Search the Community
Showing results for tags 'பிளாக்வாட்டர்'.
-
பட மூலாதாரம்,CONCORD PRESS SERVICE கட்டுரை தகவல் எழுதியவர், ஜுபைர் அகமது பதவி, பிபிசி செய்தியாளர் 53 நிமிடங்களுக்கு முன்னர் ரஷ்ய அரசுக்கு எதிராக ஒரு தனியார் ராணுவம் படை திரட்டி கிளர்ச்சியைச் செய்து, அச்சம் காட்டிய விவகாரம் உலகையே விழி விரிந்து பார்க்க வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தனியார் ராணுவங்கள் பற்றிய கேள்விகளும் கிளம்பியுள்ளன. ரஷ்ய அரசுக்கு எதிராகப் படையைத் திரட்டி அச்சம் காட்டிய வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஜின், தங்களது கிளர்ச்சி தோல்வியடைந்ததை அடுத்து பெலாரூஸுக்கு சென்றுவிட்டார். ப்ரிகோஜின் பெலாரூஸ் வந்துள்ளதை அந்நாட்டு தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ உறுதிப்படுத்தியுள்ளார். வாக்னர் குழுவின் தோல்விக்குப் பிறகு கடந்த செவ்வாயன்று தனது ராணுவத்திடம் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், உள்நாட்டு யுத்தத்தை தான் நிறுத்திவிட்டதாகக் குறிப்பிட்டார். வாக்னர் படையினரின் கிளர்ச்சி புதினை நெருக்கடிக்கு உள்ளாக்கியது, யுக்ரேனுடனான போரில் அவர்கள் பங்கேற்றது போன்றவை தனியார் ராணுவம் தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. தனியார் ராணுவப் படைகள் தொடர்பான விவகாரங்களில் பலரும் தங்களின் கவனத்தைக் குவிக்கத் தொடங்கியுள்ளனர். போர்க்களமே அவர்களது வாழ்க்கை, எங்கெல்லாம் யுத்தம் இருக்கிறதோ அங்கெல்லாம் அவர்களும் இருப்பார்கள். உலகின் முக்கிய நாடுகளுக்காக அவர்கள் வேலை செய்கிறார்கள். சொல்லப்போனால், சில அரசு சாரா நிறுவனங்களும் தனியார் ராணுவப் படைகளை பயன்படுத்திக் கொள்கின்றன. தனியார் படைகள் பல நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், அவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. எனினும், ரஷ்யாவின் வாக்னர் குழு மற்றும் அமெரிக்காவின் அகாடமி (பழைய பெயர் பிளாக்வாட்டர்) ஆகியவையே சமீப காலங்களில் செயல்படும் இரண்டு நன்கு அறியப்பட்ட தனியார் ராணுவ நிறுவனங்கள்(PMCs). இவை பல ஆண்டுகளாக சர்ச்சையிலேயே இருந்து வருகின்றன. ஷான் மெக்ஃபீட் வாஷிங்டன் டிசியில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். பல ஆண்டுகளாக தனியார் ராணுவத்தின் ஒரு பகுதியாக இருந்த அவர், இந்த உலகத்தைப் பற்றி இரண்டு புத்தகங்களையும் சில நாவல்களையும் எழுதியுள்ளார். பிபிசி உடனான தொலைபேசி உரையாடலில், தனியார் ராணுவம் அல்லது கூலிப்படை என்பது ஒரு தொழில் என்று அவர் கூறுகிறார். மேலும் பேசிய அவர், “அவர்களை பற்றி புத்தகங்களை எழுதியவன் என்ற முறையில் கூறுகிறேன், கூலிப்படையினர் அல்லது தனியார் ராணுவ வீரர்கள் என்று அழைக்கப்படும் இவர்களின் வாழ்க்கை பெரும் ஆபத்து நிறைந்தது. பெரிய நாடுகள் இது குறித்துப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை," என்று கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, யெவ்கெனி ப்ரிகோஜின் தொடக்கத்தில் சமையல் தொழிலைச் செய்துள்ளார் இந்த விவகாரம் 1990களில் தொடங்கியது, ஆனால் அரசுகள் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் தாமதமாகவே செயலாற்றுகின்றன, இதே முறையை அவை பின்பற்றினால் சர்வதேச உறவுகளில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் ஷான் மெக்ஃபீட். தனியார் ராணுவத்தை அமைக்க மக்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள். நாளை ஈலோன் மஸ்க் (ட்விட்டர் மற்றும் டெஸ்லாவின் உரிமையாளர்) தனது சொந்த ராணுவத்தை உருவாக்க முடியும். தனியார் ராணுவத்தை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இந்தப் போக்கு தொடர்ந்தால், உலகம் மாறும், அராஜகம் பரவும்," என்றார். யெவ்கெனி ப்ரிகோஜினுக்கு 62 வயதாகிறது. அவர், அதிபர் புதினால் உருவானவர். உலகமெங்கும் ரஷ்ய செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதின் 2014இல் வாக்னர் குழுவை உருவாக்கினார். வாக்னர் குழுவின் கிளர்ச்சியால், புதினின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டதாகத் தோன்றுவதாகக் கூறுகிறார் டெல்லியில் உள்ள அரசியல் மற்றும் வெளியுறவுத்துறை நிபுணர் டாக்டர் சுவரோக்மல் தத்தா. இந்தக் குழுவின் வீரர்கள் எண்ணிக்கை 20,000 முதல் 35,000 வரை உள்ளது. மேலும் இது யுக்ரேனிய ராணுவத்திற்கு எதிராக யுக்ரேனின் தெற்கு மற்றும் கிழக்கில் பெரிய அளவிலான வெற்றியை அடைந்துள்ளது. கடந்த 2014இல் ரஷ்யா கிரைமியாவை ஆக்கிரமித்தபோது, இந்தக் குழுவின் பங்களிப்பும் பெரியளவில் அதில் இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாக்னர் படையில் உள்ள பலர் சிறைக் கைதிகள் தனியார் ராணுவத்தின் செயல்பாடுகள் சர்ச்சைக்குரியவை. எடுத்துக்காட்டாக, செப்டம்பர் 2007இல், இராக் தலைநகர் பாக்தாத்தில் ஒரு படுகொலை நடந்தது. இதில் அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனமான பிளாக்வாட்டர் வேர்ல்டுவைடின் (தற்போது அகாடமி என்று அழைக்கப்படுகிறது) வீரர்களின் தொடர்பு உள்ளது, இது இராக்கில் பாதுகாப்பு சேவைகளை வழங்க அமெரிக்க அரசாங்கத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டது. எதிரே வந்த வாகனத்தின் அச்சுறுத்தலை உணர்ந்த பிளாக்வாட்டர் பணியாளர்கள் பரபரப்பான சந்திப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், வாகனங்களில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் ஆகியோர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இராக்கைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். அவர்களில் பலர் நிராயுதபாணிகளாக இருந்தனர், வாகனத் தொடர்வரிசைக்கு வெளிப்படையான அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. இந்தச் சம்பவத்திற்கு இராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சர்வதேச அளவிலும் இச்சம்பவம் கடும் கண்டனத்தைப் பெற்றது. பிளாக்வாட்டர் படையைப் பயன்படுத்துவது மிகையானது மற்றும் நியாயமற்றது என்று இந்தப் படுகொலை பற்றிய அமெரிக்க விசாரணை முடிவு செய்தது. அமெரிக்க நீதித்துறை பின்னர் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பல பிளாக்வாட்டர் வீரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டியது. இராக்கில் தனியார் பாதுகாப்பு வீரர்களின் சர்ச்சைக்குரிய பங்கை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாக்தாத்தில் பிளாக்வாட்டர் படையினர்- 08 ஜூலை 2006 மேலும், இந்தச் சம்பவம் போர்க்களத்தில் இயங்கும் தனியார் ராணுவ நிறுவனங்களைக் கண்காணிப்பது குறித்துப் பரவலான விவாதத்தை கிளப்பியது. பேராசிரியர் ஷான் மெக்ஃபீட் ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் தனியார் ராணுவத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளார். இந்த வீரர்கள் தொடர்பாக எந்தவித உரிமை கோரலும் இல்லை, எனவே அரசுகள் அவர்களைப் பயன்படுத்துகின்றன என்று அவர் கூறுகிறார். "கூலிப்படையைப் பணியமர்த்துவதற்கு இது ஒரு சிறப்புக் காரணம். அரசாங்கத்தைச் சேர்ந்த வீரர் யாரேனும் ஒருவரைக் கொன்றால், அவர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படுவார். ஆனால் தனியார் ராணுவ குழுவைச் சேர்ந்த ஒருவர் அதே குற்றத்தைச் செய்தால் எந்த வித நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படாமல் வீடு திரும்புவார்,” என்று ஷான் மெக்ஃபீட் குறிப்பிடுகிறார். கூலிப்படையின் வரலாறு ராணுவத்தில் கூலிப்படையின் பங்கு வரலாற்றில் மிகவும் பழைமையானது. தனிப்பட்ட ஆதாயங்கள், அரசியல் நலன்கள், கருத்தியல் காரணங்களுக்காக கூலிப்படையினர் பல நூற்றாண்டுகளாகப் போர்களில் ஈடுபட்டுள்ளனர். வரலாறு முழுவதும், அரசின் வழக்கமான ராணுவத்திற்கு உதவுதல், வணிக நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தனியார் படைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பண்டைய எகிப்தில், பார்வோன் அண்டைப் பகுதிகளிலிருந்து கூலிப்படையை அமர்த்தி, ஒரு நிலையான ராணுவத்தை நிர்வகித்து வந்தார். பண்டைய கிரேக்கத்தில் உள்ள ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்டா போன்ற நகர-மாநிலங்கள் தங்கள் ராணுவப் படைகளை வலுப்படுத்த "ஹாப்லைட்டுகள்"(hoplites) என்று அழைக்கப்படும் கூலிப்படையை அடிக்கடி வேலைக்கு அமர்த்தியது. பண்டைய ரோமானியப் பேரரசு தனது படைகளுக்குத் துணையாக ஜெர்மானிய பழங்குடியினர் போன்ற கூலிப்படையினரைப் பயன்படுத்தியது. பேரரசர்கள் தங்களுக்கான தனிப்பட்ட மெய்க்காப்பாளர் பிரிவுகளையும் உருவாக்கினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாக்னர் கூலிப்படையைச் சேர்ந்த வீரர்கள் காலனித்துவ மற்றும் மறுமலர்ச்சி காலம் ஐரோப்பிய உருவாக்கம்: டச்சு கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி போன்ற தனியார் நிறுவனங்கள் தங்கள் வணிக நலன்களைப் பாதுகாக்கத் தனியார் படைகளை நிறுவின. இத்தாலி மறுமலர்ச்சி: வெனிஸ் மற்றும் ஃப்ளோரன்ஸ் போன்ற சக்தி வாய்ந்த நகர-மாநிலங்கள் தங்கள் சார்பாகப் போர்களை நடத்த கூலிப்படைகளைப் பயன்படுத்தின. ஏகாதிபத்தியத்தின் சகாப்தம் ஐரோப்பிய பேரரசுகள்: காலனித்துவம் உச்சத்தில் இருந்தபோது, ஐரோப்பிய அரசுகள் தங்கள் காலனிகளை விரிவுபடுத்தவும் கட்டுப்பாட்டைப் பராமரிக்கவும் தனியார் படைகள் மற்றும் கூலிப்படைகளைப் பயன்படுத்தின. பிரிட்டிஷ் தென்னாப்பிரிக்கா கம்பெனி மற்றும் காங்கோ ஃப்ரீ ஸ்டேட்டின் ஃபோர்சஸ் பப்ளிக் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய சொந்தப் படைகளைக் கொண்டிருந்தன. அமெரிக்க புரட்சி: அமெரிக்க புரட்சிப் போரின்போது அமெரிக்க குடியேற்றவாசிகள் மற்றும் பிரிட்டிஷ் பேரரசு ஆகிய இரு தரப்பிலும் கூலிப்படையினர் பயன்படுத்தப்பட்டனர். நவீன காலத்தில் கூலிப்படைகளின் பயன்பாடு காலனித்துவத்துக்குப் பிந்தைய மோதல்கள்: 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தனியார் ராணுவ நிறுவனங்கள் (PMCs) முக்கியத்துவம் பெற்றன. அரசுகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் சார்பில் பல போர்களில் அவை பங்கேற்றன. இராக், ஆப்கானிஸ்தான் போர்கள்: இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களின்போது, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பிளாக்வாட்டர் போன்ற தனியார் ராணுவ நிறுவனங்களைப் பெரிதும் நம்பியிருந்தன. இந்தத் தனியார் ராணுவ நிறுவனங்கள் பாதுகாப்பு, தளவாட ஆதரவு மற்றும் பிற சேவைகளை வழங்கின. சமகால செயல்பாடுகள்: உலகெங்கிலும் மோதல்கள் மற்றும் மோதல்களுக்குப் பிந்தைய சூழல்களில் தனியார் ராணுவ நிறுவனங்கள் தொடர்ந்து பங்கு வகிக்கின்றன. இருப்பினும், பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் சாத்தியமான மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது நிலைமை கவலைக்குரியதாகவே உள்ளது. இந்தியாவில் தனியார் ராணுவத்தின் வரலாறு டாக்டர் சுவ்ரோகமல் தத்தாவின் கூற்றுப்படி, விஜயநகரப் பேரரசில் மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான், இரான் போன்ற நாடுகளில் இருந்து வரும் போராளிகளை உள்ளடக்கிய ராணுவத்தின் ஒரு பகுதி இருந்தது. அவர்களுக்கு உரிய கட்டணம் செலுத்தப்பட்டது, அவர்கள் ஒப்பந்த முறையில் பணிபுரிந்தனர். விஜயநகரப் பேரரசு அகமதுநகர் சுல்தான்களுக்கு எதிராகவும் கோல்கொண்டா மற்றும் ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராகவும் அவர்களைப் பயன்படுத்தியது. "சோழப் பேரரசின் விரிவாக்கத்திலும் மத்திய ஆசியாவை சேர்ந்த மக்களால் உருவாக்கப்பட்ட தனியார் ராணுவம் முக்கியப் பங்கு வகித்தது. டெல்லி சுல்தான் மற்றும் முகலாயப் பேரரசின்போது கூட தனியார் வீரர்களின் பயன்பாடு இருந்தது,” என்று சுவ்ரோகமல் கூறுகிறார். காலனித்துவ சாம்ராஜ்யத்தைப் பற்றி பேசும்போது, “அவர்கள் புதிய இடங்களையும் புதிய நாடுகளையும் ஆக்கிரமித்தபோது, அந்தக் காலத்திலும் தனியார் ராணுவத்தின் பயன்பாடு பிரதானமாக இருந்தது. ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பலர் பலவந்தமாக தனியார் படைகளாகப் பயன்படுத்தப்பட்டனர் மற்றும் போர்க்களத்தில் கொடூரமாகப் பயன்படுத்தப்பட்டனர்,” என்று குறிப்பிடுகிறார். தனியார் ராணுவத்தின் பயன்பாடு சட்டவிரோதமா, அல்லது அவை கட்டுப்படுத்தப்படுகின்றனவா? பட மூலாதாரம்,GETTY IMAGES அவர்களைக் கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும், அதற்காக சர்வதேச மாநாடு, சட்டம் போன்றவை தேவை என்றும் டாக்டர் சுவ்ரோகமல் தத்தா கூறுகிறார். "21ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்யா மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவும், அவற்றின் அரசுகளைச் சீர்குலைக்கவும் தங்களின் கொள்கைகளைச் செயல்படுத்தவும் தனியார் ராணுவத்தைப் பயன்படுத்தின. இது சர்வதேச சட்டமான வியன்னா ஒப்பந்தத்தை மீறியது," என்றும் அவர் தெரிவித்தார். “இதற்கு கண்ணெதிரே உள்ள சான்றாக அமெரிக்கா உள்ளது. இராக்கில் தனியார் ராணுவத்தை அது பயன்படுத்திய விதம் அனைத்து சர்வதேச சட்டங்களையும் மீறுவதாக இருந்தது. இதன் விளைவாக மனித உரிமைகள் பெரியளவில் மீறப்பட்டுள்ளன. தனியார் ராணுவத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் ஒரு சர்வதேச ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தனியார் ராணுவத்தின் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்று சுவரோகமல் குறிப்பிடுகிறார். பேராசிரியர் ஷான் மெக்ஃபீட் இதுகுறித்துப் பேசும்போது, "தனியார் படைகள் மற்றும் கூலிப்படைகளைத் தடுக்கும் அல்லது ஒழுங்குபடுத்தும் சட்டத்தை ஏற்படுத்த இரண்டு தடைகள் உள்ளன. முதலாவது, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகள்தான் அதிக எண்ணிக்கையிலான தனியார் ராணுவங்களைக் கொண்ட மிகப்பெரிய நாடுகளாக உள்ளன. இரண்டாவதாக, ஒரு நல்ல சர்வதேச சட்டத்தை உருவாக்கினாலும், அதை எப்படிச் செயல்படுத்துவது என்பதில் சிக்கல் உள்ளது. எடுத்துக்காட்டாக, பெலாரூஸுக்குள் சென்று கூலிப்படையை யார் கைது செய்வது? லிபியா, ஏமன், இராக் சென்று யார் கைது செய்வார்கள். ஐ.நா.வால் அதைச் செய்ய முடியாது. "சிலர் சர்வதேச சட்டங்களைக் கோருகின்றனர் ஆனால் இது வெறும் கற்பனையே," என்கிறார் அவர். ஷான் மெக்ஃபீட்போன்ற வல்லுநர்கள் மற்றும் தனியார் ராணுவத்தில் பணிபுரிந்தவர்களின் கருத்துப்படி, இந்தத் தொழில் தொடர்ந்து வளர்ந்துகொண்டே செல்லும், இதை யாராலும் தடுக்க முடியாது என்பதுதான். பெரிய நாடுகள் அவற்றைப் பயன்படுத்துகின்றன என்பது கவலைக்குரிய விஷயம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/clkd83lv2p7o