Search the Community
Showing results for tags 'சிறுநீரக நலன்'.
-
நீரிழிவும் சிறு நீரகமும் "ஒரு வினைத்திறனான இயந்திரம் மிகவும் சிக்கனமானது. அதனால், அவசியமில்லாத எந்தவொரு பாகமும் ஒரு நல்ல இயந்திரத்தில் இருக்காது!" - HUGO திரைப்படத்தில் கதாநாயகன். பட உதவி நன்றியுடன்: Huppert’s Notes: Pathophysiology and Clinical Pearls for Internal Medicine; 2021. எங்கள் உடலும் ஒரு வினைத்திறனான இயந்திரத்திற்கு ஒப்பிடக் கூடிய ஒன்று. கூர்ப்பின் எச்சங்களாக குடல்வால் போன்ற சில அமைப்புகள் முக்கிய தொழில்களின்றி எங்கள் மனித உடலில் தங்கி விட்டாலும், அனேகமாக எல்லா உறுப்புகளும் எங்கள் வாழ்க்கைக்குத் தேவை. இவ்வுறுப்புகளில், உயிர் உடலில் தங்கி நிற்க அவசியமான ஐந்து உறுப்புகளை முக்கியமான உறுப்புகள் (vital organs) என்று சொல்லலாம். இதயம், மூளை, சுவாசப்பை, சிறு நீரகம், கல்லீரல் என்பனவே அந்த 5 முக்கிய உறுப்புகள். எனவே, இந்த உறுப்புகளை நேரடியாக , அல்லது மறைமுகமாகப் பாதிக்கும் நோய்கள் அனேகமாக உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியவை. தற்போது, உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நீரிழிவு இந்த உறுப்புகளில் மூன்றை நேரடியாகப் பாதிக்கும் தன்மை கொண்டதால் பிரதானமான மரணம் விளைவிக்கும் தொற்றா நோயாக விளங்குகின்றது. நீரிழிவினால் கல்லீரல், சிறுநீரகம், இதயம் என்பன பாதிக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரையில் நீரிழிவிற்கும் சிறுநீரகத்திற்குமிடையிலான தொடர்பைப் பார்க்கலாம். சிறுநீரகத்தின் முதன்மைத் தொழில் கழிவுகளை அகற்றுவதே சிறுநீரகத்தின் முதன்மையான தொழில். உடலினுள் உருவாகும் கழிவுகளும், நாம் உள்ளெடுக்கும் உணவுப் பொருட்களை, மருந்துகளை உடல் உடைப்பதால் வரும் கழிவுகளும் இப்படி அகற்றப்படும். இப்படி சிறுநீரகம் அகற்றும் கழிவுகளை இரத்தத்தில் அளப்பதன் மூலம் சிறுநீரகத்தின் கழிவகற்றும் செயல்பாட்டை ஓரளவு மதிப்பிட முடியும். உதாரணமாக கிரியற்றினைன் (creatinine) எனும் கழிவுப் பொருளை இரத்தத்தில் அளந்து சிறுநீரக நலனை மதிப்பிடுவர். ஆனால், இந்தக் கழிவகற்றல் மூலம், உடலின் மேலும் பல தொழிற்பாடுகளுக்கும் சிறுநீரகம் பங்களிப்புச் செய்கிறது. உதாரணமாக, சிறுநீரகம் உப்பையும், நீரையும் அகற்றுவதால் எங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்கும் முக்கிய வேலையை மறைமுகமாகச் செய்கிறது. மேலும், சிறுநீரகத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி இரத்த உற்பத்திக்கு அவசியமான ஒரு ஹோமோனையும் சுரக்கிறது. எனவே, நீண்டகால சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப் பட்டோரில் இரத்தச் சோகையும் ஏற்படக் கூடும். நீரிழிவில் சிறுநீரகம் பாதிக்கப் படுவது ஏன்? நாள்பட்ட சிறுநீரக வியாதி (Chronic Kidney Disease – CKD) என்று அழைக்கப்படும் சிறுநீரக செயலிழப்பிற்கு நீரிழிவு பிரதான காரணியாக இருக்கின்றது. Diabetic nephropathy என்று அழைக்கப் படும் இந்த நாள்பட்ட சிறுநீரக வியாதி அமெரிக்காவைப் பொறுத்த வரை மூன்றில் ஒரு பங்கு நீரிழிவு நோயாளர்களில் ஏற்படுகிறது. உலக ரீதியிலும், ஏனைய நாடுகளிலும் கூட இதே விகிதாசாரத்தில் நாள்பட்ட சிறுநீரக நோய் இருக்கக் கூடும். எங்கள் ஒவ்வொரு சிறுநீரகத்தினுள்ளும் சிறுநீரகத்திகள் (nephrons) என அழைக்கப் படும் நுண் அமைப்புகள் வடிகட்டிகளாக வேலை செய்த படி இருக்கின்றன. இந்த வடிகட்டிகள் 30 மணித்தியாலங்களில், எங்கள் உடலின் 5 லீற்றர் வரையான இரத்தத்தை முழுமையாக சுத்திகரிக்கும் அயராத பணியைச் செய்கின்றன. நீரிழிவின் போது ஏற்படும் ஒரு முக்கியமான மாற்றம் மேலதிகமாக எங்கள் இரத்தத்தில் சுற்றித் திரியும் குழூக்கோஸ் இந்த சிறுநீரகத்திகளால் வடிக்கப் பட்டு, அதில் ஒரு பகுதி சிறுநீரோடு வெளியேற்றப் படுவது. இதைத் தான் நாம் glucosuria என்று அழைக்கிறோம். நீரிழிவு நோயாளர்களில் இது நீண்டகாலப் போக்கில் நிகழும் போது, சிறுநீரகத்திகள் நிரந்தரமாகப் பாதிப்படைந்து அவற்றின் வடிகட்டும் தொழிலும் பாதிக்கப் படுகிறது. சேதமடைந்த சிறுநீரகத்திகளூடாக, சாதாரணமாக வடிக்கப் படாத புரதங்களும் கூட வெளியேறுவதால், உடல் மேலும் புரத இழப்பையும், பின் விளைவுகளையும் எதிர் கொள்ள வேண்டியேற்படுகிறது. குழூக்கோஸ் என்பது பக்ரீரியாக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு போசணைப் பொருள். இதனால், அதிகரித்த குழூக்கோஸ் சிறுநீரில் சேரும் போது, பக்ரீரியாத் தொற்றுக்கள் ஏற்படுவதாலும் சிறுநீரகம் பாதிக்கப் படலாம். இன்னொரு பொறிமுறை, நீரிழிவு நோயாளர்களில் ஏற்படக் கூடிய உயர் குருதியமுக்கம் காரணமாகவும் சிறுநீரகங்கள் பாதிக்கப் பட்டு, அதனால் நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படலாம். எனவே, இந்த மூன்று முக்கிய பொறிமுறைகளையும் கட்டுப் படுத்துவது மூலம், நீரிழிவு நோயாளர்கள் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பேண முடியும். பொதுவாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக நீரிழிவு நோயோடு வாழும் நோயாளிகளில் தான் இந்த நாள்பட்ட சிறு நீரக நோய் நிலை ஏற்படுகிறது. ஆனாலும், மூன்றில் ஒரு நீரிழிவு நோயாளியில் தான் இந்த நிலை ஏற்படுகிறது. எனவே இதைத் தடுக்கும் இயற்கையான பாதுகாப்பு சிலரில் இருக்கக் கூடும். இது ஏற்படும் ஆபத்து அதிகம் இருப்போரில் கூட வாழ்க்கை முறை மாற்றங்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நாள்பட்ட சிறுநீரக நோயேற்படும் ஆபத்தை நீக்க அல்லது குறைக்க உதவுகின்றன. தடுப்பு முறைகள் எவை? நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு, இரத்த குழூக்கோஸ் எகிறுவதும், அதனால் சிறுநீரில் குழூக்கோஸ் வெளியேறுவதும் முக்கிய காரணிகள் என மேலே பார்த்தோம். எனவே, நீரிழிவு நோயாளிகள் இரத்த குழூக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதனை ஒழுங்காக நீரிழிவு மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்வதாலும், உணவு முறையில் கட்டுப்பாடு கொள்வதாலும், உடற்பயிற்சிகளாலும் தான் அடைய முடியும். உலகின் 90% ஆன நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் இன்சுலின் சுரந்தாலும் அது வேலை செய்யாத "இரண்டாம் வகை" நீரிழிவு (T2D) தான் வருகிறது. இவர்களில் அதிகம் பரிந்துரைக்கப் படும் மருந்து மெற்fபோமின் (Metformin) எனப்படும் தீவிர பக்க விளைவுகள் குறைவான மருந்தாகும். ஆனால், உடலில் தன் வேலையை முடித்த பின்னர், மெற்fபோமின் நேரடியாக சிறுநீரகத்தினால் அகற்றப் படுவதால், நாள் பட்ட சிறுநீரக நோயுடைய நோயாளிகளில் மெற்fபோமின் பயன்பாடு பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. சில ஆய்வுகளில், மெற்fபோமின் நாள் பட்ட சிறுநீரக நோயாளிகளில் மரணத்தைக் குறைத்ததாகவும் கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால், மெற்fபோமின் பாவனையினால் நாள் பட்ட சிறுநீரக நோய் உருவாவதாக நிறுவும் ஆய்வுத் தகவல்கள் இல்லை. எனவே, தற்போதைய ஆய்வு முடிவுகளின் படி, மோசமான நாள்பட்ட சிறுநீரக நோயுடையோரில் மட்டும் மெற்fபோமின் பாவனையைத் தவிர்க்கும் படி ஆலோசனை வழங்கப் படுகிறது. ஏனைய சிறுநீரகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவை? 35 - 40 வயதுக்கு மேல் அனைவரும் வருடாந்தம் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இரத்த, சிறுநீர்ப்பரிசோதனைகள் இந்த வருடாந்த சோதனையில் உள்ளடங்கியிருக்க வேண்டும். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள், சிறு நீரக செயல்பாட்டை மதிப்பிடும் சில பரிசோதனைகளை வருடாந்தம் அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் கால இடைவெளியில் செய்து கொள்வது அவசியம். அனேகமாக இந்தப் பரிசோதனைகளில் இரத்த கிரியேற்றினைன் மட்டம், இரத்த யூரியா நைட்ரஜன் (Blood Urea Nitrogen – BUN) மட்டம், Glomerular Filtration Rate (GFR) எனப்படும் சிறுநீரக வடிகட்டல் வேகம் ஆகிய மூன்று அளவீடுகளை மருத்துவர் கவனித்து உங்கள் சிறுநீரக நலனை மதிப்பீடு செய்வார். மேலதிகமாக, சிறுநீரில் வெளியேறும் அல்புமின் புரதத்தின் அளவையும் பரிசோதிப்பார்கள் - இது நீரிழிவு நோயாளிகளில் முக்கியமானது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவர் ஆலோசனைகளை வழங்கினால், அவற்றைக் கவனமாகப் பின்பற்றுவது உசிதம். நீரிழிவு நோயாளிகளில் மட்டுமன்றி, எல்லோரிலும் உப்புக் குறைந்த உணவுப் பழக்கம் சிறுநீரகத்தின் நண்பன். உப்புக் குறைந்த உணவினால் இரத்த அழுத்தம் குறையும், இதனால் சிறு நீரகம் மட்டுமன்றி, இதயமும் நன்மை பெறும். மூளை இரத்த அடைப்புக்கான (stroke) ஆபத்தும் குறையும். எனவே, சுருக்கமாக, நீரிழிவு நோயாளிகள்: 1. இரத்த குழூக்கோசைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க வேண்டும். 2. கிரமமாக சிறுநீரக நலனை மருத்துவர் மூலம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். 3. உப்பைக் குறைத்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். 4. உயர் குருதி அமுக்கம் இருந்தால் அதைக் குறைக்கும் உணவு, மருந்து வழியான வழிகளைப் பின்பற்ற வேண்டும். இவ்வழிகளால் சிறுநீரக நலனைச் சிறப்பாக நீண்டகாலத்திற்குப் பேண முடியும். - ஜஸ்ரின். மூலங்களும், மேலதிக தகவல்களும்: 1. அமெரிக்க உணவு மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு: மெற்fபோமின் பற்றிய 2022 குறிப்பு. https://www.fda.gov/drugs/fda-drug-safety-podcasts/fda-drug-safety-podcast-fda-revises-warnings-regarding-use-diabetes-medicine-metformin-certain 2. அமெரிக்க சுகாதார ஆராய்ச்சி மையம் (NIH). நாள்பட்ட சிறுநீரக நோய் பற்றிய குறிப்பு. https://www.niddk.nih.gov/health-information/kidney-disease/chronic-kidney-disease-ckd/causes 3. அமெரிக்க சுகாதார ஆராய்ச்சி மையம் (NIH). மெற்fபோமின் பாவனை, சிறுநீரக நலன் பற்றிய விளக்கங்கள். https://www.niddk.nih.gov/health-information/professionals/diabetes-discoveries-practice/metformin-and-chronic-kidney-disease 4. சிறுநீரக அமைப்புத் தொழில்பாடுகள் பற்றிய குறுங்காணொளி: நாள்பட்ட சிறு நீரக நோயோடு தொடர்பில்லா விட்டாலும், விளக்கத்திற்காகப் பார்க்கக் கூடியது. https://www.nature.com/articles/d41586-023-00805-8
- 18 replies
-
- 13
-
- மருத்துவம்
- நீரிழிவு
-
(and 1 more)
Tagged with: