Search the Community
Showing results for tags 'good thought'.
-
தமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு? தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த கல்வியாண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கு கற்பிக்காமல் எந்த ஒரு பள்ளிக்கூடமும் தெலுங்கானாவில் இயங்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். அடிப்படைக் கல்வியில் தாய்மொழியைத் தவிர்க்கக் கூடாது என்ற கல்வித் துறை சார்ந்த காரணங்களைத் தாண்டி, பிராந்திய மொழிகளைப் பாதுகாக்க வேண்டிய அரசியல் முக்கியத்துவமும் இந்த உத்தரவில் அடங்கியிருக்கிறது. ஏற்கெனவே, ஏப்ரல் மாதத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மலையாளம் ஒரு பாடமாக இருக்க வேண்டும், மலையாளத்தைக் கற்றுக்கொடுக்காத பள்ளிகளின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். மேற்கு வங்கப் பள்ளிகளிலும் வங்க மொழியைச் சமீபத்தில் கட்டாயமாக்கியிருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. பள்ளிகளில் வேறு எந்த மொழியை யும் கற்றுக்கொடுப்பதைத் தடுப்பதல்ல இந்த உத்தரவுகளின் நோக்கம். தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே. மத்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் கொடுக்கும் பதிலடியாகவும் இந்த உத்தரவுகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. பள்ளியில் படிக்கும் ஒரு மாணவர் அவர் விரும்பும் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், அடிப்படைக் கல்வி தாய்மொழியில்தான் கற்பிக்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். என்றாலும், கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான தகுதி மட்டுமே என்று பெற்றோர் கள் கருதும் வரையிலும் தாய்மொழிக் கல்வியை மாணவர்களுக்குக் கட்டாயமாக்க முடியாது. இந்நிலையில், குறைந்தபட்சம் தாய்மொழி ஒரு பாடமாகவேனும் கட்டாயமாகப் பள்ளிக் கூடங்களில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். மொழியுரிமை குறித்து கர்நாடகம், கேரளம், தெலுங்கானா என்று நமது பக்கத்து மாநிலங்கள் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், மொழியுரிமைப் போராட்டத்தில் இந்தியாவிலேயே முன்னோடி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் தமிழகம், இந்த உரிமைப் போராட்டத்தில் பின்தங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. காரணம், மொழியுரிமை என்பது மாநில உரிமையின் அடையாளம் என்கிற புரிதலும் அக்கறையும் தமிழக ஆட்சியாளர்களுக்கு அறவே இல்லை என்பதுதான். தாய்மொழியைக் கல்வியின் மொழியாக நிலை நிறுத்தவில்லையென்றால், அதன் எதிர்காலம் அஞ்சத்தக்கதாகிவிடும் என்பது கல்வியாளர்களின் கருத்து. கேரளம், மேற்கு வங்கம், தெலங்கானா அரசுகள் விழித்துக்கொண்டுவிட்டன. என்ன செய்யப்போகிறது தமிழக அரசு? இந்து