'இரண்டே நிமிடங்களில் செய்து முடிப்போம்' - ரஷ்ய அணு ஆயுத தளத்தின் தயார் நிலை பற்றி முன்னாள் அதிகாரி தகவல்
பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY
- எழுதியவர், வில் வெர்னோன்
- பதவி, பிபிசி செய்திகள்
2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா முழுமையான தாக்குதலை ஆரம்பித்த போதே, அதன் அணு ஆயுத தளம் ராணுவ நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டதாக கூறுகிறார் ரஷ்யாவின் அணு ஆயுத தளம் ஒன்றில் பணியாற்றிய ஆண்டன்.
"அதற்கு முன்பு நாங்கள் பயிற்சிகளை மட்டுமே மேற்கொண்டிருந்தோம். ஆனால் போர் ஆரம்பித்த நாளில் ஆயுதங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன," என்று கூறுகிறார் அந்த முன்னாள் ராணுவ வீரர்.
"கடல் மற்றும் வான்வழியாக (அணு ஆயுத) தாக்குதல் நடத்த நாங்கள் தயார் நிலையில் இருந்தோம்," என்று அவர் கூறுகிறார்.
ரஷ்யாவுக்கு வெளியே உள்ள ஒரு ரகசிய அறையில் நான் ஆண்டனை சந்தித்தேன். பாதுகாப்பு காரணங்களுக்காக பிபிசி அவரை எங்கே சந்தித்தது என்பதை வெளியிடாது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவருடைய பெயர் மற்றும் முகம் உள்ளிட்ட அடையாளங்களும் வெளியிடப்படாது.
ரஷ்யாவின் ரகசிய அணு ஆயுத தளம் ஒன்றில் பணியாற்றியவர் ஆண்டன்.
அவர் பிபிசியிடம் காட்டிய ஆவணங்களில் அவருடைய யூனிட், ரேங்க் மற்றும் அவர் எங்கே பணியாற்றினார் என்பது போன்ற தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
பிபிசியால் அவர் கூறிய நிகழ்வுகளை சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை. இருப்பினும் ரஷ்யா அந்த நேரத்தில் வெளியிட்ட அறிக்கைகளோடு அவர் கூறிய நிகழ்வுகள் ஒத்துப்போகின்றன.
யுக்ரேன் எல்லையில் ரஷ்ய துருப்புகள் நிறுத்தப்பட்ட பிறகு, ரஷ்யாவின் அணு ஆயுதப் படை பிரிவினர் (Russia’s nuclear deterrence forces) தங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்று விளாதிமிர் புதின் அறிவித்ததாக அவர் தெரிவித்தார்.
ஆண்டன் இதுகுறித்து கூறும் போது, போரின் முதல் நாளிலேயே தங்களது படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருடைய குழு அந்த தளத்தின் உள்ளே இருந்ததாகவும் கூறினார்.
எங்களிடம் ரஷ்ய அரசு தொலைக்காட்சி மட்டுமே இருந்தது என்று தெரிவித்த அவர், "அதற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியவில்லை. நான் என்னுடைய பணிகளை அப்படியே செய்தேன். போரில் நாங்கள் சண்டையிடவில்லை. நாங்கள் அணு ஆயுதங்களை பாதுகாத்து வந்தோம்," என்று அவர் தெரிவிக்கிறார்.
தயார் நிலைக்கான எச்சரிக்கை அறிவிப்பு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது என்று அவர் கூறுகிறார்.
ஆண்டன் தெரிவித்த தகவல்கள், ரஷ்யாவில் உள்ள ரகசிய அணு ஆயுத தளங்களில் வீரர்கள் எப்படி பணியாற்றுகின்றனர் என்பதைப் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்துகிறது.
அங்கே பணியாற்றும் வீரர்கள் ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேசுவது மிகவும் அரிதானதாகவே உள்ளது.
"இங்கு பணியாற்ற ஆட்களை தேர்வு செய்ய கடுமையான நடைமுறைகள் உள்ளன. ஒவ்வொருவரும் சிறந்த ராணுவ வீரர்கள்" என்று அவர் தெரிவித்தார்.
தொடர் சோதனைகள் நடைபெறும். பொய் பேசுகிறார்களா என்பதை கண்டறியும் 'லை-டிடெக்டர்' சோதனையும் நடத்தப்படும். சம்பளம் மிகவும் அதிகம். இந்த படையினர் போருக்கு அனுப்பப்பட மாட்டார்கள்.
அங்கு படை வீரர்களின் வாழ்க்கை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்று கூறுகிறார் அவர்.
"அங்குள்ள ராணுவ வீரர்கள் யாரும் தங்களின் அலைபேசிகளை அணு ஆயுத தளத்திற்கு கொண்டு வரவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது என்னுடைய கடமை," என்று அவர் கூறினார்.
"இது மிகவும் ரகசியமாக செயல்படும் ஒரு பிரிவாகும். இங்கே புது ஆட்கள் யாரும் கிடையாது. நீங்கள் உங்களின் பெற்றோர்களை காண விரும்பினால் மூன்று மாதங்களுக்கு முன்பே எஃப்.எஸ்.பி. அமைப்பிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
ஆண்டன் அந்த தளத்தின் பாதுகாப்புப் பிரிவில் அங்கம் வகித்தார்.
"எங்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு நிமிடங்களுக்குள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்றுவோம் (Our reaction time was two minutes)," என்று பெருமித உணர்வுடன் கூறுகிறார்.
ரஷ்யாவில் மட்டும் 4,380 அணு ஆயுதங்கள் உள்ளன என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. அவற்றில் 1700 மட்டுமே தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது நேட்டோ உறுப்பு நாடுகளில் உள்ள அணு ஆயுதங்களின் மொத்த எண்ணிக்கை சமமாக உள்ளது.
பெரிய அளவிற்கு கதிரியக்கத்தை ஏற்படுத்தாத சிறிய ரக அணுஆயுதங்களை பயன்படுத்த புதின் தீர்மானிப்பாரா என்ற கவலை அதிகரித்து வருகிறது.
அவற்றின் பயன்பாடு போரை அச்சுறுத்தும் அளவிற்கு ஆபத்தில் கொண்டு போய் விடக்கூடும்.
மேற்கத்திய நாடுகளின் பொறுமையை சோதிக்க தன்னாலான அனைத்தையும் ரஷ்யா செய்து வருகிறது.
கடந்த வாரம் தான் அணு ஆயுத கொள்கைகளில் மாற்றத்தை அறிவித்தார் புதின். இந்த கொள்கைகள் எப்போது, எப்படி அணு ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டும் நெறிமுறைகளை கொண்டது.
அணு ஆயுதங்களை கொண்டிராத நாடுகள், அணு ஆயுத நாடுகளின் ஆதரவுடன், ரஷ்யாவை ஏவுகணைகள் மூலம் தாக்க முற்பட்டால் ரஷ்யா அணுஆயுத தாக்குதல் நடத்தும் என்று புதிய நெறிமுறை தெரிவிக்கிறது.
பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY
இந்த புதிய நெறிமுறைகள் ரஷ்யா போரில் தோல்வி அடைவதற்கான சாத்தியங்களை அகற்றும் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஆனால் ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் அனைத்தும் முழுமையாக செயல்படும் திறனுடன் உள்ளனவா?
சில மேற்கத்திய நிபுணர்கள் இந்த ஆயுதங்கள் பலவும் சோவியத் காலத்தை சேர்ந்தவை. அவற்றில் பலவும் சரிவர வேலை கூட செய்யாமல் போகலாம் என்று கூறுகின்றனர்.
இந்த கூற்றை மறுக்கிறார் ஆண்டன். நிபுணர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் நபர்களின் கண்ணோட்டம் இது என்கிறார் அவர்.
சில இடங்களில் இதுபோன்ற பழமையான ஆயுதங்கள் இருக்கலாம். ஆனால் ரஷ்யாவிடம் மிகப்பெரிய ஆயுத கிடங்கு உள்ளது என்றும் அதில் அதிக ஆயுதங்கள் உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் அனைத்தும் செயல்படக்கூடியவை என்று அவர் கூறுகிறார். "அணு ஆயுத பராமரிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கும். ஒரு நிமிடம் கூட அந்த பணி நடைபெறாமல் இருப்பதில்லை," என்கிறார் அவர்.
முழுமையான அளவில் போர் துவங்கியதும், அவருக்கு 'க்ரிமினல் ஆர்டர்' என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவருடைய படையினருக்கு எழுதப்பட்ட சில நெறிமுறைகள் குறித்து வகுப்பு எடுக்கப்பட்டதாக ஆண்டன் தெரிவிக்கிறார்.
"யுக்ரேன் மக்கள் அனைவரும் எதிராளிகள். அவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டது," என்று தெரிவிக்கும் அவர், எனக்கு அது ஒரு எச்சரிக்கையை அளித்தது. அது போர் குற்றம். நான் இந்த பரப்புரையை மேற்கொள்ளமாட்டேன் என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன்.
ஆனால் அவருடைய நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போரில் பங்கேற்க நாட்டின் மற்றொரு பகுதியில் உள்ள படைக்கு, அனுப்பப்படுவார் என்றும் அவரிடம் கூறியுள்ளனர்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
போர்க் களத்தில் இருந்து தப்பி ஓடிய ரஷ்ய ராணுவத்தினர் பலரும் பிபிசியிடம் பேசும் போது, போரை எதிர்க்கும் 'பிரச்னைக்குரிய நபர்கள்' பீரங்கிகளுக்கு இரையாக்கப்பட்டனர் என்று கூறினார்கள்.
லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்திடம் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை.
ஆண்டன் போர் முனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, போரில் பங்கேற்பதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளார். அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது பதியப்பட்ட வழக்கு மற்றும் அவரின் பணிமாற்ற ஆணைகளை நிரூபிக்கும் ஆவணங்களை அவர் எங்களிடம் காண்பித்தார்.
பின்னர் போரில் இருந்து தப்பியோடி வந்த ரஷ்ய வீரர்கள் நடத்தும் தன்னார்வ அமைப்பின் உதவியோடு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார் ஆண்டன்.
"நான் அணுசக்தி தளத்திலிருந்து தப்பித்து வந்திருந்தால், எஃப்.எஸ்.பி. கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கும். நான் நாட்டை விட்டு வெளியேற முடியாது" என்று தெரிவிக்கிறார் ஆண்டன்.
ஆனால் அவர் ஒரு சாதாரண படைக்கு மாற்றப்பட்டதால், உயர்மட்ட பாதுகாப்பு அனுமதி முறை தோல்வியடைந்தது என்று அவர் நம்புகிறார்.
பல ரஷ்ய வீரர்கள் இந்த போருக்கு எதிரானவர்கள் என்பதை உலகம் அறிய விரும்புவதாக ஆண்டன் கூறினார்.
போரில் இருந்து தப்பியோடியவர்களுக்கு உதவும் தன்னார்வ அமைப்பு, இடிடே லெஸோம் (Idite Lesom) (காடு வழியாக செல் அல்லது தொலைந்து போ என்று பொருள்) பிபிசியிடம் பேசும் போது, அவர்களின் உதவியை நாடுவோரின் எண்ணிக்கை மாதத்திற்கு 350 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தது.
தப்பிச் செல்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றன. வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற பிறகு, தப்பியோடிய ஒருவர் கொல்லப்பட்டார். அப்படி தப்பியோடியவர்கள் மீண்டும் ரஷ்யாவுக்கு அழைத்துவரப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
ஆண்டன் ரஷ்யாவை விட்டு வெளியேறிய பிறகும், பாதுகாப்பு படையினர் அவரை இன்னும் அங்கு தேடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார். "நான் இங்கே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறேன்.” என்றார்.
அணு ஆயுத தளத்தில் உள்ள தனது நண்பர்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாக அவர் கூறுகிறார். ஏனெனில் அவர் அவர்களை ஆபத்தில் ஆழ்த்தலாம் என்று கூறுகிறார்.
"அவர்கள் பொய்யைக் கண்டறியும் லை டிடெக்டர் சோதனைகளுக்கு ஆளாவார்கள். அந்த சூழலில் நான் அவர்களுடன் பேசுவது அவர்களை குற்ற வழக்குகளை சந்திக்கும் நிலைக்கு ஆளாக்கும்," என்று கூறினார்.
ஆனால் மற்ற வீரர்கள் தப்பிக்க உதவுவதால் அதிக ஆபத்து அவருக்கு இருக்கிறது என்பதையும் உணர்ந்துள்ளார்.
"நான் உதவிகளை எவ்வளவு அதிகமாகச் செய்கிறேனோ, அவ்வளவு அதிகமாக என்னைக் கொல்ல அவர்களுக்கு வாய்ப்புகள் இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன்" என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு