உலக நடப்பு

ஹவுதி அரசின் பிரதமர் வான்வழித் தாக்குதலில் பலி

1 month 1 week ago

ஹவுதி அரசின் பிரதமர் வான்வழித் தாக்குதலில் பலி

செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியின் பிரதமர் அஹமட் அல்-ரஹாவி கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சனாவில் நடந்த தாக்குதலில் அவரும் சில அமைச்சர்களும் கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று (30) அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்னர். 

2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் ஹவுதி தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமராக அஹமட் அல்-ரஹாவி பணியாற்றி வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.

https://adaderanatamil.lk/news/cmeyg4k0r004co29neegq34bb

மொரிடேனியாவில் புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணித்த படகு விபத்து : 49 பேர் பலி

1 month 1 week ago

30 Aug, 2025 | 11:29 AM

image

மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில, 100 பேர் காணாமல்போயுள்ளனர்.

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆபிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் புகலிடக்கோரிக்கையாளர்களாக கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகின்றன.

இந்நிலையில், மேற்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள காம்பியா, செனகல் நாடுகளை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைய மத்திய தரைக்கடல் வழியாக படகில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது புகலிடக்கோரிக்கையாளர்கள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து விரைந்து சென்ற மொரிடேனியா கடற்படையினர் கடலில் விழுந்து உயிருக்கு போராடிய 17 பேரை மீட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் மாயமாகினர். இதையடுத்து, மாயமானவர்களை தேடும் பணியில் மீட்ப்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/223762

சாதாரண மர சிற்பம் மூலம் அமெரிக்காவை 7 ஆண்டு உளவு பார்த்த சோவியத் - ரகசியம் வெளிப்பட்டது எப்படி?

1 month 1 week ago

அமெரிக்கா, சோவியத் யூனியன், உளவு, கலைப்படைப்பு, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • மேட் வில்சன்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

1945ஆம் ஆண்டு ஒரு மர சிற்பத்தில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு ஒட்டு கேட்கும் கருவி, ஏழு ஆண்டுகள் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பால் கண்டறியப்படாமல் இருந்தது. உளவு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கலைப் படைப்பு இது ஒன்று மட்டும் அல்ல.

எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டாம் உலகப் போரின் இறுதி வாரங்களில், மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்பாசோ ஹவுஸில், ரஷ்ய சிறுவர் சாரணர் படையினர் (Boy Scouts) அமெரிக்க தூதருக்கு கையால் செதுக்கப்பட்ட அமெரிக்காவின் பெரிய முத்திரை பதித்த மரச் சிற்பத்தை பரிசாக அளித்தனர்.

இந்த பரிசு, போரின்போது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை குறிக்கும் வகையில் வழங்கப்பட்டது. தூதர் டபிள்யூ. அவெரல் ஹாரிமன் இதை 1952 வரை தனது இல்லத்தில் பெருமையுடன் காட்சிப்படுத்தினார்.

ஆனால், தூதருக்கும் அவரது பாதுகாப்பு குழுவினருக்கும் தெரியாமல், இந்த முத்திரையில் "தி திங்" (The Thing) என அமெரிக்க தொழில்நுட்ப பாதுகாப்பு குழுக்களால் அழைக்கப்பட்ட ஒரு ரகசிய ஒட்டு கேட்கும் கருவி இருந்தது. இது ஏழு ஆண்டுகள் கண்டறியப்படாமல் தூதரக உரையாடல்களை உளவு பார்த்தது.

சாதாரணமான ஒரு கலைப்படைப்பைப் பயன்படுத்தி எதிரி அமைப்பை ஊடுருவி உத்திரீதியாக நன்மையைப் பெற்றதன் மூலம், சோவியத்துகள் 'ஓடிஸியஸின் ட்ரோஜன் குதிரைக்கு' பிறகு மிகவும் புத்திசாலித்தனமான தந்திரத்தை செய்திருந்தனர். இது ஏதோ கற்பனை உளவு கதை போல் தோன்றினாலும் இது உண்மையில் நடந்தது.

'தி திங்' எவ்வாறு செயல்பட்டது?

அமெரிக்கா, சோவியத் யூனியன், உளவு, கலைப்படைப்பு, வரலாறு

பட மூலாதாரம், John Little

படக்குறிப்பு, எதிர்-உளவு நிபுணர் ஜான் லிட்டில், 'தி திங்'-இன் நகலை உருவாக்கினார் – அவரது பணி பற்றிய ஆவணப்படம் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது

ஜான் லிட்டில் என்ற 79 வயதான, உளவு நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான நிபுணர், இந்தக் கருவியால் நீண்ட காலமாக ஈர்க்கப்பட்டு அவரே அதன் நகலையும் உருவாக்கியுள்ளார்.

அவரது அற்புதமான பணி பற்றிய ஒரு ஆவணப்படம் இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. மே மாதம் அதன் முதல் நேரடி காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த பின்னர், செப்டம்பர் 27 அன்று பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள பிளெட்ச்லி பார்க்-இல் உள்ள தேசிய கணினி அருங்காட்சியகத்தில் (National Museum of Computing) திரையிடப்பட உள்ளது.

அவர் 'தி திங் -இன் தொழில்நுட்பத்தை இசை வடிவில் விவரிக்கிறார் - இது ஆர்கன் குழாய்கள் போன்ற குழல்களும், "டிரம் தோல் போல் மனித குரலுக்கு அதிரும் ஒரு புரையும் கொண்டது. ஆனால் இது ஒரு தொப்பி முள் போலத் தோன்றும் ஒரு சிறிய பொருளாக சுருக்கப்பட்டது. இதில் "மின்னணு இல்லை, பேட்டரி இல்லை, மற்றும் இது சூடாகாது" என்பதால் எதிர்-உளவு பரிசோதனைகளில் கவனிக்கப்படாமல் இருந்தது.

இத்தகைய கருவியின் பொறியியல் மிகவும் துல்லியமாக இருந்தது - "ஒரு சுவிஸ் கடிகாரத்தையும் மைக்ரோமீட்டரையும் இணைத்து உருவாக்கப்பட்டது". அந்தக் காலத்தில் 'தி திங்' "ஒலி கண்காணிப்பு அறிவியலை முன்னர் சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட ஒரு நிலைக்கு உயர்த்தியது" என்று வரலாற்றாசிரியர் ஹெச் கீத் மெல்டன் கூறியுள்ளார்.

அருகிலுள்ள ஒரு கட்டடத்தில் இருந்த ஒரு தொலைநிலை டிரான்ஸ்ஸீவர் இயக்கப்பட்டபோது மட்டுமே ஸ்பாசோ ஹவுஸில் 'தி திங்' செயல்படுத்தப்பட்டது. இது ஒரு உயர்-அதிர்வெண் சமிக்ஞையை அனுப்பியது, இது கருவியின் ஆன்டெனாவிலிருந்து வரும் அனைத்து அதிர்வுகளையும் பிரதிபலித்தது.

1951ஆம் ஆண்டு மாஸ்கோவில் பணிபுரிந்த ஒரு பிரிட்டிஷ் ராணுவ வானொலி ஆபரேட்டர், 'தி திங்' பயன்படுத்திய அதே அலைவரிசையை தற்செயலாக டியூன் செய்து, தொலைவில் உள்ள ஒரு அறையிலிருந்து உரையாடல்களைக் கேட்டபோதுதான் இது கண்டறியப்பட்டது. அடுத்த ஆண்டு, அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் தூதரக இல்லத்தை ஆய்வு செய்து, மூன்று நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, கையால் செதுக்கப்பட்ட மர சிற்பத்தில் இருந்த பெரிய முத்திரை, திரைக்குப் பின் நடந்த தூதரக மட்ட உரையாடல்களைக் கேட்கும் காதாக இருப்பதைக் கண்டறிந்தனர்.

உளவாக பயன்பட்ட கலை

'தி திங்கின் வெற்றியைப் பற்றி சிந்திக்கையில், அதை இயக்கிய ரஷ்ய தொழில்நுட்ப வல்லுநர்களில் ஒருவரான வடிம் கோன்சரோவ், "நீண்ட காலமாக, எங்கள் நாடு குறிப்பிட்ட மற்றும் மிகவும் முக்கியமான தகவல்களைப் பெற முடிந்தது, இது பனிப் போரின் போது எங்களுக்கு சில நன்மைகளை அளித்தது" என்று கூறினார்.

அந்தக் காலத்தில் மேற்கு நாடுகளை உளவு பார்க்க சோவியத் ஒன்றியம் எத்தனை 'திங்க்ஸ்' பயன்படுத்தியிருக்கலாம் என்பது சோவியத் உளவுத்துறைக்கு வெளியே யாருக்கும் இன்றுவரை தெரியாது.

ஆனால் இந்த ஒட்டுக் கேட்கும் கருவியின் வெற்றி தொழில்நுட்ப புதுமையால் மட்டும் கிடைத்தது அல்ல. இது அழகிய பொருட்கள் குறித்த மக்களின் கலாசார மனப்பான்மைகளைப் பயன்படுத்தியதால் வெற்றியடைந்தது. கலைப்படைப்புகள் மற்றும் அலங்காரப் பொருட்களை நாம் பொதுவாக அந்தஸ்து, ரசனை அல்லது கலாசார ஆர்வத்தின் செயலற்ற அடையாளங்கள் என நம்புகிறோம்.

செதுக்கப்பட்ட மேப்பிள் மரத்தால் ஆன மர சிற்பத்தை பயன்படுத்தி ரஷ்ய உளவுத்துறை இந்த அனுமானத்தை ஆயுதமாக்கியது.

வரலாற்றில் உளவு, மறைத்தல் மற்றும் ராணுவ உத்திக்காக கலை பயன்படுத்தப்பட்டதற்கு இது ஒன்று மட்டும் உதாரணம் அல்ல. மோனாலிசாவை வரைந்த லியோனார்டோ டா வின்சி, டாங்கிகள் மற்றும் முற்றுகை ஆயுதங்களையும் வடிவமைத்தார், பீட்டர் பால் ரூபென்ஸ் முப்பது ஆண்டு போரின்போது உளவாளியாக செயல்பட்டார்.

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் மறைமுக மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளை வடிவமைத்தனர். பிரிட்டிஷ் கலை வரலாற்றாசிரியரான (மற்றும் ராஜ கலை சேகரிப்பின் சர்வேயரான) அந்தோனி பிளண்ட், இரண்டாம் உலகப் போர் மற்றும் பனிப்போரின் ஆரம்பத்தில் சோவியத் உளவாளியாக இருந்தார்.

'தி திங்கின் விசித்திரமான வழக்கில், இசை வரலாறும் முக்கியமானது. இதன் புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பாளரான லெவ் செர்ஜியேவிச் டெர்மென், பொதுவாக லியோன் தெரமின் என்று அழைக்கப்படுகிறார். இவர் ரஷ்யாவில் பிறந்த கண்டுபிடிப்பாளரும் திறமையான இசைக்கலைஞருமாவார். அவர் உலகின் முதல் மின்னணு இசைக் கருவியை உருவாக்கினார் - இது அவரது பெயரால் தெரமின் என்று அழைக்கப்படுகிறது.

இந்த கருவியை எதையும் தொடாமல் வாசிக்கலாம் - அதன் ஆன்டெனாக்களைச் சுற்றி கைகளின் அசைவுகள் காற்றில் நகர்ந்து நோட்களைக் கட்டுப்படுத்துகின்றன. தெரமின்-இன் தனித்துவமான ஒலி, 1950களில் அமெரிக்க அறிவியல் கதைகளை கொண்ட திரைப்பட இசைகளின் அடையாளமாக மாறியது - குறிப்பாக 1951 ஆம் ஆண்டு வெளியான தி டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில்( The Day the Earth Stood Still) திரைப்படம், பனிப்போர் பய உணர்வைப் பற்றிய ஒரு உவமையாக அடிக்கடி குறிப்பிடப்படுகிறது.

பல ஆண்டுகள் காக்கப்பட்ட ரகசியம்

அமெரிக்கா, சோவியத் யூனியன், உளவு, கலைப்படைப்பு, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'தி திங்'-ஐ கண்டுபிடித்த லியோன் தெரமின், உலகின் முதல் மின்னணு இசைக் கருவியையும் உருவாக்கினார், இது அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

'தி திங்' கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அது அமெரிக்க உளவுத்துறையால் மிக ரகசியமாக வைக்கப்பட்டது. ஆனால் 1960 ஆம் ஆண்டு மே மாதம், அணு ஆயுத சேகரிப்பின் உச்சத்தில், ஒரு அமெரிக்க யு-2 உளவு விமானம் ரஷ்யாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பான தூதரக நடவடிக்கைகளில், அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள், பனிப்போர் உளவு ஒருதலைப்பட்சமானது அல்ல என்பதை நிரூபிக்க, ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மர சிற்பத்தின் மூலம் சோவியத் தங்களை உளவு பார்த்ததை பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.

ஒரு தூதரக இல்லத்தில் நடந்த ஊடுருவல் எவ்வளவு சங்கடமான பாதுகாப்பு மீறலாக இருந்ததென்றால் தி திங்கை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டுவர ஒரு உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட வேண்டியிருந்தது என ஜான் லிட்டில் நம்புகிறார்.

ஆனால் 'தி திங்கின்' உண்மையான தொழில்நுட்ப சிறப்பு பொதுமக்களுக்கு ஒருபோதும் வெளிப்படுத்தப்படவில்லை.

மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் இந்தக் கருவி பிரிட்டிஷ் எதிர்-உளவுத்துறையால் SATYR என்ற குறியீட்டு பெயரில் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டது. முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பீட்டர் ரைட் 1987 இல் தனது நினைவுக் குறிப்பான ஸ்பைகேட்சரில் (Spycatcher) அனைத்தையும் வெளிப்படுத்தும் வரை, இதன் விவரங்கள் அதிகாரப்பூர்வ அரசு ரகசியமாக இருந்தன.

அந்தக் காலத்திலேயே தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்டதாக இருந்தது மற்றும் பனிப்போர் உளவு விளையாட்டை வடிவமைத்த விதம் ஆகியவற்றால் 'தி திங்' வரலாற்றாசிரியர்களை ஈர்த்தது.

ஆனால் இது ஓபரா அரங்குகள் மற்றும் கலைக்கூடங்களின் பாதுகாக்கப்பட்ட பிரம்மாண்டத்திற்கு வெளியே நிகழும் உயர் கலாசாரத்தின் விசித்திரமான மற்றும் இருண்ட வரலாற்றையும் வெளிப்படுத்துகிறது. அதில் பாரம்பரிய இசைக்கலைஞர்கள் ஒட்டுகேட்கும் கருவிகள் மற்றும் ராணுவ உளவுத்தகவல் சேகரிக்கும் கருவிகளாக உள்ள கையால் செதுக்கப்பட்ட கலைப்படைப்புகளை உருவாக்குகின்றனர்.

தி திங், செப்டம்பர் 27 அன்று பக்கிங்ஹாம்ஷையர் பிளெட்ச்லி பார்க்-இல் உள்ள உள்ள தேசிய கணினி அருங்காட்சியகத்தில் திரையிடப்பட உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp89gv1vrj6o

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட உக்ரேனிய கடற்படை கப்பல்!

1 month 1 week ago

New-Project-286.jpg?resize=750%2C375&ssl

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட உக்ரேனிய கடற்படை கப்பல்!

உக்ரேன் கடற்படையால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இயக்கப்பட்ட மிகப்பெரிய கப்பலான சிம்ஃபெரோபோல் (Simferopol), கடற்படையின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வியாழக்கிழமை (28) அறிவித்தது.

உளவுத்துறை நடவடிக்கைக்காக வடிவமைக்கப்பட்ட குறித்த கப்பல், டானூப் நதியில் வைத்து தாக்குதலுக்கு இலக்கானது.

இதன் ஒரு பகுதி உக்ரைனின் ஒடெசா பிராந்தியத்தில் அமைந்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்ததாக ஆர்டி தெரிவித்துள்ளது.

உக்ரேனிய கடற்படைக் கப்பலை அழிக்க கடல் ஆளில்லா விமானம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும் என்று ரஷ்யாவின் TASS செய்தி அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

கப்பல் தாக்கப்பட்டதை உக்ரேனிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்தத் தாக்குதலில் ஒரு பணியாளர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று உக்ரேனிய கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி கியேவ் இன்டிபென்டன்ட்செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா, அண்மைய மாதங்களில் உக்ரேன் மீதான மோதலில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் பிற ஆளில்லா அமைப்புகளின் உற்பத்தியை துரிதப்படுத்த நகர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1445160

ட்ரம்பின் கட்டண வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

1 month 1 week ago

New-Project-293.jpg?resize=750%2C375&ssl

ட்ரம்பின் கட்டண வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பானது அமெரிக்க ஜனாதிபதியின் வெளிவிவகாரக் கொள்கை நிகழ்ச்சி நிரலை மாற்றக்கூடிய சாத்தியமான சட்ட மோதலாக தற்சமயம் மாறியுள்ளது.

இந்தத் தீர்ப்பு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளின் மீது விதிக்கப்பட்ட ட்ரம்பின் “பரஸ்பர” வரிகளையும், சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்ட பிற வரிகளையும் பாதிக்கிறது.

குறித்த தீர்ப்பில், அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் வரிகள் அனுமதிக்கப்பட்டன என்ற ட்ரம்பின் வாதத்தை அமெரிக்க ஃபெடரல் சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததுடன், அவை “சட்டத்திற்கு முரணானவை என்பதால் செல்லாது” என்றும் கூறியது.

எனினும், இந்த வழக்கை மேன்முறையீடு செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கு ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதனால், இந்தத் தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 14 வரை நடைமுறைக்கு வராது.

ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் ஒரு தூணாக பல நாடுகளுக்கான வரிகளை உயர்த்தியுள்ளார்.

அவற்றைப் பயன்படுத்தி அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தவும், அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யும் பணிகளையும் ஆரம்பித்துள்ளார்.

இந்த வரிகள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு வர்த்தக பங்காளிகளிடமிருந்து பொருளாதார சலுகைகளைப் பெறுவதற்கு வாய்ப்பளித்துள்ளன, ஆனால் நிதிச் சந்தைகளில் ஏற்ற இறக்கத்தையும் அதிகரித்துள்ளன.

https://athavannews.com/2025/1445216

பாலஸ்தீன ஜனாதிபதி, 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை ரத்து செய்தது அமெரிக்கா

1 month 1 week ago

பாலஸ்தீன ஜனாதிபதி, 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை ரத்து செய்தது அமெரிக்கா

30 August 2025

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் 80 பாலஸ்தீன அதிகாரிகளின் விசாக்களை அமெரிக்கா ரத்துச் செய்துள்ளது. 

இந்த நிலையில், அடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தடை செய்யப்பட்டுள்ளார் என்பதை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இருப்பினும், விசாக்களை மறுப்பது அல்லது ரத்து செய்வது என்ற அமெரிக்காவின் நடவடிக்கை அந்தந்த அரசாங்கங்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான "உறவுகளைப் பொருட்படுத்தாமல்", நியூயோர்க்கில் வெளிநாட்டு அதிகாரிகள் வருகை அமெரிக்காவால் தடைபடாது என்று கோடிட்டுக் காட்டும் ஐக்கிய நாடுகளின் ஆவணத்துடன், இந்த விசா ரத்து நடவடிக்கை இணங்குகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பிபிசி கூறுகிறது. 

அமைதி முயற்சிகளை குறைமதிப்புக்கு உட்படுத்தியதற்காகவும், "பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஒருதலைப்பட்சமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று கோரியதற்காகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். 

எனினும் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக, இந்த அமர்வின் போது, பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு பிரான்ஸ் தலைமை தாங்குவதால் இந்தத் தடை வந்துள்ளதாக கருதப்படுகிறது 

முன்னதாக, ஐக்கிய நாடுகளுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர், நாட்டின் தூதுக்குழுவின் தலைவராக, நியூயார்க்கில் நடைபெறும் நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தில் அப்பாஸ் கலந்து கொள்வார் என்று கூறியிருந்தார்.

https://hirunews.lk/tm/417351/us-cancels-visas-of-palestinian-president-80-palestinian-officials

உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் - 23 பேர் பலி

1 month 1 week ago

உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் - 23 பேர் பலி

29 Aug, 2025 | 08:48 AM

image

உக்ரேன், ரஷ்யா இடையேயான போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். ஆனாலும், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரேன் மீது ரஷ்யா நேற்று தாக்குதல் நடத்தியது. உக்ரேன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு பகுதிகள் மீது ரஷ்யா ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும், 48 பேர் படுகாயமடைந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டிஷ் அலுவலகங்கள் சேதமடைந்தன.

https://www.virakesari.lk/article/223650

சீன இராணுவ அணிவகுப்பில் புட்டின், பிற தலைவர்களுடன் கிம்மும் இணைகிறார்!

1 month 2 weeks ago

New-Project-263.jpg?resize=750%2C375&ssl

சீன இராணுவ அணிவகுப்பில் புட்டின், பிற தலைவர்களுடன் கிம்மும் இணைகிறார்!

வட கொரிய ஜனாதிபதி கிம் யொங் உன் அடுத்த வாரம் பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார் என்று சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது அவரது முதல் சர்வதேச அளவிலான தலைவர்கள் கூட்டம் என்றும் நம்பப்படுகிறது.

“வெற்றி நாள்” என்று அழைக்கப்படும் இந்த அணிவகுப்பு, சீனாவின் ஜப்பானுக்கு எதிரான போரின் 80 ஆவது ஆண்டு நிறைவையும், இரண்டாம் உலகப் போரின் முடிவையும் குறிக்கும்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள எதிர்பார்க்கப்படும் 26 நாட்டுத் தலைவர்களில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் ஒருவர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிம்மை சந்திக்க விரும்புவதாகக் கூறிய சில நாட்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

சீனா நூற்றுக்கணக்கான விமானங்கள், டாங்கிகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட அதன் அண்மைய ஆயுதங்களை இதன்போது காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் இராணுவத்தின் புதிய படை அமைப்பு ஒரு அணிவகுப்பில் முழுமையாக காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த அணிவகுப்பில், தியனன்மென் சதுக்கத்தின் வழியாக பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்லவுள்ளனர்.

இதில் சீன இராணுவத்தின் 45 பிரிவுகளின் வீரர்களும், போர் வீரர்களும் அடங்குவர்.

வியாழக்கிழமை (28) சீனாவின் வெளிவிவகார அமைச்சு நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பியோங்யாங்கின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான பெய்ஜிங், அதன் அண்டை நாட்டின் பல தசாப்த கால பாரம்பரிய நட்புறவை பாராட்டியது,

அத்துடன், இரு நாடுகளும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் கூறியது.

இந்த நிலையில் கிம்மின் வருகை, 2015 இல் நடந்த சீனாவின் கடைசி வெற்றி தின அணிவகுப்பிலிருந்து ஒரு முன்னேற்றமாகும்.

இந்த அணிவகுப்பின் போது பியோங்யாங் அதன் உயர் அதிகாரிகளில் ஒருவரான சோ ரியோங்-ஹேயை பெய்ஜிங்கிற்கு அனுப்பியமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1444965

யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் : ஈரானியத் தூதுவரை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா

1 month 2 weeks ago

யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் : ஈரானியத் தூதுவரை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா

27 Aug, 2025 | 11:30 AM

image

அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்திற்கு எதிராக நடந்த தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம் என அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சிட்னி மற்றும் மெல்போர்னில் இடம்பெற்ற இரண்டு யூத விரோதத் தாக்குதல்களை ஈரான் அரசு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில், அவுஸ்திரேலியா ஈரானியத் தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. 

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு வெளிநாட்டு தூதரை அவுஸ்திரேலியா நாடு கடத்துவது இதுவே முதல் முறை என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களின் பின்னணி

அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (ASIO) திரட்டிய புலனாய்வுத்துறை தகவல்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபரில் சிட்னியில் உள்ள யூத உணவு நிறுவனம் ஒன்றின் மீதும், டிசம்பரில் மெல்போர்னில் உள்ள ஒரு யூத தொழுகைக்கூடத்தின் மீதும் நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதல்களுக்கு ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) பின்னணியில் இருந்தது என அவுஸ்திரேலிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் இந்த தாக்குதல்களை "ஒரு வெளிநாட்டு நாடால் அவுஸ்திரேலிய மண்ணில் திட்டமிடப்பட்ட அசாதாரண மற்றும் ஆபத்தான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்" என்று வர்ணித்துள்ளார். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் - அவுஸ்திரேலிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள்

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தின் செயல்பாடுகளை அவுஸ்திரேலியா நிறுத்தி, அங்குள்ள தனது இராஜதந்திரிகளை வேறு நாட்டிற்கு இடமாற்றம் செய்துள்ளது. அத்துடன், ஈரானில் உள்ள அவுஸ்திரேலியர்கள் பாதுகாப்புடன் வெளியேற முடியுமானால் விரைவில் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது. பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க அவுஸ்திரேலியா அண்மையில் எடுத்த முடிவுக்குப் பழிவாங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்திற்கு எதிராக அதிகரித்துள்ள வெறுப்புத் தாக்குதல்களை இது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

https://www.virakesari.lk/article/223473

டபள் கேம் ஆடுகிறதா ரஷ்யா..?

1 month 2 weeks ago

டபள் கேம் ஆடுகிறதா ரஷ்யா..?

Tuesday, August 26, 2025 சர்வதேசம்

1626097853-screenshot-2021-07-06-at-09-29-35-edited.png


ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அதன் ரகசிய இடங்கள் பற்றிய தகவல்களை ரஷ்யா, இஸ்ரேலுக்கு வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தெஹ்ரான் விசாரணையைத் ஆரம்பிக்க உள்ளதாக ஈரானிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


ரஷ்யா "முன்னோடியில்லாத துரோகத்தை" செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து மையங்களையும் துல்லியமாக மறு பகுப்பாய்வு செய்ய வேண்டும். தெஹ்ரானுக்கும், மாஸ்கோவிற்கும் இடையிலான ஒரு மூலோபாய கூட்டணி பற்றிய பேச்சு "பொய் மற்றும் ஏமாற்று" என்பதைத் தவிர வேறில்லை என்றும், ஈரானிய அதிகாரிகள் வெளியிட்ட  கூற்றுக்களை அந்நாட்டு ஊடகங்கள் பதிவேற்றியுள்ளன

Jaffna Muslim
No image previewடபள் கேம் ஆடுகிறதா ரஷ்யா..?

காசா மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி

1 month 2 weeks ago

காசா மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி

26 Aug, 2025 | 10:57 AM

image

காசாவில் உள்ள சுமார் 40 மாணவர்கள் நிதியளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு எதிர்வரும் வாரங்களில் பிரித்தானியாவுக்கு வரவழைக்கும் திட்டங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

செவனிங் திட்டத்தின் கீழ் (Chevening scheme) புலமைப் பரிசில்கள் ஊடாக ஒன்பது மாணவர்களுக்கு காசாவை விட்டு வெளியேற உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செவனிங் திட்டம் என்பது, சர்வதேச மாணவர்கள் ஓராண்டு முதுகலைப் பட்டப்படிப்பைப் படிப்பதற்காக, பெருமளவில் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் கல்வி திட்டம் ஆகும்.

ஏனைய தனியார் திட்டங்கள் மூலம் முழுமையாக நிதியளிக்கப்பட்ட புலமைப் பரிசில்கள் கிடைத்த சுமார் 30 மாணவர்களுக்கு உதவுவதற்கான திட்டங்களுக்கும் உள்நாட்டு  செயலாளர் அனுமதி அளித்துள்ளதாக பிபிசிக்கு தகவல் கிடைத்துள்ளது.

2023-ல் ஹமாஸ்-இஸ்ரேல் போர் ஆரம்பித்த பின்னர், பிரித்தானியாவில் கல்வி கற்பதற்கு காசாவை விட்டு வெளியேறும் முதல் மாணவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள். இருப்பினும், ஒவ்வொரு மாணவரும் அப்பகுதியை விட்டு வெளியேற இஸ்ரேல் அனுமதி அளிக்க வேண்டும்.

காசாவில் இஸ்ரேல் அதன் போர் தொடர்பான சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால், செப்டம்பர் மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரித்தானியா கூறியதிலிருந்து இஸ்ரேலுடனான உறவுகள் மோசமடைந்துள்ளன.

மேலும், ஒரு போர் மண்டலத்திலிருந்து மாணவர்களை வெளியேற்றுவதில் கணிசமான சவால்களும் இருக்கும். விசா பயோமெட்ரிக் சோதனைகளுக்காக அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு மூன்றாவது நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் பிரித்தானியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

உள்நாட்டு அலுவலக வட்டாரம் ஒன்று இந்தத் திட்டத்தை "சிக்கலானதும் சவாலானது" என்று விவரித்தாலும், மாணவர்கள் பிரித்தானியாவில் தங்கள் இடங்களைப் பெற வேண்டும் என உள்நாட்டு செயலாளர் "தெள்ளத்தெளிவாக" தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் இருந்து அனுமதி பெற்ற 80-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மாணவர்கள் சார்பாக அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் மற்றும் பிறர் பல மாதங்களாக மேற்கொண்ட பரப்புரையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சமீபத்திய முடிவின் கீழ் சுமார் 40 மாணவர்கள் சேர்க்கப்பட்டாலும், நிதி உதவி இல்லாத மற்ற மாணவர்களும் உள்ளனர்.

https://www.virakesari.lk/article/223370

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்க ஆசைப்படுகிறார் ஜனாதிபதி டிரம்ப் !

1 month 2 weeks ago

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்க ஆசைப்படுகிறார் ஜனாதிபதி டிரம்ப் !

26 Aug, 2025 | 10:30 AM

image

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திக்க விரும்புவதாகவும், இந்த ஆண்டுக்குள் அந்த சந்திப்பு நிகழலாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி லீ ஜே மியுங் உடன் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது டிரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி லீ ஜே மியுங் வெள்ளை மாளிகைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தென் கொரியாவில் தேவாலயங்கள் தொடர்பான சோதனைகளைக் குறிப்பிட்டு, அங்கு ஒரு "துடைப்பு அல்லது புரட்சி" நடப்பதாக டிரம்ப் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ஆனால், சந்திப்பின் போது, ஜனாதிபதி லீ, டிரம்ப்பை பெரிதும் புகழ்ந்து பேசியதையடுத்து, டிரம்ப் தனது முந்தைய கருத்தை "ஒரு தவறான புரிதல்" என்று கூறி நிராகரித்தார்.

வட கொரிய விவகாரத்தில் லீயின் அணுகுமுறையும் தனது அணுகுமுறையும் ஒரே மாதிரியானவை என டிரம்ப் நம்புவதாகக் கூறினார். மேலும், கிம் ஜாங் உன்னின் சகோதரியைத் தவிர வேறு எவரையும் விட தனக்கு நன்றாகத் தெரியும்" என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

டிரம்ப் "அமைதியைக் காப்பவர் அல்ல, அமைதியை உருவாக்குபவர்" என்று தென்கொரிய ஜனாதிபதி லீ புகழ்ந்தார். மேலும், "நீங்கள் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திப்பதையும், வட கொரியாவில் டிரம்ப் டவர் கட்டப்படுவதையும், அங்கு நீங்கள் கோல்ஃப் விளையாடுவதையும் நான் எதிர்பார்க்கிறேன்" என்று லீ குறிப்பிட்டார்.

தன்னுடைய சந்திப்புக்குப் பின்னர் ஆற்றிய உரையில், வட கொரியா ஆண்டுக்கு 10 முதல் 20 அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யக்கூடும் என்றும், அமெரிக்காவைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் கொண்டிருக்கலாம் என்றும் லீ எச்சரித்தார்.

அமெரிக்கப் படைகளின் இருப்பிற்காக தென் கொரியாவிடம் இருந்து அதிக நிதியுதவியை டிரம்ப் கோரினார். மேலும், அமெரிக்காவின் இராணுவத் தளம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையை அமெரிக்கா எடுத்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். தென் கொரியாவின் இடதுசாரி தலைவர்களுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தும் ஒரு கருத்தாகக் கருதப்படுகிறது.

தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியான லீ ஜே மியுங் வட கொரியாவுடனான உறவுகளை மேம்படுத்த முயற்சித்து வருகிறார். அவர், வட கொரியாவுடனான இராணுவ எல்லையில் ஒலிபெருக்கிகளில் ஒலிபரப்பப்படும் கிம் எதிர்ப்பு செய்திகளை நிறுத்துவது போன்ற சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு, தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து விவாதிக்க ஒரு முக்கியமான தளமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/223377

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி

1 month 2 weeks ago

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி

August 25, 2025 3:06 pm

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி

தெற்கு காசா பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சர்வதேச ஊடகங்களில் பணிபுரியும் நான்கு ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 15 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

நாசர் வைத்தியசாலையில் நடந்த தாக்குதலில் அதன் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

ஏனைய மூவர் அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் என்பிசி ஆகியவற்றில் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவமும் பிரதமர் அலுவலகமும் உடனடி கருத்துக்களை வெளியிடவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

https://oruvan.com/15-killed-including-journalists-in-israeli-attack-on-gaza/

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month 2 weeks ago

Russia-fe.jpg?resize=696%2C375&ssl=1

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

உக்ரேனின் 34வது சுதந்திர தினம் நேற்றையதினம் கொண்டாடப்பட்ட நிலையில் ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை இதற்கு முன்பு உக்ரேன் இராணுவம், தெற்கு ரஷ்யாவிலுள்ள எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தீயானது தொடர்ந்து எரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுக்கப்படுகின்ற உக்ரேன்-ரஷ்யப்  போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்காவின் முயற்சிகள் தொடர் தோல்வியை சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றையதினம் உக்ரேனின் 34வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையிலேயே ரஷ்ய அணு மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் குர்ஷ்க் பகுதியில் உள்ள அணு மின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் அணு மின் நிலையத்தின் ஒரு பகுதி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைப்பதற்கு போராடி வருகின்றனர்.

இத் தாக்குதலில் எவருக்கும் காணம் ஏற்படவில்லை ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தெற்கு ரஷ்யாவில் எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையம் மீது, உக்ரேன் டிரோன் தாக்குதல் காரணமாக கடந்த 3 நாட்களாக தீபற்றி எரிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Athavan News
No image previewரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
உக்ரேனின் 34வது சுதந்திர தினம் நேற்றையதினம் கொண்டாடப்பட்ட நிலையில் ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதேவேளை இதற்கு முன்பு உக்ரேன் இராணுவம், தெற்கு ரஷ்யாவ

இரண்டு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளை சோதனை செய்தது வட கொரியா

1 month 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

24 AUG, 2025 | 11:46 AM

image

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மேற்பார்வையில் கீழ் இரண்டு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாக வட கொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆயுதங்கள் "சிறந்த போர் திறன்" மற்றும்"தனித்துவமான தொழில்நுட்பத்தைப்" கொண்டவைகள்  என கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனை, ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் உட்பட "பல்வேறு வான் இலக்குகளை அழிக்க இரண்டு வகையான ஏவுகணைகளின் தொழில்நுட்ப அம்சங்கள் மிகவும் பொருத்தமானவை என்பதை நிரூபித்துள்ளன" என  கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடுகளைப் பிரிக்கும் இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தை (DMZ) சிறிது நேரம் கடந்த வட கொரிய வீரர்கள் மீது செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தென் கொரியா உறுதிப்படுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு இடையேயான பலத்த பாதுகாப்புடன் கூடிய எல்லையை சுமார் 30 வட கொரிய துருப்புக்கள் கடந்து சென்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளை தெரிவித்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவும் அமெரிக்காவும் திங்கட்கிழமை முதல் இப்பகுதியில் பெரிய அளவிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன.

வொஷிங்டனில் திங்கட்கிழமை நடைபெறும் உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங்கை சந்திக்க உள்ளார்.

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள தென் கொரிய ஜனாதிபதி, கொரிய நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரச்சாரம் செய்தார்.

இருப்பினும், கிம்மின் சகோதரி லீயின் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகளை நிராகரித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் கிம் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு இராணுவப் பயிற்சிகளைக் கண்டித்து, அவற்றை "மிகவும் விரோதமான மற்றும் மோதல் நிறைந்தவை" என விவரித்தார்.

வட கொரியத் தலைவர் நாட்டின் அணு ஆயுதங்களை அதிகரிக்கும் தனது நோக்கத்தை விரைவுபடுத்துவதாக சபதம் செய்தார்.

ஜனவரியில், வட கொரியா ஒரு ஹைப்பர்சோனிக் போர்முனையுடன் கூடிய புதிய இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவுவதாகக் கூறியது, இது "பசிபிக் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு போட்டியாளரையும் நம்பத்தகுந்த முறையில் கட்டுப்படுத்தும்" என கூறியது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பை ஆதரிக்க துருப்புக்களை அனுப்புவதற்கு ஈடாக வட கொரியா ரஷ்ய ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பெறுவது குறித்து தென் கொரிய மூத்த அதிகாரிகள் கவலைகளை எழுப்பியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/223244

அமெரிக்க ஜனாதிபதியின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வீட்டில் சோதனை!

1 month 2 weeks ago

download-11.jpg?resize=304%2C166&ssl=1

அமெரிக்க ஜனாதிபதியின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் வீட்டில் சோதனை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் (John Bolton), இந்தியா மீதான ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கையைக் கடுமையாக விமர்சித்திருந்தா நிலையில் அவரது வீட்டில் அந்நாட்டு மத்தியப் புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதார அழுத்தத்தை உருவாக்க இந்தியாவுக்கு ட்ரம்ப், 50 சதவீத வரி விதித்தமை அமெரிக்காவுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் “ட்ரம்பின் இத்தகைய செயல்கள் நம் நாட்டை ஆபத்தில் ஆழ்த்துகின்றன” என்றும் ஜோன் போல்டன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்கள், மத்தியப் புலனாய்வு அமைப்பினர் பறிமுதல் செய்த ஆதாரங்களைச் சேமித்து வைத்திருந்ததாகக் கூறி, ஜோன் போல்டனின் வீடு மற்றும் அலுவலகங்களில் மத்தியப் புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2025/1444392

ஒரு விநாடிக்கு 3.2 கி.மீ. பாயும்: அமெரிக்காவையே அச்சுறுத்தும் ரஷ்ய ஏவுகணை - சீனா என்ன செய்கிறது?

1 month 2 weeks ago

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

பட மூலாதாரம், EPA-EFE/KCNA

கட்டுரை தகவல்

  • ஃப்ராங்க் கார்ட்னர்

  • பாதுகாப்பு செய்தியாளர்

  • 23 ஆகஸ்ட் 2025, 02:50 GMT

    புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

பெய்ஜிங்கில் அணிவகுப்பு மைதானத்தில் இலையுதிர்கால வெயிலில் பளபளக்க, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ ஏவுகணைகள் ராட்சத லாரிகளின் வரிசையில் மக்கள் கூட்டத்தைக் கடந்து மெதுவாக நகர்ந்தன.

11 மீட்டர் நீளமும் 15 டன் எடையும் கொண்ட ஊசி-கூர்மையான உருவம் ஒவ்வொன்றிலும் "டி.எஃப்-17" (DF-17) என்ற எழுத்துகளும் எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

சீனா அப்போதுதான் தனது டாங்ஃபெங் ஹைபர்சோனிக் ஏவுகணை இருப்பை உலகிற்கு அறிவித்தது.

அது அக்டோபர் 1, 2019 அன்று தேசிய தின அணிவகுப்பில் நடந்தது. இந்த ஆயுதங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதை அமெரிக்கா ஏற்கனவே அறிந்திருந்தது, ஆனால் அதன் பின்னர் சீனா அவற்றை மேம்படுத்துவதில் முன்னேறியுள்ளது.

அவை வேகமாக செல்லக்கூடியவை, அவற்றை இலகுவாக இயக்கலாம் - ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கும் அவை, வலிமையான ஆயுதங்கள் என்பதால் போர்கள் நடத்தப்படும் முறையை மாற்றக்கூடும்.

அதனால்தான் அவற்றை உருவாக்குவதில் உலகளாவிய போட்டி சூடுபிடித்து வருகிறது.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, 2019-ம் ஆண்டு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் DF-17 ஹைபர்சோனிக் ஏவுகணையை சீனா அறிமுகப்படுத்தியது.

"இது அரசுகளுக்கு இடையில் நாம் காணும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் போட்டியின் ஒரு கூறு மட்டுமே" என்று புவிசார் மூலோபாய சிந்தனைக் குழுவின் தேசிய பாதுகாப்பு ஆய்வாளர் வில்லியம் ஃப்ரீர் கூறுகிறார்.

"[இது] பனிப்போருக்குப் பிறகு நம்மிடம் இல்லாத ஒன்று."

ரஷ்யா, சீனா, அமெரிக்கா இடையே ஒரு உலகளாவிய போட்டி

ஹைபர்சோனிக் தொழில்நுட்பத்தில் சீனாவின் முன்னேற்றங்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்த ஊகங்களை பெய்ஜிங் அணிவகுப்பு எழுப்பியது. இன்று ஹைபர்சோனிக் ஏவுகணைகளில் சீனா முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து ரஷ்யா உள்ளது. அமெரிக்காவும் முன்னேறி வருகிறது, பிரிட்டனிடம் எதுவும் இல்லை.

பாதுகாப்பு தொழில்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிறரிடமிருந்து அதன் நிதியுதவியில் சிலவற்றைப் பெற்ற புவிசார் மூலோபாய சிந்தனைக் குழுவைச் சேர்ந்த ஃப்ரீர், சீனாவும் ரஷ்யாவும் முன்னணியில் இருப்பதற்கான காரணம் மிக எளிமையானது என்கிறார்.

"சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டங்களில் நிறைய பணத்தை முதலீடு செய்ய அவர்கள் முடிவு செய்தனர்."

இதற்கிடையில், இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களில், பல மேற்கத்திய நாடுகள் உள்நாட்டில் ஜிஹாதிகளால் ஈர்க்கப்பட்ட பயங்கரவாதம் மற்றும் வெளிநாடுகளில் கிளர்ச்சி எதிர்ப்பு போர்கள் இரண்டையும் எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்தின.

அப்போது, ஒரு நவீன, அதிநவீன எதிரிக்கு எதிராக போராட வேண்டிய வாய்ப்பு தொலைதூர ஒன்றாகத் தோன்றியது.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

பட மூலாதாரம், SHUTTERSTOCK

"அதன் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால், சீனா ஒரு ராணுவ சக்தியாக உருவெடுத்ததை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்" என்று 2020 -ல் பிரிட்டனின் ரகசிய புலனாய்வு சேவையின் தலைவராக ஓய்வு பெற்ற உடனேயே சர் அலெக்ஸ் யங்கர் ஒப்புக்கொண்டார்.

மற்ற நாடுகளும் முன்னேறி வருகின்றன. இஸ்ரேலிடம் ஆரோ 3 (Arrow 3) என்ற ஹைபர்சோனிக் ஏவுகணை உள்ளது, இது ஒரு இடைமறிப்பு கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தன்னிடம் ஹைபர்சோனிக் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறிய இரான், ஜூன் மாதம் இஸ்ரேல் மீது 12 நாள் போரின் போது ஹைபர்சோனிக் ஏவுகணையை ஏவியதாகக் கூறியது.

(அந்த ஆயுதம் உண்மையில் மிக அதிக வேகத்தில் பயணித்தது, ஆனால் இது ஒரு உண்மையான ஹைபர்சோனிக் ஏவுகணை என்று கூறும் அளவு பறக்கும் போது இலகுவாக இயங்கியதாக கருதப்படவில்லை).

இதற்கிடையில், வட கொரியா 2021 முதல் தனது சொந்த ஏவுகணைகளை உருவாக்குவதில் பணியாற்றி வருகிறது. தன்னிடம் ஒரு சாத்தியமான ஆயுதம் இருப்பதாக அந்த நாடு கூறுகிறது.

பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளைப் போலவே அமெரிக்காவும் பிரிட்டனும் இப்போது ஹைபர்சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தில் முதலீடு செய்கின்றன.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

பட மூலாதாரம், MORTEZA NIKOUBAZL/NURPHOTO VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ஜூன மாதம் நடைபெற்ற 12 நாள் போரில் ஹைபர்சோனிக் ஏவுகணையை இஸ்ரேல் மீது ஏவியதாக இரான் கூறியது.

அமெரிக்கா தனது தடுப்பு சக்தியை வலுப்படுத்தி வருவதாக தெரிகிறது, அமெரிக்கா "டார்க் ஈகிள்" ஹைபர்சோனிக் ஆயுதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, டார்க் ஈகிள் "ராணுவம் மற்றும் நாட்டின் சக்தியையும் உறுதியையும் நினைவுப்படுத்துகிறது. ஏனெனில் இது ராணுவம் மற்றும் கடற்படையின் ஹைபர்சோனிக் ஆயுத முயற்சிகளின் வீரியத்தை பிரதிபலிக்கிறது".

ஆனால் சீனாவும் ரஷ்யாவும் தற்போது வெகு தொலைவில் முன்னேறியுள்ளன - இது ஒரு கவலைக்குரிய விஷயமே என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிவேகம் மற்றும் கணிக்க முடியாத போக்கு

ஹைபர்சோனிக் என்றால் மேக் 5 (Mach 5) அல்லது அதற்கும் அதிகமான வேகமான வேகத்தில் பயணிக்கும் ஒன்று. (அதாவது ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அல்லது மணிக்கு 3,858 மைல் பயணிக்கக் கூடியது.) இதனால் தான் ஹைபர்சோனிக் ஏவுகணைகள் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை விட வேறுபட்டதாக உள்ளது. சூப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட சற்றே அதிகமாக (மணிக்கு 767 மைல்) மட்டுமே பயணிக்கும்.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள் அத்தகைய அச்சுறுத்தலாகக் கருதப்படுவதற்கான காரணங்களில் ஒன்று அவற்றின் வேகம்.

இன்றுவரை மிக வேகமானது ரஷ்யாவின் - அவன்கார்ட் - மேக் 27 (தோராயமாக 20,700 மைல்) வேகத்தை எட்ட முடியும் என்று கூறப்படுகிறது - இருப்பினும் மேக் 12 (9,200 மைல்) என்ற வேகமே பெரும்பாலான இடங்களில் குறிப்பிடப்படுகிறது. இது வினாடிக்கு இரண்டு மைல்களுக்கு (அதாவது விநாடிக்கு 3.2 கி.மீ.) சமம்.

இருப்பினும், முற்றிலும் அழிக்கும் சக்தியைப் பொறுத்தவரை, ஹைபர்சோனிக் ஏவுகணைகள் சூப்பர்சோனிக் அல்லது சப்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டவை அல்ல என்று ஃப்ரீர் கூறுகிறார்.

"அவற்றைக் கண்டறிவது, கண்காணிப்பது மற்றும் இடைமறிப்பதில் உள்ள சிரமம்தான் உண்மையில் இந்த ஏவுகணைகளை மற்றவைகளிலிருந்து வேறுபடுத்துகிறது."

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

பட மூலாதாரம், REUTERS

அடிப்படையில் இரண்டு வகையான ஹைபர்சோனிக் ஏவுகணைகள் உள்ளன: பூஸ்ட்-கிளைட் ஏவுகணைகள் (சீனாவில் உள்ள டி.எஃப் -17 போன்றவை) பூமியின் வளிமண்டலத்தை நோக்கியும் சில நேரங்களில் மேலேயும் உந்தி செல்ல ஒரு ராக்கெட்டை நம்பியுள்ளன. அங்கிருந்து அவை இந்த நம்பமுடியாத வேகத்தில் கீழே வருகின்றன.

மிகவும் கணிக்கக்கூடிய வளைவில் (பரவளைய வளைவு) பயணிக்கும் மிகவும் பொதுவான பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் போலல்லாமல், ஹைபர்சோனிக் கிளைட் வாகனங்கள் ஒழுங்கற்ற வழியில் நகர முடியும், பறக்கும் போதும் தங்கள் இலக்கை அவற்றை இயக்க முடியும்.

பின்னர் ஹைபர்சோனிக் க்ரூயிஸ் ஏவுகணைகள் உள்ளன, அவை உயரம் குறைவாக, எதிரிகளால் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ரேடார் வீச்சுக்கு வெளியே இருக்க முயற்சிக்கின்றன.

ராக்கெட் பூஸ்டரைப் பயன்படுத்தி அவை இதேபோல் ஏவப்பட்டு துரிதப்படுத்தப்படுகின்றன, பின்னர் அவை ஹைபர்சோனிக் வேகத்தை அடைந்தவுடன், அவை "ஸ்கிராம்ஜெட் என்ஜின்" எனப்படும் ஒரு அமைப்பை செயல்படுத்துகின்றன, அது பறக்கும் போது காற்றை எடுத்து, அதன் இலக்கை நோக்கி உந்துகிறது.

இவை "இரட்டை பயன்பாட்டு ஆயுதங்கள்", அதாவது அவற்றிலிருந்து அணு ஆயுதங்களையும் செலுத்தலாம், அல்லது வழக்கமான உயர் வெடிபொருள் கொண்ட ஆயுதங்களையும் செலுத்தலாம். ஆனால் இந்த ஆயுதங்களுக்கு வேகத்தை விட வேறு சில விசயங்களும் உள்ளன.

ஓர் ஏவுகணை ராணுவ தரங்களின் அடிப்படையில் உண்மையிலேயே "ஹைபர்சோனிக்" என்று வகைப்படுத்தப்படுவதற்கு, அது பறக்கும் போது இயக்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும். அதாவது, அதன் இலக்கை நோக்கி அதீத வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அதை ஏவிய ராணுவத்தினர் நினைத்தால் அந்த ஏவுகணையை திடீரென கணிக்க முடியாத வகையில் பாதையை மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும்.

இது இடைமறிப்பதை மிகவும் கடினமாக்கும். ஹைபர்சோனிக் ஏவுகணைகளைக் கண்டறிய பெரும்பாலான, நிலத்தில் நிறுவப்பட்டுள்ள ரேடார்களால் முடியாது.

"ரேடாரின் வீச்சுக்கு வெளியே பறப்பதன் மூலம் அவை முன்கூட்டியே கண்டறிவதைத் தவிர்க்க முடியும் மற்றும் அவற்றின் இறுதி கட்டத்தில் சென்சார்களில் மட்டுமே தோன்றக்கூடும். இது அந்த ஏவுகணை இடைமறிக்கப்படும் வாய்ப்புகளை குறைக்கிறது" என்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தில் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தின் ஆராய்ச்சி கூட்டாளர் பாட்ரிக்ஜா பாசில்சிக் கூறுகிறார். இந்த மையம் அமெரிக்க அரசாங்க நிறுவனங்களிடமிருந்தும் பாதுகாப்பு தொழில்துறை நிறுவனங்களிடமிருந்து அதன் நிதியுதவியில் சிலவற்றைப் பெற்றுள்ளது.

இதற்கான பதில், மேற்கத்திய நாடுகளின் வான்வெளி அடிப்படையிலான சென்சார்களை வலுப்படுத்துவதாகும், இது தரையில் உள்ள ரேடார்களின் வரம்புகளை சமாளிக்கும் என்று அவர் நம்புகிறார்.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, நவம்பர் 2024 இல் கியவ் நகரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ஹைபர்சோனிக் ஏவுகணை சிர்கானின் எச்சங்களை மக்கள் பார்க்கிறார்கள்.

நிகழ்நேர போர் சூழ்நிலையில், குறிவைக்கப்படும் நாட்டின் முன் ஒரு பயங்கரமான கேள்வியும் உள்ளது: இது அணுசக்தி தாக்குதலா அல்லது வழக்கமான தாக்குதலா?

"ஹைபர்சோனிக் ஏவுகணைகள் போரின் தன்மையை மாற்றவில்லை, நீங்கள் செயல்படக்கூடிய வேகத்தை மாற்றியுள்ளது" என்று முன்னாள் ராயல் கடற்படை தளபதியும் விமான போர் எதிர்ப்பு நிபுணருமான டாம் ஷார்ப் கூறுகிறார்.

"சில அடிப்படை விசயங்கள் - உங்கள் எதிரியைக் கண்காணிக்க வேண்டும், அவர்களை சுட வேண்டும், பின்னர் நகரும் இலக்கை நோக்கி ஏவுகணையை கையாள வேண்டும் -இவை முந்தைய ஏவுகணைகளிலிருந்து வேறுபட்டதல்ல, அது பாலிஸ்டிக் ஏவுகணைகளானாலும் சரி, சூப்பர்சோனிக் அல்லது சப்சோனிக் ஆனாலும் சரி" என்கிறார் ஷார்பு.

"அதேபோல், குறிவைக்கப்படும் நாடு உள்வரும் ஹைபர்சோனிக் ஏவுகணையை கண்காணித்து அழிக்க வேண்டும் என்கிற தேவை இப்போதும் மாறப்படவில்லை, ஆனால் இப்போது உங்களுக்கு குறைந்த நேரமே உள்ளது".

இந்த தொழில்நுட்பம் வாஷிங்டனை கவலையடையச் செய்கிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆராய்ச்சி சேவை வெளியிட்ட ஓர் அறிக்கை, "ஹைபர்சோனிக் ஆயுதங்களைக் கண்டறிந்து பின்தொடர நிலப்பரப்பு மற்றும் தற்போதைய வான்வெளி அடிப்படையிலான சென்சார் கட்டமைப்புகள் இரண்டுமே போதுமானதாக இல்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்." என எச்சரிக்கிறது.

இன்னும் சில வல்லுநர்கள் ஹைபர்சோனிக் ஏவுகணையை சுற்றியுள்ள சில விசயங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று நம்புகிறார்கள்.

கூடுதலாக மிகைப்படுத்துகிறார்களா?

ராயல் யுனைடெட் சேவை நிறுவனத்தின் பாதுகாப்பு சிந்தனைக் குழுவைச் சேர்ந்த டாக்டர் சித்தார்த் கௌஷல், இவை அவசியம் போக்கை மாற்றியமைக்கக் கூடியவை அல்ல என்று நினைக்கிறார்.

"வேகமும் இலகுவாக இயக்கப்படக் கூடிய திறனும் இவற்றை உயர் மதிப்பு இலக்குகளை தாக்குவதற்கான எளிதான தேர்வுகளாக்குகின்றன. தாக்குதல் சமயத்தில் அவற்றின் இயக்க ஆற்றல் கடினமான, மிக ஆழமாக புதைக்கப்பட்ட இலக்குகளை குறிவைக்க பயனுள்ள வழிமுறையாக அமைகிறது, இந்த இலக்குகளை முன்பு பெரும்பாலான வழக்கமான ஆயுதங்களால் அழிப்பது கடினமாக இருந்தது." என்று கௌஷல் கூறுகிறார்.

ஆனால் அவை ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அல்லது அதற்கு மேல் பயணித்தாலும், அவற்றை எதிர்த்து தற்காத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளன - அவற்றில் சில "திறனுள்ளவை" என்று ஷார்ப் வாதிடுகிறார்.

முதலாவது, கண்காணிப்பையும் கண்டறிதலையும் மிகவும் கடினமாக்குவது. "ஏவுகணைகள் தங்கள் நிலையைப் பாதுகாக்க பெரும் முயற்சிகளை எடுக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

"வணிக செயற்கைக்கோள்களில் இருந்து கிடைக்கும் தெளிவற்ற செயற்கைக்கோள் படம் சில நிமிடங்கள் பழையதாக இருந்தால் போதும், அதை நம்பி இலக்கு வைக்கப் பயன்படாது."

"குறிவைக்கப் பயன்படுத்துவதற்கு போதுமான அளவு நிகழ்நேர, துல்லியமான செயற்கைக்கோள் படங்களைப் பெறுவது கடினமானது மற்றும் விலை உயர்ந்தது." என்கிறார்.

ஆனால் செயற்கை நுண்ணறிவும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும் காலப்போக்கில் இதை மாற்றக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

படக்குறிப்பு, ஆதாரம் : பாதுகாப்பு உளவு நிறுவனம், ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பு

ரஷ்யா அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கை

ரஷ்யாவும் சீனாவும் இந்த ஆயுதங்களை உருவாக்குவதில் முன்னணியில் இருப்பது உண்மைதான். "சீன ஹைபர்சோனிக் திட்டங்கள்...கவர்ச்சிகரமானதாகவும் அதே நேரம் கவலைக்குரியவையாகவும் உள்ளன என்று நான் நினைக்கிறேன்," என்று ஃப்ரீர் கூறுகிறார்.

ஆனால் "ரஷ்யர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எதைக் கூறினாலும் அதுகுறித்து நாம் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." என்றும் சொல்கிறார்.

நவம்பர் 2024-ல், ரஷ்யா யுக்ரேனின் நிப்ரோவில் உள்ள ஒரு தொழிற்சாலை தளத்தில் சோதனைக்காக நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது, அதை நேரடி சோதனைக் களமாகப் பயன்படுத்தியது.

இந்த ஏவுகணை மேக் 11 (அல்லது மணிக்கு 8,439 மைல்) ஹைபர்சோனிக் வேகத்தில் பயணித்ததாக யுக்ரேன் தெரிவித்தது, இந்த ஏவுகணைக்கு 'ஒரெஷ்னிக்' என்று பெயரிடப்பட்டது, இது ரஷ்ய மொழியில் ஹேசல் மரம் (Hazel tree/ஜாதி பத்திரி மரம்) என்பதாகும்.

ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆயுதம் மேக் 10 வேகத்தில் பயணித்ததாக கூறினார்.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

ஏவுகணை இலக்கை நெருங்கியதும் அதன் ஆயுத முனை பல தனித்தனி பாகங்களாக பிரிந்து சென்று தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருத்தாக தகவல் கிடைத்துள்ளது. இவை ஒவ்வொன்றும் தனித்தனி இலக்குகளை கொண்டிருந்தன. இது பனிப்போர் காலத்து நடைமுறையாகும். அது சோதனை என்பதால், அப்போது அவற்றில் செயலற்ற எரிபொருள்களே இருந்தன.

அது தரையிறங்கியதைக் கேட்ட ஒருவரிடம் பேசிய போது, " அது மிக சத்தமாக இல்லை, ஆனால் பல இடங்களை அது தாக்கியிருந்தது: 6 ஏவுகணை முனைகள் தனித்தனி இலக்குகளில் விழுந்தன. ஆனால் அவை செயலற்றவையாக இருந்ததால், அதனால் ஏற்பட்ட சேதம், யுக்ரேன் நகரங்களில் ரஷ்யாவின் இரவுக் குண்டுவீச்சால் ஏற்படும் சேதத்தை விட மிக அதிகமாக இல்லை.

ஐரோப்பாவைப் பொறுத்தவரை, நேட்டோ நாடுகளுக்கு நிலவும் அச்சுறுத்தல் பிரதானமாக ரஷ்யாவின் ஏவுகணைகளால் ஏற்படுகிறது. அவற்றில் சில ஏவுகணைகள் ரஷ்யாவின் பால்டிக் கடற்கரையில் உள்ள காலினின்கிராட் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இம்முறை முழு உயர் வெடிகுண்டுகளை ஏற்றி புதின் கியவ் நகரத்தின் மீது ஒரெஷ்னிக் மூலம் தாக்குதல் நடத்த உத்தரவிட்டால் என்னவாகும்?

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆயுதம் தொடர் உற்பத்தி செய்யப்பட போவதாகவும், இலக்குகளை "தூளாக்கும்" திறன் தங்களிடம் உண்டு என்றும் கூறினார்.

ரஷ்யாவிடம் ஹைபர்சோனிக் வேகத்தில் பயணிக்கும் பிற ஏவுகணைகளும் உள்ளன.

புதின் தனது வான்படையின் கின்ஜால் (Kinzhal) ஏவுகணைகளைப் பற்றி அதிகம் பேசினார், அவை மிக வேகமாக செல்லும் அவற்றை இடைமறிப்பது சாத்தியமில்லை என்று கூறினார். அதன்பின், அவர் அவற்றில் பலவற்றை யுக்ரேன் மீது ஏவியுள்ளார் - ஆனால் கின்ஜால் உண்மையில் ஹைபர்சோனிக் அல்லாமல் இருக்கலாம் என்றும், பலவும் இடைமறிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஹைபர்சோனிக் ஏவுகணைத் துறையில் சீனாவும் ரஷ்யாவும் மற்ற நாடுகளை விஞ்சி உள்ளன.

மேற்கத்திய நாடுகளுக்குக் கவலை தருவது ரஷ்யாவின் அதிவேகமான, மிக இலகுவாக இயக்கப்படக்கூடிய ஆயுதமான அவன்கார்ட் ஆகும். 2018 -ல் வேறு ஐந்து 'சூப்பர் ஆயுதங்களுடன்' அறிமுகமானது, அதனை புதின் தடுக்க முடியாதது என்று கூறினார்.

டாக்டர் சித்தார்த் கௌஷல் அதன் முதன்மையான பங்கு உண்மையில் "அமெரிக்க ஏவுகணைப் பாதுகாப்பு முறைகளை விஞ்சுவதுதான்" என்று கூறுகிறார்.

"ரஷ்யாவின் அரசு ஆயுதத் திட்டங்கள் அவன்கார்ட் போன்ற அமைப்புகளை உற்பத்தி செய்யும் திறன் ரஷ்யாவிடம் போதிய அளவு இல்லை என்பதையும் காட்டுகின்றன," என்று அவர் வாதிடுகிறார்.

மேற்கு பசிபிக்கில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே மூலோபாய மேலாதிக்கத்திற்கான போட்டி தீவிரமடைந்து வருவதால், சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் கிடங்கின் பெருக்கம் தென் சீனக் கடல் மற்றும் அதற்கு அப்பால் அமெரிக்க கடற்படை நிலைப்பாட்டிற்கு தீவிரமான அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்புள்ளது.

சீனாவிடம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஹைபர்சோனிக் ஆயுதக் கிடங்கு உள்ளது. 2024-ன் பிற்பகுதியில், சீனா தனது சமீபத்திய ஹைபர்சோனிக் கிளைட் வாகனமான GDF-600ஐ வெளியிட்டது. 1,200 கிலோ பேலோடுடன், இது துணை ஆயுதங்களைச் சுமந்து மேக் 7 (மணிக்கு 5,370 மைல்) வேகத்தை எட்ட முடியும்.

பிரிட்டனின் அவசர முயற்சியில் வெற்றி

பிரிட்டன் இந்தப் பந்தயத்தில் பின்தங்கியுள்ளது, குறிப்பாக அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து அணு ஆயுத நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றாக இருப்பதால் இது குறிப்பிடத்தக்க பிரச்னையாகிறது. ஆனால் தாமதமாக முயன்றாலும், அது விரைந்து எட்டிப்பிடிக்க முயற்சி செய்கிறது, அல்லது குறைந்தபட்சம் பந்தயத்தில் சேர முயற்சி செய்கிறது.

ஏப்ரலில், பாதுகாப்பு அமைச்சகமும் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகமும் ஒரு முக்கிய சோதனைத் திட்டத்தின் வெற்றிகரமான முடிவுக்குப் பிறகு பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் "ஒரு முக்கிய தருணத்தை" எட்டியுள்ளனர் என்று அறிவித்தன.

பிரிட்டனின் உந்துசக்திச் சோதனை பிரிட்டிஷ் அரசு, தொழில்துறை மற்றும் அமெரிக்க அரசு ஆகியவற்றுக்கு இடையேயான மூன்று தரப்பு ஒத்துழைப்பின் விளைவாகும். ஆறு வாரங்களில் அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள நாசா லாங்லே ஆராய்ச்சி மையத்தில் மொத்தம் 233 "வெற்றிகரமான நிலையான சோதனை ஓட்டங்கள்" மேற்கொள்ளப்பட்டன.

பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி இதை "ஒரு மைல்கல் தருணம்" என்று அழைத்தார்.

ஆனால் இந்த ஆயுதம் தயாராக இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

பட மூலாதாரம், REUTERS/VALENTYN OGIRENKO

படக்குறிப்பு, ரஷ்யாவின் 'கின்ஜால்' ஏவுகணை உண்மையில் ஹைபர்சோனிக் திறன் கொண்டதாக இருக்காது, அவற்றில் பல யுக்ரேனின் தடுப்பு‌ அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்.

ஹைபர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்குவதுடன், மேற்கத்திய நாடுகள் அவற்றிற்கு எதிரான வலுவான பாதுகாப்பையும் உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஃப்ரீர் வாதிடுகிறார்.

"ஏவுகணைப் போர் என்று வரும்போது, இது ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் பற்றியது. நீங்கள் சேதத்தைக் குறைக்கவும் முடிய வேண்டும், அதே நேரத்தில் எதிரியின் ஏவுதள அமைப்புகளைத் தாக்கும் திறனும் கொண்டிருக்க வேண்டும்."

"உங்களுக்கு இரண்டு கைகளும் இருந்தால், நீங்கள் ஒரு அளவிற்கு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் எதிர்த் தாக்குதல் நடத்தவும் முடிந்தால்... அப்போது ஒரு எதிரி மோதலைத் தொடங்க முயற்சிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு."

எனினும், இந்த நேரத்தில் நாம் எந்த அளவிற்குக் கவலைப்பட வேண்டும் என்பது குறித்து டாம் ஷார்ப் இன்னும் எச்சரிக்கையாக உள்ளார்.

அவர், "ஹைபர்சோனிக்ஸ் குறித்த முக்கிய விஷயம், இந்தச் சமன்பாட்டின் இரு பக்கங்களும் ஒன்றைப் போலவே மற்றொன்றும் கடினமானவை - இரண்டும் இன்னும் கச்சிதமாக வடிவம் பெறவில்லை" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgypz9j564o

காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு

1 month 2 weeks ago

காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு

August 23, 2025 7:43 am

காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு

மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது.

சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

” காசாவில் நிலவும் உணவு பஞ்சம் நிச்சயம் தடுக்கக்கூடிய ஒன்றுதான். இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக பாலஸ்தீனத்தின் அந்த பகுதிக்கு உணவு கொண்ட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.” என்று ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தலைமை பொறுப்பில் உள்ள தாமஸ் தெரிவித்துள்ளார்.

இதை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மேலும், காசாவில் உணவு பஞ்சம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. காசாவில் பஞ்சம் என்பது ஹமாஸ் அமைப்பால் பரப்பப்பட்ட பொய்யின் அடிப்படையிலானது என பதிலடி கொடுத்துள்ளது.

கடந்த 15-ம் திகதி நிலவரப்படி காசா நகரில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதியில் காசா முனையின் டெய்ர்-எல்-பலாஹ் மற்றும் கான் யூனிஸ் பகுதியிலும் இந்த நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

காசாவில் தினசரி ஐந்தில் ஒரு வீட்டிலும், மூன்றில் ஒரு குழந்தையிடமும், ஒவ்வொரு பத்தாயிரம் பேரில் இருவர் என பசி காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உயிரிழந்து வருகின்றனர் என ஐபிசி கூறியுள்ளது.

கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலை மிக தீவிரமாக்கியது.

அதற்கடுத்த இந்த 22 மாதத்தில் மட்டும் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த சுமார் 62 ஆயிரத்து 192 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொது மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://oruvan.com/famine-in-gaza-500000-people-in-need/

அமெரிக்காவின் பிரபல நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ காலமானார்

1 month 3 weeks ago

21 AUG, 2025 | 10:57 AM

image

அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ (Frank Caprio) நேற்று புதன்கிழமை (20) காலமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ தனது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

இவர் நீண்ட நாட்களாக கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் காலமாகியுள்ளார்.

நீதிமன்றத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ, தனது நற்குணங்களால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/222988

காசா நகர் தாக்குதலின் ஆரம்ப கட்டங்கள் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

1 month 3 weeks ago

காசா நகர் தாக்குதலின் ஆரம்ப கட்டங்கள் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

gaza-2-770x470.jpg

காசா நகர் முழுவதையும் கைப்பற்றி ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ள தரைவழித் தாக்குதலின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியுள்ளதாகவும், நகரின் புறநகர் பகுதிகளை ஏற்கெனவே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கான களத்தை அமைப்பதற்காக, செய்தூன் மற்றும் ஜபலியா பகுதிகளில் படைகள் ஏற்கெனவே செயல்பட்டு வருவதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் நடவடிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்காக, செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுமார் 60,000 மேலதிக வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இது களப்பணிக்குத் தேவையான வீரர்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும்.

அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான கொடூரமான போரைத் தொடர்வதற்கு ஆதரவாக இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குத் தடையாக இருப்பதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல் திட்டத்திற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ள நிலையில், காசா நகரில் வசிக்கும் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் காசாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலின் திட்டத்தை அதன் பல நட்பு நாடுகள் கண்டித்துள்ளன. இது “இரண்டு மக்களுக்கும் பேரழிவையே ஏற்படுத்தும். மேலும், நிரந்தரப் போர்ச் சுழற்சியில் இப்பகுதி முழுவதையும் தள்ளிவிடும்” என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், மேலும் அதிகமான மக்கள் இடம்பெயர்வதும், தாக்குதல்கள் தீவிரமடைவதும், காசாவின் 2.1 மில்லியன் மக்களுக்கான ஏற்கெனவே பேரழிவுகரமான சூழ்நிலையை மோசமாக்கும் என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு (ICRC) தெரிவித்துள்ளது.

https://akkinikkunchu.com/?p=337727

Checked
Sat, 10/11/2025 - 17:51
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe