Search the Community
Showing results for tags 'முதியவர்'.
-
துணையானாள் சித்தி கருணானந்தராஜா இருளைக் கிழித்துக்கொண்டு, பொந்தில்; இருந்து சீறிவரும் பாம்பு போல அக்குழாய் ரயில் பிளாட்பாரத்தருகில் வந்து நின்றது. கதவுகள் திறக்கப்பட்டதும் முதியவர் தட்டுத்தடுமாறி ஏறினார். அவருக்கு வழிவிட்டுக்கொடுத்த சாரா அவரைப் பின்தொடர்ந்தாள். காலியாக இருந்த இருக்கையில்; அமர்ந்த கிழவரின் முன்னால் அவள் இருந்து கொண்டாள். ஏனோ! அந்தக் குழாய் ரயில் நிலையப் பிளாட்பாரத்தில் அவரைப் பார்த்ததிலிருந்து சாராவுக்கு அவருடன் சீண்ட வேண்டும் போலிருந்தது. எப்படி அவருடன் கதைகொடுப்பது அல்லது வம்புக்கிழுப்பது என்று தெரியாமலிருந்தவளுக்கு முதியவரின் பக்கத்திற்கிடந்த லண்டன் மெட்ரோ பத்திரிகை கைகொடுத்தது. முதியவர் தனது பக்கத்திற்கிடந்த பத்திரிகையை வாசிக்க எடுக்கப் போனபோது எதிரிலிருந்தவள் பாய்ந்து அதைச் சட்டென்று எடுத்தாள். கிழவருக்கு முகம் சுருங்கிவிட்டது. அதுவோர் இலவசப் பத்திரிகை. அதற்குப்போய் இந்தப் பாய்ச்சல் பாய்கிறாளேயென்று நினைத்துக்கொண்டார். பத்திரிகையை எடுத்த சாரா அதனைச் சற்றுப் புரட்டிப்பார்த்துவிட்டுத் தனக்குப் பக்கத்தில் வைத்தாள். முதியவரோ அந்தத் தருணத்தைப் பயன்படுத்திப் பத்திரிகையை மீண்டும் எடுக்கக் கைகளை நீட்டினார். அவளோ மீண்டும் சட்டென்று அதனையெடுத்துத் தனது மடியில் வைத்துக்கொண்டாள். அவருக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. முறைப்பபோடு அவளது முகத்தை உற்று நோக்கினார். ஒரு கணம்தான்! அவரால் அவளது குழந்தை முகத்தை அதற்குமேல் அப்படிக் கோபத்தோடு பார்க்க முடியவில்லை. அவளோர் அழகு தேவதை. வேற்றினக் கலப்பாலேற்பட்ட ஹைபிரிட் மெருகினால் கடைந்தெடுத்த தந்தச்சிலை போலிருந்தாள். அவளது குறுகுறுத்த கண்களில் தெரிந்த விஷமம் அவரை என்னவோ செய்தது. குளிரில் அப்பிள் பழத்தைப்போலச் கன்னஞ் சிவந்திருந்தாள். அவளது தெற்காசிய ஐரோப்பியக் கலப்பின முகவெட்டைப் பார்த்தபோது நெஞ்சில் ஒரு கிழுகிழுப்பு உண்டாகியது. ஆனாலும் தன்னைத் தனது வயதை மதியாமல் அப்படி அவள் செய்வதை எதிர்த்து ஒரு வார்த்தையாவது கூறிவிட வேண்டுமென்று அவர் உள்ளம் விரும்பியது. சே! வெறும் இலவசப் பத்திரிகைக்காக அவளுடன் ஏன் வாதிடவேண்டுமென்று இன்னொரு புறம் அவர் மனம் தடுத்தது. இருந்தாலும் அவளுடன் பேசிப்பார்க்கலாமென்று முடிவுசெய்தார். அவர்களது உரையாடல் ஆங்கிலத்திலேயே நடந்தது. “அந்தப் பத்திரிகையைக் கொஞ்சம் தருகிறாயா? சற்றுப் பார்த்துவிட்டுத் தருகிறேன்.” என்று கேட்டார். அவளுக்கு அதைக் கொடுக்க மனமில்லை. கொடுத்தால் கிழவர் பத்திரிகையில் மூழ்கிவிடுவார். அதன்பிறகு அவளால் அவரிடம் பேச்சுக்கொடுக்கவோ அவரை வம்புக்கிழுக்கவோ முடியாது போய்விடும். ஏன்தான் இந்தக் கிழவனோடு எனக்கு இப்படிக் கவர்ச்சியாயிருக்கிறதோ தெரியவில்லையென்று தனக்குள் அலுத்துக்கொண்டவள், தன் பிடிவாதத்தை விடாமல் “இல்லை நான் தரமாட்டேன் அது எனக்கு வேண்டும்.” என்று பதிலளித்துவிட்டு, அவரை உற்றுப் பார்த்தாள். நீ இறங்கும்போது நான் தந்து விடுகிறேன் அதைத்தா என்று கையை நீட்டியவரிடம் “இல்லை நான் தரமாட்டேன் என்னைத் தொல்லைப் படுத்தாதீர்கள்” என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். சில கணங்கள் மௌனம். இருவரும் பேசவில்லை. முகத்தைத் திருப்பி அவரைப் பார்த்தவள் தன் அழகு தவழும் முகத்தில் ஓர் விஷமப் புன்னகையை ஓடவிட்டாள். பத்திரிகையைத் தராமல் என்னை ஏன் இவ்வளவு கொஞ்சலாகப் பார்க்கிறாள்? என்று கிழவருக்குக் கோபமாக இருந்தது. இருந்தாலும் அவள்மீது கோபப் பார்வையை வீச அவரால் முடியவில்லை. இவள் என்னைக் கிண்டலாகப் பார்க்கிறாளே என்ற ஆதங்கம் அவருள் கொழுந்துவிட்டு எரிந்தது. அவளைப்பார்த்துச் சொன்னார்: “மனேரம்மியமான உன் முகவழகு என்னை வெகுவாகக் கவர்கிறது. மோனாலீஸாவின் மோகனப் புன்னகையை நீ உதிர்க்கிறாய். நீ திருமணம் செய்து விட்டாயா?” சட்டென்று சற்றுத் தடுமாறியவள் “இன்னும் இல்லை. உங்களுக்கேன் அந்த விசாரணை?” என்று முகத்தைக் கடுமையாக வைத்தபடி வினவினாள். அந்தக் கோப முகமும் அழகாகத்தான் தோன்றியது. அதை ரசித்துச் சிரித்தபடி முதியவர் சொன்னார்: “ஒன்றுமில்லை. நான் எனக்கேற்றவொரு பெண்துணையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் அதற்குத்தான்.” “ஓஹோ! அப்படியா! நல்லது. நான் எனது நண்பனிடம் கேட்டுச் சொல்கிறேன். அவன் அனுமதித்தால் உங்களுக்குத் துணையாக வருகிறேன்.” “அப்படியா! உனக்கு நண்பன் ஒருவன் இருக்கிறானா? நல்லது அவனை எனக்குப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.” - முதியவர் பதிலிறுத்தார். “ஏன் எதற்காக?” - அவள் கேட்டாள். “அவனை நான் வாழ்த்த வேண்டும். தேவதையைப் போன்ற உன்னைத் தன் சினேகிதியாக அவன் பெற்றதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.” “சரி, பாங்க் ரயில் நிலையத்தில் நான் இறங்கி அடுத்த ரயிலை எடுக்கவேண்டும் அங்கே அவன் எனக்காகக் காத்திருப்பான். விரும்பினால் என்னுடன் நீங்களும் இறங்குங்கள் அவனை அறிமுகம் செய்கிறேன்.” என்ற அவளிடம்: “நானும் அங்குதான் இறங்கி அடுத்த ரயில் பிடிக்க வேண்டும். என்னை அறிமுகஞ்செய்.” என்றார் முதியவர். “இந்தக் கிழவன் சரியான துணிந்த கட்டை. என்று மனதில் நினைத்தபடி பாங்க் ரயில் நிலையத்தில் அவள் இறங்கியபோது முதியவரும்; பின்தொடர்ந்தார். ஹை! சாரா! என்று கூறியபடி அவளிடம் ஓடிவந்த அந்த மாற்றின இளைஞன் அவளைச் சட்டென்று கட்டியணைத்து அவளது உதட்டில் முத்தமிட்டான். கிழவரை வெட்கத்தோடு கடைக்கண்ணால் பார்த்த அவள் அங்கிள் வாருங்கள் என்று அவரை அழைத்தவாறு தனது காதலனையும் அணைத்துக்கொண்டு வடக்கு லைன் ரயில் பிடிக்க நகரும் படியில்; எறிச்சென்றாள். அவர்கள் போகவும் ரயில் வரவும் சரியாக இருந்தது. மூவரும் ஏறிக் கொண்டனர். முதியவர் அவர்களுக்கெதிரில் அமர்ந்து கொண்டார். “ஜானி! இந்த அங்கிள் என்னோடு ஸ்றட்போட்டிலிருந்து வருகிறார். தனக்கேற்றவோர் வாழ்க்கைத் துணையைத் தேடுகிறாராம். நான் அழகாயிருக்கிறேனாம். திருமணம் முடித்துவிட்டேனா எனக் கேட்கிறார்.” என்று தன் காதலனிடம் சொன்ன அவள் கிழவரைப் பார்த்துச் சிரித்தாள். “ஓ அப்படியா! மிகவும் நன்றி அங்கிள். விரும்பினால் கூட்டிக்கொண்டு போங்கள். எனக்கு இவளால் பெரிய தொல்லையாக இருக்கிறது” என்ற அவன் கிழவரைப் பார்த்துச் சிரித்தான். கிழவரும் பதிலுக்கு மிகவும் நன்றியென்றார். அவனை வாழ்த்தவில்லை எனெனில் அவனோ அவளிலிருந்து வேறுபட்ட நிறத்தவனாயும் இனத்தவனாயும் இருந்தான். அதை அவரால் சீரணிக்க முடியவில்லை. அவளுக்கு அவர் தன் காதலனை வாழ்த்தவில்லையேயென்று சற்றுக் கவலையாயிருந்தது. சற்று ஏமாற்றமடைந்தவளாய்க் காணப்பட்டாள். முதியவர் அதனைக் கவனித்தார் ஆனால் அதற்காகவாவது அவளது வாடிய முகத்தை மாற்ற அவர் முயற்சிக்கவில்லை. அவளால் “அங்கிள் உன்னைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க வேண்டுமென்று விரும்பினார்.” என்பதை ஜானியிடம் தெரிவிக்க முடியவில்லை. அப்படிச் சொல்லியும் அந்தப் பாஸிஸ்டுக் கிழவன் தன் ஜானியை வாழ்;த்தாமல் விட்டுவிட்டால் ஜானி முகங் குழைந்து போவானே என்று கவலைப்பட்டாள். மௌனத்தில் சில நிமிடங்கள் கழிந்தன. முதியவர்தான் முதலில் பேச்சைத் தொடங்கினார். “இந்தப் பெண் பெரும் சுயநலக்காரி. நான் எடுத்து வாசிக்க முற்பட்ட லண்டன் மெட்றோவைப் பாய்ந்து எடுத்துத் தன்னோடு வைத்துக் கொண்டு தானும் வாசிக்காமல் எனக்கும் பார்க்கத் தராமல் அடம்பிடித்தாள்.” என்று ஜானியிடம் முறையிட்டார். “அவள் என்னுடனும் அப்படித்தான் அங்கிள். அவள் முன்னால் நான் எதையாவது எடுத்து வாசிப்பது அவளுக்கு அறவே பிடிக்காது. கேட்டால் “வாசிக்க வேண்டுமானால் லைப்ரரிக்குப் போ! அல்லது எங்காவது தனிமையில் சென்று வாசி.” என்று பறித்து வைத்துவிடுவாள். தனக்கு மிகவும் வேண்டியவர்களோடு இவ்வாறு உரிமையோடு நடப்பவள் இன்று ஏனோ கொஞ்சமும் பரிச்சயமில்லாத உங்களைச் சீண்டியிருக்கிறாள். அவளுக்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.” என்று மிக வினயமாக வேண்டிவிட்டுச் சாராவுக்குச் செல்லமாய் ஒரு தட்டுத்தட்டினான். பதிலுக்கு அவள் அவனைத் திருப்பி அடித்தாள். பின்னர் இருவரும் உதடுகளில் சிறிதாய் முத்தமிட்டுக் கொண்டார்கள். கிழவருக்குச் சற்றுக் கவலையாயிருந்தது. பார்த்துவிட்டுத் தனக்குள் ஒரு பெருமூச்சை விட்டார். அவருக்குத் தன் ஒரே மகளின் ஞாபகம் வந்தது: “பல வருடங்களுக்கு முன் ஜெர்மனியில் ஓர்நாள் அவளும் அப்படித்தான் அந்த வௌ;ளை இளைஞனுடன்; சல்லாபித்துக் கொண்டிருந்தாள். ரயில் நெரிசலில் தன்தந்தை தூரத்தில் நின்றதை அவள் கவனிக்கவில்லை. அவருக்கு உலகமே சுழன்றது. ஒருவாறு சுதாரித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தவர் முதலில் மனைவியிடம்தான் தன் ஆத்திரத்தைக் கொட்டினார். அவளை அடிக்கவேறு செய்தார். வேலையில் நின்று சற்றுத் தாமதமாக வந்த மகளுக்கு பேசக்கூடாத வார்த்தையெல்லாம் பேசி அடிக்கப் பாய்ந்தபோது, அவள் போலீஸைக் கூப்பிட்டுவிட்டாள். சைரன் ஓசையுடன் நீல வெளிச்சம் பளிச்பளிச்சென்று அடிக்க வீட்டின்முன்; வந்து நின்ற பொலீஸ்; காரை பக்கத்து வீட்டுக்காரர்களும் தெருவில் போனவர்களும் பார்த்துவிட்டனர். தாயையும் தன்னையும் தூஷணை வார்த்தைகளால் ஏசி அடித்ததைப் பொலீஸாரிடம் மகள் முறையிட்டுவிட்டாள். தந்தைதானேயென்று கொஞ்சமும் கவலைப்படாத மகளின் நடத்தை அவரைத் தாங்கமுடியாத ஆத்திரத்துக்கு உட்படுத்திவிட்டது. அன்று போலீஸ் அவரைக் கையில் விலங்கிட்டுத்தான் கொண்டு சென்றது. பக்கத்து வீட்டார் பார்த்துக்கொண்டு நின்றார்கள். அவரால் அந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை. போலீஸ் அவரைச் சிலமணிநேரம் வைத்திருந்துவிட்டு எச்சரிக்கை செய்து வெளியே அனுப்பிவிட்டது. வீட்டுக்கு வரவே மனமில்லை. மனைவியின் தம்பியின் வீட்டிற்போய் அன்றிரவைக் கழித்தார். காலையில் மனைவி போன் செய்தாள். இனி அவளது முகத்தை நான் பார்க்கப் போவதில்லை அவளை எங்காவது அனுப்பிவிடு என்று மகளைத் திட்டியவரிடம் தாய், அவள் தன்னோடும் கோபித்துக்கொண்டு அன்றிரவே வெளிக்கிட்டுவிட்டதைக் கூறினாள். வீடு வந்தவர் மகளைப்பற்றி அக்கறைப்படவேயில்லை. நல்ல வேலையில் சுயமாய்ச் சம்பாதித்த அவளோ தன்காதலனுடன் சென்று ஒன்றாய் வாழத்தொடங்கிவிட்டாள். ஐரோப்பாவில்; திருமணம் செய்யாமலேயே லிவ் ருஹெதர் எனப்படும் ஒன்றாய் வாழ்தல் பொதுவான ஒரு விடயம். அவரது மனைவிக்கும் மகள்மீது வெறுப்பு ஏற்பட்டுப் போயிற்று அதனால் அவளுடனான தொடர்புகள் அடியோடு விடுபட்டுப் போய்விட்டன. அவர்கள் லண்டனுக்கு வந்துவிட்டார்கள்.” ரயில் ஓடிக்கொண்டிருந்தது. சிறிது நேரம் மௌனமாக அவரை இருக்கவிட்டு சிரித்துப் பேசியபடி அடிக்கடி முத்தமிட்டுக்கொண்டிருந்த இளசுகள் இருவரும் அதைச் சற்று நிறுத்திவிட்டு அவரிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார்கள். “அங்கிள் உங்களுக்குக் குடும்பம் இருக்கின்றதா?” என்று ஜான் கேட்டான். மெலிதான பெருமூச்சொன்றை விட்ட அவர் சற்று நிதானித்துவிட்டு இல்லையென்றார். “ஏன் நீங்கள் திருமணமே செய்துகொள்ள வில்லையா?” – மீண்டும் கேட்டான். “ஏனில்லை திருமணம் செய்தேன். என் மனைவி இறந்துவிட்டாள். அப்படியா மிகவும் மனம் வருந்துகிறேன். “அவ இறந்து நெடுநாட்களாய்விட்டதா?” “இல்லை சமீபத்தில்த்தான். இன்னும் ஒரு வருடம்கூட முடியவில்லை.” அன்று இரவு நான் ரிவி பார்த்துவிட்டுச் சற்று வாசித்துவிட்டுத் தூங்கிவிட்டேன். எனக்கு முன்னரே தூங்கச் சென்றவள் காலையில் எழுந்திருக்கவில்லை. இறந்துவிட்டாள். என்றவரின் குரல்; தழுதழுத்தது. சாரா தன்னிடமிருந்த பக்கட்டிலிருந்து ரிஸ்யு ஒன்றையெடுத்து அவரிடம் நீட்டினாள். தாங்கஸ் என்று கூறி அதைவாங்கியவர் கண்களைத் துடைத்துக் கொண்டார். அது வரைக்கும் உற்சாகத்தோடு இருந்தவருக்குத் தன் மனைவியின் ஞாபகம் வந்ததும் துக்கம் வந்து தொண்டையை அடைத்துக்கொண்டது. இளசுகள் இருவருக்கும் அவரிடம் மேற்கொண்டு பேச்சுக்கொடுக்கத் தயக்கமாக இருந்தது. அவரின் துயரங்களைக் கிளறி வேதனைக்குள்ளாக்க இருவரும் விரும்பவில்லை. இளமை வாழ்வில் அவர் எப்படியெல்லாம் தன் மனைவியுடன் வாழ்ந்திருப்பார். இப்போது அவருக்குமுன் நாமிருவரும் இருந்து காதல் செய்துகொண்டிருந்தால் தனது பழைய ஞாபகங்களை நினைத்துக் கவலைக்குள்ளாகி விடுவாரே என்ற சங்கடத்தில் அவர்கள் தங்கள் காதல் சேட்டைகளையே நிறுத்திவிட்டார்கள். வேலைவிட்டு வீடு செல்கின்ற பலர் தூங்கி வழிந்துகொண்டிருந்தார்கள். ஜானியும் தூங்கிவிட்டான். வழமையாக அவர்கள் இருவரும் அணைத்தபடிதான் ரயிலில் தூங்குவது வழக்கம். அன்று அந்த அமைதியிலும் அவள் அவனிடமிருந்து விலகியே இருந்தாள். இதைப் பயன்படுத்தி முதியவர் அவளிடம் பேச்சுக் கொடுத்தார்: “அன்பே! நீ என்ன செய்கிறாய்?” நான் ஓர் நர்ஸாகப் பணிபுரிகிறேன் அங்கிள். “உனது காதலன்?” “அவர் ஓர் ஆபீஸ் நிர்வாகி. ஆனால் இருவருக்கும் வேறு வேறு இடங்கள். நாங்கள் ஒவ்வொரு நாளும் வீடு திரும்பும்போது பாங்க் ரயில் நிலையத்தில் சந்தித்துக் கொள்வோம். “நீ அவரை மணஞ் செய்யப் போகிறாயா?” “நாங்கள் இப்போதும் ஒன்றாய்த்தான் வாழ்கிறோம் இன்னும் திருமணத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லை, தேவையேற்படும் போது அதைச் செய்வோம்.” “தேவையென்றால்? என்ன தேவை? எத்தகைய தேவை? எப்போது அது ஏற்படும்?” - முதியவர் கொஞ்சம் வரம்பு கடந்து கேட்டார். அவர்களின் தனிப்பட்ட விடயமது. ஆனாலும் அவள் அதைப் பெரிதாக எடுக்கவில்லை. வெளிப்படையாகவே சொன்னாள் - “எங்களுக்கு ஒரு குழந்தை தேவைப்படும்போது திருமணத்தைப் பற்றிச் சிந்திக்கலாமென்று இருக்கிறோம். அப்போதுகூட அது தேவையில்லை. ஆனாலும் அதுதான் எங்கள் நோக்கம். இந்த வருடக் கோடை விடுமுறைக்கு எங்காவது சென்று வரவேண்டும். அதன்பிறகுதான் திருமணத்தைப்பற்றிச் சிந்திப்பது என்றிருக்கிறோம். “ஓஹோ அப்படியா? உனது கோடை விடுமுறை மகிழ்ச்சியாயமையட்டும்.” – முதியவர் வாழ்த்தினார் அவள் நன்றி சொன்னாள். முதியவர் தன்னிடம் சற்றுத் தனிப்பட்ட விசாரணைகளைச் செய்ததை அவள் ஏனோ பெரிதாக எடுக்கவில்லை. வேறு யாராகவும் இருந்திருந்தால் உடனே ஆத்திரமடைந்திருப்பாள். இவரது கேள்வி அவளை அப்படி ஆத்திரப்பட வைக்கவில்லை. அதுபற்றி அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆனால். தன்னை அப்படி விசாரித்த கிழவரிடம்; அதேபோன்று தனிப்பட்ட விடயங்களைக் கேட்கத் தனக்கும் உரிமையிருக்கிறது என்ற துணிவு அவளுக்கு வந்துவிட்டது. “அங்கிள் உங்கள் மனைவி இறந்துவிட்டாளென்கிறீர்கள் அப்படியானால் உங்களுக்குப் பிள்ளைகள் யாருமில்லையா?” என்ற அவளின் கேள்விக்குப் பெருமூச்சொன்றே கிழவரிடமிருந்து பதிலாக வந்தது. சற்று மௌனமாக இருந்த அவர் தான் மனம்வெறுத்து ஒதுக்கிய தன் மகளின் முகத்தை ஒருதடவை மனதில் நினைத்துப் பார்த்தார். அவள் இப்போது எங்கேயிருக்கிறாளோ! இறந்துவிட்டாளோ! என்று மனம் கலங்கியது. சிறு வயதில் எத்தனையோ கற்பனைகளோடு அவளை வளர்த்தது, பள்ளிக்குக் கூட்டிச் சென்றது, என்று மறைந்துபோன ஞாபகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து அவரைக் குழப்பின. அந்தப் பாழாய்ப்போன வௌ;ளைக்காரன் என்மகளை என்னிடமிருந்து பிரித்துவிட்டான் என்று தன் மாப்பிளையை மனதில் ஒருதரம் வெறுப்போடு எண்ணிக்கொண்டார். அவனை ஒருநாள் அவர் அந்த ரயிலில் சனநெரிசலில் பார்த்ததுதான். அதன்பிறகு காணவேயில்லை. மகளும் அவனை வீட்டுக்குக் கூட்டிவந்தால் அப்பா காட்டுமிராண்டித்தனமாக நடந்து எல்லாவற்றையும் கெடுத்துவிடுவாரென்ற பயத்தில் கூட்டிவரவேயில்லை. அதன் பிறகு தொடர்பு முற்றாக அறுந்துபோய்விட்டது. மகள் எங்கோ வெளிநாடு போய்விட்டதாகக் கேள்விப்பட்டார். அவ்வளவுதான். மனைவியும் மகளைப் பிரிந்த ஏக்கத்தில் நோயாளியாகி இறந்தும் போய்விட்டாள். இதையெல்லாம் இந்தப் பெண்ணிடம் எப்படிக் கூறுவது என்று யோசித்த அவரைப் பார்த்து: “என்ன அங்கிள் பேசாமலிருக்கிறீர்கள்?” என்று சாரா கேட்டாள். சற்றுத் தயங்கிய அவர் “எனக்கு ஒரு மகள் இருந்தாள் அவள் இப்போது எங்கேயிருக்கிறாளென்று தெரியாது.” என்றார். ஏன் அங்கிள்? அவளைப் பற்றிய விபரம் உங்களுக்குத் தெரியாமற்போனது? அவள் காணாமற் போய்விட்டாளா? நீங்கள் தேடிப் பார்க்கவில்லையா என்ற சாரா கிழவரின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். “நான் அவளைத் தேடவில்லை. நான்தான் அவளை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டேன். அதன்பிறகு அவள் எங்களைத் தொடர்பு கொள்ளவேயில்லை.” என்றவர் அதுபற்றி மேலும் கதைக்க விரும்பாமல் முகத்தைத் திருப்பியபோது, சாரா: “ஏன், ஏன் துரத்தினீர்கள்?” என்று ஆர்வமாகக் கேட்டாள். கிழவருக்கோ பதில்கூறச் சங்கடமாயிருந்தது. தனது மகளைப் போலவே ஓர் வேற்றின இளைஞனைக் காதலித்திருக்கும் இவளிடம் நான் அதுபற்றிக் கூறினால் என்னைப்பற்றி என்ன நினைப்பாள் என்று தடுமாறினார். சாராவோ அவரை விடுவதாயில்லை. அவரை உற்றுப்பார்த்தபடியே மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள். கிழவருக்கோ இதற்குமேல் மறைக்க முடியாது, இவள் விடமாட்டாள் என்பது விளங்கிவிட்டது. ஒன்றில் அவளிடம் தன்மகள் ஓர் ஜெர்மன்காரனைக் காதலித்ததையும் அதை அவர் வெறுத்ததையும் கூறவேண்டும் அல்லது சாராவிடம் தனது தனிப்பட்ட பிரச்சனைகளைப்பற்றி விசாரிக்காதேயென்று ஒரேயடியாக அவளது முகத்திலடித்தாற்போல் பதில்கூறவேண்டும். முதலாவதிலும் இரண்டாவது அவருக்கக் கடினமானதாகவேயிருந்தது. சொன்னார்: “அவளும் உன்னைப் போலத்தான் ஒரு மாற்றின ஜெர்மன்காரனைத் தன் காதலனாக்கிக்கொண்டு ரயிலில் முத்தமிட்டுக்கொண்டு திரிந்தாள் அதனை ஒருநாள் பார்த்த நான் அவளை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டேன்.” சட்டென்று உஷாரான சாரா அவரிடம்: “உங்கள் பெயரென்ன?” என்றாள். அவர் “கணேஸ்”; என்றார். மறுகணம் இருக்கையிலிருந்து பாய்ந்த அவள் அவரைத் திடீரென்று கட்டியணைத்தாள். அவளது கண்களிலிருந்து பொல பொல வென்று கண்ணீர் வழிந்தோடியது. “தாத்தா நானுங்கள் பேத்தி தாத்தா! நானுங்கள் பேத்தி! இனி உங்களுக்கு நான் என்றென்றும் துணையாயிருப்பேன் தாத்தா” என்று கரைந்தவள் திடுக்கிட்டு விழித்த ஜானியிடம், “ஜானி! ஜானி! இவர் என் அம்மப்பா. இவரின் இளமைக்காலப் படத்தை நான் பார்த்திருக்கிறேன். நான் தேடிக்கொண்டிருந்த என் தாத்தாவைக் கண்டுபிடித்துவிட்டேன்.” என்று குதூகலித்தாள். பக்கத்திலிருந்த இருக்கைகளிலிருந்தவர்கள் தங்கள் கட்டை விரல்களை நிமிர்த்திக் காட்டி குட்லக் குட்லக் என்று வாழ்த்தினார்கள். எழுந்து வந்த ஜானி தாத்தாவின் கன்னத்தில் செல்லமாய் ஒரு முத்தமிட்டான். கரைந்துபோன முதியவர் இருவரையும் அணைத்துக் கொண்டார். அவரது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிய ஜானியிடம் சொன்னார்: நீ தேவதைபோன்ற என் பேத்தியைக் காதலியாகப் பெற்றிருக்கிறாய் உங்கள் இருவருக்கும் என் நல்வாழ்த்துக்கள். நீங்களிருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.” அதற்கு ஜானி சொன்னான்: “அவள்தான் உங்களுக்கு வாழ்க்கைத் துணையாகிவிட்டாளே இனி நான் எதற்கு? சரி சரி பரவாயில்லை, பங்கு போட்டுக் கொள்வோம். அவள் நம் இருவருக்கும் துணையாயிருக்கட்டும்.” ஜானியும் சாராவும்;; தம் இதழ்களை ஒரு கணம் ஒற்றிக் கொண்டனர். -முற்றும்-