புதிய பதிவுகள்2

வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

1 month 2 weeks ago
17 JUN, 2025 | 02:06 PM வடபகுதியில் பல மனிதபுதைகுழிகள் உள்ளதாக வெளியாகியுள்ள உறுதிப்படுத்தப்படாத வாய்மொழிமூலதகவல்களை அடிப்படையாக வைத்து அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடாது என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கில் பல மனித புதைகுழிகள் குறித்து வாய்மொழி மூல உறுதிப்படுத்தப்படாத தகவல்களே வெளியாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் திருக்கேதீஸ்வரத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை கார்பன் பரிசோதனைக்காக புளோரிடாஅனுப்பவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217712

செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகள் பிறந்த குழந்தைகளின் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் - ராஜ்சோமதேவ

1 month 2 weeks ago
Published By: RAJEEBAN 17 JUN, 2025 | 02:29 PM மன்னார் புதைகுழி விவகாரத்தை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து ஏமாற்றம்-இவ்வாறான சூழ்நிலைகளில் பணியாற்ற முடியாது செம்மணிமனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்கு தலைமைதாங்கும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர்பேராசிரியர் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 19 உடல்களில் மூன்று எலும்புக்கூடுகள் பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் என குறிப்பிட்டுள்ளார். அல்ஜசீராவிற்கு(ஜீவன் ரவீந்திரன் ) இதனை அவர் தெரிவித்துள்ளார் உடல்களை இறுதியில் மருத்துவர்கள் பகுப்பாய்வு செய்து அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முயல்வார்கள் என தெரிவித்துள்ள அவர் திகதிகளுடன் காணப்படும் பொலித்தீன் உறைகள் அல்லது ஆடைகள் போன்ற உடல்களுடன் மீட்கப்பட்ட பொருட்களை போன்றவற்றை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். மனித உடல்களுடன் பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை என்றால் கதிரியக்க காலமதிப்பீட்டு முறையை பயன்படுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம் என அல்ஜசீராவிற்கு தெரிவித்த அவர் செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள்மூலம் இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறினை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார் நான் இடைக்கால அறிக்கையொன்றை நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளேன்,இந்த புதைகுழிகளை பாரிய மனித புதைகுழிகள் என கருதலாம் என தெரிவித்துள்ளேன்,மேலதிக விசாரணைகள் தேவை என தெரிவித்துள்ளேன் என ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார் மன்னார் புதைகுழி விவகாரத்தை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ள சோமதேவ, மூன்று வருடத்திற்கு முன்னர் நான் நான் ஆரம்ப கோரிக்கைகளை விடுத்திருந்த போதிலும் கடந்தவாரமேஉடல்களை தோண்டியவேளை மீட்கப்பட்ட பொருட்களை கையளித்தார்கள் என குறிப்பிட்டுள்ளார். அவற்றை ஆராய்வதற்கான நிதியை அரசாங்கம் இன்னமும் ஒதுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சூழ்நிலைகளில் பணியாற்ற முடியாது எவரும் பொறுப்பேற்பதில்லை காணாமல்போனோர் அலுவலகம் ஒரு வெள்ளை யானை என ராஜ்சோமதேவ. குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217702

சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி புதிய விதிகள்

1 month 2 weeks ago
பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிப்பதற்கான விதிகளில் மாற்றம் - ஐசிசி புதிய விதிகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 17 ஜூன் 2025, 03:51 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வப்போது புதிய விதிகளையும், ஏற்கெனவே இருக்கும் விதிகளையும் காலத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாற்றி, இன்னும் உயிர்ப்புடன் கிரிக்கெட்டை வைத்திருக்கிறது. ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்த வேண்டி விதிகளில் மாற்றம் செய்வது, புதிய விதிகளைப் புகுத்துவது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரிக்கெட் விளையாட்டின் அம்சங்களை மறுஆய்வு செய்து, விமர்சனங்களுக்கு ஏற்ப விதிகளில் மாற்றத்தையும், புதிய விதிகளையும் ஐசிசி அவ்வப்போது அறிவிக்கும். இது உலகக் கோப்பைத் தொடக்கம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட முக்கியத் தொடர்களுக்கு முன்பாக ஐசிசி அறிவிக்கும். அந்த வகையில், ஏற்கெனவே இருக்கும் இரு விதிகளில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்து ஒப்புதல் அளித்துள்ளது. ஐசிசி அறிவித்துள்ள இந்த புதிய விதிகள் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஜூன் 17ம் தேதி (இன்று) நடைமுறைக்கு வருகிறது. ஒருநாள் போட்டிகளில் ஜூலை 2ம் தேதியும், டி20 போட்டிகளில் ஜூலை 10ம் தேதியும் சர்வதேச அளவில் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய விதிகள் என்ன? அவை யாருக்கு சாதகமாக அமையும்? ஐசிசி கொண்டு வந்துள்ள மாற்றங்கள் என்ன? சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் இரு பந்துகளை பயன்படுத்தும் விதியிலும், அனைத்து சர்வதேச போட்டிகளிலும் கன்கசனில் (தலையில் அடிபடும் வீரர்) வெளியேறும் வீரருக்குப் பதிலாக மாற்று வீரரைச் சேர்க்கும் விதியிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் இரு பந்துகளை பயன்படுத்தும் விதியில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்துள்ளது. ஒருநாள் போட்டியில் இரு பந்துகளை பயன்படுத்துவதில் மாற்றம் தற்போது ஒருநாள் போட்டிகளில் பந்துவீசும் அணி 50 ஓவர்கள் வீசுவதற்கு இரு பந்துகளைப் பயன்படுத்துகிறது. ஒரு முனையிலிருந்து வீசுவதற்கு ஒரு புதிய பந்தும், மறுமுனையில் இருந்து வீசும்போது ஒரு புதிய பந்தும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, தலா 25 ஓவர்களுக்கு ஒரு புதிய பந்து, பந்துவீசும் அணியால் பயன்படுத்தப்படுகிறது. இந்த விதியில் ஐசிசி மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி, இன்னிங்ஸ் தொடக்கம் முதல் 34 ஓவர்களுக்குள் இரு புதிய பந்துகளையும் பந்துவீசும் அணி பயன்படுத்த வேண்டும். அதாவது 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும், அடுத்த 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும் பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட இரு பந்துகளில் இருந்து ஏதாவது ஒரு பந்தையே கடைசி 15 ஓவர்களுக்கு பயன்படுத்த வேண்டும். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சமநிலையைக் கொண்டுவரும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாக குறைக்கப்பட்டால் என்னாகும்? மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாகவோ அல்லது அதற்கும் குறைவாக குறைக்கப்பட்டால், பந்துவீசும் அணி ஒரு புதிய பந்து மட்டுமே பயன்படுத்தி பந்துவீச வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. வழக்கமாக 2 பந்துகள் பயன்படுத்தும் விதி இதற்குப் பொருந்தாது. ஐசிசி கன்கசன் விதியில் கொண்டுவந்துள்ள மாற்றம் என்ன? கன்கசன் (தலையில் அடிபடும் வீரர்) முறையில் ஒரு பேட்டர் வெளியேறும் சூழல் ஏற்பட்டால், அல்லது விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்குப் பதிலாக எந்த மாற்று வீரரைக் கொண்டுவருவது குறித்து ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, போட்டி தொடங்கும் முன்பே இரு அணிகளும் கன்கசனுக்கான மாற்று வீரர் குறித்த பட்டியலை போட்டி நடுவரிடம் வழங்க வேண்டும். அந்த 5 வீரர்களில் ஒரு விக்கெட் கீப்பர், ஒரு பேட்டர், ஒரு வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர், ஒரு ஆல்ரவுண்டர் இருக்குமாறு வீரர்கள் பெயரை வழங்க வேண்டும். கன்கசனில் எந்த மாதிரியான வீரர் வெளியேறுகிறாரோ, அதற்கு ஏற்றபடியே மாற்று வீரரை களமிறக்க வேண்டும். ஒரு வேகப் பந்துவீச்சாளருக்கு தலையில் அடிபட்டு கன்கசனில் வெளியேறும் நிலையில், அவருக்குப் பதிலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர்தான் வர வேண்டும். ஒரு பேட்டர் தலையில் அடிபட்டு கன்கசனில் சென்றால் அவருக்குப் பதிலாக பேட்டர்தான் வர வேண்டும் என்று ஐசிசி கட்டுப்பாடு விதித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கன்கசனில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்சித் ராணாவை விளையாட வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது கன்கசன் விதியில் திருத்தம் செய்ய என்ன காரணம்? கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி செய்த செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுதான் காரணம். கன்கசனில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்சித் ராணாவை விளையாட வைத்தனர். அவரும் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்தார். கன்கசன் மாற்று வீரருக்கு பேட்டிங் ஆல்ரவுண்டருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சேர்க்க போட்டி நடுவர் ஒப்புதல் அளித்தது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து, கன்கசனில் மாற்று வீரராகக் களமிறங்குவோருக்கு குறிப்பிட்ட ரோலில் களமிறங்க வேண்டும் என்ற விதியை ஐசிசி கொண்டுவர திட்டமிட்டது. அதாவது, பந்துவீச்சாளர் கன்கசனில் சென்றால், அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம், விக்கெட் கீப்பர் கன்கசனில் சென்றால், அவருக்குப் பதிலாக மாற்றுவீரராக விக்கெட் கீப்பரை விளையாட அனுமதிக்கலாம் என்று விதிகளைக் கொண்டுவந்துள்ளது. பவுண்டரி எல்லையில் கேட்ச் விதிகளில் மாற்றம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்கும் "பன்னி ஹாப்" (bunny hop) முறைக்கு, அதாவது பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்தால் அதை வானில் தூக்கிப் போட்டோ அல்லது தட்டிவிட்டோ பீல்டர் பவுண்டரி எல்லைக்குள் வந்து கேட்ச் பிடிக்கும் முறைக்கு எம்சிசி (மெர்ல்போர்ன் கிரிக்கெட் கிளப்) தடை விதித்துள்ளது. ஆட்டத்தில் முக்கியத் திருப்புமுனையாக சில கேட்சுகள் அமையக்கூடும். அதில் பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்து அல்லது கேட்ச் பிடிக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து ஒரு பீல்டர் பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும்போது பந்தை வானில் தூக்கி வீசியோ அல்லது மற்றொரு பீல்டரிடம் தூக்கி வீசியோ கேட்ச் பிடிக்கிறார்கள். இந்த கேட்சில் பல்வேறு சந்தேகங்களும், பீல்டிங்கில் இருக்கும் நேர்மைத் தன்மையும் கேள்விக்குள்ளாகிறது. இதையடுத்து, முற்றிலுமாக பன்னிஹாப் கேட்சுக்கு எம்சிசி தடை விதித்துள்ளது. இதன்படி, ஒரு பீல்டர் பவுண்டரிக்கு வெளியே செல்லும் பந்தை கேட்ச் பிடிக்க பந்தை ஒருமுறை மட்டுமே தட்டி பிடிக்க வேண்டும், பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும் பந்தை பிடிக்க முற்பட்டு, வானில் பலமுறை தட்டிவிட்டு மீண்டும் பவுண்டரி எல்லைக்குள் பீல்டர் வந்து பிடிக்கும் முறை இனி செல்லாது. அவ்வாறு 2வது முறையாக பந்தை கையால் தட்டிவிட்டு பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது. பந்தை தட்டிவிட்டு கேட்ச் பிடிக்கும் முன்பாக, பீல்டர் பவுண்டரி எல்லைக்குள்தான் இருக்க வேண்டும், பந்தை பிடித்த பின்பும் பவுண்டரி எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். பந்தை தொட்ட பின் பீல்டர் பவுண்டரி எல்லைக்கு அப்பால் சென்றாலோ அல்லது பவுண்டரி எல்லையைக் கடந்து பந்தை பலமுறை அந்தரத்தில் தட்டிவிட்டு பவுண்டரி எல்லைக்குள் வந்தபின் பீல்டர் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது. அது சிக்ஸராக அல்லது பவுண்டரியாக கருதப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐபிஎல் ஆட்டம் ஒன்றில் சிஎஸ்கே வீரர் பிரேவிஸ் அபாரமாக கேட்ச் பிடித்த காட்சி மாற்றம் கொண்டுவர என்ன காரணம்? ஆஸ்திரேலியாவில் 2023 சீசன் பிக்பாஷ் லீக் டி20 போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்ஸர் இடையிலான போட்டியில் பிடிக்கப்பட்ட கேட்ச்-தான் விதியில் திருத்தம் செய்ய காரணமாக அமைந்தது. சிட்னி சிக்ஸர் அணி வீரர் ஜோர்டான் சில்க் லாங் ஆன்திசையில் அடித்த ஷாட்டை பிரிஸ்பேன் வீரர் நீசர் கேட்ச் பிடித்தார். நீசர் கேட்ச் பிடித்தபோது, பவுண்டரி எல்லைக்கு வெளியே அந்தரத்தில் பறந்துகேட்ச் பிடித்தார், கேட்ச் பிடித்த அடுத்த நொடியே பந்தை வானில் தூக்கி வீசி பவுண்டரி எல்லைக்குள் நீசர் வந்து, மீண்டும் அந்தரத்தில் குதித்து அந்த பந்தை கேட்ச் பிடித்தார். நீசர் கேட்ச் பிடித்தபோது அவரின் இரு கால்களும் பவுண்டரிக்கு வெளியே அந்தரத்தில் இருந்ததே தவிர தரையில் படவில்லை, கேட்ச் பிடித்த பிறகு அவர் தனது காலை பவுண்டரி எல்லைக்குள் வைத்தார் என்பதால் இது கேட்சாக அறிவிக்கப்பட்டது. இந்த முறையில் நீசர் கேட்ச் பிடித்தது பெரிய சர்ச்சையானது, பன்னி ஹாப் முறையில் பிடிக்கும் கேட்சுக்கு தடை விதிக்க கோரிக்கை எழுந்த நிலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. தென் ஆப்ரிக்க அணியில் இட ஒதுக்கீடு ஏற்படுத்திய மாற்றம் என்ன? ஒரு சாம்பியன் உருவான கதை 'சோக்கர்ஸ்' தென் ஆப்ரிக்கா சாம்பியனாக மாறிய கதை - கேப்டன் பவுமா கூறியது என்ன? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பலமான ஆஸ்திரேலியாவை தென் ஆப்ரிக்கா வீழ்த்தியது எப்படி? 'தோல்வியே தெரியாத தலைவன்' - தென் ஆப்ரிக்காவின் கனவை நனவாக்கிய கேப்டன் பவுமா யார்? ரிலே கேட்சில் வந்துள்ள மாற்றம் என்ன? பழைய விதியின்படி, ஒரு பீல்டர் கேட்ச் பிடித்த தருணத்தில் அவர் பந்துடன் பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்ல முயலும்போது, பந்தை மற்றொரு பீல்டரிடம் தூக்கி வீசும்போது அந்த பீல்டரும் பவுண்டரி எல்லைக்குள் இருந்தவாறே அந்த பந்தை பிடித்தால் அது கேட்சாக கருதப்படும் ஆனால், புதிய விதியின்படி முதல் பீல்டர் அல்லது பந்தை இரண்டாவதாக பிடிக்கும் சகவீரர் பந்தை கேட்ச் பிடித்து முடிக்கும்போது கண்டிப்பாக பீல்டிங் எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். ஒருவேளை பந்தை கேட்ச் பிடிப்பதற்கு முன்பே, கேட்ச் பிடிக்கும் வீரர் பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று கேட்ச் பிடித்து, அதை தூக்கி வீசி மற்றொரு வீரருக்கு வீசி எறிந்து அவரும் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது, அது பவுண்டரி அல்லது சிக்ஸராகவே கருதப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20rlz01j8ko

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
ஈரான் போர்க்கால தலைமைத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்'' - இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு 17 JUN, 2025 | 02:13 PM டெல் அவிவ்: தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானியைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட உயர் ராணுவ தளபதி அலி ஷத்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவித்தன. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் ராணுவத் தளபதியுமான அலி ஷத்மானி, துல்லியமான உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து, மத்திய தெஹ்ரானில் ஐஏஎஃப் தாக்குதலில் கொல்லப்பட்டார்" என்று ஐடிஎஃப் ட்வீட் செய்தது. ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதி அலி ஷத்மானி ஈரானிய ஆயுதப் படைகளின் அவசரகால கட்டளைத் தளபதியாகப் பணியாற்றினார். அவர் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் ஈரானிய ராணுவம் இரண்டிற்கும் கட்டளை தளபதியாக இருந்தார். ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் விளைவாக ஈரான் மற்றும் இஸ்ரேலில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரானில், இதுவரை 224 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில், ஈரானின் பதிலடி தாக்குதல்களில் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 592 பேர் காயமடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/217715

பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி!

1 month 2 weeks ago
பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி! இத்தாலி விமான நிலையத்தில் சீனப் பெண் ஒருவர் தரையில் புரண்டு அழும் காணொளியொன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணியான குறித்த பெண், கடந்த சனிக்கிழமை இத்தாலியில் உள்ள மிலான் மல்சேனா விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதன்போது அவர் கொண்டு வந்த பயணப் பொதி அதிக எடையுடன் இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அப் பெண் பயணியிடம், `கூடுதல் எடைக்கு பணம் செலுத்துகிறீர்களா அல்லது எடையை குறைக்கிறீர்களா என வினவியுள்ளனர். இதனைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த அப் பயணி அங்கேயே தரையில் படுத்து அழத் தொடங்கியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத விமான நிலைய அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்த முயன்றும் அவர் சமாதானம் ஆகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவர் செல்லவிருந்த விமானத்தில் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனவும், இதன் பின்னர் அவருக்கு வேறு விமானத்தில் டிக்கெட் ஒழுங்கு செய்து கொடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாகவே விமான நிலையங்களில் அதிகாரிகளுக்கும் பயணிகளுக்கும் சலசலப்புகள் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு காரணமாக விமான நிலைய அதிகாரிகள் அவ்வப்போது விதிகளை மாற்றி வருகின்றனர். எனினும் இதனை பயணிகளுக்கு சரியான முறையில் அதிகாரிகள் தெரிவிப்பது இல்லை என பயணிகள் விசனம் தெரிவித்து வருகின்றனர். கடந்தாண்டு சிக்காகோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை தவறவிட்ட பயணி கோபமடைந்து அங்கிருந்த கணினியை எடுத்து விமான நிலைய அதிகாரி மீது வீசிய வீடியோவொன்றும் இணையத்தில் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsபயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி!இத்தாலி விமான நிலையத்தில் சீனப் பெண் ஒருவர் தரையில் புரண்டு அழும் காணொளியொன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணியான குறித்த பெண், கடந்த சனிக்கிழமை இத்தா...

டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது!

1 month 2 weeks ago
டிக் டொக் பிரபலம் ‘காபி லேம்‘ அமெரிக்காவில் கைது! ஆப்பிரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இன்ஸ்டா பிரபலம் ”கபேன் காபி லேம் (Khaby-lame) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதான காபி லேம் அமெரிக்காவின் நெவாடாவின் லாஸ் வேகாஸில் உள்ள ஹாரி ரீட் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 30-ம் திகதி அமெரிக்காவிற்குள் நுழைந்த அவர், தனது விசா காலத்தையும் தாண்டி,விதிமுறைகளை மீறி அதிக நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால் அவரைச் சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதுக்குப் பின், அமெரிக்காவை விட்டு வெளியேறி விடுவதாக அவர் கூறிக் கொண்டதால் காபி லேம்மை விடுவித்துள்ளனர். தற்போது அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறி உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காபி லேம் கைது செய்யப்பட்ட தகவல் தற்போது சமூக ஊடகங்களில் தீயாய் பரவி அவரது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காபி லேம்மிற்கு ஒரு வயதாக இருக்கும் போது அவரது குடும்பத்தினர் இத்தாலிக்குக் குடிபெயர்ந்ததால், அவர் இத்தாலி நாட்டுக் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இதனையடுத்து தனது பதின்ம வயதில் தொழிற்சாலையில் CNC இயந்திர ஆபரேட்டராகப் பணிபுரிந்த அவர் கொரோனா காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் டிக்டாக்கில் வீடியோ பதிவிட ஆரம்பித்தார். சிக்கலான வாழ்க்கைச் சம்பவங்களை இதைவிட எளிமையாக யாராலும் புரிய வைக்க முடியாது என யோசிக்கும் அளவுக்கு வார்த்தைகளற்ற சைகையால் துவம்சம் செய்து வீடியோ பதிவிட ஆரம்பித்தார். விழுந்து புறண்டு ஊதிப் பெரிதாக்கும் சம்பவங்களைச் சிலர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருப்பார்கள். இது ஒரு விஷயமா? என சைகையால் கேள்வி கேட்பதோடு, அதைக் கிண்டல் செய்து பதிவிடும் இவரது வீடியோவால், பலரும் காபி லேம்மிற்கு ரசிகர்களாகத் தொடங்கியுள்ளனர். காபி லேமின் தனித்துவமான கையசைவு சைகையைப் பின்பற்றி, அவரைப் போலவே வீடியோ வெளியிட்டுப் பலரும் பிரபலமாகி உள்ளனர். அதில் விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் உண்டு. குறிப்பாக ஹர்திக் பாண்டியாவும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று அவரைப்போலத்தான் போஸ் கொடுத்தார். டிக்டாக்கில் 162 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்களை வைத்துள்ள அவர் இன்ஸ்டாகிராமில் 80 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்களை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1435754

"கர்நாடகாவில் தக் லைஃப் தற்போது வெளியாகாது" - கன்னட மொழி குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்த கமல் ஹாசன்

1 month 2 weeks ago
இலங்கையில் தமிழினத்தின் அறிவார்ந்த வளர்ச்சியுடன் தாங்களும் வளரவேண்டும் என்ற எண்ணமோ, முயற்சியோ இன்றி அங்குள்ள படித்த சிங்கள இனவாதிகளும் காழ்புணர்சியோடு தமிழினத்தின் வளர்ச்சியை நோக்குவது போல், இந்தியாவிலும் தமிழ் மாநிலத்தின் வளர்ச்சியை அதன் சில மாநிலங்களிலுள்ள இனவாதிகள் நோக்குவது தெரிகிறது. இது இந்தியாவின் அழிவுக்கான அறிகுறிகள் என்பதை இலங்கையைப் பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்.🤔

இஸ்ரேல் - இரான் சண்டை வல்லரசுகளின் மோதலாக வாய்ப்பு: அமெரிக்கா, ரஷ்யா என்ன செய்கின்றன?

1 month 2 weeks ago
பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பௌயான் கலானி பதவி, செய்தியாளர் 17 ஜூன் 2025, 01:28 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக வல்லரசு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், இரானின் அண்டை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இஸ்ரேல் மற்றும் இரானின் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகின்றனர். தற்போது இஸ்ரேல் மற்றும் இரானுக்கு இடையிலான மோதலை நிறுத்த இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் கருப்பொருளில் மாற்றம் ஏற்பட்டது. யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான பிரச்னை மற்றும் அமெரிக்கா விதித்த புதிய வரிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில் தற்போது இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் கனடிய பிரதமர் மார்க் கார்னேவை, மாநாட்டிற்கு முதல் நாள் சந்தித்துப் பேசினார். அப்போது இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்கும் வழிகள் குறித்து மாநாட்டில் பேசலாம் என்று முடிவெடுத்தனர். இஸ்ரேல் - இரான் மோதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரிய அளவிலான போராக மாறுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளது. அண்டை நாடுகள் மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், ரஷ்யா போன்ற வல்லரசுகளையும் உள்ளே இழுத்து பெரிய அளவிலான போராக மாறுவதற்கான வாய்ப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. இதுவரை மத்தியஸ்தம் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் எந்த பலனும் கிட்டவில்லை. இஸ்ரேல் இரான் மீதான தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது. இரானிய ஏவுகணைகள் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா போன்ற இஸ்ரேலிய நகரங்களை தாக்கியுள்ளன. சமீபத்திய செய்திகளின் படி, இரானில் அமைந்திருக்கும் ராணுவ உள்கட்டமைப்புகளுக்கு அருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், அப்பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை செய்துள்ளது. இதுபோன்ற சூழலில் சண்டை நிறுத்தத்திற்கான நம்பிக்கை எங்கே உள்ளது? உலகத் தலைவர்கள் இதில் எத்தகைய பங்காற்ற இயலும்? தற்போது நம்பிக்கை அளிப்பது இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியின் அறிக்கை மட்டுமே. அவர் "இஸ்ரேல் தன்னுடைய தாக்குதல்களை நிறுத்தினால், இரானும் தாக்குதலை நிறுத்தும். இரானின் தற்போதைய செயல்பாடுகள் அனைத்தும் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கான எதிர்வினையே," என்று தெரிவித்தார். இருப்பினும், இஸ்ரேல் தனது நோக்கத்தை இன்னும் அடையவில்லை என்றே அதன் நடவடிக்கைகள் காட்டுகின்றன. இரானில் அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குவதற்கான செயல்திறனை அழித்து, இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதை நீக்குவதே அதன் நோக்கம் என்று இஸ்ரேல் தெரிவிக்கிறது. காணொளிக் குறிப்பு,இஸ்ரேல் - இரான் மோதல் மோசமடைந்தால் நிலைமை எப்படியெல்லாம் மாற வாய்ப்புள்ளது? அமெரிக்கா அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்தியஸ்தம் செய்வதில் கை தேர்ந்தவர் என்று கூறிக் கொள்வதுண்டு. அவர் தற்போது அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் தலையிடுவதற்கு பதிலாக இரான் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் குறித்து அவர் பேசுகிறார். "எளிமையாக இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே உடன்படிக்கை ஏற்படுத்தி இந்த மோதலை உடனே முடிவுக்குக் கொண்டு வர நம்மால் இயலும்," என்று ட்ரூத் சோசியல் சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆனால் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா துணை போகிறது என்று அந்த நாட்டின் மீது இரான் குற்றம் சுமத்துகிறது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் டிரம்ப், இரான் மீதான சாத்தியமான தாக்குதலுக்கு இஸ்ரேலுடன் துணை நிற்கிறார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இரான் மீதான தாக்குதல் தொடர்பாக டிரம்பிற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும் அமெரிக்கா ஒப்புக் கொண்டது. இரானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை கண்காணிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. டிரம்ப் தொடர்ந்து இஸ்ரேலின், குறிப்பாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறார். நெதன்யாகுவிடம் இந்த தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்த, மற்ற உலகத் தலைவர்களைக் காட்டிலும், டிரம்பிற்கு கூடுதல் அனுகூலத்தை வழங்குகிறது இந்த நட்புறவு. டிரம்பும், நெதன்யாகுவும் இரானின் அணு செறிவுத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் அதில் வெற்றி காண்பதற்கு இருவரும் வெவ்வேறு வழியை பின்பற்றுகின்றனர். ஞாயிறு அன்று அமெரிக்காவுடனான அணுசக்தி திட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பாஸ் அரக்சி தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்தார். "எங்களின் அணுசக்தி திட்டத்திற்கான முன்மொழிவை அமெரிக்கர்களிடம் இன்று நாங்கள் வழங்கியிருக்க வேண்டும். அது ஒப்பந்தத்தை உருவாக்க வழி வகுத்திருக்கும்," என்று கூறினார். ஆனால் இரான் முன்மொழிந்த திட்டம் தொடர்பான தகவல்கள் எதையும் அவர் வழங்கவில்லை. டிரம்ப் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, அமெரிக்கா (போர்) தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. மத்தியஸ்தம் செய்ய முன்வந்து இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை காட்டிக்கொள்ள விரும்புகிறது அமெரிக்கா. இந்த நிலைப்பாடு, இரான் மீதான இரு நாடுகளின் அணுகுமுறையில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று தீர்மானிக்கும் ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த போக்கு நீடிக்கும் பட்சத்தில், இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே நீடிக்கும் பதற்றத்தை தணிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க அந்த நாட்டிற்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்க அதிபருடன் இஸ்ரேல் பிரதமர் ஐரோப்பா இரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை ஐரோப்பிய நாடுகள் கண்டிக்கவில்லை. இரான் பதில் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டன. இருப்பினும், இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை உடனடியாக நடத்தி மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழலை தணிக்க ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தயாராக உள்ளதாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வாட்ஃபுல் அறிவித்தார். இந்த பிராந்தியத்தில் அமைதியை உருவாக்க இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை ஒரு முக்கிய நிபந்தனை என்று கருதுகிறார் அவர். மத்தியக் கிழக்கு பிராந்தியத்திற்கும் ஐரோப்பாவுக்கும் இரான் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை இரான் நிரூபித்தால் மட்டுமே அமைதி சாத்தியமாகும் என்று தெரிவித்தார் அவர். மத்திய கிழக்கில் நிலையற்ற தன்மை நிலவ இரானே காரணம் என்று முன்னதாக ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்திருந்தார். தற்போது நியாயப்படுத்த இயலாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அணுசக்தி திட்டத்தில் முன்னேறுவது அந்த சூழலை மேலும் மோசமாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், தாக்குதல் நடத்துவதை இரண்டு நாடுகளும் நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துக் கொண்டார். சமீபத்திய மாதங்களில், ஃபிரான்ஸ் இரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. ஃபிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட், இரு தரப்பினரும் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த பிராந்தியத்தில் தன்னுடைய சொந்த மக்கள் மற்றும் நலனுக்காக ஃபிரான்ஸ் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறினார். அதிபர் மக்ரோன், இரானுக்கு எதிரான தாக்குதலில் ஃபிரான்ஸ் பங்கேற்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால் இஸ்ரேலுக்கு எதிராக இரான் பதில் தாக்குதல் நடத்தும் போது இஸ்ரேலை ஃபிரான்ஸ் பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார். அமெரிக்கா முன்மொழிந்த அணுசக்தி ஒப்பந்தத்தை இரான் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற வருத்தத்தையும் அவர் பதிவு செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மத்திய கிழக்கில் ஸ்திரமற்றத் தன்மை நிலவ இரானே காரணம் என்று முன்னதாக ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்திருந்தார் ஜெர்மனி மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளைக் காட்டிலும் எதார்த்தமான அணுகுமுறையை இந்த விவகாரத்தில் கையாண்டுள்ளது பிரிட்டன். மத்தியக் கிழக்குக்கு கூடுதலாக போர் விமானங்களை அனுப்பியுள்ளது. சமீபத்திய நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்டார்மர், டைஃபூன் போர் விமானங்களும் வானில் இருந்தபடியே போர் விமானங்களுக்கு எரிபொருளை நிரப்பும் விமானமும் அனுப்பப்பட்டிருப்பதை அவர் உறுதி செய்தார். இதற்கு முந்தைய காலகட்டத்தில் இஸ்ரேல்-இரான் இடையே நடைபெற்ற மோதல்களின் போது, இஸ்ரேலை பாதுகாக்க போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதைப் போன்று இதுவும் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து தெளிவாக அவர் குறிப்பிடவில்லை. சனிக்கிழமை பிபிசியில் வெளியான செய்தி ஒன்றில், அங்கு நிலைமை வேகமாக மாறிவருகிறது என்று கியர் ஸ்டார்மர் கூறியதாக குறிப்பிட்டிருந்தது. பிரிட்டன் அதன் நட்பு நாடுகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இரான் - இஸ்ரேல் இடையே நீடித்து வரும் பதற்றமான சூழலை "தணிப்பதே" அவரின் முதன்மை செய்தி என்பது தெளிவானது. கனடாவில் ஜி7 உச்சி மாநாட்டின் போதும் அவர் இந்த பிரச்னை குறித்து பேசினார். மத்தியஸ்தம் செய்வதற்கு பதிலாக, இரான் தன்னுடைய அணு சக்தி செறிவூட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அழுத்தம் தரும் நாடுகளுடன் சேர்ந்து செயல்படுகிறது பிரிட்டன் என்பது தெளிவாகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் அரபு நாடுகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் சௌதி அரேபியா மற்றும் சில வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் வந்து சென்ற ஒரே மாதத்தில் மத்திய கிழக்கில் புதிய போர் சூழல் உருவாவதை அவர்கள் யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். பாரிய அளவிலான முதலீடு, இந்த பிராந்தியத்தில் மிகவும் நிலைத்தன்மையற்று இருக்கும் சிரியா மீதான பொருளாதார தடையை நீக்குதல் போன்ற பல முன்னெடுப்புகளை கொண்டிருந்தது அவரின் வருகை. ஐரோப்பிய தேசங்களைப் போன்றில்லாமல், அனைத்து வளைகுடா நாடுகளும், இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு கண்டனத்தை பதிவு செய்தன. மிகவும் வலிமையான கருத்தை பதிவு செய்திருந்தது சௌதி அரேபியா. அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் எக்ஸ் தளத்தில், "சௌதி அரேபியா, எங்களின் சகோதர நாடான இரான் இஸ்லாமியக் குடியரசின் மீது நடத்தப்பட்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களை கடுமையாக கண்டிக்கிறது. இரானின் பிராந்திய இறையாண்மையை மீறும் இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும் உள்ளது," என்று தெரிவித்தது. இந்த கண்டனம் மட்டுமின்றி மத்திய கிழக்கில் உள்ள அரசியல் நிபுணர்களின் மதிப்பீடுகளும் வெளிவந்தன. இந்த நாடுகள் மறைமுகமாக பலவீனமான இரானை தங்களின் அண்டை நாடாக கொண்டிருக்க விரும்புகின்றன என்றும் அதேநேரத்தில் அவர்களின் சொந்த பிராந்தியங்களில் போர் பரவும் சூழலோ அல்லது அதன் பின்விளைவுகளோ தங்களை பாதிக்கக் கூடும் என்றும் அவர்கள் அஞ்சுவதாகவும் குறிப்பிடுகிறது அவர்களின் மதிப்பாய்வுகள். இந்த பிராந்தியத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு அமெரிக்க ராணுவ தளத்தை இரான் தாக்க முடிவெடுத்துவிட்டால் ஒரு பேராபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உருவாகின்றன. இஸ்ரேலிடம் இருந்து விலகிக் கொண்ட சௌதி அரேபியா, இஸ்ரேல் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் நாடுகளுடன் கை கோர்த்துக் கொண்டது. அரபு வளைகுடா நாடுகளுடனான இரானின் உறவு, கடந்த காலத்தில் இருந்ததைப் போல் இல்லாமல், மேம்பட்டு வருகின்ற சூழலில் இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இருப்பினும், பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் இஸ்ரேலுக்கு நேரடியாக ஆதரவு வழங்கியது போன்று இரானுக்கு ஆதரவாக எந்த நாடுகளும் நேரடியாக செயலில் ஈடுபட வெளிப்படையாக விருப்பம் தெரிவிக்கவில்லை. அதற்கு மாறாக இரான் பதில் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்வை எட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன. அவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, அவர்களின் நாடுகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு, கோடிக்கணக்கிலான நிதி முதலீடு மற்றும் எண்ணெய் பொருட்களை வாங்கும் முக்கிய நாடுகளாக இருக்கும் முதன்மை நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சம ஆதரவை வளைகுடா