Search the Community
Showing results for tags 'தச்சுக் கிழிக்கும் தையல்கள் .......!'.
-
தையல்கடை. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(1). சுமதி சதயம் நட்ஷத்திரம் கும்பராசி...... அன்று லீவுநாளானபடியால் சுமதி வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டிருக்கிறாள்.எல்லாம் வளந்திட்டுதுகள் ஒரு வேலையும் செய்கிறதில்லை.பிள்ளைகளுக்கு திட்டும் நடக்குது.தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கு. சுமதி ஒரு பெரிய ஹோட்டலில் முப்பதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மேலாளராக பணிபரிகிறாள்.அவளுக்கு ஒரு வீட்டுக்காரரும் இரண்டு பிள்ளைகளும் ஒரு கணவனும் இருக்கிறார்கள். மூத்தவன் முகிலன் பதினெட்டு வயது அடுத்து வானதி பத்து வயது. அவர்கள் இப்போதும் வாடகை வீட்டில் இருப்பதால், இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும் அவளின் வீட்டுக்காரர் யார் என்று.......!கணவன் சுரேந்தரும் வீடுகள் விற்கும் வாங்கும் ஒரு ஏஜென்சியில் மேலாளராக இருக்கிறார். சுமதிக்கு நல்ல ஊதியமும் காரும் கொம்பனி கொடுத்திருக்கு. இவற்றைவிட அவளுக்கு நன்றாகத் தையல் வேலை தெரியும். அதனால் வீட்டில் ஒரு தனியறையில் தையல் மிசின் வைத்து அக்கம் பக்கம் தெரிந்தவர்கள், உறவினர்களுக்கெல்லாம் ஆடைகள் நவீன மாடல் ப்ளவுஸ்கள் தைத்து கொடுத்து உபரியாக சம்பாதிக்கிறாள். இதெல்லாம் இருந்தபோதிலும் அவளுக்கென்று ஒரு ஆசை இந்த "லா சப்பலில்" சொந்தமாக ஒரு தையல்கடை போடவேண்டும் என்று. அதற்குத் தோதாக சென்றவாரம்தான் எதேச்சயாக அவள் சேகரிடம் கட்டிய சீட்டு ஒன்று சீட்டு கேட்டு ஏற்றுகிற வல்லுநர்கள் வரத் தவறியதால் குறைந்த கழிவில் சுமதிக்கு கிடைத்திருக்கு. அந்தப் பணம் இன்னும் சில நாட்களில் கைக்கு வந்து விடும்.என்ன ஒரு பிரச்சினை என்றால் அதை அப்படியே வங்கியிலும் போட முடியாது. நூற்றியெட்டு கேள்விகள் கேட்பாங்கள். இன்றைய நாளில் வீட்டில் வைத்திருப்பதும் பிரசினைதான்.கள்ளர்களுக்கும் உளவாளிகள் உண்டு.அவங்களும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களைக் கொண்டுவந்து வெகு சுளுவாக பணம் நகைகள் மட்டும் எடுத்துக் கொண்டு போயிடுறாங்கள். பக்கத்தில ஐ போன் 14 இருந்தாலும் தொடுகிறதில்லை. வீடும் அலுங்காமல் குலுங்காமல் பூட்டியபடியே இருக்கும். ஆனால் சுமதிக்கு நகைகள் பற்றி பயமில்லை. அவையெல்லாம் வங்கிப் பெட்டியில் ஆழ்நிலைத் தியானத்தில் இருக்கின்றன. இவன் மூத்தவன் முகிலன் மட்டும் ஒரு பெட்டையாய் பிறந்திருந்தால் ஒரு சாமத்தியவீடு செய்து அதைக் காரணம் காட்டியாவது கொஞ்சப் பணத்தை வங்கிகளில் போட்டிருக்கலாம்.இப்போதைக்கு அதற்கும் வழியில்லை. அவனுக்கும் இப்ப பதினெட்டு வயதாகின்றது. ஒரு காதில் கடுக்கணும் போட்டுக்கொண்டு உரித்த சேவல் மாதிரி ஒரு மோட்டுச் சைக்கிளில் யுனிக்கு போய்வாறார். சுமதியின் கை பழக்கத்தில் வேலைகளை பர பர வென்று செய்ய மனம் தனக்குள் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கு. உடனே மூளைக்குள் பளிச் என ஒரு யோசனை, ஏன் நான் இந்தப் பணத்தைக் கொண்டு "லா சப்பலில்" ஒரு கடை போடக் கூடாது. நாலு தையல் மிசின் வாங்கிப் போட்டு மூன்று நாலு ஆட்களை சம்பளத்துக்கு வைத்துக்கொண்டு வியாபாரம் ஆரம்பிக்கலாம் தானே. மெலிதாகத் தோன்றிய எண்ணம் நேரம் செல்ல செல்ல விருட்ஷமாய் வளர்ந்து கொண்டிருக்கு. அப்போது செற்றியில் கிடந்த அவளது போன் ரிங்டோன் " ரஞ்சிதமே ரஞ்சிதமே " என்று அழைக்கிறது. செய்த வேலையை அப்படியே போட்டு விட்டு அங்கு போகிறாள். கவிதாதான் அழைப்பு எடுத்திருந்தாள். ஓ .கவிதா எப்படி சுகம் என்று தொடங்கி அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள் எல்லாரையும் அலசிக் கழுவிக் கொண்டிருக்கும் பொழுது தொலைகாட்சியில் ஒரு ஐயா அங்கவஸ்திரம் அணிந்து வீபூதி சந்தனம்,குங்குமம் எல்லாம் போட்டுக் கொண்டு இராசிபலன் சொல்லுகிறார்.அப்போது வீட்டின் அழைப்புமணி ஒலிக்கிறது. பொறடி கவிதா ஆரோ பெல் அடிக்கினம்,நான் பிறகு எடுக்கிறன். என்ர வீட்டுக்காரர்தான் வாறதெண்டவர் அவராய்த்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டு கதவைத் திறக்க அவர்தான் நிக்கிறார். பொறுங்கோ அங்கிள் கவர் எடுத்துக் கொண்டு வாறன் என்று சொல்லி உள்ளே சென்று செக் இருந்த கவரைக் கொண்டுவந்து அவரிடம் குடுத்து விட்டு அவர் சொன்ன "A " ஜோக்குக்கு சிரித்து கதைத்துக் கொண்டிருக்க.... இராசிபலனில், எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் கும்பராசி அன்பர்களே ! உங்களுக்கு ஏழரை சனியின் கடைக்கூறு நடைபெறுவதால் மிச்சம் இருக்கும் இரண்டு வருடங்களும் நீங்கள் மிகக் கவனமாய் இருக்க வேண்டும். மேலும் இன்னும் இரு மாதங்களில் குருபகவான் ஆறாம் வீட்டில் மறைவதால் சனியும் உக்கிரேன் மாதிரி உக்கிரமாக உங்களை வாட்டும். பிரச்சினைகளும் எந்தப் பக்கம் என்றில்லாமல் ரஷ்ய ஏவுகணைகள் போல் அடுத்தடுத்து வந்து தாக்கும். அதனால் இப்ப இருக்கிற பணத்தை, சொத்துக்களை பாதுகாத்து வைத்திருந்தாலே போதுமானது.இரு வருடங்களுக்கு புதிதாய் முதலீடுகள் செய்வதை தவிர்த்தல் நல்லது.சதயம் நட்ஷத்திரத்தில் பிறந்த கும்பராசிக்காரர்களே உங்களின் கும்பம் ஓடிகிற அளவுக்கு சுமை இருப்பதால் எதிலும் கவனம் தேவை........தொடர்ந்து அடுத்து அழகிய கண்களையுடைய மீனராசி அன்பர்களே.........! அப்போது அந்த பலூன் ஜோக்குக்கு சிரித்தவாறு உள்ளே வந்த சுமதி அட கும்பராசிக்கு சொல்லி முடிஞ்சாச்சுது போல, ச் சா.... மிஸ் பண்ணிட்டன் என்று சொல்லியபடி செற்றியில் அமர்கிறாள். சற்று நேரத்தில் அவளது கணவன் சுரேந்தர் வேலையால் அலுத்துக் களைத்து வீட்டிற்குள் வருகிறார். இன்னும் தைப்பார்கள்........! 🥻