Search the Community
Showing results for tags 'லெப். கேணல் கஜேந்திரன்'.
-
லெப். கேணல் கஜேந்திரன் / தமிழ்மாறன் கள மருத்துவர் லெப். கேணல் கஜேந்திரன் / தமிழ்மாறன். அன்னலிங்கம் பகவதி தம்பதியினரின் இரண்டாவது புத்திரன் . ராஜ்கண்ணா என்ற இயற்பெயர் கொண்ட எங்கள் கஜேந்திரன். முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு சிவநகரில் சூரிய உதயத்தை முந்திக்கொண்டு அழகிய குழந்தையாய் பிறந்த பொழுது பெற்றோரும் அறிந்திருக்கவில்லை இவன் இந்த மண்ணின் மைந்தன் என்று. அக்காவுடன் அன்பு தம்பியுமாய் கலகலப்பான அழகிய குடும்பமாக மகிழ்ச்சியாக இருந்தாலும் தமிழர் நிலங்களில் நடைபெற்ற சிங்கள ஆக்கிரமிப்புக்களைக் கண்டு சிறுவதிலையே சீற்றம் கொண்டான். தானும் போரவேண்டும் என்று நினைத்து போராட்டத்திற்கு இணைவதற்கு சென்றவனை மீண்டும் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். “உனக்கு போராட போற வயது இன்னும் வரவில்லை இப்போது படி” “என்ற தந்தையின் அறிவூட்டலில் சிறிது காலம் அமைதியாய் வாழ்ந்தான் . பாடசாலை கல்வி மட்டுமன்றி விளையாட்டிலும் சிறந்த ஈடுபாடுடையவனாக இருந்தவன். ஆரம்ப கல்வியை பொக்கனை மகாவித்தியாலத்திலும் பின்னர் புதுக்குடியிருப்பு மகா வித்தியாலத்திலும் கற்றுக்கொண்டிருந்தான். வலிகாம இடப்பெயர்வுகளின் போது மக்கள் பட்டவலிகளை எண்ணி கண்கலங்கி அவர்களிற்கு மாணவராக உள்ளபோதே பல உதவிகளை செய்தான். “தம்பி ஏன் எங்களை விட்டிற்று போறாய் என்ற அக்கா விற்கு வீட்ட இருந்தால் யார் உங்களுக்கு பாதுகாப்பு தாறது” என்று சொல்லி சென்றவனின் ஒரே அக்கா குழந்தைகளையும் பரிதவிக்கவிட்டுவிட்டு மாத்தளனில் எறிகனை வீச்சில் பலியானாள் என்ற செய்தியை அவன் இருந்தால் இன்று தாங்கியிருக்கவே மாட்டான். 1997 ஆண்டு போராளியாக தன்னை இணைத்துக் கொள்ளுமாறு லெப் கேணல் தமிழ்வாணன் அண்ணா விடம் சென்று இணைந்து கொள்கிறான். பின்னர் அடிப்படைப்பயிற்சி முடிக்காமலே மருத்துவ பிரிவின் வன்னி மேற்கின் நிர்வாக முகாமின் நிர்வாக வேலைகளிலும் தொலைத் தொடர்பாளராகவும் கடமை செய்து கொண்டிருந்தவனின் திறமைகளை இனங்கண்ட மருத்துவ பொறுப்பாளர் மருத்துவ கற்கை நெறியை தொடங்க அனுப்படுகின்றான். .அதன் பின்னரான செயல்பாடுகளில் மருத்துவ போராளியாகிய பின்பே அடிப்படை இராணுவப்பயிற்சியையும் பெற்று கொண்டு படிப்படியாயக வளர்ச்சிகண்டான். மருத்துவ போராளி கஜேந்திரன் எங்களுக்கு எல்லாம் சிறியவனாய் எமது மருத்துவ குழுவில் இருந்தாலும் அவனிடம் சிறந்த அறிவும் ஆழுமையும் நிறைந்து கிடந்தன. யாழ்வேள் மருத்துவமனையின் மருந்து களஞ்சிய பொறுப்பாளராக நீண்ட காலங்கள் இருந்திருக்கிறான் மருத்துவத்துறையில் . அவன் தன்னுடைய பொறுப்பில் எந்த நேரத்திலும் கடமை தவறாதவன் . தனக்கு கொடுக்கப்படும் பணியை காத்திரமாகவும் விருப்பத்துடனும் செய்து முடிப்பான். அது அவனுடைய தனிச் சிறப்பாகும். பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடின்றி தனக்கு தேவையானதையும் தெரியாதவற்றையும் கேட்டறிவதில் அவன் ஒருபோதும் பின்னின்றதில்லை. சரியான குறும்புக்காரன் ஒரு பொழுது குளவிக்கூட்டிற்கே கல் எறிந்து குளப்பிவிட்டு ஓடியவன் .இன்னொரு நாள் யாள்வேள் மருத்துவ மனையில் மதியநேரம் வெயில் உச்சத்தைதொட்டுக்கொண்டிருந்தது. பெண்கள் பகுதியின் வாசலில் கஜேந்திரன் குரல் “அவசரமாக திருமணமான அக்காக்கள் எல்லோரையும் டொக்டர் வரட்டாம் வேகமாக வரட்டாம்” அப்போது தான் வேலை முடித்து சாப்பிட்டு கொண்டிருந்த எல்லோரும் அரையும் குறையுமாக ஏன் என்ற வினாவுடன் அவசரமாக ஓடுகின்றார்கள். இரத்த வங்கியில் நின்ற என்னிடமும் சொல்கின்றான் “டொக்டர் வரட்டாம் அனுமதிக்கும் விடுதிக்கு உங்களை” நானும் செல்கிறேன் எதுவும் அறியாதவனைப் போல் நின்று விட்டு சரி எல்லோருக்கும் ஒரு விடயம் “நாளைக்கு வரும்போது கோல்மஸ் (colmans) பைக்கற் ஒன்று வேண்டிக்கொண்டுவாங்கோ எறிக்கும் வெயில் தாங்க முடியல்ல என்ன Brand என்று குயில் அக்கா விடம் கேளுங்கள் சரி நீங்கள் எல்லோரும் போய் வச்சீட்டுவந்த சாப்பாட்டை சாப்பிடுங்கோ நான் சொன்னதை மறக்க வேண்டாம் ” என்று சொல்லி விட்டு ஓடி விட்டான் .இப்படி பல குறும்புகள் அவனை பேசிவிட்டு போனாலும் அடுத்த நிமிடம் வந்து நிற்பான். நோயாளர்களை அன்பால் தன் வசப்படுத்துவது மட்டுமன்றி அவர்களுக்கு குறுக்கெழுத்துப் போட்டியில் கட்டங்களை நிரப்புதல், நுண்ணறிவு போட்டிக்கான கணக்குகளை தயாரித்து கொடுத்தல் .சதுரங்கம் விளையாடல் என்று அவர்களுடன் தோழமையுடன் ஆற்றுப்படுத்தும் புதுவழியை கையாள்வதில் வல்லவன். அவனின் பாரமரிப்பில் இருந்த எந்த போராளி நோயாளர்களும் அவனை இன்றும் மறந்து விடமாட்டார்கள். சற்று சாய்வான துள்ளல் நடையும் கூரிய பார்வையும் விரல் நகங்களை கடிக்கும் குறும்புக்காற கஜேந்திரன் தான் இத்தனை திறமைகளின் சொந்தக்காறன். கணனி பாவணை பெரிதாக இல்லாத காலத்திலே அந்த துறைசாரந்த தேடலும் அறிவும் அவனிடம் இருந்தது; மென்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டுவான். . ஒரு முறை உலககோப்பை கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று கொண்டிருந்ததை வெளியில் சென்று பார்த்து விட்டு வந்து தானே தலைமை வைத்தியரிடமும் அதைப்பற்றி கலந்துரையாடி அதற்கு தண்டனையும் வாங்கினான். “ஏன் பொல்லை கொடுத்து அடிவாங்கினாய்” தம்பி என்று கேட்டபோது சரி பாவம் தானே அவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்றான் சாதாரணமாக. மருத்துவ பிரிவில் மாதாந்தம் நடத்தப்படும் பொது அறிவு பரீட்சை யில் அனேகமாக அவனுக்கு தான் முதல் இடம் கிடைக்கும். எப்போது எங்கே புத்தகம் படிப்பான் என்றே எங்களுக்கு தெரியாது. ஆனாலும் மருத்துவமனையின் நூல் நிலையத்திற்கும் வரும் புத்தகங்களை முதலாவதாக அவன் வாசித்துவிடுவான். அவன் வாசித்த பிறகுதான் எமக்கு அந்தப் புத்தகங்கள் கிடைக்கும். போர்க்காலத்திற்கே உரிய மருந்து தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, மருத்துவ களஞ்சியத்திற்கு பொறுப்பாக இருந்த காலங்களில் கடும் சிக்கனமாக மருந்துகளைப் பிரித்து வழங்குவான். முக்கியமான மருத்துகளை இல்லை என்று சொல்லி கைவிரிக்காது சேகரிப்பில் வைத்திருந்து மிக அவசர நிலைலைகளில் தன் தொழிற் திறமையைக்காட்டி பொறுப்புவைத்தியர் அஜோவிடம் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறான். புதுக்குடியிருப்பிலிருந்து கிளிநொச்சிக்கு லான்மாஸ்ட்ரில் தான் மருந்துப்பொருட்களை எடுத்து வரவேண்டியிருந்த காலம் அது; தானே நேரடியாக சென்றுவிடுவான்; திரும்பி வரும் போது அடையாளம் காணமுடியாத அளவிற்கு அவனை செம்மண் புழுதி மூடியிருக்கும் அப்படி இருந்த போதிலும், மருந்துப் பொருட்களை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். தமிழீழ சுகாதாரசேவையில் இருந்த நாட்களில் தன் திறமைகளை வெளிப்படுத்த அவன் தவறியதில்லை. மன்னார் மாவட்ட தமிழிழ சுகாதாரசேவைப் பொறுப்பாளராக இருந்தபோது அவனது ஆளுமையான பொறுப்புமிக்க செயற்பாட்டைக்கண்டு அப்போது சுகாதார சேவைக்கு பொறுப்பாக விருந்த விக்கி டொக்டரிடம் பல முறை பாராட்டை பெற்றதுடன் அவனுக்கான பணிகளும் கூடுதலாக வழங்கப்பட்டது. பின்னர் வைத்தியர் சுஐந்தன் தமிழிழ சுகாதாரசேவைக்கு பொறுப்பாக இருந்த போதும் கஜேந்திரனின் பணி தமிழிழ சுகாதாரசேவையுடன் தொடர்ந்தது. மாவீரன் கஜேந்திரன் பற்றி மன்னார் மாவட்டத்தில் பணியாற்றிய போராளி வைத்தியர் இப்படிக்கூறுகிறார் “சுகாதார சேவையின் பணிகள் ஆரம்பமாகும் நேரம் காலை 9 மணியாக இருக்கும் போது கஜேந்திரன் அதிகாலை 4 மணிக்கே எழும்பி களநிலமைகளை ஆராய்ந்து சரியான தரவுகளுடன் பணியாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதுடன் பணிசார்ந்த விடயங்களில் கண்டிப்பாகவும், மற்றவர்களையும் சரியாக வழிநடத்தி செல்லும் விரைவான செயற்பாட்டாளராகவும் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் பேசப்பட்டான்” இவ்வாறு பல தியாகங்கள் அர்பணிப்புகளுடன் செயற்பட்ட கஜேந்திரனின் களங்கள் மேலும் விரிந்தன. 2006 ஆண்டு சமாதான இடைவெளியின் பின் மீண்டும் போர் தென் தமிழீழத்தில் ஆரம்பித்தது கடற்புலிகளின் ஆழ்கடல் வினியோக கப்பல் தொகுதிகளில் பணிபுரியும் போராளிகள் தரைக்கு வருவது சில நாளோ மாதங்களோ தடைப்படலாம் அதனால் போராளிகள் காயமடைந்தாலோ நோய் வந்தாலோ ஆழ்கடலில் தான் நின்று சிகிச்சை பெறவேண்டும் என்று கடற்புலிகளின் தளபதிகளின் முன்கூட்டியே கணிப்பின் பின் அதற்கான சிறப்பு மருத்துவ போராளி ஒருவரைக் கேட்டிருந்தார்கள். அதற்கு தகுதியானவராக கஜேந்திரன் தெரிவு செய்யப்படுகின்றான். அந்த கப்பலை சென்றடைவதற்காக சரியான களம் கிழக்கு மாகாண மாக அறிவிக்கப்பட்டதால் 2006ஆம் ஆண்டு ஆனி மாதம் பல தடைகளை தாண்டி நீண்ட நடைப்பயணத்தில் சென்ற அணியுடன் கஜேந்திரனும் கிழக்கு மாகாணத்தின் வெருகல் பகுதியை சென்றடைகின்றான்; அங்கு நின்ற மருத்துவ போராளிகளை சந்தித்துவிட்டு அவர்களிற்கான சில பொருட்களை கொடுத்துவிட்டு தனக்கான பணிக்கு செல்ல காத்திருந்தவன்; இரவோடு இரவாக வெருகல் முகத்தூவாரப்பகுயிருந்து தனக்கு வழங்கப்பட்ட பணிக்காக ஆழ்கடல் வினியோக தொகுதிக்கான சிறப்பு மருத்துவ போராளியாக பயணமாகிறான். உலகெங்கும் கடலோடி ஈழ நிலமொன்றே நினைவாகி 11.09.2007 அன்று ஏனைய மாவீரர்களுடன் வீரச்சாவடைந்த செய்தி பின் ஒரு நாளில் அவன் இல்லாத செய்தி எம் மருத்துவ மனை முழுவதும் நிறைந்தது அந்த வீரர்களின் ஈரவரலாறு ஈழ மண் எங்கும் விதையாகிபோனது. நினைவுப்பகிர்வு: மிதயா கானவி. https://thesakkatru.com/lieutenant-colonel-kajenthiran/
- 1 reply
-
- மிதயா கானவி
- லெப். கேணல் கஜேந்திரன்
-
(and 2 more)
Tagged with: