புதிய பதிவுகள்2

காணொளிகளின் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதி – நிலாந்தன்!

1 month ago
காணொளிகளின் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவருக்கான நீதி – நிலாந்தன்! அணையா விளக்கு போராட்டத்தில் தன்னை நித்திரை கொள்ளவிடாமல் தடுத்த இரண்டு சம்பவங்களைப் பற்றி அதில் அதிகமாக ஈடுபட்ட ஒருவர் சொன்னார். முதலாவது சம்பவம், ஒரு முதியவர்-மிக முதியவர்- காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மகனின் தகப்பன். அவர் அங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வந்து போனபின் அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டாராம், “தம்பி இனி எங்களுக்குத் தீர்வு கிடைக்குமா? காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் திரும்பக் கிடைப்பார்களா?” என்று. அவர் நம்புகிறார், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வந்ததால் ஏதோ தீர்வு கிடைக்கும் என்று. அந்த நம்பிக்கை, அதுவும் அந்த முதிய வயதில் அவருக்கு இருந்த நம்பிக்கை, தன்னைத் துன்புறுத்தியதாக அந்த ஏற்பாட்டாளர் சொன்னார். இரண்டாவது சம்பவம், ஒரு முதிய தாய், ஒரு பையனின் படத்தையும் வைத்துக்கொண்டு அங்கே இருந்திருக்கிறார். அவரோடு கதைத்த பொழுது அவர் சொன்னாராம்,”நான் இது போன்ற போராட்டங்களில் இதுவரை பெரும்பாலும் பங்குபற்றியது இல்லை. இது மக்களால் மக்களுக்கு என்று கூறப்பட்டதால் நான் வந்தேன்.இது அரசியல்வாதிகளால் ஒழுங்கு செய்யப்படாத, ஆனால் மக்களால் ஒழுங்கு செய்யப்படுகின்ற ஒரு போராட்டம் என்றபடியால் வந்தேன்.” என்று.மேலும், “இது போன்ற போராட்டங்கள் எதிர்காலத்தில் நடந்தால் நான் அதற்கு வர இருக்கிறேன். யாரோடு கதைக்க வேண்டும்?” என்றும் கேட்டிருக்கிறார். அப்பொழுது அந்த செயற்பாட்டாளர் சொன்னாராம், “நீங்கள் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காகப் போராடும் சங்கங்களோடு தொடர்பில் இல்லையா?” என்று. அவர் கூறினாராம்,” இல்லை” என்று. அதாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் சங்கங்களோடு தொடர்பில் இல்லாமலேயே ஒரு தொகுதி முதிய பெற்றோர் உண்டு. கட்சி சாரா மக்கள் போராட்டம் என்று வரும்பொழுது அவர்கள் அரங்கினுள் இறங்குகிறார்கள். இது அணையா விளக்குப் போராட்டத்துக்கு இருந்த மக்கள் பரிமாணத்தை காட்டுகிறது. ஆனால் துயரம் என்னவென்றால், இந்த இரண்டு முதியவர்களையும் அங்கே யாரும் நேர்காணவில்லை. அவர்களைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் அங்கே வந்திருந்திருக்கலாம். செம்மணியில் புதைக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தெரியாது. யாரையெல்லாம் புதைத்தார்கள் என்றும் தெரியாது. ஆனால் தங்கள் பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோர் நூற்றுக்கணக்கில் கிராமங்கள் தோறும் உண்டு. அவர்களிடம் போனால் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஒவ்வொரு கதை வைத்திருப்பார்கள்.அதற்குள் சில சமயம் கிளைக் கதைகளும் இருக்கும். இதில் எத்தனை கதைகள் இதுவரை ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன? அண்மையில் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்ற மண்டபத்தில் அவ்வாறு காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பான ஒர் ஆவணம் வெளியிடப்பட்டது. “ஏழுநா” நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணத்தை இயக்கியவர் ஈழத்து சேகுவாரா என்று அழைக்கப்படுகின்ற ராஜ்குமார். முதலில் ராஜ்குமாரை பற்றிக் கூற வேண்டும். ஏனென்றால் அவருடைய கதையும் ஒரு துயரக் கதை. சூழ்ச்சிக் கோட்பாடுகளால் சூழப்பட்ட ஒரு கதை. ராஜ்குமார் புனர் வாழ்வு பெற்ற பின் விடுவிக்கப்பட்டவர்.இந்திய வம்சாவளியினரான வறிய தாய்க்கு பிறந்த இரண்டு பிள்ளைகளில் ஒருவர். மூத்த சகோதரர் ஏற்கனவே இயக்கத்தில் இருந்துபோர்க் களத்தில் இறந்தவர்.. தாயும் சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் காரணமாக, போதிய சிகிச்சை இன்றி, அதற்கு வேண்டிய வளமின்றி இறந்து போனார். புனர் வாழ்வு பெற்ற பின் ராஜ்குமார் வவுனியா மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோடு வேலை செய்தவர். தவிர வெவ்வேறு ஊடகங்களிலும் வேலை செய்தவர்.எனக்கு ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் 2015க்கு முன்னர் என்று நினைக்கிறேன். வவுனியாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்தில்,குமார் பொன்னம்பலம் நினைவுப் பேருரை ஆற்றுவதற்காகப் போயிருந்தேன். நிகழ்வு முடிந்த பின் ராஜ்குமார் என்னை சந்தித்தார்.2009க்குப் பின் அவர் என்னை முதன்முதலாக கண்டது அப்பொழுதுதான்.என்னிடம் எனது தொலைபேசி இலக்கம்,மின்னஞ்சல் போன்றவற்றை கேட்டார். அவருக்கு நான் அவற்றை வழங்கிக் கொண்டிருந்த பொழுது,சிறிது தொலைவில் நின்ற ஒரு சிவில் சமூகச் செயற்பாட்டாளர் என்னை பார்த்து அவருக்கு அதை கொடுக்காதே என்று சைகை காட்டினார். அதேபோல ஒரு கட்சிப் பிரமுகரும் அவர் கேட்பதைக்கொடுக்க வேண்டாம் என்று எனக்குச் சைகை காட்டினார். ஆனால் நான் கொடுத்தேன். அவர் போனபின் அந்த இருவரிடமும் கேட்டேன், ஏன் கொடுக்கக் கூடாது ?என்று. அவர்கள் சொன்னார்கள், “அவர் இப்பொழுது பச்சையின் ஆள். புனர் வாழ்வின் பின் அவர்களுடைய ஆளாக வேலை செய்கிறார்” என்று. நான் சொன்னேன் “இருக்கலாம்.புனர் வாழ்வு பெற்றவர்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கு புலனாய்வுப்பிரிவு அவர்களோடு தொடர்புகளைப் பேணும்.அதைவிட முக்கியமாக அவர்களுக்கு வேறு ஒரு இலக்கும் உண்டு. என்னவென்றால் புனர் வாழ்வு பெற்றவர்கள் புலனாய்வுத் துறையோடு தொடர்புடையவர்கள் என்று சமூகத்தை நம்ப வைத்தால் சமூகம் அவர்களை நெருங்கி வராது. அவர்களை சந்தேகிக்கும். அவர்களைக் கண்டு பயப்படும்; வெறுக்கும், அவர்களோடு ஒட்டாது. அவர்களை தூர விலக்கி வைத்திருக்கும். இவ்வாறு ஒரு காலம் தமக்காக போராடப் போய் கல்வியை, இளமைச் சுகங்களை ,கை கால்களை, கண்களை இழந்தவர்களை,எந்த சமூகத்துக்காக அவர்கள் போராடப் போனார்களோ அந்த சமூகமே சந்தேகிப்பது அல்லது அந்த சமூகமே அவமதிப்பது என்பது அரசாங்கத்துக்கு வெற்றி.எனவே தன் சொந்த மக்களாலேயே அவர்கள் அவமதிக்கப்பட வேண்டும், நிராகரிக்கப்பட வேண்டும் என்று அவர்களை தோற்கடித்தவர்கள் எதிர்பார்ப்பார்கள்.அந்த எதிர்பார்ப்பை நீங்கள் நிறைவேற்றப் போகிறீர்களா? நாங்கள் அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. விழிப்பாக இருக்க வேண்டும். ஆனால் அவர்களை அரவணைக்க வேண்டும். என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என்று சொன்னேன். இறக்கும்வரை ராஜ்குமார் சந்தேகிக்கப்பட்டார். அவர் முதலில் வேலை செய்த ஒர் ஊடகத்தின் ஆசிரியர் என்னிடம் கேட்டார்,”அவர் யார்? ஒரு புதிராகவே தெரிகிறார்.அவரைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. நம்பவும் முடியாமல் இருக்கிறது”. என்று. ஆம்.ஈழம் சேகுவாரா கடைசி வரை சந்தேகிக்கப்படும் ஒருவராகவே இறந்தார். ஆனால் அவர் தயாரித்து இன்று தமிழர் தாயகம் எங்கும் திரையிடப்படுகின்ற அந்தக் காணொளி சந்தேகங்களுக்கு அப்பால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் கேட்பது. அதுபோல பல காணொளிகள் வரவேண்டும். இக்கட்டுரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டதுபோல அந்த இரண்டு முதியவர்களைப்போல ஆயிரம் முதியவர்கள் எல்லாக் கிராமங்களிலும் இருப்பார்கள். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுடைய கதைகளை வெளியே கொண்டுவர வேண்டும். அது ஒருவிதத்தில் கலையாகவும் இருக்கும்;அரசியலாகவும் இருக்கும்; இன்னொரு விதத்தில் யுத்த சேதங்களைக் கணக்கெடுப்பதாகவும் இருக்கும். இதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளோடு பல ஆண்டுகளுக்கு முன் நான் கதைத்திருக்கிறேன். “இதுபோன்ற விவரங்களை அதாவது யுத்தத்தின் சேதங்களைக் கணக்கெடுக்கும் அல்லது புள்ளி விபரங்களைத் திரட்டும் நடவடிக்கைகளை ஒரு அரசியல் செயற்பாடாக, ஒரு போராட்ட வடிவமாக முன்னெடுக்கலாம். கிராமங்கள் தோறும் நடமாடும் அலுவலகங்களை நிறுவி அல்லது கட்சிக் கிளைகளைப் பரப்பி, அங்கெல்லாம் கிராம மட்டத்தில் தகவல்களைத் திரட்டலாம். இது ஒருபுறம் தகவல் திரட்டுவதாகவும் அமையும். இன்னொருபுறம் கட்சியைப் பலப்படுத்துவதாகவும் அமையும்” என்று தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் கூறியிருக்கிறேன். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் தலைவர் சொன்னார்,அதற்கு ஓர் அரசியல் சூழல் வேண்டும் என்று.உண்மை. அதற்குரிய அரசியல் சூழல் இல்லை என்றால் அவ்வாறு திரட்டுபவர்களுக்குப் பாதுகாப்புப் பிரச்சினைகள் வரலாம்.எனவே அதில் உள்ள ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கு அந்தக் கட்சி அல்லது அமைப்பு தயாராக இருக்க வேண்டும். இதை நான் கேட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.அப்போது இருந்ததை விடவும் இப்பொழுது அரசியல் சூழல் தேறியிருக்கிறது. இனிமேல் மக்கள் துணிந்து முன்வந்து சாட்சிக் கூறக்கூடும். சான்றுகளைத் தரக்கூடும். தவிர ஐநாவிலும் அவ்வாறான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஓர் அலுவலகம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.எனவே சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பது என்பது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஓர் அனைத்துலக நடைமுறையாக உள்ளது.எனவே இந்த விடயத்தில் இனி கட்சிகளும் செயற்பாட்டு அமைப்புகளும் துணிந்து இறங்கலாமா? நிதிக்கான போராட்டத்தின் முதல் படி அதுதான். நீதியைப் பெறுவதற்குத் தேவையான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பது.அதை ஒரு செயற்பாட்டு ஒழுக்கமாகக் கட்சிகள் செய்யலாம். அதன்மூலம் கட்சிகளுக்கும் மக்களுக்கும் இடையில் உயிர்த் தொடர்பு உண்டாகும். அதைவிட முக்கியமாக கட்சிகள் மக்களின் துயரங்களுக்கு மேலும் நெருக்கமாக வரும்.இது கட்சிகளுக்கும் பலம். மக்களுக்கும் பலம். அதிலும் குறிப்பாக இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல அமைப்புகளுக்குள் வராத, இப்பொழுதும் நம்பிக்கைகளோடு காத்திருக்கிற, முதிய பெற்றோருக்கு அது ஆறுதலாக அமையும்.அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் எதிர்காலத்தைக் குறித்த அவநம்பிக்கையோடு இறந்து போய்விட்டார்கள். இருப்பவர்களும் அவ்வாறு அவநம்பிக்கையோடு இறக்காமல் இருப்பதற்கு கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் குறிப்பாக காணொளி ஊடகங்களும் அவர்களை நோக்கிச் செல்ல வேண்டும். செம்மணியில் அணையா விளக்கு போராட்டக் களத்தில், சேகரித்திருக்க வேண்டிய காணொளிகள் அவைதான்.தேசத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை உணர்ந்த எல்லா ஊடகக்காரர்களும் யு டியூப்பர்களும் கிராமங்களை நோக்கி வரவேண்டும். இந்த முதிய பெற்றோரை நேர்காண வேண்டும்.அந்த கதைகளுக்கு அதிகம் வியூவர்ஸ் கிடைக்காமல் போகலாம். அந்த கதைகளை சர்ச்சைக்குரிய காணொளி உள்ளடக்கங்களாக மாற்றுவது கடினமாக இருக்கலாம். ஆனால் இந்த இடத்தில் காணொளி ஊடகங்களும் யூடியூபர்களும் ஒன்றைத் தீர்மானிக்க வேண்டும். தேசத்தைக் கட்டி எழுப்புவதா? அல்லது சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தை வலிந்து தேடுவதா? வியூவர்ஸைக் கூட்டுவதற்காக சூடான செய்தியைக் கொடுப்பதா? அல்லது தேசத்துக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதா? கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞரான ஹெர்பர்ட் மார்க்யூஸ் கூறுவார் “புள்ளி விவரங்கள் குருதி சிந்துவதில்லை” என்று. ஆம். கைது செய்யப்பட்ட பின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? சரணடைந்த பின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? யார் பிடித்தது என்று தெரியாமலே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? போன்ற எல்லா விபரங்களையும் புள்ளி விபரங்களாகவன்றி ரத்தமும் சதையுமாக,கதைகளாக வெளியே கொண்டுவர வேண்டும். அந்தக் கதைகள்தான் இரத்தம் சிந்தும்.அந்தக் கதைகள்தான் தேசத்தைத் திரட்டும்.அந்தக் கதைகள்தான் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும்.நீதிக்காகப் போராடும் தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது அவ்வாறான கதைகளை வெளியே கொண்டு வரும் ஊடகங்கள்தான்.சர்ச்சைகளை உருப் பெருக்கி பார்வையாளர்களின் தொகையைக் கூட்டும் ஊடகங்கள் அல்ல. பிரபலமானவரோடு மோதி அல்லது பிரபலமானவரின் வாயைக் கிண்டி சர்ச்சையை உருவாக்கும் ஊடகங்கள் அல்ல.தேசத்தைக் கட்டியெழுப்பும் ஊடகங்கள்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க உழைக்கும் ஊடகங்கள். https://athavannews.com/2025/1438208

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month ago
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஹோ ……. ஆண் : அடடா என்ன அழகு என்னை அழகாய் கடத்தும் அழகு அழித்தே நொறுக்கும் அழகு பிழைப்பேனா தெரியல ஆண் : கண்கள் நிலவின் அழகு அவள் கன்னம் வெயிலின் அழகு கூந்தல் மழையின் அழகு தொலைந்தேனே கிடைக்கல ஆண் : சிரிக்கிறாளோ கொஞ்சம் சிதைகிறேன் நடக்கிறாளோ பின்னால் அலைகிறேன் தெரிந்துமே ஹோ ஐயோ தொலைகிறேன் காதலின் கைகளில் விழுகிறேன் ஆண் : எதையோ சொல்ல வார்த்தை ஒன்று நான் கோர்க்கிறேன் எதிரே உன்னை பார்த்த உடனே ஏன் வேர்க்கிறேன் ஆண் : பெண்ணே உன் பார்வையாலே அலை பாய்கிறேனே ஆஹா இந்த நேரம் நானும் குடை சாய்கிறேன் ஆண் : காதோரமாய் ஊஞ்சல் கொடு காதோரமாய் ஊஞ்சல் கொடு பெண்ணே உன் கம்மல் போல் நான் ஆடுவேன் கால் ஓரமாய் சிறையில் இடு பெண்ணே உன் கொலுசாக நான் மாறுவேன் ........... ! --- அடடா என்ன அழகு ---

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

1 month ago
அத்துடன்.... மிருக வைத்தியசாலைக்கு வந்து, நோய் குணமாகாமல் இறந்த மிருகங்களையும், அடக்கம் செய்யுற செலவும் மிச்சம். கையோடை ஆட்களுக்கு கிறில் பண்ணி விற்று காசாக்கிப் போடலாம். 🤣

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 07

1 month ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 07 "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English] [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 07 / 'பண்டைய கபிலவஸ்து நகரின் சாக்கியர்கள்' கௌதம புத்தரின் பிறப்பு காரணமாக இந்த 'சாக்கியர்கள்' என்ற பழங்குடி நன்கு அறியப்படுகிறது. "சாக்கியர் (Shakya) " என்ற வார்த்தையின் சொற்பிறப்பியல் அநேகமாக சமஸ்கிருத மூலமான śak (शक् / சாக்) (śaknoti (शक्नोति), அல்லது śakyati (शक्यति) அல்லது śakyate (शक्यते)) என்பதிலிருந்து பெறப்பட்டது. அதாவது ''முடிந்தவராக, தகுதியானவராக, சாத்தியமானவராக அல்லது நடைமுறைப்படுத்தக் கூடியவராக [‘to be able, worthy, possible or practicable’]'' என்று பொருள்படும். உதாரணமாக, சமசுகிருதத்தில் சாக்கியம் என்பது ஆற்றலுடையவர் என்று பொருள் படுகிறது. பிராமணர்களை விட சத்திரியர்களின் [Kshatriyas] மேன்மை குறித்து புத்தர் பிராமண அம்பத்தருடன் விவாதித்தபோது, இவர்களுக்கான ‘சாக்கியர்’ [‘Shakya’] என்ற பெயரின் தோற்றம், அம்பத்த சுத்தத்தில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்பத்தசுத்த, சாதியின் கொள்கைகளையும் பிராமணர்களின் பாசாங்குகளையும் கண்டிக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. பழங்குடியினரின் மரபுகளின்படி, ஒக்காக்கா மன்னர் [King Okkaka], அவருக்கு விருப்பமான மற்ற ராணியின் மகன் ஜந்துகுமாருக்கு [Jantukumara] அரச அதிகாரத்தை வழங்கும் பொருட்டு, முதல் ராணி பெற்ற தனது ஒன்பது குழந்தைகளை நாட்டைவிட்டு வெளியேற்றினார். வெளியேற்றப்பட்ட குழந்தைகளில் பிரியா, சுப்ரியா, ஆனந்தா, விஜிதா, விஜிதாசேனா ஆகிய ஐந்து இளவரசிகளும் உக்கமுக, கரண்டு, ஹஸ்தினிகா, சினிசுரா ஆகிய நான்கு இளவரசர்களும் [five princesses namely Priya, Supriya, Ananda, Vijitha, Vijithasena and four princes namely Ukkamukha, Karandu, Hastinika and Sinisura.] அடங்குவர். அவர்கள் இமயமலை நோக்கிச் சென்று கபில முனிவர் தானமாக வழங்கிய நிலத்தில் கபில்வஸ்து என்ற கிராமத்தை நிறுவினர். அவர்கள் தங்களை சத்திரியர்களின் உயர்ந்த இனமாகக் கருதியதால், நான்கு இளவரசர்களும் இளவரசிகளும் தங்கள் மூத்த சகோதரி பிரியாவுக்கு தாய் பட்டத்தை அளித்து அவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், இந்த எட்டு குழந்தைகள் மற்றும் அவர்களின் சந்ததியினர், பண்டைய இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில், சாக்கியர் என்று அழைக்கப்பட்டனர் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. எனினும் இப்படியான புராணக்கதைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, வேத காலத்தின் பிற்பகுதியில் கபிலவஸ்து பகுதியில் குடியேறிய இந்தோ - ஆரியப் பழங்குடியினரை, வரலாற்றாசிரியர்கள் சத்திரியர் என கண்டறிந்தனர். புத்தரின் தாய், தேவ்தா கிராமத்தைச் [village Devdah] சேர்ந்த சத்திரியர் குலத்தைச் சேர்ந்தவர். இளவரசர் சித்தார்த்தாவை மணந்த இளவரசி யசோதரா கூட தேவ்தா கிராமத்தின் சத்திரியர் குலத்தைச் சேர்ந்தவர் ஆகும். சகோதர சகோதரிகளால் தாய் அந்தஸ்தைப் பெற்ற மூத்த சகோதரி பிரியா அல்லது சீதா தொழுநோயால் பாதிக்கப்பட்டார். சத்திரிய சகோதரர்கள் அவளைத் தங்கள் பிரதேசத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று, அவள் தங்குவதற்கு ஒரு பெரிய நிலத்தடி அறையைத் தோண்டி, அதில் நிறைய உணவு மற்றும் தண்ணீருடன் தங்க வைத்தனர். இதற்கிடையில், பெனாரஸ் [காசி அல்லது வாரணாசி] மன்னர் ராமருக்கும் தொழுநோய் ஏற்பட்டது. தன் மகனுக்கு அதிகாரத்தை கொடுத்து விட்டு காட்டிற்குச் சென்றான். காட்டு விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கோலா மரத்தின் துளைக்குள் [hollow of a Kola tree] வாழத் தொடங்கினார். ஒரு நாள், பிரியாவின் குழிக்குள் புலி நுழைய முயன்றபோது, அவள் அலறும் சத்தத்தை ராமர் கேட்டார். மறுநாள் காலை அந்த இடத்தைப் பார்க்கச் சென்ற ராமர், அதற்குள் பிரியாவைக் கண்டார். அவளைப் பற்றி விசாரித்தபோது, அவள் முழு கதையையும் சொன்னாள். ராமர் அவளைக் குணப்படுத்த முன்வந்தபோது, அவள் தன் குடும்பம், சாதி மற்றும் இனத்தை இழிவுபடுத்துவதை விட, இறப்பதை விரும்புவதாகக் கூறி மறுத்தாள். என்றாலும் ராமர் தன்னை பெனாரஸின் சத்திரிய மன்னர் என்று அறிமுகப்படுத்தினார். ராமரின் பரம்பரையை அறிந்த பிரியா ஒன்றாக வாழ சம்மதித்தார். அவள் மெதுவாக குணமடைந்தாள். இதற்கிடையில் 32 மகன்களைப் பெற்றெடுத்தாள் என்கிறது இந்தக் கதை. Part: 07 / 'Shakyas of Kapilvastu' The tribe is well known due to the birth of Gautam Buddha in the same. The etymology of the word “Shakya” is probably related to the Sanskrit word Sak which means ‘to be able, worthy, possible or practicable’. The origin of ‘Shakya’ name for them is well recorded in Ambattha Sutta when Buddha debated with Brahmin Ambattha on the superiority of Kshatriyas over Brahmins. According to Buddha, as per traditions prevalent in the tribe, King Okkaka banished his nine children from first queen to give royal power to Jantukumara, son of his favorite other queen. The expelled children included five princesses namely Priya, Supriya, Ananda, Vijitha, Vijithasena and four princes namely Ukkamukha, Karandu, Hastinika and Sinisura. They went towards Himalaya and founded the village of Kapilvastu on the land donated by sage Kapil. As they considered themselves superior races of Kshatriya, the four princes and princesses married among them after giving the title of mother to their elder sister Priya. Then onwards, eight children and their descendants were known as Sakya in the social and political circles of ancient India. Keeping legends aside, historians have traced Shakyas as a warrior Indo-Aryan tribe who migrated and settled in the region of Kapilvastu in the late Vedic period. The mother of Buddha belonged to the Shakya clan of village Devdah. Even princesses Yashodhara, married to prince Siddhartha, belonged to the Shakya clan of village Devdah. The elder sister, Priya or Sita, who was given the status of mother by rest brothers and sisters contracted leprosy. The Shakya brothers then took her out of their territory and dig a big underground room for her stay with lots of food and water stored in it. Meanwhile, King Rama of Benares also contracted leprosy. He abdicated the power to his son and left for the forest. He started living in the hollow of a Kola tree to protect himself from the wild things. One day, he heard the screams of Priya when a tiger was trying to enter her pit. Next morning, he went to see the location and found Priya inside it. When he enquired about her, she told the entire story. When Rama offered to cure her, she refused saying that she will prefer to die than to disgrace her family, caste and race. Rama then introduced himself as Kshatriya King of Benares who started living in the forest due to leprosy. Knowing Rama’s lineage, Priya agreed to live together. She was slowly cured and meanwhile gave birth to 32 sons நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 08 தொடரும் / Will Follow

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்; சூத்திரதாரியை வெளிப்படுத்துவதில் அரசாங்கம் பின்னடைவு - பாராளுமன்றில் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகும் எதிர்க்கட்சிகள்

1 month ago
06 JUL, 2025 | 09:36 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தம் பின்னடைவுகளை சந்தித்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இவ்வாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன. புதன்கிழமை (09) உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது. இந்த விவாதம் இதற்கு முன்னரும் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட போதிலும், பயங்கரவாத தாக்குதல்களின் மூளையாக செயல்பட்ட சூத்திரதாரிகள் குறித்து எந்த வெளிப்பாடுகளையும் அரசாங்கம் கூற வில்லை. எனவே புதன்கிழமை நடைபெறவுள்ள சிறப்பு விவாதத்தின் போது, உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரிகளை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தின் மீது கடும் அழுத்தத்தை பிரயோகிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னும் பின்னும், உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரிகளை நாட்டுக்கு அம்பலப்படுத்துவோம் என்று அநுரகுமார திசாநாயக்கவும் அவரது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் உறுதியளித்திருந்தனர். ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட பல சந்தர்ப்பங்களில் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக அரசாங்கம் கூறியது. குறிப்பாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியுடன் 6 ஆண்டுகள் பூர்த்தியாகியிருந்த நிலையில், அன்றைய தினம் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. எனினும் அவ்வாறு வெளிப்படுத்தப்பட வில்லை. ஆகவே பிரதான எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் எதிர்ப்பு நடவடிக்கைளில் ஈடுப்படவுள்ளது. இதேவேளை, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் திருநிலைப்படுத்தலின் 50ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நாளை திங்கட்கிழமை, பேராயர் இல்லத்தில் சிறப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்க ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219267

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டம்

1 month ago
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக மூன்று மாதங்களில் புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் - அமைச்சர் விஜித்த ஹேரத் 06 JUL, 2025 | 09:33 AM (எம்.வை.எம்.சியாம்) பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் இயக்கம் எமதாகும். இந்த சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, பாதாள உலக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டமொன்றும் அவசியமாகும். எனவே இந்த புதிய சட்டத்தை மூன்று மாதங்களில் அமைச்சரவையில் சமர்பித்து வர்த்தமானியில் வெளியிடுவது எமது இலக்காகும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அமைச்சர் விஜித்த ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 1978 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் இயக்கமே எமதாகும். இந்த சட்டத்தின் ஊடாக ஏற்படக்கூடிய ஆபத்தக்கள் தொடர்பில் நாம் நன்கறிவோம். இந்த சட்டம் நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம். இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு பொருளாதாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து இந்த சட்டம் மூலம் தொடர்பில் செயற்பட்டு வருகிறோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு தற்போது அமைச்சரவையினால் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தற்போது தொடர்ந்தும் கூடுகிறது. எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, தற்போது நாட்டில் இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் அவசியமாகும். இந்த சட்டத்தில் உள்ள சில விடயங்களை புதிய சட்டத்தில் கொண்டு வர வேண்டும். மூன்று மாதங்களில் இந்த சட்டத்தில் அமைச்சரவையில் சமர்பித்து வர்த்தமானியில் வெளியிடுவது எமது இலக்காகும். ஆகஸ்ட் மாத இறுதிப் பகுதி அல்லது செப்டம்பர் மாத ஆரம்பகுதியில் இந்த செயற்பாடுகளை நிறைவு செய்து வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/219266

வடக்கு மாகாணத்தில் 1756 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் - ஜெகதீஸ்வரன் எம்.பி.

1 month ago
05 JUL, 2025 | 07:45 PM புதிய சுற்று நிருபத்தில் 1756 பட்டதாரி ஆசிரியர்கள் வடக்கு மாணத்தில் உள்வாங்கப்படவுள்ளனர். அவர்களுக்கான போட்டிப் பரீட்சையின் போது மாவட்ட ரீதியில் தேவைக்கு ஏற்ப வெட்டுப் புள்ளிகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் உலக வங்கி பிரதிநிதிகளுடன் வடக்கு மாகாண ஆளுனர் தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. அந்த கூட்டத்தில் எங்களது அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஒரு பில்லியன் டொலர் நிதி உதவி வடக்கு - கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு ஒதுக்கப்படவுள்ளது. அந்தவகையில் இதனூடாக வடக்கு - கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற மக்களது பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது, கிராமிய பொருளாதார நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்தல், வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் போன்ற செயற்பாடுகளை செய்ய இருக்கின்றோம். அதுமட்டுமல்லாது வவுனியா மாவட்டத்தைப் பொறுத்த வரையில் நீண்டகாலமாக குளங்கள், புனரமைக்கப்படாமலும், தூர் வாராமலும், பழுதடைந்தும் காணப்படுகின்றது. இதனை திருத்தியமைக்க வேண்டிய நிலைப்பாடு உள்ளது. விசேடமாக இந்த நிதியத்தின் மூலம் இதை செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகன்றது. விவசாயத்திலும் நெற்பயிற்செய்கை பிரதான இடத்தை பெறுகின்றது. சிறுபோக நெற் செய்கைக்கு மக்கள் அவதிப்படுகின்ற நிலை காணப்படுகின்றது. சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளும் நிலத்தின் அளவு குறைவாகவுள்ளது. அதற்கு குளத்து நீர் போதாமை காரணமாகும். குளங்கள் புனரமைப்பு செய்வதன் மூலம் சிறுபோக நெற் செய்கையை அதிகரிக்க முடியும். விவசாயிகள் பொருளாதாரத்தில் மட்டுமன்றி எமது பிரதேச அரிசி தேவையையும் பூர்த்தி செய்ய முடியும். கிராமிய வீதிகளையும் புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இது தவிர, கல்வியில் இடமாற்றங்கள் பூதாகரப் பிரசசனையாகவுள்ளது. வடமாகாணத்தில் இடம்பெற்ற வலயங்களுக்கு இடையிலான இடமாற்றத்தில் மடு, வவுனியா வடக்கு, மன்னார், துணுக்காய் போன்ற வலயங்களில் இருந்து செல்ல வேணடிய ஆசிரியர்களில் 99 வீதமானவர்கள் இடமாற்றத்தை ஏற்று விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அதேவேளை, அந்த வலயங்களுக்கு வரவேண்டிய ஆசிரியர்கள் முழுமையாக வருகை தரவில்லை. மடு வலயத்தில் 29 ஆசிரியர்கள் வேறு வலயங்களுக்கு இடமாற்றமாகி சென்றுள்ளார்கள். 4 ஆசிரியர்கள் மட்டுமே வந்துள்ளார்கள். இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றங்களை மேற்கொள்ளும் போது மாகாண கல்வித் திணைககளம் கரிசனையோடு கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது இடமாற்றம் சிலவற்றில பிழைகள் இருக்கிறது. தெரிவுகளில் தவறுகள் உள்ளது. எதிர்வரும் காலத்தில் துல்லியமான தகவல்களப் பெற்று ஆசிரியர்களுக்கு அநீதி இடம்பெறாத வகையில் இடமாற்றம் வழங்க வேண்டும். வடக்கு மாகாணத்தில் 3517 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. அரசாங்கத்தின் சுற்று நிருபம் மூலம் பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த சுற்று நிருபத்தில் பல பிழைகள் உள்ளது. அதில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதனால் பட்டதாரிகளின் வேண்டு கோளுக்கு இணங்க அந்த சுற்று நிருபம் நிறுத்தப்பட்டுளது. புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சுற்று நிருபத்தில் 1756 ஆசிரியர்கள் வடக்கு மாணத்தில் உள்வாங்கப்படவுள்ளனர். பற்றாக்குறையில் 50 வீதம் உள்வாங்கப்படவுள்ளார்கள். இதன் மூலம் கணிசமான ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க முடியும். ஆனாலும் அதில் ஒரு தடை உள்ளது. ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கையும் விரைவாக முடித்து இந்த வருடத்திற்குள் ஆசிரிய நியமனத்தை வழங்க எண்ணியுள்ளோம். பொதுவான வெட்டுப் புள்ளியை நிறுத்தி மாவட்டத்திற்கு தனித் தனியான வெட்டுப் புள்ளிகளை வழங்கி மாவட்டத்திற்கு தேவையான ஆசிரியர்களை உள்வாங்குவதன் மூலம் இடமாற்றப் பிரச்சனையையும் தீர்க்க முடியும். இது தொடர்பில் ஆளுனருடன் பேசியுள்ளோம். எம்மைப் பொறுத்தவரை வடக்கு மாகாணம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. எமது காலத்தில் அதனை ஏனைய மாகாணங்களை போல முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதை நோக்கி எமது பயணம் இருக்கிறது. எமக்கு கட்சி பேதம் கிடையாது. உள்ளூராட்சி மன்றங்களில பல்வேறு கட்சிகள் ஆடசி அமைத்துள்ளன. அவை எம்மோடு இணைந்து பணியாற்றினால் வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப முடியும். அரசியலுக்கு அப்பால் நாம் செயற்பட தயராகவுள்ளோம் அதற்கு அவர்களது ஒத்துழைப்பையும் கேட்டு நிற்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/219248

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

1 month ago
சாதனைமேல் சாதனை படைத்த சுப்மன் கில், பிராட்மேனை முந்த வாய்ப்பு - வெற்றியை நோக்கி இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிமிங்ஹாமில் நடந்து வரும் 2வதுடெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 608 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 427 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இந்த இன்னிங்சிலும் கேப்டன் கில் அபாரமாக ஆடி சதம் அடித்தார். சாதனைமேல் சாதனை படைத்த கில், கிரிக்கெட் பிதாமகன் என்று வர்ணிக்கப்படும் டான் பிராட்மேனின் சாதனையை தகர்க்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இமாலய இலக்குடன் களம் புகுந்த இங்கிலாந்து அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களுடன் போராடி வருகிறது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற 536 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணிக்கு கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்கின்றன. ஹேரி ப்ரூக் 15 ரன்களுடனும், போப் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். கருண் நாயருக்கு 'செக்' வைத்த ஸ்டோக்ஸ் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பிரிமிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களும், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 407 ரன்களும் எடுத்தன. இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 3வது நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்களுடன் இருந்தது. கருண் நாயர்(7), ராகுல் 28) ரன்களுடன் 4வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். கருண் நாயர் பவுன்ஸருக்கும், பேக்ஆஃப் லென்த் பந்துக்கும் சிரமப்படுகிறார், அதுபோன்ற பந்துகளை வீசும்போது ஷாட்களை ஆடவும், டிபென்ஸ் செய்யவும் திணறுகிறார் என்பதை இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் தெரிந்து கொண்டார். கருண் நாயருக்கு கட்டம் கட்டிய ஸ்டோக்ஸ், கார்ஸ், டங் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் பவுன்ஸர்களை கருண் நாயருக்கு வீசச் செய்தார். கருண் நாயருக்கு தொடர்ந்து பவுன்ஸர் நெருக்கடியை அளித்து ஒரு கட்டத்தில் கார்ஸ் பந்துவீ்ச்சில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து 26 ரன்னில் கருண் வெளியேறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ராகுல் கிளீன் போல்ட் அடுத்து கேப்டன் கில் களமிறங்கி, ராகுலுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். ராகுல் பொறுமையாக ஆடி அரைசதம் அடித்து 55 ரன்களில் டங்க் பந்துவீச்சில் கிளீஙன போல்டானார். டங்க் வீசிய இந்த பந்து அற்புதமானது, பேட்டர் விளையாட முடியாத அளவில் திடீரென இன் ஸ்விங்காகியதால், ராகுலால் சமாளிக்க முடியாமல் போல்டாகினார். அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கி, கில்லுடன் இணைந்தார். உணவு இடைவேளைக்கு செல்லும் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்ள் சேர்த்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ரிஷப் பந்த் அதிரடி 2வது செஷன் தொடங்கியதிலிருந்து ரிஷப் பந்த், கில் இருவரும் வேகமாக ரன்களைச் சேர்த்தனர். அதிலும் ரிஷப் பந்த் டி20 போட்டியைப் போன்று பேட் செய்யத் தொடங்கி, பவுண்டரி, சிக்ஸர்களாக பறக்கவிட்டு 48 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுப்மான் கில் 57 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். டங்க் பந்துவீச்சில் விளாசிய கில் தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசி அரைசதத்தை எட்டினார். ரிஷப் பந்த் பெரிய ஷாட்களை ஆடுவதைப் பார்த்த கேப்டன் ஸ்டோக்ஸ் சுழற்பந்துவீச்சாளர் பஷீருக்கு அதிக ஓவர்களை வழங்கினார். அவர் கணித்தபடியே, பஷீர் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முயன்ற ரிஷப் பந்த் லாங்ஆன் திசையில் டக்கெட்டிடம் கேட்ச் கொடுத்து 65 ரன்னில் (3 சிக்ஸர், 8பவுண்டரி) வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு கில், ரிஷப் கூட்டணி 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES கில் இரண்டாவது சதம் அடுத்து ஜடேஜா களமிறங்கி, கில்லுடன் சேர்ந்தார். கில் வேகமாக ரன்களைச் சேர்க்கவே, மாலை தேநீர் இடைவேளைக்கு முன்பாக 129 பந்துகளில் சதத்தை எட்டினார். தேநீர் இடைவேளைக்குப்பின் வோக்ஸ் வீசிய பந்தில் கில் சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசி ரன் வேகத்தை அதிகப்படுத்தினார். ஜடேஜாவும் அதிரடிக்கு மாறத் தொடங்கி, வேகமாக ரன்களை சேர்த்தார். பஷீர் வீசிய பந்தில் சிக்ஸர் விளாசி தனது ஸ்கோரை உயர்த்தி 94 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுப்மான் கில்லின் அதிரடி ஆட்டத்தால் 156 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். 129 பந்துகளில் சதம் அடித்த கில் அடுத்த 27 பந்துகளில் 50 ரன்களை அதிரடியாகச் சேர்த்தார். இந்திய அணி 400 ரன்களை எட்டிய நிலையில் கில் 161 ரன்களில் பஷீர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். கில் கணக்கில் 8 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கும். நிதிஷ் குமார் ரெட்டி இந்த இன்னிங்ஸிலும் ஒரு ரன்னில் ரூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னிலும்,ஜடேஜா 69 ரன்னில் இருந்த போது, அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 427 ரன்களை எட்டியது. அப்போது இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES முதல்முறையாக 1000 ரன்கள் இந்த டெஸ்டில் இந்திய அணி இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 1014 ரன்கள் சேர்த்து, உலகளவில் டெஸ்டில் 4வது இடத்தைப் பெற்றுள்ளது. ஒரு டெஸ்டில் ஆயிரம் ரன்களை எட்டுவதும், கடப்பதும் இந்திய அணிக்கு இது முதல்முறையாகும். உலகளவில் டெஸ்டில் 6வது முறையாக டெஸ்டில் ஒரு அணி 1000 ரன்களைக் கடந்தது. இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரும் இதுதான். இதற்கு முன் 2004ல் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 916 ரன்கள் குவித்ததுதான் இந்திய அணியின் அதிகபட்ச ரன்களாக இருந்தது. 2வது இன்னிங்ஸில் இந்திய அணி மாபெரும் ஸ்கோரை எட்டுவதற்கு கேப்டன் சுப்மான் கில் தொடர்ந்து 2வது இன்னிங்ஸிலும் சதம் அடித்து 158 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இது தவிர ரிஷப் பந்த்(65), ராகுல்(55) ஜடேஜா ஆட்டமிழக்காமல் 69 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு உதவினர். ஆகாஷ் அசத்தல் 608 ரன் என்ற இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லியை முகமது சிராஜ் டக்அவுட் ஆக்கினார். மறுபுறம் அதிரடி காட்டிய பென் டக்கெட் 15 பந்துகளில் 25 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். இதனால், 30 ரன்களிலேயே இங்கிலாந்து ஆணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இக்கட்டான நிலையில் இருந்த இங்கிலாந்து அணி பெரிதும் நம்பியிருந்த நட்சத்திர வீரர் ஜோ ரூட் ஏமாற்றினார். வெறும் 6 ரன்களில் அவரை ஆகாஷ்தீப் கிளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அதிலும் பென் டக்கெட், ரூட்டை போல்டாக்கிய ஆகாஷ் தீப் வீசிய பந்து அற்புதத்திலும் அருமையான பந்துவீச்சாகும். ஒரு சாதாரன பேட்டரால் விளையாட முடியாத வகையில் வீசப்பட்ட ஆகச்சிறந்த பந்துவீச்சாக இருந்தது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களை எடுத்துள்ளது. ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பிரசித் கிருஷ்ணா விக்கெட் எடுக்காவிட்டாலும் சரியான அளவில் கட்டுக்கோப்பாக பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களை திணறடித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES மதில்மேல் பூனையாக இங்கிலாந்து இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை மதில்மேல் நிற்கும் பூனையாக இருக்கிறது. வெற்றிக்கு இன்னும் 536 ரன்கள் தேவைப்படும் நிலையில் அதை அடைவது என்பது கடினமான இலக்காக இருக்கும். இதில் களத்தில் இருக்கும் ஆலி போப், ஹேரி ப்ரூக்கைத் தவிர்த்து கேப்டன் ஸ்டோக்ஸ், ஸ்மித் இருவர் மட்டுமே பேட்டர்கள். இங்கிலாந்து அணி இன்னும் 2 விக்கெட்டுகளை இழந்தாலே தோல்வியின் பக்கம் தள்ளப்பட்டுவிடும். பாஸ்பால் உத்தியைக் கையாண்டு பல வெற்றிகளைப் பெற்றுவரும் இங்கிலாந்து அணி, கடந்த 3 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் போட்டியை மட்டுமே அதுவும் கடைசி நாளில் மழை காரணமாக, டிரா செய்தது. பெரும்பாலும் அதிரடியாக சேஸ் செய்வது அல்லது விக்கெட்டுகளை இழந்து தோற்பது என்ற ரீதியில்தான் இங்கிலாந்து அணி விளையாடி வந்துள்ளது. ஆதலால், இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்டர்கள் வெற்றிக்காக முயல்வார்களா அல்லது டிரா செய்யும் நோக்கில் ஆட்டத்தை கொண்டு செல்லப் போகிறார்களா என்பது தெரியவில்லை. கடைசி நாளில் ஆடுகளத்தில் பிளவுகள், வெடிப்புகள் அதிகமாகும். இதனால் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சில் எதிர்பாராத பவுன்ஸர்கள், ஸ்விங்குகள் வெடிப்புகளில் பந்துபட்டவுடன் எகிறும் என்பதால், பேட்டர்கள் பேட் செய்வது கடினமாக இருக்கும், ரன் சேர்ப்பதில் கவனம் செலுத்துவதைவிட விக்கெட்டுகளை காப்பாற்றவே முயற்சிக்கலாம். இல்லாவிட்டால் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழக்க நேரிடும். பட மூலாதாரம்,GETTY IMAGES கில் சாதனைமேல் சாதனை - பிராட்மேன் முந்துவாரா? இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றபின் சுப்மான் கில்லின் ஆட்டத்தில் முதிர்ச்சி தெரிகிறது. இங்கிலாந்து தொடருக்கு வருவதற்கு முன் கில்லின் டெஸ்ட் சராசரி 35 ரன்களாக இருந்தது. ஆனால், முதல் டெஸ்டில் அடித்த சதம், 2வது டெஸ்டில் இரட்டை சதம், 150 ரன்களுக்கு மேல் குவித்ததைத் தொடர்ந்து கில்லின் டெஸ்ட் சராசரி 42 ரன்களாக உயர்ந்துவிட்டது. டெஸ்ட் வரலாற்றில் ஒரே டெஸ்டில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற கவாஸ்கரின் 54 ஆண்டு கால சாதனையை கில் முறியடித்துள்ளார். 1971-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற டெஸ்டில் கவாஸ்கர் 344 ரன்களை குவித்திருந்தார். தற்போது இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 430 ரன்களை சேர்த்ததன் மூலம் கவாஸ்கர் சாதனையை கில் தகர்த்துள்ளார். அது மட்டுமல்லாமல் டெஸ்ட் வரலாற்றில் ஒரு டெஸ்டில் அதிக ரன்களைக் குவித்த 2வது வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். ஒரு டெஸ்டில் 430 ரன்களுடன் சுப்மான் கில் 2வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் கூச் 456 ரன்களுடன் உள்ளார். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் வரலாற்றில் ஒரு டெஸ்டில் தொடர்ந்து இரு 150 ரன்களைக் கடந்த 2வது வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். இதற்கு முன் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் லாகூரில் பாகிஸ்தானுக்கு எதிராக 1980ம் ஆண்டில் ஒரு டெஸ்டில் இரு 150 ரன்களை அடித்திருந்தார். மேலும் ஒரு டெஸ்டில் இரட்டை மற்றும் சதம் அடித்த உலகளவில் 9 பேட்டர்களில் ஒருவராகவும், இந்திய அளவில் சுனில் கவாஸ்கருக்கு அடுத்தார்போல் கில் இடம் பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அளவில் கேப்டன் பொறுப்பேற்று தொடர்ந்து இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தவர்களில் இதற்கு முன் சுனில் கவாஸ்கர், விராட் கோலி ஆகியோர் மட்டுமே இருந்த நிலையில் அந்தப் பட்டியலில் இப்போது கில்லும் இணைந்துவிட்டார். இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த வீரர்களில் ரிஷப் பந்த்துக்கு அடுத்தார்போல் கில்லும் இணைந்தார். முதல் இன்னிங்ஸில் கில், ஜடேஜா கூட்டணி 200 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து, 2வது இன்னிங்ஸலும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் மூலம் ஒரு டெஸ்டில் இரட்டை சதம், சதம் பார்ட்னர்ஷிப் அமைத்த ஒரே ஜோடி என்ற பெருமையை கில், ஜடேஜா பெற்றனர். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 4 சதம் பார்ட்னர்ஷிப்பை இந்தியா எட்டியுள்ளதில் அனைத்திலும் கில்லின் பங்களிப்பு இருக்கிறது. ஒரு டெஸ்டில் 4 சதம் பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்களில் இந்திய அளவில் முதல் பேட்டராகவும், உலகளவில் 5வது பேட்டராகவும் கில் இருக்கிறார். இதற்கு முன் ஹனிப் முகமது, கிரஹாம் கூச், மார்க் டெய்லர், ஜோ ரூட் ஆகியோர் இதுபோன்று 4 சதங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவியிருந்தனர். சுப்மான் கில் இங்கிலாந்து தொடரில் இரு டெஸ்ட்களிலும் சேர்த்து 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 585 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் ஒரே தொடரில் 974 ரன்களைக் குவித்ததே சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு தொடரில் வீரர் ஒருவர் குவித்த அதிகபட்ச ரன்களாக நீடிக்கிறது. இந்த தொடரில் இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியிருப்பதால் அதனை முறியடிக்க சுப்மன் கில்லுக்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் அடித்த 3வது சதமாகவும், ஒட்டுமொத்தத்தில் கில்லுக்கு 8-வது டெஸ்ட் சதமாகவும் அமைந்தது. 4வது நாள் ஆட்டத்தில் கில் சேர்த்த ரன்களில் பெரும்பகுதி இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் வந்தது. 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்திடாத சாதனையை கில் படைத்துளளார். ஒரே டெஸ்டில் இரட்டை சதமும், 150 ரன்களும் சேர்த்த ஒரே வீரர் என்ற பெருமைக்கு சுப்மன் கில் சொந்தக்காரராகியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx20l0zj4g3o

16 வயதுக்குட்பட்ட பெண்பிள்ளையுடன் பாலியல் உறவு சட்டத்துக்கு முரணானது; 10 வருட கால சிறைத்தண்டனைக்கு இடமுண்டு - நீதிபதி ரங்க திசாநாயக்க

1 month ago
06 JUL, 2025 | 11:05 AM (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் தற்போதுள்ள சட்டத்துக்கு அமைய 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளை விரும்பியோ விரும்பாமலோ பாலியல் உடலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் துஷ்பிரயோகமாகவே கருதப்படும். இதற்காக 10 வருட கால சிறைத்தண்டனையும் விதிக்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருமான ரங்க திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் பிரஜை ஒருவர் சுதந்திரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்வதற்கு போதுமான அனைத்து சட்டங்களும் உள்ளன. நான் கடந்த 20 வருடங்களாக நீதிபதியாக கடமையாற்றினேன். இந்த புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னரே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டேன். எனது தொழில் துறை அனுபவத்தை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது நாட்டில் உள்ள சட்டங்கள் தொடர்பில் பொதுமக்களிடத்தில் போதுமான அறிவில்லை. உதாரணமாக நாட்டில் தற்போதுள்ள சட்டத்துக்கு அமைய 16 வயதுக்கு கீழ் உள்ள பெண் பிள்ளை விரும்பியோ விரும்பாமலோ பாலியல் உடலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் துஷ்பிரயோகமே கருதப்படும். உதாரணமாக 17 அல்லது 18 வயதுடைய ஆண் பிள்ளை 15 வயதுடைய பெண் பிள்ளையுடன் நெருங்கி பழக்கம் கொள்வதாக நினைத்து கொள்வோம். இந்த காலப்பகுதியில் இயற்கையாகவே அவர்களது உடல் ரீதியாக மாற்றங்கள் ஏற்படும். இதனால் அவர்கள் சில சந்தர்ப்பத்தில் பாலியல் உடலுறவில் ஈடுபடலாம். ஒருவேளை இது இருவரின் விரும்பத்தின் பேரிலேயே இடம்பெற்று இருக்கலாம். விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் உடல் உறவில் ஈடுபட்டாலும் அது பாலியல் துஷ்பிரயோகமாகும் என எமது நாட்டில் உள்ள சட்டம் சொல்கிறது. இதற்காக 10 வருட கால சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். எமது பிள்ளைகள் அதிகம் இந்திய சினிமாவின் ஹிந்தி திரைப்படங்களையே பார்க்கிறார்கள். இவர்கள் காதலிக்கும் பெண் பிள்ளையை கூட்டிக்கொண்டு ஓடுவதை வீரமாக கருதுகிறார்கள். பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் போது அவர்களிடத்தில் இந்த சட்டம் தொடர்பில் வினவுவேன். ஆனால் அவர்கள் தெரியாது எனக் கூறுவார்கள். அப்போதே அது தவறு என விளங்கிக் கொள்வார்கள். சட்டம் தொடர்பில் தெளிவின்மையே இதற்கான காரணம். விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாக நடப்பதை மாத்திரமே இங்கு தவறு என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த விடயம் பிள்ளைகளுக்கு பாடசாலை மட்டத்தில் இருந்து தெளிவுப்படுத்தப்பட வேண்டும். தண்டனை வழங்குவதற்காக மாத்திரம் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது அல்ல. 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகள் வயது வந்த ஆண்களினால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவதை தடுப்பதற்காகவே இந்த சட்டம் உருவாக்கப்பட்டது என்றார். https://www.virakesari.lk/article/219277

அமெரிக்காவின் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் எலான் மஸ்கின் புதிய கட்சி!

1 month ago
அமெரிக்காவின் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் எலான் மஸ்கின் புதிய கட்சி! உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். ஜனநாயக மற்றும் குடியரசு எனும் இருகட்சி முறைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் ‘America Party’ எனும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்ததாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். தேசிய அளவில் பரவலான வேட்பாளர்களை நிறுத்துவதற்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய இடங்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கட்சி, 2 அல்லது 3 செனட் இடங்கள் மற்றும் 8 முதல் 10 ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை மாவட்டங்களில் மாத்திரமே கவனம் செலுத்தும் என அவர் கூறியுள்ளார். கட்சியின் நிர்வாகம், வேட்பாளர்கள், நிதி விபரங்கள் உள்ளிட்டவை இன்னும் வெளியிடப்படவில்லை எனவும், 2026 ஆம் ஆண்டு தேர்தல்களை இலக்குவைத்து இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடனான கருத்து வேறுபாட்டையடுத்து அவர் புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். https://athavannews.com/2025/1438211

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month ago
மனிதர்களுடையது என்பது பெரும்பாலும் உறுதி தான், ஆனால் யாருடையது என்பது மிகச் சிக்கலான கேள்வி? டிஎன்ஏ பரிசோதனைகள் மூலமே அடையாளம் காணலாம் என நினைக்கிறேன்.

சிறையில் இருக்கும் உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் ! குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள்!

1 month ago
சிறையில் இருக்கும் உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் ! குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள்! சிறைகளுக்குள் கொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்(5) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் அழைப்பு விடுத்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை, ஜனநாயக சோசலிச குடியரசு எனும் பெயரை தாங்கி நிற்கிறது. ஆனாலும் இந்த ஜனநாயக சோசலிசம் வெளிப்படுத்தும் விழுமியங்களுக்கு மாறாக ஒடுக்கும் அரசாகவே இவ்அரசு பரிணமித்துள்ளது. இந்த அரசினது இரும்புச் சிறைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த எமது உறவுகளான தமிழ் அரசியல் கைதிகளை உணர்வுபூர்வமாய் மனங்கொள்ள வேண்டியது தமிழ் மக்களாகிய நம் ஒவ்வொருவரதும் கடமையாகும். அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நாம் மறந்து விடலாகாது. நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெவ்வேறு காலப்பகுதிகளில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான எமது உறவுகளை நினைவேந்துவதுடன், 30 ஆண்டுகள் கடந்தும் விடுதலை இன்றி இன்றுவரை சிறைக்கூடங்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் சுதந்திர விடியலுக்காக கரம் கோர்த்து குரலுயர்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். ‘ஜூலைக் கலவரத்தின் சிறைப்படுகொலை நாளான ஜூலை 25ம் திகதியை முன்னிறுத்தி, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான உணர்வுபூர்வமான போராட்டத்தை முனைப்புடன் முன்னெடுக்க குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு சகல தமிழ் சமூகங்களிடமும் அழைப்பு விடுக்கின்றது. எதிர்வருகின்ற, 24 மற்றும் 25ஆம் திகதிகளில், யாழ்ப்பாணம் கிட்டு பூங்கா சுற்றயலில் இடம்பெறும் இந்த நினைவேந்தல் செயற்பாட்டில் சமூக உணர்வு கொண்ட அனைத்துத் தரப்பினரும் தவறாது பங்கேற்று, ” ஒன்றிணைந்து குரல்களை உயர்த்தி உறவுகளின் விடுதலைக்கு அணி திரண்டு வலுச் சேர்ப்போம் என தெரிவித்தார். https://athavannews.com/2025/1438158

ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளத்தை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! ரவிகரன் வலியுறுத்து!

1 month ago
ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளத்தை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! ரவிகரன் வலியுறுத்து! முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள ஏகம்பைக்குளத்தையும், பிராமணகுளத்தையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். குறித்த குளங்கள் இரண்டும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தநிலையில், தற்போது அப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவருகின்றனர் இந்நிலையில் குறித்த பகுதியை வனவளத்திணைக்களத்தினர் ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையிலேயே குறித்த குளங்களை விடுவிப்புச்செய்து மக்களின் விவசாய பயன்பாட்டிற்கு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இது தொடர்பில் கருத்து தெரிவித்த , கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியுள்ளபோதும், இராணுவ முகாம் முற்றாக அங்கிருந்து அகற்றப்படவில்லை எனவும் இராணுவம் விடுக்கின்ற இந்தப்பகுதியை வனவளத் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுப் பகுதியாக எடுத்துக்கொண்டு பின்னர் அப்பகுதியிலிருந்து இராணுவ முகாம் முற்றாக அகற்றப்பட்ட பின்னர் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் ஊடாக குறித்த குளங்களுக்குரிய பகுதிகளை அளவீடுசெய்து எல்லைகளை வரையறுத்து வனவளத் திணைக்களத்திடமிருந்து குளங்களுக்குரிய பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார். இந்நிலையில் எவ்வாறாயினும் மக்கள் விவசாயத்திற்காக பயன்படுத்துகின்ற இக்குளங்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் வலியுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438189

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month ago
செம்மணியில் இதுவரை 45 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்பு! செம்மணியில் நேற்றைய தினம் (05) மேலும் 3 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் பத்தாம் நாள் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது மேலும் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 45 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூட்டு தொகுதியில் இதுவரையில் நேற்றைய தினம் 05 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரையில் 42 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை செய்மதி படங்களின் அடிப்படையில் மேலும் மனித புதைகுழி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிரிதொரு இடத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வு அகழ்வு பணியில் மனித என்பு சிதிலங்கள் என சந்தேகிக்கப்படும் சில சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மண்டையோடு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1438205

வெளிநாட்டினர் செலுத்திய வரியை திருப்பிச் செலுத்த நடவடிக்கை!

1 month ago
வெளிநாட்டினர் செலுத்திய வரியை திருப்பிச் செலுத்த நடவடிக்கை! வெளிநாட்டினர் செலுத்திய வரியை திருப்பிச் செலுத்துவதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கருமபீடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த ஆகியோரின் தலைமையில் திறக்கப்பட்டது. தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் கைத்தொழில் அமைச்சு ஜனாதிபதியிடம் முன்வைத்த முன்மொழிவைத் தொடர்ந்து இத் திட்டம் நிறுவப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும் பெறுமதி சேர் வரியை திரும்ப வழங்குவதே இதன் நோக்கமாகும். அதன்படி, 50,000 ரூபாவுக்கும் அதிகமான VAT வரியை செலுத்தி, 90 நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள், இந்த கரும பீடம் மூலம் செலுத்திய VAT வரியைப் பெற முடியும். சுற்றுலாப் பயணிகள் இலங்கைப் பொருட்களை வாங்குவதை ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையில் வரி அறவிடுவதை நெறிப்படுத்துவதற்காகவும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1438184

செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

1 month ago
செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்! யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழர் மக்கள் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நேற்று (5) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ந்து இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு முதல் இப்போது உள்ள ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு வரை எந்தவித கண்டன குரல் எழுப்பி, உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருந்து வருவதாக குற்றம் சாட்டினர். தொடர்ந்து, இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் இந்திய அரசு வழக்கம் போல கள்ள மௌனம் காக்காமல் பன்னாட்டு விசாரணை நடத்த குரல் கொடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தமிழக மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கண்டன கோஷங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி, தமிழர் மக்கள் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1438186
Checked
Sat, 08/09/2025 - 03:52
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed