Search the Community
Showing results for tags 'வடமாநில பேராசிரியர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்'.
-
'தமிழ் தொன்மையானது' என மோடி கூறியது உண்மையே: வடமாநில பேராசிரியர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம் தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை வட இந்தியப் பல்கலைகழகப் பேராசிரியர்கள் ஏற்க மறுத்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார். சமீபத்தில் மாணவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, சமஸ்கிருதத்தை விட தமிழ் தொன்மையான மொழி எனக் கருத்து கூறி இருந்தார். இந்நிலையில், தாய்மொழி தினத்தை முன்னிட்டு 'தி இந்து' சார்பில் வட இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சிலரிடம் கருத்து கேட்டு வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர்கள், 'பிரதமர் கூறுவதை ஏற்க முடியாது எனவும், அது அரசியல் ஆதாயத்திற்காக கூறப்பட்டிருக்கலாம்' என்றும் தெரிவித்திருந்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து 'தி இந்து'விடம் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: 'மொழி என்பது பல்லாயிரம் காலம் மக்களால் பேசப்பட்டு வந்தாலும், அதற்கான சான்றுகள் கிடைத்தால் தான் அதன் காலத்தை அறிய முடியும். வட இந்தியாவில் கிடைத்த முதன்மையான கல்வெட்டுகளான அசோகன் கல்வெட்டுகளின் மொழி சமஸ்கிருதம் அல்ல. அவை மகதப் பகுதியில் வழக்கிலிருந்த 'பாகதம்' என்று சொல்லக்கூடிய 'பிராகிருத மொழி' ஆகும். இதை மகதப்பகுதி மொழி வழக்கு என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். வேதங்கள் என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் குடும்ப மொழியால் பாடல்களாகப் பாடப்பட்டவை. காலத்திற்கு ஏற்ப அவை திருத்தம் பெற்றவை. எனவே வேதங்கள் சமஸ்கிருதத்தில் பாடப்பெற்றவை என்பது சான்றுகள் அற்ற வாதங்கள். இந்தியாவில் முதன்முதலாக சமஸ்கிருத வழக்கின் கல்வெட்டு கி.மு 1-ம் நூற்றாண்டில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஹத்திபாடாவில் கிடைத்தது. அதே காலத்தின் மற்றொரு சமஸ்கிருத கல்வெட்டு குஜராத்தின் ஜுனாகரில் கிடைத்தது. அதில், அசோகர் காலத்தில் இருந்த நீர் அணையை அவருக்குப் பின் வந்த ருத்ரதாமன் என்பவர் புதுப்பித்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. இந்த ஜுனாகரில் இந்த நீர் அணை அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாக பிராகிருத மொழிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் இருந்து அசோகர் காலத்து பிராகிருதம் அடுத்த 200 ஆண்டுகளில் ருத்ரதாமன் காலத்தில் சமஸ்கிருத மொழியில் எழுதத் தொடங்கி இருப்பதை உணரலாம். கி.மு.500-க்கு முற்பட்ட தமிழி தமிழகத்தில் கிடைத்த பானை ஓடுகளிலும், இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்களிலும் எழுதப்பட்டவை, 'தமிழி' எனப்படும் 'தமிழ்-பிராமி' எழுத்துகள் ஆகும். கொடுமணல் மற்றும் பொருந்தல் அகழாய்வுகளில் கிடைத்த தமிழி எழுத்துகள் கி.மு. 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என அறிவியல் காலக் கணிப்பு முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அசோகனுடைய காலத்திற்கும் 200 ஆண்டுகள் முற்பட்டது. 600 மட்கலன்களில் தமிழ் பிராமி தமிழகத்தில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஊர்களில் அகழாய்வு செய்யப்பட்டதில் அங்கு வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை அவர்கள் பயன்படுத்திய மட்கலன்களில் தங்களின் பெயரை எழுதியுள்ளன. அண்மையில் நடைபெற்ற கீழடி அகழாய்விலும் கொற்கை கொடுமணல், அரிக்கமேடு, காஞ்சிபுரம், உறையூர். கருவூர் போன்ற ஊர்களில் மட்கலன்களில் தமிழ் பிராமியில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. கொடுமணல் அகழாய்வில் மட்டுமே 600 மட்கலன்களில் தமிழ் பிராமி எழுத்துகளில் எழுதப்பட்ட தமிழ்ப் பெயர்கள் உள்ளன. கொடுமணல் அகழாய்வில் மக்கள் பயன்படுத்திய மட்கலத்தில் எழுத்துப் பொறிப்பு மட்கலப் பொறிப்புகளில் சமஸ்கிருதம் இல்லை வட இந்தியாவில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை அகழாய்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக மகாபாரதம், ராமாயணத்தில் குறிப்பிடப்படும் குருஷேத்திரம், ஹஸ்தினாபுரம், அயோத்தி போன்ற இடங்களிலும் நடந்தன. பிரயாகை, கௌசாம்பி, உஜ்ஜயினி போன்ற வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களிலும் புத்த, சமணத் தொடர்புடைய இடங்களிலும் அகழாய்வுகள் செய்யப்பட்டன. இந்த அகழாய்வுகளில் எதிலும் வட இந்திய பிராமியில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட மட்கலப் பொறிப்புகள் இதுவரை கிடைக்கவில்லை. தமிழில் உருவான சமஸ்கிருதம் மக்கள் வழக்கில் இல்லாத மொழி எவ்வாறு பழமை வாய்ந்ததாக இருக்க முடியும். அசோகனுக்குப் பின் பிராகிருத மொழி இலக்கிய மொழியாக மாற்றப்படும் பொழுது பிற மொழிகளிலிருந்து குறிப்பாக தமிழ் மொழியின் பல சொற்களைப் பெற்று சமஸ்கிருதம் உருவாக்கப்படுகிறது. கி.பி. 300-ம் ஆண்டுகளில் சமஸ்கிருதம் குப்தர்களால் வளர்ச்சி பெறுகிறது. சமஸ்கிருதத்தின் தொடக்க நிலையே கி.மு. 1-ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில்தான் அது வளர்ச்சி அடைந்து அரசு மொழியாக மாற்றப்படுகிறது. சமஸ்கிருதம் என்றாலே 'செய்யப்பட்ட மொழி' என்று பொருள். தலையான மொழி தமிழ் - ஐரோப்பிய அறிஞர்கள் தமிழ் உலக மொழிகளுக்கு எல்லாம் தலையான மொழி என்பதை பல ஐரோப்பிய அறிஞர்களே சுட்டிக்காட்டி உள்ளனர். எனவே பிரதமருக்கு மொழியில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அரசியல் செய்வதற்கு எத்தனையோ வழிகள் அரசாங்கத்தில் உள்ளது. அவர் உண்மையைக் கூறி இருப்பது வட இந்தியப் பேராசிரியர்களுக்கு உறுத்தியுள்ளது. உறுதியான அகழாய்வு கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் தமிழின் தொன்மையை பறைசாற்றுகின்றன. உலக அளவில் இலக்கிய வளமும் மொழி வளமும் எழுத்து வளமும் பெற்ற தொன்மை மொழி தமிழ் மட்டுமே. எனவே தான், மத்திய அரசு தமிழை செம்மொழி என முதன்முதலில் அறிவித்தது. அதன் பிறகே சமஸ்கிருதமும் பிற இந்திய மொழிகளும் அத்தகுதியை அரசியல் அழுத்தத்தின் காரணமாக குறைந்த கால அளவை கணக்கில் கொண்டு செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்றன.' இவ்வாறு பேராசிரியர் ராசவேலு தெரிவித்துள்ளார். தி இந்து