Search the Community
Showing results for tags '22/07/2024'.
-
ஐபோன் உற்பத்தி, ஆண் - பெண் பருமன்: தமிழ்நாடு பற்றி பொருளாதார ஆய்வறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,SANSAD TV கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 22 ஜூலை 2024 இந்தியாவின் நிதி நிலை அறிக்கைக்கு முன்னாட்டமாகக் கருதப்படும் இந்திய பொருளாதார ஆய்வறிக்கை இன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. நிதிநிலை அறிக்கை நாளை (23.07.2024) தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 'இந்திய பொருளாதார ஆய்வறிக்கை 2023-2024'ஐ (Economic Survey of India 2023-24) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பொருளாதார ஆய்வறிக்கை என்பது, மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் அரசின் நிதிச் செயல்பாடு எப்படி இருந்தது, இந்தியப் பொருளாதாரம் எப்படி செயல்பட்டது என்பதை சொல்லும் ஓர் அறிக்கை. எதிர்காலத்தில் வரவிருக்கும் கொள்கை மாற்றங்களையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டும். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் பொருளாதார ஆய்வறிக்கை நிதித் துறையால் தாக்கல் செய்யப்படுகிறது. பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கியமான 15 விஷயங்கள் வரும் நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.5 – 7 சதவீதமாக இருக்கும். மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து 7 சதவீதத்திற்கு மேல் இந்தியப் பொருளாதாரம் வளர்ந்திருப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. மக்கள் தொகை வளர்ச்சி, அதிகரிக்கும் தேவைகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பொருளாதாரம் 78.51 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தியாவில் 56.5 கோடி பேர் பணியாளர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 45 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் விவசாயத் துறையில் இருக்கிறார்கள். 11.4 சதவீதம் பேர் உற்பத்தித் துறையிலும் 28.9 சதவீதம் பேர் சேவைத் துறையிலும் 13 சதவீதம் பேர் கட்டுமானத் துறையிலும் இருக்கின்றனர். இந்தியாவில் பெண்கள் வேலை பார்ப்பது கடந்த ஆறு ஆண்டுகளில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை குறைந்து வருவதாகவும் 2023வது நிதியாண்டில் வேலைவாய்ப்பின்மை 3.2 சதவீதமாக இருந்ததாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் வேலை பார்ப்போர் அனுப்பும் தொகை (Remittances), இந்த ஆண்டில் 3.7 சதவீதம் அதிகரித்து 124 பில்லியன் டாலர்களாகவும் அடுத்த ஆண்டில் இது 4 சதவீதம் அதிகரித்து 129 பில்லியன் டாலர்களாகவும் இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை மதிப்பிட்டிருக்கிறது. இந்தியா தரமான உள் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றால் பெரும் அளவில் தனியார் துறை முதலீடு தேவைப்படும் என்றும் இதற்கு மத்திய அரசின் கொள்கை மற்றும் அமைப்பு ரீதியான ஆதரவு மட்டும் போதுமானதாக இருக்காது என்றும் மாநில அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் மிக முக்கியமான பங்கை வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விரைவான நகர்மயமாக்கத்தால் வீடுகளின் தேவை அதிகரிக்கும் என்றும் இது ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்திய அரசின் Universal Services Obligation Fund (USOF) நிதியில் ஐந்து சதவீதத்தை தொலைத்தொடர்புத் துறையில் ஆராய்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் செலவிட உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியில் தற்போது 80,000 கோடி ரூபாய் இருக்கிறது. இந்த நிதியின் பெயர் இனி 'டிஜிட்டல் பாரத் நிதி' என மாற்றப்படும். கரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்தியச் சுற்றுலாத் துறை சற்று வளர்ச்சி கண்டிருக்கிறது. 2023ஆம் ஆண்டில் 92 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டால் இது 43.5 சதவீத வளர்ச்சியாகும். 2023ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் புதிதாக 14,000 அறைகள் கட்டப்பட்டிருக்கின்றன. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகப் பெரிய காலணி உற்பத்தியாளராக இந்தியா இருக்கிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் காலணிகளின் மதிப்பு 1.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, 2024ல் 2.5 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. செல்போன் உற்பத்தியைப் பொருத்தவரை, 2024ஆம் ஆண்டில் உலகில் உற்பத்தியாகும் ஐஃபோன்களில் 14 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் கர்நாடக மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் புதிய தொழிற்சாலைகளுக்காக முதலீடுகளைச் செய்திருக்கிறது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைப் பொருத்தவரை, கடந்த ஆண்டில் 67 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது 23.2 டாலராக குறைந்திருக்கிறது. ஆனால், நேரடி அன்னிய முதலீட்டைப் பொருத்தவரை கடந்தாண்டோடு ஒப்பிட்டால் கணிசமாகக் குறைந்திருக்கிறது. வளர்ந்த நாடுகளில் வட்டி விகிதம் அதிகரித்தும், இந்தியாவில் பங்குச் சந்தை வளர்ச்சி அடைந்ததால், அதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர் லாபத்தை எடுத்ததும் இதற்கு காரணங்கள் என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,ANI இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அடுத்த பத்து மாதங்களின் இறக்குமதிக்குப் போதுமானதாக இருக்கும். இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 18.7 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவில் உடல் பருமனானவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகவும் குழந்தைகளிடம் இந்தப் பிரச்சனை அதிகரிப்பது உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் என்றும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண்கள் அதிக உடல் பருமனுடன் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆண்களில் 37 சதவீதம் பேரும் பெண்களில் 40.4 சதவீதம் பேரும் உடல் பருமனாக உள்ளனர். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களில் துவங்கி மிகத் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் வரை மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் ஆண்டுகளிலும் தசாப்தங்களிலும் உயர் வளர்ச்சியை இந்தியா எட்டுவதில் இது பல தடைகளை உருவாக்கும். 2024ஆம் ஆண்டு மே மாதத்தில், நிலக்கரி, டீசல், எரிவாயு போன்ற மரபுசார் மின் ஆதாரங்கள் தவிர்த்து, பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 45.4 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2047ஆம் ஆண்டில் இந்தியாவின் எரிசக்தித் தேவை 2 முதல் 2.5 மடங்கு உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. கோவிட் தொற்று, புவிசார் அரசியல் பதற்றங்கள், சப்ளையில் ஏற்பட்ட தடைகள் ஆகியவற்றால் 2022-23ல் உலகம் முழுவதுமே விலைகள் உயர்ந்தன. ஆனால், மத்திய அரசின் கொள்கைகளாலும் ரிசர்வ் வங்கி தலையீட்டாலும் 2024ஆம் ஆண்டில் பணவீக்கம் 5.4 சதவீதமாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வி. ஆனந்த நாகேஸ்வரன், இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் தலைமைப் பொருளாதார ஆலோசகர் பேட்டி இந்தியப் பொருளாதார அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசினார். அவருடைய பேச்சின் முக்கிய அம்சங்கள்: கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொருளாதாரம் 8 சதவீதம் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொருத்த வரை, கோவிட்டிற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்ததைவிட 20 சதவீதம் அதிகமாக இருக்கிறது." உலகமயமாக்கம் உச்சத்தில் இருக்கிறது. இந்த சவால்களுக்கு நடுவில் நாம் 'விக்சித் பாரத்'திற்கான பாதையை நாம் தேர்வுசெய்ய வேண்டும். அதனால் உள்நாட்டு வளர்ச்சி என்பது மிக மிக முக்கியமாகிறது" குடும்பங்களின் சேமிப்பு மேம்பட்டிருக்கிறது. "குடும்பங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படக் கூடிய நிதி சொத்துகளில் முதலீடு செய்துள்ளனர். சந்தையோடு இணைக்கப்படாத நிதிச் சொத்துகளை சிறப்பாகவே மேம்பட்டிருக்கின்றன". இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் குறைவாகவே இருப்பதால் ரூபாய் வீழ்ச்சியடைவது பாதிப்பை ஏற்படுத்தாது. டாலர்களில் கடன் வாங்கியிருந்தால் பணத்தின் மதிப்பு குறைவது பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கும். வர்த்தகத்தில் கிடைக்கும் லாபம், வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதில் போயிருக்கும். ஆனால், இந்தியாவில் நிலைமை அப்படியில்லை." இந்தியாவில் 85 சதவீதத்திற்கு அதிகமான விளைநிலங்கள் 2 ஹெக்டேர் அளவிலோ அதற்குக் குறைவாகவோதான் இருக்கின்றன. 1970களில் இருந்து தனிநபர் நிலவுடமையின் அளவு குறைந்து வருகிறது. இதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். நான்கு ஹெக்டேர் அளவுக்கு குறைவான நிலத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்துவது பொருளாதார ரீதியாக லாபகரமாக இருக்காது தக்காளி, வெங்காயம், பருத்தி போன்றவற்றின் விளைச்சல் உலகளாவிய விளைச்சலோடு ஒப்பிட்டால் 20 - 40 சதவீதம் குறைவாக இருக்கிறது. நிலங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் விளைச்சலை அதிகரிக்கவும்செய்யலாம். https://www.bbc.com/tamil/articles/c0xj5jl75jeo