உலக நடப்பு

ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"!

1 month 2 weeks ago

New-Project-323.jpg?resize=750%2C375&ssl

ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"!

இதுவரை பதிவான வலிமையான அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்றாக ஜமைக்காவைத் தாக்கிய பின்னர் மெலிசா கிழக்கு கியூபாவை நோக்கி நகர்ந்துள்ளது.

அங்கு அது புதன்கிழமை (29) அதிகாலை ஒரு பெரிய புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனால், கியூபாவில் அதிகாரிகள் 700,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தித்தாளான கிரான்மா தெரிவித்துள்ளது.

மேலும், நான்காம் வகை புயல் சாண்டியாகோ டி கியூபா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பேரழிவு தரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர்.

கிரான்மா, சாண்டியாகோ டி கியூபா, குவாண்டனாமோ, ஹோல்குயின் மற்றும் லாஸ் டுனாஸ் மாகாணங்களுக்கும், தென்கிழக்கு மற்றும் மத்திய பஹாமாஸுக்கும் சூறாவளி எச்சரிக்கை அமுலில் இருந்தது. 

பெர்முடாவிற்கு சூறாவளி எச்சரிக்கை அமுலில் இருந்தது.

"Witness the raw power of nature as a U.S. Air Force pilot navigates through the eye wall of Hurricane Melissa, a Category 5 storm with 185 mph winds sweeping across Jamaica, Haiti, and the Dominican Republic. The accompanying image captures the storm's mesmerizing eye, where life persists amidst the chaos. #HurricaneMelissa #ClimateCrisis #NatureUnleashed"

Image

செவ்வாய்க்கிழமை இரவு, மெலிசா மணிக்கு 130 மைல் (215 கிமீ) வேகத்தில் காற்று வீசியது மற்றும் மியாமியில் உள்ள அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின்படி, வடகிழக்கில் 9 மைல் (15 கிமீ) வேகத்தில் நகர்ந்தது. 

இந்த சூறாவளி கியூபாவின் குவாண்டநாமோவிலிருந்து தென்மேற்கே சுமார் 110 மைல் (175 கிலோமீட்டர்) தொலைவில் மையம் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1451468

இங்கிலாந்தில் விடுதிகளில் இருக்கும் அகதிகளை ராணுவ முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை!

1 month 2 weeks ago

f41732c0-b397-11f0-ba75-093eca1ac29b.jpg

இங்கிலாந்தில் விடுதிகளில் இருக்கும் அகதிகளை ராணுவ முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை!

இங்கிலாந்து அரசு, நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளை விடுதிகளில் இருந்து வெளியேற்றி, இராணுவ முகாம்களில் தங்க வைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அரசாங்கம் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள இரு இராணுவ முகாம்களை பற்றி கலந்தாலோசித்து வருகிறது.

இவற்றில் சுமார் 900 பேரை தங்க வைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் குறித்து முதலில் The Times பத்திரிகை செய்தி வெளியிட்டது.

உள்துறை அமைச்சு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு, தகுந்த இராணுவ முகாம்களை விரைவாக அடையாளம் கண்டு தயார்படுத்துமாறு பிரதமர் கியர் ஸ்டார்மர் உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் அகதிகளை விடுதிகளில் தங்க வைக்கும் நடைமுறையை முழுமையாக நிறுத்துவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

இதேவேளை, விடுதிகள் வழியாக தங்குமிடம் வழங்கும் திட்டம், அரசுக்கு பல பில்லியன் பவுண்டுகள் இழப்பை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1451369

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் - டொனால்ட் ட்ரம்ப்

1 month 2 weeks ago

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் - டொனால்ட் ட்ரம்ப்

28 Oct, 2025 | 10:27 AM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் முன்னாள் மூலோபாயவாதி ஸ்டீவ் பானனின் அரசியலமைப்பிற்கு முரணாக மூன்றாவது முறையாக போட்டியிட வேண்டும் என்ற சமீபத்திய பரிந்துரை தொடர்பில் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அதைச் செய்ய நான் மிகவும் விரும்புகிறேன். என்னுடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக உள்ளன” என தெரிவித்தார்.

எனினும், மீண்டும் போட்டியிடுவது பற்றி "உண்மையில் யோசிக்கவில்லை" எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/228866

தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து: மத்தியஸ்தம் செய்த ட்ரம்ப்

1 month 2 weeks ago

Published By: Digital Desk 1

27 Oct, 2025 | 02:13 PM

image

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே கடந்த சில மாதங்களாக நிலவி வந்த எல்லைப் பிரச்சினையால் வெடித்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் (ASEAN Summit) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மே மாதம் திடீர் மோதல் வெடித்தது.இரு நாட்டுப் படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும், எல்லைப் பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடிச் சென்றனர்.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர முதலில் மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது. எனினும், மோதல் தொடர்ந்து நீடித்ததால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதில் நேரடியாகத் தலையிட்டு இரு நாட்டுத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆசிய நாடுகளுக்கான பயணத்தின் ஒரு பகுதியாக மலேசியாவில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னிலையில்  அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

கம்போடிய பிரதமர் {ஹன் மானெட் மற்றும் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் ஆகியோர் டிரம்ப் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக இருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு கம்போடிய பிரதமர் {ஹன் மானெட் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான முக்கிய நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து காவலில் வைத்திருந்த 18 கம்போடிய வீரர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான 800 கிலோமீற்றர் நீளமுள்ள எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த கனரக ஆயுதங்களை அகற்றும் பணிகளை உடனடியாக ஆரம்பித்துள்ளன.

அமைதி ஒப்பந்தத்துடன் சேர்த்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிராந்தியத்தில் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் மேலும் சில முக்கிய பொருளாதார ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டார்.

மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அரிய மண் தாதுக்கள் ஒப்பந்தம் (Critical Minerals Deal) ஆகியவற்றில் டிரம்ப் கையெழுத்திட்டார். மேலும், கம்போடியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்துடனான கனிம வள ஒப்பந்தம் ஆகியவற்றிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 

WhatsApp_Image_2025-10-27_at_13.36.40.jp

https://www.virakesari.lk/article/228783

வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்கா – சீனா இணக்கம்!

1 month 2 weeks ago

New-Project-274.jpg?resize=750%2C375&ssl

வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்கா – சீனா இணக்கம்!

அமெரிக்காவும் சீனாவும் ஒரு சாத்தியமான வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பை ஒப்புக் கொண்டுள்ளன.

இது இந்த வார இறுதியில் அந்தந்த தலைவர்கள் சந்திக்கும் போது விவாதிக்கப்படும் என்று அமெரிக்க திறைசேரியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்க வரிகளை அதிகரிப்பதையும் சீன அரிய மண் ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் இடைநிறுத்துவதையும் நோக்காக்க கொண்டுள்ளது.

கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த பேச்சுவார்த்தைகள், நவம்பர் 1 முதல் சீன இறக்குமதிகள் மீதான ட்ரம்பின் 100% வரிகளின் அச்சுறுத்தலை நீக்கியதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார். 

சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தைகள் குறித்து மிகவும் கவனமாக இருந்தனர், மேலும் சந்திப்புகளின் முடிவுகள் குறித்து எந்த விவரங்களையும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை (30) ட்ரம்பும் ஜியும் சந்தித்து, விதிமுறைகளில் கையெழுத்திட உள்ளனர். 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப்-ஜி பேச்சுவார்த்தைகளை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இரு தலைவர்களும் சந்திப்பார்கள் என்பதை சீனா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

https://athavannews.com/2025/1451204

ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மலேசியாவுக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி

1 month 2 weeks ago

மலேசியாவுக்கு சென்றார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

26 Oct, 2025 | 11:06 AM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மலேசியாவுக்கு சென்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 5 நாட்கள் பயணமாக  ஆசிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இது அவருடைய முதல் ஆசிய நாடுகள் பயணமாகும். 

மலேசியாவில் இன்றைய தினம்  முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ள ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் தலைநகர் கோலாலம்பூரை சென்றடைந்துள்ளார்.

அவருக்கு மலேசியா அரசு தரப்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆசியன் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். 

முன்னதாக கம்போடியா-தாய்லாந்து இடையேயான எல்லை பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமைதி ஒப்பந்தத்தில் ட்ரம்ப் கையெழுத்திடவுள்ளார். 

பின்னர் அங்கிருந்து ஜப்பானுக்கு செல்லவுள்ளார். அங்கு புதிய பிரதமர் சனே தகச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தொடர்ந்து தென்கொரியாவில் நடைபெற உள்ள ஆசியா பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

அப்போது சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்தநிலையில் வடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து ஊடகவியலார்கள் கேள்விக்கு ட்ரம்ப், “கிம் ஜாங் அன் எனக்கு நல்ல நண்பர். அவரை சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன். வாய்ப்பிருந்தால் பார்க்கலாம்” என்றார். 

இருப்பினும் பயணத்திட்டத்தில் கிம் ஜாங் அன்னுடனான எந்த சந்திப்புக்கும் திட்டமிடப்படவில்லை என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

G4KXc6_XEAAqpVu.jpg

G4KXd2iWgAA0xK_.jpg

https://www.virakesari.lk/article/228693

கொலம்பிய ஜனாதிபதி மீது பொருளாதார தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப்!

1 month 2 weeks ago

Column-Will-Donald-Trump-Go-to-Prison-fo

கொலம்பிய ஜனாதிபதி மீது பொருளாதார தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப்!

உலகளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

போதைப்பொருள் கும்பலை தடுக்கும் நடவடிக்கை என்று கூறி, கரீபியன் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் நுழைந்த எட்டு கப்பல்களையும் அமெரிக்க இராணுவம் தகர்த்துள்ளது எனவும்
கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி எனவும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

கொலம்பிய நாட்டு வயல்களில் போதைப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து பெரிய அளவிலான உதவிகள் மற்றும் மானியங்கள் கிடைத்தும், பெட்ரோ அதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என்று கூறி, அந்நாட்டிற்கான உதவிகளையும் குறைத்ததுடன்
போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நாடுகள் பட்டியலில் 30 ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக கொலம்பியாவையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணைத்துள்ளார்.

இந்த பின்னணியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எனக் கூறி, கொலம்பிய ஜனாதிபதி பெட்ரோ, அவரது மனைவி, மகன் மற்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஆகிய நான்கு பேர் மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

அவர்கள் உலகளவில் போதைப்பொருள் வணிகத்தில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1451140

தொழில்நுட்பக் கோளாறு: அமெரிக்காவில் 40 விமான சேவைகள் இரத்து

1 month 2 weeks ago

25 Oct, 2025 | 10:40 AM

image

அமெரிக்காவின் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான அலாஸ்கா ஏர்லைன்ஸ் (Alaska Airlines) நிறுவனத்தின் இணையத்தளத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த நிறுவனத்தின் சுமார் 40 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. மேலும், 240க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.

சியாட்டிலை தளமாகக் கொண்டு இயங்கும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வலைத்தளத்தில் (website) எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் விளைவாக, பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உடனடியாக முடிவுகள் எடுக்கப்பட்டன.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அலாஸ்கா ஏர்லைன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஹாரிசன் ஏர் (Horizon Air) ஆகியவற்றின் விமானங்களும் உடனடியாக தரையிறங்க அறிவுறுத்தப்பட்டன.

இந்தச் சம்பவத்தால், மொத்தமாக சுமார் 40 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. மேலும், 240க்கும் அதிகமான விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தைவிடத் தாமதமாகப் புறப்பட்டதால், விமானப் பயணங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும், கோளாறு சரிசெய்யப்பட்டுச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/228619

போலந்தில் கோழிப் பண்ணையில் தீ விபத்து : பலியான ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள்

1 month 2 weeks ago

போலந்தில் கோழிப் பண்ணையில் தீ விபத்து : பலியான ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள்

25 Oct, 2025 | 12:15 PM

image

போலந்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கோழிப் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன.

தென்மேற்கு போலந்தில் உள்ள ஃபால்கோவிசே (Fałkowice) கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆயிரக்கணக்கான கோழிகள் அடைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, அந்தக் கோழிப் பண்ணையில் சுமார் 1.3 இலட்சம் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன.

இந்த விபத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கோழிகள் உயிரிழந்தன. எனினும், சில ஊடகங்கள் இந்த எண்ணிக்கை 4 இலட்சம் வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளன.

தீயணைப்பு வீரர்கள் இந்தப் பெரும் தீயை முழுவதுமாக அணைக்க 10 மணி நேரம் போராட வேண்டியிருந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/228630

உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி நகர்த்திய அமெரிக்கா

1 month 2 weeks ago

உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி நகர்த்திய அமெரிக்கா

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி ஐக்கிய அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

USS Gerald R Ford என்று பெயரிடப்பட்ட இந்த விமானம் தாங்கி கப்பல், 90 விமானங்கள் வரை கொண்டு செல்லக்கூடிய உலகின் மிகப் பெரிய அமெரிக்கப் போர்க் கப்பலாகும். 

சமீப வாரங்களாக கரீபியன் தீவுகளில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்து வருவதாகவும், இதில் மேலும் 8 போர்க் கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் F-35 விமானங்கள் ஆகியவையும் உள்ளடங்குவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்தக் கப்பல் மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா அத்துடன் கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அமெரிக்காவின் தெற்கு கட்டளைப் பிராந்தியத்திற்கு அனுப்பப்படுவதாக பென்டகன் அறிவித்துள்ளது. 

சமீபகாலமாக, சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட படகுகள் மீது அமெரிக்க இராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. கரீபியன் தீவுகளில் போதைப்பொருள் கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட படகு மீது ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதலே அதன் மிக சமீபத்திய தாக்குதலாகும். 

இந்தத் தாக்குதலில் படகில் இருந்த 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், கடந்த மாதம் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை ஆரம்பித்ததில் இருந்து இலக்கு வைக்கப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 10 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆகவும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cmh5y6v47017do29n9l64zn42

எந்த ஒரு நாடும் தனியாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்க்க உலகம் மீண்டும் உறுதிபூண வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்

1 month 2 weeks ago

Published By: Digital Desk 3

24 Oct, 2025 | 03:32 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

இது கோழைத்தனம் அல்லது பின்வாங்குவதற்கான நேரமல்ல. இப்போது, முன்பை விட அதிகமாக, எந்த ஒரு நாடும் தனியாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உலகம் மீண்டும் உறுதிபூண வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவு பெறுவது மற்றும் இலங்கையுடனான அதன் கூட்டாண்மைக்கு 70 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், உலகளாவிய சவால்களின் காலத்தில் கூட்டு நடவடிக்கையின் விதமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் 2025 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் தினத்திற்காக இந்தச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

நாம் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்.., இவை ஐக்கிய நாடுகள் சாசனத்தின் தொடக்க வரிகள் மட்டுமல்ல, அவை நாம் யார் என்பதை வரையறுக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை ஒரு நிறுவனம் என்பதை விடவும் மேலானதாகும். இது ஒரு வாழும் வாக்குறுதியாக, எல்லைகளைத் தாண்டி, கண்டங்களை இணைத்து, தலைமுறைகளுக்கு எழுச்சியூட்டுகிறது.

எண்பது ஆண்டுகளாக, அமைதியைக் கட்டியெழுப்ப, வறுமை மற்றும் பசியைக் கையாள, மனித உரிமைகளை மேம்படுத்த, மற்றும் மிகவும் நிலைத்தன்மை வாய்ந்த உலகை உருவாக்க ஒன்றுபட்டு நாங்கள் உழைத்துள்ளோம்.

நாம் முன்னோக்கிச் செல்லும்போது, மோதல்கள் அதிகரித்தல், காலநிலைச் சீர்குலைவு, கட்டுப்பாடற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் நமது நிறுவனத்தின் இருப்புக்கான அச்சுறுத்தல்கள் போன்ற மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறோம்.

இது கோழைத்தனம் அல்லது பின்வாங்குவதற்கான நேரமல்ல. இப்போது, முன்பை விட அதிகமாக, எந்த ஒரு நாடும் தனியாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உலகம் மீண்டும் உறுதிபூண வேண்டும்.இந்த ஐக்கிய நாடுகள் தினத்தில், நாம் ஒன்றாக நின்று, உங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அசாதாரணமான வாக்குறுதியை நிறைவேற்றுவோம். “ மக்களாகிய நாம்”ஒன்றுபட்டுச் செயற்படுவதைத் தேர்ந்தெடுக்கும் போது சாத்தியமானது என்ன என்பதை உலகிற்குக் காண்பிப்போம் எந்த அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/228574

உக்ரைனுக்கான இழப்பீட்டு கடன்கள் குறித்த ஐரோப்பிய ஆணையத் திட்டத்தை பெல்ஜியம் இன்னும் ஆதரிக்கவில்லை.

1 month 3 weeks ago

உக்ரைனுக்கான இழப்பீட்டு கடன்கள் குறித்த ஐரோப்பிய ஆணையத் திட்டத்தை பெல்ஜியம் இன்னும் ஆதரிக்கவில்லை.
Ulyana Krychkovska,
Tetyana Vysotska, Anastasia Protz — 22 அக்டோபர், 14:32

உக்ரைனுக்கான இழப்பீட்டு கடன்கள் குறித்த ஐரோப்பிய ஆணையத் திட்டத்தை பெல்ஜியம் இன்னும் ஆதரிக்கவில்லை.

பெல்ஜியக் கொடி. ஸ்டாக் புகைப்படம்: பெல்ஜியக் கொடி

1332 தமிழ்

உக்ரைனுக்கு €140 பில்லியன் இழப்பீட்டுக் கடன்களை வழங்க, முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஆணையம் பெல்ஜியத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, ஆனால் பிரஸ்ஸல்ஸ் இன்னும் இந்த முயற்சியை அங்கீகரிக்கவில்லை.

மூலம்: ஐரோப்பிய பிராவ்தா , பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதர்களை மேற்கோள் காட்டி.

ஒரு EU தூதரின் மேற்கோள்: "ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் கூட்டம் தற்போது நடந்து வருகிறது, அங்கு உக்ரைனுக்கு ஆதரவாக முடக்கப்பட்ட சொத்துக்களைப் பயன்படுத்துவது மேசையில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும். நாம் பார்க்கக்கூடியதிலிருந்து, பெல்ஜியம் இன்னும் தீர்க்கப்படாத சட்டப்பூர்வ கவலைகளைக் கொண்டுள்ளது."

விவரங்கள்: ஐரோப்பிய கவுன்சிலின் கூட்டத்தின் போது அக்டோபர் 23 அன்று பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தூதர் மேலும் கூறினார்.

மற்றொரு தூதரக அதிகாரியின் மேற்கோள்: "பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடமிருந்து தெளிவான உறுதிமொழிகள் மற்றும் உத்தரவாதங்களை நாடுகிறது, இதுவரை ஐரோப்பிய ஆணையத்தால் முன்வைக்கப்பட்ட வாதங்கள் போதுமானதாக இல்லை."

பின்னணி:

https://www.pravda.com.ua/eng/news/2025/10/22/8003924/

அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 40 பேர் பலி

1 month 3 weeks ago

23 Oct, 2025 | 11:04 AM

image

பொருளாதாரம் மற்றும் சிறந்த வாழ்வாதாரத்தை நாடி ஐரோப்பிய நாடுகளுக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாகப் பயணித்த 40 பேர் படகு விபத்தில் உயிரிழந்தனர்.

ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த இந்த அகதிகள், மத்திய தரைக்கடல் பகுதியில் துனிசியா அருகே பயணித்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற ஒரு படகு, மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குப் புறப்பட்டது. துனிசியா நாட்டின் மஹ்தியா நகர் அருகே நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்தப் படகு விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த துனிசியா கடற்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த மோசமான படகு விபத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். கடலில் விழுந்தவர்களில் பலர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உயிருடன் மீட்கப்பட்ட அகதிகள், துனிசியாவில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆபிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாகவும், அபாயகரமான முறையிலும் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த அபாயகரமான பயணங்களின்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு அகதிகள் உயிரிழப்பது தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

https://www.virakesari.lk/article/228441

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை உத்தரவு!

1 month 3 weeks ago

New-Project-240.jpg?resize=750%2C375&ssl

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை உத்தரவு!

உக்ரேனில் அமைதி ஒப்பந்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்கா புதிய தடைகளை புதன்கிழமை (22) அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இடையேயான உச்சிமாநாட்டிற்கான திட்டங்கள் முறிந்த ஒரு நாளுக்குப் பின்னர் புதிய தடைகள் வெளியிடப்பட்டன. 

ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil ஆகியவை மொஸ்கோவின் போர் நடவடிக்கைக்கு நிதியளிக்கும் திறனை தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை வந்துள்ளதாக அமெரிக்க திறைசேரி கூறியது.

இந்த நடவடிக்கை, மொஸ்கோவிற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், உக்ரேனில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் மேலும் இணக்கமான அணுகுமுறையை எடுப்பதற்கும் இடையே உள்ள வெள்ளை மாளிகைக்கு ஒரு கூர்மையான திருப்பத்தை ஏற்படுத்தியது. 

இந்த அறிவிப்புடன் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் ஒரு பீப்பாய்க்கு 2 அமெரிக்க ‍டொலர்களுக்கும் மேல் உயர்ந்தது.

வியாழக்கிழமை (23) ஆரம்ப ஆசிய வர்த்தக நேரங்களில், அமெரிக்காவின் மசகு எண்ணெய் அளவுகோலான மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) சுமார் $60.23 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.

பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 64.36 அமெரிக்க டொலர்களுக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

மேற்கண்ட இரண்டு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களும் ஒரு நாளைக்கு 3.1 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றன. 

இங்கிலாந்து அரசாங்கத்தின் மதிப்பீடுகளின்படி, உலகளாவிய உற்பத்தியில் 6% ஆக இருக்கும் மொத்த ரஷ்ய எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதிக்கு Rosneft பொறுப்பாகும்.

எண்ணெய் மற்றும் எரிவாயு ரஷ்யாவின் மிகப்பெரிய ஏற்றுமதிகள், மேலும் மொஸ்கோவின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகியவை அடங்கும். 

கிரெம்ளின் மீது பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறும் ட்ரம்ப் இந்த நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்பின் நடவடிக்கையை இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் யெவெட் கூப்பர் பாராட்டினார், அவர் அமெரிக்காவின் தடைகள் “வலுவாக வரவேற்கப்படுகின்றன” என்று கூறினார்.

https://athavannews.com/2025/1450931

கார்சிகா தீவில் பிறந்த நெப்போலியன் பிரெஞ்சு பேரரசரானது எப்படி?

1 month 3 weeks ago

நெப்போலியன் போனபார்ட்

பட மூலாதாரம், Getty Images

21 அக்டோபர் 2025

புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

(2021-ஆம் ஆண்டு உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை 'வரலாற்றுப் பதிவுகள்' என்ற பெயரில் ஞாயிறுதோறும் பிபிசி தமிழ் வெளியிட்டது. அந்த வரிசையில் வெளியான மூன்றாம் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.)

மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் போனபார்ட் (1769-1821) கருதப்படுகிறார்.

பிரெஞ்சுப் புரட்சி (1787-1799) நடந்த காலத்தில் முக்கியத்துவம் பெறும் நிலைக்கு உயர்ந்த நெப்போலியன், 1804 முதல் 1814 வரை பிரான்சின் பேரரசராக இருந்தார்.

1814இல் ஆட்சியை இழந்த பின் மீண்டும் 1815இல் பிரான்சின் பேரரசராக அவர் இருந்தார்.

1803 மற்றும் 1815 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் நடைபெற்ற நெப்போலியப் போர்கள் மூலம் அவர் நினைவுகூரப்படுகிறார்.

பிரிட்டன் உடனான வாட்டர்லூ போரில் ஜூன் 18, 1815 அன்று நெப்போலியன் போனபார்ட் தோல்வி அடைந்ததும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சரி.. நெப்போலியன் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும்?

நெப்போலியன் எங்கு எப்போது பிறந்தார் ?

ஆகஸ்ட் 15, 1769 அன்று மத்திய தரைக்கடலில் உள்ள கோர்சிகா தீவில் பிறந்தார் நெப்போலியன். இந்தத் தீவு பிரான்சின் ஓர் அங்கம்.

நெப்போலியன் வரலாற்றில் எதற்காக நினைவுகூரப்படுகிறார்?

அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆனால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நெப்போலியப் போர்கள் நடந்த காலகட்டத்தில் பிரான்சின் பேரரசராக இருந்ததற்கும், வாட்டர்லூ போரில் தோல்வி அடைந்ததற்கு அவர் நினைவுகூரப்படுகிறார்.

நெப்போலியனின் குடும்ப பின்புலம் என்ன?

நெப்போலியன் போனபார்ட்

பட மூலாதாரம், Getty Images

கார்சிகா தீவில் கார்லோ மரியா போனபார்ட் எனும் வழக்கறிஞருக்கும், அவரது மனைவி லெடிசியா ரமோலினா போனபார்ட்டுக்கும் பிறந்த குழந்தைகளில் எட்டு குழந்தைகள் உயிர் பிழைத்தனர். அவர்களில் இரண்டாவது குழந்தை நெப்போலியன் ஆவர்.

'போனபார்ட்' என்போர் கார்சிகா தீவில் வாழ்ந்த ஒரு சிறிய மேட்டுக்குடி சமூகத்தினர் ஆவர்.

நெப்போலியன் இருமுறை திருமணம் செய்து கொண்டவர். அவரது முதல் மனைவியின் பெயர் ஜோசஃபைன் டீ புஹார்னே (1796 - 1810). இரண்டாவது மனைவியின் பெயர் மேரி லூயி, பார்மாவின் கோமாட்டி (1810 - 1821). மேரி மூலமாகத்தான் இரண்டாம் நெப்போலியன் பிறந்தார்.

தனக்கு 1806ஆம் ஆண்டில் முறையின்றி பிறந்த, சார்லஸ் லியான் என வேறொரு மகன் இருப்பதாக முதலில் ஒப்புக் கொண்ட நெப்போலியன், காலப்போக்கில் அதை மறுத்தார்.

நெப்போலியனின் உயரம் என்ன?

நெப்போலியன் தாம் உயரம் குறைவாக இருப்பது குறித்து அதிகம் வருத்தப்பட்டிருக்கிறார். அவர் ஐந்து அடி இரண்டு அங்குலம் உயரம் என அவர் மரணத்தின் போது எழுதப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டிருக்கிறது. ஆங்கில அளவீட்டு முறைப்படி பார்த்தால் ஐந்து அடி ஆறு அங்குல உயரமிருப்பார்.

நெப்போலியனின் இளமைக்காலம் எப்படி இருந்தது?

நெப்போலியனின் தாய் தந்தையர் கார்சிகா தீவில் வாழ்ந்த ஒரு சிறிய மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் குடும்பம் அத்தனை செல்வாக்கானது அல்ல. நெப்போலியன் பிரான்சின் ராணுவ அகாடமிகளில் ஊக்கத் தொகையில் படித்தார்.

தன் வகுப்பறை சகாக்களை ஒப்பிடும் போது நெப்போலியன் ஏழை. கார்சியா தீவில் வளர்ந்த போது அவரது முதல் மொழி பிரெஞ்சு அல்ல, இத்தாலி மொழி. அவர் பேசுவது பாமரத்தனமாக இருக்கிறது என அவரது வகுப்பறை சகாக்கள் விமர்சித்திருக்கிறார்கள்.

நெப்போலியன் எப்போது ராணுவத்தில் சேர்ந்தார்?

நெப்போலியன் போனபார்ட்

பட மூலாதாரம், Getty Images

தனது 15ஆவது வயதில் பிரான்சின் முக்கிய படைகளில் ஒன்றான 'இகோல் மிலிடைர்' பிரிவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால், சேர்ந்த உடன் இரு ஆண்டுகளில் படித்து முடிக்க வேண்டிய படிப்பை ஓராண்டு காலத்தில் படித்து முடிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.

நெப்போலியனின் தந்தை வயிற்றுப் புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததால், நெப்போலியன் ஒருவரே மொத்த குடும்பத்தின் முக்கிய பொருள் ஈட்டுபவர் ஆனார். தன் 16ஆவது பிறந்தநாள் நிறைவடைந்து சில காலங்களுக்குள்ளேயே ராணுவத்தில் உயர் அதிகாரி ஆனார்.

ஐரோப்பாவில் போர் வெடிக்கும் சூழல் இருந்த போது நெப்போலியன் இரண்டாம் லெப்டினன்டாக கேரிசன் என்கிற நகரத்தில் இருந்தார். அந்த காலகட்டத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு கார்சியாவில் வாழ்ந்து வந்த தன் குடும்பத்தைப் பார்க்கச் சென்றார்.

நெப்போலியனின் ஆரம்ப கால சாதனைகள் என்ன?

1792ஆம் ஆண்டு, நெப்போலியன் ராணுவத்தில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். 1796-ல் பாரிஸில் ஆட்சி புரிந்து வந்த புரட்சிகர படைக்கும் எதிராக எழுந்த கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதால், அவர் இத்தாலியில் இருந்த பிரெஞ்சு ராணுவத்தில் கமாண்டராக்கப்பட்டார்.

ஆஸ்திரியாவுக்கு எதிரான பல முக்கிய வெற்றிகள், ஜோசஃபைன் டீ புஹார்னேவை மணந்து கொண்டது நெப்போலியனின் பெயரையும் புகழையும் தேசிய அளவில் உயர்த்தியது.

1799 நவம்பரில் நெப்போலியன் முதல் கன்சுலானார். தன் ராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் ஓர் ஐரோப்பிய சாம்ராஜ்யத்தை நிறுவ வேலை செய்தார்.

நெப்போலியன் ஆட்சியை மத்திய அரசாக்கினார். மீண்டும் ரோமன் கத்தோலிக்கத்தை நாட்டின் மதமாக்கினார். பல கல்வி சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பேங்க் ஆஃப் பிரான்ஸ் என்கிற பிரான்ஸின் மத்திய வங்கியை நிறுவினார்.

நெப்போலியன் பிரான்ஸின் பேரரசரானது எப்படி?

1800ஆம் ஆண்டில் மாரெங்கோவில் வைத்து ஆஸ்திரியர்களை வென்றார் நெப்போலியன். அதன் பிறகு ஒரு பொது ஐரோப்பிய அமைதி ஒப்பந்தத்தைக் குறித்துப் பேசினார். அது ஐரோப்பிய கண்டத்தில் பிரான்சின் ஆதிக்கத்தை நிறுவியது. 1802ஆம் ஆண்டு நெப்போலியன் தன்னைத் தானே நிரந்தர கன்சுலாக நியமித்துக் கொண்டார், இரண்டாண்டுகளுக்குப் பிறகு பிரான்சின் பேரரசரானார்.

ஐரோப்பாவின் மீது நெப்போலியன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது எப்படி?

நெப்போலியன் போனபார்ட்

பட மூலாதாரம், Getty Images

நெப்போலியன் முன் வைத்த அமைதி ஒப்பந்தத்தை மீறி 1803ஆம் ஆண்டு பிரிட்டன், பிரான்சின் மீது போர் தொடுத்தது. பிறகு ரஷ்யாவும், ஆஸ்திரியாவும் பிரிட்டனோடு இணைந்து கொண்டன.

பிரிட்டனின் கடற்படை 'ட்ராஃபல்கர் போரில்' வென்ற பிறகு, பிரிட்டன் மீது படையெடுக்கும் திட்டத்தை கைவிட்டு, ரஷ்யா மற்றும் ஆஸ்திரிய படைகள் மீது கவனத்தைச் செலுத்தினார். 'ஆஸ்டெர்லிட்ஸ் போரில்' அவ்விரு படைகளையும் வென்றார். அது அவர் வாழ்நாளில் கண்ட மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று.

அந்த ஆண்டில் அவர் மேலும் பல நிலப் பகுதிகளைக் கைப்பற்றினார். அது அவருக்கு ஐரோப்பிய கண்டத்தில் ஆதிக்கம் செலுத்த வழிவகுத்தது. ஹோலி ரோமன் சாம்ராஜ்யம் கலைக்கப்பட்டு, நெப்போலியனின் உறவினர்கள் மற்றும் விசுவாசிகள் இத்தாலி, நேபிள், ஸ்பெயின், ஸ்வீடன், ஹாலந்து, வெஸ்ட்ஃபெலியா போன்ற பகுதிகளுக்கு தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

நெப்போலியனின் முதல் திருமணம் எப்படி முறிந்தது?

ஜோசஃபைன் டீ புஹார்னேவுக்கும் தனக்கும் குழந்தை பிறக்கவில்லை என்பதால், ஜோசஃபைனை 1810ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பிறகு ஆஸ்திரிய பேரரசரின் 18 வயது இளவரசியான மேரி லூயியை திருமணம் செய்து கொண்டார். அடுத்த ஆண்டு மேரி இரண்டாம் நெப்போலியனைப் பெற்றெடுத்தார்.

நெப்போலியன் ஏன் நாடு கடத்தப்பட்டார்?

1810ஆம் ஆண்டிலிருந்து நெப்போலியனுக்கு எதிரான அலைகள் வீசத் தொடங்கின. பிரெஞ்சு ராணுவம் சில பெரிய தோல்விகளைச் சந்தித்தது. அது பிரான்ஸ் நாட்டின் வளத்தை காலி செய்தது. 1812ஆம் ஆண்டு ரஷ்யா மீது படையெடுத்து தோல்வியடைந்தது. நான்கு லட்சம் பேராக சென்ற படை வெறும் 40,000 பேராக சுருங்கி பிரான்ஸ் வந்து சேர்ந்தது.

1814-ல் பாரிஸ் வீழ்ந்தது. நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். அவரது மனைவி மேரி மற்றும் மகன் இரண்டாம் நெப்போலியன் ஆஸ்திரியா சென்றனர்.

மீண்டும் அதிகாரத்துக்கு வந்த நெப்போலியன்

ஓராண்டுக்கும் குறைவான காலத்துக்குப் பிறகு, 1815 பிப்ரவரியில் நெப்போலியன் எல்பா தீவிலிருந்து தப்பித்து பிரான்ஸ் தலைநகரத்துக்குள் நுழைந்து வெற்றிகரமாக அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

பிரிட்டன், ப்ருஷ்யா, ரஷ்யா, ஆஸ்திரியா அனைவரும் ஒன்று திரண்டு நெப்போலியன் மீது போர் தொடுத்தனர். இத தான் வரலாற்று புகழ் பெற்ற வாட்டர்லூ யுத்தம் என்றழைக்கப்படுகிறது. இதில் நெப்போலியன் தோல்வியுற்று 100 நாட்களில் மீண்டும் தன் ஆட்சியை இழந்தார் மீண்டும் புனித ஹெலெனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

நெப்போலியன் மரணம்

1821ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவான செயின்ட் ஹெலனாவில் நெப்போலியன் மரணமடைந்தார்.

அத்தீவில் தன் 51ஆவது வயதில், வயிற்றுப் புற்றுநோயால் இறந்ததாக கூறப்படுகிறது. நெப்போலியன் மரணத்துக்கான காரணம் நீண்ட காலமாக சர்ச்சைக்குறியதாக இருந்து வருகிறது.

நெப்போலியன் எங்கு புதைக்கப்பட்டார்?

நெப்போலியன் அதே தீவில்தான் புதைக்கப்பட்டார். 1840ஆம் ஆண்டு வரை அவரது எச்சங்கள் பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்படவில்லை. அதன் பிறகு பிரான்சின் ராணுவத் தலைவர்கள் அடக்கம் செய்யப்படும் பாரிஸில் இருக்கும் லெஸ் இன்வெலிட்ஸ் பகுதியில் நெப்போலியனின் எச்சம் புதைக்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czr1l5xdn4no

உகாண்டாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 63 பேர் உயிரிழப்பு!

1 month 3 weeks ago

New-Project-229.jpg?resize=750%2C375&ssl

உகாண்டாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 63 பேர் உயிரிழப்பு!

உகாண்டாவின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் ஒன்றில்.. இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் குறைந்தது 63 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் புதன்கிழமை (22) தெரிவித்தனர்.

தலைநகர் கம்பாலாவிற்கும் வடக்கு நகரமான குலுவிற்கும் இடையிலான நெடுஞ்சாலையில் நள்ளிரவுக்குப் பின்னர் இந்த விபத்து நிகழ்ந்தது.

எதிர் திசைகளில் இருந்து வந்த இரண்டு பேருந்துகள், ஒரு லொரி மற்றும் பரிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2025/1450863

ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு நிறுத்தி வைப்பு!

1 month 3 weeks ago

New-Project-228.jpg?resize=750%2C375&ssl

ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு நிறுத்தி வைப்பு!

உக்ரேனில் போரை தீர்ப்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்.

இந்த சந்திப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. 

திகதி நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், அது ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையேயான அழைப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ட்ரம்ப் – புட்டின் இடையிலான எதிர்கால சந்திப்பு தொடர்பான எந்த திட்டமும் இல்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவர் செவ்வாயன்று கூறியுள்ளார்.

அமைதிக்கான அமெரிக்கா மற்றும் ரஷ்ய திட்டங்களுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள் இந்த வாரம் பெருகிய முறையில் தெளிவாகத் தெரிந்தன.

இது ஒரு உச்சிமாநாட்டிற்கான வாய்ப்புகளை அழித்துவிட்டது போல் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு உச்சிமாநாட்டின் போது ட்ரம்பும் புட்டினும் இறுதியாக அலாஸ்காவில் சந்தித்தனர்.

ஆனால் உறுதியான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1450858

நெதன்யாகு கனடா நுழைந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார்! - கனடா பிரதமர் எச்சரிக்கை

1 month 3 weeks ago

22 Oct, 2025 | 01:00 PM

image

நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றம் கடந்த ஆண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்வதற்கான பிடியானை பிறப்பித்திருந்த நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு நெதன்யாகு தடையாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி, நெதன்யாகு கனடாவில் நுழைந்தால், அவர் சர்வதேச நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்படுவார் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இப்போர்க்குற்றம் இடம்பெற்றதற்காக நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சர்வதேச நீதிமன்றம்  கடந்த ஆண்டு நெதன்யாகுவை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த பிடியாணை நிலுவையில் உள்ள நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு நெதன்யாகு தடையாக இருப்பதாக கனடா பிரதமர் குற்றஞ்சாட்டினார். அத்துடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கனடாவுக்குள் நுழைந்தால் நிச்சயமாக சர்வதேச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். 

இதேபோன்று பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உட்பட பல நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவை நிறைவேற்றக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/228368

போர் நிறுத்தத்தையும் மீறி காசாவில் மீண்டும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்

1 month 3 weeks ago

போர் நிறுத்தத்தையும் மீறி காசாவில் மீண்டும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்

22 Oct, 2025 | 11:21 AM

image

இஸ்ரேல் -  காசா போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னும், நேற்று (21) காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் குண்டு வீசி தாக்கியதாகவும் அங்கு தரைவழி தாக்குதலும் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

காசாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹமாஸ் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாகவே தாமும் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இஸ்ரேல் இராணுவத்தின் மீது தாம் எந்த வகையிலும் தாக்குதல் நடத்தவில்லை என ஹமாஸ் மறுத்துள்ளது. 

இந்நிலையில், இஸ்ரேல் இராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் கடுமையான பதிலடி கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். 

போர் நிறுத்தம் அமுலில் உள்ள சூழ்நிலையில் காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இத்தகை சந்தர்ப்பத்தில் பாலஸ்தீனத்தில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் குறித்து உலக நீதிமன்றம் ஆலோசனைக் கருத்தை வெளியிடவுள்ளது. 

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் ஐ.நா. சபை, பிற சர்வதேச அமைப்புகள் மற்றும் மூன்றாம் நாடுகளின் இருப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான இஸ்ரேலின் கடமைகள் குறித்து சர்வதேச நீதிமன்றம் இன்று (22) ஆலோசனைக் கருத்தை வெளியிடவுள்ளது என்பது தெரியவந்துள்ளது. 

காசாவில் இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்து கடந்த 10ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.  இதனால் காசாவை விட்டு வெளியேறியிருந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். போர் முடிவுக்கு வந்ததையிட்டு அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி காசாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/228355#google_vignette

வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 வீத வரி: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

1 month 3 weeks ago

21 Oct, 2025 | 12:53 PM

image

அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடாவிட்டால், அந்த நாடு மீது 155 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், "சீனாவுடன் அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து வருகிறது. அதேசமயம், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எனது நிர்வாகம் பொறுத்துக்கொள்ளாது. சீனா ஏற்கனவே 55 சதவீத வரிகளைச் செலுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்டார்.

மேலும், "சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், நவம்பர் முதலாம் திகதி முதல் சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும்" என்று திட்டவட்டமாக எச்சரித்தார்.

அத்துடன், அமெரிக்கா சீனப் பொருட்களுக்கு புதிய ஏற்றுமதித் தடைகளையும் விதிக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார். மலேசியாவில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ள நிலையில், சீனா பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

"கடந்த காலங்களில் பல நாடுகள் அமெரிக்காவைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன, ஆனால் அந்தச் சகாப்தம் முடிந்துவிட்டது. இனி அவர்களால் சாதகமாகப் பயன்படுத்த முடியாது," என்றும் டிரம்ப் கூறினார்.

முக்கியமான கனிமங்களை வாங்குவது தொடர்பாக அவுஸ்திரேலியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், சீனாவுக்கு இந்த கடுமையான எச்சரிக்கையை டிரம்ப் விடுத்துள்ளார். அண்மையில், அமெரிக்காவிடம் இருந்து சோயாபீன்ஸ்களை சீனா வாங்கவில்லை என்று டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cj3zm6gm46eo

Checked
Sun, 12/14/2025 - 04:34
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe