புதிய அரசியல் கட்சி : சாதிப்பாரா மஸ்க்?
25 JUL, 2025 | 06:44 PM
ஆர்.சேதுராமன்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பராக விளங்கிய, உலகின் முதல்நிலை கோடீஸ்வரர் இலோன் மஸ்க், 'அமெரிக்கா கட்சி' எனும் புதிய அரசியல் கட்சியை ஸ்தாபிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அந்நாட்டு அரசியலில் மஸ்க்கின் கட்சி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளன.
'டெஸ்லா' மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனம், 'ஸ்பேஸ் எக்ஸ்' எனும் ரொக்கெட் தயாரிப்பு மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் 'எக்ஸ்' சமூக வலைதள நிறுவனங்களின் அதிபரான இலோன் மஸ்க், உலகின் முதல்நிலை கோடீஸ்வரராக விளங்குகிறார். அவரின் செல்வ மதிப்பு 400 பில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பின் பிரசாரத்துக்காக 277 மில்லியன் டொலர்களை இலோன் மஸ்க் செலவிட்டார்.
அரச வினைத்திறன் திணைக்களத்தின் தலைவராக இலோன் மஸ்க் பதவியேற்ற பின்னர் வெளிநாடுகளுக்கான நிதியுதவிகளை குறைத்தல், அரச நிறுவனங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தல் உட்பட கடுமையான திட்டங்களை மஸ்க் அறிமுகப்படுத்தினார்.
வெளிநாடுகளுக்கு உதவுவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட அமெரிக்க முகவர் நிறுவனமான 'யூ.எஸ்.எயிட்' நிறுவனத்தையே மஸ்க்கின் ஆலோசனையைடுத்து, ஜனாதிபதி ட்ரம்ப் இழுத்து மூடினார்.
மஸ்க்கின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவரின் டெஸ்லா வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.
அதேவேளை, தனது சிக்கன நடவடிக்கைகள் மூலம் அரசின் செலவுகளை குறைத்த போதிலும், ட்ரம்பின் வரி, செலவின சட்டமூலம் காரணமாக பெருந்தொகை நிதி வீணாகிறது என குற்றம் சுமத்திய மஸ்க், கடந்த மே மாதம் அவர் அரச வினைத்திறன் திணைக்களத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
'ஒரு பெரிய அழகிய சட்டமூலம்' என ஜனாதிபதி ட்ரம்பினால் வர்ணிக்கப்பட்ட மேற்படி சட்டமூலத்துக்கு குடியரசுக் கட்சி காங்கிரஸ் (பாராளுமன்ற) உறுப்பினர்கள் ஆதரவளித்தால் 3 ஆவது அமெரிக்கா கட்சியை ஸ்தாபிக்கப்போவதாக மஸ்க் அறிவித்திருந்தார். அச்சட்டமூலம் ஜூலை 4 ஆம் திகதி காங்கிரஸில் 218 : 214 விகித வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 4 ஆம் திகதி, ஜனாதிபதி ட்ரம்ப் அச்சட்டமூலத்தில் கையெழுத்திட்டார். மறுநாள் 'அமெரிக்கா கட்சியை' (America Party) ஸ்தாபிக்கப்போவதாக இலோன் மஸ்க் அறிவித்தார்.
எனினும், புதிய அரசியல் கட்சியை ஸ்தாபித்து. அதன் இலக்குகளில் அடைவதில் இலோன் மஸ்க் வெற்றிபெற முடியுமா என்பதில் விவாதங்கள் உள்ளன.
தென் ஆபிரிக்காவில் பிறந்த இலோன் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது.
தனது 'அமெரிக்கா கட்சி' குறித்த தனது அறிவிப்பையடுத்து, புதிதாக ஸ்தாபிக்கப்படும் கட்சி 2 அல்லது 3 செனட் ஆசனங்களிலும் 8 முதல் 10 பிரதிநிதிகள் சபை ஆசனங்களிலும் கவனம் செலுத்தலாம் என இலோன் மஸ்க் தெரிவித்திருந்தார்.
சர்ச்சைக்குரிய சட்டமூலங்கள் தொடர்பில் தீர்மானகரமான வாக்குகளாக விளங்குவதற்கு இந்த ஆசனங்கள் போதுமானவை என்கிறார் மஸ்க்.
அத்துடன், காங்கிரஸ் தேர்தல்களில் கவனம் செலுத்துவதற்கு தான் முதலில் திட்டமிடுவதாகவும், ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கும் சாத்தியம் நிராகரிக்கப்படக்கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் தாக்கம் செலுத்துவது மஸ்கின் திட்டமாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.
இரு கட்சிகள் முறைமை
அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளே தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஆனால், அந்நாட்டில் தேசிய ரீதியாகவும், மாநிலங்கள் ரீதியாகவும் பதிவுசெய்யப்பட்ட ஏராளமான கட்சிகள் உள்ளன. 'அமெரிக்கன் கட்சி' (American Party) என்ற பெயரிலும், 1969 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட கட்சியொன்று ஏற்கெனவே உள்ளது. ஆனால், 3 ஆவது கட்சியாக குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தக்கூடிய கட்சி பலமான எதுவும் இல்லை.
கடந்த பல தசாப்தங்களில், அமெரிக்க கோடீஸ்வரர்கள் பலர் வலுவான 3 ஆவது கட்சியை ஸ்தாபிப்பதற்கு முயன்று வந்தனர். ஆனால், இரு கட்சி ஆதிக்க முறைமையை அவர்களால் அசைக்க முடியவில்லை.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் கடந்த நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய 3 ஆவது கட்சி வேட்பாளர்களாக தியோடர் ரூஸ்வெல்ட், ரொபர்ட் லா பொலெட், ரொஸ் பெரோட் முதலானோர் விளங்குகின்றனர்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தியோடர் ரூஸ்வெல்ட் 1901 முதல் 1909 வரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர். அவர் 1912 ஆம் ஆண்டு தேர்தலில் முற்போக்கு கட்சியின் சார்பில் போட்டியிட்டு 27.4 சதவீத வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றார்.
1924ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு கட்சியின் வேட்பாளர் ரொபர்ட் லா பொலெட் 16.6 சதவீத வாக்குகளுடன் 3 ஆம் இடத்தைப் பெற்றார்.
1992ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சுயேச்சையாக போட்டியிட்ட ரொஸ் பெரோட் எனும் கோடீஸ்வரர் 18.9 சதவீத வாக்குகளுடன் 3 ஆம் இடத்தைப் பெற்றார்.
வேர்மன்ட் மாநிலத்தில், செனட்டர் பதவிக்கான தேர்தலில் பேர்னி சான்டர்ஸ் 2006 ஆம் ஆண்டு முதல் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றியீட்டி வருகிறார். ஆனால், அவர் சுயேச்சையாக போட்டியிட்டாலும் ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவு அவருக்கு உள்ளது. செனட் சபைத் தேர்தலில் பேர்னி சான்டர்ஸுக்கு எதிராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியதில்லை.
பிரதான கட்சிகளுக்கு சார்பான சட்டங்கள்
அமெரிக்க மாநிலங்களின் சட்டங்கள், இரு பெரிய கட்சிகளுக்கும் சார்பானவை, 3 ஆவது கட்சியொன்று தலைதூக்குவதற்கு அச்சட்டங்கள் சிரமங்களை ஏற்படுத்துகின்றன எனவும் விமர்சனங்கள் உள்ளன.
புதிய அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பது தொடர்பில் அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறான விதிகளைக் கொண்டுள்ளன.
உதாரணமாக, கலிபோர்னியா மாநிலத்தைப் பொறுத்தவரை, அம்மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 0.33 சதவீதத்தினரின் அதாவது சுமார் 75,000 பேரின், கையொப்பத்தை சேகரித்தாலேயே புதிய கட்சியொன்று அங்கீகரிக்கப்படும்.
அதன் பின்னர் அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு மாநில ரீதியான தேர்தல்களில் குறைந்தபட்சம் 2 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். அல்லது 0.33 சதவீத பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
அமெரிக்காவில் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் என்பதால் அவர் கட்சி ஆரம்பித்து, தாராளமாக நிதி அளிக்க முடியாது. அதற்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் உள்ளன.
தேசிய ரீதியிலான இலட்சியங்களுடன் அரசியல் கட்சியொன்றை கட்டியெழுப்புவது மேலும் சிரமமானது. அதற்கு அதிக காலமும் தேவைப்படும்.
புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாக இலோன் மஸ்க் பேசிவந்த போதிலும், அவர் குடியரசுக் கட்சியினருக்கும் தொடர்ந்து ஆதரவாக உள்ளார். குறிப்பாக, அக்கட்சியில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிரானவர்களை இலோன் மஸ்க் ஆதரிக்கிறார். ட்ரம்பின் 'பெரிய அழகிய சட்டமூலத்துக்கு' எதிராக வாக்களித்த குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் தோமஸுக்கு உட்கட்சித் தேர்தலில் ஆதரவு வழங்குவதாக மஸ்க் அறிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், இலோன் மஸ்க் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டால் அவரால் சில தாக்கங்களை ஏற்படுத்த முடியும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, குடியரசுக் கட்சியின் ஒரு தரப்பினரை இலோன் மஸ்க் கவரமுடியும். சொற்ப வித்தியாசங்களில் குடியரசு முன்னிலை வகிகக்கூடிய தேர்தல்களில் இலோன் மஸ்க்கின் கட்சி வாக்குகளை உடைக்க முடியும். இது குடியரசுக் கட்சியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அமெரிக்கவரின் குய்னிபியாக் பல்கலைக்கழகம் தேசிய ரீதியில் கடந்த மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் 62 சதவீதமான குடியரசுக் கட்சி வாக்காளர்கள் இலோன் மஸ்க்குக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஜனநாயகக் கட்சி வாக்காளர்களிடையே அவருக்கான ஆதரவு வெறும் 3 சதவீதமாகவே இருந்தது.
அதாவது, இலோன் மஸ்க் கட்சி ஆரம்பித்தால் அது, ஜனநாயகக் கட்சியினரைவிட குடியரசுக் கட்சியினருக்குதான் அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இந்நிலையில், ஒரு 3ஆவது கட்சியை ஸ்தாபிப்பது அபத்தமானது என தான் கருதுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளர்.
“குடியரசுக் கட்சியுடன் நாம் பிரமாண்ட வெற்றியீட்டுகிறோம். ஜனநாயகக் கட்சி அதன் இலக்கை தவறவிட்டுள்ளது. ஆனாலும் அது எப்போதும் இரு கட்சி முறைமையாகவே இருக்கும். 3 ஆவது கட்சியை ஸ்தாபிப்பது குழப்பதையே அதிகரிக்கும் என எண்ணுகிறேன்.
“அமெரிக்காவில் 3 ஆவது அரசியல் கட்சி வெற்றியீட்டியதில்லை என்ற உண்மைக்கு மத்தியிலும் மஸ்க் 3 ஆவது கட்சியை ஸ்தாபிக்க விரும்புகிறார். அமெரிக்க முறைமை அவற்றுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பபடவில்லை” என்கிறார் ட்ரம்ப்.