ஊர்ப்புதினம்

மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை அதானி நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

3 days 18 hours ago
07 MAY, 2024 | 10:36 AM
image
 

20 வருடங்களுக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை  இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு ( M/s Adani Green Energy SL Limited ) வழங்குவதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியது.

இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் ( M/s Adani Green Energy Limited ) மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு 2022.03.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, குறித்த கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவை மதிப்பீடு செய்வதற்காக அமைச்சரவையால் பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டது. 

குறித்த குழுவின் விதந்துரைகளின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்னலகொன்று கிலோவாற்று மணிக்கு 8.26 சதம் அமெரிக்க டொலர் பெறுமதி (உண்மையான வெளிநாட்டு செலாவணி சரிவிகிதத்திற்கமைய இலங்கை ரூபாவில்  செலுத்துவதற்கு) இறுதிக் கட்டணமாக அங்கீகரிப்பதற்கும் 20 வருடங்களுக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை M/s Adani Green Energy SL Limited இற்கு வழங்குவதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/182862

மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி

3 days 18 hours ago

Published By: DIGITAL DESK 3

07 MAY, 2024 | 09:22 AM
image
 

மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டிட நிர்மாண பணிகளுக்கும், மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்குமாக இந்த 600 மில்லியன் ரூபா நன்கொடை பயன்படுத்தப்படவுள்ளது.

வடக்கு மாகாண   ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் நெறிப்படுத்தலின் கீழ், மாகாண சபையால் திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டு சுகாதார அமைச்சின் ஊடாக கொழும்பிலுள்ள இந்திய  உயர்ஸ்தானிகராலயத்திடம் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய அரசாங்கம்  600  மில்லியன் ரூபா நன்கொடையை வழங்குவதற்கான அனுமதியை அளித்துள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இன்மையால் மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். 

இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாக வடக்கு மாகாண ஆளுநரினால் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/182852

180 கடவுச்சீட்டுகளை வடிகானில் வீசிவிட்டு, பொதுமக்களின் 26 M கோடி ரூபாவையும் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய எஜென்சிகாரன்

4 days 5 hours ago
1000226440.jpg
மஹரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றில் கடவுச்சீட்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
 
விசாரணையின் போது, அந்த பையில் மஹரகமவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 180 கடவுச்சீட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
 
வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக பலரின் கடவுச்சீட்டுகளையும் வாங்கி வைத்து இருந்த குறித்த நபர் சுமார் 26 கோடி ரூபாவை மோசடி செய்துவிட்டு தற்போது தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

இந்த மடவளவுகாரங்களின் தொல்லை வாயிலையும் தமிழை சிதைச்சு கொள்வார்கள் உங்களுக்கு அரபு வேணுமென்றால் அரபியில் செய்தியை போட்டு தொலைகிறதுதானே ?

அரச உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம்

4 days 8 hours ago
06.jpg

ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள், மாகாண அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை 65 வரை நீட்டித்து, பின்னர் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்பட்ட நிலையில், அதற்கிடையிலான காலத்தில் 60 வயது பூர்த்தியான பின்னர் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்காக இந்த வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவினால் வௌியிடப்பட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர தேவைகளை பூர்த்தி செய்யும் உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்க கடந்த மார்ச் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/301006

அரசுக்கு சொந்தமான கல்மடு வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த ஐவர் கைது

4 days 8 hours ago
06 MAY, 2024 | 06:19 PM
image
 

கிளிநொச்சியில் அரசுக்கு சொந்தமான கல்மடு வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி - இராமநாதபுரம் பிரிவுக்குட்பட்ட கல்மடு வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி உள்நுழைந்து மரங்களை வெட்டி, மரக்குற்றிகளை இரண்டு உழவு இயந்திரங்களில் ஏற்ற முற்பட்ட ஐந்து இளைஞர்கள் இராமநாதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட ஐவரும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் அவர்கள் வெட்டிய மரக்குற்றிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

IMG-20240506-WA0043.jpg

IMG-20240506-WA0042.jpg

https://www.virakesari.lk/article/182838

ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி

4 days 9 hours ago

Simrith   / 2024 மே 06 , மு.ப. 07:43 - 0      - 55

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
instapaper sharing button

இந்த ஆண்டு முதல் தடவையாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 200,000க்கு கீழ் வீழ்ச்சியடைந்ததன் மூலம் இலங்கை சுற்றுலாத்துறை ஏப்ரல் மாதத்தில் வேகமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மொத்தம் 148, 867 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) தற்காலிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட 41 சதவீதம் அதிகமாக இருந்தாலும், கடந்த மாதத்தில் (மார்ச்) பதிவு செய்யப்பட்ட 209,181 சுற்றுலாப் பயணிகளின் வருகையை விட இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.

டிசம்பர் 2023 முதல், இலங்கை ஒவ்வொரு மாதமும் 200,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் வெற்றிகரமாக உள்ளது, இது கொவிட் தொற்றுநோய் வெடித்ததில் இருந்து முதல் முறையாக மைல்கல்லை எட்டியது.
இந்த வேகம் நான்கு மாதங்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டது, ஆனால் ஏப்ரல் மாதத்தில் ஒரு சுருக்கம் காணப்பட்டது

எவ்வாறாயினும், ஒரு சுருக்கம் எதிர்பார்க்கப்பட்டாலும், சுற்றுலா அதிகாரிகள் கடந்த வாரம் வீழ்ச்சிக்கு பிற காரணிகளும் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளனர். ஏப்ரல் 17 முதல் நடைமுறைக்கு வந்த புதிய விசா முறையானது, இது மிகவும் விலை உயர்ந்ததுடன் முன்பு இருந்த ETA போல வசதியாக இல்லாததால், அது வெளியிடப்பட்டதிலிருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதற்கிடையில், மாதாந்திர சுற்றுலா வருகை புதுப்பிப்பில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விசா வகைகளின்படி வருகை எண்கள் "புதுப்பிக்கப்பட்டுள்ளன" என்று SLTDA குறிப்பிட்டது.

புதுப்பிப்பு வருகை எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காட்டுகிறது.
இது தொடர்பில் குடிவரவு அதிகாரிகளிடம் இருந்து தெளிவுபடுத்தப்பட்டதன் பின்னர் இன்னும் தெளிவான யோசனையை இன்று பகிர்ந்து கொள்ள முடியும் என்று அதன் தலைவர் பிரியந்த பெர்னாடோ தெரிவித்தார். 

“வருகைத் தரவைப் பெறுவதற்கான ஆதாரம் குடியேற்றம். அவற்றை வகைப்படுத்தலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்வையிடுதல், வணிகம், MICE போன்றவை" என்று அவர் கூறினார்.

ஏப்ரலில் இலங்கை சுற்றுலாவுக்கான சிறந்த மூல சந்தைகளாக இந்தியா, ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் இங்கிலாந்து ஆகியன இருந்தன, அவை மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் முறையே 18 சதவீதம், 10 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என பங்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilmirror Online || ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் சட்ட விரோத விளையாட்டு பூங்காவுக்கு எதிர்ப்பு!

4 days 9 hours ago

கிளிநொச்சியில் சட்ட விரோத விளையாட்டு பூங்காவுக்கு எதிர்ப்பு!

யோகி.

கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் இராணுவத்தினரின் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்ட இடத்தில் சட்ட விரோதமாக இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் நேரில் சென்று பார்வையிட்டதோடு இவ்விடத்தில் தொடர்ந்து இராணுவத்தினர் ஆதிக்கம் செலுத்துவதை தொடர்ந்தால் மக்களே ஒருமித்து அளவிலான போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் பூநகரி பொன்னாவெளியில் வளங்கள் சூறையாடப்படுகின்றது. உருத்திரபுரம் உருத்திரபுரீச்வரர் ஆலயம் ஆக்கிரமிக்க முயற்சிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் அனுமதியில்லாது இராணுவம் மேற்கொள்ளும் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

அத்துடன்  கரைச்சி பிரதேச சபைக்குச் சென்று அங்கு கரைச்சிபிரதேச செயலரிடம் இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)

கிளிநொச்சியில் சட்ட விரோத விளையாட்டு பூங்காவுக்கு எதிர்ப்பு! (newuthayan.com)

புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

4 days 10 hours ago
புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
06 MAY, 2024 | 04:26 PM
image
 

வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் முன்னிலையில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி வவுனியா - கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இன்று (06) கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

தாக்குதலுக்குள்ளான நபர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் 'பொலிஸார் பக்கசார்பாக செயற்படாது குழாய் கிணறு ராசனை கைது செய்', 'பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்கியவருக்கு பாதுகாப்பு கொடுக்காதே', 'பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீதும் நடவடிக்கை வேண்டும்' என்றவாறு கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்ப்பாட்டக்காரர்களின் சார்பாக 10 பேரை அழைத்துப் பேசியிருந்தார். 

இதன்போது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகைதந்த நபரை 3 தினங்களுக்குள் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். அதன் பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர்.

கடந்த மாதம் 15ஆம் திகதி வவுனியா, சின்னப் பூவரசன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரை புளியங்குளம் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட சில பொலிஸார் பிடித்து வைத்திருக்க, வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து அந்த தந்தையை தாக்கியிருந்தார். 

தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_20240506_110331.jpg

IMG_20240506_110313.jpg

IMG_20240506_110455.jpg

புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lkIMG_20240506_110524.jpg

புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் இளம் குடும்பஸ்தரை தாக்கிய நபரை கைது செய்யக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

மட்டக்களப்பில் சிறுமிக்கு ஊசி ஏற்றிய சம்பவம் போலியானது !

4 days 10 hours ago

Published By: DIGITAL DESK 3

06 MAY, 2024 | 04:53 PM
image
 

மட்டக்களப்பில் பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபரொருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதுடன், அந்த பொய் செய்தியை திரிவுபடுத்தி சமூக ஊடகங்களில் குரல்பதிவிட்ட ஆசிரியரை எச்சரித்து இன்று திங்கட்கிழமை (6)  விடுவித்துள்ளதாக  மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர். பண்டார தெரிவித்தார்.

“நகரிலுள்ள  உள்ள பாடசாலையில் தரம் 5 ஆம் ஆண்டில் கல்விகற்றுவரும் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த வியாழக்கிழமை (02) பாடசாலை முடிந்து பிற்பகல் 2.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் பெற்றோர் வருவதற்காக காத்திருந்துள்ளார்.

அப்போது அங்கு கறுப்பு நிறத்திலான ரவுசரும் சேட்டும் முகத்திற்கு கறுப்பு நிறத்திலான முகக்கவசமும் அணிந்துகொண்டு  இளைஞன் ஒருவர் வந்து பெற்றோரதும் சிறுமியின் பேரை கேட்டு பாடசாலையில் அனைவருக்கும் ஊசி பேடுவதாகவும், உங்களுக்கு ஊசி போடவில்லை என தெரிவித்து சிறுமிக்கு ஊசி ஒன்றை ஏற்றிவிட்டு அவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். அதனால் சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே ஏனைய பிள்ளைகள் கவனம் என ஆசிரியர் ஒருவர் குரல்பதிவிட்டு  சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. இது தொடர்பாக மட்டு தலைமையக சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சப் இன்பெக்ஸ்டர் விவேகானந்தன் தலைமையில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவதினமான கடந்த வியாழக்கிழமை (02) சிறுமியை பாடசாலையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு வீட்டிற்கு தந்தையார் மோட்டர் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் சிறுமி தாயாரிடம் பாடசாலையில் இன்று ஊசி போட்டதாகவும் அதனால் வாந்தி எடுத்ததாகவும் மயக்கமாக இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தாயார் வகுப்பு ஆசிரியர், அதிபர் மற்றும் மாணவர்களின் பெற்றோரிடம் விசாரித்தபோது அப்படி ஊசி எதுவும் போடவில்லை என அறிந்து கொண்டுள்ளார்.

இதன் பின்னர் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை சிறுமிக்கு காய்ச்சல் காரணமாக பாடசாலைக்கு செல்ல வில்லை. இந்நிலையில், தந்தையாரிடம் தாயார் சிறுமி தனக்கு ஊசி போட்டதாக தெரிவித்த சம்பவத்தை தெரிவித்தநிலையில் மாலை 3 மணிக்கு மட்டு. போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில், சிறுமி தெரிவித்ததை தெரிவித்து இரத்த சோதனை செய்யுமாறு  தந்தையர் கேட்டுக் கொண்டதையடுத்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  பாடசாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி கமராவை சோதனை செய்த பொலிஸார்  சிறுமிக்கு ஊசி ஏற்றியதாக  சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிய வந்துள்ளது.

சிறுமி பொய்  செல்லியுள்ளார் என்பதும், சிறுமி தெரிவித்தமை பொய் என அறியாது அதனை ஆசிரியர்களுக்கு தந்தையார் தெரிவித்துள்ளார்.

அதனை தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் குரல்பதிவிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே குறித்த சிறுமி மீது ஊசி ஏற்றிய எந்த தடையமும் இருக்கவில்லை என வைத்திய பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனி தெரிவித்தார்.

இதனையடுத்து சமூக ஊடகங்களில் குரல் பதிவிட்ட ஆசிரியரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டு அவரை எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சிறுமிக்கு வைத்திய பரிசோதனையின் இடம்பெற்று வருகின்றது.

எனவே, இவ்வாறு உறுதிப்படுத்தப்படாமல் சமூக ஊடகங்களில் பதிவிட்டு  பொதுமக்களை பீதியடைச் செய்பவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் சிறுமிக்கு ஊசி ஏற்றிய சம்பவம் போலியானது ! | Virakesari.lk

போதனா வைத்தியசாலைகள் தொடர்பில் வெளியாகும் போலி செய்திகளால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை - சுகாதார அமைச்சர்

4 days 10 hours ago

Published By: DIGITAL DESK 3

06 MAY, 2024 | 05:01 PM
image
 

(எம்.மனோசித்ரா)

போதனா வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திரசிகிச்சைகள் வெற்றியளிப்பதில்லை என தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. எனவே மக்கள் இவ்வாறான போலி செய்திகள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

போதனா வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சத்திரசிகிச்சைகள் வெற்றியளிப்பதில்லை என தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான போதனா வைத்தியசாலைகளில் ஆயிரக்கணக்கான சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

உலகில் இலவச சத்திரசிகிச்சைகளை வழங்கும் நாடுகள் பாரியளவில் இல்லை. ஆனால் இலங்கையில் சாதாரண காய்ச்சலுக்கான மருந்து உட்பட மூளை சத்திரசிக்சை வரை இலவச தரமான சுகாதார சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

கொவிட் காலத்திலுள் மிகவும் வெற்றிகரமாக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. உலகில் வளர்ச்சியடைந்த பல நாடுகளை விட இலங்கை முன்னிலை வகித்தது. அந்த வகையில் இந்த கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி முன்னெடுத்துக் கொண்டு செல்வதற்கு துறைசார்ந்தவர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

யாழ் போதனா வைத்தியசாலை என்பது மிகவும் சிறந்த சேவையை வழங்கும் ஒரு வைத்தியசாலையாகும். எனவே போதனா வைத்தியசாலைகள் தொடர்பில் தெரிவிக்கப்படும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.

போதனா வைத்தியசாலைகள் தொடர்பில் வெளியாகும் போலி செய்திகளால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை - சுகாதார அமைச்சர் | Virakesari.lk

விசா நடைமுறை குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

4 days 10 hours ago
06 MAY, 2024 | 08:26 PM
image
 

 

வெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட  50 டொலர்  கட்டணத்தை  மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு இன்று திங்கட்கிழமை (6) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா  சேவையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  வெளிநாட்டவர் ஒருவர்  நாட்டிற்குள் நுழையும் போது  அதற்கான விசா விநியோகிக்கும்  முழுப் பொறுப்பையும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஏற்கும் ஏற்கும் என்றும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விசா நடைமுறை குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Virakesari.lk

கடன் மறுசீரமைப்புத் திட்டம் தோல்வி! – அரசாங்கம் கையில் எடுக்கவுள்ள புதிய துருப்புச் சீட்டு

4 days 13 hours ago

கடன் மறுசீரமைப்புத் திட்டம் தோல்வி! – அரசாங்கம் கையில் எடுக்கவுள்ள புதிய துருப்புச் சீட்டு
May 6, 2024

அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முற்றாகத் தோல்வியடைந்துள்ள நிலையில், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக பாரிஸ் கிளப் தொடர்பான ஒரு வேலைத் திட்டத்தையும் சீனாவுடன் மற்றொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது.

வெற்றிகரமான வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்ற தலைப்பை எதிர்வரும் தேர்தல்களில் பிரதான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மகத்தான வெற்றியைப் பெற்றதாகக் காட்டி அதனைப் பெரிய துருப்புச் சீட்டாக மாற்ற அரசாங்கம் திட்டங்களைத் தயாரித்திருந்தது.

ஆனால் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத் திட்டம் முற்றாகத் தோல்வியடைந்துள்ளதாகவும், இலங்கையின் பிரதான கடனாளியான சீனா, பாரிஸ் கிளப் முன்வைத்த பிரேரணைக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து அரசாங்கம் புதிய திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இதன்படி, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக பாரிஸ் கிளப் தொடர்பான ஒரு வேலைத்திட்டத்தையும் சீனாவுடன் மற்றொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது.

அல்லது இரண்டு கொள்கைகளின் கீழ் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைச்செயல்படுத்த வேண்டும். ஆனால் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக உலகில் எந்த நாடும் இதுபோன்ற இரண்டு திட்டங்களைச் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. அப்படி நடந்தால், ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் செய்து கொள்ளும் கடன் ஒப்பந்தங்களை அது கடுமையாகப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் அனைவரும் ஒரே திட்டத்தின் கீழ் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், சீனா மற்றும் பாரிஸ் கிளப்புடன் தனது கடைசித் துருப்புச் சீட்டாக இரண்டு கடன் திட்டங்களை செயல்படுத்த ஒரு உடன் பாட்டை எட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/கடன்-மறுசீரமைப்புத்-திட்/

 

யாழில் உணவகத்தில் புழு!!

4 days 14 hours ago

யாழில் உணவகத்தில் புழு!!
330533779.jpg

புதியவன்) 

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் நகருக்கு அண்மையாகவுள்ள பிரபல சைவ உணவகத்தின் மதிய உணவில் புழு காணப்பட்டமை தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மதிய உணவுப் பொதியை இன்று ஒருவர் 300 ரூபா செலுத்திக் கொள்வனவு செய்துள்ளார். அவர் தனது அலுவலகத்துக்குச் சென்று மதிய உணவை உண்பதற்காக பொதியைத் திறந்துள்ளார். இதன்போது உணவினுள் புழு இருந்தமையை அவதானித்துள்ளார். உடனடியாக யாழ். மாநகர சபையின் சுகாதார மருத்துவ அதிகாரிக்கும், பொதுச் சுகாதார பரிசோதகருக்கும் அறிவித்துள்ளார். 

இதேவேளை மேற்படி உணவகத்தின் மதிய உணவில் புழு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைத்து மூடப்பட்டிருந்தமையும் நினைவில்கொள்ளத்தக்கது. (அ)
 

https://newuthayan.com/article/யாழில்_உணவகத்தில்_புழு!!

இந்தியாவுடன் இணைந்து யாழ் சர்வதேச விமான நிலையம்  அபிவிருத்தி

4 days 14 hours ago

இந்தியாவுடன் இணைந்து யாழ் சர்வதேச விமான நிலையம்  அபிவிருத்தி
adminMay 6, 2024
jaffna-international-airport.jpg

இந்தியாவுடன் இணைந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை   அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்  சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து  கோரப்பட்டிருந்த முன்மொழிவுகளுக்கமைய  ஒரேயொரு முன்மொழிவு மாத்திரமே கிடைக்கப்பெற்றதன்  காரணமாக இவ்வாறு   தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

 

https://globaltamilnews.net/2024/202491/

நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு - மக்கள் அவதி

4 days 15 hours ago
06 MAY, 2024 | 12:19 PM
image

வவுனியா

வவுனியாவில் கிராம சேவையாளர்கள் இன்று திங்கட்கிழமை (06) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கிராம சேவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் சேவையினை பெற்றுக்கொள்வதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பானது சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

download__1_.jpg

download.jpg

தம்பலகாமம்

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களின் சுகயீன விடுமுறையை வலியுறுத்தி தம்பலகாமம் பிரதேச செயலக கிராம உத்தியோத்தர்களும் இன்று (06) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் பிரதேச செயலகத்தின் பொது மக்கள் தினமான இன்றைய தினம் சேவைகளை பெற செயலகத்தை நாடும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்.

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதன் அடிப்படையில், சேவைகள் இடம்பெறாமல் பூட்டப்பட்டுக் கிடக்கும் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு கிராம உத்தியோகத்தர்களை சந்தித்து சேவைகளைப் பெற தூர பிரதேசங்களில் இருந்து வருகை தரும் மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதை காணக்கூடியதாக உள்ளது. 

download__2_.jpg

https://www.virakesari.lk/article/182790

இந்தியாவில் கைதாகி விடுதலையான 5 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவதில் எவரும் அக்கறை கொள்ளவில்லை - என்.எம்.ஆலம்

4 days 15 hours ago
06 MAY, 2024 | 01:40 PM
image

ந்திய கடற்பரப்பில் நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்துவர கடற்றொழில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை எவ்வித முனைப்பும் காட்டவில்லை என  வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று திங்கட்கிழமை (6) காலை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்திய கடற்பரப்பில் நுழைந்த நிலையில் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களின் நிலை தொடர்பாக இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி தலைமன்னாரில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற 05 மீனவர்கள் தமிழக கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடியில் ஈடுபட்டபோது கடலில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக அவர்களின் படகு அங்கு ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மீனவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்ட காலம் முதல் அவர்கள் விடுவிக்கப்பட்ட காலம் வரை சுமார் 6 மாதங்கள் அவர்கள் தொடர்பான எவ்வித நடவடிக்கைகளையும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் எவரும் எடுக்கவில்லை.

தமிழக மீனவர் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்தால் அல்லது பாதிக்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் இடம்பெறுகின்ற போராட்டங்களும், தமிழக அரசு மற்றும் அங்குள்ள இந்திய துணை தூதரகங்கள் முனைப்புடன் செயற்படுகின்றன. ஆனால், எமது மீனவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்படுகின்றபோது இங்குள்ள அரசியல் பிரதிநிதிகளால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

இந்த 5 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு இன்று இந்தியாவில் உள்ள எம்மோர் என அழைக்கப்படும் புத்த கோவில் பகுதியில்   இலங்கை துணைத் தூதரகத்தினால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. இவர்களில் மூவர் திருமணம் செய்தவர்கள்; இருவர் திருமணம் செய்யாதவர்கள். அவர்களின் குடும்பங்கள் இங்கு பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றன.

அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களின் தற்போதைய நிலையை எவரும் கேட்டறிந்ததாக தெரியவில்லை. வட பகுதியில் உள்ள ஒவ்வொரு மீனவரின் நிலையும் இவ்வாறே அமைந்துள்ளது.

யாருமே அவர்கள் மீது அக்கறை செலுத்துவதில்லை. எனவே தற்போது அங்குள்ள மீனவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, கடற்றொழில் அமைச்சர் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் துரித நடவடிக்கையை எடுத்து, 5 பேரையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார். 

https://www.virakesari.lk/article/182802

ஈழவேந்தன் என்று தன்னை அழைத்த தமிழ்த் தேசியவாதி

4 days 15 hours ago

image

 

லங்கைத் தீவில் நீதீயையும் சமத்துவத்தையும் அடைவதற்காக தமிழர்கள் நடத்தி நீண்ட போராட்டம் மனக்கிளர்ச்சியைத் தருகின்ற சர்ச்சைக்குரிய  பல ஆளுமைகளை முன்னரங்கத்துக்கு கொண்டுவந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் ஈழவேந்தன் என்று தனக்கு புனைபெயரை வைத்துக்கொண்ட தமிழ்த் தேசியவாத அரசியல் செயற்பாட்டாளர் மா.க. கனகேந்திரன். 

தமிழ் அரசியலில் ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர் இலங்கை பாராளுமன்றத்தில் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டுவரை உறுப்பினராகவும் அங்கம் வகித்தார். 90 வயதைக் கடந்த அவர் 28 ஏப்ரில் 2024 கனடாவின் ரொறண்டோ நகரில் காலமானார். அவரது மறைவு குறித்த செய்திக்கு இலங்கை தமிழ்ப் பத்திரிகைகள் பரந்தளவில் முக்கியத்துவத்தை கொடுத்தன. சில பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கத்தையும் தீட்டியிருந்தன.

மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரன் என்ற முழுப்பெயரைக் கொண்ட ஈழவேந்தன் 14 செப்டெப்பர் 1932 யாழ்ப்பாணத்தில் பிறந்தார். அவரின் தந்தையார் கனகசபாபதி ரயில்வே திணைக்களத்தில் ஒரு ரயில் நிலைய அதிபராக பணியாற்றினார். தாயார் பெயர் சிவயோகம். 

யாழ்ப்பாணத்தில் கொழும்புத்துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த குடும்பம் நல்லூரிலேயே வசித்துவந்தது. கனகேந்திரன் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியிலும் கொழும்பு வெஸ்லி கல்லூரியிலும் கல்வி பயின்றார். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைமிகுந்தவரான அவர் இலங்கை மத்திய வங்கியில் ஒரு மொழிபெயர்ப்பாளராக இணைந்து பிறகு தமிழ் மொழிபெயர்ப்பு பிரிவின் தலைவராக 1980 ஆம் ஆண்டு சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்.

பதினகவை வயதிலேயே அரசியலால் கவரப்பட்ட கனகேந்திரன் 1952 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சியில் இணைந்தார்.  தீவிர பற்றுக்கொண்ட தமிழ்த் தேசியவாதியாக மாறிய அவர் தனிச்சிங்களச் சடடம் கொண்டுவரப்பட்ட பிறகு தீவிரமான அரசியல் செயற்பாட்டாளராக மாறினார். தமிழரசு கட்சியின் ' சுதந்திரன் ' பத்திரிகையில் ஈழவேந்தன் என்ற புனைபெயரில் அரசியல் கட்டுரைகளை எழுதத்தொடங்கிய அவர் ஈழவேந்தன் என்ற பெயரிலேயே அரசியல் கூட்டங்களிலும் உரையாற்றினார்.

ஈழம் என்பது இலங்கைத் தீவின் புராதன தமிழ்ப்பெயர். சங்க இலக்கியங்களிலும் இலங்கை ஈழம் என்று  குறிப்பிடப்பட்டது. சுதந்திரத்துக்கு முந்திய வருடங்களிலும் சுதந்திரத்துக்கு பின்னரான ஆரம்ப வருடங்களிலும் 'ஈழம் ' என்ற பதத்துக்கு பிரிவினைவாத கற்பிதம் எதுவும் கிடையாது. அது இலங்கையின் புராதன பெயர் மாத்திரமே.

பின்னரான காலப் பகுதியில்தான் சுதந்திர தமிழ் அரசு ஒன்றுக்கான பெயராக ஈழம் என்பது அரசியல் விவாதங்களில் பிரவேசித்தது. தமிழ்த் தேசிய தீவிரவாத இயக்கங்கள் தமிழ் ஈழம் என்றும் இடதுசாரிப் போக்குடைய இயக்கங்கள் ஈழம் என்றும் அழைத்தன. உருவகிக்கப்பட்ட தமிழ்ப் பிரிவினைவாத அரசு வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கியதாகும்.

அதனால் கனகேந்திரன் தனக்கு ஈழவேந்தன் என்று புனைபெயரை வைத்துக்கொண்டபோது  அவர் ஈழம் அல்லது தமிழ் ஈழம் என்ற தனிநாட்டை விரும்பிய பிரிவினைவாதியாக இருக்கவில்லை. ஆனால், அவர் ஒரு ஈழம்வாதி என்ற காரணத்தினாலேயே ஈழவேந்தனாக புனைபெயரை வைத்துக்கொண்டார் என்று ஆட்கள் தவறாக எண்ணினார்கள். 

ஈழவேந்தன் என்ற பெயரை ஏன் தெரிவுசெய்தீர்கள் என்று ஒரு தடவை நான் அவரைக் கேட்டேன். என்ன புனைபெயரை வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது  ஈழம் என்பது செம்மையான தமிழ்ப் பெயராக இருந்ததால் அதை தெரிவுசெய்ததாக அவர் பதிலளித்தார். தமிழ்க்கவிஞர் பாரதிதாசன் 'பாவேந்தன்'  என்று அழைக்கப்பட்டார். அதில் இருந்தே வேந்தன் என்ற பெயரை வைக்கும் சிந்தனை உருவானது. 

காலப்போக்கில் கனகேந்திரனை ஈழவேந்தன் கிரகணம் செய்துவிட்டார். எம்.கே. ஈழவேந்தன் என்று அவர் அழைக்கப்பட்டாலும் அவர் உத்தியோகபூர்வமாக அவர் அவ்வாறு பெயரை மாற்றவில்லை. ஈழவேந்தன் படிப்படியாக தமிழ் அரசியலில் பிரபல்யமான ஒருவராக வளர்ச்சி கண்டார். சிறந்த பேச்சாளரான அவர் பல்வேறு மூலங்களில் இருந்து மேற்கோள்களை எடுத்துக்கூறி சபையோரை பரவசப் படுத்தக்கூடியவர். வரலாற்று தகவல்களை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு புதையலாக விளங்கிய அவர் விரல் நுனியில் பெருவாரியான புள்ளிவிபரங்களை வைத்திருந்தார்.

ஈழவேந்தனின் உரைகள் கேட்பதற்கு மிகவும் சுவாரஸ்யமானவையாகவும் இருக்கும். தமிழ்ப் பேரறிஞரும் கத்தோலிக்க பாதிரியாருமான வணபிதா சேவியர் தனிநாயகம் அடிகளார் தனது தமிழ் உரைகளை  திருமூலரின் திருமந்திரத்தில் இருந்து ஒரு மேற்கோளைக் கூறிக்கொண்டே தொடங்குவார். 'என்னை நன்றாய் இறைவன் படைத்தனன், தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே' என்பதே அந்த வரியாகும். 

ஈழவேந்தனும் வரியைக் கூறியவாறே தனது பேச்சுக்களை ஆரம்பிப்பார். உண்மையில் அது அவரின் தனித்துவமான அடையாளமாக இருக்கும். பிற்காலத்தில் அவரது உரைகள் 'ஈழம் வெல்லும், அதை காலம் சொல்லும் ' என்ற வரிகளுடன் முடித்துவைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கூட்டணியின் கொழும்புக்கிளை

இருபதாம் நூற்றாண்டின்  எழுபதுகளின் நடுப்பகுதியிலும் பிற்பகுதியிலும் கொழும்பில் ஈழவேந்தனுடன் நெருக்கமாக ஊடாடினேன். நான் உறுப்பினராக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் கொழும்புக்கிளையின் தலைவராக ஈழவேந்தன் செயற்பட்டார். அதன் செயலாளராக இருந்த நில அளவையாளர் கே. உமாமகேஸ்வரன் பிறகு  'புளொட் ' என்று அழைக்கப்படும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவராக வந்தார்.

அந்த நாட்களில் தமிழரசு கட்சி / தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் கொழும்புக்கிளை கொள்ளுப்பிட்டி அல்பிரட் ஹவுஸ் கார்டினில் 14 ஆம் இலக்கத்தில் உள்ள தமிழரசு கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் வாசஸ்தலத்தில் புதன்கிழமைகளில் மாலை வேளைகளில்  அதன் வாராந்தக் கூட்டத்தை நடத்துவது வழமை. பிறகு அந்த கூடடங்கள் பம்பலப்பிட்டி ரோறிஸ் வீதியில்  51 ஆம் இலக்கத்தில் அமைந்திருந்த முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் ரி. திருநாவுக்கரசுவுக்கு சொந்தமான ஒரு  வீட்டில் நடைபெற்றது. இந்தியாவில் சென்னையிலும் ஈழவேந்தனை பல சந்தர்ப்பங்களில் நான் சந்தித்திருந்தேன்.

ஆனால், 2009ஆம் ஆண்டில் இருந்து அவர் கனடாவில் வசித்துவந்த போதிலும், நாம் ஒருவரை ஒருவர் ஒருபோதும் சந்தித்ததில்லை. 2007 ஆம் ஆண்டில் ஈழவேந்தன் முதன்தடவையாக கனடாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்தபோது தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் என்னைப் பெரிதும் புகழ்ந்து பேசினார். தொப்பிக்கல / குடும்பிமலை பற்றி நான் எழுதிய கட்டுரை குறித்து குறிப்பிட்டபோது அவர் ' எங்கடை ஜெயராஜ் ' என்று அன்புடன் கூறினார்.

என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இருவரும் சந்தி்க்கவேண்டும் என்றும் அதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கேட்டிருந்தார். ஆனால் சிறிது நேரத்தில்  மீண்டும் தொலைபேசியில் வந்த அவர் என்னைச் சந்திக்கவேண்டாம் என்று தனக்கு ஆலோசனை கூறப்பட்டதாகத் தெரிவித்தார். உண்மையில் எவரோ ஒருவரோ அல்லது பலரோ அவரது மனதைக் குழப்பிவிட்டார்கள். ' எனக்கு விளங்குகிறது' என்று நான் பதிலளித்தேன். அவ்வளவுதான்.

தான்தோன்றித்தனம் 

அரசியலில் ஈழவேந்தன் தான்தோன்றித்தனமான ஒரு தீவிர போக்குடையவராக விளங்கினார். அவ்வப்போது தனது  அரசியல் நிறத்தை மாற்றிக்கொண்டாலும் தமிழ் இலட்சியத்தின் மீதான அவரின் மெய்யான  நம்பிக்கையும் அர்ப்பணிப்பும் நிலையானவையாக இருந்தன. இளைஞராக இருந்தபோது ஒரு சமஷ்டிவாதியாக விளங்கிய ஈழவேந்தன் அவரது வாழ்வின் பிற்காலத்தில் ஒரு பிரிவினைவாதியாக மாறினார். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி  1976 ஆம் ஆண்டில் தமிழ் ஈழத்தைக் கோருவதற்கு முன்னதாகவே அவர் அதற்காகக் குரல்கொடுப்பவராக இருந்தார்.

ஈழவேந்தனின் அரசியல் கோட்பாடு அவர் எழுதிய 'தமிழ்மண் காப்போம்,தாயகம் மீட்போம் ' என்ற தலைப்பிலான சிறிய நூலில் சுருக்கமாக விளக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் வரலாற்று ரீதியாக தமிழரின் வாழ்விடங்கள் எவ்வாறு திட்டமிட்ட முறையில் சிங்களமயப்படுத்தப்பட்டன என்பதையும் அதைத் தடுக்க வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கிய தனித்தமிழ் நாடு ஒன்று உருவாக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் பற்றியதே அந்த நூல். அதில் உள்ளடங்கியிருந்த மறுதலிக்கமுடியாத பெருவாரியான புள்ளிவிபரங்களை அந்த நாட்களில் தமிழ் இளைஞர்கள் மிகுந்த பற்றார்வத்தோடு கிரகித்துக் கொண்டார்கள்.

1965ஆம் ஆண்டில் பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் தமிழரசு கட்சி இணைந்தபோது அதை விரும்பாத தீவிரபோக்குடைய இளைஞர் குழுவில் ஈழவேந்தனும் ஒருவர். இந்த அதிருப்தியாளர்கள் 'தமிழ்த்தாய் மன்றம் ' என்ற இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார்கள்.  தமிழரசு கட்சியின் தலைமைத்துவம் மீது நெருக்குதலைப் பிரயோகிக்கும் ஒரு குழுவாக அது செயற்பட்டது.

தமிழர் சுயாட்சி கழகம் 

1968 ஆம் ஆண்டு அன்றைய ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் வி. நவரத்தினம் தமிழரசு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டபோது அதற்குள் ஒரு பிளவு ஏற்பட்டது. தமிழரசு கட்சியின் 'தங்கமூளை ' என்று முன்னர் வர்ணிக்கப்பட்ட நவரத்தினம் தமிழர் சுயாட்சி கழகம் எ்ற பெயரில் புதிய கட்சியை அமைத்தார். தனியான தமிழ் அரசு ஒன்றே அதன் கோரிக்கையாக இருந்தது. தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறிய ஈழவேந்தன் புதிய கட்சியில் இணைந்துகொண்டார். அந்த கட்சியின் 'விடுதலை ' என்ற பத்திரிகையில் அவர் கிரமமாக கட்டுரைகளை எழுதினார்.

புதிய கட்சியின் தேர்தல் பிரசாரங்களில் ஈழவேந்தன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். தமிழரசு கட்சியின் தலைவர் செல்வநாயகம் மற்றும் அமிர்தலிங்கம் போன்ற இளம் தலைவர்களை ஈழவேந்தன் ஆவேசமாக தாக்கிப் பேசினார். அவர்தான் முதன்முதலில் செல்வநாயகத்தை 'காற்சட்டைக் காந்தி ' என்று ஏளனமாக வர்ணித்தவர். அந்த நாட்களில் செல்வநாயகத்தை அவரது சீடர்கள் 'ஈழத்துக்காந்தி ' என்று மதித்துப் போற்றினார்கள். இந்தியாவின் மகாத்மா காந்தியின் அகிம்சைக் கொள்கையை செல்வநாயகம் பின்பற்றியதே அதற்கு காரணம். 

நவரத்தினம் தலைமையிலான தமிழர் சுயாட்சி கழகம்  1970 பொதுத்தேர்தலில் வடக்கில் பல தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. நவரத்தினத்தினால் தானும் அவரது செல்வாக்கு மிகுந்த ஊர்காவற்துறை தெ்குதியில் வெற்றிபெற முடியவில்லை. சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான புதிய ஐக்கிய முன்னணி அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்தது. அந்த அரசியலமைப்பு தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றவும் தமிழர்களின் மனக்குறைகளை தீர்க்கவும்தவறியது.

அதன் விளைவாக தமிழர்கள் மத்தியில் பெரியளவில் அரசியல் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற பிரதான தமிழ்க்கட்சிகள் 1972 ஆம் ஆண்டில் ஒன்றிணைந்து தமிழர் விடுதலை கூட்டணியை அமைத்தன. 1976 ஆம் ஆண்டில் தமிழர் விடுதலை கூட்டணி தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியாக மாறி தமிழ் ஈழக்கோரிக்கை தொடர்பிலான தீர்மானத்தை நிறைவேற்றியது. தமிழர் விடுதலை கூட்டணியிலோ அல்லது தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியிலோ இணைந்து கொள்வதற்கு நவரத்தினம் மறுத்தார். அந்த நேரத்தில் தமிழர்களின் ஐக்கியமே முக்கியமானது என்று உணர்ந்த ஈழவேந்தன் போன்றவர்கள் நவரத்தினத்தின் நிலைப்பாட்டை விரும்பவில்லை. ஈழவேந்தன் தமிழரசு கட்சியில் மீண்டும் சேர்ந்து தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியிலும் சேர்ந்துகொண்டார்.

1977 ஜூலை பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி மகத்தான வெற்றிபெற்றது. வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 19 தொகுதிகளில் ஒன்றைத் தவிர ஏனையவற்தை கூட்டணி கைப்பற்றியது. நாட்டும்பிரிவினையை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்ட கூட்டணி அந்த வெற்றியை தமிழ் ஈழத்துக்கான ஆணை என்று வியாக்கியானம் செய்தது. தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்ட ஈழவேந்தன் பேருவகை அடைந்தார்.

1977 ஜூலை வன்செயல் 

பொதுத்தேர்தலுக்கு பிறகு சில தினங்களில் 1977 ஆகஸ்ட் வன்செயல் மூண்டது. அதில் ஈழவேந்தன் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். மத்திய வங்கியில் சில சிற்றூழியர்களால் அவர் தாக்கப்பட்டபோது அவரது ஏனைய சிரேஷ்ட சகாக்கள் காப்பாற்றினர். நுகேகொடையில் இருந்த ஈழவேந்தனின் வீடும் வன்முறைக் கும்பலினால் தாக்கப்பட்டது. குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். ஆனால் ஈழவேந்தனின் நூல்கள், செய்திப்பத்திரிகை கத்தரிப்புகள் மற்றும் முக்கியமான அரசியல் ஆவணங்கள் உட்பட அவர்களது பெரும்பாலான உடைமைகள் தீக்கிரையாகின. ஈழவேந்தனும் குடும்பத்தினரும் கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிமுகாமில் தஞ்சமடைந்தனர்.

18  ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழய் ஐக்கிய விடுதலை கூட்டணி பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக விளங்கியது. அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவரானார். தமிழ் ஈழத்துக்கு மாற்றாக உருப்படியான திட்டம் ஒன்றை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர் கூறினார்.அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன 1979 ஆம் ஆண்டில் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் ஆணைக்குழு ஒன்றை நியமித்தார். ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால் அதில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பிரதிநிதியாக இருந்த கலாநிதி நீலன் திருச்செல்வம் அதிருப்தி அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார்.

தமிழ் ஈழ விடுதலை முன்னணி

அதிகாரப் பரவலாக்கல் அலகுகளாக 1980 ஆம் ஆண்டில் மாவட்ட சபைகள் அமைக்கப்பட்டன. அந்த திட்டத்துடன் ஒத்துச் செயற்பட்டு தமிழ் ஈழத்தக்கான ஒரு ஒப்பேறக்கூடிய மாற்றாக அது அமையுமா என்று முயற்சித்துப்பார்க்க அமிர்தலிங்கம் விரும்பினார்.ஆனால் அது ஒரு துரோகத்தனமான செயல் என்று தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்குள் ஒரு பலம்வாய்ந்த பிரிவினர் மாவட்டசபை திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்கள். அவர்களில் முக்கியமானவர் ஈழவேந்தன்.

இந்த அதிருப்தியாளர்கள் பிரிந்துசென்று தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு எதிராக தமிழ் ஈழ விடுதலை முன்னணியை அமைத்தனர்.  யாழ்ப்பாணம் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் தந்தைவழி மாமனாரான டாக்டர் எஸ். ஏ. தர்மலிங்கம் அந்த புதிய முன்னணியின் தலைவர்..செயலாளர்  ஈழவேந்தன். செல்வநாயகத்தின் மகன் எஸ்.சி. சந்திரகாசன் முன்னணிக்கு ஆதரவை வழங்கினார். 

மாவட்ட அபிவிருத்தி சபைக்கு எதிராக விட்டுக்கொடுப்புக்கு இடமில்லாத நிலைப்பாட்டை கடைப்பிடித்த தமிழ் ஈழ விடுதலை முன்னணி,  தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைப் பொறுத்தவரை ஒரு முள்ளாகவே இருந்தது. சந்திரகாசனுக்கு சொந்தமானதாக இருந்த சுதந்திரன் பத்திரிகையின் ஆதரவும்  முன்னணிக்கு கிடைத்தது. அதன் ஆசிரியராக கோவை மகேசன் இருந்தார். 

அதேவேளை, தனது முனைப்புமிக்க தமிழ் தீவிரவாத நிலைப்பாட்டின் காரணமாக ஈழவேந்தன் பிரச்சினைக்குள்ளானார்.இந்தியாவின் அலகாபாத்தில் 1979 ஆம் ஆண்டில்  நடைபெற்ற உலக இந்து மகாநாட்டில் உரையாற்றிய அவர் இலங்கையில் இந்து தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தார். அவர் கொழும்பு திரும்பியதும் சர்வதேச மகாநாடொன்றில் பங்கேற்பதற்கு முன்னனுமதியைப் பெறத்தவறியமைக்காக மத்திய வங்கியினால் பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.

அதற்கு பிறகு புதிதாக அப்போது நிறைவேற்றப்பட்டிருந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஈழவேந்தன் யாழ்ப்பாண கோட்டையில் தடுத்து வைக்கப்பட்டார். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது அவருக்காக தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் அன்றைய தலைவர் எம். சிவசிதம்பரம் முன்னிலையானார். சிவசிதம்பரத்தின் சட்டத்திறமை காரணமாக ஈழவேந்தன் வழக்கில் இருந்து விடுதலையானார். மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்ட போதிலும் ஈழவேந்தன் 1980 ஆண்டு  மத்திய வங்கி பணியில் இருந்து ஓய்வுபெறத் தீர்மானித்தார்.

தடுத்துநிறுத்த முடியாத  அவர் அப்போது சுதந்திரப் பறவையாக இந்தியாவுக்கு சென்று தமிழ் ஈழ இலட்சியத்துக்காக பிரசாரங்களை முன்னெடுத்தார்.1981ஆம் ஆண்டு ஜனவரியில் மதுரையில் நடைபெற்ற  அனைத்துலக தமிழாராய்ச்சி மகாநாடடில் ஈழவேந்தன்  தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் அதிருப்திக்கு ஆளானார்.மகாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மத்தியில் ஈழவேந்தன் ஈழ ஆதரவு பிரசுரங்களை விநியோகித்ததால் ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். அவரை மகாநாட்டு அரங்கில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். நியூயோர்க்கில்  1982 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ் ஈழ மகாநாட்டிலும் ஈழவேந்தன் பங்கேற்றார்.

தமிழர்களுக்கு எதிராக 1983 ஜூலையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்களுக்கு பிறகு ஈழவேந்தன் குடும்பத்தினருடன் தமிழ்நாட்டில் நிரந்தரமாக குடியேறி அரசியல் தஞ்சம் கோரினார். சந்திரகாசன் தலைமையிலான அகதிகள் அமைப்பு ஒன்றில் பணியாற்றிய அதேவேளை ஈழவேந்தன் தமிழ் ஈழ விடுதலை முன்னணியின் செயற்பாடுகளையும் முன்னெடுத்தார். செலாவாக்குமிக்க பிரமுகர்களைச் சந்தித்து அவர் தமிழ் ஈழ இலட்சியத்தை பிரசாரப்படுத்தினார்.

தோளில் துணிப்பை ஒன்றை தொங்கவிட்ட வண்ணம் காணப்படும் அந்த குள்ளமான உருவம் தமிழ்நாட்டின் பத்திரிகைகள்,சஞ்சிகைகளின் அலுவலகங்களில் பரிச்சயமான ஒருவராக விளங்கினார். இலங்கையில் தமிழர் தொடர்பான நிகழ்வுகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக இந்திய செய்தியாளர்கள் அவரை அடிக்கடி சந்தித்தனர். அதனால் அவர்  அவர்களின் நன்மதிப்புக்குரியவரானார். வரலாற்று ரீதியான நிகழ்வுகள் குறித்தும் ஈழவேந்தனிடம் அவர்கள் நிறையவே கேட்டறிந்தனர். சென்னை தமிழ் செய்திப்பத்திரிகை ஒன்றின் செய்தி ஆசிரியர் ஈழவேந்தனை ஒரு தடவை இலங்கை தமிழர் விவகாரங்களில் ' நடமாடும் கலைக்களஞ்சியம் ' என்று வர்ணித்தார்.

தமிழ்நாட்டில் அந்த நேரத்தில் ஊடகங்கள் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு  நிகராக தமிழ் ஈழ விடுதலை முன்னணியின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பத்திரிகை அறிக்கைகளுக்கு கொடுத்த அதே  முக்கியத்துவத்தை தமிழ் ஈழ விடுதலை முன்னணியின் அறிக்கைகளுக்கும் பத்திரிகைகள் கொடுத்தன. தங்களிடமிருந்து பிரிந்துசென்ற தமிழ் ஈழ விடுதலை முன்னணிக்கு  தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு நிகரான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது குறித்து அமிர்தலிங்கம் அதிருப்தியடைந்தார்.

முக்கியமான இந்திய ஆங்கில பத்திரிகையொன்றின் ஆசிரியரிடம் இது பற்றி நான் கேட்டேன். " இந்த ஆள் ஈழவேந்தன் தனது பத்திரிகை அறிக்கையுடன் எனது அலுவலகத்துக்கு வந்து மணித்தியாலக் கணக்காக காத்திருப்பார். தமிழ் ஈழ விடுதலை முன்னணியின் அறிக்கையை பிரசுரம் செய்ய இணங்குவதே அவரை அங்கிருந்து போகச் செய்வதற்கு ஒரே வழி " என்று அவர் பதிலளித்தார்.

இந்த நிலமை இலங்கையில் இந்திய இராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் போர் மூண்ட பிறகு மாறிவிட்டது. 1991 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் நிலைமை மோசமடைந்தது. விடுதலை புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டது. பெரிதாக வெளியில் தலைகாட்டாத போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்த போதிலும், தமிழ்நாட்டின் பத்திரிகைகளுடன் ஈழவேந்தன் தொடர்புகளை தொடர்ந்தும் பேணி தகவல்களை வெளிப்படுத்தினார்.

ஈழவேந்தன் முதலில் முதலில் விடுதலை புலிகளின் ஒரு ஆதரவாளர் அல்ல. ஆனால் காலப்போக்கில் அவர் அந்த இயக்கத்தின்  அனுதாபியானார். அவர்  நெடுமாறன், கோபாலசாமி (வைகோ ) போன்ற நன்கு பிரபல்யமான விடுதலை புலிகளின் ஆதரவாளர்களுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கினார்.

தமிழ்நாட்டில் கைது

இலங்கையில் விடுதலை புலிகளுக்கு அனுப்புவதற்காக மருந்துவகைகளை பெறுவதற்கு சதிமுயற்சியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஈழவேந்தனும் வேறு நால்வரும் 1997 பெப்ரவரியில் தமிழ்நாடு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட காலம் சிறைவைக்கப்பட்ட பிறகு அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் நீண்ட வழக்கு விசாரணைக்கு பிறகு 1999  ஆகஸடில் நீதிமன்றம் அவர்களை நிரபராதிகள் என்று விடுதலை செய்தது.

இலங்கைக்கு நாடுகடத்தல் 

 1998 ஆம் ஆண்டில் பிரதமர்  அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜனதா அரசாங்கம் அமைந்த பிறகு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஈழவேந்தன் விடுதலை புலிகளை ஆதரிப்பதில் மேலும் தீவிரம் காட்டத் தொடங்கினார்.2000 டிசம்பரில் சென்னை அரும்பாக்கத்தில் கைதுசெய்ப்பட்ட அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அதற்கு பரந்தளவில் எதிர்ப்பு கிளம்பியபோதிலும் இந்திய அதிகாரிகள் தளரவில்லை. அதற்கு பிறகு ஈழவேந்தன் இலங்கையில் வாழ்ந்து வரலானார்.

  2002 ஆண்டில் நோர்வேயின் அனுசரணையுடன் போர்நிறுத்தம் செய்யப்பட்டு சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து ஈழவேந்தன் வெளிப்படையாக தன்னை விடுதலை புலிகளுக்கு ஆதரவைத் தெரிவிக்கத் தொடங்கினார். விடுதலை புலிகளுக்கு ஆதரவாக  அறிக்கைகளை வெளியிட்ட அவர் அடிக்கடி வன்னிக்கு சென்று பிரபாகரன் உட்பட அந்த இயக்கத்தின் தலைவர்களை சந்தித்துவந்தார்.

  தேசியப்பட்டியல் எம்.பி.

  இதன் விளைவாக 2004 ஆம் ஆண்டில் ஈழவேந்தனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது. அந்த பொதுத்தேர்தலில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களை கைப்பற்றியதுடன் இரு தேசியப்பட்டியல் ஆசனங்களும் கிடைத்தன. 22 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தபோதிலும்,  விடுதலை புலிகளின் பொம்மைகள் என்று கருதப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நம்பகத்தன்மை இருக்கவில்லை. பயனுறுதியுடைய முறையில் செயற்படவுமில்லை. அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் அரசியல் சாகசங்களில் ஈடுபட்டார்கள். ஒரு தடவை அவர்கள் பாராளுமன்றத்திற்குள் ஒரு போலி மரணச்சடங்கையும் நடத்திக்காட்டினர். அதில் ஈழவேந்தன் பிணமாக நடிக்க ஏனைய உறுப்பினர்கள் அவரை தூக்கிச்சென்றார்கள்.

 பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும் ஈழவேந்தனை புதுடில்லி தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாத ஒருவராகவே நடத்தியது. பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) உறுப்பு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா செல்வதற்கு விசா தேவையில்லை என்பதால் ஈழவேந்தன் தனது இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்துக்கு விமானத்தில் சென்று இறங்கினார். ஆனால் விமானநிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு அவர் அனுமதிக்கப்படாமல் கொழும்புக்கு விமானத்தில் திருப்பியனுப்பப்பட்டார்.

  அவரின் பாராளுமன்ற வாழ்வும்  நீண்டகாலம் நிலைக்கவில்லை. 2007 ஆம் ஆண்டில் நீண்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு  ஈழவேந்தன் கனடாவுக்கு சென்றார். திரும்பிவருமாறு விடுதலை புலிகள் கேட்டபோதிலும் அவர் தனது வருகையை தாமதித்தார்.அதனால் ஆத்திரமடைந்த விடுதலை புலிகளின் புலனாய்வுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான் அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்ற ஒரு சதித்திட்டத்தை தீட்டினார். பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்காக அவர் எடுத்த லீவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகபாடி உறுப்பினர்களினால் புதுப்பிக்கப்படவில்லை.

 2007 நவம்பரில் அவர் கொழும்பு திரும்பியபோது அதிர்ச்சி காத்திருந்தது. லீவு அனுமதி பெறாமல் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காததால் அவரின் பதவி பறிபோனது. வன்னிக்கு சென்று அவர்  வேண்டுகோள் விடுத்தபோதிலும் பயன் கிடைக்கவில்லை.  அவரின் இடத்துக்கு ஒரு முஸ்லிம் சட்டதனதரணியான இமாம் நியமிக்கப்பட்டார்.

 தென்னாபிரிக்காவில் உண்ணாவிரதம்

ஈழவேந்தனை 2007  கீழ்த்தரமாக  நடத்திய விடுதலை புலிகள் 2009 ஜனவரியில் வன்னிக்குள் இராணுவம் விரைவாக  முன்னேறத் தொடங்கியதும் அவரது உதவியை நாடினர்.வெளிநாட்டுக்கு சென்று போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு அவரால் இயன்றதைச் செய்யுமாறு விடுதலை புலிகள் கேட்டனர். தென்னாபிரிக்காவுக்கு சென்ற ஈழவேந்தன் இலங்கையில் போர்நிறுத்தம் கோரி சாகும்வரை  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அந்த பே்ராட்டம்  ஒன்பது நாட்களில் முடிவுக்கு வந்தது.2009 மே மாதத்தில் விடுதலை புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டனர். அமெரிக்காவுக்கு  சென்ற ஈழவேந்தன் அங்கிருந்து கனடாவுக்கு போனார்.

2009 ஆகஸ்டில் கனடாவில் ஈழவேந்தன் அரசியல் தஞ்சம் கோரானார். பல தடவைகள் விண்ணப்பம் செய்தபோதிலும் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் மனிதாபிமான அடிப்படையில் ஒட்டாவா அரசாங்கம் இலங்கைக்கு திருப்பியனுப்பவில்லை என்பதால் தொடர்ந்து அவர் கனடாவில் தங்கியிருக்கக்கூடியதாக இருந்தது. 

 கனடாவில் அவர் பெருமளவு அரசியல் மற்றும் கலாசார செயற்பாடுகளில் பங்குபற்றினார். நியூயோர்க்கில் வசிக்கும்  சட்டத்தரணி விஸ்வநாதன் ருத்ரகுமாரனை "பிரதமராகக் " கொண்ட  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக ஈழவேந்தன் 2010  மே மாதத்தில் தெரிவு செய்யப்பட்டார். அதனால்  நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தை எதிர்க்கும் கனடாவில் உள்ள புலிகள் ஆதரவு பிரிவுகளிடமிருந்து அவர் தனிமைப்படவேண்டிவந்தது.

 2022 செப்டெம்பரில் ஈழவேந்தனின் 90 வது  பிறந்தநாள் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்டது. அண்மைக்காலமாக அவரின் உடலாரோக்கியம் குன்றத்தொடங்கியதை அடுத்து  சில வாரங்களுக்கு முன்னர் ரொறண்டோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  

ரொறண்டோ வைத்தியசாலை படுக்கையில் ஈழவேந்தனின் உயிர் கடந்த மாதம்  24 ஆம் திகதி பிரிந்தது. மே 4 இறுதிச்சடங்கு நடைபெற்றது.  அவரத மனைவி அருளாம்பிகை, மகள்மார் யாழினி,எழிலினி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

https://www.virakesari.lk/article/182806

மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு

5 days 6 hours ago

நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு, தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

இதனால் நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் இதுவரையில் 20 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுதாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அதற்கு மாற்று மருத்துகள் நாட்டில் உள்ளதாகவும் வைத்தியசாலைகளில் அரிதாக தேவைப்படும் 115 வகையான மருந்துகளுக்கு தட்டுபாடுகள் நிலவுவதாகவும், அவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி மற்றும் அனுமதிகளை வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1381171

யாழ்ப்பாணத்துக்கு வந்தார் நடிகர் பாண்டியராஜன்!

5 days 8 hours ago
05 MAY, 2024 | 06:14 PM
image
 

தென்னிந்திய நடிகரும் இயக்குநருமான ஆர். பாண்டியராஜன் இன்று (05) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.

அவர் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இல. 199 சுண்டுக்குழியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்துகொண்டார்.

"மக்களுக்கு சினிமாவும் சீரியலும் வழிகாட்டுகிறதா? வழிமாறுகின்றதா?" என்றொரு தலைப்பிலும் "இன்றைய சூழ்நிலையில் பிறருக்கு உதவி செய்வது ஆபத்தே? ஆனந்தமே?" என்ற தலைப்பிலும் இரு பட்டிமன்றங்கள் நடைபெற்றன.

இந்த பட்டிமன்றத்தினை காண பல இடங்களிலும் இருந்து மக்கள் வருகை தந்தனர். 

இதில் கிருபா சாரதி பயிற்சிசாலை அதிபர் அ.கிருபாகரன், பட்டிமன்ற நடுவர் முனைவர் நெல்லை பி.சுப்பையா, கவிஞர் பிரிய நிலா உள்ளிட்ட பட்டிமன்ற பிரவாத அணிசேர் கலைஞர்கள் பலரும் பங்கெடுத்தனர்.

VideoCapture_20240505-115240.jpg

received_789522346438580.jpeg

received_947136526891680.jpeg

Screenshot_20240505_134220_WhatsApp.jpg

https://www.virakesari.lk/article/182765

Checked
Fri, 05/10/2024 - 22:13
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr