Search the Community
Showing results for tags 'மலர்ந்திட கதிரவன் துணையுண்டு.'.
-
உ மலருக்கு தென்றல் பகையானால் .......! மலர்ந்திட கதிரவன் துணையுண்டு. (1). நிர்மலா சங்கரைத் திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டுக்கு வந்து பத்து வருடமாகின்றது. முன்பெல்லாம் மிக அன்பாயிருந்த அவளது மாமியார் இராசம்மா இப்போதெல்லாம் அவள்மீது கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கிறாள். அது நிர்மலா அவளைக் கடந்து போகும் போதெல்லாம் ஜாடைமாடையாக கதைப்பதும், ஏதாவது சிறு தவறு செய்தாலும் அதைப் பெரிதாக்கி சண்டை போடுவதுடன், மாலையில் மகன் சங்கர் வேலையால் வந்ததும் போட்டுக் குடுப்பதிலும் தெரிகிறது. அவனும் வேலையால் அலுத்துக் களைத்து வரும்போது தாயின் புறணியைக் கேட்டு சில நேரங்களில் நிர்மலாவை கை நீட்டி அடித்தும் விடுகிறான். நிர்மலாவின் குடும்பம் அவ்வளவு வசதியில்லா விட்டாலும்கூட சராசரியான நடுத்தரக் குடும்பம்தான். சண்முகம் கோமளம் தம்பதிகளுக்கு நிர்மலா ஐந்தாவது பெண்பிள்ளை. ஆனாலும் அவர்கள் அவளை நன்றாகப் படிக்க வைத்திருந்தார்கள். அவளும் படிப்பில் நல்ல கெட்டிக்காரி. விசேஷமாக கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் அந்தப் பாடசாலையிலேயே சிறப்பான சித்தி பெற்றிருந்தாள். அத்துடன் சங்கீதத்திலும் நல்ல தேர்ச்சி உண்டு. யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது அவசரம் அவசரமாக இந்தத் திருமணம் வந்தது. அவர்கள் சீர்வரிசை எதுவும் கேட்கவில்லை. ஆயினும் நிர்மலா எவ்வளவோ மறுத்தும்கூட, இனி இப்படி ஒரு சம்பந்தம் அமைவது கஷ்டம் என்று சொல்லு அவளை சம்மதிக்க வைத்துவிட்டார்கள். ஆனாலும் சண்முகம் அவளுக்கு கழுத்துக்கு காதுக்கு கைகளுக்கு என்று சில பல நகைகள் எல்லாம் போட்டுத்தான் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவளும் வரும்போது மறக்காமல் தனது மடிக்கணனியையும் கைபேசியையும் கையேடு கொண்டு வந்திருந்தாள். இராசம்மாவும் கொடுமையானவள் அல்ல. அவளுக்கு வயசும் நாற்பத்தைந்தில் இருந்து நாற்பத்தெட்டில்தான் இருக்கும். அவளுக்கு குட்டையான தலைமுடி. முன்பெல்லாம் முடி நீளமாக வளரவில்லையே என்பதுதான் அவளது குறையாக இருந்தது. அதற்காக "கேசவர்த்தினி" உட்பட பல எண்ணெய்கள் தைலங்கள் எல்லாம் பாவித்தும் வந்திருக்கிறாள். இப்பொழுது அந்தக் குறைகூட இல்லை அவளுக்கு. முடிவாக இருக்கிற முடியை காப்பாற்றினாலே போதும் என்னும் மனநிலைக்கு வந்திருக்கிறாள்.அவ்வளவுக்கு முடி கொட்டத் தொடங்கி விட்டது. அத்துடன் இத்தனை வருடங்களாகியும் மகனுக்கு பிள்ளை இல்லையே என்னும் கவலையும் சேர்ந்துகொண்டது. அதற்கேற்றாற்போல் கோயில் குளங்கள், கடைகளில் சந்திக்கும் அவளது சிநேகிதிகளும் சங்கருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று தூபம் போட்டுக் கொண்டிருந்தார்கள். "கரைப்பார் கரைத்தால் கல்லும் கரைவதுபோல்" இப்போதெல்லாம் அந்த எண்ணங்கள்தான் அவளை ஆட்டிப் படைக்கிறது. முன்பு இராசம்மாதான் மகனிடம் சொல்லி நிர்மலா விட்ட அவள் படிப்பைத் தொடர வழி செய்து பட்டப் படிப்பை முடிக்கவும் உதவியவள். சமைக்கவே தெரியாமல் இருந்த அவளை தனக்குப் பக்கத்தில் வைத்து தான் சமைக்கும் போதெல்லாம் அவளுக்கும் சொல்லிக் குடுத்து சாம்பார்,ரசம்,கறி குழம்புகளுக்கு ஏற்றாற்போல் காய்கறி வெட்டுவதில் இருந்து மீன்கள், இறைச்சிகள் எப்படி வெட்டுவது என்பதுவரை கற்றுக் குடுத்திருந்தாள். கூடவே வேலைக்காரி தாயம்மாவும் இருப்பதால் சமைக்கிற நேரம் போக மிச்சம் நிறைய நேரம் இருக்கும். அந்நேரங்களில் இருவரும் சங்கீதம்,இராகங்கள் பற்றி விலாவாரியாக விவாதிப்பதும் தேவாரம் கீர்த்தனைகள் சாதகம் செய்வதுமாய் பொழுதுகள் போகும். அதனால் மாமியாரை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவவை தனது தாய்க்கும் மேலாக மதித்து கவனித்து வருவாள். ஆனாலும் என்ன செய்வது தன் குலம் விளங்க ஒரு பேரனோ பேத்தியோ அவள் பெற்றுத் தரவில்லை என்னும் ஆதங்கம் அவளை கொஞ்சம் மாற்றி விட்டது. மலரும்...........! 🌹