நாடுகள் வழங்க வேண்டும். அதே நேரத்தில் அழிவை ஏற்படுத்தும் ஒரு போர் சூழல் அவர்களின் நாடுகளுக்குள் நிகழ்வதை தடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இந்த சூழலில், சௌதி அரேபியா பன்முக அரசியல் விளையாட்டை விளையாடுவது போன்று தோன்றும். இஸ்ரேலுடனான சௌதியின் சமகால உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் இதில் அடங்கும். ஆனால் முழுமையாக அதில் வெற்றி பெற இயலவில்லை. அது மட்டுமின்றி, ஏமனின் ஹூத்திகளுடனான மற்றொரு பதற்றமான சூழல் ஏற்படுவதை தடுக்க சௌதி மேற்கொள்ளும் முயற்சிகளும் இதில் அடங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சௌதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யா ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் இரானுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளது. இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ரஷ்யாவை சிக்கலான இடத்தில் நிறுத்தியுள்ளது. இவ்விரு நாடுகளுடன் நல்ல உறவைத் தொடர்வதை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது தற்போதைய சூழல். இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றமான சூழலை தணிக்க ரஷ்யாவால் மத்தியஸ்தம் செய்ய இயலும் என்று சிலர் நம்புகின்றனர். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனும், இரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடம் பேசினார். சூழலை இயல்பு நிலைக்குக் கொண்டு வர தேவையான உதவிகளை அளிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். இவ்விரு நாட்டுத் தலைவர்களுடனும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். இரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்த உள்ள வழிகளை அவர் பரிந்துரை செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகளைப் போன்றே, ரஷ்யாவும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இரானின் அணுசக்தி திட்டத்தை எதிர்க்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சனிக்கிழமை அலைபேசியில் அழைத்து இஸ்ரேலின் தாக்குதல் குறித்து விவாதித்துள்ளார் புதின். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் சீனா இரானின் நட்பு நாடுகளில் ஒன்றான சீனா இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறு சீனா இஸ்ரேலிடம் கேட்டுக் கொண்டது. சௌத் சீனா மார்னிங் போஸ்ட் செய்திப் படி, சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் ஜியோடன் சாருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையே சண்டையை தொடராமல் அரசியல் ரீதியாக தீர்வு காண இயலும் என்று வாங் கூறியுள்ளார். சர்வதேச அமைப்புகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்ற சூழலில் இஸ்ரேலின் நடவடிக்கை ஏற்புடையதல்ல என்று வாங் உறுதியாகக் கூறியுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் சீனா, இரானின் ராணுவ திட்டங்களுக்கு உதவி செய்துள்ளது. ஒரு முழுமையான போர் வெடித்தால் என்னவாகும்? கிட்டத்தட்ட அனைத்து அரசியல் நிபுணர்களும், இரான் - இஸ்ரேலுக்கு இடையேயான மோதல் கட்டுப்பாட்டை மீறிச் சென்று முழு அளவிலான போராக மாறும் என்று கூறுகின்றனர். "மோசமான சாத்தியக்கூறாக இது இந்த பிராந்தியத்தில் இருக்கலாம். போர் பரவுவதை தடுக்க பல நாடுகளின் தலைவர்களும் வழி கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர். ஒரு சாத்தியமான வாய்ப்பு என்னவென்றால் இரானின் கூட்டாளிகளான, பலவீனம் அடைந்த லெபனானின் ஹெஸ்பொலா, ஏமனின் ஹூத்திகள், இராக்கில் உள்ள இரானின் ஆதரவுக் குழுக்கள் போன்றவை இந்த மோதலில் ஈடுபடலாம். இவர்கள் இந்த பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்காவை இந்த மோதலுக்குள் இழுக்கலாம். அப்படியான சூழலில் போர் புதிய திசை நோக்கி நகரும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் சேர்ந்து பிரிட்டனும் ஃபிரான்ஸும் இரான் மீது தாக்குதல் நடத்தலாம். இத்தகைய சூழலில், பல ஆண்டுகளாக கயான் செய்தித்தாளின் ஆசிரியர்கள் கூறுவது போன்று இரான் ஒரு முக்கிய முடிவை எடுக்கும். அது ஹோர்முஸ் நீரிணை வழியே சரக்கு போக்குவரத்தை மூடுவது. உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இது போன்ற சூழலில், அமெரிக்க தளங்களை இரான் தாக்குமானால், அமெரிக்காவின் செல்வாக்குட்பட்ட அரபு நாடுகள் இரானுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த மோதலின் மற்றொரு பின்விளைவாக சைபர் போர் இருக்கும். எரிசக்தி உற்பத்தி நிலையங்கள், மின்சாரம் மற்றும் நீர் ஆதார கட்டமைப்புகள் உள்ளிட்டவையையும் போர் சேதமாக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இது போராக நீடித்தால் நாட்டில் இருந்து மக்கள் அதிகப்படியாக இடம் பெயர்வார்கள் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் எல்லை தாண்டிய படைப்பிரிவினர் , "ஐரோப்பிய எல்லைகளில் தங்களின் தாக்குதல்களை நடத்தலாம்," என்று மேற்கத்திய நிபுணர்கள் பலர் கணித்துள்ளனர். பதற்றம் நீடித்து, உள்கட்டுமானம் சீர்குலையும் எனில் இரானியர்கள் கூட்டம்கூட்டமாக பெரிய நகரங்களில் இருந்தும், நாட்டில் இருந்தும் மொத்தமாக வெளியேறுவார்கள். இது இடைக்கால இடம் பெயர்தலை உள் நாட்டிலும் அண்டை நாட்டிலும் ஏற்படுத்த வழிவகை செய்யும். சிரியப் போருக்குப் பிறகு தங்களின் நாடு மீண்டும் ஒரு சிறை போன்று மாறுவதை விரும்பவில்லை என்று துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் தன்னுடைய அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மோதல் நீடிப்பது இஸ்ரேலுக்கும் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். தற்போது வான்வழி தாக்குதல் குறித்த ஒவ்வொரு எச்சரிக்கை ஒலியின் போதும் லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் பணியிடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைகின்றனர். இஸ்ரேல் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் அங்குள்ள எண்ணெய் சுத்தகரிப்பு மையங்களை அழிக்கும். மின்சாரம் தடைபடும். இதர சேவைகளில் தடை ஏற்படும். பொருளாதாரம் மற்றும் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படும். பொதுமக்களின் உயிரிழப்புகளை அதிகரிக்கும். மோதலின் போது பாரசீக வளைகுடாவில் ஒரு அமெரிக்க கப்பல் நீரில் மூழ்கினாலோ அல்லது ஒரு ஏவுகணை மோதி பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானாலோ பேரழிவு தரும் பின்விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும். இதனால் தான் அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகள், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் தலைவர்கள் முழு அளவிலான போரை தடுக்க முயன்று வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ceqgq403wylo

நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு!

1 month 2 weeks ago
Published By: VISHNU 17 JUN, 2025 | 01:48 AM நாட்டின் லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு 16ஆம் திகதி திங்கட்கிழமை வென்று சாதனை படைத்துள்ளது. இது தேசிய லொட்டரி வாரியத்தின் மெகா பவரின் 2210வது சீட்டிழுப்பில் ரூ.474,599,422 சூப்பர் பரிசு தொகையாகும். வெற்றி பெற்ற லொட்டரி சீட்டை கோகரெல்லாவைச் சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்றுள்ளார். முன்னதாக, தேசிய லொட்டரி வாரியத்தின் மெகா பவர் லொட்டரி, லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய பரிசான ரூ.230 மில்லியன் சூப்பர் பரிசை தற்போது வென்று சாதனை படைத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217669

"கர்நாடகாவில் தக் லைஃப் தற்போது வெளியாகாது" - கன்னட மொழி குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்த கமல் ஹாசன்

1 month 2 weeks ago
கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க சொல்வதா? கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் 17 Jun 2025, 12:55 PM தக் லைஃப் திரைப்பட விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன், மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்ட கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத கர்நாடகா அரசையும் உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தக் லைஃப் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், தமிழ் மொழியில் இருந்து கன்னட மொழி பிறந்தது என பேசினார் கமல்ஹாசன். இது கன்னட மொழியை சிறுமைப்படுத்துகிறது என கூறி கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்தன. கர்நாடகா பிலிம் சேம்பரும் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடமாட்டோம் என அறிவித்தது. இதனையடுத்து கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட உரிய பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என காட்டமாக வலியுறுத்தி இருந்தார். இதனிடையே கர்நாடகாவில் தக் லைஃப் விவகாரத்தில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மகேஸ் ரெட்டி என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கர்நாடகா மாநில அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயன், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. உடனே பதில் மனு தாக்கல் செய்யனும் இன்றைய விசாரணையின் போது, ” கர்நாடகா மாநில அரசு எப்போது பதில் மனுத் தாக்கல் செய்யப் போகிறது? குண்டர்களையும் சட்டத்தை கையில் எடுக்கும் கும்பல்களையும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க முடியாது. சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டும். கர்நாடகா அரசு உடனடியாக பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த பதில் மனுவை நாளையே கர்நாடகா அரசு தாக்கல் செய்தாக வேண்டும்” என்றனர் நீதிபதிகள். இதற்கு கர்நாடகா அரசு தரப்பில், தக் லைஃ படத்தின் தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கனும் இதை நிராகரித்த நீதிபதிகள், தக் லைஃப் படத் தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தை அணுகினால் உங்களுக்கு என்ன? உங்களின் இந்த போக்கை அனுமதிக்க முடியாது. சட்டத்தின் படி எந்த ஒரு நபரும் தமது திரைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்க வேண்டும். திரையரங்குகளை எரிப்போம் என்றெல்லாம் அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது. பொதுமக்கள் திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை; ஆனால் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டனர். அப்போதும் குறுக்கிட்ட கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த பிரச்சனை முடியும் வரை திரைப்படத்தை வெளியிடப் போவது இல்லை என தயாரிப்பாளர் அறிக்கையில் கூறியுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், அதனால் என்ன இருக்கிறது? ஒருவருக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது என்பதாலேயே ஒரு படத்தை தடை செய்துவிட முடியாது. தணிக்கை குழுவின் சான்றிதழ் பெற்ற எந்த ஒரு திரைப்படத்தையும் வெளியிட அனுமதிக்கத்தான் வேண்டும். நமது அமைப்பில் சில தவறுகள் இருக்கின்றன. ஒருவர் அறிக்கை வெளியிட்டாலே அதனை உண்மை என மக்கள் நம்புகின்றனர். கமல்ஹாசன் சொன்னதில் என்ன தவறு? என்ன முட்டாள்தனமாக சொல்லிவிட்டார்? என விவாதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல மேலும் நீதிபதி உஜ்ஜல் புயன் கூறுகையில், கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவது எல்லாம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல எனவும் கடும் கண்டனம் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம் பின்னர், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தக் லைஃப் தொடர்பான ரிட் மனுவை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றுகிறோம். கர்நாடகா அரசு பதில் மனுவை நாளை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் விசாரணை வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். https://minnambalam.com/thug-life-sc-slams-karnataka-hc-over-suggestion-asking-kamal-haasan-to-apologize/
Checked
Sat, 08/02/2025 - 14:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed