாணவனுடன் நான்கு தடவைகளுக்கு மேல் விரிவாக உரையாடி, அவருடன் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அவருக்கு நிகழ்ந்தவற்றை அறிந்தேன். இதை வெளிப்படுத்த மூன்று வழிகளைப் பரிந்துரைத்தேன். முதலாவது, உங்களது வீட்டில் சென்று பெற்றோருடன் இது தொடர்பில் அறியப்படுத்துங்கள், அவர்களிடம் உரையாட மனத்தடையிருந்தால் நானும் வந்து உதவுகிறேன். இரண்டாவது, பாடசாலைக்கு இது தொடர்பில் அறிவிக்கச் சொன்னேன், மூன்றாவது, இது தொடர்பில் சட்ட நடவடிக்கை அல்லது கல்வி மேலிடங்களுக்கு அறிவிக்கலாம். அதற்கும் நான் உடனிருக்கிறேன் என்று சொன்னேன். அவருக்கு மூன்று வழிகளிலும் இதைத் தொடர மனத்தடை இருந்தது. ஆகவே உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டேன். அந்த ஆசிரியர் பாடசாலையில் கற்பித்தலைத் தொடரக் கூடாது. அவர் இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னார். சில நாட்களின் பின் எனக்குத் தகவல் சொன்ன மாணவனும் அதே காலப்பகுதியில் அந்த ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட முனைந்தமை பற்றி என்னிடம் சொன்னார். முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் இதனால் தனக்கு படிக்க முடியவில்லை. அவர் தன்னை நெருங்கிய அந்த நேரம் திரும்பத் திரும்ப என் நினைவுக்கு வருகிறது. பதட்டம் வருகிறது. வியர்த்து வழிகிறது. இதனை வெளியில் சொல்ல முடியவில்லை. யோசினையாக் கிடக்கு என்று சொன்னார். இருவருடனும் ஆறு தடவைகளுக்கு மேல் உரையாடி அவர்கள் பிரச்சினையை அவர்களே நம்பிக்கையுடன் வெளிப்படுத்துவதற்கான மனநிலையையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கினேன். சமூகத்தில் இத்தகைய பாலியல் துஷ்பிரயோகங்கள் வெளிப்படுத்தப்படும் பொழுது எவ்விதம் அவை எதிர்கொள்ளப்படும் என்பதை ஓரளவு அறிவேன். கீழ்மட்ட அதிகாரங்கள் அவற்றை எவ்விதம் கையாளும் என்ற என் அனுபவத்திலிருந்து பெற்ற அறிவைக் கொண்டு, மாணவர்கள் மனதளவில் தயாரானதும், மேல்மட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பில் நானே நேரில் சென்று புகாரளித்தேன். அவர்கள் அடுத்த நாளே அந்த ஆசிரியரை அப்பாடசாலையிலிருந்து வெளியேற்றி விசாரணைக்கான நடவடிக்கைகளைத் தொடங்கினர். அன்றே மாணவர்கள் பெற்றோரிடம் தங்களுக்கு நேர்ந்ததை வீட்டில் சொன்னார்கள். பெற்றோர்களும் மாணவருக்கு ஆதரவாக நின்று அவர்களைப் பேச வைத்தனர். அந்த ஆசிரியர் இன்னொரு பாடசாலைக்கு விசாரணையின் பின்னர், எச்சரிக்கை செய்யப்பட்டு இடம்மாற்றப்பட்டார், அவர் புதிதாகப் பணியாற்றப்போன பாடசாலைக்கும் இத்தகவல் பகிரப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெளிப்படுத்தப்படாது, பாதிப்பு நிகழ்த்தப்பட்டது யாரால் என்ற செய்தி ஊரெல்லாம் பரவியது. ஊர் மக்கள் அந்த ஆசிரியரை அடிக்க வேண்டும். அப்படித் தண்டிக்காமல் அனுப்பியது தவறு என்று என்னிடம் முரண்பட்டு நின்றனர். ஒன்று, இதைச் சட்ட ரீதியில் நாம் கையாள வேண்டும். அதற்கு அந்த மாணவர்களின் மனநிலையும் பெற்றோரும் விரும்பவில்லை. இரண்டு, வன்முறையைப் பிரயோகிப்பது சமூக அச்சத்தை உண்டாக்குவது மட்டும் இப்பிரச்சினைகளில் முக்கியமில்லை. இது தொடர்பில் ஊராக நாம் என்ன செய்யலாம் என்பதைச் சிந்திப்பதே அவசியமானது என்று கூறினேன். நான் எவ்வளவு சொல்லியும் ஊர் மக்களில் சிலர், அடிப்பது தான் சேர் வழியென்று சொல்லிக்கொண்டிருந்தனர். இந்த வழிமுறை, மாணவர்களையும் தவறாக வழிநடத்தும் என்பதைச் சொல்லி, அவர்களுடனும் விரிவாக உரையாடி நிலமையைத் தணித்தேன். அடுத்த ஒரு மாதத்திலேயே மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கிறது என்ற தகவலை மாணவிகள் கொணர்ந்தனர். மாணவர்களுடைய நடவடிக்கைகளில் நாங்கள் மாற்றங்களை அவதானிக்கிறோம். இதை எப்படிக் கையாள்வது என்று கேட்டார்கள். மீளவும் மாணவர்களை ஒருங்கிணைத்து உரையாடல்களை நடத்தினேன். ஆண்கள் சிலர் வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டு இவை நிகழ்கின்றன என்று பேசிய பின், போதைப் பொருட்களைப் பாவிப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மாணவர்களைப் பட்டியற்படுத்தினோம். பதினாறு பேருக்கும் மேல் நீண்ட பட்டியலது. அவர்களுடன் நான் உரையாடினேன். அவர்களது பெற்றோருக்குத் தகவல்களைச் சொன்னேன். அவர்களது நடவடிக்கைகளை அவதானிக்க வைத்தேன். சிலரது குடும்பச் சூழல் மிக மோசமாக இருந்தது. அவர்களது குடும்பத்துடன் உரையாட முடியாத சூழல் எனக்கும் இருந்தது. ஆனால் மாணவர்கள் எல்லோரும் என்னுடன் உரையாடத் தயாராயிருந்தார்கள். தங்கள் மேலுள்ள தவறுகளைத் திருத்த வழி கேட்டனர். மாதக்கணக்கில் இந்த உரையாடல்கள் நிகழ்ந்தது. ஒருசிலரைத் தவிர அனைவருமே அப்பழக்கத்திலிருந்து முழுமையாக வெளியேறினார்கள். சிலரைக் கட்டுப்படுத்துவது இயலவில்லை. அவர்கள் குடும்பங்களும் கூட அதை ஒரு பிரச்சினையாக கவனமெடுக்கவில்லை. அவர்களை வகுப்புகளிலிருந்து நீக்கினோம். ஆனால் நான் தனிப்பட அவர்களுடன் உரையாடிக்கொண்டேயிருந்தேன். தவறுகளைச் செய்துவிட்டுத் தாங்களாகவே வந்து மன்னிப்புக்கேட்டுக் கொண்டு நிற்பார்கள். நீங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை உங்களைத் திருத்திக் கொண்டாலே போதும் என்று பலதடவைகள் கேட்டேன். அவர்கள் குறைத்துக் கொண்டார்களே தவிர, முழுமையாக விலகினார்கள் என்று பொருள் கொள்ள முடியாது. அதே நேரம் சக மாணவர்களிடமும் சிறியவர் முதல் பெரியவர் வரை இது பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இடைவிடாது உரையாடிக் கொண்டிருந்தேன். * பிறகொரு நாள், இவை பற்றி ஒரு வீதி நாடகம் ஒன்று செய்வோம். தொடர்ந்து எழும் சிக்கல்கள் தொடர்பில் சமூகத்துடன் உரையாடலை விரிவாக்குவோம் என்று கோரினேன். மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அந்த வேலைகளில் ஈடுபட்டார்கள். காலை முதல் இரவு வரை ஏராளமான பணிகளைச் செய்தனர். துஷ்பிரயோகங்கள், தண்டனைகள், போதைப்பொருள், ஆடைக் கட்டுப்பாடு, மாணவர் உரிமைகள் என்று அவர்கள் தாங்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு சொந்தப் பிரச்சினையும் தான் அவர்களது நாடகத்தின் கருக்கள். அவர்கள் உண்மையில் பேசிய, எதிர்கொண்ட ஒவ்வொரு உரையாடலும் தான் அவர்களது வசனங்கள். அவ்வூரின் வீதியெங்கும் தாங்களே கைகளால் வரைந்த சுவரொட்டிகளை ஒட்டினார்கள். குயர் அரசியல் தொடர்பில் சாதரண தமிழ்க் கிராமமொன்றில் அங்குள்ள மாணவர்களால் அவ்வரசியல் உள்வாங்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு சுவரொட்டி வரையப்பட்டு ஒட்டப்பட்டமை அதுவே நானறிந்து முதல்முறை. நாடகத்திற்குத் தயாரானார்கள். உரையாடி, சமநிலை பெற்ற அந்த நாடகம் அவ்வூரில் ஆக்கபூர்வமான கவனிப்பைப் பெற்றது. மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் பேசும் வகையறிந்தார்கள். ஆனால் இது முழுமையானதல்ல. அவர்கள் மீளவும் தவறுகளில் ஈடுபட வாய்ப்புண்டு. இன்னமும் சரிசெய்யப்படாத சிக்கல்கள் அவர்களிடமுண்டு. இத்தகைய சிக்கல்கள் எல்லா இடங்களிலும் உண்டு. ஆனால் நான் பணியாற்றிய காலத்தில் அவர்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் கையாளும் வழிவகைகளை, அதற்குத் தேவையான ஒற்றுமையை அறிந்து கொள்ள ஊக்கப்படுத்தினேன். அவர்களது அன்றாட அனுபவத்திற்கு வெளியே சில மாணவர்களின் வாழ்க்கையிலும் பார்வையிலுமாவது அவை செல்வாக்குச் செலுத்தும். அதுவே என்னால் இயலக்கூடியது. அந்த வீதி நாடகம் சூரியன் செம்மஞ்சளெனச் சரிந்திறங்கிய பின்மாலையொன்றில் நிகழ்ந்தது. வன்புணரப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட நான்கு சிறுமிகளினதும் படங்களைத் தங்களது கைகளாலேயே மாணவர்கள் வரைந்தனர். அதை நாடகத்தின் பின்னணியில் காட்சிப்படுத்தியிருந்தோம். நிகழ்வு முடிந்த பின்னர் நன்றாக இருட்டி விட்டது. அனைவரும் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். நான் வெளியில் நின்று மாணவர்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்டிருந்த மாணவன் ஒருவரின் தாய், என்னிடம் வந்து என்ன சேர் படிக்கிறானா என்று கேட்டார். ஆள் குழப்படி தான், ஆனால் இப்ப கொஞ்சம் படிக்கிறான் என்று சொன்னேன். அவன் படிக்காட்டியும் பரவாயில்லை சேர், நல்ல பிள்ளையா இருந்தாக் காணும் என்றார். நான் சிரித்து விட்டு, அவன் நல்ல பெடியன் தான் என்றேன். வீதியில் இருந்த விளக்கின் வெளிச்சத்தில் சில கணங்கள் அவரது கண்கள் தெரிந்தது, கலங்கி விழியில் நீர் சேர்ந்து விழத் தொடங்கியிருந்தது. நீங்கள் அவங்களுக்குச் செய்த உதவிக்கு நன்றி சேர். என்ர பிள்ளை என்ன விட உங்களைத் தான் நம்பிறான் என்று சொல்லிக் குரல் தழுதழுத்த பொழுது, அருகே, மாணவர்கள் சிலர் வெளியேறி வந்து கொண்டிருந்தனர், அதெல்லாம் எப்பையோ முடிஞ்சுது அம்மா, அவன் கடந்து வந்திட்டான். நீங்கள் வீட்ட போங்கோ என்று சொன்னேன். தங்யூ சேர் என்றார். வாழ்நாளில் நான் நேரில் கேட்ட சில அரிதான நன்றிகளில் ஒன்று அது. * நிகர் வாழ்விலோ அல்லது சமூக வலைத்தளத்திலோ ஒரு மனிதர் தனக்கு நிகழும் அநீதிகளையோ துஷ்பிரயோகங்களையோ உரையாடுவதும் அதற்கான நீதியைப் பெற முனைவதற்கும் நாம் உடனிருப்பது ஒரு சமூகமாக நாம் செய்ய வேண்டியவை. இத்தகைய அநீதிகளும் அவை நடைபெறும் முறைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் அடையப்பட நாம் உதவ வேண்டும். அதுவே பிரதானமானது. பாதிக்கப்பட்டவர்களாகத் தம்மை முன்வைக்கு ஒருவர் பக்கத்திலிருந்தே நாம் பிரச்சினைகளை அணுகும் நேரத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டதினாலேயே அவர் சொல்பவை உண்மைகள் என்ற நிலையைச் சென்று சேர்வது, உண்மையைக் கண்டறிவதிலும் நீதியைப் பெற்றுத்தருவதிலும் தடைகளை ஏற்படுத்தும். அவர்களது மனநிலைகளும் நெருக்கடிகளும் அவர்களை உண்மைகளை விழுங்கவோ அல்லது வேறு விதமாக முன்வைக்கவோ தூண்டும். அவர்கள் சொல்வது பெரும்பாலும் பகுதியளவு உண்மைகள் என்ற அடிப்படைப் புரிதல் இருக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வயது, பால், சாதி, இனம், வர்க்கம், உளவியல் நிலை என்று பலவிடயங்கள் அந்தப் பாதிப்பின் வகைமையில் அதற்கான நீதியில் செல்வாக்குச் செலுத்தக் கூடியது. எல்லா விக்டிம்களும் ஒரே வகையானவர்கள் அல்ல. அவர்கள் விரும்புவதும் ஒரே வகையான தீர்வுகளை அல்ல. சிலர் தாமாகவே தம்மைச் சரிசெய்யக் கூடியவர்கள். சிலருக்கு உதவி தேவைப்படலாம். சிலர் தன் மேல் பாதிப்பு நிகழ்த்தியவரை தண்டிக்க விரும்பலாம். சிலர் மன்னிக்கலாம். சிலர் விலகலாம். இப்படிப் பலவகையான வழிகளில் சமூகச் சிக்கல்களும் அதன் தரப்பினர்களும் வித்தியாசங்கள் கொண்டவர்கள். இத்தகைய வித்தியாசங்களை விளங்கிக் கொள்ள மேற்சொன்னவற்றிலிருந்து மாறுபட்ட உதாரணமொன்றைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு, பாதிக்கப்பட்டவர்கள் நார்சிஸ்ட் உளவமைப்பு உடையவர்களாக இருப்பின் அவர்களை அணுகுவதைப் பற்றிய உளவியல் வேறுவிதமானது. கீழே இருக்கும் விக்டிம் நார்ஸிஸ்ட் பற்றிய அவதானிப்புகள், இணையத்தில் உள்ள உளவளத் தளங்களின் கட்டுரைகளிலிருந்து பெறப்பட்டது. நிகர் வாழ்வில் ஒருவர் நார்ஸிஸ்ட் உளநிலைகளின் ஏதாவது ஒரு கூறைக் கொண்டவராகவோ அல்லது எட்டுப் பொருத்தமும் கொண்டவராகவோ இருக்கலாம். அவர்களை அடையாளம் காண்பதுவும் அவர்களைக் கையாளும் முறை தொடர்பிலும் உரையாடுவது பாதிக்கப்பட்டவர்கள் என்ற பெருந்திரளின் பன்மைத்துவமான அணுகுமுறைகளையும் நீதிகளையும் அடைவதற்கும், நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் தீர்வின் வழிமுறைகளைத் தீர்மானிப்பதற்கும் முக்கியமானது. முதலில் விக்டிம் பிளேமிங் என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். இது தொடர்பில் ஓரளவு பரவலான அறிமுகம் நம் சமூகத்தில் ஏற்கெனவே உருவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபராக ஒருவர் தன்னை முன்வைக்கும் பொழுது அவரை நோக்கிச் சமூகம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் பாதிப்பை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் நபரை அல்லது அவரது முன்னுரிமையைப் பாதுகாப்பது. குற்றம் சாட்டப்பட்ட நபரை நிர்பந்திப்பதற்குப் பதில் பாதிக்கப்பட்டவரை நிர்ப்பந்தித்தல் என்பவற்றை விக்டிம் பிளேமிங் என்று சுருக்கமாக வரையறுக்கலாம். இதில் பல்வகைமையான பின்னணிகளைக் கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் என்ற தரப்பு இருக்கும். ஒருவர் ஒரு தன்னிலையில் பாதிக்கப்பட்டவராகவும் இன்னொரு தன்னிலையில் பாதிப்பை ஏற்படுத்துபவராகவும் இருக்க முடியும். வன்புணர்விலோ அல்லது உடலியல் துஷ்பிரயோகங்களிலோ இவை இன்னும் அதிகமாகச் சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் நிகழ்த்தப்படும். ஆனால் எப்பொழுதும் முதற்கரிசனை பாதிக்கப்பட்டவரின் சொந்தக் குரலுக்கே இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவராக ஒருவர் தன்னை முன்வைக்கும் போதுதான் இந்த விக்டிம் பிளேமிங் அதிகம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. பதிலாக வேறு ஒரு நபர், குற்றச்சாட்டை முன்வைக்கும் போது குற்றச்சாட்டை முன்வைக்கும் நபர் தனது தரப்பிலிருந்து சந்தேகங்களையோ அல்லது கேள்விகளையோ மட்டுமே முன்வைக்கலாமே தவிர, பாதிப்பைச் செலுத்தியவரைக் குற்றவாளி என்று தீர்ப்பிட முடியாது. அல்லது அந்த நோக்கிலிருந்து உரையாடலைத் தொடரக் கூடாது. குற்றத்திற்கான ஆதரங்களை அவர் முன்வைத்தே ஆகவேண்டும். அதற்காக அவர் எந்த வெளியைத் தீர்மானிக்கிறாரோ, அதிலேயே அது வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒருவர் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் ஒரு வழக்கினைப் பதிகிறார் என்றால் அதற்குக் குறைந்த பட்ச ஆதாரமாவது தேவை. ஒன்று பாதிக்கப்பட்ட நபர், அல்லது அப் பாதிப்புத் தொடர்பான ஏதாவதொரு ஆதாரம். சமூக வலைத்தள பொலிஸ் நிலையத்திற்கு இது எதுவும் தேவைப்படாது, அதற்கு ஊகங்களே குற்றவாளியை முடிவு செய்யப் போதுமான ஆதாரம். அல்லது திரிபுபடுத்தப்பட்ட தெரிவு செய்யப்பட்ட அல்லது விழுங்கும் உண்மைகளே போதுமானது. சமூக வலைத்தளமோ நேர் உரையாடல்களோ கூடப் பாலியல் குற்றச் சாட்டுகளிலோ அல்லது எந்த வகையான குற்றச்சாட்டுகளிலோ அவற்றிலுள்ள உண்மையை அறிவதென்பது சிக்கலானது என்ற அடிப்படையைச் சமூகத்தில் சிறு தரப்பினராவது உள்வாங்க வேண்டும். * சமூகவலைத்தளங்களில் உருவாகியுள்ள அரியவகை முன்னேறிய பிரிவொன்றை ‘அம்பலப்படுத்தளாளர்கள்’ என்று சுட்டலாம். ஒரு சமூகத்தில் வைத்தியர்கள், செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் போல் இதுவும் ஒரு வகைமை. கொஞ்சம் புதியது. சாதாரணமாக ஊர்களில் இப்படிப் புறணி பேசுபவர்கள் இருப்பார்கள். அவர்களை இந்த வகைமைக்குள் அடக்க முடியாது. அம்பலப்படுத்தலாளர்களின் சேவையும் அணுகுமுறையும் புதியது. ஆகவே குறைபாடுகள் இருக்கும். வழிமுறைகளில் அவர்கள் முன்னேற வேண்டும். ஒரு நபர் மீதோ அமைப்புகளின் மீதோ இவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கும் வழிமுறை அவற்றுக்கான தீர்வினை அடைவதற்குத் தடைகளை உருவாக்குகிறது. குழப்புகிறது. ஆகவே அம்பலப்படுத்தலாளர்கள் தங்கள் நோக்கமான பாதிக்கப்பட்டவருக்கு நீதியைப் பெற்றுத்தருதல் என்பதில் கூடிய கவனத்தை உருவாக்க இன்னும் உழைக்க வேண்டியும் அவை தொடர்பில் வாசித்து அறிவார்ந்து விவாதித்து தங்களது சமூகப்பணிகளைத் தொடரவும் வேண்டும். மேலும், இத்தகைய ஒரு அரிய வகைமுயற்சி தொடர்பிலும் அதன் வரலாறு, முன்னோடிகள் தொடர்பில் விக்கிபீடியா மற்றும் தமிழ் விக்கி பக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். வரலாற்றை ஆவணப்படுத்துதல் மிகவும் முக்கியமானது. இன்னும் பல அம்பலப்படுத்தலாளர்கள் உருவாக அதுவொரு விதையாக இருக்கும்😉 அம்பலப்படுத்தலாளர் ஒருவர் கவனிக்க வேண்டிய ஒரு உதாரணத்தினை இப்போது பார்க்கலாம். பாதிக்கப்பட்ட விக்டிம் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ இழைக்கப்பட்ட அநீதியை வெளிக்கொணரும் போது, அவர்கள் கேட்கும் தகவல்கள் அத்தனையும் உண்மையானது, அவற்றுக்கு வேறு பக்கங்களே இருக்காது போன்ற முன்முடிவுகளை எடுக்கக் கூடாது. எனது அனுபவத்தில் பாதிக்கப்பட்டவரோ பாதிப்பைச் செலுத்தியவரோ இரு தரப்பும் தன்னிலையிருந்தே தகவல்களை வெளிப்படுத்துவார்கள். அதைக் கொண்டு ஒருவர் எந்த முடிவுக்கும் வருவதும், தீர்வை நோக்கிய வழிமுறைகளைப் பொறுப்பற்றுக் கையாள்வதும், அதன் மூலம் மேலும் பாதிப்பினைப் புதிய வகைகளில் வேறு நபர்களுக்கு உண்டாக்குவதும் தவறான அணுகுமுறை. ஒரு பாதிக்கப்பட்ட நபர் நார்ஸிஸ்ட் மனநிலை கொண்டவர் என்று வைத்துக் கொண்டால் அதை எப்படிக் கையாள்வது, அல்லது அவர் வேறு வகையான பாதிக்கப்பட்ட நபர் என்பதாக இருந்தால் எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில் இன்னும் விரிவாக நாம் உரையாட வேண்டும். நாங்கள் எல்லோருமே இவற்றைக் கையாள்வதில் புரிதல் குறைபாடுள்ளவர்கள் என்ற அடிப்படை நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். நான் நம்புவதே சரியானது என்று முன்னகர்ந்தால் நீதிக்கான வழிகள் அடைபடும். நார்சியஸ் என்பது ரோமானியக் கவிஞர் ஒருவர் பயன்படுத்திய ஒரு புராணக்கதை. தனது சொந்தப் பிரதிபலிப்பை நீரில் பார்த்து அதைக் காதலிக்கும்படி சபிக்கப்பட்ட ஒருவனைப் பற்றியது. நார்சியஸ் தனது சொந்தப் பிரதிபலிப்பால் தன்னைத் திரும்பக் காதலிக்க முடியவில்லை என்ற விரக்தியுடன் இறந்து போகிறான். டபொடில்ஸ் மலர்களை நார்சியஸ் தன்மைக்கான குறியீடாக ஓவியங்களில் பயன்படுத்துவார்கள். (நார்சியஸ் தன் பிரதிபலிப்பைப் பார்த்தல்) * போகன் சங்கர் விக்டிம் நார்சிஸம் பற்றிய ஒரு ஆங்கிலக் கட்டுரையின் சாராம்சமாக எழுதிய குறிப்பில், “தன் மேல் மட்டுமே ஆர்வம் உள்ள ஒருவர் தன்னை ஏதோ ஒரு விஷயத்தில் பாதிக்கப்பட்டவராக முன்னாடி வைப்பது. அந்த விஷயம் உண்மையாகவோ கற்பனையாகவோ மிகைப் படுத்தப்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் அதை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு இப்போது அளவில்லாத கவனத்தைக் கோருவது. இப்போது அவர்கள் செய்யும் மிகுந்த சுய நலமான மற்றவரைப் பாதிக்கும் காரியங்களை நியாயப்படுத்துவது. ஒரு இழப்பீடு போல அவற்றைக் கருதுவது. கோருவது. தன்னைப் பற்றிய அதீத மதிப்பீடுகளை உருவாக்கி வைத்துக் கொண்டு அதற்கு சுற்றி இருப்பவர்கள் ஆமாம் சாமி போடா விட்டால் அவர்களைத் தாக்குவது. ஒரு குற்ற உணர்வை அவர்களிடம் உருவாக்க முயல்வது தனி வாழ்விலும் பொது வாழ்விலும் இந்த அதிகார விளையாட்டுகளைத் தொடர்ந்து விளையாடுவதன் மூலமாகத் தன்னை எப்போதும் ஒரு குற்றமற்ற நிலையில் வைத்துக் கொள்ள முயல்வது. அதன் மூலமாக தங்கள் தாழ்வு மனப்பான்மையை மறைத்துக் கொள்வது. நவீன உளவியல் இப்போது இதை ஒரு நோய்க் கூறு என்று சொல்கிறது. இதை victim narcissm என்கிறார்கள். இது இப்போது பெருகி வருகிறது”. விக்டிம் நார்ஸிசிட்கள் ஐந்து வகையாக உருவாகக் கூடும். துஷ்பிரயோகம் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் பெரியவர்களாகிய நார்ஸிஸ்டுகளாக வளர வாய்ப்புள்ளது. உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் முதல் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுவது வரை இதில் அடங்கும். புறக்கணிப்பு அவர்கள் பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்தால், இது அவர்களை வெறுமையாகவும் தனியாகவும் உணர வைக்கும், இது பெரும்பாலும் மற்றவர்களிடமிருந்து அக்கறையக் கோருவதற்கு வழிவகுக்கும். கொடுமைப்படுத்துதல் அவர்கள் பள்ளிக்கூடத்தில் துன்புறுத்தப்பட்டால், அது அவர்கள் வளரும் போது பாதிக்கப்பட்ட மனநிலையை வளர்க்க வழிவகுக்கும், அங்கு அவர்கள் தங்கள் பாதையைக் கடக்கத் துணிந்த எவருக்கும் எதிராக, தொடர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெற்றோரின் நார்ஸிசம் அவர்களின் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவருமே நார்சிஸ்டுகளாக இருந்தால், அந்தச் சூழலில் வளரும் குழந்தை வாழ்வதற்கு இதே போன்ற குணநலன்களை வளர்த்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. சமூக அழுத்தங்கள் இந்த நாட்களில் வெற்றிபெற தனிநபர்கள் மீது நிறைய அழுத்தம் உள்ளது, மேலும் அவர்களுக்கு அவர்கள் ஒருபோதும் போதுமானதாக இல்லை என்று நினைக்கும் ஒருவருக்கு, நார்சிஸ்டிக் நடத்தைகளை நாடாமல் இருப்பது கடினமாக இருக்கும். உளநல ஆலோசகர்கள் இத்தகையவர்களின் இயல்புகளைப் பின்வருமாறு அவதானிக்கின்றனர். மற்றவர்களைக் குற்றம் சாட்டுதல் விக்டிம் நார்சிஸ்ட்டுகள் உள்ளார்ந்து மிகவும் பலவீனமானவர்கள். அவர்கள் தங்கள் தவறுகளையோ பிழைகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாகத் தங்களுடன் நெருங்கிய உறவில் இருப்பவர்களுடன் அவர்கள் மேல் தான் தவறு என்ற குற்றவுணர்ச்சியை உருவாக்குவார்கள். எல்லாமே நான் தான் எப்பொழுதும் தங்கள் மேலேயே கவனம் குவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். தான் சொல்வதை ஒரு சொல் பிழையில்லாமல் மற்றவர்கள் நம்ப வேண்டும். நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் ஆகவே நான் சொல்வது மட்டும் உண்மை. நம்பவில்லையென்றால் நீங்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலைக்குச் செல்வார்கள். அப்பாவிக் கதாபாத்திரம் தன்னை எந்த நிலையிலும் அப்பாவியாகவே முன்வைத்தல். ஒருவரை நம்ப வைக்க உண்மையைக் குழப்பவும் திரிக்கவும் கூடியவர்கள். உதாரணத்திற்குத் தானறியாத ஒரு நபரின் பாலியல் தொடர்பில் தனக்கு இருக்கும் மனநிலைக்கு ஏற்ப எதையாவது ஒரு பொய்யை உருவாக்குதல். பரப்புதல். விமர்சனத்தை ஏற்காமை ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்படும் பார்வைகளைக் கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை அவர்கள் தங்கள் உளம் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாகக் கொள்வார்கள். அதிலிருந்து மீள எதிர்த்தரப்பின் மீது எந்த நிலைக்குச் சென்றும் குற்றச்சாட்டுகளை உருவாக்குவார்கள். தற்காத்துக் கொள்ளலும் குற்றச்சாட்டுகளை மாற்றிக்கொண்டிருந்தலும் தன் மீது கேள்விகள் எழும் போது தன்னைத் தற்காத்துக்கொண்டு எதையும் அல்லது யாரையும் பலி கொடுக்கத் துணிவார்கள். அதையிட்டு குற்றச்சாட்டுகளை வகைதொகையில்லால் அள்ளியிறைப்பார்கள். பொறுப்பை ஏற்க மறுத்தல் அவர்கள் விக்டிம்கள் என்ற பாவனையில் விளைவுகளுக்கான எந்தப் பொறுப்பையும் தான் ஏற்கத்தேவையில்லை என்ற நிலையைத் தொடர்ந்து தக்க வைப்பார்கள். நான் அதற்காகச் சொல்லவில்லை. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று தப்பித்துத்துக்கொள்ள முயல்வார்கள். அதே நேரம் தாங்கள் செய்த தவறுகளுக்கும் சேர்த்து, நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள். அது அவர்களைத் தாங்கள் செய்தது சரிதான் என்று தங்களையே நம்ப வைக்கத் தேவையானது. பின்வழித் தோற்றத்தை உருவாக்குதல் ஒரு விக்டிம் நார்சிஸ்ட்டை அடையாளம் காண்பதற்கு முக்கியமான குறியீடு, அவர்கள் குற்றங்களைப் பிற நபர்கள் மீது சுமத்துவதிலும் அதை நம்ப வைப்பதிலும் மாஸ்ட்டர்களாக இருப்பார்கள். அந்த நேரத்தில் மிகுந்த உணர்ச்சிவசத்தினதும் கண்ணீரினதும் மூலமும் கூட கேட்பவரைக் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கித் தன் பக்கம் நிற்க வைக்கத் தூண்டுவார்கள். விக்டிம் நார்சிஸ்ட்டை அடையாளம் காணல் ஒரு விக்டிம் நார்சிஸ்ட் தொடர்ந்து தன் வாழ்வில் தனக்கு நிகழ்பவற்றுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்பதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்களா? அவர்கள் தொடர்ந்து தங்கள் நட்பிலோ காதலிலோ உறவுகளை இழக்கிறார்களா? தங்களுடைய இலக்குகளை அடைவதற்குச் சிரமப்படுகிறார்களா? கழிவிரக்கம், கவலை, பொறுப்புணர்வு இந்த மூன்றும் அவர்களிடம் இல்லையென்றால் அவர்கள் ஒரு நார்சிஸ்ட். மேற்சொன்னவற்றைக் கண்டுகொண்டால் விலகி விடுவதே உங்களின் உளநலனைப் பாதுகாக்க முதல் வழி. * ஒருவர் தன்னையொரு விக்டிம் நார்சிஸ்ட்டாக உணர்ந்து கொண்டால் அவர் பின்வரும் வழிமுறைகளை அணுகலாம் என்று உளமருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சிகிச்சை பாதிக்கப்பட்ட நார்சிஸ்டுகளுக்கான சிறந்த சிகிச்சையானது, மற்றவர்களை எப்படி மீண்டும் நம்புவது, கருணையை வளர்ப்பது மற்றும் அவர்களின் சொந்த செயல்களுக்குப் பொறுப்பேற்பது எப்படி என்பதை அறிய உதவும் ஒரு சிகிச்சையாகும். இது ஒரு கடினமான பாதையாக இருக்கலாம், ஆனால் ஒரு நிபுணத்துவம் வாய்ந்த சிகிச்சையாளரின் உதவியுடன், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய முடியும். சுய உதவி பாதிக்கப்பட்ட நார்சிஸ்டுகளுக்கு சுய உதவி மற்றொரு சிறந்த வழி. அவர்களின் உணர்வுகள், தொடர்புத் திறன் வகைகள், உறவுகளில் எல்லைகள் போன்றவற்றைச் சிறப்பாகக் கையாள்வது எப்படி என்பதை அறிய உதவும் பல புத்தகங்கள் மற்றும் இணையதளங்கள் உள்ளன. இந்தச் சிக்கல்களைத் தாங்களே எதிர்கொள்ளும் வாய்ப்பை இது அவர்களுக்கு வழங்கும். அன்போ சக மனிதர் மீது நம்பிக்கையோ இல்லாததால் தனிநபருடன் தொடர்பு கொள்ள முடியாத ஒருவர், சிகிச்சையாளர் அல்லது பிற நிபுணரைப் பெரிதும் நம்பியிருக்க வேண்டும். மருந்துகள் இது மனநல மருத்துவர்கள் போன்ற அங்கீகாரம் பெற்ற நிபுணர்களிடமிருந்து ஒரு பொருத்தமான இடத்தில் முழுமையாக சோதனை செய்யப்பட்ட வேண்டும். அங்குதான் அந்தச் சோதனைகள் பாதுகாப்பாகவும் மேற்பார்வையிலும் செய்யப்படும். * விக்டிம் நார்சிஸ்ட்டை எதிர்கொள்ளுதல் முதலாவது, விக்டிம் நார்சிசம் பற்றித் தேடி வாசித்து அறிவை விரிவாக்கிக் கொள்ளுதல். நார்சிஸ்ட்டுகளின் தந்திரங்களும் கையாளுகைகளையும் அறிந்து அவர்கள் திரிபுகளையும் பொய்களையும் ஆயுதமாக்கித் தம்மை எவ்விதம் தக்க வைக்கிறார்கள் என்பதை அறிவார்ந்து விளங்கிக் கொள்ளுதல். இரண்டாவது, உங்கள் உணர்வுகளை மதியுங்கள். உங்களுக்கும் சொந்தமான பார்வைகள் உணர்ச்சிகள் உண்டு அவையும் உண்மையானவை என உணருங்கள். மூன்றாவது, உங்கள் எல்லைகளை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். அவர்களால் உங்களை Manipulate பண்ண முடியாது என்பதை உணர்த்துங்கள். நான்காவது, நிதானமாகி அவர்களுடைய வார்த்தைகளிலிருந்து உங்களை விலக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவது, இத்தகையவர்களை எதிர்கொள்ள உளநல நிபுணர்களை நாடி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். ஆறாவது, நார்ஸிஸ்ட்களிடமிருந்து தொடர்பைத் துண்டிப்பதன் மூலமாக உங்கள் சொந்த வாழ்வில் முன்னேறிச் செல்லுங்கள். இவை உளவியலாளர்கள் மற்றும் உளவள ஆலோசகர்கள் விக்டிம் நார்சிஸ்ட்டுகளுடன் உறவிலிருப்பவர்களுக்கு வழங்கும் பரிந்துரைகள். பாதிக்கப்பட்டவர்கள் என்ற பிரிவில் உள்ள ஒரு உதாரணத்திற்கு இவ்வளவு விரிவு இருக்குமென்றால் பாலியல் சார்ந்த பிரச்சினைகள் எவ்வளவு விரிவான உரையாடலையும் அறிதலையும் கோரக்கூடியவை என்பதை நாம் கொஞ்சமாவது மனம் திறந்து உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும், அம்பலப்படுத்தலாளர்கள் introverted narcissist என்றால் என்ன என்பதையும் தேடி வாசித்து அறிய வேண்டும். * எந்தவொரு குற்றச்சாட்டும் பாதிக்கப்பட்டவர்களை எதிர்காலத்தில் உருவாக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கக் கூடாது. அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளை உரையாடுவதாகவே இருக்க வேண்டும். அவற்றை எல்லாத் தரப்பினரும் தங்கள் புரிதல்களிலிருந்து முன் வைக்க வேண்டும். இதில் தனி நலன்களோ, பழி தீர்க்கும் உணர்ச்சிகளோ உள்நுழையாமல் தவிர்க்க வேண்டும். அதுவே ஏதாவதொரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் பாதிப்புகளைத் தாமே முன்வந்து உரையாடும் பாதுகாப்பன வெளிகளை உருவாக்க உதவும். நான் என்னளவில் கையாளும் வழிமுறைகளில் சிலவற்றை இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். இப்படிப் பல வகையான மானுடரும் அவர்களுக்கான உளவியல் நெருக்கடிகளும் நிலமைகளும் உண்டு. எங்களுக்கு நிபுணத்துவமோ குன்றாத செயலூக்கமோ இல்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, எங்களின் ஆதார விசைகள் முழுமையாக ஒன்றி நேர்நிலையான மனிதர்களுடன் பயணிக்கும் ஒரு வாழ்க்கையே பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கக் கூடியது. எதிர்மனநிலை கொண்டவர்கள் சூழ் காலங்களில் புயற் காற்றுள் லாந்தர் வெளிச்சமென நம் அகச்சுடரைக் காப்பதே பாதிக்கப்பட்டவர்களுக்கெனக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரினதும் முதன்மையான பணி. “செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி” https://kirishanth.com/archives/827/