புதிய பதிவுகள்2

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் கைது!

1 week 4 days ago
Published By: Digital Desk 1 02 Oct, 2025 | 02:29 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி இலஞ்சம் மற்று் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார். நெவில் வன்னியாராச்சி வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகிய போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்து சேர்ப்பு தொடர்பான விசாரணை தொடர்பில் நெவில் வன்னியாராச்சி கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தபட்டு வருகின்றார். அதனையடுத்து நெவில் வன்னியாராச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226676

மீண்டும் உச்சத்தை தொட்ட தேசிக்காய் விலை!

1 week 4 days ago
02 Oct, 2025 | 02:28 PM தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தேசிக்காய் 1,700 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் சி. எஸ்.சிறிவர்தன தெரிவித்துள்ளார். தேசிக்காயின் அறுவடை குறைந்ததாலும் தேவைக்கு ஏற்ப விநியோகிக்க முடியாததாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/226681

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week 4 days ago
தலைவர் எமக்கு மட்டும்தான் சொந்தமென முற்றுப்புள்ளிகள் வைத்து எழுதவும் முடியாது.சொல்லவும் முடியாது. தலைவரை இன்று தமிழினத்தின் தலைவர் என்றே சொல்கின்றனர்.அது தமிழ்நாட்டு ஒரு சில அரசியல்வாதிகளுக்கு இடைஞ்சலாக இருக்கலாம். கடவுளை வணங்குவதற்கு/நேசிப்பதற்கு யாருடைய அனுமதியும் உத்தரவுகளும் யாருக்கும் தேவையில்லை.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week 4 days ago
ஆமாம் நீங்கள் சொன்னால் அது சரிதான். ஆனால் அண்ணனுக்காக தீக்குளிக்கமட்டும் தமிழ்நாட்டில் தமிழன் இருப்பதை வரவேற்று நாங்கள் சுவிற்சலாந்துவரை சென்று கூடி அங்கு தீக்குளித்தவர்களுக்கு அஞ்சலி செய்வதை வரவேற்போம்.

அரசியலில் ‘மீட்சி’ குறித்து கனவுகாணும் மகிந்தவும் ரணிலும் — வீரகத்தி தனபாலசிங்கம் — 

1 week 4 days ago
அரசியலில் ‘மீட்சி’ குறித்து கனவுகாணும் மகிந்தவும் ரணிலும் September 30, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் தங்களுக்கு இனிமேலும் கூட அரசியலில் ‘மீட்சி’ இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள். தனிப்பட்ட வெளிநாட்டு விஜயத்துக்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ‘அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை’ தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார். அதேவேளை, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து கொழும்பில் பிரமாண்டமான அரசாங்க மாளிகையில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச தனக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ‘அரசியல் பயங்கரவாதத்தில்’ ஈடுபடுவதாகவும் கூறி மக்கள் மத்தியில் மீண்டும் தனக்கு ஆதரவைப் பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார். கடந்த மாதம் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் (கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ) வைக்கப்பட்டிருந்தபோது அனேகமாக சகல எதிர்க்கட்சிகளுமே அவருக்கு ஆதரவாக குரலெழுப்பின. அவருடன் கடுமையான அரசியல் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் கூட அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்கள். அந்தவேளையில் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருந்த உத்வேகத்தை பயன்படுத்தி அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரட்டலைச் செய்யலாம் என்று விக்கிரமசிங்கவும் அவரது ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகளும் நம்பினார்கள். ஆனால், அந்த உத்வேகம் ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே தணிந்துவிட்டது. அதற்கு பிறகு கடந்த வாரம் (செப்டெம்பர் 20) நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 79 வது வருடாந்த மகாநாட்டை எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துவதில் விக்கிரமசிங்க அக்கறை காட்டினார். ஆளும் தேசிய மக்கள் சக்தியை தவிர பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட சுமார் 40 கட்சிகள் மகாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தன. அழைக்கப்பட்டவர்களில் முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா பண்டாரநாயக்க, மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், தங்களது வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மகாநாட்டுக்கு வரவில்லை. ஆனால், பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட மூத்த அரசியல்வாதிகள் பலர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினர். பிரேமதாசவின் செய்தியை மத்தும பண்டார மகாநாட்டில் வாசித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவோ அல்லது தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவோ மகாநாட்டுக்கு வரவில்லை. பொதுச் செயலாளர் சாகர காரியவாசம் மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். ஐக்கிய மக்கள் சக்தியுடன் அணிசேர்ந்து நிற்கும் சகல தமிழ், முஸ்லிம் கட்சிகளினதும் தலைவர்கள் மகாநாட்டில் கலந்துகொண்ட அதேவேளை, அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களில் எவரும் பங்கேற்கவில்லை. வழமையாக ஐக்கிய தேசிய கட்சியின் மகாநாடுகளில் அதன் முன்னாள் தலைவர்களுக்கே அஞ்சலி செலுத்தி கௌரவம் அளிக்கப்படும். ஆனால் இந்த தடவை ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவர்களுக்கு மேலதிகமாக, முன்னாள் பிரதமர்கள் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கும் முக்கியமான அரசியல் தலைவர்களாக விளங்கிய என். எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி சில்வா, பீற்றர் கெனமன், டி.ஏ. ராஜபக்ச, ஜீ.ஜீ. பொன்னம்பலம், எஸ். ஜே.வி. செல்வநாயகம், சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆர். சம்பந்தன் ஆகியோருக்கும் நினைவஞ்சலி செய்யப்பட்டது. மகாநாட்டில் விக்கிரமசிங்க நிகழ்த்திய உரை கடந்த மாதம் கைது செய்யப்பட்டதற்கு பிறகு பொதுவெளியில் அவரின் முதன் முதலான உரையாக அமைந்தது. வழமைக்கு மாறாக வித்தியாசமான முறையில் தனது கட்சியின் வருடாந்த மகாநாடு இந்த தடவை நடத்தப்பட்டதற்கு பிரதான காரணம் தனது கைது என்பதை அவர் வெளிப்படையாகவே குறிப்பிட்டார். 2023 செப்டெம்பரில் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் மேற்கொண்ட விஜயத்துக்கு பிறகு நாடு திரும்பும் வழியில் ஐக்கிய இராச்சியத்துக்கு சென்றதும் கூட உத்தியோகபூர்வ விஜயமே என்று தனதுரையில் அவர் விளக்கினார். கட்சியைப் பற்றி பேசுவதை விடவும் நாட்டில் இன்று உருவாகி வருகின்ற அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பாடுபடவேண்டியதே அவசியமானது என்று விக்கிரமசிங்க வலியுறுத்தினார். மகாநாட்டில் பேசிய வேறு பல அரசியல்வாதிகளும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவினதும் தேசிய மக்கள் சக்தியினதும் கண்காணிப்பில் இன்று நாட்டில் அரசியலமைப்புச் சர்வாதிகாரம் ஒன்று உருவாகிவருவதாக குறிப்பிட்டனர். அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரட்டல்களைச் செய்வதற்கு எதிரணி கட்சிகள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றன. ஆனால், விக்கிரமசிங்க அவரது கைதுக்கு பிறகு கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சிகளுக்கு தலைமை தாங்கக்கூடிய அளவுக்கு பலம் பொருந்திய ஒரு தலைவராக மாறிவிட்டாரா என்ற கேள்வி எழுகிறது. 1975 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜெயவர்தனவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி நாடுபூராவும் நடத்தியதைப் போன்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆயிரம் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என்று மாகாநாட்டில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அத்தகைய கூட்டங்களை முன்னின்று நடத்தக்கூடிய அளவுக்கு அவரது கட்சி பலம்பொருந்தியதாக இல்லை. தற்போதைய முக்கியமான எதிர்க்கட்சிகளில் எந்தவொன்றுமே பிரமாண்டமான கூட்டங்களை நடத்தக்கூடியதாக வலுவான கட்டமைப்புக்களை கொண்டவையாக இல்லை. அதன் வரலாற்றிலேயே மிகவும் மோசமான அளவுக்கு பலவீனப்பட்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் அணிதிரளுவதற்கு மற்றைய கட்சிகள் முன்வரக்கூடிய சாத்தியம் இல்லை. மகாநாட்டில் உரையாற்றிய மற்றைய கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் இதை தெளிவாக உணர்த்துகின்றன. ஐக்கிய தேசிய கட்சியுடன் தங்களுக்கு எந்தவிதமான இணக்கப்பாடும் கிடையாது என்றும் ஆனால், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஒன்றுபட்டுச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் மத்தும பண்டாரவும் பெ்துஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் காரியவாசமும் மகாநாட்டில் அறிவித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற பழைய முக்கியமான கட்சிகள் எல்லாமே பல குழுக்களாக பிளவடைந்திருக்கின்றன. அவை இன்றைய சூழ்நிலையில் அரசியலில் தங்களுக்கு ஒரு பொருத்தப்பாட்டை தேடிக்கொள்வதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக என்று கூறப்படுகின்ற முயற்சிகளில் வலிந்து பங்கேற்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன. கடந்த மாதம் விக்கிரமசிங்கவின் கைதுக்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சி அதன் ஆதரவை கட்டியெழுப்புவதற்கு இரு முனைகளில் முயற்சிகளை முன்னெடுப்பதாக தெரிகிறது. ஒருபுறத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதியில் இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதும் மறுபுறத்தில், மற்றைய கட்சிகளுடன் சேர்ந்து பரந்தளவிலான அரசாங்க எதிர்ப்பு முன்னணி ஒன்றை அமைப்பதுமே அவர்களது நோக்கம். சஜித் பிரேமதாசவை பொறுத்தவரை, ஐக்கிய தேசிய கட்சியின் இந்த பொறியில் வீழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறார். விக்கிரமசிங்க தலைமைத்துவத்தில் இருந்து விலகும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தனக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்குமானால் பிரேமதாச இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்கு இணங்கக்கூடும். ஆனால், முன்னாள் ஜனாதிபதி கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்தோ அல்லது அரசியலில் இருந்தோ விலகுவதற்கான அறிகுறி ஏதுவுமில்லை. அதனால் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியில் தனது தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதிலேயே அக்கறை காண்பிப்பார். அத்துடன் அவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூட அண்மையில் அறிவித்தார்.. மற்றைய எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை, ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைத்து அரசாங்கத்துக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டினாலும் கூட தேர்தல் கூட்டு ஒன்றைச் செய்து கொள்வது சாத்தியமில்லை. பலம்பொருந்திய ஒரு கட்சியை மையமாக வைத்து கூட்டணியை அமைத்தால் மாத்திரமே தேர்தலில் வாய்ப்புக்களை அதிகரிக்க முடியும். ஐக்கிய தேசிய கட்சி அத்தகைய ஒரு நிலையில் தற்போது இல்லை என்பது மாத்திரமல்ல, அண்மைய எதிர்காலத்திலும் அதன் மக்கள் ஆதரவு குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிப்பதற்கு வாய்ப்பில்லை. கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கும் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதில் அக்கறை காட்டாமல் விக்கிரமசிங்கவின் கைது போன்ற விடயங்களை முன்னிறுத்தி ‘ அரசியலமைப்புச் சர்வாதிகாரத்துக்கு ‘ எதிராக அணிதிரளுமாறு விடுக்கப்படும் அழைப்பு மக்களின் கவனத்தை எந்தளவுக்கு ஈர்க்கும் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. இது இவ்வாறிருக்க, முன்னாள் ஜனாதிபதிகள் இதுகாலவரை அனுபவித்துவந்த மட்டுமீறிய வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வதற்காக பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தொடர்ந்து கொழும்பில் உள்ள அரச மாளிகையில் இருந்து வெளியேறி தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டையின் தங்காலைக்கு சென்றிருக்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அரசியல் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டுகிறார். தங்காலை வாசஸ்தலத் துக்கு தினமும் பெரும் எண்ணிக்கையான ஆதரவாளர்கள் மாத்திரமல்ல, கொழும்பில் இருந்து வெளிநாட்டு இராஜதந்திரிகளும் அவரை சந்தித்து வருகிறார்கள். கொழும்பு மாளிகையில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாமல் போனதால் அவருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்றும் அரசாங்கம் அவருக்கு அநீதி இழைத்துவிட்டது என்றும் நாட்டு மக்கள் நினைக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி நம்புகிறார் போலும். போரை முடிவுக்கு கொண்டு வந்ததால் தனக்கும் குடும்பத்தவர்களுக்கும் சிங்கள மக்கள் என்றென்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச ‘ அறகலய ‘ அனுபவத்துக்கு பின்னரும் கூட விடுபடவில்லை. இன்றைய அரசியல் நிலைவரத்தில் உள்ள விசித்திரம் என்ன வென்றால் ரணில் விக்கிரமசிக்கவும் மகிந்த ராஜபக்சவும் தங்களுக்கு அரசியலில் ஒரு ‘ மீட்சி’ இருக்கிறது என்று நம்புவதுதான்! https://arangamnews.com/?p=12346

ஊர்காவற்துறையில் கடற்பாசி உற்பத்தி - நேரில் சென்று பார்த்த இளங்குமரன் எம்.பி

1 week 4 days ago
ஊர்காவற்துறையில் கடற்பாசி உற்பத்தி - நேரில் சென்று பார்த்த இளங்குமரன் எம்.பி புதன், 01 அக்டோபர் 2025 06:51 PM யாழ்ப்பாணம் , ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் கடல் பாசி உற்பத்தி மூலம் அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரம் முன்னேறும் என்ற பெருநம்பிக்கை தனக்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் முன்னெடுக்கப்படும் கடற்பாசி உற்பத்தி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் லக்ஸ்மன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி கடற்பாசி உற்பத்தி தொடர்பிலான பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளதாகவும் , அதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் , இந்த கடற்பாசி உற்பத்தி மூலம் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இதொரு வலுவான வழியாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். https://jaffnazone.com/news/50895

ஜெனிவாவில் புலிக்கொடி பறக்க அனுமதிக்கக் கூடாது: சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கு கே.பி. தசநாயக்க வலியுறுத்தல்!

1 week 4 days ago
ஜெனிவாவில் புலிக்கொடி பறக்க அனுமதிக்கக் கூடாது: சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கு கே.பி. தசநாயக்க வலியுறுத்தல்! October 2, 2025 ஜெனிவாவில் புலிக்கொடியைக் காட்சிப்படுத்துவதற்கும், புலி ஆதரவாளர்கள் பரப்புரைகளில் ஈடுபடுவதற்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என்று ஒற்றையாட்சி மற்றும் இராணுவத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளரும், முன்னாள் கடற்படை அதிகாரியுமான டி.கே.பி. தசநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்றது. தமிழ்ப் புலம்பெயரிகள் மற்றும் புலி ஆதரவாளர்கள் அங்கு பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். 32 நாடுகளில் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. இலங்கையிலும் அந்த அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, தடைசெய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் பரப்புரையில் ஈடுபடவும், கொடிகளைக் காட்சிப்படுத்தவும் இடமளிக்கக்கூடாது – என்றார். https://www.ilakku.org/the-tiger-flag-should-not-be-allowed-to-fly-in-geneva-k-p-dasanayake-urges-the-swiss-government/

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 4 days ago
கரூர் சம்பவத்தால் நெருக்கடியில் தவெக: ஆதவ் அர்ஜூனா தனி விமானத்தில் டெல்லி பயணம் 1 Oct 2025, 10:55 PM கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, 5 பேருடன் தனி விமானத்தில் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தவெக தலைவர் நடிகர் விஜய் கரூரில் நடத்திய பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் நிர்மல் குமார் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். முன்னதாக, கலவரத்தைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக ஆதவ் அர்ஜூனா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த பரபரப்பான- நெருக்கடியான சூழ்நிலையில் ஆதவ் அர்ஜூனா திடீரென டெல்லி சென்றுள்ளார் என்கின்றன தகவல்கள். சென்னையில் இருந்து தனி விமானத்தில் 5 பேருடன் ஆதவ் அர்ஜூனா டெல்லி சென்றுள்ளது கவனம் பெற்றுள்ளது. https://minnambalam.com/karur-tragedy-puts-tvk-in-crisis-aadhav-arjuna-flies-to-delhi-on-private-jet/

யாழ். குறிகாட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

1 week 4 days ago
யாழ். குறிகாட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் 02 Oct, 2025 | 11:40 AM குறிகட்டுவான் இறங்குதுறையினை பெருந்திட்டத்திற்கு அமைய (Master Plan) அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று புதன்கிழமை (01) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க , கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் கடந்த ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி குறிகட்டுவான் இறங்குதுறைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு, ஆலோசனைகளையும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் உரிய அறிவுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கியதற்கமைய, அதன் தொடர் நடவடிக்கையாக பங்குதார்களுடனான கலந்துரையாடலாக இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது. இக் கலந்துரையாடலில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர், மேலதிக செயலர்களான கே. சிவகரன் மற்றும் பா. ஜெயகரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குரூஸ், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர், வீதி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர், வேலணை பிரதேச செயலாளர், பிரதேச சபையின் செயலாளர், கடற்படை அதிகாரி மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள். https://www.virakesari.lk/article/226658

முகமாலையில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

1 week 4 days ago
முகமாலையில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு! 02 Oct, 2025 | 09:54 AM கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று புதன்கிழமை (01) பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முகமாலை வடக்கு பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டியுள்ளார். இதன்போது அப் பகுதியில் ஆபத்தான வெடிகுண்டுகள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து வீட்டு உரிமையாளர் உடனடியாக பளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதன் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடிகுண்டுகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . https://www.virakesari.lk/article/226637

முல்லைத்தீவு - வெள்ளப்பள்ளம் குளத்தினுள் சட்டவிரோதமாக வெட்டி அழிக்கப்பட்ட மரங்கள்

1 week 4 days ago
முல்லைத்தீவு - வெள்ளப்பள்ளம் குளத்தினுள் சட்டவிரோதமாக வெட்டி அழிக்கப்பட்ட மரங்கள் 02 Oct, 2025 | 09:30 AM முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையர்கட்டு வெள்ளப்பள்ளம் குளத்தினுள் சட்டவிரோதமாக பாரிய அளவில் மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று புதன்கிழமை (01) உரிய இடத்திற்கு நேரடியாகச்சென்று நிலமைகளை ஆராய்ந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சட்டவிரோதமாக மரங்களை வெட்டியவர்களுக்கெதிராக விரைந்து நடவடிக்கைகளை எடுக்குமாறு வெள்ளப்பள்ளம் கிராமஅலுவலர், உடையார்கட்டு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் ஆகியோரை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள வெள்ளப்பள்ளம் குளக்காணியில் உள்ள நீர்மரங்கள் பாரிய அளவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளன. குறித்த வெள்ளப்பள்ளம் குளத்தின் அருகிலுள்ள ஒருங்கிணைந்த பண்ணையின் உரிமையாளரினாலேயே இவ்வாறு நீர்மரங்கள் பாரியளவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதி மக்களின் முறையீட்டிற்கு அமைவாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்றையதினம் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்ததுடன், பிரச்சினை தொடர்பாக மக்களிடம் கேட்டறிந்துகொண்டார். அந்தவகையில் உடையார்கட்டு கமநலசேவைநிலைய பிரிவிற்குட்பட்ட வெள்ளப்பள்ளம் குளத்தின் அருகிலுள்ள ஒருங்கிணைந்த பண்ணையின் உரிமையாளர் ஏற்கனவே குறித்த வெள்ளப்பள்ளம் குளத்திற்குரித்தான பெருமளவான பகுதிகளை ஆகிரமித்துள்ளதாக கிரமமக்களால் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அதன் தொடர்சியாகவே குறித்த ஒருங்கிணைந்த பண்ணையின் உரிமையாளர் குளத்தின் எஞ்சியபகுதிகளையும் ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே இவ்வாறு மரங்களை வெட்டியிருக்கலாமெனவும் கிராமமக்களால் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு இவ்வாறு குளத்தின் பகுதிகளிலுள்ள நீர் மரங்கள் பெருமளவு அழிக்கப்பட்டமையால் நிலத்தடி நீர் அற்றுப்போகும் அபாயம் ஏற்படுமெனவும், அருகிலுள்ள கிணறுகளில் நீரின்றிப்போகுமெனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் எஞ்சிய குளத்தின் பகுதிகளும் தனிநபரினால் ஆக்கிரமிக்கப்பட்டால் அப்பகுதி கால்நடைகளுக்கு குடிநீரில்லாமல் போகும் அபாயம் ஏற்படுமெனவும் மக்களால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. குளத்தின் காணிகளுக்குள் சட்டவிரோதமாக மரங்கள் பாரிய அளவில் வெட்டி அழிக்கப்பட்டமைக்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் பொலிசார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் மக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடும் செய்யப்பட்டது. அதேவேளை இவ்வாறு குளக்காணிக்குள் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டமைக்கு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிராமமக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு இதன்போது மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உடனடியாக உடையார்கட்டு கமநலசேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் வெள்ளப்பள்ளம் பகுதிக்குரிய கிராம அலுவலர் ஆகியோரை குறித்த பகுதிக்கு அழைத்ததுடன், நிலைமைகளை காண்பித்து சட்டவிரோதமாக குளக்காணிக்குள் நீர்மரங்கள் வெட்டப்பட்டமைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார். அதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளருக்கும் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு சட்டவிரோதமாக குளக்காணிக்குள் பாரிய அளவில் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டமைக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தினர். அந்தவகையில் வெள்ளப்பள்ளம் குளத்தின் பகுதிக்குள் சட்டவிரோதமாக பாரிய அளவில் மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டமைக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கிராமஅலுவலர், உடையார்கட்டு கமநலசேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் ஆகியோரால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226635
Checked
Mon, 10/13/2025 - 12:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed