புதிய பதிவுகள்2

யாழில் ஆபத்தான நிலையில் உள்ள வீதி மின் விளக்கு கம்பம் – உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

3 months 1 week ago
Published By: DIGITAL DESK 2 03 JUL, 2025 | 10:43 AM யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில், உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடிய வகையில் அமைந்துள்ள வீதி மின் விளக்கு கம்பம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க மின்சார சபையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொக்குவில் மஞ்சவனபதி முருகன் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள வீதி மின் விளக்கு கம்பத்தின் மிக அருகே உயர் மின் அழுத்த மின் வடம் செல்கின்றது. இந்த மின் வடம், பலமான காற்று காரணமாக தொய்வு நிலையில் காணப்படுவதால், அது குறித்த மின் விளக்கு கம்பத்திற்கு மிக நெருக்கமாக செல்கிறது. இந்த நிலைமை உயிருக்கு ஆபத்தானதாக உள்ளதுடன், ஏதேனும் நேரில் தொடுதலாகும் சூழ்நிலை உருவானால், மின்சாரம் தாக்கும் அபாயம் அதிகரிக்கலாம் என அப்பகுதியிலுள்ள கடை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட மின் விளக்கு கம்பத்தில் பழுதடைந்த மின் விளக்கை திருத்த முற்பட்ட நல்லூர் பிரதேச சபையின் ஊழியர், உயர் மின் அழுத்த மின் வடத்தில் இருந்து ஏற்பட்ட மின்சாரம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். பாதுகாப்பு உடைகள் அணிந்து பணியாற்றியதாலேயே, அவர் உயிரிழப்பதிலிருந்து தப்பியுள்ளார். தற்பொழுது அவர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும், சில மாதங்களுக்கு முன்னர் தட்டாதெரு சந்திக்கு அருகில் உள்ள வீதி மின் விளக்கு கம்பத்தில் படர்ந்திருந்த தாவர கொடியை மாடொன்று உணவாக எடுத்துக் கொள்ள முயன்ற போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது. எனவே, இவ்வாறு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மின் விளக்கு கம்பம் தொடர்பில் மின்சார சபையினர் உடனடியாக கவனம் செலுத்தி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். https://www.virakesari.lk/article/219067

கூகுள் இணையத்தையே அழிக்கப் போகிறதா? அதன் புதிய AI என்ன செய்யும்?

3 months 1 week ago
இந்தியாவில் அறிமுகமாகும் கூகுள் AI மோட் - இணையதளங்களை நடத்துபவர்கள் அஞ்சுவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேடுபொறியில் பயனர்களின் தேடலை எளிமையாக்க கூகுள் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இது தங்களை பாதிக்கும் என வெளியீட்டாளர்கள் அஞ்சுகின்றனர். 3 மணி நேரங்களுக்கு முன்னர் இணைய உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறி, கூகுள் தனது புதிய அம்சத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இணைய தேடுபொறியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை, AI ஓவர்வியூ என்ற வசதியின் மூலமாக கூகுள் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து தற்போது AI மோட் (AI Mode) என்ற புதிய வசதியை கூகுள் கொண்டு வந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் பயனர்களுக்கு ஒரு விருப்ப அம்சமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி, தற்போது இந்தியாவில் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது. இந்தப் புதிய செயற்கை நுண்ணறிவு வசதி, மக்கள் இணையத்தைப் பயன்படுத்தும் விதத்தையே மாற்றியமைக்கப் போவதாக கூகுள் கூறுகிறது. இந்தப் புதிய வசதி, கூகுள் தேடுபொறியின் செயல்பாட்டில் கொண்டு வந்துள்ள மாற்றம் குறித்து அனைவரும் மகிழ்ச்சி அடையவில்லை. கூகுள் கிட்டத்தட்ட இணைய உலகையே அழித்துவிடும் என்று பலரும் அஞ்சும் அளவுக்கு இந்தப் புதிய வசதியில் என்ன இருக்கிறது? AI மோட் என்றால் என்ன? அது பயனர்களுக்கு எவ்வாறு உதவப் போகிறது? இங்கு விரிவாகக் காண்போம். கூகுள் – இணையதளங்கள் இடையிலான உறவு கடந்த 30 ஆண்டுகளாக, கூகுள் நிறுவனமும் அதில் செயல்படும் இணையதளங்களும் ஓர் எளிமையான, பேசப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. அதாவது, இணையதளங்கள் உள்ளடக்கங்களை வழங்குகின்றன. அதற்குப் பதிலாக, கூகுள் அவர்களுக்குப் பார்வையாளர்களை அனுப்புகிறது. அதாவது, பயனர்கள் தாங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் ஏதாவது ஒரு தகவலைத் தெரிந்துகொள்ளத் தேடுகிறார்கள். அப்படித் தேடும்போது, அது தொடர்பான இணையதளங்களின் இணைப்புகளை கூகுள் தனது தேடுபொறியில் காட்சிப்படுத்துகின்றன. பயனர்கள் அந்த இணைப்புகளை கிளிக் செய்து, தங்களுக்கு தேவையான, ஒரு குறிப்பிட்ட இணையதளத்திற்குச் செல்கிறார்கள். அதாவது, இணைப்புகளை கிளிக் செய்து, இணையதளத்திற்குள் சென்று, கட்டுரையைப் படிப்பது, காணொளிகளைப் பார்ப்பது ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள். இதைத்தான் இணைய போக்குவரத்து எனக் குறிப்பிடுகின்றனர். பல இணையதளங்கள் உயிர்ப்புடன் இருப்பதற்கு, விளம்பரங்கள், சந்தாக்கள், தயாரிப்பு விற்பனை எனப் பலவற்றைச் செய்கிறார்கள். அதோடு, கூகுள் தேடலில் கிடைக்கும் கிளிக்குகள் இல்லையெனில், பெரும்பாலான இணையதளங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கே போராட வேண்டியிருக்கும். ஆனால், இந்த AI மோட், இந்த மாதிரியான செயல்பாடுகளை மாற்றியமைத்து, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அதுவே பதில்களை வழங்கினால், இணையதளங்களை நோக்கிப் படையெடுக்கும் மக்களின் அளவு வெகுவாகக் குறைந்துவிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர். ஹவுஸ்ஃப்ரெஷ் இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர் கிசெல் நவரோ, கூகுள் தனது அடிப்படைவிதிகளை மாற்றுவதாகவும் அதனாலேயே பல இணைய வெளியீட்டாளர்கள் கவலையில் உள்ளதாகவும் அவர் கூறுகிறார். கூகுள் AI மோட் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கூகுள் AI மோட் பயனர்கள் தேடும் கேள்விக்கான பதிலைத் தானே தொகுத்து ஒரு கட்டுரையாக வழங்கிவிடுகிறது கூகுள் தனது தேடுபொறியில் அறிமுகப்படுத்தும் AI மோட் என்பது இதுவரை பயன்படுத்தி வந்த ஓவர்வியூ வசதியின் ஒரு நீட்சிதான். ஆனால், அதைவிட இது மேம்பட்டது. இது, பயனர்களின் கேள்விகளுக்கு ஏற்ற இணைப்புகளை வழங்குவதற்குப் பதிலாக, அவற்றில் இருந்து தகவல்களைத் தொகுத்து, அந்தக் கேள்விக்கான பதிலைத் தானே ஒரு கட்டுரையாக வழங்கிவிடுகிறது. ஓர் எடுத்துக்காட்டுடன் இதைப் புரிந்துகொள்வோம். நீங்கள் கூகுள் தேடுபொறியில், "மஞ்சளின் நன்மைகள் என்ன?" என்று ஒரு சந்தேகத்திற்கு விடை தேடுவதாகக் கற்பனை செய்துகொள்வோம். கடந்த காலத்தில், கூகுள் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் பல்வேறு இணையதளங்கள் வெளியிட்ட கட்டுரைகளுக்கான இணைப்புகளைப் பட்டியலிடும். அந்தக் கட்டுரைகளை கிளிக் செய்து, நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம். இப்போது, சமீபத்திய சில காலமாக இருக்கும் AI ஓவர்வியூ வசதி ஒரு படி மேலே சென்று, உங்கள் கேள்விக்கான பதிலை ஒரு குறுங்கட்டுரையாக்கி தொடக்கத்தில் அளிக்கும். அதனுடன், அந்தத் தகவல்கள் எடுக்கப்பட்ட இணையதளங்களின் முகவரிகளை இணைத்துவிடும். இதன்மூலம், நீங்கள் உங்கள் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதோடு, தேவைப்பட்டால் அந்த இணைய முகவரிகளை கிளிக் செய்து விரிவாகவும் படித்துக் கொள்ளலாம். ஆனால், இப்போது அறிமுகமாகியுள்ள AI மோட் வசதியைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவே உங்கள் கேள்விக்கான முழு பதிலையும் வடிவமைத்து வழங்கிவிடுகிறது. அதாவது, சாட்ஜிபிடி தளத்தில் நீங்கள் கேள்வி கேட்டால், அது எப்படி முழுமையாகப் பதில் வழங்குகிறதோ, அந்த மாதிரியில் வழங்குகிறது. கூகுள் இந்த அம்சத்தை மே 20, 2025 அன்று அதன் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் அறிவித்தது. இந்தப் புதிய வசதி குறித்துப் பேசிய கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை இணையத்தின் தேடல் செயல்முறை செயல்படக்கூடிய விதத்தையே இது முற்றிலுமாக மறுபரிசீலனை செய்வதாகக் குறிப்பிட்டார். AI மோட் எவ்வாறு செயல்படுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த ஆண்டு முதல் கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்தி வரும் அனைவருமே AI ஓவர்வியூ என்ற வசதியைக் கண்டிருப்பீர்கள். அதாவது, சில தேடல் முடிவுகள் கூகுளில் காட்சிப்படுத்தப்படும்போது, அதன் தொடக்கத்தில் குறுங்கட்டுரையாக, மேலோட்டமாக, தேடப்படும் கேள்விக்கான பதில் வழங்கப்படும். ஆனால், அவை வெறும் குறுகிய பதில்களே. அதோடு, விரிவாகத் தெரிந்துகொள்ளத் தேவையான இணைப்புகளும் அதற்குக் கீழே பட்டியலிடப்படும். ஆனால், AI மோட் அப்படியல்ல. அது நீங்கள் கேட்கும் கேள்விக்கான முழு பதிலையும் ஒரு கட்டுரையாக, சாட்ஜிபிடியை போலத் தொகுத்து வழங்கிவிடுகிறது. செயற்கை நுண்ணறிவு நீங்கள் கேட்கும் கேள்வியைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கிறது. அது தொடர்பான சிறந்த தகவல்களைத் தேடுகிறது. பின்னர் அனைத்து தகவல்களையும் தொகுத்து, படிக்க எளிதான பதிவாக மாற்றிக் காட்டுகிறது. இதனால் பயனர்கள் தேடும் கேள்விக்கான பதிலைப் படிக்க வேறு எந்த இணையதளத்திற்கு உள்ளேயும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த வசதி, இணையம் செயல்படுவதற்கான அடிப்படைக் கட்டமைப்பையே கிட்டத்தட்ட அசைத்துப் பார்ப்பதாக வெளியீட்டாளர்கள் கவலை கொள்கின்றனர். "கூகுளின் இந்த AI மோட் வசதி, இணையதளங்களுக்கு செல்லும் கிளிக்குகளின் (பயனர்களின்) எண்ணிக்கையைப் பாதியாக்கிவிடும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இணையதள வெளியீட்டாளர்களை இது பெரியளவில் பாதிக்கக்கூடும்," என்கிறார். ஆனால், இந்த பயம் தேவையற்றது என்று கூகுள் நிறுவனம் கூறுகிறது. அதோடு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் புதிய வசதியை ஒரு விருப்ப அம்சமாக அமெரிக்காவில் கூகுள் அறிமுகப்படுத்தியது. அப்போது பேசிய கூகுள் தேடல் பிரிவின் தலைவர் லிஸ் ரீட், "இது வெறும் ஆரம்பம்தான்" என்றார். மேலும், "இதுதான் கூகுள் தேடலின் எதிர்காலம்" என்றார். எனவே இப்போதைக்கு இந்த வசதியைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதை பயனர்கள் தேர்வு செய்யலாம் என்றாலும், எதிர்காலத்தில் இதைத் தனது தேடுபொறியின் முக்கிய அம்சமாக கூகுள் மாற்றக்கூடும் என்று வெளியீட்டாளர்கள் அஞ்சுகின்றனர். AI மோட் வசதியை கண்டு இணைய வெளியீட்டாளர்கள் அஞ்சுவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 30 ஆண்டுகளாக, கூகுள் மற்றும் இணையதளங்கள் இடையே இருக்கும் அடிப்படை உறவையே இந்தப் புதிய வசதி சிதைக்கும் என்று வெளியீட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வெளியீட்டாளர்கள், இணையதள உரிமையாளர்கள், டிஜிட்டல் வணிகங்கள் ஆகியவை கூகுள் தேடுபொறியின் இணைய போக்குவரத்தைப் பெரியளவில் சார்ந்துள்ளன. அவர்கள் இலவசமாக உள்ளடக்கங்களை உருவாக்கி வெளியிடுகிறார்கள். கூகுள் அதை பயனர்களுக்கு வழங்குகிறது. மக்கள் அதை கிளிக் செய்கிறார்கள். இந்தச் செயல்முறையின் மூலமாக இணைய கட்டமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த அடிப்படைக் கட்டமைப்பை AI மோட் அச்சுறுத்துகிறது. பயனர்கள் கூகுளின் செயற்கை நுண்ணறிவில் இருந்து நேரடியாகப் பதிலைப் பெற்றுக்கொண்டால், அந்தப் பதில்களுக்கு அது பயன்படுத்திய, இணையத்தில் பதிவேற்றப்படும் உண்மையான உள்ளடங்களை உருவாக்கிய இணையதளங்களுக்கு அவர்கள் செல்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. அதன் விளைவாக அந்த வெளியீட்டாளர்களுக்கு பார்வையாளர்கள் வரத்து குறையும், விளம்பர வருவாய் குறையும். இது பல சுயாதீன இணையதளங்களின் சரிவுக்கு வழிவகுக்கும் என்று இணைய வெளியீட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கூகுள் தங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி, இழப்பின்றி லாபம் ஈட்டும் என்று வெளியீட்டாளர்கள் கூறுகின்றனர். "இது திருட்டுக்கான ஒரு வரையறை. அவர்கள் எங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள். அதற்கு ஈடாக எங்களுக்கு எதுவுமே கிடைக்காது," என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார் செய்தி/ஊடக கூட்டமைப்பின் தலைவர் டேனியல் காஃபி. ஆனால், இந்த அச்சங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று கூகுள் வலியுறுத்துகிறது. கூகுளின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துப் பேசியபோது, "AI மோட் மக்கள் கேட்கக்கூடிய கேள்விகளின் வகைகளை விரிவுபடுத்துகிறது. கூகுள் செயற்கை நுண்ணறிவு தினசரி கோடிக்கணக்கான பயனர்களை இணையதளங்களுக்கு அனுப்புகிறது" என்று தெரிவித்தார். ஆனால், இந்தக் கூற்றுகளை ஆதரிக்கக்கூடிய தரவுகளை அந்த நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை. - பிபிசியின் மூத்த தொழில்நுட்ப செய்தியாளர் தாமஸ் ஜெர்மைனின் கட்டுரையில் இருந்து இந்தத் தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyxr9pv8v7o

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

3 months 1 week ago
காசா மற்றுமொரு மருத்துவரை இழந்தது : இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் மருத்துவர் மர்வான் சுல்தானும் குடும்பதினரும் பலி Published By: RAJEEBAN 03 JUL, 2025 | 08:48 AM காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் காசா இந்தோனேசிய மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் மர்வான் சுல்தானும் அவரது குடும்பத்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரில் உள்ள தொடர்மாடிதாக்கபபட்டவேளை மருத்துவரும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது உறவினரான அஹமட் சுல்தான் என்பவர் உடல்களை அடையாளம் காண்பித்துள்ளதுடன் அவர்கள் கொல்லப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். மருத்துவர் மர்வான் அல் சுல்தானின் உடல் அல்ஷிபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மருத்துவரின் முகம் அடையாளம் காணும் நிலையில் இருக்கவில்லை என மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் அபுசல்மியா தெரிவித்துள்ளார். காசா நகரில் ஹமாசின் முக்கிய இலக்கொன்றை தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் பொதுமக்களிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/219058

நான் மறுபிறவியெடுப்பேன் - தலாய்லாமா

3 months 1 week ago
02 JUL, 2025 | 02:59 PM திபெத்தின் ஆன்மிக தலைவர் தலாய்லாமா தான் மரணத்திற்கு பின்னர் மறுபிறவியெடுப்பேன் என தெரிவித்துள்ளார். தலாய்லாமா தனது 90வயதை குறிக்குகமாக இடம்பெற்ற நிகழ்வின்போது உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். தனது வாரிசை கண்டுபிடித்து கடந்தகாலபௌத்த மரபுகளின்படி அங்கீகரிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தலாய்லாமா என்ற கட்டமைப்பு தொடரும் என அமைதிக்கான நோபல்பரிசை வென்ற திபெத்தின் ஆன்மீக தலைவர் தெரிவித்துள்ளார். சீனாவிற்கான செய்தியில் தலாய்லாமா தனக்கு பின்னர் ஒருவரை கண்டுபிடித்து அவரை அங்கீகரிக்கும் பொறுப்பு 2015 இல் தான் உருவாக்கிய அமைப்பிற்கே உரியது என குறிப்பிட்டுள்ளார். வேறு எவருக்கும் இந்த விடயத்தில் தலையிட உரிமையில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கடந்தகால பாரம்பரியங்களிற்கு ஏற்ப எதிர்கால தலாய்லாமாவை தேடவேண்டும் என தெரிவித்துள்ளார். இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீனா தலாய்லாமாவிற்கு பின்னர் யார் என்பதை சீன அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். அடுத்த தலாய் லாமா திபெத்திலிருந்து வர வேண்டிய அவசியமில்லை என்று பின்னர் சீன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தலாய்லாமாவின் இந்த முடிவு சீனாவை சீற்றத்திற்குள்ளாக்கும் என கருத்துக்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் அடுத்த மதத் தலைவரை அங்கீகரிக்கும் அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளது என்று சீனா பலமுறை தெரிவித்துள்ளது. மறுபிறவி எடுத்த நபர் சீனாவின் திபெத்திய பகுதிகளில் காணப்பட வேண்டும் என்றும் யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் கம்யூனிஸ்ட் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்துகிறது. திபெத்திய மதத் தலைமை மூத்த லாமாக்களுடன் கலந்தாலோசித்தல் மற்றும் பாரம்பரிய ஜோசியம் மூலம் தனது மறுபிறவியை அடையாளம் காணும் பண்டைய செயல்முறையை மேற்கொள்ளும் என்பதை பகிரங்கமாக மீண்டும் உறுதிப்படுத்துவதன் மூலம் தலாய் லாமா ஆன்மீக நியாயத்தன்மையையும் திபெத்திய சுயாட்சியையும் வலுப்படுத்த முயன்றுள்ளார். அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு தீர்க்கமான பங்கை வகிக்க விரும்புவதாக பெய்ஜிங் நீண்ட காலமாக சமிக்ஞை செய்து வருகிறது . இதன்காரணமாக சீனாவுடன் இணங்கிபோகக்கூடிய ஆன்மீக தலைவர் குறித்து திபெத்தில் அச்சம் காணப்படுகின்றது. https://www.virakesari.lk/article/219019

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

3 months 1 week ago
அசலன்க அபார சதம், பந்துவீச்சில் ஹசரங்க, கமிந்து அற்புதம்; பங்களாதேஷை இலகுவாக வீழ்த்தியது இலங்கை Published By: VISHNU 02 JUL, 2025 | 10:37 PM (ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (02) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 77 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்ட வித்தியாசத்தில் இலங்கை முன்னிலை வகிக்கிறது. அணித் தலைவர் சரித் அசலன்க குவித்த அபார சதம், வனிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இலங்கையை வெற்றி அடையச் செய்தது. இந்த மூவரும் காலி றிச்மண்ட் கல்லூரி கிரிக்கெட் அணிக்காக 2016இல் ஒன்றாக விளையாடியதுடன் அதே வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியிலும் இடம்பெற்றமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும். இலங்கை அணியின் களத்தடுப்பும் அபரிமிதமாக இருந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். மிலான் ரத்நாயக்க இப் போட்டியில் அறிமுகமானதுடன் அவருக்கான இலங்கை தொப்பியை தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரியா அணிவித்தார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது. எவ்வாறாயினும் இலங்கையின் ஆரம்பம் எதிர்பார்த்தவாறு சிறப்பாக அமையவில்லை. பெத்தும் நிஸ்ஸன்க (0), நிஷான் மதுஷ்க (5), கமிந்து மெண்டிஸ் (0) ஆகிய மூவரும் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஆட்டம் இழந்தனர். எனினும் அணித் தலைவர் சரித் அசலன்க மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்ததுடன் சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி இலங்கை அணியை பலமான நிலையில் இட்டார். குசல் மெண்டிஸுடன் 4ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களையும் ஜனித் லியனகேவுடன் 5ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களையும் மிலான் ரத்நாயக்கவுடன் 6அவது விக்கெட்டில் 39 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்கவுடன் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களையும் சரித் அசலன்க பகிர்ந்தமை விசேட அம்சமாகும். குசல் மெண்டிஸ் 45 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 29 ஓட்டங்களையும் மிலான் ரத்நாயக்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் தலா 22 ஓட்டங்களையும் பெற்றனர். இதனிடையே மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சரித் அசலன்க 123 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். 74ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சரித் அசலன்க தனது 5ஆவது சதத்தைக் குவித்தார். இதில் நான்கு சதங்கள் ஆர். பிரேமதாச அரங்கில் பெற்றவையாகும். இதன் மூலம் இந்த மைதானத்தில் இலங்கை சார்பாக 4 சதங்கள் குவித்த சனத் ஜயசூரியவின் சாதனையை சரித் அசலன்க சமப்படுத்தினார். பந்துவீச்சில் தஸ்கின் அஹமத் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தன்ஸிம் ஹசன் சக்கிப் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 35.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது. இலங்கையை விட பங்களாதேஷின் ஆரம்பம் மிகச் சிறப்பாக இருந்தது. ஆரம்ப வீரர்கள் வேகமாக ஓட்டங்ளைப் பெற்றனர். எனினும் 5அவது பர்விஸ் ஹொசெய்ன் ஏமொன் (13) ஆட்டம் இழந்தார். தொடர்ந்து தன்ஸித் ஹசன், முன்னாள் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் 71 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவை மிலான் ரத்நாயக்கவும் குசல் மெண்டிஸும் இணைந்து ரன் அவுட் ஆக்கியவுடன் போட்டியின் சாதகத் தன்மை முழுமையாக இலங்கை பக்கம் திரும்பியது. அந்த சந்தர்ப்பத்தில் ஒரு விக்கெட்டை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த பங்களாதேஷ், அதன் பின்னர் 7 விக்கெட்களை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது. ஆனால் மத்திய வரிசையில் ஜேக்கர் அலி திறமையாகத் துடுப்பெடுத்தாடி பங்களாதேஷை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டார். முன்வரசையில் தன்சித் ஹசன் 62 ஓட்டங்களையும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 23 ஓட்டங்களையும் பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் 13 ஓட்டங்களையும் பெற்றனர். ஜேக்கர் அலி 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 51 ஓட்டங்களைப் பெற்றதுடன் கடைசி இரண்டு விக்கெட்களில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்தார். கடைசி விக்கெட்டில் மாத்திரம் ஓட்டம் பெறாமலிருந்த முஸ்தாபிஸுர் ரஹ்மானுடன் 42 ஓட்டங்களை ஜேக்கர் அலி பகிர்ந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும் இதேவேளை, இந்தப் போட்டியில் 3 தடவைகள் குறிப்பிட்ட ஒரு நிமிடத்திற்குள் அடுத்த ஓவரை வீச இலங்கை தவறியதால் பங்களாதேஷுக்கு இனாமாக 5 அபாரத ஓட்டங்கள் வழங்கப்பட்டது. இப் போட்டியில் லிட்டன் தாஸின் கைப்பற்றியதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வனிந்து ஹசரங்க தனது 100ஆவது விக்கெட்டைப் பூர்த்தி செய்தார். இதுவரை 64 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள வனிந்து ஹசரங்க 103 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 2 ஓட்டமற்ற ஓவர்கள அடங்கலாக 7.5 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கமிந்து மெண்டிஸ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சரித் அசலன்க https://www.virakesari.lk/article/219053

கீழடி: 2500 ஆண்டுக்கு முந்தைய மண்டை ஓட்டை மனித முகமாக ஆய்வாளர்கள் வடிவமைத்தது எப்படி?

3 months 1 week ago
பட மூலாதாரம்,FACELAB/LIVERPOOL JOHN MOORES UNIVERSITY படக்குறிப்பு, கீழடி பகுதியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் முகங்கள் 3டி டிஜிட்டல் முறையில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கீழடி அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த இரண்டு ஆண்களின் மண்டை ஓடுகளை வைத்து, அவர்களின் முக அமைப்புகளை அறிவியல் ரீதியாக ஆய்வாளர்கள் மறு உருவாக்கம் செய்துள்ளனர். கணினி உதவியுடன் கூடிய 3 டி முறையில், பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைகழகம் மறு உருவாக்கம் பணிகளை செய்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைகழகம் அளித்த தரவுகளை வைத்து இந்த முகங்கள் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவர்களின் மண்டை ஓடுகள் பெரும்பாலும் சேதம் இல்லாமல் இருந்துள்ளன. தென்னிந்தியாவில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் நடமாடிய மனிதர்களின் முகங்கள் மறு உருவாக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என்று மதுரை காமராஜர் பல்கலைகழக மரபியல் துறைத் தலைவர் ஜி குமரேசன் கூறுகிறார். முக மறு உருவாக்கம் என்பது மண்டை ஓடுகளை வைத்து, உடற்கூறியல் விதிகளுக்கு உட்பட்டு அறிவியல் ரீதியாகவும், தேவைப்படும் இடங்ளில் கலை நிபுணத்துவம் சார்ந்த விளக்கங்கள் (artistic interpretation) கொண்டும் செய்யப்படுவதாகும். இது போன்ற முக மறு உருவாக்கங்கள் 67% வரை அறிவியல் ரீதியாக செய்யப்படுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. பட மூலாதாரம்,FACELAB/LIVERPOOL JOHN MOORES UNIVERSITY "கீழடியிலிருந்து கிடைக்கப்பெற்ற சுமார் 50 மண்டை ஓடுகளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு சேர இருந்த இரண்டு சிறந்த மண்டை ஓடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவர்களுக்கு சுமார் 50 வயதிருந்திருக்கலாம். இவர்களுக்கு தென்னிந்திய முக அம்சங்கள் மட்டுமல்லாமல், மேற்கு யுரேசியா மற்றும் ஆஸ்ட்ரோ ஆசியாடிக் அம்சங்களும் சிறிய அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மண்டை ஓடுகளின் சிடி ஸ்கேன் படங்கள், 3டி ஸ்கேன் படங்கள் எடுத்து லிவர்பூல் பல்கலைக்கு அனுப்பப்பட்டன" என்று மதுரை காமராஜர் பல்கலைகழக மரபணுவியல் (Genetics) துறையின் தலைவர் பேராசிரியர் ஜி.குமரேசன் கூறுகிறார். மண்டை ஓடுகளின் சிடி ஸ்கேன் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எப்படி எடுக்கப்படுமோ, அதே முறையில் எடுக்கப்படும். 3டி ஸ்கேன் செய்ய தனியாக கருவி உள்ளது. இந்த தரவுகளைப் பெற்ற லிவர்பூல் பல்கலைகழகத்தின் ஃபேஸ் லேப் (Face lab- முக மறு உருவாக்கம் செய்யும் ஆய்வகம்) அதிலுள்ள இடைவெளிகளை அறிவியல்பூர்வமாக நிரப்பி முகங்களை மறு உருவாக்கம் செய்துள்ளது. பட மூலாதாரம்,FACELAB/LIVERPOOL JOHN MOORES UNIVERSITY இவர்களின் மண்டை ஓடுகள் சேதமடையாமல் அப்படியே இருந்ததாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைகழகத்தின் ஃபேஸ் லேப் மற்றும் தடயவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் கரோலின் வில்கின்சன். "சில எலும்பு முறிவுகள் இருந்தன, பற்கள் இல்லை. இல்லாத பாகங்கள் பொதுவாக, ஏற்கெனவே உள்ள பாகங்களை பிரதிபலிக்கும் வகையில் மறு உருவாக்கம் செய்யப்படும் (உதாரணமாக வாயின் மேல் பகுதி எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து கீழ் பகுதி மறு உருவாக்கம் செய்யப்படும்). எனவே தசைகளின் ஆழம் மற்றும் பிற அமைப்புகளை (மண்டை ஓட்டில் உள்ள) எலும்பியல் தரவுகள் கொண்டு மதிப்பீடு செய்ய முடியும்" என்று அவர் தெரிவித்தார். "அந்த முகங்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களுடையது என்றாலும், நமது தாத்தா ஒருவரின் முகத்தை நினைவுப்படுத்துவதாகவே உள்ளது" என்றார் பேராசிரியர் குமரேசன். பட மூலாதாரம்,JOURNAL OF ANATOMY/CAROLINE WILKINSON படக்குறிப்பு, மண்டை ஓடுகளின் மீது தசைகளை பொருத்திய பிறகு காணப்படும் முக வடிவம் மண்டை ஓட்டிலிருந்து முகத்தை மறு உருவாக்கம் செய்வது ஒரு அறிவியல் நடைமுறையாகும். மண்டை ஓடுகளின் வடிவம் கிடைத்த பிறகு, அதன் மீது தசைகள் பொருத்தி பார்க்கப்படும். "Musculature எனப்படுவது தசைகளின் ஆழம் என்னவாக இருந்திருக்கும் என கணக்கிட்டு பொருத்துவதாகும். அது ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் மாறுபடும். மண்டை ஓடு தடிமனும் மாறுபடும். இவற்றுடன், ஒரு மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட நவீன கால மனிதர்களின் தரவுகளையும் கொண்டு, அவர்களின் முகங்கள் மறு உருவாக்கம் செய்யப்படும்" என்கிறார் பேராசிரியர் குமரேசன். தசைகள் பொருத்துவது குறித்து பிபிசி தமிழுக்கு விளக்கம் அளித்திருந்த பேராசிரியர் வில்கின்சன், "ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டிருக்கக் கூடிய தசைகளின் தரவுகளை பயன்படுத்திக் கொள்வோம். மண்டை ஓட்டின் அளவையும் வடிவத்தையும் பொறுத்து, ஒவ்வொரு தசையும் மாற்றி அமைக்கப்படும்" என்றார். இதனை மேலும் விளக்கும் வகையில், பேராசிரியர் வில்கின்சன் Journal of Anatomy என்ற இதழில் 2010-ம் ஆண்டு எழுதிய கட்டுரையில், " தசைகளை பொருத்துவதில் எந்தவிதமான கலை நிபுணத்துவமும் இருக்கக் கூடாது. அவை உடற்கூறியல் விதிகளை பின்பற்றி மறு உருவாக்கம் செய்யப்பட வேண்டும். ஏனென்றால் முகங்களில் சில வேறுபாடுகளை தவிர, (அனைவருக்கும்) ஒரே எண்ணிக்கையிலான தசைகள், (முகத்தின்) ஒரே இடத்திலிருந்து தொடங்குவதும், ஒட்டியிருப்பதும் வழக்கம். இவற்றின் வடிவம், அளவு, இடம் ஆகியவற்றில் மாறுபாடுகள் இருக்கலாம்" என்று எழுதியுள்ளார். மேலே உள்ள புகைப்படத்தில் (பேராசிரியர் கரோலின் வில்கின்சன், பிரிட்டனில் உள்ள டண்டீ பல்கலையில் உடற்கூறியல் மற்றும் மனித அடையாளத்துக்கான மையத்தில் பணியாற்றிய போது, ஜர்னல் ஆப் அனாடமி இதழில் "Facial Reconstruction-Anatomical Art or Artistic Anatomy?" என்ற கட்டுரையில் வெளிவந்த புகைப்படம்) , மூன்று வெவ்வேறு மண்டை ஓடுகளில் ஒரே விதமான தசைகளை பொருத்திய போது, முகங்களில் உள்ள வேறுபாடுகளை காணலாம். பட மூலாதாரம்,JOURNAL OF ANATOMY/CAROLINE WILKINSON படக்குறிப்பு, முகத்தின் வலதுபுறத்தில் தசைகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதன் மீது தோல் பொருத்தப்படும் போது முகம் எப்படி இருக்கும் என்பதை முகத்தின் இடதுபுறத்தில் காணலாம். தசைகள் பொருத்திய பிறகு, அடுத்து முக்கியமாக செய்ய வேண்டியது, தசைகளின் மீதான தோல் பொருத்துவதாகும். "தசைகளின் அமைப்பு, எலும்புகளின் வடிவம், தசைகளின் ஆழம் ஆகியவற்றைக் கொண்டு தோலின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. இளையவர்களை விட வயதானவர்களின் தோலை தீர்மானிப்பது கடினமாகும். ஏனென்றால் வயது முதிர்வு காரணமாக ஒருவருக்கு தோலில் ஏற்படும் மாற்றங்கள் வெவ்வேறு காலத்தில் ஏற்படும். ஒருவருக்கு முன்கூட்டியே ஏற்பட தொடங்கும், மற்றொருவருக்கு தாமதமாக தொடங்கும். எனவே ஒரே வயதிலான இரண்டு நபர்களுக்கு தோல் வேறு மாதிரி இருக்கக் கூடும். எனவே ஒருவரின் சருமம் இந்த தன்மையில்தான் இருந்தது என்று உறுதியாக கூறுவது இயலாது" என்று பேராசிரியர் வில்கின்சன் தெரிவிக்கிறார் . பட மூலாதாரம்,MARK A. ROUGHLEYA AND CAROLINE M. WILKINSONA படக்குறிப்பு, பிரிட்டனின் யோர்க்‌ஷைர் நகரின் ஃப்யூஸ்டன் தேவாலயத்தின் சுற்றுப்புறத்தில் கிடைக்கப்பெற்ற மண்டை ஓடுகளிலிருந்து மறு உருவாக்கம் செய்யப்பட்ட 19-ம் நூற்றாண்டு ஆண் ஒருவர். கணினி மறு உருவாக்கத்தில் தோலில் உள்ள சுருக்கங்கள், மேடு பள்ளங்கள் பொருத்தும் போது (வலது) முக வடிவம் எப்படி உள்ளது என்பதை காணலாம். முகங்களை மறு உருவாக்கம் செய்யும் போது, சில பாகங்கள் சவாலானவையாக இருக்கின்றன. "வாய் பகுதியை வடிவமைப்பதில் கலை நிபுணத்துவம் அதிகம் தேவைப்படும். உடற்கூரியல்படி, மேல் உள்ள பற்கள் கீழ் உள்ளவற்றை விட எடுப்பாக இருந்தால், மேல் உதடும் அவ்வாறே இருக்கும். இவை வாய் மூடியிருக்கும் நேரத்தில் பற்கள் எவ்வாறு உள்ளன (occlusion pattern) என்பதை பொருத்து மாறுபடுகின்றன. காதுகளின் வடிவத்தை தீர்மானிப்பதும் மிகவும் கடினம்" என்கிறார் பேராசிரியர் வில்கின்சன். 2006-ம் ஆண்டு பேராசிரியர் வில்கின்சன் பங்கேற்ற ஒரு ஆய்வு குறைந்தபட்சம் 67% முக அமைப்புகள் அறிவியல் ரீதியான நடைமுறைகளை பின்பற்றி மறு உருவாக்கம் செய்யப்படுகிறது என்று கூறியது. முக மறு உருவாக்க தொழில்நுட்பம் தடயவியல் துறை சார்ந்த விசாரணைகளின் போது ஒருவரின் அடையாளத்தை கண்டறிய பயன்படுத்தப்படலாம். அதே போன்று வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் கடந்த காலங்களில் வாழ்ந்தவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள, மக்களுக்கு தங்கள் கடந்த காலத்துடனான தொடர்பை மேம்படுத்த இந்த மறு உருவாக்கங்கள் பயன்படுகின்றன. 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர்தால் பெண்ணின் மண்டை ஓடு ஒன்று இராக்கிய குர்திஸ்தானில் உள்ள ஷனிதார் குகையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தனது 40களில் இருந்திருக்கலாம், பற்களில் நோய் இருந்திருக்கலாம் என்பதும் அவரது மண்டை ஓட்டை வைத்து தெரியவந்தது. நூற்றுக்கணக்கான துண்டுகள் சேகரிக்கப்பட்டு, இந்த மண்டை ஓடு ஒருங்கிணைக்கப்பட்டது. அதிலிருந்து அந்தப் பெண்ணின் முகம் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,BBC STUDIOS/JAMIE SIMONDS அதே போன்று, ஸ்காட்லாந்தில் உள்ள பெர்த் அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெண்கல காலத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணின் முகம் உட்பட சிலரது முகங்களை மறு உருவாக்கம் செய்துள்ளனர். மண்டை ஓடுகளிலிருந்து முகங்கள் எப்படி மறு உருவாக்கம் செய்யப்படுகின்றன என்பதை பார்வையாளர்களே செய்து பார்க்கும் வகையில் விளக்க வீடியோக்களும் அங்கு உள்ளன. பட மூலாதாரம்,PERTH MUSEUM கீழடி விவகாரம் - மத்திய அமைச்சரின் கருத்து சர்ச்சையாவது ஏன்? பிரச்னையின் முழு பின்னணி தமிழரின் தொன்மை கூறும் கீழடி ஆய்வறிக்கையை கேள்வி எழுப்பும் இந்திய தொல்லியல் துறை - என்ன நடக்கிறது? மூன்றாம் ராஜராஜனை சிறைப்படுத்தி சோழர் வீழ்ச்சிக்கு வித்திட்ட சிற்றரசர் - எப்படி சாதித்தார்? தமிழர் நாகரிகத்தை உலகிற்குச் சொல்லும் கீழடி அருங்காட்சியம் வழக்கமான முக மறு உருவாக்க முறைகளில் மண்டை ஓடுகளின் படங்கள் அல்லது வார்ப்பு (cast) பயன்படுத்தப்படும். மண்டை ஓடுகளின் படங்கள் மீது தசைகளை வரைவது 2D முறையாகும். வார்ப்புகளை பயன்படுத்தி அதன் மீது மெல்லிய தசைகளை களிமண் அல்லது மெழுகு கொண்டு உருவாக்குவது 3D முறையாகும். கணினி உதவியுடன் கூடிய 3D முக மறு உருவாக்க முறையில், மண்டை ஓடுகளின் சிடி ஸ்கேன் மற்றும் 3D ஸ்கேன் தரவுகள் கொண்டு அதன் டிஜிட்டல் வடிவம் உருவாக்கப்படும். அப்படி உருவாக்கப்படும் டிஜிட்டல் முகங்கள், வார்ப்புகளை கொண்டு உருவாக்கிய 3D முகங்களை போலவே காணப்படும். அதன் மீது பல்வேறு நவீன மென்பொருள்கள் கொண்டு தசைகள், தோல் ஆகியவற்றை பொருத்தலாம். பட மூலாதாரம்,FACE LAB, LIVERPOOL JOHN MOORES UNIVERSITY படக்குறிப்பு, 3D டிஜிட்டல் முறையில் மறு உருவாக்கம் செய்யப்படும் முகங்கள் "முக மறு உருவாக்க படத்துக்கு உண்மைக்கு நிகரான தன்மையை கொண்டு வர புகைப்படம் எடிட் செய்யும் மென்பொருளை பயன்படுத்துவோம். (கீழடி முகங்களை மறு உருவாக்கம் செய்யும் போது) இந்தியாவில் உள்ள ஆய்வாளர்கள் (உண்மைக்கு) மிக நெருக்கமான தோல், முடி மற்றும் கண்களின் நிறங்களை அளித்திருந்தனர்" என்று பேராசிரியர் வில்கின்சன் கூறுகிறார். பட மூலாதாரம்,FACE LAB, LIVERPOOL JOHN MOORES UNIVERSITY AND UNIVERSITY OF GLASGOW. படக்குறிப்பு, ராபர்ட் தி ப்ரூஸ் எனப்படும் ராபர்ட் இரண்டாம் அரசரின் 3D டிஜிட்டல் முக வடிவம். டிஜிட்டல் முக மறு உருவாக்கங்கள் இந்த துறையில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாகும் என்று பேராசிரியர் வில்கின்சன் கூறுகிறார். "பாரம்பரியமான களிமண் மாதிரிகளை விட இதன் அணுகுமுறை மேலும் துல்லியமாகவும் வேகமாகவும் இருக்கிறது. கணினி முறையில் மறு உருவாக்கம் செய்யும் போது, அந்த வடிவத்தை தொடர்ந்து சரி பார்க்கவும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் முடிகிறது. இதை தவிர CGI - கணினி கிராஃபிக்ஸ் மற்றும் AI - செயற்கை நுண்ணறிவு உண்மைக்கு மிக நெருக்கமான படங்களை உருவாக்குவதில் எங்கள் திறனை அபாரமாக அதிகரித்துள்ளது" என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y73dz50jdo

சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர

3 months 1 week ago
Published By: DIGITAL DESK 3 03 JUL, 2025 | 03:11 PM குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர இன்று வியாழக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னரும் ஷானி அபேசேகர இதே பதவியை வகித்து வந்த நிலையில், அரசியல் பழிவாங்களால் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மீண்டும் அவருக்கு குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்திற்கு முன்னர், ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் பணிப்பாராக பதவி வகித்தார், அங்கு அவர் மூலோபாய புலனாய்வு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219101

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

3 months 1 week ago
கில்லின் 2வது சதம், கைகொடுக்கும் ஜடேஜா: இந்திய அணி 400 ரன்களை கடக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 3 ஜூலை 2025, 02:18 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் கேப்டன் சுப்மன் கில்லின் தொடர் 2வது சதத்தால் பிரிமிங்ஹாமில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல்நாளில் இந்தியா வலுவான நிலையை எட்டியுள்ளது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்களுடன் இருக்கிறது. கேப்டன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளன். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவாக நங்கூரமிட்டுள்ளனர். வலுவான ஸ்கோர் இருவரையும் பிரிக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் 3வது செஷனில் பல்வேறு முயற்சிகள் செய்தும் ஏதும் பலிக்கவில்லை. 125 பந்துகளில் அரைசதத்தை எட்டிய கில், 199 பந்துகளில் சதத்தை எட்டினார். லீட்ஸ் டெஸ்டில் சதம் அடித்த கில், தொடர்ந்து அடிக்கும் 2வது சதமாகும். தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 87 ரன்கள் சேர்த்து முக்கிய பங்களிப்பு செய்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தார். ரிஷப் பண்ட் (25), நிதிஷ் குமார் ரெட்டி அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தபோது இந்திய அணி சற்று தடுமாறியது. ஆனால், கேப்டன் கில், ஜடேஜா ஜோடிதான் அணியை சரிவிலிருந்து மீட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஹோம் ஓர்க்கில் வெற்றி சச்சின்-ஆன்டர்சன் டெஸ்ட் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்ந்து நடந்து வருகிறது. லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. 2வது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இந்திய அணியில் சாய் சுதர்சனுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர், பும்ராவுக்குப் பதிலாக ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டிருந்தனர். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்த முறையும் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்து இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினர். கேஎல்.ராகுலை ஆட்டமிழக்கச் செய்ய இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் "ஹோம் ஓர்க்" செய்து வந்திருந்தனர். அவருக்குரிய வலையை சரியாக விரித்து அவரை தவறு செய்யத் தூண்டினர். ஆனால் ராகுல் அதற்குரிய வாய்ப்பை வழங்காமல் தவறு செய்யாமல் தவறான ஷாட்களை ஆடாமல் தவிர்த்தார். ஆனால், பவுன்ஸரில்தான் வலை விரிக்கப்பட்டுள்ளது என்பதை ராகுல் கணிக்கவில்லை. வோக்ஸ் வீசிய 9-வது ஓவரில் ஆப்திசையில் போடப்பட்ட பவுன்ஸரை ராகுல் விளையாட முற்பட்டபோது பேட்டில்பந்து பட்டு க்ளீன் போல்டாகியது. ராகுல் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கருண் நாயர் களமிறங்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வீரர் கே எல் ராகுல் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார். பிராட்மேன் வரிசையில் ஜெய்ஸ்வால் கடந்த டெஸ்டில் 4வது வீரராகக் களமிறங்கிய கருண் நாயர், இந்த முறை 3வது வீரராகக் களமிறக்கப்பட்டார். ஜெய்ஸ்வால் ஒருபுறம் வேகமாக ரன்களைச் சேர்க்கவே, கருண் நாயர் அவருக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடினார். நிதானமாகத் தொடங்கிய ஜெய்ஸ்வால், குறிப்பிட்ட நேரத்துக்குப்பின் வழக்கமான ஆட்டத்துக்குத் திரும்பி பவுண்டரிகளை விளாசினார். குறிப்பாக ஜோஷ் டங் ஓவரில் டி20 ஆட்டத்தைப்போன்று தொடர்ந்து 3 பவுண்டரிகளை விளாசி, ஜெய்ஸ்வால் 59 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இங்கிலாந்துக்கு எதிராக அதிகமான சராசரி வைத்திருக்கும் பிராட்மேனுக்கு அருகே 84 சராசரியில் ஜெய்ஸ்வால் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2வது செஷனில் ஜெய்ஸ்வால், கருண் நாயர் இருவரும் கட்டுக்கோப்புடனே பேட் செய்தனர், தவறுகள் பெரிதாக செய்யாததால் விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர். ஆனால், கார்ஸ் பவுன்ஸரில் கருண் நாயர் அவ்வப்போது தடுமாறியதையும், பவுன்ஸரை ஹூக் ஷாட்டில் அடிக்காமல் திணறுவதையும் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கண்டறிந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய வீரர் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அரை சதம் அடித்ததை கொண்டாடுகிறார். கருண் நாயர் ஏமாற்றம் கருண் நாயரை பிரன்ட்புட் எடுத்து ஆடவைக்கும் வகையில் கார்ஸ் தொடர்ந்து பந்துகளை வீசினார், ஆனால் தனக்கு வலை விரிக்கப்பட்டுவிட்டது என்பதை கருண் நாயர் உணரவில்லை. கார்ஸ் திடீரென ஒரு பந்தை பவுன்சராக வீசவே, இதை கருண் நாயர் எதிர்பார்க்கவில்லை. இதனால் மார்புக்கு அருகே வந்த பந்தை பேட் வைத்து தடுக்கவே 2வது ஸ்லிப்பில் இருந்த ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், கருண் நாயர் 80 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த கேப்டன் கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களுடன் இருந்தது. 2வது செஷனில் கில், ஜெய்ஸ்வால் ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். ஜெய்ஸ்வால் மெதுவாக ரன்களைச் சேர்க்க, கில் நிதானமாக பேட் செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்திய வீரர் கருண் நாயர் கில் பொறுப்பான பேட்டிங் முதல் டெஸ்டில்கூட கில், வேகமாக ரன்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஷாட்களை அவ்வப்போது ஆடினார். ஆனால், இந்த டெஸ்டில் முதிர்ச்சியடைந்த டெஸ்ட் பேட்டர் போன்று மிகுந்த கவனத்துடன் டிபென்ஸ்ப்ளே செய்தார். இதனால் சுப்மன் கில் தவறு செய்யவைக்க இங்கிலாந்தின் திட்டம் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்தது. 2வது சதத்தை நோக்கி நகர்ந்த ஜெய்ஸ்வால் 87 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு கில்,ஜெய்ஸ்வால் கூட்டணி 66 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். விக்கெட் சரிவு அடுத்து ரிஷப் பண்ட் களமிறங்கி, கில்லுடன் சேர்ந்தார். கடந்த டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த ரிஷப் பண்ட் இந்தமுறை களமிறங்கியபோது, மிரட்சியுடனே இங்கிலாந்து வீரர்கள் பார்த்தனர். ரிஷப் பண்ட் களமிறங்குவதற்கு முன்புவரை சுழற்பந்துவீச்சாளர் பஷீருக்கு குறைவான ஓவர்கள் வழங்கப்பட்டநிலையில், பண்ட் வந்தபின் பஷீருக்கு கூடுதலாக ஓவர்களை கேப்டன் ஸ்டோக்ஸ் வழங்கினார். நிதானமாக பேட் செய்த சுப்மன் கில் 125 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 4 பவுண்டரிகள் மட்டுமே அடக்கம். ரிஷப் பந்தை அடித்து ஆட வைக்க வேண்டும் என்ற நோக்கில் பஷீர் பந்தை நன்கு "டாஸ்" செய்து வீசினார். அதற்கு ஏற்றார்போல் ரிஷப் பவுண்டரி, சிக்ஸர் விளாசி அதிரடியாகத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் பஷீர் வீசிய பந்தை லாங்ஆன் திசையில் ரிஷப் பண்ட் தூக்கி அடிக்கவே கிராலி அதை கேட்ச் பிடித்தார். ரிஷப் பண்ட் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக வாய்ப்புப் பெற்ற நிதிஷ் ரெட்டி களமிறங்கினார். வோக்ஸ் பந்துவீச்சை சரியாகக் கணிக்காமல் பந்தை லீவ் செய்ய நிதிஷ் ரெட்டி முயன்றார். ஆனால் பந்து லேசாக ஸ்விங் ஆகி, ஆப்ஸ்டெம்பை பதம்பார்த்துச் சென்றது. நிதிஷ் ரெட்டியின் தவறான கணிப்பால்விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்தடுத்து ரிஷப் பண்ட், நிதிஷ் ரெட்டி விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி சற்று தடுமாறியது. கில்-ஜடேஜா ஜோடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வீரர்கள் சுப்மான் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆனால், ஜடேஜா களமிறங்கி, கில்லுடன் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய கில், 3வது செஷசன் ஆட்டம் தொடங்கியதும் ரன் சேர்க்கும் விதத்தை வேகப்படுத்தினார். அரைசதம் அடிக்க 125 பந்துகளை எடுத்துக்கொண்ட கில், அடுத்த 50 ரன்களை 74 பந்துகளில் எட்டினார். 6 பவுண்டரிகளையும் கில் அடித்து, ஸ்கோரை வேகமாக உயர்த்தி 199 பந்துகளில் சதம் அடித்தார். சுப்மான் கில்லுக்கு துணையாக ஆடிய ஜடேஜா, சரியான பந்துகளை மட்டுமே தேர்ந்தெடுத்து பவுண்டரிக்கு விரட்டினார், அவ்வப்போது இருவரும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யவும் தவறவில்லை. ஜடேஜா 41 ரன்களுடன் களத்தில் உள்ளார். இருவரும் 99 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் களத்தில் உள்ளனர். புதிய பந்து நேற்று மாலை எடுக்கப்பட்டும் விக்கெட்டை இங்கிலாந்தால் வீழ்த்த முடியவில்லை, அதே பந்து 2வது நாளிலும் பயன்படுத்தப்படும் என்பதால் ஸ்விங் அதிகமாக இருக்கும். இதில் கட்டுக்கோப்பாக பேட் செய்து 30 ஓவர்களை நகர்த்திவிட்டால் பெரிய ஸ்கோருக்கு இந்திய அணி செல்லக்கூடும். இந்திய அணி இன்று 2வது ஆட்டத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் ஜடேஜா, கில் கூட்டணி பேட் செய்தால், நிச்சயமாக 400 ரன்களை எட்டும். இருவரில் ஒருவர் ஆட்டமிழந்தாலும் வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் என இரு பேட்டர்கள் இருப்பதால், முதல் டெஸ்டைப் போன்று 400 ரன்களுக்கு மேல் சேர்க்க அதிக வாய்ப்புள்ளது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp82z1zy600o

செயற்கை நுண்ணறிவில் முதலீடு; 9,000 ஊழியர்களை பணிநீக்கும் மைக்ரோசாப்ட்!

3 months 1 week ago
செயற்கை நுண்ணறிவில் முதலீடு; 9,000 ஊழியர்களை பணிநீக்கும் மைக்ரோசாப்ட்! தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) இந்த ஆண்டு 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்த ஆண்டு நிறுவனத்தின் வேலை குறைப்புக்களின் அண்மைய அலையாகும். எந்தெந்த பிரிவுகள் மேற்கண்ட அறிவிப்பினால் பாதிக்கப்படும் என்பதை மைக்ரோசாப்ட் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால், அதன் எக்ஸ்பாக்ஸ் வீடியோ கேமிங் பிரிவு இதனால் பாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் (AI) அதிக அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் AI மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்காக மிகப்பெரிய தரவு மையங்களில் $80 பில்லியன் (£68.6 பில்லியன்) செலவிடுகிறது. இந்த குறைப்புகள் மைக்ரோசாப்டின் 228,000-க்கும் மேற்பட்ட உலகளாவிய பணியாளர்களில் 4%-க்கு சமமாக இருக்கும். 2025 ஆம் ஆண்டில் இதுவரை மூன்று சுற்று பணிநீக்கங்களைத் மைக்ரோசாப்ட் தொடங்கியுள்ளது. இதில் மே மாதத்தில் 6,000 பணியிடங்களைக் குறைப்பதாகக் கூறியது அடங்கும். அண்மைய ஆண்டுகளில், பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே, மைக்ரோசாப்ட் தரவு மையங்கள் மற்றும் சிப்களில் முதலீடு செய்வது உட்பட AI ஐ வளர்ப்பதில் தனது வணிகத்தை மீண்டும் கவனம் செலுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1437917

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

3 months 1 week ago
இலங்கையில் புழுகும் அளவிற்கு இல்லை என்றே பாவிப்பவர்கள் கூறுகிறார்கள். ரெசிடென்ஷியல் பிளான் 15,000 ரூபாய் மாதக்கட்டணம் (118,000 இணைப்புக்கட்டணம்) வந்தாலும் வேகம் 75-150 Mbps இற்குள் மட்டுப்படுவதாகவே கூறுகிறார்கள் மழையாலும் interference வருகிறதாம் . Remote and suburb வாசிகளுக்கு பயனளிக்கலாம். SLT Fibre family 100Mbps unlimited (1000GB FUP ) 9,789ரூபாய்க்கும், SLT Fibre Boost 300 Mbps (2000 GB FUP) 19,600 ரூபாய்க்கும் இலங்கையில் கிடைக்கிறது. நான் boost தான் பாவிப்பது நல்ல வேகம். ஸ்டார்லிங்க்கின் வேகத்தையும் ஆரம்ப இணைப்புக்கட்டணத்தையும் பார்க்கும் போது அவ்வளவு பெறுமதியாக தெரியவில்லை

அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

3 months 1 week ago
அர்ச்சுனாவை நோக்கிப் பாயும் அம்புகள் அனைத்தும் மாலைகளாகி அவரை அலங்கரிக்கும் மர்மம் என்ன????🤔

இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவினை பரிசீலிக்கும் மலேசியா!

3 months 1 week ago
இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவினை பரிசீலிக்கும் மலேசியா! இலங்கை குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குவது குறித்து மலேசியா தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், இருதரப்பு சுற்றுலா மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கான சக்திவாய்ந்த ஊக்கியாக இந்த திட்டம் செயல்படும். மலேசியாவின் சுறுசுறப்பான நகரங்கள், பசுமையான மழைக்காடுகள் மற்றும் வளமான கலாச்சார சலுகைகள் ஆகியவற்றின் வசீகரம் பல இலங்கையர்களுக்கு மறுக்க முடியாதது. இதையொட்டி, மலேசிய சுற்றுலா அதிகாரிகள் இலங்கையிலிருந்து அதிகமான பயணிகளை வரவேற்க ஆர்வமாக உள்ளனர். மலேசிய சுற்றுலாத்துறையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான சர்வதேச ஊக்குவிப்பு மூத்த பணிப்பாளர் நுவால் ஃபாதிலா கு அஸ்மி, இலங்கையர்களுக்கான விசா இல்லாத நுழைவை ஆதரிக்கும் விரிவான திட்டங்கள் ஏற்கனவே மலேசிய அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொழும்பில் உள்ள மலேசிய உயர் ஸ்தானிகராலயமும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பதாகவும், இது ஒரு சரியான நேரத்தில் மற்றும் மூலோபாய முன்னேற்ற நடவடிக்கை என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த முயற்சி நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகளை மேலும் அதிகரிக்க இலங்கை அரசாங்கத்திடமிருந்து முறையான இராஜதந்திர கோரிக்கையை அஸ்மி ஊக்குவித்தார். தொற்றுநோய்க்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா மீட்சிக்கு சேவை செய்யும் வகையில் பயணக் கொள்கையை மறுவடிவமைப்பதற்கான பரந்த மலேசிய உத்தியை அவரது கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இதேவேளை, மலேசிய சுற்றுலாத்துறையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான சர்வதேச ஊக்குவிப்புப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுல்ஹெல்மி மொஹமட், 2024 ஆம் ஆண்டில் 58,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மலேசியாவிற்கு வருகை தந்ததாகவும், இது 2019 உடன் ஒப்பிடும்போது 122% அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும் எடுத்துரைத்தார். https://athavannews.com/2025/1437880

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

3 months 1 week ago
எலோன் மஸ்க்கிற்கு நன்றி; இலங்கையில் ஸ்டார்லிங்க் அறிமுகத்திற்கு ரணில் பாராட்டு! இலங்கையில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார். இது நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு முக்கிய படியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, அனைத்து இலங்கையர்களுக்கும் ஸ்டார்லிங்க் அணுகலை அனுமதித்ததற்காக பில்லியனர் எலோன் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்தார். ஸ்டார்லிங்க் அறிமுகம் குறித்த செய்தியை புதன்கிழமை (02) அதிகாலை எலோன் மஸ்க் உறுதிப்படுத்தினார். இந்த சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளது என்று அவர் அறிவித்தார். https://athavannews.com/2025/1437906

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 43 பேர் மாயம்!

3 months 1 week ago
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 43 பேர் மாயம்! இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இரவு முழுவதும் கொந்தளிப்பான கடலில் காணாமல் போன 43 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். கிழக்கு ஜாவாவின் கெட்டாபாங் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை (02) இரவு புறப்பட்ட ‘The KMP Tunu Pratama Jaya’ என்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக இந்தோனேஷியாவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லொறிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதன்கிழமை இரவு முதல் இருளில் இரண்டு மீட்டர் (6.5 அடி) உயர அலைகளுடன் போராட்டத்துக்கு மத்தியில் தேடல் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 17,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் படகு துயரங்கள் பொதுவானவை. அங்கு போக்குவரத்துக்காக படகுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. https://athavannews.com/2025/1437903

வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு

3 months 1 week ago
வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு July 3, 2025 8:30 am வவுனியாவில் புதிதாக உடற்பிடிப்பு நிலையம்(ஸ்பா) ஒன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வவுனியா கண்டிவீதி மூன்று முறிப்பு பகுதியில் குறித்த உடற்பிடிப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு கலாச்சார சீரழிவுகளுக்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர். எனவே வவுனியா மாகநகரசபை தலையிட்டு உடனடியாக இந்த நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை குறித்த நிலையத்திற்கு வவுனியா மாநகரசபை எந்தவிதமான அனுமதியினையும் வழங்கவில்லை என மாநகர முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். எனவே, குறித்த நிலையத்தை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். https://oruvan.com/public-protests-over-newly-established-spa-center-in-vavuniya/

சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்

3 months 1 week ago
18, 19 வயதுகளில் உள்ளவர்களுக்கு.... அதிவேக மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்த பெற்றோரை என்னவென்று சொல்வது.
Checked
Mon, 10/13/2025 - 09:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed