இலங்கையின் வடக்கு - கிழக்கில் உள்ள காணிகள் தொடர்பில் அதிகரித்துள்ள பதற்றம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வவுனியா வெடுக்குநாறி மலைக் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் கிரேடி (Patrick Grady) கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும்போதே, வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன் (Anne-Marie Trevelyan)இதனை தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில்
வவுனியாவில் உள்ள வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில் உட்பட இலங்கையில் காணிவிடயங்களில் பதற்றம் அதிகரித்து வருவது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் கரிசனைக் கொண்டுள்ளது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட எட்டு இந்து வழிபாட்டாளர்களின் விடுதலையை வரவேற்பதாக கூறிய அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன், இந்த கைது சம்பவம் மதம் மற்றும் நம்பிக்கையின் சுதந்திரத்தில் தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தை ஊக்குவிப்பது இங்கிலாந்து அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து மனித உரிமைகளுக்காக இங்கிலாந்து அரசாங்கம் ஊக்குவிப்புக்களை மேற்கொள்வதாகவும் ட்ரெவெலியன் தெரிவித்துள்ளார்.
https://tamilwin.com/article/tension-over-lands-in-sl-question-in-uk-parliament-1714201879?itm_source=parsely-api