Jump to content

Search the Community

Showing results for tags 'புருஜோத்தமன் தங்கமயில்'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

  1. தமிழ்த் தேசிய வெளியின் புலமைத்துவ வீழ்ச்சி புருஜோத்தமன் தங்கமயில் தமிழ் அரசியல், சமூக மற்றும் புலமைத்துவப் பரப்பு கடந்த சில ஆண்டுகளாக எந்தவிதமான நம்பிக்கையான முயற்சிகளையோ மாற்றங்களையோ காட்டாமல் வெறுமையால் நிரம்பியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிவுகளில் இருந்து சற்று வேகமாகவே மீண்டெழுவது தொடர்பிலான ஆக்ரோசத்தை தமிழ்ச் சமூகம் வெளிக்காட்டினாலும், அதனை நெறிப்படுத்தி முன்னோக்கி நகர்த்த வேண்டிய அரசியல் தரப்புக்களும், புலமைத்துவ பீடங்களும் ஆக்கபூர்வமாக எதனையும் மேற்கொள்ளவில்லை. அதனால், தமிழ்ச் சமூகம் பிளவுண்டது மாத்திரமன்றி, தவறான பக்கங்களை நோக்கிய விரைவாக ஓடத் தொடங்கியிருக்கின்றது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பாக தமிழ் மக்கள் சந்தித்த பின்னடைவுகள் பாரியளவானவை. அந்தப் பின்னடைவில் இருந்து மீண்டெழுவது என்பது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல. ஆனால், அதற்கான முயற்சிகளில் உண்மையான அர்ப்பணிப்பும் உழைப்பும் அவசியமானது. அதனை வழங்குவதற்கு தமிழ் மக்கள் எப்போதுமே தயாராகவே இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களை ஒருங்கிணைந்து வழிப்படுத்த வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கும் அரசியல் தரப்பும், புலமைத்துவ பீடங்களும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவதற்கு பதிலாக அதிக தருணங்களில் மக்களை இன்னும் பின்னுக்கு இழுத்துவிடும் வேலைகளை மேற்கொள்கின்றது. அதிலும், அதீத உணர்ச்சியூட்டல்கள் அல்லது உணர்ச்சிவசப்படுதல் என்ற புள்ளிகளில் நின்று விடயங்களை கையாள இந்த இரு தரப்புக்களும் முயல்வதை தொடர்ச்சியாக காணக்கூடியதாக இருக்கின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம் நிகழ்த்தவிருந்த விரிவுரையொன்று பல்கலைக்கழக நிர்வாகத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டது. சுவஸ்திகாவை விசேட விரிவுரை ஒன்றை நிகழ்த்த யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையே அழைத்திருந்தது. அந்த விரிவுரை இடம்பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், சுவஸ்திகா கொழும்பில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளை பாசிசவாதிகள் என குறிப்பிட்டிருந்தார். இந்த விடயம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் பேசுபொருளானது. இந்தப் பின்னணியிலேயே, யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் சுவஸ்திகாவின் விரிவுரையை தடுத்து நிறுத்தியிருக்கின்றது. அவரின் விரிவுரை இடம்பெறுமானால் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுப்பார்கள், அதனால் பல்கலைக்கழகம் அசௌகரியங்களைச் சந்திக்கும் என்ற ரீதியில் அந்த விரிவுரை தடுத்து நிறுத்தப்படுவதற்கான காரணமாக சட்டத்துறை உள்ளடங்கிய கலைப்பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம் உள்ளிட்ட நிர்வாகத் தரப்பு வழங்கியிருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலில் எழுச்சியில் யாழ். பல்கலைக்கழகத்தின் வகிபாகம் அதிகமானது. ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் அஹிம்சை வழியில் இருந்து ஆயுதப் போராட்டத்தை நோக்கி நகர்ந்த போது, யாழ். பல்கலைக்கழகமும் அதனை விமர்சனங்கள் இன்றி ஆதரிப்பதற்கான கட்டத்தை நோக்கி பெரும்பாலும் நகரத் தொடங்கியது. மாற்றுக் கருத்துக்கள் வெளிவருவதற்கான சூழல் ஒரு கட்டத்தில் இல்லாமற்போனது. தமிழ் மக்களின் புலமைப்பீடங்களில் பிரதான பீடமான யாழ். பல்கலைக்கழகம் மாற்றுக் கருத்துக்களுக்கான வெளியை நிராகரிக்கத் தொடங்கிய புள்ளி, தமிழ் அரசியல் தோல்விகளுக்கும் ஒரு காரணமாகத் தோன்றியது. ஏனெனில், போராடும் சமூகத்துக்கும் மக்களின் ஒருங்கிணைவு என்பது அதிமுக்கியமானது. அதேபோல், கேள்விகளுக்கு அப்பால் மக்கள் ஒரு புள்ளியில் ஒருங்கிணையும் போது, அதனைச் சீர்ப்படுத்துவதற்கு புலமைத்துவ தரப்புக்களின் கேள்விகள் அவசியமானவை. அதுதான், மக்களை ஒருங்கிணைக்கும் தரப்புக்கள் தவறிழைக்கும் பட்சத்தில் அந்தத் தரப்புக்களை திருத்துவதற்கு உதவும். ஆனால், தமிழ்ச் சூழலில் அந்த வாய்ப்பு என்பது பெரிதாக நிகழவேயில்லை. இந்தப் பத்தியாளரை நோக்கி, வெளிநாட்டு ஆய்வு மாணவர் ஒருவர், “ஈழத்து (குறிப்பாக, வடக்கு - கிழக்கு) புலமைத்துவ வெளி என்பது ஏன் தொடர்ந்தும் வெற்றிடமாக இருக்கின்றது. சொல்லிக் கொள்ளும் அளவுக்கான புலமைத்துவ ஆய்வுக் கட்டுரைகளையோ, மக்களை நேர் வழிப்படுத்தும் ஆக்கங்களையோ காணக் கிடைக்கவில்லை. அதுக்கு காரணம் என்ன?” என்றார். இந்தக் கேள்வியை எதிர்கொள்ள வேண்டியது குறித்து இந்தப் பத்தியாளர் மனதளவில் பெரும் வருத்தமடைந்தார். ஆனால், அந்தக் கேள்வியில் இருக்கும் உண்மைத்தன்மையைக் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் தவிர்க்க முடியாதது. ஆயுதப் போராட்டத்தின் போக்கு எதனை நோக்கியிருக்கின்றது என்பது குறித்து உணர்ந்து கொண்டிருந்தாலும், அதனைக் குறித்து வெளிப்படையாக உரையாடுவதற்குத் தயாராக இருக்கவில்லை. அதிக நேரங்களில் ஆயுதப் போராட்டத்தின் போக்கினை மெச்சும் கருத்துருவாக்கங்களை மாத்திரமே பேருரைகளாக, ஆய்வுக் கட்டுரைகளாக, அரசியல் பத்திகளாக தமிழ்ச் சூழல் நிகழ்த்தியும் எழுதியும் வந்திருக்கின்றது. அதனால், தவறுகளை களைவதற்காக புள்ளிகள் என்பவனவே இல்லாமல் போனது. அதுவே, ஒருகட்டத்தில் முள்ளிவாய்க்கால் முடிவுகளை நோக்கித் தள்ளியது. அதுவரையும், தமிழ்ச் சூழலில் புலமையாளர்களாகவும் ஆய்வாளர்களாகவும் காட்டிக் கொண்டவர்கள் எல்லாமும் அமைதியாகிவிட்டார்கள். ஏனெனில், அவர்கள் ஆயுதப் போராட்ட காலத்தில் பேசியதும் எழுதியதும் அதிகமானவை பொய்த்துப் போய்விட்டன. அதனைத் தாண்டி இன்றைக்கு அவர்களினால் பேசவும் எழுதவும் முடியாது. அப்படி எழுதினாலும் அதனை யாரும் கவனத்தில் எடுக்கவே மாட்டார்கள். ஏனெனில், எப்போதுமே தோற்றுப்போன கருத்தியல்களின் நீட்சியை மக்கள் சுமக்க விரும்ப மாட்டார்கள். அதற்கு இன்றும் வாழும் உதாரணங்களா பல புலமையாளர்களை ஆய்வாளர்களை தமிழ்ச் சூழலில் காணலாம். அவர்களிடம் குற்றவுணர்ச்சியும் ஏமாற்றமுமே அதிகம் மிஞ்சியிருக்கின்றது. ஏனெனில், கடந்த காலத்தில் அவர்களில் பெரும்பான்மையான தரப்புக்கள் மாற்றுக் கருத்துக்களை நிராகரித்து நின்ற தரப்பினராகும். அவ்வாறானவர்கள் இன்றைக்கு மாற்றுக் கருத்துக்களோடு வரும்போது, அவை இலகுவாக புறந்தள்ளப்பட்டுவிடும். யாழ். பல்கலைக்கழகம் இன்றைக்கும் ஒற்றைப் புள்ளியில் நின்று மாத்திரமே சிந்திக்கத் தலைப்படுகின்றது. மாணவர்களிடம் கருத்துருவாக்கங்களையும் விவாதங்களையும் தோற்றுவித்து சமூகத்துக்கு பங்களிக்க வேண்டிய புலமைத்துவ பீடமொன்று தொடர்ச்சியாக ஒற்றைப் புள்ளியில் (அல்லது ஏக வாதத்தில்) நின்று செயற்பட முனைவது என்பது அபத்தமானது. சுவஸ்திகாவின் விரிவுரையை எதிர்கொண்டு கருத்தியல் விவாதங்களை செய்யக்கூடிய மாணவர்களை உருவாக்குவதுதான் புலமைப்பீடத்தின் வேலை. மாறாக, எதிர்க்கருத்து ஒன்று வருகின்றது என்றால் அதனை எதிர்கொள்வதற்குப் பதிலாக வகுப்பு புறக்கணிப்பு, போராட்டங்கள் என்று இறங்குவது என்பது ஆரோக்கிய சமூகத்துக்கான அடையாளம் இல்லை. ஏனெனில், இவ்வாறான நிலை, கருத்தியலாக மோதும் சமூகத்தை இல்லாதொழித்துவிடும். சுவஸ்திகாவின் விரிவுரையைத் தடுத்து நிறுத்தியமையைக் யாழ். பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டது. அறிக்கை வெளியாகி 24 மணிநேரங்களுக்குள்ளேயே மாணவர்களின் எதிர்ப்பினால் அந்த அறிக்கை மீளப்பெறப்பட்டது. புலமைப்பீடமொன்று குறிப்பாக, ஆசிரியர்கள் அனைத்து விதமான கருத்துக்களையும் விவாதிப்பதற்கான களங்களை உருவாக்கிக் கொடுக்கும் தரப்பினராக இருக்க வேண்டும். ஆனால், யாழ். பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்களின் சிறு எதிர்ப்பைக் கூட சமாளிக்க முடியாமல், மிக மோசமான முடிவுகளை எடுத்து நடந்து கொண்டிருக்கிறார்கள். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் சுமுகமான இயக்கத்துக்கு ஆசிரியர்களும், நிர்வாகமும் பொறுப்புக் கூற வேண்டியது அவசியமானது. அதனால் புலமைத்துவ வெளியை நிராகரிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. சுவஸ்திகாவின் விரிவுரையை தடுத்து நிறுத்தியுள்ளதன் மூலம், தமிழ்த் தேசிய அரசியல், சமூக, புலமைத்துவப் பரப்பு தொடர்பில் ஏனைய தரப்புக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வது போன்றே அமைகின்றது. குறிப்பாக, கருத்துக்களோடு மோதுவதற்கு தமிழ்த் தேசிய அரசியல் தயாரில்லை என்று கொழும்பு மைய தாராளவாதிகளும், புதிய இடதுசாரிக் குழுக்களும் முயன்று வருகின்றன. அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய வெளி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்த வேண்டும். அதனைவிடுத்து, தங்களின் தோல்விக்கான வெளிகளை திறந்துவிடக் கூடாது. யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்தது மாதிரியான விடயங்கள் மீண்டும் மீண்டும் நிகழாமல், ஆளுமையுள்ள பரப்பாக தமிழ்த் தேசிய அரசியல், சமூக, புலமைத்துவ வெளி தன்னைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-வெளியின்-புலமைத்துவ-வீழ்ச்சி/91-328327
  2. சம்பந்தன் பதவி விலகுவதே மக்களுக்கான அறம் புருஜோத்தமன் தங்கமயில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் பாராளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி இன்னொருவருக்கு இடமளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்து ஊடகக் கவனம் பெற்றிருக்கின்றது. சம்பந்தன் கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பினால் உடலளவில் பெரிதும் தளர்ந்துவிட்டார். அவரினால் வெளியிடங்களுக்குப் பயணிக்க முடியவில்லை. பாராளுமன்றத்துக்கான வருகை என்பது கிட்டத்தட்ட முடங்கிவிட்டது. அவர் என்ன பேசுகிறார் என்பதை இன்னொருவர் கேட்டுச் சொல்லும் நிலை இருக்கிறது. அப்படியான நிலையில், பௌத்த சிங்கள அடிப்படைவாதத் தரப்புக்களின் தொடர் ஆக்கிரமிப்புக்களினால் அல்லாடும் திருகோணமலை மாவட்டத்திற்குக் களத்தில் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினரின் தேவை தவிர்க்க முடியாதது. மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் தொடங்கி களத்தில் மக்கள் பிரதிநிதியாக சம்பந்தன் பங்குபற்ற முடியாத போது, அந்த இடம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பெரும் சாதகமான நிலையை ஏற்படுத்துகின்றது. அதனால்தான், திருகோணமலை மக்கள், சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கடந்த சில வருடங்களாக இருக்கிறார்கள். கடந்த வருடம் தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டமொன்றின் போது, திருகோணமலை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று, சம்பந்தனை பதவி விலகுமாறு கோரிக்கையை வைத்தார்கள். இதனையடுத்து, சம்பந்தனை பவ்வியமாக பேசி பதவி விலகுமாறு கோருவதற்கான குழுவை, தமிழரசுக் கட்சி மாவை சேனாதிராஜா தலைமையில் அமைத்திருந்தது. அந்தக் குழு, சம்பந்தனைச் சந்தித்துப் பேசியும் இருந்தது. அப்போது, அந்தக் குழுவிடம், “...நான் உடல் தளர்ந்திருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டுதான் திருகோணமலை மக்கள் தெரிவு செய்தார்கள். அப்படியான நிலையில் நான் ஏன் பதவி விலக வேண்டும்...” என்று சம்பந்தன் பதிலளித்திருக்கிறார். அத்தோடு அந்த விடயத்தைத் தமிழரசுக் கட்சி கைவிட்டது. ஆனால், திருகோணமலை மாவட்ட மக்களோ, தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளையினரோ சம்பந்தனின் நிலைப்பாட்டை விசனத்துடன், நோக்கி வந்தனர். ஏனெனில், திருகோணமலையில் திட்டமிட்ட ரீதியில் பௌத்த அடையாளங்கள் திணிப்பு மற்றும் காணி அபகரிப்பு என்பன பெருவாரியாக இடம்பெற்று வருகின்றது. இதனைத் தடுப்பதற்காக தங்களின் பிரதிநிதி களத்தில் இருக்க வேண்டும் என்பதே மக்களின் ஒற்றைக் கோரிக்கை. ஆனால், சம்பந்தன் அதுபற்றி கவலையின்றி பதவியைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த வாரம் தொலைக்காட்சி விவாதமொன்றில் நெறியாளர், பாராளுமன்றத்துக்கு வருகை தரமுடியாமல் இருக்கும் ஒருவருக்காக மக்களின் இலட்சக்கணக்கான பணம் மாதாந்தம் வீணடிக்கப்படுகின்றது. இதனை, ஊழலாகக் கருத முடியாதா? என்ற தொனியிலான கேள்வியொன்றை சம்பந்தன் தொடர்பில் எழுப்பினார். அதற்குப் பதிலளிக்கும் போது சுமந்திரன், சம்பந்தனின் பதவி விலகல் குறித்துப் பேசி கேள்வியை மடை மாற்றியிருக்கிறார். ஏனெனில், கேள்வி, மக்களின் இலட்சக்கணக்கான வரிப்பணத்தைப் பாராளுமன்றத்துக்கே வராமல் இருக்கும் ஒருவருக்காக செலவழிப்பது என்பது ஒருவகையில் ஊழலைப் போன்றதுதானே என்ற கேள்வியாக இருந்தது. அப்படியான நிலையில், சம்பந்தனை ஊழல்வாதியாகக் கேள்வி எழுப்பும் விடயத்தை மடைமாற்றுவதற்காக சுமந்திரன், சம்பந்தன் பதவி விலகுவது குறித்துப் பேசியிருக்கிறார். சம்பந்தனின் பதவி விலகல் குறித்த சுமந்திரனின் பேட்டி வெளியாகியதும், தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் சுமந்திரன் எதிர்த்தரப்பினர், சம்பந்தனுக்கு ஆதரவாக அறிக்கைகளை விட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், திருகோணமலை மக்களிடம் இருந்தோ, தமிழரசுக் கட்சியின் திருகோணமலைக் கிளையிடம் இருந்தோ எந்த எதிர்ப்பும் இதுவரை சுமந்திரனுக்கு எதிராக எழவில்லை. குறித்த தொலைக்காட்சி பேட்டியில் சுமந்திரன், சம்பந்தன் பதவி விலகத் தேவையில்லை என்று பதிலளித்திருப்பாரானால், எதிர்வினைகளை வேறு மாதிரியாக இருந்திருக்கும். அப்போது, திருகோணமலை ஆக்கிரமிப்புக்குள்ளாகி வரும் நிலையில் களத்தில் செயற்படுவதற்குப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேவை. அதனை உணர்ந்து கொள்ளாமல் சம்பந்தனைத் தொடர்ந்தும் காப்பாற்றும் வேலைகளில் சுமந்திரன் ஈடுபட்டு வருகிறார். இது, திருகோணமலை மக்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் இழைக்கும் துரோகம் எனும் அறிக்கைகள் வெளியாகியிருக்கும். அப்போதும் சுமந்திரன் பேசுபொருளாகியிருப்பார். வயது மூப்பு உபாதைகளினால் அல்லாடுவதனால் கடந்த பொதுத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடும் எண்ணத்தில் சம்பந்தன் இருக்கவில்லை. அதற்காகவே அவர் திருகோணமலையில் குகதாசனை அடுத்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் முன்னிறுத்தி கட்சிக் கிளையைக் கையளித்திருந்தார். ஆனால், தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பிலான கலந்துரையாடல்களில் சம்பந்தனை எப்படியாவது நேரடி வேட்பாளராக நிறுத்திவிட வேண்டும் என்பதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறியாக இருந்தார். வயது மூப்பினை முன்னிறுத்தி சம்பந்தன் போட்டியில் இருந்து விலகிவிட்டால், தனது வயதைக் காரணங்காட்டி யாழ்ப்பாணத்தில் தன்னாலும் போட்டியிட முடியாமல் போய்விடும் என்பது அவரின் பயம். அத்தோடு, சம்பந்தன் நேரடியாகப் போட்டியிடாவிட்டாலும் கிடைக்கும் தேசியப் பட்டியல் ஊடாக அவர் பாராளுமன்ற உறுப்பினராகி விடுவார். அப்படியான நிலையில், தேசியப் பட்டியல் பதவியும் தனக்குக் கிடைக்காது. அதனால், சம்பந்தனை போட்டியிட வைப்பதுதான், தான் மீண்டும் போட்டியிடுவதற்கான ஒரே வழி என்று மாவை நம்பினார். அதனால்தான், போட்டியிட விரும்பாத சம்பந்தனை வற்புறுத்தி திருகோணமலை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட வைத்தார்கள். அப்போது, சம்பந்தன் இரண்டு நிபந்தனைகளை முன்வைத்தே தேர்தலில் போட்டியிடுவதற்கு இணங்கினார். அதில் முதலாவது, தான் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவதாக இருந்தால் கட்சிக்குக் கிடைக்கும் தேசியப்பட்டியலில் திருகோணமலைக்கு முதலாவதாக ஒதுக்க வேண்டும். அதுவும், குகதாசனுக்கு அது வழங்கப்பட வேண்டும். இரண்டாவது நிபந்தனை, தான் ஒரு வருடத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிவிடுவேன். இவற்றுக்கு இணங்கினால் தான் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுகிறேன் என்று சம்பந்தன் கூறியிருந்தார். அந்தத் தேர்தலில் சம்பந்தன் போட்டியிட்டு வெற்றிபெற்று மூன்று ஆண்டுகள் தாண்டி விட்டது. ஆனால், அவர் இப்போதும் பதவியில் இருக்கிறார். முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த 14 ஆண்டுகளில் சம்பந்தன், தமிழ்த் தேசிய அரசியலில் அசைக்க முடியாத தலைவர். வயது மூப்பின் அவஸ்தைகளினால் அவர் அல்லாடத் தொடங்கிய பின்னரே, கூட்டமைப்பு பிளவு கண்டது. இன்றும் தமிழ்த் தேசிய அரசியலின் பெருந்தலைவராக சம்பந்தனையே தென் இலங்கையும் சர்வதேசமும் நோக்குகின்றது. அப்படியான நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் பதவி இருந்தால்தான் தனக்கு மரியாதை என்று நினைப்பதெல்லாம் இவ்வளவு அரசியல் அனுபவமுள்ள சம்பந்தனுக்கு நல்லதல்ல. அவரின் சுயநல சிந்தனை, திருகோணமலை போன்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ்ப் பாரம்பரிய நிலத்தைத் தொடர்ச்சியாகக் காவு கொடுப்பதற்குக் காரணமாக மாறுகின்றது. தமிழரசுக் கட்சி இன்று களத்தில் செயற்படும் நிலையை மெல்ல மெல்ல இழந்து வருகின்றது. கட்சிக்குள் சுமந்திரன், சிறீதரன் போன்ற ஓரிருவர் மாத்திரமே செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கட்சியை தோல்வியின் பக்கத்தில் நகர்த்தினாலும் தலைமைப் பதவியை விட்டுக் கொடுப்பதற்கு தயாராக இல்லாதவராக மாவை சேனாதிராஜா இருக்கிறார். அவர், கட்சியின் செயல் தலைவராக தனது மகனை நியமித்துவிட்டாரா என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில், அவர் தமிழ்க் கட்சிகளின் முக்கிய கூட்டங்களுக்கு எல்லாம் தனக்குப் பதிலாக மகனை அனுப்பி வருகிறார். அதனை தமிழரசுக் கட்சியின் நிர்வாக கட்டமைப்பு ஏற்றுக் கொள்கிறதா என்ற கேள்வி எழுகின்றது. ஒரு பக்கம் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவராக சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பற்றிப்பிடித்திருக்கிறார். இன்னொரு பக்கம் மாவை கட்சித் தலைமையை கைவிடுவதாக இல்லை. இவர்கள் இருவரும் அரசியலில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்றைய அரசியல் ஒழுங்கைப் புரிந்து கொள்ளாமல் தவறிழைக்கிறார்கள். இது, வரலாற்றுத் தவறாக பதிவாகும் சூழல் ஏற்பட்டுவிடலாம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சம்பந்தன்-பதவி-விலகுவதே-மக்களுக்கான-அறம்/91-327309
  3. தோல்விகளை மறைப்பதற்காக கதவடைப்பு போராட்டமா? புருஜோத்தமன் தங்கமயில் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அச்சுறுத்தல்களினால் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அவருக்காக நீதி கோரி தமிழ்த் தேசியக் கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தினை 20ஆம் திகதி நடத்தத் தீர்மானித்திருக்கின்றன. நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அழுத்தங்கள் அச்சுறுத்தலுக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தினை நடத்தின. ஆனால், அந்தப் போராட்டத்தில் சில நூற்றுக்கணக்கானவர்களே கலந்து கொண்ட பின்னணியில், அது தோல்விகரமான போராட்டம் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. மக்களை போராட்டக்களத்தினை நோக்கி அழைத்து வருவதற்கான திராணியை தமிழ்க் கட்சிகள் இழந்துவிட்டன என்ற விடயமும் மேலெழுந்தது. பிரதான ஊடகங்கள் தொடங்கி சமூக ஊடகங்கள் வரையில், மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்ட விதம், அங்கு நிகழ்த்தப்பட்ட மண்டியிட்டு ஜெபிக்கும் தோரணையிலான அரங்காற்றுகை வரை கேலிக்குள்ளானது. இதனால், தமிழ்க் கட்சிகள் அவசரமாக கூடி கதவடைப்பு போராட்டத்துக்கான அழைப்பை விடுத்திருக்கின்றன. முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நாட்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு மெல்ல மெல்ல விரிசல் அடைந்து வந்திருக்கின்றது. ஏனெனில், தமிழ்க் கட்சிகள், அதன் தலைவர்கள் மீதான நம்பிக்கையை மக்கள் வெகுவாக இழந்துவிட்டமையே அதற்கு காரணமாகும். முள்ளிவாய்க்கால் கொடூரங்களுக்கு எதிராக நீதி கோரி மக்கள் கனதியான போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அதில், பல போராட்டங்கள் அரசியல் கட்சிகளால் அன்றி பாதிக்கப்பட்ட மக்களால் நடத்தப்பட்டன. அரச புலனாய்வுத்துறை உள்ளடங்கி அரச படைகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பேரெழுச்சியான போராட்டங்களை கடந்த பதின்நான்கு ஆண்டுகளில் மக்கள் நடத்தியிருக்கிறார்கள். அந்தப் போராட்டங்களின் எழுச்சியின் போக்கில், ராஜபக்ஷக்களைத் தோற்கடிக்க வேண்டும் என்கிற உணர்வும் கனதியாக மேலெழுந்தது. அதனால், அதற்காக கருவியாக தேர்தல்களை தமிழ் மக்கள் கையாண்டிருக்கிறார்கள். அதுதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2015 பொதுத் தேர்தல் வரையில் அபரிமிதமான வாக்குகளைப் பெற்று தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற நிலையை அடையக் காரணமானது. ஆனால், ராஜபக்ஷக்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தோடு காட்டிய இணக்கமும், அதன் விளைவுகளும் மக்களை பாரியளவு விரக்தியடைய வைத்தது. ஏனெனில், கூட்டமைப்பு மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை பெரியளவில் நிறைவேற்ற முடியாமல் போனது. அதிக நேரம் நல்லாட்சி அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கான போராட்டத்திலேயே காலத்தைக் கடத்தியது. அதுதான், 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும், கடந்த பொதுத் தேர்தலிலும் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு காரணமானது. அந்தப் பின்னடைவை, அரச ஆதரவுக் கட்சிகள் சில அறுவடை செய்தும் கொண்டன. 2015 பொதுத் தேர்தலில் 16 பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றி கொண்டிருந்த கூட்டமைப்பு கடந்த பொதுத் தேர்தலில் 10 உறுப்பினர்களுக்குள் சுருங்கியா. ஆறு உறுப்பினர்களின் இழப்பு என்பது, பாரிய வீழ்ச்சியாகும். ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சி வருவதற்கும் வந்த பின்னரும், சிங்கள பௌத்த அடிப்படைவாதம் என்கிற ஒன்றை இலக்கை முன்னிறுத்திக் கொண்டிருந்தார்கள். அதனால், நாட்டின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி உள்ளிட்ட அடிப்படையான எவை பற்றியும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. அதனால், அவர்களை கடந்த ஆண்டு தென் இலங்கை மக்களே விரட்டியடிக்கும் நிலை ஏற்பட்டது. அத்தோடு, கொரோனா தொற்று என்கிற நிலை மக்களின் பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்கியது. அதன் பின்னர், ராஜபக்ஷக்கள் நாட்டை திவாலாக்கிவிட்டு ஓடியதனாலும் மக்களின் மீதான பொருளாதாரச் சுமை என்பது தலைநிமிர முடியாதளவுக்கு அதிகரித்தது. அப்படியான சூழலில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் வாய்மாலங்களை கேட்பதற்கான சூழல் இல்லாமல் போனது. அதிக தருணங்களில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஒலிவாங்கியின் முன்னால் மணிக்கணக்கில் வீர வசனம் மட்டுமே பேசுவதற்கு தகுதியானவர்களாக இருக்கிறார்கள். அதனைவிடுத்து, தமிழ் மக்களின் அரசியல் இலக்குகளை அடைவதற்கான செயற்திட்டங்களோ, அதனை நோக்கி பயணிப்பதற்கான அர்ப்பணிப்பையோ வெளிப்படுத்தவதில்லை. இவ்வாறான நிலை மக்களை இன்னும் இன்னும் சோர்வடையச் செய்தது. அப்படியான சூழலில் மக்களின் பெரும் பங்களிப்போடு கடந்த காலங்களில் எழுந்த போராட்டங்கள் மெல்ல மெல்ல காணாமற்போகத் தொடங்கின. இன்றைக்கும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக போராடத்தான் செய்கிறார்கள். ஆனால், அதில், மக்களின் பங்களிப்பின் அளவுக்கு என்பது வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த காலங்களில் ஒரு போராட்டக் களத்தை நோக்கி ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்தார்கள். ஆனால் இன்றைக்கு அது சில நூறாக சுருங்கி விட்டது. ஏன், சில தருணங்களில் நாற்பது ஐம்பது பேர் என்ற அளவுக்குள் சுருங்கி விட்டது. தமிழ்த் தேசிய அரசியல் என்பது அநீதிகளுக்கு எதிரான அர்ப்பணிப்பான போராட்டங்களினால் எழுந்து வந்தது. ஆனால், இன்றைக்கு தங்களை தமிழ்த் தேசியக் கட்சிகளாக, இயக்கங்களாக, தலைவர்களாக முன்னிறுத்தும் பெரும்பாலானோரிடம் அர்ப்பணிப்பு என்ற ஒன்றைக் காணவே முடியாது. மாறாக, பதவி பகட்டுக்காக தமிழ்த் தேசிய அரசியலைக் கருவியாக அவர்கள் கையாள்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டம் ஏன் தோல்வி கண்டது? அங்கு மக்களை திரட்ட முடியாமைக்கான காரணங்கள் என்ன? என்றெல்லாம் இந்தக் கட்சிகள் சிறிதும் யோசிக்கத் தலைப்படவில்லை. மாறாக, போராட்டத்தின் தோல்விக் கணத்தினை மறைப்பதற்காக அவசர அவசரமாக கதவடைப்பு போராட்டம் என்ற அறிவித்தலை விடுத்திருக்கின்றன. தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பலர் வயது மூப்பினால் அல்லாடுகிறார்கள். அவர்களினால் அதிக நேரம் போராட்ட களத்தில் நிற்க முடியாது. கட்சிக்காரர்களையோ, ஆதரவாளர்களையோ திரட்டுவதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில்லை. மாறாக, பெயருக்கு போராட்ட அறிவித்தலை விடுத்துவிட்டு, அரை மணிநேரம் போராட்டக் களத்துக்கு வந்துவிட்டு, ஊடகங்களிடம் ஏதாவது பேசிவிட்டு சென்றால் போதுமானது என்று நினைக்கிறார்கள். ஏனெனில், மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாமும் பங்கு பற்றின. ஒவ்வொரு கட்சியும் 500 பேரவை அழைத்து வந்திருந்தால்கூட போராட்டக்களத்தில் 3000 பேராவது திரண்டிருப்பார்கள். அதனைப் பார்த்து மக்களும் வந்திருப்பார்கள். ஆனால், ஒவ்வொரு கட்சியும் இருபது முப்பது பேரோடு போராட்டக் களத்திற்கு வருகிறார்கள். அப்படியான இடத்தில் எப்படி மக்கள் நம்பிக்கை கொண்டு வருவார்கள்? மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மக்கள் பங்களிப்பின்னை குறித்து கட்சிகளை நோக்கி கேள்வி எழுப்பியதும், தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் மக்களின் மேல் குற்றஞ்சாட்டுகிறார்கள். போராட்டம் அறிவிக்கப்பட்டால் மக்கள் பெருவாரியாக வர வேண்டும் என்ற தோரணையிலான அணுகுமுறையாக இருக்கின்றது அது. போராட்டத்தின் நோக்கம் பற்றி தெளிவுபடுத்தி மக்களைத் திரட்டுவதற்கான எந்த எத்தணிப்பையும் எடுக்காமல் விட்டுவிட்டு மக்கள் மீது குற்றஞ்சாட்டும் நிலை என்பது, கட்சிகளின் அபத்தமான அரசியலாகும். தங்களின் அரசியல் தோல்விகளை மறைப்பதற்காக கதவடைப்பு போராட்டத்தை அவசரமாக அறிவிப்பது என்பது, மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பொறுப்பற்ற செயல் என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது. ஜனநாயக போராட்டத்தில் கதவடைப்பு போராட்டம் என்பது ஒரு வடிவம். ஆனால், அது, மூன்றாம் நான்காம் நிலையில் வருவது. கூட்டமாக திரளுதல், பேரணியாக எழுதல், மனிதச்சங்கிலி என்ற தொடர் போராட்டங்களுக்குப் பின்னரே, கதவடைப்பு என்ற போராட்ட நிலையை எட்ட வேண்டும். ஏனெனில், கதவடைப்பு போராட்டம் பிள்ளைகளின் கல்வியை குலைக்கும். பொருளாதார முன்னெடுப்புக்களைத் தடுக்கும். மருத்துவ, போக்குவரத்து சேவைகளை பாதிக்கும். குறிப்பாக, அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வை மிக மோசமாக பாதிக்கும். ஏனெனில். ஒவ்வொரு நாளும் தொழிலுக்கு சென்றால்தான் வயிறு நிறையும் என்கிற நிலையில் இங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் கணக்கில் எடுக்காமல், கதவடைப்பு போராட்டத்தை அறிவிப்பது அபத்தமானது. ஏனெனில், போராட்டத்தை அறிவிக்கும் தலைவர்களோ, அவர்களின் குடும்பங்களோ அன்றாடம் காய்ச்சிகள் இல்லை. அவர்களுக்கு வருமான வழிகள் நிறைய இருக்கின்றன. அப்படியான நிலையில், தங்களின் தலைமைத்துவ தோல்வி, பலவீனங்கள், செயற்பாடற்ற தன்மை, மக்களிடம் சந்தித்து நிற்கின்ற அதிருப்தி ஆகியவற்றை சமாளித்து மறைப்பதற்காக கதவடைப்பு என்ற போராட்ட வடிவத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். அது தமிழ்த் தேசியக் கட்சிகள், தலைவர்களின் தோல்வி. அந்தத் தோல்வி கால ஓட்டத்தில் தமிழ் மக்களை மிக மோசமாக பாதிக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தோல்விகளை-மறைப்பதற்காக-கதவடைப்பு-போராட்டமா/91-326332
  4. நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் சொல்லும் செய்தி புருஜோத்தமன் தங்கமயில் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறியுள்ள விடயம், நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் பலத்த விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. தன்னுடைய நீதித்துறை செயற்பாடுகள் மீதான அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகுவதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுக்கு நீதிபதி சரவணராஜா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். குறித்த கடிதம், அவர் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறிய பின்னர் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் அந்தத் கடிதத்தின் படங்கள், அலைபேசியில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைதான், ஆரம்பத்தில் இணைய, சமூக ஊடகங்களில் வெளியாகின. அவற்றை, நீதிபதி சரவணராஜா அல்லது அவரோடு நெருக்கமாக இருந்தவர்கள் ஊடகங்களிடம் வழங்கியிருக்கலாம். முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் அத்துமீறி புத்தர் சிலை அமைக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் நீதிபதி சரவணராஜா, தீர்ப்புக்களை வழங்கியிருக்கிறார். அதில், சட்டத்துக்கு புறம்பாக குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் அகற்றப்பட்ட வேண்டும் என்கிற விடயம் முக்கியமானது. ஏனெனில், அவரின் இடைக்கால உத்தரவுகள், தீர்ப்புக்களையெல்லாம் புறந்தள்ளி, தொல்பொருள் திணைக்களத்தினால் இராணுவத்தின் பங்களிப்போடு, குருந்தூர் மலையில் பௌத்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டன. புத்தர் சிலையும் வைக்கப்பட்டது. தொல்லியல் சிதைவுகள் அல்லது ஆதாரங்கள் குருந்தூர் மலையில் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் கூறுகின்றது. அது, பௌத்த அடையாளங்கள் என்றும் கூறுகின்றது. அதனால், குருந்தூர் மலையில் தமிழ் மக்களினால் காலங்காலமாக முன்னெடுக்கப்படும் ஆதிசிவன் வழிபாட்டினை அனுமதிக்க முடியாது என்ற வாதம் தொல்லியல் திணைக்களத்தினாலும், பௌத்த அதிகார சக்திகளினாலும் வாதிடப்படுகின்றது. குருந்தூர் மலை பௌத்த தொல்லியல் பிரதேசம், அதனால் அங்கு பௌத்த கட்டுமானங்களை அமைப்பதுதான் சரி என்பது, தென் இலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளின் தொடர் வலியுறுத்தல். தமிழ் மக்களைப் பொறுத்தளவில், வரலாற்று காலம் தொட்டு குருந்தூர் மலையில் ஆதிசிவன் வழிபாடு முன்னெடுக்கப்படுகின்றது. அதனை, எந்தவித இடையூறு இல்லாமல் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது கோரிக்கை. அத்தோடு, குருந்தூர் மலையில் காணப்படும் பௌத்த தொல்லியல் எச்சங்கள் தொடர்பில் நியாயபூர்வமான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, அவை எந்தக் காலத்துக்குரியவை என்பது அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இன்னொரு கோரிக்கை. ஏனெனில், அங்கு காணப்படும் பௌத்த எச்சங்கள், தென் இந்தியாவிலும் வடக்கு கிழக்கு இலங்கையிலும் தமிழ்ப் பௌத்தம் கோலொச்சிய காலங்களின் எச்சமாக இருக்கலாம் என்பது வாதம். பௌத்த தொல்லியல் எச்சங்கள் எங்கு மீட்கப்பட்டாலும் அவை, சிங்கள பௌத்தத்தின் எச்சங்கள் என்பது, தொல்லியல் திணைக்களத்தில் நிலைப்பாடாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்தின் கந்தரோடையில் காணப்படும் பௌத்த எச்சங்களையும் அவ்வாறான கண்ணோட்டத்திலேயே தொல்லியல் திணைக்களமும், அதனை இயக்கும் சக்திகளும் வரையறுக்கின்றன. ஏனெனில், அந்த எச்சங்கள் தொடர்பில் உண்மைத்தன்மை வெளிப்பட்டால், வடக்கு கிழக்கில் தமிழ் பௌத்தத்தின் எழுச்சி வீழ்ச்சி பற்றிய உரையாடல் களம் பிறக்கும். அப்படி, அவ்வாறான உரையாடல்கள் நிகழ்ந்தால், இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு உரியது என்ற வாதம் அடிப்பட்டுபோகும் என்பது தென் இலங்கையின் நினைப்பு. அதற்காக, வடக்கு கிழக்கில் அரச மரங்களைக் கண்டால் அங்கெல்லாம் புத்த சிலைகள் வைக்கப்படுகின்றன. அதுபோல, மலைகள், குன்றுகளைக் கண்டாலும் அங்கு புத்த சிலைகள் வைக்கப்பட்டு, பௌத்த சிங்கள ஆதிக்கத்தின் குறியீடாக அவை நிலைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சி நிரலின் போக்கில்தான், நீதிமன்ற உத்தரவுகளை மீறி குருந்தூர் மலையில் பௌத்த கட்டுமானங்கள் செய்யப்பட்டன. வடக்கு கிழக்கிற்கு வெளியே, கண்டுபிடிக்கப்படும் தொல்லியல் எச்சங்களும், பிரதேசங்களும் அவ்வாறே பாதுகாக்கப்படுகின்றன. அங்கு வலிந்த கட்டுமானங்களை தொல்லியல் திணைக்களம் செய்தில்லை. ஆனால், வடக்கு கிழக்கில் மாத்திரம் அத்துமீறிய கட்டுமானங்களை செய்வது என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதற்காக, ஏனைய மதத்தினரின் வழிபாட்டிடங்களை அழித்தல், அகற்றல் என்ற சட்டத்துக்கும் நீதிக்கும் எதிரான செயற்பாடுகளும் தொடர்கின்றன. அவ்வாறான நிலையில், குருந்தூர் மலையில் கட்டப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்கள் தொடர்பில் நீதிபதி சரவணராஜா வழங்கிய தீர்ப்புக்கள் தென் இலங்கையின் ஆதிக்க சக்திகளை எரிச்சலூட்டின. கொழும்பிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உள்ளிட்டவர்கள், குருந்தூர் மலைக்கு சென்று ஆதிக்க மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நீதிபதி சரவணராஜா, குருந்தூர் மலைக்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டபோது, அங்கு அத்துமீறி தலையீடுகளைச் செய்ய சரத் வீரசேகர முயன்றார். அதுபோல, பௌத்த பிக்குகள் சிலரின் தலையீடுகள் இருந்தன. அத்தோடு, நீதிபதி சரவணராஜாவை பொது வெளியில் விமர்சித்து உரையாற்றினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படலாம் என்ற அச்சத்தினால் சரத் வீரசேகர பாராளுமன்ற சிறபுரிமைக்குள் ஒழிந்து கொண்டு இனவாத உரைகளை ஆற்றியிருக்கிறார். அதில், நீதிபதி சரவணராஜாவை மனநலம் குன்றியவர் என்பது வரை அவர் பேசியிருந்தார். அத்தோடு, தென் இலங்கையின் கடும்போக்கு சக்திகள் நீதிபதி சரவணராஜாவை படுமோசமாக விமர்சிக்கவும் தொடங்கின. இந்தப் பின்னணியில், நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றார். நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றத்தோடு ஆட்சியதிகார பீடங்களும் சட்டமா அதிபர் திணைக்களமும் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, நீதிபதியை சட்டமா அதிபர் நேரடியாக அழைத்து, குருந்தூர் மலை தொடர்பிலான வழக்கில் தீர்ப்புக்களை மாற்றுமாறு அழுத்தங்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவல்களின் உண்மைத்தன்மையை நூறு வீதம் யாரினாலும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், அவ்வாறான குற்றச்சாட்டுக்களை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மறுக்கிறார். ஆனால், சட்டத்தரணிகள் சங்கங்கள் தொடங்கி, எதிர்க்கட்சிகள் வரையில் நீதிபதியின் நடவடிக்கைகள் மீது தலையீடுகளும் அழுத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விமர்சிக்கின்றன. இவ்வாறான நிலை, நாட்டின் நீதித்துறையை மிகமோசமாக பாதித்துவிடும். நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறி எங்கிருக்கிறார் என்பது இதுவரை யாருக்கும் உறுதியாக தெரியாது. இப்போதுதான், விசாரணைக்கான உத்தரவினை நீதி அமைச்சர் விடுத்திருக்கின்றார். இந்த விவகாரத்தில் இன்னும் தெளிவான விளக்கங்கள் கிடைக்க வேண்டும் என்றால், நீதிபதி சரவணராஜா தன்னை வெளிப்படுத்திக் கொண்டு பேச வேண்டும். ஏனெனில், அவருக்கு தொடர் அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் இருந்தால் அதனை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டிருக்கலாம். அல்லது, அவரே பொது வெளியில் வெளிப்படுத்தியிருக்கலாம் என்ற வாதம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்றது. இலங்கை நீதித்துறையில் பணியாற்றும் நீதிபதிகள் பலரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, தமிழ் பேசும் நீதிபதிகள் மீதான அச்சுறுத்தல்கள் என்பது வெளிப்படையானது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் அவற்றுக்கு அஞ்சாது பணியாற்றும் நீதிபதிகள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். அப்படியான நிலையில், நீதிபதி சரவணராஜா தன்மீதான அச்சுறுத்தல்களை எதிர்த்து நின்று போராடியிருக்க வேண்டும் என்ற விடயத்தை புறந்தள்ள முடியாது. அந்தவகையில், நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் கேள்விகளுக்கு அப்பாலானதாக மாறுகின்றது. இலங்கையில் அரசாங்கம், நீதித்துறை என்று அனைத்துத் துறைகளையும் தாண்டிய அதிகாரம் பெற்றது பௌத்த சிங்கள பீடங்களும், அதன் துணைச் சக்திகளும். நாடு, பௌத்த சிங்கள அதிகார பீடம் என்கிற அச்சில்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றது. அப்படியான நிலையில், அந்த அதிகார பீடத்தினை கேள்வி கேட்கும் தரப்புக்கள் மீதான அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் எவ்வாறானதாக இருக்கும் என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். அவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான் மக்களுக்கான நீதியை ஒரு சில நீதிபதிகள் நிலை நிறுத்துகிறார்கள். மற்றப்படி, இலங்கையின் இயங்குநிலை என்பது எப்போதும் மாறப்போவதில்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நீதிபதி-சரவணராஜாவின்-வெளியேற்றம்-சொல்லும்-செய்தி/91-325847
  5. 04/21 தாக்குதல் அன்றும் இன்றும் தேர்தலுக்கான யுக்தி உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் தாக்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் முக்கிய பங்கு வகித்தது. அதாவது, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்வது மாத்திரமே ஒற்றைத் தீர்வு என்கிற விடயம் தென் இலங்கை முழுவதும் பெரும் பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்டு, வாக்கு அறுவடை நிகழ்ந்தது. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியோடு ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார்கள். ஆனால், இம்முறை ராஜபக்ஷக்களுக்கு எதிராக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் விவகாரம் முன்னுக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. தற்போது, குறித்த தாக்குதல்கள் தொடர்பில் வெளிவரும் தகவல்களை முறையாக விசாரணை நடத்தினால், அதனோடு தொடர்புடைய பல மூத்த முக்கியஸ்தர்களை கைது செய்ய வேண்டியிருக்கும். அது, ராஜபக்ஷக்களை குறைந்தது பத்து ஆண்டுகளுக்காவது முடக்குவதற்கு போதுமானது என்கிற உணர்நிலையொன்று உண்டு. அதனால், ராஜபக்ஷக்கள் எதிர்வரும் தேர்தல்களை கடந்து நின்று சிந்திக்கும் திரிசங்கு நிலைக்கு வந்திருக்கிறார்கள். கடந்த வருடம் இடம்பெற்ற, ராஜபக்ஷக்களை வீட்டுக்கு விரட்டும் போராட்ட காலத்தில் தங்களுக்கு உதவிய ரணில் விக்ரமசிங்கவையே மீண்டும் ஆபத்பாண்டவராக தேடும் நிலை ராஜபக்ஷக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் வெளியானவுடன், அதன் பின்னணி தொடர்பில் பல தரப்புக்களினாலும் அவதானம் செலுத்தப்பட்டது. அதில், ரணிலை தொடர்ந்தும் ஜனாதிபதியாக இலங்கையில் பேணும் தேவையின் போக்கில், குறித்த ஆவணப்படம் மிகமுக்கிய தாக்கத்தைச் செலுத்தும் என்கிற விடயம் மேலேழுந்தது. ஏனெனில், அந்த ஆவணப்படத்தில் தகவல் வெளியிட்டவர்கள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் ராஜபக்ஷக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டதற்கான சாட்சியங்களாக நின்று வெளிப்படுத்தியிருக்கின்றனர். குறிப்பாக, பதவியிலிருந்து மக்களால் துரத்தப்பட்ட ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்ஷ, இராணுவ புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலே, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்டவர்கள் மீது நேரடியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. 2005 தொடக்கம் 2015 வரையில் இலங்கையில் இடம்பெற்ற சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள், கடத்தல்கள், காணாமற்போகச் செய்தல் தொடர்பில் கோட்டாபாய ராஜபக்ஷவின் ஆணைக்கு இணங்க பிள்ளையான் குழு செயற்பட்டமை, அதற்காக சுரேஷ் சாலே திட்டமிடல் அதிகாரியாக செயற்பட்டமை தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தகவல்களை மூவரும் மறுத்தாலும், அதனை முழுமையாக ஏற்கும் நிலை தற்போதுள்ள சூழலில் இல்லை. அத்தோடு, அவர்களின் மறுப்புத் தெரிவிப்பில் வெளியிடப்படும் விளக்கங்கள் தொடர்பில் சந்தேகங்களும், அவை தொடர்பிலான கேள்விகளும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக முளைத்துக் கொண்டிருக்கின்றன. அந்தக் கேள்விக்கான பதில்கள் பல அரச புலனாய்வு பிரிவுகளுக்கு தெரியும் என்று ஓய்வுபெற்ற முன்னாள் பிரதி பொலிஸ்மாஅதிபர் ஒருவர் தொலைக்காட்சி விவாதமொன்றில் வெளிப்படுத்தியிருந்தார். இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நீண்டு செல்லும் அந்த விவாதத்தை ரணிலின் மூத்த சகோதரரான ஷான் விக்ரமசிங்கவின் டி.என்.எல் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதில், தாக்குதல் தாரிகளுக்கும் புலனாய்வுப் பிரிவிலுள்ள சிலருக்கும் இருந்த தொடர்புகள் பற்றியெல்லாம் பேசப்பட்டிருக்கின்றது. சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் வெளியாகி சில நாட்களுக்குள்ளேயே உள்நாட்டிலுள்ள தொலைக்காட்சியில், அதுவும் அண்மைக்காலத்தில் ஓய்வுபெற்ற பொலிஸ் மேலதிகாரி ஒருவர் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பிலான விடயங்களையும் அதன் சூத்திரதாரிகள் தொடர்பிலும் பேசுவதெல்லாம் அவ்வளவு இலகுவாக நடந்துவிடக் கூடிய காரியம் இல்லை. ஏனெனில், தாக்குதல் சூத்திரதாரிகள் என்று அடையாளப்படுத்தப்படும் தரப்பு, மிகப் பலம் பொருந்தியது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரலாம். அப்படி வந்தால், தன்னுடைய பாதுகாப்பு தொடர்பில் உத்தரவாதமற்ற நிலை அவருக்கு ஏற்படும் என்று தெரிந்து கொண்டே அந்த ஓய்வுபெற்ற அதிகாரி, தொலைக்காட்சியில் தோன்றி விடயங்களைப் பேசியிருக்கின்றார். அப்படியான நிலையில், அவருக்கான பாதுகாப்பு உத்தரவாதம் தற்போது ஆட்சியிலுள்ளவர்களினால் அல்லது, அதற்கு நிகரான தரப்புக்களினால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ராஜபக்ஷ குடும்பத்துக்குள் இருந்து தற்போது இரண்டு நபர்கள் மாத்திரமே ரணிலுக்கு அச்சுறுத்தலாக எழுந்து வரக்கூடியவர்கள். முதலாமவர் பஷில் ராஜபக்ஷ, இரண்டாமவர் நாமல் ராஜபக்ஷ. நாமல் ராஜபக்ஷக்களை, அவரது தகப்பனாரான மஹிந்த ராஜபக்ஷ ஓரளவுக்கு கட்டுப்படுத்தி, விடயங்களை கையாள முயல்வார். அதாவது ரணிலோடு தற்போதைக்கு முட்டல் மோதல் போக்கைக் கைவிட்டு, ஓரளவு இணக்கமாக செல்லும் தேவை தொடர்பில் வலியுறுத்துவார். ஏனெனில், சனல் 4 வெளியிட்டிருக்கிற ஆவணப்படம் மிகப்பெரிய பொறி. அதனை எதிர்கொள்வது ராஜபக்ஷக்களை மிகப்பெரிய அளவில் சிக்கவைக்கலாம். ரணிலை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பதைத் தவிர வேறு நிலை ராஜபக்ஷக்களுக்கு இல்லை என்ற நினைப்புக்கு மஹிந்த வந்திருப்பார் என்று தெரிகிறது. ஏனெனில், அவரின் நீண்டகால அரசியல் அனுபவம் அவருக்கு அதனை வழங்கியிருக்கும். கடந்த காலங்களில் அவர் அமைதியாக இருக்க வேண்டிய இடங்களில் எல்லாம் அமைதி பேணி, ஆக்ரோஷமாக எழ வேண்டிய இடங்களில் அப்படி எழுந்துதான் ஜனாதிபதி பதவியை அடைந்தார். இப்போது ரணிலை முறைத்துக் கொள்வது ராஜபக்ஷக்களின் வம்சத்துக்கு நல்லதல்ல என்ற நிலையில் அவர் இருக்கிறார். தேவையற்று முறைத்துக் கொண்டால், ராஜபக்ஷக்களை பல ஆண்டுகளுக்கு எழ விடச் செய்யாமல் இருக்கக் கூடிய பூதங்களை எல்லாம் ரணில் திறந்துவிடக் கூடும் என்ற சந்தேகம் மஹிந்தவுக்கு இருக்கலாம். ஆனால், பஷில் ராஜபக்ஷ ரணிலோடு சற்று பொருதிப் பார்த்துவிடும் நிலையில் இருக்கிறார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலைக் கைவிட்டால் தன்னுடைய அரசியல் எதிர்காலம் என்பது ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வந்துவிடும் என்பது பஷிலுக்கு தெரியும். அதனால், எப்படியாவது தன்னுடைய பிடியை வைத்துக் கொள்வதற்கான முனைப்பாக ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகும் நிலைக்காக போராடுவார். ரணிலின் பல தசாப்தக் கனவு என்பது, தான் மக்களால் நேரடியாக தேர்தெடுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஒரு முறையெனும் பதவியில் அமர்ந்து விட வேண்டும் என்பது. இப்போது, கிடைத்திருக்கின்ற பதவி, அதிர்ஷ்ட தேவதை வழங்கியது. என்னதான் ஜனாதிபதி என்ற அடையாளம் இருந்தாலும், அது மக்களால் நேரடியாக தேர்தெடுக்கப்பட்ட பதவியல்ல. அது பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட கிட்டத்தட்ட நியமிக்கப்பட்ட பதவி போன்றது. அப்படியான நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோள் மாத்திரமே அவரிடத்தில் இருக்கின்றது. அதற்கு குறுக்காக ராஜபக்ஷக்களோ, வேறுயாரோ வந்தாலும் அவர்களை தாண்டுவதற்கான திட்டங்களோடு தான் அவர் செயற்படுகிறார். அதற்காக, அவருக்கு ஒத்துழைக்கும் தரப்புக்கள் நாட்டுக்கு உள்ளும் வெளியிலும் இருக்கின்றன என்பது அவருக்கான மிகப்பெரிய உத்வேகம். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னணியை ஆராய்ந்து சர்வதேச விசாரணையை நோக்கி செல்வதற்கான அவசியம் உண்டு. அதுதான், குற்றவாளிகளை தண்டிப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை வழங்குவதற்குமான வழிவகைகளை நியாயமாக ஏற்படுத்தும். ஆனால், இலங்கை ஆட்சி அதிகார அரசியல் ஒழுங்கில் நீதியை வழங்குவது தொடர்பிலான சொல்லாடலே தவறு என்பது மாதிரியான உணர்நிலை உண்டு. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்காக சர்வதேச விசாரணையை நாடினால், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான சர்வதேச விசாரணையையும் தமிழ்த் தரப்புக்கள் கோரும். அதனால் அந்த வாசலை இலங்கை அரசு ஒருபோதும் திறக்காது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான வெளிப்பாடுகள் தேர்தல் வெற்றி தோல்விகளுக்காக பயன்பட்டு எதிர்காலத்தில் காணாமல் போகும். அதனைத் தாண்டி, அதிசயங்கள் ஏதும் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. 2023.09.28 https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/04-21-தாக்குதல்-அன்றும்-இன்றும்-தேர்தலுக்கான-யுக்தி/91-325266
  6. குருந்தூர் மலை பொங்கல் விழாவை இனவாதப்படுத்தும் சக்திகள் புருஜோத்தமன் தங்கமயில் வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கொழும்பிலுள்ள வீடுகளை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்துவதற்கான அழைப்பை, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில விடுத்திருக்கின்றார். முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஐயனார் கோவிலில், கடந்த வாரம், நீதிமன்ற அனுமதியோடு பொங்கல் விழா நடைபெற்றது. அந்தப் பொங்கல் விழாவை தடுத்து நிறுத்துவதற்கு, பொலிஸாரும் தொல்லியல் திணைக்களமும் பௌத்த சிங்கள அடிப்படைவாத அமைப்புகளும் பல வழிகளிலும் முயன்றன. இறுதியாக, நீதிமன்றம் சென்று பொங்கல் விழாவை தடுத்து நிறுத்துவதற்கு முயன்றன. எனினும், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், பொங்கல் விழாவை வரைமுறைகளுடன் நடத்துவதற்கான அனுமதியை வழங்கியதுடன், விழாவுக்கான பாதுகாப்பை, பொலிஸார் உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டது. இதனால், ஏற்கெனவே நடக்க இருந்து, பௌத்த சிங்கள அடிப்படைவாத அமைப்புகளால் தடுத்து நிறுத்தப்பட்ட குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் பொங்கல் விழா, கடந்த வாரம் நடைபெற்று முடிந்தது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவில், முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் கோவில் என்பன, தற்போது தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. காலம் காலமாக, தமிழ் மக்களால் வழிபடப்பட்டு வந்த இந்தக் கோவில்கள் அமைந்திருக்கின்ற பகுதிகளை, தொல்லியல் பகுதிகள் என்று வரையறுத்துக் கொண்டு, பௌத்த சின்னங்களை அமைக்கும் ‘ஆக்கிரமிப்பு அரசியல்’ முன்னெடுக்கப்படுகின்றது. குருந்தூர் மலையில் பௌத்த சின்னங்கள் பல நூற்றாண்டுகளாக இருக்கின்றன. ஆனால், அது சிங்கள பௌத்தத்தால் உருவானது என்ற ஆதரமற்ற உரிமை கோரல்களால், அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக இன முறுகல்களை தோற்றுவிக்கும் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கையில் தமிழ்ப் பௌத்தம் செழித்தோங்கிய காலம் உண்டு. அந்தக் காலத்தின் எச்சங்களே, குருந்தூர் மலையில் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்; அதைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். ஆனால், வரலாற்று எச்சங்களை, அதன் அடையாளங்களோடு பாதுகாப்பதற்குப் பதிலாக, தங்களின் இனவாத, மதவாத அரசியலுக்காக, தென் இலங்கை அரசியல் சக்திகள், சிங்கள பௌத்த அடையாளங்களை விதைக்க முயல்கின்றன. குருந்தூர் மலையில் நீதிமன்ற அனுமதியின்றி விகாரை அமைக்கப்பட்டு, வரலாற்று எச்சங்களை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. குருந்தூர் மலையில், தமிழ்ப் பௌத்த எச்சங்கள் காணப்படுவது போல, ஆதிசிவன் ஐயனார் வழிபாட்டு முறையும் நூற்றாண்டுகளாக காணப்படும் ஒன்று! அப்படியான நிலையில், அமைதியாக நடைபெற்றுவந்த குருந்தூர் மலை ஆதிசிவன் வழிபாடுகளுக்கு, தொல்லியல் திணைக்களம் தடைகளை விதித்தது. அப்பகுதி மக்களின் மத நம்பிக்கைகள், வழிபாட்டு உரிமைகள் மீது தடைகளை ஏற்படுத்தி அச்சுறுத்தியது. இந்தத் தடை நடவடிக்கைகளுக்கு எதிராக, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். இதற்கு அந்தப் பகுதி தமிழ்த் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். இதனை மோப்பம் பிடித்த இனவாத அரசியல் சக்திகள், தங்களின் தேர்தல் வெற்றிக்காக குருந்தூர் மலை, வெடுக்குநாறி விவகாரங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றன. பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, பிவித்திரு ஹெல உறுமயவின் உதய கம்மன்பில ஆகியோர், குருந்தூர் மலையில் பொங்கல் விழா நடத்தப்பட்டதை சகித்துக் கொள்ள முடியாமல், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத் தீயை எரிய வைத்திருக்கிறார்கள். இந்த மூன்று அரசியல்வாதிகளும் அடிப்படைவாத சிங்களவாதிகளாக அடையாளம் பெற்றவர்கள். கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு, அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர்கள். ஆனால், கடந்த வருடம் ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டம், பொதுஜன பெரமுனவை மக்கள் மத்தியில் பிரபலமில்லாமல் ஆக்கியது. இன்றைக்கு தேர்தலொன்று நடைபெறுமாக இருந்தால் பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்ற கட்சிகளுக்கு பின்னால்தான் வரும் என்கிற நிலை உண்டு. அண்மைய கருத்துக்கணிப்புகளும் அதையே பிரதிபலிக்கின்றன. அப்படியான நிலையில், சரத் வீரசேகர, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அப்படியான நிலையில், அவர்கள் வெற்றிபெறுவதற்காக கடந்த காலங்களில் கையாண்ட அதே இனவாத அரசியல் அணுகுமுறையை, இப்போதும் மூர்க்கமாக முன்னெடுக்கிறார்கள். அதன்மூலம், சாதாரண சிங்கள மக்களை இனவாத அலைக்குள் தள்ளி, தங்களால் வெற்றியை உறுதியாக்க முடியும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் பொங்கல் விழா நடைபெற்றதை சகித்துக் கொள்ள முடியாத சரத் வீரசேகர, பொங்கல் விழாவை நடத்துவதற்கான உத்தரவை வழங்கிய நீதிபதியை, மனநோயாளி என்று விளித்து குற்றஞ்சாட்டியிருக்கிறார். பாராளுமன்றத்துக்குள் என்ன பேசினாலும், சிறப்புரிமை என்கிற ஒன்றை வைத்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதால் சரத் வீரசேகர இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபடுகின்றார். அதன்மூலம், தன்னை ‘பௌத்தத்தின் காவலன்’ என்று நிறுவ முயல்கின்றார். இன்னொரு புறம், விமல் வீரவங்ச, “அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படாத நிலையிலேயே, குருந்தூர் மலையை தங்களின் சொந்த மலை போல காட்டிக் கொண்டு, தமிழ்த் தலைவர்கள் செயற்படுகிறார்கள். 13ஐ முழுமையாக அமலாக்கினால், சிங்கள மக்களை வடக்கு - கிழக்கில் அனுமதிக்கவே மாட்டார்கள்..” என்ற தொனியில் பேசியிருக்கிறார். அத்தோடு பொங்கல் விழா நடத்தப்பட்டதை, தமிழ்த் தலைவர்கள் பெரிய வெற்றியாக கொள்ள வேண்டியில்லை. சிங்கள மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்று எச்சரித்திருக்கிறார். சரத் வீரசேகர, விமல் வீரவங்ச ஆகியோரின் அச்சுறுத்தல்களைத் தாண்டி, இந்த விடயத்தில் உதய கம்மன்பில ஒருபடி மேலே சென்றிருக்கிறார். அதுதான், வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களில் கொழும்பிலுள்ள வீடுகளை முற்றுகையிடுவதற்கான அழைப்பு! குறிப்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டை முற்றுகையிட்டு போராட, பௌத்த சிங்களவர்கள் தயாராக வேண்டும் என்றிருக்கிறார். அத்தோடு, வடக்கு - கிழக்கில் பௌத்தர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது போலான விடயத்தை, தென்இலங்கையில் விதைக்கிறார். வடக்கு - கிழக்கில் பௌத்த வழிபாட்டு உரிமைகளை யாரும் எந்தக் காலத்திலும் தடுக்கவில்லை. மாறாக, வடக்கு- கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெறும் அத்துமீறிய பௌத்த ஆக்கிரமிப்பு, அடையாளத் திணிப்புக்கு எதிராகவே மக்கள் போராடுகிறார்கள். குருந்தூர் மலையில் காணப்படும் தமிழ்ப் பௌத்த எச்சங்களை, அப்படியே பாதுகாக்க வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களின் கோரிக்கை. வடக்கு - கிழக்குக்கு வெளியில் காணப்படும் வரலாற்று எச்சங்கள், அப்படியே தொல்லியல் திணைக்களத்தால் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், வடக்கு - கிழக்கில் காணப்படும் வரலாற்று எச்சங்களைக் கொண்ட பகுதிகளில் மாத்திரம், சிங்கள பௌத்த அடையாளங்களைக் கொண்ட கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், வரலாற்று எச்சங்கள் அழிவுக்கு உள்ளாகின்றன. இது, திட்டமிட்ட பௌத்த சிங்கள அடையாளத் திணிப்பாகும். இது, நாட்டின் வரலாற்றைத் திரித்து எழுதும் அறமற்ற செயல். நாட்டின் மீது விசுவாசத்தைக் கொண்டிருக்கின்ற யாரும், வரலாற்று எச்சங்கள் மீதான அழிப்பை ஆதரிக்க மாட்டார்கள். ஆனால், தேர்தல் அரசியலுக்கான இனவாதத்தை கையில் ஏந்திவரும் சரத் வீரசேகர போன்றவர்கள், வரலாற்று திரிப்புகளை செய்து, சிங்கள இனவாதத்தை விதைப்பதில் குறியாக இருக்கிறார்கள். இது, வரலாற்றுத் துரோகமாகும். இதைத் தென்இலங்கை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், காலப்போக்கில் தங்களின் தேர்தல் வெற்றிக்காக, தென்இலங்கை மக்களையும் கூறுகூறாகப் பிரித்தாண்டு, நாட்டை இன்னும் மோசமான பாதைக்கு கொண்டு சென்று சேர்த்து விடுவார்கள். தென் இலங்கை மக்களால் தோற்கடிக்கப்பட்டு துரத்தப்பட்ட மேர்வின் சில்வா என்ற அரசியல்வாதி, வடக்கில் பௌத்த விகாரைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால், ஏற்படுத்தியவர்களின் தலைகளை கொய்வேன் என்று பொது மேடையில் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அவர் மீது இன்னமும் எந்தவித சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவர், சுதந்திரமாக உலாவிக் கொண்டிருக்கிறார். மேர்வின் சில்வா, தன்னுடைய அரசியல் கோமாளித்தனங்களால் கடந்த காலங்களில் கவனம் பெற்றவர். குறிப்பாக, முன்னேஸ்வரம் பரமேஸ்வரி கோவில் வழிபாட்டு நடைமுறைகளில் தலையீடுகளைச் செய்து, குழப்பங்களை ஏற்படுத்தி இருந்தார். அப்போது அவர், ராஜபக்‌ஷர்களின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். இப்போது அவர் அரசியல் பங்காளியாக இல்லை. ஆனால், பகிரங்க கொலை அச்சுறுத்தல் விடுத்த பின்னும் அரசினால் பாதுகாக்கப்படுகின்றார். இப்படியான அரசியல் நெறியுள்ள தென் இலங்கையை எதிர்கொண்டுதான், தமிழ் மக்கள் தங்களின் அரசியல் உரிமையை பாதுகாக்க வேண்டியுள்ளது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/குருந்தூர்-மலை-பொங்கல்-விழாவை-இனவாதப்படுத்தும்-சக்திகள்/91-323201
  7. சம்பந்தரை எரிச்சலூட்டிய ரணில் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“...எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தொடர்ந்தும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை..” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கடந்த வாரம் இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் டெலோ, புளொட் அமைப்புகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில், ஜனாதிபதியின் கருத்துகளுக்கு பதிலளித்து பேசும் போதே, சம்பந்தர் மேற்கண்ட கருத்தை கூறியிருக்கின்றார். கடந்த பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதியாக பதவியேற்ற சில நாள்களிலேயே ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தரப்புகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ்த் தரப்பால் முன்வைக்கப்பட்ட அவசர கோரிக்கைகளில் ஒன்றிரண்டைத் தவிர வேறெதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளில் இருந்து கூட்டமைப்பின் பங்காளிகளாக இருந்த டெலோவும், புளொட்டும் விலகின. ஆரம்பத்திலேயே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேச்சுகளைப் புறக்கணித்துவிட்டது. இந்தநிலையில், சி.வி விக்னேஸ்வரனின் தமிழ்த் தேசிய கூட்டணியும் இலங்கை தமிழரசுக் கட்சியும் மாத்திரமே பேச்சுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்தன. ஆனால், கடந்த வாரம், தமிழரசுக் கட்சியும், முன்னேற்றம் அற்ற பேச்சுகளில் தொடர்ந்தும் பங்களிப்பதால் பயனில்லை என்று விரத்தியோடு அறிவித்திருக்கிறது. இப்போது, ரணிலோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், அவரின் அரசியல் திட்டங்களை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் விக்னேஸ்வரன் என்கிற ஒற்றை மனிதர் மாத்திரமே தமிழ்ப் பரப்பில் இருக்கிறார். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில், அதன் பாரம்பரிய விழுமியங்களை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காத அரசியல்வாதியாக சம்பந்தன் இருந்திருக்கிறார். அவருக்கு தேர்தல், வாக்கு அரசியலுக்கு அப்பாலான எந்தப் போராட்ட வடிவங்களின் மீதும் பற்றில்லை. தமிழ் மக்களின் ஆயுத முனைப் போராட்டத்தை அவர், உள்ளூர வெறுத்தார். அரசியல் சூழலால், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுமைக்குள் இயங்கிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த போதிலும் கூட, அவர் ஆயுதப் போராட்டத்தை வெறுத்தார். எந்த அரசியல் முனைப்பும் பேச்சுவார்த்தை என்ற வடிவத்தில் முன்னெடுக்கப்பட வேண்டியது என்று இன்றும் நம்பியிருக்கும் சம்பந்தன், அரசியலில் 50 ஆண்டுகளைத் தாண்டிய அனுபவத்தைக் கொண்டிருக்கிறார். அந்தக் காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தோடும், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுடனும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பேச்சுவார்த்தைகளிலாவது பங்கெடுத்திருப்பார். இந்தப் பேச்சுவார்த்தைகளில் பரிமாறப்பட்ட நம்பிக்கை வார்த்தைகள், இணக்கப்பாடுகள் தொடர்பில் அவர் அதிக தடவை நம்பிக்கையோடு இருந்திருக்கிறார். மைத்திரி- ரணிலின் நல்லாட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருந்தாலும், தானும் அரசாங்கத்தின் ஒரு பங்காளிபோலவே சம்பந்தன் இயங்கினார். புதிய அரசியலமைப்பின் ஊடாக, தமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுவிட முடியும் என்று அவர் நம்பினார். அதனால், அவர் அடுத்த தீபாவளிக்குள் தீர்வு, பொங்கலுக்குள் தீர்வு என்று தொடர்ந்தும் கூறி வந்தார். அத்தோடு, எந்தளவு விட்டுக்கொடுப்பைச் செய்தாவது, தீர்வு என்ற பெயரில் ஏதாவது ஒன்றைப் பெற வேண்டும் என்று முயன்றார். ஆனால், சம்பந்தனின் எந்த முயற்சியையும் நல்லாட்சித் தரப்போ, தென் இலங்கையோ கண்டுகொள்ளவில்லை. மீண்டும் ராஜபக்‌ஷர்கள் ஆட்சியில் ஏறினார்கள். அப்போதும், ராஜபக்‌ஷர்களோடு பேச்சுவார்த்தைக்கு அவர் சென்றார். இப்போது, ரணில் வந்தபின்னரும், பல சுற்றுப் பேச்சுகளில் அவர் பங்கெடுத்திருக்கிறார். என்றைக்கும் பேச்சுவார்த்தைகளைப் புறக்கணிப்பது தொடர்பில் அவர் பேச்சே எடுப்பதில்லை. ஆனால், கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, பேச்சுவார்த்தைகளில் பங்கெடுப்பதில் பலனில்லை என்ற அறிவிப்பை விடுக்கும் நிலை வந்திருக்கிறது என்றால், அவர் எவ்வாறான ஏமாற்றத்தை தனிப்பட்ட ரீதியில் சந்தித்திருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடியும். புறக்கணிப்பு என்ற வார்த்தையை சம்பந்தன் பல நேரங்களில் ஆயுத முனைப் போராட்டங்களுக்கு ஒப்பான ஒன்றாகவே கருதியும் வெளிப்படுத்தியும் வந்திருக்கிறார். புறக்கணிப்புக் கோசத்தோடு களத்தில் இருப்பவர்களை, தீண்டத்தகாதவர்கள் மாதிரி சம்பந்தன் நடத்தியிருக்கின்றார். இன்றைக்கு அவரே, பேச்சுவார்த்தைகளைப் புறக்கணிக்கும் கட்டத்துக்கு வந்திருக்கிறார். ரணிலின் அடுத்த அரசியல் இலக்கு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவது மாத்திரமே! அதற்காக யாரின் காலில் விழவும், காலை வாரவும் ரணில் தயாராக இருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில், தமிழ்த் தரப்புடனான பேச்சுவார்த்தையை தமிழ் மக்களின் வாக்குகளைக் கவருவதற்கான கருவியாகக் கையாள்வதற்காக மாத்திரமே கையாள்கிறார். ஏனெனில், அந்தப் பேச்சுகளில் காணப்படும் இணக்கப்பாடுகளை நிறைவேற்றினால், தென்இலங்கையின் பேரினவாத சக்திகளின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி வரும். அது, தன்னுடைய அடுத்த தேர்தல் வெற்றியைப் பாதிக்கும் என்பது ரணிலுக்கு நன்றாகத் தெரியும். அதனால், தமிழ்த் தரப்பையும் வெளிநாடுகளையும் சமாளிப்பதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான இடைக்கால நிர்வாக சபை என்ற ஓர் அம்பை ஏவியிருக்கின்றார். அந்த அம்பை, விக்னேஸ்வரன் ஏந்திக் கொண்டிருக்கவும் செய்திருக்கிறார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட எதையும் இப்போதைக்கு நடத்துவதற்கு ரணில் தயாராக இல்லை. அதனை, அவர் கூட்டமைப்பினருடனான சந்திப்பில் அறிவித்திருக்கிறார். அதற்கு மாற்றாக, மாகாணங்களுக்கான இடைக்கால நிர்வாக சபை என்ற விடயத்தை அவர் எடுத்திருக்கின்றார். அதுதான், சம்பந்தனை அதிகம் கோபம் கொள்ள வைத்திருக்கின்றது. அதற்காக, விக்னேஸ்வரனை ரணில் கூட்டுச் சேர்த்திருக்கின்ற விடயம், சம்பந்தனை எரிச்சல்படுத்தி இருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலில் இருப்பவர்களில், இன்றைக்கு விக்னேஸ்வரன் மாத்திரமே கண்களை மூடிக்கொண்டு ரணிலை விசுவாசிக்கிறார். ரணிலை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காக வாக்களித்தது முதல், ரணிலின் திட்டங்களை வடக்கில் காவி வரும் ஒருவராக அவர் செயற்படுகிறார். விக்னேஸ்வரன் என்றைக்குமே தன்னுடைய கட்சிக்காரர்களிடமோ, அவரது கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடமோ எந்தவித ஆலோசனைகளையும் செய்வதில்லை. மாறாக, அவருக்கு கொழும்பில் இருக்கும் மூத்த சட்டத்தரணிகள் சிலர் வழங்கும் ஆலோசனைகளை உள்வாங்கிக் கொண்டு மாத்திரமே செயற்படுகிறார். அவர்கள் இன்றைக்கு ரணிலை ஆதரிக்கும்படி வழங்கிய ஆலோசனைகளை சிரமேற்று, ரணிலின் ஏவலாளி போல விக்னேஸ்வரன் செயற்படத் தொடங்கியிருக்கிறார். அதனால்தான், தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் நிராகரித்துவிட்ட மாகாணங்களுக்கான இடைக்கால நிர்வாக சபை என்ற விடயத்தை, வடக்கில் சந்தைப்படுத்தும் வேலைகளில் அவர் ஈடுபடுகின்றார். தமிழ் மக்களுக்கான தீர்வை எந்தளவுக்கு கீழிறங்கியாவது பெற வேண்டும் என்பதற்காக நல்லாட்சிக் காலத்தில், சம்பந்தனும் எம்.ஏ சுமந்திரனும் ‘ஏக்கிய இராஜ்ஜிய’ விடயத்தை ‘ஒருங்கிணைத்தை நாட்டுக்குள்’ என்று வியாக்கியானப்படுத்தி, தமிழ் மக்களிடம் சந்தைப்படுத்தி வந்தார்கள். அவர்களாவது, அரசியலமைப்புக்கு ஊடாக ஏதாவது அதிகாரங்களைப் பகிரும் விடயங்களை உள்ளடக்கலாம் என்ற நோக்கில் இயங்கினார்கள். ஆனால்,விக்னேஸ்வரன் இடைக்கால நிர்வாக சபை என்ற ஏதுமற்ற ஒன்றை காவி வருகிறார் என்பதை, என்ன அரசியலாக புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. ஆட்சிக்கு வரும் தென் இலங்கையின் எந்தத் தலைவரும் தமிழ்த் தரப்புகளுடன் சம்பிரதாயபூர்வமாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார்கள். அப்போது, தமிழ்த் தலைவர்களும் தங்களின் கோரிக்கைகளை முன்வைப்பார்கள். ஆனால், அந்தக் கோரிக்கைகள் குப்பைக்கூடைக்குள் வீசப்பட்டுவிடும். மீண்டும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும், அப்போதும் கோரிக்கைகளை தமிழ்த் தரப்பு முன்வைக்கும். மீண்டும் அவை குப்பைக்கூடைக்குள் வீசப்படும். இதுதான் வரலாறு. ரணிலோடும் தமிழ்த் தரப்புகள் பலதடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன. ஆனால், ரணிலும் ஒவ்வொரு முறை பேச்சுவார்த்தைக்கு வரும் போதும், கோரிக்கைகளை புதிதாக கேட்பது போல காட்டிக் கொள்கிறார். கடந்த பேச்சுவார்த்தையின் போதும் அவர் அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறார். அதுவெல்லாம் சேர்த்துதான் சம்பந்தனை எரிச்சல்படுத்தி இருக்கின்றது; இனி பேச்சுவார்த்தைகளின் கலந்து கொள்வதில் பயனில்லை என்று அறிவிக்கவும் வைத்திருக்கின்றது. சம்பந்தனின் ஏமாற்றம் புதிதில்லை. தமிழ் மக்களுக்கு நூற்றாண்டுகளாக பழக்கப்பட்ட ஒன்றுதான்! அந்தப் புரிதலோடு இருந்தால் போதும். அந்தப் புரிதல், தேவையற்ற போலி நம்பிக்கைகளை தென்இலங்கை ஆட்சியாளர்கள் மீது வளர்த்துக் கொள்வதைத் தடுக்க உதவியாக இருக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சம்பந்தரை-எரிச்சலூட்டிய-ரணில்/91-319312
  8. முன்னணிக்கு எதிரான அச்சுறுத்தலும் இன்னும் சிலவும் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழுப்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து புதன்கிழமை காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாராளுமன்றத்தில் சிறப்புரிமை விடயத்தை எழுப்பி உரையாற்ற இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமராட்சி கிழக்கிலுள்ள விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றை கடந்த இரண்டாம் திகதி பிற்பகலில், மருதங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நடத்தினார். அப்போது அங்கு வந்த, தங்களை யார் என வெளிப்படுத்தாத நபர்கள் இருவர், சந்திப்புக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நின்றிருக்கிறார்கள். அது தொடர்பில், முன்னணியின் தலைவரும் செயற்பாட்டாளர்களும் கேள்வி எழுப்பிய போது, தங்களை புலனாய்வாளர்கள் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதில் ஒருவர், அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றிருக்கிறார். இந்தப் பிணக்கின் போது, பொலிஸ் அதிகாரி ஒருவர் கஜேந்திரகுமாரை நோக்கி, துப்பாக்கி முனை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டு முன்னணியால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. துப்பாக்கி முனை அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ் அதிகாரி, தாளையடி றோமன் கத்தோலிக்க பாடசாலை வளாகத்துக்குள் நின்றிருக்கிறார். அவரது படங்களை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. மருதங்கேணி பொது விளையாட்டு மைதானமும் தாளையடி றோமன் கத்தோலிக்க பாடசாலையும் ஒரு பக்க மதிலை எல்லையாக பகிர்ந்து கொள்கின்றன. முன்னணியின் சந்திப்பில் ஏற்பட்ட குழப்பத்தில், தாளையடி பாடசாலை வளவுக்குள் இருந்து கண்காணித்த பொலிஸ் அதிகாரியே துப்பாக்கி முனை அச்சுறுத்தலை விடுத்தார் என்ற விடயம் முன்வைக்கப்படுகின்றது. தாளையடி றோ.க பாடசாலை, க.பொ.த (சா/த) தரப் பரீட்சை நிலையமாகச் செயற்பட்டு வருகின்றது. இந்த விடயங்களுக்குப் பின்னரான விசாரணைகளை அடுத்து, இதுவரை முன்னணியின் இரண்டு செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அத்தோடு, மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வந்து வாக்குமூலம் அளிக்கும் வரையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான பயணத்தடையை கிளிநொச்சி நீதிமன்றம் விதித்திருக்கின்றது. இந்த நிலையில், அவர் புதன் காலை கைது செய்யப்பட்டார். முன்னணியின் சந்திப்புக்குள் புலனாய்வாளர்கள் நுழைந்த விடயமோ, பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கி முனை அச்சுறுத்தல் விடுத்ததான விடயமோ பொலிஸாரால் கருத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. மாறாக, பரீட்சை நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் ஆட்களைத் திரட்டி, சந்திப்பை நடத்திய விடயம் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்காக, முன்னணிக்கு எதிராக இப்போது பயன்படுத்தப்படுகின்றது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர் போராட்டங்களை நடத்துகின்ற ஒரு தரப்பு. தற்போது தையிட்டியில் தனியார் காணிகளில் அமைக்கப்பட்டிருக்கின்ற விகாரைக்கு எதிரான தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இந்தப் போராட்டத்தை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்கான வேலைகளில் பொலிஸாரும் படைத்தரப்பும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்தத் தருணத்தில்தான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மருதங்கேணியில் நடத்திய சந்திப்பில் ஏற்பட்ட குழப்பத்தை, பொலிஸார் தங்களுக்கு சார்பாகக் கையாள முயல்கின்றார்கள். ஏனெனில், முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கஜேந்திரகுமாருக்கான பயணத்தடையும் விதிக்கப்பட்டிருக்கின்றது. இதனால், முன்னணியின் செயற்பாட்டாளர்களை மனதளவில் உடைத்து வீடுகளில் உட்கார வைக்க முடியும் என்பது எதிர்பார்ப்பு. முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னரான காலத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து, கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கஜேந்திரகுமார், கஜேந்திரன் உள்ளிட்டவர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தோற்றுவித்தார்கள். அன்று முதல், மக்கள் போராட்டங்களில் முன்னணி பங்கெடுத்து வருகின்றது. இரண்டு பொதுத் தேர்தல்களில் முன்னணியை தமிழ் மக்கள் மிக மோசமாக தோற்கடித்த போதிலும், முன்னணி மக்கள் போராட்டங்களில் பங்களித்து வந்திருக்கின்றது. 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னணிக்கான அங்கிகாரத்தை யாழ்ப்பாண மக்கள் குறிப்பிட்டளவு வழங்கினார்கள். அதிலிருந்து இன்னும் தெம்போடு இயங்கிய முன்னணி, கடந்த பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஓர் ஆசனத்தையும், தேசிய பட்டியல் ஊடக இன்னோர் ஆசனத்தையும் வென்றது. முன்னணி மீது தமிழ் மக்கள் அதிகம் அதிருப்தி வெளியிடும் விடயம், போராட்ட களத்தில் தனியாவர்த்தனம் செய்ய முயல்கின்றமை ஆகும். தமிழ்த் தேசிய பரப்பில் எழும் பிரச்சினைகள் 99 சதவீதமானவை, அனைத்துத் தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றினைந்தே போராட வேண்டிய விடயங்கள் ஆகும். ஆனால், முன்னணி அந்த ஒன்றிணைவு குறித்து ஒருபோதும் தயாராக இருப்பதில்லை. தாங்கள் தனித்துத் தெரியவேண்டும் என்பதற்காகப் பல போராட்டங்களை தனித்து நடத்தியிருக்கிறார்கள். இதனால், இவர்கள் என்ன போராட்டத்தை முன்னெடுத்தாலும் அங்கு செல்வதிலோ, ஒத்தாசை வழங்குவதிலோ ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகள் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில், அங்கு சென்றால், முன்னணியின் தலைவர்கள் முகத்தை மற்றப்பக்கம் திருப்பிக் கொள்கிறார்கள். இரண்டாம் மட்டத் தலைவர்களோ, ஏனைய கட்சித் தலைவர்கள், முக்கியஸ்தர்களுக்கு எதிராக கோசங்களை எழுப்புகிறார்கள். தையிட்டியில் இடம்பெற்று வரும் போராட்டத்தில் ஆரம்ப நாள்களில் கலந்து கொள்ளச் சென்ற பல தமிழ்த் தலைவர்கள், முக்கியஸ்தர்களும்கூட இவ்வாறான செயற்பாடுகளை எதிர்கொள்ள வேண்டி வந்தது. இதனால், முன்னணி அவர்கள் நினைத்தது மாதிரியே அதிக தருணங்களில் தனியாவர்த்தனமே செய்ய வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. தையிட்டி போராட்டத்தில் கட்சிகளையும் மக்களையும் இணைந்து கொள்ளுமாறு ஊடகங்களின் மூலம் அழைப்பு விடுத்துவிட்டு, போராட்டக்களத்துக்கு செல்லும் மாற்று கட்சியினர் மீது அவதூறுகளைச் செய்வது என்பது, அடிப்படை நாகரீகம் அற்றது. இன்னொரு தளத்தில் முன்னணியினர், அதீத உணர்ச்சி வசப்படல் மூலம் போராட்டங்களை வெற்றிகரமாக நகர்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். அண்மையில் கூட முன்னணியின் பேச்சாளர் தன்னுடைய சட்டை கொலரைத் தூக்கி, “..நாங்கள் லோயர்ஸ், லோயர்ஸ்..” என்று பொலிஸாரை நோக்கி கூறிய காணொலி வெளியானது. அப்போது, அங்கிருந்த முன்னணியின் இன்னொரு முக்கியஸ்தரான சட்டத்தரணி ஒருவர், அவருக்கு வந்த சிரிப்பை அடக்க பலமாக முயன்று கொண்டிருந்தார். அவ்வாறான செயற்பாடுகளைக் காணும் போது, முன்னணியினர் தங்களை மக்களிடம் தனிப்பட்ட ரீதியில் முன்னிறுத்துவதற்கான செயற்பாடுகளின் போக்கில், மக்கள் போராட்டங்களை கையாள முயல்கிறார்கள் என்ற உணர்நிலை உண்டு. அதுபோல, நினைவேந்தல் நிகழ்வுகளிலும் தனியாவர்த்தனம் செய்து முன்னணியினர் குழப்ப நடவடிக்கைகளில் ஈடுபடுவதான தொடர் குற்றச்சாட்டு உண்டு. தமிழ்த் தேசிய போராட்டக் களத்தில் செயற்படுகின்ற தரப்புகள், தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டிருப்பது என்பது, வாக்கு அரசியலை முன்னிலைப்படுத்துவதால் தவிர்க்க முடியாததாக மாறியிருக்கின்றது. அதற்கு, முன்னணி என்கிற முகத்தோடு இருக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸும் விதிவிலக்கல்ல. ஆனால், பொதுப் பிரச்சினைகளில் தனியாவர்த்தனமும், சுய முன்னிலைப்படுத்தலுக்கான அதீத உணர்ச்சிவசப்படுதலும் மற்றவர்கள் மீதான அவதூறும் முன்னணியை மிக மோசமாக தனிமைப்படுத்தும். மருதங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் எழுந்த சச்சரவுகளின் போது, முன்னணியினருக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய பரப்பில் ஒரு சிலரைத் தவிர, ஏனையவர்கள் மௌனமாக இருப்பதற்கும் அதுதான் காரணம். அதுபோல, முன்னணியினர் தங்களின் போராட்டங்களை தேர்ந்தெடுப்பது போலவே, போராட்டத்தை அல்லது சந்திப்புகளை நடத்தும் இடங்கள் குறித்து போதியளவில் ஆய்ந்து அறிந்து கொள்வது அவசியமாகின்றது. முன்னணியின் செயற்பாட்டாளர்கள் கைது; கஜேந்திரகுமாருக்கு எதிரான பயணத்தடை என்பன, அவற்றின் போக்கில் இப்போது நிகழ்ந்திருக்கின்றன. சந்திப்புக்குள் புகுந்து அச்சுறுத்தல் விடுத்த புலனாய்வாளர்கள் தப்பித்துக் கொள்ள, சந்திப்பை நடத்தியவர்கள் மீது, பரீட்சை நிலையத்துக்கான அச்சுறுத்தல் என்பது மாதிரி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. தாங்கள் சட்டத்தரணிகள் என்று சட்டை கொலரை தூக்கி விட்டுக்கொள்வதால் பயனில்லை. மாறாக, மக்களை போராட்டக்களத்துக்கு கொண்டுவருதற்கான வேலைகளை கவனமாக முன்னெடுக்க வேண்டும். வடமராட்சிக் கிழக்கில் இப்போது முன்னணியின் இரண்டு செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான கைதுகள், மக்களை பாரியளவில் அச்சுறுத்தும். அதுவும், போரின் வடுக்களை அதிகமாகத் தாங்கி நிற்கும் வடமராட்சி கிழக்கு போன்ற பகுதிகளிலுள்ள மக்களை அதிகமாகப் பாதிக்கும். ஏனெனில், புலனாய்வாளர்களின் தொடர் கண்காணிப்புக்குள் இருக்கும் பகுதி. இது, யாழ். மாவட்டத்துக்குள் இருந்தாலும் வடமராட்சி கிழக்கு, தொலைதூரத்தில் இப்பது மாதிரியான நிலையே இன்றும் இருக்கின்றது. அதற்குள், அசம்பாவிதங்களை ஏற்படுத்த நினைக்கும் தரப்புகள் செய்துவிட்டு சென்றுவிடும். அதனால், ஏற்படும் பயமும் மக்களை போராட்டங்களில் இருந்து ஒதுங்க வைத்துவிடும். முன்னணியினர் தமிழ்த் தேசிய போராட்டக் களத்தில் முக்கிய தரப்பாக எழுந்து வருகிறார்கள். அதேநேரம், அவர்கள் போராட்டத்தில் பங்கெடுக்கும் மக்கள், செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையோடு செயற்பட வேண்டும். வாய் ஜாலங்களால் போராட்டங்கள் நிலை பெறுவதில்லை. மக்களின் அர்ப்பணிப்பால்தான் போராட்டங்கள் எழுச்சி பெற்றிருக்கின்றன. இதனை முன்னணி உணர்ந்து, அதற்கான முன்னேற்பாடுகளோடு செயற்பட வேண்டும். அதுதான், முன்னணிக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது. ஏனெனில், அடிப்படைவாத ஆக்கிரப்பு சிந்தனை கொண்ட தென்னிலங்கையின் ஆட்சி ஆதிக்கத் தரப்புகளுக்கு எதிராகவே, தமிழ்த் தேசியம் போராடிக் கொண்டிருக்கின்றது என்ற உணர்நிலை அவசியம் வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முன்னணிக்கு-எதிரான-அச்சுறுத்தலும்-இன்னும்-சிலவும்/91-319305
  9. மஹிந்தவின் பிரதமர் கனவை கண்டுகொள்ளாத ரணில் புருஜோத்தமன் தங்கமயில் மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்கப்போகிறார் எனும் தகவல், அண்மைக்காலமாக அடிக்கடி பரவி வருகின்றது. கடந்த வாரத்தில், பதவி ஏற்பதற்காக அவர் தன்னுடைய வீட்டிலிருந்து, ஜனாதிபதி செயலகம் நோக்கி புறப்பட்டுவிட்டார் என்பது வரையில் வதந்தி பரவியது. இந்த வதந்தி பரவிக் கொண்டிருந்த போது, அவர் மாத்தறையில் ஒரு குடும்ப நிகழ்வில் பங்குபற்றிக் கொண்டிருந்தார். ஆனால், மஹிந்த மீண்டும் பிரதமராக பதவி ஏற்கப்போகிறார் என்ற தகவல்கள் அடிக்கடி வெளியாவதன் பின்னால், வதந்தியைப் பரப்புவர்களைக் காட்டிலும், மஹிந்த வாதிகளே அதிகம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த தேர்தல் வெற்றிகளை கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் ராஜபக்‌ஷர்கள் பெற்றார்கள். குறைந்தது ஒரு தசாப்த காலம் ஆட்சியில் இருந்து, அவர்களை அகற்ற முடியாது என்று நம்பப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ‘ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும்’ போராட்டம், முழு நாட்டையும் புரட்டிப் போடுமளவுக்கு எழுந்து. அதனால், வேறு வழியின்றி ராஜபக்‌ஷர்கள் அனைவரும் ஆட்சிக் கட்டிலில் இருந்து, ஒரு வருடத்துக்கு முன்னால் இறங்கினார்கள். அதிலும், கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டை விட்டுத் தப்பியோடி மாலைதீவு, சிங்கப்பூர் என்று அலைந்து திரிய வேண்டி வந்தது. இவ்வாறான நிலைமைகளைப் பயன்படுத்திக் கொண்ட ரணில், ஆட்சியில் ஏறினார். ஒரேயொரு தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியைக் கொண்டு பாராளுமன்றம் வந்த ஒருவர், பிரதமராக மாறி, இறுதியில் ஜனாதிபதியாகவே அமர்ந்தார். அவர், ராஜபக்‌ஷர்களை விரட்டும் போராட்டங்களை, தன்னுடைய ஆட்சிக் கனவுக்காக கனகச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஆட்சியில் அமர்ந்தவுடன், அதைத் தக்க வைப்பதற்காக ராஜபக்‌ஷர்களின் அனுசரணையைப் பெற்றுக் கொண்டார். கிட்டத்தட்ட ராஜபக்‌ஷர்களின் ‘பினாமி’யாகவே ரணில் ஆட்சியில் ஏறினார். ஆனால், ஆட்சியில் ஏறிய சிறிய காலத்துக்குள்ளேயே, யாரின் ‘பினாமி’யாகவும் இல்லாமல், தனித்த ஆவர்த்தனம் செய்யும் ஓர் ஆட்சியாளனாக தன்னை முன்னிறுத்தும் வேலைகளில் தெளிவாக ஈடுபடலானார். தன்னை எந்தக் கேள்வியும் கேட்காதவர்களை மாத்திரம் அமைச்சரவைக்குள் உள்வாங்கிக் கொண்டு, ராஜபக்‌ஷ விசுவாசிகளை பெரும்பாலும் விலத்தி வைத்தார். இதனை, ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்தாலும், நீண்டகால அரசியல் நோக்கில் தங்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறும் என்பதை ராஜபக்‌ஷர்கள் உணர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். அதனால்தான், மஹிந்த மீண்டும் பிரதமராக பதவி ஏற்கப்போகிறார் எனும் தகவல், கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து அடிக்கடி பரவத் தொடங்கியது. மஹிந்த மீண்டும் பிரதமராக பதவியேற்றால், பாராளுமன்றமும் அமைச்சரவையும் ராஜபக்‌ஷர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். தங்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அதனை, விரைவாக செய்துவிட முடியும். அதாவது, தென் இலங்கையில் ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக எழுந்த அதிருப்தியைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதுதான், ராஜபக்‌ஷர்களின் எதிர்கால ஆட்சிக் கனவை தக்க வைக்க உதவும். அப்படியான நிலையில், மஹிந்தவை பிரதமராக பதவியில் அமர்த்த வேண்டிய தேவை, ராஜபக்‌ஷர்களுக்கும் ராஜபக்‌ஷர்களின் விசுவாசிகளுக்கும் உண்டு. இதனை நன்கு உணர்ந்து கொண்டிருக்கிற ரணில், அவ்வாறான சூழ்நிலையொன்று உருவாகுவதைத் தவிர்த்து வருகிறார். தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்‌ஷர்களின் ஆதரவோடு வேட்பாளராக போட்டியிடுவது உறுதியாகும் வரையில், ராஜபக்‌ஷர்களை ஆட்சிக் கட்டிலின் பக்கத்திலேயே அண்ட விடுவதில்லை என்பதில் குறியாக இருக்கிறார். ஏனெனில், கடந்த வருடம் தென் இலங்கையில் எழுந்திருந்த ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான வெறுப்பு, இப்போது குறிப்பிட்டளவு குறைந்துவிட்டது. அத்தோடு, ராஜபக்‌ஷர்களின் ‘போர்வாள்’களான பௌத்த அடிப்படைவாத தரப்புகள், தமிழ் - முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பரப்புரைகளை ஆக்ரோசமாக மீண்டும் தொடங்கிவிட்டன. குறிப்பாக, ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டம்கூட, புலம்பெயர் தேசங்களில் உள்ள புலி ஆதரவாளர்களாலும் மேற்கு நாடுகளின் தூதுவராலயங்களாலும் திட்டமிடப்பட்டது என்பது மாதிரியான செய்திகளை, ராஜபக்‌ஷ ஆதரவு தரப்புகள் பரப்பி வருகின்றன. இதனால், நாட்டை புலிகளிடம் இருந்து மீட்டுத் தந்த ராஜபக்‌ஷர்களை மன்னித்து, மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் நிலையொன்று உருவாக்கிவிடலாம் என்பது மஹிந்தவாதிகளின் நம்பிக்கை. அதற்கு, பௌத்த பீடங்களைக் கொண்டும் அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். கடந்த இரு தேர்தல்களிலும் மஹிந்தவின் முகத்தை முன்னிறுத்திக் கொண்டு ராஜபக்‌ஷர்கள் வாக்கு வேட்டை நடத்தினாலும், கோட்டாவும் பஷில் ராஜபக்‌ஷவும் வெற்றிக்கான உரித்தைக் கோரினார்கள். மஹிந்தவைக் காட்டிலும், தாங்கள் மக்கள் ஆதரவுள்ளவர்கள் என்ற கட்டத்துக்கு கோட்டாவும் பஷிலும் நகர்ந்தார்கள். அதனால், மஹிந்த பிரதமராக இருந்தாலும் கிட்டத்தட்ட செல்லாக்காசாக இருந்தார். அவரின் சொல்லுக்கு மதிப்பு இல்லாமல் போனது. தம்பிமார் நினைத்ததைச் செய்தார்கள். அதிலும், அடுத்த ஜனாதிபதி தேர்தல் கனவோடு பஷில் முன்னுக்கு வந்தார். இதனால், மஹிந்தவுக்கு தன்னுடைய மகனான நாமலின் எதிர்காலம் குறித்த பயம் எழுந்தது. அந்தச் சமயத்தில்தான், ராஜபக்‌ஷர்களை விரட்டும் போராட்டம் எழுந்து, நிலைமை தலைகிழானாது. அப்போது, மஹிந்த குறிப்பிட்டளவு மகிழ்ச்சியோடுதான் இருந்தார். ஏனெனில், கோட்டாவையும் பஷிலையும் அரசியல் அரங்கில் இருந்து அகற்றுவதற்கான வாய்ப்பாக அதனைக் கருதினார். அதனால், ரணிலை ஜனாதிபதியாக்குவதற்காக அவர் தலைகீழாக நின்று செயற்பட்டார். அப்போது, ரணிலுக்கும் மஹிந்தவுக்குமான இணக்கப்பாடும் காணப்பட்டதாக கூறப்பட்டது. அது, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலை வேட்பாளராக ஆதரிப்பது என்பதுவும், அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகளைத் தனக்கு உருவாக்கித் தரவேண்டும் என்பது மஹிந்தவினது கோரிக்கை. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளின்படி ரணில் நடக்கவில்லை என்பதுதான் மஹிந்தவின் மனக்குறை. திட்டமிட்ட ரீதியில், ஜனாதிபதி வேட்பாளராகத் தான் ஆவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ரணில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாரே அன்றி, பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவை வெற்றிபெற வைத்து, தன்னைப் பிரதமராக்கும் வாய்ப்புகளை உருவாக்க மறுக்கிறார் என்பது மஹிந்தவின் அதிருப்தி. இதனை ஆரம்பம் முதலே, மஹிந்தவாதிகள் தொடர்ச்சியாக அவரிடம் எடுத்துக் கூறி வருகிறார்கள். அதனால்தான், ஆரம்பத்தில் ரணிலுக்கு எதிராக பெரிதாக எந்த விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டாம் என்று கட்டுப்பாடுகளை விதித்திருந்த மஹிந்த, இப்போது கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அத்தோடு, மஹிந்தவாதிகளாலும், அவர்களின் ஊடக வலையமைப்புகளிலும் மஹிந்த, பிரதமராக மீண்டும் பதவி ஏற்கப்போகிறார் என்ற தகவல்களும் திட்டமிட்ட ரீதியாகத் தொடர்ச்சியாக பரப்பப்படுகின்றன. ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக தென் இலங்கை மக்கள் கொண்டிருந்த வெறுப்பை, இரண்டு விதமாக பிரித்தாளும் வேலைகளை, மஹிந்தவாதிகள் தற்போது செய்து வருகிறார்கள். அதில், மஹிந்த நல்லவர், வல்லவர், ஊழல் அற்றவர் என்பது ஒன்று. கோட்டாவும் பஷிலுமே ஆட்சி நடத்தத் தெரியாமல் நாட்டைச் சீரழித்தவர்கள். கோட்டாவும் பஷிலும் செய்த தவறுக்காக மஹிந்தவைத் தண்டிப்பது அர்த்தமற்றது என்பது மற்றையது. இதன்போக்கில், மஹிந்தவை பிரதமராக்கும் எண்ணமே மஹிந்தவாதிகளின் நோக்கம். ஆனால், இந்த அரசியல் ஆட்டங்களைத் தெளிவாக விளங்கி வைத்திருக்கின்ற ரணில், மஹிந்தவாதிகளின் குரல்களை கண்டும் காணாமல் இருக்கின்றார். அதிலும், எந்தவொர் இடத்திலும் அவர் ராஜபக்‌ஷர்கள் குறித்து பேசுவதையே தவிர்க்கிறார். ரணில் தலைமையில், கடந்த 19ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற போர் வெற்றி விழாவில், எதிர்க்கட்சி வரிகையில் இருக்கும் மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாஸ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால், போர் வெற்றிக்கான உரித்தைத் தாம் கொண்டிருப்பதாகத் தொடர்ந்தும் வலியுறுத்தி வரும் ராஜபக்‌ஷர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. முப்படையினரையும் நினைவுகூரும் நிகழ்வாக முன்னிறுத்தப்பட்டாலும், அது போர் வெற்றி விழாவாகவே அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இப்படியான நிகழ்வில் ராஜபக்‌ஷர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது முக்கிய பேசுபொருளானது. அதில், அந்த நிகழ்வுக்கு அவர்களை, ரணில் திட்டமிட்ட ரீதியில் அழைக்கவில்லை என்ற விடயம் மேலெழுந்தது. அது உண்மையாக இருக்குமாக இருந்தால், மஹிந்தவின் ஆட்சிக் கனவுக்கு ரணில், தற்போதைக்கு கொஞ்ச இடமும் அளிக்கத் தயாரில்லை என்பது தெளிவாகின்றது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எதுவெல்லாம் உதவுமோ அதையெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்ளவும், இடைஞ்சலாக இருக்கும் விடயங்களை விலத்தி வைக்கவும் ரணில் தயக்க மாட்டார். ஆனால், அவருக்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால், ராஜபக்‌ஷர்கள் என்ற நாமம், குறிப்பாக மஹிந்த எனும் நாமம், தென் இலங்கையில் வாக்குகளை அள்ளுவதற்கு அவருக்கு தேவையாக இருக்கின்றது என்பதுவும், அது, தமிழ் - முஸ்லிம் மக்களிடம் பிரச்சினைக்குரியது என்பதுதான் பெரிய சிக்கல். அந்தச் சிக்கலைத் தாண்டுவது குறித்து மாத்திரமே ரணில் சிந்திக்கிறார். மற்றப்படி, மஹிந்தவின் அரசியல் எதிர்காலம் குறித்தெல்லாம் அவர், எந்தச் சிந்தனையும் கொண்டிருக்கவில்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மஹிந்தவின்-பிரதமர்-கனவை-கண்டுகொள்ளாத-ரணில்/91-318013
  10. முள்ளிவாய்க்கால் வலியுறுத்தும் சத்தியம் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் முடிவைச் சந்தித்து, இன்றோடு பதினான்கு ஆண்டுகளாகின்றன. எட்டு தசாப்தங்களை எட்டிக் கொண்டிருக்கும் சுயநிர்ணய உரிமைக்கான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் என்பது எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமான அடையாளக் களம். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச வெற்றிகள் என்று கொள்ளப்படும் அனைத்தும் ஆயுதப் போராட்ட காலத்திலேயே பெறப்பட்டவை. அதுவும், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையேற்று போராட்டத்தை வழிநடத்திய முப்பது ஆண்டுகளில் கிடைக்கப்பெற்றவை. வடக்கு - கிழக்கின் பெரும் பகுதியில், அரச தலையீடுகள் அற்ற இடைக்கால ஆட்சிக் கட்டமைப்பை இரண்டு தசாப்த காலம் விடுதலைப் புலிகள் முன்னெடுத்திருந்தனர். அதுதான், தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட அதியுச்சம் என்று கொள்ளலாம். அதுபோல, புலிகளின் இடைக்கால ஆட்சிக் கட்டமைப்பு, 2009 மே 18ஆம் திகதியோடு முடிவுக்கு வந்தது; ஆயுதப் போராட்டத்துக்கும் முடிவுரை எழுதப்பட்டது. அந்த முடிவுதான், தமிழ் மக்கள் இன்றும் மீண்டு எழ முடியாமல் திணறும் பெரு வீழ்ச்சியின் புள்ளி. அதிலிருந்து மீள்வதற்கான போராட்டத்தை தமிழ் மக்கள் மெல்ல ஆரம்பித்தாலும், கடந்த 14 ஆண்டுகளில் பெரிய அளவில் எதுவுமே நிகழ்ந்துவிடவில்லை. முள்ளிவாய்க்கால் என்பது, ஆயுதப் போராட்டத்திற்கான முடிவுரை எழுதப்பட்ட இடம் மாத்திரமல்ல, 40,000க்கும் அதிகமானவர்களை அரச படையும் அதன் வெளிநாட்டு ஆதரவு சக்திகளும், உள்ளூர் துணைக்குழுக்களும் அழித்து ஒழித்த பகுதி. 12,000க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான குறியீட்டுக் களம். நினைவேந்தலை மாத்திரமல்ல, நீதிக்கான கோரிக்கைகளையும் சேர்த்து வைத்திருக்கின்ற இடம், முள்ளிவாய்க்கால் ஆகும். தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதற்காக இலங்கை அரசும், விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு சக்திகளும் முன்னெடுத்த கோர யுத்தம், எந்தவித மனிதாபிமான தார்ப்பரியங்களும் போருக்கான அறமும் இன்றி முடித்து வைக்கப்பட்ட இடம் முள்ளிவாய்க்கால். உலகம் பூராவும் போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கின்ற மேற்கு நாடுகள் தொடங்கி, ஏதேச்சதிகாரம் செலுத்தும் சீனா போன்ற நாடுகள் வரையில், இறுதி யுத்தத்தில் இலங்கைக்கு கணிசமான உதவிகளை வழங்கியிருக்கின்றன. போர் வலயத்துக்குள் சிக்கிய மக்களுக்கான மருத்துவ உதவி மறுக்கப்பட்டமை, உணவு வழங்கல் தடை செய்யப்பட்டமை என்று மனித குலத்துக்கு எதிரான அனைத்து குற்றங்களும் முள்ளிவாய்க்காலின் இறுதி நாள்களில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன. அதையெல்லாம், இந்த நாடுகள் எல்லாமும் எந்தவித குற்றவுணர்ச்சியும் இன்றிப் பார்த்துக் கொண்டும் இருந்தன. புலிகளை அழிப்பதற்காக, எத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்ற மௌனம், இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்களை விடக் கொடுமையானது. முள்ளிவாய்க்கால் என்பது, தமிழ் மக்கள் எந்தவித ஆதரவும் இன்றித் தனித்து விடப்பட்டமைக்கான சாட்சிக் கூடம். தமிழ் மக்கள் தங்களின் விடுதலைப் போராட்டத்தை இனி எப்படி முன்னெடுக்க வேண்டும், எதை முன்னெடுக்கக் கூடாது என்பதற்கான வரையறைகளை, முள்ளிவாய்க்கால் முடிவுகள் திணித்திருக்கின்றன. அந்தத் திணிப்பு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. கடந்த கால அனுபவங்களில் இருந்து, போராட்ட வடிவங்களை மாற்றிக் கொள்வதும், புதிதாக வடிவமைத்துக் கொள்வதும் போராடும் இனத்துக்கு வழக்கமானதுதான். ஆனால், போராடும் உணர்வை, முழுமையாக மழுங்கடிக்கச் செய்வதற்கான முயற்சிகளை தமிழர் தாயகம் எங்கும் விதைத்து, அதன் அறுவடைகளை தென் இலங்கையும் அதன் இணக்க சக்திகளும் தொடர்ந்தும் பெற்று வருகின்றன. அதற்கு, தமிழ்த் தரப்புகள் சிலவும் துணை போவதுதான் பெரும் அவலம். மதவாதம், சாதியவாதம், பிரதேசவாதம் தாண்டி, தமிழர் தாயகம் என்கிற அடிப்படையிலேயே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் பேரெழுச்சி கண்டது. தமிழ்க் கட்சிகளும், ஆயுதப் போராட்ட இயக்கங்கள் பலவும் தங்களின் பலவீனங்களாக சாதியவாதம், பிரதேசவாதத்தை கொண்டிருந்த போது, விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் தலைமைத்துவத்துக்கு நகர்ந்தது அதையெல்லாம் தாண்டி நின்றமையாலாகும். ஆயுதப் போராட்ட இயக்கங்களாக இருந்து இன்று, அரசியல் கட்சிகளாக மாறிவிட்ட பல முன்னாள் இயக்கங்களும் இன்றைக்கும் சாதிய, மதவாத, பிரதேசவாத மனநிலையோடு செயற்பட்டு வருகின்றன. அதாவது, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸும், இலங்கை தமிழரசுக் கட்சியும் மறைமுகமாக சாதியவாத, பிரதேசவாத சிந்தனைகள் சார்ந்து இயங்குவது போல! மேம்போக்காக பார்க்கும் போது, இன்றைக்கு களத்திலுள்ள அரசியல் கட்சிகளும் முன்னாள் இயக்கங்களும் இந்தப் பிரிவினைகள், வேறுபாடுகளுக்கு அப்பாலானவை என்பது போல காட்டிக் கொண்டாலும், உள்ளூர அந்த நெடி, எரிச்சலையூட்டும் அளவுக்கு இன்னமும் இருக்கின்றது என்பதுதான் மிகப்பெரிய பின்னடைவு. அதுவும், முள்ளிவாய்க்கால் போன்ற வீழ்ச்சிக்குப் பின்னாலும், இவ்வாறான பிரிவினைகள், வேற்றுமைகளை பிடித்துக் கொண்டிருப்பது என்பது, தமிழர் விரோத சக்திகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, வெண் சாமரம் வீசி வரவேற்பதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றது. இன்றைக்கு முள்ளிவாய்க்கால் என்பது, நினைவேந்தலை முன்பெடுப்பதற்கான களம் என்ற அளவில் சுருக்கப்பட்டுவிட்டது. அதிலும், தேர்தல் நோக்கு அரசியல்வாதிகளும், அக - புற விரோத சக்திகளின் ஏவல் தரப்புகளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற விடயத்தையே கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், முள்ளிவாய்க்கால் நினைவுகளை ஆன்மாவோடு கொண்டு சுமக்கும் தமிழ் மக்களில் பெரும்பாலானோர், நினைவேந்தல் குளறுபடிகள் களத்தில் இருந்து விலகி நிற்கிறார்கள். இது, தொடர்ச்சியாகப் போராடி வரும் சமூகத்தின் போர்க்குணத்தின் மீது ஊற்றப்படும் விசமாகும். முள்ளிவாய்க்கால் நினைவுகளை, தமிழ் மக்களிடம் இருந்து பிரிந்தெடுப்பது என்பது தென் இலங்கைக்கும் அதன் நேச சக்திகளுக்கும் அவசரமாகக் தேவைப்படும் ஒன்று. விடுதலைப் புலிகளை அழித்தால் போதும், தமிழ் மக்களின் போர்க்குணத்தினை முற்றாக முடக்கிவிடலாம் என்று அந்தத் தரப்புக்கள் நம்பின. ஆனால், தமிழ் மக்கள், முள்ளிவாய்க்காலை போர்க்குணத்தின் ஓர்மத்தின் பகுதியாகவே மாற்றினார்கள். உறவுகளை நினைவுகூர மாத்திரமல்ல; அவர்களுக்கான நீதியை நிலைநாட்டவும் முள்ளிவாய்க்காலை ஒரு களமாக மாற்றினார்கள். அதுவும், முள்ளிவாய்க்கால் முடிவுகளை சந்தித்து சில மாதங்களுக்குள்ளேயே அதற்கு தயாராகிவிட்டார்கள். இதனை தென் இலங்கையோ, அதன் நேச சக்திகளோ எதிர்பார்க்கவில்லை. அதனால்தான், தமிழ் மக்களின் போர்க்குணத்தின் குறியீடாக மாறிவிட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சிதைப்பதற்காக தங்களின் ஏவல் சக்திகளை வைத்து குழப்பங்களை நிகழ்த்துகின்றன. அதைப் புரிந்து கொள்ளாது, தமிழ்த் தேசிய கட்சிகளும் வாக்கு அரசியல் என்ற குறுகிய சிந்தனைகளால் மறைமுகமாகத் துணைபோகின்றன. இன்றைக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏட்டிக்கு போட்டியாக தமிழ்த் தேசிய தரப்புகள் நடத்துகின்றன. அங்கு, அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டவர்கள் நினைவு கூரப்படுவதைக் காட்டிலும், தாமே முதன்மையானவர்கள் என்கிற தன்முனைப்பு மனநிலையே வெளிப்படுகின்றது. ஏனெனில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலங்களில், தமிழ்த் தேசிய தரப்புகள் நிகழ்த்திவரும் நடவடிக்கைகளைப் பார்த்தால் அது தெளிவாக புரியும். 14 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும்கூட, முள்ளிவாய்க்காலில் ஒருமித்து ஒன்று கூடுவதற்கு சில தமிழ்த் தரப்புகள் தயாராக இல்லை. அவர்கள், தனி ஆவர்த்தனம் செய்யவே நினைக்கிறார்கள். அதனால், பாதிக்கப்படுவது தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளேயாகும். முள்ளிவாய்க்காலில் இழக்கப்பட்ட உயிர்களுக்கும் சிந்தப்பட்ட குருதிக்கும் நீதி கோரி போராடுதல் என்பது, எதிரிகளை தண்டிப்பதனூடாக மாத்திரம் நிகழ்வதல்ல. முள்ளிவாய்க்கால் முடிவு தமிழ் மக்கள் மீது ஏன் திணிக்கப்பட்டதோ, அதைத் தாண்டி நின்று போராடுவதற்கான ஓர்மத்தையும் ஒற்றுமையையும்கூட ஒருங்கிணைப்பதற்கான களமாகவும் இருக்க வேண்டும். அதுதான், உண்மையான நினைவேந்தலாக இருக்க முடியும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முள்ளிவாய்க்கால்-வலியுறுத்தும்-சத்தியம்/91-317576
  11. ரணில் எனும் ஏமாற்றுக்காரர் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது, ‘பாராளுமன்றமே அரசாங்கம்’ என்கிற புரிந்துணர்வின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும். அதைப் புரிந்து கொள்ளாது, தமிழ்க் கட்சிகள் நீண்ட தூரம் பயணிப்பதால் எந்தப் பயனும் இல்லை” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள காணொலி உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, பாராளுமன்றத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும். அதனை விடுத்து, தீர்வை வெளியில் தேடிக் கொண்டிருக்க முடியாது. அப்படித் தேடுவதாலும் தீர்வு கிடைத்துவிடாது என்றுதான் ஜனாதிபதி கூற விளைகின்றார். அதனால்தான், ‘பாராளுமன்மே அரசாங்கம்’ என்ற விடயத்தை, புதிதாகக் கண்டுபிடித்தது மாதிரி அவர் குறிப்பிடுகிறார். அத்தோடு, தமிழ்க் கட்சிகளை நோக்கி, பாராளுமன்றம் அனுமதிக்காத எதையும் தீர்வாக தன்னிடம் எதிர்பார்க்க வேண்டாம்; அதற்காக, இந்தியாவையோ, மேற்கு நாடுகளையோ துணைக்கு அழைத்து வந்தாலும், அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதுதான் அவரது உரையின் சாராம்சம். சுதந்திர இலங்கையில் இனமுரண்பாடுகளை அதிகம் தோற்றுவித்ததில் பாராளுமன்றத்துக்கு முக்கிய இடமுண்டு. தனிச் சிங்களச் சட்டம், பௌத்தத்துக்கு முதலிடம் தொடங்கி, நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான சட்டங்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயே நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. நாட்டில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் சிங்கள மக்கள். அந்தப் பெரும்பான்மையை, ஆட்சி அதிகாரத்துக்காக இனவாத, மதவாத அரசியலாக மாற்றியது, பாராளுமன்றத்துக்குள் இருந்த அரசியல்வாதிகள். அவர்களிடம் நீதி கேட்பது என்பது, ‘சாத்தானை வேதம் ஓத’க் கேட்பதற்கு ஒப்பானது. பௌத்த மேலாதிக்க சக்திகளும் அவர்களின் ஏவல் பிள்ளைகளாக செயற்பட்ட தென்இலங்கை சக்திகளும், அதிக தருணங்களில் பாராளுமன்றத்தை தங்களின் மேலாதிக்க ஆக்கிரமிப்பு அரசியலை முன்னெடுப்பதற்கான அங்கிகரிக்கப்பட்ட அமைப்பாகவே கருதி வந்திருக்கின்றது. அந்த நிலை, இப்போதும் அப்படியேதான் இருக்கின்றது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து, அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பினால், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி, “நீங்கள் புலிப் பயங்கரவாதிகள்” என்று பேசுமளவுக்குத்தான், அதன் கண்ணியம் இருக்கின்றது. அப்படிப்பட்ட ஓர் அரங்குக்குள் நின்றுகொண்டு, தமிழ் மக்களுக்கான தீர்வைக் காண வேண்டும் என்று கூறுவதை, ‘வடிகட்டிய நரித்தனம்’ என்றுதான் அடையாளப்படுத்த வேண்டும். மாற்றாக, தீர்வின்றித் தொடரும் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் அர்ப்பணிப்போடு வெளிப்படுத்தப்பட்ட செய்தி என்று, யாரும் நம்ப வேண்டியதில்லை. ராஜபக்‌ஷர்களின் அரசியல் என்பது வெளிப்படையானது. தமிழ் மக்கள், தங்களின் அரசியல் பிரச்சினைகள் பற்றி பேசிக்கொண்டு, ஆட்சியாளர்களிடம் வரத் தேவையில்லை; வந்தாலும் எந்தப் பயனும் இல்லை என்பதுதான் ராஜபக்‌ஷர்களின் நிலைபபாடு. அப்படியான நிலைமையைத்தான், ராஜபக்‌ஷர்கள் ஆட்சியில் இருந்த 12 ஆண்டுகளும் நிரூபித்து இருக்கிறார்கள். ஆனால், ரணில் ஆட்சியில் இருக்கின்ற அனைத்துத் தருணங்களிலும், அதேவிடயத்தை சாயம் பூசிய வார்த்தைகளினூடாக வேறு வடிவில் கூறியிருக்கிறார். “பாராளுமன்றமே அரசாங்கம்; அங்குதான் தீர்வு காணப்பட வேண்டும்” என்பது, அதனை மட்டுந்தான் வெளிப்படுத்துகின்றது. அவர், பாராளுமன்றத்தால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும், கடந்த சுதந்திர தினத்துக்கு முன்னர், அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுவிடும் என்று அறிவித்தல் விடுத்தார். தமிழ்க் கட்சிகளையும் சில தடவை அழைத்து பேசினார். அங்கு பேசப்பட்ட விடயங்களில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. ஏற்கெனவே, அரசாங்கமும் தமிழ் தரப்புகளும் பேசி, கண்ட இணக்கப்பாடுகள், காற்றில் விடப்பட்டவை மாதிரியே, இப்போதும் விடப்பட்டன. இப்போது, ரணில், இந்த வருட இறுதிக்குள், அரசியல் தீர்வைக் கண்டுவிட நினைப்பதாகக் கூறுகிறார். ஆனால், அதற்கான எந்த முனைப்பையும் அவர் சிறிதளவும் வெளிப்படுத்தவில்லை. மாறாக, கவர்ச்சிகரமான அறிக்கை அரசியலூடாக, விடயங்களைக் கடக்க நினைக்கிறார். அதுவும், 2048 ஆண்டாகும் போது, “நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்ற வேண்டும்” என்று கூறுகிறார். இந்தக் கூற்று, தென் இலங்கை மக்களை நோக்கி விடுக்கப்படும், தேர்தல் வெற்றியை நோக்கிய அறைகூவல்! தமிழ்த் தரப்பை நோக்கி, பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனை கோலொச்சும் பாராளுமன்றத்துக்குள்ளேயே தீர்வு காணப்படும்; அதற்கு இணங்கிக் கொள்ள வேண்டும்; அதைச் செய்யாது, வெளியில் நின்று கூப்பாடுபோடுவதால் பலனில்லை என்ற அறிவிப்பை ரணில் விடுக்கிறார். அதே நேரம், சர்வதேசத்தை நோக்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்துக்குள், இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண முயற்சிப்பதுதான் ‘ஜனநாயக நெறி’ என்று அவர் படம் காட்டவும் செய்கிறார். இதன்மூலம், தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற சர்வதேசத்தின் குரல்களைப் புறந்தள்ளவும் முடியும். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு இருக்கும் ரணிலுக்கு, தன்னை நோக்கிய புற அழுத்தங்கள் இருப்பதில் விருப்பமில்லை. ராஜபக்‌ஷர்களை விரட்டியடிக்க வீதிக்கு வந்த மக்களை, தான் அதிகாரத்தை அடையும் வரையில் ஆதரித்த ரணில், அதிகாரத்துக்கு வந்ததும் படை பலத்தைக் கொண்டு ஓடவிடத் தொடங்கினார். அவரின் உண்மை முகம் அதுதான்! அது, அதிகாரங்களை குறிவைக்கும் அரசியல்வாதிகள் கொண்டிருக்கும் ஒரே முகம்! அவரின் முகத்துக்கு ஜனநாயக முலாம் பூசிக் கொண்டு, மாற்றத்தின் சக்தி என்று பார்ப்பது எல்லாம் களவாணித்தனமாகும். சுதந்திர இலங்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, தந்தை செல்வா தொடங்கி இன்றைக்கு இரா.சம்பந்தன் வரையில், போராடித் தோற்ற வரலாறுதான் பதிவாகி இருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சியும், அதிலிருந்து முளைத்த சுதந்திரக் கட்சியும், அதன் பின்னால் இந்தக் கட்சிகளில் இருந்து விரிந்த பொதுஜன பெரமுனவும், ஐக்கிய மக்கள் சக்தியும், தமிழர் பிரச்சினையை ஒரே கண்ணோட்டத்தில் மாத்திரமே அணுகி வந்திருக்கின்றன. பௌத்த மேலாதிக்க சிந்தனைகளுக்கு அப்பால் நின்று, தமிழ் மக்களையோ, அவர்களின் பிரச்சினைகளையோ அணுகுவதற்கு அந்தக் கட்சிகள் ஒருபோதும் தயாராக இருப்பதில்லை. ஏனெனில், இந்தக் கட்சிகளின் அடிப்படைச் சிந்தனை என்பது, மகாவம்ச மனநிலையில் இருந்து கட்டமைக்கப்படுவது. அது, தமிழ் மக்களை வில்லன்களாக சித்திரிக்கும் அரசியலின் நீட்சி. அத்தோடு, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டால், ஆட்சியை அடைவதற்கான இலகுவான கருவியாக இதுவரை கையாண்டுவந்த இனவாத அரசியல் எனும் தீயை, கையில் ஏந்த முடியாது. தேர்தல் வெற்றிக்கு எந்தவித உழைப்பும் இல்லாமல் இனவாத, மதவாத அரசியலைத் தூண்டினால் இலகுவான வெற்றியைக் கண்டுவிடலாம் என்பதுதான், இலங்கை அரசியலின் ஒரே வரலாறு! நிலைமை அப்படியிருக்க, அந்தக் கருவியை கைவிடுவதற்கு எந்த அரசியல்வாதியும் தயாராக இருக்கமாட்டார்கள். அதனால்தான், அவ்வப்போது தமிழர் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சுகளுக்கு புற அழுத்தங்களால் இணங்கினாலும், தென் இலங்கை ஆட்சியாளர்கள் அதை எப்படியாவது தட்டிக்கழிக்கவே செய்திருக்கிறார்கள். ரணிலும் இப்போது அதைத்தான் செய்கிறார். ‘பாராளுமன்றமே அரசாங்கம்’ என்கிற வார்த்தை ஜாலம், தட்டிக்கழிப்பதை நோக்கியதுதான். ஆனால், அதில் அவர் செப்படிவித்தையொன்றைக் காட்ட விளைகிறார். அதாவது, பாராளுமன்றத்துக்குள் தீர்வைக்கான முயற்சிக்கிறேன். ஆனால், ராஜபக்‌ஷர்களினால் சூழப்பட்ட பாராளுமன்றம் அதற்கு இணங்கவில்லை. அதனால், தன் மீது குற்றமில்லை என்று சர்வதேசத்தின் கேள்விகளில் இருந்து நழுவ நினைக்கிறார். அத்தோடு, பாராளுமன்றத்துக்குள் தீர்வு என்று பேசினால், தமிழ்த் தரப்புகள், சிறிதுகாலம் கூச்சல் போட்டுவிட்டு ஓய்ந்துவிடும். அதனால், அவர்களின் தொல்லையும் இல்லை. ஏனெனில், கடந்த காலத்தில் தமிழர் பிரச்சிகைளுக்கான தீர்வு குறித்த எந்த முயற்சிகளையும் பாராளுமன்றம் அனுமதித்ததேயில்லை. மாறாக, பிரச்சினைகளை அதிகரிக்கவே செய்திருக்கின்றது. அதனால், தமிழ்க் கட்சிகள் கத்திக் களைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது வெளிப்படையான செய்தி. ரணில் என்கிற பழுத்த அரசியல்வாதி, தனது இறுதிக் காலத்தில் கிடைத்த ஜனாதிபதி என்கிற அதியுச்ச அதிகாரத்தை இறுகப் பற்றிக் கொள்வதற்காக, ஒட்டுமொத்த நாட்டையும், சர்வதேசத்தையும் ஏமாற்றி ஆட நினைக்கிறார். அவ்வளவுதான். அதைத் தவிர்த்து அவரது உழைப்பாளர் தினச் செய்தியில் எதுவும் இல்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரணில்-எனும்-ஏமாற்றுக்காரர்/91-316892
  12. இலக்கை மறந்த தமிழர் அரசியல் புருஜோத்தமன் தங்கமயில் முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னரான, தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி தொடர்பில், தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டு வந்திருக்கின்றது. அது, தமிழ் மக்களின் அரசியல், விடுதலை எனும் இலக்கை மறந்து நின்று, அன்றாடம் நிகழும் சம்பவங்களுக்குப் பிரதிபலிப்பது மாத்திரமே அரசியல் எனும் கட்டத்தில், தமிழ்த் தேசிய அரசியலை இன்றைய கட்சிகள் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றன. இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தொடங்கி, தற்போது புதிது புதிதாக முளைக்கும் எந்தத் தமிழ்க் கட்சியும் கூட, இப்படியான இயங்குநிலையையே கொண்டிருக்கின்றன. நிகழ்வுகளுக்கு அல்லது சம்பவங்களுக்கு பிரதிபலிக்கும் அரசியல் என்பது பெரிய உழைப்பை கோருவதில்லை. கண்டன அறிக்கை, ஊடக சந்திப்பு அல்லது சில மணிநேர எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்கிற அளவில், இந்த அரசியலை குறுக்கிக் கொண்டுவிடலாம். மற்றப்படி, மூளைக்கு பெரிய வேலையையோ, நாளாந்தம் மக்களைச் சந்தித்து அவர்களின் நிலைப்பாடுகளைப் முன்னெடுக்கும் செயற்பாடுகளையோ செய்யத் தேவையில்லை. விடுதலை அரசியல் குறித்த சிந்தனை இருக்கும் எந்தவொரு தரப்பும் உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்து உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். அதுதான், மக்கள் விடுதலை குறித்துச் சிந்திக்கின்ற எந்தவொரு மனிதனும் தலைவனாகவும், வழிகாட்டியாகவும் மாறுவதற்கான வழியாகும். தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் என்கிற ஓரிரு தலைவர்களைத் தவிர்த்தால், தமிழர் அரசியலில் அர்ப்பணிப்பு குறித்த சிந்தனையோடு இருந்த தலைவர்கள் என்று அடையாளப்படுத்திக் கூறும் அளவுக்கு யாரும் இல்லை. தேர்தல் வெற்றியும், அதன் மூலமான பதவிகளையும் குறிவைத்தே தமிழ்த் தேசிய அரசியலை பெருமளவு காலமும் தமிழ்க் கட்சிகள் நகர்த்தி வந்திருக்கின்றன. ஆட்சி அதிகாரம் என்கிற நிலையை அடைவது குறித்து, தமிழ்த் தேசிய கட்சிகள் சிந்திக்காவிட்டாலும், தமிழர் தாயகத்தில் தாங்களே தீர்மானம் எடுக்கும் சக்திகள் எனும் நிலையைப் பேணுவதன் மூலம், சில சலுகைகளை உள்நாட்டுத் தரப்புகள் மற்றும் வெளித் தரப்புகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பது, தமிழ்த் தேசிய கட்சிகள் பெரும்பாலானவற்றின் தலைவர்களின் எண்ணமாக காணப்படுகின்றது. அந்த எண்ணப்பாடுதான், ஒவ்வொரு கட்சியையும் பல கூறுகளாகப் பிளந்து வைத்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்துக் கட்சிகளும், பிராந்திய வல்லரசு தொடங்கி மேற்கு நாடுகள், சீனா வரையில் தங்களின் கைகளுக்குள் வைத்துக் கொள்ள நினைக்கின்றன. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு கட்சிக்குள்ளும் தனக்கு இணக்கமானவர்களை அடையாளம் கண்டு அவர்களை, தங்களது நிகழ்ச்சி நிரலை நிகழ்த்துவதற்கான முகவர்களாக வைத்துக் கொள்கின்றன. அதனால், அவர்கள் கட்சி நலன், தமிழ் மக்களுக்கான அரசியல் என்று அனைத்தையும் மறந்துவிட்டு, செயற்படுகின்றனர். அதையே, தங்களை பின்தொடரும் கட்சி ஆதரவாளர்களிடமும் விதைக்கின்றனர். இதனால், தமிழ் மக்களை மதவாத, சாதியவாத அடிப்படையிலும் பிரதேச வாதத்தாலும் பிளவுபடுத்தும் வேலைகளைச் செய்கின்றனர். இவை, தமிழ்த் தேசிய அரசியலை செங்குத்தாக கீழ்நோக்கி தள்ளும் செயற்பாடுகளாகும். தமிழர் தாயகம் எங்கும் புத்தர் சிலைகளை வைத்தும், விகாரைகளைக் கட்டியும் சிங்கள பௌத்தம், ஆக்கிரமிப்பு அரசியலை செய்து வருகின்றது. அதற்கு எதிராக மூர்க்கமாகப் போராடுவதை விடுத்து, தமிழர் பரப்புக்குள் சிவன் சிலை, சிவலிங்கம் அமைப்பு என்று வீதிகளை ஆக்கிரமித்து, மத நல்லிணக்கத்துடன் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிகழ்வுகளின் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பதும், இந்துத்துவா அடிப்படைவாத சிந்தனையை தமிழ் மக்களுக்குள் விதைக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்தூதும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. ஓர் ஆலயத்தையோ, வழிபாட்டிடத்தையோ அமைப்பது நம்பிக்கைகளின் அடிப்படையில் மனிதம் செய்யக் கூடிய ஒன்று! அந்த உரிமையில் யாரும் தலையிட முடியாது. ஆனால், பொதுவான இடத்தில், திடீர் திடீரென சிலைகளை அமைத்து, அதை வழிபாட்டிடமாக மாற்ற முயல்வது என்பது, குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடு. அவ்வாறான செயற்பாடுகளின் பின்னணி தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டியிருக்கிறது. இப்படியான கட்டங்களில், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற கட்சிகள், அவற்றைக் கவனமாக கையாள நினைக்க வேண்டும். ஆனால், அதனை மறந்து நின்று, பிளவுகளுக்குத் துணைபோவது என்பது, வரலாற்று துரோகத்துக்கு வாய்ப்பை ஏற்படுத்துவதாகும். இன்னொரு பக்கம், மேற்கு நாடுகளின் நிதியுதவியோடு வரும் கிறிஸ்தவ அமைப்புகளும் தமிழ் மக்களிடம் காணப்படும் மதநல்லிணக்கம் எனும் நிலையை சீரழிக்கும் வேலைகளைச் செய்கின்றன. புதிது புதிதாக வரும் கிறிஸ்தவ சபைகள், ஏழை எளிய மக்களைக் குறிவைத்து பிரித்தாளும் அரசியலை செய்கின்றன. ஏனைய மதத்தினரை நோக்கி, ‘சாத்தான்கள்’ எனும் வாசகத்தை அவர்களின் காதுகளில் விழும் அளவுக்கு சொல்கின்றன. இந்த நிகழ்வுகள், மத நல்லிணக்கத்தோடு இருக்கும் தமிழ் மக்களிடையே, பிளவுகளை ஏற்படுத்த நினைக்கும் அடிப்படைவாத சக்திகளுக்கு துணைபோகும் செயற்பாடுகளாகும். ஒவ்வொரு மனிதனும் தான் நம்பும் இறைவனை, மதவழிபாட்டை தேர்வு செய்யும் உரிமையுள்ளவன். அதில், யாரும் தலையிட முடியாது. அதுபோல, மற்றவர்களின் மத நம்பிக்கையையும் இழிவு செய்யாமல் இருக்க வேண்டும். ஆனால், தமிழர் தாயகத்தில் அண்மைய நாள்களில் மற்றைய மதத்தினரை கோபப்படுத்தும் வேலைகளில் புதிது புதிதாக வரும் கிறிஸ்தவ சபைகள் செய்கின்றன. இவ்வாறான நிகழ்வுகளையும் தமிழ் கட்சிகளோ, தலைவர்களோ கண்டும் காணாமல் இருப்பது என்பது, பாரதூரமான விளைவுகளை ஏற்படுவதற்கு துணைபோகும் செயற்பாடாகும். ஏற்கெனவே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் காலம், தேர்தல் காலம் என்ற அளவில் தமிழர் அரசியல் சுருங்கிவிட்டது. இந்தக் காலங்களில் மாத்திரம் ஒவ்வொரு கட்சியும், தலைவர்களும் நாளைக்கே, தனிநாடு வாங்கிக் கொடுத்து விடப்போவது மாதிரியான வீராவேசமாகப் பேசுவார்கள். இந்தக் காலங்கள் முடிந்ததும், அந்தத் தலைவர்களையே காணக் கிடைக்காது. கொஞ்சமும் வியர்வை வழிந்துவிடாமல் இருந்து அரசியல் செய்ய வேண்டும்; அதன்மூலம் பதவி பெற்று சுகமாக காலத்தைக் கடத்திவிட வேண்டும் என்பதைத் தவிர, எந்த எண்ணத்தையும் தமிழர் அரசியலில் இருக்கும் எந்தத் தலைவரும் இப்போது வெளிப்படுத்துவதில்லை. விடுதலைக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தாக எந்தவொரு தலைவரிடமும் விடுதலை குறித்த இலக்கு இருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட தலைவர்கள் வாய்க்கப்பெற்ற கட்சிகளோ, அதன் தொண்டர்களோ கூட, உழைப்பும் வியர்வையும் இன்றி சுகமான வாழ்க்கைக்கான வழித்தடமாக, தேர்தல் அரசியலை நினைக்கிறார்கள். அதற்காக மாத்திரம், நாடகங்களை அவர்கள் ஆடியும் வருகிறார்கள். விடுதலை இலக்கு தொடர்பில் எந்தவொரு கட்சியோ, அதன் தலைவர்களோ இதுவரை ஏதாவது செயற்றிட்டத்தை மக்களிடம் முன்வைத்து இருக்கிறார்களாக என்றால், அது இல்லை. ஏன் குறைந்தபட்சம், அடுத்த தலைமுறையிடமாவது நேர்மையான அரசியலை கொண்டு சேர்க்க நினைக்கிறார்களா என்றால், அதுவும் இல்லை. மாறாக, தங்களுக்கு அடிமை சேவகம் செய்வதற்கான குண்டர் கூட்டத்தை மட்டுமே கட்சி அரசியலுக்குள் கொண்டு வரும் நோக்கத்தோடு செயற்படுகிறார்கள். இப்படியான குறுகிய நோக்கங்களைக் கொண்டவர்களை, வெளிநாட்டுத் தூதரகங்களின் கடைநிலை அதிகாரி கூட, இலகுவாகக் கையாண்டு விடுகிறார்கள். அந்த அதிகாரியின் ஒரு தொலைபேசி அழைப்பையே, பெரிய விடயமாக இந்த அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள். இப்படியான சிந்தனை கொண்ட தலைவர்களை வைத்துக் கொண்டு, இன விடுதலை பற்றிச் சிந்திப்பது எல்லாம் உண்மையில் மகா அபத்தமாகும். தமிழர் விடுதலைக்காக ஆயிரமாயிரம் உயிர்கள் அர்ப்பணிக்கப்பட்டு இருக்கின்றன. அந்த அர்ப்பணிப்புகள் அர்த்தம்பெற வேண்டுமென்றால், குறைந்த பட்சம் தமிழ்த் தேசிய அரசியல் பதவி, பகட்டு, குழிப்பறிப்பு, சோரம்போகும் நிலை எனும் கட்டங்களுக்கு அப்பால் நின்று, செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்க வேண்டும். இல்லையென்றால், குருதி குடிக்கும் அட்டைகளிடம் மாட்டியது மாதிரி, தமிழ்த் தேசிய அரசியலும் அதன் ஆன்மாவை மெல்ல மெல்ல இழக்கும். அப்போது, எதிரிகளும் துரோகிகளும், இலகுவாக தமிழர் இன விடுதலை சிந்தனையை முழுவதுமாக சிதைத்துவிடுவார்கள்; பாரம்பரிய மண்ணில் தமிழ் மக்களின் இருப்பையும் இல்லாமலாக்கி விடுவார்கள். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலக்கை-மறந்த-தமிழர்-அரசியல்/91-316702
  13. ஜனாதிபதி தேர்தலுக்காக ரணில் ஆடும் சதுரங்கம் புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்காக, நாட்டு மக்களைத் தயார்ப்படுத்தும் வேலைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருகின்றார். ஏற்கெனவே நடந்து முடிந்திருக்க வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, திட்டமிட்ட ரீதியில் ஒத்திப்போட வைத்து, போக்குக் காட்டிவரும் ரணில், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், ஜனாதிபதி தேர்தலை நடத்தி, அதில் வெற்றிபெற நினைக்கிறார். அதற்காக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து, பிரபலமான முகங்களை எல்லாம் கழட்டி எடுக்கும் வேலைகளில் கவனமாக இருக்கிறார். அதன் ஒருகட்டமாக, ஹர்ச டி சில்வா, எரான் விக்கிரமரட்ன, கபீர் ஹாசிம் உள்ளிட்டவர்கள், ரணிலோடு இணைந்து, முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பார்கள் என்று புனைவுச் செய்திகள் பரப்பப்படுகின்றன. பாராளுமன்றத்தில் இருக்கும் பொருளாதார நிபுணர்களாக கருதப்படுபவர்களில், ஹர்சவும் எரானும் முக்கியமானவர்கள். அவர்களைத் தேர்தல் அரசியலுக்கு அழைத்து வந்தவர் ரணில்தான். கடந்த பொதுத் தேர்தலில், ரணிலோடு முரண்பட்டுக் கொண்டு சஜித் அமைத்த ஐக்கிய மக்கள் சக்தியில் அவர்கள் இருவரும் இணைந்தாலும், ரணில் மீது ‘அரசியல் குரு’ என்ற ரீதியில் மரியாதை வைத்திருப்பவர்கள். ராஜபக்‌ஷர்களை விரட்டும் போராட்டத்தை அடுத்து, மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகினார்; அப்போது, ரணில் பிரதமரானார். அந்தத் தருணத்தில், புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட்டிருந்தால், அதாவது ரணில் தலைமையிலான அரசாங்கம், குறிப்பாக ராஜபக்‌ஷ ஆதரவு இல்லாமல் அமைக்கப்பட்டிருந்தால், அதில் ஐக்கிய மக்கள் சக்தியில் பெருமளவான உறுப்பினர்கள் இணைந்து கொண்டிருப்பார்கள். ஆனால், அது சாத்தியமாகவில்லை. ரணில் பிரதமராகி, தன்னை ஜனாதிபதி பதவிக்காக தயார்படுத்திக் கொண்டிருந்த காலப்பகுதியில், கோட்டபாய ராஜபக்‌ஷவை துரத்தியடிக்கும் போராட்டத்தை ஊக்குவிக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் மஹிந்தவோடு மிக இரகசியமான, திட்டங்கள் வகுத்து இணைந்து இயங்கினார். அதனால்தான், ஜனாதிபதி பதவியில் இருந்து, கோட்டா தப்பியோடும் நிலை ஏற்பட்டது. மஹிந்தவுக்கும் ரணிலுக்கும் இடையிலான இணக்கப்பாடு என்பது, நாமல் ராஜபக்‌ஷவின் அரசியல் எதிர்காலத்தை பாதுகாப்பது என்ற ஒன்று மட்டுமே ஆகும். அதற்காக, ரணில் இழுக்கும் எந்தத் திசைக்கும் நகர்வதற்கு மஹிந்த தயாராக இருந்தார். அதனால்தான், பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்வில், பொதுஜன பெரமுனவின் ராஜபக்‌ஷ கட்டுப்பாட்டில் இருந்த உறுப்பினர்கள் ரணிலை ஆதரித்தார்கள். ரணில் வென்றதும், மஹிந்தவின் இல்லம் தேடிச் சென்று, சில மணிநேரம் பேசிவிட்டும் சென்றார். ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் இடையிலான இந்த இணக்கப்பாடு, பொது வெளியில் அப்பட்டமாக வெளிப்பட்டதால் மட்டுமே, ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு செல்வதற்கு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தயங்கினார்கள். ஏனெனில், பொதுத் தேர்தல் ஒன்று வரும் போது, ராஜபக்‌ஷர்களோடு இணக்கத்தோடு இருக்கும் ரணில் அரசாங்கத்தில் இணைந்து கொண்டவர்களை, மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயங்குவார்கள். அதனால், தோல்வியடைய வேண்டி வரலாம் என்று எண்ணினார்கள். அதனால், பொதுத் தேர்தல் வரும் வரையில், எதிரணியில் இருப்பதுதான் தேர்தல் வெற்றியை இலகுவாக்கும். இந்த ஒற்றைக் காரணத்தைத் தவிர, சஜித் தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதோ, ராஜபக்‌ஷர்கள் கூட்டை நிராகரிக்க வேண்டும் என்பதோ, ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் பெரும்பாலான உறுப்பினர்களின் எண்ணம் அல்ல. பதவியைத் தக்க வைப்பது என்பது மட்டுமே ஒற்றைக் குறிக்கோள். அதனால்தான், ரணிலால் ஹரீன் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார தவிர வேறு யாரையும் சஜித்திடம் இருந்து அப்போது பிரிக்க முடியவில்லை. ஆனால், தற்போது நிலைமை வேறு! அண்மித்த நாள்களில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த ரணில் அனுமதிக்கப் போவதில்லை. அதுபோல, பொதுத் தேர்தலும் இப்போதைக்கு இல்லை. எப்படியும் ஜனாதிபதி தேர்தலை நடத்தி, அதில் வெற்றிபெற்றுவிட்டுத்தான், ஏனைய தேர்தல்கள் குறித்து அவர் சிந்திப்பார். அதனால், பொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி நகர்வதற்கு குறைந்தது ஒன்றரை ஆண்டுகளாவது ஆகும். அதுவரை எதுவுமே செய்யாத எதிர்க்கட்சியில் இருப்பதால் பலனில்லை. அதனால் ரணில் அழைப்பை ஏற்று, அமைச்சுப் பதவிகளை ஏற்பதுதான் இப்போது இருக்கும் வழியென்று எதிரணி உறுப்பினர்கள் கருதலாம். அதனை, உத்தியாக்கி ஷர்ச, எரான் போன்றவர்களை இழுத்தெடுக்கலாம் என்று காய்களை நகர்த்துகிறார் ரணில். அதில் அவருக்கு பெரும் இலாபமே இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவியை ரணில் பெற்றுவந்து இருக்கிறார் என்பதை, பெரிய வெற்றியாக வெடி கொளுத்தி, தென் இலங்கையில் சில பகுதிகளில் கொண்டாடினார்கள். ஓர் ஆட்சியாளர் கடன் பெறுவதை, அதுவும் மக்கள் மீது மீள முடியாத வரிகளை விதிக்கும் கண்டிப்பான வரையறைகளுடனான கடனைப் பெறுவதை, வெடி கொளுத்தி கொண்டாடும் நிலைமைதான் நாட்டில் இருக்கிறது என்றால், அதன் யதார்த்தம் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட அரசியலைத்தான் தென் இலங்கை இவ்வளவு காலமும் புகட்டி வந்திருக்கிறது. ராஜபக்‌ஷர்கள் சீனாவிடமும் ஏனைய நாடுகளிடமும் பில்லியன்களில் கடன்களை வாங்கி, தங்களின் தேர்தல் வெற்றிகளை இலக்காக்கி நாட்டை சீரழித்தார்கள். அந்தச் சீரழிவின் கொடுங்கரங்களில் இருந்து நாட்டு மக்களால் இன்னும் மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு மீளவே முடியாது. அந்த உண்மையை சின்னதாக உணர்ந்து கொண்ட தருணத்தில், ராஜபக்‌ஷர்களை விரட்டுவதற்காக வீதிக்கு இறங்கினார்கள். அந்த மக்களில் ஒரு பகுதியினர் இன்றைக்கு, ரணில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கி வந்துவிட்டார் என்பதற்காக அவரை சாதனையாளராக நோக்குகிறார்கள். பல நேரங்களில் தென் இலங்கை சக்திகள், நோய்க்கான உண்மையான சிகிச்சைக்குப் பதில், வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதை விரும்புகிறார்கள். அந்த மனநிலையைத்தான், முதலாக வைத்து ரணில், ஜனாதிபதி தேர்தல் கணக்கைப் போடுகிறார். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு முதல் தொகுதி கடனை வழங்கியதும், இலங்கை ரூபாயின் பெறுமதி ஒரே நாளில் திடீரென அதிகரித்துக் காட்டப்பட்டது. ஒரு டொலருக்கு எதிராக 360 ரூபாயாக காணப்பட்ட இலங்கை ரூபாயின் பெறுமதி, 306 ரூபாயாக குறைந்தது. இந்தப் பெறுமதி அதிகரிப்பு என்பது திட்டமிட்ட ரீதியில் போலியாக உருவாக்கப்பட்டது. இன்றைக்கு 317 ரூபாய் என்கிற அளவில் பேணப்படுகின்றது. மறுபுறம், அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. சமையல் எரிவாயு, எரிபொருட்களின் விலையும் குறைக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம், நாட்டின் எதிர்கால பொருளாதார நலன்கள் குறித்து சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல. மாறாக, தேர்தல்களை இலக்கு வைத்து எடுக்கப்பட்ட முடிவுகள். இப்போதும் அந்த உத்தியை ரணில் கையிலெடுத்து இருக்கிறார். ஏற்கெனவே, கடன் வாங்கி வந்ததற்கே வெடிகொளுத்தி ஆரவாரம் காட்டிய மனநிலையுடைய மக்களை, விலை குறைப்பு நாடகம் இன்னும் இளக வைக்கும். தனக்கான வாக்காக மாறும் என்பது ரணிலுக்கு தெரியும். அவர், இப்போது அந்த அறுவடைக்காகத்தான் தயாராகி வருகிறார். அதனால்தான், எதிர்க்கட்சியில் இருக்கும் பொருளாதாரம் அறிந்தவர்கள் எல்லாம் தன்னோடு இணைந்திருக்கிறார்கள் என்ற விம்பத்தையும் அவர் காட்ட நினைக்கிறார். அதற்கு, எப்படியாவது ஹர்ச, ஏரான் உள்ளிட்டவர்களின் வருகையை அவர் அதிகமாக நம்புகிறார். இதன்மூலம், தன்னுடைய பொருளாதார திட்டங்கள் நாட்டை மீட்டெடுக்கும் என்று நம்பியதால்தான் அவர்கள், தன்னோடு இணைந்திருக்கிறார்கள் என்பதை மக்களிடம் பெரிய பிரசார உத்தியாக முன்வைக்க முடியும். மறுபுறம், ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கு இடையில் மிகப்பெரிய இழுபறி நீடிக்கிறது. உடலளவில் தளர்ந்துவிட்ட மஹிந்த, நாமல் ராஜபக்‌ஷவிடம் கட்சியை சேர்ப்பித்துவிட நினைக்கிறார். அதற்கு தடையாக இருக்கும் பசில் ராஜபக்‌ஷவை அரசியலில் செல்லாக்காசாக்குவதற்கு, ரணில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெல்வது மட்டுமே வழியாக இருக்கும். ரணில் வெற்றிபெற்றுவிட்டால், அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அவரது பதவிக்காலத்தில் பசிலால் எதுவும் செய்ய முடியாது போகும். அதனால், பொதுஜன பெரமுன முழுவதுமாக நாமலின் கைகளுக்குள் வந்துவிடும். அதனால், அடுத்த ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல்களில் ரணிலுக்கு ஒத்துழைப்பதுதான் அரசியல் ராஜதந்திரம். அதன் மூலம், நாமலுக்கான வழியை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில், ரணிலுக்குப் பின்னால் ஐக்கிய தேசிய கட்சி பெரிய அளவில் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பில்லை. அதற்கு சஜித் குறுக்கே நிற்பார். அதுபோக, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வென்று பதவியேற்றாலும், அதன் பின்னர், ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிட வாய்ப்பில்லை. உடலளவில் அவரும் தளர்ந்துவிடுவார். அதனால், சஜித் எதிர் நாமல் எனும் அரசியல் சூழல் உருவாகும். அந்தப் போட்டியில் ராஜபக்‌ஷர்கள் அடையாளத்தோடு நாமல் வெல்வது இலகுவானது என்பது மஹிந்தவின் நினைப்பு. அதற்காக, ரணில் இப்போது எந்தப் பக்கம் இழுத்தாலும் அந்தப் பக்கத்துக்குச் செல்வதற்கு அவர் தயாராக இருக்கிறார். இப்படியான சூழலை பயன்படுத்திக் கொண்டு, தன்னுடைய வாழ்நாள் கனவான ஜனாதிபதி தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்பதை ரணில் நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறார். அதற்காக, அவர் மக்களின் ஜனநாயக உரிமை, எதிர்காலம் என்று எதனை வேண்டுமானாலும் பலிகொடுக்க தயாராக இருக்கிறார். ஒரு காலத்தில் தன்னை ஜனநாயக விரும்பியாக காட்டிய ரணில், இன்றைக்கு ஜனாதிபதி பதவிக்காக சர்வாதிகாரியாக மாறி ஆடிக்கொண்டிருக்கிறார். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதி-தேர்தலுக்காக-ரணில்-ஆடும்-சதுரங்கம்/91-315634
  14. ‘வெடுக்குநாறி’ அழிப்பும் புல்லுருவிக் கூட்டமும் புருஜோத்தமன் தங்கமயில் வவுனியா, ஒலுமடு வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவலிங்கம் உள்ளிட்ட விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் தொன்ம வழிபாட்டிடங்களில், வெடுக்குநாறி மலை ஆதிசிவன் முக்கியமானவர். பெரிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு, காட்டின் இயற்கைக் சூழலுக்கு சேதம் விளைவிக்காது, அப்பகுதி மக்களால் காலங்காலமாக வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. கடந்த சில வருடங்களாக, ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. இந்த நிலையிலேயே, ஆலய விக்கிரகங்கள் அழித்தொழிக்கப்பட்டுள்ளன. இலங்கையில், அரச ஆதரவுடன் பௌத்த அடிப்படைவாதத்தின் அடாவடிகளை செயற்படுத்தும் நிறுவனமான தொல்லியல் திணைக்களம், தொடர்ந்தும் தனது அடாவடிகளை முன்னெடுத்து வருகின்றது. தொல்லியல் திணைக்களத்தை நாட்டின் அதியுச்ச அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாலோ, நீதிக் கட்டமைப்பான நீதிமன்றங்களாலோ கூட கட்டுப்படுத்த முடிவதில்லை. தொல்லியல் திணைக்களம் நினைத்தால், தமிழர் தாயகப் பகுதிகளில் எதை வேண்டுமானாலும் ஆக்கிரமித்துக் கொண்டு, தொல்லியல் நிலப்பகுதி என்று அறிவித்துக் கொண்டு, பெளத்த விகாரைகளை அமைக்க முடியும் என்பதுதான் இப்போதைய நிலை. முல்லைத்தீவு, குருந்தூர் மலையிலும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி, பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. அதற்கு, தொல்லியல் திணைக்களத்தின் உத்தரவுகளுக்கு அமைய, அரச கட்டமைப்புகள் உதவிகளைப் புரிந்து வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தது முதல், தமிழர் தாயகப் பகுதிகளில் பௌத்த அடையாளங்களை வலிந்து ஏற்படுத்தும் வேலைகளை, தொல்லியல் திணைக்களமும் பௌத்த அடிப்படைவாத சக்திகளும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன. பொருளாதார மற்றும் சமூக ரீதியாக நாடு எவ்வளவு படுபாதாளத்துக்குள் வீழ்ந்து கிடந்தாலும் பரவாயில்லை. ஆனால், பெளத்த அடிப்படைவாதத்தின் செயற்பாடுகளை நிறுத்தக் கூடாது என்பது, தென் இலங்கையின் ஆக்கிரமிப்பு சக்திகளின் எண்ணம். இலங்கையை எண்ணிக்கை அடிப்படையில், சிறுபான்மையினர் அல்லாத பௌத்த சிங்கள நாடாக நிறுவிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, எவ்வளவு விலையை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராகிறார்கள். அது வரலாற்று ரீதியாக கடத்தப்பட்டு வரும் பௌத்த அடிப்படைவாத மனநிலையில் இருந்து வரும் ஒன்றாக கருத முடியும். நாடு முழுவதும் புத்தர் சிலைகளை வைத்து நிரப்புவதன் மூலம், இந்த நாட்டின் வரலாற்றை போலியாக எழுதி, பௌத்த சிங்கள நாடாக எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்கும் மகாவம்ச மனநிலையின் விளைவுகள்தான் நாட்டை பாரிய பின்னடைவுக்குள் தள்ளியது. ஆனால், அதிலிருந்து கிஞ்சித்தும் பாடம் படிக்க வேண்டும் என்ற எண்ணம், பெளத்த அடிப்படைவாத சக்திகளுக்குக் கிடையாது. உலக வரலாற்றில், ‘வென்றவர்களால் எழுதப்படுவதுதான் வரலாறு’ என்ற நிலை உண்டு. ஆனால், ஒருபோதும் அது உண்மைகளைக் கொண்டிருப்பதில்லை. அதில் புனைவுக்கதைகளும் போலிகளும் சேர்க்கப்பட்டு, வென்றவர்களின் மனங்களைக் குளிர வைப்பதற்கான உள்ளீடுகள் வைக்கப்படும். காலங்கடந்து நோக்கப்படும் போது, அந்த வரலாறு சிரிப்பை வரவழைக்கும் ஒன்றாக மாத்திரமே மிஞ்சும். போலிப் புனைவுகளாக எழுதப்பட்ட ‘வெற்று வெற்றி’ வரலாறுகளை, காலில் போட்டு காலம் மிதித்திருக்கின்றது. அதுபோல, வென்றவர்கள் என்ற நிலை காலத்துக்கு காலம் மாறி வந்திருக்கின்றது. காலமும் சூழலும் வென்றவர்களை மாற்றி வந்திருக்கின்றது. அந்த உண்மையை உணராமல், காணும் இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளை வைப்பதாலும், சைவ சமயச் சின்னங்களை அழித்தொழிப்பதன் மூலமும் பௌத்த நாடு என்று நிறுவ முடியும் என்பதும் நகைப்புக்கிடமான செயலாகும். அதிக தருணங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் அடிப்படையில் தாழ்வுச் சிக்கலோடு இருப்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இப்போது, தொல்லியல் திணைக்களமும், அதன் ஏவல் சக்திகளாக இயங்கும் பீடங்களும் வெளிப்படுத்துவது அதையேதான். கச்சதீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்டமை, நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த சின்னமாக அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தமை, நிலாவரைக் கிணற்றடியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை, வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் அகற்றப்பட்டமை.... இப்படி கடந்த சில நாள்களுக்குள் மாத்திரம், தொல்லியல் திணைக்களமும் அதன் இணக்க சக்திகளும் வடக்கு, கிழக்கில் புரிந்த ஆக்கிரமிப்பு ஆட்டங்கள் அளப்பரியன. தமிழ் மக்களின் எதிர்ப்பை அடுத்து, வெடியரசன் கோட்டை ஆக்கிரமிப்பு அறிவித்தல் அகற்றப்பட்டிருக்கின்றது. அதுபோல, நிலாவரைக் கிணற்றடியில் வைக்கப்பட்ட புத்தர் சிலையும் அகற்றப்பட்டிருக்கின்றது. ஆனால், கச்சதீவில் எந்தவித கட்டுமானங்களையும் முன்னெடுக்கக் கூடாது என்பதையும் மீறி வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையும் அதனை ஒட்டிய கட்டுமானமும் அகற்றப்படவில்லை. இப்போது வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் அகற்றப்பட்ட விடயம் பேசு பொருளானதும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆதிலிங்கேஸ்வரரின் விக்கிரகங்களை மீள பிரதிஸ்டை செய்யுமாறு பணித்திருக்கின்றார். ஆனால், இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வெவ்வேறு காரண காரியங்களைச் சொல்லிக் கொண்டு தொல்லியல் திணைக்களம் முன்னெடுக்கவே செய்யும். நல்லாட்சிக் காலத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தோடு மிக இணக்கமாக இருந்தது. நினைத்த மாத்திரத்தில் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து பிரச்சினைகளை பேசும் நிலை இருந்தது. அப்போது, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், இந்தப் பத்தியாளரிடம் கீழ்க்கண்டவாறு கூறினார். “....தொல்லியல் திணைக்களத்தை ஆட்சித் தலைவர்களால் கட்டுப்படுத்த முடியாது. அங்கு இருப்பவர்கள் எல்லாரும், பௌத்த அடிப்படைவாதத்தை முன்னெடுப்பதற்காக தெளிவாக பயிற்றுவிக்கப்பட்டவர்கள். அவர்கள், ஆட்சித் தலைவர்களின் உத்தரவுகளை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், பௌத்த உச்சபீடங்கள் உத்தரவுக்கு செயற்படுவதுதான் ஒற்றைச் சிந்தனை. ஆட்சியில் இருப்பவர்கள் ஐந்து, ஆறு ஆண்டுகளில் மாறக் கூடியவர்கள். அவர்களை கருத்தில் எடுக்க வேண்டியதில்லை என்பது எண்ணம். தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பில், அரசாங்கத்தோடு கூட்டமைப்பு பேசும் போதெல்லாம், அங்கு வரும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட அடிப்படைவாதம் ஊறிப்போயிருக்கிற அமைப்புக்கு எதிராக, தமிழ் மக்கள் விழிப்போடு இருப்பதுதான் ஒரே வழி. அதனை மீறி, யாரை நம்பியும் சும்மா இருந்துவிட முடியாது” என்றார். நாட்டுக்குள் இன மத முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நடவடிக்கைகளில் பௌத்த அடிப்படைவாத சக்திகள் காலம் காலமாக ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இப்போது வடக்கு, கிழக்கில் இந்தியாவின் இந்துத்துவா சக்திகள், புதிய நிகழ்ச்சி நிரலோடு நுழைந்து தமிழ் மக்களிடம் காணும் ஒற்றுமையை சூறையாடி வருகின்றன. அதற்கு இங்குள்ள சிலரும் துணைபோவதுதான் பெரும் அவலம். இந்துத்துவாவைப் பொறுத்தளவில் பௌத்தத்தை தன்னுடைய அங்கமாகவே கருதுகின்றது. அது, ஒருபோதும் தென் இலங்கையின் பௌத்த அடிப்படைவாதத்துக்கு எதிராக இயங்காது. மாறாக, தமிழ் மக்களிடையே மதப் பிளவுகளை ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைக்கின்றது. அவ்வாறான நிலை உருவானால்தான், தமிழ்த் தேசிய அரசியலை சின்னாபின்னமாக்க முடியும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ்த் தேசிய அரசியல் என்பது மத, சாதிய அரசியலைத் தாண்டி நிலைபெற்ற ஒன்று. மத அடையாங்களை முன்னிறுத்தி, தமிழ்த் தேசியம் நிலைபெறவில்லை. சைவ மக்களும் கிறிஸ்தவ மக்களும் ஒற்றாக நின்றே தமிழ்த் தேசியம் என்ற அரசியலை கட்டியெழுப்பினார்கள். அங்கு மதங்களைக் கடந்து தமிழர்கள், தமிழர் பாரம்பரிய நிலப்பகுதி என்ற விடயம் முதன்மை பெற்றது. ஆனால், இந்துத்துவாவோ அதனை குறிவைத்து தாக்குகின்றது. அதன்மூலம், தமிழ்த் தேசியத்தை அழித்து, தன்னுடைய அரசியல் இலக்கை பிராந்தியத்தில் தக்க வைப்பதற்கான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இந்துத்துவா எப்போதுமே பௌத்த அடிப்படைவாதம் மாதிரியான கட்டமைப்பைக் கொண்டது. ஆதிக்க ஆக்கிரமிப்புத்தான் அதன் ஒழுங்கு. அப்படிப்பட்ட நிலையில், அதனை நோக்கி தயவு தாட்சண்யங்கள் இன்றி கேள்வி எழுப்பும் எதையும் அழித்தொழிக்கவே செய்யும். இதுதான், இந்துத்துவாக்கு தமிழ்த் தேசியம் மாபெரும் பிரச்சினை. அதனால்தான், தமிழ்த் தேசியத்தை அடியோடு அழிக்க இந்துத்துவா சக்திகளும் முனைகின்றன. அதனை உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டிய பொறுப்பு, தமிழ் மக்களுக்கு உண்டு. ஏற்கெனவே, தமிழர் தரப்பில் பலரை இந்துத்துவா சக்திகள் விலைக்கு வாங்கிவிட்டன. அவை, பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிரான எந்தக் குரலையும் எழுப்புவதில்லை. மாறாக, சிறுபான்மை மதங்களுக்கு எதிராகவே பொங்கி பூரிக்கின்றன. வெடுக்குநாறி மலை ஆதிசிவன் அழிப்பு தொடங்கி எந்தவொரு தமிழ் தொன்ம வழிபாட்டிடங்கள் அழிப்பு தொடர்பில் இந்தச் சக்திகள் கேள்வி எழுப்பாது உறங்கிவிடும். இவைக்கு அவர்களின் எஜமானர்கள் என்னத்தை சொல்கிறார்களோ அதைச் செய்வதுதான் வேலை. அப்படியான நிலையில், தமிழ் மக்கள் தங்களின் பாரம்பரிய அடையாங்களையும் உரிமைகளையும் பேண வேண்டுமாயின் தென் இலங்கை பௌத்த அடிப்படைவாத சக்திகளுக்கு எதிராக மாத்திரமல்ல, உள்ளிருக்கும் புல்லுருவிக் கூட்டத்துக்கு எதிராகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுதான், எதிர்காலத்துக்கான எங்களின் இருப்பை தக்க வைக்க உதவும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வெடுக்குநாறி-அழிப்பும்-புல்லுருவிக்-கூட்டமும்/91-315193
  15. ஜனாதிபதி தேர்தலுக்கான ரணிலின் முதலீடு புருஜோத்தமன் தங்கமயில் இலங்கை இனியும் வங்குரோத்து அடைந்த நாடல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஏழு பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்ளவதற்கான அனுமதி, திங்கட்கிழமை (20) கிடைத்திருக்கின்ற நிலையில், ரணில் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை ரணில், ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டது முதல் மும்முரமாக முன்னெடுத்திருந்தார். குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு என்று நாட்டின் பொருளாதார சுமையை மக்கள் மீது சுமத்தும் வேலைகள் நடைபெற்று வந்தன. அதன் பிரகாரம், கடன்களை திருப்திச் செலுத்தக் கூடிய வல்லமையை இலங்கை கொண்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதற்கு, இந்தியாவும் சீனாவும் கடந்த காலங்களில் இலங்கைக்கு வழங்கிய கடன் உதவிகளை, காலம் தாழ்த்தி மீள வசூலித்துக் கொள்வதற்கு இணங்கியமை முக்கிய காரணம். இந்தக் காரணங்களால், இலங்கை வங்குரோத்து அடைந்த நாடல்ல; அது, பெற்றுக்கொள்ளும் நிதியுதவிகளை மீளச் செலுத்துவதற்கான வலு, அதனிடம் இன்னும் இருக்கின்றது என்று சர்வதேசம் நம்புகின்றது. அதனால்தான், சர்வதேச நாணய நிதியம், ஏழு பில்லியன் டொலரை வழங்குவதற்கு இணங்கியிருக்கின்றது என்று கொள்ளலாம். அதை நோக்கும் போது, ரணில் குறிப்பிடுவது போல, இலங்கை இனியும் வங்குரோத்து அடைந்த நாடல்ல என்பது தர்க்க ரீதியில் சரிதான்! ஆனால், இலங்கை சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை கிட்டத்தட்ட 64 பில்லியன் டொலர் என்பது பொருளாதார வல்லுநர்களின் வாதம். இந்தக் கடன் தொகையைடு இலங்கையால் இப்போது இருக்கும் பொருளாதார நிலையில் திருப்பிச் செலுத்துவதற்கு குறைந்தது 50 வருடங்களாவது ஆகும் என்பதும் அவர்களின் கருத்து. இலங்கையின் நிலத்துக்கு கீழ் அதிசயிக்கத் தக்க வகையில் எரிவாயுவோ, பொற்றோலியப் பொருட்களோ கிடைத்து, அதைக் கொண்டு நிதி வருவாய், எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரித்தால் அன்றி, 64 பில்லியன் டொலரைச் செலுத்துவது என்பது உண்மையில் நடக்கக் கூடிய காரியமல்ல. அந்த கடன்கள் மீதான வட்டி, நாளுக்கு நாள் அதிகரித்து ஒவ்வோர் ஆண்டும் செலுத்த வேண்டிய கடன் தொகை இன்னும் இன்னும் அதிகரிக்கவே செய்யும். அது, நாட்டு மக்களின் பல தலைமுறைகளின் தலைகளில் வரியாகவும், விலை அதிகரிப்பாகவும் எழுதப்படும். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல், அதன் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு, பௌத்த சிங்கள மேலாதிக்கவாத சிந்தனைகளால் கட்டமைக்கப்பட்டது. அது, நாட்டின் சமூக, கல்வி, பொருளாதாரக் கட்டமைப்பை சிதைத்து வந்தது. சுதந்திரம் அடைந்த போது, இலங்கையை முன்னுதாரணமாகக் கொண்டு முன்னேற வேண்டும் என்று நினைத்த சிங்கப்பூர் என்ற அனைவராலும் கைவிடப்பட்ட தேசம், இன்றைக்கு அபிவிருத்தியடைந்த நாடுகளோடு போட்டி போட்டு பொருளாதார வெற்றியைக் கண்டிக்கின்றது. ஆனால், இலங்கையோ, படிப்படியாக வீழ்ச்சியடைந்து, 75ஆவது சுதந்திர தினத்தை அடைவதற்கு முன்னதாகவே, ‘வங்குரோத்து அடைந்த நாடு’ என்ற பெயரைப் பெற்றது. இன்றைக்கு, ‘வங்குரோத்து அடைந்த நாடல்ல’ என்பதை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவியைப் பெறுவதற்கான அனுமதி கிடைத்திருப்பதை, ரணில் ஓர் ஆதாரமாக முன்வைத்து, தன்னுடைய ஆட்சிக்கான நற்சான்றிதழை மக்களிடம் கோருகின்றார். அதிலும், இன்னும் ஒரு படி மேற்சென்று, அவரது கட்சியான ஐக்கிய தேசிய கட்சியினர், கடனுதவிக்கான அனுமதி கிடைத்ததை வெடி கொளுத்தி ஆர்ப்பரித்துக் கொண்டாடினார்கள். அதைக் காணும் போது, இந்த நாட்டின் ஆட்சியாளர்களினதும் அரசியல் கட்சிகளினதும் சிந்தனை எவ்வளவு சிறிதானது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தொகுதிக் கடனாக 3.3 பில்லியன் டொலர் எதிர்வரும் மாதமளவில் கிடைக்கும் என்று அரசாங்கம் நம்புகின்றது. அது கிடைத்ததும் எரிபொருட்களின் விலை குறைக்கப்படும் என்று அந்தத்துறை அமைச்சர் கூறியிருக்கின்றார். அதுபோல, இறக்குமதிக் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கிக் கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். இவையெல்லாம் மக்கள் மீதான அபிமானத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அல்ல! மாறாக, தேர்தல் வெற்றிகளை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளாகும். தேர்தல் வெற்றிகளைக் குறிவைத்து வெளிநாடுகளில் இருந்து கடன்களைப் பெற்றுவிட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதை இலங்கையின் ஆட்சியாளர்கள் காலத்துக்கு காலம் செய்து வந்திருக்கிறார்கள். அதனால், நாட்டு மக்கள் மீதான பொருளாதார சுமை என்பது பெருமளவு அதிகரித்திருக்கின்றது. கடன்களை கடந்த காலங்களில் எந்தவித பொருளாதார திட்டங்களும் இன்றி வாங்கிக் குவித்தமையும், அதனை ஆட்சியில் இருந்தவர்கள் சுரண்டி, தங்களின் குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டமையாலும் நாட்டின் நாணயப் பெறுமதி ஒவ்வொரு நாளும் பாரிய வீழ்ச்சியைக் கண்டு வந்திருக்கின்றது. இலங்கை சுதந்திரம் அடைந்த போது, இலங்கை ரூபாயின் பெறுமதி என்பது, அமெரிக்க டொலரின் பெறுமதியை விட அதிகமாகும். அந்த நிலையில் இருந்து இன்றைக்கு டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி என்பது கிட்டத்தட்ட 400 ரூபாய் என்ற அளவை எட்டியிருக்கின்றது. ஏழு பில்லியன் டொலர் நாட்டுக்குள் வரப்போகின்றது என்பதைக் காட்டிக் கொண்டு, டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியை 320க்குள் வைத்துக் கொள்ள அரசாங்கம் முயல்கின்றது. ஆனால், பெறும் கடன்களுக்கான வட்டி உள்ளிட்டவை எல்லாமும் சேர்ந்து கொண்டால், டொலருக்கு எதிரான ரூபாயில் பெறுமதி இந்த ஆண்டின் இறுதிக்குள் 400 ரூபாய் என்ற அளவை எட்டும் என்பது பொருளாதார அறிஞர்களின் கருத்து. அவ்வாறான நிலை ஏற்பட்டால், நாட்டில் ஏற்கெனவே காணாமல் போய்க்கொண்டிருக்கும் மத்தியதர வர்க்கம் என்ற பெரும்பான்மையான மக்கள், வாழ்வதற்கான சிக்கல்களை இன்னும் இன்னும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாடு, ‘அபிவிருத்தி அடைந்து வரும் நாடு’ என்ற நிலையில் இருந்து, ‘வறுமைக் கோட்டுக்கு கீழான நாடு’ என்ற நிலையை எட்ட வேண்டியிருக்கும். வெளியாரிடம் இருந்து கடன்களைப் பெற்று, அவசரப் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணுவதற்குப் பதிலாக, நீண்ட காலப் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுப்பதுதான் நாட்டின் முன்னேற்றத்துக்கு அவசியமாக இருக்கின்றது. எளிய முறையில் சொல்வதென்றால், வறுமையில் வாடும் ஒருவனுக்கு மீனைக் கொடுப்பதைக் காட்டிலும் மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பது என்பது, அவனது பசியை மட்டுமல்ல, அவனது பொருளாதார மீட்சிக்கும் உதவும் என்பது வழக்கு. இந்த நிலை குறித்துதான் மக்களுக்காக சிந்திக்கும் எந்தவொரு ஆட்சியாளரும் செய்ய நினைப்பார்கள். மாறாக, தேர்தலை வெற்றிகொள்வதற்காக, நாட்டை மேலும் மேலும் வங்குரோத்து நிலைக்குள் தள்ளி, விளையாடும் வேலைகளைப் பார்க்க மாட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்ற கடனுதவியைக் கொண்டு, தன்னுடைய தேர்தல் வெற்றிக்கான ஏற்பாடுகளை மாத்திரமே ரணில் மேற்கொள்ள நினைக்கிறார். கடந்த காலங்களில் தன்னையொரு ஜனநாயக விரும்பியாக காட்டிக் கொண்ட அவர், எப்போதோ நடக்க வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றார். அந்தத் தேர்தல் நடந்தால், தன்னுடைய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் கனவு எப்போதோ நீர்த்துப் போயிருக்கும் என்பது அவருக்கு தெரியும். அதனால்தான், தேர்தலை நடத்துவதற்கு நிதி அமைச்சு பணத்தினை வழங்காமல் தேர்தல் ஆணைக்குழுவை அலைக்கழிக்கின்றது. இதன்மூலம், தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகளை எதிர்க்கட்சிகளிடம் இல்லாமல் செய்துவிட்டு, நேரடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திட்டத்தை ரணில் முன்னெடுக்கின்றார். அதில், தன்னை முதன்மைப் போட்டியாளராக முன்னிறுத்துவதற்காக, சர்வதேச நாணயத்திடம் பெற்ற கடன் தொகையைக் பயன்படுத்தப் போகின்றார். இது, யாராலும் சகிக்க முடியாத அரசியல் பொறுப்பின்மை. இதன்மூலம், நாடு மீட்கப்பட முடியாத அலைக்கழியும் நிலைக்கு செல்லும். அது, மக்கள் வாழ முடியாத ஒரு சூழலை எதிர்காலத்தில் ஏற்படுத்துவதற்கு வழிகளை உருவாக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனாதிபதி-தேர்தலுக்கான-ரணிலின்-முதலீடு/91-314707
  16. தேர்தலை நடத்தாது தொடர் போராட்டங்கள் ஓயாது புருஜோத்தமன் தங்கமயில் தொடர் போராட்டங்களால் கொழும்பு ‘அல்லோல கல்லோலம்’படுகிறது. கொழும்பு நகரத்தின் எந்தப் பிரதான வீதியில், எப்போது போராட்டம் ஆரம்பிக்கும், போக்குவரத்து தடைப்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் பல தொழிற்சங்கங்களும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், கட்சிகளும் போராட்டங்களை நடத்துகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை இராணுவத்தையும் பொலிஸாரையும் கொண்டு ரணில் விக்கிரமசிங்க அரசு ஏவுகின்றது. போராட்டங்களில் காலாவதியான கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தப் போராட்டங்களை, கட்டுக்குள் கொண்டுவருவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இந்தப் போராட்டங்களால், நாட்டின் இயல்பான நடவடிக்கைகள் மாத்திரமன்றி, தொழில் நடவடிக்கைகளும் முடங்குகின்றன. இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பும், கல்வி நடவடிக்கைகளில் பின்னடைவும் சுட்டிக்காட்டத்தக்கன. நேற்று (15) கூட, ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் சுகவீன விடுப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதனால், மூன்றாம் தவணைக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டிருந்தன. ஏற்கெவே, 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய மூன்றாம் தவணைப் பரீட்சைகள், நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள், ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டங்களால் நான்கு மாதங்கள் கடந்து நடைபெறுகின்றது. இவ்வாறான நிலையில், அந்தப் பரீட்சைகள் மீண்டும் காலம் தாழ்த்தி நடத்தப்படும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக, மேல் மாகாணத்தில் பரீட்சைகள் பிற்போடுவதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டு இருக்கின்றன. கடந்த ஆண்டு பரீட்சை நடந்து முடியாமல், இந்த ஆண்டின் முதல் காலாண்டுப் பரீட்சையை எவ்வாறு நடத்துவது என்ற கேள்வி எழுகின்றது. இவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும், நாட்டு மக்கள் தொடர் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள். நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டங்களை மக்கள் முன்னெடுத்த போது, விரைவாக தேர்தல் ஒன்றின் ஊடாக, புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர். ஆனால், ராஜபக்‌ஷர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, தேர்தல்களை நடத்தாது, ஒற்றை மனிதராக, சர்வாதிகார ஆட்சியொன்றைப் பேணுவது குறித்து, சிந்தித்துச் செயலாற்றுகிறார். மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, நிதியை வழங்காது ரணில் ஒத்திப்போட வைத்துவிட்டார். எதிர்க்கட்சிகளும் பொது அமைப்புகளும் நீதிமன்றத்தை நாடி, ஒத்திப்போடப்பட்ட தேர்தலை நடத்துவதற்கான ஆணையை வாங்கியிருக்கின்றன. ஏப்ரல் 25ஆம் திகதி அந்தத் தேர்தலை நடத்துவது என்று, தேர்தல் ஆணைக்குழு மீண்டும் அறிவித்திருக்கின்றது. ஆனால், அதனை நடத்துவதற்கான நிதியை திறைசேரி விடுவிக்குமா என்ற கேள்வி எழுகின்றது. நாட்டில் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டு, ஜனநாயக ரீதியான ஆட்சி அமையாத வரையில், போராட்டங்கள் ஓயப்போவதில்லை; மக்கள் இயல்பு வாழ்க்கைக்குள்ளும் செல்லப்போவதில்லை. இன்றைக்கு தேர்தலொன்று நடைபெற்றால், பிரதான தரப்புகளாக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் இருக்கும் என்கிற நிலை காணப்படுகின்றது. ஆட்சியமைப்பதற்கான போட்டியில், இரு தரப்புகளுமே இருக்கும் என்பது தென் இலங்கையின் உணர்நிலை. அப்படியான நிலையில், தேர்தலை நடத்துவது தங்களின் எதிர்கால ஆட்சி - அதிகார கனவுகளில் பாறாங்கல்லை எறிவதற்கு சமமானது என்பது ரணிலினதும், ராஜபக்‌ஷர்களினதும் நிலைப்பாடு. அப்படியான நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மீதான மக்களின் அபிமானம் குறையும் வரையில், தேர்தல்களை ஒத்திவைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான், தேர்தல்களை ஒத்திவைப்பதற்கான அனைத்து சதித்திட்டங்களையும் ரணிலும் ராஜபக்‌ஷர்களும் மேற்கொண்டு வருகிறார்கள். பௌத்த பீடங்கள், கத்தோலிக்க பேராயர் இல்லம் என்று நாட்டின் முக்கிய மத நிறுவனங்கள் தொடங்கி, சமூக இயக்கங்களும் தொழில் சங்கங்களும் எதிர்க்கட்சிகளும், உடனடியாக தேர்தலை நடத்துமாறு கோருகின்றன. திங்கட்கிழமை (13) அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள், தேர்தலை உடனடியாக நடத்துமாறு ரணிலுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். இனியும் தேர்தலை நடத்தாது விட்டால், தென்இலங்கையில் தங்கள் மீதான மதிப்பு மேலும் கீழிறங்கும் என்று ரணில் - ராஜபக்‌ஷ தரப்புகளுக்குத் தெரியும். ஏனெனில், ராஜபக்‌ஷர்களை ஒவ்வொரு முறையும் ஆட்சியில் அமர்த்துவதற்கு பௌத்த பீடங்கள் எவ்வாறு உதவின என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த ஜனாதிபதி தேர்தலில், தென் இலங்கையின் ஒவ்வொரு கிராமத்திலுள்ள பௌத்த விகாரைகளும் கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று பெரும் பிரயத்தனத்தோடு பிரசாரத்தை மேற்கொண்டன. அப்படிப்பட்ட நிலையில், நாட்டின் பல தரப்புகளும் தேர்தலை நடத்துமாறு கோரிய நிலையில், இறுதியாக தவிர்க்க முடியாமல் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களும் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. இந்த நெருக்கடியையும் தாண்டி, தேர்தலை நடத்தாது ஒத்திவைப்பது என்பது அவ்வளவுக்கு சாத்தியமில்லை. ஏனெனில், மீண்டும் ஆட்சிக்கனவை நோக்கி ஓடுவதற்கு, இனவாதமும் மதவாதமுமே உதவும் என்பது ராஜபக்‌ஷர்களின் நம்பிக்கை. அதற்கு, பௌத்த பீடங்களின் ஒத்துழைப்பு அவசியம். அதனால், பௌத்த பீடங்களோடு இப்போது இணங்கிச் செல்வதுதான் எதிர்கால அரசியலைக் காப்பாற்றும் என்பது அவர்களின் நினைப்பு. குறிப்பாக, நாமல் ராஜபக்‌ஷவை பத்து ஆண்டுகளுக்குப் பின்னராவது, ஆட்சியில் அமர்த்துவதற்கு உதவும் என்பது மஹிந்தவின் எதிர்பார்ப்பு. ஆனால், ரணில் இந்த நெருக்கடிகளை எல்லாம் பூச்சாண்டிகளாக மாத்திரமே காண்கிறார். அவருக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தல் குறித்தே சிந்தனை இருக்கின்றது. அதில் எப்படி வெல்வது? அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதுதான் இப்போதைய இலக்கு. கடந்த வாரம் திடீரென அமெரிக்கா டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதியை அதிகரித்தது. கடந்த எட்டு மாதங்களில், குறிப்பாக ரணில் ஜனாதிபதியானதும் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமடைந்து, ரூபாயின் பெறுமதி அதிகரித்ததாக அரசாங்கம் அறிவித்தது. டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி 360 ஆகக் காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் மூன்று நாள்களில் 306 முதல் 309 ரூபாய் வரை வந்தது. இந்தப் பெறுமதி அதிகரிப்பு என்பது, திறைசேரி ஊடாக திட்டமிட்ட ரீதியில் பொய்யாக கட்டமைக்கப்பட்ட ஒன்று என்று எதிர்க்கட்சிகளும் பொருளாதார அறிஞர்களும் வாதிட்டனர். இவ்வாறு பொய்யாக ரூபாயின் பெறுமதியை அதிகரித்துக் காட்டினால், இந்த ஆண்டின் இறுதியில் டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி இழப்பு என்பது, கிட்டத்தட்ட 400 ரூபாயில் கொண்டுவந்து நிறுத்தும் என்பது குற்றச்சாட்டு. இந்த வண்டவாளங்களை எல்லாம் ரணில் அறியாதவர் அல்ல. அவர் தன்னை, ‘நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுத்த தலைவராக முன்னிறுத்தி’ மக்களை மடையர்களாக்க நினைக்கிறார். அதன்மூலம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற நினைக்கிறார். பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரக்கட்டண அதிகரிப்பு தொடங்கி சர்வதேச நாணய நிதியம் உதவி வழங்குவதற்காக விதித்த பல நிபந்தனைகளையும் ரணில் அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது. மக்கள் மீதான வரிச்சுமை என்பது, ஏற்கெனவே வாழ்வாதார நெருக்கடியில் இருக்கும் மக்களை, இன்னும் இன்னும் அலைக்கழிக்க தொடங்கி இருக்கின்றது. அப்படியான நிலையில், தற்போதைக்கு போலியாக ரூபாயின் பெறுமதியை அதிகரிக்கச் செய்துவிட்டு, ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், ரூபாயின் பெறுமதி அதன் இயல்பான கட்டத்தை அடைந்தால், அதாவது 400 ரூபாய் என்ற நிலையை ஏட்டினால் அதையும் நாட்டு மக்களே தாங்க வேண்டி ஏற்படும். மீண்டும் பொருட்களின் விலை அதிகரிப்புத் தொடங்கி, அனைத்து நெருக்கடிகளும் ஏற்படும். தனது ஆட்சி அதிகார வெறிக்காக, ரணில் இவ்வாறான ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார். அதனை, ஜனநாயக விரும்பிகள் என்று கடந்த காலங்களில் பேசிக்கொண்டிருந்த சில புத்திஜீவிகளும், சமூக அறிஞர்களும் கூட ஆதரிப்பது என்பது அற்பத்தனமானது. நாட்டின் நெருக்கடிகளை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தேர்தல்கள் ஊடாக நிலைபெறும் ஆட்சி அவசியமானது. அவ்வாறான ஆட்சியொன்று அமையும் வரையில், நாட்டில் போராட்டங்கள் என்பது தொடர் கதையாகிவிடும். அது, மக்களின் இயல்பு வாழ்வை முற்றாக சீர்குலைக்கும். நாட்டின் பொருளாதாரத்தை இன்னும் இன்னும் படுபாதாளத்துக்குள் தள்ளும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேர்தலை-நடத்தாது-தொடர்-போராட்டங்கள்-ஓயாது/91-314209
  17. வடக்கு ‘கடல் அன்னை’ மீதான அச்சுறுத்தலைத் தடுப்பது தலையாய கடமை புருஜோத்தமன் தங்கமயில் வடக்கு கடற்பரப்பில், இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பிலான நடவடிக்கைகளில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டு இருக்கின்றது. இந்திய மீனவர்களின் 50 குதிரை வலுவுக்கும் குறைவான இயந்திரப் படகுகளை வாரத்தில் இரண்டு நாள்களுக்கு, வடக்கு கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு, அதைச் செயற்படுத்தும் வேலைகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டு வருகின்றார். இதன் ஒருகட்டமாக கடந்த நாள்களில், பாரதிய ஜனதா கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் மீன்பிடித்துறை பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் வந்து, டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்புகளை நடத்தி இருக்கிறார்கள். வடக்கு கடற்பரப்பில், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களால், வடக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தொழில் இழப்பு, உடமைகள் இழப்பு தொடங்கி உயிரிழப்புகள் வரையில் நிகழ்ந்து விட்டமைக்கான சாட்சிகள் உண்டு. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு கடற்பகுதிகளில், கடற்கரைக்கு ஒரு சில கிலோ மீற்றர் வரையில் அண்மையாக வந்து, பாரிய இழுவை மடிகளைக் கொண்டு வடக்கின் கடல் வளங்களை, இந்திய இழுவைப் படகுகள் வாரிச் சுருட்டிச் செல்லும் காட்சிகளை நாளாந்தம் காண முடியும். சட்ட நடவடிக்கைகள் என்று பெயருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்திய இழுவைப் படகுகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் கைதுகளும் முன்னெடுக்கப்பட்டாலும், அதனால் பயன் இல்லை; அவை வெறும் கண்துடைப்பு மட்டுமே! ஏனெனில், கடற்படையோ, இலங்கை அரசோ, வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அக்கறை கொள்வதைக் காட்டிலும், இந்திய இழுவைப் படகுகளின் பெரு முதலாளிகளையும், அவர்களின் அரசியல் தொடர்பாளர்களையும், முகவர்களையும் குளிர்விக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலேயே கவனமாக இருக்கின்றது. அதன் தொடர்ச்சியாகவே, வடக்கு கடலில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது என்கிற விடயம் முன்னெடுக்கப்படுகின்றது. வடக்கு கடற்பரப்பில், இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பது என்பது காலங்காலமாக நடைபெறுகின்றது. அது, வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாரியளவில் சூறையாடி வருகின்றது. இந்தப் பிரச்சினைகளை ஒவ்வொரு கட்டமாக எடுத்துச் சென்று, தீர்வைக் காண்பதில் வடக்கு மீனவர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் அர்ப்பணிப்போடு செயற்பட்டிருக்கிறார்கள். ஆனால், இலங்கை அரசோ, சொந்த மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதைக் காட்டிலும், இந்திய பெரு முதலாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனமாக இருக்கின்றது. இலங்கையில் ஆயுதப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில், குறிப்பாக வடக்கு கடலில் புலிகள் ஆதிக்கம் கொண்டிருந்த காலப்பகுதியில், இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறல்களை மேற்கொண்ட காட்சிகளை காண முடியாது. ஆனால், ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததும், வடக்கு கடலில் ஆதிக்கம் புலிகளிடம் இருந்து இலங்கை கடற்படையிடம் சென்றதும், எந்தவித தயக்கமும் இன்றி இந்திய இழுவைப் படகுகள் ஆயிரக்கணக்கில் வடக்கு கடற்பரப்பை ஆக்கிரமித்தன. இந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான போர்க்கொடி எழுப்பிய வடக்கு மீனவர்களை, இந்திய இழுவைப் படகுகள் வன்முறை வழியில் தாக்கி, நோகடித்து இருக்கின்றன. இந்தக் கடல் ஆக்கிரமிப்புக்கு எதிராக, வடக்கு மீனவர்கள் ஒன்றிணைந்தார்கள். அதன்பொருட்டு, தமது கடற்பரப்பில் பாரிய இழுவை மடிகளைக் கொண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் சட்டமொன்றைக் கொண்டு வருவதற்காக ஒருங்கிணைந்தார்கள். அதன் முதற்கட்டமாக, வடக்கு மீனவர்கள், பாரிய இழுவை மடிகளைக் கொண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்ற நடைமுறையை மீனவ சங்கங்கள், சமாசங்கள் ஊடாக நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள். அதன்மூலம், வடக்கு கடல் வளம் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. வடக்கு மீனவர்களுக்கு பாரிய இழுவை மடிகளைக் கொண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தெரியாது. அதனால்தான் அந்தத் தொழில் முறைக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்ற விமர்சனம், இந்திய இழுவைப் படகுகளை ஆதரிக்கும் தரப்புகளால் முன்வைக்கப்படுகின்றது. வடக்கு மீனவர்களால் இழுவை மடிகளைக் கொண்ட தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். வல்வெட்டித்துறையிலும் குருநகரிலும் இன்னும் சில பகுதிகளிலும் அந்தத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாரிய படகுகள் இருந்தன. ஆனால், அதைத் தொடர்ந்து முன்னெடுப்பதால், வடக்கு கடல் வளம் அழிக்கப்படும் அபாயத்தை உணர்ந்துதான், அந்தத் தொழில் முறையைத் தடுக்கும் நடவடிக்கைகளில் வடக்கு மீனவர்கள் ஈடுபட்டார்கள். ஏனெனில், வடக்கு கடற்பரப்பு என்பது ஆழம் குறைந்த கடற்பரப்பு. அங்கு சூரிய ஒளி இலகுவாக கடல் அடிப்பரப்பை எட்டுமளவுக்கு நிலைமை உண்டு. அதனால், மீன்களுக்கான உணவான பிளாந்தன்களின் உற்பத்தி என்பது அதிகம். அத்தோடு, வடக்கு கடற்பரப்பில் மீன்களின் இனப்பெருக்கத்துக்கான இயற்கை அமைவிடம் என்பது, சிறப்பான நிலையில் காணப்படுகின்றது. இந்த இரண்டு விடயங்களையும் பாதுகாப்பது தொடர்பில், வடக்கு மீனவர்கள் கவனமாக இருக்கிறார்கள். அதனால்தான், இழுவை மடி தொழில் முறையை வடக்கு மீனவர்கள் நிராகரிக்கிறார்கள். ஏனெனில், தங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கடல் அன்னையின் கருப்பையை அழிக்கும் வேலைகளில் எந்த மகனும் ஈடுபடமாட்டான். ஆனால், இந்திய இழுவைப் படகுகளுக்கு எந்தவிதமான அக்கறையும் இல்லை. பாரிய பாரமான மடி வலைகளைக் கொண்டு, கடலின் அடி மட்டம் வரையில் வாரி அள்ளிச் செல்கின்றன. இதனால், வடக்கு கடலின் இயற்கைக் கட்டமைப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. ஏற்கெனவே, இந்திய கடற்பரப்பை இவ்வாறான தொழில் நடவடிக்கைககளால் அழித்துவிட்டர்கள். இப்போது வடக்கு கடலையும் அப்படியான ஆக்கிரமிப்புக்காக கோருகிறார்கள். அதற்கு ஒத்திசையும் வேலைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபடுகின்றது. இந்திய மீனவர்களுக்கு, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான தடை நடைமுறையிலுள்ள நிலையிலேயே, இவ்வாறான இழுவைப் படகுகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து சென்றிருக்கின்றது. இவ்வாறான நிலையில், இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகுகளை அனுமதித்தால், அந்த நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஏனெனில், குறைந்த வலுக் கொண்ட படகுகளை அனுமதிப்பது என்ற போர்வையில், உண்மையில் இந்திய இழுவைப் படகுகளே வடக்குக் கடலை ஆக்கிரமிக்கப் போகின்றன. மாறாக, தமிழகத்தின் சாதாரண மீனவர்கள் அதன் பயனை அனுபவிக்கப் போவதில்லை. ‘தமது பிரச்சினைகளை உணர்ந்த ஒருவர் கடற்றொழில் அமைச்சர்; அதனால், அது நல்லது’ என்பது, வடக்கு மீனவர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சர் ஆனது முதல், வடக்கு கடற்பரப்பில் வெளிநாட்டு நிறுவனங்களினதும், இந்திய இழுவைப் படகுகளினதும் அத்துமீறல்கள் அதிகரித்துவிட்டன. ஏற்கெனவே கடல் அட்டை பிடிப்புக்காக சீன நிறுவனங்களை டக்ளஸ் அழைத்து வந்திருக்கின்றார் என்கிற குற்றச்சாட்டு உண்டு. அந்தத் தொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக, வடக்கு மீனவர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், அதைச் சமாளிப்பதற்காக ஒருசில மீனவ சங்கப் பிரதிநிதிகளை, தனது கைக்குள் போட்டுக்கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில் நடவடிக்கைகளை டக்ளஸ் தேவானந்தா காப்பற்றி வருகின்றார். இப்போது அவர், இந்திய பெரு முதலாளிகளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் மனிதராக, செயற்படுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார். வடக்கு கடல் அன்னையைக் காப்பாற்ற வேண்டியது வடக்கு மீனவர்களின் கடமை மாத்திரமல்ல; அது ஒட்டுமொத்த வடக்கு மக்களினதும் கடமை. அதனை, பிராந்திய வல்லரசின் எதிர்பார்ப்புகளுக்காக தட்டிக்கழித்துவிட்டு செயற்படுவார்களாக இருந்தால், வடக்கின் கடல் அன்னை முழுவதுமாக அந்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அலங்கோலமாக்கப்படுவாள். அப்போது, அழுது புலம்புவதால் எந்தப் பயனும் இல்லை. அதனால், நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் போல, கடல் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் வடக்கு மக்கள் எழுந்து வர வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-கடல்-அன்னை-மீதான-அச்சுறுத்தலைத்-தடுப்பது-தலையாய-கடமை/91-313942
  18. தோல்வி பயத்தில் ஓடி ஒளியும் ரணில் - ராஜபக்‌ஷர்கள் புருஜோத்தமன் தங்கமயில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துவிட்டது. தற்போது ஆட்சியிலுள்ள ரணில் -ராஜபக்‌ஷ அரசாங்கம், எந்தவொரு தேர்தலையும் உடனடியாகச் சந்திப்பதற்கு தயாராக இல்லை. அதனால், தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்பது அல்லது ஒத்திப்போடுவதற்கான சதித்திட்டங்களை மேற்கொள்வது என்ற எண்ணத்தோடு இயங்கி வருகின்றது. அதன் ஒரு கட்டம்தான், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான நிதியை, திறைசேரி விடுவிக்காமல் அலைக்கழிப்பதனூடு நிகழ்ந்திருக்கின்றது. நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுவும், தேர்தல்கள் மூலமாக நிகழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டம் மேலெழுந்து, ராஜபக்‌ஷர்கள் ஒட்டுமொத்தமாக அதிகார பதவிகளில் இருந்து விலகிய போதும், தேர்தல்கள் மூலம் ஆட்சித் தலைவரும் அரசாங்கமும் தேர்தெடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், ரணிலும் ராஜபக்‌ஷர்களும் இணைந்து, தேர்தல்களுக்கான வாய்ப்பை தவிர்த்துக் கொண்டு, ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறார்கள். வெளிப்படையான அதிகாரப் பதவிகளில் ராஜபக்‌ஷர்கள் யாரும் இல்லை என்றாலும், இன்றைக்கும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்திகளாக அவர்களே இருக்கிறார்கள். எதிர்வரும் நாள்களில் மஹிந்த ராஜபக்‌ஷ, மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. திங்கட்கிழமை (20) நள்ளிரவோடு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வந்துவிட்டது. ஆனால், அவரோ, அடுத்த ஆண்டு வரை எந்தவொரு தேர்தலையும் நடத்த முடியாது என்று சூசகமாக அறிவித்திருக்கின்றார். 300 மில்லியன் ரூபாய்க்கும் மேலாக செலவளித்து, 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிய ரணிலுக்கு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த கிட்டத்தட்ட அதேயளவான நிதியே தேவை என்ற தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கை, காதில் விழவில்லை. சுதந்திரதினம் என்ற பெயரில் ஒன்றுக்கும் உதவாமல், வெட்டி வீம்புக்காக செலவளிக்கப்பட்ட 300 மில்லியன் ரூபாயை, மக்களின் ஜனநாக உரிமையை நிலைநாட்டுவதற்காகப் பகிர்வதில் உள்ள ரணிலின் மனத்தடை, தோல்வி குறித்த பயம் என்கிற ஒற்றைக் காரணத்தால் எழுந்தது. தென் இலங்கை அரசியல் தேர்தல் களம் என்பது, ஐக்கிய தேசிய கட்சி எதிர் ஏனைய தரப்புகள் என்ற நிலையிலேயே ஆரம்பம் முதல் இருந்து வந்திருக்கின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தல் வரையில் அதுதான் நிலைமை. ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.கவின் தலைமைப் பதவியை ரணில் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத நிலையில், சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட தரப்பு, ஐக்கிய மக்கள் சக்தியாக மக்களிடம் வந்தார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் வரவோடு, ஐ.தே.க ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கூட, நேரடியாக வெற்றி கொள்ள முடியாத நிலை வந்தது. சுதந்திர இலங்கைக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி, அதுவும் பல்லாண்டுகள் ஆளும் கட்சியாக இருந்த கட்சி, ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கூட நேரடியாக வெற்றி பெறவில்லை. அந்தக் கட்சிக்கு ஒரேயோரு தேசிய பட்டியல் உறுப்பினரே கிடைத்தது. அதன் வழியாக பாராளுமன்றம் வந்த ரணில், இன்றைக்கு ஜனாதிபதியாக இருக்கிறார் என்பதும் வரலாற்றுப் பதிவுதான். கடந்த பொதுத் தேர்தலில், ஐ.தே.கவுக்கு ஏற்பட்ட நிலை சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால், சுதந்திரக் கட்சி சுதாகரித்துக் கொண்டு, பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து, சில பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி கொண்டு, ஓரளவு தப்பித்துக் கொண்டது. இது கடந்த பொதுத் தேர்தல் வரையிலான நிலைவரம். இன்றைக்கு ஐ.தே.கவும் பொதுஜன பெரமுனவும் ஓரணியில் நிற்கின்றன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் இரு கட்சிகளும் இணைந்தே போட்டியிடுகின்றன. கடந்த பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டுக்கு அண்மித்த வெற்றி பெற்ற பொதுஜன பெரமுனவும், மிகமோசமாக தோற்றுப்போன ஐ.தே.கவும் ஓரணியாக நிற்கின்றன. பெரும் வெற்றி பெற்ற பொதுஜன பெரமுனவை மக்கள், வீதிக்கு இறங்கி விரட்டினார்கள். அவர்களை காப்பாற்ற, தோற்றுப்போய் வீட்டிலிருந்த ரணில், தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வர வேண்டி வந்தது. இன்றைக்கு அவர்கள், தேர்தல் ஒன்றை சந்தித்தால் மிக மோசமான தோல்வியைக் காணும் நிலை காணப்படுகின்றது. ஏனெனில், தென் இலங்கையின் தேர்தல் களம், ஐக்கிய மக்கள் சக்தி எதிர் தேசிய மக்கள் சக்தி என்றே நிலைபெற்றிருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணி, கடந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னை தேசிய மக்கள் சக்தியாக உருமாற்றிக் கொண்டது. ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்களின் போராட்டம் வெற்றி பெற்றதில், தேசிய மக்கள் சக்தியின் பங்கு குறிப்பிட்டளவானது. ஏனெனில், போராட்டங்களை ஒருங்கிணைக்கும் திறன் என்பது, தேசிய மக்கள் சக்திக்கும் அதன் இணைத் தரப்புகளுக்கும் இருக்கும் அளவுக்கு, எந்தவொரு கட்சிக்கும் இல்லை. ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில், அது வெளிப்பட்டது. ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை, பல தரப்புக்களும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. அதில், போராட்டத்தில் பங்களித்த தரப்புகளும் பங்களிக்காத தரப்புகளும் அடங்கும். அப்படியான நிலையில், போராட்டத்தில் கணிசமாக பங்களித்த தேசிய மக்கள் சக்தி, அதன் அறுவடையை தேர்தல்களில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணி மீது, தென் இலங்கைக் கிராமங்களில் கடந்த காலங்களில் அதிருப்தி காணப்பட்டது. குறிப்பாக, அவர்கள், ஆயுத முனையில் நிகழ்த்திய கொலைக் கொடூரங்களால் அது வந்தது. ஆனால், அதனை எப்படியாவது கடந்தாக வேண்டும் என்ற நோக்கத்தில்தான், தேசிய மக்கள் சக்தி என்ற நாமத்துக்குள் மக்கள் விடுதலை முன்னணியை அநுர குமார திஸாநாயக்க நுழைத்தார். அந்தப் பெயர் மாற்றம், தென் இலங்கையின் தொழிற்சங்கவாதிகள், முற்போக்குவாதிகள், திரைப்பிரபலங்கள், கல்வியாளர்கள் என்று பல தரப்பினரையும் பெருவாரியாக உள்வாங்க வைத்தது. இன்றைக்கு தேசிய மக்கள் சக்தி மேடைகளை அலங்கரிப்பவர்கள், தென் இலங்கையின் முற்போக்காளர்களாக நோக்கப்படுபவர்கள். இது, மக்கள் விடுதலை முன்னணி மீதான கடந்தகாலக் கறையை கடப்பதற்கு குறிப்பிட்டளவு உதவியிருக்கின்றது. அதனால், தென் இலங்கையில் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு என்பது, என்றைக்கும் இல்லாதளவுக்கு உயர்ந்திருக்கின்றது. அதனால்தான், இனிவரும் தேர்தல்களில் தமக்கும் தேசிய மக்கள் சக்திக்கும்தான் போட்டியே என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவிக்கும் நிலை வந்திருக்கின்றது. தேர்தல்களை ஒத்திப்போடும் சதித்திட்டங்களை ரணில் -ராஜபக்‌ஷ கூட்டு முன்னெடுப்பதற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் போராடினாலும், தேர்தல் நடந்தால் ரணில் -ராஜபக்‌ஷ தரப்பு தங்களுக்கு போட்டி என்ற நிலையில் இரு கட்சிகளும் இயங்கவில்லை. மாறாக, தென் இலங்கை மக்களின் வாக்குகளை யார் அதிகமாக வாரிக்குவிப்பது என்பதில் தங்களுக்குள் போட்டியிடவே ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் நினைக்கின்றன. தேர்தல் ஒன்று நடந்தால் அதில் முதல் இரண்டு இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியுமே வரும் சாத்தியமுள்ளதாக அரச புலனாய்வு அமைப்புகள், தென் இலங்கையில் நடத்திய ஆய்வுகளும் கூறியிருக்கின்றன. இதனால், தேர்தல்களை ஒத்திவைப்பதைத் தவிர ரணில் -ராஜபக்‌ஷர்களுக்கு வேறு வழியில்லை. குறைந்தது ஓராண்டு காலமாவது தேர்தல்களை, நாட்டின் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி ஒத்திவைத்துவிட்டால், அந்தக் காலப்பகுதிக்குள் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் மீதான மக்கள் அபிமானத்தை குறைத்துவிடலாம் என்பது, ரணில் - ராஜபக்‌ஷர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், ரணில் மீதான அபிமானம் என்பது, மீண்டும் எழுவது என்பது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல. ஏனெனில், ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்களின் போராட்டத்தை, குறுக்கு வழியில் வந்த ரணில், இல்லாமல் ஆக்கிவிட்டார் என்பது, தென் இலங்கையின் உணர்நிலை. அது, குறைந்தது அடுத்த தேர்தல் வரையாவது பிரதிபலிக்கவே செய்யும். அத்தோடு, உடனடியாக நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து ரணில் விடுவித்து, மீட்பதற்கான வாய்ப்புகளையும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் காண முடியவில்லை. அதனால், ரணில் - ராஜபக்‌ஷர்கள் தேர்தல்களை ஒத்திவைத்து நாடகம் ஆடலாமே அன்றி, அடுத்து எப்போது தேர்தல் இடம்பெற்றாலும் அது, அவர்களுக்கு தோல்வி என்ற ஒன்றையே பரிசளிக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தோல்வி-பயத்தில்-ஓடி-ஒளியும்-ரணில்-ராஜபக்-ஷர்கள்/91-313070
  19. பிரபாகரனை உயிர்ப்பித்தல் எனும் பித்தலாட்டம் புருஜோத்தமன் தங்கமயில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக, உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்திருக்கிறார். நீண்ட காலமாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நெடுமாறன், பொது நிகழ்வுகளில் பெரிதாக பங்கேற்பதில்லை. கடந்த திங்கட்கிழமை (13) தஞ்சாவூரில் அமைந்திருக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர், பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வெளிப்படுத்தினார். இதன்போது, அவருக்கு அருகில் காசி ஆனந்தனும் அமர்ந்திருந்தார். தலைவர் பிரபாகரனின் மனைவி என்று, முகத்தை மூடி முக்காடு அணிந்த பெண்ணொருவரை அறிமுகப்படுத்தி, அண்மையில் சுவிஸில் பணம் வசூலிக்கும் கும்பலொன்று மோசடி நாடகத்தை ஆடியிருந்தது. இந்தச் சம்பவம் நிகழ்ந்து, சில நாள்களிலேயே, நெடுமாறன் ஊடகங்களை அழைத்து, பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அறிவிக்கின்றார். சர்வதேச சூழலும் ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் போராடும் சூழலும் நிலவும் நிலையில், பிரபாகரன் உயிரோடு இருப்பதை வெளிப்படுத்துவதற்கான நேரம் கனிந்திருப்பதாக நெடுமாறன் தெரிவித்திருக்கிறார். அத்தோடு, தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும், பிரபாகரனின் செயற்றிட்டங்களுக்கு ஒருங்கிணைந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதான அறிவிப்பை வெளியிட்ட நெடுமாறன், “விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலத்தில், இந்தியாவுக்கு எதிரான சக்திகள், வடக்கு - கிழக்கில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் தொடர்புகளைப் பேணவும்கூட, பிரபாகரன் விரும்பவில்லை” என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். பிரபாகரன் உயிரோடு இருப்பதான அறிவிப்பு, ஒருநாள் ஊடகப் பரபரப்போடு அடங்கிவிட்டது. ஆனால், முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து, கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாகிற நிலையில், திடீரென பிரபாகரன் உயிரோடு இருப்பதான அறிவிப்பு வெளியிடப்படுதற்கான காரணங்களைக் குறித்து கவனமாக பார்க்க வேண்டியிருக்கின்றது. அதிலும், உடலளவில் தளர்ந்திருக்கின்ற நெடுமாறன், ஏன் அதைச் செய்தார்? அவரோடு காசி ஆனந்தன் இருக்க வேண்டிய அவசியம் பற்றியெல்லாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. அத்தோடு, இந்தியா குறித்து, அங்கு வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள், உண்மையில் நெடுமாறனின் செயற்பாடுக்கு ஏதோவொரு பின்னணி இருப்பதான சந்தேகத்தை அதிகரிக்கின்றது. பிரபாகரன் உயிரோடு இருப்பதான நெடுமாறனின் அறிவிப்பை, இலங்கை இராணுவம் உடனடியாக மறுத்துவிட்டது. இறுதி மோதல்களின் இறுதி நாள்களில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறி, உடலம் ஒன்றை உலகுக்கு இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியது. அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகவும், இறுதிக் கட்டத்தில் இராணுவத்தின் ஒரு படையணியின் தளபதியாக செயற்பட்ட தற்போதைய பாதுகாப்பு செயலாளரான கமல் குணரட்னவும் பிரபாகரன் போர் முனையிலேயே இறுதி வரையில் போராடி வீழ்ந்ததாக தெரிவித்து இருக்கிறார்கள். தென் இலங்கையில் இனவாத மதவாத சக்திகள், குறிப்பாக ராஜபக்‌ஷ தரப்பு, புலிகள் மீள உருவாக்கப்படுகிறார்கள்; நாட்டை அழிக்கப்போகிறார்கள் என்று தேர்தல் அரசியலுக்காக அடிக்கடி கூறுவதுண்டு. ஆனால், எந்தவொரு தருணத்திலும் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவர்கள் கூறுவதில்லை. ஏனெனில், பிரபாகரனை கொன்று நாட்டை காப்பாற்றிவிட்டதாக கூறி, தென் இலங்கையில் இரண்டு தடவைகள் ஆட்சி பீடமேறிவிட்டார்கள். அப்படியான நிலையில், பிரபாகரனைக் காட்டி, புலிப்பூச்சாண்டியை சிங்கள மக்களிடம் காட்ட முடியாது என்று அவர்களுக்கு தெரியும். தமிழ் மக்களைப் பொறுத்தளவில் தலைவர் பிரபாகரன், தமிழ் மக்களின் விடுதலைக்காக உடல், பொருள், ஆவியை மாத்திரமல்ல; குடும்பத்தையும் கொடையாக வழங்கிப் போரிட்டவர் என்கிற உணர்நிலை உண்டு. அவர் வாழ்நாள் பூராவும் போராளியாக வாழ்ந்து, மாவீரர் ஆனவர். தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டதாக, இந்தியாவும் இலங்கையும் கடந்த காலங்களில் பல தடவைகள் அறிவித்திருக்கின்றன. அப்போதெல்லாம் புலிகள் இயங்கு நிலையிலேயே இருந்திருக்கிறார்கள். சிலகாலத்தின் பின்னர், பிரபாகரன் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், முள்ளிவாய்க்கால் என்பது ஆயுதப் போராட்டக்களம் தமிழர் தரப்பிலிருந்து மௌனிக்கப்பட்ட களம். அந்தக் களத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களும் போராளிகளும் மரணிக்கும் போது, தலைவர் பிரபாகரன் தப்பியோடவோ, தலைமறைவாக வாழவோ தலைப்பட மாட்டார் என்று மக்களுக்கு தெரியும். ஏன், எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் கூட தெரியும். தலைவர் பிரபாகரனின் இறந்த நாளென்று இலங்கை அரசு அறிவித்திருக்கின்ற திகதியை, தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், அவர் களத்தில் போராடி மாவீரராக வீழ்ந்தார் என்பதை ஏற்றுக் கொள்வதில் எந்த சங்கடமும் இல்லை. ஈழத் தமிழ் மக்களின் அடையாளமாக பிரபாகரன் நீடிப்பதற்கும் அதுதான் காரணம். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், இறுதி மோதல் காலத்தில் இராணுவத்தோடு சேர்ந்து இயங்கிய புளொட் அமைப்பில் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் கூட, தமிழ் மக்களுக்கு போராடப்புறப்பட்டவர்களில் உறுதியும் தியாக சிந்தையும் கொண்டவர் பிரபாகரன் மட்டுமே என்று ஊடகங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தங்களுக்கு இடையில் முரண்பட்டுக் கொண்ட பின்னர், புலிகள் ஏக இயக்கமாக வளர்ந்தார்கள். பின்னரான காலத்தில் ஈரோஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் உள்ளிட்ட இயக்கங்கள் புலிகளோடு இணக்கமாக இயங்கவும் செய்தன. ஆனால், புலிகள் இருக்கும் வரையில் அவர்களோடு எந்தச் சமரசத்துக்கும் வராத இயக்கங்களாக ஈ.பி.டி.பியையும், புளொட்டையும் கூற முடியும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் அதில், புளொட்டை உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, அதற்கு புலிகள் இணங்கினார்கள். ஆனால், அப்போதும் புளொட் அமைப்பு இலங்கை அரசாங்கத்தை பகைத்துக் கொள்ள முடியாது என்று கூறி கூட்டமைப்பில் இணையவில்லை. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி என்கிற பெயரில் அரசியல் கட்சியையும் புளொட் அமைப்பின் உறுப்பினர்களைக் கொண்டு அப்போது அரசாங்கம் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்படியான நிலையில், புலிகளை என்றைக்குமே ஏற்காத சித்தார்த்தனே, பிரபாகரனின் விடுதலைப் போராட்டத்துக்கான அர்ப்பணிப்பு குறித்து மெச்சியிருக்கிறார். அப்படியான நிலையில், தங்களின் தேசிய தலைவராக பிரபாகரனை வரிந்து கொண்ட தமிழ் மக்கள், அவரை எந்த இடத்தில் வைத்திருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பிரபாகரனை உயிர்ப்பிக்க முனையும் தரப்புகள் யார் யாரெல்லாம் என்று பார்த்தால், புலம்பெயர் தமிழ் மக்களிடம் பண வசூல் செய்து, வயிறு வளர்த்து கொழுக்க நினைக்கும் தரப்புகள் முன்னணியில் இருக்கின்றன. இவர்களுக்கு உழைப்பு என்கிற வார்த்தைக்கான அர்த்தம் தெரியாது. அடுத்தவர்களின் பணத்தில் சொகுசாக வாழ்வது என்கிற ஒன்று மட்டுந்தான் தெரியும். அதற்காக வாழ்நாள் பூராவும் மோசடிகளில் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு தமிழ் ஈழமும், விடுதலைப் புலிகளும், பிரபாகரனும் பணம் கொட்டும் மரங்கள். அவர்களை முன்னிறுத்தினால், தமிழ் மக்களை இலகுவாக ஏமாற்றலாம் என்பது தெரியும். இன்றும்கூட பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார், போராடுவதற்கு நிதி கோருகிறார் என்றால் சிலர் அதனை நம்பி ஏமாறத் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு, முள்ளிவாய்க்கால் முடிவை ஏற்று, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதிலுள்ள மனத்தடை மிகப்பெரியது. நெடுமாறனின் ‘தலைவர் உயிரோடு இருக்கின்றார்’ என்ற அறிவிப்பில், இந்தியா குறித்து வெளிப்படுத்தப்பட்ட விடயம் கவனிக்கப்பட வேண்டியது. ஏனெனில், விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தை, இந்தியா பிரதான இலக்காகக் கொண்டிருந்தது. புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள்; பிரபாகரனின் உடலம் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டது என்பது வரையில் இந்தியா மிகக்கவனமாக இருந்தது. புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இலங்கை அளவுக்கு இந்தியாவும் தன்னுடைய சொந்த யுத்தமாகவே நினைத்து நடத்தியது. இறுதி மோதல் காலத்தில் இந்தியா, இலங்கைக்கு வழங்கிய ஆயுத உதவிகள், தொழில்நுட்ப உதவிகள் குறித்து மஹிந்த ராஜபக்‌ஷ, மங்கள சமரவீர போன்றவர்கள் பல தடவைகள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஏன், கோட்டாபய ராஜபக்‌ஷ கூட இந்தியாவின் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தான் நடத்தியதாக கூறியிருக்கிறார். அப்படியான நிலையில், புலிகளுக்கும் இந்தியாவுக்குமான உறவு நிலை என்ன என்பது அனைவருக்கும் வெளிப்படையானது. புலிகள் 2000க்குப் பின்னர், இந்தியாவோடு முரண்படுவதை பெருமளவு தவிர்த்துக் கொண்டார்கள். ஒரு வகையிலான நெகிழ்வுப் போக்கோடு பணியாற்றவே விரும்பினார்கள். ஆனால், தமிழகத்துக்கு சில கிலோ மீற்றர்கள் தொலைவிலுள்ள இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதியில் ஆயுதப் போராட்ட இயக்கமொன்று, அரசொன்றை நிறுவி நிலை பெறுவதை என்றைக்கும் இந்தியா விரும்பியிருக்கவில்லை. ஆனால், புலிகள் அழிக்கப்பட்டால், புவிசார் அரசியலில் இன்னுமின்னும் மேலெழலாம் என்று நினைத்த இந்தியாவுக்கு, ராஜபக்‌ஷர்களும் தென் இலங்கையும் வழங்கியது பெரும் ஏமாற்றமே. குறிப்பாக, அச்சுறுத்தல் அளிக்கும் அளவுக்கு, இந்தியாவுக்கு எதிராக தென்இலங்கை, சீனாவை வளர விட்டிருக்கின்றது. அப்படியான நிலையில், தன்னுடைய பிடியை, இந்தியா மீண்டும் தக்க வைப்பதற்கு பிரபாகரனை உயிர்ப்பிக்கும் தேவை எழலாம். அதற்கான கருவிகளாக நெடுமாறன் போன்றவர்கள் கையாளப்படலாம். ஆனால், அதில் ஏமாறுவதற்கு தமிழ் மக்கள் இப்போது தயாராக இல்லை. ஏன், சிங்கள மக்கள் கூட தயாராக இல்லை என்பதுதான் உண்மை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பிரபாகரனை-உயிர்ப்பித்தல்-எனும்-பித்தலாட்டம்/91-312825
  20. ரணில் எனும் பசுத்தோல் போர்த்திய ‘நரி’ புருஜோத்தமன் தங்கமயில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவித்திருந்தார். ரணில், ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதும் அவசர அவசரமாக சர்வகட்சிக் கூட்டங்களைக் நடத்தி, நாட்டில் புரையோடிப்போயுள்ள இனமுரண்பாடுகளுக்குத் தீர்வு காணப்போவதாக கூறினார். அதற்காக, தமிழ்த் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தைகளையும் அவர் ஆரம்பித்தார். சுதந்திர இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை, இனவாதமும் மதவாதமும் அடக்குமுறைகளுக்கான ஏதுகைகளுமே தீர்மானித்து வந்திருக்கின்றன. இலங்கைக்கு சமஷ்டி ஆட்சி கட்டமைப்பே பொருத்தமானது என்று சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் கூறிவந்த எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா, நாடு முழுவதிலும் பேருரைகளை நிகழ்த்தி இருந்தார். அதற்காக, அவர் யாழ்ப்பாணம் வந்து, தமிழ்த் தலைவர்களின் ஆதரவையும் கோரியிருந்தார். ஆனால், சுதந்திரத்துக்குப் பின்னர், அவர்தான் நாட்டில் மிக மோசமான இன முரண்பாடுகளுக்கான பெருந்தீயைக் கொளுத்தி எரிய விட்டார். ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து வந்த பண்டாரநாயக்க, ஆட்சியைப் பிடிப்பதற்காக தனிச் சிங்களச் சட்டம் என்ற பேரினவாத சதித்திட்டத்தை கையில் எடுத்தார். தனிச் சிங்களச் சட்டம் என்பது உண்மையிலேயே ஜே.ஆர் ஜெயவர்தனவின் திட்டம். ஆனால், அதனை, தென் இலங்கை மக்களிடம் வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைப்பதற்காக பண்டாரநாயக்க திருடிக் கொண்டார். அதை, பௌத்த பீடங்களின் துணையுடன் சிங்கள மக்களிடம் சேர்ப்பித்தார். அது, நாட்டின் முரண்பாடுகளை அதிகப்படுத்தியது. கலவரங்கள், காடைத்தனங்களுக்கு வித்திட்டது. மேல் நாட்டு சிங்களவர், கரையோர சிங்களவர், தமிழ் - முஸ்லிம்களின் பாரம்பரிய பகுதிகள் என்ற மூன்று பிராந்தியங்களை உள்ளடக்கிய சமஷ்டிக் கட்டமைப்பினூடான ஆட்சி அதிகாரமே இலங்கைக்கு பொருத்தமானது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்கிற ஆரோக்கியமான ஆட்சிக்கும் ஒவ்வொரு பிராந்திய மக்களின் தனித்துவத்தை காப்பாற்றுவதற்கும் அதுவே பொருத்தமானது என்பது பண்டாரநாயக்கவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு, சுதந்திர இலங்கையில் நடைமுறைக்கு வந்திருந்தால், நாடு உண்மையிலேயே ‘ஆசியாவின் ஆச்சரியம்’ ஆக இருந்திருக்கும். ஆனால், அவ்வாறான ஏதும் நிகழவில்லை. மாறாக, 75ஆவது சுதந்திர வருடத்தில் நாட்டு மக்கள் நாட்டை விட்டு எப்படி தப்பி ஓடுவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எங்களுடைய நாடு என்கிற எண்ணம் மெல்ல மெல்ல மக்களிடம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது. அதற்கு, கடந்த காலத்தில் ஆட்சி நடத்திய தலைவர்களும் கட்சிகளும், அவர்களுக்கு ஆலோசனை என்கிற பெயரில் இனவாதத் தீயை வளர்க்க உதவிய தரப்புகளுமே காரணமாகி இருக்கின்றன. 75ஆவது சுதந்திரத்தை நாடு எதிர்கொண்டிருக்கின்ற இந்தக் காலத்தில், நாடு திவாலாகி சுருண்டு கிடக்கின்றது. அதிலிருந்து எப்படி மீள்வது என்று எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. பங்களாதேஷிடம் 250 மில்லியன் டொலர் கடனை, நாட்டின் அவசரகால நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக கடந்த வருடம் இலங்கை வாங்கியது. ஆனால், அந்தக் கடனுக்கான எல்லை தாண்டிய பின்னரும், அதைச் செலுத்தும் திராணி நாட்டுக்கு இல்லை. ஆறு மாத கால அவகாசத்தை, பங்களாதேஷிடம் அழுது புலம்பி வாங்கி வைத்திருக்கின்றது நாடு. சீனாவிடமும் இந்தியாவிடமும் ஏற்கெனவே வாங்கிக் குவித்த கடன்கள் பல பில்லியங்கள். அந்தக் கடன்களை மீளச் செலுத்துவது பற்றி யோசித்தால், நாடு இன்னும் பல ஆண்டுகள் இருளின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையே காணப்படுகின்றது. அப்படியான நிலையில், பெருமளவு நிதியைச் செலவு செய்து, ஆடம்பரமாக சுதந்திர தினத்தை, பொதுமக்களின் பங்கேற்பின்றி, இராணுவப் பாதுகாப்போடு நடத்தி முடித்திருக்கிறார் ரணில். அன்று மாலை, நாட்டுக்கு மக்களுக்கு உரையாற்றிய அவர், “நாடு படுகுழிக்குள் வீழ்ந்ததற்கு கடந்த கால ஆட்சியாளர்களும் அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களும் காரணம்” என்று கூறியிருக்கிறார். “தொடர்ந்தும் கடந்த கால ஆட்சியாளர்கள் இயங்கியது போல இருக்க முடியாது. மாறாக, பிரிவினைகள், பிளவுகள் அற்ற ஒரு தாய் நாட்டு மக்களாக இன, மத பேதங்கள் கடந்து ஒன்றிணைய வேண்டும்” என்று பேசியிருக்கின்றார். அதற்கு சில நாள்களுக்கு முன்னர்தான், “13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவேன்” என்று அவர் யாழ்ப்பாணத்தில் பேசியிருந்தார். ரணில், 13ஆவது திருத்தத்தைப் பற்றி பேசுவதற்கான நிர்ப்பந்தம் என்பது, இந்தியாவால் ஏற்பட்டு இருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்காகத் தீர்வு முறைமையை, 13ஆவது திருத்தச் சட்டத்தினூடு அமையும் மாகாண சபைகளினூடு பெற்றுக் கொள்ள முடியும் என்று இந்தியா, தமிழ் மக்களிடம் கூறியது. ஆனால், 13ஆவது திருத்தம் ஏற்படுவதற்கான இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் போதே, அதன் பங்காளிகளாக தமிழ் மக்கள் இருக்கவில்லை. அப்போதே, மாகாண சபைகள், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு அல்ல என்று தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள். இன்று இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பைத் தவிர, மாகாண சபைகளை அங்கிகாரமாக யாரும் கருதவில்லை. இந்தியாவின் நிர்ப்பந்தத்துக்காக, மாகாண சபையை ஏற்ற, ஈ.பி.ஆர்.எல்.எப் கூட சில மாதங்களில், “அதில் ஒன்றுமில்லை” என்று அறிவித்துவிட்டு அதிலிருந்து வெளியேறிவிட்டது. அப்படியான நிலையில், மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று தசாப்த காலம் தாண்டிய பின்னரும், மாகாண சபைகள் தான், அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்தியா செயற்படுகின்றது. இது, இந்தியாவின் அரசியல் இராஜதந்திர நலன்களைக் கருத்தில் கொள்ளும் திட்டமாகும். மாகாண சபை நாட்டின் அரசியலமைப்பில் இருந்து இல்லாமல் செய்யப்பட்டால், இந்திய - இலங்கைக்கான ஒப்பந்தமும் வறியதாகிவிடும். இலங்கை, ஒருவகை தர்மசங்கடத்துடன் இந்தியாவோடு செய்துகொண்ட ஒப்பந்தமொன்றின் மூலம், நாட்டின் உள்ளக பிரச்சினையில் தலையிட வைத்திருக்கின்றது. இதை இல்லாமல் செய்வதற்கு இந்தியா விரும்பாது. அதனால்தான், தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள தங்களில் கருவிகளைக் கொண்டு, அடிக்கடி 13ஆவது திருத்தம் குறித்த விடயத்தை பிரதான பேசுபொருளாக்குவதில் இந்தியா குறியாக இருந்து வந்திருக்கின்றது. கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் டெலோவைத் தேர்ந்தெடுத்து, 13ஆவது திருத்தத்தை முன்னிறுத்தி, தமிழ்த் தேசிய கட்சிகளை ஒருங்கிணைத்த சந்திப்புகளை நடத்தி, இந்தியாவுக்கு கடிதம் எழுத வைத்ததும் அதன் நோக்கில்தான். அந்தக் கடிதத்தை, ராஜபக்‌ஷர்களிடம் பெரிய விடயம் மாதிரி இந்தியா எடுத்துச் செல்ல முயன்றமையானது, அப்போது புதிய அரசியலமைப்பு என்கிற பெயரில் ராஜபக்‌ஷர்கள் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை இல்லாமல் செய்யும் திட்டங்களோடு இருந்தமையாலாகும். ஆனால், சிறிய காலத்துக்குள்ளேயே கோட்டாவை நாட்டு மக்கள் பதவியில் இருந்து அகற்றியதும், ரணில் வந்தார். இப்போது நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியை காட்டி இந்தியா, தன்னுடைய பிடியைப் பேண நினைக்கின்றது. அதற்காகத்தான், அதாவது இந்தியாவை மகிழ்விப்பதற்காகத்தான் ரணில், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக கூறியிருக்கின்றார். இன்னொரு பக்கம், 13ஆவது திருத்தத்தை முன்வைத்து ரணில் ஆடும் இராஜதந்திர சதுரங்கத்தின் மூலம், நாட்டின் இனப்பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டுவிட்டேன் என்று சர்வதேசத்துக்கு அவர் காட்ட நினைக்கிறார். அதாவது, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட சில வாரங்களுக்குள்ளேயே, சர்வகட்சி கூட்டத்தை நடத்தி, இனமுரண்பாடுகளுக்கான தீர்வு குறித்து பேச்சுகளை நடத்தியிருப்பதாக அவர் காட்டினார். அத்தோடு, சுதந்திர தினத்துக்கு முன்னர், தீர்வைக் காணப்போவதாகவும் கூறி, தமிழ்த் தரப்புகளோடு பேச்சுகளை நடத்தினார். ஆனால், அந்த முயற்சிகள் அனைத்துமே ஓர் ஏமாற்று நாடகமாக மாத்திரமே இருந்தன. அப்படியான நிலையில், 13ஆவது திருத்தத்தை அவர் கையிலெடுத்து ஆடுகிறார். அதன் மூலம், இந்தியாவை திருப்திப்படுத்த முடியும் என்பது அவர் நம்பிக்கை. ஆனால், அவர் தன்னை ‘கைதேர்ந்த சதிகாரத் தலைவர்’ ஆக முன்னிறுத்துவற்காக பௌத்த பீடங்களையும் தென் இலங்கையின் கடும்போக்கு சக்திகளையும் கொண்டு, 13ஆவது திருத்தம் நாட்டின் பிரிவினைக்கான சூத்திரம் என்றும் பேச வைத்துக் கொண்டிருக்கிறார். வடக்கில் வந்து 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதாக சொல்லி, இந்தியாவை குளிர வைத்துவிட்டு, தெற்கில் அதற்கு மாற்றாக விடயத்தை தென் இலங்கை சக்திகளைக் கொண்டே அவர் செய்கிறார். இப்போது அவர் ஏமாற்றுவது இந்தியாவை. ஏனெனில், 13ஆவது திருத்தத்தை ஒரு தீர்வாக தமிழ் மக்கள் எந்தக் காலத்திலும் கருதவில்லை; ஏற்றுக் கொள்ளவில்லை. தென் இலங்கையின் பாரம்பரிய அரசியல் ஒழுங்கு என்பது, இனவாத மதவாத, அடக்குமுறை, சதிகாரத்தனம் சார்ந்தது. அதைத்தான் ரணிலும் ‘பசுத்தோல் போர்த்திய நரி’யாக தற்போது செய்கிறார். அவர், தன்னுடைய குறுகிய நலனுக்காக, நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் இந்தியாவையும் ஏமாற்றுகிறார். மற்றப்படி, 13ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்பதோ, அது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பதோ கானல் நீருக்கு ஒப்பான ஒன்று! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரணில்-எனும்-பசுத்தோல்-போர்த்திய-நரி/91-312224
  21. சுமந்திரனை வளர்க்கும் புதிய கூட்டணி புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் எம்.ஏ சுமந்திரன் நுழைந்தது முதல், கூட்டமைப்பை பிளவுபடுத்தும் சதித்திட்டங்களில் ‘ஆமை’ போன்று ஈடுபட்டதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (ஜ.த.தே.கூ - DTNA)) குற்றஞ்சாட்டுகின்றது. கடந்த பொதுத் தேர்தல் காலத்திலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ‘சுமந்திரன்’ என்ற பெயர் பிரதான பேசு பொருளானது. “ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை” என்று சுமந்திரன், சிங்கள இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி, அவரை பலமாகப் பதம் பார்த்தது. அவரது கட்சியின் சக வேட்பாளர்களே, அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசினார்கள். இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் சுமந்திரனின் பெயர்தான் பிரதான பேசு பொருளாகி இருக்கின்றது. “கூட்டமைப்பை பிளவுபடுத்திய ஆமை”, “தமிழரசு கட்சியை கைப்பற்றப்போகும் சதிகாரன்” என்றெல்லாம், ஜ.த.தே.கூட்டணியினர் மேடைக்கு மேடை பேசி வருகிறார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு முடிவெடுத்தது. அதனை, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுமந்திரன் அறிவித்தார். தமிழரசுக் கட்சியின் சார்பில், அந்தக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜாவும் சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்கள். எனினும், தனித்துப் போட்டியிடுவது என்ற தமிழரசுக் கட்சியின் தீர்மானம் சுமந்திரனால் எடுக்கப்பட்டது என்பது மாதிரியாக உணர்நிலையை, ஏனைய இரு பங்காளிக் கட்சிகளான டெலோவும் புளொட்டும் முன்னிறுத்தின. அதனால்தான், சுமந்திரனின் பெயர் இந்தத் தேர்தல் மேடைகளிலும் தொடர்ந்து உச்சரிக்கப்படுவதற்கு காரணமாகி இருக்கின்றது. பங்காளிக் கட்சிகளை இணைத்துக் கொண்டு, தொடர்ந்தும் கூட்டமைப்பாக வீட்டுச் சின்னத்தில், தமிழரசுக் கட்சி போட்டியிட வேண்டும் என்று மாவை சேனாதிராஜா மத்திய குழுக் கூட்டத்தில் வலியுறுத்தினர். அவருக்கு ஆதரவாக ஒரு சிலர் மாத்திரமே பேசினார்கள். ஆனால், மத்திய குழுவில் இருந்த 90 சதவீதமான உறுப்பினர்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்கிற முடிவில் உறுதியாக இருந்தார்கள். தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை அறிவிக்க முதலே, கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிவஞானம் சிறிதரன் பத்திரிகை அறிவித்தல்களை வெளியிட்டிருந்தார். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கிளிநொச்சியிலுள்ள மூன்று சபைகளில் பங்காளிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை சிறிதரன் வழங்கி இருக்கவில்லை. அவர், ஒட்டுமொத்தமாகத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை கொண்டே நிரப்பியிருந்தார். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், சிறிதரன் செய்தது மாதிரியான ஏற்பாடுகளை, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழரசுக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் தலைவர்கள் எடுத்துவிட்டார்கள். அவ்வாறான நிலையில், பங்காளிக் கட்சிகளோடு இடங்களைப் பங்கிடுவது என்பது, தங்களது ஆதரவாளர்களை கோபப்படுத்தும் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால்தான், மத்திய குழு, மாவையின் உணர்ச்சிகரமான உரையை புறந்தள்ளிக் கொண்டு, தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்தது. அத்தோடு, கடந்த பொதுத் தேர்தல் தொடக்கம், தமிழரசுக் கட்சியை பங்காளிக் கட்சிகள் அலைக்கழித்து வருவதான எண்ணம், அந்தக் கட்சியினருக்கு உண்டு. அதனை, சி.வி.கே சிவஞானம் போன்றவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தவும் செய்தார்கள். தங்களது வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றுவிட்டு, தங்களை ஏறி மிதிக்கும் செயற்பாட்டை ஏற்க முடியாது என்பது தமிழரசுக் கட்சியினரின் நிலைப்பாடு. அதனை, கட்டுப்படுத்துவதற்கு வீட்டுச் சின்னம் இல்லாமல் டெலோவும் புளொட்டும் போட்டியிட்டு, தங்களது உண்மையான நிலையை உணர்ந்து கொள்ளட்டும் என்பது தமிழரசின் எண்ணம். அதுபோல, தமிழரசுக் கட்சியினருக்கு கூட்டமைப்பாக நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பெரிதாக இல்லை. பங்காளிக் கட்சிகளின் தொல்லைகள் அற்ற, தனிக் கட்சியாக முன்னேறுவதே இலக்கு. அதற்கு, ஏதாவது காரணத்தை முன்வைத்து, பங்காளிகளை வெட்டிவிட்டாக வேண்டும். அதற்கு, தற்போதுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையிலுள்ள குழப்பத்தை கையிலெடுத்துக் கொண்டு, கூட்டமைப்பின் பங்காளிகள் அனைவரும் தனித்துத் தனித்து போட்டியிட்டுவிட்டு, தேர்தலின் பின்னர் சேர்ந்து ஆட்சி அமைப்பது என்ற ‘காதில் பூச்சுற்றும்’ தொழில்நுட்ப விடயத்தை கையிலெடுத்தது. தேர்தல் களத்தில் தனித்து தனித்து போட்டியிட்டால், கட்சி ரீதியாக பலமாக மோத வேண்டி ஏற்படும். அது, இன்னும் இன்னும் பிளவுகளை ஏற்படுத்தும். அதனால், எதிர்காலத்தில் கூட்டாக சேர்வது தடுக்கப்படும் என்பது வெளிப்படையான விடயம். தமிழரசு தனித்துப் போட்டியிடும் முடிவை, மேற்கண்ட காரணங்களுக்காகத்தான் எடுத்தது. இது, அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, ஆயுதப் போராட்டம், தேர்தல் அரசியல் களம் என்று 50 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் செல்வம் அடைக்கலநாதனுக்கும் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் தமிழரசின் நோக்கம் தெரியாதது இல்லை. அதனால்தான், அவர்கள் இருவரும் தமிழரசு தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்ததும், கூட்டமைப்பை தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, பொதுச் சின்னத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று இரா.சம்பந்தனுக்கு கடிதம் எழுதினார்கள். இதன்மூலம், கூட்டமைப்பு என்கிற அடையாளத்தை தமிழரசு தன்னோடு எடுத்துச் செல்வதைத் தடுக்க முடியும் என்று நினைத்தார்கள். ஏனெனில், கடந்த 20 ஆண்டுகளாக கூட்டமைப்பு என்பது வீட்டுச் சின்னத்தோடு இயங்கியது. இன்றைக்கு தமிழரசு தனித்துப் போட்டியிட முடிவெடுத்ததும், வீட்டுச் சின்னத்தையும் எடுத்துச் சென்றுவிட்டது. அப்படியான நிலையில், கூட்டமைப்பு என்கிற அடையாளத்தையாவது தாங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், தமிழரசின் தனித்துப் போட்டியிடும் முடிவு என்பது, கடந்த பொதுத் தேர்தலின் பின்னரே எடுக்கப்பட்ட முடிவு ஆகும். அதனை, பங்காளிக் கட்சிகள் உணராமல் விட்டதுதான், இப்போது இறுதி நேரத்தில் இவ்வாறான சிக்கல்களைச் சந்தித்து, புதிய கூட்டணியான ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி என்ற பெயரோடு வரக் காரணமாகி இருக்கின்றது. இதனை மறைப்பதற்காக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற ‘லேபிளை’ ஒட்ட செல்வமும் சித்தார்த்தனும் முயன்றாலும் அது, அவ்வளவு இலகுவான ஒன்றல்ல. தமிழரசுக் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் சந்தித்த பின்னடைவை, பங்காளிக் கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முயன்றன. கூட்டமைப்புக்குள் கடந்த காலத்தில் தமிழரசு செலுத்திய ஏகபோக நிலையைத் தடுப்பதற்கு நினைத்தன. அதற்காக, கூட்டமைப்புக்கு வெளியிலுள்ள கட்சிகளோடு பலமான நெருக்கத்தையும் பேணின. அதன் மூலம் தமிழரசை மிரட்டலாம் என்பது அவர்களின் நிலைப்பாடு. ஆனால், டெலோவும் புளொட்டும் இவ்வாறான நடவடிக்கைககளால் தமிழரசின் தனித்துப் போட்டியிடும் முடிவை, கட்சிக்குள் பலமாக உறுதிப்படுத்துவதற்கே உதவின. மாறாக, தாங்கள் பலமான அணியாக எழுவது குறித்து சிந்திக்க மறந்துவிட்டன. அதுதான், தேர்தலொன்று வரும் வரையில், அமைதியாக இருந்துவிட்டு, இறுதி நேரத்தில் தமிழரசுக் கட்சி மத்திய குழுவைக் கூட்டி, தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்தது. டெலோவும் புளொட்டும் தமிழரசின் தனித்துப் போட்டியிடும் எண்ணத்தை மாவை உள்ளிட்டவர்களைக் கொண்டு தடுத்துவிடலாம் என்று முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால், இன்றைக்கு மாவையைத் தாண்டி முடிவுகளை சுமந்திரன், சிறீதரன் உள்ளிட்ட தரப்பினர் தமிழரசுக் கட்சிக்குள் எடுக்கும் நிலை வந்துவிட்டது. அப்படியான நிலையில்தான் டெலோவும் புளொட்டும் பலமான கூட்டணியைக் கட்ட முடியாமல், தேர்தல் மேடைகள் தோறும் சுமந்திரனை வசைபாடும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் தனித்துப் போட்டியிடும் முடிவை, ஆறு மாதங்களுக்கு முன்னரேயே உணர்ந்து கொண்டிருந்தாலே, இன்னும் பலமான கூட்டணியைக் கட்டியிக்கலாம். இறுதி நேரத்தில், அவசர அவசரமாக ஒரு கூட்டணியை அமைக்க வேண்டி வந்திருக்காது. அமைக்கும் போதே புதிய கூட்டணி, நம்பிக்கையீனங்களின் வழியாக எழுந்திருக்கின்றது. வெற்றிபெறுவோம் என்ற எண்ணம் செல்வத்திடமும் சித்தார்த்தனிடமும் இல்லை. அதனால்தான், கூட்டமைப்பின் பிளவு சுமந்திரனால் நிகழ்ந்தது என்றும், அவரை ஆமை என்றும் தூற்றுகிறார்கள். சுமந்திரன் சர்ச்சைகள், விமர்சனங்கள் வழியாக, தான் அடையாளப்படுத்தப்படுவது குறித்த கவலை கொள்ளும் நபர் அல்ல. அவர், மக்களிடம் கவனம் பெற வேண்டுமானால், அவையெல்லாம் ஒருவகையிலான உத்திகள் என்று கருதுபவர். இன்றைக்கு சுமந்திரன், தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்குள் அடைந்திருக்கின்ற இடம், அவரின் செயற்பாட்டு அரசியலால் மாத்திரமல்ல, எதிர்த்தரப்பினரின் விமர்சனங்கள் வசைகளினூடும் நிகழ்ந்தது. இன்றைக்கும், சுமந்திரனுக்கு உதவும் வேலையைத்தான் புதிய கூட்டணியினரும் செய்து கொண்டிருக்கிறார்கள். சுமந்திரனை மறந்துவிட்டு, தங்களின் அரசியல் இலக்கு, அதனை அடைவதற்கான வழிமுறைகள் பற்றி மக்களை தெளிவுபடுத்தினால், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினர் மேல் எழ முடியும். இல்லையென்றால், வயிற்றெரிச்சலை கொட்டித்தீர்க்கும் களமாக மாத்திரமே தேர்தல் களத்தை, புதிய கூட்டணியினர் பயன்படுத்தியதாக வரலாறு பதிவு செய்யும்! https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுமந்திரனை-வளர்க்கும்-புதிய-கூட்டணி/91-311895
  22. ‘யார் கூட்டமைப்பு?’ எனும் சர்ச்சையை புறங்கையால் தள்ளிய தமிழரசு கட்சி புருஜோத்தமன் தங்கமயில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்ததன் மூலம், இரா. சம்பந்தன் இதுவரை காலமும் வகித்து வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவி வறிதாகிவிட்டதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) அறிவித்திருக்கின்றது. புதிதாக கூட்டணி அமைத்துள்ள டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஜனநாயப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி ஆகியன தங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக முன்னிறுத்தத் தொடங்கி இருக்கின்றன. புதிய கூட்டணிக்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (D.T.N.A) என்கிற பெயரும், ‘குத்துவிளக்கு’ சின்னமும் இருக்கின்ற போதிலும், கூட்டமைப்பு (T.N.A) என்கிற அடையாளத்தை தம்மோடு வைத்துக் கொள்ள புதிய கூட்டணி விரும்புகின்றது. அதன் மூலம், தமிழரசுக் கட்சியோடு ‘முட்டல் மோதலை’ தொடர்ந்தும் பேண முடியும். அது, தமிழ் மக்களிடத்தில் கவனம் பெறுவதற்கு உதவும் என்பது ஓர் அரசியல் உத்தி. கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி 60 சதவீதமான பங்கையும் மற்றைய பங்காளிக் கட்சிகள் இரண்டும் 40 சதவீதமான பங்கையும் ஆசனப் பங்கீடுகள் தொடங்கி, தொகுதிப் பங்கீடுகள் வரையில் பேணி வந்திருக்கின்றன. குறிப்பாக, டெலோவும், புளொட்டும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றின் போது, வேட்பாளர்களை தேடிக் கொள்வதில் சிக்கல்களைச் சந்திக்கும் போது, தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் அந்தக் கட்சிகளின் பங்கீடுகளுக்கு ஊடாக கூட்டமைப்பில் போட்டியிட்டு இருக்கிறார்கள். அதனால், கூட்டமைப்பில் இருப்பவர்களில் 75 சதவீதமானவர்கள் தங்களது கட்சிக்காரர்கள் என்கிற எண்ணம் தமிழரசுக் கட்சியினருக்கு உண்டு. அதனால்தான், கூட்டமைப்பின் தீர்மானங்களை சம்பந்தனும் எம்.ஏ சுமந்திரனும் ஏக நிலையில் நின்று எடுத்து வந்திருக்கிறார்கள். அந்தத் தீர்மானங்கள் மீது அதிருப்திகள் இருந்த போதிலும், டெலோவோ, புளொட்டோ எதிர்ப்பை வெளியிடுவதில்லை. இந்த நிலையின் தொடர்ச்சி, கூட்டமைப்பு என்றால் தமிழரசுக் கட்சிதான்; ஏனைய இரு கட்சிகளும் இரண்டாம் நிலையில் இருப்பன என்பது சம்பந்தன் தொடங்கி, தமிழரசுக் கட்சியின் கடைநிலை ஆதரவாளர் வரையில் எண்ணமாக இருந்தது. ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி கொண்ட 10 பாராளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் டெலோ, புளொட் கட்சிகளுக்குள் இருந்து வந்தவர்கள். கூட்டமைப்புக்கு கிடைத்த ஒரு தேசிய பட்டியல் உறுப்புரிமையை தமிழரசுக் கட்சி எடுத்துக் கொண்டது. அந்த உறுப்பினரும் இல்லை என்றால், தமிழரசுக் கட்சி சார்பில் ஐந்து உறுப்பினர்களே வெற்றி பெற்றிருப்பார்கள். இது, கூட்டமைப்புக்குள் கிட்டத்தட்ட தமிழரசுக் கட்சிக்கும் மற்றைய இரு பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட 50:50 என்கிற நிலையை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியது. தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக ‘பெரியண்ணன்’ மனநிலையில் தங்களை கையாண்டு வந்திருக்கின்ற சூழலில், தற்போது கிடைத்திருக்கின்ற பிடியை வைத்துக் கொண்டு, கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்து, கூட்டுத் தலைமைக்கான சூழலை ஏற்படுத்திவிட வேண்டும் என்று டெலோ எண்ணியது. அந்த எண்ணத்துக்கு புளொட்டும் இசைந்தது. அரசியல் என்பது சந்தர்ப்பங்களை கையாளும் வித்தை என்கிற நிலையில், டெலோவும், புளொட்டும் அந்த நகர்வை எடுத்தன. ஆனால், கூட்டமைப்பு என்கிற பெயரில் தமிழரசுக் கட்சியின் ஊடாக வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிட்டு, பங்காளிக் கட்சிகள் குடைச்சல் கொடுத்து வருகின்றன என்பது, தமிழரசுக் கட்சியின் தொடர் எரிச்சல். அதனால், தனித்துப் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்காக அந்தக் கட்சி காத்திருந்தது. தமிழ்த் தேசிய பரப்பில் இப்போது இருக்கின்ற கட்சிகளில் மிகப்பெரிய கட்சி தமிழரசுக் கட்சிதான். அதற்குத்தான் பருத்தித்துறை தொடக்கம் பொத்துவில் வரைக்கும் கிளைக் கட்டமைப்புடன் கூடிய கட்சிக் கட்டமைப்பு பலமாக இருக்கின்றது. அந்தக் கட்சியின் உறுப்பினர்களுக்கான அங்கிகாரம் என்பது, பங்காளிக் கட்சிகளால் பறிக்கப்படுவதான குற்றச்சாட்டு கீழ் மட்டத்திலேயே உண்டு. அதனால், தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்கிற எண்ணம் மேல் மட்டத் தலைவர்களிடத்தில் மாத்திரமல்ல, கீழ் மட்டத்திலிருந்தும் எழுந்து வந்த ஒன்று. அந்தச் சுவடை கவனிக்காமல் டெலோவும் புளொட்டும் தங்களது பங்கைக் கோர முனைந்த போது, தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். சம்பந்தன் இருக்கும் வரையில் கூட்டமைப்பு என்கிற அடையாளத்திலிருந்து தமிழரசுக் கட்சி விலகி நிற்பதற்கோ, தனித்து தேர்தலில் போட்டியிடுவதற்கோ வாய்ப்புகள் இல்லை. அதற்கு அவர் அனுமதிக்க மாட்டார் என்று பங்காளிக் கட்சிகள் நினைத்தன. அத்தோடு, சம்பந்தனின் காலத்துக்குள் தங்களுக்கான தலைமைத்துவ பங்கீட்டை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அந்தக் கணக்கு ஆரம்பத்தில் இருந்து பிழையாகவே இருந்தது. ஏனெனில், சம்பந்தன் தமிழினத் தலைவராக தன்னை அடையாளப்படுத்துவதற்காக மாத்திரமே கூட்டமைப்பின் தலைவர் என்கிற நிலையில் தன்னை வைத்துக் கொண்டாரே அன்றி, கூட்டமைப்பாக தமிழ்த் தேசிய அரசியல் வளர வேண்டும் என்றோ, பங்காளிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றோ அல்ல! சம்பந்தனைப் பொறுத்தளவில், அவர் எப்போதுமே தன்னையொரு பாரம்பரிய தமிழரசுக் கட்சிக்காரனாகவே நினைத்து வந்திருக்கிறார். அதுபோலவே, முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் ஜனநாயக அரசியலுக்குள் வருவதற்கு தகுதியற்றவர்கள் என்பது அவரது எண்ணம். அதனை, அவர் பொது வெளியிலும் காட்டியிருக்கின்றார். டெலோவின் செல்வம் அடைக்கலநாதனுக்கோ, புளொட்டின் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கோ, கடந்த காலத்தில் கூட்டமைப்பில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப்பின் சுரேஷ் பிரேமசந்திரனுக்கோ அது தெரியாதது அல்ல. ஆயுதப் போராட்ட இயக்கங்களை எல்லாம் இணைத்துக் கொண்டு, இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை எண்ணி, சம்பந்தன் எரிச்சலடைந்து இருக்கிறார். ஓர் ஒப்பீட்டு உதாரணமாகக் கூறினால், சித்தார்த்தன் மீதான சம்பந்தனின் அணுகுமுறை என்பது, புளொட்டின் தலைவர் என்ற நிலையைத் தாண்டி, தமிழரசுக் கட்சியின் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கத்தின் மகன் என்கிற அளவிலேயே இருந்திருக்கின்றது. சம்பந்தனுக்கு தமிழரசு கட்சி சார்புதான் மிகப்பெரிய பிணைப்பு. இப்படியான எண்ணத்தைக் கொண்டிருக்கும் ஒருவரிடத்தில் சென்று, தமிழரசுக் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் விடயங்களை பங்காளிக் கட்சிகள் கோரினால், அதற்கு அவர் இணங்குவார் என்பதெல்லாம் அபத்தமானது. அதுவும், சம்பந்தனோடு கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலம் பயணிக்கும் செல்வத்துக்கு அது தெரியவில்லை என்பதையெல்லாம் எப்படி புரிந்து கொள்வது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நேரடிப் பிரசார நடவடிக்கைகளால் கூட்டமைப்பு 2004 பொதுத் தேர்தலில் பெருவெற்றி பெற்றது. அன்று முதல் இன்று வரை, கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக சம்பந்தன் பதவி வகித்து வருகிறார். கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சியாகவோ, கூட்டணியாகவோ பதிவு செய்யப்பட்டு, சொந்தச் சின்னத்தைப் பெற்றுக் கொண்டிராத நிலையில், தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே போட்டியிட்டு வந்திருக்கின்றது. அதனால், பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழரசுக் கட்சியின் ஊடாகவே அடையாளப்படுத்தப்படுவார்கள். அதனால், சம்பந்தன் தன்னை 2014 பிற்பகுதி வரையில், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் என்ற அடையாளத்தினூடாகவே முன்னிறுத்தினார். அப்போதும் அவர்தான் கூட்டமைப்பின் தலைவர். ஆனால், அவர், உத்தியோகபூர்வ மற்றும் மரபார்ந்த விடயங்களில் ஒழுகும் ஒருவராக தன்னை தமிழரசுக் கட்சி அடையாளங்களினூடாக முன்னிறுத்துவதில் கவனமாக இருந்தார். கடந்த எட்டு ஆண்டுகளாகத்தான், கூட்டமைப்பின் தலைவர் என்ற அடையாளத்தை அவர் தன்னோடு சேர்த்துக் கொண்டார். ஆவணங்களிலும் அப்படி எழுத முனைந்தார்.இப்படிப்பட்ட மனநிலையோடு இருக்கின்ற ஒருவரை நோக்கி, நீங்கள் கூட்டமைப்பின் தலைவர் இல்லை; உங்களது பதவி வறிதாகி விட்டது என்று டெலோவோ, புளொட்டோ கூறினால், அது பற்றி அலட்டிக் கொள்ளும் நிலையில் சம்பந்தன் இல்லை. புதிய கூட்டணி அமைத்து, தங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக டெலோவும் புளொட்டும் அறிவித்துக் கொண்டமை தொடர்பில், ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு சம்பந்தன் அளித்த பதில், பங்காளிக் கட்சிகளை அவர் எந்த நிலையில் வைத்திருந்தார் என்பதை உணரப் போதுமானது. அதாவது, “தேர்தலில் மக்கள், யார் கூட்டமைப்பு என்பதை புரியவைப்பார்கள்; மற்றப்படி எதற்கும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை” என்றார். அதுபோலத்தான், தமிழரசுக் கட்சிக்குள் சி.வி.கே சிவஞானம் போன்ற ஒரு சிலரைத் தவிர யாரும், புதிய கூட்டணி தங்களை கூட்டமைப்பாக முன்னிறுத்துவது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. ஏனெனில், சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் தொடங்கி பெரும்பாலானவர்கள் தமிழரசுக் கட்சியாக அடையாளம் பெறுவதையும், வளர்வதையுமே குறியாகக் கொண்டிருக்கிறார்கள். அதனால், கூட்டமைப்பு உரிமை கோரலின் ஊடாக, அரசியல் சர்ச்சையை தோற்றுவித்து கவனம் பெறலாம் என்று நினைத்த புதிய கூட்டணியான ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் முயற்சி, பெரியளவில் எடுபடவில்லை என்பதுதான் யதார்த்தம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/யார்-கூட்டமைப்பு-எனும்-சர்ச்சையை-புறங்கையால்-தள்ளிய-தமிழரசு-கட்சி/91-311473
  23. விக்கி: நம்பிக்கைகளை சிதைக்கும் அவசர நாயகன் புருஜோத்தமன் தங்கமயில் “கைகளின் இரத்தக் கறை உள்ளவர்களுடன் என்னை என்னால் இணைத்துப் பார்க்க முடியாது; தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றில் இணைய வேண்டுமாக இருந்தால் தமிழரசுக் கட்சியில் இணைவேன்...” என்று சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற சில மாதங்களில் தெரிவித்த விடயம் பெரும் சர்ச்சையானது. இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார். அப்போது, கூட்டமைப்பின் பேச்சாளராக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரான சுரேஷ் பிரேமசந்திரன் இருந்தார். அவர், விக்னேஸ்வரனின் கூற்று, தமிழ் மக்களிள் கூட்டமைப்பிற்கு வழங்கிய ஆணையையும், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, புளொட் உள்ளிட்ட கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளையும் அவமதிப்பதாகவும் கண்டனம் வெளியிட்டிருந்தார். முன்னாள் ஆயுதப் போராட்டங்கள் குறித்து, இரத்தக்கறை விமர்சனம் வெளியிட்ட விக்னேஸ்வரன், இப்போது ஜனநாயகப் போராளிகள் கட்சியினரை பார்த்து, அரச புலனாய்வாளர்களோடு தொடர்புகளைப் பேணுபவர்கள் என்று குற்றஞ்சாட்டி இருக்கிறார். அதனால், ஜனநாயகப் போராளிகள் அங்கம் வகிக்கும் தேர்தல் கூட்டில் தன்னால் இணைந்து கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து நின்று களம் காண்பது என்று தமிழரசுக் கட்சி முடிவு எடுத்தது. அதனால், கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் தொடர்ந்தும் போட்டியிட முடியாது என்கிற சிக்கல் டெலோவுக்கும் புளொட்டுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. அதனால், கூட்டமைப்பினர் தாங்களே என்ற கோரிக்கையோடு புதிய கூட்டொன்றை அமைத்திருக்கிறார்கள். இந்தக் கூட்டணி, புளொட்டின், இன்னொரு கட்சியான ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி என்கிற பெயரில் குத்து விளக்குச் சின்னத்தில் போட்டியிடப் போகின்றது. இந்தக் கூட்டுக்கான ஆரம்ப கட்டப் பேச்சுகளில் விக்னேஸ்வரன் இணைந்து கொண்டிருந்தார். அவர், புதிய கூட்டணியின் தலைமைத்துவமும், அதன் ஒட்டுமொத்த கையாளுகைக்கான அதிகாரம் தனக்கு கிடைக்கும் என்று நம்பினார். ஆனால், தமிழரசுக் கட்சி, கூட்டமைப்புக்குள் ஏக அதிகாரத்தோடு நடந்து கொண்டது போல, புதிய கூட்டணிக்குள் எந்தவொரு தரப்பும் நடந்து கொள்வதற்கு அனுமதிப்பதில்லை என்று டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகள் தீர்மானித்தன. அதனால், புதிய கூட்டணியில் விக்னேஸ்வரனுக்கு அதிகார இடம் கேள்விக்குள்ளானது. அதனால், அவர் புதிய கூட்டணியில் இணையவில்லை. இந்த நிலையில்தான், புதிய கூட்டணியில் ஏன் இணையவில்லை என்று ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போது விக்னேஸ்வரன், ஜனநாயகப் போராளிகளை அரச புலனாய்வர்கள் போன்றதொரு தோற்றப்பாட்டை வெளிப்படுத்தினார். விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய அரசியலுக்கு வந்து இந்த ஆண்டோடு பத்து வருடங்களாகின்றன. இந்தக் காலப்பகுதிக்குள் அவரை உச்சத்தில் ஏற்றிவிட்ட அனைத்துத் தரப்பினரையும் அவர் ஏமாற்றியிருக்கிறார். அதுவும், அந்தத் தரப்பினரை மிக மோசமாக குற்றச்சாட்டுகளை சுமத்தி விமர்சித்து, தன்னை நியாயமானவராக காட்ட முயற்சி செய்திருக்கிறார். விக்னேஸ்வரனை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் எதிர்ப்புகளைச் சமாளித்து இரா.சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும் வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக அரசியலுக்குள் அழைத்து வந்தார்கள். முதலமைச்சர் பதவி ஏற்றதும், விக்னேஸ்வரன் சம்பந்தனுக்கு நிகரான தலைவராக தன்னை எண்ணத் தொடங்கினார். சம்பந்தனின் காலத்துக்குப் பின்னர், அந்த இடம் தனக்குரியது; அதற்குத் தானே தகுதியானவன் என்று நம்பினார். தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து சம்பந்தன் விலகும் போது, அந்தப் பதவி தனக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை மாவை சேனாதிராஜாவிடம் வழங்கிவிட்டு, கூட்டமைப்பின் தலைவராக மாத்திரம் இருக்கும் முடிவுக்கு சம்பந்தன் வந்தார். அதனை, விக்னேஸ்வரனால் ஏற்க முடியவில்லை. அதுவரை காலமும் கூட்டமைப்பின் பொது (முதலமைச்சர்) வேட்பாளராக இருந்தாலும், விக்னேஸ்வரன், தன்னை தமிழரசுக் கட்சியோடுதான் இணைத்துப் பார்த்தார். அதனால்தான், இரத்தக்கறை படிந்தவர்களோடு தன்னால் இணைய முடியாது என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை அவமதிக்கவும் செய்தார். தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் என்கிற விக்னேஸ்வரனின் எதிர்பார்ப்பு சாத்தியமாகாத புள்ளியில், அவர் கூட்டமைப்பு மீதான விமர்சனங்களை மெல்ல மெல்ல விடுக்கத் தொடங்கினார். இனியும் கூட்டமைப்புக்குள் இருந்தால் சம்பந்தனுக்கு நிகரான இடத்தை அடைய முடியாது என்கிற நிலையில், தனி ஓட்டத்துக்காக அவர் தயாரானார். அப்போதுதான் கூட்டமைப்புக்கு மாற்றான தலைமைத்துவம் தமிழ்த் தேசிய பரப்பில் உருவாக்கப்பட வேண்டும் என்கிற வேட்கையோடு இயங்கிய தரப்புகள், விக்னேஸ்வரனை அந்த இடத்தில் பொருத்திப் பார்க்க விரும்பின. அதனால் தமிழ் மக்கள் பேரவை என்கிற அமைப்பினை உருவாக்கினார்கள். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடங்கி கூட்டமைப்புக்கு மாற்றான தரப்புகளாக முன்னிறுத்திய பலரும் விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தை ஏற்பதாக அறிவித்து, 2015 பிற்பகுதியில் ஒன்றுகூடின. கிட்டத்தட்ட தான் சம்பந்தனுக்கு நிகரான தலைவராக உருவாகிவிட்டதாக விக்னேஸ்வரன் நம்பினார். பேரவைக்குள் இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின் மூலம், ‘எழுக தமிழ்’ என்கிற பேரணிகள் ஊடாக, மாற்றுத் தலைமையாக தன்னை விக்னேஸ்ரன் முன்னிறுத்தினார். ஆனால், அப்போதும் அவர் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பற்றிக் கொண்டிருந்தார். நல்லாட்சிக் காலத்தில் கிடைத்த ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி, தமிழ்த் தேசிய பரப்பில் பலமான மாற்றுத் தலைமைத்துவமொன்று கட்டமைக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால், அதனை யாழ் மையவதாக அரசியல் ஆய்வாளர்கள், புலமையாளர்களைக் கொண்ட தமிழ் மக்கள் பேரவை சிதைத்தது. இயல்பாக உருவாக வேண்டிய மாற்றுத் தலைமையை, அவசர அவசரமாக விக்னேஸ்வரனைக் கொண்டு நிரப்ப முயன்றது. விக்னேஸ்வரன் அப்போதுதான் தமிழ்த் தேசிய அரசியலின் அரிச்சுவடியைப் படித்துக் கொண்டிருந்தார். அவரின் தலைமையில் மாற்றுத் தலைமை என்கிற பெரும் பாரம் ஏற்றப்பட்டது. அதற்கு, கஜேந்திரகுமாரும், சுரேஷும், த. சித்தார்த்தனும் துணையாக இருந்தார்கள். விக்னேஸ்வரனை பெருந்தலைவராக முன்னிறுத்தி நாளொரும் வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அரசியல் ஆய்வுகள் எழுதப்பட்டன; பெரும் பிம்பம் கட்டமைக்கப்பட்டது. ஆனால், மண் குதிரையை நம்பி பெரும் தடைகளைத் தாண்ட முடியாது என்று இந்தப் பத்தியாளர் உள்ளிட்ட சிலர் சுட்டிக்காட்டினார்கள். ஆனால், அப்போது அது கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்திலேயே விக்னேஸ்வரன் ஒரு மண் குதிரை என்பதும் பதவிகள் மீது பேராசை கொண்டவர் என்பதுவும் வெளிப்பட்டுவிட்டது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் விக்னேஸ்வரனை முன்னிறுத்திக் கொண்டு கஜேந்திரகுமார், சுரேஷ் உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய பரந்து பட்ட கூட்டணியை அமைக்க, தமிழ் மக்கள் பேரவை முயன்றது. ஆனால், அப்போது, விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவி மீதான பற்றால் அவற்றை நாசமாக்கினார். அதனால், பேரவை அமைக்க நினைத்த பரந்து பட்ட கூட்டணி சாத்தியமில்லாமல் போனது. அத்தோடு, பேரவைக்குள் அதுவரை அண்ணனும் தம்பியுமாக இயங்கிய சுரேஷும் கஜேந்திரகுமாரும் குடுமிப்பிடி சண்டை போட்டு பிரிந்து கொண்டார்கள். ஒரு கட்டம் வரையில் கூட்டமைப்பையே அச்சுறுத்தும் அளவுக்கு எழுந்து வந்த பேரவை, கலகலத்து காணாமற்போனது. விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக் காலம் முழுவதையும் பூர்த்தி செய்துவிட்டு, அடுத்த நாள் புதிய கட்சியைத் தொடங்கினார். அதுதான், தமிழ் மக்கள் பேரவையின் இறுதி நாள். கூட்டமைப்போடு முரண்பட்ட தரப்புகள், கடந்த பொதுத் தேர்தலில் விக்னேஸ்வரன் தலைமையில் கூட்டணி அமைத்தன. விக்னேஸ்வரனை வெற்றிபெறவும் வைத்தன. அத்தோடு, அந்தக் கூட்டணியும் கலைந்து போனது. இப்போது, விக்னேஸ்வரனோடு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பு இணைந்து கொண்டிருக்கின்றது. அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு, மணிவண்ணனின் ஆதரவுத் தளம் தனக்கு உதவும் என்று விக்னேஸ்வரன் நினைக்கிறார். அதனால், தன்னை ஏக தலைவராக ஏற்றத் தயாராக இல்லாத, டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்பை அவர் உதறித் தள்ளியிருக்கிறார். விக்னேஸ்வரன் இருக்கிறார் என்று நம்பி தமிழரசுக் கட்சியை எரிச்சலூட்டிய டெலோவும் புளொட்டும், இப்போது கிட்டத்தட்ட நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு வந்துள்ளன. அவர்கள், தங்களை கூட்டமைப்பாக முன்னிறுத்தினாலும், அவர்களின் புதிய பாதையை மக்கள் அங்கிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. கடந்த காலத்தில் வீட்டுச் சின்னத்தில் பெற்ற வெற்றியை அடையும் வாய்ப்பில்லை. தமிழ்த் தேசிய அரசியலில் விக்னேஸ்வரனை நம்பிக் கெட்டவர்கள் என்கிற அணியை அமைத்தால், அதற்குள் சம்பந்தன், சுமந்திரன் தொடக்கம் கஜேந்திரகுமார் ஈறாக, அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும், தரப்புகளும் அடங்குவார்கள் என்பது காலத்தின் பதிவு. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விக்கி-நம்பிக்கைகளை-சிதைக்கும்-அவசர-நாயகன்/91-311047
  24. தனித்துப் போட்டி: பங்காளிகளை நோக்கி தமிழரசு வீசிய சாட்டை புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய இறுதி நாள்களை எண்ணத் தொடங்கிவிட்டது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்ததன் மூலம், கூட்டமைப்புக்கான முடிவுரை எழுதப்பட்டிருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்துக்குப் பின்னர், கூட்டமைப்பு தன்னையொரு தேர்தல் கூட்டாக மெல்ல மெல்லச் சுருக்கிக் கொண்ட போதே, அதன் அழிவுகாலம் ஆரம்பித்துவிட்டதை தமிழ் மக்கள் உணர்ந்து விட்டார்கள். ஏனெனில், தேர்தல் வெற்றிகளை மாத்திரம் முன்னிறுத்தி செயற்படும் கூட்டுகள், நீண்ட காலம் நீடிப்பதற்கான வாய்ப்புகள் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. விடுதலைப் புலிகளின் ஒத்தாசையோடு ஆரம்பிக்கப்பட்ட கூட்டமைப்பு, இரண்டு தசாப்த காலத்தைக் கடந்திருக்கின்றது. கூட்டமைப்பு, புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று ஏற்று, அதனை தேர்தல் களத்தில் நிரூபிப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டாகும். புலிகள் இருக்கும் வரையில், கூட்டமைப்பிற்கான தீர்மானங்களை ‘கிளிநொச்சி’யே எடுத்தது. கூட்டமைப்பை ஆரம்பிப்பதற்காக கிழக்கிலும் கொழும்பிலும் தொடர்ச்சியாக இயங்கிய ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் தரப்பு, கூட்டமைப்பைக் கட்சியாக பதிவு செய்வதற்காக முயன்ற போது, கிளிநொச்சியிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புகள் அதைத் தடுத்தன. குறிப்பாக, கூட்டமைப்பைக் கட்சியாக பதிவு செய்யும் நோக்கில், கட்சிக்காக வரையப்பட்ட யாப்பு பணிகள் இடைநடுவில் புலிகளால் நிறுத்தப்பட்டன. “...கூட்டமைப்பை பதியத் தேவையில்லை. ஏனெனில், இந்தக் கட்சிக்காரர்களை முழுதாக நம்ப முடியாது. அது, ஒரு தேர்தல் கூட்டாக மாத்திரம் இருக்கட்டும்...” என்பதுதான் புலிகளின் நிலைப்பாடு. கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய விரும்பிய தரப்பினரிடம், ‘கிளிநொச்சி’ அதனைத்தான் வலியுறுத்தியது. தொடர் அர்ப்பணிப்புகளின் வழியாக எழுந்த போராட்ட அமைப்பொன்று, தங்களை மீறி இன்னொரு தரப்பு மேலெழுவதை விரும்பாது. புலிகளும் அதைத்தான் செய்தார்கள். ஆனால், புலிகளின் காலத்துக்குப் பின்னரும் 13 ஆண்டுகள், கூட்டமைப்பு நீடித்திருந்தது என்றால் அது, இரா.சம்பந்தன் என்கிற ஒற்றை மனிதரால்தான் சாத்தியமானது. ‘...புலிகள் இப்போது இல்லை. இனி என்னுடைய இறுதிக் காலம் வரையில் நான்தான் தமிழினத் தலைவர்; என்னைத் தாண்டி யாரும் வர முடியாது...’ என்பது சம்பந்தனின் எண்ணம். கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எப் உள்ளிட்ட கட்சிகள் வெளியே சென்ற போதும், பங்காளிக் கட்சிகளுக்குள் இருந்து ‘கட்சி விட்டோடி’கள் வெளியே சென்று புதிய கட்சிகளை ஆரம்பித்த போதும், ‘தமிழின தலைவர்’ எனும் அடையாளத்தை அவர் யாருக்கும் விட்டுத்தரத் தயாராக இருக்கவில்லை. தான் அரசியலுக்கு அழைத்து வந்த சி.வி விக்னேஸ்வரன், தனக்கு நிகரான ஒரு தலைவராக உருவாகும் வாய்ப்புகளை வடக்கு அரசியல் களம் உருவாக்கிய போது, தன்னுடைய ‘விட்டுப்பிடிக்கும்’ உத்தி ஊடாக, விக்னேஸ்வரனை வீழ்த்தினார். தமிழரசுக் கட்சியோடு விக்னேஸ்வரன் முரண்பட ஆரம்பித்த 2015ஆம் ஆண்டு காலத்திலேயே, அவரை வெளியேற்றியிருந்தால், கூட்டமைப்புக்கு மாற்றான அணியொன்று பெரியளவில் உருவாகியிருக்கும். இப்போது, அதன் தலைவராக விக்னேஸ்வரன், சம்பந்தனுக்கு சமமாக வந்திருப்பார். ஆனால், அதனை அவர் உணர்ந்து, விட்டுப்பிடிக்கும் உத்தியை விக்னேஸ்வரனுக்கு எதிராக வெற்றிகரமாக நிலை நிறுத்திக் காட்டினார். இப்போது சம்பந்தன் உடலளவில் தளர்ந்துவிட்டார். அவருக்கு தமிழ்த் தேசிய அரசியலில் இருந்த பிடியும் தளர்ந்துவிட்டது. கடந்த பொதுத் தேர்தல் காலத்திலேயே அது வெளிப்பட்டது. சம்பந்தனின் பிடி தளர ஆரம்பித்ததும், அவர் பிளவுகளை ஒட்டியும் மறைத்தும் வைத்து காத்து வந்த கூட்டமைப்பும் உடைந்து கலகலக்கத் தொடங்கிவிட்டது. அவரால் இன்றைக்கு எந்தவொரு பங்காளிக் கட்சியையும் கட்டுப்படுத்த முடியாது. ஏன், அவரின் தமிழரசுக் கட்சிக்குள் கூட தீர்மானங்களை முன்மொழிய முடியாது. தன்னுடைய மரியாதையை பேண வேண்டுமானால், தமிழரசின் மத்திய குழு முடிவுக்கு இணங்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. கடந்த காலங்களில் சம்பந்தனின் முடிவுகளை அங்கிகரிப்பதற்காக, அல்லது நியாயப்படுத்துவதற்காக மாத்திரமே தமிழரசின் மத்திய குழு கூட்டப்பட்டிருக்கின்றது. இன்று நிலை அப்படியில்லை. கட்சியின் தலைவராக இருக்கும் மாவை சேனாதிராஜாவே, மத்திய குழு முன்னிலையில் வாய் திறக்க பயப்படுகிறார். அவர், பேசிக் கொண்டிருக்கும் போதே, எதிர்க்கருத்துகள் உடனுக்குடன் விடுக்கப்படுகின்றன. அப்படியான நிலையில், சம்பந்தன் இன்று முடிவுகளை எடுத்து அறிவிக்கும் நிலையில் இல்லை. அதனால், கட்சியின் கருத்தை ஏற்பதுதான் அவருக்கு இருக்கும் ஒற்றைத் தெரிவு. வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்த போது, அதனை சம்பந்தன் விரும்பவில்லை. தனக்கு நெருக்கமானவர்களிடம் அதனை அவர் வெளிப்படுத்தவும் செய்தார். ஆனால், தன்னுடைய விருப்பு வெறுப்புகள் குறித்து சிந்திப்பதற்கு, இன்றைக்கு தமிழரசு தயாராக இல்லை என்ற போது, தேவையின்றி வாயைக் கொடுக்காமல் இருப்பது, தனது மரியாதையைக் காப்பாற்றுவதற்கு உதவும் என்பது அவருக்கு நான்றாகத் தெரியும். கூட்டமைப்பு, தேர்தல் மைய அமைப்பாக சுருங்க ஆரம்பித்ததும், பங்காளிக் கட்சிகள் தங்களது நிலையை பலப்படுத்த ஆரம்பித்துவிட்டன. ஒரு கட்டம் வரையில் தமிழரசு ஏக நிலையில் நின்று ஆடியது. குறிப்பாக, கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் வரையில், கூட்டமைப்புக்குள் தங்களைக் கேள்வி கேட்க யாரும் இல்லை என்‌றிருந்தது. ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு சந்தித்த தோல்வி, குறிப்பாக தமிழரசின் தோல்வி, பங்காளிக் கட்சிகளை பலம்பெற வைத்தது. கிட்டத்தட்ட கூட்டமைப்புக்குள் தமிழரசு ஒரு பக்கமும், டெலோவும் புளொட்டும் இன்னொரு பக்கத்திலும் நின்று ஆடித் தீர்த்தன. தமிழரசை வெறுப்பேற்றுவதற்காக தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறிவர்கள், எதிரணியினர் என்று அனைத்துத் தரப்பினரோடும் இணைந்து டெலோவும் புளொட்டும் அரங்க அரசியல் செய்தன. அது, தமிழரசுக்குள் நான் பெரிதா நீ பெரிதா என்று முரண்பட்டு நிற்கின்ற தலைவர்களைக் கூட எரிச்சல்படுத்தியது. இதுதான், கடந்த வாரம் மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழரசின் மத்திய குழுக் கூட்டத்தில் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுக்கக் காரணமானது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையில் காணப்படும் விகிதாசார வெற்றி வடிவத்துக்குள் குழப்பமான நிலை இருக்கின்றது. தனித்து ஆட்சியமைக்க வேண்டுமனால், ஒவ்வொரு கட்சியும் அந்த மன்ற எல்லைகளுக்குள் குறைந்தது 75 சதவீதத்துக்கு குறையாத வாக்குகளைப் பெற்றாக வேண்டும். இதனால், இந்தச் சிக்கல்களை தவிர்ப்பதற்காக, கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றதும், அதன் பின்னர் இணைந்து கூட்டமைப்பாக ஆட்சி அமைப்பது சாதகமான கட்டங்களை ஏற்படுத்தும் என்று கூறித்தான் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும் முடிவை முன்வைக்கின்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் அதனை முன்வைத்துத்தான், தனித்துப் போட்டியிடும் தங்களின் முடிவை தமிழரசு இறுதி வரையில் நியாயப்படுத்தியது. தமிழரசின் இந்த வாதம் நிராகரிக்கக் கூடியது அல்ல. ஏனெனில், கடந்த உள்ளூராட்சி மன்ற முடிவுகள் அதற்கு சான்றாக இருக்கின்றன. ஆனால், உண்மையில், தமிழரசுக் கட்சிக்கு தங்களை மீறி கூட்டமைப்புக்குள் நிலையெடுத்து ஆட நினைக்கும் பங்காளிக் கட்சிகளை அடக்கி வைக்கும் அவசரம் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு, தனித்துப் போட்டியிடுவது எனும் உத்தியை கையிலெடுத்திருக்கின்றது. அதன்மூலம், வீட்டுச் சின்னம் இல்லாமல், டெலோவும் புளொட்டும் தங்களை நிரூபித்துவிட்டு வந்து கூட்டமைப்புக்குள் ஆடட்டும். அப்போது, அவர்களின் ஆட்டத்தை சகித்துக் கொள்ளலாம். அது இல்லாமல், தமிழரசின் வீட்டுச் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றுவிட்டு ஆடுவதையெல்லாம் பொறுக்க முடியாது என்பது, தமிழரசுக் கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரையிலுள்ள உறுப்பினர்களின் நிலைப்பாடு. தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை இனி தமிழரசு மாற்றிக் கொள்ளாது. இதுவரை காலமும் கூட்டமைப்பு என்றால், வீட்டுச் சின்னம். அதனை இனி, பங்காளிகளோடு பகிராமல் பார்த்துக் கொள்ள தமிழரசு முடிவெடுத்திருக்கின்றது. டெலோவும் புளொட்டும் தனித்து களம் காணுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அப்படி போட்டியிட்டால், அவர்களால் வெற்றிபெற முடியாது. அப்படியான நிலையில், தமிழரசுக்கு எதிராக, பலமான அணியொன்றை கட்டவே நினைப்பார்கள். அவர்களின் தெரிவு, விக்னேஸ்வரன் தலைமையிலான ஓர் அணி. அதனைவிட்டால் வேறு வழியில்லை. விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டில் மானாக துள்ளிக் குதிக்கிறார்களோ அல்லது, மீனாக நீச்சல் போடப் போகிறார்களோ என்பது இன்று வியாழக்கிழமை தெரிந்துவிடும். இன்று விக்னேஸ்வரன் தலைமையில் செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோர் புதிய தேர்தல் கூட்டு பற்றி யாழ்ப்பாணத்தில் அறிவித்தல் விடும் வாய்ப்பு உண்டு. பங்காளிக் கட்சிகள் தங்களுக்கு எதிரான புதிய கூட்டில் இணைந்த பின்னர், மீண்டும் அவர்களோடு இணைந்து போட்டியிடுவது என்பது அவ்வளவுக்கு சாத்தியமான ஒன்றல்ல என்பது தமிழரசுக் கட்சிக்கு தெரியும். தமிழ்த் தேசிய பரப்பில் தன்னை முதன்மைக் கட்சியாக நிரூபிக்கவும், புலிகள் மீட்டுக் கொடுத்த வீட்டுச் சின்னத்தின் மூலம் கிடைக்கும் வாக்கு அறுவடையை முழுமையாக அனுபவிப்பதற்காகவும் தமிழரசுக் கட்சி வீசியிருக்கின்ற சாட்டையே, தனித்து போட்டியிடுவது என்கிற விடயம். கூட்டமைப்பின் இறுதி நாள்கள் அவசரமாக எண்ணப்படுகின்றன. அது, பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளும் நிலையில் தமிழ் மக்களும் இல்லை. ஏனெனில், போலி ஒற்றுமையால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. கூட்டமைப்பின் இறுதிக் காலம் அப்படித்தான் இருக்கின்றது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தனித்துப்-போட்டி-பங்காளிகளை-நோக்கி-தமிழரசு-வீசிய-சாட்டை/91-310856
  25. மாவை மீதான விக்கியின் திடீர்ப் பாசம்! சுயநலவாதிகளின் நாடகம் புருஜோத்தமன் தங்கமயில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து, பரந்துபட்ட கூட்டணியை அமைக்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருக்கின்றார். மாவையை “தலைமைத்துவ ஆளுமையற்றவர்” என்று தொடர்ச்சியாகக் கூறி வந்த விக்னேஸ்வரன், திடீரென்று மாவையின் தலைமையில் கூட்டணி அமைப்போம் என்ற அறிவித்தலை விடுக்கிறார் என்றால், அதன் பின்னணியை ஆராய வேண்டி ஏற்படுகிறது. வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பால், விக்னேஸ்வரன் நேரடி அரசியலுக்கு அழைத்துவரப்பட்டு 10 ஆண்டுகளாகப் போகிறது. விக்னேஸ்வரன், இந்த 10 ஆண்டுகளுக்குள் ஏழு ஆண்டுகள் கூட்டமைப்பையும் அதன் தலைவர்களையும் “ஏதும் செய்ய இலாயக்கற்றவர்கள்; தமிழ் மக்களின் துரோகிகள்” என்ற விமர்சனங்களை முன்வைத்து, புதிய கட்சியை ஆரம்பித்திருந்தார். அதுவும், 2015 பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர், கனடிய ஊடகமொன்றுக்கு விக்னேஸ்வரன் வழங்கிய செவ்வியொன்றில், கூட்டமைப்பின் தலைவர்களை, ‘ரணிலின் அடிமைகள்’ என்ற தோரணையில் விமர்சித்திருந்தார். குறிப்பாக, மாவையை “அரசியல் அறிவே அற்றவர்” என்று குறிப்பிட்டிருப்பார். இந்தச் செவ்வியின் பகுதிகளை வெட்டியொட்டி, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள், பொதுத் தேர்தல் காலத்தில் பரப்பிக் கொண்டிருந்தன. அந்தச் செவ்வி குறித்து ஆரம்பத்தில் அமைதி காத்த விக்னேஸ்வரன், தேர்தல் அண்மித்த நாள்களில், கூட்டமைப்புக்கு எதிரான அறிக்கையொன்றை ‘வீட்டுக்கு வெளியே வந்து தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்’ என்று பொருள்பட வெளியிட்டார். இந்த அறிக்கையின் பின்னணியில், யாழ். மையவாத புத்திஜீவிகளும் வைத்தியர்களும் சில அரசியல் பத்தியாளர்களும் இருந்தார்கள். அவர்கள், தமிழ்த் தேசிய அரசியலில் அரிச்சுவடி படித்துக் கொண்டிருந்த விக்னேஸ்வரனை, இரா. சம்பந்தனுக்கு மாற்றான தலைவராகக் காற்றடித்து பெரிப்பித்தும், ஜனவசிய வட்டம் வரைந்தும் கொண்டுமிருந்தார்கள். அன்று விக்னேஸ்வரனிடத்தில் ஆரம்பித்த ‘தமிழின தலைவர்’ என்ற அடையாளத்துக்கான ஆசை இன்றளவும் அடங்கவில்லை. விக்னேஸ்வரன், தன்னை முன்னிறுத்திய அனைவரையும் நட்டாற்றில் விட்டுவிட்டு வந்தவராவார். நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்று வீட்டில் இருந்தவரை, தமிழ் அரசியலுக்குள் அழைத்து வந்த சம்பந்தனையும் எம்.ஏ சுமந்திரனையும் ஏமாற்றியதுடன், அவரை முதலமைச்சராக்கிய கூட்டமைப்பை, தமிழினத்துக்கு துரோகமிழைக்கும் கட்சியாக பேசியிருக்கிறார். அது மாத்திரமின்றி, விக்னேஸ்வரனை நம்பி, கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்று அவரோடு இணைந்தவர்களை, கடந்த பொதுத் தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்திவிட்டு, கறிவேப்பிலைகள் மாதிரி தூக்கியெறிந்துவிட்டார். தேர்தல் வெற்றிக்காக தேவைப்பட்ட சுரேஷ் பிரேமசந்திரன், அருந்தவபாலன், அனந்தி சசிதரன் ஆகியோரிடம் எந்த ஆலோசனைகளையும் அவர் நடத்துவதில்லை. அரசியல் முடிவுகளை தனிப்பட்ட ரீதியிலேயே எடுத்து அறிவிப்பார். அறிவித்த பின்னர்தான், தமிழ் மக்கள் கூட்டணி என்கிற அமைப்பில் இருக்கிற மற்றவர்களுக்கே தெரியும். அப்படியான நிலையில், விக்னேஸ்வரனின் தலைமையில் இன்னொரு தேர்தலில் போட்டியிடும் நிலையில் மற்றவர்கள் இல்லை. இது விக்னேஸ்வரனை சிந்திக்க வைத்துவிட்டது. அதுதான், மாவை மீதான திடீர் பாசத்துக்கு காரணம். விக்னேஸ்வரனை முன்னிறுத்திக் கொண்டு இன்னொரு தேர்தலுக்கு செல்வதற்கு இன்றைக்கு யாரும் தயாராக இல்லை. தோல்வி நிச்சயம் என்கிற நிலையில்தான், அவரை மாவையின் தலைமையை ஏற்க வைத்திருக்கின்றது. இன்றைக்கு தமிழரசுக் கட்சி, மாவையின் கட்டுப்பாட்டில் இல்லை. கட்சியின் தேசிய மாநாடு ஒன்று நடத்தப்பட்டால், மாவை கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து தூக்கி வீசப்படும் நிலை இருக்கின்றது. சுமந்திரனோ, சிவஞானம் சிறிதரனோ கட்சியின் தலைவராகிவிடுவார்கள். அதனால், கட்சியின் தேசிய மாநாட்டை, கட்சி யாப்பு விதிகளை மீறி நடத்தாமல் மாவை தட்டிக் கழித்து வருகின்றார். அப்படியான நிலையில், கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாவை, ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் சரணடைந்திருக்கிறார். சுமந்திரனோ, சிறிதரனோ தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துக்கு வந்துவிட்டால், கூட்டமைப்புக்குள் டெலோ, புளொட்டின் நிலை மோசமான கட்டங்களை அடைந்துவிடும். அதைத் தடுப்பதற்காக, மாவை தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியின் தலைமையில் இருக்க வேண்டும் என்று செல்வமும், சித்தார்த்தனும் விரும்புகிறார்கள். அந்தப் புள்ளியை விக்னேஸ்வரனும் பிடித்துக் கொண்டு, குறுக்கு வழியில் ஓட நினைக்கிறார். வடக்கு முதலமைச்சர் பதவி என்பது, மாவையின் தீராக் கனவு. அந்தக் கனவை நனவாக்க, தாங்கள் துணை நிற்பதாக அவரிடத்தில் செல்வமும் சித்தார்த்தனும் உறுதி அளித்திருக்கிறார்கள். இப்போது விக்னேஸ்வரனும் அதற்கு இசைந்திருக்கின்றார். இந்த இசைவு என்பது, சம்பந்தன் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. மாவையை முதலமைச்சர் என்ற கட்டத்துக்குள் வடக்குக்குள் சுருக்கிவிடலாம். அப்படியான நிலையில், கூட்டமைப்பின் மூத்த தலைவர் என்ற கட்டத்தை தான் அடைந்து கொள்ளலாம் என்பது விக்னேஸ்வரனின் எண்ணம். ஏனெனில், செல்வமும் சித்தார்த்தனும், சுமந்திரன், சிறிதரன் தலைமையில் இயங்குவதைக் காட்டிலும் விக்னேஸ்வரனை தங்களது தெரிவாகக் கொள்வார்கள். இந்தச் சூத்திரங்களின் புள்ளியில் நின்றுதான், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கூட்டமைப்புக்குள் இணைப்பது என்ற நிலைப்பாட்டையும் மாவையின் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்ற விக்னேஸ்வரனின் அறிவிப்பையும் புரிந்து கொள்ள வேண்டும். மாவையின் அரசியல் நீண்ட பாரம்பரியங்களைக் கொண்டது. ஆனால், அவருக்கு இன்று கட்சியை வழிநடத்தத் தெரியவில்லை. தன்னுடைய பதவி ஆசைக்காக கட்சியை காட்டிக் கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டார். அதனால், பங்காளிக் கட்சிகள், கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சியை தோற்கடிப்பதற்காக ஒன்றிணைந்தவர்களுடனும் கூட்டு வைக்கத் தயாராகிவிட்டார். தமிழரசுக் கட்சியின் அடுத்த மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் ஏழாம் திகதி மட்டக்களப்பில் நடைபெற இருக்கின்றது. இந்தக் கூட்டத்தில், மாவை மீது தேசிய மாநாட்டைக் கூட்டுமாறு நெருக்கடி விடுக்கப்படலாம். குறிப்பாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முன்னர், அதனை கூட்டுமாறு அழுத்தங்கள் வழங்கப்படலாம். அந்த அழுத்தங்களை “...பார்க்கலாம் தம்பி...” என்று வழமைபோல மாவையால் தட்டிக்கழிக்க முடிந்தால், அவரின் தலைமைப் பதவி இன்னும் சில மாதங்களுக்கு தப்பிப்பிழைக்கும். மற்றப்படி, முதலமைச்சர் கனவுக்காக அவர் கட்சியை மற்றவர்களிடம் அடகு வைக்கும் நிலையை, தமிழரசின் அடுத்த கட்டத் தலைவர்கள் யாரும் விரும்பவில்லை. குறிப்பாக, தமிழரசின் தலைமைத்துவத்துக்கு வரத்துடிக்கும் சுமந்திரன் அணியும் சிறிதரன் அணியும் விரும்பவில்லை. இரண்டு அணிகளும், தேசிய மாநாடு ஒன்று நடந்தால், அதில் தலைமைத்துவத்தை அடைவதற்காகப் படை பட்டாளங்களைச் சேர்க்கத் தொடங்கிவிட்டார்கள். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா வரை கட்சியின் தொகுதிக் கிளைகளுக்குள் சுமந்திரன் ஆதரவை தேடிக் கொண்டிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை, தீவகம், காங்கேசன்துறை தவிர்ந்த தொகுதிகள் சுமந்திரனை ஆதரிக்கும் நிலையில் இருக்கின்றன. சிறிதரனைப் பொறுத்தளவில் கிளிநொச்சி, மன்னார் மற்றும் சுமந்திரனுக்கு எதிரான அணிகளுடன் கூட்டு என்று ஆதரவு திரட்டும் வேலைகளை கமுக்கமாக நடத்திக் கொண்டிருக்கிறார். இதுதான், தமிழரசின் இன்றைய நிலைமை. மாவை, இன்று இருக்கும் நிலையில், முதலமைச்சர் கனவை அடைவதற்கான வாய்ப்புகள் என்பது மிகமிக அரிது. அதைச் சொந்தக் கட்சிக்காரர்களே நிறைவேற்றத் துணிய மாட்டார்கள். இப்படியான நிலையில், விக்னேஸ்வரனின் ‘குயுக்தி’ ஆட்டம் பலிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. தேர்தல் அரசியலில் இலாப நட்டக் கணக்குகளைப் பார்த்து, கூட்டணிகள் அமைவது சாதாரணமானவை. இந்தக் கூட்டணிகளுக்குள் கொள்கை, கோட்பாடு என்ற எதுவும் இருப்பதில்லை. தேர்தல் வெற்றி மாத்திரமே இலக்காக இருக்கும். இவ்வாறான கூட்டணிகளால் மக்களுக்கான நன்மைகள் ஏதும் பெரியளவில் நிகழ்ந்ததாக வரலாறுகள் இல்லை. கொள்கை, கோட்பாடுகள், செயலாற்றுவதற்கான திறன், அரசியல் ஒழுக்கம் என்று ஏதுமற்று, சுய இலாபங்களுக்காக ‘பரந்துபட்ட கூட்டணி’ என்று அறிவித்தலை விடுக்கும் தலைவர்களை, தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும். இல்லையென்றால், தமிழ் மக்களின் தலைகளில் தொடர்ந்தும் மிளகாய் அரைத்துக் கொண்டிருப்பார்கள். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாவை-மீதான-விக்கியின்-திடீர்ப்-பாசம்-சுயநலவாதிகளின்-நாடகம்/91-310390
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.