Search the Community
Showing results for tags 'மதுரை'.
-
மதுரை: உறவுகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சம் சொந்தங்களை சேர்த்த கதை கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மதுரை அருகே முதியோர் இல்லத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டிகள் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் மூலம் ஒரு லட்சம் சொந்தங்களை பெற்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த முதியவர்கள் ரீல்ஸ் வீடியோ உருவாக்குவது எப்படி? சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்தது எப்படி? அதற்காக எவ்வாறு தயாராகின்றனர்? முதியோர் இல்ல தாத்தா பாட்டிகளின் ரீல்ஸ் டிரெண்டானது எப்படி? மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட திருநகர் பகுதியில் அடைக்கலம் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் கணவர் அல்லது மனைவி, குழந்தையை இழந்த மற்றும் சொந்தகளால் கைவிடப்பட்ட 27 முதியவர்கள் உள்ளனர். கடந்த 2020 ஆண்டு கொரோனா காலத்தில் அடைக்கலம் முதியோர் இல்லம் துவங்கப்பட்டு கொடையாளர்களிடமிருந்து நிதியைப் பெற்று செயல்பட்டு வருகிறது. இங்கிருக்கும் தாத்தா, பாட்டிகளின் நடனத்திற்கு இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ரீல்ஸ் வீடியோ துவங்கியது எப்படி? தாத்தா, பாட்டி வீடியோவுக்கு ஆரம்பத்தில் ஆதரவு கிடைக்கவில்லை என்கிறார் முதியோர் இல்லப் பராமரிப்பாளர் வி.நாகலட்சுமி. இது பற்றி பிபிசியிடம் பேசிய அவர், "எங்களது இல்லத்தில் அனைத்து முதியோரையும் சேர்ப்பது கிடையாது. கணவன், குழந்தையற்ற மற்றும் குழந்தைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் என 27 பேரை பராமரித்து வருகிறோம். இங்கு இருக்கக்கூடிய முதியோர்களுக்கு தன்னார்வலர்கள், மக்கள் உணவு அளிப்பது மற்றும் அது தொடர்பான காணொளிகளை வீடியோவாக பதிவு செய்து எங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டோம். இங்குள்ள சில முதியவர்கள் காய்கறி தோட்டம் அமைத்து அசத்தினர். அதனையும் வீடியோவாக பதிவு செய்தோம். ஆனால் அதற்கு பெரிய அளவிலான பார்வையாளர்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை", என்கிறார் அவர். ஒரே ஒரு ரீல்ஸ் வீடியோ 10 லட்சம் பார்வையாளர்கள் எட்டியது "எங்களது இல்லத்திற்கு வரும் தன்னார்வலரான கல்லூரி மாணவர் அருண்ராஜ் என்பவர் வைரலாக இருந்த "பொதியை ஏற்றி வண்டியில" என்கிற கிராமியப் பாடலின் காணொளிக்கு எங்கள் இல்லத்தில் உள்ள தாத்தா பாட்டியை நடனமாடப் பயிற்சிக் கொடுத்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த காணொளி லட்சக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்தது. இது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இதனை முதியோர்களிடம் காண்பித்தபோது அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். எப்போது நடனம் ஆடுவோம் எனக் கேட்கத் துவங்கினர்", என்றார் நாகலெட்சுமி. சமூக வலைதளத்தால் கிடைத்த உதவிகள் "எங்களது தாத்தா பாட்டிகளின் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றதைத் தொடர்ந்து எங்களது இல்லத்திற்கு ஒரு வேளைக்குத் தேவையான தொகையை பலர் அனுப்ப துவங்கினர். அது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. சில படங்களின் விளம்பரத்திற்காக எங்களது தாத்தா - பாட்டியை வீடியோ எடுத்துக் கொடுக்கச் சொல்லி அதற்கு சிறு தொகையும் கொடுத்தனர். அந்தப் பணத்தில் முதியவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தினோம்", எனக் கூறுகிறார். இந்த முதியோர் இல்லத்தில் பலர் தங்களுடைய திருமண நாள், பிறந்த நாளை கொண்டாட வருகை தருகின்றனர். அங்கு இருக்கும் முதியோர்களுக்கு உணவை பரிமாறி மகிழ்ச்சியடைகின்றனர். முதியோர்களிடம் வாழ்த்துகளைப் பெற்று ஒரு வேளை உணவுக்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டுக் கொள்கின்றனர். முதியவர்கள் மதிய நேரத்தில் சிறிது நேரம் தொலைக்காட்சியில் தொடர்களை பார்த்து தங்களது பொழுதைக் கழிக்கின்றனர். மாலை நேரத்தில் கோழிகள் பராமரிப்பு, கிளியிடம் விளையாட்டு என சுறுசுறுப்பாக மாறி நடனமாடுவதற்காக தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றனர். முதியோர் இல்லத்தின் பின்பகுதியில் இருக்கும் இடத்தில் தாத்தா பாட்டிகள் பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர். அவர்களுக்கு நாகலெட்சுமி, கல்லூரி மாணவர் அருண்ராஜ் ஆகிய இருவரும் பயிற்சி அளிக்கின்றனர். மகன் இறந்த அதிர்ச்சியில் கணவரும் இறந்ததால் இங்கே வந்துவிட்டேன் என்கிறார் ஆர். ராக்காயி. பிபிசியிடம் பேசிய அவர் , "தேனி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவள் நான். எனது மகன் விபத்தில் உயிரிழந்தார். அந்த அதிர்ச்சியில் எனது கணவரும் சிறிது காலத்தில் இறந்துவிட்டார். அங்கு இருக்கக் கூடிய எனது உறவினர்கள் என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை. அதனால் கிளம்பி இங்கு வந்து விட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த இல்லத்தில் வசித்து வருகிறேன். இங்கே எனக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கிறார்கள். நடனம் ஆடுவதால் மகிழ்ச்சியாக இங்கே நிம்மதியுடன் இருக்கிறேன்", என்றார். 'கொரோனாவால் வாழ்க்கையே மாறிப் போச்சு' மகன், மகள் இருந்தும் ஐந்து ஆண்டுகளாக இல்லத்தில் தங்கி இருப்பதாக கூறுகிறார் எஸ்.மாரியப்பன். "எனது மனைவி 2003-ல் இறந்து விட்டார். நான் எனது மகன் கோவையில் பணிபுரிந்து நிறுவனத்தில் நானும் பாதுகாவலராக பணியில் இருந்தேன். கொரோனா பெருந்தொற்று நேரத்தில் வயதானவர்களை வேலையில் இருந்து நீக்கினார்கள். அதில் எனக்கும் வேலை போனது. அவர்களுடன் சேர்ந்து இருப்பதில் எனது மருமகளுக்கு விருப்பமில்லை. மகளின் வீட்டில் தங்குவதற்கு வசதியுமில்லை. எனவே, நான் இங்கே வந்துவிட்டேன். எனக்கு இப்போது 86 வயது ஆகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இங்கேதான் இருந்து வருகிறேன். என்னால் முடிந்தவரை ஆடுகிறேன். நடனமாடுவது எனக்கு பிடித்து இருக்கிறது", என்றார். 'உறவினர் என்னை அழைத்தாலும் போக மாட்டேன்' "எனது மனைவி இறந்த பிறகு நான் இந்த இல்லத்திற்கு வந்துவிட்டேன். எனக்கு குழந்தைகள் கிடையாது. என்னை எனது அண்ணன் தான் இங்கே சேர்த்துவிட்டார். வீட்டில் நான் நடனமாடுவேன். அந்த பழக்கத்தில் இங்கே நடனமாடுவது மகிழ்ச்சியை கொடுக்கிறது. எனது அண்ணன் தம்பிகள் அதனைப் பார்த்துவிட்டு வரும்போது நன்றாக இருப்பதாக கூறுவார்கள் இங்கு இல்லத்திற்கு எங்களை பார்க்க வரும் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ச்சி அடைவேன். உறவினர்கள் என்னை மீண்டும் அழைத்தாலும் நான் போக மாட்டேன். இங்கேயே இருந்துவிட்டு போக வேண்டியதுதான்", என்றார் ராஜகோபால் 'தப்புத்தப்பாக நடனம் ஆடுவோம்' "எனது கணவருடன் 40 ஆண்டுகள் வாழ்ந்தேன். அவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனது மகனுக்கு திடீரென மனநல பாதிப்பு ஏற்பட்டது. அவனை ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு தர்காவிற்கு அழைத்துச் சென்றும் பலன் இல்லை. தற்போது அவன் சாலைகளில் சுற்றி திரிகிறான். என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. எனது மகள் வீட்டில் இருக்கக்கூடிய சூழ்நிலை இல்லாததால் இங்கே வந்துவிட்டேன். இங்கே உணவு, உடை தவிர அதிர்ஷ்டமாக நடனமாட வாய்ப்பு கிடைத்தது. அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது", என்றார் பிரேமா "நாங்கள் நடனத்தை தப்புத்தப்பாக ஆடுவோம். ஆனாலும் அவர்கள் எங்களுக்கு பொறுமையாக சொல்லிக் கொடுப்பார்கள்" என்கிறார் அவர். 'முதியோரை துன்புறுத்துவதாக விமர்சனம்' வீடியோவில் முதியோரை நடனமான வைத்து சிரமப்படுத்துவதாக விமர்சனம் வந்ததாக கூறுகிறார் தன்னார்வலர் க. அருண்ராஜ். பிபிசியிடம் பேசிய அவர், "இங்கே இருக்கும் முதியவர்கள் அனைவரும் சாலை ஓரங்களில் இருந்து மீட்கப்பட்டவர்கள். இவர்களுக்கு உணவு, உடை இருப்பிடம் கிடைத்துள்ளது. ஆனால் மன மகிழ்ச்சி மற்றும் உடல் நலத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைதளத்தில், நடனமாட வைத்து அதனை பதிவேற்றம் செய்தோம். துவக்கத்தில் அவர்களை துன்புறுத்துவதாக எங்களை விமர்சனம் செய்தனர். ஆனால், இது அவர்களுக்கு ஒரு மனதில் புத்துணர்ச்சியையும் உடல் ஆரோக்கியத்தையும் தருகிறது என்பதை நாங்கள் விளக்கினோம். தொடர்ந்து வீடியோக்கள் அதிகம் பார்வையாளர்களை எட்டியது", என்றார் ரீல்ஸ் வீடியோ உருவாவது எப்படி? தொடர்ந்து பேசிய அவர், "தாத்தா பாட்டிகளை வைத்து நடனமாட வைப்பது மிகவும் கடினமான செயல். குழு நடனமாக இருந்தால் ஒரு வீடியோவை எடுப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனென்றால், அவர்கள் நாம் சொல்லிக் கொடுக்கும் நடன அசைவுகளை எளிதில் மறந்து விடுவார்கள். மீண்டும், மீண்டும் சொல்லிக் கொடுத்து வீடியோவை எனது செல்போனில் எடுத்து, எடிட் செய்து, அதனைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறோம். இது அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களை வைத்து எடுத்த வீடியோக்களை ஞாயிற்றுக்கிழமைகளில் கணினியில் காண்பிக்கும் போது தாத்தா பாட்டிகள் அளவில்லாத மகிழ்ச்சியை அடைந்தனர்", என்றார். இந்த தாத்தா பாட்டிகளின் இன்ஸ்டாகிராம் பக்கம் சமீப நாட்களுக்கு முன்பாக ஒரு லட்சம் பின் தொடர்பவர்களை எட்டியதை அவர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/c4nxjxj1ynvo
-
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு எப்போது சென்றால் உடனே சாமி தரிசனம் செய்யலாம்..? மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் 'பொது தரிசனம்' செய்வதாக இருந்தால் சுமார் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் வரிசையில் கால்கடுக்க காத்திருந்து அம்மனைத் தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது. அதற்குக் காரணம் எப்போது பூஜை நடைபெறும், எப்போது திரை விலக்கப்படும் என்ற விவரம் அறிந்திடாததேயாகும். மீனாட்சியம்மனை எப்போது தரிசிக்கலாம்? மீனாட்சியம்மனுக்கு எந்த நேரத்தில் பூஜை செய்யப்படும் என்ற தகவலினை தெரிந்துகொண்டு அந்த நேரத்தில் சுலபமாக சுவாமியையும், அம்பாளையும் தரிசனம் செய்துவிட்டு வரலாம். தினமும் காலை 5 மணிக்கு அம்மன் சன்னதி வாசலில் சித்தி விநாயகர், முருகனுக்கு பூஜை செய்யப்படும். காலை 5.10 மணிக்கு பள்ளியறையில் உள்ள சுவாமி, அம்மனுக்கு பூஜை செய்தவுடன், காலை 5.15 மணிக்கு, மூலஸ்தானத்தில் தீபாராதனை காட்டி, திரை விலக்கப்படும். காலை 5.30 மணிக்கு பள்ளியறையிலிருந்து சுவாமி, தனது சன்னதிக்கு புறப்படுவார். அங்கு காலை 5.45 மணிக்கு பூஜைகள் செய்து, திரை விலக்கப்படும். பின், பரிவார தெய்வங்களுக்கு பூஜை செய்யப்படும். காலை 6.30 மணிக்கு அம்மன் சன்னதியில் அபிஷேகத்திற்காகத் திரை போடப்படும். காலை 6.45 மணிக்கு திரை விலக்கப்பட்டு, தீபாராதனை நடக்கும். மீண்டும் திரை போடப்பட்டு காலச்சந்தி பூஜை நடத்தப்படும். பின் காலை 7.15 மணிக்கு திரை விலக்கப்பட்டவுடன், காலை 10.30 மணி வரை பக்தர்கள் அம்மனை தரிசிக்கலாம். சுவாமி சன்னதியிலும் இதேமுறை பின்பற்றப்படுகிறது. மீண்டும் காலை 10.30 மணிக்கு திரை போடப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். காலை 10.45 மணிக்கு திரை விலக்கப்பட்டு, தீபாராதனை காட்டி, மீண்டும் திரை போடப்படும். காலை 11.15 மணிக்கு திரை விலக்கப்பட்டவுடன் அலங்கார கோலத்தில் மதியம் 12.30மணி வரை அம்மனையும், சுவாமியையும் தரிசிக்கலாம். பின் நடை சாத்தப்படும். பக்தர்களின் வசதிக்காக, மாலை 3.45 மணிக்கு பூஜை செய்து, 4 மணிக்கு திரை விலக்கப்படும். இரவு 7.30 மணி வரை தரிசனம் செய்யலாம். இரவு 7.30 மணிக்கு அர்த்தசாம பூஜைக்காக திரை போடப்பட்டு, இரவு 8 மணிக்கு விலக்கப்படும். அம்மனை இரவு 9.15 மணி வரை தரிசிக்கலாம். பின், பள்ளியறை பூஜை நடக்கும். ஒருசில நாட்களில் சற்று முன்னுக்குப் பின் மாறுதல் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால்,விசேஷ நாட்களில் கூடுதல் அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப்படுவதால் பூஜை நேரத்தில் கட்டாயம் மாறுபடும். தினமணி