Search the Community
Showing results for tags 'good movie'.
-
டிஸ்கி: இன்று 2020 புது வருடத்தில் முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாள்..! பொழுது போகாமல் தொலைகாட்சியின் "டென்ட் கொட்டா" அப்.பில் உயர்தர HD ப்ரிண்டில் வெளிவந்துள்ள படங்களை அசிரத்தையாக முதல் சில காட்சிகளை மட்டும் ஓடவிட்டு ப்ரிவியூ பார்க்க ஆரம்பித்தேன். அதில் காளிதாஸ் என்ற இப்படத்தினை பார்க்க ஆரம்பிக்கையில், முதல் சில நிமிடங்களிலேயே ஒரு பெண்ணின் துர்மரணம்.. அதை விசாரிக்க வரும் காவல் அதிகாரி, சில கோணங்களில் விசாரணையை ஆரம்பிக்க, எனக்கும் 'இந்த மரணம் எப்படி நடந்திருக்கும்..?' என ஊகிக்க ஆரம்பித்து படத்தோடு ஒன்றி விட்டேன்..! சில 'லாகிக்' சறுக்கல்களை தவிர, கடைசி வரை விறுவிறுப்பாகவே படம் இருந்தது. இயக்குநருக்கு இதுதான் முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை. நேரம் இருந்தால் அவசியம் பார்க்கலாம்..!! விகடனில் வெளிவந்துள்ள விமர்சனம்: தொடர் தற்கொலைகள், அதன் பின்னாலிருக்கும் மர்மம், இதைத் தேடி அலையும் இரண்டு போலீஸ்காரர்கள், அவர்களின் பர்சனல் பக்கங்கள்... இந்த 2 மணி நேர சுவாரஸ்யம்தான் ‘காளிதாஸ். காதல் மனைவியுடன் தனியே வாழும் ஆய்வாளர் ‘காளிதாஸ்’ பரத். அவர் ஏரியாவில் அடுத்தடுத்து பெண்கள் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ள, பரபரக்கிறது காவல் நிலையம். புளூவேல் விளையாட்டில் தொடங்கி ஏகப்பட்ட காரணங்களை ஆராய்கிறார் பரத். பரத்துக்கு உதவ மேலதிகாரி சுரேஷ் மேனன் வந்து சேர அந்தத் தற்கொலை களுக்கான உண்மையான காரணத்தை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை. ஒரு நல்ல த்ரில்லர் கதையை சுவாரஸ்யமாகச் சொல்லி அசரடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீசெந்தில். டைட்டில் கார்டில் இருந்தே தொடங்கும் அவரின் கிரியேட்டிவிட்டி தனித்துவம். மில்லிமீட்டர் அளவுக்குக்கூட அதிகம் நடிக்காமல் நேர்த்தியான ஒரு பர்ஃபாமென்ஸைக் கொடுத்திருக்கிறார் பரத். படத்தை சுவாரஸ்யமாக மாற்றுவது சுரேஷ் மேனனின் பாத்திரம்தான். அதைச் செவ்வனே செய்திருக்கிறார் இந்த ஆறடி அட்டகாச நடிகர். பரத்துக்கு மனைவியாக அறிமுக நாயகி ஆன் ஷீத்தல். கணவன் எப்போதும் வேலை வேலை என்றிருக்க, தனிமையில் வாடும் பாத்திரம். தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவர்களைத் தவிர ஆதவ் கண்ணதாசன், கான்ஸ்டபிளாக வரும் ஜெயவேல் எனக் கச்சிதமான காஸ்ட்டிங். 2.06 மணி நேர நீளம் இதற்குப் போதுமென்ற எடிட்டர் புவன் ஸ்ரீனிவாசன், த்ரில்லர் என்பதால் இருளில் சுற்ற வேண்டாமே எனத் தெளிவாய்ப் படம்பிடித்த ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா இருவருமே கவனம் ஈர்க்கிறார்கள். விஷால் சந்திரசேகரின் பாடல்கள்கூட ஓகே. ஆனால், பின்னணி இசைதான் சில இடங்களில் இம்சிக்கிறது. த்ரில்லர் கதைகள் முழுமையடைவது க்ளைமாக்ஸில்தான். ஆனால் ‘காளிதாஸ்’ க்ளைமாக்ஸில் மட்டும்தான் சறுக்குகிறது. இணைக்க வேண்டிய பல புள்ளிகள் கடைசிவரை புள்ளிகளாகவே இருப்பதுதான் காளிதாஸை ‘வாவ்’ படப் பட்டியலிலிருந்து விலக்கிவைக்கிறது. க்ளைமாக்ஸை மட்டும் இன்னும் செதுக்கியிருந்தால், இந்த ‘காளிதாஸ்’ காலங்கள் தாண்டியும் நினைவில் நின்றிருப்பான். விகடன்