Search the Community
Showing results for tags 'நினைத்தால் இனிக்கும் மோகனம்.....!'.
-
உ மயிலம்மா. நினைத்தால் இனிக்கும் மோகனம் .....! மயிலிறகு ....... 01. அந்தக் இரும்பாலான வெளிக்கதவின் கொழுக்கியைத் தூக்கிவிட்டு வீதியில் இருந்து உள்ளே வருகின்றாள் கனகம். அவளுடன் சேர்ந்து வீட்டுக்குள் வர முன்டிய பசுமாட்டை மீண்டும் வீதியில் துரத்தி விட்டிட்டு படலையைக் கொழுவிக் கொண்டு வீட்டுக்குள் வருகிறாள். வரும்போதே மயிலம்மா மயிலம்மா என்று கூப்பிட்டுக் கொண்டு வீட்டின் பக்கவாட்டால் நடந்து குசினிக்கு வருகிறாள். அது ஒரு பழமையான பெரிய வீடு. ஆனால் வீட்டுக்குள் குசினி கிடையாது. அது மட்டும் தனியாக வீட்டின் பின் விறாந்தையில் இருந்து சிறிது தள்ளி இருக்கு. மண்சுவரும் பனைஓலைக் கூரையுமாக சுவருக்கும் கூரைக்கும் இடையில் வரிச்சுப்பிடித்த பனை மட்டைகளுடன் தனியாக இருக்கின்றது. குசினிக்கு முன்னால் ஒரு பெரிய மா மரமும் அதிலிருந்து சிறிது தூரத்தில் பெரிய குளம் ஒன்று முன்னால் உள்ள வீதியில் இருந்து வீட்டையும் கடந்து இருக்கின்றது. மழைக்காலத்தில் ஏராளமான பறவைகள் அங்கு வந்து தங்கிச் செல்வதைக் காணலாம். குசினியின் மறுபக்கத்தில் ஒரு எலுமிச்சை மரமும் அதன் கீழே மீன் இறைச்சி போன்றவை அறுத்துக் கழுவுவதற்குத் தோதாக அரிவாள் ஒன்றும் கிணறும் இருக்கின்றது. அதைத் தாண்டி சிறு பற்றைக் காடுகளும், பாம்புப் புற்றும் அடுத்து ஒரு பத்து ஏக்கர் நிலத்தில் நெல் வயல் இன்னும் சில மாதங்களில் அறுவடைக்குத் தயாராகி வருகின்றது. பனிக்காலத்தில் சமைக்கும் போது அடுப்பில் இருந்து மேல் எழும் புகை கூரைக்கு மேலால் பரந்து பனியை ஊடறுத்து செல்வதை தாய் வீட்டின் விறாந்தையில் இருந்து அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம் அப்படி ஒரு அழகு. உலை வைப்பதற்காக அடுப்பில் பானையை வைத்து தேவையான அளவு தண்ணீரை விட்டு காற்சட்டியால் மூடிவிட்டு, அடுப்புக்குள் ஈர விறகும் அதன்மேல் காய்ந்த சுள்ளிகளும் இடையிடையே பன்னாடைகளையும் செருகி தீக்குச்சியால் நெருப்பு மூட்டி ஊது குழலால் மயிலம்மா கண் எரிய ஊதிக்கொண்டிருக்கும்போது கனகத்தின் குரல் கேட்டதும் கனகம் நான் இஞ்ச இருக்கிறன் உள்ளே வா என்று குரல் குடுக்க கனகமும் உள்ளே வருகிறாள். அவளிடம் தேத்தண்ணி குடிக்கிறியே என்று கேட்டு அவள் பதிலை எதிர்பாராமல் கிளை அடுப்பில் கேத்திலையும் வைக்கிறாள். என்ன விஷயம் ஏதாவது அலுவலோ என்று மயிலம்மா கேட்க அதொன்றுமில்லை மயூரி ஆம் அவள் உண்மையான பெயர் "மயூரி"தான் கனகமும் அவளும் சிறுபிராயத்தில் இருந்தே தோழிகள் என்பதால் கனகம் அவளை மயூரி என்றுதான் அழைப்பது வழக்கம். ஆனால் மயிலம்மாவின் திமிரான நடையும் அதிகாரத் தொனியிலான பேச்சும் எடுப்பான அழகும், பின்னழகைத் தொடும் நீண்ட தோகை போன்ற அடர்த்தியான கூந்தலும் ஆண்கள் வட்டத்தில் மயிலு மயிலம்மா என்றே அழைத்துப் பிரபலமாகி விட்டிருந்தது. நான் சும்மா வந்தனான் என்று கனகம் சொல்ல, தண்ணி கொதித்ததும் மயிலம்மா உலையில் அரிசியை அரிக்கன் சட்டியில் இருந்து களைந்து போடுகிறாள். அப்போது கனகம் எங்கட வேலர் அப்பாவுக்கு சேடம் இழுக்குதாம் அநேகமாக இண்டைக்கு ஆள் முடிஞ்சிடும் என்று கதைக்கினம். அப்படியே மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து இன்று ஏகாதசி அப்படி நடந்தால் நல்லதுதான் அவரும் எவ்வளவு காலமாய் பாயும் நோயும் என்று துன்பப் படுகிறார் என்று சொல்லும் போது மேலே கூரையில் இருந்து ஓலை சரசரக்கும் சத்தம் கேட்டு இருவரும் மேலே பார்க்கின்றனர். மயில் ஆடும் .........🦚