Search the Community
Showing results for tags 'பயணக்கட்டுரை'.
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. இலங்கைப் பயணகட்டுரை ஹீத்துரோவில் விமானம் ஏறும் போது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையும் புதிதில்லை, விமானப்பயணமும் புதிதில்லை. ஆனாலும் கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னான முதல் இலங்கைப்பயணம். ஒதுங்கி வாழ்வதே வாழ்க்கை என ஆகி விட்ட அந்த இரு வருடங்களில் இப்படி ஒரு பயணம் இனி ஒரு முறை அமையுமா என்பதே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அந்த நிலை கடந்து, கொஞ்சம் கொஞ்சமாக குட்டி போட்ட பூனை போல் ஐரோப்பாவையே சுற்றி வந்த நிலையும் கடந்து….இதோ இலங்கைக்கான நெடு-நாள் பயணம் ஆரம்பமாக போகிறது. கடந்த முறை கட்டுநாயக்காவில் இருந்து வெளியேறும் போது சுவரில் மைத்திரிப்பால சிரிசேன சிரித்து கொண்டிருந்தார். அப்போ, மீண்டும் இலங்கை மீள, இப்படி ஒரு நீண்ட இடைவெளி விழும் என எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் நாட்டில் எத்தனை மாற்றங்கள். ஒரு தொடர் குண்டு வெடிப்பு, ஒரு ஆட்சி மாற்றம், பெருந்தொற்று, பொருளாதர நெருக்கடி, ஒரு அற(ம்)(ர)களை, இன்னொரு ஆட்சி மாற்றம்…. நாட்டில் மட்டும் அல்ல, இந்த இடைவெளியில் என் மனதில் கூட பல போபியாஃக்கள் வந்து குடியேறி, ஆட்சி அமைக்கவும் உரிமை கோரிக்கொண்டிருக்கிறன. தெனாலி கமல் போல, வைரஸ் எண்டால் பயம், டெங்கு எண்டாலும் பயம், ரேபீஸ் நாய்க்கடி என்றால் மெத்த பயம் எனக்கு என்பதாக இந்த போபியா லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. என்னதான் ஒரு காலத்தில் அந்த நாட்டில் நுளம்புகளோடு தாம்பத்தியமே நடத்தி இருந்தாலும், போரின், இடப்பெயர்வின், சாவின் வடுக்களை அனுபவித்திருந்தாலும், சில தசாப்த புலம்பெயர் வாழ்வின் ஒப்பீட்டளவிலான பாதுகாப்பு, மனதை மென்மையாக்கியே விட்டுள்ளது. உண்மையில் இந்த பயணம் பல மட்டங்களில் எனக்கு ஒரு மீள் வருகைதான். நான் பிறந்த நாட்டுக்கான சில வருடங்களின் பின்னான பெளதீக மீள் வருகை மட்டும் அல்ல, உள ரீதியில் ஒரு தென்னாசியனாக என் இயற்கை வாழ்விடத்துக்கும், முன்னர் எனக்கு பழகி இருந்த அந்த வாழ்விடத்தின் அசெளகரியங்களுக்கும் கூட, இது ஒரு மீள் வருகைதான். இந்தத்தடவை தமிழ் நாடு போய், கப்பல் அல்லது விமானம் மூலம் யாழை சென்றடைய முயற்சித்தாலும் அது கை கூடவில்லை. புலம் பெயர் நாட்டில் இருந்து இந்த பயணங்களை இந்த தடத்தில் ஒழுங்கு செய்வது கொஞ்சம் கடினமாக, மிகவும் அயர்ச்சி தருவதாக இருந்தது. கப்பல் போக்குவரத்து இந்திய அரச கப்பல் நிறுவனம் செய்வதாக சொல்லி இருந்தாலும் அதன் இணைய தளத்தில் அந்தமான் சேவை பற்றி மட்டுமே அறிய கிடைத்தது. ஒரு வாட்சப் நம்பரை தேடி எடுத்து தொடர்பை ஏற்படுத்த முனைந்தும் பதில் ஏதும் இல்லை. அதே போல் விமான சேவை செய்யும் அலையன்ஸ் ஏர் டிக்கெட் விற்கும் இணையதளம் செயல்பட்ட வேகமும், முறையும் நம்பிக்கை தருவதாக இருக்கவில்லை. மேலும் எத்தனை கிலோ எடுத்து போகலாம் என்பது பற்றிய நிச்சயமின்மை, சென்னையில் இடைத்தரிக்கும் நேர அளவு, self transfer என்பதால் ஏற்பட கூடிய அனுகூல இழப்புகள், யாழிற்கு நேரே போனாலும் எப்படியும் கொழும்புக்கு வர வேண்டி இருந்தமை, இந்தியன் வீசா கட்டணம் இப்படி பலதை கருத்தில் எடுத்தபோது, இந்த முறையும் நேரே கொழும்புக்கு போவதே உசிதமான தெரிவாக இருந்தது. ஹீத்துரோவில் தானியங்கி செக்கின் முறையில் ஏதோ குளறுபடி என ஒரு முப்பது நிமிடம் அளவில் தாலியை அறுத்தாலும், இந்த குளறுபடியில் நாற்பது கிலோவுக்கு பதிலாக நாற்பத்தைந்து கிலோவை லெகேஜில் தள்ளி விட முடியுமாக இருந்தது ஒரு சின்ன வெற்றியே. அதுவும் அந்த ஒயிலான இந்திய வம்சாவழிப் பெண் ஊழியை உதவிக்கு வந்தமை, இன்னொரு முப்பது நிமிடம் தாமதித்தாலும் பரவாயில்லை என்றே எண்ண வைத்தது. ஒரு வழியாக போர்டிங் வெட்டி, ஏழு கிலோவுக்கு பதில் பதினொரு கிலோ ஹாண்ட்லெகேஜுடன் விமான இருக்கையை வெற்றிகரமாக அடைந்து, முதல் ஆளாக போய் துப்பராவான கழிவறையை பாவித்து விட்டு, இருக்கை பட்டியை அணிந்து, விமான இருக்கை முன் உள்ள சின்ன திரையை நோண்ட ஆரம்பிக்க, விமானத்தின் சக்கரங்கள் ஓடுபாதையில் மெதுவாக உருள ஆரம்பித்தன. (தொடரும்)
- 364 replies
-
- 22
-
- பயணக்கட்டுரை
- இலங்கை
-
(and 2 more)
Tagged with: