Search the Community
Showing results for tags 'முன்னாள் போராளிகள்'.
-
முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் துயரங்கள் எண்ணிலடங்காதவை. அண்ணா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நாங்கள் ஏன் கஷ்டப்படப் போகின்றோம் என முன்னாள் பெண் போராளியொருவார் தனது துயரங்களை வெளிப்படுத்தியுள்ளார். சோதியா படையணியின் திறமைமிக்க போராளியாக இருந்த இவர் திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தாயாக இப்போது இருக்கின்றார். குடிபோதையில் நித்தம் சண்டை போடும் கணவரோடு அவரது வாழ்க்கை தொடர்ந்து சொல்கின்றதை அவருடனான உரையாடலின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைந்து வாழ வாய்ப்பளிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தினால் சொல்லப்பட்ட போதும் அவர்களது புனர்வாழ்வு விடுதலைப்புலிகளின் அமைப்பின் கொள்கைப் பிடிப்புக்களில் இருந்து அவர்களை விடுவிப்பதை மட்டுமே நோக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதனை முன்னாள் போராளிகள் இன்று எதிர்நோக்கும் சவால்களில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும் என சமூக விட ஆய்வாளர் வரதன் இது தொடர்பில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். முன்னாள் போராளிகளின் தியாகங்களைச் மதித்து செயற்பட்டு வருவோர் அவர்களது உளவியல் சார் விடயங்களில் தங்களின் கவனத்தினைச் செலுத்துவதில் உள்ள அவசியத்தை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். திசைமாறிய வாழ்வு சோதியா படையணியில் இருந்தவாறு தேச விடுதலைக்காக போராடி விழுப்புண்களைச் சுமந்து விட்ட முன்னாள் போராளியான இவரை திருமணம் செய்து கொண்டவர் ஒரு சிங்களவர் என்பது ஆச்சரியமான விடயமாகும் என ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றை கொண்டு ஈழத் தமிழருக்கான தீர்வுகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வரும் எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டார். தமிழர்களின் நியாயமான சுயநிர்ணய உரிமைகளை மதித்து நடந்து கொள்ள முடியாத போதே ஆயுதம் ஏந்தி போராட தலைப்பட்டனர் தமிழர்கள். அப்படியான சூழலில் அன்று யாருக்கு எதிராக போராடினார்களோ அவர்களின் சமூகத்தில் இருந்து ஒருவரை திருமணம் செய்து தன்னுடைய வாழ்க்கைத் துணையாக கொள்ள முடிந்தது எப்படி என்ற கேள்வியின் போதுதான் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்ற கேள்வி எழுந்துள்ளது. நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தில் தோல்விகளும் வெற்றிகளும் மாறி மாறி வந்து போவது ஆச்சரியமானதல்ல. ஆனாலும் ஏன் நாம் போராடினோம். யாரோடு போராடினோம். அவர்கள் எப்படி எங்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி நடப்பதற்கான ஏதுக்கள் என்ன இருக்கின்றன என்றவாறான பல கேள்விகளுக்கு விடைகளைக் தேடிக்கொள்ள முயன்றவாறு நாம் நம் அன்றாட வாழ்வியலை முன்னகர்த்திச் செல்ல தவறிப் போகின்றோம். இதனை அந்த முன்னாள் போராளியின் இன்றைய வாழ்வு நிலை உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்களவரான கணவரின் வார்த்தைப் பிரயோகங்கள் அந்த முன்னாள் போராளியினை சொல்லால் கொன்று விடுவதாக இருக்கின்றது. மனதால் ஒரு முன்னாள் போராளி அனுபவித்து வரும் சித்திரவதைகளை தடுப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளையும் இதுவரை யாரும் முன்னெடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம். போதையின் தாக்கம் குடும்ப வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் நன்றாகவே இருந்தார். நாளடைவில் பொருளாதார கஷ்டம் ஏற்பட்ட போது அவர் குடிக்கத் தொடங்கி விட்டார். ஆரம்பத்தில் கள்ளு மற்றும் சாராயத்தை குடித்தவர் நாளடைவில் கசிப்புக்கு பழக்கப்பட்டு விட்டார். கசிப்பு குடித்து விட்டு வரும் நாளெல்லாம் வீட்டில் கடுமையாக சண்டையிட்டுக் கொள்வார் என்று அந்த முன்னாள் போராளியுடனான உரையாடலில் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த முன்னாள் போராளி தன் மூன்று பிள்ளைகளுக்கும் சிங்களத்தில் பெயரிட்ட இருக்கின்றார். 2009ஆம் ஆண்டு ஓமந்தையில் படையினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட இவர் சிங்களவரான தன் கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு முன்னாள் போராளியான உங்களால் எப்படி ஒரு சிங்களவரைக் காதலிக்க முடிந்தது என்ற கேள்விக்கு மௌனமாக ஒரு புன்னகையை உதிர்ந்து கொண்டார். போதையில் இருக்கும் சந்தர்ப்பங்களில் தன் கணவரின் செயற்பாடுகள் தொடர்பில் அவர் குறிப்பிடும்போது குடும்ப வாழ்வை வெறுத்து விட்டதான தன் உணர்வையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். கணவனை குறிப்பிடும் போது மரியாதைக் குறைவான சொல்லாடலைப் பயன்படுத்தி இருந்ததோடு தனக்கேதும் உதவிகளை செய்ய யாரேனும் முன்வந்தால் தன் கணவனிடமிருந்து விவகாரத்து வாங்கித் தந்தாலே அது பெரிய உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். ஈழ விடுதலைப் போரின் போது விழுப்புண் பட்டு உடலில் அதன் தழும்புகளைப் கொண்டுள்ள இந்த முன்னாள் பெண் போராளியினை விழுப்புண்ணால் ஏற்பட்ட மாற்றங்களை குறிப்பிட்டு அவரது கணவர் போதையில் உள்ள போது அவரை தரக்குறைவான வார்த்தைப் பிரயோகத்தினால் இழிவுபடுத்தி பேசுவதாகவும் தன்னை திருமணம் செய்து கொண்டதாலேயே தான் கஷ்டப்படுவதாக அவர் திட்டிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன் அயலவர்கள் மற்றும் உறவினர்களை சண்டைக்கு இழுத்துக் கொள்வார். அவர்கள் இவரது சுபாவத்தைப் புரிந்து கொண்டு நடப்பதால் முரண்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ள முடிவதாக முன்னாள் போராளி கூறியுள்ளார். மன உளைச்சல் விழுப்புண் பட்டு இயல்பு நிலையில் வாழ முடியாதவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய சூழலில் அவர்களது அசாதாரண நிலையைச் சுட்டிக்காட்டி அவர்களை இழிவுபடுத்தல் என்பது அவர்களுக்கு பெரும் மனவுளைச்சலை ஏற்படுத்தும் என உளவள ஆலோசகர் ஒருவருடன் உரையாடும் போது இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். சாதாரணமாக வாழ்பவர்களிடையே ஏற்படும் மனவுளைச்சலை இலகுவில் மாற்றியமைத்து அதிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும். ஆனாலும் கொள்கைப் பிடிப்போடு உயிர்த்தியாகம் செய்து விடத் துணிந்த முன்னாள் போராளிகளிடையே ஏற்பட்டு விடும் மனவுளைச்சலை மாற்றியமைத்து அவர்களை விரக்தியில் இருந்து விடுவித்துக் கொள்வது கடினமானது. இலங்கை அரசினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர் வாழ்வளிப்புக் கூட யதார்த்த சூழலை விளக்கி வன்முறையற்ற வாழ்வு ஒன்று உங்களுக்கு உறுதிப்படுத்தப்படுவதாக மட்டுமே அமைந்துள்ளது. முன்னாள் போராளிகளினால் அந்த யதார்த்தத்தினை இலகுவாக ஏற்றுக்கொண்டு செயற்பட முடியும். ஏனெனில் அவர்களால் நேர்த்தியான முறையில் சிந்திக்க முடியும். சிங்கள தேசத்தினால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இன்னல்களைப் புரிந்து கொண்டு தங்கள் வாழ்வை தியாகிக்கும் படி வாழ்ந்தவர்கள் முன்னாள் போராளிகள் ஆகும். ஆயினும் நாட்கள் கடந்து போகும் போது ஏற்படும் சூழல் மாற்றங்கள் அவர்களை வெகுவாகப் பாதிக்கின்றன. அந்தப் பாதிப்பில் இருந்து அவர்களை காத்துக்கொள்ள வேண்டும். முன்னாள் போராளிகளின் நலன்களில் அக்கறை காட்டுவோர் அவர்களது அன்றாட வாழ்வியலை எதிர்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் மனவுளைச்சலுக்கு உள்ளாகும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன என்பதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். நிர்வாக இயக்கம் விடுதலைப் புலிகளின் நிர்வாக இயக்கத்தில் இருந்து இன்றைய சமூகத்தின் நிர்வாக இயக்கம் பாரியளவிலான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. அவர்களது நிர்வாக இயக்கத்தில் சாதாரண குடிமக்களின் இயல்பு வாழ்வை பாதுகாத்துக் கொடுக்கும் கட்டமைப்புக்கள் இருந்தன. அதனால் இயல்பு வாழ்வுக்கு நல்ல பண்புகள் மட்டும் போதுமாக இருந்தது. எனினும் இன்றைய நாட்களில் உள்ள நிர்வாக இயக்கத்தில் ஊழல், ஏமாற்று போன்ற நற்பண்பியலுக்கு முரணான பல விடயங்களை எதிர் கொண்டு வாழ வேண்டும். அதனை எதிர்கொள்ளும் போது இவர்கள் மனவுளைச்சலுக்கு உள்ளாகி வருவதனை ஈழத்தில் அவதானிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை அரசாங்க நிர்வாகம் உறுதிப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்களை கொண்டுள்ள போதும் அவை முழு நிறைவாக செயற்படாத போக்கு இருப்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். முதியோர்களை அவர்களது வயதனுபவம் மற்றும் பெரியோர் என்ற அடிப்படையில் அவர்களை மதித்து நடத்தாத அரச அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள், ஊழியர்களை நம் அன்றாட வாழ்வில் அவதானிக்க முடிவதை இங்கே சுட்டிக்காட்டலாம். முன்னாள் போராளிகளின் மனநிலை ஆயினும் விடுதலைப்புலிகளின் காலத்தில் முதியவர்களுக்கு மற்றும் பொது மக்களுக்கும் உரியளவிலான மரியாதைகள் வழங்கப்பட்டிருந்தன என்பதை உள்ளூர் மக்களோடு மேற்கொள்ளும் நீண்ட கலந்துரையாடல்கள் மூலம் அறிய முடியும் என்பது இங்கே நோக்கத்தக்கது. ஒவ்வொரு முன்னாள் போராளியும் ஏதோவொரு மனவுளைச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை மறுதலிக்க முடியாது. உலகளவில் உள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மற்றும் தாயக வாழ் ஈழத்தமிழ்ச் சமூகம் போன்றன முன்னாள் போராளிகளை அவர்களது மனவுளைச்சலில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைகளைப் புரிந்து கொண்டு தங்கள் வாழ்வை திட்டமிட்டு முன்கொண்டு செல்ல வழிகாட்ட ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும். அது ஒன்றே அவர்களது இன்னல்களுக்கான குறைந்தபட்ச மருந்தாக இருக்கும். அவர்கள் கொண்ட ஈழத் தாகத்தின்பால் அவர்களின் தியாகத்திற்கான கைமாறாக அமையும் என்பதும் திண்ணம். https://tamilwin.com/article/ex-combatant-s-grief-1717049562?itm_source=parsely-detail