ஊர்ப்புதினம்

கதிர்காம காட்டுப்பாதை திறக்கும் திகதியில் மாற்றம் : குழப்பத்தில் யாத்திரிகர்கள்!

3 months 2 weeks ago
13 JUN, 2024 | 03:55 PM
image

கதிர்காமம் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆலயம் நோக்கிய பாத யாத்திரையினை மக்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர். 

எதிர்வரும் 30ஆம் திகதி லாகுகல பிரதேச செயலாளர் பகுதியில் அமைந்துள்ள உகந்தை காட்டுப்பாதை பக்தர்களுக்காக திறக்கப்பட்டு, ஜூலை 11ஆம் திகதி மூடப்படுவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (07) உகந்தை முருகன் ஆலயத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, கதிர்காமம் ஆலயத்தில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தில் உகந்தை காட்டுப்பாதை திறக்கும் திகதி பிற்போடப்பட்டு, எதிர்வரும் ஜூலை மாதம் 02ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்பட்டு, 14ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட சேவற்கொடியோன் அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்டபடி, 30ஆம் திகதியினை கருத்திற்கொண்டு பக்தர்கள் பாதயாத்திரை செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட நிலையில், இந்த திகதி மாற்றமானது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளதாக சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.  

காட்டு வழியாக பாதயாத்திரை மேற்கொள்ள தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கால எல்லை போதாமல் உள்ளதாகவும் சமூக அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 2024.07.06 அன்று கதிர்காம கொடியேற்றம் நடைபெற்று, 22ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் கதிர்காமம் ஆலய உற்சவம் நிறைவடைகிறது.

காட்டுப்பாதை திகதி மாற்றங்கள் தொடர்பில் லாகுகலை பிரதேச செயலாளர் நவேந்திரராஜா நவநீதராஜா கருத்து தெரிவிக்கையில், கதிர்காம உற்சவம் தொடர்பான கூட்டங்கள் மூன்று கட்டமாக இடம்பெறும் என குறிப்பிட்டார்.

அதன்படி, முதலாம் கட்ட கூட்டமானது கதிர்காமத்தில் இடம்பெறும் எனவும் இதன்போது தெரிவிக்கப்படும் கால எல்லைக்குள் காட்டுப்பாதை திறந்து மூடப்படும் கால எல்லை மற்றும் ஏனைய விடயங்கள் தீர்மானிக்கப்படும்.

அதன் பின்னர், அம்பாறை மாவட்ட ஆரம்ப கட்ட கூட்டம் உகந்தையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடத்தப்பட்டு கதிர்காமத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டு கருத்துக்கள் பெறப்படும். மூன்றாம் கட்டமாக, உகந்தையில் விளக்கமளிக்கப்பட்ட முடிவுகள் கதிர்காமத்தில் இடம்பெறும் இரண்டாம் கட்ட இறுதிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர், இவ்வருடத்துக்கான இறுதி முடிவுக்கான கூட்டம் கடந்த 12 ஆம் திகதி கதிர்காமத்தில் நடத்தப்பட்டபோது,  பாதயாத்திரைக்கான உகந்தை காட்டுப்பாதை  எதிர்வரும் ஜூலை மாதம் 02ஆம் திகதி திறக்கப்பட்டு, ஜூலை 14ஆம் திகதி பூட்டப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லாகுகல பிரதேச செயலாளர் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/185989

பல்கலைக்கழக அனுமதிக்காக நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

3 months 2 weeks ago
UGC calls for University admissions from tomorrow - DailyNews

2023/2024 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான ஒன்லைன் விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய 2024 ஜூன் 14 ஆம் திகதி முதல் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை காலை 6 மணி முதல் www.ugc.ac.lk என்ற இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூலை 5 என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/303681

வாக்குகளைக் குறிவைக்கும் கட்சிகள் : தமிழ் மக்களுக்கு நாமல் எச்சரிக்கை!

3 months 2 weeks ago
namal-1.jpg?resize=680,375&ssl=1 வாக்குகளைக் குறிவைக்கும் கட்சிகள் : தமிழ் மக்களுக்கு நாமல் எச்சரிக்கை!

வாக்குகளைக் குறிவைத்துச் செயற்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திடீரெனத் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் சில அரசியல்வாதிகள் வாக்குகளைப் பெறுவதற்காகவே இவ்வாறு செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக மட்டும் தங்கள் கொள்கைகளை மாற்றுபவர்கள் குறித்து தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டுமெனவும், ஆரம்பம் முதலே 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவளித்து வரும் கட்சிகளையும், அதனை எதிர்த்த கட்சிகளையும் தமிழ் மக்கள் அவதானிக்க வெண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள் தற்போது மாறிவிட்டதாகவும், குறித்த கட்சிகளின் இரட்டை வேடம் தற்போது வெளிப்பிட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1387651

கல்முனையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் போராட்டம்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 7

13 JUN, 2024 | 11:02 AM
image
 

கல்முனையில் இலங்கை போக்குவரத்து சபை  ஊழியர்கள்  பஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (13) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பாதுகாப்பினை  வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த சேவை வேண்டாம் என தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் தனித்துவத்தை சிதைக்காதே, போக்குவரத்து அமைச்சு தனியாருக்காகவா என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த  செவ்வாய்க்கிழமை நேர காலதாமதம் என குறிப்பிட்டு அம்பாறை கல்முனை ஒருங்கிணைந்த சேவையில் ஈடுபடும் இ.போ.ச ஊழியர்களுக்கும் தனியார் பஸ் ஊழியர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்திருந்து. இதன்போது இரு தரப்பினரைச் சேர்ந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தனர்.

இந்நிலையில் கல்முனை தலைமையக பொலிஸாரினால் இ.போ.சபை ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், இப்போராட்டத்தினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் போதிய பஸ்கள் இல்லாத காரணத்தினால் சில பாடசாலை மாணவர்கள் நீண்ட நேரம் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தனர். இது தவிர நகரத்தின் மத்தியில் தனியார் பஸ்களும் வீதியின் இரு மருங்கிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸார் சென்று பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளனர்.

FAROOK_SIHAN__24_.jpeg

FAROOK_SIHAN__36_.jpeg

FAROOK_SIHAN__42_.jpeg

FAROOK_SIHAN__33_.jpeg

 

FAROOK_SIHAN__29_.jpeg

https://www.virakesari.lk/article/185971

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு மகிழ்ச்சியான செய்தி!

3 months 2 weeks ago
13 JUN, 2024 | 07:12 AM
image

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மீளாய்வுக்கான  அனுமதி கிடைத்துள்ளது.

அத்துடன் 3 ஆவது கட்ட கொடுப்பனவுக்கான 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/185965

யாழில் ஊடகவியலாளாின் வீட்டின் மீது தாக்குதல் : சொத்துக்களுக்கும் சேதம்!

3 months 2 weeks ago
IMG_7577-Copy-scaled.jpg?resize=750,375& யாழில் ஊடகவியலாளாின் வீட்டின் மீது தாக்குதல் : சொத்துக்களுக்கும் சேதம்!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியை சேர்ந்த  ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் குறித்த கும்பல் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது.

அச்சுவேலிஇ பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டினுள் இன்றையதினம் (வியாழக்கிழமை) அதிகாலை 12.15 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் அடங்கிய வன்முறைக் கும்பல் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் , மீன் தொட்டியை அடித்து உடைத்து, வீட்டின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களுக்கும் தீ வைத்துள்ளனர்.

பின்னர் வீட்டின் வெளியே நின்ற ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிளுக்கும் , அவரது சகோதரனின்  முச்சக்கரவண்டி மீதும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்ட பின்னர் அவற்றிற்கும் தீ வைத்துள்ளனர்.

அதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன சேதமடைந்துள்ளன.

“திருநங்கைளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே” என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களை வீட்டினுள் வீசி விட்டு குறித்த கும்பல் தப்பி சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

IMG_7567-scaled.jpg?resize=600,338&ssl=1

IMG_7586-scaled.jpg?resize=600,338&ssl=1

https://athavannews.com/2024/1387567

ரணில்/சஜித் ஆட்சிக்கு வந்தால் 13 முழுமையாக அமுலாகும் நாட்டு மக்களை ஒன்றிணைத்து எதிர்ப்போம் - விமல் அணி போர்க்கொடி

3 months 2 weeks ago

Published By: VISHNU  13 JUN, 2024 | 04:34 AM

image

(இராஜதுரை ஹஷான்)

தமிழர்களின் தீர்மானமிக்க வாக்குகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவார். 13 ஆவது திருத்தத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதியும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளார்கள். ஆகவே தேசியம் தொடர்பாக பெரும்பான்மையினத்தவர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எதிர்க்கட்சித் தலைவரின் கூற்று 

இலங்கை அரசியல் வரலாற்றில் சிங்கள எதிர்க்கட்சித் தலைவர்கள் எவரும் குறிப்பிடாத வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு மாகாணத்துக்கு சென்று தமிழ் மக்களிடம் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை தான் முழுமையாக அமுல்படுத்துவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான மக்கள் 13 ஆவது திருத்தத்துக்கு எதிராக இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர்கள் எவரும் இதுபோன்று கருத்துரைக்கவில்லை.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் உண்மை நோக்கம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களின் வாக்குகளை இலக்காகக் கொண்டே எதிர்க்கட்சித் தலைவர் 13 ஆவது திருத்தம் பற்றி பேசியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார முன்வைத்த 22 ஆவது திருத்த தனியார் பிரேரணையில் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வலியுறுத்தலுக்கமைய 13 ஆவது திருத்தத்தை பலப்படுத்தும் வகையில் இரண்டு சட்டத்திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ,1987 ஆம் ஆண்டு இந்து – லங்கா ஒப்பந்தத்துக்கு இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து 13 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.இருப்பினும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக அவர் ஒருபோதும் குறிப்பிடவில்லை. ஜனாதிபதியாக பதவி வகித்துக் கொண்டு அவர் அவ்வாறு செயற்படவுமில்லை. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக கூற்றுக்களை வெளியிட முன்னர் 13 ஆவது திருத்தத்தின் வரலாற்றை எதிர்க்கட்சித் தலைவர் அறிந்துக் கொள்ள வேண்டும். அப்போது அதன் பாரதூரம் மற்றும் திருத்தங்களின் உண்மை நோக்கத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

இந்து –அமெரிக்க பூகோள நோக்கம்

இந்து – அமெரிக்க நோக்கத்துக்காக பிரிவினைவாத முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன.13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு உள்ளது.இந்தியாவின் தற்போதைய அரசியல் மாற்றம் இதற்கு முன்முனைப்புடன் செயற்படுகிறது.

தேசியத்தின் தலைமீது தொங்கவிடப்பட்டுள்ள கூர்மையான வாள்கள்

இந்து – லங்கா ஒப்பந்தம் மற்றும் 13 ஆவது திருத்தம்  ஆகியவற்றுக்கு எதிராக நிலவிய கடுமையான எதிர்ப்பினால் அவற்றை சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்ற முடியாத சூழல் காணப்பட்டது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நீதியரசர்கள் 13 ஆவது திருத்தம் தேசியத்தின் தலைமீது கட்டப்பட்டுள்ள கூர்மையான வாள்'என்று குறிப்பிட்டனர். திருத்தங்கள் ஊடாக வாள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை அவிழ்ப்பது பாரியதொரு குற்றமாகும்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம்

தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் வெளிநாடுகளின் அழுத்தம் ஆகிய காரணிகளால் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை மாத்திரம்  நீக்குவது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது.13 ஆவது திருத்தம் இல்லாமல் நாட்டுக்கு பொருந்தும் வகையில் பிரிவினைவாத அம்சங்கள் இல்லாத வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.சிறுபான்மை இனத்தவர்களின் தீர்மானமிக்க வாக்குகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஆட்சிக்கு வந்தால் புதிய அரசியலமைப்புக்கு பதிலாக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சிப்பார்.

ரணில் – சஜித் ஒரு குழையின் தேங்காய்கள்

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் நிலைப்பாட்டில் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் உள்ளார்கள். இவ்விருவரில் எவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பார்கள். ஆகவே இவ்விருவரின் செயற்பாடுகள் குறித்து பெரும்பான்மையின மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/185961

கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழில் - 16பேர் கைது

3 months 2 weeks ago

Published By: VISHNU   13 JUN, 2024 | 02:58 AM

image
 

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமாக ஒளி பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்ட 16பேர் 8 படகுகளுடன் 12 ஆம் திகதி புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையிலான கடற்பகுதியில் சட்டவிரோத தொழில்களான அட்டை பிடித்தல், ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளதால் சிறு தொழிலாளிகள் தொடர் முறைப்பாடுகளைச் செய்து வருகின்றனர்

கட்டைக்காட்டிலிருந்து 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஐம்பதுக்கும் அதிகமான படகுகளில் சென்று ஒளிபாய்ச்சி மீன்பிடித்து பல்லாயிரக்கணக்கான மீன்களோடு கரைக்கு வந்து கொண்டிருந்தவேளை 12 ஆம் திகதி புதன்கிழமை காலை 8 படகுகளுடன் குறித்த 16பேரும் வெற்றிலைக்கேணி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்தொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சிலரைக் கடற்படை கடலில் வைத்து விடுவித்துள்ளதாக நேரில் பார்த்த சிறு தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளதுடன் விடுதலை செய்யப்பட்டவர்கள் துணிவாக இன்றும் சட்டவிரோத மீன்பிடிக்குச் சென்றுள்ளதாகவும் அவர்கள் யாருடன் தொடர்பு வைத்து இலஞ்சம் கொடுத்து தொழில் புரிவதாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவர்களை காங்கேசன் துறையில் இருந்து வரும் டோரா படகுகள் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் பட்சத்திலேயே பல உண்மைகள் வெளிவந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/185958

ஒளி பாய்ச்சி மீன்பிடிப்பதால் என்ன பாதிப்பு ஏற்படும் என யாராவது தெரிந்தவர்கள் கூறுங்க.

அம்பாறையில் பயங்கரம் ! மக்கள் குடியிருப்புகளுக்குள் முதலைகள் படையெடுக்கும் அபாயம் !

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 7

12 JUN, 2024 | 12:50 PM
image
 

அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி  மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. தற்போது  ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் சுமார் 9,5, 4அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கினறனர். மேலும் இம்மாவட்டத்தில் கிட்டங்கி, மாவடிப்பள்ளி, சின்ன முகத்துவாரம், கஞ்சிகுடிச்சா உள்ளிட்ட களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன. மேற்படி  பகுதிகளிலுள்ள வாவிகள், குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறன.

மேலும், தற்போது  வேளாண்மை செய்கை, அறுவடை  ஆரம்பமாகி உள்ளதனால் வயல் நிலங்கள் கால்வாய்களை அண்டிய பகுதிகளில் புல் மேயும் எருமை மாடுகள் முதலைகளினால் இரைக்குள்ளாகின்றன. 

இப்பகுதியில் இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் கட்டாக்காலிகளாக இப்பகுதியில் திரியும் மாடுகளே இம்முதலைகளுக்கு இரையாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி,  பகுதிகளில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறதுடன் முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள்  எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லையென மக்கள் கூறுகின்றனர்.

முதலை அபாயம் தெரியாமல்  இப்பகுதியில்  பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Farook_Sihan13.JPG

Farook_Sihan14.JPG

Farook_Sihan11.JPG

FAROOK_SIHAN__7_.jpeg

FAROOK_SIHAN__6_.jpeg

FAROOK_SIHAN__12_.jpeg

அம்பாறையில் பயங்கரம் ! மக்கள் குடியிருப்புகளுக்குள் முதலைகள் படையெடுக்கும் அபாயம் ! | Virakesari.lk

நாட்டில் கணினி அறிவு 39 சதவீதமாக உயர்வு

3 months 2 weeks ago
image
 

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் கணினி அறிவு 39 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. மேல் மாகாணம் உயர்வான மட்டத்திலும், கிழக்கு மாகாணம் குறைவான மட்டத்திலும் காணப்படுகிறது என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சாமலி கருணாரத்ன தெரிவித்தார்.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வயது மற்றும் தொழிற்றுறை முன்னேற்றம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணினி அறிவு தொடர்பில் கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய ஆண்களின் கணினி அறிவு 40.9 சதவீதமாகவும், பெண்களின் கணினி அறிவு 37.2 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. 15 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களின் கணினி அறிவு வீதம் 79.4 சதவீதமாக காணப்படுகிறது.

அத்துடன், 5 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களின் டிஜிட்டல் அறிவு 63.5 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. ஆண்களின் டிஜிட்டல் அறிவு 65.9 சதவீதமாகவும், பெண்களின் டிஜிட்டல் அறிவு 61.3 சதவீதத்தாலும் உயர்வடைந்துள்ளன. இதற்கமைய 20 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களின் டிஜிட்டல் அறிவு 93.8 சதவீதமாக காணப்படுகிறது.

எழுமாற்றாக 100 நபர்களில் 51 பேர் இணைய பாவனைகளில் ஈடுபட்டுள்ளதுடன்,19 பேர் மின்னஞ்சலை பயன்படுத்துபவர்களாக காணப்படுகின்றனர். தொழில்வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகள் மத்தியில் 20 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களின் கணினி அறிவு 82.7 சதவீதமாகவும், 25 முதல் 29 வயதுக்குட்டவர்களின் கணினி அறிவு 83.7 சதவீதமாகவும் காணப்படுகிறது.

மாகாண மட்டத்திலான தரப்படுத்தலில் மேல் மாகாணம் 33.55 சதவீதமளவில் கணினி அறிவில் உயர்வான நிலையிலும், கிழக்கு மாகாணம் 8.6 சதவீதமளவில் குறைவான நிலையிலும் காணப்படுகிறது என்றார்.

நாட்டில் கணினி அறிவு 39 சதவீதமாக உயர்வு | Virakesari.lk

நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்குக் கையளிப்பு

3 months 2 weeks ago
12 JUN, 2024 | 05:06 PM
image
 

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல்  அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது  குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

சிரேஷ்ட பேராசிரியர் ஜகத் வீரசிங்க, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, யாழ்  பல்கலைக்கழகப் பேராசிரியர் டி. சனாதனன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்  பர்ஸானா ஹனீபா, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் துஷாரி சூரியாராச்சி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானராச்சி ஆகியோர்  உள்ளடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

22-05-2023 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில்  விக்ரமசிங்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

1983-2009 காலகட்டத்தில்  இலங்கையில் நடந்த ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரங்கள் என்பவற்றினால் உயிரிழந்த  பொதுமக்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள், பொலிஸார், முன்னாள் போராளிகள் உட்பட அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒருமைப்பாடு மற்றும்  நல்லிணக்கத்தின் அடையாளமாக  நினைவிடமொன்றை அமைப்பது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது. 

இதற்காக, நிபுணர் குழு கடந்த நாட்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில்  பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் அமர்வுகளை நடத்தியதுடன், ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நிபுணர்களுடன் ஆலோசனைகளையும் நடத்தியது.

இந்த பொதுமக்கள்  அமர்வுகள் அந்தந்த பகுதிகளில் பணியாற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தேசிய ஒருங்கிணைப்பு  அதிகாரிகளினால் ஒருங்கிணைக்கப்பட்டன. பங்குபற்றிய மக்களுக்குத் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்கான தமது அபிலாஷைகள், யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. 

நினைவேந்தல் செய்வதற்கான மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று குழு வலியுறுத்தியதோடு  பல்வேறு குழுக்களும் தனிநபர்களும் நினைவேந்தல் மற்றும் நல்லிணக்க நிகழ்வுகளை வெவ்வேறு வழிகளில் முன்னெடுப்பதையும் இந்த அறிக்கை  சுட்டிக்காட்டியுள்ளது. வளமான அறிவுக் கட்டமைப்பையே இது வெளிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டியுள்ள நிபுணர் குழு, நாட்டின் மோதல்கள் தொடர்பான கடந்த காலத்தைப் பற்றி அறிக்கையிடவோ, கருத்துத் தெரிவிக்கவோ அல்லது வேறுவிதமாகக் கையாளும் முயற்சியின் போது  இந்தப் பங்களிப்புகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும்   அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த சந்திப்புகளின் போது முன்வைக்கப்பட்ட பரந்த அளவிலான யோசனைகளைப் பரிசீலித்த பின்னர் இந்தக் குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இலங்கையின் மோதல்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுடன் உருவான  கலை மற்றும் கலாச்சார வெளிப்பாடுகளைப்  பாதுகாத்து வைக்கும்   குறியீட்டு ரீதியிலான  கட்டடமொன்றை அமைக்கவும்  குழு பரிந்துரைத்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காகக் கூட்டு அர்ப்பணிப்பை உறுதி செய்வதும் அனைத்து இலங்கையர்களிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.

குழுவின் அறிக்கையைக் கையளித்த போது ஜனாதிபதியின் செயலாளர்  சமன் ஏக்கநாயக்கவும் உடன் இருந்தார்.

WhatsApp_Image_2024-06-12_at_04.00.31.jp

WhatsApp_Image_2024-06-12_at_04.00.30.jp

 

நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்குக் கையளிப்பு | Virakesari.lk

சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு

3 months 2 weeks ago
12 JUN, 2024 | 05:24 PM
image
 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவுக்கும் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (11) சித்தார்த்தன் எம்.பி.,யின் கந்தரோடை இல்லத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் யாழ். மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் கௌதமன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இச்சந்திப்பின்போது சித்தார்த்தன் கூறுகையில், 

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக அதாவது அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக தங்களது கட்சி எடுத்துள்ள நிலைப்பாடு என்ன என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. ஆகவே, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டினை தமிழ் மக்களுக்கு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். 

இணைந்த வடக்கு, கிழக்கை நீதிமன்றத்தினூடாக தனித்தனி மாகாணங்களாக பிரிப்பதற்கு பிரதான பங்காளியாக ஜே.வி.பி கட்சி செயற்பட்ட விடயத்தில் எம் மக்கள் மத்தியில் இன்று வரை அதிருப்தி இருப்பதால் இவ்விடயத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுதியான நிலைப்பாட்டினை நீங்கள் வெளிப்படுத்தும் பட்சத்தில், உங்கள் கட்சி சம்பந்தமான தமிழ் மக்களது மனநிலையில் மாற்றம் ஏற்படலாம் என தெளிவுபடுத்தினார்.

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நியமிப்பதற்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கின்ற ஐந்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளோம். 

சமூக மட்ட அமைப்புக்களும் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக நாங்கள் முழுமையாக அவருடனேயே செயற்படுவோம் என்பதையும் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் காணப்படும் பிந்திய நிலைமைகள் பற்றி அங்கு கலந்துரையாடப்பட்டதோடு, எதிர்காலத்திலும் தொடர்ந்து சந்திப்புக்களை மேற்கொள்ய இரு தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு | Virakesari.lk

யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

3 months 2 weeks ago

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களுக்கு முன்பாக 12ஆம் திகதி புதன்கிழமை மதியம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

15.jpg

யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என வலயக் கல்வி அலுவலகங்களுக்கு முன்பாக பதாகைகளைத் தாங்கியவாறு அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறும், அதிபர் ஆசிரியர்களின் பதவி உயர்வை நடைமுறைப்படுத்து, அதிபர் ஆசிரியர்களில் கொள்ளை அடிக்கும் பணத்தை வழங்கு, மாணவர்களின் போசாக்கை உறுதிப்படுத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

 

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் நாடாளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

14.jpg

 

10.jpg

 

09.jpg

யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் | Virakesari.lk

யாழில் டிப்பர் வாகனம் மோதி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

3 months 2 weeks ago
12 JUN, 2024 | 12:44 PM
image
 

யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் டிப்பர் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார். 

குருணாகல் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். 

இவர் இன்று புதன்கிழமை (12) அதிகாலை யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில், நுணாவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமொன்று இவரை மோதியுள்ளது.

இதன்போது இவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/185900

யாழில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

12 JUN, 2024 | 03:50 PM
image
 

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (12) வைத்தியசாலையில் நடந்தது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே உயிரை மாய்த்துள்ளார்.

உயிரிழப்புக்கான காரணம் தெரிய வராத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/185925

இனங்களுக்கிடையே ஒற்றுமை, நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டிய தேவையுள்ளது - உலக பௌத்த மகா சம்மேளனத்தின் இலங்கை கிளை

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

12 JUN, 2024 | 11:47 AM
image
 

(செ.சுபதர்ஷனி)

இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக உலக பௌத்த மகா சம்மேளனத்தின் இலங்கை கிளை வலியுறுத்தியுள்ளது.

உலக பெளத்த மகா சம்மேளனத்தின் இலங்கை மத்திய நிலையம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பணியகம் ஆகியன இணைந்து இலங்கையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை விருத்தி செய்யும் நோக்கில் செவ்வாய்க்கிழமை (11) நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தன.

உலக பௌத்த மகா சம்மேளனத்தின் இலங்கை கிளையின் தலைவர் கலாநிதி சுதத் தேவபுரவின் தலைமையில் கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் மேற்படி சமய நிகழ்வு நடைபெற்றது. அனைத்து மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தின் மூலம் சமாதானம் மற்றும் ஒற்றுமையை விருத்தி செய்யும் முகமாக இந்நிகழ்வு ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் உலக பௌத்த மகா சம்மேளனத்தின் இலங்கை  மத்திய நிலையத்தின் தலைவர் கலாநிதி சுதத் தேவபுர, செயலாளர் ஜயந்த பீரிஸ், சர்வதேச மனித உரிமைகள் பூகோள வழிநடத்தல் தலைவர் கலாநிதி எம். ஏ. சீ. மஹசும், அதன் தலைவர் அமீர் கான், பணிப்பாளர் குபேரலிங்கம், ஆலோசகர் நசீம் மற்றும் ஊடகப்பணிப்பாளர் ஊடகவியலாளர் பஸ்லான் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சர்வமத தலைவர்களால் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் கலாநிதி சுதத் தேவபுரவிற்கு சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கப்பெற்றது. நாட்டு மக்களிடையே ஒற்றுமை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. உலக பெளத்த சம்மேளனத்தின்  இலங்கை மத்திய நிலையத்தின் எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இலங்கை பல மத்தவர்களும் ஒற்றுமையுடன் வாழும் நாடு. அரசியல் தலைமைகளின் தலையீடு பொதுமக்களிடையே உள்ள நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. எம்மவர் மத்தியில் சமாதானத்தை ஊக்குவிக்கக் கூடிய வகையில் காலத்துக்கேற்ற சிந்தனைகள் வலுப்பெற வேண்டும். அரசியல் உட்பூசல்களையும் கடந்து மனித உரிமைகள் பணியகம் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்போடு தமது சேவையை வழங்கி வருகிறது. அவர்களின் மகத்தான சேவை மக்களுக்கு அவசியம் என்றார்.

படப்பிடிப்பு: ஜே.சுஜீவ குமார்

IMG_2026.jpg

IMG_2012.jpg

IMG_1989.jpg

IMG_2095.jpg

https://www.virakesari.lk/article/185892

இனப்பிரச்சினைக்கு உங்களால் கூட தீர்வை வழங்க முடியவில்லையே என வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட அநுரவிடம் சைவ சமயத் தலைவர்கள் ஆதங்கம்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 7

12 JUN, 2024 | 11:42 AM
image

போரில் எந்த குற்றமும் செய்யாத பாடசாலை சிறுவர்கள், குழந்தைகள் குண்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்து, யுத்தம் முடிவுக்கு வந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் நீங்கள் எல்லோரும் இணைந்து இன்னமும் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியவில்லையே என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார  திஸாநாயக்கவிடம் சைவ சமயத் தலைவர்கள் ஆதங்கத்தை வெளியிட்டனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அனுர குமார  திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை (11) மாலை ஏழு மணிக்கு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்குச் சென்று சந்திப்பில் ஈடுபட்டனர்.

IMG-20240611-WA0013.jpg

சந்திப்பில் நல்லை ஆதீன குரு முதல்வர்  ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறு திருமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, நாட்டில் நீண்டகாலமாக நிலவும் இனப்பிரச்சினையை தீர்க்க ஜே.வி.பி. பங்காற்ற வேண்டும் என வலியுறுத்திய சைவ சமயத் தலைவர்கள், போரில் எந்த குற்றமும் செய்யாத பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், குழந்தைகள் குண்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தபோது இடதுசாரி தலைவர்களாக இருந்த நீங்கள் ஏன் எதிர்ப்பை வெளியிடவில்லை என ஆதங்கம் வெளியிட்டனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரம் நீடித்து செல்லும் நிலையில் அதற்கு தீர்வு என்ன என கோரிய போது எனது சகோதரியும் காணமலாக்கப்பட்டவர் தான். எனக்கு அதன் வலி தெரியும். நாம் ஆட்சிக்கு வந்து அதற்கொரு தீர்வை காண்போம் என அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

வெடுக்குநாறிமலை உள்ளிட்ட பல இடங்களில் சைவ ஆலயங்கள் அழிக்கப்படும் நிலையில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகிறது.

தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணாமல் இந்த நாடு ஒருபோதும் முன்னேறாது என சைவ சமயத் தலைவர்கள் சுட்டிக்காட்டியபோது,

சமயத்தின் பெயரால் சண்டை பிடிக்கக் கூடாது என தெரிவித்த அனுர குமார திஸாநாயக்க, நாம் ஆட்சிக்கு வந்தால் கீரிமலை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள அழிவடைந்த ஆலயங்கள் மீள புனரமைக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.

IMG-20240611-WA0011.jpg

ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்து தென்னிலங்கை வேட்பாளர்கள் வடக்கிற்கு வருகின்ற போக்கு அதிகரித்துள்ள நிலையில், இந்த சந்திப்பில் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதையும் வெளிப்படையாக பேசவில்லை என்றும் அறியமுடிகிறது.

https://www.virakesari.lk/article/185884

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் நாட்டின் வெற்றி, தோல்வியையே தீர்மானிக்கும் : ஜனாதிபதி

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

12 JUN, 2024 | 10:36 AM
image
 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என்று  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

பொருளாதார சீர்த்திருத்த துறைசார் மேற்பார்வைக்  குழுவில் கலந்து கொள்ளும் இளைஞர் பிரதிநிதிகளுடன்  பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்ற கொள்கை சீர்திருத்தம் தொடர்பான கருத்தாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/185886

IMF கடன் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வு இன்று

3 months 2 weeks ago
imf-srilanka.jpg

இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று (12) கலந்துரையாடவுள்ளது.

இந்த நிறைவேற்று சபை கூட்டத்தில், 2024 ஆம் ஆண்டுக்கான 4வது பிரிவின் கீழ் ஆலோசனை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசெக், சமீபத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இலங்கை கடன் மறுசீரமைப்பில் போதுமான மற்றும் வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

கடன் திட்டத்தின் தரத்திற்கு ஏற்ப வெளி வணிகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டிவிடும் என்று தான் மிகவும் எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், கையிருப்பு அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக ஜூலி கோசெக் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/303549

யாழ். அனலைதீவில் கடலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

12 JUN, 2024 | 10:26 AM
image
 

யாழ்ப்பாணம் அனலைதீவிலிருந்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (10) கடற்றொழிலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமரசிங்கம் மற்றும் கேதீஸ்வரன் ஆகிய இருவரையே காணவில்லை. இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. காணாமல் போனோரை கடலில் தேடும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/185885

Checked
Sat, 09/28/2024 - 11:10
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr