Search the Community
Showing results for tags 'பாம்புகள் தினம்'.
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆண்டுதோறும் ஜூலை 16 அன்று உலக பாம்புகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கலாசாரத்தில் இலக்கியங்கள், சொல்லாடல்கள், கதைகள், ஆன்மிகம் என பல தளங்களிலும் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் உயிரினங்களுள் ஒன்று பாம்பு. இந்தியாவில் ‘நாக வழிபாடு’ என்பது பல பண்பாடுகளில், வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றது. ஆனால், பாம்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதேவேளையில், அதன் உருவம், அமைப்பு, ஊர்ந்து செல்லும் தன்மை என, பல காரணங்களுக்காக பாம்பு என்ற சொல்லைக் கேட்டாலே, முகம் சுழிப்பவர்களும் உண்டு. அதிகம் வெறுக்கப்படும் அஞ்சப்படும் உயிரினமாகவும் பாம்புகள் இருக்கின்றன. சிலவகை நச்சுப்பாம்புகள் மனிதர்களுக்கு வேண்டுமானால் தீங்கு விளைவிப்பதாக இருக்கலாம். ஆனால், பாம்புகள் நம்முடைய சூழலியலுக்கும் பலவழிகளில் நன்மை பயப்பதை அறியாமலேயே, நம் வாழ்விடங்களில் அவை நுழைந்தவுடனேயே அவற்றை கொல்வதை மட்டுமே ஒரு தீர்வாக கொண்டிருக்கிறோம். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். நேரடியாக தாக்கிக் கொல்வது ஒருபுறமென்றால், பெருகிவரும் நகரமயமாக்கலால் அவற்றின் வாழ்விட அழிப்பு காரணமாக மறைமுகமாகவும் மனிதர்கள் பாம்புகளுக்கு ‘பகைவர்களாக’ விளங்குவதாக காட்டுயிர் ஆர்வலர்கள் கருதுகின்றனர். ‘பாம்புக்கும் பகைவர் பலர். மனிதனே முதல் பகைவன்’ இது, 1960-களில் தமிழகம், கேரளாவில் பாம்புகள் குறித்து நீண்ட ஆராய்ச்சிகளை செய்தவரும், இன்றளவும் பாம்புகள் குறித்த கையேடாக விளங்கும் ‘நம் நாட்டுப் பாம்புகள்’ என்ற நூலை எழுதியவருமான பேராசிரியர் எம்.வி. ராஜேந்திரன், அந்த நூலில் குறிப்பிட்டிருப்பது. சூழலியலுக்கும் பல்லுயிர் தன்மைக்கும் பாம்புகள் அளிக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் ஜூலை 16 அன்று உலக பாம்புகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில், பாம்புகள் சூழலுக்கு ஏன் முக்கியம், அவை இல்லையென்றால் என்னவாகும் என்பது குறித்து இங்கு அறியலாம். படக்குறிப்பு,இந்தியாவில் மனித குடியிருப்புகளில் இறப்புகளை ஏற்படுத்துவது நான்கு வகையான பாம்புகள் தான் பாம்புகள் என்றல்லாமல், எந்த ஒரு உயிரினத்திற்கும் ஆற்றல் சங்கிலியில் அதற்கென தவிர்க்க இயலாத இடம் உண்டு. பாம்புகள் உணவுச்சங்கிலியில் முக்கியமானவையாக உள்ளன. குறிப்பாக, பாம்புகள் ஊனுண்ணியாக இருப்பதால், அவை பல உயிர்களை உட்கொண்டு, மற்ற உயிரினங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறது. பாம்புகள் முழுமையான புரத உயிரியாக இருப்பதால், மற்ற உயிரினங்களுக்கும் இது இரையாக இருக்கிறது. “ஆற்றல் சங்கிலியில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தப்படும் முக்கியமான உயிரினமாக பாம்புகள் இருக்கின்றன. எனவே, உணவுச் சங்கிலியில் பாம்புகள் விடுபட்டுப் போனால் மற்ற உயிரினங்களுக்கான ஆற்றல் பகிர்வில் ஒரு இடைவெளி ஏற்பட்டு மற்ற உயிரினங்களுக்கு இடைவெளியை ஏற்படுத்துகிறது” என, அகத்திய மலை இயற்கைவள பாதுகாப்பு மையத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் முனைவர் அ. தணிகைவேல் தெரிவிக்கிறார். ‘இயற்கை பூச்சிக்கொல்லிகள்’ பட மூலாதாரம்,SAMSON KIRUBAKARAN படக்குறிப்பு,கண்ணாடி விரியன் இதுதவிர, விவசாய நிலங்களில் பாம்புகள் ‘இயற்கை பூச்சிக்கொல்லிகளாக’ விளங்குகின்றன. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் விவசாய நிலங்களில் எலிகள் போன்ற கொறித்துண்ணிகளை உண்டு, அவற்றை கட்டுப்படுத்தும் உயிரினமாக பாம்புகள் இருக்கின்றன. “எலி வலைகளுக்குள்ளேயே சென்று அவற்றை சாப்பிடுவதற்கு பறவைகளால் முடியாது, அந்த பணியை பாம்புகளால் தான் செய்ய முடியும்” என கூறுகிறார், தணிகைவேல். இறப்புகளை ஏற்படுத்தும் பாம்புகள் என்னென்ன? இந்தியாவில் மட்டும் 351 வகையான பாம்புகள் காணப்படுவதாகவும் அவற்றில் 141 பாம்புகள் தமிழ்நாட்டு பகுதிகளில் காணப்படுவதாகவும் கூறும் அவர், இந்தியாவில் 62 வகையான பாம்புகள் நச்சுத்தன்மை வாய்ந்ததாக உள்ளன என்கிறார். “இந்தியாவில் மனித குடியிருப்புகளில் இறப்புகளை ஏற்படுத்துவது நான்கு வகையான பாம்புகள் தான்” என கூறுகிறார் தணிகைவேல். அந்த நான்கு பாம்புகள்: கண்ணாடி விரியன், நல்ல பாம்பு என்று அழைக்கப்படும் நாகம், சுருட்டை விரியன், கட்டு விரியன் பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN படக்குறிப்பு,சுருட்டை விரியன் பாம்புகள் குடியிருப்புக்குள் நுழைந்தால் என்ன செய்வது? முதலில் அச்சப்படாமல், பதற்றம் இல்லாமல் அவற்றுக்கு வெளியே செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்கிறார், சென்னையை சேர்ந்த 24 வயதான பட்டதாரி மாணவி வேதப்பிரியா கணேசன். தன்னுடைய 14 வயதிலிருந்து பாம்புகளை மீட்கும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார். “மக்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும். அப்போதுதான் பாம்புகளை காயப்படுத்த மாட்டார்கள், கொல்ல மாட்டார்கள். பாம்புகள் வீட்டுக்குள் நுழைந்தால் ஜன்னல், கதவை பூட்டக் கூடாது. அப்படியே விட்டாலே அது பெரும்பாலும் வெளியே சென்றுவிடும்” என்கிறார் அவர். குடியிருப்புக்குள் கட்டட பொருட்கள், குப்பை கூளங்கள் இருந்தாலோ, சுவர்களில் ஓட்டை, இருட்டான பகுதிகள், புதர்களுக்குள்ளோ பாம்புகள் வருவதற்கான வாய்ப்புண்டு. எனவே, அவற்றை மக்கள் கவனிக்க வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES பாம்புகளுக்கான ஆபத்துகள் பாம்புகளுக்கு நகரமயமாக்கத்தால் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறுகிறார் முனைவர் தணிகைவேல். “மலைகளில் காணப்படும் பாம்பு வகைகளை நிலத்தில் காண முடியாது. குறிப்பாக நன்னீரும் கடல்நீரும் கலக்கும் கழிமுக பகுதியில் மட்டும் காணப்படும் பாம்பு வகைகள் உள்ளன. மரங்கள் அடர்ந்த பகுதிகளில் தான் பச்சை பாம்பு, கொம்பேரி மூக்கன் உள்ளிட்ட பாம்பு வகைகள் இருக்கும். இப்படி குறிப்பிட்ட வாழ்விடங்களில் மட்டுமே வாழக்கூடிய பாம்புகளின் வாழ்விடங்கள் நகரமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் அழிக்கப்படுகின்றன. சாலை விரிவாக்கம் காரணமாக சாலை விபத்துகளாலும் பாம்புகள் இறக்கின்றன” என்கிறார் அவர். ஒருபுறம் மனிதர்கள் பாதிக்கப்படுவதுபோல் மறுபக்கம் பாம்பினங்கள் அரிதாகிப் போகின்றன. மனிதர்கள் கண்ணில்பட்டு பாம்புகள் மடிவதும், விவசாயத்தில் தெளிக்கப்படும் ரசாயனங்களும், காடுகள் சுருங்கி மனித குடியிருப்புகள் பெருகி வாழிடச்சூழல் அழிக்கப்படுவதால் பாம்பினங்கள் அருகிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. பாம்புகள் குறித்த விரிவான ஆய்வுகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அதனடிப்படையில் மனித முரண்பாடுகளால் பாம்புகள் கொல்லப்படுவதும், பாம்புகள் கடித்து மனிதர்கள் இறப்பதையும் தடுக்க வேண்டும் என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். “இயற்கை வாழ்வியலில் இருந்து அந்நியப்பட்டு போன தலைமுறையினால் இப்பூவுலகில் பல்லுயிர் பெரும் அழிவிற்கு தள்ளப்பட்டுள்ளது. அதில் ஊர்வன இனத்தில் பாம்பினங்களும் அடங்கும்” என, விஸ்வா நாகலட்சுமி எழுதிய ‘ஐ பாம்பு’ புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/ce7848ejly9o