ஊர்ப்புதினம்

சுமந்திரன் கூட்டமைப்புக்கு தெரியாமல் எப்படி வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார்

3 months 2 weeks ago

விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளை உறுப்பினருமான சண்முகம் ஜீவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர், புதிதாக தெரிவான தலைவர் உள்ளிட்ட பலர் இல்லாத கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சி, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக் கட்சிக் கிளைகள் பொது வேட்பாளரை ஆதரிப்பது என தீர்மானித்துள்ள நிலையில், நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது.

விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும். 2010 ஆம் ஆண்டு எவ்வாறு சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தெரியாமல் வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார் என தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/308854

ரணில் சஜித்தை இணைக்க முயற்சி - ஹோமாஹமவில் அனுரகுமார

3 months 2 weeks ago
02 SEP, 2024 | 03:20 PM
image
 

ஜனாதிபதியினதும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரினதும்  இரண்டாம் நிலை  தலைவர்கள் இருவரையும் இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ள சாதகமான  நிலையை மாற்றியமைப்பதற்காக ஜனாதிபதியினதும் எதிர்கட்சி தலைவரினதும் பிரச்சார பிரிவில் இரண்டாம் நிலையில் உள்ள  தலைவர்கள் இருவரையும இணைந்து செயற்பட செய்வது தொடர்பிலான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர் என அனுரகுமாரதிசநாயக்க  ஹோமகவில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சஜித்பிரேமதாசவிற்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்ற அதேவேளை இரண்டு தரப்பினதும் இரண்டாம் நிலையை  சேர்ந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுக்க முயல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் நிலையில்தலைவர்கள் மத்தியில்  பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன,நாம் பிரிந்திருப்பது விவேகமானதா இல்லையா? நாம் ஒன்று கூடி தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை மாற்றியமைக்க ஏதாவது செய்ய முடியாத என அவர்கள் பேசிக்கொள்கின்றார்கள் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/192643

ஜெனீவாவிலிருந்து வரும் அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றீர்கள்? ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டுமென ஜகத்டயஸ் வேண்டுகோள்

3 months 2 weeks ago
02 SEP, 2024 | 11:37 AM
image
 

ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை  எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பதை ஜனாதிபதி வேட்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் இராணுவ அதிகாரி ஜெனரல் ஜகத் டயஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆதாரமற்ற யுத்த  குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்தினரை இலங்கை அரசாங்கம் தண்டிக்கவேண்டும் என அழுத்தம் கொடுக்கும் மனித உரிமை பேரவையை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பது குறித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கவேண்டு;ம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவின் சமீபத்தைய அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள ஜகத்டயஸ் இந்த கடும் சவாலை எதிர்கொள்வதில் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி வேட்பாளர்களிற்கும் உள்ள பொறுப்பை வலியுறுத்தியுள்ளார்.

யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்கள் என தான் குற்றம்சாட்டியவர்களை விசாரணைகளிற்கு உட்படுத்தி தண்டிப்பதற்கு இலங்கை தவறிவிட்டதாக குற்றம்சாட்டும் ஜெனீவா வெளிப்புற உலகளாவிய நியாயாதிக்கத்தை பயன்படுத்துதல், நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக  பொருளாதார தடைகள் பயணத்தடைகளை விதித்தல்,சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் பிற நடவடிக்கைகள் போன்ற தந்திரோபாயங்களை சர்வதேச சமூகம் பின்பற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது என ஜகத்டயஸ் தெரிவித்துள்ளார்..

https://www.virakesari.lk/article/192619

கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே அநுரவும் சஜித்தும் செய்கின்றனர்!

3 months 2 weeks ago
ranill-k.jpg?resize=750,375 கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே அநுரவும் சஜித்தும் செய்கின்றனர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே மீண்டும் அநுரகுமார மற்றும் சஜித் ஆகியோர் செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

தொம்பே பிரதேசத்தில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இரு வருடங்களுக்கு முன்பு வரிசையில் நின்றதாலேயே இன்று பலர் இங்கு நிற்கிறீர்கள். அன்று இறப்பதற்கும் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. பிரதமர் விலகினால் எதிர்கட்சித் தலைவருக்கு இடமளிக்க வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி கூறினார்.

ஆனால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள பயமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். சரத் பொன்சேகாவும் மறுத்தார். அனுரகுமார கேட்கவே இல்லை.
ஆனால் நாட்டின் நிலை மோசமாக உள்ளதை அறிந்தே நான் ஏற்றுக்கொண்டேன்.

இப்போது என்னோடு இருப்பவர்கள் எனக்கு ஆதரவளித்தால் நான் ஏற்றுக்கொண்டேன்.
நாட்டை பொறுப்பேற்க விரும்பாத சஜித்தும் அனுரவும் நான் பதவியேற்பதையும் விரும்பவில்லை.

சஜித்திற்கும் வழங்கும் வாக்குகள் அனுரவுக்கு வழங்கும் வாக்குகளுக்கு சமமானவை என்பதை ஐக்கிய தேசிய கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் செப்டம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது,முதலீட்டு வலயமும் கிடைக்காது” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1397771

ஜனாதிபதி தேர்தல் ஆதரவு நிலைப்பாட்டால் உடைந்தது தமிழரசுக் கட்சி..!

3 months 2 weeks ago

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில்  இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக இன்று அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்காமல் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. 

அதேவேளை, குறித்த மத்தியகுழு கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் தெரிவித்திருந்ததுடன் கட்சி செயலாளருக்கும் இதை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தேர்தலில் ஆதரவு குறித்து யாரை தெரிவு செய்கின்றோம் என்பதை விட தெரிவு சரியான முறையில் இடம்பெறுகின்றதா என்பது மிக முக்கியம் என ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/tamil-arasu-katchi-support-in-election-2024-1725210905

‘அறிவார்ந்த அரசியலை பேசும் சூழலை மலையகத்தில் உருவாக்க இலங்கை மலையகத் தமிழ் மக்களின் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன்’

3 months 3 weeks ago

Published By: VISHNU   01 SEP, 2024 | 09:41 PM

image
 

நேர்காணல்: சிவலிங்கம் சிவகுமாரன்

சுதந்திர இலங்கையின்  சுதந்திரம் பறிக்கப்பட்ட மக்களின் குரல்களில் எனது குரலும் ஒன்று. சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு சமூகத்தினர்  எவ்வாறு முப்பது வருடங்கள் தனிநாட்டுக்காக போராடினார்களோ அதே போன்று  அதற்கு முன்னைய முப்பது வருடங்கள் நாம் இந்த நாட்டின் குடிகள் என்ற அந்தஸ்த்தைப் பெறுவதற்கு போராடினோம்.

இரண்டு தரப்பினரின் போராட்டங்களும் முக்கியமானவை. அவர்கள் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தப் பிறகு போராடினார்கள், நாம் சுதந்திரம் கிடைத்த அதே  ஆண்டில்  குடியுரிமையையும் அடுத்த ஆண்டில் வாக்குரிமையையும் பறிகொடுத்து விட்டு போராடினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக  பிந்திய முப்பது வருட போர் யுகம் பேசப்படுவதை போன்று அதற்கு முந்தைய  எமது முப்பது வருட போராட்டம் பேசப்படவில்லையென்பது வேதனை.

ஆகவே அது குறித்த அறிவார்ந்த  அரசியலை பேசும் அதே வேளை மலையக மக்களை இந்நாட்டின் அர்த்தமுள்ள குடிகளாக அங்கீகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சக ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சொல்வதற்காகவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன். 

 இத்தேர்தலில் நான்  நான் வெல்வதற்காக அல்ல சொல்வதற்காகவே போட்டியிடுகின்றேன் என்று தெரிவிக்கின்றார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்   மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும்  சுயேச்சை வேட்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.  

 

கேள்வி: இலங்கை மலையகத் தமிழ் மக்களின் வேட்பாளர் என்பதன்  விளக்கம் என்ன? 

பதில் : இதில் சந்தேகங்கள் இருக்க முடியாது என நினைக்கிறேன். இலங்கையில் வாழ்ந்து வருகின்றன மலையக மக்களின் பிரதிநிதியாக நான் பாராளுமன்றில் செயற்பட்டிருக்கின்றேன். அவர்களின் பல பிரச்சினைகளை பேசியிருக்கின்றேன், குரல் கொடுத்திருக்கின்றேன். ஆகவே அந்த மக்களின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளேன். இந்த நாட்டிற்காக உழைத்த வர்க்கத்தினரின்  வாரிசாக நான் விளங்குகின்றேன். இந்த நாட்டில் எமக்கும் உரித்துண்டு என்பதில் எந்த சந்தேகங்களுமில்லை. இலங்கை எமது நாடு. அதில் தமிழர்களாகிய நாங்கள் மலையக சமூகத்தினர். அந்த அடிப்படையில் இலங்கை மலையகத் தமிழர்கள் என்ற பதம் பொருத்தமாகத்தானே இருக்கின்றது. 

கேள்வி:  மலையக அரசியல் அரங்கம் என்ற  சமூக செயற்பாட்டு இயக்கத்தின்  ஒரு அம்சம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது எனக் கூறலாமா?

பதில் :  ஆம் நிச்சயமாக. கடந்த வருடம் இந்த இயக்கத்தை நாம் ஆரம்பித்த போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் போட்டியிட வேட்பாளர்கள் அனைவரையும் தெரிவு செய்திருந்தோம். அப்போது எமது அமைப்பின் கொள்கைகள் பற்றி நான் விளக்கமளிக்கும்  போது இந்த நாட்டில் இடம்பெறும் சகல தேர்தல்களிலும் நாம் போட்டியிடுவோம் என  தெளிவாகக் கூறியிருந்தேன். அதில் ஜனாதிபதி தேர்தல் தான் முதலாவதாக இடம்பெறப் போகின்றது.

அதில் களமிறங்கியுள்ளோம். அதில் மற்றுமொரு முக்கிய விடயம் மாவட்ட எல்லைகளை கடந்து செயற்படுவோம் என்பதாகும். ஆகவே நுவரெலியா மாவட்டத்துக்குள்ளேயே எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருக்க முடியாது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது  என்பது மாவட்ட எல்லைகளை கடந்த ஒரு செயற்பாடு தானே? ஆகவே எமது கொள்கைகளை சிறப்பான முறையில் கால மாற்றத்துக்கும் சூழலுக்கும்  ஏற்றவாறு முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

கேள்வி:  களமிறங்கியிருப்பது வெல்வதற்கு அல்ல என்று கூறிவிட்டீர்கள் என்ன சொல்லப்போகின்றீர்கள்? 

பதில் : இது வரை  மலையக சமூகம் தொடர்பில் எந்த மலையக அரசியல்வாதிகளும் சொல்லாத விடயங்களை சொல்லப்போகிறேன் என்றும் வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் 1977 ஆம் ஆண்டிலிருந்து  இது வரை எமது மலையக பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் சொல்லாத பல விடயங்களை நான் பாராளுமன்ற உறுப்பினராக சொல்லியிருக்கின்றேன், அதன் மூலம் சில விடயங்களை செய்யவும் வைத்திருக்கின்றேன்.

பாரம்பரிய அரசியல்வாதிகள் எல்லாம் பாராளுமன்றத்தில் சொல்ல வேண்டிய விடயங்களை அங்கு சொல்லாமல் பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுத்துக்கொண்டிருந்த காரணத்தினால் தான்  நாங்கள் பாராளுமன்றத்துக்கு வர வேண்டியேற்பட்டது. இப்போது நான் சொல்ல வருகின்ற விடயங்கள் பல உள்ளன. அதில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள பிரதான விடயத்தை இங்கு கூற விரும்புகிறேன்.

அதாவது மலையக மக்களின் நீண்ட கால பிரச்சினைகளை பதிவு செய்வதற்கான ஒரு ஜனாதிபதி  ஆணைக்குழுவை ஸ்தாபித்தலாகும். அதை ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

கேள்வி: ஜனாதிபதி வேட்பாளருக்கான காரியாலயம் தொடர்பில்  மலையகப் பெருந்தோட்டப்பகுதி  குடியிருப்புகள்  பற்றிய   நீண்ட கால  அவலத்தை   அம்பலப்படுத்தியிருந்தீர்கள். இது பேசப்பட்டதா? 

பதில்:  இனி அதிகமாகவே  பேசப்பட வேண்டும். இப்படியான விடயங்களை சொல்வதற்காகவே நான் களமிறங்கியுள்ளேன் என்பதை ஏனையோரும் புரிந்து கொள்ள வேண்டும். நான் பிறந்த மண் வட்டகொடை மடக்கும்பரை தோட்டத்தின்  புதுக்காடு பிரிவு.

அங்கு வசிக்கும் ஓய்வு பெற்ற  தோட்டத் தொழிலாளியான திருமதி. கருப்பன் தனபதி அவரது வசிப்பிடமான லயன் அறையை எனக்கு தற்காலிக தேர்தல் காரியாலயமாக பயன்படுத்துவதற்கு கடந்த 19 ஆம் திகதி அனுமதி தந்தார். 

ஆனால் தேர்தல்கள் ஆணைக்குழு எனக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றுநிருபத்தின் ( இல 06) பிரகாரம் இந்த வசிப்பிடம் திருமதி. கருப்பன் தனபதிக்கு சொந்தமானது என்றும் அந்த வசிப்பிடம் அமைந்த வளவு அரசுக்கோ வேறு நியதிச் சட்ட நிறுவனம் ஒன்றுக்கோ உரித்தானது அல்ல என்பதையும் வேட்பாளராகிய நான் உறுதி செய்தல் வேண்டும். இவற்றை உறுதி செய்ய திருமதி. கருப்பன் தனபதியிடம் எவ்விதமான ஆவணங்களும் இல்லை. ஆனால் அவரது தலைமுறையினர் கடந்த 200 ஆண்டுகளாக இந்த லயன் அறையில் வாழ்வதாக திருமதி. தனபதி வாய்மொழி மூலமாக உறுதி சொல்கிறார்.

மேலும் வேட்பாளரின் தேர்தல் காரியாலயம் (10x10) 100 சதுர அடிக்கு மேற்பட்டதாகவும் உயரம் 8 அடிக்கு மேற்பட்டதாகவும் இருக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கோரி இருப்பதுடன் அதனை குறித்த குடியிருப்பு  அமைந்த கிராம உத்தியோகத்தர் உறுதி செய்ய வேண்டும் எனவும் சுற்று நிருபத்தில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் திருமதி தனபதி அவர்களின் லயன் குடியிருப்பின் கூரையின் முகப்பு பகுதி 6 அடிக்கும் குறைவாகவே உள்ளதால் அதனை உறுதி செய்வதில் கிராம உத்தியோகத்தருக்கு சிக்கல் ஏற்படலாம்.

தோட்ட லயன் அறையில் பிறந்து வளர்ந்த நான், இத்தகைய லயன் அறைகளில் வாழும் 9 லட்சம் மலையகப் பெருந்தோட்ட மக்களின் பிரதிநிதியாக தோட்ட லயன் அறை ஒன்றிலேயே எனது தற்காலிக தேர்தல் காரியாலயத்தை அமைக்க விரும்புகிறேன். 

எனவே இந்த சுற்றுநிருப சரத்துகளை மீளாய்வு க்கு உட்படுத்தி 200 ஆண்டுகளாக தமக்கு உரித்தாவனங்கள் ஏதுமற்ற, அவை யாருக்கு உரித்தான வளவு என உறுதி செய்ய முடியாத 8 அடிக்கும் குறைவான உயரமான கூரையின் முகப்பு பகுதியைக் கொண்ட இலங்கை பெருந்தோட்டம் ஒன்றில் அமைந்த தொழிலாளியின் வாழ்விடமான லயக் குடியிருப்பை தற்காலிக தேர்தல் காரியாலயமாக   உள்ள சிக்கலை தீர்த்து வைக்குமாறு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தேன். அவர்கள் நுவரெலியா மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் உள்ள தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவில் இது குறித்து அறிவிக்க சொல்லியிருந்தார்கள். அது குறித்து முறைப்பாடொன்றை செய்தேன். குறித்த காரியாலயத்தை பயன்படுத்தும்படியும் மேற்கொண்டு அது தொடர்பில் பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார்கள். 

இவ்வாறான குடியிருப்பு சூழலில்தான் மலையகப் பெருந்தோட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும்  தேசிய கொள்கை வகுப்பாளர்களுக்கும், அரசுக்கும், ஐ.நாவுக்கும் சேதியை சொல்ல விரும்புகிறேன்.

கேள்வி : தோட்டத்தொழிலாளர்களின்  சம்பள விடயத்தில் என்ன  தீர்வுகளை கொண்டிருக்கின்றீர்கள்? 

பதில் : தொழிலாளர்களின்  சம்பளத்தை இது வரை தொழிலாளர்கள் கேட்டதில்லையே,  அவர்களின் பிரதிநிதிகள் தானே அதை தீர்மானிக்கின்றார்கள்? ஆகவே இங்கு ஆரம்பமே முரணாக உள்ளது. ஒன்று தொழிலாளர்களின் சம்பளத்தைப் பற்றி கதைப்பார்கள் அல்லது அவர்களை சிறுதோட்ட உடைமையாளர்களாக மாற்றுவோம் என ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் நிபந்தனைகளை முன்வைத்து யாராவது ஒரு வேட்பாளருடன் இணைந்து கொள்வார்கள்.

அவர் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் நடக்கப்போவது ஒன்றுமில்லை. உதாரணத்துக்கு கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது அவருக்கு ஆதரவளித்த மலையகக் கட்சியானது,  தொழிலாளர்களை சிறுதோட்ட உடைமையாளராக்க இவருக்கு வாக்களியுங்கள் என்றது.

கோட்டாபய வெற்றி பெற்றும் அது நடக்கவில்லை. சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த கூட்டணி இதையே முன்வைத்து ஆதரவு கேட்டது. அவர் வெற்றி பெறவில்லை. ஆனால் அது முக்கியமல்ல. இவர்கள் முன் வைத்த கோரிக்கையை எதிர்க் கட்சித் தலைவராகவாவது அவர் பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையை முன்வைத்திருக்கலாமே? அவர் ஏன் அதை செய்யவில்லை? நான் இவ்விடயத்தில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

தொழிலாளர்களுக்கு நாட்கூலி முறைமை வேண்டாம். தென்மாகாண தோட்டங்களை சிங்கள மக்களுக்கு பிரித்து கொடுத்தது போன்று மலையகப் பிரதேசங்களிலும் தொழிலாளர்களுக்கு அதை பிரித்து வழங்கும் திட்டம் குறித்து பேச அனைவரும் ஒன்று சேர்ந்தால் நான் அவ்விடத்தில் முதல் நபராக நிற்பேன். 

கேள்வி:   மலையக சமூகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என காலங் காலமாக பலரும் பேசி வருகின்றார்களே  இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் : எமது மக்களுக்கு சொந்தமாக ஒரு துண்டு காணியில்லை, கெளரவமாக வாழ்வதற்கான குடியிருப்பு இல்லை, அந்த குடியிருப்புக்கு ஒரு முகவரி இல்லை, தேசிய சுகாதார சேவைக்கும் இன்னும் எமது மக்கள் இணைக்கப்படவேயில்லை.

உள்ளூரிலேயே இப்படி தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்கும் போது தேசிய நீரோட்டத்துக்கு எப்படி போவது? இந்த மக்களுக்கு முகவரிகளே இல்லையென எந்த தலைவராவது பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றாரா? முகவரி இல்லாத காரணங்களினால் தோட்டக் காரியாலயங்கள் தானே தபால்களை விநியோகித்து வருகின்றன? இதற்கான தீர்வை இதுவரை இந்த தலைவர்கள் கூறவில்லையே? தனி ஒருவராக சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தனது தோட்டத்துக்கு முகவரிகளை வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடினார்.

அது அந்த ஒரு தோட்டத்துக்கு மாத்திரமான தீர்வாக அமைந்தது. இங்கு பத்து இலட்சம் மக்களுக்கு அந்தப் பிரச்சினைகள் உள்ளன. அதை வெளிக்கொணர இந்த தேர்தல் காலத்தை நான் பயன்படுத்திக்கொள்ளப்போகின்றேன். எமது தேர்தல் விஞ்ஞாபனங்கள் அனைவருக்கும் சென்று சேர்வதற்கு அவற்றை இயன்றவரை  தபாலில் அனுப்புவதற்கான முயற்சியை எடுப்போம். பெருந்தோகையான தேர்தல் விஞ்ஞாபன கடிதங்கள் தோட்ட காரியாலயங்களிலேயே போய்ச் சேரும்.

ஏனென்றால் முகவரிகள் இல்லாத காரணத்தினால் அந்த பணியை தபாற்கந்தோர்கள் செய்வதில்லை. அவை தோட்டக் காரியாலயத்திலேயே ஒப்படைக்கும். அவ்வாறு நிகழும் போது தோட்ட காரியாலயங்களும், தபால்களை விநியோகிப்பது தமது வேலை அல்ல என்பதை உணர வேண்டும்.

ஆகவே இதனூடாக ஒரு செய்தியை நான் பலருக்கு சொல்லக் கூடியதாக இருக்கும். நான் ஆரம்பத்தில் கூறியது போன்று இத்தேர்தலில் நான் வெல்லப்போவதில்லையென்றாலும் சொல்லப்போகும் விடயங்கள் அழுத்தமாகவும் அனைவரையும் சிந்திக்க வைப்பதாயும் இருக்கும் என்பது நிச்சயம்.

https://www.virakesari.lk/article/192594

Checked
Sun, 12/22/2024 - 16:01
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr