Search the Community
Showing results for tags 'தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ'.
-
இலங்கை இனமுரண்பாட்டின் திருப்புமுனை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் - 01 சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகள் மிகச்சில! அவை ஒவ்வொன்றும் வரலாற்றின் வழித்தடத்தில் விட்டுச்சென்ற செய்திகள் சிந்தனைக்குரியன. 75 ஆண்டுகால சுதந்திர இலங்கையின் வரலாற்றின் பெரும்பகுதியை, இனமுரண்பாடு நிறைத்திருப்பது தற்செயலானதல்ல. சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையிலேயே இனமுரண்பாட்டுக்கான வித்துகள் இருந்தன. மகாவம்சம் என்ற புனைவு வரலாறாகக் கருக்கொண்டதும், அதன் வழிப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையும் இதன் தொடக்கப் புள்ளிகள். 19ஆம் நூற்றாண்டு இறுதிப் பகுதிகளில் ‘கொச்சிக்கடை கலவரம்’ எனப்படும் பௌத்த-கத்தோலிக்க மோதலும் 1915இல் நடந்தேறிய சிங்கள (பௌத்த) - முஸ்லிம் கலவரங்களும் இலங்கையில் சிங்கள பௌத்த பெரும்பான்மைத் தேசியவாதம் சகிப்புத் தன்மையற்றது என்பதையும் இனத்தை விட மதம், அரசியலில் முக்கிய பங்கு வகித்ததை நாம் உணரலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இலங்கை தேசிய காங்கிரஸில் ஏற்பட்ட முரண்பாடுகள், சுதந்திர இலங்கையில் பன்மைத்துவ சமத்துவ சமூகம் என்பது சவால் நிறைந்தது என்பதைக் காட்டி நின்றது. சுதந்திர இலங்கையின் முதலாவது அபிவிருத்தித் திட்டங்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மையப்படுத்தி இருந்தன. மலையகத் தமிழரின் குடியுரிமை பறிப்பு, ஜனநாயகப் படுகொலையின் தொடக்கத்துக்குக் கட்டியம் கூறியது. இந்தப் பின்புலங்களில், சுதந்திரமடைந்து 35 ஆண்டுகளின் பின்னர், 1983 இல் நடந்தேறிய இனக்கலவரம், இலங்கையை முழுமையாகத் திருப்பிப்போட்டது. ‘ஆடிக்கலவரம்’, ‘ஜூலைக் கலவரம்’ எனப் பலவாறு இது அழைக்கப்படுகிறது. இந்தக் கொடுநிகழ்வை, ‘கலவரம்’ என்று சுட்டுவதே தவறானது. ஆனால், வரலாற்றில் அது அவ்வாறு தான் அழைக்கப்பட்டு, பொதுப்புத்தி மனநிலையில் ஒரு கலவரவமாகவே நிலைபெற்றுள்ளது. இதன் பின்னாலுள்ள அரசியலும் வரலாறும் கவனிப்புக்கு உள்ளாகவில்லை. இக்கொடூரம் நடந்தேறி இவ்வாண்டுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த 40 ஆண்டுகால வரலாற்றை இணைக்கின்ற ஒரு பொது இழை, இனமுரண்பாடு ஆகும். இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கும் இனமுரண்பாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல், இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கவியலாது. இன்றைய நெருக்கடியை, வெறுமனே பொருளாதாரப் பிரச்சினை என்ற ஒற்றைப் பரிமாணத்துக்குள் அடக்கிவிட முடியாது. ஆனால், அதை அவ்வாறு பார்க்கவே அரசாங்கமும் அதிகாரவர்க்கமும் விரும்புகிறது. கதையாடல்கள் அதன் வழிப்பட்டே அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் தேசியவாத எழுச்சியின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், வர்க்கப் பரிமாணத்தையும் ஒடுக்கப்பட்டோரின் பார்வையில் வரலாறு சொல்லப்படாமையையும் அவதானிக்கலாம். இது தற்செயலானதல்ல; வரலாறு என்பது வெறுமனே நிகழ்வுகளின் பதிவு அல்ல. அதில் எது பதியப்படுகிறது, எது விடுபடுகிறது, எது திரித்தோ மாற்றியோ எழுதப்படுகிறது என்பன எல்லாம் அதிகாரம் பற்றிய கேள்வியுடன் தொடர்புடையவை. நமக்குச் சொல்லப்படுகிறவை உண்மைகளா, பொய்களா என்பது ஒரு புறமிருக்க, அவை ஏன் குறிப்பிட்ட விதங்களில் சொல்லப்பட்டுள்ளன என்றும் தொடர்ந்தும் சொல்லப்பட்டு வருகின்றன என்றும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். எழுதப்பட்ட வரலாறு குறிப்பிட்ட சில வர்க்க நலன்களால் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளது. சமூக விடுதலைக்கான போராட்டம் தவிர்க்க முடியாமலே வரலாற்றையும் விடுவிக்கிற ஒரு போராட்டமாகவும் அமைய நேருகிறது. நாம் விரும்புகிற மனித சமத்துவமுள்ள ஒரு சமூகத்தை அடைய வேண்டுமாயின், சமூக மாற்றங்கள் எவ்வாறு நேர்ந்தன? அந்த மாற்றங்களின் பின்னாலிருந்த இயங்கு சக்திகள் எவை? அவற்றை இயலுமாக்கிய சூழ்நிலைகள் எவை என்ற உண்மைகளின் அடிப்படைக் கூறுகளை, எழுதப்பட்ட வரலாற்றுக்குள் இருந்து வடிகட்டி எடுக்க வேண்டிய தேவை நமக்குள்ளது. வரலாற்றுத் திரிப்பும் மறைப்பும் நலன்களைப் பேணும் முக்கிய கருவிகளாக உள்ளன. இனங்களுக்கு இடையிலான பகைமையாக வரலாறு சித்திரிக்கப்படுகிற போது, உண்மையாகவே சமூக முரண்பாடுகளின் வேராக இருந்து வந்துள்ள அடிப்படையான சமூகப் பிரிவுகள், அதாவது சமூக ஏற்றத்தாழ்வுகளை அடையாளப்படுத்துகிற பிரிவுகள் மறைக்கப்படுகின்றன. இந்தப் பின்புலத்திலேயே இத்தொடர் 1983இல் நடந்தேறிய திட்டமிட்ட வெறிச்செயலின் பின்னணி, அதை சாத்தியமாக்கிய காரணிகள், அது ஏற்படுத்திய தாக்கம் போன்றவற்றை நோக்க விளைகிறது. எல்லாவற்றிலும் மேலாக, இலங்கையர்களாக நாம் இந்தக் கொடுஞ்செயலில் இருந்து கற்றுக் கொள்ளாத பாடங்கள் எவை? சிறுபான்மைச் சமூகங்கள் இன்னமும் மோசமான குறுந்தேசியவாத அரசியலின் வழிப்பட்டு சீரழிவதற்கான அடிப்படைகள் எவை? ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னமும் மேலும் ஒடுக்கப்படுவதையும் அதற்கு சிறுபான்மைத் தேசியவாதங்களின் முக்கியமான பங்கு யாது ஆகிய கேள்விகளையும் ஆழ நோக்க விளைகிறது. சமூகத்தில் ஆழ வேரூன்றிய பண்பாட்டு வேர்களைக் களைவதில் நேரடியாகக் குறுக்கிடுவதால் வரக்கூடிய எதிர்ப்புகளைக் கருத்தில் கொண்டே இலங்கையின் கொலனிய நிர்வாகம் பௌத்த, சைவ மறுமலர்ச்சி இயக்கங்களுக்குத் தடையாகத் தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. கொலனியத்தைத் தூக்கி எறியாமல், சமூக அடையாளங்களையும் நலன்களையும் வற்புறுத்துகிற நோக்கிலேயே பௌத்த, சைவ, இஸ்லாமிய மீளெழுச்சிகள் நிகழ்ந்தன. இவற்றிடையே குறிப்பிடத் தக்க ஒற்றுமைகள் இருப்பினும் முக்கியமான வேறுபாடுகளும் இருந்தன. இது பேசப்பட வேண்டியதொன்று. அதைப்போலவே, இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதி வரை சிங்களவரிடையே சாதி அடிப்படையிலான அரசியல் போட்டி இருந்த போதும், தமிழ்-சிங்களவர் என்ற அடிப்படையிலான முரண்பாடு முன்னணிக்கு வரவில்லை. இனத்தை விட, மதம் அரசியலில் முக்கிய பங்கு வகித்தது. சாதியும் மதமும் மொழியை விட முக்கியமான அடையாளங்களாகச் செயற்பட்டன. தமிழர் - சிங்களவர் என்ற மொழிவழி வேறுபாட்டின் அடிப்படையில் அரசியல் விருத்தி பெறாமைக்கான காரணம், எந்த விதமான பண்பாட்டு ஒற்றுமைகளையும் விட மேலாக, அந்த இரு அடையாளங்களுக்கும் உட்பட்ட மேட்டுக் குடிகளுக்கும் ஓரளவு வசதி படைத்த பகுதியினருக்கும் இடையே போட்டிக்குரியதாகப் பொதுவாக எதுவுமே இல்லாமை என்பதை நாம் கவனிக்க வேண்டும். சிங்கள கொவிகம, தமிழ் வேளாள மேட்டுக் குடிகளிடையே வலுவான நல்லுறவு இருந்தது. இது இன்றுவரை பேசப்படாமல் தவிர்க்கப்படுகின்ற ஒன்று! பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலும் தேசிய அரசியல் உருவாக்கத்தில் பங்களிக்கக் கூடியவர்களாகத் தமிழரும் சிங்களவருமே முன்னிலையில் நின்றனர். எனினும் வர்க்கமும் சாதியும் அவர்களிடையில் இருந்த உறவைத் தீர்மானித்தன என்பதை, கொலனிய ஆட்சியின் கீழான சீர்திருத்தங்களின் பின்னர் தெளிவாகவே காண இயலுமாயிற்று. கொலனிய ஆட்சியின் கீழ் கொலனிய எசமானர்களின் தயவில் ஆட்சி அதிகாரங்களில் சிறியதொரு பங்கு பெற்ற சில குடும்பங்கள், தொடர்ந்தும் ஆதிக்கத்தில் இருந்தன. அந்த எண்ணிக்கையை விரிவுபடுத்துகிற சூழ்நிலை ஏற்பட்ட போது, அவ்விரிவாக்கத்தில் சாதியும் வர்க்கமும் முக்கிய பங்கு வகித்தன. ஏன் அவை முன்னின்றன? அதற்கான காரணம் என்ன? இது எவ்வாறு இலங்கை இனமுரண்பாட்டில் சாதாரண உழைக்கும் மக்களைப் பாதித்தது என்ற வினா விரிவான ஆய்வுக்கு உட்பட்டதில்லை. இவற்றைத் தவிர்த்து, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையையோ அதைப் புதிய திசைவழிக்கு இட்டுச்சென்ற 1983 வன்செயல்களையோ நோக்கவியலாது. இவ்வன்செயல்கள் தவிர்த்திருக்கக் கூடியவை; ஆனால், அதை அரசாங்கம் விரும்பவில்லை. இந்நிகழ்வு, இலங்கையின் அயலுறவுகளில் பாரிய மாற்றங்களை உண்டுபண்ணியது. மேற்குலகக் கவனம், தமிழர்களுக்கு ஆதரவானது என்ற மாயை வலுப்பட்டதன் கொடிய விளைவுகளை, முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற ஆயுதப்போராட்டம் தெட்டத் தெளிவாகக் காட்டியது. ஆனால், இன்று அந்தக் கொடிய நினைவுகளின் 14 ஆண்டுகளின் பின்னரும் மேற்குலகின் மீதான மாயை இன்னும் வலுவாகவுள்ளது; இது வருந்தத்தக்கது. தமிழ்ச் சமூகம், இந்த கையறு நிலைக்கு ஏன் வந்தது? இதற்கு வெறுமனே சிங்கள-பௌத்த பெருந்தேசியவாத அகங்காரம் மட்டுமே காரணமா? இது கவனமாகவும், பொறுப்புணர்வுடன், சுயவிமர்சனத்துடனும் தமிழ்ச் சமூகம் கேட்கவேண்டிய கேள்வி. இக்கேள்வியை அமைதியாகக் கடந்துபோவது, கொல்லப்பட்ட மக்களுக்கும் விடுதலைக்காக உயிர்நீர்த்தோருக்கும் இழைக்கும் அநீதி. சிங்கள-பௌத்த பேரினவாதத்தை நாம் எவ்வாறு எதிர்கொண்டோம்? இதில் நமது தலைமைகளின் பங்கென்ன? இன்னமும் தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு என்று புதிய கதைகளோடு தொடரப்போகிறோமா? உடல்களின் மீது அரசியல் செய்வது புதிதல்ல. அதைத் தொடக்கி வைத்ததும் 1983 தான். நாம் கற்காத பாடங்களையே கடந்த 40 ஆண்டுகால வரலாறு காட்டி நிற்கிறது என்பதே பெருந்துயர். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கை-இனமுரண்பாட்டின்-திருப்புமுனை/91-317786
- 5 replies
-
- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
- கறுப்பு ஜூலை
-
(and 1 more)
Tagged with:
-
ஆபிரிக்காவின் மைய நீரோட்டத்தில் அதிவலது தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 24 உலகின் பல்வேறு பிராந்தியங்களில் அதிவலதுசாரி, தனக்கேயுரிய தனித்துவமான குணவியல்புகளுடன் செயற்படுகிறது. இதற்கு ஆபிரிக்காவும் விலக்கல்ல! ஆபிரிக்க அரசியல் நிலப்பரப்பானது தீவிர வலதுசாரி சித்தாந்தங்களின் சொந்த வடிவங்களைக் கொண்டுள்ளது. இதற்கான சிறந்த உதாரணமாகக் சொல்லப்படுவது 1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை. இதேபோல, ஆபிரிக்காவெங்கும் அதிவலதுசாரித்துவத்தால் உந்தப்பட்டு, பல வன்முறைகளும் கொலைகளும் நடந்தேறியுள்ளன. ஆபிரிக்க சமூகங்களின் கட்டமைப்பு, சில வழிகளில் அதிவலதுசாரித்துவத்துக்கு வாய்ப்பானதாக உள்ளது. ஆபிரிக்கக் கண்டமானது, பல இனக்குழுக்களைக் கொண்டது. வளங்களைக் கொள்ளையடிக்கும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் ஆசைக்குப் பலியான ஆபிரிக்கா, 1883இல் கொலனித்துவவாதிகள் ஆபிரிக்காவை, தங்கள் இஷ்டப்படி பிரித்துக் கொண்டார்கள். இதனால் இனக்குழுக்கள் சிதறுண்டன. குறித்த நிலப்பரப்பில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் துண்டாடப்பட்டதால், சிறுபான்மையாயினர். இன்னொருபுறம், உருவாக்கப்பட்ட தேசஅரசின் விளைவால் சிறுபான்மை இனக்குழு பெரும்பான்மையானது. இவை இனத்துவ மோதல்களுக்கு அடிப்படையாக அமைந்தன. 1994ஆம் ஆண்டில், சிறிய கிழக்காபிரிக்க நாடான ருவாண்டா, மிகக் கொடூரமான இன மற்றும் அரசியல் வன்முறை அலைகளால் கிழிக்கப்பட்டது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலப்பகுதியில், பயிற்சி பெற்ற போராளிகளுடன் பணிபுரியும் ருவாண்டாவின் ஆயுதப் படைகள், நாட்டின் 7.7 மில்லியன் மக்களில் ஒரு மில்லியன் மக்களை திட்டமிட்டு படுகொலை செய்தனர். வன்முறையின் முதன்மை இலக்கு சிறுபான்மை டுக்ஸி இனக்குழுவைச் சேர்ந்தவர்களேயாவர். அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து துரத்தப்பட்டு, தேவாலயங்கள் மற்றும் பிற பொது கட்டடங்களில் பாதுகாப்புக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் வரன்முறையாக கொலை செய்யப்பட்டனர். இந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்ட டுக்ஸி மக்களின் சரியான தொகையை துல்லியமாக கண்டறிய முடியாவிட்டாலும், நாட்டில் வாழும் டுக்ஸியினரில் குறைந்தது 80 சதவீதத்தினர் தங்கள் உயிரை இழந்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொடூரமான இரத்தக்களரிக்குப் பிறகு, ருவாண்டாவின் கிறிஸ்தவ தேவாலயங்கள் இனப்படுகொலையை எதிர்க்கவோ தடுக்கவோ இல்லை என்றும் இவை வன்முறையில் தீவிரமாக உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான ஆய்வுகள், அதிர்ச்சிகரமான ஓர் உண்மையைச் சொல்லியது. 1994 இனப்படுகொலையை நோக்கித் தள்ளிய அரசியல் சீர்திருத்தத்துக்கு எதிரான மக்களின் அழுத்தங்களை உந்தித் தள்ளியதில், தேவாலயங்களின் பங்களிப்பு முக்கியமானது. அரசியல் சீர்திருத்தத்துக்கு எதிரான வேலைத்திட்டத்தில், தேவாலய பணியாளர்களும் நிறுவனங்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. உலக வரலாற்றில் மத நிறுவனங்கள் ஓர் இனப்படுகொலையில் ஈடுபடுவது விதிவிலக்கானது அல்ல. துருக்கியில் ஆர்மேனியர்கள், இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பாவில் யூதர்கள், பொஸ்னியாவில் முஸ்லிம்கள், இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள், லெபனானில் கிறிஸ்தவர்கள் மற்றும் பல்வேறு முஸ்லிம் குழுக்களுக்கு இடையே நடந்த இனப்படுகொலை, வன்முறைகள் எனப் பல உதாரணங்கள் உண்டு. ஆனால், இவை அனைத்திலும் இருந்து ருவாண்டா வேறுபடுகிறது. இங்கு மதம், ஒரு சமூகக் குழுவை வரையறுக்க, குறிப்பாக அடையாளம் காட்டியாகச் செயற்படவில்லை. ருவாண்டாவில் உள்ள கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்தாந்து தேவாலயங்கள் இரண்டுமே பல இனங்களைக் கொண்டவை. மேலும், ருவாண்டாவில் இனப்படுகொலை ஒரு மதக் குழுவுக்குள்ளேயே நிகழ்ந்தது. பெரும்பாலான சமூகங்களில், ஒரே தேவாலய திருச்சபையின் உறுப்பினர்கள், தங்கள் சக உறுப்பினர்களைக் கொன்றனர். மேலும், பல சந்தர்ப்பங்களில், அவர்கள் தங்கள் சொந்த போதகர் அல்லது பாதிரியாரைக் கொலை செய்தனர். இதைச் சாத்தியமாக்கியது எது என்ற வினா தொக்கி நிற்கிறது. ஆபிரிக்காவில் இனத்துவரீதியான உச்சபட்ச வெறுப்பரசியலே இவ்வாறான கொலைகளுக்கும் வன்முறைக்கும் வழிசெய்கிறது. லைபீரியாவின் உள்நாட்டுப் போரானது, மேற்கு ஆபிரிக்க துணைப் பகுதிக்குள், க்ரான்ஃமாண்டிங்கோ தலைமையிலான அரசாங்கத்துக்கும் ஜியோ-மனோ கிளர்ச்சியாளர்களுக்கு இடையேயான வெறுப்பு அரசியலால் உக்கிரமடைந்தது. இந்த வெறுப்பரசியல், அரசியல் உத்தியாகவும் தேர்தல் மூலோபாயமாகவும் உள்ளது. இதன் முக்கிய கருவியாக வெறுப்புமிழும் பேச்சு இருக்கிறது. வெறுப்புமிழும் பேச்சு, தேர்தல் காலங்களில் மட்டும் வெளிப்படுவதில்லை, ஆனால், இக்காலங்களில் ஏற்கெனவே இருக்கும் பிளவுகளை அதிகப்படுத்தி, தப்பெண்ணங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அதிவலதுசாரிகள் நன்கறிந்து இருக்கிறார்கள். இவ்வாறான பேச்சுகள் பொதுவாக, ஒரு குறிப்பிட்ட குழுவை, மற்றொன்றுக்கு எதிராக அணிதிரட்டுவது மற்றும் பிரிக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே பிரசாரங்களை உருவாக்குகின்றன. வெறுக்கத்தக்க பேச்சு என்பது ஒரு குறிப்பிட்ட குழுவை இழிவுபடுத்தும் வெறுக்கத்தக்க பேச்சின் பயன்பாட்டை அடிக்கடி உள்ளடக்கியது. பெண்களை குறிவைக்கும் வெறுக்கத்தக்க பேச்சு, சில சமயங்களில் வெறுப்பூட்டும் பேச்சு சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும்; சில சமயங்களில் இல்லை. இருப்பினும் இது பெண்களை பொது பதவியை தேடுவதை தடுக்கும் ஒரு முக்கிய காரணியாகும். தேர்தல் பங்குதாரர்கள் (அமைச்சகங்கள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகம், ஊடகங்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் உட்பட) வெறுப்பூட்டும் பேச்சை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேலும், இந்தப் பங்குதாரர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அமைதியை கட்டியெழுப்புவதில் வெறுப்பு பேச்சுகளின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறைக்க முடியும். தேர்தல்களில், தேர்தல் பங்குதாரர்கள் பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சிறந்த சட்டத்துக்கு வாதிட வேண்டும்; உள்ளடக்கிய உரையாடலுக்கான இடத்தை உருவாக்க வேண்டும். அறிவைப் பரப்புவதன் மூலம் வெறுப்பு பேச்சு தொடர்பான சமூக ஒருமித்த கருத்தை அடைவதே இறுதி இலக்கு. ஆபிரிக்காவில் அரசியல் அதிகாரத்தின் எல்லையற்ற தன்மையானது தேர்தலில் வெல்வதற்காக எந்தவோர் ஆயுதத்தையும் பயன்படுத்த தயாராகவிருக்கும் மனநிலையை உருவாக்கியுள்ளது. இது ஒருமித்த மனப்பான்மையும் வெறுப்புப் பேச்சுகளைப் பயன்படுத்துவதற்கு பங்களிக்கின்றன. இந்தப் பண்பை தென்னாசியச் சமூகங்களிலும் காணவியலும். ஆபிரிக்காவெங்கும் கொலனியாதிக்க விடுதலையைத் தொடர்ந்த உள்நாட்டுப் போர்கள், முரண்பாடுகளுக்கு வழியமைத்து இன்றுவரை அவை பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. ஏற்கெனவே சவாலான இந்தச் சூழல், பிராந்தியத்தில் உள்ள அதிக வேலையின்மை மற்றும் வறுமையால் இன்னும் சிக்கலாக மாறியுள்ளது. தேர்தல் காலங்கள் குழுக்களுக்கு விரக்தியை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கின்றன. இதை அதிவலதுசாரி பயன்படுத்துகிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால், உலகின் ஏனைய பகுதிகள் போல அதிவலது வெளியில் இல்லை; மாறாக, அரசியல் மையநீரோட்டத்தின் முக்கிய இடத்தில் உள்ளது. 2016இல், காம்பியாவின் முன்னாள் ஜனாதிபதியான லுயாயலய, ஓர் அரசியல் பேரணியின் போது, மண்டிகாக்க இனக்குழுவினரை எதிரிகள் என்றும், வெளிநாட்டவர்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு அவர்களை அச்சுறுத்தினார். இதன் மற்றொரு பரிமாணம், 2020 அக்டோபரில் ஐவரி கோஸ்டில் டியோலாஸ் - அக்னிஸ் இடையேயான இன மோதல்களாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியில், தென்னாப்பிரிக்கா அதிவலதுசாரி ஜனரஞ்சக இயக்கங்களுக்கு ஒரு கோட்டையாகக் கருதப்படுகிறது. நிறவெறி சகாப்தத்தின் போது, இனவிரோதங்களின் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுடன், நிறவெறிக்கு பிந்தைய ஜனநாயக அரசாங்கங்கள் இன்னும் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை வெல்லாத நிலையில் அதிவலது இன்னும் செல்வாக்குடன் திகழ்கிறது. தென்னாபிரிக்காவில் உள் இனப் பதட்டங்களைத் தவிர, வெளிநாட்டினருக்கு எதிராக, குறிப்பாக மற்ற ஆபிரிக்கர்களுக்கு எதிரான, பரவலாகப் பகைமைகள் உள்ளன. ‘ஒபரேஷன் டுடுலா’ (சுலு மொழியில் தள்ளு) என்று பெயரிடப்பட்ட குழுவால் சோவெட்டோ மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் புலம்பெயர்ந்த வணிகர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இன்று தென்னாபிரிக்கா திருப்புமுனையில் நிற்கிறது. ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் ஊழலிலும் அதிகாரத் துஷ்பிரயோகத்திலும் சீரழிந்து நம்பிக்கை இழந்துள்ளது. இன்று மாற்றாக முன்வரும் புதிய சமூக சக்திகள் சர்வாதிகார ஜனரஞ்சகத்தின் வாய்ச்சண்டை வடிவங்களாகும். அவை தீவிர அதிவலதின் பக்கம் நிற்கின்றன. ஆபிரிக்காவெங்கும் அதிவலது அரசியல் மையநீரோட்டத்தின் பகுதியானமையில் உயர்செல்வந்தக் குடிகளின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கன. அவர்களே அதிவலதை ஊக்குவித்து செல்வமளித்து காக்கிறார்கள். இன்று ஆபிரிக்காவெங்கும் நிறைந்துள்ள வேலையின்மையும் வறுமையும் காலநிலை மாற்றத்தின் கொடிய விளைவுகளும் பாசிசம் உட்பட அதிவலது சர்வாதிகாரத்துக்கு இந்நாடுகள் திரும்புவதற்கான ஆபத்துள்ளது. குறிப்பாக ஆளும் உயரடுக்கு மக்களிடமிருந்து, தொலைவில் இருப்பதாகக் கருதப்பட்டு ஊழல் செய்யும்போது இந்த ஆபத்து எப்போதும் மோசமாகும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆபிரிக்காவின்-மைய-நீரோட்டத்தில்-அதிவலது/91-316706
-
இலத்தீன் அமெரிக்காவில் அதிவலதுசாரி அலையின் புதிய கட்டம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 19: இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள், இலத்தீன் அமெரிக்கா பற்றிப் பேசுகின்ற போது முக்கியமானவையாகும். முதலாவது, இப்பிராந்தியத்தில் அதிகூடிய மக்கள் தொகையையும் மிகப்பெரிய நிலப்பரப்பையும் கொண்ட நாடான பிரேஸிலில், ஜனவரி மாதம் எட்டாம் திகதி, தேர்தலில் தோல்வியடைந்த அதிவலதுசாரி முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள், தலைநகர் பிரேஸிலியாவில் அரச கட்டடங்களைச் சூறையாடி, மிகப்பாரிய சேதத்தை விளைவித்தார்கள். இது, சில ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்ததை எதிர்த்து, அவரது ஆதரவாளர்கள் விளைவித்த சேதத்துக்கு ஒப்பானது. பிரேஸிலில் அதிவலது வன்முறை அரங்கேறுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர், அதாவது, ஜனவரி ஆறாம் திகதி, பெரு நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ கஸ்டிலோ, ஓர் அதிவலதுசாரிகளின் சதித்திட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டார். இவை, இலத்தீன் அமெரிக்காவின் அதிவலதுசாரிகளின் நடவடிக்கைகள், இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்வதைக் காட்டி நிற்கின்றன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், இலத்தீன் அமெரிக்காவில் ஓர் இடதுசாரித்துவ அலை வீசியது. அதன் குணவியல்புகளின் அடிப்படையில், அதை ‘இளஞ்சிவப்பு அலை’ (pink tide) என்று எல்லோரும் அழைத்தார்கள். பல இலத்தீன் அமெரிக்க நாடுகளில், இடதுசாரிச் சார்புள்ளவர்கள், தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தார்கள். இது, இப்பிராந்தியத்தில் ஜனநாயகம், பொருளாதாரம் ஆகியவற்றில் மீது பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. கிட்டத்திட்ட அரை நூற்றாண்டு காலத்தின் பின்னர், இன்று நிலைமை முற்றிலும் வேறாக மாறிவிட்டது. தேர்தல்களில் இடதுசாரிகள் சிறப்பாக செயற்படாதபடி பார்த்துக் கொள்ள, எதிர்ப்புரட்சி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. இந்த எதிர்ப்புரட்சி செயற்பாடுகளின் பிரதான அம்சமாக, தீவிர அதிவலதுசாரித்துவத்தின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது. இலத்தீன் அமெரிக்காவில், தீவிர அதிவலதுசாரித்துவத்துக்கு இரத்தம் தோய்ந்த ஒரு வரலாறு உண்டு. ஆனால், இப்போதைய மீள்எழுச்சியானது, இடதுசாரி முற்போக்கு சக்திகளை ஒழித்துக் கட்டுவதை நோக்காகக் கொண்டது. இலத்தீன் அமெரிக்காவில், இந்தப் புதுப்பிக்கப்பட்ட அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சியானது, உலக அளவில் அதிதீவிர வலதுசாரித்துவத்தின் ஒருங்கிணைப்பால் உந்தப்படுகிறது. இடதுசாரிச் சார்பு எழுச்சிக்குக் காரணம், அவர்கள் சாதாரண மக்களை, பழங்குடிகளைப் பிரதிநிதித்துவம் செய்தார்கள்; அவர்தம் நலன்களை முன்னிறுத்தினார்கள். இதனால், பல்தேசிய கம்பெனிகளை, செல்வந்த உயரடுக்கை எதிர்த்தார்கள். இன்று, அதிவலதுசாரி செல்வந்தர்களினதும் பல்தேசிய கம்பெனிகளினதும் அடியாளாக உள்ளது. இன்றைய போராட்டம் என்பது, உண்மையில் கிராமப்புற விவசாயிகள், பாரம்பரியமாக நிலத்தின் பராமரிப்பாளர்களாக இருந்த பழங்குடியினருக்கும் அவர்களை இடம்பெயரச் செய்து, அவர்களின் நிலத்தை எடுக்க விரும்புகின்றவர்களுக்கு இடையிலானது. இது உற்பத்தி வழிமுறைகளைப் பற்றியது. இந்தப் பெரிய நிலங்களை கையகப்படுத்துவதற்கான போராட்டத்தின் பகுதியே, அதிவலதின் எழுச்சியாகும். அதனால்தான், நிச்சயமாக, இங்குள்ள மக்கள் இயக்கங்கள் நிலத்தை ஜனநாயகமயமாக்குவதற்குப் போராடின; உற்பத்தி செய்ய நிலத்தை அணுகுவதற்குப் போராடின. இவற்றைச் சாத்தியமாக்குவதன் ஊடு, மக்கள் எங்காவது வாழ, எங்காவது வளர மற்றும் உற்பத்தி செய்ய உரிமை உண்டு. அவர்கள் இடம்பெயர்ந்து வீடற்றவர்களாக இருக்காது, தமக்கான உணவு உற்பத்தியைச் செய்ய முடியும்; ஏற்றுமதி செய்ய முடியும். மற்றும், பொருளாதார ரீதியாக முன்னேற, மற்ற விடயங்களைச் செய்ய முடியும். ஆனால் இதை தங்களது நிலங்களாகக் கையகப்படுத்தி, தங்கள் சுரண்டலுக்குப் பயன்படுத்த செல்வந்தர்களும் பல்தேசிய கம்பெனிகளும் அதிவலதுசாரிகளும் கைகோர்த்துள்ளன. இலத்தீன் அமெரிக்காவில், நாம் பெரும்பாலும் பார்ப்பது, கறுப்பின மக்களுக்கும் பணக்கார வெள்ளையர்களுக்கும் இனத்தின் அடிப்படையில் நடக்கும் வெறும் கலாசாரப் போரை மட்டுமல்ல! இது, நிலம் மற்றும் வளங்களுக்கான போராட்டம். இயற்கை வளங்களின் மீது இறையாண்மை, நிலத்தின் மீது இறையாண்மை, அவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து, அவற்றை உற்பத்தி செய்ய விரும்பும் மக்களுக்கு எதிராக, இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காக, அந்தப் பகுதிகளுக்கு அணுகல் தேடும் நாடு கடந்த நலன்களுக்கு எதிரான போராட்டம் ஆகும். அவர்களின் சொந்த நலனுக்காக, தங்களுக்கு வாய்ப்பான ஆட்சியாளர்களை உருவாக்கும் எதிரான ஆட்சியாளர்களை அகற்றும் நடவடிக்கைகளுக்கு, எதிரான போராட்டம். இந்தப் பின்புலத்திலேயே அதிவலதுசாரித்துவத்தின் புதிய அலையைப் புரிந்து கொள்ள வேண்டும். இலத்தீன் அமெரிக்க தீவிர அதிவலதுசாரித்துவத்துக்கு ஒரு வரலாறுண்டு. சர்வாதிகாரத்தன்மை, கவர்ந்திழுக்கும் ஆற்றலுடைய இராணுவத் தலைவர்கள், இதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இலத்தீன் அமெரிக்காவில் தீவிர வலதுசாரிகளின் மூன்று அலைகளை நாம் அடையாளம் காண முடியும். இதன் முதலாவது, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தோடு தொடங்கியது. 1930இல் ‘வோல் ஸ்ட்ரீட்’ நெருக்கடியுடன், ஆர்ஜென்டினா மற்றும் பிரேஸில் போன்ற நாடுகளில் ‘பாரம்பரிய ஜனரஞ்சகவாதம்’ வெளிப்பட்டது. இது கம்யூனிசத்துக்கு எதிரான தற்காப்பாக உயரடுக்கினரால் புரிந்து கொள்ளப்பட்ட அதேவேளை, தொழிலாளர் வர்க்கத்தால் சமூக நிலைமைகளின் முன்னேற்றத்துக்கான வழி என்று ஏற்கப்பட்டது. இராணுவத்தின் ஆதரவுடன், அர்ஜென்டினாவில் ஜுவான் பெரோன், பிரேஸிலில் கெட்டுலியோ வர்காஸ் ஆகியோர், தீவிர வலதுசாரி, பாசிச அறிவுஜீவிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் கூட்டணிகளை நிறுவி ஆட்சிக்கு வந்தனர். இது, இலத்தீன் அமெரிக்க அரசாங்கங்கள் மீது, ஐரோப்பிய பாசிச செல்வாக்கைக் காட்டிய ஒரு முக்கியமான தருணம்.பெரோன் (முன்னாள் ஜெனரல்) மற்றும் வர்காஸ் (இராணுவத்தின் நெருங்கிய கூட்டாளி) ஆகிய இருவரும் ஐரோப்பிய பாசிச ஆட்சிகளின் அபிமானிகளாக இருந்தனர். ஆனால், கூட்டணிகளை நிறுவி, நகர்ப்புற தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழை கிராமப்புற சமூகங்களுக்கு சில உரிமைகளை வழங்கினர். இந்தச் சர்வாதிகார ஜனநாயகம், பாரம்பரிய மற்றும் பிரபுத்துவ உயரடுக்குகளை மாற்றியது. அவர்களது செயற்பாடுகளின் மீது, தங்கள் அதிகாரத்தைப் பிரயோகிக்கும் வலிமையை இழந்தனர். பெரோன், வர்காஸ் ஆகிய இருவரும், சர்வாதிகார ஆட்சிகளை நிறுவினர். கம்யூனிசத்துக்கு எதிராக சிறந்த போராளிகளாக தங்களை முன்வைத்தனர். இந்நாடுகளில் கம்யூனிஸ்ட்கள் மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாகினர். தீவிர வலதுசாரிகளின் இரண்டாவது அலை, 1959ஆம் ஆண்டு கியூபப் புரட்சிக்குப் பின்னர், இலத்தீன் அமெரிக்காவில் கெடுபிடிப்போரின் தாக்கத்தோடு தொடங்கியது. மேல்தட்டு மக்களிடையே கம்யூனிசம் பற்றிய அச்சம், மற்றும் இடதுசாரி தீவிரமயமாக்கலுக்கு எதிரான அமெரிக்காவின் ஆதரவு ஆகியவை, இந்தச் சூழலை வரையறுத்தன. 60கள், 70களில் தீவிர வலதுசாரி சர்வாதிகாரங்களின் ஒரு சக்திவாய்ந்த சுழற்சி தோன்றியது. இது, இடதுசாரி இயக்கங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத் தலைவர்களைத் தாக்கியது, குறிப்பாக, தெற்குமுனை நாடுகளில் (அர்ஜென்டினா, பிரேஸில், சிலி, உருகுவே) மற்றும் மத்திய அமெரிக்காவில் கொடூரமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தின் சிறந்த பிரதிபலிப்பு, சிலியில் (1973-1990) இருந்த அகஸ்டோ பினோஷேயின் சர்வாதிகாரமாகும். இது இப்பகுதியில் புதிய தாராளமயம் மற்றும் சர்வாதிகாரத்தின் முதல் கூட்டிணைவுக்கு உதாரணமானது. இராணுவ ஜெனரல் பினோஷே, இலத்தீன் அமெரிக்க அதி வலதின் மிக முக்கியமான தலைவராக இருந்தார், மேலும், அவர் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய பிறகும், அவர் ஒழுங்கமைத்த அதிவலது ஒழுங்கு, சிலி சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தியது. இலத்தீன் அமெரிக்க தீவிர வலதுசாரிகளின் மூன்றாவது அலையில், நாம் தற்போது இருக்கிறோம். முற்போக்கான நவதாராளவாத எதிர்ப்பு, இடதுசாரி ஜனரஞ்சக அரசாங்கங்களின் உருவாக்கத்துக்கு எதிரானதாக, இந்த அலை இப்போது இருக்கிறது. ஒட்டுமொத்தமாக, இலத்தீன் அமெரிக்காவில் தீவிர வலதுசாரிகளின் வரலாறு, இராணுவ சக்தி, நவதாராளவாதத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நவதாராளவாதமே, இன்று மக்களின் பரந்துபட்ட எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது. ‘இளஞ்சிவப்பு அலை’ ஏற்படுத்திய சமூக விழிப்புணர்வும் போராடுவதற்கான உந்துதலும், நவதாராளவாதத்துக்கு பெரிய சவாலாகவுள்ளது. இன்று இலத்தீன் அமெரிக்கா எங்கும் அதிவலதுசாரிகளுக்கு ஆதரவு பெற்ற வளச்சுரண்டலுக்கு எதிராக, மக்கள் போராடுகிறார்கள். இது, இடதுசாரிச் சார்புள்ள ஆட்சிகள் மீள்வதற்கு வழி செய்துள்ளது. இடதுசாரிகளின் இந்த மீள்எழுச்சிக்கு விடையிறுக்கும் வகையில், பிராந்தியத்தில் அதிவலதுசாரி இயக்கங்கள், கட்சிகள் மற்றும் தீவிர வலதுசாரிகளின் மறுஉருவாக்கமும் அவை பலப்படுத்தப்படுவதையும் நாம் காண்கிறோம். இதன் விளைவுகளின் ஒரு பகுதியே, இவ்வாண்டு தொடக்கத்தில் அரங்கேறிய நிகழ்வுகள். பிரேஸிலில் 2018இல் அதிவலதுசாரி நபர் ஜனாதிபதியானமை முக்கியமானது. இது, இலத்தீன் அமெரிக்க அதிவலதுக்கு மிகப்பெரிய ஊக்க மருந்தானது. இதில் இலத்தீன் அமெரிக்காவின் அதிவலசாரித்துவத்தின் வரலாற்றுக்கும் பங்குண்டு. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலத்தீன்-அமெரிக்காவில்-அதிவலதுசாரி-அலையின்-புதிய-கட்டம்/91-314210
-
வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 01: முசோலினியின் நூறு ஆண்டுகளின் பின்னர்... தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அதுவோர் அழகிய நாள்! இலையுதிர்காலம் முழுமையாகத் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தது. அந்த ஓக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையே, கதிரவன் தன் கதிர்களைப் பரப்பி, ஒருவித மகிழ்ச்சியைத் தரும் ஆண்டின் இறுதித் தினமென்பதைப் பலர் அறிவர். ஓஸ்லோ நகரின் மத்தியில், குழந்தைகளுக்கான பல செயற்பாடுகளை, அவர்களுடன் நாடக நடிகர்களும் முன்னெடுத்திருந்தனர். வீதிகளில் பல்வேறு நிறங்களினாலான வெண்கட்டிகளால் படங்களை வரைவது, பாடுவது, ஆடுவது விளையாடுவது என்று ‘பல்கலைக்கழக வளாகம்’ என்று அறியப்பட்ட அப்பகுதி களைகட்டியிருந்தது. அப்பகுதிக்கு வாத்தியங்களை இசைத்தபடி, கொடிகளைத் தாங்கிய கறுப்புடை அணிந்த மனிதர்கள் ஊர்வலமாக வந்தனர்கள். குழந்தைகளின் செயற்பாடுகளை நிறுத்தி, அவ்விடத்திலிருந்து அவர்களை விரைவாக ஏற்பாட்டாளர்கள் அகற்றினர். அந்த ஊர்வலத்தை மேற்கொண்டவர்கள், அதிவலதுசாரி ஆதரவாளர்கள். அவர்கள் குடியேற்றவாசிகளுக்கு எதிரானவர்கள். தங்களை நவநாசிகள் என்று அழைத்துக் கொள்பவர்கள். அவர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் முயன்ற நிலையில், பொலிஸாருக்கும் நவநாசிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இறுதியில் 35 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பலர் நோர்வே நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லையென்றும், அண்டைய ஸ்கன்டினேவிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் காவற்றுறையினர் தெரிவித்தனர். இந்நிகழ்வு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒன்றை நினைவுபடுத்தியது. இதை உலகின் ஒரு மூலையில் உள்ள ஒரு ஸ்கன்டினேவிய நாட்டின் தலைநகரில் நிகழ்ந்த தனித்த நிகழ்வாகக் கருத முடியாது. இன்று உலகைச் சூழ்ந்துள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவு, பல ஐரோப்பிய நாடுகளில் குடியேற்றவாசிகளுக்கு எதிரான மனநிலையும், அதிவலது தீவிரவாதமும் எழுச்சி பெற்றுள்ளது. இந்த மனநிலை, நெருக்கடிகளை எதிர்நோக்கும் எல்லா நாடுகளிலும் இன்று பரவுகிறது. இலங்கையும் இதற்கு விலக்கல்ல. இந்த அதிவலது தீவிரவாதமும் அதனோடு பின்னிப் பிணைந்த தேசியவாத வெறியும், நவநாசிசம் மற்றும் பாசிசம் ஆகியவற்றின் கூட்டுக்கலவையின் ஆபத்துகளையும் எதிர்காலச் சவால்கள் குறித்த முன்னோக்கையும் இத்தொடர் ஆராய விளைகிறது. முசோலினியின் கதைக்குப் போவதற்கு முன்னர், அண்மைய இரு நிகழ்வுகளை நினைவுகூர்தல் தகும். முதலாவது, இஸ்ரேல் பற்றியது. இது முக்கியமானது. ஏனெனில், ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடுகின்ற அபத்தம் இன்றும் தொடர்கிறது. கடந்தவாரம், இஸ்ரேலிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, அதிவலது தீவிரவாத நிலைப்பாடை உடைய கட்சிகள் ஆட்சியைப் பிடித்துள்ளன. தீவிர வலதுசாரிக் கட்சிகளின் எழுச்சியானது, இஸ்ரேலிய சமுதாயத்தில் அதிகரித்துவரும் தீவிரவாதம் மற்றும் இனவெறியின் வெளிப்பாட்டின் இயல்பான விளைவாகும். இஸ்ரேலியர்களால் பாலஸ்தீன மக்கள் பல ஆண்டுகளாக கொலைகள், கைதுகள், குடியேற்றங்கள் போன்ற வடிவங்களில் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இஸ்ரேலிய அரசானது, குடியேற்றவாசிகள் மற்றும் இராணுவத்தினர் பலஸ்தீனியர்கள் மீது எல்லையற்றுக் குற்றங்களைச் செய்ய இலவச அனுமதியை வழங்கியுள்ளது. இரண்டாவது, முசோலினி பதவியேற்று நூறாண்டுகளுக்குப் பிறகு, முசோலினியைப் பின்பற்றுவதாக வெளிப்படையாக அறிவித்த ஒருவர், தனது தீவிர வலதுசாரி நிலைப்பாட்டுடன் தேர்தலில் வென்று, இத்தாலியில் பிரதமராகியுள்ளார். இது இனி நடக்கச் சாத்தியமான நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே! ஒஸ்லோவில் கடந்த மாதம் நடந்த நிகழ்வு நினைவுகூர்ந்த நிகழ்வுக்குத் திரும்புவோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1922இல் இதேபோன்றதோர் ஒக்டோபர் மாதம், பெனிட்டோ முசோலினியின் துணை இராணுவ கறுப்புச்சட்டைகள், இத்தாலிய தலைநகரில் பிரதம மந்திரி லூய்கி ஃபாக்டாவின் அரசாங்கத்தை கலைக்கக் கோரி அணிவகுத்துச் சென்றனர். ரோம் மீதான அணிவகுப்பு என்பது, பாசிச சக்தியின் அடிப்படை கட்டுக்கதை. இந்தத் துணிச்சலான செயலின் மூலம், இத்தாலிய அரசாங்கத்தின் தலைவராக, வலிமையான முசோலினி தன்னை நிறுவிக் கொண்டார். ஆனாலும் அந்த அணிவகுப்பு ஒரு கேலிக்கூத்து. முசோலினியின் பாசிசப் படைகள் சில ஆயிரங்களை மட்டுமே கொண்டிருந்தன, பெரும்பாலும் தடிகளாலான ஆயுதங்களை ஏந்தியிருந்தன. அரசப்படைகளுடன் ஏற்பட்ட மோதலில் சிதறி, சேற்றிலும் மழையிலும் மூழ்கின. அவர்களில் அதிகமானோர், தலைநகரில் அரசாங்கப் படைகளால் சுடப்பட்டு, பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். ‘குதிரையில் ஏறிய மனிதன்’ என்று தன்னைத் தானே வீரனாக அழைத்துக் கொள்ளும் முசோலினி, சுவிஸ் எல்லைக்கு அருகே ஒரு பாழடைந்த அலுவலகத்தில் ஒளிந்து கொண்டார். பாசிஸ்டுகளிடம் வெளிப்படையான பலவீனம் இருந்தபோதிலும், அரசாங்கம் ஆட்சிக் கவிழ்ப்புக்கு அடையாள எதிர்ப்பை மட்டுமே ஏற்றியது. ‘பாசிஸ்டுகள் மீது மிகுந்த அனுதாபத்தைக் கொண்டிருந்த இராணுவம், முசோலியின் ஆட்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்க மறுப்பார்கள் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்’ என்று பிரிட்டிஷ் தூதர் குறிப்பிட்டார். பேரணி நடைபெற்று 24 மணி நேரத்துக்குள், மன்னர் விக்டர் இமானுவேல், முசோலினியை பிரதமராக நியமித்தார். புதிய சர்வாதிகாரியின் துருப்புகள் இறுதியாக ரோம் நகரை அடைந்தபோது, அவர்கள் வெற்றி அணிவகுப்பில் நுழைந்தனர். ரோம் மீதான அணிவகுப்பு என்ற நாடகத்தை விளங்குவதற்கு சில அடிப்படையான உண்மைகளைப் புரிந்து கொள்ளுவது முக்கியம். முசோலினி ஆளும் வர்க்கத்தின் விருப்பத்துக்கு எதிராக அதிகாரத்தை எடுக்கவில்லை, மாறாக, அதன் ஆசீர்வாதத்துடனேயே பெற்றார். அதிகாரத்துக்கான பாசிஸ்டுகளின் பாதை சகிப்புத்தன்மை, பொலிஸ்துறை, அரசியல்வாதிகளின் நேரடியான ஒத்துழைப்பு, தொழிலதிபர்களின் ஆடம்பரமான நிதியுதவி ஆகியவற்றால் அமைக்கப்பட்டது. இத்தாலிய ஆளும் வர்க்கம் முசோலினியை வரவேற்றது. ஏனெனில், அதன் உறுப்பினர்கள் பாசிஸ்டுகளை பல ஆண்டுகால நெருக்கடி மற்றும் வர்க்கப் போராட்டத்துக்கு தீர்வாகக் கருதினர், முதல் உலகப் போர், இத்தாலியை நெருக்கடிக்குள் தள்ளியது. கிட்டத்தட்ட ஆறு மில்லியன் இத்தாலியர்கள் போர்வீரர்களான உள்ளீர்க்கப்பட்டார்கள். 600,000 பேர் கொல்லப்பட்டனர்; 700,000 பேர் நிரந்தரமாக ஊனமுற்றனர். தீவிரமயமாக்கப்பட்ட முனைகளில் இருந்து, விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். தொழிற்சாலைத் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களில் இராணுவச் சட்டத்தை நிறுவுவதற்கு எதிராகப் போராடினர். 1917இல் ரஷ்யப் புரட்சி தொழிலாளர்களை தீவிரமயமாக்கும் நடைமுறை உதாரணத்தை வழங்கியது. போரின் காட்டுமிராண்டித்தனத்தை முடிவுக்குக் கொண்டுவர முதலாளித்துவ அமைப்பை வீழ்த்தியது. 1919-20 ஆம் ஆண்டின் பியென்னியோ ரோஸ்ஸோ (இரண்டு சிவப்பு ஆண்டுகள்) இயக்கத்தின் உச்சத்தின் போது, ஆளும் வர்க்கத்திடம் இருந்து இத்தாலியின் மீதான கட்டுப்பாட்டைப் பறிக்க தொழிலாளர்கள் ஒரு தீர்க்கமான போராட்டத்தைத் தொடங்கினர். அதே நேரத்தில், விவசாயிகள் நிலத்தை கைப்பற்றினர்; பெரிய நில உரிமையாளர்களிடம் இருந்து பாரிய சலுகைகளை கட்டாயப்படுத்தத் தொடங்கினர். உள்நாட்டுப் போர் நெருங்கிவிட்டதாகத் தோன்றியது. சமூக நெருக்கடி வலதுசாரி தீவிரமயமாக்கலையும் உருவாக்கியது, அது பாசிசத்தை பிறப்பித்தது. இத்தாலிய சோசலிஸ்ட் கட்சியின் ஒரு முக்கிய நபரான பெனிட்டோ முசோலினி, நாடு போருக்குள் நுழைவதற்கு ஆதரவாக அறிவித்ததன் மூலம், அவரது தோழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். கட்சி முசோலினியை வெளியேற்றியது, அவர் மீது காறி உமிழ்ந்தது. அவரை துரோகி என்று அழைத்தது. நவம்பர் 1914இல், முசோலினி, இத்தாலிய தொழிலதிபர்கள் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் ‘Il Popolo d’Italia’ (இத்தாலி மக்கள்) என்ற புதிய வலதுசாரி தினசரி செய்தித்தாளை நிறுவினார். இந்தப் பக்கங்களில், அவரது புதிய யோசனைகள் வடிவம் பெற்றன. அச்செய்தித்தாள் போருக்கான ஆதரவு மற்றும் அவ்வாதரவைச் சீர்குலைக்கும் திறன் கொண்ட சோசலிச இயக்கம் போன்ற அனைத்து சக்திகளுக்கும் விரோதம் ஆகியவற்றையே மூலதனமாகக் கொண்டது. முசோலினி, ஜனநாயகமே நாட்டை அதன் தலைவிதியை அடைவதில் இருந்து பின்வாங்குகிறது என்ற முடிவுக்கு விரைவாக வரத் தொடங்கினார். இறுதியில் அவர் பாசிசத்தை ‘உச்ச ஜனநாயக விரோதம்’ என்று விவரித்தார். இதனூடாக ஜனநாயகம் குறித்த வரையரைகளைக் கேள்விக்குள்ளாக்கினார். இதன் பின்னணியில், சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் செல்வாக்குப் பெற்ற ஒரு கதையாடலை நினைவுபடுத்தல் பொருத்தம். “இலங்கையை நாங்கள் ஒழுக்கமான சமூகமாக உருமாற்ற வேண்டும். அதுவே வினைத்திறனான சமூகமாய் மலரும். அதற்கு எமது உரிமைகளை இழக்கத் தயாராக இருக்க வேண்டும்” என்று ‘வியத்மக’ அமைப்பினர் தொடர்ந்து கூறினர். அதன் வழித்தடத்திலேயே கோட்டாபய ராஜபக்ஷவின் வருகை நிகழ்ந்தது. இலங்கைக்கு தேவை ஒரு சர்வாதிகாரியே; ஜனநாயகம் எங்கள் நாட்டு மக்களுக்குச் சரிவராது போன்ற பல உரையாடல்களை நாம் கேட்டிருக்கிறோம். அதன் பலன்களையும் அனுபவித்துள்ளோம். எனவே அதிவலது நிகழ்ச்சி நிரலின் ஆபத்துகள் குறித்து, எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வலதுசாரி-தீவிரவாதத்தின்-நிழலில்-01-முசோலினியின்-நூறு-ஆண்டுகளின்-பின்னர்/91-307360
-
சீனா: புதிய கூட்டாளிகளும் பழைய எதிரிகளும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சீன கம்யூனிஸ்ட் கட்சி, அதன் 20ஆவது தேசிய காங்கிரஸை ஒக்டோபர் 16 முதல் ஒக்டோபர் 22 வரை நடத்தியது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாட்டில், கட்சியின் 96 மில்லியன் உறுப்பினர்களின் பிரதிநிதிகள், அதன் உயர்மட்ட தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் கட்சிக்கு எதிர்கால திசையை அமைப்பதற்கும் கூடினார்கள். இந்த ஆண்டு காங்கிரஸின் முக்கிய கருப்பொருள்களில் ஒன்று ‘நவீனமயமாக்கலுக்கான சீனாவின் பாதை’ மூலம், நாட்டின் ‘புத்துணர்ச்சி’ ஆகும். இம்மாநாட்டுக்கு, அதன் பொதுச் செயலாளரான ஷி ஜிங்பிங் சமர்ப்பித்த அறிக்கையில், சீனாவை ‘ஒரு நவீன சோசலிச நாடாக’ கட்டியெழுப்புவதற்கான முன்னோக்கிய வழியை வரைந்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார். 64 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையானது, சீனாவின் அபிவிருத்தியையும் நாகரிகமான சமூக விழுமியங்களையும் கொண்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதையும் பற்றியதாக அமைந்துள்ளது. இந்த முன்மொழிவுகள், சீனாவுக்கு மட்டுமல்ல; ஏனைய மூன்றாமுலக நாடுகளுக்குமானவை. இந்த அறிக்கை இரண்டு விடயங்களை முன்மொழிகிறது. முதலாவது, தொடங்கியுள்ள ‘சோசலிச நவீனமயமாக்கலை’ 2020 முதல் 2035 வரையான காலப்பகுதிக்குள் நிறைவு செய்தல். இரண்டாவது, ‘அமைதியான நவீனமயமாக்கல்’ மூலம் சீனாவை வளமான, வலுவான, ஜனநாயக, பண்பாட்டு ரீதியாக முன்னேறிய, இணக்கமான ‘நவீன சோசலிச நாடாக’ உருவாக்குதல். இதை 2049 வரை (மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டதன் நூற்றாண்டு) நிலைநிறுத்தல். இவற்றை எவ்வாறு சாத்தியமாக்குவது என்பதற்கான விரிவானதும் விளக்கமானதுமான வரைபடத்தை இவ்வறிக்கை கொண்டுள்ளது. இன்று எதிரிகளையும் நண்பர்களையும் கொண்ட உலகில், தலையாய பொருளாதார சக்தியாக சீனா வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி, திடீரென்று ஏற்பட்டதல்ல. அதன் பின்னால், மிகக் கவனமான திட்டமிடலும் உழைப்பும் மக்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பும் இருக்கிறது. 1949இல் மாஓ சேதுங் தலைமையில், சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, அந்த நாடு உலகின் 11ஆவது ஏழை நாடாக இருந்தது. இன்று உலகின் முதன்மையான பொருளாதார வல்லரசாக வளர்ந்துள்ளது. இம்மாநாட்டின் வழி, மூன்றாவது முறையாக சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதியாக ஷி ஜிங்பிங் தெரிவாகியுள்ளார். மாஓ சேதுங்குக்குப் பிறகு, ஒரு தசாப்தத்துக்கு மேல் பதவிவகிக்கும் முதலாவது ஜனாதிபதியாக ஷி ஜிங்பிங் உருவெடுத்துள்ளார். இவர் 2012இல் கட்சியின் 18ஆவது தேசிய காங்கிரஸில் பொதுச் செயலாளராகத் தெரிவாகி, மார்ச் 2013இல் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், நாடு குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்துள்ளது. பொருளாதார ரீதியாக, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருமடங்காக உயர்ந்துள்ளது, 2013 இல் 58.8 டிரில்லியன் யுவானிலிருந்து 2021 இல் 114.37 டிரில்லியன் யுவானாக வளர்ந்து, அதே காலகட்டத்தில், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 6.6 சதவிகிதம் என்ற விகிதத்தில் விரிவடைந்தது. இதற்கிடையில், நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2013 மற்றும் 2021க்கு இடையில் கிட்டத்தட்ட இருமடங்கானது. உலகப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 2021ஆம் ஆண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18.5 சதவீதமாக இருந்தது, மேலும், 2013 முதல் 2021 வரையிலான உலக பொருளாதார வளர்ச்சியில் 30 சதவீதத்துக்கு சீனா காரணமாக இருந்தது. சீனாவும் 2021இல் உலக பொருட்களின் 30 சதவீதத்தை உற்பத்தி செய்தது. இவ்வறிக்கையின் மையக் கருத்தானது, ‘அமைதியான நவீனமயமாக்கலை எவ்வாறு நிறைவேற்றுவது’ என்பதாகும். இதை ஷி ஜிங்பிங் பின்வருமாறு சுருக்கமாகக் கூறினார்: “இது அனைத்து நாடுகளின் நவீனமயமாக்கல் செயல்முறைகளுக்கு பொதுவான கூறுகளைக் கொண்டுள்ளது, ஆனால், இது சீனச் சூழலுக்கான தனித்துவமான அம்சங்களால் வகைப்படுத்தப்படுகிறது. கன்பூசியன் தத்துவார்த்த அடித்தளத்தில், சீனப் பண்பாட்டுடன் மிகவும் இணக்கமாக, ‘அமைதியான நவீனமயமாக்கல்’ ஒரு முழுமையான தத்துவார்த்த அமைப்பை உள்ளடக்கியது. இதன் முக்கியான அம்சம் யாதெனில், இதுவரை மேற்குலகின் பொருளாதார மாதிரிக்கு மாற்று இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக மேற்குலக ஏகபோகத்துக்குச் சவாலான ஒரு தத்துவார்த்த மாதிரியை முன்மொழிகிறது”. இவ்வறிக்கை உணர்த்த விரும்புவது யாதெனில், ஈரானிய மாதிரி, உகண்டா மாதிரி, பொலிவியா மாதிரி போன்ற அனைத்தும் செல்லுபடியானதாகும். அதுபோலவே, சீனப் பரிசோதனையும் செல்லுபடியாகும். இந்த அறிக்கையின் அடிப்படை, நாடுகள் தத்தம் வளர்ச்சியை நோக்கி, ஒரு சுயாதீனமான பாதையைத் தொடர்வது முக்கியமாகும். சமீபத்திய வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால், அமெரிக்க நலன்களுக்கு வெளியே, வளர்ச்சியடைய முயலும் ஒவ்வொரு நாடும், எண்ணற்ற வழிகளில் எவ்வாறு பயமுறுத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இந்நாடுகள், வண்ணப் புரட்சிகள், ஆட்சி மாற்றம், சட்டவிரோதத் தடைகள், பொருளாதார முற்றுகை, நேட்டோ நாசவேலை, படையெடுப்பு ஆகியவற்றின் இலக்காக மாறுகின்றன. சீனா முன்மொழியும் மாற்றானது, இன்று உலகளாவிய ரீதியில் வளர்ச்சியடையும் நாடுகளில் எதிரொலிக்கிறது. ஏனெனில், 140க்கும் மேலான நாடுகளில், மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா உள்ளது. இந்நாடுகளால், சீனாவின் உயர்தர பொருளாதார வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு போன்ற கருத்துகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இந்த அறிக்கை, சீனாவுக்கான திட்டவட்டமான கட்டாயத்தை வலியுறுத்தியது. சீனாவின் தொழில்நுட்ப மேலாண்மையை, திட்டவட்டமாகக் குறிக்கிறது. சீனாவின் தொழில்நுட்ப மேலாண்மை, எவ்வாறு சீனாவின் தன்னிகரில்லா நிலைக்கு வழிசெய்யும் என்பதையும் கோடிட்டுக்காட்டுகிறது. குறிப்பாக, குறைக்கடத்திகள் உற்பத்தியில் தடம் புரள எந்தத் தடையும் இல்லை என்பதால், தொழில்நுட்ப தன்னம்பிக்கையை விரைவுபடுத்துகிறது. குறைக்கடத்திகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்வதற்கான உபகரணங்களில், அதன் தொழில்நுட்ப சுதந்திரத்தை விரைவுபடுத்துவதற்கான சீனாவின் உந்துதலை முடக்குவதற்கு அமெரிக்கா கங்கணம் கட்டியுள்ளது. அதன் ஒரு பகுதியே, சீனாவின் குறைக்கடத்திகள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் ஆகும். உலகளாவிய குறைக்கடத்தி தொழிற்றுறையின் அளவு, தற்போது 500 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் அதன் அளவு ஒரு டிரில்லியன் டொலர் என இரட்டிப்பாக்க வாய்ப்புள்ளது. 2030ஆம் ஆண்டளவில் குறைக்கடத்தி தொழிற்றுறை வளர்ச்சியில், சுமார் 40 சதவீதத்தை சீனா வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது, அமெரிக்காவின் தலையாய இடத்தை சீனாவுக்கு வழங்கும். இதுவே, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கான உடனடி தூண்டுதலாகவும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் இருந்து சீனாவின் தொழிற்றுறையை முன்னணியில் இருந்து தடுக்கும் முயற்சியாகவும் உள்ளது. அயலுறவுக் கொள்கை தொடர்பில், அறிக்கையில் மிகத் தெளிவாக உள்ளது. சீனா எந்த விதமான ஒருதலைப்பட்சவாதத்துக்கும் குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக குறிவைக்கப்பட்ட குழுக்கள் மற்றும் பிரத்தியேக குழுக்களுக்கும் எதிரானது. தற்போதுள்ள உலகளாவிய நிர்வாக முறையானது, மூன்றாமுலக நாடுகளுக்கு மிகவும் நியாயமற்றது. சீனா தன்னை ஒரு நாகரிக அரசாகவும் ஒரு சோசலிச நாடாகவும் உலகின் முன்னணி வளரும் நாடாகவும், ஒரே நேரத்தில் கருதுகிறது. உலகில் ஆதிக்கம் செலுத்துவதில், தங்கள் நாடு ஆர்வம் காட்டவில்லை என்று சீனா தொடர்ச்சியாகக் கூறிவருகிறது. மனிதகுலத்தின் இக்கட்டான பிரச்சினைகளைத் தீர்க்க, மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்க சீனா விரும்புகிறது. உதாரணமாக, ‘ஒருவார் ஒருவழி’ முன்முயற்சியானது, 2013 இல் ‘வெற்றி-வெற்றி’ (இருதரப்புக்கு) ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டின் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. மேலும், இதுவரை 150 நாடுகளில் ஒரு டிரில்லியன் டொலர் முதலீடு மற்றும் கட்டுமான ஒப்பந்தங்களுடன் மிகவும் தேவையான உட்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. காலநிலை பேரழிவைச் சமாளிப்பதில் சீனாவின் ஆர்வம், கடந்த பத்தாண்டுகளில், உலகின் புதிய காடுகளில் கால் பகுதியை மீளவனமாக்கி, மரங்களை நட்டுள்ளதோடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடு மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் உலகத்தின் முதன்மையாளராகத் திகழ்கின்றது. சீனாவின் பொருளாதாரக் கூட்டணிகள் இன்று அதிகரிக்கின்றன. உலகளாவிய ரீதியில், சீனாவின் பொருளாதாரச் செல்வாக்கு, அமெரிக்காவை விஞ்சியுள்ளது. இது, மேற்குலகுக்குப் புதிய நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. சீனாவுக்குப் புதிய நண்பர்களைத் தந்துள்ளது. உலகை ஆட்டிப்படைக்கும் பொருளாதார நெருக்கடியும், உக்ரேன் யுத்தமும் சீனாவை முதன்மையான நிலைக்குத் தள்ளியுள்ளன. ஷியின் அடுத்த ஐந்து ஆண்டுகள் உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்க வல்லன. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சீனா-புதிய-கூட்டாளிகளும்-பழைய-எதிரிகளும்/91-306993