Everything posted by அபிராம்
-
மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரர் அவர்களின் 28 ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்று!
விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான விக்ரர் இயக்கத்தின் தலை சிறந்த போர் தளபதிகளில் ஒருவராவார். மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய விக்ரர் 12.10.1986 அன்று அடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 28 ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும். யாழ். குடாநாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும், கிராமங்களின் வழியாகவும், நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நின்று தமது தோட்டங்களிலும்,முற்றங்களிலும் பூத்திருந்த மலர்களை கொண்டுவந்து அவனின் உடல்தாங்கிய அந்த ஊர்திக்கு முன்பாக தூவி கண்ணீர் மல்க நின்றனர். அதற்குமுன்னர் ஒருபோதும் இப்படியான இறுதி ஊர்வல நிகழ்வு உணர்வுடனும், லட்சோபலட்சம் மக்களின் வழியனுப்பலுடனும் நடந்ததே இல்லை. யாழ். மண்ணில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இருப்பதால் மக்கள் எந்தவித பயமுமின்றி தமது இதயத்துள் இருக்கும் விடுதலை வீரனுக்கு தமது இறுதி மரியாதையை செலுத்தியபடி இருந்தனர். இரவு பகலாக அந்த ஊர்தி யாழ். மண்ணின் அனைத்து இடங்களுக்கூடாகவும் நகர்ந்தது. எமது மண்ணில் இருந்து சிங்கள இராணுவத்தினர் விரட்டியடிக்கப்பட வேண்டும். எமது மக்கள் அச்சமின்றிய வாழ்வு ஒன்று வாழவேண்டும் என்ற கனவு கண்ட அந்த வீரன் அந்த பேழைக்குள் இருந்தபடியே அவற்றை பார்த்து உண்மையில் மனம் நிறைந்திருப்பான். யாழ். மண் விடுதலைப் போராளிகளின் கைகளுக்குள் வருவதற்காக ஓய்வற்ற உழைப்பும் திறனும் காட்டிய அந்த வீரன் லெப்.கேணல் விக்ரரின் இறுதி ஊர்வலம்தான் அது. ஒஸ்கார்..ஒஸ்கார்..என்ற சங்கேத அழைப்பிற்குரிய அந்த பெருவீரன் தாயக மண்ணில் விதையாகி கால் நூற்றாண்டுகள் கடந்து போய்விட்டன. விக்ரர், இவனை எப்படி அடையாளப்படுத்துவது. அச்சம் கொஞ்சமும் இல்லாத பெருவீரன் என்றா? பழகும்போது குழந்தையை போல பழகும் மனதுள்ளவன் என்றா? களங்களில் நெருப்புகனரும் விழிகளுடன் உத்தரவிடும் ஆளுமைமிக்க தளபதி என்றா?…எப்படியும் அவனை அடையாளப்படுத்தலாம். அத்தனை ஆளுமைகளும் அவனிடத்தில் இருந்தன. எந்த விடுதலைப் போராட்டம் என்றாலும் புரட்சி அமைப்பு என்றாலும் அதில் இணைபவர்கள் இரண்டு வழிகளில் இணைவார்கள். அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் மெல்லியதாக முளைவிடும் பொழுதிலேயே அதனை நிராகரித்து அதனில் இருந்து விடுதலைபெற என்று ஆரம்பித்திலேயே அமைப்பில் இணையும் வழி ஒன்று. அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் உச்சமாகி கொடிய கொலைவெறியாட்டத்தினூடாக உணர்வுபெற்று விடுதலை அமைப்பில் இணையும் வழி அடுத்தது.1983 கறுப்பு யூலை இனப்படுகொலைகளுக்கு பின்னர் விடுதலை அமைப்புகள் வீச்சுப் பெறவும்,வீக்கம் பெறவும் ஆரம்பிக்க முன்னரே 1983 க்கு முன்னரேயே விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தவன் விக்ரர். 1981ன் இறுதிப் பகுதியில் விக்ரரின் விடுதலைப்புலிகளுடனான தொடர்பு ஆரம்பிக்கிறது. ஆரம்பப் பொழுதுகளில் அமைப்புக்குள் உள்வாங்குவதற்கான அனைத்து கவனிப்புகளிலும் விக்ரரின் உறுதி தலைமையால் கவனிக்கப்பட்டு பயிற்சிக்காக முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருந்த முகாம் ஒன்றுக்கு அனுப்பப்படுகின்றான். அங்கே லிங்கம், பொட்டு, பசீர், ரஞ்சன், கணேஸ், விக்டர், ஆனந்த் ஆகியோரும் இன்னும் சிலருக்கும் தலைவர் நேரடியாகவே பயிற்சிகளை ஆரம்பிக்கிறார். பயிற்சி முகாமின் உணவுப்பிரிவில் மூத்த உறுப்பினர்களான கிட்டுவும், ரஞ்சன்லாலாவும் இருக்கின்றனர். உடற்பயிற்சியாளராக செல்லக்கிளி அம்மான் இருக்கிறார். இந்த பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த அதிகமானவர்கள் உறுதியிலும், விடுதலைப் போராட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் பற்றிய தெளிவிலும் தமது இறுதிக்கணம் வரைக்கும் மலையை நிகர்த்த உருக்கு உறுதியுடன் நின்றதற்கு காரணம் தலைவரின் நேரடி பயிற்சி, பயிற்சியின் பின்னான மாலைப் பொழுதுகளில் அமைப்பின் மூத்த உறுப்பினர்களான செல்லக்கிளி அண்ணா, சீலன், கிட்டு, ரஞ்சன், புலேந்திரன் ஆகியோர் உட்பட மற்றும் சிலரும் இணைந்த அனுபவ பங்கீடுகள். இவைகளேதான் விக்ரரையும் ஒரு உன்னதமான போராளியாக, மிகப்பெரும் வீரனாக வரித்தெடுத்த காரணிகளாகும்.சக போராளிகள் அனைவர் மீதும் அளவற்ற அன்பும், பாசமும் காட்டும் ஒரு பெரிய குழந்தையாக அவன் இருந்தான். அதிலும் பயிற்சிக்கு முன்னரும் பயிற்சிக்கு பின்னரும் அவன் இருந்த இளவாலைப் பகுதியில் அமைந்திருந்த வீட்டில் அவனுடன் இருந்தோர் இன்றும்கூட அவனின் நினைவுகளையும் செயல்களையும் ஒருவகையான பெருமிதத்துடனும் ஈர்ப்புடனும் கண்களில் ஒளிபொங்க நினைவு கூருவதை பார்க்கலாம். விக்ரரின் அஞ்சாமையையும், சீறிப்பாயும் துப்பாக்கி சன்னங்களுக்கு மத்தியிலும் நிதானமாக நகரும் அவனின் வேகத்தையும் அந்த நேரம் இருந்த போராளிகளுக்கு அடையாளம் காட்டியது திருநெல்வேலி தபாற்பெட்டி சந்தியில் 1983 யூலை 23ல் சிங்கள இராணுவத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும். மிகவும் செறிவான வாகனப் போக்குவரத்தும், சிங்கள காவல்துறை, சிங்கள இராணுவ நடமாட்டம் என்பன அடிக்கடி நிகழும் திருநெல்வேலி வீதியில் இரவில் வீதியை குழிதோண்டி அதில் சக்கையை வைத்து எக்ஸ்புளோடருக்கு தொடர்பு கொடுக்கும் வேலையை செல்லிக்கிளி அம்மான், அப்பையா அண்ணை ஆகியோருடன் இணைந்து செய்து முடித்தவன் விக்ரர். விக்ரர் அமைப்பில் இணைந்த பிறகு மன்னார் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல்களில் அநேகமாக அனைத்திலும் விக்ரரின் நேரடி பங்களிப்பும் விக்டரின் எம்16 கிறனைற் செலுத்தியின் வெடிப்பும் இருந்தே இருக்கும்.மன்னார் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் விக்ரருடன் குமரப்பா போன்றோர் இணைந்திருந்தாலும்கூட அந்த தாக்குதலுக்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு என அனைத்தையும் அற்புதமாக கையாண்டவன் விக்ரர். வெறும் தாக்குதல்களை மட்டும் நடாத்திக் கொண்டிருக்காமல் சிங்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட மன்னார் பிரதேசத்தின் பகுதிகளில் மக்கள் அமைப்புகளை உருவாக்குவதிலும், மக்கள் மத்தியில் விடுதலைப் போராட்டம் பற்றி தெளிவையும், அரசியல் அறிவையும் ஊட்டுவதிலும் விக்டரின் செயற்பாடுகள் மிகவும் ஆழமாக அமைந்திருந்தன.அவன் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்டதற்கு பின்னால் மக்களுடனான அவனின் ஆத்மார்த்தமான தொடர்பே காரணமாகும். விடுவிக்கப்பட்ட மன்னார் நிலப்பகுதியில் விக்ரர் பயிற்சி முகாம்களையும் உருவாக்கி ஏராளமான புதிய போராளிகளை தாய் மண்ணிலேயே உருவாக்குவதிலும் முனைப்புடன் செயற்பட்டவன். விக்ரர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் காட்டிய உறுதியும், தலைமைப் பண்பும், வீரமும் மிகவிரைவாகவே அவனை விடுதலைப்புலிகள் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் என்ற அதியுச்ச நிர்வாக மையத்துக்குள் உள்வாங்கி கொண்டது. சிங்கள தேசத்தின் இராணுவத்தினரை தமிழீழ மண்ணில் இருந்து துரத்தும் நடவடிக்கை தினமும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக் கிடப்பதும், சிலவேளைகளில் முகாம்களை விட்டு சிறிய தொகையாக வெளிவரும் இராணுவத்தினரை உடனடியாக அந்த பகுதிக்கு விரையும் விடுதலைப்புலிப் போராளிகள் விரட்டியடிப்பதும் அன்றாட நிகழ்வுகள் அப்போது. அப்படியான ஒருபொழுதில் 12.10.1986 அன்று அதிகாலையில் அடம்பன்நகருக்குள் இராணுவம் நுழைந்துவிட்டதாக கிடைத்த தகவலை அடுத்து கருக்காய்க்குளத்தினூடாகவும், ஆண்டான்குளப் பகுதியாலும், நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளத்தினூடாகவும் அடம்பனுக்குள் விக்ரரின் தலைமையில் நுழைந்து விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குலில் சிங்கள இராணுவத்துக்கு துணையாக ஹெலிக்கொப்படரும் வந்து தாக்குதலை ஆகாயத்தில் இருந்து நடாத்தியபோதும் வீரமுடன் போரிட்ட அந்த தளபதி எதிரியின் சன்னம் ஒன்று நெஞ்சுக்குள்ளாக புகுந்து சென்றுவிட வீரமரணமடைகிறான். ஒருமாமலையின் சரிவாக விக்ரரின் மரணம் அமைப்பை உலுக்கியது அந்த பொழுதில். தலைமை கொடுக்கும் பணியை செயற்படுத்தும் திறனும், அதனை செயற்படுத்தியே தீரவேண்டும் என்ற இலட்சிய உணர்வும் உடைய ஒரு பெருவீரன் அவன்.விக்ரர் மரணித்த அந்த சண்டையில்தான் முதன்முதலாக பெண்கள் அணி தாக்குதலில் நேரடியாக இறக்கப்பட்டனர். நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளம் கடந்து அடம்பனுக்குள் நுழைந்த சாஜகானின் அணியில் விக்ரரின் வழிகாட்டலில்தான் முதலில் பெண்புலிகள் எதிரிக்கு எதிரான சண்டையில் நின்றனர். அதுமட்டுமல்லாமல் அந்த சண்டையில்தான் முதன்முதலாக சிங்கள இராணுவத்தை செர்ந்த இரண்டு வீரர்கள் உயிருடன் பிடிக்கப்படுகிறார்கள். 2வது லெப்.அஜித் சந்திரசிறீ, கோப்ரல் கே.டபிள்யூ பண்டார ஆகியோரே பிடிக்கப்பட்ட சிங்கள இராணுவத்தினர். விக்ரர் தாயக மண்ணில் வீழ்ந்துவிட்ட தாக்குதலில்கூட அவன் இன்னொரு அங்கீகாரத்தையும், விடுதலைப் போராட்டத்துக்கு பாரிய எழுச்சியையும் இந்த இராணுவ வீரர்களின் கைதுகள் மூலம் உருவாக்கிச் சென்றிருந்தான். சிங்கள தேசத்துடன் தமிழர் தேசம் ஒரு உத்தியோகபூர்வமான கைதிகள் பரிமாற்றத்தைச் செய்வதற்கு விக்டரின் அடம்பன் சண்டையில் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் காரணமாக இருந்தனர். சிங்கள தேசத்தின் பாதுகாப்பு அமைச்சர் அத்துலக் முதலியும், சிங்கள தேசத்தின் முப்படைகளின் தளபதியான சிறில் ரணதுங்கா, பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் நேரடியாக பலாலி சென்று பலாலி வாசலில் வைத்து விடுதலைப்புலிகளான அருணாவையும், காமினியையும் விடுவித்தனர். அதற்கு பரிமாற்றமாக அடம்பன் சண்டையில் பிடிக்கப்பட்டவர்களை கிட்டு விடுவித்தார். இப்போது பார்த்தால் இது சிறிய சம்பவமாக தெரியும். ஆனால் அன்றைய பொழுதில் இது ஏற்படுத்திய எழுச்சியும் மன உறுதி ஏற்றமும் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை. இப்போது இருபத்தைந்து வருடங்களாகி விட்டது. விக்ரர் என்ற என்ற அற்புதமான வீரனின் நினைவுகளும், மாசுமறுவற்ற அவனின் உன்னதமான இலட்சிய பற்றும் என்றென்றும் எமது மக்களால் இதயத்தின் ஆழத்திலிருந்து நினைவு கொள்ளப்படும். என்றாவது ஒருநாள் விடுதலைப்புலிகள் தலைமை விக்ரரின் இதுவரை பதியப்படாத பக்கங்களையும்,அவற்றில் தலைமையின் கட்டளையை ஏற்று அவன் செய்ய வீரத்தையும் பதிவு செய்யும் போது நிச்சயமாக ஒரு உன்னதத்திலும் உன்னதமான வீரனாக அவன் இன்னும் உயர்ந்து தெரிவான். https://www.youtube.com/watch?v=V1grfr4bODc http://kathiravan.com/மன்னார்-மாவட்ட-சிறப்புத-2123/
-
இன்று (01/10/14) அன்புப் பாலகன் பாலச்சந்திரனின் 16வது பிறந்தநாள்.
தம்பி, ஒரு சில காலம் உன்னுடன் வாழ்ந்த வாழ்க்கையை இந்த கணத்திலே நினைத்து பார்க்கிறேன். உன்னை தோளில் தூக்கிய நாட்களில் இருந்து மிடுக்காக நடந்துவரும் காலம் வரை நினைத்து பார்க்கிறேன். துடிப்பான உனது குழப்படிகளை உன் அம்மா என்னிடம் சொல்லும்போது உன் முகத்தை பார்க்கிறேன். எந்த உணர்வுகளுமே காட்டாத உன் முகத்தில் உன் தந்தையை மிஞ்ச உன்னால் மட்டும் தான் முடியும். உன் அக்காவை சீண்டும் குழப்படிகளை உன் அக்கா அடுக்கி செல்லும்போது இல்லை என்ற ஒற்றை வரி மறுப்பு மட்டுமே உன்னிடம் இருந்து வருகிறது. படிக்கும் நேரத்தில் விளையாட கூடாது என்று உன் அம்மா சொன்ன காரணத்தினால் விடியற்காலை 4 மணிக்கு எழும்பி, கணனியில் சுட்டு விளையாட என்னை எழுப்பியதை இன்றும் கனவாகவே பார்க்கிறேன். சாப்பாட்டை கொண்டுவந்து தந்துவிட்டு சாப்பிடும் வரை என் முகத்தை பார்க்கும் உன் கருணை உள்ளத்தை பார்க்கிறேன். உந்து உருளியில் இரணைமடு குளக்கரையில் நாங்கள் பயணித்த நாட்களை மகிழ்வாக காண்கிறேன். அணி நடையில் சக தோழனின் தொப்பியை சரி செய்த வருங்கால தளபதியை உன்னில் கண்டேன். கையில் வைத்திருந்த சுடு கருவியின் சுடு குழல் மேல் நோக்கி இல்லாமல், இன்னொருவரை நோக்கி இருக்கிறது என்று சரி செய்த ஒரு வீரனை உன்னில் கண்டேன். .......... .......... .......... இறுதி நேரத்திலும் கலங்காத உன் விழிகள் இப்பொது என்னை கலங்க வைக்கிறது. கடைசி வரை உன் கூட வராமைக்காக இன்றும் வருந்துகிறேன். உனக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன்னை கொன்றவர்களுக்கான முடிவு காலம் தொலை தூரத்தில் இல்லை அன்பு தம்பியே.
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
என்னை தேடிய நுணாவிலானுக்கு நன்றி. நான் இங்கே உங்களுடன் தான் என்றும் இருப்பேன். நன்றி கரன். இது கதை அல்ல நிஜம் என்பதற்கு சாட்சியாக நீங்கள் என்றும் இருக்க வேண்டும். நிச்சயம் ஒரு நாள் வெல்வோம்.
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
நன்றிகள் மலையான். இந்த மக்களின் போராளிகளின் தியாகங்கள் வீண்போக கூடாது. அனைவரும் ஒன்றுபட்டு அந்த மக்களின் போராளிகளின் கனவுகளை நனவாக்குவோம் என்று உறுதி எடுப்போம்.
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
நிர்வாகத்திற்கும் ரதிக்கும் நன்றிகள். நான் இந்த அபிராம் என்ற அடையாளத்தை மெல்ல மெல்ல இழந்துவரும் வேளையில், மீண்டும் எனது ஆக்கத்தை பிரசுரித்து, என்னை அடையாளபடுத்தியமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜுன் அண்ணா இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ இந்த இனிய நாளில் வாழ்த்துகிறேன்.
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் இருபத்தினான்கு 2009 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் ஒரு நாள்... சஷ்டியை நோக்க சரவணபவனார்.. சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்.. கந்த சஷ்டி கவசம் லக்சபானாவில் இருந்து வரும் மின்சாரத்தில் ஒலித்து கொண்டிருக்க கணவன் நாதனை தட்டி எழுப்பினாள் ராணியம்மா. என்னங்க....ஒருக்கா எழும்பி வெளிக்கிட்டு உந்த ICRC அலுவலகம் மட்டும் போயிற்று வாங்கோவன்....புதுசா கொஞ்ச பேரின் பெயர் விபரம் வந்திருக்காம்..எங்கட நேசனின் பெயரும் இருக்கோ என்று பார்த்திட்டு வாங்கோவன்.. வழக்கமாக பாடும் பல்லவியாக இருந்தாலும் ... நாதனுக்கு இன்று ஏதோ மனம் சொல்லியது மகன் கிடைத்திடுவான் என்று.. சரியப்பா ..ஒரு கோப்பியைப் போடு குடிச்சிட்டு ஒரு எட்டு போய் என்ன என்று கேட்டுவிட்டு வாறன்... அண்டைக்கும் இப்படித்தான் ஒரு கந்தசஷ்டி நாளில் நேசன் இயகத்துக்கு போனான்..அவனைப்பார்த்து இன்றுடன் இரண்டு வருசம். இடையிலே தான் எத்தனை துன்பங்கள் துயரங்கள்..கடைசியாக போன மாசம் தான் இராமனாதன் அகதி தடுப்பு முகாமில் இருந்து விடுதலையாகி வவுனியாவில் ஒரு உறவினர் வீட்டுக்கு வந்து ஒருமாசம் ஆகிறது. முள்ளிவாய்க்காலில் இருந்து வந்ததிலிருந்து ராணியம்மா இரவு தூக்கத்தையும் தொலைதிருந்தா... சொல்லுங்கள் உறவுகளே எப்படி தூங்க முடியும்.. என்னும் எவ்வளவு நாட்கள் எடுக்குமோ அவர்கள் நிம்மதியாக தூங்க... கணவனுக்கு கோப்பியை போட்டு வழியனுப்பி விட்டு..முருகன் படத்துக்கு பூவை வைத்து..அப்பனே முருகா இன்றாவது அவர் ஒரு நல்ல செய்தியுடன் வரவேண்டும் என்று மனமுருக வேண்டினார்.. சரணடைந்த பெடியங்களை அங்கே வைச்சிருக்கிறாங்கள்..இங்கே வைச்சிருக்கிறாங்கள் என்று சொல்ல சொல்ல ராணியம்மா அலையாத இடம் இல்லை.. வைத்திய சாலைகள்..சிறைக்கூடங்கள்..என்று யார் யாருடையதோ கையை காலை பிடித்து தேடியலைந்தாகிவிட்டது.. இன்று இருக்கும் ஒரே நம்பிக்கை இந்த ICRC யின் பெயர் பட்டியல் தான்.. மதியம் ஒரு மணியை தாண்டி இருந்தது .. இன்னும் அவரை காணவில்லை.. வாசற் கதவில் தலை சாய்த்தபடி சாலையின் முனையை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, தன் மகன் உயிரோடு இருக்கிறான் என்ற நற் செய்தியுடன் வருவார் தன் கணவன் என்று... காத்திருக்கிறாள்.... ஒரு போராளியின் அம்மா... (முற்றும்.)
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் இருபத்திமூன்று எனது அன்பிற்கினிய உறவுகளே... இந்த வேளையில் இந்த பாகத்தை எழுத முடியாமைக்கு நான் மிகவும் வருந்துகிறேன்... உங்களை ஏமாற்றவோ, உங்கள் மனசை காயப்படுத்துவதற்கோ நான் ஒரு நாளும் எண்ணியதில்லை.. காலத்தின் தேவை கருதி இந்த பாகத்தை இப்போது எழுதுவதை தவிர்த்துள்ளேன்.. நிச்சயம் ஒரு நாள் உங்களுக்காக எழுதுவேன்.. அதுவரை என்னை உளப்பூர்வமாக மன்னித்து காத்திருப்பீர்கள் என்று பணிவன்புடன் நம்புகிறேன்.. நன்றியுடன், உங்கள் அபிராம் (தொடரும்)
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் இருபத்திரண்டு அந்த நாள் ஏன் விடிந்தது என்று இருந்தது ராணியம்மாவுக்கு... அதிகாலையிலேயே யுத்த தாங்கிகளின் ஓசையும் அந்த இடமெல்லாம் சுடுகாடாக்கும் வண்ணம் விழுந்த எறிகணைகளும் தான் ராணியம்மாவை துயில் எழுப்பின. ஐயோ ..ஆமி சுட்டு கொண்டு வாறான்..பதுங்கு குழிகளுக்குள் கைக்குண்டுகள் வீசி கொண்டு வாறான் என்ற செய்தி காற்றுடன் மக்களோடு கலந்தது.. மக்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றார்கள்... ஆமி வரும் வரை ..பதுங்கு குழிக்குள் இருப்பம் என்ற கனவும் மண்ணாகி போனது அவர்களுக்கு... உண்டியல் சந்தியை அண்மித்த வடக்கு பக்கத்தில் இன்னும் புலிகள் தீரமுடன் போரிடும் சத்தம் கேட்டு கொண்டிருந்தது... கடற்கரை பக்கமாக வடக்கு ஆமியும் தெற்கு ஆமியும் இணைந்து மேற்கு பக்கமாக முன்னேறி வருவதையும் தடுத்தி நிறுத்தி புலிகள் போரிட்டு கொண்டிருந்தார்கள்.. இதுக்கெல்லாம் எவ்வளவு ஆன்ம பலம் வேண்டும்.. நான்கு பக்கமும் ராணுவத்தால் சூழப்பட்ட நிலையிலும்.. ஒரு இஞ்சி இடம் விடாமல் கொத்து குண்டுகளும் பொஸ்பரஸ் குண்டுகளும் எறிகணைகளும் ராணுவம் மிச்சம் விடாமல் தாக்கி கொண்டிருந்த நிலையிலும் ... கைகளில் இருக்கும் துப்பாக்கியையும் ஒரு கொஞ்ச ரவைகளையும் வைத்து கொண்டு இரண்டு சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் சாகத்தான் போகிறோம் என்று தெரிந்து கொண்டு .. மக்களையும் தலைவரையும் ராணுவம் அணுக விடாமல் சண்டை போடுவது என்பது சாதாரண காரியமா உறவுகளே.. எரிந்து கொண்டிருக்கும் ஆயுத லொறிகளுக்கு மத்தியிலும், பிணங்களுக்கு மத்தியிலும் , தலைவரை காப்பாற்றி விட்டால் போதும் நிச்சயமாக எங்களுக்கு ஈழம் கிடைத்து விடும் என்ற மன நிலை தான் அங்கெ இருந்த பெரும்பாலான போராளிகளுக்கு.. ராணுவம் வட்டுவாகலில் இருந்து பாரிய படை நகர்வை தொடங்கி இருந்தது. அதே வேளை கடற்கரை பக்கம் இருந்தும் நந்தி கடல் நோக்கி ஒரு நகர்வை தொடங்கி இருந்தது.. மக்கள் கூட்டம் கூட்டமாக முன்னேறி வரும் ராணுவத்தை நோக்கி நகர தொடங்கினார்கள். வீதியோரத்தில் இருந்த காயமடைந்த போராளிகளை ராணுவம் சுட்டு கொண்டு வருகிறது என்று கேள்வி பட்ட ஏனைய போராளிகள் மக்களை பார்த்து கெஞ்ச தொடங்கினார்கள்.. குறிப்பாக காயமடைந்த பெண் போராளிகள் ..எங்களை உங்களுடன் தூக்கி செல்லுங்கள் இல்லை என்றால் இங்கேயே கொன்று விட்டு போங்கள் என்று மக்களிடம் இறைஞ்சினார்கள்.. சிலர் சில போராளிகளை காவி சென்றார்கள்.. பெரும்பாலானவர்கள் இவர்களை பார்த்தும் பாராமலும் போய் கொண்டிருந்தார்கள்.. மக்களுக்காக தங்கள் அவையவங்களை இழந்து, மக்களின் காலை பிடித்து கெஞ்சும் அந்த பெண் போராளிகளின் நிலை உலகில் எந்த விடுதலை போராளிகளுக்கும் வர கூடாது.. எல்லாரையும் பார்த்து கெஞ்சினார்கள்... கடுமையாக காயபட்ட போராளிகளுக்கு சயனைட் கொடுப்பதில்லை. வலி தாங்காமல் கடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில்.. அத்துடன் செஞ்சிலுவை சங்கம் பொறுப்பேற்கும் போது சொன்ன நிபந்தனைகளில் காயமடைந்த போராளிகள் எந்த விதமான இராணுவ அடையாளங்களையும் வைத்திருக்க கூடாது என்பதும் அடங்கி இருந்தது. சாக கூட வழியில்லாமல் அந்த பெண் போராளிகள் மக்களை பார்த்து கெஞ்சினதை பார்த்த எவனுமே சாவின் வலியை ஆயிரம் தடவை உணர்ந்திருப்பான். நேற்று சென்ற மக்கள் கூட்டத்துடன் கலந்து சென்ற போராளிகள் கழட்டி வீசி விட்டு சென்ற சயனைட் குப்பிகளும் கழுத்து தகடுகளும் அந்த வீதி எங்கும் கிடந்தன... அம்மா ...அக்கா ...அண்ணா ....தம்பி ..அந்த குப்பியையாவது பொறுக்கி தந்துவிட்டு போங்கள் ..கெஞ்சினார்கள் உங்களுக்காக போராடிய அந்த வீர பெண் புலிகள்.. சொல்லுங்கள் உறவுகளே... உங்கள் மனசை தொட்டு சொல்லுங்கள் .. உங்கள் ஆன்மாவை உலுக்கவில்லையா ... தங்கள் குடும்ப உறவுகளை விலகி உங்களுக்காக போராடி, தங்கள் அவையவங்களை உங்களுக்காக கொடுத்து விட்டு இன்று எதிரியிடம் கையகலாமல் கொல்லபடுவதை தடுக்க உங்களால் முடியவில்லை என்று நினைக்கும் போது உங்களால் எப்படி இயல்பாக இருக்க முடிகிறது ... சாவோம் என்று தெரிந்து தான் போராட்டத்திற்கு வந்தார்கள்.. அவர்கள் இன்று சாவுக்காக பயப்படவில்லை ..எதிரியின் காம பசிக்கு இரையாகாமல் மானத்தோடு சாகத்தான் அவர்கள் கெஞ்சினார்கள்.. ஒரு சின்ன பையன் தன்னால் ஆனமட்டும் குப்பிகளை பொறுக்கி ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டு போனான்.. அந்த பையனின் முகம் வாழ் நாளுக்கும் மறக்க முடியாது.. அவன் அந்த பெண் போராளிகளுக்கு ஆற்றிய உதவி ..ஆயிரம் விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டமைக்கு சமன். அந்த சிறுவன் அந்த பெண்புலிகளின் மானத்தை மட்டுமல்ல உங்களின் எங்களின்..ஏன் இந்த உலகெங்கும் வாழும் தமிழ் பெண்களின் மானத்தை காத்தவன்... எங்கிருந்தோ வந்த ஒரு எறிகணை ராணியம்மாவின் கணவனின் காலை பதம் பார்த்தது... ஒரு சீலையை எடுத்து வழியும் குருதியை சுத்தி கட்டினார். அம்மா ..இனி இங்கே இருந்து அண்ணாவை தேடினால் ..அப்பாவையும் இழக்க வேண்டி வரும்..என்று நா தழுவி தழுக்க சுபா கூறினாள்.. இன்னும் கொஞ்ச நேரம் ...என்று ராணியம்மா இழுக்க ..இல்லை அம்மா ..அப்பாவுக்கு இரத்தம் ஓடுது ..வைச்சிருந்தால் இங்கேயே இழக்க வேண்டி வரும் என்று குண்டை தூக்கி போட்டாள் மற்றவள் மதி .. என்ன செய்வது என்றே புரியவில்லை ராணியம்மாவுக்கு ...மகனும் மண்ணுமா இல்லை கணவனும் மற்றைய பிள்ளைகளுமா .. சரி ஆமியிடம் போவோம் .. அரை மனசோடு சொன்னாள் ராணியம்மா .. ராணுவம் முன்னேறும் திசை நோக்கி தந்தையை காவியபடி நடந்தார்கள் தாயும் பிள்ளைகளும் .. அந்த வேளையில் .. எங்கள் வீர குல பெண்களின் உயிரை விட மானமே பெரிது என்று வாழ் நாள் முழுவதும் நினைக்கும் ஒரு சம்பவம் நடந்தது .. ஈர குலையே கருகியது.. குப்பி கிடைக்காத பெண்புலிகள் சிலர் ..எங்கள் தமிழ் மானத்தை காப்பாற்ற ..எங்கள் புலிகளின் கொள்கைக்காக ..அத்தனை மக்கள் கண் முன்னாலேயே ..எரிந்து கொண்டிருந்த ஒரு வெடி குண்டு வாகனத்தினுள் ஒன்றன் பின் ஒன்றாக பாய்ந்தார்கள் .. கருகி மடிந்தார்கள் .. என் இனிய பெண் உறவுகளே ... நீங்கள் இவர்கள் பிறந்த இனத்தில் தான் பிறந்தீர்கள் என்று மற்றவர்களிடம் சொல்லி பெருமை பட்டு கொள்ளுங்கள்.. மானத்துக்காக ..கொள்கைக்காக உயிரையும் கொடுக்கும் பெண்கள் எங்கள் சகோதரங்கள் என்று வாழ் நாள் முழுவதும் மனசிலே நிறுத்துங்கள்.. எதுக்காகவும் மானத்தையும் கொள்கையையும் விட்டு கொடுக்காதீர்கள் .. இது தான் அந்த வீர பெண்களுக்கு நீங்கள் செய்யும் இறுதி மரியாதை... இந்த காட்சியை நேரில் பார்த்த ராணியம்மாவுக்கு இதயமே உறைந்தது ..கண்ணீர் வரவில்லை ..மனசு மட்டுமல்ல உடம்பே கல்லானது.. சாலையோரத்திலே வாயிலே குப்பியுடன் மேலும் பல பெண் போராளிகளின் உயிரற்ற வெற்று உடல்கள்.. மக்களுக்காகவும் மானத்துக்காவும் மரணித்த அந்த வேங்கைகளின் கண்கள் இராணுவத்திடம் போய் கொண்டிருந்த மக்களை வெறித்து பார்த்தபடி இருந்தன.. இந்த நாள் இன்று விடிந்திருக்க கூடாதோ ..?? (தொடரும்)
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் இருபத்தொன்று அதிகாலை ஒரு மணியை தாண்டி நந்திகடலின் மேற்கு பக்கமாக இடியென அதிரும் வெடியோசைகளும், இரவை பகலாக்கும் பரா வெளிச்சங்களுமாக இருந்தது. இயக்கம் இறங்கிட்டுது..மக்கள் தங்களுக்குள் பேசி கொண்டார்கள். விடிகாலை ஐந்து மணிவரை இடைவிடாத செல்சத்தங்களும், கனரக ஆயுத வெடிச்சத்தங்களும் கேட்டு கொண்டே இருந்தன. அந்த கொடிய வேளையிலும் மக்கள் மனசில் ஒரு ஆத்மா திருப்தி..தலைவரும் தளபதிகளும் ..உயிரோட தப்பி போயிடுவார்கள் .. சிலர் வாய் விட்டே வேண்டினார்கள்.. "வற்றாப்பளை அம்மாவே ..எங்கள் தலைவனையும் அவன் பெடியளையும் நீதான் காப்பாத்த வேண்டும் ..அவங்கள் எங்களுக்காக பட்ட கஷ்டங்களை நீ பார்த்து கொண்டு தானே இருந்தாய்...இதையாவது எங்களுக்காக செய் ..அவங்களை காப்பாத்து தாயே .."" நெஞ்சுருக வேண்டினார்கள். தங்கள் பிள்ளைகள் கணவன்மார் மனைவிமார் என்று பறி கொடுத்தும், தலைவன் உயிரோடு இருக்க, ஆண்டவனை வேண்டின மக்களும் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் காலையில் கேள்விபட்ட செய்தி வேறு விதமாக இருந்தது. "நேற்று இறங்கின பெடியள் அவ்வளவும் முடிஞ்சுதாம்..முதாவது இரண்டாவது லைனை உடைச்சிட்டாங்களாம். மூன்றாவது லைனிலே வைச்சு அவன் ஒரு பிடி பிடிச்சானாம் ..பெடியளும் என்ன செய்கிறது வேவு தகவல்கள் இல்லை ..செல் இல்லை ..பின்னணி பலம் இல்லை ..எல்லாம் முடிஞ்சு போச்சு .." ஆனாலும் தலைவருக்கும் தளபதிகளுக்கும் ஒண்டும் நடக்கலையாம்..அவர்கள் பத்திரமாக இக்கரையில் இருகினமாம் என செய்தி ராணியம்மாவின் மனசில் பாலை வார்த்தது.. கும்பிட்ட தெய்வம் கைவிடவில்லை என்று தோணிச்சு.. இருந்தாலும் யார் பெத்த பிள்ளைகளோ தலைவனுக்காக தங்களை ஆகுதியாகுதுகள்.. என்று மடிந்த மறவர்களுக்காக ஏங்கவும் செய்தாள்.. அன்று பதினாறாம் திகதி..மாலை இரண்டு மணிக்காக காத்திருந்தார்கள் மக்கள்.. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் சொன்ன நேரத்துக்கு வரும் என்று நம்பி அந்த சுடு வெய்யிலிலும் ..அந்த நடு தார் சாலையில் மூடை முடிச்சுகளுடன்..குஞ்சு குருமங்களுடன் காத்திருந்தார்கள்.. காயமடைந்த போராளிகளும் சாலையோரத்தில் காய வேதனையுடன், இலையாங்களுடன் போராடி கொண்டிருந்தார்கள். இரண்டு மணி மூன்றாகி..நாலாகி ஐந்தாகி விட்டது .. அந்த முள்ளிவாய்க்கால் கரையில் சூரியன் மறைய தொடங்கிவிட்டான்..ஆழ் கடலில் கரைய தொடங்கிவிட்டான்... மக்கள் மனசில் இருந்த நம்பிக்கையை போல.. இந்தா வருகிறோம் வருகிறோம் என்று சொல்லி கொண்டிருந்த ICRC கடைசி வரை வரவே இல்லை.. மக்கள் மனசில் விரக்தியும் கோபமும் தான் மிஞ்சின. புலிகளின் தலைமைக்கும் தங்கள் இறுதி கட்ட தாக்குதலை பதினெட்டாம் திகதிக்கு பின் போட வேண்டிய நிலைமை. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கூட நம்ப வைத்து கழுத்தறுத்தது.. மக்கள் பொறுமை இழந்தனர்.. மக்கள் நடுவே ஊடுருவி இருந்த புல்லுருவிகளும் நயவஞ்சகர் சிலரும், காவல் கடமையில் இருந்த கடற்புலி போராளி ஒருவனின் கையில் இருந்த ஆயுதத்தை பறித்தெடுத்து அவனை சுட்டு கொன்றனர். எந்த மண்ணை...எந்த மக்களை அவன் நேசிச்சானோ..அந்த மக்களே சுட்டு கொல்லும் போதும்..அண்ணே ஆமியிடம் போகாதீங்கள் எல்லாம் பிழைச்சு போயிடும்..அண்ணையை காப்பாத்த முடியாமல் போய்விடும் என்று சொல்லி சொல்லியே செத்து போனான். சொல்லுங்கள் உறவுகளே..இப்படி போராளிகள் கிடைக்க நாம் என்ன தவம் செய்தோம்.. ஏன் இவர்கள் எல்லாம் எங்கள் கூட வந்து பிறந்தார்கள்.. வேறு எங்காவது நாட்டில், வேறு எங்காவது இனத்தில் பிறந்திருந்தால் நல்லா இருந்திருப்பார்களே.. எங்களுக்காக சாகவேண்டும் என்று இவர்களுக்கு என்ன விதி .. அந்த போராளியின் சாவை தொடர்ந்து நிலைமை கட்டுகடங்காமல் போனது. புலிகளின் அரசியல் பிரிவு ஒலிபெருக்கி மூலம் மக்களை அறிவுறுத்தியது..மக்களை நிரையாகவும் வரிசையாகவும் செல்லும்படியும், எக்காரணம் கொண்டும் சாலையை விட்டு இறங்காமல் செல்லும் படியும் கேட்டு கொண்டது. மக்கள் விரக்தியின் விளிம்பில் புலிகளை விட்டு இராணுவ கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி, வட்டுவாகல் கரையை நோக்கி நகர தொடங்கினார்கள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்து மூன்று மாதகாலமாக கடும் முயற்சி எடுத்தும் கடற்புலிகளால் தடுத்து நிறுத்தி வைக்கப்படிருந்த ராணுவத்தின் 59 ஆவது படைபிரிவு மக்களுக்கு நடுவாக புலிகளை நோக்கி நகர தொடங்கியது. தலைவரையும் தளபதிகளையும் வெளியேற்றும் வரை புலிகளுக்கு ஒரு தாய் நிலபரப்பு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. அதை இல்லாமல் செய்யும் நோக்கோடு ராணுவம் மக்களை பணயமாக்கி மக்களுக்கு நடுவாக தனது நகர்வினை மேற்கொண்டது. உடனடியாக தலைமைக்கு தெரியபடுத்தபட்டு ஒரு பதில் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் புலிகளின் பிஸ்டல் குழுவினர். மக்களோடு மக்களாக வந்து, மக்களூடாக ஊடுருவும் ராணுவத்தை பிஸ்டல் கொண்டு சுட்டார்கள். தனது திட்டம் குலைவதை கண்ட ராணுவம், கனரக ஆயுதம் கொண்டு மக்களை நோக்கி சுட தொடங்கியது. செய்வதறியாத மக்களில் நூற்று கணக்கானோர் அந்த இடத்திலேயே உயிரை விட்டார்கள். ஒரு ஒடுங்கிய பாதையில் விழுந்து படுக்க கூட இடமில்லாமல் துடி துடித்து செத்தார்கள். சிலர் பயத்திலே பாதையை விடிறங்கி கண்ணிவெடி வயல்களுக்கு அகப்பட்டு சிதறி செத்தார்கள். அந்த காட்சியை வாழ்நாளில் யாருமே பார்க்க கூடாது. கண் முனாலேயே கைகள் கால்கள் சிதறிபறந்தன. ஒரு கால் சிதறியபடி நொண்டி நொண்டி இன்னொரு மிதிவெடியில் சிக்கி சிதறிய காட்சி..உங்கள் இனத்தில் தான் நடந்தது உறவுகளே. எங்கே ராணுவம் பாதையை பூட்டி விடுவார்களோ என்ற அச்சத்தில் கட்டிய கணவன் குண்டடிபட்டு சாகும்போது, அவனை கூட தூக்காமல் இராணுவத்திடம் ஓடிய மனைவி, பெத்த அப்பன் மிதிவிடியில் கால் சிதறி கத்தும் போது, அவரை கைவிட்டு ஓடிய மகன்கள்.. காயப்பட்டு தூக்கி கொண்டு வந்த வயதான அம்மாவை மிதி வெடி வயலில் தூக்கி எறிந்து விட்டு போன பிள்ளைகள் .. இப்படி சொல்லி கொண்டே போகலாம்.. மனித அவலத்தின் வெளிபாடு..மக்களை சுயனலவாதிகாளாக்கி இருந்தது.. அவர்கள் அந்த கோர நிகழ்வுகளில் பின்னர் மனிதர்களாக இருந்தார்களா என்பதே சந்தேகம் தான்.. அன்பான உறவுகளே..இவையனைத்தும் வேறு எங்கோ நடக்கவில்லை ...எங்கள் இனத்தில் எங்கள் மண்ணில் தான் நடந்தன.. எவ்வளவு வலி இருந்ததால் ..எவ்வளவு கோரங்களை கண்டிருந்தால் ..எங்கள் மக்களின் மனம் இவ்வளவு பேதலிச்சிருக்கும்.. ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்.. இந்த மனித பேரவலத்தை தொடர்ந்து புலிகள் சுடுவதை நிறுத்தி பின்வாங்குமாறு கட்டளை வந்தது. மக்கள் அலையலையாக ராணுவ கட்டுபாட்டு பகுதியை நோக்கி நடந்தார்கள். மாலை ஆறுமணியுடன் இராணுவம் மக்கள் உள்ளே வருவதை தடுத்து நிறுத்தியது. தனது நகர்வுக்காக படையணியை மாத்தியது.. யுத்த தாங்கிகள், கனரக ஆயுதங்களை தயார்படுத்தியது. அடுத்த நாள் காலையில் தனது இறுதி தாக்குதலை தொடுபதற்கான முழு முயற்சியில் இறங்கியது. அது தெரியாமல் ..இப்பகுதியில் காலையிலாவது ICRC வரும் என்ற நம்பிக்கையில்... காயமடைந்த போராளிகளும், இன்னொரு தொகுதி மக்களும் காத்திருந்தனர். அவர்களுடன் ராணியம்மாவும் காத்திருந்தார். (தொடரும்) பாகம் இருபத்திரண்டு இங்கே அழுத்துங்கள்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் இருபது மே மாதம் பதினைந்தாம் திகதி .... இரவு ஏழு மணியை தாண்டி இருந்தது.... எங்கும் மரண ஓலங்களும் செல் விழுந்து வெடிக்கும் சத்தங்களும்.. தெருவோரம் எங்கும் உடலில் இருந்து நீர்வடியும் பிணங்கள்.... இறந்து இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.... அந்த இடமெங்கும் புகை மூட்டமும் சாவின் மணமும் தான். உயிரோடு இருந்த மக்கள் கூட பிணமாக தான் நடமாடினார்கள். எங்கே போவது என்று கூட தெரியாமல் வட்டுவாகல் பக்கம் ஒரு கூட்டமும் நந்திக்கடல் பக்கம் ஒரு கூட்டமுமாக மாறி மாறி ஓடினார்கள்.. தங்கள் பாச உறவுகளை தொலைத்துவிட்டு அந்த இடமெங்கும் பெயர் சொல்லி கத்தி கத்தி அலைந்தார்கள்... அந்த இடத்தில் அந்த கணத்தில் இருந்த எந்த ஒரு மனுசனும் நூறு முறை செத்த அனுபவத்தை கொண்டிருப்பார்கள் .. அவர்களின் மனசை உலகத்தில் இருக்கும் எந்த மனோதத்துவ வைத்தியனாலும் ஆறுதல் படுத்த முடியாது.. அந்த தெருவோரத்தில் நாய் ஒன்று ஒரு பிணத்தின் (தமிழனின்) குடல்களை தின்று கொண்டிருந்தது.. அதை பார்த்தும் உணர்வற்று மக்கள் அந்த நாயை கூட துரத்தாமல் ஓடி கொண்டிருந்தார்கள்.. எங்களுக்கு தான் உணவே இல்லை அந்த நாயாவது சாபிட்டு பசியாறட்டும் என்று நினைத்தார்களோ தெரியவில்லை .. அதை கூட காண சகிக்காமல் ஒரு முதியவர் தனது ஊன்று தடியால் அந்த நாயை துரத்தினார்..அது நாளைக்கு தேவையான குடல்களையும் கவ்வி கொண்டு ஓடியது.. இன்னுமொரு நாய் யாரோ ஒரு இறந்த குழந்தையின் கையை வாயில் கவ்வியபடி மக்களை போலவே அந்த தெருவெங்கும் அலைந்தது.. அந்த முல்லை - பரந்தன் சாலையில் தெருவோரம் அடையாளம் காணபட்ட பிணங்களை சுற்றி உற்றவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்.. அவர்களால் கூட ஒப்பாரி வைத்து அழ முடியவில்லை .. பசியினால் அவர்களின் வயிறு மட்டுமல்ல நாக்கும் வறண்டு போய் இருந்தது .. கத்தி கத்தி வறண்டு போன தங்கள் தொண்டையை ஈரபடுத்த தண்ணீர் கூட இல்லாமல் ..ஒரு கிடங்கில் தேங்கி இருந்த நீரும் குருதியும் கலந்த அந்த செந்நீரை பருகிவிட்டு மீண்டும் ஓலமிட்டு கத்தினார்கள்.. நாளை சர்வதேச செஞ்சிலுவை சங்கமூடாக இராணுவ கட்டுபாட்டு பகுதிக்கு அனுப்பி வைப்பதற்காக காயமடைந்த போராளிகளை தூக்கி கொண்டு வந்து அந்த சாலையோரமாக கிடத்தினார்கள் ஏனைய போராளிகள்.. வட்டுவாகல் முன் காவலரணில் இருந்து ஒற்றை பனையடி வரை ஆண் பெண் பேதமின்றி காயமடைந்த போராளிகள் சாலையோரத்தில் வரிசையாக காவலிருந்தார்கள் நாளைய நாளுக்காக.. அவர்களுக்கு ராணுவ கட்டுபாட்டு பகுதிக்கு போக விருப்பம் இல்லை என்றாலும் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு தங்கள் உடல் மற்றும் மன வேதனையோடு காத்திருந்தார்கள்.. மக்கள் சிலர் அவர்களை பார்த்து தூற்றி கொண்டும் , காறி துப்பியும் , சிலர் மனசுக்குள் வேதனை பட்டும், சிலர் விடுப்பு அறியவும், சிலர் அவர்களுக்கு நடுவே தங்கள் உறவுகள் இருக்கிறார்களா என்று அறியவும் அந்த போராளிகளை ஒரு வினோத பிராணிகளாக சுற்றி சுற்றி வந்தார்கள்.. அந்த போராளிகள் ஏற்கனவே மனசளவில் இறந்து போய் இருந்தாலும், இந்த மக்களை இப்படி விட்டுவிட்டு போகிறோமே என்ற எண்ணம், அவர்களை அப்பவும் கொன்று கொண்டிருந்ததை இந்த மக்கள் அறிய வாய்ப்பு இல்லை.. ராணியம்மாவும், சுபாவும் அந்த காயமடைந்த போராளிகள் மத்தியின் தன் மகன்/அண்ணா இருப்பானோ என்ற நப்பாசையில் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். மாலையில் கேட்ட அந்த மிக பெரும் வெடி சத்தத்தை தொடர்ந்து பல மணி நேரமாக வடக்கு பக்கத்தில் எந்த மோதலும் இடம் பெறவில்லை.. பெடியள் சக்கை விட்டு அடிச்சிருகிறாங்கள் என்று தெருவோரத்தில் மக்கள் பேசியதை கேட்ட ராணியம்மா ..."யார் பெத்த பிள்ளையோ ..அந்த மகராசி நல்லா இருக்கனும் " என்று மனசுக்குள் வேண்டி கொண்டாள்.. அது தான் பெற்ற பிள்ளை என்று கூட தெரியாமல் .. நேசன் ..நேசன் ...நேசன் அண்ணா ... ராணிமைந்தன் ..ராணி அண்ணா .. என்று எந்த பெயரை சொல்லி தேடுவது என்று தெரியாமல் தாயும் மகளும் மாறி மாறி பெயர்களை உச்சரித்து தேடினார்கள் ..அழுதார்கள் ..அந்த இரவில் இராணுவம் ஏவிய பரா வெளிச்சத்தில் மகனின்/அண்ணனின் முகத்தை ஒத்திருந்த அனைவரின் பின்னாலும் ஓடி ஓடி போய் பார்த்தார்கள் .. அண்ணா என்று கூப்பிட்டு வேறு யாரோ என்று ஏமாற்றத்துடன் அலைந்தார்கள் .. சொல்லுங்கள் உறவுகளே ..இவர்களை பெற்ற மண்ணை நாங்கள் ஒரு முறையாவது தொட்டு கும்பிட வேண்டாமா .. அந்த மண் எதிரியிடம் நாசமடைவதை பார்த்து கொண்டு சும்மா தான் இருக்க போறீங்களா ..? அந்த காயமடைந்த போராளிகளில் ஒருவன் ..இவர்களின் தவிப்பை பார்த்து விட்டு சொன்னான் .. "அம்மா ஒரு அணி ..நந்தி கடல் கரையை நோக்கி நகர்கிறது ..அதில் சில வேளைகளில் உங்கள் மகன் இருக்கலாம் ..போய் பாருங்கள் அம்மா ".. அவனின் கைகளை கண்ணில் ஒற்றி கொண்ட ராணியம்மா ..மகள் சுபாவையும் கூட்டி கொண்டு ..வேகமாக நந்தி கடல் கரையை நோக்கி நடந்தாள்.. வழியில் தனது கணவனையும் மகள் மதியையும் ..ஒரு மரத்தடியை அடையாளமாக சொல்லி அங்கெ காத்திருக்கும் படி கூறிவிட்டு , சுபாவுடன் வேக வேகமாக நடந்தாள்.. இல்லை இல்லை ஓடினாள்... புலிகளின் பாரிய அணி ஒன்று நகர்வினை தொடங்கி இருந்தது ..அவர்கள் அமைதியாக வரிசையாக நந்தி கடல் முள்ளிவாய்க்கால் கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.. சிவப்பு கீலங்களாக வரும் சன்னகளை பார்த்தும் பயபடாதவர்களாக நேரிய வரிசையில் முதுகிலே சுமைகளுடன் விடுதலைக்காக தங்கள் உயிரை கொடுக்க நிதானமாக நடந்து கொண்டிருந்தார்கள்.. பரா வெளிச்சமடிக்கும் போது வேவு விமானத்தின் கண்ணில் படகூடாது என்று அவர்களின் அணித்தலைவர் மாறி மாறி கத்தி கொண்டிருக்க, வெளிச்சத்தை பார்த்ததும் அந்த சேற்று மண்ணில் விழுந்து படுத்து, வெளிச்சம் ஓய்ந்ததும் எழுந்து நடந்தார்கள் .. அவர்களுக்கு நடுவே ராணியம்மாவும் சுபாவும் அண்ணா ..அண்ணா ..என்று கத்தி கொண்டு அலைந்தார்கள் ..இவர்கள் மட்டும் அல்ல.. அங்கே மகனை, தம்பியை, தங்கையை , கணவனை தொலைத்தவர்கள் என்று நிறைய பேர் ..அவர்களின் உறவுகள் பெயர் கூறி அழைத்து அழுதபடியே அலைந்தார்கள்.. வரிசையில் சென்ற போராளிகள் இறுகிய முகங்களுடன் யாருக்குமே பதிலளிக்காமல் தங்கள் பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள். மூத்த காயமடைந்த தளபதிகளை ஒரு கைதாங்கியில் சுமந்து கொண்டும் சென்றார்கள். அனைவரும் அமைதியாக நந்திக்கடல் கரையில் அந்த சேற்று நிலத்தில் ஆயுதங்களை அருகில் வைத்துவிட்டு சரியான நேரத்துக்காக காத்திருந்தார்கள்.. எதிரின் பக்கத்தில் ..திருவிழாவுக்கு போட்ட மாதிரி கரை முழுக்க வெளிச்சம் பாய்ச்சியபடி டியுப் லைட்டுகள் மின்னி கொண்டிருந்தன. கறுப்பு உடை அணிந்த ஆண்கள் பெண்கள் கலந்த சில போராளிகள் முதுகிலே வெடிமருந்துகளை சுமந்தபடி , மெதுவாக கரையை தாலாட்டிய நந்தி கடலைன்னையினுள் இறங்கி எதிரின் திசையை நோக்கி நகர தொடங்கினார்கள்.. கரும்புலிகள் இறங்கிட்டான்கள் கொஞ்ச நேரத்திலே பெரிய சண்டை நடக்க போகுது என்று சனம் அந்த இடத்தை விட்டு வேகமாக நகரதொடங்கினார்கள்.. மகனை தேடியபடி அலைந்த ராணியம்மவையும்.." அங்காலே போகாதீங்க..இவங்கள் அடிக்க தொடங்க அவன் கட்டாயம் செல்லடிச்சே கொன்று போடுவான் ..இஞ்சாலே வாங்கோ " என்று ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி ராணியம்மாவின் கையை பிடித்து இழுத்தபடி நகர்ந்தார்.. அந்த இடத்தை விட்டு நகர மனசில்லாமல் ..திரும்பி திரும்பி பார்த்தபடியே ராணியம்மா அந்த இழுத்த இழுப்புடன் நகர்ந்தார் அந்த மூதாட்டியுடன்.. தூரத்தில் புள்ளிகளாக கையசைத்தபடி அந்த கரும்புலிகள்... கழுத்தளவு தண்ணீரில் கரைந்தார்கள் .. (தொடரும்) பாகம் இருபத்தொன்று இங்கே அழுத்துங்கள்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் பத்தொன்பது எனக்காக காத்திருந்த சக்கை நிரம்பிய CBZ ஈருளியில் இல் ஏறி கொண்டேன். எனக்காக கொடுக்கபடிருந்த வெடிகுண்டு அங்கியை (ஜாக்கெட்) அணிந்து கொண்டேன். அதை அணியும் போது, சிறுவயதில் பள்ளிக்கூடம் போகாது அடம்பிடிக்கும்போது அம்மா கட்டாயபடுத்தி அணிவிக்கும் பாடசாலை சீருடை தான் ஞாபகத்துக்கு வந்தது. புத்தக பையை தூக்கி கொண்டு ஓடும்போது வாசல் வரை கலைத்து கலைத்து சோறு ஊட்டும் அன்னை தான் என் கண்ணுக்குளே. எழிவண்ணன் ரி-56 ரக தானியங்கி துப்பாக்கியுடனும், அதற்கான மேலதிக ரவைகூடுகளுடனும், என் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான். கனிவாளன் ஒரு ஏகே எல்எம்ஜி யுடன் புறபட்டு சென்றுவிட்டான். வாசல்வரை வந்திருந்த அந்த மூத்த தலைவனையும், என்னை இயக்க போகும் தளபதி அன்பு மாஸ்டரையும், இறுகிய முகங்களோடு விடைகொடுக்க வந்திருந்த என் தோழர்களையும் இறுதியாக ஒரு முறை பார்த்து தலையசைத்து விடைபெற்று கொண்டேன். இறுதியாக பேச வேண்டும் என்று எவ்வளவோ வார்த்தைகள், இருந்தும் எதுவுமே பேச முடியவில்லை. கண்களால் மட்டுமே பேசி கொண்டு விடைபெற்றேன். என் வாழ்நாளில் ஒரு நாளாவது ஓடி பார்த்துவிட வேண்டும் என்று நினைத்த CBZ , இப்போ என் இறுதி வாகனமாக.ஒரு உதையிலேயே இயக்கத்தை தொடங்கியது. "அல்பா கிலோ அல்பா கிலோ ...அல்பா ரோமியோ.." "அல்பா கிலோ அல்பா கிலோ ...அல்பா ரோமியோ.." "சொல்லுங்க அல்பா ரோமியோ " "கிபிர் வெளிகிட்டுது.." "விளங்கிட்டுது .." அகிலன், அன்பு மாஸ்டரின் கட்டளைக்கிணங்க, வெடிப்பினால் ஏற்படபோகும் பாதிப்பில் இருந்து தன் அணியினை காப்பாற்ற தன் அணியினை கொஞ்சம் பின்னுக்கு நகர்த்தினான். கனிவாளன் ஒரு வீட்டின் கூரை மேலே நிலையெடுத்து, இறுதி தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தான். எழில் என் பின்னாலே எழுந்து நின்று தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தான். அலைபேசி அழைத்தது.. "ரோமியோ அல்பா ..ரோமியோ அல்பா ...அல்பா ரோமியோ " "சொல்லுங்க அல்பா ரோமியோ.." "எல்லாம் நல்லபடியா போகுதா .."" "அந்த மாதிரி போகுது அண்ணே .." "சரி தொடர்பிலே இருந்து கொள் " "நன்றி அண்ணே .." அலைபேசியை அணைத்துவிட்டு, எரிந்து கொண்டிருந்த வாகனங்களுக்கு நடுவிலே வளைத்து வளைத்து என் ஆசை CBZ ஐ ஓடி கொண்டிருந்தேன். ஒழுங்கையாலே வந்து இப்போ முல்லை பரந்தன் நெடுஞ்சாலையில் ஏற்றிவிட்டேன். இனி எதிரியின் நேரடி எதிர் தாக்குதலுக்கு முகம் கொடுக்க வேண்டும். என்னுள் ஆயிரம் எண்ணங்கள்..என் வாழ் நாளிலே நான் செய்த பிழைகள் எல்லாம் என் கண் முன்னே தோன்றி மறைந்தன. அவர்களிடம் எல்லாம் மானசீகமாக மன்னிப்பு கேட்டு கொண்டேன். எத்தனையோ பேருடைய முகங்கள் மாறி மாறி வந்தன. அம்மா அப்பா தங்கைகள், சேகர் அண்ணா , என் மடியில் உயிர் துறந்த அம்மா , தங்கை , கலையரசி ..இப்படி சொல்லி கொண்டே போகலாம். எனக்குள் இருந்த ஆசைகளை எல்லாம் கொன்று புதைத்தேன். எங்கள் நாடு விடுதலை அடைய வேண்டும் என்று மட்டும் மனசுக்குள் உறுதியாக நினைத்தேன். எப்படியாவது சொன்ன இலக்கை அழித்திட வேண்டும் என்று திரும்ப திரும்ப வாயிலே முணுமுணுத்தேன். இறுதி நேரத்தில் கூட என் மனம் மாற கூடாது என்று கடவுளை வேண்டினேன். அன்பான உறவுகளே ... இது தான் நான் உங்க கூட பேசும் கடைசி சந்தர்ப்பம்.. உண்மையில் எனக்கே என்ன பேசுறது என்று தெரியவில்லை.. நிறைய பேசணும் போல இருக்கு..ஆனால் பேச முடியவில்லை.. என் பாசங்களே ..நீங்கள் என் உணர்வுகளை நிச்சயமாக புரிந்து கொள்ளுவீங்கள்..நாங்கள் சாகோணும் என்று பிறக்கவில்லை..ஆசைகள் இல்லாமலும் சாகவில்லை..இது ஒரு உணர்வு ..உங்கள் மீது நாங்கள் கொண்ட பாசத்தின் வெளிப்பாடு ..உங்களை நாங்கள் எங்களை விட ஆழமாக நேசிக்கிறோம். அன்புள்ளங்களே ... எங்கள் மண்ணை நேசியுங்கள்.. எங்கள் விடுதலை மீது நம்பிக்கை வையுங்கள் ..எங்கள் தலைவன் மீதும் தளபதிகள் மீதும் பற்று வையுங்கள்..அவர்கள் நிச்சயமாக தங்கள் உயிரை கொடுத்தாவது உங்களுக்கு விடுதலை பெற்று தருவார்கள். நிச்சயம் எங்களுக்கு நாடு கிடைக்கும்.. நீங்கள் தொடர்ந்து அதற்காக தோள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தான் நான் சாகிறேன். உறவுகளே .... எனக்கு என் அம்மாவை பார்க்கணும் போல இருக்கு.. எனக்கும் உணர்ச்சி இருக்கு.. எனக்கும் பாசம் இருக்கு ..அழுகை தான் வருகுது .. பயம் இல்லை ..பாசம் .. உறவுகளே ..எங்க அம்மா...எங்க அம்மா மட்டும் இல்ல ..என்னமாதிரி இங்கே எத்தனையோ போராளிகள் .... அவங்க அம்மா குடும்பங்கள் எல்லாவற்றையும் உங்கள் கைகளில் ஒப்படைக்கிறேன். தயவு செய்து கும்பிட்டு கேட்கிறேன் அவங்களை கொஞ்சம் பார்பீங்களா ..?? கொஞ்சம் பொறுங்கள் உறவுகளே அலைபேசி அழைக்குது .. "ரோமியோ அல்பா ..அங்காலே கிலோ அல்பா ..தடைகளை உடைச்சிட்டான் ..நீங்கள் போகலாம் " "நன்றி அல்பா ரோமியோ " சரி உறவுகளே நேரமாகிவிட்டது.. அடுத்த பிறப்பு ஒன்று இருந்தால் அதுவும் இந்த இனத்திலேயே எங்க அம்மா வயிற்றேலேயே பிறந்து உங்களுக்காகவே போராடி சாகனும் .. நான் போயிற்று வாறன் ..மன்னிக்கவும் போறேன் ... நாங்கள் சாவதும் இல்லை வாழ்வதும் இல்லை. என் பின்னல் இருந்து சுட்டு கொண்டிருந்த எழில்வண்ணன், என்னை தழுவி கொஞ்சிவிட்டு பாய்ந்து கொண்டான். எதிரி என்னை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினான்.. சிலர் என்னை கண்டு ஓட தொடங்கினார்கள். நான் எண்ணெய் தாங்கியுடன் என் உடலை அணைத்தவாறே வேகமாக ஓடினேன். கட்டளை மையம் என் கண்ணில் தெரிந்தது. என் சட்டை பையினுள் இருந்த அம்மாவுக்கான நாளேட்டை ஒரு முறை தடவி பார்த்து கொண்டேன். என் வாய் என்னை அறியாமலே அம்மா.. என்று முணுமுணுத்தது.. தொடர்பினை அமுக்கி .. "அல்பா ரோமியோ ..நான் கிட்டே வந்திட்டேன்.."" "ரோமியோ அல்பா.. வேற ஏதும் சொல்ல இருக்கா ..சாமியும் இருக்கிறார் " "இல்லை அண்ணே ..நான் இண்டைக்கு தான் என் வாழ்க்கையிலே எழுச்சியா இருக்கிறேன்.. இனி எல்லாமே எழுச்சி தான் அண்ணே ..காதை கொடுத்து வடிவா கேளுங்கோ ..எழுச்சி தெரியும் அண்ணே.. எங்களுக்கு தான் வெற்றி அண்ணே ..புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் " பட்டோம்ம்மம்ம்ம்ம்ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் ..... அந்த முள்ளிவாய்க்கால் மண்ணே அதிர்ந்தது.. கனிவாளன் தொடர்பெடுத்தான்.. "அல்பா ரோமியோ ...கிபிர் வெடிச்சிட்டுது..அவன்ட மையத்துக்குள்ளே போய் நடுவிலே தான் வெடிச்சான் அண்ணே .." "அந்த இடமே சக்கையா போச்சு அண்ணே .." "ரோமியோ அல்பா வீரச்சாவு அண்ணே .." அலைபேசியை அணைத்து விட்டு கண்ணீருடன் திரும்பிய அன்பு மாஸ்டரிடம், அந்த மூத்த தலைவர் சொன்னார் .. "ராணி.... அவன் ஒரு மாவீரன் தான்..." (தொடரும்) பாகம் இருபது இங்கே அழுத்துங்கள்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் பதினெட்டு எல்லோருடைய கண்களும் அவனை நோக்கியே இருந்தது. ராணி உறுதியோடு நிமிர்ந்தே நின்றான். அவன் முகத்தில் எந்தவித கலக்கமோ, குழப்பமோ இல்லாமல் தெளிவாக நின்றான். தான் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் முழுசாக தெரிந்தவனாக இருந்தான். நேற்று இரவு கூட, உணவுகளை பொதி கட்டும் போது, சந்தோசமாக பேசி கொண்டிருந்தவன்.. " மச்சான் இந்திய இராணுவ காலபகுதியில் நாங்கள் சின்ன பிள்ளைகள், தலைவர் காட்டுக்குள்ளே இருக்கும்போது நாங்கள் அவரின் பக்கத்தில் இல்லை. இப்போ எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு. எங்கட மக்களின் போராட்டத்தை கொண்டு நடத்தும் தலையாய பொறுப்பு எங்களுக்கு கிடைச்சிருக்கு. " " நான் என் வாழ்நாளிலையே பார்க்காத தலைவர் கூட சாப்பிட்டு படுத்துறங்கி அவரை பாதுகாக்கும் கடமை கிடைக்க நான் என்ன தவம் செய்தேன் " என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்த ராணிமைந்தன், கரும்புலியாக தான் போகிறேன் என்றால் யாருக்கு தான் ஆச்சரியமாக இருக்காது. " ராணி இது உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற முடிவுகள் இல்லை. இதற்கு நிறைய உறுதி வேணும். பயிற்சி வேணும். திடீர் என்று முடிவெடுத்து இலக்கை துல்லியமாக தாக்க முடியாது..." அந்த மூத்த தலைவர் சொல்லி முடிக்க முதலே .. "இல்லை அண்ணே ..நான் செய்வேன் ..என்னை நம்புங்க.. உங்கள் மேல் ஆணையாக ..இந்த தாய் மண் மீது ஆணையாக நீங்கள் சொல்லுற இலக்கை தாக்கி அழிப்பேன்" மிகவும் உறுதியாக அவன் வாயிலிருந்து வசனங்கள் வெளிப்பட்டன. "அப்படி இல்லை ராணி.. உன்னிலே எனக்கு நம்பிக்கை இருக்கு...ஆனால் இது வழக்கமான தாக்குதல் பாணி இல்லை ..ஒரே ஒரு முறை தான் தாக்கலாம். அதுவும் இலக்கை சரியாக தாக்கவேணும். பிழைச்சுதோ அவன் சுதாரிச்சிடுவான். அப்புறம் நாங்கள் தாக்கவே முடியாது. நிறைய பயிற்சி தேவை ..தலைவர் சம்பந்தபட்ட விடயம் வேற..அது தான் யோசிக்கிறேன்.." "அண்ணே ..நேரம் போகுது அண்ணே ..என்னை நம்புங்க அண்ணே ..நான் நிச்சயமா வெற்றிகரமாக முடிப்பேன்".. வேறுவழி இல்லாமலும். ராணியின் உறுதியின் பேரிலும் இரண்டுமனசுடன் அந்த மூத்த தலைவர் அந்த தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்தார். ராணியின் முகத்தில் என்றுமில்லாத மகிழ்ச்சி. அதன் வெளிபாடோ என்னவோ ஒப்புதல் கிடைத்தவுடனேயே அந்த மூத்த தலைவருக்கு ராணுவ வணக்கம் செலுத்தினான். சொல்லுங்கள் உறவுகளே ..இவர்கள் பிறந்த இனத்தில் தானே நாங்களும் பிறந்தோம். இவர்களுக்கு இருக்கும் உறுதியும் வேட்கையும் எங்களுக்கும் இருக்கத்தானே வேணும் .. நேற்றுவரை தலைவருடன் வாழணும் என்று நினைத்த ஒருவனால்.. தன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும், தங்கைகளுக்கும் நாள் தவறாமல் நாட்குறிப்பு எழுதி வந்த ஒருவனால்.. தன் வாழ்நாளில் பொறியிலாலராக வரவேண்டும் என்று இலட்சியத்துடன் வாழ்ந்த ஒருவனால்.. இன்று தன்னுயிரையே உவந்து அளிக்கும் வல்லமையை யார் கொடுத்தது.. சொல்லுங்கள் உறவுகளே.. நாங்கள் பிறந்த அதே மண்ணில் தானே இவர்களும் பிறந்தார்கள்... நாங்கள் விளையாடிய அதே தெருக்களில் தானே இவர்களும் விளையாடினார்கள்.. நாங்கள் கும்பிட்ட அதே கடவுளை தானே இவர்களும் கும்பிட்டார்கள்.. நாங்கள் படிச்ச அதே பள்ளிகூடத்தில் தானே இவர்களும் படிச்சார்கள்.. இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த உணர்வுகள் வந்தது.. இவர்களுக்கு மட்டும் ஏன் தங்கள் உயிரை சொன்ன நேரத்தில் மக்களுக்காக கொடுக்கும் வல்லமை வந்தது.. நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் .. இவர்களா பிழைக்க தெரியாதவர்கள்.. இவர்களா யதார்த்தம் தெரியாதவர்கள் .. இவர்களா சுழிக்க தெரியாதவர்கள் .. இவர்களா இரக்கமற்றவர்கள் ... அந்த எதிரியின் முன்னணி கட்டளை மையம் தான் ராணியின் இலக்கு. அன்பு மாஸ்டர் ராணிக்கு திட்டத்தை விளங்கபடுத்தி கொண்டிருந்தார். "இங்கே பார் ராணி ..அவன் அந்த கட்டளை மையத்தை சுற்றி கடும் பாதுகாப்பு போட்டிருப்பான். நீ எப்படி என்றாலும் சக்கையை அந்த மையத்திலே இருந்து ஒரு முப்பது மீற்றருக்குள் வெடிக்கவை..மிச்சத்தை நாங்கள் பார்க்கிறோம். என்ன பாடு பட்டாலும் முப்பது மீற்றருக்குள்ளே போயிடு..அதில் தான் எங்கட தாக்குதல் வெற்றி தங்கி இருக்கு." "உனக்கு இலக்கை அடையும் வரை காப்புச்சூடு வழங்க கனிவாளனும், எழில்வண்ணனும் வருவார்கள். அவர்கள் உனக்கான தடைகளை உடைத்து தருவார்கள்." "சரி அண்ணே " "ராணி ..உன்னில் தான் எல்லாம் இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்திலே இங்கே தலைவர் வருவார். அவர் இங்கே வாறதும் ..எங்கட அடுத்த திட்டத்தின்ட வெற்றியும் உண்ட கையிலே தான் இருக்கு.."" "எனக்கு விளங்குது அண்ணே...." "சரி வெளியிலே சக்கை நிக்குது போய்ட்டுவா ..தொடர்பிலே பேசுவோம்.." "சரி அண்ணே.." மூத்த தலைவரிடம் வந்த ராணி அவரை ஆரத்தழுவினான். கண்கள் கலங்க.. அண்ணே .. எனக்கு பயத்தாலே கண்கலங்கவில்லை அண்ணே .. இன்னும் பத்து நிமிஷம் நின்றால் நான் வாழ்நாளிலே காணாத என் தலைவனை காணலாம் அந்த பாக்கியம் கூட என்னக்கு இல்லையே என்று தான் அண்ணே.. கண் கலங்குது. என்னை இப்படி வழிநடத்தின உங்களை எல்லாம் இனிமேல் பார்க்க முடியாது என்று தான் அண்ணே கண் கலங்குது.. அண்ணே எப்படியாவது தலைவரை பாதுகாப்பாக கொண்டுபோய் சேருங்கள் அண்ணே .. அண்ணே நீங்களும் தலைவரும் தமிழீழம் கிடைக்கும்வரை உயிரோட இருக்கணும் அண்ணே ..அது தான் அண்ணே என்னுடைய கடைசி ஆசை.. நன்றி வணக்கம் அண்ணே.... சொன்ன ராணி திரும்பி கூட பார்க்காமல் புறப்பட்டு தனக்கு காப்புச்சூடு வழங்கபோகும் தோழர்களிடம் வந்தான். தனது பழ ரின்னையும், இறைச்சி துண்டுகள் ரின்னையும் உடைத்து அவர்களிடம் நீட்டினான்.. சாப்பிடுங்க மச்சான் சண்டை பிடிக்க தெம்பு வேணும்.. அவர்கள் இவனுக்கு ஊட்ட வெளிக்கிட ..இல்லை மச்சான் இன்னும் பத்து நிமிசத்திலே சாகபோற எனக்கு, என் வயிற்றுக்கு எதுக்கு மச்சான் சாப்பாடு..நீங்களே சாப்பிடுங்க மச்சான்.. அப்போ தான் தெம்பா சண்டை பிடிக்கலாம்.. நீங்கள் உடைச்சு கொடுத்தால் தான் நான் கடைசி மட்டும் போகலாம் ..சாப்பிடுங்க என்று ஊட்டி விட்டான் ராணி .. அந்த காட்சியை பார்த்தவர்கள் மனசு இறுகுவதை ஆண்டவனாலும் தடுக்க முடியாது.. தற்கொலை செய்யபோறவர்கள் கூட கடைசி ஆசைக்கு விரும்பினதை சாப்பிடுவார்கள் ...மக்களுக்காக வெடிக்க போகும் அவன் பசிக்கு கூட சாப்பிடாமல் தோழர்களுக்கு கொடுத்துவிட்டு சென்றான்.. ராணிக்கு இன்னொரு ஆசையும் இருந்தது.. ஆனால் அவன் அதை என்றைக்குமே சொன்னது இல்லை.. அவனுக்கு CBZ ஈருளி ஓடனும் என்று நிறைய நாள் ஆசை...ஆனால் அவனுக்கு அது என்றைக்குமே கிடைத்ததில்லை. இறுதி காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக யாருமே வைத்திருந்ததும் இல்லை... ராணி அனைவரிடமும் விடைபெற்று வெளியில் வந்தான்.. அவனுக்கான சக்கை வாகனம் காத்திருந்தது. அது ஒரு CBZ. (தொடரும்) பாகம் பத்தொன்பது இங்கே அழுத்துங்கள்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் பதினேழு காத்திருந்த அந்த நாளும் வந்தது. நேற்று தான் விடுதலை புலிகளின் தலைமை அந்த முடிவுக்கு வந்தது. கடந்த பத்து நாளாக நடந்த பயிற்சிக்கான சண்டைகளம் நாளை. விடுதலைப்புலிகளின் தலைமையும் முக்கிய தளபதிகளும் ஒரு பாரிய ஊடறுப்பு தாக்குதலை நடாத்தி காட்டுக்குள் செல்லும் முடிவானது, காயபட்ட போராளிகள் பொதுமக்கள் , ஏனைய போராளிகள், ஆதரவாளர்கள், மாவீரர் குடும்பங்கள், பொதுமக்களை என்ன செய்வது தெரியாமல் காலம் தள்ளி போய் கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று அரசியல் பிரிவு, ஜெனிவா சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் முடிவாக நாளை மதியம் இரண்டு மணியளவில் செஞ்சிலுவைச்சங்கம் போராளிகளையும் பொதுமக்களையும் தங்களின் பாதுகாப்பில் கையேற்பதாக உறுதியளித்திருந்தது. அதனடிப்படையில் நாளை நடு இரவில் ஒரு பாரிய ஊடறுப்பு தாக்குதலை நிகழ்த்துவதற்கான தயாரிப்பு பணியில் புலிகள் ஈடுபட்டிருந்தனர். கடல் தாண்டிய அந்த தாக்குதலுக்காக, நேற்று இரவு முதல் உலர் உணவுகளையும், பழ ரின்களையும், இறைச்சி துண்டுகள் நிறைந்த ரின்களையும் பொதி பண்ணிகொண்டிருந்தார்கள் போராளிகள். கடந்த மூன்று நாட்களாக எதுவுமே சாப்பிடாமல், வயிறுகள் காயும்போதும், பொதிகள் மெழுகுதிரியில் உருக்கி கட்டும்போது வாயில் வரும் உமிழ்நீர்களை கூட அடக்க முடியாத பசி அவர்களுக்கு. இருந்தாலும் அடுத்த மூன்று மாதத்துக்கு தேவையான உணவு என்று ஒரு சொற்ப உணவையே பகிர்ந்தளிதிருந்தார்கள். சொல்லுங்கள் உறவுகளே ,மக்களுக்காக போராட உணவு தேவை என்று, பட்டினியோடு பொதி பண்ணும் போராளிகள் கிடைக்க என்ன தவம் செய்தீர்கள்.? கொண்டு செல்ல வேண்டிய ஆயுதங்களையும் நன்றாக சுத்தப்படுத்தி பொலித்தீன் பைகளால் சுத்திகட்டி வைத்திருந்தார்கள். இன்று மதியம் ஒரு மணியளவில் அந்த சந்திப்பு தொடங்கி இருந்தது. முள்ளிவாய்க்கால் உண்டியல் சந்திக்கு அருகாமையில் இருந்த பிள்ளையார் கோவிலின் கருவறைக்கு அருகே அந்த மூத்த தலைவரின் வழிகாட்டலுக்காக தளபதிகள் உட்பட நானூற்று ஐம்பது விசுவாசமான போராளிகள் காத்திருந்தார்கள்.அதில் ஒருவனாக ராணிமைந்தனும் காத்திருந்தான். அந்த மூத்த தலைவர் ஊடறுப்பிற்கான திட்டத்தை விளக்க தொடங்கி இருந்தார். ஆங்காங்கே விழும் செல்களுக்கும், மிக அருகில் கேட்கும் யுத்த டாங்கியின் இரைச்சலுக்கும், பெரும் சண்டை சத்தத்துக்கும் நடுவில், அவரின் மிடுக்கான பேச்சு கொஞ்சம் உரத்தே ஒலித்தது. "நாங்கள் நாளை இரவு ஒரு பாரிய தாக்குதலை தொடங்க போகிறோம். அந்த வேளையில் இங்கே எந்த மக்களும் இருக்க மாட்டார்கள். எல்லாருமே செஞ்சிலுவைச்சங்க பாதுகாப்பில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு போயிருப்பார்கள். இந்த இடத்தை சூசை அண்ணை தலைமையிலான போராளிகள் தக்க வைக்க போராடி கொண்டிருப்பார்கள். அவர்கள் இராணுவத்துக்கு இறுதிநேர இழப்பை கொடுத்து கொண்டு எங்கள் ஊடறுப்பு தாக்குதலுக்கு அவனது முழு பலத்தையும் ஒருங்கிணைக்க விடாமல் பார்ப்பார்கள்" "நீங்கள் எல்லாரும் பதினெட்டு பேர் கொண்ட இருபத்தைந்து அணிகளாக பிரிக்கபட்டு இருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொரு அணிக்கும் ஒரு மூத்த தளபதி தலைமை தாங்குவார். தொடர்பாடல் பிரச்சனை காரணமாக இந்த சண்டை முடியும் மட்டும் அவரது கட்டளை தான் உங்களுக்கான இறுதிக்கட்டளை" "உங்களின் பிரதான இலக்கு, எவ்வளவு கெதியாக முன்னணி நிலைகளை உடைத்து, உங்களை நிலைநிறுத்தி, ஒரு மனித பாதுகாப்பு அரணாக தலைவர் வெளியேறுவதற்கான ஒரு பாதுகாப்பான பாதையை ஏற்படுத்தி கொடுப்பது தான்". "உங்கள் எல்லாருக்கும் தெரியும், எங்கள் விடுதலை போராட்டத்தின் உயிர் மூச்சு தலைவர் தான், அவரை நாங்கள் பாதுகாப்பாக நகர்த்தினால் தான் எங்கள் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரும், மக்களுக்கு ஒரு விடிவை நாங்கள் பெற்று கொடுக்கலாம்" "எனவே உங்களின் கைகளில் தான் தங்கியுள்ளது, எங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டம், அதற்காக தான் விசுவாசமான உங்களை தெரிவு செய்து இந்த தாக்குதலுக்கு தயார்படுத்தி இருக்கிறோம்" "இந்த சண்டை எங்கள் வழக்கமான சண்டைகள் போல இருக்காது. உங்களுக்கான பின்கள வழங்கல்களோ, சூட்டு ஆதரவோ கிடைக்காது. உங்களின் வீரமும் தியாகமும் தான் காவலரண்களை உடைத்து வழி ஏற்படுத்தும். எதிரி எங்களின் வருவுக்காக அங்கே காத்துகொண்டிருப்பான். தடங்கல் ஏற்படும் இடங்களில் கரும்புலிகள் அதை உடைத்து கொடுப்பார்கள்" "இன்னொரு முக்கியமான விடயம், இந்த தாக்குதலில் எதிரியிடம் நாங்கள் எக்காரணம் கொண்டும் பிடிபடக்கூடாது, உங்களுக்கு வெடிகுண்டு அங்கிகள் (ஜாக்கெட்) வழங்கப்படும், உங்கள் ஆயுதங்கள் தீர்ந்தாலோ, எதிரியிடம் அகப்படும் நிலை தோன்றினாலோ அதை பாவியுங்கள்" "இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களை அண்ணை சந்திப்பார்.." இவ்வாறு அந்த மூத்த தலைவர் திட்டங்களை தெளிவுபடுத்தி கொண்டிருக்கும்போது, அவரின் பிரத்தியேக அலைபேசி அழைத்தது. "பப்பா அல்பா ..பப்பா அல்பா .. ரோமியோ ஒஸ்கா " "பப்பா அல்பா ..பப்பா அல்பா ..ரோமியோ ஒஸ்கா " "சொல்லுங்க ரோமியோ ஒஸ்கா " "என்னென்டா பப்பா அல்பா ..ஆமி வன்-வன் இன் (11 இன் ) லைனை உடைச்சு உங்களுக்கு கிட்டே வந்திட்டான். புது பெடியள் விட்டிட்டு ஓடிட்டாங்கள்..உங்களுக்கு முப்பது மீற்றருக்குள்ளே அவன் வந்திட்டான் அண்ணே ..நீங்கள் உங்கட ஆட்களை பின்னுக்கு எடுக்கிறது தான் நல்லது அண்ணே " மூச்சிரைக்க சொல்லி முடித்தான். "தம்பி..இப்போ அது சாத்தியம் இல்லை..நிறைய ஆட்கள்.. வில்லுகள் (ஆயுதங்கள்) பொதிக்குள்ளே பின்னுக்கு எடுக்கிறது என்றால் இழப்புகள் வரும். அதை தவிர இந்த இடத்துக்கு சாமி கும்பிட (தலைவர்) வரபோறார் தெரியும் தானே . எதிரியை பின்னுக்கு தள்ள முடியாதோ ?" "இல்லை அண்ணே அவனின் 8 (8 man team ) வெளிகிட்டான்கள் அண்ணே. எங்கட உடுப்போட வாறாங்கள்.. கிட்டே வந்திட்டாங்கள் என்றால் கலைகிறது கஷ்டம் அண்ணே ..எண்ட ஆக்கள் எல்லாம் சங்கர் (இறந்திட்டார்கள் )..விளங்குதா அண்ணே .." "சரி பொறுடாப்பா...கொஞ்ச அரிசி (ஆட்கள்) அனுப்புறேன். எண்ட மூட்டையிலே (அணியிலே) இருந்து .." "சரி அண்ணே விரைவா ..கோயில் முருகன் மூலை (வடகிழக்கு) " "நன்றி அவுட்' அந்த அலைபேசி அணைப்பை துண்டித்த அந்த மூத்த தலைவர். தம்பிமார் கேட்டு கொண்டு தானே இருந்தனீங்கள் ..இப்ப்போ உங்களிலே ஒரு அணி எதிரியின் முன்னேற்றத்தை முறியடிக்க போகவேணும் என்று சொல்லி முடிக்க முன்னர் அகிலன் தலைமையில் ஒரு அணி எழுந்து நின்றது. அண்ணே நாங்கள் போறம் அண்ணே.. அண்ணே ..நாங்கள் உங்கள் கூடவும் தலைவர்கூடவும் கடைசி மட்டும் இருக்க வேண்டும் என்று தான் விரும்பினான்கள். இப்போ இந்த சண்டையில் காயப்பட்டால் அந்த அணியில் நாங்கள் இருக்க முடியாது என்றும் எங்களுக்கு தெரியும். ஆனால் இவ்வளவு பேரும் உங்களையும் தலைவரையும் காப்பாத்தி எங்கட விடுதலைப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவான்கள் என்ற நம்பிக்கையில் நானும் என்ர அணியும் போறோம் அண்ணே ... அந்த மூத்த தலைவர் தலையசைக்க .பதினெட்டு பேர் கொண்ட அகிலனின் அணி களமுனைக்கு விரைந்தது. பொதி செய்யப்பட்ட ஆயுதங்களை பொதியிலிருந்து எடுத்தவாறு ஓடிபோனார்கள் அந்த மானமாவீரர்கள் தங்கள் ஆசை துறந்து... தலைவன் உயிர் காக்க. அந்த மூத்த தலைவர் சண்டைப்பொறுப்பை தளபதி அன்பு மாஸ்டரிடம் கொடுத்தார். அன்பு மாஸ்ரர் அலைபேசியில் சண்டையை நெறிப்படுத்தினார். "அல்பா ரோமியோ ..சண்டை நெருக்கமாக நடக்குது எங்களிலே மூன்று சங்கர் ..அவன் வேகமாக வாறான்..வாழைப்பொத்திகள் (ஆர்பிஜி) வைச்சு அடிக்கிறான்.இன்னும் கொஞ்ச நேரம் தான் நிண்டுபிடிக்கலாம்..வேகமாக முடிக்க சொல்லுங்க அண்ணே" "அல்பா கிலோ ..அப்படி இல்லை உங்களுக்கு என்ன வேணும் என்று சொல்லுங்க ..தரலாம் அவனை ஒரு அடி கூட முன்னுக்கு நகரவிடக்கூடாது..பிறகு எல்லாம் பிழைச்சு போகும் தெரியும் தானே .." "அல்பா ரோமியோ ..ஒரு கிபிர் (கரும்புலி ) வந்தால் ..நிலைமையை கொஞ்சம் சமாளிக்கலாம் .." "சரி கொஞ்சம் பொறுங்கள் கிபிருக்கு ஏற்பாடு செய்கிறேன்".. அன்பு மாஸ்டர் அந்த மூத்த தலைவரை நோக்கி திரும்ப. "எனக்கு விளங்குதடாப்பா..ஆனால் எல்லா கரும்புலிகளையும் பின்னுக்கு நகர்த்தியாச்சே ..சக்கை மட்டும் தான் இங்கே இருக்கு ..ஆட்கள் பின்னாலிருந்து வர ஒரு இருபது முப்பது நிமிஷம் என்றாலும் ஆகும் (மக்கள் நெரிசல் அப்படி)..என்ன செய்கிறது என்று தாண்டாப்பா யோசிக்கிறேன். "என்றார் அந்த மூத்த தலைவர். அப்போது யாரும் எதிர்பாராதவகையில் ஒரு குரல் .. நான் போகிறேன் அண்ணே .. ராணிமைந்தன் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றான் . (தொடரும்) பாகம் பதினெட்டு இங்கே அழுத்துங்கள்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் பதினாறு எனக்கு அன்றைக்கு மனம் நிறைய மகிழ்ச்சியாக இருந்தது. என்னை ஒரு முக்கியமான பயிற்சிக்கு அழைத்திருந்தது தான் என் மகிழ்ச்சிக்கு காரணம். அது எவ்வளவு கடினமான பயிற்சி என்று எனக்கு தெரிந்திருந்தும், என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு ஊடறுப்பு தாக்குதலை நிகழ்த்தி, காட்டுக்குள் அடுத்த கட்ட போராளிகளை நகர்த்துவதற்கான திட்டம் தீட்டபட்டிருந்தது. அதற்கான விசுவாசமான போராளிகளின் அணியில் என்னையும் தேர்ந்தெடுத்திருந்தார்கள். தளபதி அன்பு மாஸ்டர் தலைமையில் எங்களுக்கு பயிற்சி வழங்கபட்டது. காட்டுக்குள் சென்று, அடுத்தகட்ட போராட்டத்துக்கு தேவையான ஆயத்தங்களை தொடங்குவதற்கான ஏற்பாடுகளுக்கான பயிற்சி.அந்த கால அவகாசத்துக்கு தேவையான பொருட்களையும் முதுகிலே சுமந்து செல்வதற்கான பயிற்சி. கிட்டதட்ட அறுபது கிலோமீட்டர், முதுகிலே ஐம்பது கிலோ பையுடன் நடைபயிற்சி. உறவுகளே ....என்ன நீங்கள் வியப்பில் வாயை பிளந்து நிற்பது எனக்கு தெரிகிறது.காரணம் நிச்சயமாக பயிற்சி கடினம் சம்பந்தபட்டதாக இருக்காது. இராணுவம் மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம் பிடிச்சு இரட்டைவாய்காலில் வந்து நிற்கிறான், இவர்களிடம் எங்கே அறுபது கிலோமீற்றர் நடக்கிறதுக்கு இடம் இருக்கு என்பது தானே அந்த வியப்புக்கு காரணம். உண்மைதான் உறவுகளே, எங்களிடம் வட்டுவாகல் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை மட்டும் தான் இருந்தது, நீளமாக பார்த்தால் கூட எங்களிடம் ஒரு ஆறு கிலோமீற்றர் தான் வரும்.ஆனாலும் நாங்கள் நடந்தோம். ஆமாம் ஒரு மூன்று கிலோமீற்றர் கடற்கரை பகுதியில் இருபது முறை நடந்தோம். கடற்கரை மணலில் கால் புதைய, புதைய , சிங்களவனின் கொடிய பல் குழல் எறிகணைகளுக்கும், கடலில் இருந்து ஏவும் பிரங்கிகள், நீண்ட தூர சன்னங்களுக்கும் மத்தியிலும், குனிந்த படி கூட நடந்தோம். எங்கள் முதுகில் இருந்தது ஐம்பது கிலோ பாரம் மட்டும் இல்லை எங்கள் மக்களின் விடிவு என்று நினைத்து சுமந்தோம். சொல்லுங்கள் உறவுகளே. அன்றைய நிலையில் நீங்கள் இருந்திருந்தால் கூட.. உங்களிடம், எங்கள் மக்களின் அடுத்த கட்ட போராட்டம், எங்கள் மக்களின் விடிவு, ஒப்படைக்க பட்டிருந்தால் ஐம்பது கிலோ என்ன.. ஐநூறு கிலோ என்றாலும் தூக்கும் மனநிலை உங்களுக்கு வராதா..?? ஆனால் என்ன, நல்ல சாப்பாடே கிடைப்பது கடினம், நல்ல சாப்பாடு என்ன.. சாப்பாடே இரண்டு நாளுக்கு ஒரு முறை தான். இதில் நடைபயிற்சியின் போது தண்ணீர் கூட அருந்த தடை. ஒரு போத்தல் தண்ணீருடன் மட்டுமே இவ்வளவு பயிற்சியையும் முடிக்க வேண்டும். காட்டிலே தண்ணீர் கிடைக்காது என்று காரணம் வேறு சொல்லுவார்கள். நடந்து முடிய, கடின ஆயுத பயிற்சி. அந்த தன்னியக்க கடின ஆயுதங்களை தூக்கவே உடம்பில் தெம்பிருக்காது, ஆனால் மனசில் இருக்கும் தெம்பால் தூக்குவோம். சுடும்போது வரும் பின்னுதைப்பை தாங்க நெஞ்சிலே பலம் இல்லைவிட்டாலும், உறுதி இருந்தது. நிச்சயம் வெல்லுவோம் உறவுகளே. கடந்த இரண்டு நாள் பயிற்சியின் போதும் எதுவுமே சாப்பிடவில்லை. அது கட்டாயம் இல்லை.. ஆனால் உண்மையில் சாப்பாடு இல்லை. இரண்டு நாளைக்கு பிறகு இன்றைக்கு பின்னேரம் தான், எங்களின் முகங்களில் ஒரு சிறு புன்னகை. ஆமாம் எங்களுக்கு சாப்பாட்டு பொதி ஒன்றை தந்திருந்தார்கள்.மூன்று பேருக்கு ஒரு பொதி. அது தான் எங்களின் புன்னகைக்கான காரணம். அடுத்த நாட்களை பயிற்சியுடன் தாக்குப்பிடிக்க அந்த உணவு கட்டாயம் தேவை. எங்கே பயிற்சியில் ஏலாமல் விழுந்துவிட்டோம் என்றால் எங்களை அணியில் சேர்க்கமாடார்களோ என்ற பயம் வேற. எங்கள் மக்களுக்காக, அவர்கள் விடிவு பெறும் வரை போராட வேண்டும். கடவுளே அதற்கான மனத்துணிவு என்னிடம் இருக்கு உடல் பலத்தை மட்டும் கொடு என்று ஒவ்வொரு நாளும் நான் வேண்டாத தெய்வமில்லை. அதன் பலன் தானோ என்னவோ இன்றைய சாப்பாட்டு பொதி. அதற்குள் என்ன இருக்கு என்று அவிழ்த்து பார்க்கும் ஆசை எல்லாருக்கும் இருந்தாலும், குளித்து விட்டு வந்து ஆறுதலாக ரசித்து சாப்பிடுவோம் என்று அந்த எண்ணத்தை கைவிட்டோம். என்ன உறவுகளே..என்னடா இவன் ஒரு சாப்பாட்டு பொதிக்கு இவ்வளவு அலைகிறானே என்று யோசிக்காதீங்கள். அந்த நேரத்தில் அதன் பெறுமதி உங்களுக்கு என்ன என்று புரியாது... குளித்துவிட்டு வந்து, மூவரும் சுற்றிவர அமர்ந்து அந்த பொதியை பிரித்தோம். பயறும், பருப்பும் கலந்த சோறு. காலையிலையே சுட சுட கட்டியிருப்பார்கள் போலும், கொஞ்சம் குழைந்து போய் இருந்தது. ஒரு ஆறு சிறங்கை தான் வரும்.ஆளுக்கு இரண்டு சிறங்கை என்று பங்கு போட்டு கொண்டோம். ஒரு சிறங்கை சோற்றை கையிலே எடுத்து வாயிலே வைக்க போகும் போது.. தம்பீ .. என்று ஒரு குரல். எங்களை கட்டி போட்டது. அந்த கடற்கரை பொட்டல் வெளியில், சோற்றை வாயிலே வைக்கவிடாமல் எங்களை, அந்த குரல் நோக்கி திரும்ப வைத்தது. அங்கே ஒரு நடுத்தர வயது அம்மா, கையிலே ஒரு குழந்தையுடன்..அந்த அம்மாவின் சேலை தலைப்பை பிடித்தபடி இன்னொரு குழந்தை. எலும்புகளால் மட்டுமேயான குழந்தைகள். அவர்களின் உடம்பில் தோல் எங்கே இருக்கு என்று ஒரு ஆராச்சியே நடத்தலாம். அந்த அளவுக்கு ஒடுங்கி போய் இருந்தார்கள். வயிறு பெருத்திருந்தது. தலை ஒடுங்கி இருந்தது.வாய், மூக்கு, கண்கள் எல்லாம் இலையான்கள் மொய்த்துகொண்டிருந்தன. கண்களில் ஒரு பசி ஏக்கம் அப்படியே தெரிந்தன. வறுமையான ஆபிரிக்க நாட்டு குழந்தைகளை படங்களாக பத்திரிகைகளில் பார்த்த ஞாபகம். இன்று எந்த மக்களுக்காக நாங்கள் போராடுகிறமோ அந்த மக்களே..அந்த மக்களின் குழந்தைகளே , ஒரு தமிழ் குழந்தை எங்கள் கண்முன்னாலே.. நாங்கள் எங்கள் நெஞ்சுக்குள் படும் வேதனை கொஞ்சமாவது உங்களுக்கு புரிகிறதா உறவுகளே.. சேலையை பிடித்து கொண்டிருந்த குழந்தை தன்னாலான மட்டும் கைகளால் தன்னில் மொய்த்து கொண்டிருந்த இலையான்களை கலைத்து கொண்டிருந்தான். அந்த அம்மாவின் கைகளில் இருந்த குழந்தையோ எதுவுமே செய்யாமல் பேசாமல் இருந்தது. தம்பீ..மீண்டும் அதே குரல் எங்களை சுய நினைவுக்கு கொண்டுவந்தது. தம்பி சாப்பிட்டு ஆறு நாளாச்சு. எனக்கு வேண்டாம் தம்பி.. இந்த குழந்தைக்காவது கொஞ்ச சோறு தருவீங்களா.? தம்பி மாட்டேன் என்று மட்டும் சொல்லிபோடாதேங்கோ..உங்கட காலிலே விழுந்து வேணும் என்றாலும் பிச்சையாக கேட்கிறேன்.. கொஞ்ச சோறு தாறீங்களா..? சொல்லுங்கள் உறவுகளே..இப்படி உங்களை கேட்டால் அந்த மனசின் வலி ஜென்மத்துக்கும் ஆறுமா ..? எந்த நெஞ்சையும் உருக்கும் அந்த பிச்சை குரலுக்கு உருகாமல் இருக்க நாங்கள் ஒன்று கல் ஜென்மங்கள் இல்லை தானே.. எங்கள் கைகளில் இருந்த உணவு எங்களை அறியாமலே, யாரையும் கேட்காமலே அந்த அம்மாவின் கைகளுக்கு மாறியது. அவசரமாக கைகளில் இருந்த குழந்தையை அப்பாலே கிடத்திவிட்டு, சேலையை பிடித்து கொண்டிருந்த குழந்தைக்கு, கைகளால் சோற்றை குழைத்து தீத்த தொடங்கினாள் அந்த அம்மா.. தீத்தியபடியே..தம்பி நீங்கள் நல்லா இருக்கணும் தம்பி. எனக்கு தெரியும் நீங்கள் இந்த வெய்யிலில் முதுகில் பாரங்களுடன் ஓடி திரிந்ததை நான் பார்த்தேன். உங்களுக்கு பசிக்கும் என்று நல்லா தெரியும். உடம்பிலே தெம்பிருந்தால் தான் நாளைக்கு சண்டைக்கு போகலாம் என்றும் எனக்கு தெரியும். என்ன செய்கிறது தம்பி. பசி...... அது எங்களையும் மீறி உங்களை கேட்கவைத்துவிட்டது. தம்பி. நீங்கள் வென்று தருவீங்கள் என்று தான் நாச்சிகுடாவில் இருந்து உங்கள் பின்னால் வந்தோம். இப்படி தான் எங்கட வாழ்க்கை முடியபோகுது என்றால் நாங்கள் குடும்பமாகவே பூச்சி மருந்தை சாப்பிட்டு அங்கேயே செத்திருக்கலாம் தம்பி. இப்படி புருசனையும் பறிகொடுத்திட்டு, ஒரு பிடி சோத்துக்காக பிச்சை எடுகிறதை விட அது எவ்வளவோ மேல் தம்பி. உண்மையான வசனங்கள்.. நெஞ்சை சுட்டன..உங்களுக்கு சுடவில்லையா உறவுகளே.. "அம்மா..நீயும் கொஞ்சம் சாப்பிடன்..." அந்த பிஞ்சு குழந்தை கைகளிலே கொஞ்ச சோற்றை எடுத்து அம்மாவின் வாய்க்கு கிட்டே நீட்டியது. நெஞ்சையே கசக்கி பிழிந்தது. அந்த பசியிலும் அந்த பிள்ளையின் தாய் பாசம் உலகத்திலே எதுக்கும் ஈடு இணை இல்லை. நாங்கள் அவர்களையே பார்த்து கொண்டிருந்தோம். எங்களை அறியாமலே எங்கள் கண்கள் குளமாகின. போராளிகள் அழ கூடாது என்று எங்கள் தளபதி அடிக்கடி சொல்லுவார். இதை பார்த்தும் நாங்கள் அழவில்லை என்றால் நாங்கள் மனுஷரே இல்லை.. "அம்மா .." எங்களின் குரலுக்கு நிமிர்ந்து பார்த்தார் அந்த அம்மா.. என்ன தம்பி உங்களுக்கு கொஞ்சம் வேணுமா..மிச்சம் வைக்கட்டுமா ..தாய்மையின் பாசம் கொப்பளிக்க கேட்டார்... "இல்லை அம்மா அந்த மற்ற குழந்தைக்கும் கொஞ்சம் கொடுக்கலாமே .." நா தழதழக்க கேட்டோம். அவர் சொன்ன பதில் எங்களை ஆயிரம் சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. எங்கள் மக்களுக்கு இப்படி ஒரு நிலை வர நாங்கள் என்ன செய்தோம். எங்கள் மக்கள் எங்கள் மேல் இவ்வளவு பாசம் வைக்க நாங்கள் என்ன செய்தோம். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தாலும் இந்த மக்களுக்கு மத்தியில் பிறந்தது இந்த மக்களுக்காகேவே போராடணும் என்று தோணிச்சு. உங்களுக்கும் தோணும் உறவுகளே ..ஏன் என்றால் நீங்களும் மனுசர் தான் உறவுகளே.. அந்த அம்மா சொன்ன பதில் .. நான் அந்த பிள்ளையை காட்டி பிச்சை எடுக்கவில்லை தம்பி. ஏன் என்றால் அது நான் அந்த பிள்ளைக்கு செய்கிற துரோகம். காரணம் இன்றைக்கு காலையில் தான் அந்த பிள்ளை பசி தாங்காமல் செத்து போச்சு தம்பி.. (தொடரும்) பாகம் பதினேழு இங்கே அழுத்துங்கள்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
நீங்கள் தவறாக ஒன்றும் கேட்கவில்லையே. இதில் மன்னிக்க எதுவும் இல்லை என்று நினைக்கிறன்.
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
சில கேள்விகளுக்கு சில வேளைகளில் பதிலளிக்க முடியாது. இன்றைய நிலையில் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் பதினைந்து மக்கள் அலையலையாக சென்று கொண்டிருந்தார்கள். தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்தபடியும், வயதானவர்கள் காயமடைந்தவர்களை, துணிகளில் கட்டி தூக்கியபடியும், ஒடுங்கிய பாதையூடாகவும், கடல்நீரேரியூடகவும் மக்கள் ராணுவத்திடம் சென்ற வண்ணம் இருந்தார்கள். நான் கடவுளை வேண்டிக்கொண்டேன். "கடவுளே என் அம்மா அப்பா, என் குடும்பம் இப்படி இராணுவத்திடம் போக கூடாது" என்று. மனசை எதுவோ பிசைந்தது. எங்களின் இயலாமை அதில் தெளிவாக தெரிந்தது. கொள்கைக்கும் உயிராசைக்கும் இடையில் போட்டி நடந்தது. மானத்துக்கும் மனசுக்கும் போராட்டம் நடந்தது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் மனசில், கொண்ட கொள்கையை விட, தமிழனின் மானத்தை விட, உயிர் மேல் இருந்த ஆசை பெருசாகபட்டது. அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. நாங்கள் யாருக்காக போரடினமோ அந்த மக்கள் கூட்டத்தில் இப்படியும் இருந்திருக்கிறார்கள் என்று நினைத்து என்னை அதிர வைத்த சம்பவம் அது. ஆமாம். மக்களை போகவேண்டாம் என்று கெஞ்சிக்கொண்டிருந்த இரண்டு இளம் பெண்போராளிகளை ஒரு மக்கள் (??) கும்பல், கதற கதற தூக்கி சென்று ராணுவத்திடம் ஒப்படைத்தது. அந்த கொலைவெறி பிடித்த ராணுவ அதிகாரி, அந்த மக்களுக்கு முன்னாலேயே இரு பெண் போராளிகளையும் தலையில் சுட்டு கொன்றான். மக்களுக்காக தங்கள் உயிரையும் மதிக்காது போராடிய அந்த போராளிகள், தங்கள் சொந்த மக்களாலேயே தூக்கி சென்று கொடுத்த போதே பாதி உயிரை விட்டிருப்பார்கள். அந்த துப்பாக்கி சன்னங்கள் அவர்களின் மீதி உயிரையும் எடுத்து, எங்கள் தாய் மண்ணில், ஈரமும் உப்பும் நிறைந்த அந்த வெளியில் அவர்கள் உடலை சாய்த்தது. தூக்கி சென்று கொடுத்த மக்கள் கும்பலுக்கு ஒரு ஆத்ம திருப்தி. ஒரு பழிக்கு பழி வாங்கிய மகிழ்ச்சி. யாருடைய கோபத்தை வேறு ஒருவரிடம் காட்டிய சந்தோசம். ராணுவத்திடம் பாராட்டு வாங்கி மென்பானம் வாங்கி குடித்தார்கள். மக்களுக்காக போராடியதை தவிர, எதுவுமே அறியாத அந்த இளம் பெண் போராளிகளின் உடல்கள், உள்ளே வந்த மக்களின் பார்வைக்காக போடப்பட்டிருந்தது. நெஞ்சையே கொதிக்க வைக்கும் இந்த சம்பத்தை சிலர் மனம் பதைபதைக்க, சிலர் இவங்களுக்கு வேண்டும் என்று சொல்ல, சிலர் கண்டும் காணததுமாக போக, சிலர் வழி தெரியாமல் வேறு பக்கம் முகத்தை திருப்பி கொண்டு போனார்கள். அந்த மக்கள் கூட்டத்தோடு கூட்டமாக எதிரியிடம் சரணடைந்த போராளிகள் கூட எதுவுமே நடக்காதது போல வாழாவிருந்தார்கள். சொல்லுங்கள் உறவுகளே..இப்படி உங்கள் சகோதரிக்கு நடந்தால் என்ன செய்வீர்கள்...? உங்களுகாக தங்கள் ஆசைகள், உறவுகளை விட்டுவிட்டு போராட வந்ததுக்கு இது தான் கைமாறா ..?? அந்த நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்..மனம் திறந்து சொல்லுங்கள். மக்களிடம் கொக்கரித்து கொண்டிருந்த சிங்கள வெறியன்களுக்கு பாடம் படிப்பிக்க விடுதலை புலிகளின் கரும்புலி அணி தீர்மானித்தது. சாதாரண பெண்கள் போல சட்டை அணிந்து, உடுப்பு பைகளுடன் இரண்டு பெண் கரும்புலிகள் ராணுவத்திடம் சரணடைய சென்றனர். தங்களை முன்னாள் போராளிகள் என்று இராணுவத்திடம் அறிமுகப்படுத்த அவர்களை தனியே கூட்டிகொண்டு, ராணுவ சகாக்கள் மத்தியில் விடும்போது, அந்த வீர தமிழிச்சிகள், தங்களை வெடிக்க வைத்து சிங்களவனுக்கு மானம் என்றால் என்ன, கொள்கை என்றால் என்ன என்று காட்டினார்கள். அந்த இடத்திலேயே இருபதுக்கும் மேற்பட்ட சிங்கள இனவெறியன்களும் சிதறிப்போய் இருந்தார்கள்.அந்த இரு இளம் பெண் போராளிகளை கதற கதற சுட்ட அதிகாரிகள் உட்பட. கொலைவெறி கொண்ட சிங்கள ராணுவம் எழுந்தமானதுக்கு மக்களை நோக்கி சுட தொடங்கியது. இனி தப்பி விட்டோம், இனி சாகமாட்டோம் என்று நினைத்த நாற்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கே உயிரை விட்டார்கள். விடுதலைப்போராட்டம் என்பது தனியே உயிர் சம்பந்தபட்ட விடயம் அல்ல. அது மானம் கொள்கை சம்பந்தபட்டது. சிங்களத்தின் தலைப்பு செய்தி : - மக்களோடு மக்களாக வந்து புலிகள், தப்பியோடும் மக்களை தாக்கியதில் நாற்பது பொதுமக்கள் பலி. எங்களை ஏற்றி செல்லவந்த படகுகளில் ஏறி நாங்கள் வலைஞர்மடத்தை அடைந்தபோது மணி பன்னிரண்டை தாண்டி இருந்தது. அங்கும் மக்கள் பதட்டமாக கைகளில் கிடைத்த பொருட்களை எடுத்து கொண்டு கடற்கரை வழியாக முள்ளிவாக்கால் நோக்கி பயணித்து கொண்டிருந்தார்கள். இராணுவத்தின் செல்களும், துப்பாக்கியில் இருந்து புறப்பட்டு வந்த சன்னங்களும் மக்கள் உயிர்களை குடித்து கொண்டிருந்தது. என் தோளில் துப்பாக்கியை சுமந்தபடி, வலைஞர்மட வைத்தியாலைக்கு முன்னால் இருந்த மண் பாதை வழியாக, இராணுவம் வலைஞர்மடத்தை நோக்கி முன்னேறுவதை தடுக்க பயணித்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு கர்ப்பிணிதாயை ஏற்றி கொண்டு, முகப்பு ஒளியை பாய்ச்சிய வண்ணம், ஒலி எழுப்பியபடி ஒரு நடுத்தர வயது கணவன், பிரசவ வலிதாங்காத தன் மனைவியை உந்துருளியில் ஏற்றிய வண்ணம் கத்தி வழி கேட்டபடி வந்து கொண்டிருந்தான். எங்கிருந்தோ வந்த சன்னம் ஒன்று அவன் தாடையை கிழித்து கொண்டு போனது. மனைவியுடன் வீதியில் விழுந்தான். வாய்க்குள் இருந்து தண்ணீர் குழாயில் வருவது போல குருதி கொப்பளித்து பாய்ந்து கொண்டிருந்தது. மூக்கின் கீழ்பகுதி தாடையுடன் இல்லை. ஓஒ என்று கத்தி அலறிய அந்த கர்ப்பிணி மனைவி, தன் பிரசவ வலியால் ஒரு கையை தன் வயிற்றிலும், மறுகையை தன் கணவனின் வாயிலும் வைத்தபடி கத்தி அழுதாள். "அண்ணே யாராவது ஓடி வாங்கோ, ஆராவது வந்து காப்பாத்துங்கோ" என்று தன் பிரசவ வலிக்கும் மத்தியில் பலமாக கத்தினாள். தொடர்ந்து வந்து கொண்டிருந்த சன்னகளுக்கு மத்தியில், யாருமே அவர்களுக்கு கிட்டே போகவில்லை. நான் அந்த இடத்துக்கு விரைந்தேன். வாய் பிளந்து குருதி வருவதால் என்னால் கட்டுப்போட முடியவில்லை. இன்னும் ஒரு மூன்னூறு மீட்டரில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு போக வேண்டும். அவரது உந்துருளியை நிமிர்த்தி அவரை உட்கார வைத்து நான் முன்னால் ஏறி கொண்டேன். இப்போ இன்னொருவர் பின்னால் இருந்து அவரை பிடிக்கவேண்டும். அந்த கர்ப்பிணி தாயால் இரண்டு பக்கமும் காலை போட்டு இருக்க முடியாது. அருகில் இருந்தவர்களை கெஞ்சினேன். யாருமே உதவிக்கு வரவில்லை. எனக்கு ஒரு கயிறு அல்லது துணி வேண்டும் என்று கேட்டேன். அந்த கர்ப்பிணித்தாய் ஓடி சென்று, ஒரு தரப்பாள் கூடாரத்தில் இருந்த சேலையை உருவி வந்து என்னுடன் தன் கணவரை சேர்த்து கட்டினாள். நான் வைத்தியசாலைக்கு அவரை கொண்டு வர அந்த பெண் கத்தியபடியே பின்னால் ஓடி வந்தாள். அவரை கொண்டு போய் நான் வைத்தியரிடம் ஒப்படைத்த போது, அந்த கணவனின் உயிர் பிரிந்திருந்தது. அந்த கர்ப்பிணி மனைவியை எதிர்கொள்ள மன தைரியமற்ற நான் ஒரு ஒரமாக வெளியேறினேன். என் உடலெங்கும் அப்பி இருந்த அவரின் இரத்ததை, ஒரு தொகுதி இலையான்கள் மொய்த்து கொண்டிருந்தன. (தொடரும்) பாகம் பதினாறு இங்கே அழுத்துங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு என் இனிய உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க்கை நீங்கள் விரும்பியபடியே பயணிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் பதினான்கு அந்த கடல்நீரேரியின் மறுபுறத்தில் அமைக்கபட்டிருந்த கிடுகு வேலியையே பார்த்து கொண்டிருந்தேன். புதுமாத்தளன் வைத்தியசாலையில் இருந்தது ஒரு முந்நூறு மீற்றர் தொலைவில்.. ஒரு இடிந்த கல் வீட்டுக்கு நடுவில்.. பச்சை குழைகளால் உருமறைப்பு செய்தபடி எங்கள் நிலை இருந்தது. ஆனந்தபுரம் வரலாற்று சமருக்கு பின்னர், எங்கள் தானை தளபதிகளை எதிர்கொள்ள திராணியற்று இரசாயன ஆயுதங்கள் கொண்டு அழித்து, கடல் நீரேரியின் மறுபுறத்தை கைப்பற்றியிருந்தான் எதிரி. அங்கிருந்து கொண்டு மக்கள் வாழிடங்களை நோக்கி சரமாரியான எறிகணை,குறிசூட்டு,விமான தாக்குதல்களை நடத்தி கொண்டிருந்தான். கடல்நீரேரியை கடக்க விடாமல் காக்கும் பொறுப்பு எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. மருத்துவ ஓய்வு காலபகுதியில் வழங்கபட்ட குறிசூட்டு பயிற்சியின் பின்னர், ஒரு குறிசூட்டு (சினைப்பர்) ஆயுதத்துடன் நான் காத்திருந்தேன் எதிரின் வரவுக்காக. ஒவ்வொரு நாள் அதிகாலை வேளையிலும் ஒரு இருபது முப்பது பொதுமக்கள் நீரேரியை கடந்து இராணுவத்திடம் செல்வது வழக்கமாகிவிட்டது. எனக்கு அதை தடுத்து நிறுத்த சொல்லி கட்டளை இருந்தாலும், அவர்களின் நிலையை பார்த்து நான் போக அனுமதிப்பதுண்டு. அங்கிருந்த எல்லா மக்களுக்கும் புலிகளும் அவர்களின் நடவடிக்கைகளும் பிடித்திருக்கவோ அல்லது புரிந்து கொண்டிருக்கவோ அவசியம் இல்லைதானே. அதைவிடவும் எவ்வளவோ மக்கள் புலிகளுக்காக தங்கள் உயிரையும் கொடுக்க இருக்கும்போது, ஒரு பத்திருபது மக்கள் இராணுவத்திடம் ஓடுகிறார்கள் என்றால், அவர்கள் எப்படிபட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எங்கட பக்கம் இருப்பதை விட இராணுவத்தின் பக்கம் இருப்பது தான் சிறந்தது என்று எண்ணி, அவர்களை நான் கண்டும் காணாமலும் ஓட விடுவதுண்டு. இரவிரவாக கழுத்தளவு தண்ணீரில் எங்கள் நிலை கடந்து எதிரியிடம் போன மக்களை விடியும் வரை தண்ணீரிலேயே நிறுத்தி வைத்திருப்பான் எதிரி. நன்றாக விடிந்தபின்னர் ஆண் பெண் பேதமின்றி அனைவரையும் அனைத்து ஆடைகளையும் களைந்து தான் தனது நிலைக்குள் எடுப்பான். இதெல்லாம் மக்கள் சொல்லி தான் கேள்விபடிருந்தேன். ஆனால் அன்று அதிகாலை என் குறிசூடு கருவியின் தொலைநோக்கியூடாக பார்த்த போது தான், எங்கள் மக்கள் எதிரியிடம் படும் அவலத்தை நேரடியாக கண்டேன். தந்தைக்கு முன்னால் வயது வந்த மகளின் உடையெல்லாம் களைந்து நிர்வாணமாக, கணவனுக்கு முன்னால் மனைவியின் உடைகளைந்து நிர்வாணமாக , எங்கள் மக்கள் எதிரியிடம் சரணடைவதை நேரிலே கண்டேன். கட்டிய கணவனுக்கு முன்னால் கூட உடை மாற்றாத இனத்தில் பிறந்து, கண்டவனுக்கு முன்னால் நிர்வாணமாக எங்கள் மக்கள் நிற்பதை பார்க்க எல்லாரையும் சுட்டு கொன்றுவிடலாம் என்று கூட தோணியது. எங்கே ஒரு இராணுவ வீரன் தலை காட்டி இருந்தாலும் என் ஆத்திரம் அவன் தலையில் தெரிந்திருக்கும். என்ன செய்வது எல்லாம் எங்கள் மக்கள் என்று, ஆயுதத்தை மடித்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டேன். இதை போய் எங்கள் மக்களிடம் சொன்னாலும் சிலர் நம்ப மாட்டார்கள். எங்களை இராணுவத்திடம் போகவிடாமல் தடுப்பதற்கான ஒரு யுக்தி என்றே சொல்லுவார்கள். வேண்டாம்..என் சகோதரியின் நிர்வாண உடலை பார்த்ததை ஊரெல்லாம் சொல்லி, அவளை மேலும் நிர்வாணமாக்க நான் விரும்பவில்லை. உயிரை விட மானம் தான் பெரிது என்று வாழ்ந்தவர்கள் எங்கட பக்கம் இருக்க , மானம் என்ன மானம் இண்டைக்கு வரும் நாளைக்கு போகும் என்று, உயிரை காக்க எதிரியின் பக்கம் போனவர்களை , தனது காமபசிக்கும், கூலி வேலைகளுக்கும் பயன்படுத்தினான் எதிரி. அன்றும் அப்படிதான்... பொக்கணையை அண்டிய நீரேரிபகுதியில்.. அதிகாலையில் பசியாலும், இரண்டு மூன்று நாள் இடைவிடாமல் கண்விழித்து காவல் இருந்ததாலும் சற்று கண்ணயர்ந்த போராளிகளின் நிலையை உளவு பார்த்து ஒரு மக்கள் கூட்டம் இராணுவத்திடம் சென்றடைந்தது. அத்துடன் முடிந்திருந்தால் பரவாயில்லை.ஒரு இராணுவ அணி அவர்களை வந்த பாதையை காட்டுவதற்காக கூட்டிவந்திருந்தது . பாதை காட்ட மறுத்த மக்களை சுட்டு அடிபணிய வைத்தது . வந்த எதிரி அணி அந்த நிலையில் கண்ணயர்ந்திருந்த போராளிகளை கழுத்தை வெட்டி கொன்றுவிட்டு, எங்கள் நிலைகளை ஊடறுத்து ஒரு பெரிய படை நடவடிக்கையை செய்தான். வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதியும், சாலை பொக்கணை மாத்தளன் பகுதியும் துண்டாடப்பட்டது. அம்பலவன் பொக்கணை ஊடக இராணுவம் கடற்கரை வரை சென்று மக்களை துண்டாடியது. தொடர்பு அறுபட்ட நிலையிலும் போராளிகள் தீரமாக போராடினார்கள். இராணுவம் இடைவிடாத செல் மழை பொழிந்தது. ஒரு கோர தாண்டவமாடியது. இராணுவம் வந்துவிட்டதை உணர்த்த மக்கள் புலிகளின் பகுதிக்கு ஓட முற்படுவதை தடுக்க இரசாயன ஆயுதங்கள், கொத்து குண்டுகள் கொண்டு மக்களை கொன்று குவித்தது ராணுவம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உயிரை விடிருந்தார்கள். தெருவெங்கும் பிணக்கோலங்கள். உடம்பில் பட்ட இரசாயன (பொஸ்பரஸ்) குண்டின் எரிவு தாங்காமல் கடலுக்கு ஓடி வந்து பாய்ந்தார்கள். முகங்கள் எரிந்த நிலையில் வழி தெரியாமல் பிஞ்சு குழந்தைகள், கடற்கரை மண்ணில் முகம் புதைச்சு தேய்த்தார்கள். எங்கும் மரண ஓலமும், புகை மூட்டங்களும், காணமல் போன தங்கள் உறவுகளின் பெயரை கூவி கத்தியபடி பித்து பிடித்தது போல மக்கள், அங்கும் இங்கும் அலைந்து ஓடினார்கள். நாங்களும் எங்கள் நிலையும் பிரதான எங்கள் தளத்திலிருந்து துண்டாடப்பட்டிருந்தது. தரைவழி தொடர்பறுந்த நிலையில் நாங்கள் மாத்தளன் துண்டுக்குள் மாட்டுபட்டிருந்தோம். எங்களுக்கான கட்டளைகள் தொடர்ந்து கிடைத்து கொண்டிருந்தது. தப்பிபோக வழி இல்லாமல் ராணுவத்திடம் சரணடையும் பொதுமக்களை தடுத்து நிறுத்தி நிலைமை சொல்லி, கடல் வழியாக அவர்களை முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அனுப்புமாறு பணிக்கபடிருந்தோம். சாரை சாரையாக ராணுவத்திடம் சென்று கொண்டிருந்த மக்களிடம் ஒரு சொற்ப போராளிகளுடன் நானும் கெஞ்சி கொண்டிருந்தேன். "அண்ணே நில்லுங்கோ போகாதேங்கோ.." "அக்கா.. அக்கா.. தயவு செய்து நில்லுங்கோ ஆமியிடம் போகாதேங்கோ..." "பொறுமையா இருங்கள்..இன்னும் கொஞ்ச நாளில் எங்களுக்கு விடிவு கிடைச்சிடும்.." என்று ஆண் பெண் போராளிகள் பேதமின்றி மக்களின் கால்களை பிடித்து கெஞ்சி கொண்டிருந்தார்கள். அனைவரும் முடிவு செய்து கைகோர்த்து மக்களை மறித்தோம். எங்களை தள்ளி விழுத்தி எங்களுக்கு மேலால் மக்கள் ஏறி சென்றார்கள். நான் ஒரு ஐயாவை மறித்தேன். இரண்டு குழந்தைகளை தூக்கி கொண்டு வந்திருந்தார். பசியால் மெலிந்து எலும்புகள் தெரிந்த இரண்டு குழந்தைகள்.. தலை எல்லாம் நரைத்து எலும்பு கூடாக அந்த ஐயா.. "ஐயா தயவு செய்து போகாதீங்கள்.." "நாங்கள் எல்லாம் ஒற்றுமையாக புலிகளின் பக்கம் நின்றால் தான் உலகம் எங்களுக்கு ஒரு தீர்வை தரும்" "தம்பி என்னடா விசர் கதை கதைக்கிறாய்..இன்னும் இரண்டு நாள் இங்கே இருந்தால் நாங்கள் சாப்பாடு இல்லாமலே செத்து போயிடுவம், அதுக்கு பிறகு உங்கட தீர்வை கொண்டே என்ன செய்ய போறீங்கள்" "அப்படி இல்லை ஐயா, உங்களுக்காக தானே நாங்கள் வீட்டை எல்லாம் விட்டிட்டு போராட வந்தனாங்கள், நீங்கள் போய்விட்டால் இவ்வளவும் தான் மக்கள் என்று, எங்களோட இருக்கிற மக்கள் எல்லாரையும் புலி என்று அழிச்சிடுவான், இது நீங்கள் மிச்ச மக்களுக்கு செய்கிற துரோகம் இல்லையா" "தம்பி எனக்கு துரோகமா இல்லையா என்று வாதிட கூட தெம்பு இல்லை. இந்த பிள்ளைகளின்ட அம்மா, அப்பா எல்லாரும் செத்து போட்டினம், என்ர மனுசி கூட நேற்று தான் செல்லடியிலே செத்தவ..செல்லுக்கு கூட தாக்கு பிடிக்கலாம்.. சாப்பிடாமல் பசிக்கு தாக்குபிடிக்க முடியலை தம்பி" "தம்பி எனக்கு நல்லா தெரியும்.நீங்கள் எங்களுக்காக தான் போராடுறீங்கள். சிங்களவன் கெட்டவன் என்றும் தெரியும். ஆனால் இப்போ பசிக்கு, உயிரை காப்பாத்த வேற வழி தெரியலை தம்பி." "தம்பி எனக்கும் தமிழீழம் வேண்டும். நீங்கள் போராடி வெல்ல வேண்டும். நான் கடவுளை ஒவ்வொருநாளும் கும்பிடுறேன். நீங்கள் நாளைக்கு ஆமிக்கு ஓடி எங்கள் வீட்டுக்கு வந்தால் ஒளிச்சு வைச்சு சாப்பாடு குடுக்கிறேன். எனக்கு இந்த மண் மீது இப்பவும் பற்று இருக்கு.. என்னை போக விடு தம்பி. மூன்று உயிரை காப்பாத்தின புண்ணியமாவது உனக்கு கிடைக்கும்" என்று என் காலில் விழுந்து அழுதார். சொல்லுங்கள் உறவுகளே..இராணுவத்திடம் ஓடிய மக்கள் எல்லாரும் எங்களை வெறுத்த மக்களா..? எங்களை வேண்டாம் என்று ஓடிய மக்களா..?? எங்களை உயிராய் நேசிச்ச மக்கள் தான்..பசியாலும் பட்டினியாலும் சிங்கள் கொலைவெறி அரக்கனின் கோர தாண்டவத்தாலும் உயிரை காப்பாற்ற தான் எதிரியிடம் ஓடுகிறார்கள் என்று புரிந்துகொண்டேன். அவர்கள் எதிரியிடம் விரும்பி ஓடனும் என்றால் மன்னாரில் சண்டை தொடங்கும்போதே ஓடி இருப்பார்களே. இவ்வளவு காலம் தங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு எங்களுடனே வரவேண்டிய தேவை என்ன..?? "ஐயா ..எழும்புங்கோ ..நீங்க போயிற்று வாங்கோ..நாங்கள் நிச்சயம் வெல்லுவோம் அப்போ திரும்பி வாங்கோ .." அவர் கண்ணில் மட்டுமல்ல என் கண்ணிலிருந்தும் ஒரு துளி கண்ணீர் அந்த மண்ணை நனைத்தது.. (தொடரும்) பாகம் பதினைந்து இங்கே அழுத்துங்கள்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் பதின்மூன்று அம்பலவன்-பொக்கணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பக்கத்தில் தான் எங்களின் மருத்துவ முகாம். நான் அந்த முகாமுக்கு வந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. இராணுவ முன்னேற்றமும், எங்கள் தோழர்களின் இழப்பும், மக்களின் தொடர்ச்சியான இடபெயர்வுகளும் செய்திகளாக காதை அடையும்போதும், காயபட்ட ஏனைய போராளிகளின் அவல குரல்களும், எங்கள் மருத்துவ முகாமின் நிலையும்..ஏனடா காயபட்டோம் என்று இருக்கிறது. அப்படி இருந்தது.. எங்கள் மருத்துவ முகாம். காயபட்ட போராளிகளை கவனிக்க சொற்ப மருந்துகளுடனும், மிக சொற்ப ஆட்களுடனும் போராடி கொண்டிருந்தது விடுதலை புலிகளின் மருத்துவ பிரிவு. எங்கு பார்த்தாலும் ஒரே அவல குரல்களும், நோ தாங்க முடியாத வலிகளின் கதறல்களும் எதிரொலித்து கொண்டிருந்தன. எங்கும் இரத்த வாடையும், சொட்டிய இரத்தத்தை மொய்க்கும் இலையான்களும் அந்த இடத்தை நரகமாக்கி காட்சி அளித்தது. காயங்களில் மொய்க்கும் இலையான்களை கூட துரத்த முடியாத நிலையில்... மக்களுக்காக போராடிய போராளிகள்.. படுக்கை புண்களும், காயங்களில் நெளியும் புழுக்களும், சிறு சிறு காயங்களுக்கே மருந்து இல்லாமல் கால்கள், கைகள் எடுக்கபட்ட நிலையிலும் அவர்கள் மக்கள் மீது கொண்ட பாசம் மட்டும் மாறவே இல்லை. சொல்லுங்கள் உறவுகளே ..கனவிலே கூட எழும்பி அவங்களை உள்ளே விடக்கூடாது என்றும் கத்தும் போராளிகள் உங்கள் இனத்தை தவிர வேற இனத்தில் பிறந்திருகிறார்களா..?? ஒரு கை, ஒரு காலை இழந்து, கண்களிலே கட்டு போட்ட நிலையிலும் என்னை கெதியாக குணபடுத்துங்கள் சண்டைக்கு போகவேண்டும் என்ற போராளிகள்..உங்கள் சகோதரங்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா..?? காயங்கள் என்பது போராட்டத்தில் சாதாரணமானது தான்..ஆனால் எங்களிடம் எந்த வித மருத்துவ வசதிகளும் இல்லாத நிலையில் காயபடுவது என்பது நரகத்துக்கு சமன். புளியமரங்களிலே தொங்கும் சேலன் குழாய்களும், வெறும் மண்ணிலே தலைவைத்து அண்ணாந்து பார்த்தபடி, கொட்டும் மழையிலும், வடியும் சீழ்களுக்கும் மத்தியில், இரண்டு நாளைக்கு ஒரு முறைதான் சாப்பிட்டு கொண்டு , தங்கள் வலியை கூட மறந்து மக்களை நினைக்க வேறு யாரால் முடியும்.. அந்த மருத்துவ முகாமுக்கு வந்த ஒவ்வொரு போராளியும் ஒன்றை மட்டும் திரும்ப திரும்ப சொல்லுவார்கள். "மச்சான் அடுத்த முறை காயபட்டால் அங்கேயே சைனயிட் அடிச்சிடனும்".. இப்போதாவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறன் அந்த முகாமின் நிலைமை. என்னை கடைசியாக வந்து பார்த்த அந்த மருத்துவ போராளி, இனிமையான அந்த செய்தியை சொல்லிட்டு போனான். "ராணி இன்னும் ஒரு வாரத்தில் நீங்கள் இங்கிருந்து போயிடலாம்" நான் அந்த முகாமில் இருந்து புறப்படுவதற்கு முதல் நாள். அதிகாலை நேரம். எங்கள் முகாமுக்கு அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் முண்டியடித்து கொண்டு வரிசையில் நின்றார்கள். கைகளிலே தங்கள் குழந்தைகளுடன் தாய்மார்கள் தான் அந்த வரிசையில் மிக அதிகம். விசாரித்த போது இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான அங்கர் 1 + பால்மாவுக்கான வரிசை தான் அது. பசியாலும், அந்த அதிகாலை குளிராலும் பெரும்பாலான குழந்தைகள் வீரிட்டு கத்தியபடியே இருந்தன. மெலிந்த தேகமும், பால் வற்றி போன தாய்மார்களும், குழந்தையின் பசியை அடக்கமுடியாத கையாலான நிலையை உணர்ந்து வேதனையுடன் சுகாதார நிலைய வாசலையே பார்த்து கொண்டிருந்தனர். குழந்தைகளுக்கான பால்மாவை கூட புலிகள் குடித்து விடுவார்கள் என்று அந்த பச்சிளம் குழந்தைகளை பட்டினி போட்ட சிங்கள அரசிடம் கெஞ்சி மூன்று மாதங்களுக்கு பிறகு ஒரு சொற்ப பால்மாக்களை பெற்றிருந்தார் அந்த மேலதிக அரச அதிபர். காலை எட்டு மணிக்கு தான் வழங்குவதாக குறிப்பிட்டிருந்தும், எங்கே தங்களுக்கு கிடக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் காலை நான்கு மணிக்கே குழந்தைகளுடன் வந்து வீதியில் படுத்திருந்த அந்த தாய்மார்களின் வரிசை தான் அது. பாவம் அவர்களும் தான் என்ன செய்வார்கள். அவர்கள் சாப்பிட்டால் தானே குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியும். அவர்களே சாப்பிட்டு எத்தனை நாட்களோ..இதுக்கு எல்லாம் எப்ப தான் விடிவோ..? அந்த குழந்தைகளின் பசி குரல் என் நெஞ்சுக்குள் பிசைந்தது. இந்த மக்களை காக்க வேண்டிய நாங்கள் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறோம். இல்லை ..இல்லை விட கூடாது இண்டைக்கே களத்துக்கு போய்விட வேண்டும். என்னுள் உறுதி எடுத்து கொண்டேன். காலை ஏழரை மணி இருக்கும், கொடிய சிங்கள இராணுவம் ஏவிய ஐந்துக்கும் மேற்பட்ட ஐஞ்சிஞ்சி மோட்டர்கள் அந்த தாய்மார்களின் வரிசையை தாக்கியது. கையிலே குழந்தைகளுடன் எங்கே ஓடுவது என்று தெரியாமல், விழுந்து படுக்க கூட முடியாமல் தவித்த அந்த அம்மாக்களின் மன நிலையை கொஞ்சமாவது உணர்ந்து பாருங்கள் உறவுகளே. ஒரு நிமிட நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. இப்போதும் குழந்தைகள் ஓலங்கள்.. இது பசி அழுகை இல்லை..மரண ஓலங்கள்.. காயபட்டவர்களை தூக்க எங்கள் முகாமில் இருந்து நாங்களும் ஓடினோம். பிஞ்சு குழந்தைகள் சிதறி கிடந்தன. குழந்தைகளை காப்பாற்ற தங்கள் உயிர்களை பலி கொடுத்திருந்தார்கள் பாச அம்மாக்கள்.. இரத்தமும்,சிதறிய உடற்பாகங்களும்,ஓலங்களும் அம்மா இறந்து விட்டா என்று தெரியாமல் தாயின் முகத்திலே அடித்து அழும் குழந்தைகளும், அந்த இடத்தை பார்த்த எந்த ஒரு மனிதனாலும் வாழ் நாள் முழுவதும் நித்திரை கொள்ள முடியாது. அங்கெ ஒரு ஓரத்தில்..தலையில் இருந்து இரத்தம் வடிந்தபடி இறந்து கிடந்த தாயின் முலைகளை சப்பியபடி ஒரு குழந்தை.. (தொடரும்) பாகம் பதினான்கு இங்கே அழுத்துங்கள்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் பன்னிரண்டு கோம்பாவில் குளத்தடியால் வந்த ராணுவத்தையும் தேவிபுரம் காட்டுப்பகுதியால் வந்த ராணுவத்தையும் இரணைப்பாலை வடக்கு பகுதியில் மறித்து உக்கிர சமர் நடத்தினர் புலிகள். கடும் சமர்க்களம் அது. தளபதி லோரன்ஸ், தளபதி தீபன் வழி நடத்தலில் புலிகள் தீரமாக சண்டை போட்டனர். அந்த களமுனையின் காவலரணில் ஒரு தொகுதி தலைவனாக என்னை நியமித்து இருந்தனர். ஒரு நாள் மாலை பொழுதில் அவள் வந்தாள். பின்னால் இருந்து ஒரு பழக்கமான குரலில் அண்ணா என்று கூப்பிட்ட போது, திரும்பிய என்னை அவளின் அழகான புன்னகை மூலம் அன்பை காட்டினாள். அவள் வேறு யாருமில்லை என் உடன் பிறவா கள தங்கை கலையரசி தான். கேப்பாபுலவு களமுனைக்கு பிறகு இப்போ தான் சந்திக்கிறேன். ஒரு நாற்பது நாள் இடைவெளி. எவ்வளவு மாற்றம் காலங்களில். எதிரி புதுக்குடியிருப்பை பிடித்து இரணைப்பாலை வரை வந்துவிட்டான். மறுபக்கத்தாலே விசுவமடுவில் இருந்த இராணுவம் உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம் பிடித்து இரணைப்பாலை வடக்கு வரை வந்துவிட்டான். மக்கள் புதிய பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த புதுமாத்தளன், பொக்கணை, வலைஞர்மட பகுதிகள் நோக்கி நகர்ந்துவிட்டார்கள். இடைவிடாத செல் மழை, கிபிர் குண்டுவீச்சுகள், பல்குழல் எறிகணைகள், கொத்து குண்டுகளுக்கு நடுவில் மக்களுக்காக மறவர்கள் தீராத மனவுறுதியுடன் போராடினார்கள். இவற்றுக்கும் மத்தியிலும், போராளிகளின் மனவுறுதியை குலைப்பதற்காக, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் வரும், வழங்கல் (உணவு) தொகுதிக்கும் அடிக்கடி குறி சூட்டு (சினைப்பர்) தாக்குதல் மூலம் தடுத்து நிறுத்தினான் சிங்கள ராணுவம். சிலவேளைகளில் ஐந்து நாட்களுக்கு கூட சாப்பாடு இல்லாமல் சண்டை போட்டார்கள் போராளிகள். அது அவர்கள் மக்கள் மேல் வைத்த பாசத்தின் வெளிப்பாடு. ஒரு நேர சாப்பாடு தராவிட்டாலும் அம்மாவுடன் சண்டைபோட்ட நாங்கள், ஐந்து நாட்கள் சாப்பாடு வராவிட்டாலும் யாரையும் நோகாமல எதிரியுடன் சண்டை போட மக்கள் மீது எவ்வளவு பாசம் வேண்டும். அது சில வேளைகளில் அவர்களின் அம்மா மீது இருந்த பாசத்தை போல பல மடங்காக கூட இருக்கலாம் இல்லையா.? பட்டினிக்கும் மனவுறுதிக்குமான போராட்டத்தில் மனவுறுதி வென்றாலும், சில வேளைகளில் வயிற்றுபசி எங்களுக்கு சில நோய்களையும்,எரிச்சலையும், சிந்தனை குலைவையும் ஏற்படுத்துவதுண்டு. வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பால் படும் வேதனையை தவிர்க்க, தென்னங்குருத்துகளையும், புளியம் இலைகளையும் ஏன் சில வேளைகளில் பூவரசமிலைகளையும் சாப்பிட்டு அந்த வயிற்று எரிவை குறைத்து இருக்கிறோம். ஏறத்தாழ ஆடுமாடுகள் போல எம்மை மாற்றி கொண்டோம். எல்லாம் எம் மக்களுக்காக என்ற உணர்வு, எங்களை இந்த இலைகுழைகளை கூட அமிர்தமாக உண்ண வைத்தது. இதை கூட என்னால் வார்த்தைகளால் உங்களுக்கு புரிய வைக்க முடியாது. எல்லாம் உணர்வு. அன்றும் அப்படி தான். எனக்கு இரண்டு மூன்று நாளாக காய்ச்சல். பட்டினி, உடலில் சத்தின்மை, அசுத்த நீர் இதில் ஏதாவது ஒன்றினால் தான் அந்த காய்ச்சல். இருந்தும் களத்தை விட்டு நகரமுடியாத நிலை. எனக்கு ஆறுதலாக இருந்தவள் கலையரசி தான். எதிரிக்கு தெரியாமல் அடுப்பு மூட்டி, கொதிநீர் வைத்து தருவாள். குடிக்கவும் ஒத்தணம் பிடிக்கவும். என் கூட பிறந்த தங்கை அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வாளோ அதை விட அதிகமாக செய்தால் என் அன்பு தங்கை கலை. இரண்டு நாளாக சாப்பாடும் இல்லை. வாயெல்லாம் கசத்தது. ஏதாவது புளிப்பாக சாப்பிட வேண்டும் போல இருந்தது. கலையிடம் கெஞ்சினேன். "அண்ணா உனக்கில்லாததா.. இரு இப்பவே கொண்டு வாறன்" என்று சொல்லிவிட்டு போனவள் தான். ஒரு படீர் என்ற வெடிச்சத்தம். அதை தொடர்ந்து "அண்ணா....." என்ற அலறல் என்னை திடுக்கிட்டு எழும்ப வைத்தது. காய்ச்சலுடன் சத்தம் வந்த திசை நோக்கி ஓடினேன் கையில் என் ஆயுதத்தையும் எடுத்து கொண்டு. அங்கெ எங்களுக்கும் எதிரிக்குமிடைப்பட்ட பகுதியில் இருந்த புளியமரத்துக்கு கீழே, கையில் கொத்தாக புளியமிலையுடன், என் தங்கை உயிரை விட்டிருந்தாள். நெத்தியில் இருந்து வந்த அவளின் குருதி மண்ணை நனைத்திருந்தது. இந்த பாழாய் போன அண்ணனுக்காக, காய்ச்சலுடன் நான் கேட்டேன் என்ற கடமைக்காக, ஒரு கொத்து புளியமிலைக்காக, இந்த மண்ணுக்காக என் தங்கை, இந்த மண்ணிலே வீழ்ந்து கிடக்கிறாள். எனக்கே களம் என்றும் பாராமல் ஓஒ ... என்று கத்தி அழனும் போல இருக்கு..உங்களுக்கு அப்படி இல்லையா உறவுகளே.. போராளிகள் என்றால் கல் மனம் படைத்தவர்கள் அல்ல. அவர்களும் உங்களை போல தான். அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கும். சாவுகள், இரத்தம், சதைகள் என அவர்களின் மனசை இறுக்கி இருந்தாலும் சில வேளைகளில் அவற்றையும் மீறி உணர்வுகள் வெளிபடுவது தவிர்க்க முடியாமல் போய்விடும். ஏன் என்றால் நாங்களும் மனுஷர் தானே உறவுகளே..எங்களுக்கு மட்டும் கடவுள் மனசை கல்லாக படைக்கவில்லை தானே .. அங்கெ நடந்ததை என்னால் ஊகிக்க முடிந்தது. கலை கொஞ்சம் உயரம் குறைவானவள். அதுவே அவளுக்கு எமனாகவும் வரும் என்று எள்ளளவும் யோசித்தும் இருக்கமாட்டாள். எங்கள் நிலைகளுக்கு பின்னால் இருந்த புளியமரத்தில் தாழ்வாக இருந்த இலைகள் எல்லாம் கடந்த ஒன்பது பத்து நாட்களாக போராளிகளின் வயிற்றுபசிக்காக பிடுங்கபட்டு மொட்டையாக இருந்தது. உயரத்தில் இருந்தவை அவளுக்கு எட்ட வாய்ப்பில்லை. ஏறி தான் பிடுங்கவேண்டும். ஏறி பிடுங்கும் போது குறி சூட்டு தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற நிலையில், எங்கள் அரணுக்கு முன்னால் இருந்த மரத்தில் தாழ்வாக இருந்த இலைகளை பறித்து கொண்டு ஓடிவந்திடலாம் என்று முடிவெடுத்து அதனை செயற்படுத்திய போது தான் அவள் கொடிய எதிரியின் குறி சூட்டுக்கு இலக்காகி இருக்கிறாள். என்னால் என் தங்கையின் உயிரை தான் காப்பற்ற முடியவில்லை. அவளின் புகழுடலையாவது எதிரியின் கைகளில் சிக்காமல் எடுத்து அவளின் குடும்பத்தினரின் கைகளில் சேர்ப்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஒரு அண்ணனாக நான் இதைக்கூட செய்யணும் இல்லையா என் உறவுகளே..? பதுங்கி நிலையெடுத்து, ஊர்ந்தபடி அவளின் புகழுடல் இருந்த இடத்தை அண்மித்துவிட்டேன். மீண்டும் படீர் என்ற சத்தம். என் காலை பதம் பார்த்தது கொடிய சிங்கள எதிரியின் குறி சூட்டு சன்னம் ஒன்று. என் தொடைகளை ஊடுருவி மறுபக்கத்தால் சென்று இருந்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த என் சக போராளிகளை சைகை மூலம் நிறுத்திவிட்டு, அந்த புளியமரத்தின் வேர்களுக்குள் உருண்டு மறைந்து கொண்டேன். உடலை தூக்க வரும் போராளிகளுக்காக வெறியுடன் காத்திருந்தான் அந்த கொடிய குறி சூட்டாளன். மறைந்திருந்தவாறே என் ஆயுதத்தை நிமிர்த்தி, எதிரிகளின் நிலைகளை நோக்கி எழுந்தமானத்துக்கு சுட்டு என் கோபத்தை காட்டினேன். கால் விறைத்து, இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கள மருத்துவ இறுக்கி துணியை (பில்ட் கொம்பிரசறை) எடுத்து என் காலை சுற்றி கட்டினேன். என்ன விலை கொடுத்தாவது என் தங்கையின் உடலை எடுத்தே தீருவது என்ற மன வைராக்கியத்தை என்னுள் வளர்த்து கொண்டேன். இந்த வைராக்கியம் இதை கேட்கும் உங்களுக்கு வந்திருந்தாலும் ஆச்சரியமில்லை உறவுகளே. ஏன் என்றால் அங்கெ விழுந்திருப்பது என் தங்கை மட்டும் இல்லை. உங்கள் தங்கையும் கூட. என்னில் இருந்து ஒரு நான்கு அல்லது ஐந்தடி தள்ளி தான் அவள் உடல் இருந்தது. தனது ஆசை அண்ணனுக்கு பிடுங்கிய புளியமிலை கொத்தை விடாமல் பிடித்திருந்தாள். இந்த இலைகளை எப்படியும் அண்ணனிடம் சேர்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் அவள் முகத்தில் தெரிந்தது. அந்த கனவுடனே மண்ணில் கிடந்தாள், என் மன்னிக்கவும் எங்கள் தங்கை கலையரசி. அருகில் இருந்த ஒரு மொத்த தடியினை எடுத்து அதன் கிளையினை என் தங்கையின் தலை முடியினுள் செருகி, அதனை சுற்றி சிக்கு பட வைத்தேன். பின்னர் என் பலம் கொண்ட மட்டும் இழுத்தேன். என் தங்கை என்னை நோக்கி அசைய தொடங்கினாள். இடையில் அந்த சிக்கு கழன்று தடி விடுபட்டது. ஆனால் நான் என் முயற்சியை விடவில்லை. மறுபடியும் முயன்றேன் என் கை எட்டும் அளவுக்கு வந்து விட்டாள் என் தங்கை. கையால் எட்டி அவள் தலை முடியை பிடித்து எனக்கு அருகில் அவளை , அவளின் உடலை எடுத்து விட்டேன். கட்டி அழனும் போல இருக்கு. உங்களுக்கு இல்லையா ..?? அவளின் கைகளுக்கு நடுவில் இருந்த புளியம் இலைகளை, கண்ணீருடன் சாப்பிட்டேன். இது என் வயிற்றுப்பசிக்காக அல்ல உறவுகளே. இது அவளின் கடைசி ஆசைக்காக.. (தொடரும்) பாகம் பதின்மூன்று இங்கே அழுத்துங்கள்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
அவர்களின் இழப்பும் தியாகமும் ஒரு போதும் வீணாகாது. இவற்றுக்கான பதிலை காலம் தான் சொல்லும். அதுவரை காத்திருப்போம்.
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
பாகம் பதினொன்று திடீரென ஆனந்தபுரம் வான்பரப்பில் நுழைந்தன கிபிர் விமானங்கள். அவை கொடிய சிறிலங்கா விமானபடைக்கு சொந்தமானவை. என்னையும் இழுத்துக்கொண்டு பதுங்கு குழிக்குள் ஓடினார்கள் அந்த சர்வதேச தொலைத்தொடர்பு பிரிவை சேர்ந்த நண்பர்கள். பதுங்கு குழி வாசலுக்கு கூட சென்றிருக்க மாட்டேன். நெருப்பு பிழம்புகள், மின்னலென தெறிக்க டம்மம்மமார் டமம்ம்ம்மாமமார் என்ற காதை பிளக்கும் சத்தங்கள் மிக அருகிலேயே கேட்டன. என்னை ஒரு கை பதுங்கு குழிக்குள் இழுத்து போட்டது. மீண்டும் கிபிர் இரைந்து கொண்டு கீழிறங்க விடுதலைபுலிகளின் விமான எதிர்ப்பு பிரங்கிகள் முழங்கின. தாறுமாறாக குண்டுகளை வீசி விட்டு சென்றான். "ராணி அண்ணா, சேகர் அண்ணா போன பக்கம் தான் அடிக்கிறான் போல " என்று நண்பன் ஒருவன் சத்தத்தை வைத்து சொன்ன போது தான், எனக்கு மனசு பக் என்றது. அவருக்கு தொடர்பு எடுத்து பார்க்க வேணும் என்று உள்மனசு சொன்னாலும்,விமான தாக்குதல் நேரம், ஆகாயத்தில் வட்டமிடும் வேவு விமானங்களுக்காக தொலைதொடர்பு எடுக்க கூடாது என்ற கட்டளை என்னை தடுத்தது. வானத்தில் வெடிக்கும் குண்டுகள் (ஆட்களை கொல்வதற்காக) , கட்டடங்களை அழிக்கும் குண்டுகள், நிலத்துக்கு கீழே போய் வெடிக்கும் குண்டுகள் என்று மாறி மாறி மூன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் பன்னிரண்டு தடவைக்கு மேல் குண்டு வீசியாச்சு. ஒரே புகைமண்டலமும் கந்தக நெடியும் தான். எங்கள் பதுங்கு குழியே பலதடவை அதிர்ந்து உள்ளே மண் சரிய தொடங்கிவிட்டது. விமானங்களின் இரைச்சல் கரைய தொடங்க, நாங்கள் குண்டு விழுந்த இடத்தை நோக்கி ஓட தொடங்கினோம். பொதுவாக விமானங்கள் போனாலும் உடனே போக கூடாது என்று சொல்லுவார்கள். அவன் போற மாதிரி போயிற்று மறுபடியும் வந்து அடிப்பான் மற்றும் விமான குண்டுவீச்சு நடந்த இடத்துக்கு காயபட்ட ஆட்களை தூக்க விடாமல் செல்லாலை அடிப்பான் . இருந்தும் சேகர் அண்ணாவின் நிலையை அறியவும் காயபட்ட ஆட்களை தூக்கவும் நாங்கள் உடனடியாகவே அந்த இடத்துக்கு விரைந்தோம் சேகர் அண்ணாவை அலைபேசியில் கூப்பிட்டபடி. "சேரா த்ரீ..சேரா த்ரீ .. அல்பா வண்" "சேரா த்ரீ..சேரா த்ரீ .. அல்பா வண்" என்று எங்கள் அலைபேசியில் கத்தியபடியே ஓடினோம். எந்த பதிலும் வரவில்லை. சற்று முன்னர் அழகாக தெரிந்த அந்த குடிசைகளும் தென்னை மரங்களும் பிய்த்து போடபட்டிருந்தது. கொலை வெறியாடபட்ட கிராமம் போல காட்சி தந்தது. அழுகையின் ஓலங்களும், கண்களில் தெரிந்த மரண பீதிகளும், ரத்தம் சொட்ட சொட்ட தலை தெறிக்க ஓடிவரும் ஆட்களும் மனசுக்குள்ளே வெறுமையை தோற்றுவித்தன. "அண்ணா என்னை காப்பாத்துங்கோ அண்ணா என்னை காப்பாத்துங்கோ" என்று சட்டை எல்லாம் கிழிந்தபடி இரத்தம் சொட்ட சொட்ட ஓடிவந்த பெண்ணொருத்தி, அவளை தாங்கி பிடிக்க நான் ஓடும்போது, எனக்கு ஒரு பத்து மீற்றருக்கு முன்னால் தலைகுப்பற விழுந்தாள். ஓடி வந்து மூச்சில் கைவைத்து நாடி துடிப்பை பார்க்கும் போது அவள் இறந்துவிட்டிருந்தாள். பின் தலையில் சிறுபகுதி இல்லை அதன் வழியாக இரத்தம் அவளை மட்டும் அல்ல எங்கள் மண்ணையும் நனைத்து கொண்டிருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிறீலங்கா கொலைவெறி இராணுவம் விமானத்தாக்குதல் நடந்த இடத்துக்கு கொத்து குண்டு தாக்குதலை தொடக்கி இருந்தான். காயபட்டவர்களை தூக்க கூட மக்கள் வர தயங்கினார்கள். காயப்பட்டவர்களை ஏற்றி செல்ல வந்த உழவு இயந்திரங்கள் கூட எட்டியே நின்றன. தாக்குதல் நடந்த இடத்தை நான் வாழ்கையில் திரும்ப எப்பவுமே பார்க்க கூடாது. எங்குமே இரத்தமும் சதைகளும், கைகளும், தலை முடிகளும், பாதி தலைகளும், கிழிந்த சட்டைகள் உள்ளாடைகள் சிதறி போய் இருந்தன. "அண்ணா எங்களை காப்பாத்துங்க, எங்களை காப்பாத்துங்க" என்ற ஓலம் எல்லா பக்கத்திலும் இருந்து வந்து காதிலே எதிரொலித்தன. யாரை முதலில் காப்பாத்திறது..நீங்களே சொல்லுங்க ..யாரை காப்பாத்திறது..அந்த செல் மழைக்கு நடுவிலும் நாங்கள் ஒரு முடிவெடுத்தோம். சிறு காயங்களுக்கு உட்பட்டவர்களை மட்டும் முதலில் ஏத்துவம். வயிற்று காயம், தலை காயம் எல்லாம் கடைசியா ஏத்துவோம். ஏன் என்றால் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு போனாலும் மருத்துவம் செய்ய மாட்டார்கள். புழுபிடிச்சு சாகும்வரை அப்படியே விட்டுவிடுவார்கள். அது அவர்களின் பிழை இல்லை. அவ்வளவு மருந்து தட்டுப்பாடும், அவ்வளவு காயகாரர்களும். இவர்களுக்கு செலவிடும் நேரத்தை வேறு பத்து காயகாரர்களுக்கு செலவிடலாம் என்பது அவர்களின் கருத்து. இது தான் உயிரின் பெறுமதி அங்கு. உங்களுக்கு கொஞ்சமாவது புரிகிறதா உறவுகளே.. கிபிரின் குண்டுகள் பெரும்பாலானவை பயிற்சி முகாமின் பெண்கள் பகுதிக்குள்ளேயே விழுந்திருந்தன. அந்த பெண்கள் கூட சில நாட்களுக்கு முன்னர் தான் விரும்பியோ விரும்பாமலோ இயக்கத்தில் இணைக்கபட்டவர்கள். கிபிர் குண்டுகளின் தாக்கத்தை உங்களுக்கு எழுத்தில் விபரிக்க முடியாது. அவை அனுபவப்பட்டால் மட்டும் தெரிந்து கொள்ள கூடிய உணர்வுகள். குண்டுவீச்சின் தாகத்தினால் பெரும்பாலான காயபட்ட பெண்களின் உடலில் ஒட்டு துணிகூட இல்லை. காயத்தின் வேதனைகளும், நிர்வாணமாக அங்கெ கிடக்கும் கோலங்களும் அந்த பெண்களின் மனசை எப்படி வாட்டி இருக்கும் என்பதை இதை வாசிக்கும் பெண் உறவுகள் நிச்சயாமாக அறிவீங்கள். எங்கள் போராளிகளுக்கு அவர்கள் எல்லாம் சொந்த சகோதரிகள் போலவே தெரிந்தார்கள். எதை பற்றியும் கூட யோசிக்காமல் அவர்களை அப்படியே வாரி அள்ளி தோள்களில் போட்டு கொண்டு ஓடி போய் உழவு இயந்திரங்களில் ஏற்றினார்கள். முறிந்து போன கால்களை உடையவர்களை, கிழிந்த சேலைகளில் அள்ளி கொண்டு போய் சேர்த்தார்கள். நானும் ஒரு இரண்டு மூன்று பேரை தூக்கி கொண்டு போய் உழவு இயந்திரத்தில் போட்டு விட்டு, ஓடிவரும்போது " அண்ணா என்னை தூக்குங்கோ என்னை தூக்குங்கோ" என்று கத்திய பெண்ணை நோக்கி ஓடினேன். ஒரு கை, என்காலை இறுக்க பிடித்தது. என்னால் அசைய முடியவில்லை. குனிந்து பார்த்தேன், பதுங்கு குழிக்கு போடபடிருந்த தென்னங்குத்திகளுக்கு நடுவில் அகபட்டபடி ஒரு பதின்ம வயது பெண். சரியாக அவதானித்தேன். இடுப்புக்கு கீழே அவளுக்கு இரண்டு கால்களும் இல்லை. இடுப்புடன் சதைகள் மட்டும் தொங்கி கொண்டிருந்தன. அவற்றை அவளால் அவதானிக்க முடியாதபடி தென்னங்குற்றிகள் அவளுக்கு மறைத்தன. "அண்ணா என்னை காபாத்தண்ணா" அவளின் குரல்கள் என்னை கெஞ்சின. இவளை காப்பாற்றியும் இவள் பிழைக்க போவதில்லை என்றது என் உள்மனம். இவளுக்கு பதிலாக இன்னும் இரண்டு காயபட்டவர்களை தூக்கி ஏற்றினாலாவது அவர்களை காப்பாற்ற முடியும் என்று நினைத்து கொண்டு அவளை உதறிவிட்டு எழ முயன்றபோது, மீண்டும் "அண்ணா தயவு செய்து என்னை காபாத்தண்ணா" உயிர் வலியின் கெஞ்சல்கள் அவை. உங்களுக்கு புரியுமா உறவுகளே..இதை உங்களுக்கு சொல்லும்போதே எனக்கு கண்ணீர் வருகிறது. வாசிக்கும் உங்களுக்கும் வரும் தானே உறவுகளே... "தங்கச்சி, இந்த மரங்கள் எல்லாம் தூக்கி உங்களை வெளியில எடுக்க வேணும் என்றால் இரண்டு மூன்று பேர் வேணும், அதோ அங்கெ கத்தி கொண்டிருக்கிற தங்கச்சியை தூக்கிவிட்டு உங்களை வந்து தூக்குகிறேன்" என்று சமாளிச்சேன். "அண்ணா, நான் உன்ட சொந்த தங்கச்சி என்றால் என்னை இப்படிதான் விட்டுவிட்டு போவாயா" என்று சாதரணமாக தான் கேட்டாள்.அப்போ அந்த தங்கச்சி கேட்ட கேள்வி என் உயிரையே பிசைந்தது. என் சொந்த தங்கச்சியே கேட்பது போல இருந்தது. எனக்கு பதில் தெரியவில்லை உறவுகளே.. உங்களுக்கு தெரியுமா..இந்த வலியை என்றைகாவது அனுபவிச்சு இருகிறீங்களா. எனக்கு அந்த கட்டத்தில் அவளை விட்டு நகர மனம் இடம் கொடுக்கவில்லை. அவள் கால்களில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. "தங்கச்சி உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நீ தப்பிவிடுவாய்" என்ற ஆறுதல் வார்த்தைகளை தவிர என்னிடம் ஒன்றும் இல்லை. என் தங்கச்சிக்கு கொடுக்க.. "அண்ணா இடுப்புக்கு கீழே சரியா வலிக்குதண்ணா" "ஒண்டும் இல்லை மரம் இருக்கிறதால தான் வலிக்குது கொஞ்சம் பொறுங்க ஆக்கள் வரட்டும் தூக்க சரியாயிடும்" "அண்ணா நான் இயக்கத்துக்கு வந்தது அம்மா அப்பாவுக்கு தெரியாது, கண்டால் சொல்லிவிடுவீங்களா நான் காயபட்டுவிட்டேன் என்று" திக்கி திக்கி பேசினாள். "நிச்சயமாக.. எங்கே இருக்கிறார்கள்" "வலைஞர்மடம் பொது கிணத்தடிக்கு கிட்டே, ராசாத்தி என்று விசாரியுங்கள்" "கட்டாயம் சொல்லிவிடுறேன்" "அண்ணா, எனக்கு வாழணும் என்று ஆசையா இருக்கு அண்ணா. என்னை எப்படியும் காப்பாத்திவிடு......" அந்த சொல்லை முடிக்க கூட இல்லை அவள் செத்து விட்டாள். மன்னிக்கவும் வீரச்சாவு.என் சில நிமிட தங்கை என் கண் முன்னாலே வீரச்சாவு. எல்லாம் உங்களுக்காக தான் உறவுகளே.. இப்போவாவது உங்களுக்கு புரிகிறதா ஏன் எங்களுக்கு விடுதலை வேண்டுமென்று.. இவளை மாதிரி செத்த என் தங்கைகளுக்காக எனக்கு என் நாடு வேணும். உங்களுக்கும் வேணும் என்று தோன்றினால் இந்த தங்கைக்காக ஒரு சொட்டு கண்ணீர் விடுங்கள் அது போதும். என் தலை எல்லாம் விறைத்தது. கண்ணீர் வரவில்லை. நெஞ்சை யாரோ சுத்தியலால் அறைவது மாதிரி இருந்தது. என் காலை பிடித்த அவளின் கைகள் இன்னும் விடுபடவே இல்லை. அப்படியே இறுக்கமாக சொந்த அண்ணன் எப்படியும் காப்பாற்றி விடுவான் என்ற நம்பிக்கை அந்த பிடியில் அப்பட்டமாக தெரிந்தது. சற்றும் முன்னே பேசிய அந்த வாய்கள் திறந்த படி, வாழும் ஏக்கம் அந்த கண்களில் தெரிந்தபடி, அப்படியே எந்த மண்ணுக்காக வந்தாளோ அந்த மண்ணில் தலை சாய்ந்த படி, என் தங்கை மீளா துயிலில். எனக்காக அவளுக்கு ஒரு முறை..ஒரே ஒரு முறை நீங்கள் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவீங்களா.. "ரோமியோ அல்பா... ரோமியோ அல்பா..அல்பா வண்" "ரோமியோ அல்பா... ரோமியோ அல்பா..அல்பா வண்" அலைபேசி என்னை உயிர்ப்பித்தது. "சொல்லுங்கோ அல்பா வண்" "நிலைமை என்ன மாதிரி" "சரியான சிக்கல் அல்பா வண். நிறைய சங்கர்.." (இறந்த ஒருவரை வைத்து இறப்புகளை சொல்லும் சங்கேத மொழி) "விளங்குது ..சேரா த்ரீயை பார்த்தீங்களா " "இல்லை அல்பா வண். தேடி கொண்டிருக்கிறேன். சந்திச்சதும் தொடர்பெடுக்கிறேன்" "சரி நன்றி அவுட்" "நன்றி" அந்த தங்கச்சியின் கைகளை எடுத்துவிட்டு சேகர் அண்ணாவை தேடி அலைந்தேன். சிதறிய உடல்களுக்கும், சதை பிண்டங்களுக்கும் நடுவில், குப்புற படுத்தபடி சுருள் தலையுடன் ஒரு உடல். நடுங்கியபடியே அந்த உடலை திருப்பினேன், கருகிய முகத்துக்கும் நடுவில் மாறாத புன்னகையுடன், லெப்.கேணல் சேகர் அண்ணா இந்த மண்ணுக்காக சாவை தழுவி இருந்தார். நிதி துறையில் இருந்த அவரின் மனைவியை , ராகவன் என்னும் சார்லஸ் அன்ரனி சிறப்பு தளபதி பெயர் தாங்கிய அவரின் மகனை மட்டுமல்ல,அவர் நேசித்த மக்களையும் விட்டு வெகு தூரம் போயிருந்தார். பல போராளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த, மக்களுக்காக தன் வாழ்வையே கழித்த மாவீரனாக லெப். கேணல் சேகர் அண்ணா தான் நேசித்த மண்ணை முத்தமிட்டபடி வீரச்சாவை தழுவி இருந்தார். "இவ்வளவு செல்லடிகள், குண்டு வீச்சுகளுக்கு மத்தியும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தங்கள் உறவுகளுடன் பேசி,பண பரிமாறல்களை செய்யவைக்கிற அந்த புண்ணியவான் நல்லா இருக்கோணும் " எனக்கு என் சொந்த அண்ணனையும், சொந்த தங்கச்சியையும் ஒரே நேரத்தில் இழந்த துயரம்..உங்களுக்கு ...????? (தொடரும்) பாகம் பன்னிரண்டு இங்கே அழுத்துங்கள்
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
கேள்விகள் கேட்பதில் குறை ஒன்றும் இல்லையே குட்டி. இலத்திரனியல் என்றால் Electronics.