Search the Community
Showing results for tags 'தேவைதானா தமிழ் தேசியக் கூட்டமைப்பு'.
-
Courtesy: ஜெரா தேவைதானா தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொதுவாகவே நம் மத்தியில் புழக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை அல்லது விடயத்தை அதன் தேவைப்பாடு முடிந்ததும் வீசியெறிந்துவிடுவோம். அதனைக் கவனமாக வைத்திருக்க வேண்டும் எனக் கருதினால் ஆவணக்காப்பகத்தில் வைத்திருப்போம். இந்த விடயங்கள் நாம் நாளாந்தம் பயன்படுத்தும் பொருட்களுக்கு மாத்திரமானவையல்ல. அரசியல், பொருளாதாரம், சமூக விழுமியங்கள் என அனைத்திற்கும் பொருந்திவரக்கூடியவை. இந்தப் பின்னணியில் ஈழத்தமிழர் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்கிற அரசியல் பேரியக்கத்தையும் வைத்துப்பார்க்கலாம். புலிகளின் கோரிக்கை வேறு தமது கோரிக்கை வேறு இந்தப் பேரியகத்தின் நோக்கம் என்னவாக இருந்ததெனில் விடுதலைப் புலிகள் ஆயுதம் வழியாக முன்வைத்த தமிழர்களுக்கான சுயநிர்ணய கோரிக்கைகளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது உலகம் முன்வைக்கும் ஜனநாயக விழுமியங்களின் ஊடாக கொண்டுசெல்வதே ஆகும். இந்த கோரிக்கைகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு 2009 மே மாதம் வரை கைக்கொண்டிருந்தது. அதன் பின்னர் தன் நோக்கத்திலிருந்து விலகி, புலிகளின் கோரிக்கை வேறு தமது கோரிக்கை வேறு என பொதுவெளியிலேயே அறிவித்தது. எனவே 2001 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் முதல் தசாப்தத்தைக் கடக்குமுன்பே தன் நோக்கத்தைக் கைவிட்டது. அதன் இரண்டாவது தசாப்பத்திற்குள் செய்யவேண்டியவற்றை செய்ததா என்பதையும் இவ்விடத்தில் பதிவுசெய்யலாம். தமிழ் தேசிய அரசியலிலிருந்து விலகி நடந்தனர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்பிற்குப் பின்னரான தமிழ் தேசிய அரசியலின் முழுக் கட்டுமானத்தையும் தாங்கிப் பிடிக்கவேண்டிய பொறுப்பு இரா.சம்பந்தர் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கே இருந்தது. இறுதிப் போரின்போது இராணுவத்தினரால் தமிழ் மக்கள் மீதும், சரணடைந்த போராளிகள் மீதும் மேற்கொள்ளப்பட்ட மனிதவுரிமை மீறல்கள், சரணடைந்தவர்களைக் காணாமலாக்கிய சம்பவங்கள், கொன்றொழிக்கப்பட்ட தமிழ் மக்கள், குற்றங்களுக்கான தண்டனை, இந்த அநீதிகளுக்கான நீதி, தமிழர் தாயகப் பகுதியின் மீள்கட்டமைப்பு, சுயநிர்ணய மீட்புக்கான அரசியல் போராட்டம் எனப் பல விடயங்களை கையாளவேண்டிய பொறுப்பு கூட்டமைப்பிற்கு இருந்தது. ஆனால் இவற்றில் எதனையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செய்யவில்லை. தமிழர்களுக்கு எதிராகப் புரியப்பட்ட குற்றங்களுக்கான சர்வதேச பொறிகளிலிருந்து இலங்கை அரசைக் காப்பாற்றியதைத் தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பு எதனையும் செய்யவில்லை. வெகுஜன அரசியல் மயப்படுத்தலைக்கூட செய்யவில்லை போருக்குப் பின்னரான தமிழ் தேசிய அரசியல் இயக்கமென்பது மீளவும் முதலில் இருந்து கட்டமைக்கப்படவேண்டியிருந்தது. முழுக்கமுழுக்க மக்களால் நிரம்பப்பெற்ற வெகுசன அரசியல் இயக்கமாக அது மாறவேண்டிய தேவையுமிருந்தது. மக்களை அரசியல்மயப்படுத்தும் வேலைத்திட்டங்கள் இதனைச் செய்யவேண்டிய பொறுப்பு தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாகத் தம்மைப் பிரகடனம் செய்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கே இருந்தது. ஆனால் மக்களை அரசியல்மயப்படுத்தும் வேலைத்திட்டங்கள் எவையுமே நடைபெறவில்லை. மாறாக அடுத்தடுத்து வருகின்ற தேர்தல்களுக்கு யாரையெல்லாம் உள்ளீர்த்துக்கொள்ளலாம் என்கிற வாக்கு அரசியல் வியாபாரத்தையே இந்த இயக்கம் மேற்கொண்டது. யாரை உள்ளே வைத்துக்கொள்வது, யாரை வெளியே அனுப்புவது என்பதற்கான சதிகளில் தன் காலத்தைச் செலவிட்டது. மக்கள் சுயமாகக் கிளர்ந்தெழுந்து தம் அரசியல் உரிமையை உலகின் முன்வைத்தபோதெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அதிலிருந்து விலகி நின்று வேடிக்கைபார்த்தது. மக்களின் போராட்டங்களைக் கண்டுகொள்ளவில்லை தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட அநீதிகளுக்கும், அபகரிப்புக்களுக்கும் எதிராக மக்களைத் திரட்டிப் போராடவேண்டிய கூட்டுப் பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இருந்தது. தம் வளமிகு நிலத்தை, வீடு வளவுகளை, சொத்துக்களை அரசிடமும், இராணுவத்திடமும் இழந்த மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்துப் பகுதிகளிலுமே போராட்டங்களை நடத்தினர். பல்வேறு விதமான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தாமாக முன்வந்து இந்தப் போராட்டங்களை நடத்தினர். முல்லைத்தீவு மாவட்டத்தின் பிலக்குடியிருப்பு மாதிரியான இடங்களில் வெற்றியையும் அடைந்தனர். காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மறுபுறத்தில் இறுதிப்போரின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் பல வருடங்களாகத் தெருவில் அமர்ந்து போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர். போராடத் தொடங்கிய காலத்திலிருந்து போராட்டக்காரர்கள் பலர் நோய்வாய்ப்பட்டு இறந்தும் போனார்கள். இந்தப் போராட்டங்கள் அனைத்தின் பின்னாலும் பலமான அரசியல் சக்தியாகக் கூட்டமைப்பு இருந்திருக்க வேண்டும். இந்தப் போராட்டங்கள் நோக்கிய கவனத்தை ஈர்க்கப் பாடுபட்டிருக்க வேண்டும். ஆனால் இவற்றில் புகைப்படங்களை எடுக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதைத் தவிர வேறு எவ்விடத்திலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரைக் காணமுடியவில்லை. இராஜதந்திர வெற்றி எதுவுமில்லை விடுதலைப் புலிகளுக்குப் பி்ன்னரான தமிழர்களைக் கையாளவேண்டிய தேவை அமெரிக்காவுக்கும் இருந்தது. இந்தியாவுக்கும் இருந்தது. தெற்கில் தாம் விரும்பும் ஆட்சியைக் கொண்டுவரவும், விரும்பாதவர்களை வீட்டுக்கு அனுப்பவும் தமிழர்களது வாக்குகள் அவசியப்பட்டன. தமிழர்களின் ஒற்றைவிரலில் தங்கியிருந்த இலங்கையின் அரசியல் தலைவிதியை தமிழர் தரப்புச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இந்திய தூதரகமும், அமெரிக்க தூதரகமும் சொல்வதைக் கேட்பது, அதன்படி நடப்பதுதான் உச்சபட்ச ராஜதந்திரமாக இருந்தது. இனப்பிரச்சினை தீர்வு விடயம், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியை சர்வதேசத்திடம் கோரும் விடயம் உள்ளிட்ட அனைத்திலுமே மேற்கண்ட தரப்பினர் என்ன சொல்கிறார்களோ அதனையே நடைமுறைப்படுத்த உழைக்கும் கூட்டமாகவே கூட்டமைப்பினர் தொழிற்பட்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.நாவும், அமெரிக்காவும் இலங்கையில் இனப்படுகொலை விசாரணை நிறைவுபெற்றுவி்ட்டது எனச் சொன்னபோதும், இது உள்நாட்டுப் பிரச்சினை, கலப்பு நீதிமன்றப் பொறிமுறையின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் எனச் சொன்னபோதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனை ஆமோதித்து வரவேற்றது. எந்த நாடுகளிடமும் இதனை மறுத்து, தமிழர்கள் எதிர்பார்க்கும் சரியான தீர்வை – நீதியை ஓர் அறிக்கை வடிவிலாவது வெளிப்படுத்தவில்லை. இனப்படுகொலைக்கான நீதிகோரல் – ஆவணப்படுத்தல் உலகில் இனப்படுகொலைக்குள்ளான எந்த இனத்திற்கும் நீதியானது உடனடியாகக் கிடைத்துவிடவில்லை. அவ்வினங்கள் தாம் பெறவேண்டிய நீதிக்காகப் பல தசாப்தங்கள் போராடவேண்டியிருந்தது. தம் மீது நிகழ்த்தப்பட்டது கட்டமைப்பக்கப்பட்ட இனப்படுகொலையே என நிரூபிக்க பல நூற்றாண்டுத் தரவுகளைத் திரட்டி ஆவணப்படுத்தவேண்டியிருந்தது. தமிழர்கள் மத்தியில் பலமான அரசியல் இயக்கமாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு முன்னாலும் அவ்வாறானதொரு வேலைத்திட்டமிருந்தது. கிராமத்திற்கு கிராமம் தம் தொண்டர்களைக் கொண்டிருக்கும் கூட்டமைப்பானது இவ்விடயத்தில் ஒரு துரும்பளவுகூட எதனையும் செய்யவில்லை. அமரத்துவமடைந்த மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு அவர்கள் ஆற்றிய பணியளவுக்குக் கூட கூட்டமைப்பினர் ஓர் அமைப்பாக எதனையும் செய்யவில்லை. ஆர்வமுள்ள தனிநபர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் இதனைவிட அதிக பணிகளைச் செய்துள்ளமையையும் இவ்விடத்தில் குறிப்பிடவேண்டும். வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கவனமெடுக்கவில்லை 2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்தபோது இனி நிமிரவே முடியாது என்றளவில் தமிழர்களது பொருளாதாரம் சிதைக்கப்பட்டது. மாற்றுத்துணியைக் கூடப் பறித்த பின்னர்தான் போர் முனையிலிருந்து மக்கள் நலன்புரி நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டார்கள். ஓரிரு ஆண்டுகள், நலன்புரி நிலையங்கள் என்ற பெயரிலான திறந்தவெளி சிறைக்குள் அடிமைகள் போல நடத்தப்பட்டார்கள். அதன் பின்னர் தம் சொந்த இடங்களில் குடியேற அனுமதிக்கப்பட்ட போதிலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் வழங்கிய வீட்டுத்திட்ட உதவிகளைத் தவிர வேறெந்த வாழ்வாதார – பொருளாதார மீளெழுச்சிக்கான உதவிகளும் வழங்கப்படவில்லை. போர் இடம்பெற்ற பகுதிகளை முன்வைத்து அரசியல் நிகழ்ச்சிநிரலுடன் கூடிய மாபெரும் அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அவை மக்களை சென்றடைந்ததா என்பது குறித்து யாரேனும் கரிசனைகொள்ளவில்லை. மக்கள் தொடர்ந்தும் பொருளாதாரப் பிடிமானத்திற்காகப் போராடிக்கொண்டே இருந்தனர். தொடர்ந்தும் போராடிக்கொண்டே இருக்கின்றனர். இந்நிலையை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர் தாயகப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்காக குறைந்தபட்சம் ஒரு நிதியத்தையாவது உருவாக்கியிருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு வழியில் தொண்டு நிறுவனப்பாணியிலாவது பொருளாதார மேம்பாட்டுக்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் அது குறித்து சிந்திக்கக்கூடக் கூட்டமைப்பினருக்கு நேரமிருக்கவி்ல்லை. தனக்கிருந்த பொறுப்பை தட்டிக்கழித்தது போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட ரீதியில் கலாசார சிதைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ் இளைஞர்களை இலக்குவைத்து தொடங்கப்பட்ட போதைப்பொருள் பரப்பலானது தற்போது பாடசாலை மாணவர்கள் வரையில் விஸ்திரமடைந்திருக்கிறது. தமிழ் தேசியம் வெறுமனே சுயநிர்ணயக் கோரிக்கைக்கான கோசம் மட்டுமல்ல. தமிழ் சமூகத்தின் ஆன்மாவை சிதைக்கும் அத்தனை ஒடுக்குமுறைகளிலிருந்தும் பாதுகாத்து திசைப்படுத்துவது. விசைப்படுத்துவது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சொல்வதைக் கேட்கவும், அதன் வழி நடக்கவும் மக்கள் எப்போதும் தயாராகவிருந்தனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனக்கிருந்த சமூகப் பொறுப்பைக் கூட கவனியாதுவிட்டது. குழப்பங்கள் மட்டுமே மிச்சம் கடந்த பத்தாண்டுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற தமிழர்களுக்கான அரசியல் இயக்கத்தினுள் நடந்தது ஒன்றே ஒன்றுதான். உள்வீட்டு முரண்கள்தான் மீளமீள நடந்துகொண்டிருந்தன. கூட்டமைப்புத் தலைமையின் தான்தோன்றித்தனத்தை விமர்சித்து அதிலிருந்து விலகுவதற்கான முடிவுகள், உள்வீட்டு விமர்சனங்கள், கட்சி ரீதியான பிளவுகள், கட்சி ரீதியான தன்னிச்சையான செயற்பாடுகள் என ஆரோக்கியமற்றதொரு பாதையில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயணித்துவந்தது. அந்த ஆரோக்கியமற்ற பயணத்தின் முடிவுதான் எவ்வித அரசியல் அதிகாரங்களும் அற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகக்கூட இணைந்து செயற்பட முடியாத குழப்ப நிலையை அந்தப் பேரியத்தினுள் ஏற்படுத்தியிருக்கிறது. https://tamilwin.com/article/tamil-national-federation-necessary-1674728730