(நா.தனுஜா)
தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு புற்றுநோயைப் போன்றது எனவும், அதனை முடிவுக்குக்கொண்டுவந்து பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வரை கடந்தகால மீறல்களின் தாக்கங்களும், காயங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரைத் தொடர்ச்சியாகத் துரத்திக்கொண்டிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலின் பின்னர் ஆட்சிபீடம் ஏறும் புதிய அரசாங்கம் உண்மையையும், பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதன் ஊடாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (9) ஜெனிவா நேரப்படி காலை 10.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 1.30 மணி) பேரiவின் தலைவர் ஓமர் நிபர் தலைமையில் ஆரம்பமானது. கூட்டத்தொடரில் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் Nவுhல்கர் டர்க்கின் உரை மற்றும் மியன்மார் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை, கலந்துரையாடல் ஆகியவற்றைத் தொடர்ந்து, இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.
அதன்படி இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார்.
இலங்கை தற்போது மிகமுக்கியமான கட்டத்தில் இருப்பதாகத் தனது உரையில் சுட்டிக்காட்டிய அவர், கடந்த காலங்களில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படாமையும், அவை மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்வதற்கு அவசியமான முழுமையான மறுசீரமைப்புக்கள் பூர்த்திசெய்யப்படாமையும் ஆபத்தானது எனக் குறிப்பிட்டார்.
விசேடமாக கடந்த இரண்டு வருடங்களில் நாடு முகங்கொடுத்திருந்த மிகமோசமான பொருளாதார நெருக்கடியை நினைவுகூர்ந்த அவர், அதன்விளைவாக உருவான மக்கள் தன்னெழுச்சிப்போராட்டத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்ட மறுசீரமைப்புக்கள் இன்னமும் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படவில்லை எனவும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டின் வறுமை மட்டம் இரு மடங்காக அதிகரித்திருப்பதுடன், பல குடும்பங்கள் கல்வி, சக்திவலு உள்ளிட்ட ஏனைய தேவைகளைப் புறந்தள்ளி நாளாந்த உணவுத்தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதிலேயே கவனம் செலுத்துகின்றன எனவும் கரிசனை வெளியிட்டார்.
அதேபோன்று அரசாங்கத்தினால் அண்மையில் முன்மொழியப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட அடக்கமுறைச் சட்டமூலங்கள், சட்டங்களை நினைவுகூர்ந்த வோல்கர் டர்க், அவற்றில் பெரும்பாலானவை பாதுகாப்புத்தரப்பினருக்கு மிகையான அதிகாரங்களை வழங்குவதற்கு வாய்ப்பேற்படுத்தக்கூடியவாறு அமைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி அரச சார்பற்ற அமைப்புக்களைப் பதிவுசெய்தல் தொடர்பான உத்தேச சட்டமூலத்தின் ஊடாக ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சிவில் சமூக இடைவெளி மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பன முடக்கப்படக்கூடும் என எதிர்வுகூறிய அவர், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட தரப்பினர் மீதான தொடர் கண்காணிப்புக்கள் குறித்து விசனத்தை வெளிப்படுத்தினார்.
அத்தோடு முத்தூர் படுகொலை, திருகோணமலை ஐவர் படுகொலை, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்டமை உள்ளடங்கலாகக் கடந்த காலங்களில் பதிவான மிகமுக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் எட்டப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய வோல்கர் டர்க், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் விவகாரத்திலும் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவில்லை என்றார்.
மேலும் ஆயிரக்கணக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்காக அவர்களது அன்புக்குரியவர்கள் தொடர்ச்சியாகக் காத்திருப்பதாகவும், கடந்தகால மீறல்கள் தொடர்பில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யாமல் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியாது எனவும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.
அத்தோடு தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு புற்றுநோயைப் போன்றது எனவும், அதனை முடிவுக்குக்கொண்டுவந்து பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வரை கடந்தகால மீறல்களின் தாக்கங்களும், காயங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரைத் தொடர்ச்சியாகத் துரத்திக்கொண்டிருக்கும் எனவும் குறிப்பிட்ட அவர், எனவே எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலை அடுத்து ஆட்சிபீடம் ஏறுகின்ற புதிய அரசாங்கம் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதன் ஊடாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வரை கடந்தகால மீறல்களின் தாக்கங்கள் பாதிக்கப்பட்ட தரப்பினரைத் துரத்திக்கொண்டேயிருக்கும் - வோல்கர் டர்க் | Virakesari.lk