உலக நடப்பு

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல் - தாலிபன் அரசுடன் என்ன பிரச்னை?

4 weeks 1 day ago
ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பாகிஸ்தானிலிருந்து கரோலின் டேவிஸ் & லண்டனிலிருந்து ஃப்ளோரா ட்ரூரி
  • பதவி, பிபிசி
  • 18 மார்ச் 2024, 12:10 GMT
    புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்

ஆப்கானிஸ்தானில் ஒரே இரவில் 2 இடங்களில் பாகிஸ்தான் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எட்டு பேர் கொல்லப்பட்டதாக தாலிபன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திங்கள்கிழமை (மார்ச் 18) உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் நடந்த இந்த "பொறுப்பற்ற" தாக்குதல்களில், பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகிலுள்ள வீடுகள் தாக்கப்பட்டதாக, தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஸைபுல்லா முஜாஹித் தெரிவித்தார்.

பாகிஸ்தான் இதுகுறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால், கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் துருப்புகள் 7 பேரை அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினர் கொன்றதற்காக, “வலுவான பதிலடியை கொடுப்போம்” என, அந்நாட்டு குடியரசு தலைவர் ஆசிஃப் அலி சர்தாரி உறுதியளித்ததைத் தொடர்ந்து இத்தாக்குதல் நடந்துள்ளது.

உயிரிழந்த பாகிஸ்தான் படையினர் இருவரின் இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆசிஃப் அலி சர்தாரி, இதற்கு காரணமானவர்கள் “யாராக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பதிலடி கொடுக்கப்படும்” என தெரிவித்தார்.

வடக்கு வசீரிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் பாகிஸ்தான் ராணுவ தளத்தின் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானிலிருந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. பாகிஸ்தான் அரசாங்கத்தின்படி, இத்தகைய தாக்குதல்களின் எண்ணிக்கை சமீப மாதங்களாக அதிகரித்து வருகின்றன.

பாகிஸ்தான் துருப்புகள் மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடியாகவே இன்று ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் தாக்குதல் நடைபெற்றதாக, பெயர் தெரிவிக்க விரும்பாத உள்ளூர் அரசு அதிகாரியை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

 
பாகிஸ்தானுக்கு தாலிபன் பதிலடி

தலிபான் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் ஒரு அறிக்கையில், "ஆப்கானிஸ்தான் பிரதேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்ய யாரையும் அனுமதிக்காது. இந்த தாக்குதல்களில் கிழக்கு எல்லையான கோஸ்ட் மற்றும் பக்திகா மாகாணங்களில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர்", என்று குறிப்பிட்டுள்ளார்.

தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாக எல்லையில் பாகிஸ்தான் துருப்புகளை அதன் பாதுகாப்புப் படைகள் குறிவைத்ததாகக் கூறியுள்ளது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்ததாக அல்ஜசீரா மற்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம்
வான்வழி தாக்குதல்களில் 8 பேரை கொன்றதாக பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

உயிரிழந்த பாகிஸ்தான் படையினரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட ஆசிஃப் அலி சர்தாரி

ஆனால், தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஸைபுல்லா முஜாஹித் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "கட்டுப்பாடு இல்லாதது மற்றும் தங்கள் பிரதேசத்தில் உள்ள பிரச்னைகளுக்கு ஆப்கானிஸ்தானை குறை கூற வேண்டாம்" என்று பாகிஸ்தானை எச்சரித்தார்.

”இதுபோன்ற சம்பவங்கள், பாகிஸ்தானால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்,” என்றும் அவர் கூறினார்.

இந்த தாக்குதல்களில் "மக்கள் குடியிருந்த வீடுகள்" தாக்கப்பட்டதாகவும் இதில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

2021-ம் ஆண்டில் தாலிபன்கள் நாட்டை மீண்டும் கைப்பற்றியதில் இருந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில், பாகிஸ்தான் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களை பாகிஸ்தானை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியது. பாகிஸ்தானில் தங்குவதற்கு அவர்களிடம் சரியான ஆவணங்கள் இல்லை என அந்நாடு கூறியது. பல அகதிகள் மற்றும் புகலிடம் கோரி வந்தவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாக மனித உரிமைக் குழுக்கள் விமர்சித்தன.

பாதுகாப்புக் காரணங்களுக்காக இதைச் செய்ததாக அந்த நேரத்தில் பாகிஸ்தான் காபந்து அரசாங்கத்தின் அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் மீண்டும் கைப்பற்றிய பிறகு, அதனை ஆயுதக் குழுக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், ஆயுதக் குழுக்களை ஆதரிக்கவில்லை என தாலிபன்கள் மறுத்துள்ளதாக, ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cx9zxqy4er5o

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

4 weeks 1 day ago
spacer.png 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

“அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், 88 சதவீத வாக்குகளுடன் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் அவர் ஜனாதிபதி அரியணையில் ஏறியிருக்கிறார்.

இதன்போது, கருத்து தெரிவித்த விளாடிமிர் புட்டின்,

வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும்.

ஆனால், அத்தகையச் சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை.

மூன்றாவது உலகப்போர் வெகு தொலைவில் இல்லை. ஒரே அடி தொலைவில் தான் இருக்கிறது.

அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை. அங்கே இப்போது பெரிய குளறுபடியான சூழல் மட்டுமே நிகழ்கிறது.

நிலவரம் அப்படியிருக்க அவர்கள் ரஷ்ய தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நகைப்புக்குரியது என அவர் தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1373835

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் திடீர் தாக்குதல் - டாங்கிகளை பயன்படுத்தியும் தாக்குதல்

4 weeks 1 day ago

Published By: RAJEEBAN   18 MAR, 2024 | 12:07 PM

image

காசாவின் அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதலொன்றை மேற்கொண்டது என பிபிசி தெரிவித்துள்ளது.

மருத்துவமனைக்குள் டாங்கி மற்றும் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்கின்றன எனவும் தெரிவித்துள்ள பிபிசி  தாங்கள் மிகவும் துல்லியமான உயர் இலக்கை மையப்படுத்திய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் ஒன்றுசேர்ந்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

alshifa11.jpg

காசாநகரில் உள்ள மருத்துவமனையில் பதற்றநிலை காணப்படுகின்றது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

டாங்கிகள் எங்களை சூழ்ந்துள்ளன நாங்கள் கூடாரங்களுக்குள் மறைந்திருக்கின்றோம் டாங்கிகளின் சத்தங்களை எங்களால் கேட்க முடிகின்றது என ஒருவர் தெரிவிக்கும் குரல்பதிவு கிடைத்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியாகும் உறுதிப்படுத்தப்படாத வீடியோக்களில் மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி சத்தங்களை கேட்க முடிகின்றது.

மருத்துவமனைக்குள் இராணுவத்தினர் காணப்படுகின்றனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர், காயமடைந்துள்ளனர், சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பேரழிவு நிலை காணப்படுகின்றது என ஊடகவியலாளர் ஒருவர் மருத்துவமனைக்குள் இருந்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய படையினர் மிகவும் உறுதியான புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் செயற்படுகின்றனர் என இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179008

ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி.

4 weeks 1 day ago

ரஸ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளார்.

தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 87 வீதமான வாக்குகள் புட்டினுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி புட்டின் ஐந்தாம் தடவையாகவும் ரஸ்யாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

வாக்கு பதிவு

ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி | Kremlin Vladimir Putin Claim Landslide

கடந்த மூன்று நாட்களாக ரஸ்யாவில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் காலப் பகுதியில் பல்வேறு எல்லைப் பகுதிகளில் உக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த தேர்தலில் புட்டினை எதிர்த்து மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர் என்பதுடன் அவர்கள் பெயரளவில் தேர்தலில் போட்டியிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புட்டினுக்கு எதிரான போட்டியிடக் கூடிய வலுவான வேட்பாளர்கள் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.

ரஸ்யாவின் அபிவிருத்தியை மேற்குலக நாடுகள் தடுக்கின்றன

ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி | Kremlin Vladimir Putin Claim Landslide

 

எதிர்பார்க்கப்பட்டவாரே தேர்தலில் தாம் வெற்றியை பதிவு செய்ததாக புட்டின் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்தியை மட்டுப்படுத்தும் நோக்கில் மேற்குலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளின் முயற்சிகளை முறியடித்து ரஸ்ய மக்கள் தங்களது ஒற்றுமையை தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், இராணுவத்தை விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என புட்டின் தெரிவித்துள்ளார்.

இம்முறை தேர்தலில் 74 வீதமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக ரஸ்ய அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

https://tamilwin.com/article/kremlin-vladimir-putin-claim-landslide-1710720576

 
 
 
 
 

தோழியை மணமுடித்தார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்

4 weeks 2 days ago
உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம் - தனது நீண்டகால தோழியை மணமுடித்தார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்

Published By: RAJEEBAN   17 MAR, 2024 | 01:02 PM

image

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்ச பெனிவொங் தனது நீண்டகாலதோழி சோபி அல்லோச்சசுடன் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார். 

penny_wong_11.jpg

அவுஸ்திரேலியாவின் இந்த ஒருபால் இனத்தவர்கள் திருமணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அடிலெய்ட் ஹில்ஸ் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வில் பிரதமர் அன்டனி அல்பெனிஸ் உட்பட  தொழில்கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் இது குறித்த தகவல்களை பதிவிட்டுள்ள பெனிவொங் இந்த விசேடமான நாளை எங்களின் பல நண்பர்கள் குடும்பத்தவர்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கை துணையுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட படத்தையும் பெனிவொங் வெளியிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் 2007 இல் தனது வாழ்க்கை துணையை சந்தித்தார். இவர்களிற்கு இரு பெண்பிள்ளைகள் உள்ளனர். எனினும் இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விடயங்களை மிகவும் இரகசியமாக பேணிவருகின்றனர்.

https://www.virakesari.lk/article/178934

ஐரோப்பாவில் அடுத்தடுத்து தகர்க்கப்படும் அணைகள் - என்ன காரணம்?

4 weeks 2 days ago
ஐரோப்பாவில் இடிக்கப்படும் பழைய அணைகள்

பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021

கட்டுரை தகவல்
  • எழுதியவர், லுக்ரேசியா லோசா
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 16 மார்ச் 2024

செயற்கையாக கட்டப்பட்ட அணைகள் நீண்ட காலமாக ஐரோப்பாவின் நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்த பழைய அணைகள் காலப்போக்கில் பலவீனமடைந்து, தகர்க்கப்படும் போது, ஆறுகள் தாங்கள் இழந்த வழித்தடங்களை அணைத்துக் கொள்கின்றன. ஆறுகளின் வழித்தடங்களை மீட்கும் திட்டங்கள் தற்போது ஐரோப்பாவில் அதிகரித்து வருகின்றன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பின்லாந்தில் உள்ள ஹிடோலான்ஜோகி ஆற்றில் உள்ள அணைகளை கட்டுமானத் தொழிலாளர்கள் இடிக்கத் தொடங்கியபோது, சால்மன் மீன்கள் நீரில் செல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அழிந்துவிட்டதாக நம்பப்பட்ட சால்மன் மீன்கள் பல வருடங்களுக்கு பிறகு ஆற்றில் காணப்பட்டன.

சுற்றுச்சூழல் மேம்படுவதற்கான ஒரு அறிகுறியாக இதைப் பார்க்கிறார் பாலினா லூஹி. "அதில் பெரிய மீன்கள் மட்டுமல்ல, பல சால்மன் குஞ்சுகளும் இருந்தன," என்று ஃபின்லாந்தின் சூழலியல் நிபுணர் லூஹி ஆர்வத்துடன் கூறுகிறார்.

"அவை ஏற்கனவே ஆற்றின் ஆழமான பகுதியில் முட்டையிட்டுக் கொண்டிருந்தன. அணையை அகற்றிய பிறகு அந்த இடம் எப்படி இருந்தது என்பதைப் பார்த்தபோது, உண்மையில் என் கண்களில் கண்ணீர் வந்தது." எனக் கூறுகிறார் லூஹி.

ஐரோப்பாவில் இடிக்கப்படும் பழைய அணைகள்

பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021

மீட்கப்படும் நதிகளின் வழித்தடங்கள்

லடோகா ஏரியிலிருந்து பின்லாந்துக்கு இடம்பெயரும் நன்னீர் சால்மன் மீன்களுக்கு இந்த நதி ஒரு முக்கிய பாதையாக இருக்கிறது. ஆனால் 1911 மற்றும் 1925க்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் மூன்று அணைகளின் கட்டுமானம், சால்மன் மீன்கள் மற்றும் அவற்றின் முட்டையிடும் இடங்களுக்கு இடையில் புதிய தடைகளை உருவாக்கியது. சால்மன் மற்றும் பிற மீன்களான பழுப்பு ட்ரவுட் போன்றவை ஆற்றின் மற்றொரு பக்கத்தில் சிக்கிக்கொண்டன.

இன்று அணைகள் அகற்றப்பட்ட நிலையில், உயரமான மரங்களால் சூழப்பட்ட புதிதாக கட்டப்பட்ட ரேபிட்கள் வழியாக மீண்டும் தண்ணீர் ஓடுகிறது. ஒவ்வொரு முறை அணை அகற்றப்படும்போதும், சால்மன் மீன்கள் ஆற்றின் புதிய பகுதியை "தழுவிக் கொள்கிறது" என்கிறார் தென் கரேலியன் ரிக்ரியேஷன் ஏரியா அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் ஹன்னா ஒல்லிகைனென்.

பழைய அணைகளை கையகப்படுத்தி, அதை சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு பயன்படுத்தும் பொறுப்பு இந்த அறக்கட்டளையின் கைகளில் உள்ளது. 2021ஆம் ஆண்டில் முதல் அணை அகற்றப்பட்ட பிறகு, மீன்களின் ஐந்து முட்டையிடும் கூடுகள் நீரில் காணப்பட்டன.

ஒரு வருடம் கழித்து, 2022 இலையுதிர் காலத்தில் ஒரு ஏக்கருக்கு 200 சாலமன் மீன்கள் (0.4 ஹெக்டேர்) என்ற சாதனையை எட்டியது. 2023 டிசம்பரில் ரிடகோஸ்கி என்ற மேல் அணையை இடிக்கும் பணி முடிந்ததும், சாலமன் மீன்களால் ஆற்றின் மேல் பகுதிகளுக்கும் அதன் துணை நதிகளுக்கும் செல்ல முடிந்தது.

ஆற்றின் ஆரோக்கியம் மட்டுமல்ல, பொருளாதார சூழலையும் கருத்தில் கொண்டு பல பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பணியின் விளைவாக மூன்று அணைகளும் அகற்றப்பட்டன என்கிறார் ஒல்லிகைனென். இந்த அணைகளின் பராமரிப்பு செலவுகள் மற்றும் கட்டாய சுற்றுச்சூழல் பாதுகாப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அணைகளால் மின் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கு லாபமில்லை என்று மதிப்பீடுகள் முடிவு செய்தன என ஒல்லிகைனென் கூறுகிறார். அதனால் அணைகள் அகற்றப்பட்டன.

எவ்வாறாயினும், மூன்று ஃபின்னிஷ் அணைகளின் அகற்றம் என்பது ஒரு தனிப்பட்ட வழக்கு அல்ல. ஐரோப்பா முழுவதும், பல பழைய அணைகள் அவற்றின் முடிவை நெருங்கி வருகின்றன அல்லது அவற்றின் பராமரிப்பு செலவுகள் அவை வழங்கும் லாபத்தை விட அதிகமாக உள்ளன. இது போன்ற பெரிய அணைகள் மட்டுமல்ல, லட்சக்கணக்கான சிறிய அணைகளும் ஐரோப்பிய நதிகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ளன.

 
ஐரோப்பாவில் இடிக்கப்படும் பழைய அணைகள்

பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021

பெரிய அணைகளால் தொடரும் பிரச்னை

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற அதிக தொழில்மயமான பகுதிகளில் உள்ள ஆறுகள் பல நூற்றாண்டுகளாக, சாலைகள் கட்டமைத்தல், விவசாயத்திற்கான நீர் எடுத்தல், நீர் ஆலைகள் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்யும் கட்டமைப்புகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆராய்ச்சியாளர்களின் மதிப்பீடுகளின்படி, உலகின் மூன்றில் ஒரு பங்கு ஆறுகள் மட்டுமே அதன் முழு வழித்தடத்தில் 1,000 கிமீக்கும் (621 மைல்கள்) அதிகமான தூரத்திற்கு சுதந்திரமாக பாய்கின்றன.

இத்தகைய தடைகள் தொடர் பிரச்னைகளை உருவாக்கியுள்ளன. அவை பல்லுயிர் இழப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மீன் மற்றும் நுண்ணுயிரிகளை பாதிக்கிறது. மேலும் ஆறுகளின் வளங்கள் மற்றும் வண்டல்கள் கீழ்நோக்கி பாய்வதைத் தடுக்கிறது. இதனால் மீன்வளம் மற்றும் அவற்றைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அணைகள், ஆற்று நீரில் உள்ள வண்டல்களைத் தடுப்பதால், கீழ்நிலை நீரும் அதிக அரிக்கும் தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது.

நதியின் வழித்தடத்தில் ஏற்படும் இந்த துண்டிப்பு, நீர்வாழ் உயிரினங்களை பாதிக்கிறது. ஆற்றின் இயக்கவியல் மற்றும் வெப்பநிலையை மாற்றியமைக்கிறது என சான் பிரான்சிஸ்கோ எஸ்டூரி இன்ஸ்டிடியூட்டில் உள்ள மீள் நிலப்பரப்பு திட்டத்தின் அறிவியல் இயக்குனர் மெலிசா ஃபோலே விளக்குகிறார்.

ஐரோப்பாவில் இடிக்கப்படும் பழைய அணைகள்

பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021

அழிவின் விளிம்பில் நன்னீர் மீன் இனங்கள்

இனப்பெருக்கம் செய்ய இடம்பெயரும் உயிரினங்களுக்கும் பல தடைகளை உருவாக்குகின்றன அணைகள். குறிப்பாக மீன்களின் எண்ணிக்கையில் ஏற்படும் தாக்கம். ஐநாவின் COP28 காலநிலை மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகின் 25% நன்னீர் மீன் இனங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகவும், மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளான 45% நன்னீர் மீன் இனங்கள் அணைகள் மற்றும் நதியிலிருந்து நீர் எடுப்பதால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்கின்றன என தெரிவிக்கப்பட்டது.

இது புலம்பெயர்ந்த மீன்களை மட்டுமல்ல, நீர்வழிப்பாதையில் வாழும் சிறிய மீன்களை கூட பாதிக்கிறது. பல்லுயிர் இழப்புக்கான ஐந்து முக்கிய காரணங்களில் பிராக்மெண்டேஷன் (Fragmentation) செயல்முறை கூட உள்ளது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

36 ஐரோப்பிய நாடுகளில் குறைந்தது 1.2 மில்லியன் தடைகள் நதி ஓட்டத்தைத் தடுக்கின்றன எனவும், அதில் சுமார் 68 சதவீத தடைகள் 2 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டவை என ஆராய்ச்சி காட்டுகிறது. "20 செ.மீ அளவுக்கு சிறிய தடைகள் கூட சில உயிரினங்களின் இயக்கத்தை பாதிக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்" என்கிறார் ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் நீர்வாழ் உயிரியலில் பேராசிரியரும், அம்பர் ஒருங்கிணைப்பாளருமான கார்லோஸ் கார்சியா டி லீனிஸ்.

2016ஆம் ஆண்டு முதல், ஆம்பர் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கார்சியா டி லீனிஸின் ஒருங்கிணைக்கப்பட்ட குழு ஐரோப்பா முழுவதும் 2,000 கிமீ (1,243 மைல்) ஆறுகளின் வழித்தடங்களில் பயணம் செய்து, அவற்றின் துண்டிப்புகளை, தடைகளை வரைபடமாக பதிவுசெய்தது. அவர்கள் அணைகள் மட்டுமல்லாது, மதகுகள், பிற சிறிய தடுப்பணைகளையும் பதிவு செய்துள்ளனர்.

பயனற்ற 150,000 அணைகள்

உண்மையில் ஒரு அணை அல்லது தடையை அகற்றும் போது, பல காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும். உரிமம் மற்றும் மாநில சட்டங்கள், பொறியியல் பணிக்கான நிதி மற்றும் சாத்தியக்கூறுகள் வரை. ஐரோப்பாவின் 150,000 நீர்வழித் தடைகள் இப்போது பயனற்றுப் போனதாகக் கருதப்படுகிறது. பழைய அணைகளுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படுகிறது, மேலும் அவை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன.

ஐரோப்பாவில் ஆயுட்காலம் முடிந்துவிட்ட, காலாவதியான அணைகளுக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன, அவற்றின் பராமரிப்பு செலவுகள் இப்போது ஆற்றல் உற்பத்தியின் நன்மைகளை விட அதிகமாக உள்ளன, 2016 இல் நிறுவப்பட்ட 'ஐரோப்பாவின் அணை அகற்றும் திட்டக் குழுவின்' மேலாளர் பாவோ பெர்னாண்டஸ் கரிடோ விளக்குகிறார். ஐரோப்பாவின் அணை அகற்றும் திட்டக் குழு 2022இல் குறைந்தது 325 தடைகளை அகற்றியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 36% அதிகம்.

அணைகள் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை ஒப்புக்கொள்வதால், ஆற்றல் உற்பத்தியில் நீர்மின்சாரத்தின் நன்மைகளை புறக்கணிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. "பயன்பாட்டில் உள்ள அணைகளை தகர்க்கவோ அல்லது அகற்றவோ யாரும் நினைப்பதில்லை" என்று கார்சியா டி லீனிஸ் தெளிவுபடுத்துகிறார். "நாங்கள் காலாவதியான அணைகளை அகற்றுவதை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளோம். அதனால் இனி சமூகத்திற்கு எந்த பயனுமில்லை மற்றும் நதியின் ஓட்டத்தை தடுக்கின்றன"

நாட்டிற்கு நாடு வேறுபட்டாலும், அணையை அகற்றும் செயல்முறைக்கு சட்டம் உதவும். ஐரோப்பாவில் அணைகளை அகற்றுவதில் ஸ்பெயின் நாடு முன்னணியில் உள்ளது. 2022இல் 133 அணைகள் தகர்க்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஸ்வீடன் மற்றும் பிரான்ஸும் இதை முன்னெடுக்கின்றன. நதிகள் இணைப்பு என்பது ஐரோப்பிய ஆணையத்தின் இயற்கை மறுசீரமைப்புச் சட்டத்தின் மையப் பொருளாகவும் உள்ளது.

நவம்பர் 2023இல், ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தற்காலிக உடன்படிக்கைக்கு முன்வந்தன. 2030க்குள் ஆறுகளுக்கு 25,000 கிமீ (15,530 மைல்கள்) தடைகளற்ற நீர் வழித்தடத்தை சாத்தியமாக்க, மனிதனால் உருவாக்கப்பட்ட தடைகளை அகற்றுவதற்கான கடமையும் அடங்கும். இந்தச் சட்டம் பிப்ரவரி 27 அன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

ஐரோப்பாவில் மட்டும் இந்த பணிகள் நடக்கவில்லை. ஐரோப்பாவின் இத்தகைய முயற்சிகளுக்கு அமெரிக்காவில் நடைபெற்று வரும் அணைகள் தகர்ப்பு வேலைகளே முன்னுதாரணம் என பெர்னாண்டஸ் கரிடோ கூறுகிறார். அமெரிக்காவில் சராசரியாக 62 ஆண்டுகள் பழமையான 92,000 அணைகள் உள்ளன.

1999ஆம் ஆண்டு கென்னபெக் ஆற்றின் மீது எட்வர்ட்ஸ் அணை அகற்றப்பட்டதே அமெரிக்காவின் முதல் பெரிய அணை அகற்றப்பட்ட சம்பவம். 1837இல் கட்டப்பட்ட அந்த அணையின் உரிமம் 1997இல் காலாவதியானபோது, ஃபெடரல் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அதை புதுப்பிக்கவில்லை. ஆற்றின் சுற்றுச்சூழல் நன்மைகளுக்கு அது முன்னுரிமை அளித்தது. இதுவரை கிட்டத்தட்ட 2,000 அணைகள் அமெரிக்க நதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. அதாவது எட்வர்ட்ஸ் அணை அகற்றப்பட்டதிலிருந்து 76% அணைகள் அகற்றப்பட்டுள்ளன.

 
ஐரோப்பாவில் இடிக்கப்படும் பழைய அணைகள்

பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021

அணைகள் இடிக்கப்படுவது எப்படி?

அணைகள் வெடிப்பொருட்கள் மூலமாக உடனடியாக உடைத்துவிட முடியாது. மாறாக, அணையை அகற்றுதல் என்பது நுட்பமாக திட்டமிடப்பட்ட ஒரு பொறியியல் பணி. ஹைடோலான்ஜோகி ஆற்றில், புல்டோசர்கள் படிப்படியாக கான்கிரீட் சுவர்களை உடைத்தன. இதனால் நீர் மெதுவாக வெளியேற்றப்பட்டது.

"அணைக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது செயல்முறையின் ஒரு பகுதியாகும். வண்டல் எங்கே முடிகிறது? வண்டல் அனைத்தும் தோண்டி எடுக்கப்படுகிறதா? பாதிப்பைக் குறைக்கும் உத்திகள் என்ன? என அனைத்தையும் ஆராய்வோம்" என்று ஃபோலி கூறுகிறார்.

இன்றுவரை மிகப்பெரிய நதி மறுசீரமைப்பு திட்டங்களில் ஒன்று பிரான்ஸின் நார்மண்டியில் உள்ள செலூன் ஆற்றில் நடந்துள்ளது. 2019 மற்றும் 2023க்கு இடையில் இரண்டு பெரிய அணைகள் அகற்றப்பட்டு, ஆற்றின் 60 கிமீ (37 மைல்) நீர்வழித்தடம் திறக்கப்பட்டது. 1920களில் இருந்து செயல்படும் இரண்டு அணைகளும் ஒரு நூற்றாண்டு காலமாக அட்லாண்டிக் சால்மன், லாம்ப்ரேஸ் மற்றும் ஐரோப்பிய ஈல்கள் போன்ற மீன்களின் இடம்பெயர்வை முற்றிலும் தடுத்துவிட்டன.

"கனரக பொறியியல் பணிகள் மூலம் நீர் மெதுவாக வெளியேற்றப்பட்டதால், அணையின் பின்புறம் குவிந்திருந்த வண்டல் மண் கரைகளை மீண்டும் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது. தாவரங்கள் மிக விரைவாக மீண்டும் வளர்ந்தன, உண்மையில் வண்டல் அதிக வளங்கள் நிறைந்ததாக இருந்தது. தாவரங்கள் கரைகளை உறுதிப்படுத்த உதவியது மற்றும் நிறைய உயிரினங்களுக்கு நிழல் மற்றும் தங்குமிடம் உருவாக்கவும் அது உதவியது" என்று திட்டத்தைக் கண்காணித்து வரும் இன்ரேயில் உள்ள செலூன் அறிவியல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லாரா சொய்சன்ஸ் கூறுகிறார்.

அணையை அகற்றுவதற்கான இயற்பியல் கூறுகளை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. அணைகள் அமைந்திருக்கும் நிலப்பரப்புகளுடன் உள்ளூர் மக்களுக்கு வலுவான தொடர்புகள் இருக்கும் என்பதால் அணைகள் அகற்றப்பட்டதன் பின்னணியில் உள்ள காரணங்களை அவர்களிடம் தெரிவிப்பதும் முக்கியம் என்று செலூன் திட்டம் அறிவுறுத்துகிறது.

"இந்த அணைகள் நீண்ட காலமாக இருக்கும் போது, ஒரு நதி சுதந்திரமாக ஓடுவது எப்படி இருக்கும் என்பதை மக்களுக்குக் காண்பிப்பது சவாலாக இருக்கும்" என்கிறார் ஃபோலே.

செலூன் ஆற்றில் அணை அகற்றும் பணிக்கு முன்பு, உள்நாட்டில் வசிக்கும் மக்கள் அணைகளுக்குப் பின்னால் உள்ள ஏரிகளை படகு சவாரி மற்றும் மீன்பிடித்தல் போன்ற பல நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினர். ஆனால் நீர்த்தேக்கங்களில் நச்சு சயனோபாக்டீரியா வளர்ந்து கொண்டிருந்தது. இறுதியில் அந்த நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. " என இன்ரே செலூன் அறிவியல் திட்டத்தின் ஆராய்ச்சி இயக்குனர் ஜீன்-மார்க் ரூசல் கூறுகிறார்.

டென்மார்க்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மீன் சூழலியல் நிபுணர் கிம் பிர்னி-கௌவின் மற்ற அணைகளை அகற்றும் விஞ்ஞானிகளுடன் செலூன் ஆற்றுக்குச் சென்றபோது, உள்ளூர் மக்கள் மிகுந்த வருத்தமாக இருந்ததைக் கண்டனர். ஆனாலும் கூட, ஒருவருக்கு அதில் சந்தோஷம் இருந்ததாக பிர்னி-கௌவின் நினைவு கூறுகிறார்.

"அணை கட்டப்பட்டபோது அவரது தாத்தாவுக்கு அதில் ஈடுபாடு இல்லை. அந்த பகுதியின் நிலப்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தை அவரது தாத்தா விரும்பவில்லை" என்று பிர்னி-கௌவின் கூறுகிறார்.

 
ஐரோப்பாவில் இடிக்கப்படும் பழைய அணைகள்

பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021

அமெரிக்கா, ஐரோப்பாவில் அடுத்தடுத்து தகர்க்கப்படும் அணைகள்

அணைகளை அகற்றுவதால் அட்டகாசமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. செலூனில் தாவரங்கள் மீண்டும் வளர்ந்தது மட்டுமல்லாமல், மீன்கள் கூட மீண்டும் தென்பட்டன. இரண்டாவது அணை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து மேலும் சில சால்மன் மீன்கள் ஆற்றின் மேற்பகுதிக்கு வந்தன.

இதேபோல், ஐரோப்பிய விலாங்கு மீன்களும் இப்போது முழு நீர்ப்பிடிப்பையும் மீண்டும் ஆக்கிரமித்துள்ளன மற்றும் கடல் லாம்ப்ரே எனப்படும் மீன்களும் புதிய வாழ்விடங்களை முட்டையிடும் இடங்களாகப் பயன்படுத்துகின்றன.

மக்களுக்கும் அணையை அகற்றுவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நீரின் நச்சுத்தன்மையை நீக்குவதுடன், மீட்டெடுக்கப்பட்ட ஆறுகளால் சுற்றுலா வாய்ப்புகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ஹிடோலான்ஜோகி ஆறு ஒரு சுற்றுலாத் தலமாக மாற தயாராக உள்ளது என்று ஒல்லிகைனென் கூறுகிறார்.

இதேபோல் அமெரிக்காவில் அணைகளை அகற்றுவதால் மக்கள் நதிக் கரைகளுக்குத் திரும்புகின்றனர். மைனே மாநிலத்தில் பெனோப்ஸ்கோட் நதியின் அணை அகற்றப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நீரின் தரம் மற்றும் நீச்சல், படகு சவாரிகள் மற்றும் வனவிலங்குகளைப் கண்டுகளிப்பது போன்ற நடவடிக்கைகளில் அதிகரித்துள்ளதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

மேலும், அணையை அகற்றுவதற்கு ஆதரவான முக்கிய பங்குதாரர்களில் ஒருவரான பெனோப்ஸ்கோட் இந்திய தேசத்துடன் ஆற்றின் சுதந்திரமான பாயும் நிலையை மீட்டெடுப்பது பெரும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது .

ஆரம்பத்தில் அணையை அகற்றும் திட்டம் சில சந்தேகங்களை ஏற்படுத்தியது என்றும் உள்ளூர் மக்கள் சிலர் கவலை தெரிவித்தனர் என்றும் ஆனால் இப்போது நீர் விளையாட்டு மைதானமாக மாறிவிட்டது, கயாக் போட்டிகள் நடத்தப்பட்டது. மக்கள் ஆற்றை இன்னும் அதிகமாக நேசிக்கிறார்கள் என்றும் கூறுகிறார் மூத்த விஞ்ஞானி ஜோசுவா ராய்ட்.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் நதிகள் இணைப்பை மீட்டெடுக்க அணைகளை அகற்றுவது ஒரு சாத்தியமான வழியாக இருக்கும் என்று நிரூபித்து காட்டினாலும், இதில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அமேசான், காங்கோ மற்றும் மீகாங் படுகை போன்ற முக்கிய நதிகளில் புதிய அணைகள் கட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கவலைப்படுகின்றனர்.

இதேபோன்ற கவலைகள் பால்கன் பகுதியிலும் உள்ளது. அங்கு ஏராளமான சிறிய நீர்மின் நிலையங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உலகில் வேறு எங்கும் சிறிய, குறைந்த திறன் கொண்ட நீர்மின் அணைகள் கட்டப்பட்டால் ஐரோப்பாவில் உள்ள அணைகளை அகற்றுவதில் அர்த்தமில்லை என்கிறார் கார்சியா டி லீனிஸ்.

"நாம் சற்று விரிவாக யோசிக்க வேண்டும். சிறிய அணைகள் ஒருபோதும் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யப் போவதில்லை, அவை மேலும் அதிக சேதத்தை ஏற்படுத்தப் போகின்றன. அதற்காக அணைகளே வேண்டாமென்று சொல்லவில்லை, ஆனால் நல்லதை விட சுற்றுச்சூழலுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் பழைய அணைகளே எங்கள் இலக்கு" என்கிறார் கார்சியா டி லீனிஸ்.

https://www.bbc.com/tamil/articles/cndjyxprkw6o

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

4 weeks 2 days ago

Published By: RAJEEBAN   17 MAR, 2024 | 11:33 AM

image

2024 ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்றால் அது இரத்தக்களறியை ஏற்படுத்தும் என  முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்ச்சை கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட கார்களிற்கு 100 வீத வரியை விதிப்போம் என தெரிவித்துள்ள டிரம்ப் நான் தெரிவு செய்யப்பட்டால் அந்த வெளிநாட்டு கார்களை விற்கமுடியாத நிலையேற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை டிரம்பின் இந்த கருத்து அவர் மற்றுமொரு ஜனவரி ஆறாம் திகதியை விரும்புகின்றார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என ஜனாதிபதி ஜோ பைடனின் பிரச்சார பிரிவின் பேச்சாளர் ஜேம்ஸ் சிங்கெர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்கள் டிரம்பின் தீவிரபோக்கினை தொடர்ந்து நிராகரித்துவருவதால் நவம்பர் தேர்தலில் அவர்கள் அவரை நிராகரிக்கப்போகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்க மக்கள் அவரின் வன்முறை மீதான விருப்பம் பழிவாங்கும் குணம் ஆகியவற்றை நிராகரிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/178924

Akira Toriyama Death-க்கு உலகம் முழுவதும் அஞ்சலி ஏன்? Dragon Ball உருவானது எப்படி?

1 month ago

Akira Toriyama: காமிக்ஸ் உலகில் நீண்ட நாட்களாக ஆதிக்கம் செலுத்தி வரும், உலக அளவில் பிரபலமான ஜப்பானிய மாங்காக்களில் ஒன்றான ட்ராகன் பால் என்ற மாங்கா தொடரை உருவாக்கிய அகிரா டொரியாமா  கடந்த மார்ச் 1ஆம் தேதி தனது 68வது வயதில் உயிரிழந்தார். ஒருவகையான மூளை ரத்தக்கசிவு நோயால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாக கடந்த வெள்ளிக்கிழமை தகவல் வெளியிடப்பட்டது. 

தங்கள் குழந்தைப் பருவத்தின் ஓர் அங்கமாக மாறிப்போன கதாபாத்திரங்களை உருவாக்கிய அகிரா டொரியாமாவுக்கு உலகம் முழுவதும் உள்ள அனிமே ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். 

உலகம் முழுவதும் பிரபலமான டிராகன் பால் இரு நாடுகளிடையே ராஜ்ஜிய ரீதியிலான சச்சரவு ஏற்படக் காரணமாக இருந்தது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

அகிரா டொரியாமா டிராகன் பால் கதையை உருவாக்கியது எப்படி? காமிக் ரசிகர்கள் இடையே அது ஏற்படுத்திய தாக்கம் என்ன? போன்றவற்றை இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

மனித எலும்புகளின் சேகரிப்பகம்

1 month ago
இந்திய வணிகர் கிடங்கில் மீட்ட 1,500 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் - மருத்துவ உலகை புரட்டிப்போட்ட சம்பவம்
மனித எலும்புகளின் சேகரிப்பகம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், எலியோனோர் ஃபிங்கெல்ஸ்டீன்
  • பதவி, பிபிசிக்காக
  • 40 நிமிடங்களுக்கு முன்னர்

சுமார் 5 கோடி மதிப்புள்ள மனித எலும்புகளைச் சேகரித்து வைத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஜான் பிச்சயா ஃபெர்ரி. சமூக ஊடகங்களில் பலர் இவரைப் பின்தொடர்கின்றனர்.

எலும்பியல் துறைக்கு இவரது பணி புத்துயிர் அளிக்கிறது. நியூயார்க் நகரின் புரூக்ளினில் உள்ள அவரது கிடங்கிற்குச் சென்றபோது, தான் சேகரித்த எலும்புகள் மற்றும் கண்டுபிடித்த கண்கவர் பொருட்களைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு அளித்தார்.

'முறையாக சேகரிக்கப்பட்ட மனித எலும்புகள்' என்றால் என்ன? அவற்றைச் சேகரிப்பதால் எலும்பியல் துறைக்கு என்ன பயன்? மனித இனம் குறித்தும், அதன் வரலாறு குறித்தும் இந்த எலும்புகள் மூலம் எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?

 
மனித எலும்புகளின் சேகரிப்பகம்
மனித எலும்புகளின் சேகரிப்பகம்

"பல வீடுகளின் அடித்தளத்தில், பழங்கால குடியிருப்புகளின் பாதாள அறைகளில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மனித எலும்புகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிக்கும் மக்களுக்கு அதை என்ன செய்வதென்று தெரியவில்லை. முறையாகச் சேகரிக்கப்பட்ட மனித எலும்புகளைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மனித எச்சங்களின் சேகரிப்பகம் இது," என்கிறார் ஜான் பிச்சயா ஃபெர்ரி.

ஒருகாலத்தில் மருத்துவ ஆய்வுகளுக்காக எலும்புகளை விற்பனை செய்யும் நடைமுறை பிரபலமாக இருந்தது. 1980களில் அந்த முறை முடிவுக்கு வந்தது. அப்போது பெறப்பட்ட எலும்புகளை வாங்கித் தனது சேகரிப்பகத்தில் ஜான் வைத்துள்ளார்.

"மருத்துவ ஆய்வுகளுக்காக தங்கள் உடலை தானமாக அளித்தவர்களின் மனித எச்சங்கள் இவை. சட்டத்திற்குப் புறம்பாக கல்லறைகளில் இருந்தோ அல்லது பழங்கால புதைவிடங்களில் இருந்தோ இதைப் பெறவில்லை. இவை பழங்குடிகளின் எலும்புகளும் இல்லை. அத்தகைய பொருட்களை நான் வாங்குவதில்லை," என்கிறார் ஜான்.

அமெரிக்காஅல்லது ஐரோப்பாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கும் வல்லுனர்களுக்கும் 1980கள் வரை ஆய்வுப் பணிகளுக்காக அசல் மனித எலும்புகளை வாங்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் இன்று அதுபோன்ற ஆயிரக்கணக்கான மனித எலும்புகள், ஏலத்தின் மூலமாக அல்லது குடும்பச் சொத்தாக பல தனி மனிதர்களின் பொறுப்பில் உள்ளது.

"ஒரு மாதத்திற்கு 30 முதல் 50 மின்னஞ்சல்கள் வரை எங்களுக்கு வருகின்றன. உதாரணமாக, 'எங்கள் தாத்தா இறந்துவிட்டார், அவரது வீட்டின் அடித்தளத்தில் இருந்த அவரது அறையைச் சுத்தம் செய்தபோது ஒரு மனித எலும்புக்கூடு கிடைத்தது. அதை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை, பார்த்தால் பயமாக இருக்கிறது' என்பது போன்ற மின்னஞ்சல்கள் அவை," என்கிறார் ஜான்.

தொடர்ந்து பேசிய ஜான், "இவை அமிலங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யப்பட்ட எலும்புகள் என்பதால் இதில் டி.என்.ஏ ஏதுமில்லை. அதனால் இவற்றை டி.என்.ஏ ஆய்வுகளுக்குப் பயன்படுத்த முடியாது. இவற்றைப் புதைப்பதும் சட்டப்படி குற்றம்.

அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மருத்துவ அருங்காட்சியகங்கள் அதிக அளவிலான மனித எலும்புகளைக் கையாளும் விதத்தில் வடிவமைக்கப்படவில்லை. எனவே மனித எலும்புகளை வைத்திருப்பவர்களுக்கு இதை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது," என்று கூறுகிறார்.

 
மனித உடல்களுக்காக அதிகரித்த கல்லறைத் திருட்டுகள்
மனித எலும்புகளின் சேகரிப்பகம்

மனித எலும்புகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ளும் முன், மருத்துவ வரலாற்றின் ஒரு விசித்திரமான அத்தியாயத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

"அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில், 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளின்போது கல்வித்துறையில் மனித உடல்கள், எலும்புகளுக்கான தேவை அதிகமாக இருந்தது. இதனால் கல்லறைகளில் இருந்து பிணங்கள் திருடப்படுவது அதிகமாக நடைபெற்றது. இதைத் தடுக்க எண்ணற்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. அதில் ஒன்று கொலைச் சட்டம், 1751.

அதன்படி ஒருவர் கொலைக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரது உடல் மருத்துவ ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். ஆனாலும்கூட அப்போது மனித எச்சங்களுக்கான தேவை குறையவில்லை. இந்த நிலை மோசமானதால், கல்லறைகளுக்கு இரும்பு வேலிகள், கூண்டுகள் போட வேண்டிய சூழல் ஏற்பட்டது," என்று கூறுகிறார் ஜான்.

உடற்கூறியல் சட்டம் 1832, உயிரற்ற மனித உடல்களை மருத்துவ ஆய்வுகளுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கியது. சிறைச்சாலைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை வாங்க 48 மணிநேரத்திற்கும் மேலாக யாரும் வரவில்லை என்றால், அந்த உடல்கள் ஆய்வுகளுக்கு வழங்கப்பட்டன.

இறந்தவர்களின் உடல்களை மருத்துவ ஆய்வுகளுக்காக தானமாக கொடுப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.

 
மனித எலும்புகளின் சேகரிப்பகம்
படக்குறிப்பு,

ஒருவர் கொலைக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரது உடல் மருத்துவ ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்ற சட்டம் 1751இல் இயற்றப்பட்டது.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள்
மனித எலும்புகளின் சேகரிப்பகம்

"மருத்துவ எலும்பு வணிகம் 1800களில் தொடங்கி, 1920 முதல் 1984 வரையிலான காலகட்டத்தில் பெருமளவில் நடைபெற்றது" என்று குறிப்பிடுகிறார் ஜான்.

இவ்வாறு தொடங்கப்பட்ட எலும்பு வணிகம் உலகம் முழுவதும் பரவியது. 1950களில் எலும்புகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா தான் முன்னணியில் இருந்தது.

"உங்கள் உறவினர்களின் உயிரற்ற உடல்களை மருத்துவ ஆய்வுகளுக்காக தானமாக வழங்கினால், அவர்களின் இறுதிச் சடங்குக்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையைத் தருகிறோம் என அப்போது பல மருத்துவ நிறுவனங்கள் கூறின. இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன, பல குற்றங்களுக்கு அது வழிவகுத்தது" என்கிறார் ஜான்.

இந்தியாவில் 1985ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான ஒரு அதிர்ச்சிகரமான செய்தியால், உலகளவில் இந்த வணிகம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

"ஒரு எலும்பு வணிகரின் கிடங்கில் இருந்து 1500 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் இந்த முறைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது," என்கிறார் ஜான்.

இந்தியாவில் போடப்பட்ட இந்தத் தடையால் மருத்துவ நிறுவனங்கள் செயற்கை எலும்புக்கூடுகளைப் பயன்படுத்தத் தொடங்கின. இன்று மருத்துவ எலும்பு வணிகம் என்பது ஒரு மறுவிற்பனை சந்தையாக மாறிவிட்டது. அமெரிக்காவின் லூசியானா, டென்னஸி, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து பிற மாநிலங்களில் தங்களிடம் உள்ள மனித எலும்புகளை விற்க மக்களுக்கு அனுமதியுண்டு.

"எலும்புகளை நாங்கள் பொது மக்களுக்கு விற்பதில்லை. பள்ளிகள், பல்கலைக்கழகங்களே எங்களது முக்கியமான வாடிக்கையாளர்கள். தேடுதல் மற்றும் மீட்புக் குழு உறுப்பினர்களே எங்களது இரண்டாவது பெரிய வாடிக்கையாளர்கள்.

எங்களிடம் எலும்புகளை வாங்கி, மோப்ப நாய்களுக்கு சடலங்களைக் கண்டறிவதற்கான பயிற்சிகளை அளிக்கப் பயன்படுத்துகிறார்கள். மனித எச்சங்களின் நாற்றத்தை மோப்ப நாய்கள் இந்த எலும்புகள் மூலம் தெரிந்துகொள்ளும்" என்று கூறுகிறார் எலும்பு சேகரிப்பாளர் ஜான்.

தனது சமூக ஊடகப் பக்கங்கள் மூலமாக மனித எலும்புகள் குறித்த மக்களின் பொதுப் பார்வையை மாற்ற முயல்கிறார் ஜான்.

"இவை வெறும் காட்சிப் பொருட்கள் அல்ல. ஒரு காலத்தில் உயிரோடு வாழ்ந்த, நம்மைப் போன்ற மனிதர்களின் எலும்புகள் இவை. எனவே இவற்றை மரியாதையோடும், கண்ணியத்தோடும் கையாள வேண்டும். இவற்றைப் பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்," என்கிறார் ஜான்.

https://www.bbc.com/tamil/articles/c25lpw82xr3o

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.

1 month ago
1-638x375.png ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.

அதன்படி, இன்று முதல் 3 நாட்களுக்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதுடன். ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்நிலையில், வாக்குரிமையை உணர்ந்து வாக்காளர்கள் செயற்பட வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யா தற்போது ஜனாதிபதி தேர்தலை சந்தித்திருக்கிறது.

உக்ரைன் போரால் இராணுவச் செலவினம் அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெபெற்று வருகிறது.

உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வரும் புடின், சுமார் 20 வருடமாக ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

இதனிடையே உக்ரைன் மீது போர் தொடங்கிய பிறகு புடினுக்கு உள்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

மேலும் சமீபத்தில் ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி மர்மமான முறையில் உயிரிழந்ததும் புடினுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.

இந்த தேர்தல் புடினின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால், புடின் வெற்றி பெற்றி மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகின்றார்.

அதன்படி, இந்த ஜனாதிபதி தேர்தலில் புடின் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

புடினை எதிர்த்து மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 3 கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த 06 ஆண்டுகளுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதியாக புடின் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் சுமார் 11.4 கோடி பேர் வாக்களிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

https://athavannews.com/2024/1373584

பழுதடைந்த நிலையில் பல நாட்கள் கடலில் தத்தளித்த படகு - உணவு நீர் இன்றி குடியேற்றவாசிகள் பலர் பலி - மத்திய தரை கடலில் துயரம்

1 month ago

Published By: RAJEEBAN   15 MAR, 2024 | 10:42 AM

image
 
மத்தியதரை கடலில் இயந்திரம் பழுதடைந்ததை தொடர்ந்து படகு dinghy  நடுக்கடலில் பல நாட்கள் தத்தளித்ததால் குடியேற்றவாசிகள் பலர் உணவு நீரின்றி உயிரிழந்துள்ளனர்.

25 பேரை எஸ்ஓஎஸ் மெடிட்டரானி என்ற மனிதாபிமான அமைப்பின் படகுகள் இவர்களை  காப்பாற்றியுள்ளன.

லிபியாவின் ஜாவியா கடற்கரையிலிருந்து தாங்கள் புறப்பட்டதாகவும் பலநாட்களின் பின் மீட்கப்பட்டதாகவும் உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

migrants_2.jpg

படகு பயணத்தை ஆரம்பித்து மூன்று நாட்களின் பின்னர் அதன் இயந்திரம் பழுதடைந்ததாகவும் இதனால் தாங்கள் நடுக்கடலில் தத்தளித்ததாகவும் உயிருடன் மீட்கப்பட்ட குடியேற்றவாசிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெண்களும் ஒரு குழந்தையும் உள்ளதாக மீட்கப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கடலில் மூழ்கி இறக்கவில்லை உணவு குடிநீர் இன்மையால் உயிரிழந்தனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட படகினை தொலைக்காட்டிகளை வைத்து அவதானித்த அரசசார்பற்ற அமைப்பு இத்தாலிய கடலோர காவல்படையினருடன் சேர்ந்து மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

migrants1.jpg

உயிர்தப்பியவர்கள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளனர் என அரசசார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இருவர் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டனர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஏனைய 23 பேரை எங்களின் கப்பலில்  வைத்திருக்கின்றோம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒரு வார காலமாக கடலில் தத்தளித்ததால் படகில் இருந்தவர்கள் பெரும் துயரத்தில் சிக்குண்டனர். உணவும் குடிநீரும் விரைவில் தீர்ந்துவிட்டது என உயிர்தப்பியவர்கள் தெரிவித்தனர் என எஸ்ஓஸ்எஸ் அமைப்பின்  பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

migrants_1.jpg

படகு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவேளை பலர் உயிரிழந்தனர். தனது மனைவியையும் ஓன்றரை வயது குழந்தையையும் பறிகொடுத்த ஒருவரை பார்த்தேன். முதலில் குழந்தை உயிரிழந்துள்ளது நான்கு நாட்களின் பின்னர் தாயார் உயிரிழந்துள்ளார் என அரசசார்பற்ற அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/178775

பால் அலெக்சாண்டர்: 78 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்த அதிசய மனிதர் காலமானார்

1 month ago
பால் அலெக்சாண்டர்: 78 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்த அதிசய மனிதர் காலமானார்

பட மூலாதாரம்,GOFUNDME

கட்டுரை தகவல்
  • எழுதியவர், இடோ வோக் மற்றும் கேட் ஸ்னோடன்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

'இரும்பு நுரையீரல் கொண்ட மனிதர்' என்று அழைக்கப்பட்ட போலியோ போராளி பால் அலெக்சாண்டர் 78 வயதில் காலமானார்.

கடந்த 1952இல் பால் அலெக்சான்டர் தனது ஆறு வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார், இதனால் அவரின் கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி முழுமையாகச் செயலிழந்தது. இந்த நோயால் அவரால் சுதந்திரமாகச் சுவாசிக்க முடியாமல் போனது.

எனவே மருத்துவர்கள் அவரை உலோக சிலிண்டருக்குள் வைத்து அதன் மூலம் உயிர்வாழ வழிவகுத்தனர். வாழ்நாள் முழுவதும் அந்த இரும்பு சிலிண்டருடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதன் பின்னர் அலெக்சாண்டர் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். மேலும், வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார், அத்துடன் ஒரு சுய சரிதை நூலையும் வெளியிட்டிருக்கிறார்.

"பால் அலெக்சாண்டர், 'தி மேன் இன் அயர்ன் லங்'(The Man in Iron Lung) நேற்று காலமானார்" என்று நிதி திரட்டும் இணையதளம் ஒன்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 
'பால் ஒரு அற்புதமான மனிதர்'
பால் அலெக்சாண்டர்: 78 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்த அதிசய மனிதர் காலமானார்

பட மூலாதாரம்,PHILIP ALEXANDER

படக்குறிப்பு,

பாலின் சகோதரர், பிலிப் அலெக்சாண்டர்.

"இரும்பு சிலிண்டர் உதவியோடு வாழ்ந்த பால், கல்லூரிக்குச் சென்றார், ஒரு வழக்கறிஞரானார், மேலும் ஒரு எழுத்தாளராகவும் இருந்தார். பால் ஒரு அற்புதமான முன்மாதிரி," என்கிறார் பாலின் சகோதரர், பிலிப் அலெக்சாண்டர்.

பால் அலெக்சாண்டர் பற்றிக் குறிப்பிடுகையில் "எப்போதுமே பிறரை புன்னகையுடன் வரவேற்கும் அன்பான நபர் அவர்" என்று நினைவு கூர்ந்தார், மேலும் பாலின் புன்னகை புத்துணர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

"என் சகோதரர் பால் என்னைப் பொறுத்தவரையில் ஓர் இயல்பான மனிதர். அனைத்து சகோதரர்களைப் போன்று நாங்களும் சண்டையிடுவோம், விளையாடினோம், நேசித்தோம், ஒன்றாக கச்சேரிகளுக்குச் சென்றோம். அவர் ஒரு இயல்பான சகோதரர், நான் அவரின் நிலை பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை," என்று பிலிப் பிபிசியிடம் கூறினார்.

நோயின் தாக்கத்தால், உணவு உண்பது உட்பட சுயமாக எந்த அன்றாடப் பணிகளையும் செய்ய முடியாமல் போன சூழலிலும், தனது சகோதரர் தன்னிறைவு பெற்ற மனிதராக வாழ்ந்ததாக பிலிப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும் "அவரது ராஜ்ஜியத்தில் அவரே ராஜா. அவருக்கு உதவும் நபர்களுக்கும் சிரமம் கொடுக்காமல் உதவுபவர்," என பிலிப் கூறினார்.

கடந்த சில வாரங்களில் பாலின் உடல்நிலை மோசமானது. அவரின் இறுதி நாட்களை தன் சகோதரருடன் கழித்தார். அவர்கள் மகிழ்ச்சியாக ஐஸ்கிரீம்களை பகிர்ந்து கொண்டனர்.

"அவரது வாழ்வின் இறுதி தருணங்களில் அவருடன் இருப்பது என் பாக்கியம்" என்று பிலிப் குறிப்பிட்டார்.

 
உலோக உருளைக்குள் வாழ்ந்தவர்
பால் அலெக்சாண்டர்: 78 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்த அதிசய மனிதர் காலமானார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பால் அலெக்சாண்டர் 1952இல் நோய்வாய்ப்பட்டபோது, அவரது சொந்த ஊரான டல்லாஸில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரைக் காப்பாற்றினர். ஆனால் போலியோ பாதிப்பால் அவரால் சுயமாகச் சுவாசிக்க முடியவில்லை.

அதன் விளைவாக இரும்பு நுரையீரல் என்று அழைக்கப்படும் - ஒரு உலோக உருளை அவரது கழுத்து வரை உடலைச் சுற்றிப் பொருத்தப்பட்டது. அந்த உலோக உருளைக்குள்தான் அவர்தம் வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது.

செயற்கை இரும்பு நுரையீரலை பால் 'பழைய இரும்புக் குதிரை' என்றே குறிப்பிடுவார். அந்த பழைய இரும்புக் குதிரையால்தான் அவர் சுவாசித்தார். பெல்லோஸ் என்னும் உபகரணம் சிலிண்டரில் இருந்து காற்றை உறிஞ்சி, அவரது நுரையீரலை விரிவடையச் செய்து, காற்றை உள்வாங்கச் செய்தது. காற்று மீண்டும் உள்ளே நுழையும்போது, அதே செயல்முறை தலைகீழாக நிகழ்ந்து அவரது நுரையீரலைச் சுருங்க செய்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அலெக்சாண்டர் சுயமாக சுவாசிக்கவும் கற்றுக்கொண்டார், இதனால் அவர் குறுகிய காலத்திற்கு அந்த இரும்பு நுரையீரலை விட்டு வெளியேற முடிந்தது.

இரும்பு நுரையீரல் பொருத்தப்பட்ட பெரும்பாலான போலியோ போராளிகள் போல, அவரும் நீண்ட காலம் உயிர்வாழ மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நீண்டகாலம் உயிர் வாழ்ந்தார். 1950களில் போலியோ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், மேற்கத்திய நாடுகளில் போலியோவை ஒழித்த பிறகும் அவர் உயிர் வாழ்ந்தார்.

 
கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவர்
பால் அலெக்சாண்டர்: 78 ஆண்டுகள் இரும்பு நுரையீரலுடன் வாழ்ந்த அதிசய மனிதர் காலமானார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பால் உயர்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றார், பின்னர் தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1984இல், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கறிஞராகப் பயிற்சி மேற்கொள்ள அவருக்கு அனுமதி கிடைத்தது. அதன் பின்னர் பல ஆண்டுகளுக்கு வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

"நான் என் வாழ்க்கையில் ஏதேனும் செய்யப் போகிறேன் என்றால், அது கண்டிப்பாக மனம் சார்ந்த விஷயமாக மட்டுமே இருக்க முடியும் என்பதை நான் அறிவேன்’’ என்று பால் 2020இல் கார்டியன் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் கூறினார்.

அதே ஆண்டு, அவர் தன் சுயசரிதை நூலையும் வெளியிட்டார், நண்பரின் உதவியுடன் ஒரு பிளாஸ்டிக் குச்சியைப் பயன்படுத்தி ஒரு விசைப் பலகையில் தட்டச்சு செய்து இந்த நூல் எழுதப்பட்டது. இதை எழுதி முடிக்க அவருக்கு எட்டு ஆண்டுகள் எடுத்ததாகக் கூறப்படுகிறது.

பாலின் சகோதரர் பிலிப், அந்த சுயசரிதை புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அவரது சகோதரர் எவ்வளவு உத்வேகம் அளித்து முன்னோடியாகத் திகழ்கிறார் என்பதை உணர்ந்ததாகக் கூறினார்.

மருத்துவத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் 1960களில் இரும்பு நுரையீரல் மருத்துவ முறை வழக்கற்றுப் போய்விட்டது, அதற்குப் பதிலாக வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அலெக்சாண்டர் இரும்பு சிலிண்டருக்கு பழகிவிட்டதால் அந்த உருளையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.

இரும்பு நுரையீரலில் அதிக காலம் வாழ்ந்தவர் என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அவர் அங்கீகரிக்கப்பட்டார்.

https://www.bbc.com/tamil/articles/czdzkp5452go

காசாவில் பட்டினி ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது - ஐரோப்பிய ஒன்றியம்

1 month ago

Published By: RAJEEBAN   13 MAR, 2024 | 12:00 PM

image

காசாவில் பட்டினி  ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார்.

காசாவிற்குள் போதியளவு மனிதாபிமான பொருட்கள் செல்ல முடியாமல் உள்ளதை மனிதர்கள் ஏற்படுத்திய பேரழிவு என ஜோசப்பொரொல் வர்ணித்துள்ளார்.

போதிய தரைப்பாதைகள் இல்லாததே காசாவில் உருவாகியுள்ள மனிதாபிமான நெருக்கடிக்கான காரணம் என  ஐநாவில் உரையாற்றுகையி;ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தற்போது தங்களது உயிர்வாழ்தலிற்காக போராடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்லவேண்டும் ஐரோப்பிய ஒன்றியம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது இது மனிதனால் உருவான நிலைமை கடல் மற்றும் வான்வெளி மூலம் விநியோகங்களை மேற்கொள்வதற்கான மாற்றுவழிகளை ஆராய்ந்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீதிவழியாக மனிதாபிமான உதவிகளை வழங்கும் நடவடிக்கைகள் செயற்கையாக முடக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பட்டினி என்பது போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது உக்ரைனில் இது இடம்பெறும்போது கண்டிக்கும் நாங்கள் காசாவிலும் அதேவார்த்தைகளை பயன்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/178604

திருட்டு வழக்கில் குற்றவாளி : நியூஸிலாந்து முன்னாள் எம்.பி. ஒப்புக்கொண்டார்

1 month ago

Published By: SETHU   13 MAR, 2024 | 01:18 PM

image

நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது, கடையொன்றில் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோல்ரிஸ் கஹ்ரமான், தான் குற்றவாளி என  நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். 

43 வயதான கஹ்ரமான் திருட்டுக் குற்றச்சாட்டையடுத்து கடந்த ஜனவரி 16 ஆம் திகதி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார். 

இந்நிலையில், இது தொடர்பான வழக்கில், தான் குற்றவாளி என ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை கஹ்ரமான் ஒப்புக்கொண்டார்.

ஈரானில் பிறந்த கோல்ரிஸ் கஹ்ரமான், தனது குடும்பத்தினருக்கு நியூஸிலாந்தில் அரசியல் புகலிடம் கிடைத்தபோது நியூஸிலாந்துக்கு புலம்பெயர்ந்தவர். 

சட்டத்தரணியான அவர் 2017 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். 

நியூஸிலாந்துக்கு அகதியாக வந்த பின்னர் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவான முதல் நபர் கோல்ரிஸ் கஹ்ரமான் ஆவார்.

https://www.virakesari.lk/article/178617

டிக்டொக்கினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - முகநூல் பொதுமக்களின் எதிரி - டிரம்ப் கருத்து

1 month ago

Published By: RAJEEBAN    12 MAR, 2024 | 03:06 PM

image

டிக்டொக்  அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முகநூல் மக்களின் எதிரி என குறிப்பிட்டுள்ளார்.

டிக்டொக்கினால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கருதுவதாக தெரிவித்துள்ள  டொனால்ட் டிரம்ப் எனினும் இதனை தடை செய்வதை நான் ஆதரிக்கமாட்டேன் ஏன் என்றால் அதனை தடைசெய்தால் மக்களின் எதிரியான முகநூலின்  ஆதரவு அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

சிஎன்பிசி நேர்காணலில் டிக்டொக் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானதா என்ற கேள்விக்கே  நான் அவ்வாறே நம்புகின்றேன். நாங்கள் அமெரிக்க மக்களின் அந்தரங்கள் மற்றும் தரவு உரிமைகளை பாதுகாக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என டிரம்ப் பதிலளித்துள்ளார்.

டிக்டொக் செயலியை அமெரிக்காவில் தடை செய்வதை டிரம்ப் முதலில் ஆதரித்திருந்தார். எனினும் இதற்கான ஆதரவை தற்போது தனது முடிவை மாற்றியுள்ளார்.

ஏன் டிக்டொக்கினை தடை செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கினீர்கள் என்ற கேள்விக்கு  எனது ஆட்சிக்காலத்தில் அதனை தடைசெய்திருக்க முடியும் ஆனால்  காங்கிரஸே அதனை செய்யவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

டிக்டொக்கினை தடை செய்வது மக்களின் எதிரி என கடுமையாக விமர்சிக்கப்படும் முகநூலிற்கான ஆதரவை அதிகரிக்கும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

டிக்டொக்கினால் நன்மைகளும் உள்ளன தீமைகளும் உள்ளன. ஆனால் டிக்டொக் பிடிக்காத விடயம் என்னவென்றால் டிக்டொக்கினை இல்லாமல் செய்தால்  அது முகநூலை பெரிய விடயமாக்கிவிடும் ஏனைய ஊடகங்கள் பலவற்றுடன் நான் முகநூலை மக்களின் எதிரியாக கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் சமூக ஊடகங்களில் முகநூலை  டிரம்ப் மக்களின் எதிரி என வர்ணித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/178531

ஜப்பானில் இந்த நகரமே ஒரு பூனையைக் கண்டு பயந்து போயிருப்பது ஏன்?

1 month ago
ஜப்பான் பூனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சித்தரிப்புக்கான படம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், லூ நியூட்டன்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மேற்கு ஜப்பானில் உள்ள புகுயாமா நகரம் ஒரு பூனையைக் கண்டு அஞ்ச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அந்தப் பூனை ஏதும் செய்துவிடுமோ என்ற பயம் இல்லை. அந்தப் பூனை மீது ஒட்டியிருக்கும் ரசாயனம்தான்.

ஒரு தொழிற்சாலையின் விஷத்தன்மைமிக்க ரசாயனம் இருந்த தொட்டியில் இந்தப் பூனை விழுந்தது. அதன்பின் அது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் அதனிடமிருந்து விலகி இருக்குமாறு அப்பகுதியின் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நடந்த தொழிற்சாலையில் பணிசெய்யும் ஒரு தொழிலாளி, ரசாயனத் தொட்டியில் இருந்து மஞ்சள் காலடிச் சுவடுகள் வெளியே செல்வதைக் கண்டிருக்கிறார். அதன்பிறகே இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

அங்கு பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைப் பார்த்தபோது, ஒரு பூனை தப்பி ஓடுவதைக் காண முடிந்தது.

புகுயாமாவில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களை இந்தப் பூனையிடம் இருந்து விலகி இருக்குமாறும், அது எங்கேனும் காணப்பட்டால் காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜப்பான், புகுயாமா, ரசாயனம், பூனை

பட மூலாதாரம்,PROVIDED BY NOMURA PLATING

படக்குறிப்பு,

ஒரு தொழிலாளி, ரசாயனத் தொட்டியில் இருந்து மஞ்சள் காலடிச் சுவடுகள் வெளியே செல்வதைக் கண்டிருக்கிறார்

இவ்வளவு ஆபத்தான ரசாயனமா?

ஹெக்ஸாவலன்ட் குரோமியம் என்று அழைக்கப்படும் இந்த ரசாயனம், ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறத்திலானது. மிக அதிக அமிலத்தன்மை கொண்டது. புற்றுநோயை உண்டாக்கக் கூடியது.

இப்படிப்பட்ட ரசாயனத்தில் தான் இந்தப் பூனை விழுந்துள்ளது.

ஜப்பான், புகுயாமா, ரசாயனம், பூனை

பட மூலாதாரம்,PROVIDED BY NOMURA PLATING

நமுரா முலாம் பூசும் புகுயாமா தொழிற்சாலை என்ற இடத்தில் நேற்று பணிக்கு வந்தபோது ஒரு ஊழியர் பூனையின் காலடித் தடங்களைக் கண்டறிந்ததாக ஆசாஹி செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

புகுயாமா நகரின் சுற்றுச்சூழல் குழு, ‘அசாதாரணமாகத் தோன்றும் பூனைகளை’ பொதுமக்கள் தொட வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறது. ஆனால் இச்சம்பவத்தின் விளைவாக அந்தப் பூனை இறந்திருக்கக்கூடும் என்றும் கூறியது.

 
ஜப்பான், புகுயாமா, ரசாயனம், பூனை

பட மூலாதாரம்,PROVIDED BY NOMURA PLATING

படக்குறிப்பு,

ஹெக்ஸாவலன்ட் குரோமியம் என்று அழைக்கப்படும் இந்த ரசாயனம், ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறத்திலானது

எங்கே தவறு நிகழ்ந்தது?

இந்தத் தொழிற்சாலையை நடத்தும் நிறுவனம், இந்த ரசாயனத் தொட்டி தாள்போன்ற ஒரு விரிப்பால் மூடப்பட்டிருந்ததாகக் கூறியது. ஆனால் பூனை உள்ளே விழுந்த அந்தப் பகுதி திறந்திருந்ததாகவும் கூறியது.

“பூனைகள் போன்ற சிறிய விலங்குகள் தொழிற்சாலைக்குள் வருவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் எங்களுக்கு நினைவுறுத்துகிறது. இது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று," என அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாக AFP செய்தி நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

ஹெக்ஸாவலன்ட் குரோமியம் தோல் எரிச்சல், சுவாசப் பிரச்சனைகள், மற்றும் பார்வை இழப்பை ஏற்படுத்தும். இதன் அருகில் பணிசெய்யும் ஊழியர்கள் முகமூடிகள் மற்றும் ரப்பர் கையுறைகளை அணிவது கட்டாயம்.

செவ்வாய்கிழமை வரை இந்தப் பூனை எங்கும் தென்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

https://www.bbc.com/tamil/articles/cd19gv9p5r0o

கனடா: 'மிக மோசமான' சூழலில் இந்திய மாணவர்கள் - அதிகரிக்கும் போதைப் பழக்கம், தற்கொலைகள்

1 month ago
  • சரப்ஜித் சிங் தலிவால்
  • பதவி,பிபிசி செய்தியாளர், கனடாவிலிருந்து
  • 11 மார்ச் 2024

"நான் இந்தியாவுக்குச் சென்று என் தந்தையைக் கட்டிப்பிடித்து அழ விரும்புகிறேன், எனக்கு அவர் அருகில் இருக்க வேண்டும் என ஏக்கமாக உள்ளது."

இந்த வார்த்தைகளைச் சொன்னவுடனேயே அர்பன்-இன் கண்களில் கண்ணீர் வந்தது. பின் அவர் மௌனமாகி விட்டார். சில கணங்களில் அமைதியைக் கலைத்துவிட்டு, "இங்கே யாரும் யாருக்கும் சொந்தம் இல்லை, எல்லோரும் இங்கிருந்து ஓடிப் போகிறார்கள். கனடாவை பற்றி என்ன நினைத்திருந்தேனோ, இங்கே வந்த பிறகு அது தலைகீழாக மாறிவிட்டது," என்று அவர் கூறினார்.

தனது கனவுகளை நனவாக்கும் நோக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாணவியாக கனடா வந்தார் அர்பன். அர்பன் பஞ்சாபின் முக்த்சார் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அவருடைய பெற்றோர் ஆசிரியர்கள்.

இரண்டு வருட படிப்பை முடித்த அர்பன், தற்போது பணி அனுமதி பெற்று ‘செக்யூரிட்டி’யாக பணியாற்றி வருகிறார். மேல்படிப்புக்காக கல்வி விசாவில் கனடாவுக்கு வரும் ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களில் அர்பனும் ஒருவர். ஆனால், இங்குள்ள நிலைமைகள் அவர்களின் கனவுகளுக்கு மாறாக இருக்கிறது.

தன் சோகம் குறித்துப் பகிர்ந்துகொண்ட அர்பன், "நான் என் பெற்றோரை மிகவும் `மிஸ்` செய்கிறேன். அம்மா உணவு தயார் செய்வார். நான் விளையாடுவேன். அப்போது எனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை," என்றார்.

"நீ சாப்பிட்டாயா மகளே, எனக் கேட்பதற்கு இங்கே யாரும் இல்லை. இங்கே நீங்கள்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்," என்கிறார் அவர்.

அர்பனின் கூற்றுப்படி, கனடாவுக்கு வரும் திட்டம் அவருக்கு இல்லை. உண்மையில், கனடா குறித்த பிரகாசமான காணொளிகளைப் பார்த்த பிறகே அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார். கனடா மிகவும் சுத்தமானது, மாணவர்களுக்குப் பெரிய கார்கள் மற்றும் வீடுகள் உள்ளன. மேலும் இந்த நாடு பெண்களுக்குப் பாதுகாப்பானது என, பஞ்சாபில் எல்லோரும் கனடாவை பற்றிப் பேசுவதை அர்பன் கவனித்தார்.

இளம் வயதில் இருக்கும் அர்பன் இதனால் மூலம் தான் மிகவும் கவரப்பட்டதாகவும், கனடாவுக்கு செல்ல முயல வேண்டும் என்று நினைத்ததாகவும் கூறுகிறார். "நான் எனது பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என்று என் பெற்றோர் விரும்பினர். ஆனால், நீங்கள் எவ்வளவு சீக்கிரம் கனடா செல்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் `செட்டில்` ஆகிவிடுவீர்கள் என சிலர் என்னிடம் சொன்னார்கள்.”

அர்பனுக்கு 24 வயது ஆகிறது. அவர் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் கனடா சென்றார்.

“எனவே, நான் 12ஆம் வகுப்பு முடித்தவுடனே மிக இளம் வயதிலேயே இங்கு வந்தேன். கனடாவில் வசிக்கும் நண்பர்கள் சிலர் இங்குள்ள பிரச்னைகளை என்னிடம் சொன்னாலும் கனடா என்ற `பேய்` என் மனதில் இருந்ததால் அவர்கள் சொன்னதை நான் பொருட்படுத்தவில்லை."

கனடா குறித்த கனவும் உண்மை நிலவரமும்
கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்

கனடாவுக்கு 2021இல் முதன்முறையாக வந்தபோது, தான் நினைத்துப் பார்க்காத வேறொரு உலகத்திற்கு வந்திருப்பது போன்று உணர்ந்ததாகவும் டொரண்டோ தனது கனவுகளின் நகரமாகத் தோன்றியது என்றும் அர்பன் கூறுகிறார்.

"ஏஜெண்ட்டுக்கு அறிமுகமான நபர் ஒருவர் என்னை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்று ஒரு வீட்டின் கீழ்தளத்தில் தங்குவதற்கு வாடகைக்கு எடுத்தார், அங்கு நான் ஏழு மாதங்கள் தங்கினேன்," என்று அர்பன் கூறினார்.

"அந்த இடம் ஒரு மண்டபம் போன்று இருந்தது, அங்கு அறைகள் இல்லை, தரையில் வெறும் மெத்தைகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. வேறு சில பெண்களும் அங்கு தங்கியிருந்தனர். ஜன்னல்கள் இல்லை, முதல் ஏழு மாதங்கள் கனடாவில் எனது அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது."

கனடாவை பற்றி இந்திய குழந்தைகளுக்குக் காட்டப்படுவது வெறும் கனவுதான் என்கிறார் அர்பன். யதார்த்தம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இத்தகைய ஓரிடத்தில் வசிக்க வேண்டும் என முகவர்கள் சொல்லவில்லை.

படித்துக்கொண்டே எப்படி வேலை செய்ய வேண்டும், மாணவர்களிடம் எவ்வளவு சுரண்டப்படும் என்பது குறித்தெல்லாம் சொல்லவில்லை. இது பற்றி எந்தத் தகவலும் கொடுக்கப்படவில்லை. கனடாவை பற்றி எல்லாமே நன்றாகத்தான் சொல்லப்படுகிறது.

அர்பன் கூறுகையில், மாணவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானது. மன உளைச்சல், குடும்பத்தை விட்டு விலகியிருப்பது, வேலை கிடைக்காததால் ஏற்படும் அழுத்தம், இவை அனைத்தும் மாணவர் வாழ்க்கையின் போராட்டத்தின் ஒரு பகுதி.

தற்போது வேலைதான் பெரிய பிரச்னை என்று அர்பன் கூறினார். குளிர்காலத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு கண்காட்சிகளில், மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்று வேலை தேடுகிறார்கள்.

இந்த மாணவர்களில் சிலருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது, இந்தியாவில் கனடாவை பற்றி யாரும் இந்த உண்மையைச் சொல்வதில்லை. வாழ்க்கைச் செலவுகள், கல்லூரிக் கட்டணம், வேலை உறுதி இல்லாமை போன்றவற்றால் மனதில் எப்போதுமே மாணவர்களுக்குக் கவலை இருக்கும்.

என்னுடைய படிப்பை முடித்தது, வேலை கிடைத்தது, சம்பளம் வங்கிக் கணக்கில் வந்துவிட்டது என்பது போன்ற சில தகவல்களையே பெற்றோரிடம் தெரிவிப்பதாக அர்பன் கூறினார். மற்ற சிரமங்களை ஏன் சொல்லவில்லை என்று கேட்டால், அவர்கள் கவலைப்படுவார்கள், பெரும்பாலான மாணவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்று அவர் கூறினார்.

“நான் சாப்பிடாவிட்டாலும், நான் சாப்பிட்டதாக என் பெற்றோரிடம் பொய் சொல்கிறேன். நான் வேலையிலிருந்து தாமதமாக வந்ததால் இன்று சமைக்க முடியவில்லை என்று என்னால் சொல்ல முடியாது."

சுமார் 24 வயதான அர்பன், தனக்குள் இருந்த குழந்தைமையை இளம் வயதிலேயே இழந்துவிட்டதாகவும் கனடாவில் தான் பெரிய பொறுப்புகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார். கனடா குடியுரிமை பெறுவதைத் தன் நோக்கமாகக் கொண்டுள்ளார் அர்பன். அதன் பிறகுதான் இந்தியா சென்று தன் பெற்றோருடன் இணையத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறார் அவர்.

அர்பனின் கூற்றுப்படி, கனடா ஒரு நல்ல நாடு, யாருக்கும் எந்தப் பாகுபாடும் இல்லை, முன்னேற சம வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மாணவர் வாழ்க்கை மிகவும் கடினம், இந்தியாவில் வாழும்போது அதைக் கற்பனை செய்து பார்க்க முடியாது என்றார்.

கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் (IRCC) 2023 தரவுகளின்படி, இந்த ஆண்டு சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், அதிகமான இந்திய மாணவர்கள் கல்வி கற்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, சீன மாணவர்கள் இரண்டாவது இடத்திலும் பிலிப்பைன்ஸ் மாணவர்கள் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்திய மாணவர்களில், பஞ்சாப் மற்றும் குஜராத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கனடா செல்கின்றனர். இது தவிர, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, ஹரியாணா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தற்போது கனடாவில் படித்து வருகின்றனர். இந்தியர்களில், கனடா செல்லும் மாணவர்களில் பஞ்சாபை சேர்ந்தவர்களே அதிகம்.

லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் பல ஆண்டுகளாக சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்த்து கனடா சென்றுள்ளனர். கிரேட்டர் டொரண்டோ ஏரியா (ஜிடிஏ) சர்வதேச மாணவர்களுக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கான மையமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, பிராம்ப்டன் `மினி பஞ்சாப்` என்று அழைக்கப்படுகிறது.

அக்ரமின் கதை
கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்
படக்குறிப்பு,

அக்ரம்

பஞ்சாபின் பர்னாலா மாவட்டத்தில் உள்ள துல்கோட் கிராமத்தைச் சேர்ந்த அக்ரமின் கதையும் அர்பனை போன்றது. 28 வயதான அக்ரம், 2023ஆம் ஆண்டு கல்வி அனுமதியின் பேரில் கனடாவுக்கு வந்து, தற்போது பிராம்ப்டனில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் திட்ட மேலாண்மை படித்து வருகிறார்.

தனது வகுப்பில் 32 மாணவர்கள் இருப்பதாக அக்ரம் கூறினார். இவர்களில் 25 பேர் இந்தியர்கள், மீதமுள்ளவர்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவரது வகுப்பில் கனடா வம்சாவளி மாணவர்கள் இல்லை.

கனடா வாழ்க்கையை பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அக்ரம், "கனடா ஒரு அழகான சிறை, நீங்கள் எல்லாவற்றையும் பெறுவீர்கள், ஆனால் உங்கள் வாழ்நாள் முழுவதும் அதிலிருந்து உங்களால் வெளியேற முடியாது," என்று கூறுகிறார்.

அக்ரம் கூறுகையில், "தற்போது இங்கு எந்திரங்கள் போல் இருக்கிறோம், காலை முதல் மாலை வரை உழைக்கிறோம், சிலந்தி வலையில் இருந்து வெளியே வரமுடியாது," என்றார். அக்ரமின் கல்லூரி வாரத்தில் மூன்று நாட்கள் மாலை இரண்டு மணிநேரம் நடைபெறுகிறது.

கூலித் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த அக்ரம் ரூ.22 லட்சம் கடனுடன் கனடா வந்துள்ளார். இந்த கடனைத் திருப்பிச் செலுத்துவதோடு, அவரது கனவுகளையும் நிறைவேற்ற, அவர் இரண்டு பணிநேரங்களில் கடுமையாக உழைக்க வேண்டும்.

அவரைப் பொறுத்தவரை, இந்தியாவில் கனடா குறித்து சொல்லப்படுவது முழு உண்மை இல்லை என்பதை அந்நாட்டுக்கு சென்றவுடன் அவர் அறிந்தார். அக்ரம் திறமையான, இலக்கியத்தில் ஆர்வமுடைய இளைஞர். பஞ்சாபிலேயே இலக்கியம் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்றார் அக்ரம்.

கனடா வந்த பிறகு அவருடைய கவிதைகளின் எழுத்துகள் மாறிவிட்டன. அக்ரமின் கவிதைகள் பஞ்சாப் நிலத்தின் மீதான அவரது ஏக்கத்தையும் கனடாவின் கடினமான சூழ்நிலைகளையும் பிரதிபலிக்கின்றன.

கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்

செலவுகளைச் சமாளிக்க எல்லா நேரமும் வேலை செய்வதும், எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் பொதுவாக அவர்களின் முகங்களிலும் வார்த்தைகளிலும் பிரதிபலிக்கின்றன.

கடனைத் திருப்பிச் செலுத்துதல், கல்லூரிக் கட்டணம், வாழ்க்கைச் செலவுகளைச் சந்திக்க, அக்ரம் தற்போது இரண்டு இடங்களில் பகுதிநேர வேலை செய்கிறார். பகலில் கணினி மையத்திலும், இரவில் செக்யூரிட்டியாகவும் பணிபுரிகிறார். அவர் ஐந்து மணிநேரம் மட்டுமே தூங்குகிறார்.

அக்ரம் கூறுகையில், “ஒருபோதும் பதற்றம் குறையாது, குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவது மன அழுத்தத்தில் இருந்து எனக்கு கொஞ்சம் நிவாரணம் அளிக்கிறது" என்றார்.

அக்ரம், அர்பனை போலவே, கனடாவில் உள்ள பிரச்னைகள் பற்றி எதையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வதில்லை. அக்ரம் தற்போது தனது ஐந்து நண்பர்களுடன் கீழ்தளத்தில் வாடகைக்கு வசிக்கிறார். ஹல்லுன்மா கீழ்தளத்தில் இரண்டு படுக்கைகளும் தரையில் சில படுக்கை விரிப்புகளும் உள்ளன.

ஒரு படுக்கை காலியாக உள்ளது, மே மாதம் இந்தியாவிலிருந்து வரும் மற்றொரு சர்வதேச மாணவருக்காக அப்படுக்கை காத்திருப்பதாக அக்ரம் கூறுகிறார். அக்ரம் தங்கியிருக்கும் கீழ்தளமும் திறந்த மண்டபம் போன்றே உள்ளது.

மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள்
கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்
படக்குறிப்பு,

நிர்லெப் சிங் கில்

நிர்லெப் சிங் கில் பிராம்ப்டனில் உள்ள பஞ்சாபி சமூக சுகாதார சேவைகள் தொடர்பாகப் பணிபுரிகிறார். இந்தியா, குறிப்பாக பஞ்சாபை சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கில் கையாள்கிறார்.

இதுகுறித்து நிர்லெப் கில் விளக்குகையில், "கனடாவில் உள்ள மாணவர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்வதால், பலரும் மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக மிக இளம் வயதில் (12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு) கனடாவுக்கு வரும் குழந்தைகள் அதிக சிக்கல்களைச் சந்திக்கின்றனர்," என்றார்.

நிர்லெப் சிங் கில் கூறுகையில், இந்த மாணவர்கள் இளம் வயதினராக இருப்பதால் அவர்கள் மனதளவில் முதிர்ச்சி அடையவில்லை.

கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்

அவர்களுக்கு மன அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. அவர்கள் தங்கள் பெற்றோரிடம் எதையாவது சொன்னாலும், பெற்றோர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "இந்தப் பிரச்னை அனைத்து சர்வதேச மாணவர்களிடமும் இல்லை, சிலர் இங்கு முன்னேறியுள்ளனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது" என்கிறார்.

சர்வதேச மாணவர்களிடையே மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று கேட்டால் அதற்குப் பல காரணங்கள் இருப்பதாகக் கூறுகிறார்.

"முதல் காரணம் எதிர்பாராத பொறுப்பு, இந்தியாவில் குழந்தைகள் வசதியான நிலையில் இருக்கிறார்கள், அதாவது அவர்களின் பெற்றோர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறார்கள், எந்தப் பொறுப்பும் இல்லை. ஆனால், கனடாவுக்கு வந்ததும் அவர்கள் உடனடியாக பல பொறுப்புகளைச் சந்திக்கின்றனர். இதற்கு அவர்கள் மனதளவில் தயாராக இல்லை."

போதைப் பழக்கம்
கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்

“கனடாவில் போதைப்பொருள் பரவி வருகிறது. இந்தியாவில் சில வகையான போதைப் பொருள்கள் மட்டுமே உள்ளன. ஆனால், கனடாவில் 55 முதல் 70 வகையான போதை பொருள்கள் கிடைக்கின்றன. போதைக்கு அடிமையாகி, மாணவர்கள் மன மற்றும் உடல் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்."

இதுமட்டுமின்றி, போதைப்பொருளை அதிகளவில் உட்கொள்வதால் மாணவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலிருந்து அதிகமானோர் கனடாவில் வசிப்பதாகவும், சர்வதேச மாணவர்களின் இறப்பு எண்ணிக்கை மட்டும் ஏன் அதிகரித்து வருகிறது என்றும் நிர்லெப் சிங் கில் கூறினார்.

பெரும்பாலான இறப்புகள் மாரடைப்புடன் தொடர்புடையவை என்று கில் கூறினார். இத்துடன் பல்வேறு காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவர்கள் தற்கொலை செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது.

மன அழுத்தம் - ஏன்?

கனடாவில் அதிகான மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு இந்தச் சூழலை எவ்வாறு கையாள்வது என்று தெரியவில்லை என்றால், அவர்கள் விரக்தியடைகின்றார். இதுதவிர, அவர்கள் கனடா குடியுரிமை மற்றும் நிரந்தர குடியிருப்பு (PR) பெறுவது குறித்தும் மன அழுத்தத்தில் உள்ளனர்.

கனடாவில் மாணவர்கள் மரணம்
கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்

சர்வதேச மாணவர் சமூகத்தில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் இன்னொரு விஷயம் கனடாவில் நிகழும் மாணவர்களின் மரணம். இதுகுறித்து அறிய பிராம்ப்டனில் இறுதிச் சடங்கு நடத்துவதற்கான தனியார் அமைப்பின் மேலாளர் ஹர்மிந்தர் ஹன்சியிடம் பிபிசி பேசியது. அவர் 15 ஆண்டுகளாக அந்த அமைப்பை நடத்தி வருகிறார்.

சர்வதேச மாணவர்களின் இறப்பு விகிதம் சமீப காலமாக கணிசமாக அதிகரித்துள்ளது என்று ஹர்மிந்தர் ஹன்சி கூறினார்.

இறப்புக்கான காரணங்களை பற்றிப் பேசுகையில், பெரும்பாலான இறப்புகளில், இயற்கை காரணங்களால் இறப்பது ஒன்றிரண்டு நிகழ்வுகள்தான் என்றும் பெரும்பாலான இறப்புகளுக்குக் காரணம் தற்கொலைதான் என்றும் ஹர்மிந்தர் ஹன்சி தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி, போதைப்பொருளை அதிகமாக உட்கொள்வதாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளும் சர்வதேச மாணவர்களிடையே மரணத்தை ஏற்படுத்துகின்றன.

கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்
படக்குறிப்பு,

ஹர்மிந்தர் ஹன்சி

ஒவ்வொரு மாதமும் சுமார் நான்கு-ஐந்து இறந்த உடல்களை அவர்கள் இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். இதுதவிர சிலர் கனடாவிலும் அவற்றைத் தகனம் செய்கிறார்கள், அதன் தரவு கிடைக்கவில்லை என்று ஹன்சி கூறினார். ஹன்சியின் கூற்றுப்படி, தற்போது கிரேட்டர் டொரண்டோ ஏரியாவில் இத்தகைய அமைப்புகள் பல உள்ளன. கனடா முழுவதிலும் உள்ள தரவுகளை ஒருங்கிணைத்தால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றார்.

கடந்த 2023 டிசம்பரில், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த போது, 2018 முதல் டிசம்பர் 2023 வரை 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் இறந்துள்ளனர், அதில் அதிகபட்சமாக கனடாவில் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவற்றில் சில மரணங்கள் இயற்கையானவை என்றும், சில விபத்துகளால் ஏற்பட்டவை என்றும் அவர் அந்த பதிலில் தெரிவித்தார். 2023 டிசம்பரில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஷி, இந்தியாவில் இருந்து கனடாவுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளைவிட மிக அதிகம் என்று கூறியிருந்தார்.

கனடாவில் படிப்பு அனுமதி பற்றிய உண்மை என்ன?
கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்

ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் படிப்பு அனுமதியின் பேரில் கனடா செல்கின்றனர். கனடா அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் செயலில் உள்ள மாணவர் விசாக்களின் எண்ணிக்கை சுமார் 29 சதவீதம் அதிகரித்து சுமார் 10 லட்சத்து 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இவர்களில் சுமார் நான்கு லட்சத்து 87 ஆயிரம் பேர் இந்திய மாணவர்கள். இது 2022ஐ விட 33.8 சதவீதம் அதிகம். சர்வதேச மாணவர்கள் கனடா மாணவர்களைவிட மூன்று மடங்கு அதிக கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கனடா அரசாங்கத்தின் 2022 அறிக்கையின்படி, சர்வதேச மாணவர்கள் இங்குள்ள பொருளாதாரத்திற்கு 22 பில்லியன் கனடா டாலர்களை பங்களித்துள்ளனர். கூடுதலாக 2.2 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கியுள்ளனர்.

இதன் காரணமாக, கனடா பொருளாதாரத்திற்கு சர்வதேச மாணவர்கள் அவசியமானவர்களாகத் தோன்றுகின்றனர். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் கனடாவுக்கு படிப்பதற்காக வருகிறார்கள். இதில் பெரும்பாலான மாணவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

இதன் காரணமாக, கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சர்வதேச மாணவர்களைச் சேர்க்க முன்னுரிமை அளித்து வருகின்றன. பல கல்லூரிகள் பெயருக்கு மட்டுமே கல்லூரிகள். பல கல்லூரிகளுக்கு வளாகமோ மைதானமோ கிடையாது. இரண்டு அறைகளில்தான் கல்லூரிகள் இயங்குகின்றன. இதுபோன்ற கல்லூரிகளுக்கு எதிராக கனடா அரசு இப்போது சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த 2012 முதல் 2021 வரை, மாகாணத்தின் தனியார் கல்லூரிகளில் உள்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது என்று ஒன்டாரியோவின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

அதேநேரம், இந்தக் காலகட்டத்தில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் 342 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் 62 சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள்.

கனடாவில் கல்வி நிலை
கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்
படக்குறிப்பு,

ஜஸ்விர் ஷமீல்

எல்லாவற்றுக்கும் மேலாக, கனடாவில் கல்வி நிலை என்ன?

இதுகுறித்து டொரண்டோவில் நீண்டகாலமாக பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் ஜஸ்விர் ஷமீல் கூறுகையில், கடந்த பத்து ஆண்டுகளில் கனடாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பாக இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

“கனடாவுக்கு வருவதற்கான ஒரு வழி படிப்பு அனுமதி. இங்கு, படிப்பை முடித்த பின், பெரும்பாலான மாணவர்கள், லாரி ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள், டெலிவரி தொழிலாளர்கள், உணவகப் பணியாளர்கள் என பணிபுரிய துவங்குகின்றனர்."

இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் இத்தகைய வேலைகளில் சிக்கித் தவிப்பதாக ஷமீல் கூறுகிறார்.

"படிப்புக்கு ஏற்ற வேலைகள் கிடைப்பது மிகவும் குறைவு. கனடாவின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மாணவர்களை விடுங்கள், இங்குள்ள குடிமக்களுக்குக்கூட வேலை கிடைக்கவில்லை" என்றார். கனடாவில் உள்ள தனியார் கல்லூரிகள் இந்திய மாணவர்களால் நிரம்பியுள்ளன. பல கல்லூரிகளில் 95 சதவீத இந்திய மாணவர்கள் உள்ளனர் என அவர் கூறினார்.

ஜனவரி 2024இல், கனடா அரசாங்கம் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் சில கட்டுப்பாடுகளை விதித்ததாக அவர் தெரிவித்தார். சர்வதேச மாணவர் சேர்க்கை வரம்புகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கனடா அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை 35 சதவீதம் குறைத்துள்ளது. இதுதவிர, முதுகலை அல்லது முனைவர் படிப்பைத் தொடர இங்கு வரும் சர்வதேச மாணவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கு குறைந்த படிப்புகளில் படிக்கும் மாணவர்கள், தங்களின் கணவர் அல்லது மனைவியை வாழ்க்கைத் துணை விசா மூலம் கனடாவுக்கு அழைத்துக்கொள்ள முடியாது. கனடா நாட்டில் தங்கும் இடங்களுக்கான பிரச்னை தலைதூக்கியிருப்பதாலேயே இந்த நடவடிக்கையை அந்நாடு எடுத்துள்ளது.

கனடா முழுவதும் தற்போது 3 லட்சத்து 45 ஆயிரம் வீடுகள் பற்றாக்குறையாக இருப்பதாக கனடா அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மாணவர்கள் கீழ்தளங்களில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உணவு வங்கிகளின் ஆதரவு
கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்

கனடாவில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் சர்வதேச மாணவர்கள் பலரால் வேலை தேட முடியவில்லை.

வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருவதால், பல மாணவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்குக்கூட சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இதனால் பல மாணவர்கள் சீக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உணவு வங்கிகளை நம்பியிருக்க வேண்டியுள்ளது. விஷால் கண்ணா பிராம்ப்டனில் உணவு வங்கி நடத்தி வருகிறார்.

"கல்லூரி கட்டணம், வீட்டு வாடகை மற்றும் வேலையின்மை காரணமாக பல மாணவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்," என்கிறார் கண்ணா.

கண்ணாவின் கூற்றுப்படி, அவர்கள் ஒவ்வொரு மாதமும் 600 முதல் 700 மாணவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குகின்றனர். சர்வதேச மாணவர்களின் கூட்டத்தை குருத்வாராக்களிலும் பொதுவாகக் காணலாம்.

பெயர் தெரிவிக்க விரும்பாத மாணவர்கள் சிலர், தாங்கள் குருத்வாராக்களில் சாப்பிட செலவதாகத் தெரிவித்தனர். குருத்வாராக்களின் மேலாளர்களும் அத்தகைய மாணவர்களுக்கு உதவ முன்வருகிறார்கள்.

ஏன் இந்தியா திரும்பவில்லை?

இங்கு வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தால் ஏன் இந்தியாவுக்கு திரும்பவில்லை என்று அக்ரமிடம் கேட்டதற்கு, "கிராம மக்கள் என்ன சொல்வார்கள்? உறவினர்கள் என்ன சொல்வார்கள்?" என்கிறார்.

"நாங்கள் விரும்பினாலும் நாடு திரும்ப முடியாது. உறவினர்கள் மற்றும் சமூகத்தின் அழுத்தம் காரணமாக நாங்கள் அவ்வாறு செய்ய முடியாது" என்று அவர் கூறினார்.

திரும்பிச் சென்றால் இந்தியாவில் கனடாவை பற்றிய கனவுகள் என்னவாகும் என்று இந்த மாணவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

அக்ரம் கூறும்போது, “நாங்கள் நாடு திரும்பும்போது, மக்கள் நம்மை எதிர்மறையாகப் பார்ப்பார்கள். கனடாவில் குடியேறுவதற்கான பாதை மிகவும் கடினமானதாகவும் நீண்டதாகவும் தெரிகிறது, ஆனால் நாங்கள் எங்கள் இலக்கை நிச்சயம் அடைவோம்," என்கிறார்.

அர்பனும் கனடாவில் உள்ள வாழ்க்கையால் சோர்வடைந்து பஞ்சாவுக்கு திரும்பி தனது பெற்றோரைச் சந்திக்க விரும்புகிறார். ஆனால் கனடா குடியுரிமை பெறாதது இன்னும் பெரிய தடையாக இருக்கிறது. கனடா குடியுரிமை பெற்ற பிறகுதான் அர்பன் இந்தியா திரும்ப விரும்புகிறார்.

கனடா: இந்திய மாணவர்களை துன்புறுத்தும் மிக மோசமான சூழல் - அங்கு என்ன நடக்கிறது? - BBC News தமிழ்

பறந்துகொண்டிருந்த விமானத்தின் இரு விமானிகளும் உறக்கம்: இந்தோனேஷியா விசாரணை

1 month ago

Published By: SETHU   11 MAR, 2024 | 01:11 PM

image

பறந்துகொண்டிருந்த பயணிகள் விமானத்தின் விமானி அறையில் இரு விமானிகளும் உறங்கிக் கொண்டிருந்த சம்பவம் தொடர்பில் இந்தோனேஷிய அரசாங்கம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

சுலேவெசி நகரிலிருந்து ஜகர்த்தா நகரை நோக்கி 153 பேருடன் பறந்துகொண்டிருந்த Batik Air  விமானமொன்றில்  இரு விமானிகளும் 28 நிமிடங்கள் உறங்கினர் என இந்தோனேஷிய போக்குவரத்து பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 25 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றிருந்ததாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. 

எயார்பஸ் ஏ 320 இரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் சிறிதுநேரம் வேறு திசையில் சென்றிருந்தபோதிலும் பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. 

விமானம் புறப்பட்ட சிறிதுநேரத்தில் துணை விமானியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, தான் உறங்கப்போவதாக தலைமை விமானி கூறியிருக்கிறார்  

எனினும், துணை விமானியும் சிறிதுநேரத்தில் உறங்க ஆரம்பித்தார். 

துணைவிமானியின் மனைவி ஒரு மாதத்துக்கு முன் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த நிலையில், சம்பத்துக்கு முந்தைய இரவு, குழந்தைகளை பராமரித்ததால் துணை விமானி களைப்படைந்திருந்தார் என செய்திகள் வெளியாகியுள்ளன. 

உறக்கத்திலிருந்து விழித்த விமானி, துணை விமானியும் உறங்கிவிட்டதையும் விமானம் சிறிதுதேரம் பாதைமாறி சென்றிருப்பதையும் உணர்ந்தார்.

அவ்விமானியை ஜகார்த்தா வான் கட்டுப்பாட்டாளர்கள் தொடர்புகொள்ள முயன்றபோதிலும், 28 நிமிட மௌனத்தின் பின்னரே தொடர்பு கிடைத்தது. 

பின்னர் அவர் கட்டுப்பாட்டாளர்களுடன் தொடர்புகொண்ட அவர், விமானத்தை தரையிறக்கினார் என செய்தி வெளியாகியுள்ளது.

விமானம் புறப்படுவதற்கு முன்னர் விமானியிடமும் துணை விமானியிடமும் நடத்தப்பட்ட இரத்த அழுத்த சோதனைகள், இதயத்துடிப்பு வேகம் ஆகியன சாதாரண அளவில் இருந்தன. 

இரு விமானிகளும் முழுமையான அளவு நேரம் ஓய்வில் இருந்தபோதிலும், அவர்களின் ஓய்வு தரமானதாக இருந்ததாக என ஆராய்வதற்கு சோதனைகள் தவறிவிட்டன என விமானப் போக்குவரத்து நிபுணர் அல்வின் லீ கூறியுள்ளார். 

இந்நிலையில் குறித்த விமான நிறுவனத்துகுக்கு இந்தோனேஷிய வான் போக்குவரத்துத் தறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/178420

MH370: மாயமான மலேசிய விமானம் - 10 ஆண்டுகளாக விலகாத பெரும் மர்மம்; வேதனையில் குடும்பத்தினர்

1 month ago
MH370: மாயமான மலேசிய விமானம் - 10 ஆண்டுகளாக விலகாத பெரும் மர்மம்; வேதனையில் குடும்பத்தினர்

பட மூலாதாரம்,EPA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜோனதன் ஹெட்
  • பதவி, பிபிசி செய்திகள் கோலா லம்பூர்
  • 8 மார்ச் 2024
    புதுப்பிக்கப்பட்டது 9 மார்ச் 2024

லி எர்யோவின் காதுகளில் கடந்த பத்து ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கும் வார்த்தைகள் ‘தொடர்பு துண்டிக்கப்பட்டது’.

லி எர்யோவின் மகன் யான்லின் சென்ற MH 370 விமானம் காணாமல் போனபோது, இதுதான் மலேசிய ஏர்லைன்ஸ் , அவரிடம் சொன்ன இரண்டு வார்த்தைகள்.

“பல ஆண்டுகளாக ‘தொடர்பு துண்டிக்கப்பட்டது’ என்றால் என்னவென கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒருவரிடம் தொடர்பு துண்டிக்கப்பட்டால், மீண்டும் அவரைத் தொடர்பு கொள்ள இயலும்தானே” என்கிறார் லி.

தெற்கு பெய்ஜிங்கில் உள்ள கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளான லி எர்யோ மற்றும் அவரது மனைவி லியு ஷுயாங்ஃபெங் ‘தொடர்பு துண்டிக்கப்பட்டது’ என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றனர். உலக வான் சேவை வரலாற்றின் மிகப்பெரிய மர்மத்தை விளங்க முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

 
MH 370

பட மூலாதாரம்,BBC/ LULU LUO

படக்குறிப்பு,

மாயமானவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் மலேசியாவில் அனுசரிக்கப்பட்டது.

பத்து ஆண்டுகளுக்கு முன் இதே நாள், மலேசியாவின் தலைநகர் கோலா லம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்க்கு வழக்கம் போல் இரவு நேரத்தில் புறப்பட்டது MH370 விமானம். போயிங் 777 வடிவமைப்புடன் 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் தாங்கிக் கொண்டு அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. புறப்பட்ட ஒரு மணிநேரத்தில் மலேசிய வான் சேவை கட்டுப்பாட்டு அரங்கத்து நன்றி தெரிவித்து விட்டு, வியட்னாம் வான் பரப்பில் நுழையவிருந்தது MH 370.

பத்து ஆண்டுக்கால பெருந்துயரம்

திடீரென விமானம் வேறு திசையில் திரும்பியது. கட்டுப்பாட்டு மையங்களுடன் கொண்ட அனைத்து மின்னணு தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. மீண்டும் மலேசியா நோக்கி அந்த விமானம் வந்தது. பின் தெற்கு இந்தியப் பெருங்கடல் மீது எங்கோ பறந்துகொண்டிருந்தது. அதன் எரிபொருள் தீரும் வரை அங்கேயே பறந்து கொண்டிருந்தது என்று யூகிக்கப்படுகிறது.

மிகத் தீவிரமான அதிக செலவிலான தேடுதல் பணி நடத்தப்பட்டது. ஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியும் காணாமல் போன விமானத்தின் ஒரு துரும்புகூடக் கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான கடல் ஆராய்ச்சியாளர்கள், விமானப் பொறியாளர்கள், இளம் புலனாய்வாளர்கள் தங்களுக்குத் தெரிந்த சொற்பமான தகவல்களைக் கொண்டு, MH370 தனது பயணத்தை எங்கு முடித்திருக்கும் எனக் கணக்கிட முயன்றுள்ளனர்.

MH 370

பட மூலாதாரம்,BBC/ LULU LUO

தேடுதல் பணியைத் தொடர்வதற்கான போராட்டம், MH 370க்கு உண்மையில் என்ன நேர்ந்தது எனக் கண்டறிவது, என இவை அனைத்தும் அந்த விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு பத்து ஆண்டு கால பெருந்துயரத்தைக் கொடுத்துள்ளது.

இந்த பிரசாரத்துக்கு ஆதரவு திரட்ட லி உலகம் முழுவதும் பயணித்துள்ளார். தனது சேமிப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி ஆசியா, ஐரோப்பா, விமானத்தில் சில எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட மடகாஸ்கரின் கடற்கரைகளுக்கும் சென்று வந்துள்ளார்.

தனது மகன் இருந்திருக்கும் மணலைத் தொட்டு உணர வேண்டும் என்கிறார். இந்திய பெருங்கடல் முன்பு நின்றுகொண்டு “யான்லின், நான் உன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளேன்,” என்று ஓலமிட்டு அழுததை நினைவு கூர்கிறார் அவர்.

“எனது மகனைக் கண்டுபிடிக்க இந்த உலகின் இறுதி வரை செல்வேன்,” என்று லி கூறுகிறார்.

 

சீனாவில் ஹேபே மாகாணத்தின் கிராமப்புற பகுதி ஒன்றில் வசித்து வருகின்றனர் லி மற்றும் அவரது மனைவி. அவர்களுக்கு தற்போது 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இளமைக் காலத்தில் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கே அவர்களது வருமானம் முழுவதும் செலவிடப்பட்டது. உலகத்தைச் சுற்றிப் பார்க்க எந்த பணமும் இருந்ததில்லை.

அவர்கள் கிராமத்தில் இருந்து முதன்முதலில் பல்கலைழகத்துக்குச் சென்று படித்தது யான்லின் தான். வெளிநாட்டில் வேலை கிடைத்த முதல் நபரும் யான்லின்தான். மலேசியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் யான்லினுக்கு வேலை கிடைத்திருந்தது.

விசா பெறுவதற்காக மலேசியாவில் இருந்து சீனா திரும்பிக் கொண்டிருந்தார் யான்லின். அப்போதுதான் விமானம் காணாமல் போனது. “இந்தச் சம்பவத்துக்கு முன், அருகில் உள்ள ஹாண்டன் நகரத்துக்குக்கூட நாங்கள் சென்றது இல்லை,” என்கிறார் லி.

தற்போது அடிக்கடி பயணிப்பவர்களாக மாறிவிட்ட லி மற்றும் அவரது மனைவி பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை பிற குடும்பத்தினருடன் அனுசரிக்க மலேசியா வந்துள்ளனர்.

அந்த விமானத்தில் பயணித்த் 153 சீன பயணிகளில் ஒருவர் யான்லின். மலேசிய அரசிடமிருந்து இழப்பீடு வாங்க மறுத்த 40 சீன குடும்பங்களில் அவரது பெற்றோர்களும் உண்டு. விமான சேவை, விமான தயாரிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பிறர் மீது சீனாவில் வழக்கு தொடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைகள் நகர்ந்தாலும் அவர்கள் காணாமல் போன விமானத்துடன் கட்டிப் போடப்பட்டுள்ளனர்.

 
MH 370

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கிரேஸ் நாதனின் மருமகன், MH370ல் பயணித்த தனது மாமியாருக்கு எழுதியிருந்த கடிதம்.

MH370 காணாமல் போனபோது, கிரேஸ் நேதன், பிரிட்டனில் தனது சட்டப்படிப்பின் இறுதி ஆண்டு தேர்வுகளை எழுதி வந்துள்ளார். அவரது தாய் ஆன் விமானத்தில் பயணம் செய்தார். இன்று அவர் மலேசியாவில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கோலா லம்பூரில் நடந்த நினைவு தின நிகழ்ச்சியில், தனது திருமணத்தின்போது தாயின் புகைப்படத்தை ஏந்திக்கொண்டு தேவாலயத்துக்குள் நடந்து வந்ததையும், இரண்டு சிக்கலான பிரசவங்களின் போது தனது தாயின் அன்பான அறிவுரைகள் இல்லாமல் போனதையும் நினைவுகூர்ந்து பேசினார்.

விமானத்தில் இருந்து சிதறிய சில துண்டுகள் அந்த நிகழ்வில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. விமானத்தின் இந்த எச்சங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. கடலுக்கு அடியில் பல நாட்கள் இருந்து துருபிடித்த விமான இறக்கைகளின் பாகங்கள் அவை. இந்த நிகழ்வுக்கு வந்திருந்த பிளைன் ஜிப்சன் தான் விமானத்தின் அதிகமான பாகங்களைக் கண்டறிந்தவர்.

MH 370 நெடுங்கதையின் வண்ணமயமான கதாபாத்திரங்களில் ஒருவர் ஜிப்சன். இளம் சாகசக்காரர் என்றே அவரை அழைக்கலாம். இண்டியானா ஜோன்ஸ் போன்று உடை அணிந்துகொண்டு, கலிஃபோர்னியாவில் உள்ள தனது வீட்டை விற்றுக் கிடைத்தை பணத்தைக் கொண்டு உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று புறப்பட்டவர்.

“முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்றபோது, கடற்கரை ஓரங்களில் மிதக்கும் கழிவுகளைக் கண்டறிய ஒருங்கிணைந்த தேடுதல் பணிகள் நடைபெறவில்லை எனத் தெரிந்தது. யாரும் அதைச் செய்யவே இல்லை. கடலுக்கு அடியில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், காணாமல் போன விமானத்தின் பாகம் கடற்கரையின் ஓரத்தில் நடந்து செல்லும் ஒருவரின் கண்ணில்தான் முதலில் படும் என்று நான் நம்பினேன். அதை யாரும் செய்தாததால் நானே அதைச் செய்தேன்,” என்றார்.

ஓராண்டு காலம் மியான்மர் முதல் மாலத்தீவுகள் வரையிலான கடற்கரைகளில் தேடிய அவருக்கு விமானத்தின் முதல் பாகம் மொசாம்பிக்கின் மணல்திட்டு ஒன்றில் கிடைத்தது.

இதற்கிடையில் இந்தியப் பெருங்கடலில் உள்ள ரி யூனியன் தீவில் விமான இறக்கையில் இருந்து பெரிய பாகம் ஒன்று கிடைத்தது. இதன் மூலம் MH370 இந்திய பெருங்டலில்தான் வீழ்ந்து மூழ்கியுள்ளது என்பது அந்த குடும்பங்களுக்கு உறுதியானது.

 
MH370யின் பாகங்கள் எப்படி கண்டறியப்பட்டன?
MH 370

பட மூலாதாரம்,BBC/ LULU LUO

படக்குறிப்பு,

விமானத்தின் சிதறிய பாகங்கள், நினைவு தின நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன

விமானம் காணாமல் போன 16 மாதங்கள் கழித்தே அதன் பாகங்கள் கிழக்கு ஆப்பரிக்க கடற்கரைகளில் கண்டுபிடிக்கப்பட்டன. தெற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள நீரோட்ட ஆய்வுகள் மூலம், இந்த பாகங்கள் MH370இல் இருந்து கண்டுபிடிக்கப்பட்டவையாக இருக்கலாம் என்று தெரிய வந்தது.

அஸ்லாம் கான், மலேசிய முன்னாள் தலைமை புலனாய்வாளர் இந்த பாகங்களை எப்படி உறுதிப்படுத்தினோம் என விளக்கினார். கண்டுபிடிக்கப்பட்ட பாகங்களில் உள்ள வரிசை எண்கள், விமான தயாரிப்பாளரின் ஆவணங்களில் இருந்த வரிசை எண்களுடன் ஒத்துப் போனது. எனவே அவை மலேசிய ஏர்லைன்ஸ் போயிங் விமானம் என்பது உறுதிசெய்யப்பட்டது.

மேலும் அந்தப் பாகங்களில் இருந்த எழுத்துகளின் வடிவங்களைப் பார்த்தபோது, அவை போயிங் விமானத்தினுடையது என்பது, வேறு எந்த போயிங் விமானமும் இந்திய பெருங்கடலில் விழவில்லை என்பதால் அது MH370இன் பாகங்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

விமானம் பறக்கும்போது அதைச் சீராக வைத்துக்கொள்ள இறக்கைகளில் உள்ள பாகம் ஃப்ளாப்ரான். அந்தப் பாகமும் கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் மீண்டும் மலேசியா நோக்கி திரும்பியதற்கு இதுவே சான்றாக அமைந்தது. இந்த பாகம் கிடைக்கும் வரை விமானம் மேற்கில் மலாய் தீபகற்பம் நோக்கி பறந்ததற்கான சாட்சி, மலேசியா மற்றும் தாய்லாந்தில் உள்ள ராணுவ ரேடார்களின் தரவுகள் மட்டுமே.

மேலும் சில சான்றுகளும் கிடைத்தன. பிரிட்டன் நிறுவனமான இன்மர்சாட், தனது செயற்கைகோள்கள் ஒன்றுடன் MH370 தொடர்பு கொண்டதைத் தெரிவித்தது. தெற்கு நோக்கிச் செல்லும்போது, ஒவ்வொரு ஒரு மணிநேரத்திலும் MH370 உடன் நிகழ்ந்த ‘கை குலுக்கல்’ என்றழைக்கப்படும் ஆறு தொடர்புகளைக் கண்டறிந்தது.

 
விமானம் மீண்டும் மலேசியா நோக்கிப் பறந்ததா?
MH 370

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட தேடுதல்கள் எந்தப் பலனையும் தரவில்லை

ஒவ்வொரு ஒரு மணிநேரத்திலும், விமானத்துக்கும் செயற்கைக் கோளுக்குமான தூரத்தைக் கணக்கிட்டு விமானம் உத்தேசமாக கடலில் எந்தப் பகுதியில் விழுந்திருக்கலாம் என்பது தெரிய வந்தது. அப்படி குறிக்கப்பட்ட இடம், மிகப் பரந்த ஆக்ரோஷமான ஆழமான கடல் பகுதி. அதற்கு மேல் குறிப்பான இடத்தைத் துல்லியமாக கண்டறியமுடியவில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2017ஆம் ஆண்டு ஜனவரி வரை, 26 நாடுகளைச் சேர்ந்த 60 கப்பல்கள், 53 விமானங்கள் தேடுதல் பணியை மேற்கொண்டன. 2018ஆம் ஆண்டு அமெரிக்க தனியார் நிறுவனமான ஓஷன் இன்ஃபினிட்டி ஐந்து மாதங்களுக்கு கடலுக்கு அடியில் செல்லக்கூடிய ட்ரோன்கள் கொண்டு தேடியது.

ஆதாரபூர்வமான தரவுகள் இல்லாததால், விமானம் மாயமானது குறித்துப் பல சதிக்கோட்பாடுகள் பேசப்பட்டன. விமானம் கடத்தப்பட்டு ரஷ்யா கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் அல்லது டியகோ கார்சியா தீவில் உள்ள அமெரிக்க வான் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் எனப் பல கோட்பாடுகள் இருந்தன.

காட்சிக்கு வைக்கப்பட்ட விமான பாகங்களைப் பார்த்தபோது, “இது மிகவும் வெறுக்கக்தக்கது” என்கிறார் பிரெஞ்சு பத்திரிகையாளர் ஃப்ளாரன்ஸ் டெ சாங்கி.

இவர், MH370 மாயமானது குறித்து விரிவாக ஆய்வு செய்து புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். MH 370 குறித்து வெளியான நூற்றுக்கணக்கான புத்தகங்களில் இதுவும் ஒன்று.

விமானம் திரும்பி தெற்கு நோக்கிப் பறந்தது என்ற கோட்டைபாட்டை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை, அது பொய்யாகச் சித்தரிக்கப்பட்டது என்கிறார். கண்டெடுக்கப்பட்டவை MH370-இன் பாகங்கள் இல்லை என்கிறார். விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட சரக்குகள் குறித்துக் கேள்விகள் எழுப்புகிறார் அவர். அந்த விமானத்தில் இருந்த சரக்குகள் காரணமாக தென் சீனக் கடல் மீது அமெரிக்க விமானத்தால் சுடப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்.

 
தொடர்பு துண்டிக்கப்பட்டும் ஆறு மணிநேரம் எப்படி சீராகப் பறந்தது?
MH 370

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

MH370 மாயமானது குறித்து பல சதிக்கோட்பாடுகள் பேசப்படுகின்றன.

ரேடார் மற்றும் செயற்கைக்கோள்களின் தரவுகளைப் பல நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அந்த தரவுகளின்படி பார்த்தால், விமானத்தை யாரோ தெரிந்தே தெற்கு நோக்கி இயக்கியுள்ளனர் என்பதுதான் அதற்குரிய ஒரே விளக்கம்.

பிபிசியின் “ஏன் விமானங்கள் மாயமாகின்றன” என்ற புதிய வீடியோவில் இரண்டு பிரெஞ்சு வான்வெளி நிபுணர்கள் பேசியுள்ளனர். அதில் ஒருவர் அனுபவமிக்க விமானி. விமானம் எப்படி பறந்திருக்கக் கூடும் என்று அவர் தொழில்நுட்ப உதவியுடன் நிகழ்த்திக் காட்டுகிறார். மலேசிய வான் கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பு முடிந்த பிறகு, தென் சீனக் கடல் மீது MH370 துரிதமாக எப்படி திரும்பியிருக்கக் கூடும் என்று விளக்குகிறார். இதை அனுபவமிக்க, திறன்கொண்ட விமானி ஒருவர் செய்தால் மட்டுமே இப்படித் திரும்ப முடியும் என்ற முடிவுக்கு வந்தனர்.

சரியாக மலேசிய வான் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து வியட்நாம் வான் கட்டுப்பாட்டு மையத்துக்குள் நுழையும் முன் விமானம் இப்படி திரும்பியுள்ளதால், யாருக்கும் தெரியாமல் திருப்ப வேண்டும் என்று விமானி செய்திருக்கக் கூடும் என்று கருதுகின்றனர். ஏனென்றால், வியட்நாம் வான் கட்டுப்பாட்டுக்குள் விமானம் வரவில்லை என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளச் சிறிது நேரம் ஆகும்.

மேலும் சில கோட்பாடுகளும் உள்ளன. விமானத்தில் இருந்த அனைவரும் சீரற்ற அழுத்தம் காரணமாக ஆக்சிஜன் இல்லாமல் இறந்து போயிருக்கலாம் அல்லது திடீரென பெரிய தீ விபத்து ஏற்பட்டு, தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கோட்பாடுகள் உள்ளன. ஆனால், விமானத்தின் சவாலான திருப்பம், அதன் பிறகு தொடர்ந்து ஏழு மணிநேரம் சீராகப் பறந்தது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, மேற்சொன்ன கோட்பாடுகள் சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது.

 
மலேசிய அரசின் மெத்தனப் போக்கு
MH 370

பட மூலாதாரம்,BBC/ LULU LUO

படக்குறிப்பு,

ஜாகிடா கொன்சாலெஸின் கணவரான பாட்ரிக் கோம்ஸ் MH 370 விமானத்தின் கண்காணிப்பாளராக இருந்தார்.

அதேநேரம் விமானி வேண்டுமென்றே விமானத்தை வேறு திசையில் திருப்பி பயணிகளை மரணத்துக்கு இட்டுச் சென்றார் என்பதும் நம்பத்தக்கதாக இல்லை. அந்த விமானி அப்படி செய்யக் கூடியவர் என்பதற்கான வரலாறும் இல்லை. இந்த சந்தேகங்கள், கோட்பாடுகள் அனைத்தும் குடும்பங்களின் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

“எனது மோசமான எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது” என்கிறார் ஜாகிடா கொன்சாலெஸ், MH 370 விமானத்தின் உள் இருக்கும் கண்காணிப்பாளர் பாட்ரிக் கோம்ஸின் மனைவி.

“நாங்கள் இதுபோன்ற உணர்ச்சிப் பிழம்புகளுக்கு ஆளாகிக் கொண்டே இருக்கிறோம். முதன்முதலில் தேடுதல் பணிகள் தொடங்கியபோது, ஏதாவது ஒன்றைப் பார்த்து விட்டதாகக் கூறுவார்கள், அப்போது எங்கள் நம்பிக்கை அதிகமாகும். அதன் பிறகு அது MH370 இல்லை என்று கூறுவிடுவார்கள். நாங்கள் மீண்டும் காத்திருக்க தொடங்குவோம்.” என்றார்.

ஆரம்பத்திலிருந்தே மலேசிய அரசு குடும்பங்களால் விமர்சிக்கப்பட்டு வந்தது. ராணுவ ரேடார் தகவல்கள் கொண்டு துரிதமாக MH370 விமானத்தைக் கண்டறியும் பணியை மேற்கொள்ளாததற்காகவும், 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு தேடுதல் பணிகளை மேற்கொள்ள மெத்தனமாக இருந்ததற்காகவும் விமர்சிக்கப்பட்டது. ஓஷன் இன்ஃபினிடி என்ற தனியார் நிறுவனம், எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் கட்டணம் வேண்டாம் என்ற அடிப்படையில் தேடுதல் பணிகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளது. ஆனால், அதற்கு அரசின் அனுமதி வேண்டும்.

மலேசிய அரசு மேலும் சில நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும் என சில அரசு அதிகாரிகள் தனியாகச் சந்தித்துப் பேசும்போது ஒப்புக் கொள்கின்றனர். இதற்கு சமீப ஆண்டுகளில், நாட்டில் ஏற்பட்டு வரும் அரசியல் குழப்பங்கள் காரணமாக இருக்கலாம். அதன் பிறகு எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிய கொரோனா பெருந்தொற்று பரவியது. பெருந்தொற்றுக் காலத்தில் குடும்பங்கள் வருடாந்திர நினைவு தினத்தை அனுசரிக்கக்கூட இயலவில்லை.

தற்போது பொறுப்பில் இருக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக், கோலா லம்பூரில் நடைபெற்ற 10வது ஆண்டு நினைவு தினத்தில் பங்கேற்றார். மாயமான விமானத்தைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த ஆண்டில் தேடுதல் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஓஷன் இன்ஃபினிடி நிறுவனத்துடன் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.

ஓஷன் இன்ஃபினிடி 2018ஆம் ஆண்டு 1.12 லட்சம் கி.மீ இடத்தைத் தேடிப் பார்த்தது. இதில் ஆழ்கடல் பள்ளத்தாக்குகள் போன்ற மிக சவாலான பகுதிகளும் இருந்ததால், விமானத்தைத் தவற விட்டிருக்கவும் வாய்ப்புண்டு.

 
தேடுதல் பணியில் புதிய நம்பிக்கை
MH 370

பட மூலாதாரம்,BBC/ JONATHAN HEAD

படக்குறிப்பு,

பத்து ஆண்டுகளாக லி மற்றும் அவரது மனைவி தங்கள் மகனுக்கு என்ன ஆனது என்று தெரிந்துகொள்ள முயன்று வருகின்றனர்.

இந்தத் தேடுதல் பணிகளில் ஈடுபட்ட மற்றொரு நபர் ஓய்வுபெற்ற பிரிட்டன் வான்வெளி தொழில்நுட்ப நிபுணர், ரிச்சர்ட் காட்ஃப்ரே. அவர் விமானம் மாயமாகியிருக்கக் கூடும் என்ற இடத்தை மேலும் குறிப்பாகக் கண்டறிந்துள்ளதாகக் கூறுகிறார். சில சிற்றலை வானொலி சோதனைகள் மூலம் அவர் இதைச் செய்துள்ளார். ட்ரோன்கள் கொண்டு கவனத்துடன் அந்தக் குறிப்பிட்ட பகுதியைப் பல முறை தேடிப் பார்க்க வேண்டும்.

“ஒரு ஆண்டில் 1.7 பில்லியன் தரவுகள் பதிவு செய்யப்படுகின்றன. அதாவது உலகம் முழுவதும் விரிந்து கிடக்கும் ஒரு மீன் வலையை கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த வலை முழுவதும் ரேடியோ சிக்னல்கள் உள்ளன. ஒவ்வொரு முறையும் ஒரு விமானம் செல்லும் போது, இந்த வலையில் ஒரு துளை ஏற்படும். அதை வைத்து அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் எந்த இடத்தில் இருந்தது என என்னால் கூற முடியும். தெற்கு இந்திய பெருங்கடல் மீது பறந்த ஆறு மணி நேரங்களில், MH370யினால் ஏற்பட்ட 313 முரண்பாடுகள் 95 வெவ்வேறு நேரங்களில் பதிவாகியுள்ளது. அதை வைத்து விமானம் வீழ்ந்த பகுதியை மேலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்,” என்கிறார்.

ரிச்சர்ட் சொல்வது சரியான வழியா என்று கண்டறிய லிவர்பூல் பல்கலைகழகம் சோதனை செய்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் அதன் முடிவுகள் தெரிய வரும்.

மலேசிய போக்குவரத்து அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகள் நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாக குடும்பங்கள் தெரிவிக்கின்றன. மலேசிய அரசு இதுவரை கொண்டிருந்த அணுகுமுறையில் இருந்து இந்த வாக்குறுதி மாறுபட்டதாக இருக்கிறது. ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதேபோன்று அவர்களுக்குப் பலமுறை நம்பிக்கைகள் மட்டுமே கிடைத்துள்ளன.

“எனக்கு விமானத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கொன்சாலெஸ் கூறுகிறார். “அப்போதாவது எனது கணவரின் ஆன்மா சாந்தியடையும். இதுவரை நான் அவரது நினைவாக எதுவும் செய்யவில்லை. என்னால் செய்ய முடியாது, ஏனென்றால் கண்களுக்குப் புலப்படும் எதையும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை” என்றார்.

நினைவு தின நிகழ்வில் ஒரு பெரிய பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் மக்கள் தங்கள் நம்பிக்கையை, துயரத்தை, சோகத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

பெரிய சீன எழுத்துகளில், அந்தப் பலகையில் எழுதுவதற்காக கீழே அமர்ந்த லி, அந்த பலகையைப் பார்த்து அழுதுகொண்டே நின்றார்.

அதில், “மகனே, பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. உனது அம்மாவும் அப்பாவும் உன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறோம். மார்ச் 3, 2024,” என்று எழுதியிருந்தது.

https://www.bbc.com/tamil/articles/cy9z80j9g3xo

ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் இஸ்ரேலிய குடியிருப்புகளை விஸ்தரிப்பது போர்க் குற்றம் - வோல்கர் டர்க்

1 month ago

Published By: SETHU   11 MAR, 2024 | 10:48 AM

image
 

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீன பிராந்­தி­யங்­களில் இஸ்­ரே­லிய குடி­யி­ருப்­பு­களை விஸ்­த­ரிப்­பது போர்க் குற்­ற­மாகும் என ஐ.நா.வின் மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் வோல்கர் டர்க் கூறி­யுள்ளார். 

ஜெனி­வா­வி­லுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வைக்கு கடந்தவாரம்  அளித்த அறிக்­கை­யொன்­றி­லேயே வோல்கர் டர்க் இவ்­வாறு கூறி­யுள்ளார். 

மேற்குக் கரையின் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பகு­தி­களில் இஸ்­ரேலின் சட்­ட­வி­ரோத குடி­யி­ருப்பு நிர்­மா­ணங்கள் வேக­மாக அதி­க­ரித்து வரு­கின்­றன என அவர் கூறினார்.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பிராந்­தி­யங்­களில்  குடி­யி­ருப்­பு­களை உரு­வாக்­கு­வதும் விரி­வாக்­கு­வதும் இஸ்ரேல் தனது சொந்த ­மக்­களை ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு இட­மாற்­று­வ­தற்கு சம­மாகும். 

இது போர்க் குற்­றத்­துக்கு ஒப்பானது. இதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை குற்றப் பொறுப்­பா­ளி­க­ளாக்கக் கூடும் என அவர் கூறினார். 

மேற்குக் கரையின் மாலே அடுமின், இப்ரத், கேதார் பகு­தி­களில் மேலும் 3,476 வீடு­களை நிர்­மா­ணிக்கும் இஸ்­ரேலின் திட்­ட­மா­னது சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்கு முற்­றிலும் முர­ணா­ன­தாகும் என அவர் கூறினார். 

மேற்­படி யூதக் குடியிருப்புகளை நிர்மாணிக்கும் திட்­டத்துக்கு ஸ்பெய்ன், பிரான்ஸ் ஆகியனவும் கடந்த வெள்ளிக்கிழமை கண்டனம் தெரி­வித்திருந்தன.

https://www.virakesari.lk/article/178395

Checked
Tue, 04/16/2024 - 20:20
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe