Search the Community
Showing results for tags 'யாழ்தேவி'.
-
குடாநாட்டைப் பாதுகாத்த புலோப்பளைச் சமர் குடாநாட்டைப் பாதுகாத்த புலோப்பளைச் சமர் 29.09.1993 அன்று நான்குமணி நேரத்தில் நடத்து முடிந்த மாபெரும் சமரைக்கொண்ட மறக்கமுடியாத நாள். மரபுவழிச் சண்டை முறையில், எமது போராட்ட வரலாற்றில், முக்கிய இடம் பெற்றுவிட்ட ஒரு சாதனை நாள். வெட்டவெளியூடாக நன்கு திட்டமிட்டு நகர்ந்த எதிரியின் கவச வாகனப்படையை, புலிகளின் கவச வாகனப்படையை, புலிகளின் மனிதக்கவசம் உடைத்தெறிந்து காவியம் படைத்த நாள். யாழ். குடாநாட்டுக்கு ஏற்படவிருந்த பேரழிவைத் தற்காலிகமாகத் தடுத்த இந்த இந்த வரலாற்றுச் சமரில், 125 படையினர் கொள்ளப்பட்டுள்ளனர்; 284 பேர் படுகாயமடைந்துள்ளனர் என, சிங்கள அரசே அறிவித்துள்ளது. அத்துடன் சிங்களப்படை இந்தச் சமரில் ரி-55 ரக டாங்கிகள் இரண்டையும் ‘பவல்’ கவச வாகனம் ஒன்றையும் முற்றாக இழந்துவிட்டது. அதேவேளை மேலும் இரண்டு கவச வாகனங்கள் சேதமடைந்துள்ளன. வெட்டவெளியில் நடந்துமுடிந்த இந்த புலோப்பளைச் சமர் புலிகள் இயக்கம் பெற்றுவரும் போரிடும் ஆற்றலின் ஒருபடி வளர்ச்சியைத் துல்லியமாக வெளிப்படுத்தியிருப்பதுடன் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒரு திருப்புமுனையையும் கொடுத்துள்ளது. இந்தச் சமரைச் சிங்களப் படைத்தரப்பில் நின்று வழி நடாத்திய – அதில் காயமடைந்த – கேணல் சரத் பொன்சேகா கூறினார்; ‘விடுதலைப்புலிகள் எம்மைச் சுற்றிவளைத்து கடுமையாகத் தாக்கினர்.’ இந்தச் சாதனைச் சமரில், புலிகளின் சேனைக்கு தலைமை தாங்கி வழிநடாத்திய படைத்துறைத் துணைத் தளபதி பால்ராஜ் விபரிக்கின்றார்…. இந்தச் சாதனைச் சமரில் மூன்று விடயங்கள் எதிரிக்குத் திகைப்பையும் – அச்சத்தையும் கொடுத்திருக்கும் ஒன்று, மிகக்குறைந்த நேரத்தில் சிங்களப்படை சந்தித்த பாரிய ஆள் – ஆயுத இழப்பு. இரண்டு, சிங்களச் சிப்பாய்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிவரும் கவசவாகனப்படை புலிவீரர்களால் சிதறடிக்கப்பட்டதுடன், அவர்களின் கண்முன்னாலேயே – பட்டப்பகலில் – டாங்கிகளையும் கவச வாகனங்களையும் இழந்தது. மூன்று, சிங்களப்படைக்குச் சாதகமான இந்த வெட்டவெளிச் சமரில் புலிகள் வெளிப்படுத்திய அபாரத்துணிச்சலும் தாக்குதல் தந்திரோபாயங்களும், இவ்வாறு இந்தச் சாதனைச் சமரைத்தளபதி பால்ராஜ் மதிப்பிடுகின்றார். ‘ஒப்பறேசன் யாழ்தேவி’ எனப்பெயரிட்டுவிட்டு – பெரியதொரு எதிர்பார்ப்புடன் 28.09.1993 அன்று ஆனையிறவில் இருந்து ஏறக்குறைய 5000 பேர்கொண்ட சிங்களப்படையணிகள் கிளாலி நோக்கி நகரத்தொடங்கின. புலிகளின் தந்திரோபாய விலகல் காரணமாக – ஆனையிறவிலிருந்து நீரேரிக்கரையோரமாகப் புலோப்பளை வீதிவரை உள்ள சுமார் 4 கிலோமீற்றர் தூரத்தைச் சிங்களப் படைகள் சுலபமாகக் கடந்து சென்றன. அன்றிரவு புலோப்பளையில் தரித்துநின்ற படையினர், 29ஆம் திகதி காலை 8.00 மணிக்கு எறிகணைகளைச் சரமாரியாக வீசிக்கொண்டு கவச வாகனப்படையின் உதவியுடன் அல்லிப்பளை நோக்கி நகரத்தொடங்கினர். சில நூறு மீற்றர்கள் கடந்தபின், அந்த வெட்டவெளிப் பகுதியில், திடீரென நிலத்துள் இருந்து முளைத்தெழுந்த புலிவீரர்கள், ஆச்சரியமூட்டும் வகையில் தாக்குதலைத் தொடுத்தார்கள். இந்தத் திடீர்த் தாக்குதலைத் தொடக்கிவைத்த அணிகளுக்குத் தலைமை வகித்த, வன்னிமாவட்ட சிறப்புத் தளபதி தீபன் கூறுகின்றார்…. ‘ஒரு திடீர்த் தாக்குதலைத் தொடுத்து எதிரிப்படையைச் சிதைக்கும் நோக்குடன் இரவோடிரவாக தகுந்த இடத்தைத் தேர்வு செய்ய முயன்றோம். மணற்பாங்கான நில அமைப்புடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு பற்றைகளையும், புற்கள் அற்ற வரப்புகளையும் தவிர துப்பாக்கிச் சண்டைக்குத் தேவையான அரண்களோ (கவர்) அல்லது உருமறைப்புச் செய்வதற்குரிய பொருட்களோ கிடைக்கவில்லை. நேரமும் விடிந்துகொண்டிருந்தது. எனவே வரப்போரங்களிலும் பற்றைக்கரைகளிலும் கைகளாலும் தடிகளாலும், உடலை மறைக்கக்கூடிய பள்ளங்கள் தோண்டி எதிரியின் விமானங்களுக்குப் புலப்படாமலும் நகர்ந்து வரும் படையினரின் கண்களுக்குத் தெரியாமலும் உருமறைப்புச் செய்தோம். விடிந்தபின்பும் எதிரி எமக்கருகில் வரும்வரை நாம் பொறுமையுடன் காத்திருந்தோம்.’ இவ்வாறு தளபதி தீபன் தனது அனுபவத்தைக் கூறினார். இந்தச் சமரில் பங்குகொண்ட ஏனைய போராளிகள் சொல்லுகின்றார்கள்……… புலோப்பளை வீதியிலிருந்து அல்லிப்பளை நோக்கி முன்னேறிவந்த படையினர், அங்கிருந்த வீடுகள் எல்லாவற்றையும் தீமூட்டி எரித்தபடி முன்னேறிக்கொண்டிருந்தனர். எறிகணை வீச்சுகளுக்கு மத்தியில் எதிர்த் தாக்குதலுக்குத் தயாராக நிலத்தில் புதைந்து கிடந்த புலிகளின் அணி ஒன்றுக்கு மிக அருகில், 15-20 மீற்றர் தூரத்தில் – சிங்களப்படைகள் வந்ததும், புலிகளின் இலகு இயந்திரத் துப்பாக்கி ஒன்று இந்த வரலாற்றுச் சமரைத் தொடக்கி வைத்தது. இந்த நிலையில், சிங்களப்படையின் ‘சலாடின்’ ரக கவச வாகனம் ஒன்று, மிக அருகில் வைத்து போராளிகளின் இயந்திரத் துப்பாக்கித் தாக்குதலுக்கு உள்ளான போது, அக்கவச வாகனம் பின் வாங்கிப் பாதுகாப்புத் தேடி ஓட, பின்னாலிருந்த டாங்கி சண்டையின் முன் முனைக்கு வந்தது. ரி-55 ரக டாங்கி தனது தாக்குதலைத் தொடங்கமுன்னர், புலிகளின் ஆர்.பி.ஜி ஒன்று டாங்கியைத் தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த டாங்கி அணி சற்றுப்பின் வாங்கி, தன்னை நிலைப்படுத்தி மீண்டும் தாக்குதலைத் தொடங்க முயன்றது. ஆனால் இன்னொரு முனையிலிருந்து மீண்டும் புலிகளின் ஆர்.பி.ஜி ஒன்று டாங்கியைத் தாக்கிய அதேவேளை தத்தமது நிலைகளிலிருந்து எழுந்த புலிவீரர்கள் கவச வாகனப் படையுடன் நின்ற எதிரிப்படையைப் பாய்ந்து சென்று தாக்கத்தொடங்கினர். ஆச்சரியமூட்டும் விதத்தில் – வேகமாக நடந்த புலிகளின் படை நகர்த்தலைக்கண்ட சிங்களப்படை அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த அதிர்ச்சியிலிருந்து சிங்களப்படை மீளமுன்னர் பல முனைகளிலிருந்து எதிரிப்படைக்குள் நுழைந்த புலிவீரர்கள் கவச வாகனங்களுடன் சேர்த்து சிங்களப் படையை வேட்டையாடத் தொடங்கினர். ‘சமர்முனையில் டாங்கிகள் பின்னோக்கி ஓட்டமெடுத்த காட்சிகள் கண்கொள்ளாக் காட்சிகளாக இருந்தன’ என ஒரு புலிவீரன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தான். இந்தப் பலமுனைத் தாக்குதல்களில் வன்னி மாவட்டச் சிறப்புத் தளபதி தீபனது அணியுடன், மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி ஜானினது அணி ஒரு முனையூடாகவும், மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி ஜெனாவின் தலைமையிலான அணி இன்னொரு முனையாலும் உள்நுழைந்து, சிங்களப்படையைச் சிதைத்து அவர்களுக்கு பேரழிவை உண்டுபண்ணினார்கள். காலை 8.30 மணியளவில் தொடங்கிய இந்தச்சமர் மதியம் 12.30 மணியளவில் ஓய்வுக்கு வந்தது. அப்போது சிங்களப்படைகள் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை புலோப்பளை வீதிவரை – பின்னோக்கி அடித்து விரட்டப்பட்டன. அதன்பின் மேலும் இரண்டு நாட்கள் அதே இடத்தில் தரித்து நின்று காயமடைந்த, இறந்த சிப்பாய்களை அப்புறப்படுத்தி அதற்கு பதிலாக புதியவர்களைச் சேர்த்துப் படையை புனரமைத்துவிட்டு, கிளாலியை நோக்கி சிங்களப்படை முன்னேறியது. கிளாலியைச் சென்றடைந்ததும் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கிமேலும் இரண்டு வாகனங்களை சிங்களப்படை இழந்ததுடன் உயிர்ச் சேதத்தையும் சந்தித்தது. இந்த நிலையில், 04.10.1993 அன்று அதாவது ‘யாழ்தேவி’ இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டுப் பலத்த ஏமாற்றத்துடனும் – சோகத்துடனும் ஆனையிறவுத் தளத்திற்கே சிங்களப்படைகள் திரும்பிச் சென்று விட்டன. இந்த இராணுவ நடவடிக்கையின் தோல்வியை ஏற்றுக்கொள்ள விரும்பாத சிங்களப் படைத்துறைத் தலைமை நகைப்பிற்கிடமான விளக்கங்களையும் – வியாக்கியானங்களையும் ஒன்றுக்கொன்று முரணாகக் கொடுத்தது. “இடத்தைக் கைப்பற்றுவதல்ல் புலிகளை இயன்றளவு கொல்லுவதே இந்த படை நகர்த்தலின் நோக்கம்” என ஒரு இராணுவ உயர் அதிகாரி கூறியிருந்தார். “வெட்ட வெளியில் சண்டை பிடித்தபடியால்தான் படையினர் தரப்பில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது” என ஒரு இராணுவ அதிகாரி சமாதானம் சொன்னார். ஆனால் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நளின் அங்கமண, “ வெட்டவெளிக்குப் புலிகளை இழுத்துவருவதுதான் எமது பிரதான குறிக்கோள். அப்போது தான் புலிகளைக் கொன்று இடங்களைக் கைப்பற்றமுடியும்” என விளக்கமளித்தார். இதேவேளை இப் பின்வாங்குகைக்குப் படைத்துறைத் தலைமை விளக்கமளித்து அறிக்கை விடுத்துள்ளது. கிளாலிப் போக்குவரத்துப் பாதையை மூடுவதுதான் இராணுவ நடவடிக்கையின் நோக்கம். அதைப்படையினர் சாதித்துவிட்டனர். கிளாலி இறங்குதுறையை அழித்து புலிகளின் முகாம்களைத் தகர்த்து கடற்பயணத்தைத் தடுத்துவிட்டதாக அந்த அறிக்கை கூறுகின்றது. கொழும்பு துறைமுகத்தைப் போன்றுதான் கிளாலி இறங்கு துறையும் இருக்கும் என்று நம்பும் சிங்கள மக்களை, படைத்துறைத் தலைமையின் அறிக்கை திருப்திப்படுத்தியிருக்கும். ஆனாலும் படைத்துறைத் தலைமை இந்த அறிக்கையை எழுதத்தொடங்க முன்னரே, புலிகளின் விசைப்படகுகள் கிளாலிக் கடல் நீரேரியில் நீரைக்கிழித்தபடி பயணம் போய்க்கொண்டிருந்த காட்சிகளை, நாகதேவன் துறையிலிருந்த கடற்படைத்தள ராடர்கள் அழகாகக் காட்டிக்கொண்டிருந்திருக்கும். ஆனால் அது சிங்கள தேசத்துக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தானே! அப்படித் தெரிந்திருந்தாலும் அது கிளாலிக் கடலில் செல்லும் படகல்ல் தொண்டமானாறு கடலேரியில் செல்லும் படகெனப் பதிலறிக்கைவிடச் சிங்களப் படைத்துறைத் தலைமைக்கு அதிக நேரமெடுக்காது. ஆனாலும் இந்த ‘யாழ்தேவி’ இராணுவ நடவடிக்கையின் நோக்கம் விசாலமானது இது ஒரு பெருந்திட்டம். பலகட்டங்களாகப் பல்லாயிரம் படைவீரர்கள் பங்குகொண்டு, பாரிய நிலப்பகுதியைக் கைப்பற்றும் ஒரு நாசகாரத் திட்டம். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆனையிறவு, பூநகரி, காரைநகர், பலாலி ஆகிய தளங்களில் சுமார் இருபதாயிரம் படையினர் காத்துக் கொண்டிருந்தனர். கிளாலி மட்டும் ஓடிவந்து திரும்பிச் செல்ல ‘யாழ்தேவி’ வரவில்லை. அது சாவகச்சேரி, யாழ்நகர் ஊடாக தெல்லிப்பளைவரை செல்வதுதான் திட்டம். இதேபோன்றுதான் கடந்த ஆண்டும் லெப்.ஜெனரல் கொப்பேகடுவ அராலி வழியாக மானிப்பாயை அடைந்து, அங்கிருந்து யாழ். நகரைக் கைப்பற்றும் திட்டமொன்றை அமுல்படுத்த முயன்றார். அந்த இராணுவ நடவடிக்கை தொடங்க ஒருநாள் இருக்க அராலித்துறையில் நடந்த கண்ணிவெடியில் அவரும் அவரது குழுவினரும் கொல்லப்பட அப்படையெடுப்புத் திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. அப்படையெடுப்புத் திட்டத்திற்கு, ‘ஒப்பறேஷன் பைனல் கவுண்ட் டவுண்’ எனப் பெயரிட்டிருந்தனர். இப்போது கொப்பேகடுவவின் திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டு கிளாலி, சாவகச்சேரிப் பகுதிகளையும் உள்ளடக்கி பாரிய திட்டமாக வரையப்பட்டிருந்தது என்பது தான் உண்மை. லெப். ஜெனரல் கொப்பேகடுவ குழுவினரின் மரணத்துடன் தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருந்த படையெடுப்புத் திட்டத்தை, இப்போது புலோப்பளைச் சமரில் படையினர் சந்தித்த பேரிழப்புக் காரணமாக, மேலும் ஒருமுறை அரசு பிற்போட்டுள்ளது. ஆனாலும், முன்னரைப்போல நீண்டகாலம் தாமதித்திருக்காது இம்மறை விரைவில் அடுத்த படையெடுப்பை வேறொரு முனையிலிருந்து தொடுக்க ஆயத்தங்களைச் செய்கின்றது. இவ்விதமானதொரு பெரும் படையெடுப்பை விரைவில் செய்யவேண்டிய தேவை சிறீலங்காவின் ஜனாதிபதி விஜேதுங்காவுக்கு உண்டு; படைத்துறைத் தலைமைக்கும் அது அவசியம். இராணுவ வழிமுறைகள் மூலம் தான் இனப்பிரச்சினையை அணுகவேண்டும் என்ற கடும்போக்கை கூறி சிங்கள மக்களின் ஆதரவைப்பெற்ற விஜேதுங்கா இந்த இராணுவ நடவடிக்கையின் தோல்வியை ஏற்றுச்சும்மா இருப்பார் என்று கூறமுடியாது. அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும் வருகின்றது. அத்துடன், ‘யாழ்தேவி’ இராணுவ நடவடிக்கையில் பங்குகொள்ள வந்த சுமார் இருபதாயிரம் துருப்புக்கள், குடா நாட்டைச் சூழ உள்ள முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றனர். எனவே மிகவிரைவில் மீண்டுமொரு படையெடுப்பை குடாநாடு மீது நடாத்த வேண்டும் என்பதில், படைகளும் அரசும் உறுதியாகவே இருக்கின்றன. இந்த நிலைப்பாட்டிற்கு சிங்கள தேசமும் தனது முழு ஆதரவையும் தெரிவித்துக்கொண்டிருக்கின்றது. நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (புரட்டாதி, ஐப்பசி 1993). https://thesakkatru.com/puloppalai-battle-1993/
- 1 reply
-
- ஒப்பறேசன் யாழ்தேவி
- யாழ்தேவி
-
(and 1 more)
Tagged with: