இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
Search the Community
Showing results for tags 'சோழ இளவரசர் ராஜாதித்தன்'.
-
படக்குறிப்பு,தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடைக்கும் வீராணம் ஏரி. கட்டுரை தகவல் எழுதியவர், க.மாயகிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 16 மே 2024 சோழ இளவரசர் ராஜாதித்தனால் 1100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான வீராணம் ஏரி மழைக்காலத்தில் கடல் போல காட்சியளிக்கும். கோடைக்காலத்தில் அவ்வளவு வனப்பாக இல்லையென்றாலும், ஓரளவுக்கு நீர் இருப்பு காணப்படும். ஆனால், இந்த ஆண்டு அந்தப் பிரமாண்ட ஏரி முற்றிலும் வறண்டு காட்சியளிக்கிறது. இந்த ஏரி தமிழ்நாடின் கலாசாரத்திலும் முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காணப்படுவது ஏன்? 'வீர நாராயணப் பேரேரி' இந்த ஏரியின் வரலாற்றையும் அது தற்போது வறண்டு காணப்படுவதற்கான காரணத்தையும் அறிந்துகொள்ள, கடந்த வாரம் ஒரு காலைப் பொழுதில், கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் இருந்து வீராணம் ஏரிக்கரையைச் சென்றடைந்தோம். அங்கு கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவரும் தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் தொல்லியல் துறையின் வருகைதரு பேராசிரியருமான இரா.கோமகன் பிபிசி தமிழுடன் இணைந்து கொண்டார். வீராணம் ஏரியை நோக்கித் தொடங்கிய பயணத்தின் நடுவே அதுகுறித்த வரலாற்றுக் குறிப்புகளை நம்மிடம் அவர் விவரிக்கத் தொடங்கினார். "முதலாம் பராந்தக சோழன் காலத்தில் – அதாவது கி.பி. 910 முதல் 950க்கும் இடைப்பட்ட காலத்தில் - இந்த ஏரி அமைக்கப்படதைப் பல்வேறு கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன." "சிதம்பரம் அருகே திருச்சின்னபுரம் என்ற ஊரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில் ரிஷப மண்டபக் கூரையில் உள்ள கல்வெட்டில் இந்த ஏரி பராந்தக ஏரி எனக் குறிப்பிட்டுள்ளது," என்கிறார் கோமகன். வீராணம் ஏரிக்கு, வீரநாராயணப் பேரேரி (பராந்தக சோழனுக்கு வீரநாராயணன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு) என்று குறிப்பிடும் செய்தி ஆவணம், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் உள்ள சு.ஆடுதுறை என்று அழைக்கப்படும் திருகுரங்காடுதுறை என்னும் ஊரில் உள்ளது. "இதற்கு ராஜேந்திர சோழப் பேராறு என்ற பெயரும் உள்ளதை கீழப்பழூர் ஆலந்துரையார் கோவில் இரண்டாம் பிரகாரம் வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு மூலம் அறியலாம். இது கி.பி.1124ஆம் ஆண்டு விக்கிரம சோழன் காலத்திய கல்வெட்டாகும். கங்கைகொண்ட சோழபுரத்திலும் இந்த ஏரி தொடர்பான கல்வெட்டுகள் உள்ளன," என்று கோமகன் பிபிசி தமிழிடம் விளக்கினார். சோழ இளவரசன் ராஜாதித்தன் அமைத்த ஏரி படக்குறிப்பு,வீராணம் ஏரியில் தண்ணீர் நிறைந்திருந்தபோது எடுக்கப்பட்ட படம் (10 மாதங்களுக்கு முன்பு) ஏரியின் பெயர் குறித்த வரலாற்றை விவரித்த பிறகு, பேராசிரியர் கோமகன் வீராணம் ஏரி வெட்டப்பட்ட வரலாற்றை விவரித்தார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள சேத்தியாதோப்பில் இருந்து காட்டுமன்னார்கோவில் வரை நீண்டு காணப்படும் வீராணம் ஏரி, "முதலாம் பராந்தக சோழனின் மகனான ராஜாதித்தன், தக்கோலப் போருக்குச் செல்லும் வழியில் வட காவிரி என அழைக்கப்பட்ட கொள்ளிடம் ஆற்றின் தண்ணீர் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் தந்தை முதலாம் பராந்தக சோழனின் ஆணைக்கிணங்க இந்த ஏரியை அமைப்பதற்கு முடிவு செய்தார்." பேராசிரியர் கோமகனின் கூற்றுப்படி, ராஷ்டிரகூடர்களின் தாக்குதல்களில் இருந்து நாட்டைக் காக்கவே, தந்தை பராந்தக சோழனால் இந்தப் பகுதிக்கு இளவரசர் ராஜாதித்தன் தலைமையில் படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. தக்கோலப் போரில் மரணம் படக்குறிப்பு,வீரநாராயணன் ஏரி என்பதே காலப்போக்கில் மருவி வீராணம் ஏரி என அழைக்கப்படுவதாகக் கூறுகிறார் பேராசிரியர் கோமகன். வரலாற்றை மேற்கொண்டு விவரித்த கோமகன், "ராஷ்டிரகூடர்கள் மீது போர் தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. அப்போது வீரர்களின் உடல் உழைப்பை மக்களின் பயன்பாட்டிற்குச் செலவிடத் திட்டமிட்ட ராஜாதித்தன், ஏரி ஒன்றை அமைக்க வீரர்களுக்கு உத்தரவிட்டார்." "இதற்கிடையே தக்கோலப் போரும் தொடங்கியது. ஏரி அமைக்கப் பாதி வீரர்களை விட்டுவிட்டு மீதிப் படையுடன் போருக்குச் சென்ற ராஜாதித்தன் போரில் கொல்லப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன." யானை மீது அமர்ந்து போரிட்டு மடிந்த ராஜாதித்தன் 'யானை மேல் துஞ்சியத் தேவன்' என் அழைக்கப்படுவதாகவும் பின்னாளில் அவரது விருப்பப்படி தந்தை முதலாம் பராந்தக சோழனின் மற்றொரு பெயரான வீரநாராயணன் என்பது ஏரிக்கு சூட்டப்பட்டதாகவும்," என்று விவரித்தார் கோமகன். இந்தப் பெயர்தான் காலப்போக்கில் வீராணம் ஏரி என மருவியதாகவும் கூறுகிறார் பேராசிரியர் கோமகன். வறண்டு காணப்படும் ஏரி படக்குறிப்பு,"முதலாம் பராந்தக சோழன் காலத்தில் கி.பி. 910 முதல் 950க்கும் இடைப்பட்ட காலத்தில் வீராணம் ஏரி வெட்டப்பட்டதைப் பல்வேறு கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன," என்கிறார் பேராசிரியர் இரா.கோமகன். வரலாற்றை விவரித்தபடியே சென்ற பயணத்தின் இறுதியில், வீராணம் ஏரி இருக்கும் பகுதியைச் சென்றடைந்தோம். அங்கு கண்ட காட்சிகள், வீராணம் ஏரியின் இன்றைய நிலையை விளக்கின. ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் ஏரியின் இருகரைகளும் வறண்டு காணப்பட்டன. ஏரியின் மண் பாளம் பாளமாக வெடித்திருந்தது. ஏரியில் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட படகுகள் ஏரியின் தரையில் கிடந்தன. தண்ணீரின்றி இறந்த சில மீன்களின் மிச்சங்களையும் அங்கு பார்க்க முடிந்தது. `ராதா வாய்க்கால்` ரங்கநாயகி என்று அழைக்கப்படும் சமூக ஆர்வலரும், ராதா வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவரான ரங்கநாயகி பிபிசி தமிழிடம் வீராணம் ஏரியின் நிலை குறித்துப் பேசினார். “வீராணம் ஏரி மழைக்காலத்திற்கு முன்பாக முறையாகத் தூர்வாரப்படவில்லை. அதனால்தான் தற்போது வறண்டுள்ளது. இந்த நேரத்தில் ஏரியை முழுமையாகத் தூர்வார வேண்டும். பாசன வாய்க்கால்களின் ஷட்டர்களை சீரமைக்க வேண்டும். ஏரியை முழுமையாகத் தூர்வாருவதால் அதிகமாக தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும்,” என்றார். கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரமாக வீராணம் ஏரி உள்ளது. மேலும் இந்த ஏரியிலிருந்து குழாய் மூலமாக சென்னை மாநகராட்சிக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரங்களில் வீராணம் ஏரியும் ஒன்றாகத் திகழ்கிறது. மாவட்ட நிர்வாகத் தரவுகளின் அடிப்படையில், குடிநீர் தேவை மட்டுமின்றி, இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுமட்டுமின்றி சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஆகிய பகுதிகளில் உள்ள 40,669 ஏக்கர் விளைநிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. வீராணம் ஏரியின் பிரதான கரையின் மொத்த நீளம் 16 கி.மீ. ஏரியின் மொத்தச் சுற்றளவு 48 கி.மீ. ஏரியின் அதிகபட்ச அகலம் 5.6 கி.மீ. இந்த ஏரியின் பரப்பளவு 15 சதுர மைல்கள். இந்த ஏரியின் நீர்மட்ட அளவு 47.50 அடி. ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 1,465 மில்லியன் (1.465 டி.எம்.சி) கன அடி. ஏரியின் கிழக்குக் கரையில் 28 மதகுகள் மூலமாகவும், மேற்குக் கரையில் 6 மதகுகள் மூலமாகவும் விவசாயப் பாசனத்துக்கு நீர் செல்கிறது. இந்த ஏரியின் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்களும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். நீர்வளத்துறையின் தரவுகள்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வீராணம் ஏரியில் 712 மில்லியன் கனஅடி நீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு வீராணம் ஏரி முற்றிலுமாக வற்றியுள்ளது. 'தூர்வார நடவடிக்கை வேண்டும்' படக்குறிப்பு,ஆண்டுதோறும் வீராணம் ஏரியில் இருக்கும் நீர் இருப்பு குறைவதால் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறுகிறார் வீரத்தமிழன் ஏரி முழுமையாகத் தூர் வாரப்படாமல் இருப்பதால், அதை நம்பியிருக்கும் பலதரப்பு மக்களும் பாதிப்படுவதாகச் சொல்கின்றனர் பிபிசியிடம் பேசிய விவசாயச் சங்க நிர்வாகிகளான சுரேஷ் மற்றும் மாறன். “நீர்வளத்துறை மூலமாக வீராணம் ஏரியைத் தூர்வாரும் பணி இந்த ஆண்டு நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி நடந்தால் தண்ணீரின்றி விவசாயப் பணிகள் பாதிக்கப்படாது,” என்றார் மாறன். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான வீரத்தமிழன், ஆண்டுதோறும் வீராணம் ஏரியில் இருக்கும் நீர் இருப்பு குறைவதால் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறுகிறார். “விவசாயத்தை விட்டு வேறு தொழில் தேடி விவசாயிகள் செல்லாமல் இருக்கும் வகையில், ஏரியைத் தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார் அவர். விளையாட்டு மைதானமாக மாறிய வீராணம் மேலும் தற்போது ஏரி சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு மைதானமாக மாறிவிட்டதாகக் கூறுகிறார் விவசாயியான வீரத்தமிழன். அதேபோல், மூன்று போகம் செயப்பட்டு வந்த விவசாயம் இரண்டு போகமாகக் குறைந்து, இப்போது ஒரு போகத்திற்கும் வழியில்லாமல் நிற்பதாகவும் அவர் தெரிவித்தார். "முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவித்ததாகக் கூறும் வீரத்தமிழன், அதனால் தங்களுக்கு அதிக பலன் இல்லையென்றும் கூறினார். அதோடு, தற்போதைய அரசிடமும் மனு அளித்துவிட்டுப் பலன்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார். ரூ.270 கோடியில் தூர்வாரும் திட்டம் படக்குறிப்பு,'ஏரியைத் தூர் வாருவதற்காக ரூபாய் 270 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது' என்றார் காந்தரூபன். கொள்ளிடம் வடிநில கோட்டச் செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) முனைவர் காந்தரூபன் பிபிசி தமிழிடம் வீராணம் ஏரியின் நிலை குறித்து விவரித்தார். "நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வீராணம் ஏரியைத் தூர்வார கடந்த 2018-19ஆம் ஆண்டில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சேத்தியாத்தோப்பு கரையிலிருந்து லால்பேட்டை கரை வரை ஒரு பகுதி மட்டும் தூர்வாரப்பட்ட நிலையில், வேறு சில பணிகள் முடிக்கப்படாமல் இருந்தன," என்றார். "ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் முடிக்கப்படாததால் ரூ.4 கோடி நிதி மீண்டும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு தூர்வாரும் சூழல் உருவாகவில்லை. தண்ணீர் இருந்ததால் அப்பணியைச் செய்ய இயலவில்லை. தற்போது தூர்வாருவதற்காக ரூ.270 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது," என்று கூறினார் காந்தரூபன். "ஒவ்வோர் ஆண்டும் 3% அளவு வண்டல் மண் ஏரியில் படிகிறது. எனவே குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தூர்வாரினால் ஏரி நன்றாக இருக்கும். எனவே வண்டல் மண் எடுக்கும் பணிக்காகவும் அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது," என்றும் அவர் தெரிவித்தார். விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை பட மூலாதாரம்,ARUNTHAMBURAJ படக்குறிப்பு,"அரசு விதி 50இன் கீழ் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ள நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது" என அருண் தம்புராஜ் கூறினார். இந்த ஆண்டு வீராணம் ஏரி நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இது தூர்வாருவதற்கு உகந்த நேரம் என்கிறார் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ். இதுகுறித்துப் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசியுள்ளதாகவும் அவர்களும் முன்மொழிவு தயாரித்து வழங்கியுள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "விவசாயிகளின் கோரிக்கையை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன." "அரசு விதி 50இன் கீழ் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பயனடையும் வகையில் இந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்," என்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cyrl4rmnpxro