ஊர்ப்புதினம்

இலங்கை மக்கள் தெரிவு செய்யும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா எதிர்பார்ப்பு - ஜூலி சங்

3 months ago

Published By: DIGITAL DESK 2   15 SEP, 2024 | 10:01 PM

image
 

இலங்கை மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் (X) தளத்தில் இந்த விடயத்தினை பதிவிட்டுள்ளார். சர்வதேச  ஜனநாயக தினமான இன்றையதினத்தில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சர்வதேச  ஜனநாயக தினமான இன்றைய தினத்தில், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், நீதி போன்ற வலுவான மற்றும் நிலையான ஜனநாயகத்தின் கொள்கைகளை நாங்கள் கொண்டாடுகிறோம். தேர்தல்கள் மூலம் தங்கள் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு கருத்து இருப்பதை உறுதிசெய்கிறோம்.

இலங்கை மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவது இலங்கையின் ஜனநாயகத்திற்காக ஆற்றப்பட வேண்டிய முக்கிய கடமை எனவும் குறித்த பதிவில் அமெரிக்கத் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் மேற்படி கருத்துக்களை பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/193722

ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகாரப் பகிர்வு – யாழில் உறுதியளித்தாா் சஜித்!

3 months ago
WhatsApp-Image-2024-09-15-at-10.12.51-PM ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகாரப் பகிர்வு – யாழில் உறுதியளித்தாா் சஜித்!

ஒன்றிணைந்த நாட்டிற்குள் தமிழர்களுக்கான அதிகார பகிர்வினை குறுகிய காலத்திற்குள் மாகாண சபை ஊடக வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச யாழில் மீண்டும் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பாட்டிருந்த முரண்பாடுகள் மேலும் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் நேற்றைய கூட்டத்தில் முதன்முறையாக எம்.ஏ.சுமந்திரன் சஜித்தின் பிரசார மேடையில் பிரசன்னமாகியிருந்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பரப்புரை கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் உத்தியோக பூர்வமாக தேர்தல் மேடையில் ஏறி ஆதரவினை உறுதிப்படுத்தியிருந்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மேடை ஏறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சஜித் பிரேமதாச கலந்து கொண்ட தேர்தல் பரப்புரை கூட்டமானது நேற்று யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இராதா கிருஸ்ணன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ், ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் அமைப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது எம்.ஏ.சுமந்திரனால் வெளியிடப்பட்ட சுமந்திரம் பத்திரிகை எதிர்க்கட்சித் தலைவரிடம் நேற்று மேடையில் வைத்து கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கருத்துத் தொிவித்த சஜித் பிரேமதாச,

ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகார பகிர்வுக்காக குறுகிய காலத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடாத்துவோம். மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது.

அத்தோடு வடகிழக்கு மக்களுக்காக நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தவுள்ளோம். வடகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.

மதுபான சாலைக்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டவர்கள் எம்மோடு இல்லை.

இன, மத, குல, கட்சி பேதங்களின்றி நாட்டை கட்டியெழுப்புவதற்காக இணைந்து கொண்டவர்களே எம்மோடு இருக்கின்றார்கள்

வடகிழக்கு பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்போம்.

நல்லிணக்க செயற்பாடுகளின் ஊடாகவே பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர முடியும். தொடர்ந்தும் அலறிக் கொண்டிருக்கின்ற பிரச்சினையை தீர்க்காமல் வைத்திருக்க முடியாது.

அது நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கின்றமையால் நல்லிணக்கத்தை மையப்படுத்தி இளைஞர்களை வலுப்படுத்தும் வேலை திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்” என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மேலும் தொிவித்தாா்.

https://athavannews.com/2024/1399540

தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்

3 months 1 week ago

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவிலுள்ள அனைவரிடமும் கலந்தாலோசிக்காமல் தனிப்பட்ட ரீதியில் சிலர் எடுத்த முடிவானது தமிழரசுக் கட்சி விட்ட மாபெரும் தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு, சிலர் கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துவிட்டு கட்சியின் கூட்டங்களில் பங்குபற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்குழு கூட்டம் 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சியில் நாங்கள் கடந்த காலங்களில் எடுத்த முடிவுகள் குறித்து மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

இவ்வாறு, மக்கள் விரக்தியின் அமுக்கம்தான் தமிழ் பொது வேட்பாளர் என்றவொரு வடிகாலை திறந்து வைத்துள்ளது.

தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம் | Srilanka 2024 President Election Updates

இவ்வாறு தமிழ் மக்கள் எடுத்துள்ள முடிவுகளுக்கு எதிராக தமிழரசுக் கட்சி தன்னிச்சயாக முடிவுகளை எடுத்தால் அது தமிழரசுக் கட்சியின் உள்ளக மோதல்களை மட்டும் அல்ல கட்சியிலிருந்து தமிழ் மக்களை அந்நியப்படுத்தும் செயற்பாடாகும்.

இவ்வாறு இருக்கையில், வவுனியாவில் கூடிய மத்திய செயற்க்குழு கூட்டத்தில் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah), சிவஞானம் சிறீதரன், சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam), மருத்துவர் சத்தியலிங்கம் (Sathyalingam), சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மேயர் என ஆறு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

தேர்தல் விஞ்ஞாபனங்கள்

தென்பகுதி வேட்பாளர்களுடைய தேர்தலில் விஞ்ஞாபனங்கள் வெளிவந்ததும் அதில் எந்த கட்சி தமிழர்களுக்காக சிந்திக்கும் நோக்குடன் இருக்கின்றதோ அவர்களுக்கான ஆதரவு தொடர்பில் பரிசீலனை செய்யும் நோக்கில் குறித்த குழு நியமிக்கப்பட்டது.

ஆனால் அவ்வறான சிறப்புக் குழு கூடாமல் எவ்வாறான ஆலோசனைகளும் நடத்தாமல் நான் பிரித்தானியாவிற்கு (United Kingdom) சென்றிருந்த வேலை அவசர அவசரமாக குறித்த கூட்டமானது நடத்தப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம் | Srilanka 2024 President Election Updates

இந்தநிலையில், நினைத்து இருந்தால் 18 ஆம் திகதிக்கு முன்பதாக கூட அனைவரும் கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுத்து இருக்கலாம் இருப்பினும் அவசரமாக எடுக்கப்பட்ட குறித்த முடிவினால் கட்சியின் எதிர்காலமானது பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எடுக்கப்பட்ட இந்த முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை நான் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.

எடுக்கப்பட்ட முடிவு

நான் நடைப்பெற்ற அனைத்து கூட்டங்களிலும் தமிழ் பொது வேட்பாளருக்கு எனது ஆதரவினை தெரிவித்திருந்ததுடன் பிரித்தானியா சென்ற போதும் அதனை எழுத்து மூலமாக அறிவித்திருந்தேன்.

இந்தநிலையில், இது தொடர்பாக நாளை (16) சிறப்புக்குழுவுடன் கலந்துரையாட தயாராகவுள்ளோம்.

தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம் | Srilanka 2024 President Election Updates

சுமந்திரன் எடுத்த முடிவானது அந்த நேரத்தில் அவரால் எடுக்கப்பட்ட முடிவு, நியமிக்கப்பட்ட விசேட குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த பின்னரே மத்தியகுழுவில் தீர்மானம் எடுத்து நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யத்தவறியது கட்சி விட்ட மாபெரும் தவறு. எனவே தமிழ் இனத்திற்காக தமிழ் பொது வேட்ப்பாளருக்கே நான் ஆதரவை வழங்குகின்றேன்.

இந்தநிலையில், தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் பொது வேட்ப்பாளருக்கு ஆதரவளித்து தங்களுடைய நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு அறியத்தர வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/srilanka-2024-president-election-updates-1726405952

புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுபடுத்த சூழ்ச்சி - மஹிந்த ராஜபக்ஷ!

3 months 1 week ago
15 SEP, 2024 | 09:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசியம், பௌத்தம் பற்றி நாமல் ராஜபக்ஷ மாத்திரமே பேசுகிறார். ஏனைய வேட்பாளர்கள் புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுப்படுத்துவது பற்றி பேசுகிறார்கள். எக்காரணிகளுக்காவும் நாட்டை பிளவுபடுத்த நாங்கள் இடமளிக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

அம்பாறையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் தேசிய பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் நான் உறுதிப்படுத்தினேன். அபிவிருத்திகளை துரிதமான மேற்கொண்டு  தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தினேன். 

2005 ஆம் ஆண்டு அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது  பொருளாதார நிலைமை 15 பில்லியன் டொலர்களாக காணப்பட்டது. 2014 ஆம் ஆண்டு 85 பில்லியன் டொலர் கையிறுப்புடன் அரசாங்கத்தை ஒப்படைத்தேன்.  

ஊழலை முடிவுக்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டுக் கொண்டு 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் தேசிய பொருளாதாரத்தையும், தேசிய பாதுகாப்பையும் பலவீனப்படுத்தியது. 

 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எம்மை ஊழல்வாதிகளாக சித்தரித்து அதிகாரத்தை கோரியவர்கள் இம்முறையும் அதிகாரத்தை கோருகிறார்கள்.  

வெறுப்பினை முன்னிலைப்படுத்தி செயற்படும் இவர்களால் பொருளாதாரத்தை ஒருபோதும் மேம்படுத்த முடியாது. சூழ்ச்சிகளினால் தான் நாங்கள் 2015 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டோம். அந்த சூழ்ச்சி இன்றும் தொடர்கிறது. 

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார மேடைகளில் நாமல் ராஜபக்ஷவை தவிர்த்து எவரும் தேசியம் மற்றும் பௌத்தம் பற்றி பேசுவதில்லை. நாட்டை பிளவுப்படுத்தும் புதிய அரசியலமைப்பு பற்றி பேசுகிறார்கள். எக்காரணிகளுக்காகவும் நாட்டை பிளவுபடுத்த நாங்கள் இடமளிக்கமாட்டோம்.

தேசியத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும். பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெறும் என்பதை உறுதியாக குறிப்பிடுகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/193789

யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்

3 months 1 week ago

தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதானது மக்கள் தங்கள் ஜீவிய உரித்தான வாக்கை அவர்களே குழி தோண்டி புதைக்கின்ற ஒரு செயல் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பனர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்றையதினம் (15) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தேர்தல் பரப்புரையில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஜனநாயகத்திலே ஒவ்வோரு தருணத்திலும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வரும் போது, ஒரு பிரஜைக்கு தான் அளிக்கின்ற அந்த புள்ளடி நாட்டிலே மாற்றத்தையும், விருப்பமான ஆட்சியாளனை தேர்ந்தடுக்கின்ற உரித்தை வழங்குகிறது.

அவ்வாறானதொரு உரித்தை வீணடிப்பதற்கான பல விதமான மோசடிகளிலே ஒன்று தான் இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம்”  

தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

https://ibctamil.com/article/tamil-candidate-presidential-election-sumanthiran-1726410417

நாட்டில் சிறுபான்மையைச் சேர்ந்த ஒருவர் பிரதமராகும் காலம் நெருங்குகின்றது - நஸீர் அஹமட்

3 months 1 week ago
15 SEP, 2024 | 09:37 PM
image

இந்த நாட்டில் இனியும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம மந்திரியாக வர முடியாது என்ற கருத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கின்ற காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது, அதையும் நாங்கள் இறைவன் உதவியால் எங்கள் அரசியல் சரித்திரத்தில் சாதித்துக் காட்டுவோம். ஆட்சியையும் அந்தஸ்தையும் அடைந்து கொள்வதில் எந்த சிரமமும் இருக்கப் போவதில்லை என  வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து ஏறாவூரில்  ஏறாவூரில் கடந்த  13 சனிக்கிழமை இரவு  இடம்பெற்ற   மாபெரும் பொதுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு உரையாற்றினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் ,   

தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான  ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் நஸீர் அஹமட்,

இந்த நாட்டில் புரையோடிப் போய் இருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இந்த நாட்டுக்கு சிறுபான்மைச் சமூகத்திலிருந்து பிரதமர் ஒருவர் கட்டாயம் தேவை. 

அரசியல் அந்தஸ்தை அடைந்து கொள்வதற்கும் ஆட்சியதிகாரங்களில் அமர்ந்து கொள்வதற்கும் சிறுபான்மைச் சமூகங்களாகிய நாங்கள் பயப்பட வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. இந்த விடயங்களை வெளியில் சொல்வதற்கும் அஞ்சத் தேவையில்லை.  

ஏனென்றால், இந்த நாட்டில் உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரே குடியியல் அந்தஸ்துதான் உள்ளது. அரசியல் அதிகாரத்தில் உள்ள ஒருவருக்கும் அடிமட்டத்தில் உள்ள ஒரு குடிமகனுக்கும் ஒரே அந்தஸ்துதான். 

மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் கொல்லப்பட முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து அதற்கு மாற்றீடாக தேசிய ஐக்கிய முன்னணி எனும்  கட்சியை உருவாக்கி விட்டுத்தான் மறைந்தார்கள்.  

கடைசியாக அந்தக் கட்சி சார்பாகத்தான் வேட்பு மனுத் தாக்கல் செய்தாரே தவிர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அல்ல. அவர் தேசிய ஐக்கியத்தை உணர்ந்தவராக எதிர்வு கூறலுடன் தேசிய ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில்  இதனைச் செய்தார்.

இந்த யதார்த்தத்தை சகவாழ்வை விரும்பும்  இந்த நாட்டு மக்கள் அனைவரும் கட்டாயம் புரிந்து கொண்டாக வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தூரநோக்கு சிந்தனையாளரை வைத்து வியாபாரம் செய்வதைத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தற்போது செய்து கொண்டிருக்கின்றார்.  

ஆனால், றவூப் ஹக்கீம் அப்படி அரசியல் வியாபாரம் செய்ய, நாங்கள் சமூகத்துக்காக குரல் கொடுத்துக் கொண்டு வருகின்றோம். இந்த நாட்டில் முஸ்லிம் என்ற அடையாளத்தோடு நடமாட முடியாத அச்சம் பீதி நிறைந்திருந்த காலத்தில் மத்ரசாக்கள் மூடப்பட்ட காலத்தில் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்ல முடியாத காலகட்டத்தில், புனித அல்குர் ஆன் பிரதிகளை வீட்டில் வைத்திருக்க முடியாது ஆற்றிலோ குளத்திலோ குப்பைத் தொட்டியிலோ கிணற்றிலோ போட்ட அச்சமும் பீதியும் அராஜகமும் தலைவிரித்தாடிய காலகட்டத்தில்தான் ரணில் விக்கிரமசிங்ஹ இந்த நாட்டைப் பொறுப்பெடுத்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை இந்த நாட்டில் மேற்சொன்ன நிலைமைகள் எதுவும் இல்லை. சிறுபான்மை பெரும்பான்மை எனும் அச்சம்  இல்லை.  சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டு மக்கள் மூவேளையும் உணவு உண்ண முடிகிறது. மாணவர்கள் கல்வியைத் தொடர்கிறார்கள். இந்த நிலை இனியும் தொடர வேண்டும்.  

நாடு இனவாதம், மதவாதம் இன்றி கண்குளிர்ச்சி காணும் வகையில்  அபிவிருத்தி அடைய வேண்டும் அதற்கு இன்னும் ஐந்தாண்டுகளுக்கு ரணில் விக்கிரமசிங்ஹவின் ஆட்சி நீடிக்க மக்களாணை வேண்டும் என்றார்.

DSC_4903.JPG

DSC_4938.JPG

https://www.virakesari.lk/article/193791

யாழில் 20 வருடங்கள் பழமையான சிலையின் தலை துண்டிப்பு

3 months 1 week ago

யாழில் (jaffna) திருநாவுக்கரசு நாயனார் திருவுருவச்சிலை ஒன்று சமூக விரோதிகளால் தலை துண்டிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் உள்ள சுமார் 20 வருடங்கள் பழமை வாய்ந்த சிலையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் முறைப்பாடு

இது தொடர்பாக பாடசாலை சமூகத்தினர் கோட்டக்கல்வி அலுவலகத்தினரிடமும் வலயக் கல்வி அலுவலகத்தினரிடமும் அறிவித்து கொடிகாமம் காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழில் 20 வருடங்கள் பழமையான சிலையின் தலை துண்டிப்பு | 20 Year Old Statue Was Broken In Jaffna

இது தொடர்பாக கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

கடந்த 2004 ஆம் ஆண்டு கல்லூரியின் பழைய மாணவனால் இலவசமாக நிர்மாணிக்கப்பட்டு அன்பளிப்பாக வழங்கிய திருவுருவச்சிலையானது இடித்து சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/20-year-old-statue-was-broken-in-jaffna-1726377984#google_vignette

அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 வீதத்தால் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும்! ரணில் எச்சரிக்கை

3 months 1 week ago

தவறான தீர்மானத்தை எடுத்தால் கிரீஸில் நடந்தது போல் VAT வரியை 13% - 23% ஆக அதிகரித்து அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீத்தினால் குறைக்க வேண்டிய நிலை வரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நேற்று (14) நடைபெற்ற யாழ். தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

புதிய பொருளாதார முறைமை

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாம் இதுவரை பெற்ற வெற்றிகளை உறுதிப்படுத்த வேண்டும். நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளோம். ஆனால் நாம் புதிய பொருளாதார முறையுடன் நிலையாக முறைமையொன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. அடைந்துகொண்ட ஸ்திரத்தன்மையை பலப்படுத்த வேண்டும்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 வீதத்தால் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும்! ரணில் எச்சரிக்கை | Government Employee Salary Sri Lanka

இதுவரையான பயணத்தின் போது, பணம் அச்சிடுவதை நிறுத்துவது, அதிக கடன் பெற்றுக்கொள்வதை நிறுத்துவது போன்ற கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. சர்வதேச நாணய நிதியம் இதற்கான ஆலோசனைகளை வழங்கியது.

அரசாங்க வருமானத்தை அதிகரிக்க VAT வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது. இதனால் ரூபாயின் பெறுமதி வலுவடைந்து டொலரின் பெறுமதியும் 300 ரூபாயாக குறைந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை 10% - 40% வரை குறைந்தது.

அது போதுமானதல்ல இன்னும் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும். அடுத்த வருடம் ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடையும் போது வாழ்க்கைச் செலவை இன்னும் குறைக்க முடியும்.

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இலங்கை மீண்டும் வீழ்ச்சியடையாமல் தற்போதுள்ள ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக செயற்பட வேண்டும்.

எனது எதிர்தரப்பு வேட்பாளர்கள் வரி குறைப்பு தொடர்பில் பேசுகின்றனர். வரிகளை குறைப்பதையே நானும் விரும்புகிறேன். இருப்பினும் பொருளாதாரத்தை பாதகத்தில் தள்ளிவிட்டு அதை செய்ய முடியாது.

அரச ஊழியர்களின் சம்பளத்தை 50 வீதத்தால் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும்! ரணில் எச்சரிக்கை | Government Employee Salary Sri Lanka

தவறான தீர்மானத்தை எடுத்தால் கிரீஸில் நடந்தது போல் VAT வரியை 13% - 23% ஆக அதிகரித்து அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீத்தினால் குறைக்க வேண்டிய நிலை வரும்.

கிரீஸ் எதிர்கொண்ட விளைவினால் சிலர் தொழிலையும் இழந்தனர். தொழில் இரத்து மற்றும் வருமான குறைப்பை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்.

போதிய வெளிநாட்டு  வருமானம் இல்லாமல், இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தில் தங்கியிருக்க முடியாது. வீட்டுக்காக வாங்குவதை போல் தொடர்ந்தும் நாம் கடன் வாங்க முடியாது. எனவே, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக கொண்ட நாடாக மாற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/government-employee-salary-sri-lanka-1726392034#google_vignette

தேர்தலின் பின்னர் அவசரநிலை பிரகடனமாகுமா?

3 months 1 week ago

தேர்தலின் பின்னர் அவசரநிலை பிரகடனமாகுமா?

ஜனாதிபதி தேர்தல் திகதி மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போது நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்காக பொலிஸாரையும் ஆயுதப்படையினரையும் இணைத்து ‘அவசரகால திட்டம்’ ஒன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .

அவசர நிலை ஏற்படக்கூடும் என பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, எந்தவொரு அவசர நிலையிலும் பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தை நிலைநிறுத்துவது குறித்தும், அவசரநிலையில் இராணுவம் தனது அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர்கள் தலைமையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் அவசரகால பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, படைத் தளபதிகளின் தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் தலைமையில் தேர்தலுக்கு முன்னர் அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டமும் நடத்தப்பட உள்ளது.
 

http://www.samakalam.com/தேர்தலின்-பின்னர்-அவசரநி/

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்

3 months 1 week ago

ஜனாதிபதித் தேர்தலில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புகின்றவர்கள் மாத்திரம் அன்றி, உள்நாட்டில் வசிக்கின்றவர்களும் வாக்காளர் அட்டை இன்றி வாக்களிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டை என்பது வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டிய தொகுதியை அடையாளம் காண்பதற்கும் வாக்குச்சாவடியில் தமது தொடரிலக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமே வழங்கப்படுகிறது.அந்த அடிப்படையில் வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் தங்களது அடையாள அட்டையை அல்லது அங்கீகரிக்கப்பட்ட சட்டரீதியான அடையாள ஆவணங்களைக் காண்பித்து வாக்கினைப் பதிவு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/309342

தியாக தீபத்தின் நினைவேந்தல்

3 months 1 week ago

தியாக தீபத்தின் நினைவேந்தல்
adminSeptember 15, 2024
IMG-20240915-WA0185-1170x658.jpg

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், மாவீரர் றொஷானின் தாயார் இரத்தினசிங்கம் பொற்கொடியால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து,திலீபனின் உருவப்படத்திற்கு முன்னாள் போராளி ஒருவர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி சாவைத் தழுவிக் கொண்டார்.

IMG-20240915-WA0184-800x450.jpgIMG-20240915-WA0185-800x450.jpgIMG-20240915-WA0187-800x450.jpgIMG-20240915-WA0190-800x450.jpgIMG-20240915-WA0191-800x450.jpgIMG-20240915-WA0192-800x450.jpg
 

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024

3 months 1 week ago
கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழினத்தின் கோரிக்கையாக தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு என்கிறார் ஸ்ரீநேசன்

கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று தமிழ் இனத்தின் கோரிக்கையாக வேண்டுகோளாக அவர்களுடைய பிரச்சனைகளை சொல்லுகின்ற கருவியாக பயன்படுத்த வேண்டும்.அதன் அடிப்படையில் தாங்கள் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்க முன்வந்துள்ளதாக

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தற்பொழுது ஜனாதிபதி தேர்தல் இடம் பெற இருக்கின்றது இந்த தேர்தல் ஆனது கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தலை விடவும் முக்கியமான ஒரு தேர்தலாக கருதப்படுகின்றது காரணம் இந்த தேர்தலில் மாத்திரமே தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி இருக்கின்றார்கள்.

இந்த பொது வேட்பாளரை 83 சமூக கட்டமைப்புகளும் 10 தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து இவரை நிறுத்தி இருக்கின்றது என்றால் இந்த பொது வேட்பாளர் என்பது கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழினத்தின் சார்பாக இவர் நிறுத்தப்பட்டிருக்கின்றார்.

தமிழர்கள் ஒற்றுமையாக இந்த இடத்தில் பயணிக்க வேண்டும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் ஒரே குரலில் தங்களது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கும் உள்நாட்டிற்கும் செல்ல வேண்டும் எங்களுடைய தீர்வுகளையும் சொல்ல வேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்த தமிழ் பொது வேட்பாளர் சங்கு சின்னத்தில் அரியநேந்திரன் அவர்கள் நிறுத்தப்பட்டு இருக்கின்றார்.

இந்த விடயத்தை கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று தமிழ் இனத்தின் கோரிக்கையாக வேண்டுகோளாக அவர்களுடைய பிரச்சனைகளை சொல்லுகின்ற கருவியாக பயன்படுத்த வேண்டும் எனவே நாங்கள் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் எங்களுடைய அருள் வாக்கு கூறுகின்ற அருட்தந்தை யோசப் மேரி அடிகளார் அவர்கள் அருமையாக கூறினார் தந்தை செல்வா அவர்களின் காலத்தில் இருந்து பயணித்தவர் தளராத வயதிலும் கூட தமிழ் தேசியப் பற்றோடு தமிழ் உணர்வோடு இந்த தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கூறினால் நாங்கள் கேட்டு தான் ஆக வேண்டும் ஏனென்றால் அவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் தடம் புரளாமல் ஆன்மீகப் பணிகளும் சரி அரசியல் பணியிலும் சரி மிகவும் அருமையாக பணியாற்றியவர்.

அவர் கூறுகின்றார் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். தமிழர்களை அவர்களது பிரச்சனைகளை வெளி உலகத்திற்கு கொண்டுவர வேண்டும் என அவர் எடுத்துரைக்கின்றார்.

எனவே ஒரு மூத்த அருட்தந்தை அவர்களுடைய அருள்வாக்கு நாங்கள் பின்பற்றுவதற்கு நாங்கள் திட சந்தர்ப்பம் எடுத்து இருக்கின்றோம் எனவே நடைபெறுகின்ற 21 ஆம் தேதி நடைபெறுகின்ற இந்த தேர்தலில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் தமிழ் சமூகம் ஒற்றுமையாக இருக்கின்றோம் ஒரே குரலில் எங்களுடைய பிரச்சனைகளை கூறப்போகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டோம் உள்நாட்டு பொறிமுறை ஊடாக இந்த பிரச்சினைகளை தீர்க்கிறோம் எனக் கூறினார்கள் ஒன்றுமே நடைபெறவில்லை 15 ஆண்டுகளாக.

அடுத்ததாக தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்துகின்றோம் எனக் கூறிக்கொண்டு எங்களுடைய கலாசார நிலையங்கள் அளிக்கப்படுகின்றது அந்த இடங்களில் விகாரங்கள் கட்டப்படுகின்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றது அந்த இடங்களில் எல்லாம் பௌத்த விகாரைகள் இருந்தது என்று கூறிவிட்டு அந்த இடங்களை ஆக்கிரமிக்கின்ற செயல்பாடுகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றது.

இன்றும் கூட பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படாமல் தமிழ் மக்களை யுத்தத்தின் பின்னரும் ஒடுக்குகின்ற அந்த சட்டத்தை அவர்கள் வைத்திருக்கின்றார்கள் எங்களுடைய தமிழ் கைதிகள் முழுமையாக இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை இது மாத்திரம் அல்லாமல் வடக்கு கிழக்கில் ராணுவத்தின் ஆக்கிரமிப்பு என்பது இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மயிலத்தமடு மாதவனை இந்த மேச்சல் தரை இப்போதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள் 365 நாட்களுக்கும் மேலாக அகிம்சை ரீதியாக வீதியில் இருந்து போராடிய அந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எந்த ஒரு தீர்வும் இந்த ஜனாதிபதியால் கொடுக்கப்படவில்லை.

100 நாட்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாகி தரவேண்டும் என போராடினார்கள் அதுவும் கேட்கப்படவில்லை.

எட்டு ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலத்திலும் அவர்களுக்கு வாக்களித்து இருந்தும் கூட அவர்கள் எங்களை தாராளமாக ஏமாற்றி இருக்கின்றார்கள் இந்த ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிலும் கூட சில வேளைகளில் பொது வேட்பாளர் திறக்கப்படாமல் இருந்திருந்தால் நாங்கள் யாரோ ஒரு சிங்கள ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்து இருப்போம் ஆனால் முதல் தடவையாக இந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருக்கின்ற போது அதே போன்று தமிழர்களின் பிரச்சினைகளை கோரிக்கைகளை வைத்து இறக்கப்பட்டிருக்கின்றார் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நாங்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய தார்மீக கடமை எங்களுக்கு இருக்கின்றது அதனை விடுத்து மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுவதற்கு நாங்கள் வழி கூறக்கூடாது.

கேட்கின்றார்கள் இந்த வேட்பாளர் வெல்லப் போகின்றாரா என்று இவருக்கு வாக்களிப்பதால் என்ன கிடைக்கப் போகின்றது எனக்கு கேட்கின்றார்கள் நான் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன் எட்டு ஜனாதிபதிகளுக்கு நாங்கள் வாக்களித்தோம் எதைப் பெற்றிருக்கின்றோம் ஒன்றையுமே அவர்கள் தரவில்லை அவர்களை வெற்றி பெற செய்திருக்கின்றோம் கடந்த நல்லாட்சி காலத்தில் மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்களை வெற்றி பெறச் செய்தோம் மஹிந்த ராஜபக்சே அவர்களை தோற்கடித்தோம் பின்னர் மைத்திரிபாலு என்ன செய்தார் 2018 ஆம் ஆண்டு நாங்கள் யாரை தோற்கடிக்க வேண்டும் என்று மைத்திரிக்கு வாக்களித்தோமோ அவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதம மந்திரியாக வைத்துக்கொண்டு அவர் அழகு பார்க்கின்றார் பேச்சுவார்த்தை இடம்பெற்றது அரசியல் யாப்பு தருவோம் என கூறினார்கள் ஏமாற்றி விட்டார்கள்.

சந்திரிகா அம்மையார் சமாதான தேவதையாக வந்தார் என்ன செய்தார் கடைசியாக அவரும் ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டார்.

எனவே எங்களுடைய அரசியல் வரலாறு என்பது ஏமாற்றப்படுகின்ற வரலாறாக இருக்கின்றது அவர்கள் ஏமாற்றுகின்ற வரலாறாக காணப்படுகின்றது எனவே தமிழ் பேசும் மக்களுக்கும் தமிழ் சமூகங்களுக்கும் நாங்கள் கூறக்கூடிய விடயம் என்னவென்றால் வடக்கு கிழக்கு மாத்திரம் அல்ல அனைத்து மக்களும் எமக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் கூறுகின்றார்கள் நாங்களும் இவருக்கு ஆதரவு வழங்குவதற்கு சித்தமாக இருக்கின்றோம் என்று.

எனவே நியாயத்தின் பேரில் உரிமையின் பேரில் நாங்கள் பதிக்கப்பட்ட சமூகம் என்பதன் பெயரில் நாங்கள் நீதியை நிலை நிறுத்துவதற்காக ஏமாற்றப்பட மாட்டோம் என்பதை எடுத்துக் கூறுவதற்காக எமக்கு ராயப்பு ஜோசப் ஆண்டகை கூறியது போன்று இறுதி யுத்தத்தின் போது ஒரு லட்சத்து 46 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்ற செய்தியை கூறி இருக்கின்றார் அவர் கூட அந்த இழப்புக்குரிய நீதியை பெற வேண்டும் என முயற்சித்தார் அவரும் கண்ணை மூடிவிட்டார் ஆனால் நீதி எங்களுக்கு கிடைக்கவில்லை.

எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அழகாக கூறியது உண்மையை கண்டறிய வேண்டும் அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று அடுத்ததாக மீண்டும் இவ்வாறான அவலங்கள் ஏற்படாமல் இனப்பிரச்சனைக்குரிய நிரந்தரமான தீர்வை பெற வேண்டும் என கூறுகின்றார்கள் எதுவுமே இடம்பெறவில்லை 15 வருடங்களாக யுத்தத்தின் பின்னர் எங்களை ஏமாற்றி இருக்கின்றார்கள்.

மீண்டும் மீண்டும் நாங்கள் ஏமாறுவதற்கு தயாராக இல்லை இப்போது ஒரு கதை பேசப்படுகின்றது மீளபெற முடியாத அதிகாரத்தை தந்திருக்கின்றார் என்கின்ற ஒரு கதை அழகாக கூறப்படுகின்றது.

மீளப்பெற முடியாத அதிகாரம் என்றால் எந்த விடயத்திற்கு மீளப்பெற முடியாத அதிகாரம் தரப்பட்டு இருக்கின்றது என கூற வேண்டும் சமஸ்டி ஆட்சி முறையில் மீளப்பெற முடியாத இந்த இந்த அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றது என கூற வேண்டும் இது மொட்டை கடிதம் எழுதுவது போன்று மீளப்பெற முடியாத அதிகாரம் தந்ததனால் அதற்குள் சமஷ்டி இருக்கின்றது என்று எங்களுடைய மக்களை ஏமாற்றுவதற்கு எம்மவர்கள் பார்க்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/309416

தேர்தல் பிரசார நிறைவின் பின் சமூக வலைத்தளங்களை 48 மணித்தியாலங்கள் முடக்க தீர்மானம்?

3 months 1 week ago
Social-Media-fe.jpg?resize=647,375 தேர்தல் பிரசார நிறைவின் பின் சமூக வலைத்தளங்களை 48 மணித்தியாலங்கள் முடக்க தீர்மானம்?

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரசாரங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.
இந்நிலையில், 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் எவ்வித தேர்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடாத நிலையில் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் பிரச்சாரம் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக ஊடக குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அமைதியான காலத்தில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1399461

பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கிறார் - நீதிக்கும் சமாதானத்திற்குமான குருக்கள் ஒன்றியம்

3 months 1 week ago
தமிழ்ப் பொது வேட்பாளர்  ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கிறார் - வட, கிழக்கு நீதிக்கும் சமாதானத்திற்குமான குருக்கள் ஒன்றியம்

Published By: DIGITAL DESK 3   15 SEP, 2024 | 10:21 AM

image

(எம்.நியூட்டன்)

தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கிறார் எனவே அவரையே தமிழ்மக்கள் தெரிவு செய்யவேண்டும் என வடக்கு கிழக்கு நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு நாடு தயாராகிக்கொண்டு இருக்கின்றது. இச் ஜனாதிபதி தேர்தல் பற்றிய அல்லது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய அரசியல் அறிவு, அவர்களது தனி- கூட்டு அரசியல் இறந்தகால வரலாற்றுடன்தான் எமக்கு முன்னுள்ள தெரிவாக முன்வைக்கப் பட்டுள்ளது. இது எவ்வளவு நம்பிக்கை தருவதாக இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய தேவையில்லை. இந்த ஜனாதிபதி தேர்தலும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் உள்ள சட்டகத்திற்குள் இருந்தே நடாத்தப்படுகின்றது என்ற உண்மையை கூறாமல் இருக்க முடியாது.

தற்போதுள்ள சனநாயக முறைமை எண்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது என்ற உண்மை பொது அறிவுக்குட்பட்டது. வாக்குகளின் எண்ணிக்கையை மையப்படுத்திய ஜனாதிபதி ஜனநாயக தெரிவில் ஈழத்தமிழ் மக்களுடையதும் ஏனைய சிறுபான்மை இனக் குழுக்களினதும் வாக்குகள் செல்வாக்கு செலுத்துவது வரையறுக்கப்பட்டுள்ளது. 

தெற்கிலிருந்து சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கள பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரச்சார மேடைகளை அலங்கரிக்கின்றார்கள். 

ஈழத்தமிழ் மக்களுடைய கூட்டு அரசியல் வேணாவாவையும் தமிழின அழிப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற அரசியல் கோட்பாட்டுச் சூழலில் தெற்கில் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒன்றுபட்டிருக்கின்றார்கள். 

அதேநேரத்தில் தமிழின அழிப்பில் நீதி கோருவதை மறுப்பதோடல்லாமல் ஸ்ரீலங்காவின் படைக் கட்டுமானம் சிங்கள தேச விடுதலைக் கட்டுமானத்தில் ஆற்றிய பங்களிப்பை கதாநாயக சொல்லாடலுக் கூடாகவே கட்டமைக்கின்றார்கள்.

தமிழர் தாயகம் தொடர்ந்து ஈழ தமிழ்த்தேசிய நீக்கத்துக்குள் வலிந்து தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இது வெவ்வேறு வடிவங்களை/பரிமாணங்களை கொண்டுள்ளது. உதாரணமாக, ஈழத்தமிழர் ஒருங்கிணைந்த தாயகத்தை துண்டாடல், தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கச் செறிவை அதிகரித்தல், ஈழத்தமிழர் தாயகம் தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உட்பட்ட தேசமாகவே உள்ளது. ஈழத்தமிழர் நிலங்கள் வலிந்து பறிக்கப்படுகின்றன. 

சிங்கள மயமாக்கல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. ஒட்டுமொத்தத்தில் ஈழத்தமிழர் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறான அரசியல் சூழமைவில் அரசியல் அறத் தெரிவாக தமிழ்ப் பொது வேட்பாளர் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக நமக்குமுன் நிறுத்தப்பட்டுள்ளார். இம்முக்கியமான காலகட்டத்தில் தமிழ் மக்களின் தெரிவு, ஈழத்தமிழரின் அரசியல் வேணவாவை வலுப்படுத்தும் என்பது எமது ஆழமான நம்பிக்கை என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/193690

வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி

3 months 1 week ago

Published By: RAJEEBAN   14 SEP, 2024 | 10:36 AM

image
 

தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இலங்கையின் பரந்துபட்ட அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இடைக்கால அமைச்சரவையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் இடைக்கால அமைச்சரவை ஏற்படுத்துவதற்கு தனது கட்சி முயலும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இலங்கை அரசாங்கத்தை ஏற்படுத்த விரும்புகின்றோம். சிங்கள அரசாங்கத்தையில்லை, என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் சாராத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்கும் முதலாவது அமைச்சரவையாக இது காணப்படும் என தெரிவித்துள்ளார்.

222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வடக்குகிழக்கு மலையகத்தை சேர்ந்த சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக தெரிவு செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/193648

வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை, மற்றுமொரு இளைஞரால் துஷ்பிரயோகம்

3 months 1 week ago
வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை, இளைஞரால் துஷ்பிரயோகம் 

Published By: DIGITAL DESK 3   14 SEP, 2024 | 04:36 PM

image
 

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை (14) சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக அவர்களுக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்து பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட பொலிஸார் குறித்த சிறுமியிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர், வைத்திய பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளின் போது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் குறித்த சிறுமியை தந்தை துஷ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளதுடன், குறித்த சிறுமியின் வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவரும் கடந்த மாதம் 28 ஆம் திகதி குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், இளைஞரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த தந்தை தனது மூத்த மகளை 2020 ஆம் ஆண்டு துஷ்பிரயோகம் செய்த நிலையில் கைது செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/193692

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்போம் - யாழ்பல்கலைக்கழக சமூகம் அறிக்கை

3 months 1 week ago
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்வேட்பாளருக்கு வாக்களிப்போம் - யாழ்பல்கலைக்கழக சமூகம் அறிக்கை

Published By: DIGITAL DESK 3   14 SEP, 2024 | 02:46 PM

image

(எம்.நியூட்டன்)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம் என அறைகூவல் விடுத்த யாழ். பல்கலைக்கழக சமூகம், மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், கட்சி வேறுபாடுகள் கடந்து வடக்கு – கிழக்கு, மலையகம், இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் என அறிக்கை  வெளியீட்டுள்ளது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பேரன்புமிக்க தமிழ் மக்களிற்கு வணக்கம்,

நூற்றாண்டுகள் கடந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் எங்களின் அரசியல் விடுதலைப் பயணத்தில் தவிர்க்க முடியாதவொரு தேர்தலாக எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் மாறியுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமாக இம்மடலினை எங்கள் பேரன்புமிக்க தமிழ் மக்களை நோக்கி மாணவர்கள் நாங்கள் எழுதுகின்றோம்.

தமிழ் மக்கள் உதிரிகளாக்கப்படுதலும் கூட்டு மனவலு சிதைக்கப்படுதலும்

2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் தமிழ் மக்கள் தேசமாகச் சிந்திப்பதிலிருந்தும், எழுச்சியடைவதிலிருந்தும் எங்களை விலகியிருக்கச் செய்வதில் சிங்கள - பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்திருக்கின்றது. சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக தமிழ் மக்களையும் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளையும் உதிரிகளாக்கி, எங்களின் கூட்டு மனவலுவைத் தகர்த்தெறிந்து உளவியல் ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனோநிலையினை எங்கள் மக்களிடையே விதைப்பதனை சிறிலங்கா அரசின் முகவர்களும் அவர்களது அமைப்புக்களும் கனகச்சிதமாகச் செய்து முடித்துள்ளன. 

தமிழ் மக்களினது அரசியற் பலத்தினையும் எழுச்சியினையும் இல்லாதொழிப்பதற்காகச் சாணக்கியம், ராஜதந்திரம் என்று பெயரிட்டு தமிழ்த் தரப்புகளால் முன்னெடுக்கப்பட்ட வெற்றுக் காசோலை அரசியல் பயன்படுத்தப்பட்டது. அதன் விளைவே கடந்த 2010, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல்களில் தமிழ் இனப்படுகொலை பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் (Genocide) குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவினைப் பெற்ற நபர்களுக்கு வாக்களித்தோம். பரிகார நீதியைக் கோர வேண்டிய நாம், எமது அரசியற் தலைமைகளினால் கண்மூடித்தனமாக வழிநடத்தப்பட்டோம்.

எம்மைச் சூழும் பொருளாதார நல்லிணக்க மாயைகள்!

சிறிலங்காவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலையைக் காரணங்காட்டி கவர்ச்சிகர வாக்குறுதிகளை முன்வைத்து வரும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்கள் நாட்டின் இந்நிலைக்குத் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளும், வலிந்து திணிக்கப்பட்ட போருமே அடிப்படைக் காரணம் என்பதை ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.

அடிப்படையில் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அரசியல் உறுதித் தன்மை அவசியமாக உள்ள நிலையில், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள், ஒடுக்குமுறைகளை நிறுத்தும் சித்தம் ஏதுமின்றி, தமிழ் மக்களின் உரிமைக்கான குரல்களை இனிப்புத் தடவிய வார்த்தை ஜாலங்களினால் அறுத்தெறியும் பணிகளிலேயே நாட்டமும் மும்முரமும் காட்டுகின்றனர். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பையோ அல்லது பௌத்தத்திற்கு முதன்மை வழங்கும் அதன் கட்டமைப்பையோ இவர்கள் எவரும் கேள்விக்குள்ளாக்காமல் நல்லிணக்கம் பேசுவதென்பது அற்ப வாக்குகளிற்காகவேயன்றி வேறெதற்காக?

தமிழர் தேசமாய்த் திரள்வோம்!

தொடர்ந்தும் தமிழர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கேற்ற பலமானதொரு திரளாக அரசியல் மற்றும் கட்டமைப்பு ரீதியாகத் தமிழ் மக்கள் நாங்கள் எழ முடியாது உதிரிகளாக்கப்பட்டு, கூட்டு மனவலு சிதைக்கப்பட்டுள்ளது. இக்கையறு நிலையாவது கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து, சுதாகரித்து முன்னகர வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.

அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற ஒற்றையாட்சி, அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தினுள் தமிழரின் அரசியலை சுருக்கியது என்பது சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்பதோடு, தமிழ் மக்களிற்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளவல்ல திடசித்தமுள்ள தலைவர் ஒருவரையேனும் சிங்கள மக்கள் மத்தியில் காண முடியவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

தமிழ்த் தேசியம் பேசுகின்ற கட்சிகளில் பயணிப்போர்கள் அனைவரும் தமிழினத்தின் விடுதலைக்கு, மேன்மைக்கு உழைப்பவர்கள் என்று நம்பி ஏமாந்த எங்களுக்கு, புலித்தோல் போர்த்திய நரிகளின் ஊளையிடுதல்களையும் கூச்சல்களையும் உதறித்தள்ளி, தமிழர் தேசமாக, எங்கள் தலைவிதியை நாங்களே மாற்றி எழுதும் பெருவாய்ப்பு இனப்படுகொலை நிகழ்ந்து 15 ஆண்டுகளின் பின் கனிந்துள்ளது.

தமிழரை அணிதிரட்டி வெல்லட்டும் தமிழ்ப் பொதுவேட்பாளர் !

தமிழ் மக்களைத் தேசமாய் அணி திரட்டுவதற்கும், பன்னாட்டுச் சமூகங்களிற்கு விடுதலைக்கான எங்களின் கூட்டு வேட்கையினையும், கூட்டு மனோபலத்தினையும் வெளிப்படுத்துவதற்கும் எங்களிற்குள்ள ஒரேயொரு வாய்ப்பாகத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எண்ணக்கருவினை நாங்கள் பலப்படுத்த வேண்டும். இது ஒரு காத்திரமான வழிமுறை. இது எமது வரலாற்றுக் கடமை. தமிழ்ப் பொதுவேட்பாளர் சிறிலங்காவின் அரச தலைவர் இருக்கையை வெல்லப் போகின்றவரல்ல ; மாறாக தமிழ் மக்களை அணிதிரட்டுவதில் வெல்லப் போகின்றவர்.

இனியாவது ஏமாற்றும் கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்று சேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களைத் தமிழ் மக்கள் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். தவறுவோமேயானால் நாங்கள் அரசியல் பிழைத்த மக்களாக்கப்படுவோம்.

நாங்கள் மாறி மாறி சிங்கள ஆட்சியாளர்களுக்கு வாக்களிக்க வழிநடத்தப்பட்டோம். இதனால் தமிழ் மக்களின் நிலை, அரசியல், சமூக ரீதியில் பரிதாபகரமாய்ப் போனதேயன்றி வேறேதும் நிகழவில்லை. உரிமைகளுற்கான தமிழரின் அரசியல் இன்று சலுகைகளுக்காகத் துவண்டு போயுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளராகக் களமிறங்கியுள்ள திரு.பா.அரியநேத்திரன் அவர்களுக்கு,  அவரின் சங்குச் சின்னத்திற்கு வாக்களிப்போம். மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும், கட்சி வேறுபாடுகள் கடந்து வடக்கு – கிழக்கு, மலையகம், இதர பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும், சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எங்கள் திரட்சியை, இத் தேர்தலில் வெளிப்படுத்துவோம் - என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/193674

இலங்கை: பட்டாம்பூச்சிகளை கடத்த முயன்றதாக தந்தை, மகனுக்கு ரூ. 1.67 கோடி அபராதம்

3 months 1 week ago
பட்டாம்பூச்சிகளை கடத்த முயன்றதாக தந்தை-மகனுக்கு ரூ. 1.67 கோடி அபராதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, யாலா தேசிய பூங்காவில் பட்டாம்பூச்சிகளை கடத்த முயன்றதாக தந்தை-மகனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது கட்டுரை தகவல்
  • எழுதியவர், கெல்லி என்ஜி
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் திறந்தவெளிப் பூங்கா ஒன்றில், உள்நாட்டில் மட்டுமே காணப்படும் 92 வகையான பட்டாம்பூச்சிகள் உட்பட நூற்றுக்கணக்கான பூச்சியினங்களைக் கடத்த முயன்றதாக, இத்தாலியை சேர்ந்த தந்தை-மகனுக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 60 மில்லியன் ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒரு கோடியே 67 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பூச்சிகளுடன் கூடிய ஜாடிகளை அவர்கள் வைத்திருந்ததைக் கண்டறிந்ததையடுத்து, லூயிஜி ஃபராரி (68), அவருடைய மகன் மட்டியா ஆகிய இருவரையும் கடந்த மே மாதம் 8ஆம் தேதி யாலா தேசிய பூங்காவின் பாதுகாவலர்கள் கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் பூச்சிகளைக் கவர்வதற்கான பொருட்களைப் பயன்படுத்தி அவற்றைப் பிடித்ததாகவும், மெழுகு பூசப்பட்ட பாக்கெட்டுகளை பயன்படுத்தி பூச்சிகளைப் பதப்படுத்த முயன்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சட்ட விரோதமாக பூச்சிகளைப் பிடித்து, கடத்த முயன்றதாக, செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருவர் மீதான குற்றமும் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுயிர் தொடர்பான குற்றங்களில் மிகப்பெரும் அபராதம் இருவருக்கும் விதிக்கப்பட்டது.

எப்படி சிக்கினார்கள்?

பூங்காவின் பாதுகாவலர்களுள் ஒருவரான கே சுஜீவா நிஷாந்தா பிபிசி சிங்களா சேவையிடம் கூறுகையில், அன்றைய தினம் பூங்கா சாலையில் “சந்தேகத்திற்கிடமான கார்” ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக பூங்கா ஜீப் ஓட்டுநர் ஒருவர் பாதுகாவலர்களிடம் தெரிவித்ததாகக் கூறினார். அந்த காரில் இருந்த இருவரும் பூச்சிகளைப் பிடிக்கும் வலைகளுடன் வனத்திற்குள் நுழைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த கார் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த பாதுகாவலர்கள், காரின் பின்பக்கத்தில் பூச்சிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான ஜாடிகளை கண்டுபிடித்தனர்.

“நாங்கள் அதைக் கண்டறிந்தபோது அனைத்து பூச்சிகளும் இறந்திருந்தன. அந்த பாட்டில்களில் அவர்கள் ரசாயனத்தை செலுத்தியுள்ளனர். அதில், முந்நூறுக்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் இருந்தன,” என நிஷாந்தா தெரிவித்தார்.

இருவர் மீதும் 810 குற்றச்சாட்டுகள் ஆரம்பத்தில் பதியப்பட்டன. ஆனால், பின்னர் 304 குற்றச்சாட்டுகளாகக் குறைக்கப்பட்டன. இந்த அபராதத் தொகையை செப்டம்பர் 24க்குள் செலுத்தாவிட்டால் இருவரும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

'சிறந்த முன்னுதாரணம்'

அந்த நேரத்தில் இருவரும் இலங்கையில் விடுமுறையைக் கழிக்கச் சென்றதாகவும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் இலங்கையில் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலி நாட்டு செய்திகள் கூறுகின்றன.

இலங்கையின் தென்-கிழக்கு பகுதியில் அமைந்துள்ள யாலா தேசிய பூங்கா, அந்நாட்டின் பிரபலமான காட்டுயிர் பூங்காவாக உள்ளது. இங்கு அதிகளவிலான சிறுத்தைகள், யானைகள், காட்டெருமைகள் மற்றும் பிற விலங்குகளும் உள்ளன.

 
யாலா தேசிய பூங்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, யாலா தேசிய பூங்கா இலங்கையின் பிரபலமான காட்டுயிர் பூங்காவாக உள்ளது (கோப்புப்படம்)

எலும்பியல் நிபுணரான லூயிஜி ஃபராரி கால் மற்றும் கணுக்கால் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் என்றும் அவருடைய நண்பர்களால் பூச்சியின ஆர்வலர் என்றும் அழைக்கப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள மோடெனா நகரத்தில் உள்ள பூச்சியியல் சங்கத்திலும் அவர் உறுப்பினராக உள்ளார்.

இத்தாலியில் உள்ள அவருடைய நண்பர்கள் மற்றும் சகாக்கள், அபராதத் தொகையைக் குறைக்குமாறு கோரியுள்ளனர். அவர் பிடித்த பட்டாம்பூச்சிகளுக்கு எந்தவித வணிக மதிப்பும் இல்லை என இத்தாலிய தினசரி செய்தித்தாளான கோரியெர் டெல்லா சேரா ( daily Corriere della Sera) கூறுவதாகச் சிலர் தெரிவிக்கின்றனர்.

சுற்றுச்சூழல் சட்டத்தில் நிபுணரான டாக்டர் ஜெகத் குணவர்த்தனா பிபிசி சிங்கள சேவையிடம் கூறுகையில், இந்த அபராதத் தொகை, குற்றவாளிகளுக்கு எச்சரிக்கையாகவும் சிறந்த முன்னுதாரணமாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

புதிய கொள்கையின் கீழ் ஒக்டோபர் முதல் வாகன இறக்குமதி!

3 months 1 week ago
vehicle-import.jpg?resize=400,224 புதிய கொள்கையின் கீழ் ஒக்டோபர் முதல் வாகன இறக்குமதி!

304 HS குறியீடின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிப் பாகங்கள் இறக்குமதி மீதான தற்காலிக தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் கூடிய நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மீட்பு செயல்முறைக்கு இணங்க, நிதி அமைச்சின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு, 2024 ஒக்டோபர் 01 முதல் மூன்று கட்டங்களாக இந்தத் தடை நீக்கப்படும்.

இந்நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீது ஏற்பட்டிருந்த அழுத்தத்தை முகாமைத்துவம் செய்ய 2020 மார்ச் மாதத்தில் முதன் முதலில் விதிக்கப்பட்ட இந்தத் தடை மூலம், மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்குத் தேவையான அந்நியச் செலாவணியை நிர்வகிப்பதற்காக இவ்வாறு அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், பொருளாதார மீட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சுற்றாடல் காரணிகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தடையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 304 HS குறியீடின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கான அங்கீகாரம் மூன்று கட்டங்களில் செய்யப்படும்.

முதலாவது கட்டம் : பொதுப் பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சிறப்பு நோக்க வாகனங்கள் மற்றும் பிற இயந்திரம் சாரா வாகன உதிரிப் பாகங்களின் இறக்குமதிக்கு 2024 ஒக்டோபர் 01 முதல் அனுமதி வழங்கப்படும்.

இரண்டாம் கட்டம் : வணிக அல்லது சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் இறக்குமதிக்கு 2024 டிசம்பர் 01 முதல் அனுமதி வழங்கப்படும்.

மூன்றாவது கட்டம் : தனியார் பயன்பாட்டுக்கான வாகனங்கள் (கார்கள், வேன்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள் போன்றவை உட்பட) இறக்குமதிக்கு 2025 பெப்ரவரி 01 முதல் அனுமதி வழங்கப்படும்.

விதிக்கப்பட்ட தடையை படிப்படியாக நீக்குவது மூலம், இந்நாட்டின் வாகன தொழில்துறைக்கு புத்துயிர் அளிப்பதோடு, பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க எதிர்பார்க்கப்படுவதோடு, பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எரிபொருள் செயற்திறனின்மையைக் குறைத்தல் மற்றும் பராமரிப்புச் செலவு அதிகரிப்பைக் கட்டுப்படுத்துதல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க இது உதவும் என்று அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1399389

ஞானசாரவுக்கு எதிரான நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

3 months 1 week ago
gnanasara-1-600x375-1.jpg?resize=600,375 ஞானசாரவுக்கு எதிரான நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

கொழும்பு, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள 100 மில்லியன் ரூபா பெறுமதியான ஆடம்பர வீட்டினை கலபொட அத்தே ஞானசார தேரரார் பலவந்தமாக கைப்பற்றியமை தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு, நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்துள்ளது.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்ட சொத்துக்களை உடனடியாக விடுவிக்குமாறு ஞானசார தேரர் மற்றும் பிரதிவாதிகள் இருவருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவினை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

https://athavannews.com/2024/1399395

Checked
Sun, 12/22/2024 - 22:04
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr