Search the Community
Showing results for tags 'தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்'.
-
தமிழருக்கு தேசிய மக்கள் சக்தி காட்டும் திசை தெளிவாக இருக்க வேண்டும் October 19, 2024 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — 21.09.2024 அன்று நடைபெற்று முடிந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்காவைத் தெரிவு செய்ததன் மூலம் இந்நாட்டு அரசியலில் ஒரு முறைமை மாற்ற-பண்பு மாற்ற எதிர்பார்ப்பைக் குறிப்பாக ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகமற்ற-சட்டம் ஒழுங்கைப் பாரபட்சமின்றி முறையாகப் பேணக் கூடிய-வாரிசு அரசியலற்ற ஓர் அரசாங்கம் அமைய வேண்டுமென்ற அவாவை தென்னிலங்கைச் சிங்களப் பெரும்பான்மைச் சமூகம் வெளிப்படுத்தியுள்ளது. அதேவேளை வடக்குகிழக்கு மாகாணத் தமிழர்களைப் பொறுத்தவரை கடந்த ஜனாதிபதித் தேர்தல்களைவிடவும் இம்முறை நடந்துள்ள தேர்தலில் குறிப்பிட்ட தொகையினர் அனுரகுமார திசநாயக்காவுக்கு வாக்களித்தமைக்குப் பிரதான காரணங்களாவன. தமிழ்த் தேசியக் கட்சிகள் என நாமம் சூட்டப்பட்ட கட்சிகளின் தேர்தல்மைய-ஏமாற்று-கதிரைக் கனவு அரசியலின் மீது ஏற்பட்ட வெறுப்பும் விரக்தியும் அடிப்படைக் காரணம். மற்றக் காரணம், கடந்த காலங்களில் வலதுசாரிக் கட்சிகள் நிறுத்திய வேட்பாளர்களுக்கு வாக்களித்ததன் மூலம் எந்த நன்மைகளையும் அடையமுடியவில்லை. அதனால் மாற்றம் வேண்டி ஒரு இடதுசாரித் தலைவருக்கு வாக்களித்துள்ளனர். இதன் எதிர்பார்ப்பு இனவாதச் செயற்பாடுகளற்றதோர் அரசாங்கமே தவிர இனப்பிரச்சனைக்கான திருப்தியான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையல்ல. இன்னொரு காரணம், முழு நாட்டிலும் ஏற்படும் முறைமை மாற்றத்தினால் அதாவது அம் முறைமை மாற்றத்தின் அம்சங்களான ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகமற்ற அரச நிர்வாகம்-சட்டம், ஒழுங்குகள் பாரபட்சமின்றி முறையாகப் பேணப்படும் காவல்துறை மற்றும் நீதித்துறைக் கட்டமைப்பு-பொருளாதாரச் சீர்திருத்தங்களினால் அடையக்கூடிய வாழ்வாதார நன்மைகள் என்பன ‘நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்குமாங்கே பொசிவது போல்’ வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்கும் இலங்கையர் என்ற ரீதியில் சுவறும் என்கின்ற எதிர்பார்ப்பு. உண்மையில், வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களில் குறிப்பிட்ட தொகையினர் வாக்களித்தது ‘தேசிய மக்கள் சக்தி’ என்ற அரசியல் கட்சிக்கு அல்ல; அதன் தலைவர் அனுரகுமார திசநாயக்கா என்ற ஆளுமை மீது ஏற்பட்ட அரசியல் வசீகரமும் நம்பிக்கையுமே அவர்களைத் ‘திசை காட்டி’ச் சின்னத்துக்கு வாக்களிப்பதற்கான அகத்தூண்டலை ஏற்படுத்தியதே தவிர மாறாகக் கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகளைக் கற்றுணர்ந்தனாலோ மேலும் கட்சி உறுப்பினர்களின் தேர்தல் பரப்புரையினாலோ அல்ல. மட்டுமல்லாமல், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஆரம்பத்தில் தானாகவே முன்வந்து 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் செய்யப் போவதாக அரசியல் கட்சிகளைக் கூட்டி அறிவிப்புச் செய்தவேளை அதற்குத் தான் ஆதரவு என அனுரகுமார திசநாயக்கா அறிவித்திருந்தமையும்-ஜனாதிபதித் தேர்தலின்போது தனது ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென்றும் அதுவரைக்கும் தற்போதைய அரசியலமைப்பின் அங்கமாகவுள்ள 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படுமென்றும் உறுதியளித்திருந்தமையும் அனுரகுமார திசநாயக்கவுக்கு வாக்களிப்பதற்கான அகத்தூண்டலை ஏற்படுத்தியிருக்கக்கூடும். ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகங்களற்ற நாடு ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் தேவைதான். அதில் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. ஆனாலும், வடக்குக் கிழக்குத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்நாட்டுத் தேசிய இனங்களிலொன்று என்ற அடிப்படையில் குறைந்தபட்சம் தமது அடையாளத்தையும் இருப்பையும் இழந்துவிடாமல் ஐக்கிய இலங்கை எனும் சட்டகத்துக்குள் பேணிப் பாதுகாத்து வளர்த்தெடுக்கக்கூடிய நிரந்தரமான அதிகாரப் பகிர்வு பொறிமுறையை அரசியலமைப்பு ரீதியாக அவாவி நிற்கிறார்கள் என்பதும் நிதர்சனமே. இலங்கைத் தேசியத்தின் இணைந்த கூறாக தமிழ்த் தேசியம் இருக்கலாமே தவிர தமிழ்த் தேசியம் இலங்கைத் தேசியம் என்ற பெயரில் பௌத்த சிங்களப் பேரினவாத மேலாதிக்கக் கருத்தியலுக்குள் கரைந்து போவதற்கு அனுமதிக்க முடியாது. இத்தகைய தெளிவான எண்ணப்பாட்டின் அடிப்படையில்தான், ரணில் விக்கிரமசிங்க வெல்லக்கூடும் என்று அவருக்கு வாக்களித்தவர்களுள்-சஜித் பிரேமதாச வெல்லக்கூடுமென்று எண்ணியும் தமிழரசுக் கட்சி கேட்டுக் கொண்டதனாலும் அவருக்கு வாக்களித்தவர்களுள்- ‘போலி’த் தமிழ்த் தேசியவாதிகள் தமது வார்த்தை ஜாலங்களால் ஊட்டிய உணர்ச்சியிலும் உசுப்பேற்றலிலும் எடுபட்டுத் தமிழ்ப் பொது வேட்பாளரின் ‘சங்கு’ச் சின்னத்துக்கும் வாக்களித்தவர்களுள் கணிசமான தொகையினர் தேர்தலில் அனுரகுமார திசநாயக்கா வெற்றி பெற்றதைக் கண்டு அவருக்கு வாக்களித்திருந்திருக்கலாமே என்று ஆதங்கப்பட்டவர்களும் உண்டு. ஏனெனில், இடதுசாரித்துவம் எப்போதுமே தேசிய இனமொன்றின் தனித்துவமான (சுய நிர்ணய உரிமை உள்ளடங்கலான) அரசியல் அபிலாசைகளை அங்கீகரித்தே வந்துள்ளது. தற்போது அனுரகுமார திசநாயக்க தலைமை தாங்கும் தேசிய மக்கள் சக்தியின் தாய்க் கட்சியான ஜே வி பி (ஜனதா விமுக்திப் பெரமுன- மக்கள் விடுதலை முன்னணி) யை அதன் ஆரம்ப காலகட்டத்தில் (1965-1989) ரோகண விஜேவீர தலைமை தாங்கிய காலத்திலும் சரி அதற்குப் பின்னர் 1990 இலிருந்து 2014 வரை தலைமை தாங்கிய சோமவன்ச அமரசிங்க காலத்திலும் சரி இறுதியாக 2014 இலிருந்து 2024 ஜனாதிபதி தேர்தல் வரை அனுரகுமார திசநாயக்க தலைமை தாங்கியபோதிலும் சரி ஜே வி பி ஐத் தமிழ் மக்கள் அதன் கடந்த காலத்துத் தமிழர் விரோத செயற்பாடுகளின் காரணமாக எதிரியாகவே நோக்கி வந்தனர். அதில் உண்மையும் உண்டு. ஆனால் ஜே வி பி யானது அனுரகுமார திசநாயக்க தலைமையில் தேசிய மக்கள் சக்தி (என் பி பி) யாக பரிணாமம் பெற்ற போது அதனைத் திருந்திய-இனவாதமற்ற ஜே வி பி யாக நோக்கத் தலைப்பட்டதின் விளைவுதான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசநாயக்காவுக்கு விழுந்த வடக்கு கிழக்குத் தமிழர்களின் வாக்குகளாகும். இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா தலைமையிலான இடதுசாரி அரசாங்கத்தை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலினூடாக மேலும் பலப்படுத்த வேண்டுமென்ற எண்ணமும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழர் அரசியலிலும் மாற்றத்தை வேண்டி நின்றவர்களிடையே தலை தூக்கியிருந்தது. இதற்குக் காரணம் தமிழ்த் தேசியம் பேசிய அரசியற் கட்சிகளிடையேயும் கட்சிகளுக்குள்ளேயும் ‘கதிரை’களுக்காக ஏற்பட்ட குத்து வெட்டுக்களும்-அபிவிருத்தி பற்றிப் பேசிய இணக்க அரசியல் கட்சிகளிடம் நிலவிய ஊழல் பலவீனங்களும் இவ்விரு தரப்பினர் மீதும் மக்களுக்கு அசூசையை ஏற்படுத்தியிருந்ததால் அனுரகுமாரதிசநாயக்காவின் தலைமையிலான ஆட்சியைத் தேர்தலின் ஊடாக மேலும் வலுப்படுத்த வேண்டுமென எழுந்த எண்ணமும் ‘அனுர அலை’ மேலெழக் காரணமாயிற்று. ஆனால், வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரை இந்தச் சாதகமான அலையை தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகம் அரசியல் மதிநுட்பத்துடன் பயன்படுத்தத் தவறவிட்டதுபோல்தான் படுகிறது. அல்லது வடக்குக் கிழக்குத் தமிழர்களை ஏனோ தானோ என்ற மனப்போக்கில் கையாள முற்படுகிறதா என்ற கேள்வி மேலெழும்புகிறது. ஏனெனில், வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள யாழ்ப்பாணம்- கிளிநொச்சி, வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல (அம்பாறை) ஆகிய ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் திருகோணமலை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்குரிய தேசிய மக்கள் சக்தியின் வேட்பு மனுக்களில் இடம்பெற்றுள்ள தமிழ் வேட்பாளர்களை நோக்கும்போது அவர்கள் வாக்காளர்களை வசீகரிப்பவர்களாக-மக்களிடையே பிரபல்யம் பெற்றவர்களாக-ஏற்கெனவே அரசியல் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டவர்களாக-சமூக அமைப்புகளைப் பின்புலமாகக் கொண்டவர்களாக இல்லையென்பதே பரவலான அபிப்பிராயம். மொத்தத்தில் அவர்களை ‘முகம் தெரியாதவர்கள்’ என்றே மக்கள் அழைக்கிறார்கள். இந்த விடயத்தில் வடக்கு கிழக்குத் தமிழர்களின் மனங்களை தேசிய மக்கள் சக்தி வெல்லத் தவறிட்டது. மக்கள் கட்சிக்காக மட்டுமே வாக்களிக்கமாட்டார்கள். கட்சிக்காக வாக்களிப்பவர்கள் சிறு தொகையினரே. பெருந்தொகையினர் வேட்பாளர்களின் தகுதி தராதரங்கள்-அவர்களின் மக்களுடனான ஊடாட்டம்-குண நலன்கள் மற்றும் நம்பகத்தன்மை என்பவற்றைக் கணக்கிலெடுத்துத்தான் வாக்களிப்பார்கள். அதுவே வெற்றி வாய்ப்பைத் தரும். இவைகளுக்கு மத்தியில் ஜே வி பி யின் பொதுச் செயலாளர் ரில்வின்சில்வா தமிழ் மக்களுக்கு 13 ஆவது திருத்தமும் அதிகாரப் பகிர்வும் அவசியமில்லை எனும் சாரப்பட ஊடக அறிவிப்புச் செய்துள்ளமை ‘தேசிய மக்கள் சக்தி’குறித்த எதிர்மறையான எண்ணங்களுக்கு வடக்கு கிழக்குத் தமிழர்களை இட்டுச் சென்றுள்ளது. இந்த எதிர்மறைத் தாக்கங்களை ஈடுசெய்ய தேசிய மக்கள் சக்தி தேர்தலுக்கு முன்பும் தேர்தலுக்குப் பின்னும் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகமற்ற-பொருளாதார மீட்சிபெற்ற இலங்கையை மட்டுமல்ல தமது அடையாளத்தையும் இருப்பையும் பேணிப் பாதுகாத்து வளர்த்தெடுக்கக்கூடிய இனவாதமற்றதோர் இலங்கையையும்தான் இலங்கைத் தமிழ்த் தேசிய இனம் காணத் துடிக்கின்றது. இதற்குத் தேசிய மக்கள் சக்தி காட்டும் திசை தெளிவானதாகவிருந்தால்தான் வடக்கு கிழக்குத் தமிழர்கள் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க முன் வருவார்கள். https://arangamnews.com/?p=11345