1 month ago
ஆரம்பத்தில் இருந்தே விஜய் ஒரு அரசியல் கட்சி தலைவர் போல் நடந்து கொள்ளவில்லை. வெறும் பஞ்ச் டயலாக்கள், வெற்று சுலோகங்கள் என தனது திரைப்பட ஹீரோயிசத்தை மட்டுமே காட்டினார். தனது திரை ரசிகர்களை வைத்து திரைப்பாணியில் தனக்கு விசிலடிக்கும் கூட்டத்தை கட்டியமைக்கவே தனது சக்தி முழுவதையும் செலவிட்டார். அவரது கட்சி மகாநாடுகள், கூட்டங்கள் அவரது திருப்படம் வெளியாகும் வேளை திரையரங்குகள் எப்படி ரசிக பட்டாளங்களின் கும்மாளம் இருக்குமோ அப்படியே இருந்தன. அதன் விளைவே இந்த அனர்ததம். ஐரோப்பிய நாடாக இருந்திருந்தால் விஜய் மற்றும் கூட்ட ஒழுங்கமைப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படிருக்கும். விஜய் இவ்வேளை கைது செய்யப்பட்டிருப்பார். விஜய் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது அல்லது மென் நடவடிக்கை என்பது இந்திய தேர்தல் அரசியல் பலவீனங்களில் ஒன்று. எல்லா கட்சிகளும் இந்த விடயத்தில் எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் தமது அரசியல் அஜெண்டாவுக்காக இது உபயோகின்றனரேயொழிய, பொறுப்புணர்வு அற்று செயற்பட்டு இத்தனை உயிர் இழப்புக்கு காரணமான விஜய் மீது நேர்மையான கடுமையான சட்ட நடவடிக்கைக்கு தயக்கம் கொள்கின்றனர். மத்திய மாநில அரசுகள் தமது குறுகிய அரசியலை ஒதுக்கி விட்டு இணைந்து விஜய் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஒன்றில் விஜய பொறுப்பான அரசியல் தலைவராக அரசியல் செய்ய வேண்டும் இல்லையெனில் மார்கெட் இருக்கும் வரை தனது ரசிகர்களை மகிழ்விக்க படங்களில் நடிக்க வேண்டும்.
1 month ago
என்ன பையன் ஐயா இவன் . ....... என்னால் ஒரு இருபது பாஷைகளின் பெயர்கள் கூட சொல்லத் தெரியாது .......! 😗
1 month ago
இந்திய பிரதமர் நரேந்திரமோடி கூட இந்த லண்டன் காந்தி சிலையை சேதப்படுத்துவதில் பின்னணியில் இருக்கலாம் மோடி rss இயக்கத்தின் நீண்ட கால விசுவாசி . நாதுராம் விநாயக் கோட்சே rss இயக்கத்தில் இருந்து கடைசி வரை விலகவேயில்லை ஆதாரம் https://www.bbc.com/tamil/india-60108094
1 month ago
1 month ago
நிம்மதியாய் நீரருந்தக்கூட முடியாத காட்டு வாழ்க்கை .......... ஒருவாய் நீரருந்தும் போது கூட எவ்வளவு உசாராய் இருக்க வேண்டி இருக்கு ........! 😗
1 month ago
இரண்டு டிரோன் இங்கிலாந்து பக்கமும் பறந்தால் தங்க விலை யும் சேர்ந்தே பறக்கும் . போனமாதம் காஸ்ட்கோ தங்க விலைக்கு இந்தமாத தங்க விலை வித்தியாசம் 11௦௦ பவுன் கூடியுள்ளது . us டொலரில் நம்பிக்கை இன்மை இன்னும் போக போக விலை அதிகரிக்கும் என்கிறார்கள் .
1 month ago
தாழ்த்தப்பட்ட சாதி என்று அந்தச் சாதியின் பெண்ணைத் துகிலுரிந்து ரசித்தார்கள். அவர்கள் குடியிருப்புகளைக் கொளுத்தி அட்டகாசம் செய்தார்கள். பாலகர்கள், வயதிபர்கள் என்று பாராமல் இலங்கையில் அரசே இலச்சக்கணக்கில் தமிழரைக் கொலை செய்தது. இதன்போதெல்லாம் ஊடகங்கள், மக்கள் பதிவுகள், கள உறவுகளிடம் இருந்து கூட பெருமளவான ஆட்சேபனைகள் வந்ததில்லை. ஆனால் ஒரு தமிழ் நடிகன், தமிழினம் வெற்றிகொள்ள ஒரு கட்சியைத் தொடங்கியதும் அதற்கு மக்கள் ஆதரவு பெருகுவதையம் பொறுக்கமுடியாத தமிழ்தோல் போர்த்தி தமிழர்களை ஆட்சி செய்யும் வேற்றினத் தலைவர்களின் எடுபிடித் துறைகளின் கூற்றுகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து அளவற்ற பதிவுகளும், ஊட்டங்களும் இடுவது ஏற்புடையதல்ல. மக்களைப் பாதுகாக்கத் திறன் அற்ற இன்றைய அரசின் ஆட்சியாளர்களே இந்த அவலத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். நன்னெறிகளைப் படித்த தமிழராகிய நாங்களும் போட்டி, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, ம-பொ-சி மாமியார்கள் என்று இல்லாது வாழ்ந்து வாழ்க்கையை இனிதாக்கி வாழ வேண்டும்.🙏
1 month ago
1 month ago
தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா! ஆசிய வர்த்தகத்தில் தங்கத்தின் விலையானது செவ்வாய்க்கிழமை (30) புதிய சாதனை உச்சத்தை எட்டியது. அமெரிக்க அரசாங்க முடக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் மற்றும் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகளின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகள் பாதுகாப்பான புகலிட உலோகத்திற்கான தேவையை அதிகரித்தன. அதன்படி, ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,865.73 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் தங்க எதிர்காலம் ஒரு அவுன்ஸ் 3.893.72 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியது. மூன்றாம் காலாண்டில் மஞ்சள் உலோகத்தின் விலை சுமார் 17% சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏனெனில் பல காரணிகள் மஞ்சள் உலோகத்தின் விலை உயர்வுக்கு செல்வாக்கு செலுத்துகின்றன. அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் அரசாங்க முடக்கத்தைத் தவிர்க்க முடியாது என்ற நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், தங்கத்திற்கான தேவை இந்த வாரம் அதிகரித்துள்ளது. செலவு சட்டமூல நிறைவேற்றவும் நூற்றுக்கணக்கான கூட்டாட்சி நிறுவனங்கள் மூடப்படுவதைத் தவிர்க்கவும் செப்டம்பர் 30 (புதன்கிழமை 0400 GMT) நள்ளிரவு வரை காங்கிரஸ் அவகாசம் அளித்துள்ளது. குடியரசுக் கட்சி ஆதரவுடன் கூடிய செலவு சட்டமூலம் அண்மையில் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. ஆனால் இப்போது செனட்டில் எதிர்ப்பை எதிர்கொள்கிறது. குடியரசுக் கட்சியினர் செனட்டில் 53 இடங்களைக் கொண்ட பெரும்பான்மையைக் கொண்டுள்ளனர். ஆனால் செலவு சட்டமூலத்தை அங்கீகரிக்க குறைந்தது 60 வாக்குகள் தேவை. சுகாதாரச் செலவுகள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் குறித்த கருத்து வேறுபாடுகளை மையமாகக் கொண்ட அரசியல் முட்டுக்கட்டையை உடைக்க திங்களன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இரு கட்சிகளும் நடத்திய பேச்சுவார்த்தைகள் சிறிதும் முன்னேற்றமில்லை என்று தெரிகிறது. அரசாங்க முடக்கம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைக்கும், இது வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முடக்கம் ஏற்பட்டால் ஆயிரக்கணக்கான அரசு வேலைகள் பறிக்கப்படலாம் என்றும் வெள்ளை மாளிகை எச்சரித்தது – இது தொழிலாளர் சந்தையில் மேலும் பலவீனத்தை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலை. இலங்கை விலை விபரம்; கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 306,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 282,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1449028
1 month ago
இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை!-அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம். இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் நிலைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பான அறிக்கையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லாமையினால் நிறுவன ஊழல் தொடர்ந்து நிலவுவதாகவும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தனது 2025 முதலீட்டு சூழல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதிய நிர்வாகத்தின் கீழ் உயர் மட்ட அரசியல் லஞ்சக் கோரிக்கைகள் குறைவடைந்துள்ள போதிலும் சலுகை பெற்ற குழுக்களால் பாதுகாக்கப்படும் துறைகளில் ஊழல் நீடிப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேவையற்ற விதிமுறைகள், சட்ட நிச்சயமின்மை, அதிகாரிகளின் பலவீனங்கள் முதலீட்டாளர்களுக்கு சவாலாக உள்ளதாகவும்; குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிரேஷ்ட அரச அதிகாரிகள் தனியார்துறை தலைமையிலான பொருளாதார வளர்ச்சியை விமர்சித்துவருவதுடன் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை ஊக்குவிக்கும் நிலைப்பாட்டையும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் உட்கட்டமைப்பு துறைகளில் முன்னணி உலகளாவிய நிறுவுனங்கள் பெரும்பாலும் இல்லை என்பதனையும் தெரிவித்துள்ளது சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதங்களை வழங்கியிருந்தாலும், ஆரம்பகாலம் முதல் உள்ள இந்த அரசாங்கத்தின் மேற்குலக எதிர்ப்பு மற்றும் மார்க்சிச சித்தாந்தங்கள் காரணமாக பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து சந்தேகம் கொண்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் 400 மில்லியன் டொலர் பெறுமதியிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திலிருந்து இந்திய அதானி கிரீன் எனர்ஜி விலகியதனையும் மேற்கோள்காட்டி குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. பலவீனமாக அதிகாரிகள் நிச்சயமற்றதன்மை தேவையற்ற விதிமுறைகள் ஆகியன இலங்கையில் முதலீடு செய்வதற்கான ஏனைய சவால்களாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஊழலை ஒழிப்பதற்கும் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி பகிரங்கமாக உறுதியளித்துள்ளதாகவும் உயர்மட்ட அரசியல் லஞ்சம் குறைவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1449036
1 month ago
லண்டனிலுள்ள மகாத்மா காந்தி சிலை சேதம்; இந்தியா கடும் கண்டனம்! ஒக்டோபர் 2 ஆம் திகதி ஆண்டுதோறும் நடைபெறும் காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு, லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடரபில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய வெட்கக்கேடான செயலுக்கு வருத்தத்தையும், கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம். இது வெறும் நாசவேலை மட்டுமல்ல, சர்வதேச அகிம்சை தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அகிம்சை என்ற கருத்து மற்றும் மகாத்மாவின் மரபு மீதான வன்முறைத் தாக்குதலாகும். இதற்கான உடனடி நடவடிக்கையை நாங்கள் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். மேலும் எங்கள் குழு ஏற்கனவே சம்பவ இடத்தில் உள்ளது. சிலையை அதன் அசல் வடிவமைப்புடன் மீட்டெடுக்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் – என்று அது கூறியது. ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச அகிம்சை தினமாக நியமிக்கப்பட்ட காந்தி ஜெயந்தி, ஆண்டுதோறும் ஒக்டோபர் 2 ஆம் திகதியன்று லண்டனில் உள்ள நினைவுச்சின்னத்தில் மலர் அஞ்சலி மற்றும் காந்திஜியின் விருப்பமான பாடல்களுடன் நினைவுகூரப்படுகிறது. இந்தியா லீக்கின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட வெண்கலச் சிலை, அருகிலுள்ள லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மகாத்மா காந்தி சட்ட மாணவராக இருந்த நாட்களைக் குறிக்கும் வகையில் 1968 ஆம் ஆண்டு சதுக்கத்தில் திறக்கப்பட்டது. இந்த நிலையில் லண்டன் பெருநகர காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் நாசவேலை குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றது. https://athavannews.com/2025/1449019
1 month ago
களத்தில் நின்ற பத்திரிகையாளரின் நேரடி வாக்குமூலம் மாட்டினான்டா மானஸ்தன். இனிமே சரி ஜீ நீம்பள் சொன்னா நம்பள் பண்ணும் ஜீ.
1 month ago
https://www.facebook.com/reel/813512611061830 ~ படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டிங்களா ? * என்ன கேட்டிங்களா ? ~ நீங்க அழாதீங்க, மாட்டிப்போம்னு சொன்னேன் கேட்டிங்களா சோசியல் மீடியா PEAK ல இருக்க இந்த காலத்திலயே இவனுங்க இந்த அளவுக்கு அட்டூழியம் பண்றானுங்க! அந்த காலத்துல எம்.ஜி.ஆர், என்னவெல்லாம் பண்ணிருப்பானுங்க ! அப்போ திமுகவை சரிக்கு சமமா களத்துல எதிர்த்து அவங்களை முடக்கி போட்ட துணிச்சலான ஒரே கட்சி அதிமுக தான்!
1 month ago
விஜய்;கமல்;போராளிகள்;தேர்தல்? - நிலாந்தன் நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் கட்சி தொடர்பாக அண்மையில் நடிகர் கமலஹாசன் ஒரு கருத்துத் தெரிவித்திருந்தார். கூட்டத்துக்கு வருபவர்கள் எல்லாரும் வாக்குப் போட மாட்டார்கள் என்ற பொருள்பட அக்கருத்து அமைந்திருந்தது. அது விஜய்க்கு மட்டுமல்ல தனக்கும் பொருந்தும் என்று கமலஹாசன் கூறியிருக்கிறார். சமூகத்தில் வெவ்வேறு துறைகளின்மூலம் தாங்கள் பெற்ற பிரபல்யத்தை,செல்வாக்கை தேர்தலில் முதலீடு செய்வது என்பது தேர்தல்மைய அரசியலில் ஒரு பிரதான போக்கு. ஆனால் அதற்காக ரசிகர்கள் எல்லாருமே வாக்களிப்பார்கள் என்று இல்லை. மாணவர்கள் எல்லாருமே ஆசிரியருக்கு வாக்கு போடுவார்கள் என்று இல்லை. சமூகத்துக்காக தியாகம் செய்தவர்கள் எல்லாரும் தேர்தலில் வெல்வார்கள் என்று இல்லை. உதாரணமாக, தமிழ்த் தேசிய அரசியலில் ஆசிரியர்கள் வரதராஜன்,ஐங்கரநேசன், அருந்தவபாலன் போன்றவர்களைக் குறிப்பிடலாம். குறிப்பாக வரதராஜன் தேர்தல் கேட்ட பொழுது மற்றொரு ஆசிரியர் என்னிடம் சொன்னார் “அவருடைய மாணவர்கள் வாக்களித்தாலே அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வந்து விடுவார். ஆனால் மாணவர்களாக இருப்பது வேறு வாக்காளர்களாக இருப்பது வேறு. எல்லா மாணவர்களும் ஆசிரியருக்கு வாக்களிப்பார்கள் என்று இல்லை” என்று. அப்படித்தான் இந்தியாவில் மணிப்பூரில் இரோம் ஷர்மிலா என்ற பெண் செயற்பாட்டாளர் அங்கு அமுலில் இருந்த சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 15 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை மணிப்பூரின் “இரும்புப் பெண்மணி” என்று அழைப்பார்கள். பின்னர் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு 2017ஆம் ஆண்டு மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் எந்த மக்களுக்காக அவர் 15 ஆண்டுகள் உண்ணாமல் போராடினாரோ,அதே மக்கள் அவரைக் குரூரமாக நிராகரித்தார்கள். அவருக்கு 100 வாக்குகள்கூட கிடைக்கவில்லை. கட்டுப்பணமும் இல்லை. தமிழ் தேசியப் பரப்பில்,ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் பின்னர் தேர்தல் கேட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருகிறார்கள். எனினும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நீண்ட காலம் ஈடுபட்ட அமைப்பாகிய விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே கடந்த 16 ஆண்டுகளிலும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வெற்றிகளை பெற்றதில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு பெற்றபின் கட்சிகளைத் தொடங்கியவர்களும் வெற்றி பெறவில்ல்லை. ஏனைய கட்சிகளில் இணைந்து போட்டியிட்டவர்களுக்கும் வெற்றிபெறவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஒரு பெண், போரில் காலை இழந்தவர்,வன்னியில் போட்டியிட்டார். அவரை வெற்றிபெற வைப்பதற்காக அவருடைய நண்பர்கள் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குப் போய் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் அவருக்கு கிடைத்தது இரண்டு ஆயிரத்த்துச் சொச்சம் வாக்குகள்தான். தமிழ்த் தேசியப் பரப்பில் ஏனைய கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எல்லாப் போராட்டங்களிலும் பொன் மாஸ்டர் காணப்படுவார். அவர் முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர். அவர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் கேட்டிருக்கிறார். ஆனால் உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக வரத் தேவையான வாக்குகளைக் கூட மக்கள் அவருக்குக் கொடுக்கவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தன்னை கொள்கையில் விட்டுக் கொடுப்பற்ற ஒரு கட்சியாகக் கூறிக் கொள்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் லட்சியத்தை விட்டுக்கொடுப்பின்றி பின்பற்றும் ஒரு கட்சியாகவும் அது தன்னைக் காட்டிக் கொள்கிறது. அப்படியென்றால் ஒவ்வொரு மாவீரர் நாளின் போதும் துயிலுமில்லங்களில் சிந்தப்படும் கண்ணீர் யாவும் அந்தக் கட்சிக்குத்தானே வாக்குகளாகத் திரள வேண்டும்? ஏன் அப்படி நடக்கவில்லை? முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தவர்களால் ஏன் தேர்தல்களில் பெரு வெற்றி பெற முடியவில்லை? அவர்களுக்கு தேர்தல் மொழியில் பேசத் தெரியவில்லையா? அல்லது அவர்களைச் சமூகம் போர்க்களத்துக்கு மட்டும் உரியவர்களாகப் பார்க்கின்றதா? தேர்தல் களத்துக்கு உரியவர்கள் அல்ல என்று கருதுகின்றதா? இதே கேள்விகளைச் சிங்கள வாக்காளர்களை நோக்கியும் கேட்கலாம். ஏனென்றால் சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னிலங்கையில் ஏற்பட்ட தன்னெழுச்சிப் போராட்டங்களின் அடித்தளமாக இருந்தவர்கள் என்று கருதப்படுகின்ற அமைப்புக்களில் ஒரு பகுதி ஒன்றாகத் திரண்டு குடைச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டன. ஆனால் அவர்களுக்கு அற்பசொற்ப வாக்குகள்தான் கிடைத்தன. நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 11 ஆயிரம் வாக்குகள் ஜனாதிபதி தேர்தலில் கிட்டத்தட்ட 30,000 வாக்குகள். அதேசமயம் போராட்டங்களின் விளைவுகளை தேர்தல் மொழியில் கவர்ச்சியாக மொழிபெயர்த்த ஜேவிபி மூன்றில் இரண்டு பெரும்பான்மையப் பெற்று இப்பொழுது நாட்டை ஆட்சி செய்கின்றது. அப்படியென்றால் சிங்கள மக்கள் தங்களுக்காக வீதியில் இறங்கிப் போராடியவர்களை அல்லது அந்தப் போராட்டங்களைப் பின்னிருந்து ஊக்குவித்தவர்களை ஏன் தோற்கடித்தார்கள் ? போராளிகள் வேறு அரசியல்வாதிகள் வேறு என்று மக்கள் கருதுகின்றார்களா? போராளிகள் அரசியல்வாதிகளாக மாறுவதை சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லையா ? அல்லது போராளிகளுக்கு தங்கள் போராட்டத்தை தேர்தல் மொழியில் மொழிபெயர்க்கத் தெரியவில்லையா? அல்லது உண்மையான அர்ப்பணிப்புக்கும் நேர்மைக்கும் விசுவாசத்திற்கும் தியாகத்துக்கும் தேர்தல் அகராதியில் இடமில்லையா ? ஆனால் ஜேவிபியும் முன்பு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதையும் குரூரமாக நசுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் அவர்கள் தேர்தல் மொழியை நன்கு கற்றுத் தேர்ந்து விட்டதனால்தான் இம்முறை ஆளுங்கட்சியாக வர முடிந்திருக்கின்றது. ஜேவிபி தன்னை எம்பிபியாக உருமாற்றிக் கொண்டது. அதன் விளைவாகத்தான் இப்பொழுது நாட்டை ஆள்கின்றது. ஆயுதப் போராட்ட இயக்கங்களின் தியாகங்கள்,இரோம் சர்மிளா போன்றவர்களின் தியாகம் என்பவற்றோடு நடிகர் விஜயின் செல்வாக்கை ஒப்பிட முடியாது. ஆனால் இங்கு இந்த கட்டுரையின் குவிமையம் என்னவென்றால் தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதற்கான தகமைகள் எவை எவை என்ற கேள்விதான். மிக உயர்வான தகமைகள் என்று கருதப்படும் தியாகம், அர்ப்பணிப்பு,நேர்மை போன்றவற்றைத் தேர்தல் மொழியில் மொழிபெயர்க்கத் தெரியாத போராளிகள் தொடர்ந்து தோற்கடிக்கப்படுகிறார்கள். அரசியலில் அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்கள் தொடர்ந்து பின் தள்ளப்படுவார்கள். மாறாக அரசியலை ஒரு பிழைப்பாக முன்னெடுப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள். தமிழகத்தில் நல்லகண்ணு என்று ஒர் இடதுசாரி இருக்கிறார். நேர்மையானவர், கண்ணியமானவர், ஒரு சன்னியாசியைப் போன்றவர், அர்ப்பணிப்பு மிக்கவர். ஆனால் அவர் தேர்தலில் வென்றதில்லை. இது தேர்தல் ஜனநாயகத்தில் உள்ள அடிப்படைப் பலவீனம். வாக்காளர்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர்கள்,தேர்தல் அரசியலின் கள்ளத்தனங்களை விளங்கிக் கொண்டவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இங்கு வெற்றியைத் தீர்மானிப்பது வாக்காளர்களின் அறியாமையா? அல்லது அறிவா? அல்லது விழிப்பற்ற பொதுப் புத்தியா ?அல்லது குறிப்பிட்ட வேட்பாளரின் அதிர்ஷ்டமா? ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய,அரசியல் செயற்பாட்டாளராகிய எம்மா கோல்ட்மன் கூறுவதுபோல, “”வாக்களிப்பு எதையாவது மாற்றுமாக இருந்தால்,அவர்கள் தேர்தலைச் சட்டவிரோதமாக்கி விடுவார்கள்” என்பதுதான் சரியா ? https://www.nillanthan.com/7802/
1 month ago
இது போர்க்களமல்ல; அரசியற் களமே! September 29, 2025 — கருணாகரன் — மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மாகாணசபைகளுக்கு மேலான (13+) அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் இதுவரையிலும் வலியுறுத்திக் கொண்டிருந்தன தமிழ்த்தேசியக் கட்சிகள். இதற்காக இலங்கை அரசை மட்டுமல்ல, இந்திய அரசையும் கோரிக் கொண்டிருந்தன. இந்தக் கோரிக்கையோடு கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரலாயத்துக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள துணைத்தூதரகத்துக்கும் பல தடவை சென்று முறையிட்டும் பேசியும் வந்திருக்கிறார்கள். 23.09.2025 அன்று கூட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் இதற்காக இந்தியத் தூதரைச் சந்தித்திருக்கின்றனர். ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகள் எல்லாம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் தமிழ்க் கட்சிகள் அதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்காமல், வழமையைப்போல “தனித்தவில்” வாசிக்கின்றன. இது ஏன்? குறைந்த பட்சம் தமிழ்பேசும் கட்சிகளாகக் கூட ஒருங்கிணைந்த கூட்டுக் கோரிக்கையாக இதனை மாற்ற முடியாமல் இருப்பது ஏன்? மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தென்னிலங்கைக் கட்சிகள் எல்லாம் இலங்கை அரசை (NPP அரசாங்கத்தை) மட்டும் கேட்கவில்லை. இந்திய அரசையும் கேட்டுள்ளன. இதற்கான சந்திப்பு ஒன்றுகூட கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சந்தியின் எம்பிக்களுக்கும் இந்தியத்தூதுவருக்குமிடையில் நடந்துள்ளது. அப்பொழுது எல்லாக் கட்சிகளும் கூடி ஒன்றாக வாருங்கள். அப்போதுதான் இந்தக் கோரிக்கைக்கு வலுக் கூடும் என்று சொல்லியிருக்கிறார் இந்தியத் தூதர். இவ்வளவு காலமும் மாகாணசபைகளுக்கான அதிகாரத்தைப் பகிர்வதில் பின்னடித்த கட்சிகள் (சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன உள்ளிட்டவை) எல்லாம் மாகாணசபைகளைப் பற்றியே பேசுகின்ற – பேச வேண்டிய ஒரு காலம் வந்துள்ளது. அப்படியான ஒரு அரசியல் நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது. இதற்குக் காரணம், ஜனாதிபதி, பாராளுமன்றம், உள்ளுராட்சி மன்றம் போன்ற அதிகார மையங்களை NPP கையகப்படுத்தி வைத்திருக்கிறது. ஏனைய கட்சிகள் வரலாற்றில் முதற்தடவையாக அதிகாரமற்ற தரப்புகளாக மாறியுள்ளன. இதனால் மாகாணசபைகளிலாவது அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காக அதற்கான தேர்தலைக் கோருகின்றன. தேர்தலை நடத்தினால் எப்படியாவது மாகாணசபைகளைக் கைப்பற்றலாம் என்ற நம்பிக்கையோடிருக்கின்றன. அப்படித் தேர்தலை நடத்தி மாகாணசபைகளைக் கைப்பற்றினால், பிறகு இந்தக் கட்சிகளால் அடுத்த கட்டப்போராட்டம் மாகாணசபைகளுக்கான அதிகாரத்துக்காக நடத்தப்படும். ஏனென்றால், அதிகாரமற்ற மாகாணசபைகளை வைத்துக் கொண்டிருப்பதால் இவற்றுக்கு என்ன பயன்? எனவே சிங்களக் கட்சிகளே மாகாண அதிகாரத்தைக் கோருகின்ற, அதற்காகப் போராடுகின்ற ஒரு காலம் கனிந்துள்ளது. இவ்வாறு கனிந்துள்ள நல்வாய்ப்புச் சூழலைப் பயன்படுத்திக் கொள்வதைப் பற்றித் தமிழ்த்தேசியக் கட்சிகளிடத்திலும் சரி, தமிழ்த்தேசியம் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்காத ஏனைய தமிழ்க்கட்சிகளும் (ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, கிழக்குத் தமிழர் ஒன்றியம், புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனினிஸக் கட்சி போன்றவை) சரி அக்கறையற்றே உள்ளன. அல்லது இதைக் கையாளத் தெரியாமல் தடுமாறுகின்றன. மாகாணசபைகளைப் பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் முதற்கட்ட அனுகூலங்களைச் சாத்தியப்படுத்த வேண்டும் என்று மெய்யாகவே இந்தக் கட்சிகள் நம்பினால், இப்பொழுது உருவாகியிருக்கின்ற மாகாணசபைகளின் மீதான அனைத்துத் தரப்பின் கரிசனைச் சூழலைக் கையாளக் கூடிய கட்டமைப்பையும் பொறிமுறையையும் உருவாக்க முயற்சித்திருக்கும். அதற்கான சந்திப்புகளையும் உரையாடல்களையும் வடக்குக் கிழக்கு தெற்கு மேற்கு மத்தி என அனைத்துப் பரப்பிலுமுள்ள சக்திகளுடன் நடத்துவதற்கான தயாரிப்புகள் நடந்திருக்கும். மாகாணசபைகளைப் பற்றிச் சிந்திக்கின்ற அனைத்து தரப்பையும் ஒருங்கிணைந்த ஒரு Net Work இல் கொண்டு வந்திருக்கும். இதில் அரசியற் கட்சிகள் மட்டுமல்லாமல், அனைத்துச் சூழலிலும் உள்ள ஊடகவியலாளர்கள், ஜனநாயக விரும்பிகள், மாகாணசபைகளைப் பற்றியும் அதிகாரப் பகிர்வு பற்றியும் சாதகமாகப் பேசி வரும் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டு முன்னணியாக மாற்ற வேண்டும். இதைச் சாத்தியமாக்குவது ஒன்றும் கடினமே இல்லை. ஏனென்றால், இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலேயே சொல்லப்பட்டுள்ளதைப்போல, எல்லாத் தரப்பும் மாகாணசபைகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது அதற்கான கட்டமைப்பை உருவாக்குவது எளிதல்லவா! முதற்கட்டமாக கொழும்பில் இதற்கென ஒரு தொடர்பாடல் மையத்தையும் தொடர்பாடற் குழுவையும் உருவாக்க வேண்டும். அதிலிருந்தே விடயங்களைக் கையாளலாம். இதில் கவனிக்க வேண்டியது, இந்த விடயத்தில் படிப்படியாகவே விடயங்களை நகர்த்த வேண்டும். முதலில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு அரசிடம் கூட்டாகக் கேட்பது, அழுத்தம் கொடுப்பது. குறிப்பாக கால எல்லையை நிர்ணயிக்குமாறு வலியுறுத்துவது. இதற்கு அரசாங்கம் சரியான பதிலளிக்கவில்லை என்றால், போராட்டங்களை நடத்துவதைப் பற்றிச் சிந்திப்பது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவது என்பது, ஜனாநாயக அடிப்படையிலான கோரிக்கையாகும். அதை வலியுறுத்துவது ஜனநாயக அடிப்படையிலானது. எந்த நிலையிலும் எதன் பொருட்டும் அரசாங்கம் ஜனநாயக மறுப்பைச் செய்யக் கூடாது என்பதாக இந்தப் போராட்டங்களும் கோரிக்கைகளும் அமைய வேண்டும். அரசாங்கம் இணங்கியோ உடன்பட்டோ மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால், அதை எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றி ஆராயலாம். இது ஒன்றும் முக்கியமானதல்ல. ஏனென்றால், மாகாணசபைகளுக்கான தேர்தல் வெவ்வேறு சூழலைக் கொண்ட பிராந்தியங்களின் தேர்தலாக இருப்பதால், அந்தந்தச் சூழலுக்கு ஏற்றவாறே தேர்தலை எதிர்கொள்ளும் நடைமுறைகளும் இருக்கும். ஆனாலும் அதைக் குறித்தும் சிந்திக்கலாம். அடுத்தது முக்கியமானது. அதுதான் அதிகாரங்களை வலுப்படுத்துவதாகும். மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரங்களைக் கோருவதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதுமாகும். இதற்கான கலந்துரையாடல்களு பொறிமுறையும் வேணும். ஆனால், அதை இப்பொழுது எக்காரணம் கொண்டு செய்யவே கூடாது. அப்படி அவரசப்பட்டு அதிகாரப் பகிர்வைப் பற்றிப் பேச முற்பட்டால், மாகாணசபைகளுக்கான தேர்தல் கோரிக்கையே விடுபட்டுப் போகக் கூடிய சூழல் உருவாகி விடும். மட்டுமல்ல, தொடக்கத்திலேயே தேவையற்ற விவாதங்கள் உருவாகி எல்லாமே பாழாகி விடும். அது அரசாங்கத்துக்கே நல்வாய்ப்பை அளிக்கும். ஆகவே இந்த விடயத்தை மிக நுட்பமாகவும் நிதானமாகவும் கையாள வேண்டிய கூடுதல் பொறுப்பு தமிழ்க்கட்சிகளுக்கு உள்ளது. தமிழ்த்தரப்பு அல்லது தமிழ் பேசும் சமூகங்கள்தான் இதனால் (மாகாணசபைகள் முடக்கப்பட்டதால்) கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றன. எனவே கூடிய கரிசனையை எடுக்க வேண்டியது தமிழ் பேசும் தரப்பினரே. இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களிடமிருந்து இன்னும் அழுத்தம் திருத்தமான ஒரு அபிப்பிராயத்தையும் அல்லது நிலைப்பாட்டையும் காண முடியவில்லை. எனவே தமிழ்தரப்பு முக்கியமாக முஸ்லிம் கட்சிகளோடு பிரத்தியேகமாகப் பேச வேண்டும். தேர்தல் கூட்டுகளை வைப்பதற்கு ஆலாய்ப் பறந்து இரவு பகலாகச் சிந்திக்கின்ற – சந்திப்புகளை நடத்துகின்ற, கூட்டுகளை உருவாக்குகின்ற அரசியற் கட்சிகள், அதை விட முக்கியமான மாகாணசபை விடயத்தில் ஆர்வமற்றிருப்பது ஏன்? மாகாணசபைகளைப் பற்றித் தொடர்ச்சியாகப் பேசி வருகிறோம். அப்படியிருக்கும்போது அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை என்று எப்படிக் குற்றம் சாட்ட முடியும் என்று சில கட்சியினர் கேட்கலாம். எதையும் பேசுவது வேறு. அவற்றைச் செயலாக்கமாக வெற்றியடையச் செய்வது வேறு. இப்பொழுது பேசுவதை விட செயற்படுவதற்கான சூழல் தானாகவே வந்திருப்பதால், அதை வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்றே இங்கே வலியுறுத்தப்படுகிறது. மாறாக எவரையும் குற்றப்படுத்தி நிந்திப்பதற்காக அல்ல. ஆனால், மந்த கதியில் எதையும் செய்ய முயற்சித்தால், அது எதிர்விளைவுகயே – பின்னடைவுகளையே தரக் கூடிய சாத்தியமுண்டு. அரசியலில் அபூர்வமாகவே வாய்ப்புகள ஏற்படுவது. அதைக் கச்சிதமாகப் பிடித்துக் கொள்வதே நிபுணத்துவமும் சாணக்கியமுமாகும். இப்போது உருவாகியிருக்கும் மாகாணசபைகளுக்கான தேர்தல் குறித்த பல தரப்பின் குரல்களுக்காக அரசாங்கம் அடுத்த ஆண்டு தேர்தலை நடத்துவதாகப் பொத்தாம் பொதுவாகச் சொல்லியுள்ளது. ஆனால், அதற்கான கால எல்லையை அது சொல்லவில்லை. மந்த கதியில் அல்லது தனித்த நிலையில் இந்தக் கோரிக்கை இருக்குமாக இருந்தால், அரசாங்கம் இதை இழுத்தடித்து, வேறொரு சூழ்நிலைக்குத் தள்ளி விடவும் வாய்ப்புண்டு. அப்பொழுது இந்தக் கோரிக்கையைக் கை விட்டுத் தென்னிலங்கைக் கட்சிகள் வேறு பிரச்சினையில் தாவி விடவும் கூடும். ஆகவேதான் தாமதிக்காமல் விரைவில் இது தொடர்பாக முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது மாகாண சபைகளை இயங்க வைப்பதற்காக வேலை செய்வதற்கு வாய்ப்பான சூழல். இதில் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் தவணை முறையில் மரணமே! தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடக்கம் அனைத்துத் தமிழ் பேசும் தரப்பினரும் தங்களுடைய அடையாளத்துக்கு ஏற்பவும் மாகாணசபைகளைக் கொண்டு வருவதற்கு முன்னின்றவர்கள் என்ற அடிப்படிக் காரணத்துக்காகவும் விரைந்து களத்தில் இறங்க வேண்டும். இது ஒன்றும் போர்க்களமல்ல. அரசியற் களமே! https://arangamnews.com/?p=12343
1 month ago
நாயக நடிகர்கள்: பதவி மோக அரசியலும், பறிபோகும் பாமர மக்கள் உயிர்களும் 29 Sep 2025, 7:47 AM ராஜன் குறை கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நெகிழவைக்கும், மகிழவைக்கும் நிகழ்ச்சியை தமிழக அரசு சென்ற வாரம் வியாழனன்று நடத்தியது. எளிய, சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட பெண்களும், ஆண்களும் அரசின் புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களின் உதவியுடன் கல்வியிலும், வாழ்விலும் ஏற்றம் பெற்றதை எடுத்துக்கூறும் நிகழ்ச்சியாக அது அமைந்தது அனைத்து தரப்பினரையும் பாராட்ட வைத்தது. அந்த மகிழ்ச்சியை முற்றிலும் குலைக்கும் வகையில் கரூரில் சனிக்கிழமையன்று பெருந்துயரம் அரங்கேறியுள்ளது. நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்திற்காக சனிக்கிழமை தோறும் செய்யும் பரப்புரைப் பயணத்தில் அன்றைக்கு நாமக்கல்லிற்கும், கரூரிற்கும் சென்றார். மாலை ஏழரை மணி அளவில் அவர் கரூரில் பேசும்போது கூட்ட த்தில் ஏற்பட்ட கட்டுங்கடங்காத நெரிசலில் சிக்கி 40 பேர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மரணமடைந்தனர். இந்தியாவில் தமிழ்நாட்டின் வளர்ச்சி கண்டு அழுக்காறு கொள்ளும் கூட்டம் உடனே இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா, சினிமா மோகத்தில் சிக்கிச் சீரழியும் நாடு அது என்றெல்லாம் பேசத்துவங்கியது. இன்னொரு கூட்டம் வழக்கம் போல தி.மு.க-தான் சினிமாவையும், அரசியலையும் கலந்தது என்று பிலாக்கணம் வைக்கத் துவங்கியது. இதுதான் பெரியார் மண்ணா, நடிகனைக் காணப்போய் மடிந்துபோகிறார்கள் என்று பொங்குகிறார்கள். உலகின் எந்த பெரிய தீர்க்கதரிசியும், மகானும், சிந்தனையாளரும் தாங்கள் பிறந்த மண்ணை முற்றாக பொன்னுலகாக மாற்றியதில்லை. காந்தி பிறந்த, பெருமளவு வாழ்ந்த குஜராத் மண்ணில்தான், இந்தியாவில்தான் மதவாத வன்முறை பேயாட்டம் போட்டது. இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். அதற்காக சமகால இந்தியாவை உருவாக்கியதில் காந்திக்கு பெரும்பங்கு இல்லையென்று சொல்ல முடியாது. பெரியாரே இந்தியாவிற்கு காந்தி தேசம் என பெயரிட வேண்டுமென்று கூறினார். முதலில் நாம் திராவிட இயக்கத்திற்கும், சினிமாவிற்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் நாயக நடிகர்கள் அரசியல் தலைவர்களாக மாறுவது எப்படி நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகுதான் நடிகர் விஜய் கட்சி துவங்கியிருப்பதில் உள்ள அரசியல் போதாமை என்ன, ஏன் இந்த உயிரிழப்பு கரூரில் நிகழ்ந்தது என்பதை பிரித்தறிந்து புரிந்துகொள்ள வேண்டும். உண்மையான தத்துவார்த்த மானுடவியல் புரிதல் உருவாக வேண்டும் என்றால் சற்றே பொறுமையாக வரலாற்றை அணுகவேண்டும். இருபதாம் நூற்றாண்டில் சினிமாவும், அரசியலும் உலகின் பல நாடுகளிலும் சினிமா அதன் துவக்கம் முதலே அரசியல் பிரசாரத்திற்கு, அல்லது தேசிய கருத்தியலை உருவாக்க பயன்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, இதாலி என பல நாடுகளைச் சொல்லலாம். இந்தியாவிலும் காலனீய எதிர்ப்பு தேசிய உணர்வு சினிமாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது. தமிழ் சினிமாவிலும் கூட தேசிய விடுதலைக் கருத்தியல் பேசப்பட்டதை ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன் தன்னுடைய Message Bearers நூலில் தொகுத்துள்ளார். தமிழ்நாட்டில் தேசிய விடுதலை தவிர சமூக நீதிக் கருத்துக்களும் சினிமாவில் புகுந்தன. இதற்கு பல காரணங்கள் இருந்தன. நாடகம், சினிமா இரண்டிலுமே புராணக் கதைகளே ஆக்கிரமித்திருந்த நிலையில் சமகால சமூகக் கதைகளை நாடகமாக்க வேண்டும், சினிமா ஆக்கவேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் இருந்தது. ஆனால் தமிழ் உரைநடை என்பது ஒருபுறம் எழுத்தில் பண்டிதத்தனமாகவும், மற்றொருபுறம் வடமொழி கலந்ததாகவும், பேச்சு வழக்கில் ஜாதீய கொச்சைகள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த நிலையில்தான் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பலர் மக்களூக்கு அணுக்கமான ஒரு புதிய உரைநடையை பேச்சிலும், எழுத்திலும் உருவாக்கினர். அதையே நாடகங்களிலும், பின்னர் சினிமாவிலும் வசனமாக பயன்படுத்தினர். அந்த மொழி நடை அடுக்குமொழியாகவும், ஓசை நயமிக்க சொல்லணியாகவும் அமைந்த தால் மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றது. அந்த மொழிநடையுடன் சமூக நீதிக் கருத்துக்களையும் இணைத்ததால் நாடகங்களும், சினிமாவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த திராவிட தமிழ் அலையில் உருவான நட்சத்திரங்கள்தான் எம்.ஜி.ஆரும், சிவாஜியும். அதில் சிவாஜி குணசித்திர நடிகராகவும், எம்.ஜி.ஆர் தார்மீக சாகச கதாநாயகனாகவும் இணைந்து தமிழ் நவீன தன்னிலையின் இருபகுதிகளாக மாறியதில் பெரும் சமூக முக்கியத்துவம் பெற்றனர். சிவாஜி தி.மு.க-வில் ஒரு பகுதியினரின் எதிர்ப்பால் விலகிச் சென்று காமராஜருக்கும், காங்கிரசிற்கும் நெருக்கமானார். எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பயணித்தார். கட்சியுடன் சேர்ந்து வளர்ந்தார். கட்சியின் கருத்தியலை திரைக் கதையாடல்களாக மாற்றினார். இருபதாண்டு காலம் கட்சியுடன் பிணைந்த நாயக நடிகராக கட்சியின் கருத்துக்களை வசன ங்களிலும், பாடல்களிலும் வெளிப்படுத்தி அத்துடன் முழுவதுமாக அடையாளப் படுத்திக்கொண்டார். எழுத்தறிவு பரவாத சமூகத்தில் திரைப்படங்களே வெகுஜனக் கல்வி வடிவமாக விளங்கியது எனலாம். அது தமிழ் சமூகத்தின் தன்னுணர்வை செழுமைப்படுத்தியது என்பதே உண்மை. எம்.ஜி.ஆர் ஏழ்மையில் வளர்ந்தவர் என்பதால் அடித்தட்டு சமூகத்தை அறிந்தவர். அண்ணா மறைவிற்குப் பின் அவர் கலைஞருடன் முரண்பட்டு கட்சியைப் பிளந்து புதிய கட்சியை உருவாக்கியபோது அவருக்கு மாநிலம் முழுவதும் கட்சிக் கட்டமைப்பும். தொண்டர் பலமும் உடனே கிடைத்தது. நாவலர் உட்பட பல இரண்டாம் கட்ட தலைவர்கள் அவருடன் இணைந்தனர். நாயக நடிகர்கள் நேரடியாக அரசியல் தலைவராக முடியுமா? திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆருக்கு இணையாகச் செல்வாக்கு பெற்றிருந்த சிவாஜி கணேசனால் அரசியல் தலைவராக முடியவில்லை. ஏனெனில் அவரது கதாநாயக பிம்பம் குணசித்திர வார்ப்பாக இருந்தது. அவரும் சாகசப் படங்களில் நடித்தாலும் அவரது சிறப்பம்சம் அவர் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறுவதாக இருந்தது. எம்.ஜி.ஆர் தன்னையே ஒரு கதாபாத்திரமாக மாற்றிக்கொண்டதைப் போல, சிவாஜியால் செய்ய முடியவில்லை. இந்த உண்மை எம்.ஜி.ஆர் என்ற நாயக நடிகர் கட்சித் தலைவராக, முதல்வராக மாறியது பிறரால் பின்பற்ற இயலாதது என்பதை உடனடியாகத் தெளிவாக்கியது. எம்.ஜி.ஆர் போல வெற்றிகரமாக கட்சித் தலைவராக, முதல்வராக மாறிய மற்றொருவர் என்.டி.ஆர் எனப்பட்ட என்.டி.ராமராவ். இவர் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று இல்லாத நிலையில் அதில் கடும் கோஷ்டிப் பூசல் நிலவியதால் அந்த கட்சியின் தலைவர்கள் பலரை ஈர்த்துதான் தன் கட்சியைக் கட்டிக் கொண்டார். அவர் மருமகன் சந்திரபாபு நாயுடுவே காங்கிரஸ் அமைச்சராக இருந்தவர்தான்; சஞ்சய் காந்திக்கு நெருக்கமாக இருந்தவர். என்.டி.ஆர் புராணப் படங்களில் கிருஷ்ணர் உள்ளிட்ட தெய்வ வேடங்களைத் தாங்கியவர் என்பதுடன், பல படங்களில் எம்.ஜி.ஆர் போல தார்மீக சாகச நாயகனாகவும் நடித்தவர். இளமைக்கால வாழ்வில் சமூக அமைப்பை நன்கு பழகி அறிந்தவர். ஆந்திராவில் காங்கிரசிற்கு மாற்று இல்லாத சூழ்நிலையில் அந்த கட்சியின் ஒரு பகுதியினரைக் கொண்டுதான் அவர் தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கிக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் தெலுங்கு சினிமாவில் பெரும் சாகச நாயகனாக புகழ்பெற்ற சிரஞ்சீவியால் கட்சியைத் துவங்கி வெற்றி பெற முடியவில்லை. இந்த உதாரணங்களை வைத்துப் பார்க்கும்போது ஒரு நாயக நடிகரின் பிம்பம் எப்படிப் பட்டது, அவர் தலைமை ஏற்க ஏற்கனவே உருவான ஒரு கட்சியின் கட்டுமானம் கிடைக்குமா, அவர் தலைவராகும் சூழ்நிலை நிலவுமா என பல்வேறு காரணிகளை வைத்துதான் ஒரு நாயக நடிகர் வெற்றிகரமான கட்சித் தலைவராக, முதல்வராக மாற முடியும் என்பது தெளிவாகிறது. ஓரளவு சிறிய கட்சிகளை உருவாக்கி, பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சில தொகுதிகளில் வெல்லலாமே தவிர எம்.ஜி.ஆர் போலவோ, என்.டி.ஆர் போலவோ முதல்வராக வெல்வது சாத்தியமில்லை எனலாம். ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடித்து, அவரால் கட்சியில் இணைக்கப் பட்ட தால் தன்னை அவருடைய வாரிசாக நிறுவிக்கொண்டு அவர் கட்சிக் கட்டுமானத்தை கைப்பற்ற முடிந்தது. எம்.ஜி.ஆர் போல ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி புதிதாக கட்சி தொடங்கிய பிரபல கதாநாயகர்கள் யாருக்கும் சாத்தியமாகவில்லை என்பதே உண்மை. பாக்கியராஜ், டி.ராஜேந்தர், கார்த்திக், சரத்குமார், கமல்ஹாசன் என பலர் முயற்சித்துள்ளனர். யாருமே ஒரு கட்சிக் கட்டுமானத்தை உருவாக்கி அரசியலில் ஒரு முக்கியத் தலைவராக, முதல்வர் வேட்பாளராக பரிணமிக்க முடியவில்லை. விஜய்காந்த் பத்து சதவீத வாக்கு வரை பெற்றாலும் அவரால் தொடர்ந்து கட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. பத்தே ஆண்டுகளில் முதல்வர் வேட்பாளராக அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். விஜயின் பதவி மோக அரசியல் மக்களாட்சியில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கி, ஆட்சியைப் பிடிக்கலாம் என்பது உண்மைதான். நாயக நடிகர்கள் தலைவராகலாம் என்பதும் உண்மைதான். ஆனால் எத்தகைய களப்பணி செய்து அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. களத்திற்கு செல்லாமல், மக்கள் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு கட்சிக் கட்டமைப்பை வேர் மட்ட த்திலிருந்து உருவாக்காமல், தன் நாயக பிம்ப வெளிச்சத்தை வைத்து நேரடியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைப்பதைத்தான் பதவி மோக அரசியல் என்று கூற வேண்டியுள்ளது. அதாவது அரசியல் என்பதே நேரடியாக முதல்வராக பதிவியேற்பதுதான் என்று எண்ணுவது அப்பட்டமான பதவி மோகமே தவிர அரசியல் ஈடுபாடு அல்ல. அரசியல் ஈடுபாடு என்பது மக்கள் பணிதானே தவிர ஆட்சி ஆதிகாரமல்ல. உண்மையில் மக்கள் பணி செய்ய விருப்பமிருந்தால் ஒரு நாயக நடிகர் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஊராக சென்று மக்களிடையே பழக வேண்டும். அவர்கள் தேவைகள் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் போராட்டங்களில் பங்கெடுக்க வேண்டும். தன்னை பின்பற்றுவர்களைக் கொண்டு கட்சிக் கிளைகளை உருவாக்க வேண்டும். அந்த வேர்மட்ட செயல்பாட்டாளர்களுடன் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களிலிருந்து தங்கள் செயல்பாடுகள் மூலம் தலைமைப் பண்புடன் வெளிப்படுபவர்களைக் கொண்டு கட்சியின் இரண்டாம் கட்ட தலைமையை உருவாக்க வேண்டும். எல்லா மட்டங்களிலும் கட்சிக்குள் ஏற்படக்கூடிய முரண்பாடுகள், சமூக முரண்பாடுகள் எல்லாவற்றிற்கும் முகம் கொடுத்து, தன் தலைமைப் பண்பை நிறுவ வேண்டும். பின்னர்தான் தேர்தல், ஆட்சி எல்லாம் சாத்தியப்படும். இவ்வாறு தானே கட்சியை வேர்மட்ட த்தில் கட்ட முடியாது என்றால், வேறொரு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும். அந்த கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து தன்னை தலைமைப் பொறுப்பிற்கு தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதிலும் பத்திருபது ஆண்டுகள் பயணமே ஒருவரை பக்குவப்படுத்தும். ஆனால் அப்படி யாருடைய தலைமையையும் ஏற்று பணியாற்ற முடியாது, நான் பிரபல கதாநாயகன் என்பதால் நேரடியாக முதல்வராகத்தான் பதவி ஏற்பேன் என்பது சாத்தியமற்ற ஒரு வேட்கை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வாரிசு அரசியல் தலைமை என்பதும் சுலபமானதல்ல. கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற வேண்டும். கட்சி கட்டமைப்பின் வேர் மட்டம் வரை சென்று பரிச்சயம் கொள்ள வேண்டும். பல்வேறு முரண்பாடுகளை, சிக்கல்களை தீர்க்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில் கெட்ட பெயர் ஏற்பட்டு நிராகரிக்கப்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் மிகுந்த பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். எல்லா வாரிசு தலைவர்களும் கட்சியினர் ஆதரவையும், அவர்கள் மூலம் மக்கள் ஆதரவையும் பெற்றுவிடுவதில்லை என்பதால் வாரிசு தலைமை என்பதும் ரோஜாப் பூக்களாலான பாதையல்ல. முழுப் பொறுப்பையும் தன் தோளில் ஏற்கும் முன் நிறைய பக்குவப்பட வேண்டும். கூட்டக் காட்சி அரசியல் விஜய்க்கு ஆட்சி செய்ய ஆசை இருக்குமளவு அரசியலில் ஆர்வம் இருக்கிறதா என்றே தெரியவில்லை. ஏனெனில் அப்படி இருந்தால் அரசியல் குறித்து நிறைய பேசுவார். செய்தியாளர்களை சந்திப்பார். பிற அரசியல் தலைவர்களைச் சந்திப்பார். கட்சிக்காரர்களுடன், பல்வேறு மக்கள் பிரிவினருடன் தொடர்ந்து விவாதிப்பார். ராகுல் காந்தி பதினைந்து ஆண்டுகளாகத் தீவிரமாக இவ்விதம் இயங்கி வருகிறார். அவரை சந்தித்தவர்கள் எல்லோருமே அவர் ஆழ்ந்த கவனத்துடன் உரையாடுவதாக, பிரச்சினைகளை அலசி ஆராய்வதாக வியப்புடன் கூறுவதைப் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் ராகுல் காந்தி தன்னை ஒரு தேசியத் தலைவராக செதுக்கிக் கொண்டு வருகிறார். விஜய் அப்படி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லை. அவருடன் ஆலோசனையில் பங்கேற்றதாக எந்த சமூக சிந்தனையாளரும் கூறுவதில்லை. மாறாக ஒரு சில தொழில்முறை அரசியல் ஆலோசகர்கள் தயாரிக்கும் நிகழ்வுகளில் அவர்கள் கூறியபடி செயல்படுகிறார் என்று கூறப்படுகிறது. உதாரணமாக அவர் நீட் தேர்வினால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதா வீட்டிற்கு சென்றபோது தரையில் அமரும்படியும், அனிதாவின் சகோதரர் தோளில் கை போடும்படியும் சொல்லி அனுப்பியதாக மணிகண்டன் வீராசாமி என்பவர் கூறுகிறார். கட்சி அமைப்பை உருவாக்குவதையே விஜய் அவுட்சோர்ஸிங் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா என சிலரிடம் அவர் அந்த பொறுப்புகளைக் கொடுத்து விட்டார். அவர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு சென்று பங்கேற்கிறார். மக்கள் திரளைக் கூட்டி கூட்டக்காட்சி (crowd optics) ஏற்பாடு செய்துவிட்டால் மக்களெல்லாம் தான் சொல்பவர்களுக்கு எல்லா தொகுதிகளிலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகிறார். அப்படி கூட்டக் காட்சி நடக்கும்போது ஏதோ பேச வேண்டுமே என்று தயாரிக்கப்பட்ட உரைகளை தப்பும் தவறுமாக வாசிக்கிறார். அந்த உரைகளில் இடம்பெறும் தகவல் பிழைகளை யார் சுட்டிக் காட்டினாலும் அவர் கவலைப் படுவதில்லை. ரசிகர்கள், பாமர மக்கள் மனோநிலை இத்தகைய உள்ளீடற்ற பதவி மோக அரசியலில் விஜய் ரசிகர்கள் சிக்கி சீரழிவதுதான் வேதனை. அவர்களைப் பொறுத்தவரை தாங்கள் புதிய வரலாறு படைப்பதாக நம்புகிறார்கள். கல்லூரி ஸ்டிரைக்கில் பங்கெடுத்த அனுபவம் உள்ளவர்களுக்கு அந்த மனநிலை புரியும். என்னுடைய கல்லூரி நாட்களில் ஒருமுறை ஸ்டிரைக் செய்த போது என் சக மாணவன் ஒருவன் பிரின்ஸிபல் அறைக்குத் தீவைக்கலாமா என்று கேட்டான். விடுதியில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என்றுதான் ஸ்டிரைக். ஆனால் அதை ஏதோ யுகப்புரட்சி போல நினைக்கும் விடலைப் பருவம். பாமர மனிதர்கள் எல்லா காலங்களிலும் தங்கள் குறைகள் தீர்க்கப் படவில்லை என்ற ஏக்கத்துடன்தான் இருப்பார்கள். அடித்தட்டு மக்களுக்கு நிறைய குறைகள் இருக்கும். அதனால் யாரேனும் ஒரு மீட்பர் உருவாகி பொன்னுலகை படைப்பார்கள் என்ற ஏக்கம் அல்லது கனவு இருக்கும். எவ்வளவு அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூகத்திலும் ஒரு சாராருக்கு இதுபோல யுகப்புரட்சி கனவுகள் இருக்கும். அது மதவாத வடிவமெடுக்கலாம்; புரட்சிகர வடிவமெடுக்கலாம். அல்லது ஏதோவொரு தற்செயலான கவர்ச்சிகர பிம்பத்திற்கு பின்னால் செல்லலாம். உலகிலேயே நவீன மக்களாட்சி சமூகங்களில் மூத்த சமூகம் அமெரிக்காதான். அங்கே மக்களாட்சிக் குடியரசு உருவாகி இருநூற்றைம்பது ஆண்டுகள் ஆகப் போகிறது. அந்த சமூகத்தில் டொனால்ட் டிரம்ப் என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் வியாபாரி, வெகுஜன ஆதரவுடன் அதிபராகி உலகையே கிலியில் ஆழ்த்தி வருவதைப் பார்க்கிறோம். அவருக்கு மன நிலை சரியாக உள்ளதா என்பதைக் குறித்தே பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள். இத்தாலியை எடுத்துக்கொண்டால் குடியரசுத் தத்துவத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை செய்த நாடு அது. ரோமப் பேரரசின் காலத்திலும் சரி, பதினைந்தாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் காலத்திலும் சரி, இத்தாலி பல அரசியல் தத்துவங்களின் பரிசோதனைக் களமாக இருந்தது. அத்தகைய நாட்டில் பெர்லுஸ்கோனி (Silvio Berlusconi, 1936-2023) என்ற எதேச்சதிகாரி வெகுஜன ஆதரவுடன் கோலோச்சியதையும் பார்த்தோம். எனவே தமிழ்நாட்டில் விஜய் போன்ற நடிகர் பின்னால் முதிரா இளைஞர்கள் சிலரும், எளிய மக்கள் சிலரும் திரள்வது அதிசயமல்ல. நம்முடைய அரசியல் முதிர்ச்சி அவரை விமர்சன ரீதியாக எதிர்கொள்வதன் மூலம், கண்டிப்பதன் மூலம் இத்தகைய துர்ச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அதற்காக நாம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ள திராவிட தமிழர் என்ற முற்போக்கு அரசியல் சமூகத்தை குறைகூறத் தேவையில்லை. எந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தாலும் திராவிட அரசியலைக் குறைகூறும் பார்ப்பனீய சமூக நினைவிலி மனதை எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும். கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி
1 month ago
கரூர் சம்பவம்: சமூக வலைதளங்களில் வதந்தி- பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு உட்பட 4 பேர் கைது 30 Sep 2025, 8:25 AM கரூர் துயர சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் பாஜக, தவெக கட்சிகளைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் கலை கலாசார பிரிவு மாநில செயலாளர் சகாயம் (வயது 38), மாங்காட்டை சேர்ந்த தவெக உறுப்பினர் சிவனேஸ்வரன், ஆவடி தவெக உறுப்பினர் சரத்குமார் (வயது 32) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசல் வழக்கு முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கில் கருர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். அத்துடன் தவெக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த வழக்கில் தவெக கரூர் மத்திய மாநகர செயலாளர் பவுன்ராஜ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். https://minnambalam.com/karur-tragedy-bjp-and-tvk-members-arrested-for-spreading-rumors-on-social-media-investigation-underway/#google_vignette
1 month ago
சாமி நீங்களுமா??
1 month ago
ஏ9 வீதியில் பஸ் விபத்து ; மூன்று பேர் காயம்! 30 Sep, 2025 | 12:04 PM ஏ9 வீதியில் அநுராதபுரம், மிஹிந்தலை , பலுகஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/226478
1 month ago
ட்ரம்பின் காசா அமைதி திட்டத்திற்கு முஸ்லிம் நாடுகள் ஆதரவு 30 September 2025 காசா மீது ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 65,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு நேற்று சென்றார். காசா போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள சூழலில், இது பரபரப்பாகப் பார்க்கப்பட்டது. நடப்பு ஆண்டில் 4 ஆவது முறையாக நெதன்யாகு அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அவர், ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ளை மாளிகையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் காசா போரை முடிவுக்குக் கொண்டு வர ட்ரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் தரப்பட்டது. இதனால் காசா போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. எனினும், காசா மற்றும் மேற்கு கரை பகுதியைத் தன்வசம் எடுத்துக் கொள்ளும் முடிவில் நெதன்யாகு இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. காசாவை வருங்காலத்தில் யார் நிர்வகிப்பது? என்பது பற்றியும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காசா விவகாரத்தில் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன் எனச் செய்தியாளர்களிடம் பேசும்போது ட்ரம்ப் கூறினார். இந்த சூழலில், காசா போர் முடிவுக்காக, ட்ரம்ப் மேற்கொள்ளும் முடிவை ஹமாஸ் அமைப்பு ஏற்க வேண்டும் என்று அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இதேபோன்று ட்ரம்ப் முடிவுக்கு நெதன்யாகு ஆதரவு தெரிவித்தபோதும், அதற்கு ஹமாஸ் சம்மதிக்கவில்லை என்றால், பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கையும் வெளியிட்டார். ட்ரம்புக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் ஆதரவாக நிற்கின்றன. எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கின்றன. அவற்றுடன் கூட இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய உலகின் இரு பெரும் முஸ்லிம் நாடுகளும் இதற்கு ஆதரவை வெளிப்படுத்தி உள்ளன. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு என்ன வழிகள் உள்ளனவோ அவற்றை மேற்கொள்ள ட்ரம்ப் முழு அளவில் தயாராக இருக்கிறார் என எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. https://hirunews.lk/tm/422883/muslim-countries-support-trumps-gaza-peace-plan
Checked
Wed, 11/05/2025 - 14:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed