உலக நடப்பு

கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை இரத்து செய்த கனடா!

1 month 1 week ago
New-Project-6-9.jpg?resize=750,375&ssl=1 கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை இரத்து செய்த கனடா!

இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் எஸ்.டி.எஸ் என்ற பிரபலமான கல்விக்கான விசேட விரைவு விசா திட்டத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களுக்கு கனடாவில் உயர் படிப்புக்கான விசாக்களை விரைவாகப் பெற அனுமதிக்கும் இந்த விசா திட்டத்தின் நிறுத்தமானது இந்தியா உட்பட சர்வதேசத்திலுள்ள மாணவர்கள் மீது கடுமையான தாக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான விசா விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கும் வகையில் கனேடிய அரசாங்கத்தால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எஸ்.டி.எஸ் விசா திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலமாக கடந்த 2022 ஆம் ஆண்டு வரை 3 இலட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் பயனடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கூற்றுப்படி, கனடாவில் 4,27,000 இந்திய மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1407971

சீனாவைக் குறிவைத்து இந்த நாட்டின் சிறிய தீவில் இந்தியா ரகசியமாக உளவு மையம் அமைக்கிறதா?

1 month 1 week ago
அகலேகா தீவு, இந்தியா - மொரீஷியஸ்

பட மூலாதாரம்,BILLY HENRI

படக்குறிப்பு, அகலேகா தீவு
  • எழுதியவர், ஜேக்கப் எவன்ஸ்
  • பதவி, பிபிசி உலக சேவை

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அகலேகா எனும் சிறிய தீவிலிருந்து வெளியேற வேண்டுமென அர்னௌ பூலே ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், தன்னுடைய சொந்த ஊரை ராணுவமயப்படுத்துவதாகக் கூறி, இந்தாண்டு தன்னுடைய உடைமைகளுடன் நொறுங்கிய இதயத்துடன், இங்கிருந்து புறப்பட்டார்.

சமீப காலம் வரை அகலேகா தீவில் வெறும் 350 பேர் மட்டும்தான் மீன்பிடித்தல் மற்றும் தென்னைகளை வளர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

மற்ற உணவுப்பொருட்கள், தெற்கில் 1,100 கி.மீ. தொலைவில் உள்ள மொரீஷியஸின் தலைநகரிலிருந்து கப்பல் மூலம் ஆண்டுக்கு நான்கு முறை இங்கு வந்திறங்கும். அவசரகால மருத்துவ சேவைகளுக்காக, விதிவிலக்காக சிறிய நிலப்பகுதி விமானத்தின் ஓடுபாதையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அகலேகாவை உள்ளடக்கிய தீவு நாடான மொரீஷியஸ், இந்தியாவின் 3,000 மீட்டர் நீளத்தில் விமான ஓடுதளம் மற்றும் புதிய, பெரியளவிலான படகுத்துறை அமைக்க வழிவகுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கடல்வழி பாதுகாப்பில் இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் ஒருபகுதியாக இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், இது முழு அளவிலான ராணுவ தளமாக மாறக்கூடும் என அகலேகா தீவை சேர்ந்த சிலர் அச்சத்தில் உள்ளனர்.

'தீவில் இருந்து வெளியேற்றப்படலாம்'

கைவினை கலைஞரும் ரெக்கே இசைக் கலைஞருமான (மேற்கத்திய இசை வகை) 44 வயதான அர்னௌ பூலே, இத்திட்டத்திற்கு எதிரான இயக்கத்தை வழிநடத்தி வருகிறார்.

"நான் என் தீவை நேசிக்கிறேன். இந்த தீவு என்னை நேசிக்கிறது," என்கிறார் அவர். "ஆனால், அந்த தளம் அமைக்கப்பட்டால் நான் வெளியேற வேண்டும் என்பது எனக்கு தெரியும்." என்று அவர் கூறுகிறார்.

 
அகலேகா தீவு, இந்தியா - மொரீஷியஸ்

பட மூலாதாரம்,ARNAUD POULAY

படக்குறிப்பு, கட்டுமான பணிகளை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார் அர்னௌ பூலே

இந்தியப் பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் சுமார் 25 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் இரு சிறிய தீவுகள்தான் அகலேகா. இந்தியா கடல்வழி போக்குவரத்தைக் கண்காணிக்க இது சிறந்த இடமாக இருக்கக்கூடும். கடந்த 2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை இந்தாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட படங்களுடன் ஒப்பிடுகையில், அப்பகுதி எந்தளவுக்கு மாறியுள்ளது என்பது புலப்படுகிறது.

வடக்குத் தீவின் மையத்தில், வடக்கில் லா ஃபோர்ச்சே மற்றும் தெற்கில் விங்-சிங்க் ஆகிய இரு கிராமங்களை உள்ளடக்கி, பனை மர வரிசைகளுக்கு நடுவே ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

விமான நிறுத்துமிடத்தில் 60 மீட்டர் அகலமுள்ள இரு கட்டடங்கள் இருப்பதாகவும், அதில் ஒரு கட்டடம் இந்திய கடற்படையின் பி-81(P-8I) விமானத்தை நிறுத்திவைப்பதற்கான கட்டடமாக இருக்கலாம் என்றும், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பிஹெச்டி ஆய்வாளரான சாமுவேல் பேஷ்ஃபீல்ட் தெரிவித்தார்.

என்னென்ன வசதிகள் உள்ளன?

பி-81 விமானம் நீர்மூழ்கி கப்பல்களை தாக்குவதற்கும் கடல்வழி தகவல் தொடர்புகளை கண்காணிப்பதற்கும் ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட போயிங் 737 ரக விமானம் ஆகும். விமான ஓடுதளத்தில் அந்த விமானம் இருப்பதை தீவுவாசிகள் ஏற்கனவே படம் எடுத்துள்ளனர்.

வடமேற்கில் புதிய கப்பல் துறை அமைந்துள்ளது. இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்களுக்காகவும் அகலேகாவுக்கு சரக்குகளை கொண்டு வரும் கப்பல்களுக்காகவும் அது பயன்படுத்தப்படலாம் என்று பேஷ்ஃபீல்ட் கூறுகிறார்.

"புதிய செயற்கைக்கோள் படங்கள் கிடைத்திருப்பதால், இந்தியப் பெருங்கடல் தகவல் தொடர்பில் அகலேகா தீவின் பங்கை நாம் இன்னும் சிறப்பாக புரிந்துகொள்ளலாம்," என்கிறார் அவர்.

இந்த தளத்தை "கண்காணிப்பு நிலையம்" என்கிறது, இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்டிராட்டஜிக் ஸ்டடீஸ் எனும் நிறுவனம். மொரீஷியஸின் மற்ற இடங்களில் உள்ள, இந்தியாவால் உருவாக்கப்பட்ட சாதனத்தை ஒத்த கடலோர ரேடார் கண்காணிப்பு அமைப்பும் அதில் இருக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

 
அகலேகா தீவு, இந்தியா - மொரீஷியஸ்

பட மூலாதாரம்,L'ASSOCIATION LES AMIS D'AGALEGA

படக்குறிப்பு, அகலேகாவின் புதிய ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படையின் பி-81 விமானம்
இந்தியா கூறுவது என்ன?

அகலேகா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துள்ள இந்திய அரசாங்கம், தங்களின் இணையதளத்தில் உள்ள முந்தைய கூற்றுகளை பிபிசியிடம் குறிப்பிட்டது. அதில் ஒன்றில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவும் மொரீஷியஸும் வழக்கமான மற்றும் வழக்கத்திற்கு மாறான சவால்களை எதிர்கொண்டு வரும் இந்திய பெருங்கடல் பிரதேசத்தில் கடல் பாதுகாப்பு தொடர்பான "கூட்டாளிகள்" என தெரிவித்திருந்தார்.

இரு நாடுகளும் 1970கள் முதல் பாதுகாப்பு தொடர்பாக நெருங்கிய உறவை கொண்டுள்ளன. மொரீஷியஸின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், கடலோர காவல்படையின் தலைவர் மற்றும் காவல்துறையின் ஹெலிகாப்டர் படைப்பிரிவின் தலைவர் ஆகியோர் இந்தியர்கள் ஆவர். அவர்கள் முறையே இந்தியாவின் உளவு முகமை, விமானப்படை, மற்றும் கடற்படை ஆகியவற்றில் அதிகாரிகளாக உள்ளனர்.

"இந்த தளத்தை ராணுவ பயன்பாட்டு தளமாக அல்லாமல், திறனை மேம்படுத்தும் ஒன்றாக" இரு தரப்பும் பார்க்க விரும்புவதாக, லண்டன் கிங்ஸ் காலேஜின் பேராசிரியர் ஹர்ஷ் பந்த் கூறுகிறார்.

இந்திய பெருங்கடலில் சீனாவின் இருப்பு அதிகரித்து வருவது குறித்து இந்தியாவும் அதன் நட்பு நாடுகளும் கவலை கொண்டுள்ளன என்பதில் எந்த ரகசியமும் இல்லை.

 
அகலேகா தீவு, இந்தியா - மொரீஷியஸ்
படக்குறிப்பு, இந்தியப் பெருங்கடலில் அகலேகா தீவு அமைந்திருப்பதை விளக்கும் வரைபடம்
'சாகோஸ் தீவு போன்று ஆகிவிடுமோ?"

ஒரு பெரிய நாடு சிறிய நாடு ஒன்றின் பிரதேசத்தில் ராணுவ தளம் அமைப்பது வழக்கத்திற்கு மாறானது அல்ல என்றாலும், அகலேகாவில் நடைபெறும் கட்டுமான பணிகள், தீவுவாசிகள் சிலரை தொந்தரவு செய்துள்ளன.

அத்தீவில் பனை மரங்கள் நெடுக உள்ள வெள்ளை-மணல் கடற்கரைகள் உட்பட பல பகுதிகள் ஏற்கனவே இப்பணிக்காக சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். வளர்ந்து வரும் இந்திய கட்டுமானங்களுக்காக லா ஃபோர்ச்சே கிராமமே காலி செய்யப்படலாம் என்றும், அங்கு வசிக்கும் 10 குடும்பங்கள் வெளியேற்றப்படலாம் என்றும் அங்கே தொடர்ந்து வதந்தி நிலவுகிறது.

"இந்தியர்களுக்கு மட்டுமேயான முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அது மாறும்," என 'ஃபிரெண்ட்ஸ் ஆஃப் அகலேகா' எனும் சங்கத்தின் தலைவர் லாவல் சூப்ரமணியென் (Laval Soopramanien) கூறுகிறார்.

"சாகோஸ் தீவுகளின் கதை போன்று அகலேகாவும் மாறிவிடும்" என அவர் அஞ்சுகிறார். சாகோஸ் தீவுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பெண் மற்றும் அகலேகாவை சேர்ந்த ஒருவரின் 26 வயது மகனான கைவினைஞர் பில்லி ஹென்றியும் இதே கவலையை எதிரொலிக்கிறார்.

"என் தாய் அவருடைய தீவை இழந்தார்," என்கிறார் ஹென்றி. "அடுத்து என் தந்தை இழக்கப் போகிறார்." என்று அவர் கூறினார்.

 
அகலேகா தீவு, இந்தியா - மொரீஷியஸ்

பட மூலாதாரம்,YOHAN HENRI

படக்குறிப்பு, அகலேகாவின் தலைநகர் விங்-சிங்க் (25 என்பதை குறிக்கும் பிரெஞ்சு வார்த்தை) தோட்ட அடிமைகளுக்கு ஒருகாலத்தில் வழங்கப்பட்ட கசையடிகளின் எண்ணிக்கை காரணமாக இப்பெயரால் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது

கிழக்கில் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள சாகோஸ் தீவுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பலர் தான் அகலேகா தீவில் வசித்துவருகின்றனர்.

1965-ம் ஆண்டில் சாகோஸ் தீவை பிரிட்டிஷ் பிரதேசமாக அறிவித்து, அதன் பெரிய தீவான டியகோ கார்சியா (Diego Garcia) தீவில் தகவல் தொடர்பு நிலையம் அமைக்க அமெரிக்காவுக்கு பிரிட்டன் அரசாங்கம் அனுமதி வழங்கியதையடுத்து வெளியேற்றப்பட்டவர்கள் அவர்கள். டியகோ கார்சியா தீவு பின்னர், படிப்படியாக முழு அளவிலான ராணுவ தளமாக மாறியது.

அகலேகாவின் முழு பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அரசாங்கம், அனைவரும் வெளியேறும் அளவுக்கு நிலைமையை மோசமானதாக ஆக்க முயற்சிப்பதாக பில்லி ஹென்றி அச்சத்தில் உள்ளார்.

சுகாதாரம் மற்றும் கல்வி, உள்ளூர் பொருளாதாரத்தில் குறைவான முதலீடு, வேலைவாய்ப்புகளுக்கான பற்றாக்குறை மற்றும் உள்ளூர் மக்கள் தங்கள் சொந்த தொழில்களை தொடங்குவதற்கு நிலவும் தடை ஆகியவற்றில் உள்ள பிரச்னைகளை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

யாரையும் வெளியேறுமாறு கூற மாட்டோம் என, மொரீஷியஸ் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். உள்ளூர் மக்கள் விமான நிலையம் மற்றும் துறைமுக பகுதிக்குள் நுழைவது மட்டும் தடுக்கப்படும் என்றும் கடற்கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடித்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்த இந்நடவடிக்கை நாட்டுக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.

முழு கட்டுப்பாடும் தேசிய காவல் துறையிடமே உள்ளதாக கூறியுள்ள மொரீஷியஸ், அகலேகாவில் ராணுவ தளம் அமைக்கப்படும் என்ற கூற்றுகளை மறுத்துள்ளது. எனினும், இந்திய செலவில் மேற்கொள்ளப்படும் அப்புதிய கட்டுமானங்களின் "நிர்வாகம் மற்றும் செயல்பாடு" ஆகியவற்றில் இந்தியா உதவி செய்யும் என்று அது உறுதிப்படுத்தியுள்ளது.

 
அகலேகா தீவு, இந்தியா - மொரீஷியஸ்

பட மூலாதாரம்,MAXAR

படக்குறிப்பு, அகலேகா தீவின் வடக்கு முனையில் விரிவான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன - செயற்கைக்கோள் படங்கள் கப்பல் துறை மற்றும் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களை காட்டுகின்றன
அடிப்படை வசதிகளை கோரும் மக்கள்

கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்தில் செய்யப்படும் முன்னேற்றங்கள் தீவில் வசிக்கும் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலேயே செய்யப்படுவதாகவும் வறுமையிலிருந்து அவர்களை வெளியேற்ற அவை உதவும் என்றும் இருநாட்டு அரசாங்கங்களும் தெரிவித்துள்ளன.

ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். மொரீஷியஸின் தலைநகருக்கு செல்ல ஆண்டுதோறும் நான்கு படகு சேவைகள் மட்டுமே இன்னும் இயக்கப்படுவதாகவும் பயணிகள் விமானம் இல்லையென்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவால் கட்டப்பட்ட மருத்துவமனைக்கு செல்ல தங்களுக்கு தடையிருப்பதாகவும் அகலேகா தீவு மக்கள் கூறுகின்றனர். மொரீஷியஸ் அரசாங்கத்தின் செய்தி அறிக்கை ஒன்று, அதன் அறுவை சிகிச்சை அரங்கம், எக்ஸ்-ரே இயந்திரங்கள் மற்றும் பல் மருத்துவ உபகரணங்கள் குறித்து பெருமையாக குறிப்பிட்டாலும் இத்தடை இருப்பதாக கூறுகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் கொதிக்கும் சமையல் எண்ணெய் ஏற்படுத்திய தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், அம்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அனுமதி மறுக்கப்பட்டதாக பில்லி ஹென்றி கூறுகிறார்.

"அது இந்தியர்களுக்கு மட்டுமேயானதாக இருக்கிறது" என்கிறார் அவர்.

பாதிக்கப்பட்ட சிறுவனும் அவருடைய பெற்றோரும் மொரீஷியஸ் தலைநகருக்கு சென்றனர். இன்னும் அச்சிறுவன் மருத்துவமனையில் தான் இருப்பதாகக் கூறும் லாவல் சூப்ரமணியென், அகலேகாவுக்கு அடுத்த கப்பல் புறப்படும் வரை அச்சிறுவனின் குடும்பம் அதே தீவில் தான் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட அச்சிறுவனின் நிலை குறித்து கேட்ட போது, அதுகுறித்து மொரீஷியஸ் அரசாங்கம் பதிலளிக்கவில்லை. இதுதொடர்பாக பதிலளிக்க இந்திய அரசாங்கம் மறுத்துவிட்டது.

சமீபத்தில் மொரீஷியஸ் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் பிரவீந்த் ஜூகனௌத், அகலேகா தீவின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு தங்கள் அரசு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார்.

சுகாதாரம், கல்வி, போக்குவரத்து தொடர்புகள், மக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகள், மீன்பிடி துறையில் வளர்ச்சி மற்றும் தேங்காய் மதிப்புகூட்டு பொருட்கள் ஆகியவற்றை மேம்படுத்த "பெரும் திட்டம்" (master plan) உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆனால், கடந்த 2015-ம் ஆண்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து இந்தியாவோ அல்லது மொரீஷியஸோ எவ்வித தகவல்களையும் வெளியிடாததால் மக்களிடையே நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது, எனவே, எதிர்காலத்திற்கான அவர்களின் திட்டங்கள் குறித்து தெரியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

ஆப்கன் நபரை கொண்டு டிரம்பை கொல்ல இரான் சதியா? அமெரிக்கா குற்றச்சாட்டின் முழு பின்னணி

1 month 1 week ago
அமெரிக்கா - இரான், டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப்
  • எழுதியவர், மேட்லைன் ஹால்பர்ட்
  • பதவி, பிபிசி செய்தி, நியூயார்க்

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, டொனால்ட் டிரம்பைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக ஆஃப்கானிஸ்தான் நாட்டவர் மீது அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது இரானில் உருவான சதித்திட்டம் என்றும் அமெரிக்கா கூறுகிறது.

ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த, 51 வயதான ஃபர்ஹாத் ஷகேரி என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது. டிரம்பைக் கொல்ல 'திட்டமிட்டதாக’ ஃபர்ஹாத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஷகேரி இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் இரானில் இருப்பதாக நம்பப்படுவதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்த கூற்றுகள் "முற்றிலும் ஆதாரமற்றவை" என்று இரான் கூறியுள்ளது.

மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகாரில், இரானின் புரட்சிகர காவலர் படையை சேர்ந்த ஒரு அதிகாரி, டிரம்பை கண்காணிக்கவும், அவரை படுகொலை செய்வதற்கான திட்டத்தை தயாரிக்கவும் செப்டம்பர் மாதம் ஷகேரிக்கு உத்தரவிட்டதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 
வழக்கறிஞர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்

அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்ட் ஒரு அறிக்கையில், "அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட பலரை படுகொலை செய்யும் திட்டத்தில் குற்றவாளிகளின் வலையமைப்பை வழிநடத்த நியமிக்கப்பட்ட இரானிய அரசாங்க முகவர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, இந்த வழக்கில் மேலும் இருவர் மீதும் நீதித்துறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இரானை வெளிப்படையாக கடுமையாக விமர்சிக்கும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரைக் கொல்ல ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் அவர்கள் குற்றம்சாட்டப்பட்டனர்.

இந்த இரண்டு பேரின் அடையாளங்களை நீதித்துறை வெளியிட்டுள்ளது. ஒருவர் நியூயார்க்கின் புரூக்ளினில் வசித்த 49 வயதான கார்லைல் ரிவேரா. மற்றொருவர் நியூயார்க்கிற்கு அருகிலுள்ள ஸ்டேட்டன் தீவைச் சேர்ந்த 36 வயதான ஜொனாதன் லேண்ட்ஹோல்ட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் வியாழன் அன்று நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால் காவலில் வைக்கப்பட்டனர்.

 
இரான் பதில்

இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் கூறுகையில், "அமெரிக்க அதிபர்களைக் கொல்ல முயற்சித்ததாக கூறுப்படும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களிலும் கூறப்பட்டன. அதை இரான் மறுத்தது, அதன் பின்னர் அவை பொய்யான குற்றச்சாட்டுகள் என தெரிய வந்தது." என்றார்.

எஸ்மாயில் வெளியிட்ட அறிக்கையில் அவர் மேலும் கூறியதாவது, "இதுபோன்ற கூற்றுகளை மீண்டும் மீண்டும் கூறுவது அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கும் அபாயம் உள்ளது" என்றார்.

டிரம்ப் இந்த ஆண்டு இரண்டு வெவ்வேறு கொலை முயற்சிகளை எதிர்கொண்டார். ஜூலை மாதம், பென்சில்வேனியா பேரணியின் போது ஒருவர் நடத்திய துப்பாச்சூட்டில் அவரது காது பகுதியில் காயம் ஏற்பட்டது.

செப்டம்பரில், வெஸ்ட் பால்ம் பீச்சில் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்த டிரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார். அந்த தாக்குதலிலும் டிரம்ப் உயிர் பிழைத்தார்.

 
யார் இந்த ஃபர்ஹாத் ஷகேரி?

வழக்கறிஞர்கள் கூற்றுபடி, ஆப்கானிஸ்தான் நாட்டவரான ஷகேரி குழந்தையாக இருந்தபோது அமெரிக்காவிற்கு வந்தார். ஒரு திருட்டு குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் இறுதியில் 2008 இல் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.

"51 வயதான அவர் இரானிய அரசாங்கம் குறி வைத்திருந்த இலக்குகளை கண்காணிப்பதற்காக சிறையில் இருந்த ரிவேரா மற்றும் லோடோல்ட் போன்றவர்களை பயன்படுத்தி உள்ளார். அவர்கள் "குற்றவாளிகளின் வலையமைப்பாக" கருதப்படுகின்றனர்” என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

வழக்கறிஞர்கள் வெளியிட்ட அறிக்கையில், இரானில் மனித உரிமைகள் மற்றும் ஊழலின் நிலையை விமர்சித்த அமெரிக்க பத்திரிகையாளரின் கொலைக்கு ஈடாக ரிவேரா மற்றும் லோடோல்ட் ஆகியோருக்கு $100,000 கொடுப்பதாக ஷகேரி வாக்குறுதி அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் பத்திரிகையாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இதற்கு முன்பும் இரான் அரசின் இலக்காக அவர் இருந்ததாக கூறப்படுகிறது.

 
அமெரிக்க பெண் பத்திரிகையாளரை கொல்ல முயற்சி

வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் ஒரு பதிவில், புரூக்ளினை தளமாகக் கொண்ட பெண் பத்திரிகையாளர் மசிஹ் அலினெஜாட், தன்னைக் கொல்ல முயன்றதற்காக இரண்டு பேரை எஃப்.பி.ஐ. கைது செய்ததாக பதிவிட்டுள்ளார். கொலையாளிகள் என்று கூறப்படும் நபர்கள் புரூக்ளினில் உள்ள தனது வீட்டின் முன் வந்ததாக அவர் கூறினார்.

"பேச்சு சுதந்திரத்திற்கான எனது உரிமையை நடைமுறைப்படுத்த தான் நான் அமெரிக்காவிற்கு வந்தேன். நான் இறக்க விரும்பவில்லை" என்று மசிஹ் அலினெஜாட் குறிப்பிட்டுள்ளார்.

"நான் கொடுங்கோன்மைக்கு எதிராக போராட விரும்புகிறேன், எனக்கு பாதுகாப்பு மிகவும் அவசியம்” என்றும் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க பத்திரிகையாளர் மற்றும் டிரம்ப் ஆகிய இருவரைத் தவிர, சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த நியூயார்க் நகரில் வசிக்கும் இரண்டு யூத அமெரிக்க தொழிலதிபர்களைக் கொல்லவும் இரானிய அரசாங்கம் முயன்றதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்கு ஒரு வருடம் கழித்து, 2024 அக்டோபரில் இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிடுமாறு தன்னுடன் தொடர்பில் இருக்கும் இரானிய முகவர்கள் கூறியதாகவும் ஷகேரி வழக்கறிஞர்களிடம் கூறியுள்ளார்.

ஷகேரி, ரிவேரா மற்றும் லோட்ஹோல்ட் ஆகியோர் அனைவரும் பணத்திற்காக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். அவர்கள் மீது பணமோசடி, கொலைக்கு சதி செய்தல் உள்ளிட்ட வழக்குகளும் உள்ளதால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 24 பேர் பலி!

1 month 1 week ago

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 24 பேர் பலி!

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 24 பேர் பலி!

 

பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 24 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று (09) காலையில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 24 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 40 பேர் காயமடைந்துள்ளனர்.

குண்டுவெடிப்பு இடம்பெற்ற போது அங்கிருந்து ரயில் ஒன்று கிளம்பியது. சிறிது தாமதமாக சென்றிருந்தால், பலி எண்ணிக்கை கூடியிருக்கும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த குண்டுவெடிப்பு, தற்கொலைப் படையினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

மேலும், ரயில் நிலையத்தில் வழக்கமாக இருக்கும் கூட்டத்தை விட இன்று குறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://tamil.adaderana.lk/news.php?nid=195565

டிரம்பின் வெற்றி குறித்து கறுப்பினத்தவர்கள் அச்சம் - ரொய்ட்டர்

1 month 1 week ago

image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி அமெரிக்காவின் கறுப்பின மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் கமலா ஹரிசினை கருப்பின பெண்ணாக சித்தரித்து பிரச்சாரம் செய்த நிலையில் கறுப்பின மக்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவாக பெருமளவிற்கு வாக்களித்திருந்தனர்.

blacks_usa.jpg

வடகரோலினாவில் டிரம்பிற்கு கறுப்பின மக்களின் வாக்குகள் கிடைத்துள்ளதுடன் அந்த சமூகத்தை சேர்ந்த மக்களில் சிலர் அவரது வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

எனினும் தேசிய அளவில் கறுப்பின மக்களின் வாக்குகளின் எண்ணிக்கை மாறவில்லை, 2020இல் பெற்ற அதேயளவு வாக்குகளையே அவர் பெற்றுள்ளார்.

2020 இல் ஜோபைடன் வெற்றிபெற்றமைக்கு கறுப்பினமக்களின் வாக்குகளே முக்கியமானவையாக காணப்பட்டன. அந்த தேர்தலிலேயே முதலாவது ஆசிய அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் தெரிவு செய்யப்பட்டார்.

ரொய்ட்டருடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட 25க்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்களில் அனேகமானவர்கள்  டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலம் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர்.

டிரம்ப் சமஸ்டிபன்முகத்தன்மை மற்றும்உ உள்வாங்கல் திட்டங்களை கைவிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில் சிவில் உரிமைகள் பறிபோகலாம் என கறுப்பினத்தவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

டிரம்ப் பயன்படுத்திய இனவெறி மற்றும் பாலியல் மொழி குறித்து  கறுப்பின மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

விஸ்கொன்சினை சேர்ந்த ஒக்கிறீக்கின் 72 வயது ஓய்வுபெற்ற தாதியான மேரி ஸ்பென்செர் டிரம்பின் வெற்றியால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

கறுப்பினத்தவர்கள் குறித்த டிரம்பின் கருத்து ஆதிக்கமனோபாவத்தை வெளிப்படுத்துகின்றது என  அவர் தெரிவித்துள்ளார்.

trump_2024.jpg

அவர் எங்களை பற்றி என்ன நினைக்கின்றார் என்றால்- நாங்கள் கறுப்பினத்தவர்கள்,சட்டவிரோத குடியேற்றவாசிகள் செய்கின்ற வேலையை செய்ய முயல்கின்றோம் என நினைக்கின்றார், திறமையும் கல்வியறிவும் அவசியமற்ற வீட்டுவேலை போன்றவற்றை நாங்கள் செய்கின்றோம் என அவர் நினைக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை மாதம் கறுப்பின ஊடகவியலாளர்களை சந்தித்தவேளை டிரம்ப் குடியேற்றவாசிகள் கறுப்பினத்தவர்களின்  வேலைகளை கைப்பற்றுகின்றனர் என தெரிவித்திருந்தார்.

ஹரிஸ் தேசத்தை ஐக்கியப்படுத்துவார்,இனரீதியான சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுவார் என்ற எதிர்பார்ப்பில் கறுப்பின தொழில்முனைவோரான 51 வயது கட்ரீன ஹோம்ஸ் அவருக்கு வாக்களித்திருந்தார்.

அவரது கொள்கை நிகழ்ச்சி நிரல் - உரை போன்றவற்றை கருத்தில் கொள்ளும்போது இந்த விடயங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களி;ற்கு டிரம்பின் வெற்றி பாதிப்பை ஏற்படுத்தும், என்கின்றார் கட்ரீனா ஹோம்ஸ்.

பிரிவினை உணர்வு காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதி குறித்தும்,தங்கள் சமூகஅமெரிக்காவின் அனைத்து கறுப்பினத்தவர்களிற்கும் டிரம்பி;ன் வெற்றி உளவியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஜோர்ஜ்டவுன் பல்கலைகழகத்தின் பெண்கள் பாலின கற்கைநெறியின் இயக்குநர் நடியா பிரவுன் தெரிவித்துள்ளார்.

அவரது சொல்லாட்சிகள், இனவெறி மற்றும் இனவெறி கருத்துக்கள் அனைத்தும் கவனத்தை சிதறடிக்கும் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹரிணியின் வருகைக்கான களத்தை உருவாக்க பலமாதங்களாக பாடுபட் கறுப்பின மக்கள் ஏமாற்றமடைந்திருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இது இனசமத்துவத்திற்காக இன்னமும் தீவிரமாக கடுமையாக போராடுவதற்கு தங்களை உக்குவிக்கும் என சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

black_americans_22.jpg

எங்கள் அடிப்படை உரிமைகள் சுதந்திரம் அனைத்தையும் மீள பெறுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை தடுப்பதற்காக நாங்கள் ஒவ்வொரு கோணத்திலும் அணிதிரளப்போகின்றோம் என கறுப்பின பெண்களுடன் வெற்றிபெறுங்கள் என்ற அமைப்பை ஆரம்பித்த ஜொடாகா ஈடி தெரிவித்துள்ளார்.

நாங்;கள் இந்த போராட்டத்தை கைவிடமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

black_americans_1.jpg

https://www.virakesari.lk/article/198164

நெதர்லாந்தில் இஸ்ரேலிய ரசிகர்கள் மீதான தாக்குதல்; மீட்பு பணிக்காக இரு விமானங்களை அனுப்ப உத்தரவு!

1 month 1 week ago
New-Project-2-15.jpg?resize=750,375&ssl= நெதர்லாந்தில் இஸ்ரேலிய ரசிகர்கள் மீதான தாக்குதல்; மீட்பு பணிக்காக இரு விமானங்களை அனுப்ப உத்தரவு!

ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து கால்பந்து ரசிகர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்களை நெதர்லாந்துக்கு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார்.

இது குறித்து நெதன்யாகுவின் அலுவலகம் எக்ஸ் கணக்கில் கூறியுள்ளதாவது,

எங்கள் குடிமக்களுக்கு உடனடியாக உதவ இரண்டு மீட்பு விமானங்கள் அனுப்பப்படுகின்றன.

பிரதமர் நெதன்யாகு இந்த சம்பவம் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். மேலும் டச்சு அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் கலவரக்காரர்களுக்கு எதிராக தீவிரமான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அஜாக்ஸ் மற்றும் இஸ்ரேலிய கால்பந்து கழகமான மக்காபி டெல் அவிவ் (Maccabi Tel Aviv) இடையேயான யூரோபா லீக் போட்டிக்கு முன்னதாக, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் வியாழக்கிழமை (7) மாலை கலவரம் வெடித்தது.

இஸ்ரேலிய ரசிகர்கள் பாலஸ்தீன ஆதரவு ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன்போது, இஸ்ரேலியர்கள் தற்காப்புக்காக பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வன்முறை மோதல்களைத் தொடர்ந்து மூன்று இஸ்ரேலியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலின் வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வன்முறை தொடர்பில் 62 பேர் கைது செய்யப்பட்டதாக நெதர்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.

கழகம் அதன் ரசிகர்களை அவர்களது ஹோட்டல் அறைகளுக்குள் இருக்குமாறு எச்சரித்ததுடன், இஸ்ரேலிய அல்லது யூத சின்னங்களைக் பொது வெளியில் காட்டுவதை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது.

மக்காபி டெல் அவிவ் ஒரு யூத கழகமாக அடையாளம் காண்பிக்கப்படுகிறது.

அதன் சின்னமாக தாவீதின் நட்சத்திரம் (Star of David) உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1407855

சுவிட்சர்லாந்தில்,  முகத்தை முழுமையாக மூட தடை- மீறினால் அபாராதம்.

1 month 1 week ago
முகத்தை முழுமையாக மூட தடை- மீறினால் அபாராதம் சுவிட்சர்லாந்தில்,  முகத்தை முழுமையாக மூட தடை- மீறினால் அபாராதம்.

சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

எனினும், விமானங்களுக்குள், தூதரக, தூதரக வளாகங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது என்றும் வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தலங்களிலும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் அந்நாட்டை ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம் என்றும் ஆனால், மத ரீதியாக அல்லது தட்ப வெப்ப நிலை காரணமாக இதனை செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, பொது வெளியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத நபர்கள் முகத்தை மூடிக்கொள்ள முன் அனுமதி பெறலாம் என்றும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1407864

ட்ரம்பின் தைரியம் தன்னை ஈர்த்துள்ளது! வெளிப்படையாக புகழ்ந்த புடின்

1 month 2 weeks ago

டொனால்ட் ட்ரம்பின்  (Donald Trump) தைரியம் தன்னை ஈர்த்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)  தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில்(Russia)  நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “டொனால்டு ட்ரம்பை தாமாகவே முன்வந்து தொடர்பு கொள்வதில் எந்த அவமானமும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், அதை நான் செய்ய விரும்பவில்லை.

டொனால்ட் ட்ரம்பின் தைரியம்

எவரேனும் ஒருவர் மீண்டும் தம்மை தொடர்பு கொண்டால் அதை தாம் வரவேற்பதாகவும், விவாதிக்க தயார். அது போலவே, டொனால்டு ட்ரம்புடனும் தாம் விவாதிக்க தயாராக இருக்கின்றேன்.

 

ஜூலை மாதம் ட்ரம்ப் மீதான தாக்குதலின் போது அவரின் செயல்பாடு தம்மை ஈர்த்தது.

அவர் ஒரு தைரியமான நபராக மாறியுள்ளார். மட்டுமின்றி, அந்த தருணத்திலும் பொதுவான கொள்கைகளுக்காக போராட வேண்டும் என ட்ரம்ப் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது உண்மையில் வியக்க வைக்கும் செயல்.

புடினின் வாழ்த்து

ஒரு நபர் தனது உண்மையான சுயத்தை அசாதாரணமான சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகிறார், அங்கு அவர் ஒரு மனிதனைப் போல தைரியமான முறையில் தன்னை நிரூபித்தார்.

ட்ரம்பின் தைரியம் தன்னை ஈர்த்துள்ளது! வெளிப்படையாக புகழ்ந்த புடின் | Putin Praises Trump Says Russia Ready For Dialogue

ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அவரை கேலி செய்தவர்கள் பலர். ஒரு முடிவெடுக்க முடியாமல் அவரை தடுமாற வைத்தார்கள்.தற்போது என்ன நடக்கும் என்பது தமக்கு தெரியவில்லை ” என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ரஸ்ய ஜனாதிபதி புடினின் வாழ்த்து மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேர்காணலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/putin-praises-trump-says-russia-ready-for-dialogue-1731016171#google_vignette

டொனால்ட் டிரம்ப் மீது நிலுவையில் உள்ள 4 குற்ற வழக்குகளும் இனி என்ன ஆகும்?

1 month 2 weeks ago
அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப், குற்றவியல் வழக்குகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப், கடந்த ஏப்ரல் மாதம் தனக்கு எதிரான முதல் குற்றவியல் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
  • எழுதியவர், மேடலின் ஹால்பர்ட்
  • பதவி, பிபிசி நியூஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் மீது பல குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தீர்ப்பளிக்கப்படாத பல குற்றவியல் வழக்குகள் உள்ள ஒருவர் அமெரிக்க அதிபராவது இதுவே முதல்முறை.

பல குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் அதேவேளையில் டிரம்ப் அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவியில் உட்காரப் போவது, அமெரிக்காவில் இதுவரை நடந்திராத ஒன்று.

டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் நுழையும் போது, அவர் எதிர்கொள்ளும் நான்கு குற்ற வழக்குகள் என்ன ஆகும் என்பது இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு
அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப், குற்றவியல் வழக்குகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக 34 மோசடி வழக்குகள் சுமத்தப்பட்டன

வணிக ஆவணங்களில் முறைகேடு செய்ததாக அவர் மீது முன்வைக்கப்பட்ட 34 குற்றச்சாட்டுகள் நியூயார்க் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் உறுதி செய்யப்பட்டது. இவை நியூயார்க்கில் கடுமையான குற்றங்களாக கருதப்படுகின்றன.

மே மாதம், நியூயார்க்கின் நடுவர் மன்றம் டிரம்பை குற்றவாளி என்று அறிவித்தது. இந்த கணக்கு பதிவேடு முறைகேடுகள் அனைத்துமே ஆபாச நடிகைக்கு பணம் தரப்பட்டதுடன் (hush money) தொடர்புடையவை.

நியூயார்க் நீதிபதி ஜுவான் மார்ச்சென், டிரம்புக்கான தண்டனை அறிவிப்பை செப்டம்பர் மாதத்தில் இருந்து நவம்பர் 26-ஆம் தேதி வரை ஒத்திவைத்திருந்தார். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தள்ளிவைக்கப்பட்டது.

முன்னாள் புரூக்ளின் வழக்கறிஞர் ஜூலியா ராண்டில்மேன் கூறுகையில், தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றாலும், நீதிபதி மார்ச்சென் திட்டமிட்டபடி சட்ட நடவடிக்கையை தொடர முடியும் என்று கூறினார்.

ஆனால், முதியவர் என்பதாலும் முதல்முறை குற்றவாளி என்பதாலும் டிரம்புக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பில்லை என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு வேளை தண்டனை அறிவிக்கப்பட்டால், டிரம்பின் வழக்கறிஞர்கள் உடனடியாக தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். ஏனெனில் டிரம்ப் சிறைக்கு அனுப்பப்பட்டால், அவர் தனது அதிகாரப்பூர்வ வேலையைச் செய்ய முடியாது என்று ஜூலியா கூறுகிறார்.

"இந்த மேல்முறையீட்டு செயல்முறை பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்" என்றும் அவர் கூறினார்.

தேர்தல் முடிவுகளை மாற்ற சதி செய்ததாக வழக்கு
அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப், குற்றவியல் வழக்குகள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதால், கிரிமினல் வழக்குகளில் அவருக்கு இருந்த பிரச்னைகள் ‘முடிவுக்கு வந்ததுள்ளன’

கடந்த ஆண்டு டிரம்ப் மீது சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித், கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார்.

இந்த வழக்கு 2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற பின்னர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பானது. டிரம்ப் இந்த வழக்கில் தன்னை நிரபராதி என்று கூறினார்.

அதிபர் என்ற முறையில் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து அவருக்கு ஓரளவு சட்டப் பாதுகாப்பு இருப்பதை அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு பற்றி குழப்பம் நிலவுகிறது.

எவ்வாறாயினும், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் டிரம்பின் முயற்சி அதிபர் என்கிற முறையிலான அவரது அதிகாரப்பூர்வ கடமைகளுக்குள் வராது என்று ஸ்மித் தனது வாதத்தை மீண்டும் முன்வைத்தார்.

முன்னாள் அரசு வழக்கறிஞர் நயீம் ரஹ்மானியின் கூற்றுப்படி, டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதால், கிரிமினல் வழக்குகளில் அவருக்கு இருந்த பிரச்னைகள் ‘முடிவுக்கு வந்ததுள்ளன’.

"பதவியில் இருக்கும் அதிபருக்கு எதிரான குற்றம்சாட்டில் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்பது உறுதியாகிவிட்டது. எனவே வாஷிங்டன் டிசி நீதிமன்றத்தில் நடந்து வரும் தேர்தல் மோசடி தொடர்பான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு விடும்" என்று அவர் கூறுகிறார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்ய ஸ்மித் மறுத்தால், டிரம்ப் ஏற்கனவே கூறியதைப் போல அவரை அதிகாரத்தில் இருந்து நீக்க முடியும்.

"இரண்டு நொடிகளில் நான் அவரை நீக்குவேன்" என்று டிரம்ப் அக்டோபரில் ஒரு வானொலி பேட்டியில் கூறினார்.

 
அரசு ஆவணங்கள் தொடர்பான வழக்கு
அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப், குற்றவியல் வழக்குகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தீர்ப்பளிக்கப்படாத பல குற்றவியல் வழக்குகள் உள்ள ஒருவர் அமெரிக்க அதிபராவது இதுவே முதல்முறை (கோப்புப் படம்)

டிரம்பிற்கு எதிரான மற்றொரு வழக்கையும் ஸ்மித் முன்னெடுத்தார். அரசின் ரகசிய ஆவணங்களை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், இதை டிரம்ப் மறுத்தார்.

டிரம்ப் தனது இல்லமான 'மார்-ஏ-லாகோ'வில் முக்கியமான அரசு ஆவணங்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த ஆவணங்களை சட்டத் துறை திரும்பப் பெற முயன்றது.

இந்த வழக்கை டிரம்ப் அதிபராக இருந்த போது நியமிக்கப்பட்ட ஃபுளோரிடா நீதிபதி எலைன் கேனன் விசாரித்தார். கடந்த ஜூலை மாதம் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார். இந்த வழக்கை விசாரிக்க சட்டத் துறை ஸ்மித்தை முறைகேடாக நியமித்துள்ளதாகக் கூறி குற்றச்சாட்டுகளை அவர் தள்ளுபடி செய்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்மித் மேல்முறையீடு செய்துள்ளதாக ரஹ்மானி கூறினார். ஆனால், தற்போது டிரம்ப் அதிபராவது உறுதியாகிவிட்ட நிலையில், தேர்தல் மோசடி தொடர்பான வழக்கை போல் ரகசிய ஆவணங்கள் தொடர்பான வழக்கும் ரத்து செய்யப்படலாம் என ரஹ்மானி கூறுகிறார்.

"ரகசிய ஆவணங்கள் வழக்கை நிராகரிப்பதற்கான லெவந்த் சர்க்யூட் மேல்முறையீட்டை (Eleventh Circuit appeal) சட்டத்துறை (DOJ) கைவிடும்," என்று அவர் கூறினார்.

 
ஜார்ஜியா வழக்கு
அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப், குற்றவியல் வழக்குகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ‘அமெரிக்க அதிபராக, அவர் அதிபர் அலுவலகத்தில் இருக்கும் வரை, அவர் மீது எந்த வழக்கும் பதியப்பட மாட்டாது என நம்புகிறேன்’ என டிரம்பின் வழக்கறிஞர் ஸ்டீவ் செடோ கூறுகிறார்

ஜார்ஜியாவிலும் டிரம்ப் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இந்த விவகாரம் 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் முடிவை மாற்றச் சதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பானது.

இந்த விஷயத்தில் பல்வேறு தடைகள் இருந்தன. மாவட்ட வழக்கறிஞர் ஃபேன்னி வில்லிஸை தகுதி நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வழக்கு தொடர்பான வழக்கறிஞர் ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம் வில்லிஸ் இந்த வழக்கில் இருக்க அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதை பரிசீலித்து வருகிறது.

ஆனால் தற்போது டிரம்ப் அதிபராக வந்துவிட்டார். எனவே இந்த வழக்கு இன்னும் தாமதமாகலாம் அல்லது தள்ளுபடி செய்யப்படலாம்.

இந்த வழக்கு ரத்து செய்யப்படும் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்து.

டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் விசாரணைகளுக்கு வர முடியுமா என்று நீதிபதி கேட்ட போது டிரம்பின் வழக்கறிஞர் ஸ்டீவ் செடோ, "அமெரிக்க அதிபராக, அவர் அதிபர் அலுவலகத்தில் இருக்கும் வரை, அவர் மீது எந்த வழக்கும் பதியப்பட மாட்டாது என நம்புகிறேன்” என்றார்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

பிரிட்டன் தம்பதியின் நீண்ட சட்டப் போராட்டம்: கூகுள் நிறுவனத்திற்கு ரூ.26 ஆயிரம் கோடி அபராதம் - ஏன்?

1 month 2 weeks ago
கூகுள்

பட மூலாதாரம்,SHIVAUN AND ADAM RAFF

படக்குறிப்பு, ஷிவான் ராஃப் மற்றும் அவரது கணவர் ஆடம், கூகுளுக்கு எதிராக நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தினர்.
  • எழுதியவர், சைமன் டுலெட்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

"எங்கள் தளத்தை கூகுள் இணையத்தில் இருந்து மறையச் செய்துவிட்டது" என்று ஒரு முக்கியமானக் குற்றச்சாட்டை ஷிவான் ராஃப் மற்றும் அவரது கணவர் ஆடம் ராஃப் ஆகியோர் முன்வைத்துள்ளனர்.

பிரிட்டனை சேர்ந்த ஷிவான் ராஃப் - ஆடம் ராஃப் தம்பதி 2006 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில், நல்ல ஊதியம் வரும் வேலையை விட்டுவிட்டு, `ஃபவுண்டெம்’ (Foundem) என்ற 'விலை ஒப்பீட்டு’ இணையதளத்தைத் தொடங்கினர்.

பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கும் தொழில்முனைவோருக்கு அதன் முதல் நாள் உற்சாகமும், அச்சமும் நிறைந்ததாக இருக்கும். ஆனால், ஷிவான் மற்றும் ஆடமுக்கு முதல் நாளே மோசமாக இருந்தது.

இருவரும்` Foundem’ என்னும் இணையதளத்தை தொடங்கியபோது, அடுத்தடுத்த நாட்களில் தங்கள் ஸ்டார்ட்அப்பிற்கு பெரிய பிரச்னை வரப்போகிறது என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

கூகுள் ஸ்பேம் ஃபில்டர்கள் ஏற்படுத்திய பாதிப்பு?

கூகுள் தேடுபொறியின் தானியங்கி ஸ்பேம் ஃபில்டர்களில் ஒன்றின் காரணமாக `ஃபவுண்டெம்’ இணையதளம் மீது கூகுள் சர்ச் பெனால்டி (`Google search penalty’) விதிக்கப்பட்டது. இது அவர்களின் இணையதளத்தின் வணிகத்தை பாதித்தது.

விலை ஒப்பீடு பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ராஃப் தம்பதியினரின் `ஃபவுண்டெம்’ இணையதளம், ஷாப்பிங் செய்பவர்கள் வெவ்வேறு விற்பனையகங்களில் விலை ஒப்பீட்டை தெரிந்து கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன்படி பயனர்கள் விலை ஒப்பீடு தொடர்பான தகவல்களை பெற `ஃபவுண்டெம்’ லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் பட்டியலிட்டிருக்கும் பொருட்களை கிளிக் செய்யும் போது ராஃப் தம்பதிக்கு வருவாய் வரும்.

ஆனால், கூகுள் விதித்தக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த செயல்பாடு பாதிக்கப்பட்டது. இணையதளத்தில் இருந்து பணம் சம்பாதிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. மேலும், விலை ஒப்பீடு மற்றும் ஒப்பீடு ஷாப்பிங் தொடர்பான கூகுள் தேடல் முடிவுகளின் பட்டியலில் `ஃபவுண்டெம்’ மிகவும் பின்தங்கியது.

"எங்கள் இணையதளத்தை நாங்கள் கண்காணித்துக் கொண்டிருந்தோம். கூகுள் தேடலில் அவை எவ்வாறு தரவரிசை செய்யப்படுகின்றன என்பதை பார்த்தபோது, அவை அனைத்தும் உடனடியாக வீழ்ச்சியடைந்ததைக் கவனித்தோம்" என்று ஆடம் கூறுகிறார்.

 
கூகுளுக்கு எதிரான நீடித்த சட்டப் போராட்டம்

ஃபவுண்டெம் தளத்தின் முதல் நாள் திட்டமிட்டபடி போகவில்லை. இது 15 ஆண்டுகளாக நீடித்த சட்டப் போராட்டத்திற்கு வழிவகுத்தது.

தம்பதியினரின் சட்டப்போராட்டத்தின் இறுதியில் கூகுளுக்கு 2.4 பில்லியன் பவுண்டுகள் (ஏறக்குறைய 26 ஆயிரம் கோடி ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கூகுள் தனது சந்தை ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் நம்பப்பட்டது.

பிரிட்டன் தம்பதியின் நீடித்த சட்டப் போராட்டம் :  கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் உலகளாவிய ஒழுங்குமுறையில் இந்த வழக்கு வரலாற்று தருணமாக பார்க்கப்பட்டது.

ஜூன் 2017இல் வெளியிடப்பட்ட அந்த தீர்ப்பை எதிர்த்து கூகுள் ஏழு ஆண்டுகள் போராடியது. இந்த ஆண்டு செப்டம்பரில், ஐரோப்பாவின் உயர் நீதிமன்றமான `ஐரோப்பிய நீதிமன்றம்’ கூகுளின் மேல்முறையீடுகளை நிராகரித்தது.

அந்த இறுதித் தீர்ப்பிற்குப் பிறகு, ரேடியோ 4 இன் தி பாட்டம் லைனிடம் ஷிவான் மற்றும் அடாம் கொடுத்த முதல் நேர்காணலில், தங்கள் இணையத்தளத்திற்கு ஏற்பட்ட தடங்கலை ஆரம்பத்தில் சிறிய பிரச்னை தான் என்று நினைத்ததாக விளக்கினர்.

55 வயதான ஷிவான் கூறுகையில், “ஆரம்பத்தில் எங்கள் இணையதளத்தை கூகுள் ஸ்பேம் என்று தவறாக கருதியிருக்கலாம் என்று நினைத்தோம். சரியான இடத்தில் புகார் அளித்தால், இந்த தவறு சரி செய்யப்படும் என நினைத்தோம்.” என்றார்.

ஆடம் (58) பேசுகையில், "இணையதளத்துக்கு பயனர்கள் வரவில்லை எனில், டிராஃபிக் ஏற்படாது (Website Traffic). எனவே வருவாயும் வராது” என்றார்.

 

அந்தத் தம்பதியினர் இணையதளத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கூகுளுக்குப் பல கோரிக்கைகளை அனுப்பினர். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், எதுவும் மாறவில்லை என்றும், தங்களுக்கு எந்தப் பதிலும் வரவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

இதற்கிடையில், அவர்களின் இணையதளம் மற்ற தேடுபொறிகளில் (search engine) எந்த பிரச்னையும் இன்றி தரவரிசையில் இருந்தது. ``ஆனால் மக்கள் பெரும்பாலும் கூகுள் தேடுபொறியை தான் பயன்படுத்துகிறார்கள்" என்பது ஷிவானின் கருத்து.

அதன் பின்னர், கூகுளால் தங்கள் வலைதளம் மட்டும் பாதிக்கப்படவில்லை என்பதை தம்பதியினர் அறிந்து கொண்டனர். 2017 ஆம் ஆண்டில் கூகுள் தவறிழைத்தது உண்மை எனக் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டபோது, கெல்கு (Kelkoo), டிரிவாகோ (Trivago) மற்றும் யெல்ப் (Yelp) உள்ளிட்ட 20 நிறுவனங்கள் கூகுள் மீது குற்றம்சாட்டி இருந்தன.

கூகுள் நிறுவனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முன்னதாக, சூப்பர் கம்ப்யூட்டிங் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆடம், ஒரு நாள், தனது அலுவலகத்திற்கு வெளியே சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த போது, திடீரென ஃபவுண்டெம் இணையதளத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு வந்ததாக அவர் கூறுகிறார்.

விலை ஒப்பீட்டு இணையதளங்கள் ஆரம்ப நிலையில் இருந்த காலம் அது. அந்த நேரத்தில், ஒவ்வொரு இணையதளமும் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றது. ஆனால், ஃபவுண்டெம் இவை அனைத்திலிருந்தும் வேறுபட்டது. இங்கு வாடிக்கையாளர்களுக்கு ஆடைகள் முதல் விமானங்கள் வரை பல வகையான பொருட்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஷிவான் பல உலகளாவிய பிராண்டுகளுக்கு மென்பொருள் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். "எங்கள் இணையதளம் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருந்தது" என்று அவர் புன்னகையுடன் கூறுகிறார்.

 
ஐரோப்பிய ஆணையத்தின் தீர்ப்பு

ஐரோப்பிய ஆணையம் 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட தீர்ப்பில், கூகுள் தனது சொந்த ஒப்பீட்டு ஷாப்பிங் சேவையை தேடல் (google search) முடிவுகளில் சட்டவிரோதமாக ஊக்குவித்ததும், இதனால் இதுதொடர்பான இணையதளங்களை பின்னுக்குத் தள்ளியதும் கண்டறியப்பட்டது.

``பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஃபவுண்டெம் நிறுவப்பட்ட காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, கூகுள் வேண்டுமென்றே இவ்வாறு செய்யும் என்பதை நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அந்த சமயத்தில் இதுபோன்ற இணையதளங்கள் மிகவும் குறைவு” என்று ஆடம் கூறுகிறார்.

அத்தம்பதியினர் 2008 ஆம் ஆண்டின் இறுதியில், ஏதோ தவறு இருப்பதாக சந்தேகிக்கத் தொடங்கினர். கிறிஸ்துமஸுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு தம்பதியினருக்கு அவர்களின் இணையதளம் திடீரென மெதுவாகிவிட்டதாக எச்சரிக்கை செய்தி வந்தது.

இதுபற்றி ஆடம் சிரித்துக்கொண்டே கூறுகையில், “முதலில் சைபர் தாக்குதல் என்று நினைத்தோம், ஆனால் உண்மையில் அனைவரும் எங்கள் இணையதளத்தைப் பார்க்கத் தொடங்கி இருந்தனர். டிராஃபிக் அதிகமானதால், தளம் மெதுவாகிவிட்டது” என்றார்.

ஃபவுண்டெம்

பட மூலாதாரம்,FOUNDEM

சேனல் 5 இன் தி கேட்ஜெட் ஷோவில் பிரிட்டனின் சிறந்த விலை ஒப்பீட்டு இணையதளமாக ஃபவுண்டெம் தளத்தைப் பெயரிட்டது.

ஷிவான் கூறுகையில், "அந்த எச்சரிக்கை செய்தி மிகவும் முக்கியமானது. அதற்குப் பிறகு நாங்கள் கூகுளைத் தொடர்புகொண்டு, 'கூகுள் பயனர்களுக்கு எங்கள் இணையதளம் தெரியவில்லை. கூகுள் தேடலில் எங்கள் இணையதளம் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்களுக்கும் எங்களுக்கும் எந்தப் பலனும் இல்லை' என்று கூறினோம்” என்று விவரித்தார்.

"அப்போதும் கூகுள் எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. அதன் பிறகு தான் நாங்கள் நீதியை பெற போராட வேண்டும் என்பதை உணர்ந்தோம்" என்கிறார் ஆடம்.

ராஃப் தம்பதியர் பத்திரிகையாளர்களிடம் சென்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால், அதில் பெரிதாக பலன் கிடைக்கவில்லை. இதற்குப் பிறகு, ஆடம் இதுதொடர்பாக, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஒழுங்கமைப்புகளிடம் வழக்கை முன்வைத்தார்.

இதற்குப் பிறகு, இந்த விவகாரம் ஐரோப்பிய ஆணையத்திடம் சென்றது. 2010-ம் ஆண்டு விசாரணை தொடங்கியது. தம்பதியினர் பின்னர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஒரு அறையில் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் தங்கள் முதல் சந்திப்பை நடத்தினர்.

அந்த நேரத்தை நினைவு கூர்ந்த ஷிவான், "ஒழுங்குமுறை அதிகாரி என்னிடம் கேட்ட ஒரு விஷயம் என்னவென்றால், இது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் செயல்பாடு தொடர்பான பிரச்னை. ஆனால் இவ்வாறு புகார் வருவது இது தான் முதல்முறை. இப்படி நடந்ததாக இதுவரை யாருமே வரவில்லையே” என்றார்.

ஷிவான் மேலும் பேசுகையில் "எங்களும் மட்டும் தான் இப்படி நடந்திருக்கிறது என 100% உத்தரவாதத்துடன் சொல்ல முடியாது. வழக்கு தொடுக்க மக்கள் பயப்படுகிறார்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். ஏனெனில் இணையத்தில் உள்ள அனைத்து வணிகங்களும் கூகுளில் இருந்து அவர்கள் பெறும் டிராஃபிக்கை சார்ந்துள்ளது." என்றார்.

"காயப்படுத்துபவர்களை நாங்கள் விரும்பவில்லை"

ஒழுங்குமுறை ஆணையம் இருந்த கட்டடத்திலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்துள்ள பிரஸ்ஸல்ஸில் உள்ள ஹோட்டல் அறையில் தம்பதியினர் தங்கியிருந்தனர். ஷிவான் மற்றும் ஆடம் தங்களது தீர்ப்புக்காக காத்திருந்தனர். அவர்கள் மட்டுமின்றி மற்ற ஷாப்பிங் இணையதளங்களும் காத்திருந்தன.

ஒழுங்குமுறை ஆணையர் மார்கிரேத் வெஸ்டேஜர் இறுதியாக முடிவை அறிவித்தார். முடிவு அறிவிக்கப்பட்டது, ஆனால் உடனடியாக அவர்கள் கொண்டாடவில்லை. காரணம் இந்த முடிவை ஐரோப்பிய ஆணையம் விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்வதில் அனைவரின் கவனமும் குவிந்தது.

 

" கூகுள் எங்களுக்கு இப்படியொரு விஷயத்தை செய்திருப்பது அவர்களுக்கு துரதிருஷ்டவசமாகிவிட்டது" என்கிறார் ஷிவான்.

"நாங்கள் இருவரும் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற உத்தரவாதமற்ற நம்பிக்கையை நாங்கள் கொண்டிருந்தோம். நாங்கள் உண்மையில் காயப்படுத்துபவர்களை (bullies) விரும்புவதில்லை," என்று அவர் கூறினார்.

கடந்த மாதம் இந்த வழக்கில் கூகுள் தோல்வியடைந்த போதிலும், ராஃப் தம்பதியின் போராட்டம் இன்னும் ஓயவில்லை.

பிரிட்டன் தம்பதியின் நீடித்த சட்டப் போராட்டம் :  கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கூகுளின் அணுகுமுறை இன்னும் மாறவில்லை என்றும் ஐரோப்பிய ஆணையம் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறது என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

இந்த ஆண்டு மார்ச் மாதம், ஐரோப்பிய ஆணையம் அதன் புதிய டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தின் கீழ் கூகுளின் முதன்மை நிறுவனமான `ஆல்பாபெட்’ (Alphabet) மீது விசாரணையைத் தொடங்கியது.

கூகுள் தேடல் முடிவுகளில் கூகுள் இன்னும் அதன் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறதா என்பதை அறிவதே இதன் நோக்கமாக இருந்தது.

 
கூகுள் தரப்பு விளக்கம்

கூகுள் செய்தித் தொடர்பாளர், "ஐரோப்பிய நீதிமன்றத்தின் முடிவு 2008 மற்றும் 2017க்கு இடையில் தயாரிப்பு முடிவுகளை நாங்கள் எவ்வாறு காட்டினோம் என்பது பற்றியது தான்." என்றார்.

அவர் மேலும் கூறுகையில் : "ஐரோப்பிய ஆணையத்தின் முடிவுக்கு இணங்க 2017 இல் நாங்கள் செய்த மாற்றங்கள் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகச் செயல்பட்டன. 800க்கும் மேற்பட்ட ஒப்பீட்டு ஷாப்பிங் சேவை இணையதளங்களுக்கு பில்லியன் கணக்கான கிளிக்குகள் பதிவானது."

"எனவே , ஃபவுண்டெம் நிறுவனர்களை கூற்றுக்களை நாங்கள் தொடர்ந்து கடுமையாக எதிர்ப்போம், மேலும் இந்த வழக்கை நீதிமன்றம் பரிசீலிக்கும் போதும் அதைச் செய்வோம்" என்று அவர் கூறினார்.

ராஃப் தம்பதியினர் கூகுளுக்கு எதிராக ஒரு சிவில் வழக்கையும் தாக்கல் செய்துள்ளனர், இது 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் விசாரிக்கப்பட உள்ளது.

ஆனால், ராஃப் தம்பதி இறுதியில் வழக்கில் வெற்றி பெற்றிருந்தாலும், அது அவர்களுக்கு அதிக பலனைத் தராது. ஏனெனில், 2016 இல் ஃபவுண்டெம் இணையத்தளத்தை மூட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது.

கூகுளுக்கு எதிரான இந்த நீண்ட போராட்டம் தம்பதியருக்கும் கடினமாக இருந்தது என்கின்றனர். ஆடம் கூறுகையில், "இந்த போராட்டம் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால், நாங்கள் இதைச் செய்ய முடிவு செய்திருக்க மாட்டோம்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான அவசர உதவிகளை வழங்க தயாராகும் பைடன்

1 month 2 weeks ago

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின்(Donald trump) பதவியேற்பதற்கு முன்னதாக, உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை பாதுகாப்பு உதவியாக வழங்க வெள்ளை மாளிகை திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் அரசாங்கத்தை வலுப்படுத்தும் நம்பிக்கையுடன், ஜோ பைடன்(Joe Biden) ஜனவரி மாதம் பதவி விலகுவதற்கு முன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளை மாளிகை தொடர்பிலும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் கீழ் ஜனாதிபதி உக்ரைன் வோலோடோமிர் ஜெலென்ஸ்கியின் அரசாங்கத்திற்கான ஆதரவின் எதிர்காலம் தொடர்பிலும் கடந்த காலங்களில் ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.

பைடனின் உதவி

இதில் உக்ரைனுக்கான பைடனின் உதவியை ட்ரம்ப் மேற்கோள்காட்டியிருந்தார்.

உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான அவசர உதவிகளை வழங்க தயாராகும் பைடன் | Us Ready To Provide Aid To Ukraine

மேலும், கடந்த ஆண்டு இடம்பெற்ற சந்திப்பொன்றில் உக்ரைன் - ரஷ்ய மோதல் அமைதிபெற ஜெலன்ஸ்கி விட்டுக்கொடுப்பை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார்.

உக்ரைன் அரசாகங்ம்

எனினும் அதை உக்ரைன் அரசாங்கம் மறுத்திருந்தது.

உக்ரைனுக்கு பில்லியன் கணக்கான அவசர உதவிகளை வழங்க தயாராகும் பைடன் | Us Ready To Provide Aid To Ukraine

இந்நிலையில், வெள்ளை மாளிகையின் நடவடிக்கைகளை புதிய அமெரிக்க ஜனாதிபதி கட்டுபடுத்தினால் உக்ரைன் போர்க்களத்தில் பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://tamilwin.com/article/us-ready-to-provide-aid-to-ukraine-1730957383#google_vignette

கனடாவில் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள இந்திய இராஜதந்திரிகள்

1 month 2 weeks ago

கனடாவில் (Canada) உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இந்தியா (India) தெரிவித்துள்ளது.

இந்த கருத்தை வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று (07) வெளியிட்டுள்ளார். 

அத்துடன், கடந்த ஆண்டில், கனடாவில் உள்ள இந்திய இராஜதந்திரிகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களை அதிகளவில் எதிர்கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு 

இந்தநிலையில் தமது உயர்ஸ்தானிகரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்ட போதும், கனேடிய தரப்பால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

கனடாவில் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள இந்திய இராஜதந்திரிகள் | Indian Diplomats In Under Surveillance In Canada

அதேவேளை, கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, இந்திய பேச்சாளர் கடுமையாகக் கண்டித்துள்ளார். 

அத்துடன், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் வன்முறைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

https://tamilwin.com/article/indian-diplomats-in-under-surveillance-in-canada-1730990907#google_vignette

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்

1 month 2 weeks ago
டிரம்புக்கு குவியும் வாழ்த்துகள் - யுக்ரேன், இஸ்ரேல், இந்தியா கூறியது என்ன?
அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியுள்ளார்.

வெற்றிமுகத்தில் இருக்கும் போதே ஃபுளோரிடாவில் உள்ள தனது பிரசாரக் குழுவின் தலைமையகத்தில், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப் "இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த அற்புதமான வெற்றியாகும். இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்" என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து இந்திய பிரதமர் மோதி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட உலகத் தலைவர்கள் பலரும் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய பிரதமர் வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அதிபர் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற என் நண்பர் டொனால்ட் டிரம்பிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-அமெரிக்கா இடையிலான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்.” என்று கூறியுள்ளார்.

“நமது மக்களின் மேம்பாட்டிற்காகவும், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளம் ஆகியவற்றை மேம்படுத்தவும் நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.” என்று மோதி தனது பதிவில் கூறியுள்ளார்.

அந்தப் பதிவில் டொனால்ட் டிரம்ப் உடனான தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார் மோதி.

அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,NARENDRAMODI/X

படக்குறிப்பு, டிரம்பை வாழ்த்திய நரேந்திர மோதி
இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டொனால்ட் டிரம்புக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், "வரலாற்றின் மிகப்பெரிய மறுவரவிற்கு (Comeback) வாழ்த்துகள்! இதுவொரு மாபெரும் வெற்றி” என்று கூறியுள்ளார்.

“வரலாற்று சிறப்புமிக்க வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை நீங்கள் மீண்டும் கைப்பற்றியிருப்பது, அமெரிக்காவிற்கு ஒரு புதிய தொடக்கத்தையும், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவிற்கு ஒரு வலிமையான மறுசீரமைப்பையும் வழங்குகிறது" என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியிருப்பது, அமெரிக்காவிற்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தரும் என நெதன்யாகு கருத்து
பிரிட்டன் பிரதமர் வாழ்த்து

பிரிட்டன் பிரதமர் கிய்ர் ஸ்டார்மரும் டொனால்ட் டிரம்புக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

"வரவிருக்கும் ஆண்டுகளில் உங்களுடன் பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். மிக நெருக்கமான நட்பு நாடுகள் என்ற முறையில், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை பாதுகாப்பதில் நாம் ஒன்றாக, உறுதுணையாக நிற்கிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

"வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு முதல் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் வரை, பிரிட்டன் -அமெரிக்கா சிறப்பு உறவு, வரவிருக்கும் ஆண்டுகளில் தொடர்ந்து முன்னேற்றம் காணும் என்பதை நான் அறிவேன்." என்றும் கிய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமர் கிய்ர் ஸ்டார்மரும் டொனால்ட் டிரம்புக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் அதிபர் வாழ்த்து

யுக்ரேன் அதிபர் வொலொதிமிர் ஸெலென்ஸ்கி, டொனால்ட் டிரம்பை வாழ்த்தியுள்ளார். "சர்வதேச விவகாரங்களில் "வலிமை மூலம் அமைதி" என்ற கொள்கையைக் கொண்ட டிரம்பை நான் வாழ்த்துகிறேன். இது தான் யுக்ரேனுக்கும் அமைதியை வழங்கும். இதனை நாம் இருவரும் இணைந்து நடைமுறைப்படுத்துவோம்," என்று கூறி தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார் அவர்.

"டொனால்ட் டிரம்பின் தலைமையின் கீழ் வலிமையான அமெரிக்காவை நான் எதிர்பார்க்கிறேன். அமெரிக்காவின் இரு கட்சிகளும் யுக்ரேனுக்காக வழங்கிய வலிமையான ஆதரவை நாங்கள் நம்பியுள்ளோம்.

இரு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த ஒன்றாக பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம். ஐரோப்பாவில் ஒரு வலுவான ராணுவ சக்தியைக் கொண்ட யுக்ரேன் ஐரோப்பா மற்றும் அட்லாண்டிக் பிரதேசத்தில் உள்ள சமூகங்களுக்கான நீண்ட கால அமைதி மற்றும் பாதுகாப்பினை எங்கள் கூட்டணி நாடுகள் உதவியுடன் நிலை நிறுத்த உறுதி பூண்டுள்ளோம்.

அதிபர் டிரம்பை நேரில் பார்த்து வாழ்த்தவும், அமெரிக்காவுடனான யுக்ரேனின் மூலோபய கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவும் ஆவலுடன் இருக்கிறேன்," என்று அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விரைவில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூற ஆவலுடன் இருக்கிறேன் என யுக்ரேன் அதிபர் கூறியுள்ளார்.
ஹங்கேரி பிரதமர் வாழ்த்து

டிரம்பின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்பட்ட ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.

"உலக நாடுகள் அனைத்திற்கும் தேவையான முக்கியமான வெற்றி இது," என்று குறிப்பிட்ட அவர், "அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மறுவரவு இது," என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக போட்டியிட முடிவு செய்த போது அதனை ஆர்பன் வெளிப்படையாக ஆதரித்தார். 2016ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள உறுப்பு நாடுகளில் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு வழங்கிய முதல் மற்றும் ஒரே தலைவர் இவர் மட்டுமே.

 
அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,REUTERS/X

படக்குறிப்பு, ஹங்கேரி பிரதமருடன் டொனால்ட் டிரம்ப்
வாழ்த்திய இதர தலைவர்கள்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், டிரம்பை வாழ்த்தியுள்ளார். அவருடைய வாழ்த்து செய்தியில், "அமைதிக்காகவும் செழுமைக்காகவும் மரியாதையுடனும் லட்சியத்துடனும்," முன்பு ஒன்றாக பணியாற்றியதைப் போன்று தொடர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டே, டிரம்பின் தலைமை "எங்களின் கூட்டாளிகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும். அவருடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்," என்று கூறியுள்ளார்.

நேட்டோவை டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்திருக்கிறார். கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் ஐரோப்பிய உறுப்பு நாடுகள், பாதுகாப்பிற்காக போதுமான நிதியை வழங்குவதில்லை என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி , "இரு நாடுகளும் அசைக்க முடியாத கூட்டணி, பொது மதிப்புகள் (Common Values), வரலாற்று ரீதியிலான நட்பால் இணைந்திருக்கிறது. இது மூலோபாய கூட்டணி. வருங்காலத்தில் இந்த கூட்டணி வலுப்பெறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்," என்று கூறி வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார்.

சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, "அமெரிக்க அதிபர் தேர்தலானது அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரம். அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம்," என்று கூறினார்.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜக்ரோவா, "அமெரிக்கா அதன் ஜனநாயகத்தை முதலில் சரி செய்ய வேண்டும். அதன் சொந்த தோல்விகளுக்கு மற்றவர்களை குற்றம் சொல்லக் கூடாது," என்று கூறினார். கடந்த முறை தேர்தலின் போது ரஷ்யாவின் தலையீடு அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்தியது என்று குற்றம் சுமத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

us-result.jpg

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளன்று இஸ்ரேலில் ராணுவ அமைச்சர் பதவிநீக்கம் - மக்கள் போராட்டம் ஏன்?

1 month 2 weeks ago
இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட் பதவி நீக்கம்

பட மூலாதாரம்,REUTERS

  • எழுதியவர், ஜான் டொன்னிசன், ஜார்ஜ் ரைட்
  • பதவி, பிபிசி செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்டை பதவியில் இருந்து நீக்கிய பிறகு போராட்டங்கள் வெடிக்கத் துவங்கியுள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட நம்பிக்கையின்மை காரணமாகவே இந்த முடிவுக்கு வந்ததாக நெதன்யாகு அறிவித்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக கேலண்ட் மீது வைத்திருந்த நம்பிக்கை குறையத் துவங்கியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள இஸ்ரேல் கட்ஸ் பாதுகாப்பு அமைச்சராகிறார்.

மூன்று முக்கியமான விவகாரங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது என்று கேலண்ட் கூறியிருக்கிறார். காஸாவில் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்களை, சில தியாகங்கள் செய்வதன் மூலமாக மீட்டுவிடக் கூடும் என்ற அவரது நம்பிக்கையும் இந்த விவகாரத்தில் ஒன்று.

இந்த சூழலில் நெதன்யாகு பதவி விலகவும், பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்க முக்கியத்துவம் அளிக்கும் நபரை பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கவும் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

நெதன்யாகு - கேலண்ட் கருத்து முரண்பாடு

நெதன்யாகுவும் கேலண்டும் மாறுபட்ட கருத்துகளோடு ஒன்றாக பணிபுரிந்த ஒரு வரலாற்றை கொண்டிருக்கின்றனர். கடந்த காலங்களில் இஸ்ரேலின் போர் யுத்திகள் குறித்த மாறுபட்ட கருத்துகள் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

மத ரீதியாக தீவிரமான மரபுகளைப் பின்பற்றுகிற இஸ்ரேல் குடிமக்கள் ராணுவத்தில் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதை எதிர்த்தார் கேலண்ட்.

2023-ஆம் ஆண்டு காஸாவில் போர் துவங்குவதற்கு முன்பு, கருத்து வேறுபாடு காரணமாக கேலண்ட்டை நெதன்யாகு பதவியில் இருந்து நீக்கினார். பொதுமக்களின் போராட்டங்களுக்கு பிறகு அவர் மீண்டும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டார்.

ஆனால் செவ்வாய்க்கிழமை அன்று (நவம்பர் 06), "முன்பைக் காட்டிலும் போருக்கு மத்தியில் பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையே முழுமையான நம்பிக்கை தேவையாக இருக்கிறது," என்று கூறினார் நெதன்யாகு.

"போரின் ஆரம்ப காலத்தில் அது பலனளிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது, கடந்த சில மாதங்களாக அந்த நம்பிக்கை முழுமையாக தகர்ந்து போயுள்ளது" என்று கூறினார் நெதன்யாகு.

அரசாங்கம் எடுத்த முடிவுகளுக்கு எதிர்மாறான அவரது கருத்துகளும் செயல்பாடுகளும் இந்த நம்பிக்கை இழப்புக்கு காரணமாக அமைந்தன என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தி வெளியான பிறகு, சமூக வலைதளத்தில் பதிவிட்ட கேலண்ட், "இஸ்ரேலின் பாதுகாப்பு தான் என்னுடைய வாழ்க்கையின் இலக்காக இருந்தது. அதுவே என் வாழ்நாள் முழுவதும் இலக்காக இருக்கும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

"மூன்று முக்கியமான விவகாரங்களில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள்," காரணமாகவே இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட முழுமையான அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ராணுவ சேவைகளில் யாருக்கும் விலக்கு அளிக்கக் கூடாது, காஸாவில் பிணைக்கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களை உடனே அழைத்து வர வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

பிணைக்கைதிகள் குறித்து குறிப்பிட்ட போது, "இதில் வெற்றி பெற வலி மிகுந்த சில தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும். இஸ்ரேலும், இஸ்ரேல் ராணுவப்படையும் அந்த இழப்பைத் தாங்கிக்கொள்ளும்," என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

 
இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட் பதவி நீக்கம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, போராட்டத்தில் இறங்கிய மக்கள்
மக்கள் போராட்டம்

இந்த அறிவிப்பு வெளியான பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவரான யெய்ர் அமித், "நெதன்யாகு மொத்த நாட்டையும் அழிவின் பக்கம் இழுத்துச் செல்கிறார். அவர் உடனடியாக தன்னுடைய பதவியில் இருந்து விலக வேண்டும். மக்கள் நலனைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் நபர் தான் இஸ்ரேலை ஆட்சி செய்ய வேண்டும்," என்று கூறினார்.

அயலோன் நெடுஞ்சாலையில் சில போராட்டக்காரர்கள் தீயைப் பற்ற வைத்தனர் என்றும், இரு பக்கமும் போக்குவரத்துக்கு இடையூறு தரும் வகையில் போராட்டம் நடத்தினார்கள் என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அன்று ஹமாஸ் படையினரால் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களின் உறவினர்கள் உருவாக்கியுள்ள குழுவும் பிரதமரின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்துள்ளது. கேலண்டை பதவியில் இருந்து நீக்கியது பிணைக்கைதிகளை விடுவிக்கும் பேச்சுவார்த்தையில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர் அவர்கள்.

அவர்கள் உருவாக்கியிருக்கும் 'பிணைக்கைதிகள், காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமைப்பு' (Hostages and Missing Families Forum), புதிதாக வர இருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் போரை முடிவுக்கு கொண்டு வரவும், பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்கள் பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்யவும் தன்னுடைய அர்ப்பணிப்பை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஹமாஸ் குழுவால் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட 251 நபர்களில் நூறு பேரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

புதிதாக பதவியேற்க இருக்கும் கட்ஸ், ராணுவ விவகாரங்களைப் பொருத்தவரை போருக்கான அதீத நிலைப்பாட்டைக் கொண்டவர் என்று அறியப்படுபவர்.

நெதன்யாகுவிற்கு நெருக்கமான கிடியோன் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

நெதன்யாகு முதல்முறையாக 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேலண்டை பதவியில் இருந்து நீக்கினார். நீதித்துறையை சர்ச்சைக்குரிய வகையில் மறுசீரமைக்க எடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் இதற்கு எதிராக போராட்டங்கள் எழுந்த நிலையில் அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை அவர்கள் 'கேலண்ட் நைட்' என்று நினைவுகூர்கின்றனர்.

 
இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட் பதவி நீக்கம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, கடந்த ஆண்டு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நெதன்யாகுவும், கேலண்டும்
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளன்று இஸ்ரேலில் அமைச்சர் பதவிநீக்கம்

இந்த ஆண்டு மே மாதம், காஸாவுக்கான போருக்கு பிந்தைய திட்டங்களை வகுக்காமல் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக கேலண்ட் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தார். காஸாவின் நேரடியாக அதிகாரம் செலுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று இஸ்ரேல் மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும் என்று நெதன்யாகுவை கேலண்ட் கேட்டுக் கொண்டார்.

ராணுவ நடவடிக்கை செல்லும் திசைக்கும் இஸ்ரேலின் போர் அமைச்சரவைக்கும் இடையே ஏற்பட்டிருந்த பிளவை வெளிப்படையாக்கியது அந்த வேண்டுகோள்.

"அக்டோபர் மாதத்தில் இருந்து இதுகுறித்து நான் கேள்வி எழுப்பி வருகிறேன். ஆனால் அரசிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை," என்று கேலண்ட் கூறினார்.

பாலத்தீன அமைப்புகளான ஹமாஸ் மற்றும் ஃபத்தாவை குறிப்பிட்டு, ஹமாஸ்தானுக்கு பதிலான ஃபத்தாஸ்தானை பெற நான் தயாராக இல்லை என்று பதில் கூறினார் நெதன்யாகு.

நவம்பர் 5-ஆம் தேதி அன்று நெதன்யாகுவின் செயல்பாட்டை கண்டிக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தனர்.

காஸாவுக்கு எதிரான இஸ்ரேல் போருக்கு ஆதரவு அளிக்கும் முக்கியமான நாடான அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற நாளன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று சில இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

நெதன்யாகுவைக் காட்டிலும் கேலண்ட் வெள்ளை மாளிகையுடன் நல்ல உறவில் இருந்தவராக அறியப்பட்டார்.

இஸ்ரேல் பாதுகாப்பு விவகாரங்களில் முக்கியமான கூட்டாளியாக அமைச்சர் கேலண்ட் திகழந்தார் என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதி ஒருவர் கூறினார். "நெருங்கிய கூட்டாளிகளாக இஸ்ரேலின் புதிய அமைச்சருடன் நாங்கள் தொடர்ச்சியாக பணியாற்றுவோம்," என்று கூறினார் அவர்.

தீவிர யூத மரபுகளை பின்பற்றும் இஸ்ரேலியர்களுக்கு ராணுவத்தில் இருந்து விலக்கு அளிக்கக் கூடிய மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று தீவிர வலதுசாரிகள் நெதன்யாகுவுக்கு அழுத்தம் கொடுத்து வந்த சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மசோதாவுக்கு தீவிரமான எதிர்ப்பை பதிவு செய்து வந்தார் கேலண்ட்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் - உதவிகள் நிறுத்தப்படுமா? - குறையுமா என அச்சம்

1 month 2 weeks ago

image

James Waterhouse

bbc

தமிழில் ரஜீபன்

தனது கடையின் உடைந்த கண்ணாடியை சுத்தம் செய்துகொண்டிருக்கும் உக்ரைனின் இனாவிற்கு தனது நாட்டின் எதிர்காலம் 5000 மைல் தொலைவில் உள்ள அமெரிக்க வாக்காளர்களின் கரங்களில் உள்ளது என்பது தெரியும்.

கமலாஹரிஸ் என்ற பெண் வெற்றிபெற்று எங்களிற்கு உதவுவார் என நம்புகின்றோம் என்கின்றார் அவர்.

ரஸ்யாவின் குண்டு கடையின் ஜன்னல்களை சிதறடித்துள்ளது. ஜபோரிஜியாவில் இது வழமையான நிகழ்வு. வீதியில் பத்துமீற்றர் குழி காணப்படுகின்றது.

தேர்தல் முடிவுகள் குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவிக்கின்றார். 'நாங்கள் எதிரியை தோற்கடிக்க விரும்புகின்றோம்" என அவர்  குறிப்பிடுகின்றார்.

போரில் வெற்றிபெறுவதற்கான மிகச்சிறிய வாய்ப்பையே கொண்டுள்ள உக்ரைனிற்கு  அந்த வெற்றி அமெரிக்காவின் ஆதரவில் தங்கியுள்ளது.

இந்த பகுதியிலேயே 2023ம் ஆண்டு உக்ரைன் பதில்தாக்குதலை முன்னெடுத்தது, ரஸ்ய ஆக்கிரமிப்பாளர்களை அகற்றலாம் என எண்ணியது.

எனினும் அதில் வெற்றிபெறமுடியாத நிலையில் தற்போது உக்ரைனின் நிலை தப்பிழைத்தலில் கவனம் செலுத்துதல் என்பதற்கு மாறியுள்ளது.

ukraine_damage_house.png

நாளாந்தம் குண்டுகளும் ஏவுகணைகளும் உக்ரைன் நகரங்களை தாக்குகின்றன. உக்ரைன் படையினர் ரஸ்ய படையினரின் தாக்குதல்களை நாளாந்தம் எதிர்கொள்கின்றனர்.

ஜனநாய கட்சியின் வேட்பாளர் கமலா ஹரிஸ் தேர்தலில் வெற்றிபெற்றால் உக்ரைனிற்கான இராணுவ உதவி தொடரும் என தெரிவித்துள்ள அதேவேளை குடியரசுக்கட்சியின் கரங்களில் உள்ள அமெரிக்க காங்கிரசினால் அவரது அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படலாம்.

டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் உக்ரைனிற்கான தற்போதைய 50 பில்லியன் டொலர் இராணுவ உதவி தொடர்வது கடினம் .

எவர் அமெரிக்க ஜனாதிபதியானாலும் அவர் உக்ரைன் எல்லைமீது கடும் தாக்கத்தை செலுத்துவார்.

உக்ரைனை நிலத்தை விட்டுக்கொடுத்துவிட்டு முன்வரிசைகளை முடக்கிவைக்குமாறு அமெரிக்க கேட்டுக்கொண்டால் ஜபோரிஜியா போன்ற பகுதிகள் வடகொரியா தென்கொரியா போன்று பிளவுபடலாம்.

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக தான் முயற்சிகளை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ள டிரம்ப் உக்ரைன் சிறிதளவு நிலத்தை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும் என்கின்றார்.

இரண்டாவதாக அமெரிக்கா தனது ஆதரவை முற்றாக விலக்கிக்கொண்டால், ரஸ்யா  உக்ரைனை மாத்திரமல்ல அதற்கு அப்பால் உள்ள சில பகுதிகளையும் கைப்பற்றக்கூடும்.

மூன்றாவது சாத்தியப்பாடு உக்ரைன் தனது பகுதிகளை ரஸ்யாவிடமிருந்து முற்று முழுதாக விடுவிப்பது - இதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன.

ukraine_forces_june_.jpg

அமெரிக்காவின் உதவிகள் நிறுத்தப்பட்டால் அந்த சுமையை உக்ரைனின் காலாட்படையினரே சுமக்கவேண்டியிருக்கும் என்கின்றார் உக்ரைனின் படைவீரர் ஆண்ட்ரி - இவர் போர் முன்னரங்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்க தயாரிப்பான  கவசவாகன பிரிவின் தளபதி.

நாங்கள் எங்களிடம் உள்ளவற்றை வைத்துக்கொண்டு போரிடுவோம், ஆனால் உக்ரைனால் தனியாக போரிடமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும் என்கின்றார் அவர்.

அவர்கள் நவம்பர் ஐந்தாம் திகதிக்காக பதற்றத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிச்சயமற்ற தன்மை போர்க்கள எதிர்பார்ப்புகளிற்கும் அபிலாசைகளிற்கும் தடையாக காணப்படுகின்றது. மேலதிக உதவியை பெறுவதற்கான அரசியல் முயற்சிகளிற்கும் பாதிப்பை  ஏற்படுத்துகின்றது.

உக்ரைனின் யுத்த முயற்சிகளிற்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கும் போது அதன் மேற்குலக சகாக்கள் அமெரிக்காவையே முன்னுதாரணமாக பார்க்கின்றனர்.

எங்களிற்கு உதவும் விருப்பம் இல்லாத வேட்பாளர் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் உள்ளார் என்பதை நாங்கள் கேள்விப்படும்போது அது ஏமாற்றமளிக்கின்றது, விரக்தியளிக்கின்றது என்கின்றார் ஆண்ட்ரி. 

உக்ரைன் இராணுவம் அதன் சமூகத்தை போல உறுதியாக காணப்படுகின்ற நிலையில் ரஸ்யாவின் ஈவிரக்கமற்ற தன்மையை நேரடியாக எதிர்கொண்ட ஒருவரை நாங்கள் எதிர்கொள்வது அவசியமாக காணப்பட்டது.

ukraine_war_octo_23.jpg

ரஸ்யா முழு அளவிலான இராணுவநடவடிக்கையை ஆரம்பித்தவேளை லியுபோவின் மகள் மற்றும் பேரக்குழந்தைகள் அமெரிக்காவிற்கு தப்பிச்சென்றுவிட்டனர்.

இரண்டு வருடங்களிற்கு முன்னர் நாங்கள் அவரை அவரது கிராமமான கொமிசுவாகாவில் சந்தித்தோம். அவ்வேளை ரஸ்ய படையினரால் அவரது வீடு அழிக்கப்பட்டிருந்தது.

போர் இடம்பெறும் பகுதிக்கு மிக அருகில் வசித்து வருகின்ற போதிலும் இம்முறை அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார். அவரது புதிய தொடர்மாடியில் அவரை சந்தித்தவேளை உக்ரைன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கவேண்டுமா என நாங்கள் அவரை கேட்டோம்.

அப்படியென்றால் தங்கள் உயிரை கொடுத்தவர்களின் கனவுகளிற்கு என்னாவது என அவர் எங்களிடம் கேட்டார். 1991 இல் எங்கள் எல்லைகளாக காணப்பட்ட பகுதிகளை நாங்கள் அடையும் வேளையே யுத்தம் முடிவிற்கு வரவேண்டும் என நான் விரும்புகின்றேன் , அவ்வேளை கிரிமியா லுகான்ஸ்க் டொனெட்ஸ்க் ஆகியன எங்களுடையவையாக காணப்பட்டன என அவர் தெரிவித்தார்.

கமலா ஹரிசே உக்ரைனின் விருப்பத்திற்குரிய வேட்பாளராக காணப்படுகின்றார். அவருக்கு எதிராக ரஸ்யா முன்னெடுக்கும் பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு உக்ரைன் ஊடகவியலாளர்கள் முயல்கின்றனர்.

இதேவேளை உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கில் யுத்தம் விரைவில்முடிவிற்கு வரவேண்டும் என விரும்புபவர்கள் டொனால்ட் டிரம்பின் தலைமைத்துவமே அதற்கான சிறந்த வாய்ப்பு என கருதுகின்றனர்.

ரஸ்ய படையினர் நெருங்கிக்கொண்டிருக்கும் போக்ரொவ்ஸ்க்கில் பலரை நாங்கள் சந்தித்து பேசினோம்.

ரஸ்யா தனது பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலப்பகுதியிலேயே உக்ரைன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்ற உணர்வு இங்கு காணப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/197866

வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு!

1 month 2 weeks ago
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு! வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ஸ்பெய்ன் அரச தம்பதியர் மீது சேறு வீச்சு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வலென்சியாவிற்கு விஜயம் செய்த போது கோபமடைந்த எதிர்ப்பாளர்களால் ஸ்பெய்ன் மன்னர் மற்றும் ராணி மீது சேறு மற்றும் பிற பொருட்களை வீசியுள்ளனர்.

கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பைபோர்டா நகரில் எதிர்ப்பாளர்கள் அரச தம்பதிகள் மற்றும் ஸ்பெய்னின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோரை நோக்கி “கொலைகாரன்” என்று கூச்சலிட்டனர்.

எனினும், முகத்திலும் உடைகளிலும் சேறு படிந்த நிலையில், மன்னன் ஃபெலிப்பே மற்றும் ராணி லெடிசியா பின்னர் கூட்டத்தின் உறுப்பினர்களை ஆறுதல்படுத்துவதற்கு முனைந்தார்.

அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு நகரமான சிவாவுக்குச் செல்லும் மன்னரின் திட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.

பல தசாப்த காலத்துக்கு பின்னர் ஸ்பெய்னில் கடந்த வாரம் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தினால் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

உயிர் பிழைத்தவர்களை தேடும் நடவடிக்கையில் மீட்பு பணியாளர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

https://athavannews.com/2024/1407052

டிரம்பின் வெற்றியை எதிர்கொள்ள தயாராகிறது ஈரான் - இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடையலாம் என அச்சம்

1 month 2 weeks ago

image

ரொய்ட்டர்

மெரிக்க ஜனாதிபதி தேர்தலின் ஒரு மோசமான விளைவான - டிரம்பின் வெற்றியை எதிர்கொள்வதற்கு ஈரானும் அதன் சகாக்களும் தயாராகிவருவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

ரொய்ட்டர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

iran.jpg

கமலா ஹரிஸுக்கும் டொனால்ட்  டிரம்புக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதை கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்துகின்ற போதிலும், ஈரான் தலைவர்களும் லெபனான், யேமன் ஈராக்கில் உள்ள அவர்களின் சகாக்களும் நவம்பர் 5ஆம் திகதி தேர்தலில் டிரம்ப் வெற்றிபெறுவார்; அதனால் தங்களிற்கு மேலும் நெருக்கடிகள் உருவாகும் என கருதுகின்றனர்.

ஈரானின் அணுநிலைகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கும் இலக்குவைக்கப்பட்ட படுகொலைகளில் ஈடுபடுவதற்கும் இஸ்ரேலின் பிரதமரை டிரம்ப் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து  ஈரான் அதிக கரிசனை கொண்டுள்ளது என மேற்குலக ஈரானிய அராபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் ஈரானின் எண்ணெய் தொழில்துறைக்கு எதிராக தடைகளை விதிப்பதன் மூலம் அதிகளவு அழுத்தத்தை கொடுக்கும் கொள்கையை பின்பற்றலாம் என ஈரான் கருதுகின்றது.

2017 முதல் 2021 ம் ஆண்டு முதல் அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகித்த டிரம்ப் - இம்முறை தேர்தலில் வெற்றிபெற்றால்  இஸ்ரேலும் தானும் முன்வைக்கும் அணுசக்தி உடன்படிக்கையை  ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனிக்கு கடும் அழுத்தங்களை கொடுப்பார் என ஈரான் எதிர்பார்க்கின்றது.

அமெரிக்காவில் ஏற்படக்கூடிய தலைமைத்துவ மாற்றங்கள் மத்திய கிழக்கின் அதிகார சமநிலைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம் ஈரானின் வெளிவிவகார கொள்கை மற்றும் பொருளாதார சாத்தியப்பாடுகளில் மாற்றங்களை  ஏற்படுத்தலாம்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக யார் பதவியேற்றாலும் ஈரான் முன்னர் போன்று செல்வாக்கு செலுத்த முடியாது என தெரிவிக்கும் ஆய்வாளர்கள் ஈரான் இராணுவத்தின் ஆதரவில் செயற்படும் ஆயுதகுழுக்களை அழிப்பதற்கு பலமிழக்க செய்வதற்கு இஸ்ரேல் கடந்த ஒருவருடமாக மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கையே இதற்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.

எனினும் இஸ்ரேலிற்கு நிபந்தனை எதுவுமற்ற வெளிப்படையான ஆதரவை  டிரம்ப் வழங்குவதால் டிரம்பின் நிலைப்பாடே ஈரானிற்கு மிகவும் ஆபத்தானது தீங்குவிளைவிக்ககூடியது என்ற கருத்து காணப்படுகின்றது.

டிரம்ப் ஈரான் மீது நிபந்தனைகளை விதிப்பார் அல்லது இஸ்ரேல் ஈரானின் அணுஉலைகள் மீது இலக்குவைக்கப்பட்ட தாக்குதலை மேற்கொள்வதற்கு அனுமதிப்பார் என வளைகுடா குறித்த புத்திஜீவிகள் அமைப்பின் இயக்குநர் அப்தெல்லாஜிஸ் அல் சகார் தெரிவித்துள்ளார்.

ஈரானிற்கு எதிரான இராணுவநடவடிக்கையை டிரம்ப் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றார் அங்கீகாரம் வழங்குகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் டிரம்ப் என்பது பெஞ்சமின் நெட்டன்யாகுவின் கனவு என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் அனைத்து வகையான சூழ்நிலைகளையும் எதிர்கொள்வதற்கு தயாராகவுள்ளது என தெரிவித்த ஈரானின் சிரேஸ்ட அதிகாரியொருவர் பல தசாப்தங்களாக அமெரிக்காவின் தடைகளை கடந்து  எண்ணெயை  ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம், வெள்ளை மாளிகையில் யார் இருந்தாலும் நாங்கள் ஏனைய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் வெற்றி என்பது கொடுங்கனவு என தெரிவித்துள்ள மற்றுமொரு ஈரான் அதிகாரி இஸ்ரேலை திருப்திப்படுத்துவதற்காக அவர் ஈரானிற்கு எதிரான அழுத்தங்களை அதிகரிப்பார், எண்ணெய் தடைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வார், இது எங்களின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும் முடக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/197846

"இரண்டாவது ட்ரம்ப் நிருவாகத்தை உலகம் தாங்கமாட்டாது"

1 month 2 weeks ago

image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கிறது, அமெரிக்கர்கள் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தங்களது ஜனாதிபதியை தெரிவு செய்கிறார்கள்.

குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹரிஸுமே பிரதான வேட்பாளர்கள்.  இருவருக்கும் இடையிலான போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை இறுதி நேரம் வரை கூறமுடியாமல் இருக்கிறது. 

ஜனாதிபதி ஜோ பைடன் இரண்டாவது பதவிக்காலத்துக்கு போட்டியிடவிருந்தார். ஆனால் அவரது வயது மூப்பு மற்றும் வேறு காரணங்களினால் அவரை ட்ரம்ப் இலகுவாகத் தோற்கடித்துவிடக்கூடிய சாத்தியம் இருந்த நிலையில் அவர் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹரிஸ் களமிறங்கினார். 

அதையடுத்து இலகுவாக வெற்றி பெறுவதற்கு ட்ரம்புக்கு இருந்த வாய்ப்பு பெரும்பாலும் இல்லாமல் போனது. பிரசாரங்களின் போது ட்ரம்புக்கு கமலா ஹரிஸுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுவதாகவே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறின.

குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் ஏறத்தாழ சம அளவிலான மக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகின்ற ஏழு மாநிலங்களில் (Swing States)  அதிகமானவற்றில் வெற்றியடைபவரே  தேர்தல் மன்ற ( Electoral College ) வாக்குகளில் அதிகமானவற்றைக் கைப்பற்றி ஜனாதிபதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த மாநிலங்களில் இருவருக்கும் இடையில் மிகவும் நெருக்கமான போட்டி நிலவுவதாகவே கூறப்படுகிறது.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுடன் சேர்த்து  ஜனப்பிரதிநிதிகள் சபைக்கும் செனட்சபைக்கும் ( இரு வருடங்களுக்கு ஒரு தடவையான) தேர்தல்கள் நடைபெறும். நான்கு வருடங்களுக்கு பதவியில் இருக்கப் போகும் ஜனாதிபதியுடன் சேர்த்து ( ஆறு வருடங்களுக்கு பதவியில் இருக்கும் ) 100 செனட்டர்களில் மூன்றில் ஒரு பங்கினரையும் ( இரு வருடங்களுக்கு பதவியில் இருக்கும் ) சகல 435 ஜனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களையும் அமெரிக்கர்கள் தெரிவு செய்வார்கள்.

தனது முன்னைய பதவிக்காலத்தில் (2016 -- 20 ) தான்தோன்றித் தனமாக ட்ரம்ப் எடுத்த முடிவுகள் சர்வதேச அரசியலில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. மீண்டும் அவர் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு வருவாரேயானால் சர்வதேச அரசியல் மிகவும் குழப்பநிலைக்கு உள்ளாகும் என்று அஞ்சப்படுகிறது. அதுவும் குறிப்பாக மத்திய கிழக்கில் காசா போர் காரணமாக நிலவும் பதற்றம், ரஷ்ய - உக்ரெயின் போர் ஆகியவை காரணமாக ஏற்கெனவே சர்வதேச அரசியல் நிலைவரம் நெருக்கடி நிறைந்ததாகவே இருக்கிறது. 

இந்த நிலைவரங்களில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து சில தினங்களுக்கு முன்னர் லண்டன் கார்டியன் பத்திரிகை எழுதிய ஆசிரிய தலையங்கம் ஒன்று சிந்தனையை தூண்டுவதாக அமைந்திருக்கிறது. அதை கேசரி வாசக்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

"ஐரோப்பா போர் ஒன்றுக்கு தயாராக வேண்டியிருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு விவகார தலைவர் ஜோசப் பொறெல் அண்மையில்  வெளிப்படையாவே எச்சரிக்கை செய்திருந்தார்." வாஷிங்டனில் யார் ஆட்சி செய்யப்போகிறார் என்பதில் இது தங்கியிருக்கலாம்.

நாம் அமெரிக்க ஆதரவிலோ அல்லது எம்மை பாதுகாப்பதில் அமெரிக்காவின் ஆற்றலிலோ தங்கியிருக்க முடியாது" என்று அவர் கூறினார். அதற்கு சில வாரங்கள் முன்னதாக ட்ரம்ப் அமெரிக்காவுக்கு மிகவும்  குறைந்தளவு பணத்தைச்  செலுத்தும் வடஅத்திலாந்திக் ஒப்பந்த நாடுகளை ( நேட்டோ ) தாக்குமாறு ரஷ்யாவுக்கு ஊக்கங்கொடுக்கப் போவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் பாதுகாப்பு செலவினங்கள் அதிகரித்துவிட்டன. வடகொரியாவிடமிருந்து வரக்கூடிய அணுவாயுத அச்சுறுத்தலை  தடுப்பதற்கு இனிமேல் அமெரிக்காவில் தங்கியிருக்காமல் தங்களது சொந்தத்தில் சுயாதீனமாக  அணுவாயுத அச்சுறுத்தல் ( Nuclear deterrent ) தடுப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் கோரிக்கை தென் கொரியாவில் அதிகரித்துவருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையுமோ என்று அமெரிக்காவின் நேச நாடுகள் அமைதியிழந்துபோயிருக்கின்றன. ட்ரம்ப் பாராட்டும் எதேச்சாதிகாரிகள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் சமவளவு ஆதரவுடைய மாநிலங்களின் இலட்சக் கணக்கான மக்கள் எவ்வாறு வாக்களிக்கப் போகிறார்கள் என்பது உலகின் ஏனைய பாகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

ட்ரம்ப் வெற்றிபெறக் கூடும் என்ற ஊகம் உக்ரெயினில் கடுமையாக உணரப்படுகிறது. விளாடிமிர் புட்டின் மீதான ட்ரம்பின் அனுதாபம் வெளிவெளியாக தெரிந்த ஒன்று. ரஷ்யாவுடன் போரை ஆரம்பித்ததாக உக்ரெயின் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கியை ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார். அவரின் துணை வேட்பாளரான ஜே.டி. வான்ஸ் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவிகளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கை நெருக்கடியை பொறுத்தவரை, கூடுதலான அளவுக்கு  பாலஸ்தீனர்களுக்கு அனுதாபம் காட்டும் கமலா ஹரிஸ் ஜோ பைடனையும் விட இஸ்ரேலை குற்றம் காண்கிறவராக இருக்கிறார். ஆனால் கொள்கையில் பெருமளவுக்கு மாறுபடுவார் என்பதற்கான அறிகுறியைக் காணவில்லை. அராபிய அமெரிக்கர்கள் மத்தியிலான ஆதரவில் திடீரென்று ஏற்பட்ட குறைவு இஸ்ரேலுக்கு ஆயுதக்களை அனுப்புவது குறித்து மீள்பரிசீலனை செய்வதற்கு உந்துதல் அளித்திருப்பதாக தெரியவில்லை. 

இருந்தாலும், தனக்கு வெகுமதி அளித்து இஸ்ரேலிய வலதுசாரிகளை ஊக்கப்படுத்தக்கூடிய ஒரு அமெரிக்க ஜனாதிபதியின்  மீள்  வருகைக்காக பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு ஆவலுடன் காத்திருக்கிறார்.  தனது முதலாவது பதவிக்காலத்தில்  ஈரானுடனான அணு உடன்படிக்கையில் ( அதை ஈரான் ஒழுங்காக கடைப்பிடித்து வந்தது)  இருந்து வெளியேறிய ட்ரம்ப் முடிவற்ற போர்கள் மீதான தனது வெறுப்பின் விளைவாக ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்த்தார். ஆனால் அதே நிலைப்பாடு இனிமலும் தொடருமா?

ட்ரம்ப் ஜனாதிபதியாக  இருந்தபோது உலகம் பெருமளவுக்கு ஆபத்தானதாக இருந்தது. ஜனாதிபதி கிம் ஜொங் -- உன்னை ட்ரம்ப் வீம்புத்தனமாக தவறாக கையாண்டதால் வடகொரியா அதன் அணுவாயுத திட்டத்தை துரிதப்படுத்தியதுடன் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நெருக்கமாகவும் சென்றது.

பைடன் நிருவாகம் ட்ரம்பின் பதவிக் காலத்தின் சகல அம்சங்களையும் நிராகரிக்கவில்லை. சீனா தொடர்பில் மிகவும் கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பதில் குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் இடையில் இருந்த இருதரப்பு கருத்தொருமிப்பு தொடர்ந்து நிலவியது.

முரட்டுத்தனமான முறையில் ட்ரம்ப் கடைப்பிடித்த பொருளாதார தேசியவாதத்தில் இருந்து பைடனின் அணுகுமுறை வேறுபட்டதாக இருந்தது. சீனாவுடனான வர்த்தப் போட்டியில் பைடன் குறிப்பிட்ட இலக்குகளை மையமாக வைத்தே நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால், ட்ரம்ப் சீன உற்பத்திகள் மீது 60 சதவீத தீர்வையும் சகல இறக்குமதிகள் மீதும் 20 சதவீதம் வரையான தீர்வையையும் விதிக்கப்போவதாக அச்சுறுத்துகிறார். அதனால் உலகளாவிய வர்த்தகப் போர் ஒன்று மூளக்கூடும்.

தொடக்கத்தில் தாய்வானுக்கு  ஆதரவாக நடந்துகொண்ட ட்ரம்ப் இப்போது பாதுகாப்புக்காக அமெராக்காவுக்கு அந்த நாடு பணம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார். இது அவரது குறுகிய கால நலன்களை அடிப்படையாகக் கொண்டதும் அப்பட்டமான  கொடுக்கல் வாங்கலின் அடிப்படையிலான அணுகுமுறையைக் கொண்டதுமான ஒரு வெளியுறவுக் கொள்கையை பிரதிபலிக்கிறது. அவர் உள்நாட்டு அரசியல் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்.

ஜனநாயக கட்சியினரும் கமரா ஹரிஸும் குடிவரவை பொறுத்தவரை சரியான அணுகுமுறையை கடைப்பிடிக்கின்ற அதேவேளை " பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பறித்த " ட்ரம்ப் பெருமளவில் ஆட்களை நாடுகடத்தப் போவதாக உறுதியளித்திருக்கிறார். குடியேற்றவாசிகள் அமெரிக்க " இரத்தத்தை நச்சாக்குகுகிறார்கள்" என்ற  ட்ரம்பின் பாசிசத்தனமான பேச்சுக்கள் இனவெறியை நியாயப்படுத்தி பரப்புகின்றன. சர்வதேச ரீதியில் பெண் வெறுப்பாளர்களுக்கும்   தீவிர வலதுசாரிகளுக்கும்  பலம்பொருந்திய எதேச்சாதிகாரிகளுக்கும் ட்ரம்ப் துணிச்சலைக் கொடுத்திருக்கிறார்.

பைடனைப் போன்று கமலா ஹரிஸ் இஸ்ரேலுடனோ அல்லது ஐரோப்பாவுடன் ஐரோப்பாவுடன்  உணர்ச்சிபூர்வமான பிணைப்பைக் கொண்டவராகவோ அல்லது ஜனநாயக நாடுகளுக்கும் அவற்றின் எதிரிகளுக்கும் இடையிலான ஒரு நாகரிக மோதல் பற்றிய கருத்தைக் கொண்டராகவோ கருதப்படவில்லை. உக்ரெயினுடன் " உறுதியாக நிற்பேன் " என்று கூறும் அவர் ரஷ்ராவுடன் உடன்படிக்கை ஒன்றுக்கு செல்லுமாறு வற்றபுறுத்துவதில் பைடனைவிடவும் கூடுதலான அளவுக்கு நாட்டம் கொண்டவராக இருப்பார். 

கமலா ஹரிஸின் நிருவாகமும் பைடன் நிருவாகத்தின் ஒரு பரந்தளவிலான  தொடர்ச்சியாக அமையும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கின்ற அதேவேளை, பதவிக்கு வந்ததும் ஒரு வேட்பாளர் எவ்வாறு நடந்துகொள்வார் என்பதை திட்டவட்டமாக எதிர்வு கூறுவது சாத்தியமில்லை.

ஆனால், வெளியுறவு கொள்கையில் அவர் எப்போதும் சரியான நிலைப்பாடுகளை எடுக்கப்போவதில்லை என்கிற அதேவேளை அவர் ட்ரம்பின் நெறிபிறழ்ந்த, முரட்டுத்தனமான,  தன்னையே முன்னிலைப்படுத்துகின்ற  அணுகுமுறைக்கு முரணாக  ஒரு உறுதிப்பாட்டை, பொறுப்பை, அர்ப்பணிப்பைக் கொண்டுவருவார் என்பது எமக்கு நிச்சயம்.

காலநிலை மாற்றத்துடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில்  அவசியமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைளை போதுமானளவுக்கு கமலா ஹரிஸின் ஒரு நிருவாகம்  எடுக்காமல் விடக்கூடும். ஆனால் ட்ரம்ப் தற்போதைய உலகளாவிய உடன்படிக்கைகளை வேண்டுமென்றே சீர்குலைத்துவிடுவார். இந்த சகல காரணங்களுக்குமாக, இரண்டாவது ட்ரம்ப் நிருவாகத்தை உலகம் தாங்கமாட்டாது.

https://www.virakesari.lk/article/197820

Checked
Sun, 12/22/2024 - 12:59
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe