சுறாவின் ரம்பம் போன்ற பற்களில் சிக்கி உயிர் பிழைத்த ஆய்வாளரின் திகில் அனுபவம்

பட மூலாதாரம், Mauricio Hoyos
படக்குறிப்பு, வெவ்வேறு சுறா இனங்கள் குறித்து கடந்த 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார் ஹோயோஸ்
கட்டுரை தகவல்
ரஃபேல் அபுசைடா
பிபிசி நியூஸ் முண்டோ
12 நவம்பர் 2025, 08:40 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
(எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உங்களுக்கு சங்கடம் தரும் விவரிப்புகள் இருக்கலாம்.)
தன்னுடைய மண்டை ஓட்டின் மீது சுமார் 3 மீட்டர் (10 அடி) நீளமுடைய பெண் கலாபகோஸ் சுறாவின் தாடை ஏற்படுத்திய அழுத்தத்தை மௌரிசியோ ஹோயோஸ் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்.
தனது கழுத்து நரம்பை காப்பாற்றிக் கொள்வதற்கான கடைசி முயற்சியில் தலையை சாய்க்கக் கூட நேரமில்லாத வகையில் அது அவரை நோக்கி திடுக்கிடும் வேகத்தில் வந்தது.
"அது தன் தாடையை மூடிக் கொண்டபோது, சுறா கடித்த அழுத்தத்தை உணர்ந்தேன், பின் ஒரு நொடியில் மீண்டும் தாடையை திறந்து என்னை தப்பிச் செல்ல அனுமதித்தது," என மெக்ஸிகோவின் பாஜா கலிஃபோர்னியாவில் உள்ள தன் வீட்டிலிருந்து ஹோயோஸ் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார். அச்சமயத்தில், சுறாவின் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்து ஒருமாதமே ஆகியிருந்தது.
கடல் உயிரியலாளரான ஹோயோஸ், சுறாக்களை அதன் இயற்கை வாழ்விடங்களுக்கு சென்று ஆராய்வதில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். கடந்த செப்டம்பர் மாதம் கோஸ்டா ரிக்காவில் (Costa Rica) ஆராய்ச்சிக்காக பயணம் மேற்கொண்டிருந்த போது அவரை சுறா ஒன்று தாக்கியது.
முகத்தில் ஏற்பட்ட காயத்தை இன்னும் தாங்கிக் கொண்டிருக்கும் அவர், தான் மீண்டு வந்தது "நம்ப முடியாததாக உள்ளது" என்றும், தன்னை தாக்கிய சுறாவை தான் மீண்டும் பார்ப்பேன் என நம்பிக்கையுடன் உள்ளதாகவும் கூறினார்.

படக்குறிப்பு, சுறா கடித்ததால் ஏற்பட்ட காயத்தை, "செவுள்கள் போன்று தோன்றும் விழுப்புண்" என கூறுகிறார் ஹோயோஸ்
கொக்கோஸ் தீவில் (Cocos Island) ஹோயோஸுக்கு நடந்தது, ஆபத்து என தான் நினைக்கும் ஒன்றை எதிர்கொள்ளும்போது விலங்குகளின் இயல்பான நடத்தையின் விளைவு அது.
"நாய் கடித்தது போன்று இருந்தது," என்கிறார் அவர்.
"ஒரு நாய் தனக்கு அருகில் வரும்போது மற்றொரு நாய் அதை விரைந்து கடிப்பதை பார்த்திருக்கிறீர்களா? அது அந்த நாய்க்கு வலிக்காது, ஆனால் நெருங்கி வரும் நாயை அமைதிப்படுத்தும்."
ஹோயோஸ் சகாக்களுடன் இணைந்து தன் வேலையின் ஒரு பகுதியாக சுறாக்களின் இனச்சேர்க்கை மற்றும் முட்டையிடும் பகுதிகளை அடையாளம் காண்பதற்காக அவற்றுக்கு ஒலிப்புலன் சார்ந்த பட்டைகளை (acoustic tags) பொருத்திக் கொண்டிருந்தார். அப்போது, நீரில் சுறா இருப்பது குறித்து சுற்றுலாப் பயணிகள் அவருக்கு எச்சரித்தனர்.
அது 40 மீட்டர் ஆழத்தில் இருந்தது, தான் வந்த படகை செலுத்தியவரிடம் "தான் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே அங்கு இருப்பேன்" என கூறியுள்ளார்.
பின்னர் நீருக்குள் மெல்ல மூழ்க ஆரம்பித்தார்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கலாபகோஸ் சுறாக்கள் 3 மீட்டர் நீளம் வரை வளரும்
சுறாவை எதிர்கொண்டது குறித்து ஹோயோஸ் கூறினார்: "3-3.5 மீட்டர் (11.5 அடி) நீளமுடைய அந்த பெண் சுறா நீந்தி அடிப்பகுதியை நோக்கிச் சென்றது, நான் அதன் முதுகெலும்பு துடுப்பில் டேக்-ஐ பொருத்துவதற்கு ஏற்றபடி இருந்தேன்."
ஆனால், தனது பல தசாப்த பணியில் பலவித சுறாக்களுக்கு டேக் பொருத்தியிருக்கும் ஹோயோஸ், இந்த சுறா மற்றவற்றைவிட வித்தியாசமாக நடந்துகொண்டதாக கூறுகிறார்.
"அந்த டேக்கின், ஆய்வுக்கருவியில் இணைக்கப்பட்டுள்ள கேபிளுடன் உள்ள உலோகத்தாலான கூர்முனையை உள்ளே செலுத்தியவுடன் மற்ற சுறாக்கள் உடனடியாக அங்கிருந்து சென்றுவிடும், மாறாக இந்த சுறா என்னை திரும்பி பார்த்தது," என அவர் நினைவுகூர்கிறார்.
"அதன் சிறிய கண்கள் என்னை பார்ப்பதை நான் கண்டேன், அது அமைதியாக திரும்பியதை நான் பார்த்தேன்."

படக்குறிப்பு, ஹோயோஸும் அவருடைய சகாக்களும் இத்தகைய டேக்குகளை சுறாக்களுக்கு பொருத்துகின்றனர்.
சுறா நீந்திச் சென்றபோது அதன் கண்களை பார்த்ததாக கூறும் ஹோயோஸ், திடீரென அது தன்னை நோக்கி வந்ததாக கூறுகிறார்.
"நான் என் தலையை தாழ்த்திக்கொண்டேன், அதன்பின், அதன் கீழ் தாடை என் கன்னத்தையும் மேல் தாடை என் தலையையும் துளைப்பதை உணர்ந்தேன். அதன் தாடைக்குள் நான் இருப்பதாக நினைத்தேன், பின் மீண்டும் அது தன் தாடையை திறந்தது."
"சுறா தன் தாடையை மூடியதும், அது கடித்ததன் அழுத்தத்தை உணர்ந்தேன். பின் அது என்னை அங்கிருந்து செல்ல அனுமதித்தது," என ஆச்சர்யப்படுகிறார்.
கலாபகோஸ் சுறாவின் ரம்பம் போன்ற 29 பற்கள், ஹோயோஸுக்கு அவரின் தலை மற்றும் முகத்தில் மட்டும் காயத்தை ஏற்படுத்தவில்லை, மாறாக அவருடைய டைவிங் கருவியின் ஆக்சிஜன் குழாயையும் துண்டித்தது.
சுறாவின் தாக்குதலில் இருந்து அவர் உயிர் பிழைத்தாலும் அவர் மரண ஆபத்தில் தான் இருந்தார்.
நீச்சலின் போது அணியக்கூடிய கண் பாதுகாப்பு கண்ணாடியையும் கிழித்துவிட்டது, தவிர ஏற்கெனவே மங்கலான அவரின் பார்வை, ரத்தம் கலந்த நீரால் மேலும் மங்கலானது.
"டைவிங் கருவியிலிருந்து ஆக்சிஜன் வரவில்லை என்பதை உணர்ந்ததும், எங்களிடம் இருந்த மற்றொரு கருவியை எடுத்துக்கொண்டேன், அதை நாங்கள் ஆக்டோபஸ் என அழைக்கிறோம், மூச்சுக்காற்று தேவைப்படுபவர்களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது," என அவர் பிபிசி முண்டோவிடம் கூறினார்.
"பின்னர்தான் அக்கருவியின் ரெகுலேட்டர் வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்தேன், காற்றை ஒழுங்குபடுத்துவதற்கு பதிலாக அதை வெளியேற்றிக் கொண்டிருந்தது, எனவே நான் என்னுடைய பயிற்சியை நினைவில் வைத்து, என் உதடுகள் மூலம் அதை ஒழுங்குபடுத்தினேன்."
ஒருபுறம் ரத்தம், மங்கலான பார்வை, காற்று இல்லாத நிலை என, மேற்பரப்புக்கு வர ஒரு நிமிடத்திற்கும் குறைவாக இருப்பதை ஹோயோஸ் கணக்கிட்டார்.
"என்னால் எதையும் பார்க்க முடியாததால், வெளிச்சத்திற்காக மேற்பரப்புக்கு வர முயற்சித்தேன். எனவே, மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மேல்நோக்கி நீந்தினேன், ஏனெனில் சுறாவை கவரும் வகையிலான ஒருங்கற்ற நகர்வுகளை நான் தவிர்க்க விரும்பினேன்."

பட மூலாதாரம், Mauricio Hoyos
படக்குறிப்பு, இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க இத்தனை ஆண்டுகால டைவிங் பயிற்சியில் கற்ற பாடங்களை ஹோயோஸ் பிரயோகிக்க வேண்டியிருந்தது.
ஹோயோஸ் மேற்பரப்புக்கு வந்ததும் இளைஞர் ஒருவர் அவரை இழுத்து படகில் அமரவைத்தார், படகை செலுத்தியவர் அவரின் நிலைமையை பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
சிறிது நேரத்திற்கு அந்த காயத்தின் வலியை தான் அவ்வளவாக உணரவில்லை என விவரிக்கிறார் ஹோயோஸ்.
"உண்மையில் நான் பதற்றத்தில் இருந்தேன், அந்த காயம் எனக்கு அவ்வளவாக வலிக்கவில்லை. அதன் தாக்கம் தான் என்னை அதிகமாக காயப்படுத்தியது. 3 மீட்டர் நீளம் கொண்ட ஒரு விலங்கு, அந்த வேகத்தில் என்னை கடித்தது, கார் என் மீது மோதியது போன்று இருந்தது. என் தாடை முழுக்க பெரிய காயம் இருந்தது, அது உடைந்துவிட்டது என்றே நினைத்தேன்."
பின்னர், அவருக்கு மருத்துவ உதவியாளர்கள் அவசர சிகிச்சை செய்தனர்.
ஹோயோஸ் அதிர்ஷ்டக்காரர். சுறாவின் தாக்குதல் மற்றும் அதைத்தொடர்ந்து மேற்பரப்புக்கு நீந்தியபோதும் அவருடைய காயத்தில் தொற்று ஏற்படவில்லை, யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத குறைவான காலத்தில் காயம் குணமடைய தொடங்கியது.
"இது அதிசயம் என மருத்துவர்கள் என்னிடம் கூறினர்: செப்டம்பர் 27-ஆம் தேதி சுறா என்னை தாக்கியது, அதன்பின், நான் 34 மணிநேரம் பயணம் செய்தேன், மருத்துவர்கள் எனக்கு சேதமடைந்த திசுக்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினர், இரு தினங்கள் கழித்து எனக்கு மறுசீரமைப்பு சிகிச்சை செய்யலாமா என்பது குறித்து அவர்கள் பரிசோதித்தனர்."
இந்த தாக்குதல் ஹோயோஸுக்கு மிக மோசமான நிலையை ஏற்படுத்தியிருக்கும். மருத்துவர்களின் கூற்றின்படி, 2017-ஆம் ஆண்டில் அதே பகுதியில் கலாபகோஸ் சுறாவால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட காயங்கள் சரிவர ஆறவில்லை என்பதால், சுமார் ஒருமாத காலம் அவர் ஹைபர்பேரிக் சேம்பரில் (hyperbaric chamber - இது அழுத்தப்பட்ட சூழலில் 100% ஆக்ஸிஜனை சுவாசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பிரத்யேக கலன்) இருக்க வேண்டியிருந்ததாக கூறினர்.
"என் காயங்கள் ஆறிய விதம் நம்ப முடியாததாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொற்று குறித்து தாங்கள் எப்படி கவலையடைந்தோம் என மருத்துவர்கள் கூறினர், ஏனெனில் முகத்தில் காயம் இருந்ததால் அது மூளைக்கான நேரடி பாதையாக இருந்தது."

பட மூலாதாரம், Mauricio Hoyos
மீண்டும் அதே நீருக்குள் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக சிரித்துக்கொண்டே கூறிய ஹோயோஸ், நவம்பர் 14-ஆம் தேதி அங்கு டைவிங் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இத்தகைய தாக்குதலுக்கு ஆளான பின்பு, தான் ஆராய்ச்சி செய்யும் விலங்குகள் மீது தனக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.
"சுறாக்கள் இல்லாமல் கடல் சிறப்பாக இருக்கும் என பலரும் நினைக்கின்றனர், ஆனால் கடலின் சிக்கலான சமநிலையை பராமரிக்க சுறாக்கள் ஆற்றும் முக்கிய பங்கு குறித்து புரியாமல் அவர்கள் இதை கூறுகின்றனர்."
தன் கன்னத்தில் உள்ள பெரிய காயத்தை சுட்டிக்காட்டிய அவர், "அந்த பெண் சுறா என் உயிரை காப்பாற்றியது என்பதற்கு இதுவே சான்று. இது, சுறாக்கள் குறித்து நன்றாக பேசுவதை தொடரவும் எதிர்காலத்தில் அதன் பாதுகாப்புக்கான பணிகளை மேற்கொள்வதற்கும் என்னை அனுமதிக்கும்."
இதனிடையே, ஹோயோஸை தாக்கிய கலாபகோஸ் சுறா நீரின் ஆழத்தில் தன் வாழ்க்கையை தொடர்ந்து வருகிறது, அதை மீண்டும் சந்திப்பேன் என நம்பிக்கை கொள்கிறார் அவர். தன்னை தாக்குவதற்கு முன்பு அவர் சுறாவின் மீது டேக்-ஐ பொருத்திவிட்டதால் மீண்டும் அதை சந்திப்பதற்கான சாத்தியம் உள்ளது.
"ஜனவரி மாதம் நான் கொக்கோஸ் தீவுக்கு செல்லவிருக்கிறேன். ஜன. 20 முல் 27 வரை நாங்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளோம், நிச்சயமாக (தாக்குதல் நடந்த) ரோகா சுசியாவுக்கு (Roca Sucia) சென்று ஆழ்கடலில் டைவ் செய்வேன்," என மன உறுதியுடன் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு















Zelenskyy: EU expected to prepare 20th Russia sanctions p...
















