பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, சட்டத்திற்குப் புறம்பான சுரங்கத் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கி அனுமதி
-
எழுதியவர், நோம்சா மசெகோவ்
-
பதவி, பிபிசி செய்திகள்
தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோத கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தச் சிறிய "நகரத்தில்" சுமார் 600 பேருடன் ஒருவராக இந்தூமிசோ என்ற நபர் அங்கே வசித்துப் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நகரம் முழுவதும் சந்தைகளும், பாலியல் தொழில் நடைபெறும் பகுதிகளும் இருக்கும். மேலும் இங்கு தென்னாப்பிரிக்காவில் பயன்பாட்டில் இல்லாத ஒரு தங்கச் சுரங்கத்தின் உள்ளே இந்த நகரம் இருக்கிறது.
தங்கச் சுரங்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, 'ஜமா ஜமா' என்று அழைக்கப்படும் ஒரு சட்டவிரோத சுரங்கத்தில் பணிபுரியும் ஒரு சட்டவிரோத கும்பலுடன் இணைந்து பணிபுரியத் தொடங்கியதாக இந்தூமிசோ பிபிசியிடம் தெரிவித்தார்.
அவர் விலை மதிப்புமிக்க உலோகங்களை இங்கு தோண்டி எடுப்பார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுரங்கத்தில் இருந்து வெளிவந்து சந்தைகளில் தனக்குக் கிடைத்த உலோகங்களை சட்டவிரோதமாக பெரிய லாபத்திற்கு விற்றுவிடுவார். இதில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான லாபம் இருந்தாலும், ஆபத்துகளும் அதிகமாக உள்ளது.
“இந்தப் பாதாள உலகம் மிகவும் இரக்கமற்றது. பலர் இதிலிருந்து உயிரோடு வெளிவர மாட்டார்கள்,” என்று பெயர்கூற விரும்பாத 52 வயதாகும் நபர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"இந்தச் சுரங்கத்தின் ஒரு தளத்தில் உடல்களும் எலும்புகளும் இருக்கும். இதை ஜமா ஜமா மயானம் என்று அழைப்போம்,” என்றார் அவர். ஆனால் இந்தக் கடும் சவால்களையும் தாண்டி இந்தூமிசோவை போல பிழைத்துக் கொண்டால், இந்தச் தொழில் சிறந்த லாபத்தைக் கொடுக்கும்.
சட்டவிரோத சுரங்கத் தொழில், வெளியேற்றத் துடிக்கும் அரசு
நிலத்தடி சுரங்கத்தில் கடுமையாக உழைக்கும் இந்தூமிசோ, மணல் மூட்டைகளில் படுத்து உறங்குகிறார். ஆனால் அவரது குடும்பமோ ஜோஹேனஸ்பர்க்கில் அவர் வாங்கிய வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
அவர் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டிற்கு 130,000 ரேண்ட் (சுமார் 6 லட்சம் ரூபாய்) ரொக்கமாகச் சேர்த்தியுள்ளார், இப்போது அவர் மேலும் மூன்று படுக்கையறைகளைச் சேர்த்துத் தனது வீட்டை நீட்டித்துள்ளதாகக் கூறினார்.
எட்டு ஆண்டுகளாக சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் பணிபுரிந்து வரும், இந்தூமிசோ அவரது மூன்று குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார். அதில் ஒருவர் தற்போது பல்கலைக்கழகத்தில் பயில்கிறார்.
"எனது மனைவியையும் குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள இதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை," என்றார் அவர். மேலும் பல ஆண்டுகளாக நல்ல வேலை தேடிய பின்னர் கார் கடத்தல், திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக இந்தச் சுரங்கத்தில் பணிபுரிவதே மேலானது என்று முடிவு செய்ததாக அவர் கூறினார்.
அவர் தற்போது பணியாற்றி வரும் சுரங்கமானது ஜோஹேனஸ்பர்க்கில் இருந்து தென் மேற்குத் திசையில், சுமார் 144 கி.மீ. தொலைவில் ஸ்டில்ஃபோன்டைனில் உள்ள ஒரு சுரங்கத்தில் உள்ளது.
இங்கிருக்கும் நூற்றுக்கணக்கான சட்டவிரோதமாகச் செயல்படும் சுரங்கத் தொழிலாளர்களை வெளியேற்றுவதாக அங்கிருந்த அமைச்சர் கும்புட்ஸோ இன்ட்ஷாவேனி என்பவர் தெரிவித்த பின்னர் இந்தப் பகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அங்குள்ள சுரங்கத் தொழிலாளர்களை வெளியேற்ற, அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படுவதைப் பாதுகாப்புப் படையினர் தடுக்கின்றனர். “குற்றவாளிகளுக்கு உதவி செய்யக்கூடாது. அவர்கள் துன்புறுத்தப்படவேண்டும்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.
நமது அரசியலமைப்பின் பாதுகாப்பிற்கான சமூகம் (The Society for the Protection of Our Constitution) என்ற பிரசாரக் குழு, 2 கி.மீ ஆழத்தில் உள்ள சுரங்கத்தை அணுகக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
சுரங்கத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்கலாம் என்று நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
காவல்துறையுடன் சமரசம்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவின் பொருளாதார மையமான கௌடெங் மாகாணத்தில் மட்டும் சுமார் 36,000 சுரங்கத் தொழிலாளர்கள் இருப்பதாக வான் விக் கூறுகிறார்.
சுரங்கத்தின் வேறு தளத்தில் இருந்த இந்தூமிசோ கடந்த மாதம், தற்போது நடந்துகொண்டிருக்கும் வழக்கிற்கு முன்பாக வெளிவந்தார். மீண்டும் அங்கு திரும்பும் முடிவை எடுக்கும் முன்பாக , நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிய அவர் காத்திருக்கிறார்.
மாஃபியா போன்ற சட்டவிரோதக் குழுக்களால் அரசாங்கத்தின் கட்டுக்குள் இல்லாமல் நடத்தப்படும் இந்தச் சுரங்க நிறுவனங்களை முடக்க அரசு எடுத்த முடிவால் இதுபோன்ற ஒரு சூழல் நிலவுகிறது.
"தென்னாப்பிரிக்கா பல ஆண்டுகளாக சட்டவிரோத சுரங்க விஷயத்தில் போராடி வருகிறது. மேலும் சுரங்க சமூகங்கள் பாலியல் வன்கொடுமை, கொள்ளை மற்றும் பொது உள்கட்டமைப்பைச் சேதப்படுத்துதல் போன்ற பிற குற்றச் செயல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளன" என்று கனிம வளங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் மிகாடெகோ மஹ்லாலே தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ராமபோசா, இந்தச் சுரங்கம் "குற்றங்கள் நடக்கும் இடம்", காவல்துறையினர் சுரங்கத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசமாகி, அவர்களைக் கைது செய்யாமல், சுரங்கத் தொழிலாளர்கள் தரப்பில் இருப்பதாக அவர் கூறினார்.
"சில சுரங்கத் தொழிலாளர்கள் அதிக அளவில் ஆயுதம் ஏந்தியிருக்கலாம், சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் குற்றக் கும்பல்களால் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் மற்றும் பரந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஆட்சிக் குழுவின் (syndicates) ஒரு பகுதியாக உள்ளனர் என்பது நன்கு நிறுவப்பட்டுள்ளது. இந்தத் தகவல், சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த 3 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்காவின் சுரங்கத் தொழில் சரிவைக் கண்டதால், லெசோதோ போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் - பல நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களில் இந்தூமிசோவும் ஒருவர் - பலர் கைவிடப்பட்ட சுரங்கங்களில் "ஜமா ஜமாக்களாக" மாறிவிட்டனர்.
'கடினமான, ஆபத்தான வேலை'
பட மூலாதாரம்,GETTY IMAGES
தென்னாப்பிரிக்காவின் பெஞ்சுமார்க் அறக்கட்டளையின் ஆராய்ச்சியாளர் டேவிட் வான் விக், இந்தத் துறையை ஆய்வு செய்தவர். இந்த நாட்டில் சுமார் 6,000 கைவிடப்பட்ட சுரங்கங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
"பெரிய அளவிலான தொழில்துறை சுரங்கங்களுக்கு அவை லாபகரமானதாக இல்லை என்றாலும், சிறிய அளவிலான சுரங்கத்திற்கு அவை லாபகரமானவை" என்று அவர் பிபிசி ஃபோகஸ் ஆன் ஆப்ரிக்கா போட்காஸ்டிடம் கூறியுள்ளார்.
கடந்த 1996இல் பணிநீக்கம் செய்யப்படும் வரை தங்கச் சுரங்க நிறுவனத்தில் டிரில் இயக்குபவராகப் பணிபுரிந்து, மாதம் $220க்கும் (இந்திய மதிப்பில் சுமார் 19,000 ரூபாய்) குறைவாகச் சம்பாதித்தாக இந்தூமிசோ தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவின் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருப்பதால், அடுத்த 20 வருடங்கள் முழுநேர வேலை தேடுவதற்குப் போராடிய பிறகு, தான் ஒரு சட்டவிரோத சுரங்கத் தொழிலாளியாக மாற முடிவு செய்ததாகக் கூறுகிறார்.
தென்னாப்பிரிக்காவில் பல்லாயிரக்கணக்கான சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் உள்ளனர், 19ஆம் நூற்றாண்டில் தங்கம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் பொருளாதார மையமான கௌடெங் மாகாணத்தில் மட்டும் சுரங்கத் தொழிலாளர்கள் சுமார் 36,000 பேர் இருப்பதாக வான் விக் கூறுகிறார்.
"ஜமா ஜமாக்கள் பல மாதங்கள் நிலத்தடியில் இருந்து வெளிவராமல், உணவு மற்றும் இதர தேவைகளுக்கு வெளியிலிருந்து கிடைக்கும் ஆதரவைப் பெரிதும் சார்ந்து இருப்பார்கள். இது கடினமான மற்றும் ஆபத்தான வேலை" என்று ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களுக்கு எதிரான உலகளாவிய பிரசாரக் குழுவின் (Global Initiative Against Transnational Organised Crime) அறிக்கை கூறுகிறது.
"சிலர் கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிகள் மற்றும் அரை-தானியங்கி ஆயுதங்களைச் சுரங்கத் தொழிலாளர்களின் போட்டி கும்பலிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வைத்திருக்கிறார்கள்," என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
இந்தூமிசோவும் துப்பாக்கி வைத்திருந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார். அதோடு 8 டாலர்களை மாத ‘பாதுகாப்பு கட்டணமாக’ தன்னுடைய குழுவிற்கு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
குழுவின் அதிக ஆயுதம் ஏந்திய காவலர்கள் அச்சுறுத்தல்களை, குறிப்பாக லெசோதோ கும்பல்களிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களைத் தடுக்கிறார்கள், அவர்களிடம் கொடிய ஆபத்தான சுடும் சக்தி இருப்பதாக அவர் கூறினார்.
சுரங்கத்தில் தங்கியிருக்கும் மூன்று மாதங்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES
கும்பலின் 24 மணிநேரப் பாதுகாப்பின் கீழ், அவர் பாறை வெடிப்பிற்காக டைனமைட்டை பயன்படுத்தியதாகவும், தங்கத்தைக் கண்டுபிடிப்பதற்காக பிக் கோடாரி, மண்வெட்டி மற்றும் உளி போன்ற அடிப்படைக் கருவிகளைப் பயன்படுத்தியதாகவும் இந்தூமிசோ கூறினார்.
அவர் கண்டறிவதில் பெரும்பகுதி, கும்பல் தலைவரிடம் கொடுக்கிறார். அவர் ஒவ்வோர் இரண்டு வாரங்களுக்கும் குறைந்தபட்சம் $1,100 (இந்திய ரூபாய் மதிப்பில் 93,000 ரூபாய்) கொடுக்கிறார். அவர் தனது வருமானத்தை அதிகரிக்க கறுப்புச் சந்தையில் விற்கும் சில தங்கத்தைத் தன்னால் வைத்திருக்க முடிந்தது என்றார்.
அத்தகைய ஏற்பாட்டைப் பெற்ற அதிர்ஷ்டசாலியான சுரங்கத் தொழிலாளர்களில் அவரும் ஒருவர், என்று அவர் கூறினார். மேலும், இதை விளக்கும்போது, மற்றவர்கள் கடத்திச் செல்லப்பட்டு அடிமைகளைப் போல வேலை செய்வதற்காகச் சுரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், பணம் அல்லது தங்கம் எதுவும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்றும் விளக்கினார்.
இந்தூமிசோ, பொதுவாக ஒரு நேரத்தில் சுமார் மூன்று மாதங்கள் சுரங்கத்தில் தங்கி, பின்னர் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு, மீண்டும் ஆழமான சுரங்கத்திற்குச் செல்வதற்கு முன் தனது தங்கத்தை விற்பதாகத் தெரிவித்தார்.
"நான் எனது படுக்கையில் தூங்குவதற்கும், வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிடுவதற்கும் ஆவலுடன் காத்திருப்பேன். சுத்தமான காற்றைச் சுவாசிப்பது ஓர் அற்புதமான சக்தி வாய்ந்த உணர்வு" என்கிறார் அவர்.
இந்தூமிசோ ஒருவேளை தான் தோண்டிய இடத்தை இழந்தால் அடிக்கடி வெளியே வருவதில்லை. ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு அதிகமாகச் சுரங்கத்தில் இருக்கவும் முடியாது.
"சூரிய ஒளியை நான் எதிர்கொள்ள முடியாமல் இருந்தேன், அதனால் நான் குருடாகிவிட்டேன் என்று நினைத்தேன்" என்று ஒருமுறை அவர் சுரங்கத்தில் இருந்து நிலப்பரப்பை அடைந்தபோது ஏற்பட்ட உணர்வை நினைவு கூர்ந்தார்.
அவரது தோலும் மிகவும் வெளிறிப் போனதால், அவரது மனைவி அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார்: "நான் வசிக்கும் இடத்தைப் பற்றி மருத்துவரிடம் நான் நேர்மையாகக் கூறினேன். அவர் எதுவும் சொல்லவில்லை, எனக்கு சிகிச்சை அளித்தார். அவர் எனக்கு வைட்டமின்கள் கொடுத்தார்."
சுரங்கத்தில் இருந்து வெளியே நிலப்பரப்பில் இந்தூமிசோ ஓய்வெடுப்பதில்லை. அவர் மற்ற சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்களுடன் வேலை செய்கிறார், ஏனெனில் கீழே இருந்து கொண்டு வரப்பட்ட தாதுக்களின் பாறைகள் நுண்ணிய துகள்களாக நசுக்கப்படுகின்றன.
இது பாதரசம் மற்றும் சோடியம் சயனைடு போன்ற ஆபத்தான ரசாயனங்களைப் பயன்படுத்தித் தங்கத்தைப் பிரிக்க ஒரு தற்காலிக ஆலையில் அவரது குழுவால் "கழுவப்படுகிறது".
இந்தூமிசோ தனது தங்கத்தின் பங்கை, ஒரு கிராம் $55-கு (இந்திய ரூபாய் மதிப்பில் 4,500) விற்கிறார். அது, அதிகாரப்பூர்வ விலையான $77 (இந்திய ரூபாய் மதிப்பில் 6,500) விடக் குறைவு. தன்னிடம் வாங்குபவர் தயாராக இருப்பதாகவும், அவரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்வதாகவும் கூறினார்.
தென்னாப்பிரிக்காவின் பொருளாதார நெருக்கடி
பட மூலாதாரம்,REUTERS
"நான் அவரை முதன்முதலில் சந்தித்தபோது நான் அவரை நம்பவில்லை, அதனால் நான் அவரை ஒரு காவல் நிலையத்தின் கார் நிறுத்தத்தில் சந்திக்கச் சொன்னேன். நான் அங்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று எனக்குத் தெரியும்."
"இப்போது நாங்கள் எந்த கார் நிறுத்தத்திலும் சந்திப்போம். எங்களிடம் ஒரு தராசு உள்ளது. நாங்கள் தங்கத்தை அந்த இடத்திலேயே எடை போடுகிறோம். நான் அதை அவரிடம் ஒப்படைக்கிறேன், அவர் எனக்குப் பணத்தைக் கொடுக்கிறார்," என்று அவர் இந்திய ரூபாய் மதிப்பில் 3,20,000 மற்றும் 4,70,000-க்கு இடையில் அவர்கள் உடன்படுவதாகச் சுட்டிக்காட்டினார்
ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் அவர் இந்தத் தொகையைப் பெறுகிறார். அதாவது அவரது சராசரி ஆண்டு வருமானம் இந்திய ரூபாய் மதிப்பில் 13 லட்சம் முதல் 18 லட்சம் வரை. சட்டப்பூர்வமாக வேலை செய்யும் சுரங்கத் தொழிலாளியாக அவர் சம்பாதித்த 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயைவிட மிக அதிகம்.
அவரது கும்பலின் தலைவர்கள் அதிகம் சம்பாதித்ததாகவும், ஆனால் எவ்வளவு என்று தனக்குத் தெரியாது என்றும் இந்தூமிசோ கூறினார்.
தனது தங்கத்தை வாங்குபவரைப் பொறுத்தவரை, இந்தூமிசோ, பல்வேறு இனங்கள் மற்றும் வகுப்பினரை உள்ளடக்கிய ஒரு சட்டவிரோத நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கும் ஒரு வெள்ளையர் என்பதைத் தவிர, அவரைப் பற்றி எதுவும் தெரியாது என்று கூறினார்.
இது குற்ற வலையில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்துவதைக் கடினமாக்குகிறது. அரசாங்கம் சுரங்கத் தொழிலாளர்களைக் குறி வைப்பதாகக் கூறினார். ஆனால் "ஜோகன்னஸ்பர்க் மற்றும் கேப் டவுனின் புறநகர்ப் பகுதிகளில் வாழும் பெரிய தலைவர்களை" அல்ல, என்று வான் விக் தெரிவித்தார்.
ரமபோசா கூறுகையில், "சட்டவிரோத சுரங்கத்தால் நமது பொருளாதாரத்திற்குப் பல பில்லியன் ராண்டுகள் ஏற்றுமதி வருமானம், உரிமத் தொகை மற்றும் வரி" இழப்பு ஏற்படுகிறது. மேலும் "செயல்படாத சுரங்கங்களைப் புனரமைப்பதற்கு அல்லது மூடுவதற்கு அரசாங்கம் சுரங்க நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றும்" என்றார்.
வான் விக் பிபிசி ஃபோகஸ் ஆன் ஆப்பிரிக்கா போட்காஸ்டிடம், தென்னாப்பிரிக்காவின் பொருளாதார நெருக்கடி, அரசாங்கம் "ஜமா ஜமாக்களை" கட்டுப்படுத்தினால் மோசமாகிவிடும் என்று கூறினார்.
இந்தூமிசோ பணிபுரிய மீண்டும் சுரங்கத்திற்குச் செல்லும்போது, அங்கிருக்கும் "சந்தைகளில்" அதிக விலை கொடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, பதிவு செய்யப்பட்ட உணவுப் பெட்டிகளைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறார்.
உணவைத் தவிர, அடிப்படைப் பொருட்கள் சிகரெட், டார்ச்கள், பேட்டரிகள் மற்றும் சுரங்கக் கருவிகள் அங்கு விற்கப்பட்டன, என்றார்.
ஒரு சமூகம் - அல்லது ஒரு சிறிய நகரம் - பல ஆண்டுகளாக நிலத்தடியில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை இது உணர்த்துகிறது. இந்தூமிசோ பாலியல் தொழில் நடைபெறும் பகுதிகூட அங்கு இருப்பதாகக் கூறினார், பாலியல் தொழிலாளர்கள் சட்டவிரோத கும்பல்களால் சுரங்கத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.
இந்தூமிசோ அவர் பணிபுரிந்த சுரங்கம் பல நிலைகளால் ஆனது என்றும், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சுரங்கங்களின் தளம் என்றும் கூறினார்.
"அவை நெடுஞ்சாலைகளைப் போன்றவை, வெவ்வேறு இடங்கள் மற்றும் நிலைகளுக்கு வழிகாட்டும் வண்ணம் வரையப்பட்ட அடையாளங்கள் - நாம் கழிப்பறையாகப் பயன்படுத்தும் நிலை அல்லது ஜமா-ஜமா கல்லறை என்று அழைக்கும் நிலை போன்றவை" என்று அவர் கூறினார்.
"சிலர் போட்டி கும்பல் உறுப்பினர்களால் கொல்லப்படுகிறார்கள்; மற்றவர்கள் பாறைகள் விழும்போது இறக்கிறார்கள் மற்றும் மிகப் பெரிய பாறைகளால் நசுக்கப்படுகிறார்கள். தனது தங்கத்தைக் கொள்ளையடித்து தலையில் சுடப்பட்ட பிறகு நான் ஒரு நண்பரை இழந்தேன்."
சுரங்க வாழ்க்கை ஆபத்தானது என்றாலும், வேலையின்மை விகிதம் 30 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் ஒரு நாட்டில் ஏழையாக வாழ்ந்து இறப்பதே இதற்கு மாற்று என்பதால், இதற்கு இந்தூமிசோ போன்ற ஆயிரக்கணக்கானோர் தயாராக உள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு