ஊர்ப்புதினம்

தமிழ் தேசிய கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புகின்றது - டக்ளஸ் தேவானந்தா

3 months ago

Published By: Digital Desk 3

17 Sep, 2024 | 04:52 PM
image
 

தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும்  குழப்புவது தான் அவர்களின் பொதுவான இயல்பு என கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் இன்று புதன்கிழமை (17) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்  தெளிவாக இருக்கின்றார்கள் .தேர்தல் தொடர்பில் நீண்ட கால அனுபவங்கள்  அம்மக்களுக்கு இருக்கின்றது.சரியான திசை வழி நோக்கி அம்மக்கள் அணி திரள்வார்கள் என நான் நினைக்கின்றேன். ஏனெனில் வடகிழக்கில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் கொள்கைகள் வேலைத்திட்டங்கள் இருக்கலாம்.அந்த கொள்கைகள் வேலைத்திட்டங்களில் சுயலாபங்கள் தான் கலந்து இருக்கின்றது.

இது தவிர தேர்தல் புறக்கணிப்பு பொது வேட்பாளர்கள் விடயத்திலும் எம்மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். அதனை எதிர்வரும் 22 ஆம் திகதி அறிந்து கொள்வோம். இருந்தாலும் எனது ஜனாதிபதி வேட்பாளர்  அம்மான் ரணில் விக்ரமசிங்க தான் எனது தெரிவும் விருப்பமும் கூட.

அத்துடன் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும்  குழப்புவது தான் அவர்களின் பொதுவான இயல்பு.எனவே அதனால் தான் மக்கள் தற்போது நிதானமாக செயற்பட்டு வருகின்றார்கள் என குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புகின்றது - டக்ளஸ் தேவானந்தா  | Virakesari.lk

கொழும்பிலுள்ள தர்மஜயதன விகாரைக்கு தர்மச்சக்கர முத்திரையுடனான புத்தபெருமானின் சிலை கையளிப்பு

3 months ago
17 Sep, 2024 | 08:19 PM
image
 

பினாரா போயா தினம் மற்றும் ஶ்ரீமத் அநகாரிக தர்மபால அவர்களின் 160ஆவது பிறந்த தின நினைவுநாளை முன்னிட்டு 2024 செப்டெம்பர் 17 ஆம் திகதி இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கொழும்பிலுள்ள தர்மஜயதன விகாரைக்கு தர்மச்சக்கர முத்திரையுடனான புத்தர் சிலையொன்றை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்கள் கையளித்திருந்ததுடன், இந்நிகழ்வில் இலங்கை பிரதமர் மேன்மைதங்கிய தினேஷ் குணவர்த்தன அவர்களும் பிரசன்னமாகியிருந்தார்.

நான்கு அடிகள் உயரமும் 330 கிலோ நிறையினையும் கொண்ட இந்தச் சிலையானது இலங்கை பிரதமர் மேன்மைதங்கிய தினேஷ் குணவர்த்தன அவர்களது கோரிக்கைக்கு அமைவாக  கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவையினால் விசேடமாக வழங்கப்பட்டதாகும்.

தர்மஜயதனய விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய எல்லே குணவன்ச தேரர் அவர்களிடம் இச்சிலையானது கையளிக்கப்பட்டதுடன், புத்த பெருமான் தர்மச் சக்கர முத்திரையை காண்பித்தவாறாக இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. புத்த பெருமான் ஞானம் பெற்ற பின்னர் சாரநாத்தில் உள்ள மான் பூங்காவில் தனது முதல் பிரசங்கத்தினை நிகழ்த்திய முக்கிய தருணத்தினை குறித்த முத்திரை பிரதிபலிக்கின்றது. அத்துடன் தம்மத்தின் சுழற்சிக்கான இயக்கத்தினையும் இது குறித்து நிற்கின்றது.

இச்சுப நாளில் தர்மஜயந்தனய விகாரையின் வளாகத்தில் மர நடுகை நிகழ்வொன்றும் நடைபெற்றிருந்த்து. #Plant4Mother திட்டத்தில் இணையும் வகையில் இலங்கை பிரதமர்  மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஆகியோர் “இத்தா” மரக் கன்றுகளையும் இங்கு நாட்டிவைத்தனர்.

புது டில்லியில் உள்ள புத்த ஜயந்தி பூங்காவில் 2024 உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவர்கள் அரச மரங்களை நாட்டி இத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார், முன்னதாக இத்திட்டத்தின் கீழ் இலங்கை இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கம், 2024 ஆகஸ்டில் ஶ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள தேசிய சந்தனப் பூங்காவில் முருதா மரக்கன்றுகளை நாட்டி இலங்கை இந்திய நட்புறவு வளைவு ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துவைத்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வானது இந்தியா இலங்கை இடையிலான பகிரப்பட்ட பௌத்த மரபினை வலியுறுத்துகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரீகப் பிணைப்பினை மேலும் வலுவாக்கும் நோக்குடன் 2020 செப்டெம்பரில் இந்திய பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவர்கள் பௌத்த உறவுகளின் மேம்பாட்டுக்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை உதவியினை அறிவித்திருந்தார்.

அத்துடன் விசேட நன்கொடை உதவியின் கீழ் முதல் திட்டமாக, இலங்கை முழுவதும் உள்ள 9000 பௌத்த விகாரைகள் மற்றும் பிரிவேனாக்களை உள்ளடக்கும் வகையில் சூரியக்கல மின்மயமாக்கல் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல், இலங்கையில்  உள்ள 4000க்கும் மேற்பட்ட புத்த விகாரைகள்  மற்றும் பிரிவேனாக்களுக்கு 17 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி மூலம் சூரியக்கல மின்மயமாக்கல் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இருந்து புனித கபிலவஸ்து மற்றும் சாரநாத் புனித சின்னங்கள் இலங்கையில் தரிசனத்துக்காக வைக்கப்படும் நிகழ்வுகளும் அண்மைய காலங்களில் நடைபெற்றன. மேலும், இந்தியாவில் உள்ள பௌத்த வளாகங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளும்  இலங்கை யாத்திரிகர்களுக்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கிவருகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த தொடர்பை மேலும் வலுவாக்கும் வகையில் இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், உதவி உயர் ஸ்தானிகராலயம், கொன்சுலேட் ஜெனரல் காரியாலயங்கள் மற்றும் சுவாமி விவேகானந்தர் கலாசார நிலையம் ஆகியன பல பணித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இலங்கையில் இந்த ஆண்டு முழுவதும் ஒவ்வொரு போயா தினத்தன்றும் வெவ்வேறு விகாரைகளிலுமுள்ள  பௌத்த வளாகங்களில் நடத்தப்படும் நடமாடும் புகைப்படக் கண்காட்சிகள், இலங்கை முழுவதும் உள்ள பிரிவேனாக்களுக்கு வளங்களை வழங்குவதன் மூலமான கல்வி உதவி போன்ற  இன்னும் பல செயற்பாடுகள் இதில் உள்ளடங்குகின்றன. 

10.jpeg

7.jpeg

5.jpeg

6.jpeg

3.jpeg

4.jpeg

8.jpeg

கொழும்பிலுள்ள தர்மஜயதன விகாரைக்கு தர்மச்சக்கர முத்திரையுடனான புத்தபெருமானின் சிலை கையளிப்பு | Virakesari.lk

ஜனாதிபதிக்கும் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் சந்திப்பு !

3 months ago
17 Sep, 2024 | 08:06 PM
image
 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டத் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சார்ள்ஸ் நிர்மலநாதனை மன்னார் தாழ்வுபாடுவில் உள்ள அவரின் இல்லத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை (17) சந்தித்தார். 

இதன்போது ஜனாதிபதியை சார்ள்ஸ் நிர்மலநாதன் அன்புடன் வரவேற்றதுடன், சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து சிறு உரையாடலில் ஈடுபட்டனர்.  

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அகில இலங்கை இளைஞர் அமைப்பின் உப தலைவர் சட்டத்தரணி தினேஷ் தலைமையில் பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக அவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.

ஜனாதிபதிக்கும் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் சந்திப்பு ! | Virakesari.lk

நாளையதினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

3 months ago

Published By: DIGITAL DESK 3

17 SEP, 2024 | 02:57 PM
image
 

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைத்து நாளை புதன்கிழமை (18) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளைய தினம் காலை 8.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதனால் வைத்திய சிகிச்சை அளிப்பதில் இடையூறு ஏற்படலாம் என  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர்  கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண இணைப்பாளரும், உதவி செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷவுக்கு எதிராக சுகாதார அமைச்சு முன்னெடுக்கும்  ஒழுக்காற்று நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மீள் பரீசிலணை செய்வதற்கு சுகாதார அமைச்சுக்கு 14 நாள் கால அவகாசத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வழங்கும்.

அதற்கு சாதாகமான பதில் கிடைக்காவிடின் மாத இறுதியில் நடைபெறும் மத்திய குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/193939

ஜனாதிபதி ரணிலுடன் சசிகலா ரவிராஜ், மாவையின் மகன் கலை அமுதல் சந்திப்பு

3 months ago

Published By: DIGITAL DESK 3   17 SEP, 2024 | 03:34 PM

image
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த பாராளுமன்ற உறுப்பிரான ரவிராஜின் மனைவியான சசிகலா மற்றும் மாவை சேனாதிராஜாவின் மகனானா கலைஅமுதன் ஆகியோர் யாழ் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, வடமாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

2148979f-2200-4b5d-970a-0388603fe4a5.jpg

https://www.virakesari.lk/article/193943

சஜித்தின் வாக்குகளை சிதறடிக்கவே சுமந்திரனின் ஆதரவு நாடகம் – கஜேந்திரகுமார்!

3 months ago
kaja.jpg?resize=750,375 சஜித்தின் வாக்குகளை சிதறடிக்கவே சுமந்திரனின் ஆதரவு நாடகம் – கஜேந்திரகுமார்!

இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கும் விடயமானது ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவான வாக்குகளை சேர்ப்பதற்கான சதி நடவடிக்கை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”தமிழ்த் தேசியக் கட்சிகள் சஜித் பிரேமதாசவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நிலை சிங்கள மக்கள் மத்தியில் சஜித்திற்கான ஆதரவினை குறைக்கும் நடவடிக்கையாகும்.

சஜித் பிரேமதாச சிங்கள தேசிய வாதத்திற்கு நோ்மையாக நடந்து கொள்வாா் என்னும் நிலைப்பாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்தி அவரது தென்னிலங்கை வாக்குகளை ரணிலின் பக்கம் திரும்பும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சஜித் பிரேமதாசவினை ஆதாிக்கும் வடக்கு கிழக்கினைப் பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஆதரவு கிடையாது. எனினும் இந்த நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தினையும் எற்படுத்தப்போவதில்லை.

ஆனால் தென்னிலங்கையில் குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு குழப்பத்தினை ஏற்படுத்தும்.

ஆகவே நாம் இவை அனைத்தையும் தொகுத்துப் பாா்த்தால் இன்று தமிழ்த் தேசியத்திற்கு நோ்மையாக கொடுக்கக்கூடிய ஒரு நோ்மையான வழி தோ்தலைப் பகிஸ்காிப்பது மட்டுமே.

எனவே  2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதே எமது கட்சியின் நிலைப்பாடு” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் சுட்டிக் காட்டினாா்.

https://athavannews.com/2024/1399691

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு.... யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கள ஆய்வுகள் முன்னெடுப்பு!

3 months ago
3-3.jpg?resize=750,375 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கள ஆய்வுகள் முன்னெடுப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தின் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றையதினம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த கள ஆய்வில் மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கள ஆய்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் கி.அமல்ராஜ், வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு ஏ. ஜே. ஹாலிங்க ஜெயசிங்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஆகியோா்
பங்குபற்றினார்கள்.

https://athavannews.com/2024/1399712

கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா

3 months ago

கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா karuna-sabajeyaraj.jpg

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி ஊழல் நிறைந்தது என கட்சியிலிருந்து வெளியேறிய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் பயணத்தில் முக்கியமான ஒரு முடிவை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் பதவியில் இருந்தும் அக்கட்சியின் அடிப்படை உரிமை பதவியில் இருந்தும் கடந்த 17.08.2024 அன்று விடுவித்து கொண்டுள்ளேன்.

அக்கட்சியில் நீண்ட தூரம் என்னால் பயணிக்க முடியாது என்பதனை புரிந்து கொண்டேன்.

போரினால் பாதிக்கப்பட்டு தமது அன்றாட வாழ்க்கைக்கு மற்றையவர்களிடம் கையேந்தும் நிலமைக்கு தள்ளப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் பொருளாதாரம், மேம்பாடு அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது என்பவற்றை கருத்தில் கொண்டு ஆரம்பித்த பயணம் இன்று பல கோடிக்கணக்கான பணத்தை இழந்து நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அங்கே நிதி மோசடிகளும், ஊழல்களும் வீண்விரயங்களும் செய்யப்பட்டு நிதிகள் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது.

ஊழல் நிறைந்த அக்கட்சியில் இருந்து என்னால்பயணத்தை தொடர முடியாது இருப்பதாலேயே இம் முடிவு எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம்.

நிதிமோசடிக்கு அந்த கட்சியின் தலைவர் கருணா அம்மான் அவர்களும் அவரினை சுற்றியிருக்கும் சமூகவிரோத கும்பல்களும் முழுப்பொறுப்பு கூறவேண்டும் .

ஒரு கட்சியினை எப்படி வழிநடத்த வேண்டும் என தெரியாமல் மிலேச்சத்தனமான போக்கில் செயற்பட்டு கொண்டிருக்கும்போது ஜனநாயக பாதையில் மக்களின் தேவையை, மக்களின் அன்றாட வாழ்கைக்கு எப்படி உதவுவது என்பதனை புரிந்து கொள்ள தெரியாத நிலையில் ஒருவட்டத்திற்குள் என்னால் செயற்படமுடியாது.

எனக்கு பலபக்கங்களிலும் இருந்து நிறைய அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

இருப்பினும் எனது மக்கள் சேவை அன்பின் இல்லம் அறக்கட்டளை சேவை மூலமும், என்னால் ஆரம்பிக்கப்பட்ட அம்மான் படையணி மூலமும் தொடரும்.

இதுரை நான் எவரிடமும் எனது அன்பின் இல்லத்திற்கோ, அம்மான் படையணிக்கோ ஒரு சதம் கூட கேட்கவும் இல்லை, பெறவும் இல்லை.

முழுநிதியும் என்னுடைய சொந்த உழைப்பில் எனது கையால் செலவிடப்பட்டது. இருப்பினும் எனது பயணத்தினை இடைநிறுத்தி கொள்வேன் என யாரும் கனவு காணவேண்டாம்.

இழப்புகள் என்பது எனக்கு புதிதல்ல, பல துரோகங்களை நான் சந்தித்திருக்கின்றேன். இன்றும் பாரிய துரோகம் முதுகில் குத்தும் செயலை சந்தித்திருக்கின்றேன். செய்தவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

என்து அன்பின் இல்லம் அறக்கட்டளை, அம்மான் படையணியுடன் இணைந்து இன்றில் இருந்து எனது சேவையை ஆரம்பிக்கும் . குறிப்பாக வடக்கு கிழக்கில் அது தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்பதை உறுதிபட கூறுகின்றேன்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எனது இரு அமைப்புக்களும் அதனை சார்ந்த மக்களும் எமது தமிழர் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக சமூதாயத்துடன் இணைந்து ஓட வேண்டும்.

மற்றையபடி விருப்பு வாக்கின்படி ஒரு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்தால் நன்றாக இருக்கும்.

அதேநேரம் எமது தமிழ் இருப்பை ஒற்றுமையாக காட்டவேண்டும் என்பதற்காக தமிழ் மக்களுடன் சமுதாயத்துடன் இணைந்து பயணிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

 

https://akkinikkunchu.com/?p=291785

மந்துவில் படுகொலையின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது

3 months ago

Published By: VISHNU   16 SEP, 2024 | 07:34 PM

image
 

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

IMG_20240916_172518.jpg

குறிப்பாக கடந்த 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதியன்று மந்துவில் சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 24 அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

IMG-20240915-WA0167.jpg

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாய்த் தமிழ் பேரவை அமைப்பின், தாய்த்தமிழ் நினைவேந்தல் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.

IMG-20240915-WA0309_1_.jpg

குறித்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற மந்துவில் சந்தி வளாகத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

IMG-20240915-WA0285_1_.jpg

அந்தவகையில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு இந்த நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிரிழந்தவர்களின் உறவுகள்  பொதுச்சுடரை ஏற்றி, நிகழ்வேந்தல் நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.

IMG-20240915-WA0295.jpg

தொடர்ந்து குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் திருவுருவப் படங்களுக்கு, உயிர்நீத்தவர்களின் உறவுகள் மலர்மாலை அணிவித்து, ஈகைச்சடேரேற்றி, மலர்தூவி, கண்ணீர் சொரிந்து உணர்வெழுச்சியுடன் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.

IMG-20240915-WA0301.jpg

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் தாய்த்தமிழ் பேரவை அமைப்பின் ஸ்தாபகர் எஸ்.சத்தியரூபன், தாய்த் தமிழ் பேரவை அமைப்பு நிர்வாகிகள், படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240915-WA0287_1_.jpg

IMG-20240915-WA0283.jpg

IMG-20240915-WA0222.jpg

IMG-20240915-WA0219.jpg

IMG-20240915-WA0192.jpg

IMG-20240915-WA0215.jpg

IMG-20240915-WA0195.jpg

IMG-20240915-WA0184.jpg

IMG-20240915-WA0185.jpg

IMG-20240915-WA0172.jpg

IMG-20240915-WA0171.jpg

https://www.virakesari.lk/article/193880

அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவது தான் எமது எதிர்பார்ப்பு - அநுர குமார

3 months ago
16 SEP, 2024 | 05:27 PM
image
 

ல கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வசிக்கின்ற நாடே எமது நாடு. அதனால் இந்த நாட்டின் எதிர்காலம் இந்த பல்வகைமை கொண்ட மக்கட்குழுக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவினால் மாத்திரமே நிலைத்திருக்கும். அதனால் தேசிய மக்கள் சக்தியின்  ஆட்சி  உங்களின் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை, மொழியைப் பேசுவதற்கான உரிமையை வழங்குகின்ற ஆட்சியாகும். உங்கள் கலாசார அடையாளத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதுதான் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

"நாடு அநுரவோடு" என்கிற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம்  சாய்ந்தமருதில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் கூறுகையில், 

இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின்  வெற்றி நிச்சயம்

நீண்ட காலமாக இந்த ஆட்சியாளர்கள் எமது நாட்டை ஆட்சி செய்தார்கள். நாடும் மக்களும்   வறுமையின் அடிமட்டத்துக்கே போய் வீழ்ந்தனர். ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பப்பட்டார்கள், நாடு வீழ்ந்தது. நாங்கள் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கமொன்றை அமைப்போம். 

இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்வோம். இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின்  வெற்றி நிச்சயம். தெற்கில் வசிக்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்து இருக்கிறார்கள். 

சாய்ந்தமருதில் வசிக்கின்ற முஸ்லிம் மக்களின் தீர்மானம் என்ன? நீங்கள் உரத்த குரலில் கூறுவது போல் தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்பது உறுதியானது.

உங்கள் கலாசார அடையாளத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதுதான் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு.

எமது வெற்றியை தடுப்பதற்காக இன்று பல்வேறு தரப்பினர்கள் எமக்கு எதிரான சேறுபூசுதல்களிலும் பொய்யான  தகவல்களை பரப்புவதிலும் ஈடுபட்டுள்ளார்கள். 

அண்மையில் ஹிஸ்புல்லா இங்கு வந்தாரா? அவர் வந்து எம்மைப் பற்றிய பல அவதூறுகளையும் பொய்களையும் கூறியிருக்கிறார். முஸ்லிம் மக்கள் மத ரீதியாக கொண்டாடுகின்ற இரண்டு தருணங்கள் இருக்கின்றன. ஒன்று, ரமழான் வைபவம். அடுத்தது, ஹஜ்ஜி வைபவம். 

நாங்கள் வந்ததும் இதில் ஒன்றை நிறுத்துவோமென ஹிஸ்புல்லா கூறியுள்ளார். அவருடைய மண்டையை பரிசோதித்துப் பார்க்கவேண்டும். மக்களை பள்ளிவாசலுக்குப் போக அனுமதிக்கமாட்டோம் எனவும் கூறியுள்ளார். இவர்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் வந்து அவ்வாறான கதைகளைக் கூறுகிறார்கள். 

ஐக்கிய மக்கள் சக்தியின் திஸ்ஸ அத்தநாயக்க, நாங்கள் அதிகாரத்துக்கு வந்ததும் கண்டி பெரஹெரவை நடாத்தவிடமாட்டோம் என்று கூறுகிறார். அவர்களின் மேடைகளில் ஏறுகின்ற ஒருசில பிக்குமார்கள் நாங்கள் வந்தால் தானம் கிடைக்கமாட்டாதெனக் கூறுகிறார்கள். இவை அரசியல் கதைகளா? அவை அரசியல் விமர்சனங்களா?  அவை குறைகூறல்கள். அவைதான் பொய்கள். உண்மையாகவே மதம் பற்றிய கௌரவம் இருக்குமானால், மதம் சம்பந்தமான சுதந்திரத்தை உண்மையாகவே எதிர்பார்ப்பின் அவற்றை அரசியல் மேடைகளில் கூறக்கூடாது.  அவை மதவாதத்தைக் கிளப்புகின்ற பேச்சுகள். 

எமது நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் வசிக்கின்ற நாடு. சிங்களவர்களுக்கு தமக்கே உரித்தான கலாசாரமொன்று தமிழர்களுக்கு தனித்துவமான கலாசாரமொன்று முஸ்லிம்களுக்கு தனித்துவமான கலாசாரமொன்று என்ற வகையில் பல கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வசிக்கின்ற நாடே எமது நாடு. அதனால் இந்த நாட்டின் எதிர்காலம் இந்த பல்வகைமை கொண்ட மக்கட்குழுக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவினால் மாத்திரமே நிலைத்திருக்கும். அதனால் தேசிய மக்கள் சக்தியின்  ஆட்சி  உங்களின் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை, மொழியைப் பேசுவதற்கான உரிமையை வழங்குகின்ற ஆட்சியாகும். உங்கள் கலாச்சார அடையாளத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதுதான் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு. 

தேசிய ஒற்றுமை நிலவுகின்ற ஒரு  நாடே எங்களுக்குத் தேவை

இப்போது ஹிஸ்புல்லா பொய்யான  உண்மையற்ற விடயங்களை பரப்பத் தொடங்கியிருக்கிறார். நாங்கள் எங்கள் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளோம். ஏதேனும் மதம் பற்றி, கலாசாரம் பற்றி, மொழி பற்றி எவரேனும் தீவிரவாதக் கருத்தினைப் பரப்புவாராயின் அதற்கெதிராக முறைப்பாடு செய்து சட்டத்தினால் தண்டனை வழங்கவதற்கான ஆணைக்குழுவொன்றை நியமிப்போம். அரசியலில் மதவாதக் கூற்றுகளை வெளியிடுவதை, இனவாதக் கூற்றுகளை வெளியிடுவதை நிறுத்துவதுதான் தேசிய சக்தி அரசாங்கத்தின் பொறுப்பாகும். 

தேசிய ஒற்றுமை நிலவுகின்ற ஒரு  நாடே எங்களுக்குத் தேவை. அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்கின்ற நாடே எமக்குத் தேவை. அதனால்தான் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம். 

செப்டெம்பர் 21ஆம் திகதி நாங்கள் வெற்றிபெற வேண்டும்.  தெற்கிலுள்ள மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது மாத்திரமல்ல, கிழக்கிலுள்ள உங்களின் நம்பிக்கையும் எமக்குத் தேவை. வடக்கிலுள்ள மக்களின் நம்பிக்கையும் எமக்குத் தேவை. இலங்கையில் முதல் தடவையாக தெற்கின் மக்களும் கிழக்கின் மக்களும் வடக்கின் மக்களும் மலையக மக்களும் ஏற்றுக்கொள்கின்ற அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரதும் நம்பிக்கையை வென்றெடுத்த ஓர் அரசாங்கத்தை நாங்கள் அமைத்திடுவோம். 

ஒற்றுமையின் இயக்கமொன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது

இதற்கு முன்னர் அரசியல் கட்சிகள் போட்டிக்கு வருவது எப்படியென உங்களுக்குத் தெரியும். சஜித் வருவது ஹக்கீமை தோளில் வைத்துக்கொண்டே. ரணில் வருவது அதாவுல்லாவை தோளில் வைத்துக்கொண்டே. நாங்கள் வருவது மக்களை தோளில் வைத்துக்கொண்டு... உங்களின் நம்பிக்கையால்தான். அதோ அவ்வாறான ஒற்றுமையின் இயக்கமொன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அது தமிழ் மக்களை, சிங்கள மக்களை,  முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சியையோ தலைவர்களையோ பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒன்றல்ல. அதுதான் தேசிய மக்கள் சக்தி. இன்று இங்கே பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் எமது சகோதர சகோதரிகள் ஒன்றுசேர்ந்து எமக்கு  கூறுவது என்ன? எம்மை நம்பியமைக்காக  உங்களுக்கு நன்றி. நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு துளியளவிலேனும் சேதமேற்படுத்தாமல் அதனைப் பாதுகாப்போமென நாங்கள் உங்களுக்கு உத்தரவாதமளிக்கிறோம்.

இனவாதத்தில் வீழ்ந்திடாத, அந்த சேற்றில் அமிழ்ந்துவிடாத ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே

2015இல் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தது உங்களுக்குத் தெரியும். அவர்கள் மீண்டும் அரசியலில் கரைசேர ஒரு பாதையைத் தேடிக்கொண்டு இருந்தார்கள்.  அவர்களால் திருட்டுகளை நிறுத்துகிறோம் எனக்கூறி  அதிகாரத்தைப் பெறமுடியாது, ஜனநாயகத்தை நிலைநாட்டுவொம் எனக் கூறி அதிகாரத்தைப் பெறமுடியாமல்,  2015இன் பின்னர் நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க முடியுமெனக் கூறி அதிகாரத்தைப் பெற முடியாது. அதனால் ராஜபக்ஷாக்கள் அதிகாரத்தைப் பெறுவதற்கான வீதி வரைபடமொன்றை தயாரித்து விரித்தார்கள். அதற்காக முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத இயக்கமொன்றை ஆரம்பித்தார்கள். உண்டால் மலடாகின்ற கொத்து ரொட்டி தயாரிப்பதாகக் கூறினார்கள். மீண்டும் வருவதற்காக இனவாதத்தை விதைக்கத் தொடங்கினார்கள். முஸ்லிம் கடைகளில் மலட்டு உடைகளை விற்பதாகக் கூறினார்கள்.  அவற்றை அணிந்தால் மலட்டுத்தன்மை ஏற்படுமெனக் கூறினார்கள். இனவாதத்தைக் கிளப்பினார்கள். சிங்களப் பெண்களை மலடாக்குகின்ற மலட்டு மருத்துவர்கள் இருப்பதாகக் கூறினார்கள். 

2019இல் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள மதத்தைப் பாதுகாத்துக்கொள்ள அவரை வெற்றியீட்டச் செய்விக்குமாறு கோட்டாபய கூறினார். சிங்கள மக்கள் முண்டியடித்துக்கொண்டு போய் வாக்குகளைப் போட்டு வெற்றிபெறச் செய்வித்தார்கள்.  இப்போது அந்த மொட்டு எங்கே? அந்த மொட்டு அரசாங்கம்தான் கொவிட் பெருந்தொற்றுவேளையில் முஸ்லிம்கள் இறந்தால் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்காமல்  தகனம் செய்யுமாறு கூறியது.  இப்போது அந்த மொட்டின் பெரும்பான்மையினர் ரணிலோடுதான் இருக்கிறார்கள்.  

இப்போது மொட்டின் தலைவர் ரணில். ஏனையோர் எவருடன் இருக்கிறார்கள்? மொட்டின் தவிசாளர் ஜீ்.எல். பீரிஸ் உள்ளிட்ட இனவாதத்தை விதைத்தவர்கள் முஸ்லிம் ஜனாஸாக்களை தகனம் செய்யுமாறு தீர்மானிக்கையில் அமைச்சரவையில் இருந்த  ஜீ. எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, நாலக்க கொடஹேவா இன்று எங்கே இருக்கிறார்கள்? சஜித் பிரேமதாசவிடம். இனவாதக் கும்பல்கள் எல்லாமே இன்று அவர்களிடமே இருக்கின்றது. அதனால் நீங்கள் ரணிலைப் பார்த்தாலும் மொட்டின் அரைப்பகுதியுடன். சஜித்தைப் பார்த்தாலும் மொட்டின் அரைப்பகுதியுடன். அவர்கள் அனைவருமே இனவாதத்தை விதைத்தவர்கள். அதோ அந்த இனவாதத்தில் வீழ்ந்திடாத, அந்த சேற்றில் அமிழ்ந்துவிடாத ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. நான் உங்களிடம் கேட்கிறேன் யாரை  தெரிவுசெய்யப் போகிறீர்கள்? தெரிவுசெய்ய  வேண்டியது தேசிய மக்கள் சக்தியையாகும்.

அங்குமிங்கும் தாவுகின்ற இந்த அரசியலை நிறுத்தவேண்டாமா?

இந்த அரசியலில் ஓர் அசிங்கமான சூதாட்டம் நிலவுகின்றது. அங்குமிங்கும் தாவிக்கொண்டு இருக்கிறார்கள். அங்கும் வாங்கிக்கொள்கிறார்கள். இங்கும் வாங்கிக்கொள்கிறார்கள். இப்போது அதாவுல்லா எந்தப் பக்கத்தில்?  அங்குமிங்கும் தாவுகின்ற இந்த அரசியலை நிறுத்தவேண்டாமா?   இந்த அசிங்கமான அயோக்கியத்தனமான அரசியல் காரணமாகவே எமது நாடு நாசமாகியது. கடந்த மாதம் ஏசுகிறார்கள். இந்த மாதம் போய் கட்டிப்பிடிக்கிறார்கள். இதனை மாற்றியமைத்திட வேண்டாமா? வேண்டும். இப்போது அந்த கீதா நோனாவைப் பாருங்கள். சென்ற வாரம் ரணில்தான் டொப் எனக் கூறுகிறார். இந்த வாரம் சஜித் தான் டொப் எனக் கூறுகிறார். அவர்களுக்கு வெட்கம் கிடையாது. எடுப்பவர்களுக்கும் வெட்கம் கிடையாது. 

வடக்கிற்குச் சென்றும், கிழக்கிற்குச் சென்றும், தெற்கிற்குச் சென்றும் ஒரே கதையைக் கூறுகின்ற ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே.

மகரகம பொதுபல செனையின் மேடையில் ஏறிய சம்பிக்க ரணவக்க இப்போது சஜித்துடன். ரிசாட் பதுருதீனும் சஜித் பிரேமதாசவுடன். சஜித் பிரேமதாச கிழக்கிற்கு வரும்போது ஹக்கீமை அழைத்து வருகிறார், சம்பிக்கவை ஒளித்துவைத்துவிட்டு வருகிறார்.  மாத்தறைக்குப் போகும்போது ஹக்கீமை ஒளித்துவைத்துவிட்டு சம்பிக்கவை கூட்டிக்கொண்டு போகிறார். மன்னாருக்கு போகும்போது றிசாட் பதுருதீனை கூட்டிக்கொண்டு போகிறார்.  சம்பிக்கவை ஒளித்துவைத்துவிட்டுப் போகிறார்.  காலிக்குப்பொகும்போது ரிசாட்டை ஒளித்துவைத்துவிட்ட சம்பிக்கவை கூட்டிக்கொண்டு போகிறார். கொள்கைப்பிடிப்பு இல்லாத அரசியல்வாதி. 

இன்று வடக்கிற்குச் சென்றும், கிழக்கிற்குச் சென்றும், தெற்கிற்குச் சென்றும் ஒரே கதையைக் கூறுகின்ற ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. நாங்கள் இந்த விளையாட்டை  மூடிமறைத்து 'பிளே' பண்ணவில்லை. அவர்கள் மறைமுகமாகவே விளையாடுகிறார்கள். அவர்களைத் தோற்கடித்திட இந்த அசிங்கமான விளையாட்டே போதும். இவையனைத்தையும் கருத்தில்கொண்டு நாங்கள் செப்டெம்பர் 21ஆம் திகதி நல்லதொரு முடிவினை எடுக்கவேண்டும். அவர்கள் வருவது பகிர்ந்துகொள்வதற்காகவே. சிறப்புரிமைகளைக் கைவிடுகின்ற அரசியல்வாதிகள் இருக்கின்ற ஓர் அரசாங்கத்தை நாங்கள் அமைத்திடுவோம்.

எமது நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டும்

இந்த நாட்டில் தூள் வியாபாரம், பாதாள உலகின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். இந்த தேர்தலுக்காக அவர்கள் செலவுசெய்வது தூள் வியாபாரிகளின் பணத்தையாகும். எமது நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டும். தூள் வியாபாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அதோ அந்த வேலையை செய்வது தேசிய மக்கள் சக்தியாகும். இந்த ஆட்சியார்கள் ஒருபோதுமே அதனை செய்யமாட்டார்கள். விரும்பிய எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவந்து இங்கே விற்பனை செய்கின்ற வழிமுறையையே அவர்கள் விரும்புகிறார்கள்.  அப்போதுதான் ஆட்சியாளர்களக்கு கொமிஸ்  கிடைக்கும். ரணிலின் அரசாங்கத்தில் படகுகள் கரையில் குவிந்துள்ளன. மாலைதீவிலிருந்து  கருவாடு இறக்குமதி செய்கிறார்கள். மீன்களுக்கு வாக்குரிமை இருந்தால் ரணிலுக்கே வாக்குகள் கிடைக்கும். நாங்கள் இந்த நாட்டில் கடலுக்குச் செல்கின்ற அனைத்து மீனவர்களுக்கும் அவசியமான நிவாரணங்கள் அனைத்தையும் வழங்குவோம். 

இந்தப் பிரதேசத்தில் கடலரிப்பு காரணமாக கரையோரம் உள்நாட்டை நோக்கி வருகின்றது. ஒருசில தென்னந்தோட்டங்கள், கட்டடங்கள் கடலில் அமிழ்ந்துள்ளன.  அதனால் இந்த கரையோரத்தை பேணிப் பாதுகாத்து கடலரிப்பினைத் தடுக்க அவசியமான சுற்றாடல் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும்.  அவ்வாறு செய்து பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயமாக அதனை செய்யும். இந்நாட்டின் இளைஞர்கள் தொழிலை தேடிக்கொள்வதென்பது கனவாகும். இயலுமானவர்கள் தொழில் தேடி வெளிநாடு செல்கிறார்கள். நாங்கள் மக்கள் வாழக்கூடிய அழகான ஒரு நாட்டை உருவாக்கிடவேண்டும். அதற்காக செப்டெம்பர் 21ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்போம். 

நாட்டை சீராக்குகின்ற அரசாங்கமொன்றைக் கட்யெழுப்புவோம். திருட்டுகளை நிறுத்துகின்ற, மக்களின் சொத்துக்களை திருடிய அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்குகின்ற அரசாங்கமொன்றை, திருடிய பொதுமக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்கின்ற, உண்மையான மக்கள் நேயமுள்ள  அரசாங்கமொன்றை நாங்கள் இந்த நாட்டில் கட்டியெழுப்புவோம்.  செப்டெம்பர் 21ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயமே.

https://www.virakesari.lk/article/193868

தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்; தேர்தலைப் பகிஷ்கரிப்பதே சிறந்த வழி - கஜேந்திரகுமார்!

3 months ago
16 SEP, 2024 | 07:09 PM
image

(நா.தனுஜா)

தமிழ் மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும், ஒற்றையாட்சியை வலியுறுத்தும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கும் பட்சத்தில், தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கான சகல சதித்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என எச்சரித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எனவே தமிழ்த்தேசியக் கொள்கைக்கு உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பு எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமாக மாத்திரமே சாத்தியமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இம்முறை ஜனாதிபதித்தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என வலியுறுத்திவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் இன்று  திங்கட்கிழமை (16) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.    

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,    

இம்முறை ஜனாதிபதித்தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு பற்றி நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இருப்பினும் இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் நான் இங்கு இருந்திருந்தால் எனது நிலைப்பாடு வேறானதாக இருந்திருக்கும் என்று சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு சில கருத்துக்கள் பகிரப்பட்டுவருகின்றன.   

இருப்பினும் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் கொள்கை ரீதியில் சில விடயங்களை நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். குறிப்பாக 2009 உடன் தமிழ்த்தேசிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவிட்டதாகவே சிங்கள தேசம் நம்பியது. சிங்கள தேசியவாதத்தின் ஊடாக தமிழ்த்தேசியவாதத்தை முடிவுக்குக்கொண்டுவந்துவிடலாம் என நம்பப்பட்ட சூழலில், நாம் அதனை நிராகரித்து தமிழ்த்தேசிய தொடர்பான நிலைப்பாட்டை உறுதியாகக் கடைப்பிடித்துவந்திருக்கிறோம்.   

அந்த வகையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்காமல், அதேநேரம் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி, சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிக்காட்டக்கூடிய ஒரேயொரு தேர்தல் ஜனாதிபதித்தேர்தல் மாத்திரமேயாகும். ஏனெனில் இத்தேர்தலின் ஊடாக நாம் அடைந்துகொள்ளப்போவது எதுவுமில்லை. எனவே இத்தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் ஊடாக சிங்கள தேசியவாதம் உச்சத்தில் இருக்கையில் தமிழ்த்தேசியவாதம் மூலம் வலுவான அழுத்தத்தைப் பிரயோகிக்கமுடியும்.  

அடுத்ததாக எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுக்கட்டமைப்பினரால் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் தமிழர்களுக்கு சாபக்கேடாக இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை ஆதரித்தவர்களும், ரணில் விக்ரமசிங்கவே சிறந்த ஆட்சியாளர் எனக் கூறியவர்களுமே தற்போது அந்தப் பொதுக்கட்டமைப்பில் இருக்கிறார்கள்.  

எனவே அவர்கள் பொதுவேட்பாளரைக் களமிறக்குவதன் ஊடாக தமிழ்த்தேசியத்தைக் கைவிட்டு, ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தத்தை முன்னிலைப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க முயற்சிக்கிறார்கள். எனவே தமிழ் மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும், ஒற்றையாட்சியை வலியுறுத்தும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கும் பட்சத்தில், தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கான சகல சதித்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்பதை இப்போதே கூறிவைக்கிறோம்.  

அதேபோன்று இங்கு நாம் பூகோள அரசியல் சூழலையும் கருத்திற்கொள்ளவேண்டும். மேற்குலக நாடுகளும், இந்தியாவும் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டுவதையே விரும்புகின்றன. ஆனால் ரணில் விக்ரமசிங்கவை தமிழ் மக்களுக்கு சாதகமானவராகக் காண்பித்துவந்த நிலை மாறியிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அவருக்கு தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை இந்தியாவும், மேற்குலகமும் புரிந்துகொண்டிருக்கிறது.   

ஆகவே ஏனைய வேட்பாளர்களுக்கு அளிக்கப்படக்கூடிய வாக்குகளை ரணில் விக்ரமசிங்கவுக்கு அளிக்கச்செய்வதிலும் அல்லது ரணிலுக்குக் கிடைக்காத வாக்குகள் ஏனைய வேட்பாளர்களுக்கும் கிடைக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதையும் இலக்காகக்கொண்டு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இதுவரையில் சமஷ்டி என்ற வார்த்தையை உச்சரிக்காமல் இருந்த தமிழரசுக்கட்சி, இம்முறை தேர்தலில் சமஷ்டியை வலியுறுத்தி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருக்கிறது. எனவே இன்றளவிலே தமிழ்த்தேசியக் கொள்கைக்கு உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பு எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமாக மாத்திரமே சாத்தியமாகும். ஆகவே இனிவருங்காலங்களில் தமிழர்களை எவ்வகையிலும் ஏமாற்றமுடியாது என்பதை இந்தத் தேர்தலில் காண்பிக்கவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/193863

கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம் ; அனைத்து சிவில் சமூக ஒன்றியம் தெரிவிப்பு!

3 months ago
16 Sep, 2024 | 01:58 PM
image
 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக 174 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட போராட்டமானது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருப்பதாக அனைத்து சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது.         

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அனைத்து சிவில் சமூக ஒன்றிய நிலைப்பாடு மற்றும் வடக்கு பிரதேச செயலக போராட்டம் அரசியல்  நிலைப்பாடுகள் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை பாண்டிருப்பு பகுதியில் உள்ள அதன் அலுவலகத்தில்  மேற்கொண்டு  இவ்வாறு  குறிப்பிட்டனர்.  

மேலும் தெரிவித்ததாவது,       

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உரிமைகளை மீட்பதற்காக கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்டு காணப்படுகின்ற 29 கிராம சேவையாளர் பிரிவுகளுக்குள்ளும் வாழுகின்ற பொதுமக்கள் பொது அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒழுங்கமைத்து நடத்திக் கொண்டிருக்கின்ற உரிமைக்கான மக்கள் போராட்டமானது இன்றோடு 174 வது நாளாகவும் எமது இலக்கு நோக்கி எமது மக்களுடைய அபிலாசைகளோடு அவர்களால் உருவாக்கப்பட்ட அந்த திட்டமிடல்களோடு தொடர்ச்சியாக நடந்து வருகின்றது.  

ஆனாலும் எமது மக்கள் போராட்டத்தின் போது கலந்து கொண்டிருந்த பல அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் சார் தீர்மானங்களை முடிவுகளை எடுக்கக்கூடிய நபர்கள் மூலமாகவும் அரசுக்கு பல்வேறு செய்திகளை நாங்கள் வழங்கி இருந்தோம். அது மாத்திரமில்லாமல் போராடுகின்ற மக்கள் சார்பாக அன்று நடைபெறுகின்ற போராட்டம் தொடர்பிலான ஆதாரங்களோடும் எமது மக்களுடைய கோரிக்கைகளோடும் அனைத்து சிவில் சமூகக் கட்டமைப்பினுடைய இறப்பர் முத்திரையோடு தொடர்ச்சியாகவும் இந்த நாட்டினுடைய ஜனாதிபதி, பிரதமர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர்,அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர்.மாவட்ட செயலாளர் என பல தரப்பினருக்கும் எமது கோரிக்கைகளை தொடர்ச்சியாக அனுப்பியிருந்தோம் .   

இருந்தாலும் கூட ஒரு சில பதில்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் அமைச்சின் செயலாளர் போன்றவர்களிடமிருந்தும் மாவட்ட செயலாளரிடமிருந்தும் கிடைத்திருந்தாலும் அவைகளிலே எது விதமான திருப்தியும் எங்களுக்கு இல்லை அல்லது எங்களுடைய கோரிக்கைகளுக்குரிய பதிலாக அவைகள் அமையவில்லை என்பதை வெளிப்படுத்துவதோடு அதையும் கடந்து தொடர்ந்தும் எங்களுடைய மக்கள் உரிமைக்காக வீதியில் இறங்கிக் குரல் கொடுத்து அமைதி வழியில் போராடுகின்றனர்.   

ஆனாலும் இந்த அரசு எமது மக்களுடைய போராட்டத்தை மதிக்கவோ அல்லது எமது மக்களுடைய நியாயமான போராட்டத்திற்கான தீர்வை வழங்குவதற்கோ முன் வந்திருக்கவில்லை என்பதையும் மாறாகத் தொடர்ந்தும் ஏமாற்றியே வந்துள்ளது என்பதையும் கூற கடமைப்பட்டுள்ளதோடு இந்தப் போராட்டமானது ஒரு இனத்திற்கோ அல்லது தனி நபர்களுக்கோ எதிரானது கிடையாது என்பதையும் இது ஒரு அரச நிர்வாக ரீதியான கட்டமைப்பை சீர் செய்வதற்கான போராட்டம் மாத்திரமே என்பதையும் வெளிப்படுத்துகின்றோம். 

இவ்வாறான சூழ்நிலையில் இந்த நாட்டில் ஒரு ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து இந்த நாட்டின் தற்போதைய ஜனாதிபதி எனும் அடிப்படையில் எமக்கான தீர்வை வழங்கக்கூடிய உயர் அதிகாரத்தில் இருக்கும்  ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் தொடர்ந்தும் நேரடியாகவும் அரசியல்வாதிகள் ஊடாகவும் ஜனாதிபதியினுடைய கவனத்திற்கு எமது விடயத்தைக் கொண்டு செல்லக்கூடியவர்கள் ஊடாகவும் பல்வேறு முயற்சிகளை நாங்கள் எடுத்திருந்தோம்.  

விசேடமாக எமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிழக்கு மாகாண ஆளுநர் ,ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட 24 மணி நேர செயற்குழு தலைவர் உள்ளிட்டவர்கள் மற்றும் பல தமிழ் சிங்கள அரசியல்வாதிகள் ஊடாகவும் பல முயற்சிகள் எடுத்திருந்தும் எமது வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலை காணப்படுவதோடு நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டோம்.  

மேலும் இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற  அமைச்சர்கள்  வியாழேந்திரன் மற்றும்  பிள்ளையான் போன்றவர்களுடன் கூட நாங்கள் பேசியிருந்தோம் எமக்காக ஜனாதிபதியோடு பேசி எமது உரிமைக்கான குரலாக நீங்களும் இருந்து குறைந்தது ஒரு கணக்காளரை பெற்றுத் தாருங்கள் அல்லது நடைமுறையில் இருந்து நிறுத்தப்பட்டிருக்கின்ற வங்கிக் கணக்கையாவது மீள திறந்து தாருங்கள் என்றும் கேட்டிருந்தோம்.

யாரும் இதுவரை அதை செய்து கொடுக்கவில்லை எமக்காக எதையும் செய்யவும் இல்லை என்பதையும் அவர்களும் தொடர்ந்தும் இன்றுவரை எமது மக்களை ஏமாற்றியுள்ளனர் என்பதையும் வெளிப்படுத்துவதோடு மீண்டும் இறுதியாக நாங்கள் கடந்த 11.09.2024 அன்றும் கூட திருக்கோவில் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதியினுடைய தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது எங்களுக்காக ஒரு தீர்வை தர இருக்கிறார் என்று அறிந்தோம் குறைந்தபட்சமாக ஒரு கணக்காளர் அல்லது அதனிலும் குறைவாக தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட பின்னர் செயல்படுத்தக் கூடியதாக இருக்கின்ற நிறுத்தப்பட்ட வங்கிக் கணக்கை மீண்டும் ஆரம்பிப்பது பற்றியும் நாங்கள் கேட்டிருந்தோம். 

 ஆனால் அதுவும் எங்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை என்பதையும் கூறுவதோடு நாங்கள் நூறு வீதம் நம்பி இருந்த ஜனாதிபதியினுடைய பதில் இவ்வாறுதான் இருந்தது என்பதையும் எமது மக்களுக்குத் தெளிவுபடுத்துவதோடு, இதுவரையில் ஜனாதிபதியின் தரப்பிலிருந்து எங்களை பலர் சந்தித்திருக்கிறார்கள் அதே போன்று நாங்களும் அவரை பல தடவைகள் பலதரப்புகள் ஊடாக சந்தித்திருக்கிறோம். 

ஆனாலும் இதில் எந்த நன்மையும் இதுவரை ஏற்படவில்லை என்பதையும் இன்றுவரை அவர் எமது மக்களை ஏமாற்றிவிட்டார் என்பதையும் ஆனால் எமது மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களது முகவர்கள் மற்றும் உள்ளுார் அரசியல்வாதிகளாடாக பொய் செய்திகள் வாக்குறுதிகளோடு பலர் வருகிறார்கள் அவர்கள் யாரையும் நம்ப வேண்டாம் எமது செயல்க விடயத்தில் அவர்கள் கூறும் செய்திகளும் வாக்குறுதிகளும் பொய்யானவை என்பதையும் வெளிப்படுத்துகிறோம்.  

அதே போன்று மற்றுமொரு வேட்பாளராக இருக்கக்கூடிய  சஜித் பிரேமதாச  தரப்பில் இதுவரை யாரும் போராட்டம் செய்து வருகின்ற மக்களை அல்லது மக்கள் சார்ந்தவர்களை சந்திக்கவில்லை என்பதையும் நாங்களும் சந்திப்பதற்கான சந்தர்ப்பங்களை அவர்கள் எங்களுக்கு ஏற்படுத்தவில்லை என்பதையும் வெளிப்படுத்துவதோடு அவர்கள் தற்போது ஆட்சியாளர்கள் கிடையாது.   

குறைந்தபட்சம் வாக்குறுதியையாவது தருவதற்கு முன்வராதது ஏன் என சிந்திக்க வைப்பதோடு சிலவேளை அவருடன் எமது செயலக விடயத்திற்கு எதிராக செயற்படுகின்ற தரப்பினர் இருப்பதனால் எம்மை சந்திக்கவில்லையோ என நினைப்பதோடு அதுவும் காரணமாக இருக்கலாம் என்பதையும் நாங்கள் வெளிப்படுத்துவதோடு இவர்கள் தரப்பிலும் இதன்பின்னர் யாராவது அவர்களது முகவர்கள் அல்லது உள்ளுார் அரசியல்வாதிகள் பொய் செய்திகள் பொய் வாக்குறுதிகளுடன் வரலாம் என்பதால் அவர்கள் தொடர்பிலும் அவதானமாக இருங்கள் என்பதையும் கூறுகின்றோம்.     

மேலும் மாற்றுமொரு தரப்பாக இருக்கின்ற .அநுரகுமார திசாநாயக்க அவர்களுடைய தரப்பிலிருந்து இரண்டு தடவை எம்முடன் தொலைபேசி மூலமாகப் பேசியிருந்தார்கள் இரண்டு தடவை எங்களை நேரிலும் சந்தித்திருந்தார்கள் அவர்களும் தற்போது ஆட்சியாளர்களாக இல்லை என்பதனால் எமக்கு வாக்குறுதிகளை வழங்கி இருந்தார்கள். 

அதாவது தாங்கள் ஆட்சிக்கு வருகின்ற பட்சத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் மாத்திரம் அல்ல இலங்கையில் காணப்படுகின்ற ஒட்டுமொத்தமான நிர்வாக ரீதியான அத்தனை பிரச்சினைகளும் அரசியல் தலையீடுகள் இன்றி தீர்த்து வைக்கப்படும் என்று ஒரு வாக்குறுதியை எங்களுக்கு வழங்கியிருந்தார்கள் என்பதையும் கூறிக்கொள்வதோடு இவர்கள் தரப்பிலும் சில முகவர்கள் ஒருநாளும் எமது மக்கள் போராட்டத் தளத்திற்கும் வராதவர்கள் மக்கள் போராட்டம் பிழை என கூறியவர்கள் தம்மை போராட்டக்குழு என அறிமுகப்படுத்திச் சென்று சுயலாப அரசியல் செய்திருக்கிறார்கள் எனவே அவர்கள் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருங்கள் எனவும் கூறிக் கொள்கிறோம். 

அத்தோடு இம்முறை தமிழர் தரப்பாக ஒரு வேட்பாளரும் களத்தில் தமிழரின் தனித்துவ அடயாளத்திற்காகவும் ஒற்றுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காகவும் நிறுத்தப்பட்டுள்ளதனால் அதுபற்றியும் பொதுமக்களாகிய நீங்களே சிந்திக்க வேண்டும் சிந்தித்து முடிவெடுத்து உங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் .  

 இந்த செய்தியாளர் மாநாடு ஊடாக நாங்கள் வெளிப்படுத்துவதோடு,இவ்வாறான நிலையிலே நாங்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாத தர்ம சங்கடமான சூழ்நிலை எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது அதேபோன்று எங்களுடைய மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும் இருந்தாலும் எங்களுடைய மக்கள் புத்திசாதுர்யமாக சிந்திக்க கூடியவர்கள் இவ்வளவு காலமும் ஒவ்வொரு தரப்புகளால் மாறி மாறி ஏமாற்றப்பட்டவர்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் அதனால் நன்றாக சிந்தித்து தங்களுடைய வாக்குகள் தங்களுக்கு உரித்தானது உரிமையுடையது அது பலம் மிக்கது என்பதினால் நன்றாக சிந்தித்து வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன், யாருக்கும் வாக்களிக்குமாறு கூற முடியாத ஒரு சூழ்நிலையில் எங்களுடைய கருத்தை வெளிப்படுத்துகிறோம். 

மேலும் இந்தத் தேர்தலில் வெற்றி பெறப் போகின்ற வெற்றி பெற்று எதிர்காலத்தில் நாட்டின் ஜனாதிபதியாக வரப் போகின்றவரிடம் நாங்கள் கேட்பது தயவு செய்து நீங்கள் ஜனாதிபதியாக வருகின்ற பட்சத்தில் எங்களுடைய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான நிர்வாக ரீதியான அத்தனை விடயங்களையும் தீர்த்துத் தனியான ஒரு பிரதேச செயலகமாக இது தனித்துவமாக இயங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் எனவும் பணிவாக கேட்டுக் கொள்வதோடு இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் பல தரப்புகளையும் சேர்ந்த பல முகவர்கள் உள்ளுார் அரசியல்வாதிகள் மக்களை நாடி வரலாம் பொய் செய்திகளையும் பொய் வாக்குறுதிகளையும் கூறி ஏமாற்றலாம்.   

ஆனால் அவை எதையும் நம்ப வேண்டாம் ஆனால் உங்கள் வாக்குகளைக் கட்டாயம் உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் சிந்தித்துச் செலுத்துங்கள் எனவும் கல்முனையில் எங்களின் வாக்கு பலத்தினை வெளிக்காட்டுவதற்கு அனைவரும் 100% உங்கள் வாக்குகளை நீங்கள் விரும்புகின்ற யாருக்காவது வழங்கி எமது வாக்குப் பலத்தை வெளிக் காட்டுவதன் மூலமாகவே எம்முடைய அடுத்தகட்ட நகர்வை நாங்கள் முன்னெடுக்க முடியும் .  

 உங்கள் வாக்களிப்பு வீத அதிகரிப்பு எமது போராட்டத்திற்கு இன்னும் அதிகமாக வலுச்சேர்க்கும் என்பதையும் கேட்டு எங்களுடைய போராட்டம் நாளைய 175 வது நாளுடன் தேர்தல் சட்ட விடயங்கள், அசௌகரியங்கள் எமது மக்களின் பாதுகாப்பு என்பவற்றைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாகத் தேர்தல் வரையும் நிறுத்தப்பட்டு எதிர் வருகின்ற தேர்தலில் வெற்றி பெற்று ஒரு ஜனாதிபதி வருகை தருகிற போது அவரிடமும் எங்களுடைய கோரிக்கை மக்கள் சார்பாக கொண்டு சேர்க்கப்பட்டு அவர்களுடைய தீர்வு எங்களுக்கு கிடைத்தால் அவர்களுக்கு விசுவாசமாக எங்களுடைய மக்கள் எப்போதும் இருப்போம் என்ற ஒரு விடயத்தையும் கூறி அவ்வாறு எங்களுக்கான தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் தொடர்ச்சியாக எங்களுடைய போராட்டம் தொடரும் என்பதையும் கூறிக் கொள்கின்றோம் என செய்தி அறிக்கையின் ஊடாக தெரிவித்தனர்.

edf__5_.jpeg

edf__6_.jpeg

கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம் ; அனைத்து சிவில் சமூக ஒன்றியம் தெரிவிப்பு! | Virakesari.lk

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல் - ஒருவர் கைது

3 months ago
கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல் - ஒருவர் கைது
16 Sep, 2024 | 06:02 PM
image
 

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் உள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தினை சேதப்படுத்திய சம்பவத்தில்  சந்தேகத்தின் பேரில் இன்று திங்கட்கிழமை (16) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.     

இந்த அலுவலகம் கடந்த 10ஆம் திகதி அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அதனுள்ளிருந்த பொருட்கள் சிலவும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.    

இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல் - ஒருவர் கைது | Virakesari.lk

மூன்று வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியை வழங்கச்செய்திருக்கிறோம்; எந்த வேட்பாளர் வென்றாலும் தீர்வை முன்னிறுத்திப் பணியாற்றுவோம் - சுமந்திரன்

3 months ago

(நா.தனுஜா)

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியைக் கொடுக்க வைத்திருக்கிறோம். எனவே மூவரில் எந்த வேட்பாளர் வென்றாலும், தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதை முன்னிறுத்திய நடவடிக்கைகளில் தமிழரசுக்கட்சி தொடர்ந்து ஈடுபடும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் மூவர் பிரதான வேட்பாளர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் மூவருடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். மூவருமே உச்சபட்ச அதிகாரப்பகிர்வினை முன்னிறுத்தி செயலாற்றுவதாகக் கூறியிருக்கின்றார்கள். அதில் ஏனைய வேட்பாளர்களை விட சஜித் பிரேமதாச சற்று அதிகமாகக் கூறியிருக்கிறார். எனவே அவருடன் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கிறது.

இருப்பினும் சஜித் பிரேமதாஸ வெற்றி பெறாமல் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது அநுரகுமார திஸாநாயக்கவோ வெற்றியீட்டினால் என்ன நிலைமை என்ற கேள்வி பலரால் கேட்கப்படுகின்றது. அது நியாயமான கேள்வி. எங்களுடைய நோக்கம் இவரோ அல்லது அவரோ வெல்லவேண்டும் என்பது அல்ல. மாறாக எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு பெறப்படவேண்டும் என்பதே நோக்கமாகும்.

 இவ்வாறானதொரு பின்னணியில் இந்த பிரதான மூன்று வேட்பாளர்களில் ஒருவர் தான் வெற்றி பெறமுடியும். ஆனால் மற்றைய இருவரும் கூட அவர்கள் வெளிப்படையாக நாட்டுமக்களுக்குக் கூறியிருக்கும் நிலைப்பாட்டின்படி, வெற்றி பெறும் வேட்பாளர் எடுக்கும் முயற்சிக்கு எதிராக செயற்படமுடியாது. எனவே மூன்று பிரதான வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியைக் கொடுக்க வைத்திருக்கிறோம். இது 'எமது மக்களின் வாக்குகளை உங்களுக்குத் தருகிறோம்.

அதேபோன்று நீங்கள் எமது மக்களுக்குரிய தீர்வைத் தாருங்கள்' என்ற பேரம் பேசுதலின் அடிப்படையில் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே மூவரில் எந்த வேட்பாளர் வென்றாலும், தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதை முன்னிறுத்திய நடவடிக்கைகளில் தமிழரசுக்கட்சி தொடர்ந்து ஈடுபடும். 

அதேவேளை மேற்குறிப்பிட்ட பேரம் பேசுதலின் அடிப்படையில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் உச்சபட்ச வாக்குறுதி அளித்த சஜித் பிரேமதாஸவுக்கு எமது மக்களின் வாக்குகளை அளிப்பதாகக் கூறியிருக்கின்றோம். எனவே இவ்விடயத்தில் தமிழ் மக்களும் ஒத்துழைப்பு சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்கவேண்டும் என்றார்.

மூன்று வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியை வழங்கச்செய்திருக்கிறோம்; எந்த வேட்பாளர் வென்றாலும் தீர்வை முன்னிறுத்திப் பணியாற்றுவோம் - சுமந்திரன் | Virakesari.lk

தவறான முடிவினை எடுத்து மூவர் உயிரிழப்பு! யாழில் சோகம்

3 months ago
dead-body-2.jpg?resize=612,375 தவறான முடிவினை எடுத்து மூவர் உயிரிழப்பு! யாழில் சோகம்.

யாழில் நேற்றைய தினம் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த மூவர் தவறான முடிவினை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 22 வயதான யுவதியொருவரும், பெரியவிளான் பகுதியை சேர்ந்த 13வயதான  சிறுவனொருவனும், நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த  33 வயதான இளைஞரொருவருமே இவ்வாறு தமது  உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மூவரின் மரணத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2024/1399565

சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்

3 months ago

Published By: DIGITAL DESK 3   16 SEP, 2024 | 11:00 AM

image
 

"சுமந்திரம்" எனும் பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 

யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவின் பிரச்சார கூட்டத்தில் குறித்த பத்திரிகையை எதிர்க்கட்சி தலைவரிடம் கையளித்து, பத்திரிகையை அறிமுகம் செய்ததுடன், கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும் பத்திரிகை இலவசமாக விநியோகிக்கப்பட்டது. 

குறித்த பத்திரிகையில் சஜித்தை ஏன் தமிழரசு கட்சி ஆதரிக்கிறது, ரணிலை ஏன் விழுத்த வேண்டும், தமிழ் பொது வேட்பாளர் அரசியல் தற்கொலை என சில கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 

https://www.virakesari.lk/article/193826

ஓட்டமாவடி மஜ்மா நகரில் கண்ணீர் சிந்தும் யானை!

3 months ago

Published By: DIGITAL DESK 3

16 SEP, 2024 | 10:33 AM
image

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் நடக்க முடியாமல் யானை ஒன்று கண்ணீர் சிந்திய நிலையில் காணப்படுகிறது.

இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை (16) மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.சமீம் வனவிலங்கு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இவ்வாறு நடக்க முடியாமல் விழுந்து கிடக்கும் யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் சிகிச்சையளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/193821

போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களுக்கு புதிய புனர்வாழ்வு நிலையம்

3 months ago

Published By: DIGITAL DESK 3   16 SEP, 2024 | 11:08 AM

image
 

போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கு ஒரு விசேட புனர்வாழ்வு நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த அமையம் வவுனியா பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 100 பெண்களுக்கு புனர்வாழ்வு அளிக்க முடியும்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள பெண்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும்.

இந்த புனர்வாழ்வு மையம் குறித்து  நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கு புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகம் அறிவித்துள்ளது.

அதன்படி, போதைப் பொருளுக்கு அடிமையான பெண்களை புதிய புனர்வாழ்வு மையத்துக்கு புனர்வாழ்விற்காக பரிந்துரைக்குமாறு நீதிச் சேவை ஆணைக்குழு அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/193819

கிளிநொச்சியில் 95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணெருவர் கைது

3 months ago

Published By: VISHNU   16 SEP, 2024 | 02:43 AM

image

கிளிநொச்சியில் 95 கிலோ கஞ்சாவுடன் பெண்ணெருவர் ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளார். 

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 95 கிலோ 520 கிராம் கேரளா கஞ்சா சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

IMG-20240915-WA0154.jpg

ஞாயிற்றுக்கிழமை (15) விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து அப்பகுதியை சுற்றி வளைப்பை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர்.

IMG-20240915-WA0153.jpg

அத்துடன், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திலும் ஒரு பொதி கஞ்சா இருந்தத்துடன் அப்பகுதியில் காணப்பட்ட கப்வாகனத்தையும் சிறப்பு அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர் 

அத்துடன்  இச்சம்வத்துடன் தொடர்புடைய பெண் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடையை பொருட்கள் அனைத்தும் பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பளை பொலிஸ் மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/193802

யாழில் தந்தை கைப்பேசி கொடுக்காததால் 13 வயதுச் சிறுவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

3 months ago

Published By: VISHNU   16 SEP, 2024 | 02:37 AM

image
 

விளையாடுவதற்கு தந்தை கைப்பேசி கொடுக்காததால் 13 வயதுச் சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்து ஞாயிற்றுக்கிழமை (15) உயிர்மாய்த்துள்ளான்.

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவனுக்கு அவனது தந்தை கைப்பேசியை கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் குறித்த மாணவன் வீட்டின் அறையில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளான்.

அவனது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அளவெட்டி அருணோதயாவில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

https://www.virakesari.lk/article/193801

Checked
Sun, 12/22/2024 - 22:04
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr