Search the Community
Showing results for tags 'மாதகல்'.
-
கப்டன் ஈழமாறன் நவம்பர் 11, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து “டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் விடுறா…. என்ர பொடியள் என்ன மாதிரியோ…. விடடா மச்சான்….” வைத்தியசாலையின் கட்டிலில் இருந்தபடி, காலில்குத்திய திருக்கைமுள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப்படாதவனாய், வேதனைகளை மறைத்தபடி, தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக்கொண்டிருந்தான் ஈழமாறன். அவனின் நச்சரிப்பினைத் தாங்காது வைத்தியரிடம் சொல்லும் அவர்களுக்கு, அவரின் வார்த்தைகள் ஏமாற்றத்தையே கொடுக்கும். “விசம் உடனே இறங்காது தம்பி, இதால ஆக்கள் செத்துப்போய் இருக்கினம்: ஒரு இரண்டு நாள் பொறும், பிறகு போகலாம்” எனப் புன்னகைதனை முகத்தில் தவழவிட்டவாறு சொல்வதை, ஏமாற்றத்துடன் பார்ப்பான் அவன். அதனையும் மீறி பொதுமகன் ஒருவனின் சைக்கிளில் ஏறி, பயிற்சி நடக்கும் இடம் வந்துவிட்டான். பொறுப்பாளரின் கண்டிப்பான பார்வைதனைக் கண்டு, முகத்தைத் தொங்கவிட்டவாறு மீண்டும் வைத்தியசாலைக்குச் செல்லநேர்ந்துவிட்டது. கால் நோ மாறும் முன்னரே மூன்று நாட்களின் பின்னர் மீண்டும் பயிற்சிப்பாசறை வந்து, தனது பிள்ளைகளுடன் பயிற்சிகளை மேற்கொண்டான். இவ்வாறு மனஇயல்பினைக் கொண்டவன் இவன் ஆம்… இப்பயிற்சியானது சிங்களப்பேய்களின் பற்களைப் பிடுங்குவதற்காய்… ஆணவத்தைச் சிதைப்பதற்காய்… தமிழ் மக்களின் உடல்கள் கடலுடன் கலப்பதை நிறுத்துவதற்காய்…. சுமூகமான ஒரு பாதைதனைத் திறப்பதற்காய்… பூநகரிக் கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல்களை மேற்கொள்வதற்காய், ஆண் – பெண் போராளிகள் அனைவருமே கடல், தரையெனப் பாராது கடும் பயிற்சிதனை மேற்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவனாக, குழுவின் தலைவனாக ஈழமாறனும்…. மகிழ்வுடன் கடல் கரைதனைத் தழுவி மீளும் – ஆழத்துடன் அழகும் கொண்ட – கடற்கரைதனை அணையாகப் பெற்ற மாதகல்தனைத் தனது தாயாகக் கொண்டவன். கடலன்னையின் அணைப்பிலே திளைத்தவன். சுப்பிரமணியம் நாகேஸ்வரி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக 05.05.1973 இல் இம்மண்ணில் உதித்தான். ஏழு இரத்த உறவுகளையும் இவன் தனதாக்கிக் கொண்டான்: தாயக தாகத்தைத் தனது உயிராகவும் கொண்டான். எப்பொழுதுமே மெல்லிய புன்னகைதனை முகத்தில் படரவிட்டிருப்பான். துடிதுடிப்புடன் வளையவருவான். பார்வையினாலே எல்லோர் மனத்தையும் கவர்ந்துவிடுவான். “வெளிநாடு வா” என மூத்த உடன்பிறப்பு அழைத்தும் கூட, இவன் தனது உறுதியைத் தளரவிடவில்லை. “அண்ணா. நீ தாய்க்காக உழைத்துவிடு@ நான் தாய்நாட்டுக்காக உழைக்கப்போகிறேன்” எனக் கூறித் தனது பணியைத் தொடர்ந்தான். ஆரம்பக் கல்விதனை மாதகல் ‘சென்.ஜோசப் பாடசாலை’யில் பயின்ற பின்னர், 1984 ஆம் ஆண்டு, தெல்லிப்பழை ‘மகாஜனாக் கல்லூரி’யில் தனது கல்வியைத் தொடர்ந்தான் படிப்பில் மட்டுமல்லாது. விளையாட்டுத் துறையிலும் தி;றமையாகச் செயற்பட்டு, கோட்ட மாவட்ட ரீதியில் பல பரிசில்களைப் பெற்றுத் தனது பாடசாலைக்குப் பெருமைத்தேடிக் கொடுத்தவன். இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் மனமுடைந்த இவன், தனது சேவை இந்நாட்டுக்கு உடனடித் தேவையெனப் புரிந்து. 1990 இல் தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்துக்கொண்டான்: பயிற்சிக் காலத்தின்போது திறமையாகச் செயற்பட்டு, அனைவரினதும் பாராட்டுக்களையும் பெற்றான். பயிற்சி தவிர்ந்த ஏனைய நேரங்களில், சக போராளிகளை அருகில் இருத்தி, விடுதலைப் போராட்டங்கள் பற்றி விளங்க வைப்பான். பொறுப்பாளரின் வருகையை அறிந்தவுடனேயே தனது குட்டிப் பிரசங்கத்தை நிறுத்திவிடுவான். ஆகையினால், மறைந்திருந்து இவனது பேச்சைக் கேட்டு ரசிப்பார்கள். பயிற்சி முடிந்தவேளை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ‘யாழ்.கோட்டைச் சண்டை’யில் ஈடுபடும் வாய்ப்புக் கிட்டியது. திறமையாகச் செயற்பட்டதன் காரணமாக ஏழுபேருக்குப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்ட உடனேயே காரைநகர் சண்டைக்களம் அவனை அழைத்தது. அதன் பின்னர், மன்னார் பரப்புக்கடந்தான் நோக்கி முன்னேறிய இராணுவத்தை எதிர்கொள்ளவென இவனது அணிக்கு அழைப்பு வந்தது. கடும் சண்டை ஆரம்பமானது. புலிகளின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத இராணுவம் பின்வாங்கியது. மீண்டும் சண்டை மூள, ஒரு தோழனை இழக்க நேரிட்டது. மனம் கொதித்த தினேஷ் கடுமையான தாக்குதல் தொடுத்தவாறு முன்னேறினான்…. எதிரியின் தாக்குதலால் காலிலும் கையிலும் காயமடைந்த இவனைத் தக்க முறையில் வைத்தியப்பிரிவுக்கு அனுப்பினார்கள் போராளிகள். காயம் மாறி முகாம் வந்தவேளை, அவனுக்கு எல்.எம்.ஜி. கனரக ஆயுதம் வழங்கப்பட்டது. அதை எந்த நேரமும் பளிச்சென்று வைத்திருப்பான் தனது வெள்ளைப் பற்களைப்போல…. இவனுடன் பழகிய நாட்களை அசைபோட்டுப் பார்க்கிறேன். அவை மறக்க முடியாதவை@ மனதில் இருந்து அகற்ற முடியாமல் ஆழத்தில் கிடந்து என்னுடன் மீட்டல் வகுப்புக்கள் நடாத்தும். அன்றுறொருநாள், பலாலியைச் சுற்றியுள்ள காவலரண்களில் ஒரு பகுதியில் எமது அணி நிற்கும் வேளை. குறிப்பிட்ட நேரமில்லாமல், தூங்கி விழித்தவுடனேயே எதிரி தாக்குதலை ஆரம்பித்து முடிப்பான். அவ்வேளையில் கன்னத்தை உராய்ந்தபடி, காதைச் ‘செவிடுபட வைக்கும்’ அதிர்வோடு. அருகினில் ஷெல் வெடிக்கும். நாம் அனைவரும் பாதுகாப்பினை எடுத்து நிற்கும்போது, தினேஷ் மட்டும் தலையை நிமிர்த்தி நிற்பான். “தலை போகப்போகுது பதியடா தலையை” எனக்கூறினால், “டேய் தலையை எல்லோரும் உள்ளுக்கை வைத்திருந்தால் அவன் வந்து, கொட்டி எழும்பு என்ற தலையில் பிடித்துத் தூக்குவான்” என்பான். இக்கட்டான நேரங்களிலும் கூட நகைச்சுவை உணர்வுடன் உரையாடுவான்@ இது அவனது சுபாவம். பலாலி என்றாலே பழவகைத்தோட்டம் கண்முன்னாலே தெரியும்… இன்றைக்கு எல்லாவற்றையுமே எதிரி சிதைத்து நிற்கிறான்…. எமக்குப் பசியெடுக்கும் நேரம் எல்லாம் பதுங்கி முன்னே சென்று, பழங்கள் பறித்து வந்து உண்பது வழக்கம். கூடவே தினேஷ் வருவான். ஒருநாள் நாம் முன்செல்ல ஆயத்தமான வேளை தினேசைக் காணவில்லை. “பரவாயில்லை@ நாம் போய்வருவோம்” எனக்கூறி எமது அணி முன்னேறியது – பழம் பிடுங்குவதற்காய். மரத்தில் ஏறியாகிவிட்டது. பழங்களைப் பறித்துக் காற்சட்டைப் பையினுள் போட்டுக்கொண்டிருந்த வேளை… சிங்கள உச்சரிப்புக் கேட்டது. மிக அருகிலே எதிரி இருப்பதினாலும், அவன் அடிக்கடி வந்து செல்லும் இடமானதாலும் நாம் மெதுவாக – சத்தம் செய்யாது மரத்திலிருந்து இறங்கிப் பதுங்கி நின்றோம்…. வரவரச் சிங்கள உச்சரிப்பு மிக அருகிலேயே கேட்க ஆரம்பித்தது. … இந்த வேளையில் சண்டை பிடிப்பது எமக்கு இழப்பைக் கூடுதலாகத் தரும் என்பதை மனதிற்கொண்டு, மிக வேகமாகப் பின்வாங்கினோம். எமது காவலரணில் நிலை எடுத்து நின்று கொண்டு தாக்குதலுக்குத் தயாரானோம். தினேசும், லெப்டினன்ட் சிந்துவும் சிரித்தபடி எமது செருப்புக்களை எடுத்துக் கொண்டு…. சிங்களம் கதைத்து எம்மை வெட்கப்படவைத்துவிட்டான். நிலைமையை ஒரு நொடியில் உணர்ந்து கொள்ள, அசடு வழிந்தபடி அவனுடன் சேர்ந்து சிரித்தோம். இப்படி அவனது குறும்புத்தனங்களைக் கூறிக்கொண்டே போகலாம். ஆறுமாதப் பிணைப்பால் ஒன்றுபட்டு எமது பணி தொடர்ந்தவேளையில், வேறிடம் வரும்படி அழைப்பு வந்தது… எமது சோகங்களைப் பகிர்ந்துகொண்டு அவனுக்கு விடை கொடுத்தோம். கரும்புள்ளியாக அவன் மறையும் வரை கைகளை அசைத்து விடைகொடுத்தோம். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து, இலட்சியம் என்னும் பிணைப்பால் ஒன்றுபட்ட எங்களது பாசங்களை வார்த்தைகளால் வரைந்துவிட முடியாது, பிரிந்துசென்ற அவன் ‘மின்னல்’ தாக்குதலில் ஏ.கே.எல்.எம்.ஜி. கனரக ஆயுதத்திற்கு உதவி இயக்குநராகச் சென்றான். மிகவும் பலம்வாய்ந்த ஒன்றாகச் சண்டை நடைபெற்றது. எதிரி தனது முப்படைகளினதும் உதவியுடன் மிக மூர்க்கத்தனமாகத் தாக்கினான்…. ஆனால் எம்மிடமோ அசைத்துக் குலைக்கமுடியாத உறுதி பக்கபலமாக இருந்தது. இங்கும் அவனது தலை வீரத்தின் வடு ஒன்றினை ஏற்றுக்கொள்கின்றது… அவனது உடலில் காணப்படும் ஒவ்வொரு தழும்பும் ஒவ்வொரு சண்டைதனைப் பறைசாற்றி நிற்கும்…. அவனது குருதியை எததனை முறை இம்மண் மாதா ஏந்தியிருப்பாள்… நினைத்துப் பார்க்கிறேன்…. காயம் ஆறிய பின்னர் இவனுக்கு மருத்துவ வீடு கடமை செய் எனக் கூறியது…. அன்பாகவும், பண்பாகவும், அதேவேளை வேதனையுடன் முனகும் போராளிகளுக்குத் தாய்க்குத் தாயாகவும் நின்று அரவணைப்பினையும் வழங்கியவன். சில காலங்களின் பின்னர் மீண்டும் அவனுடன் சேரும் காலம் கிட்டியது. பாசறைதனில் பயிற்சி வழங்கப்பட்டது…. மகிழ்வுடன் பொழுதுகளைக் கழித்தோம். உடலலுப்;பின் காரணமாக கடமை நேரத்தில் சிறிது கண்ணயர்ந்துவிட்டான் தினேஷ்@ இவனுடன் யசி என்ற போராளியும்தான்….! “நித்திரை எமக்கு எதிரி. அதனால ஏறுங்கோ தென்னை மரத்தில” – பொறுப்பாளரின் கண்டிப்பான குரல். இருவரும் மரத்தில் ஏறிவிட்டனர். ஆனால் அங்கும் அவனது குறும்புகள் நின்றுவிடவில்லை. சிரித்த படியே மரத்திலிருந்து இளநீர் குடித்தான். கீழ நின்றவர்களுக்கும் போட்டான். அவனது இச்செயல்களால் அவனிடம் கோபம் பறந்து போக, இறக்கப்பட்டு பயிற்சிக்கு அனுப்பப்பட்டான. இவ்வாறு தான் செய்யும் சிறிய தவறுகளுக்காயினும் பெற்று தண்டனைகளை மகிழ்வுடன் எற்றுச் செய்யும் நிலை, அவனுக்கே உரியது தான். எமது கொட்டில் கலகலப்பாக இருக்கிறதென்றால் அங்கு தினேஷ் இருப்பது எல்லோருக்கும் தெரிந்துவிடும். நாம் அனைவரும் அவனைச் செல்லமாக “சம்மாட்டி” என்று தான் அழைப்போம். அதற்கு அவன் ஒரு நாளும் கோபித்தது கிடையாது. மெல்லிய புன்சிரிப்புடன் சென்றுவிடுவான். அராலித்துறையருகே இவனது அணி நின்றபோது, பிறந்த மண் எதிரியால் சூழப்படுகின்றது. கொதித்தெழுந்த அவன்….. கடைசித் தங்கை மேகலாவை எண்ணி மிகவும் துயரமுற்றான். வீட்டில் தாயிடத்தும், கடைசித் தங்கையிடமும் தான் இவனது பாசப்பிணைப்பு இறுகியிருந்தது. “என்ர கடைசித் தங்கைக்கு ஒண்டு நடந்தா என்ர உயிரையே விட்டிடுவனடா@ அவள்தாண்டா என்ர உயிர்” எனத் தங்கைமீதுள்ள பாசத்தின் ஆழத்தைத் தனது சக நண்பனிடம் கூறிவைப்பான். அடுத்த மக்களின் போக்குவரத்திற்காகப் பயன்பட்ட கொம்படிப் பாதைதனை மூடிவிடும் நோக்கில் – மக்களின் உணர்வைச் சிதைக்கும் நோக்கிலும் – எதிரியானவன் ‘பலவேகய -2’ எனப் பெயர் சூட்டப்பட்ட தாக்குதல் ஒன்றை மேற்கொண்டான். அங்கும் உழைத்தான் தினேஷ், இரண்டாம் நாட்சமரில் அவன் அடித்த தோட்டாக்களின் எண்ணிக்கை ஐந்துதான். “என்ரா மச்சான் அடிக்கயில்லை?” எனக் கேட்ட நண்பனிடம், “இயக்கம் படுற கஷ்டத்தில கண்ட மாதிரி அடிக்கக்கூடாது… ஒவ்வொரு தோட்டாவும் வாங்க இயக்கம் எவ்வளவு கஸ்ரப்படுது தெரியுமா?” என, தனது சொற்பொழிவைத் தொடங்கிவிட்டான். ஆம்… எதிரியானவன் சம்பளத்திற்காக வருபவன். அரசாங்கம் கடன்பட்டு வாங்கும் ஆயுதத்தை அவன் கண்டபடி அடிப்பான்;: கிலிகொண்டு அடிப்பான் ஏனென்றால் அவனுக்குத் தன்னுயிர் முக்கியம். விடுதலைப் புலிகள் அப்படியல்ல. சண்டை நேரத்தில்கூட நிதானமாகச் செயற்பட்டு, எவ்வளவு மீதப்படுத்த முடியுமோ அவ்வளவு மீதப்படுத்தி எவ்வளவு அவனிடமிருந்து எடுக்கமுடியுமோ அவ்வளவையும் எடுத்துக்கொண்டுதான் வாருவார்கள். “இலட்சியம் ஒன்று தான் எங்களின் உயிர்… அதற்காக எம் உயிர் போவதுகூட எமக்கு கவலையை தராது…..” சண்டை முடிந்தது. சோகங்களை மனதில் தாங்கியவாறு, சக தோழர்களின் சில உடல்களைத் தோளில் சுமந்தவாறு மீளுகின்றோம். பழையபடி முகாம் களைகட்டுகின்றது. “இனிப்பு செய்வோமடா” ஒரு நண்பன் கேட்க, “ஒம் நான் நல்லாச் செய்வன். தேவையானதைக் கொண்டுவாங்கோ” எனக்கூறியபடி அடுப்பு வேலைக்கு ஆயத்தமானான் தினேஷ். சீனி, தேங்காய், மா எனச் சேகரிக்கப்பட்டு வேலைகள் தொடங்கின. அடுப்பருகே இருந்து, சட்டியில் பாணியைக் கிண்டிவிட்டுக்கொண்டிருந்தான் அவன். காதை செவிடுபடுத்தும்படியாக எங்கிருந்தோ ஒரு ஷெல் வந்து வீழ்ந்தது. போட்டதை அப்படியே போட்டுவிட்டு பாதுகாப்புத் தேடிய பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது, சட்டியில் இனிப்பு கறுப்பாக இருந்தது. அனைவரும் சேர்ந்து அவனைக் கேலிபண்ண ஆரம்பித்துவிட்டார்கள். “டேய் எனக்கென்ன செய்யத் தெரியாதே….? கொண்டு வா, உங்களுக்க இனிப்புத் தந்தாச் சரிதானே….?” மீண்டும் வேலைகள் ஆரம்பமாக, சுவையான இனிப்பினை எல்லோருக்கும் வழங்கினான். சமையலிலும் தான் சளைத்தவன் அல்ல என்பதையும், எதையும் தன்னால் செய்யமுடியும் என்ற அவனின் திடத்தையும் எண்ணிப் பார்க்கிறேன். இன்றும் அவன் தனது கையால் வழங்கிய இனிப்பின் சுவை என் நாவில் தித்திக்கிறது. அவனை இழந்த வேதனை நெஞ்சின் ஓரத்தே முள்ளாய் நெருடுகின்றது. அன்று ஒரு நாள், கடும் பயிற்சிக்குப் பின்னர் – பல மாத வேவுப் பணியின் பின்னர் – தாக்குதல் தீட்டம் தீட்டப்படுகின்றது. 10.11.93 நள்ளிரவு புலிவீரர்களின் அணி புயலெனப் பாய்கின்றது. சிதறி ஓடும் சிங்களப் படையதனின் சிரசில் வெடிபாய்கிறது. கடலில் பாயும் கோழையவன் கடற்புலிகளால் மடிகின்றான். உதவிக்கு வந்த விமானம் குண்டுகளை எங்கே தட்டுவது என்று தெரியாது, கடலில் கொட்டுகின்றது. விமான எதிர்ப்பு ஒரு புறம் முழங்க, கரும் பச்சைப் பேய்களைத் தரையிலே எதிர்க்க, நீல ஓநாய்களைக் குருதிக் கடலிலே சிதைக்க, எங்கும் புகைமயமாக இரத்தாறு நிலத்திலே ஓடிக் கடலிலே கலக்கிறது…. தமிழ் மக்களின் குருதியைக் கலந்திட வைத்த கறுப்பு நாய்களின் உடலங்கள் பல மிதந்து சென்றன. அதே உப்பாற்றின் மீது…. சடுகுடு விளையாடுவதைப் போல மிக அருகிலேயே நெருக்கமாக நின்று போரிடும் தன்மை அங்கு காணப்பட்டது. செய்வதறியாது திகைத்த எதிரி கடலில் பாய்ந்து நிற்கவும் தொடங்கினான். அங்கும் அவனுக்கு மரணப்பாடை கட்டப்பட்டது. “அண்ணை எனக்குக் குறிப்பிட்ட இடத்தைப் – பிடிச்சுப்போட்டுத்தான் உங்களுக்குத் தொடர்பு எடுப்பன்; இது சத்தியம்” – உறுதியாக தளபதியின் கையில் அடித்து விட்டுத் தனது அணியுடன் மின்னலென உள்ளே நுழைகின்றான். குறிப்பிட்ட நேரம் தாண்டியும் அவனது தொடர்பு கிடைக்காதவிடத்து சக நண்பன் தொடர்பினை எடுக்கின்றான். அங்கே…. அங்கே… கடைசியாகத் தனது உடலில் உள்ள குருதி அனைத்தையும் தமிழ்மாதாவுக்கு அர்ப்பணமாக்கிவிட்டு, பூநகரி மண்மீது வீழ்ந்து கிடக்கிறான் வீரமறவன்…. அவனது தொலைதொடர்பு சாதனம் மட்டும் தொடர்ந்து அலறிக்கொண்டிந்தது. “அண்ணை எனக்குத் தந்ததைப் பிடிக்காமல் திரும்பிவரமாட்டன்” – அவனது உறுதி கலந்த குரல் காற்றினிடை ஒலிக்கின்றது. அன்றொரு நாள் எனது டயறியில், “ என்ர நினைவாக இதை எழுதுகிறன் மச்சான். நான் செத்தாலும் இதை ஞாபகமாக வைச்சிரு என்ன?” என்றபடி எழுத ஆரம்பிக்கிறான். “நாம் அனைவருமே பலகொடியில் பூத்த மலர்கள். காலம் இட்ட கட்டளையால் எதிர்த்துப் போராட மாலையாகச் சேர்ந்தவர்கள். பிரிவு நம்மை ஆட்கொண்டாலும் எமது தலைவனின் இலட்சியப் பாதை உறுதி தளராது.” இப்படிக்கு, தினேஷ். அவனது இவ்வரிகள் என் இதயத்தில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. ‘ஓமடா தினேஷ், இலட்சியப் பாதை எண்டைக்குமே உறுதி தளராது….!’ நினைவுப்பகிர்வு: த.பாரதி நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (ஆவணி – புரட்டாதி 1994). https://thesakkatru.com/captain-eezhamaran/
- 2 replies
-
- பூநகரி
- பூநகரிச்சமர்
-
(and 2 more)
Tagged with: