யுக்ரேன் உடனான போரில் ரஷ்யாவை தொடர்ந்து முன்னேற வைக்கும் ஒரு 'பயங்கர' உக்தி இதுதான்
பட மூலாதாரம்,REUTERS
- எழுதியவர், பால் ஆடம்ஸ்
- பதவி, பிபிசி செய்திகள்
இந்த 2024-ஆம் ஆண்டு முடியப்போகிறது. குளிர் காலமும் வந்துவிட்ட நிலையில், ரஷ்யப் படைகள் யுக்ரேன் படைகளைப் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளி சண்டையிட்டு வருகிறது.
மொத்தமாக, கிழக்கு உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் சுமார் 2,350 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றியுள்ளது மற்றும் மீட்டுள்ளது
இதில் பயங்கரமான உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
"நவம்பரில், 45,680 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பிப்ரவரி 2022 இல் போர் தொடங்கியதிலிருந்து எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு ரஷ்யா சந்தித்த அதிகபட்ச உயிரிழப்பு இது" என்று பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
பிரிட்டன் பாதுகாப்பு உளவுத்துறையின் கணக்குப்படி, ரஷ்யாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,523 ஆண்கள் கொல்லப்படுகின்றனர் மற்றும் காயம் அடைகின்றனர்.
நவம்பர் 28 அன்று, ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட ஆண்களை ரஷ்யா இழந்தது. இவ்வளவு பெரிய இழப்பு நடப்பது இதுவே முதல் முறையாகும்.
"ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஆனால் அதற்கு அந்த நாடு கொடுக்கும் விலை அதிகமானது" என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.
இறந்த அல்லது காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களைப் பொது தரவுகளில் இருந்து பெறப்பட்டதாகவும், ரகசிய தரவுகளோடு அது ஒப்பிடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒட்டு மொத்தமாக, ரஷ்யா தனது இலையுதிர் கால ( செப்டம்பர் முதல் நவம்பர் வரை) தாக்குதல்களின் போது சுமார் 125,800 வீரர்களை இழந்துள்ளதாக, வாஷிங்டனை தளமாகக் கொண்ட போர் ஆய்வுக்கான நிறுவனம் (ISW) தெரிவித்துள்ளது.
"ரஷ்யாவின் 'மீட் - க்ரிண்டர்' என்ற ராணுவ உத்தியின் மூலம், அவர்கள் கைப்பற்றும் ஒவ்வொரு சதுர கிலோமீட்டர் பரப்பிற்கு 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷ்யா இழக்கிறது" என்று போர் ஆய்வு நிறுவனம் (ISW) தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK
யுக்ரேன் தனது வீரர்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்பதை வெளியிட அனுமதிக்கவில்லை. எனவே கடந்த சில மாதங்களாக நடைபெற்ற தாக்குதலில் இறந்து போன யுக்ரேன் ராணுவ வீரர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.
குர்ஸ்க் பகுதியில் மட்டும் 38,000 யுக்ரேனிய வீரர்கள் இறந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று ரஷ்யா கூறுகிறது. இருப்பினும், இது உறுதிப்படுத்தப்படாத தகவல்.
நல்ல தொடர்புகளை கொண்ட அதே சமயம் சர்ச்சைக்குரிய யுக்ரேன் போர் செய்தியாளரான யூரி புடுசோவ், பிப்ரவரி 2022-ஆம் ஆண்டு துவங்கி இதுவரை 70 ஆயிரம் யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 35 ஆயிரம் பேர் காணவில்லை என்கிறார்.
அமெரிக்க ஊடகங்கள், 80 ஆயிரம் யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வெளியிட்ட செய்தியை மறுத்துள்ளார் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி
உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகக் கூறினார்.
ஆனாலும் அவர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை கொடுக்கவில்லை.
குர்ஸ்க் மற்றும் யுக்ரேனின் கிழக்குப் பகுதிகளில் நடக்கும் சண்டையின் தீவிரத்தை, உயிரிழப்பு எண்ணிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
பட மூலாதாரம்,GETTY IMAGES
"இந்த நிலை மாறுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை" என்று மேற்கத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தச் சண்டை நீண்ட காலத்திற்கு தொடரும் என்று மேற்கத்திய அதிகாரிகள் நம்புகின்றனர். '
ரஷ்யா இப்போது முன்பை விட வேகமாக நகர்கிறது. ஆனால் போர் தொடங்கிய போது இருந்த வேகத்தைப் போல் அல்ல.
யுக்ரேன் அனுப்பிய ஒவ்வொரு குண்டுக்கும் ஒரு காலத்தில் ரஷ்யாவால் 13 குண்டுகளைத் திருப்பிச் சுட முடிந்த நிலையில், இப்போது அந்த விகிதம் 1.5 முதல் 1 வரை குறைந்து உள்ளது.
இப்போது யுக்ரேனால் ரஷ்யாவிற்கு எதிராக திறம்பட எதிர்த்துப் போராட முடிகிறது. இதற்கு உள்நாட்டு ஆயுத உற்பத்தியும், ரஷ்ய மற்றும் வட கொரிய ஆயுத கிடங்குகள் மீது அவர்கள் நடத்திய தாக்குதலும் ஒரு காரணம்.
போரில் பீரங்கி முக்கியமானது என்றாலும், அது முன்பு இருந்த முக்கியத்துவதோடு இப்போது இல்லை.
''கிளைடு குண்டுகளின் பயன்பாட்டை கடந்த ஆண்டை விட 10 மடங்கு ரஷ்யா அதிகரித்துள்ளது'' என்று ஒரு மேற்கத்திய அதிகாரி கூறினார்.
இந்த குண்டுகள் ரஷ்ய பிரதேசத்தில் பறக்கும் விமானங்களில் இருந்து ஏவப்பட்டு யுக்ரேனைச் சென்றடைந்து, அங்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்துகின்றன.
கிளைடு குண்டுகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் போரில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. இரு தரப்பினரும் , தொடர்ந்து புதிய ஆயுதங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்கி மோதலில் ஆதாயம் பெறுகின்றனர்.
பாரம்பரிய காலாட்படை சண்டையின் முக்கியத்துவத்தை, ஆளில்லா விமானங்கள் குறைத்துவிட்டதாக, போரின் முன் கள வீரரான செர்ஹி வாட்சப்பில் தெரிவித்தார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரண்டு நாடுகளும் போர் வீரர்களைப் பயன்படுத்துவதில் வெவ்வேறு வகையான சவால்களை எதிர்கொள்கின்றன.
தன்னார்வத்தோடு வருபவர்களைத் தவிர, 18-24 வயதுடைய இளைஞர்களைப் போருக்குப் பயன்படுத்த வேண்டாம் என யுக்ரேன் முடிவு செய்துள்ளது.
வீரர்கள் பற்றாக்குறையை யுக்ரேன் எதிர்கொண்டாலும், ரஷ்யாவால் அப்பாற்றாக்குறையை ஈடுசெய்ய முடிகிறது.
ஆனாலும், பல காரணங்களால் ராணுவ வீரர்கள் அணிதிரட்டலுக்கு மற்றொரு சுற்று அழைப்பு விடுக்க அதிபர் புதின் தயங்குகிறார்.
அதிக பணவீக்கம், நிரம்பிய மருத்துவமனைகள், இறந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் உள்ள சிக்கல்கள் ஆகியவை அவரின் தயக்கத்துக்கு காரணமாக இருக்கலாம்.
அதிகளவு தன்னார்வலர்களை ஈர்க்க, சில ரஷ்ய பிராந்தியங்கள் மூன்று மில்லியன் ரூபிள் வரை ஊக்கத்தொகை வழங்குகின்றன.
"ரஷ்யப் பொருளாதாரம் முற்றிலுமாக வீழும் நிலையில் இல்லை என்றாலும், குறிப்பிட்டளவு சிரமங்களை எதிர்கொள்கிறது. பொருளாதார அழுத்தம் அங்கு உள்ளது" என்று ஒர் அதிகாரி கூறுகிறார்.
சிரியாவில் சமீபகாலமாக அதிகரித்து வரும் சண்டைகள் ரஷ்யாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
ரஷ்யாவின் தற்போதைய போக்கு, அதன் எதிர்கால முன்னுரிமையைத் தீர்மானிப்பதில் கடினமான சவால்களை ஏற்படுத்தக்கூடும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு